வெள்ளி, 3 மார்ச், 2017

அங்குசம் (கவிதைத்தொகுப்பு) - தவசிக்கருப்புசாமி விமர்சனம் - இமையம்

அங்குசம் (கவிதைத்தொகுப்பு) - தவசிக்கருப்புசாமி
விமர்சனம் - இமையம்
       தவசிக்கருப்புசாமி எழுதிய கவிதைகளின் தொகுப்பு நூல் அங்குசம். தொகுப்பிலுள்ள கவிதைகள் - மரபுக் கவிதைகளா என்றால் இல்லை. புதுக்கவிதைகளா, உரைநடைக் கவிதைகளா, நவீனக் கவிதைகளா என்றால் இல்லை. இவை எல்லாம் கலந்த ஒன்று. கவிதைகளின் அமைப்பும் மொழியும் புதிது. ஒவ்வொரு கவிதையும் அறிவுப்பூர்வமாக அல்லாமல் உணர்வு பூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது. கவிதைகள் சிடுக்குகளற்று, முடிச்சுகளற்று, படிமம், இருண்மை என்ற போர்வைகளற்று இருக்கிறது. எதையும் நேரடியாக சொல்வது, அதையும் சத்தமாக சொல்வது என்பது தவசிக்கருப்புசாமியின் கவிதைகளின் குணம். தொகுப்பிலுள்ள எந்த கவிதையும் திட்டம்போட்டு, காத்திருந்து, சொற்களைத் தேடித்தேடி, கோர்த்துகோர்த்து எழுதப்படாமல் தன்னியல்பாக எழுதப்பட்டிருப்பது அழகு. போகிறபோக்கில் விதைகளை தூவி இருக்கிறார். நல்ல சொற்கள். நல்ல விதைகள். ஒவ்வொரு சொல்லும் குளிர்ச்சியாக இருக்கிறது. எழுதிஎழுதி தேய்ந்துபோன சொற்கள் இல்லை. ‘இலைக்கு குலைதானே மாற்று’ ‘கண்கள் பயப்படும் வயிறு பயப்படாது’ என்பதுபோன்று வருகிற ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும், வாக்கியத்திற்குள்ளும் கதை இருக்கிறது. கவிதைக்குள்ளிருக்கும் கதைதான், கவிதைக்கும், அதன் மொழிக்கும் உயிர்கொடுக்கிறது. கவிதைகள் சிரிக்கவைக்குமா? ஆம் என்று சொல்கிறது அங்குசம் தொகுப்பு.
       நாம் மறந்துபோன, மறக்க நினைத்த, அசிங்கம் என்று ஒதுக்கிய சொற்களை கொண்டுதான் தவசிக்கருப்புசாமியின் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ‘அம்மையார் குசு அமிர்த வஸ்து’, ‘கிள்ளத்தனை புண்டை செண்டும் மணக்காது’, ‘அவசரத்தில் செத்த பிணத்துக்கு பீச்சூத்தோடு மாரடித்தோம்’ என்று நூறுநூறு வார்த்தைகள் கவிதைக்குள் நிறைந்து கிடக்கின்றன. எது நல்ல வார்த்தை, எது கெட்ட வார்த்தை? மொழியில், இலக்கியத்தில் புனிதம் என்று எதை வரையறை செய்கிறோமோ அதற்கு எதிர்த்திசையில் பயணிக்கிறது அங்குசம் தொகுப்பின் கவிதைகள். அதுவே கவிதைகளின் பலம். தமிழ் நவீனக் கவிதையில் இதுவரை நீக்கிவிட்டு பேசமுடியாது என்று கொண்டாடப்படுகிறவர்களுடைய கவிதைகள் எப்படியிருக்கிறது? "மாவு புளிக்கிற தெல்லாம் பணியாரத்திற்கு நல்லது - எல்லாச் சொற்களும் ஊசிப்போய்விட்டன - இரண்டு வரிகள்தான் கவிதை மற்றதெல்லாம் இட்டு நிரப்பியவை" என்று ஒரு கவிதையில் வருகிறது. தனியாக நான் என்ன சொல்ல? தற்கால தமிழ் நவீனக் கவிதைகள் குறித்த சரியான விமர்சனம்.
       தவசிக்கருப்புசாமியின் கவிதைகள் தெருக்கூத்து பாடல்களின், 'வசனங்களின், பேச்சின் வழக்கின்' பழமொழிகளின் தன்மையை நிறைய கொண்டிருக்கின்றன. கவிதைக்கான சொற்களின் கூட்டு ஒருங்கிணைந்த ஓசைத்தன்மையையும் இசைத்தன்மையையும் கொண்டிருப்பதால் கவிதைகளை திரும்பத்திரும்ப படிக்கத் தூண்டுகின்றன. மெட்டுக்கு வாகன சந்தத்துக்குள் பல வாக்கியங்கள் இருக்கின்றன. கவிதைகளின் நேரடித்தன்மை ஈர்ப்பைக் கூட்டுகிறது. அங்குசம் தொகுப்பிலுள்ள கவிதைகள் பிரமாண்டமான விசயங்களை, சர்வதேச விசயங்களை பேசவில்லை. அவற்றிற்காக கவலைகொள்வதாக பாவனையும் செய்யவில்லை. உருகி கண்ணீர் வடிக்கவில்லை. அன்றாட விசயங்களை அதிலும் சின்னச்சின்ன விசயங்களை பேசுகிறது.. வீட்டுப் பிரச்சனை, வீட்டிலுள்ள மனிதர்களின், தெருவிலுள்ள மனிதர்களின், ஊரிலுள்ள மனிதர்களின் பிரச்சனைகளை, நடவடிக்கைகளை, மனப்போக்குகளை பேசுகிறது. எதை பேசினாலும் கவலையோடும், கண்ணீரோடும் பேசவில்லை. அக்கறை இருப்பதாக பாவனை செய்யவில்லை. கிண்டலடிக்கிறது. கிண்டலின் வழியே விமர்சனம் செய்கிறது. தவசிக்கருப்புசாமியின் கவிதைகளில் ஒளிவுமறைவு இல்லை. நாசூக்கு என்பதற்கு இடமில்லை. எல்லாவற்றின் மீதும் போதிய வெளிச்சம் பாய்ச்சிப்பேசுவது, எதுவாக இருந்தாலும் சத்தம்போட்டு பேசுவது என்பது பொது குணமாக இருக்கிறது.
       ‘ஆயிரம் நாவு படைத்த ஆதி சேடனாலும் முடியாது’, சலங்கை கட்டாத சதிர் சீரங்கத்து காகத்தின் அரிகோவிந்தம்’ என்று ஆரம்பித்து புராண, இதிகாச கதைகளையும், பாத்திரங்களையும் கவிதைக்குள் கொண்டு வரும் தவசிக்கருப்புசாமி தமிழின் இன்றைய நவீன வாழ்வையும் ‘டைல்ஸ் ஒட்டிய வீடு, க்ரில் வைத்த கேட்டு, அந்த காதிலொன்று இந்த காதிலொன்று ஆண்டிராய்டு செல்லு, ஆசாரத்தில் ஒன்று அடுப்படியிலொன்று தொடுதிரை வண்ணத் தொலைக்காட்சி - வாசற்படியில் தினுசிலொரு வண்டிவாசி’ என்று விரிவாக கவிதையில் விவரிக்கிறார். தவசிக்கருப்புசாமியின் கவிதைகளை எந்த அடையாளத்திற்குள்ளும் அடக்கமுடியாது. ‘உப்பரிகையில் நின்று கெக்கலிக் கொட்டிச்சிரித்தவர்கள் முன் - பாலமலை பருவதம்போல் குவிந்தது பஞ்சவர்ணச்சீலை’ என்றும் ‘உடமையுமீந்து அருமையுங் குலைந்தாள் அணங்கொருத்தி’ என்றும் புலவர் வழக்கில் எழுதுகிற அதே நேரத்தில் ‘கம்முனு இருடா பையா அவ ங்கொம்மா இல்ல’ என்றும், ‘ஊழியத்தின் பெருவுள யாவுள யேண்ட வேல ஏவுனவேல’ என்று பேச்சுவழக்கையும் ஒருங்கே இணைத்து எழுதுகிறார். இந்த கவிதைகளை எப்படி புரிந்துகொள்வது? மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீனக்கவிதை, சர்ரியலிசக் கவிதை என்றா? எல்லாம் கலந்த ஒன்று. புதுபோக்கு. புலவர் தமிழில் எழுதுவது, புரியாத மொழியில் செத்துப்போன சொற்களைக்கொண்டு நவீனக் கவிதை என்ற பெயரில் உளறுவது மட்டும் கவிதை இல்லை என்று இந்தத் தொகுப்பு சொல்கிறது. ஆனாலும் பேச்சு வழக்கும், பழமொழியும், நாடக வசனங்களும் எந்த இடத்தில் கவிதையாகும், எந்த இடத்தில் கவிதைகயாகாது என்பதை தவசி கருப்புசாமி படிக்க வேண்டும். அப்படி படித்தால் அவருடைய கவிதைகள் இன்னும் துலக்கம் பெறும். ஆனாலும் நவீனக் கவிதைகள் என்ற பெயரில் அலட்டிக்கொள்ளாதது ஆறுதல். அங்குசம் தொகுப்பில் எதுகவிதை எது கவிதையில்லை? எல்லாச்சொல்லும் பொருள் தருகின்றன. அங்குசம் கவிதைத் தொகுப்பை மகிழ்ச்சியாக படிக்கமுடியும். சில வாக்கியங்களை சில கவிதைகளை நினைவில் நிறுத்திக்கொள்ள முடியும். பல வரிகளை பலரிடம் சொல்லி மனம்விட்டு சிரிக்க முடியும்.
"புத்திசாலிகளின் கொல்லையில் கழுதை மேய்கிறது."
"ஆகா பிரமாதம் உரித்த பழம் எவ்வளவு ருசி?"
"தனம் தீண்டா தனஞ்செயன் கனி தீண்டா பேடியானான்."




அம்ருதா – மார்ச் 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக