வெள்ளி, 6 ஜனவரி, 2017

திருநீர்சாமி (சிறுகதை) - இமையம்

திருநீர்சாமி - இமையம்
        கணினியில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த அண்ணாமலையிடம் "ஒரு மணிநேரமா கம்ப்யூட்டர்ல என்னா செஞ்சிகிட்டு இருக்கிங்க? ஞாயிற்றுக் கிழமயிலயும் வேலதானா?" என்று வர்ஷா பாண்டே கேட்டாள். அதற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. தலையைத் தூக்கி அவளைப் பார்க்கவுமில்லை. "பையன் எங்கம்மாகூட இருக்கான். நீங்க போயி அழச்சிக்கிட்டு வரீங்களா? நான் போகட்டுமா?" வர்ஷா கேட்டாள். அதற்கும் அவன் வாயைத் திறக்கவில்லை. "மதியம் என்ன சாப்பாடு? வீட்டுல சாப்பிடுறமா, வெளியில எங்கியாச்சும் போறமா?" அதற்கும் அவன் பதில் சொல்லவில்லை. அப்போது படுக்கை அறையிலிருந்து குழந்தை அழுகிற சத்தம் கேட்டது. எழுந்து வேகமாக சென்று குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்தாள். குழந்தையினுடைய அழுகையை நிறுத்துவதற்கு எதைஎதையோ சொன்னாள். எதைஎதையோ பேசினாள். குழந்தைக்கு பிஸ்கட் ஊட்டினாள். தண்ணீர் கொடுத்தாள். பாலைக் காய்ச்சி, பாட்டிலில் ஊற்றிக் கொடுத்தாள். விளையாட்டுப் பொருட்களை எடுத்து விளையாட்டு காட்ட ஆரம்பித்த வர்ஷா "குழந்தையப் பாத்துக்க முடியுமா? நான் மதியத்துக்கு சமைக்கணும்" என்று சொன்னாள்.
"நான் கொஞ்சம் பிஸியா இருக்கன்" என்று மட்டும்தான் சொன்னான். அப்போதும் அவன் வர்ஷாவையோ, குழந்தையையோ தலையைத் தூக்கிப் பார்க்கவில்லை.
"நான் சமைக்க வாண்டாமா?" கேட்டுக்கொண்டே வந்து அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள். குழந்தை கணினியை நோக்கித் தாவியது.
"இன்னிக்கி ஞாயிற்றுக் கிழமதான? கொஞ்சம் லேட்டாவுட்டும்" அப்போதும் அவனுடைய கண்கள் கணினியின் திரையில்தான் பதிந்திருந்தது.
"ரொம்ப அவசரமான வேலயா?"
"ஆமாம்."
"ஒரு அரமணி நேரம் கழிச்சி செய்யக் கூடாதா?" கெஞ்சுவது மாதிரி கேட்டாள்.
"டென் மினிட்ஸ் இரு வர்ஷா. வந்துடுறன். டிக்கட் போட்டுக்கிட்டு இருக்கன். முடிச்சிடுறன்."
"என்னா டிக்கட்?" என்று கேட்ட வர்ஷா குழந்தையிடம் "கம்ப்யூட்டர தொடக் கூடாது. அப்பாவ தொந்தரவு பண்ணக் கூடாது" என்று சொன்னாள். அவள் சொன்னதைக் குழந்தை கேட்கவில்லை. ஓயாமல் கணினியை நோக்கித் தாவிக்கொண்டிருந்தது.
"ஊருக்குப் போறம் வர்ஷா."
"எந்த ஊருக்கு? டூரா?"
"தமிழ் நாட்டுக்குப்போறம். எங்க குலதெய்வம் கோவிலுக்கு" அண்ணாமலையினுடைய வாய்தான் பேசியது. அவனுடைய மனமும் பார்வையும் கணினியின் திரையில்தான் இருந்தது.
"என்ன திடீர்னு?" கேட்டுக்கொண்டே எழுந்து நின்றாள் வர்ஷா. அவள் எழுந்து நின்றபிறகும் குழந்தை கணினியை நோக்கித் தாவுவதை நிறுத்தவில்லை.
"பசங்களுக்கு பிறந்தமுடி எடுக்கிறதுக்கு, காது குத்துறதுக்கு, பேரு வைக்கிறதுக்கு."
"அதுக்கு அங்கதான் போகணுமா?"
"ஆமாம்" அழுத்தம் திருத்தமாக சொன்னான். குழந்தைக்கு விளையாட்டுக்காட்டிக் கொண்டே "இங்கியே செஞ்சிக்கக் கூடாதா?" என்று கேட்டாள்.
"குல தெய்வம் கோவில்லதான் செய்யணும் வர்ஷா."
"இதுக்காக இவ்வளவு தூரம் போகணுமா?"
"ஆமாம்."
"என்னால இவ்வளவு தூரம் வர முடியாது."
குழந்தை அண்ணாமலையிடம் தாவியது. குழந்தையை வாங்கிகொண்டான்.
"தெரிஞ்சிதான் செய்றிங்களா?"
"தெரிஞ்சதாலதான் செய்றன்" என்று சொல்லிவிட்டு குழந்தைக்கு முத்தம் கொடுத்தான்.
கோபம் வந்துவிட்ட மாதிரி சொன்னாள். "முட்டாள்தனத்துக்கும் ஒரு எல்ல உண்டு."
        அண்ணாமலை எதுவும் பேசவில்லை. குழந்தையைக் கொஞ்சுவதில் இருந்தது அவனுடைய கவனம். "டீ குடிக்கிறிங்களா?" என்று கேட்ட வர்ஷா அவன் என்ன பதில் சொல்கிறான் என்று கேட்காமலேயே எழுந்து சமையலறைக்குச் சென்று அடுப்பைப் பற்றவைத்து டீ போட ஆரம்பித்தாள்.
        கணினியை நிறுத்திவிட்டு குழந்தையோடு விளையாட ஆரம்பித்தான். டீயைப் போட்டு இரண்டு கப்களில் கொண்டு வந்து ஒரு கப்பை அண்ணாமலையிடம் கொடுத்தாள். பிறகு சோபாவில் உட்கார்ந்து தன்னுடைய டீயைக் குடிக்க ஆரம்பித்தாள்.
"டிக்கெட் போட்டாச்சா?"
"ஆமாம்."
"எனக்கு அவசரமான வேல இருக்கா இல்லியான்னு கேக்க வாணாமா?"
"நான் தப்பான காரியம் எதுவும் செய்யலியே."
"எனக்கு தப்புன்னு தோணுது." கோபமான குரலில் சொன்னாள்.
"நீ தில்லியில பொறந்தபொண்ணு. சில விசயங்கள் ஒனக்குத் தெரியாது."
"மொட்டப் போடுறது சரி. அதுக்காக ஒங்க ஊருக்குப் போறதுதான் தப்பு."
வர்ஷாவின் குரலில் முன்பிருந்ததைவிட வேகம் கூடியிருந்தது. அவளுடைய குரலும், முகமும் அவள் கோபத்தில் இருக்கிறாள் என்பதை தெளிவாகக் காட்டியது. அவன் கோபப்படவில்லை. உண்மையைச் சொன்னால் அவன் சந்தோசமாக இருந்தான். குலதெய்வம் கோவிலுக்குப் போகப்போகிறோம் என்ற சந்தோசம். "சில விசயங்கள்ள சரி தப்புன்னு பாக்கக் கூடாது. குழந்தைகளுக்கு ஒரு முறதான் பிறந்த முடி எடுக்கப்போறம். காதுகுத்தப்போறம். பேரு வைக்கப்போறம்? அத குலதெய்வம் கோவில்ல வச்சி செய்யுறதுதான் நல்லது. அதுதான் வழக்கம்."
"எல்லாம் சரி. அதுக்காக இவ்வளவு தூரம் போகணுமா? அதுதான் என் கேள்வி."
"ஏழு கடல் தாண்டியிருந்தாலும் போய்தான் ஆகணும்."
"தில்லியிலியே எத்தனியோ தமிழ் நாட்டோட கோவில் இருக்கு. அதுல ஒண்ணுல வச்சிப் பண்ணிடலாம்."
"பணம் செலவு ஆகும்ன்னு சொல்றியா?"
"முட்டாள்தனமா பேசாதிங்க. அலையணுமேங்கிறதுக்காகத்தான் சொல்றன்."
"நாலு நாள்தான். தில்லியிலிருந்து மெட்ராஸ் போக பிளைட். அப்பறம் ட்ரயின். அதுக்கப்பறம் கார்ல போறம். வேல முடிஞ்சதும் திரும்பிடுறம்."
"முடிவு பண்ணியாச்சா?"
"ஆமாம்."
        அண்ணாமலை தீர்மானமாகச் சொன்னதைக் கேட்டதும் வர்ஷா அடுத்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. சட்டென்று எழுந்து சமையறைக்குள் சென்று மதிய சாப்பாட்டுக்கான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.
        குழந்தையோடு விளையாடிக்கொண்டிருந்தாலும் வர்ஷா கோபமாக இருக்கிறாள், அவளை சமாதானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்துகொண்டே இருந்தது. உடனே பேசினால் கோபமாகி கத்துவாள். ஒரு நாள்விட்டு பேசலாம் என்று நினைத்தான். வர்ஷா முனகிக்கொண்டே வேலை செய்வது தெரிந்தது. பாத்திரங்களைப் போட்டு உடைக்கிற சத்தமும் கேட்டது. நாளைவரை பேசாமல் இருந்தால் இன்னும் கோபமாகிவிடுவாள். அதனால் இப்போதே பேசிவிடலாம் என்று குழந்தையைத் தரையில் விளையாட விட்டுவிட்டு சமையலறைக்குச் சென்று "ஏதாவது ஒதவி செய்யணுமா?" என்று கேட்டான்.
"தேவயில்ல" மொட்டையாகச் சொன்னாள்.
        தமிழ்நாட்டு விசயங்களைச் சொன்னால் அவளுக்குப் புரியாது என்பதால் பல விசயங்களை அவன் சொல்வது இல்லை. மீறிச்சொன்னாலும் அவள் புரிந்துகொள்ள முயல்வதில்லை. பொதுவாக தமிழ்நாட்டு விசயத்தை சொன்னாலே காதுகொடுத்துக் கேட்க மாட்டாள். குலதெய்வம் கோவிலில்தான் பிறந்தமுடி எடுத்து, காதுகுத்த வேண்டும் என்பதை எப்படிச் சொல்லி அவளுக்குப் புரியவைப்பது என்று  யோசித்தான்.
"எங்க குடும்பத்தில எந்த நல்ல காரியம் நடந்தாலும் அது குல தெய்வம் கோவில்ல வச்சிதான் நடக்கும். நம்ப கல்யாணம் மட்டும்தான் அங்க நடக்கல. நம்ப கல்யாணத்துக்கே ஒங்க வீட்டுல ஒத்துக்கல. இதுல ஊர்ல, குலதெய்வம் கோவில்ல கல்யாணமின்னா சுத்தமா ஒங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்கன்னுதான் தில்லியில கல்யாணம் செஞ்சிக்க ஒத்துக்கிட்டன். அதனால எங்க வீட்டுசனங்களுக்கு எம் மேல கோபம். குலதெய்வம் கோவில்ல கல்யாணம் கட்டாததே பெரிய தப்பு தெரியுமா?"
"என்னெக் கல்யாணம் கட்டுனதா?" வெடுக்கென்று கேட்டாள். அதற்கு என்ன பதில் சொல்வதென்று அவனுக்குப் புரியவில்லை. சிறிதுநேரம் ஒன்றும் பேசாமல் எரிந்துகொண்டிருந்த அடுப்பைப் பார்த்தான். மும்முரமாக வேலை செய்வது மாதிரி பாவனை செய்துகொண்டிருந்த வர்ஷாவைப் பார்த்தான். அவன் தன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது அவளுக்குத் தெரியும். ஆனாலும் ஒருமுறைகூட அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை.
"ஆறு, ஏழு தலமுறயா எங்க வீட்டுல நடந்த எல்லா கல்யாணமும் அந்த கோவில்லதான் நடந்தது."
"கோவில் பெருசா இருக்குமா?"
"ஒரு வீடு அளவுக்குத்தான் இருக்கும். திருநீர்சாமி சமாதியான எடம்தான் கோவில்ங்கிறது."
        குக்கரை இறக்கி வைத்துவிட்டு காயை வேகவைப்பதற்கான  பாத்திரத்தைத் தூக்கி அடுப்பில் வைத்துவிட்டு "நீங்க சொல்ற ஆளு சாமி இல்லியா?" என்று கேட்டாள்.
"சராசரி மனுஷனா பிறந்து, வளந்து, சராசரி மனுஷனா வாழாம பல அதிசயமான காரியங்கள செஞ்சவறு. தனக்குன்னு சாப்பிடுற தட்டக்கூட சொந்தமா வச்சிக்காம வாழ்ந்த மனுசன். ஒனக்கு ஏற்கனவே பலமுற சொல்லிருக்கன்."
"" என்று வர்ஷா சொன்னாள். அவள் சொன்ன "" என்ற சொல் அவனுக்கு லேசாக கோபத்தை உண்டாக்கியது. தன்னுடைய குலதெய்வத்தை ஏளனம் செய்கிற விதமாக சொன்னாளோ என்ற சந்தேகம் வந்தது. "நீங்க இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறதால. அது பெரிய கோவிலா இருக்குமோன்னு சந்தேகப்பட்டன். இப்பதான் தெரியுது அது ஒரு ஆளோட சமாதின்னு" என்று சொல்லிவிட்டு காய்களை நறுக்கிப்போட ஆரம்பித்தாள். வர்ஷாவினுடைய பேச்சும் செய்கையும் ஊருக்குப் போவது அவ்வளவு முக்கியமான விசயமில்லை. குலதெய்வம் கோவிலுக்குப் போக வேண்டிய அவசியமுமில்லை என்று வெளிப்படையாகக் காட்டியது. "நான் சொல்றத புரிஞ்சிக்க. ஏழுஎட்டு தலைமுறைக்கு முன்னால 1541ல பிறந்தவர்தான் அவுரு. சின்ன வயசிலியே வீட்டவிட்டு ஓடிப்போயி சித்தர் ஆயிட்டாரு. அவரத்தான் நாங்க குலதெய்வமா கும்புட்டுக்கிட்டு வரம்." அவன் சொன்னதைக் காதில் வாங்காத வர்ஷா "குழந்த கத்துது போயி தூக்குங்க" அதிகாரமாகச் சொன்னாள். அழுதுகொண்டிருந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு சமையலறைக்கு வந்தான். வர்ஷாவைக் கண்டதும் குழந்தை அவளிடம் தாவியது. குழந்தையை வாங்காதது மட்டுமல்ல, குழந்தை தன்னை நோக்கி தாவுவதையும் பார்க்காத மாதிரி வேலை செய்துகொண்டிருந்தாள். குழந்தை தொடர்ந்து தும்மல் போட ஆரம்பித்தது.
"தூக்கிக்கிட்டு ஹாலுக்குப் போங்க."
        அண்ணாமலை குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஹாலுக்கு வந்தான். சன்னல் திரையை விலக்கி இருபதுமாடி, முப்பது மாடி என்று வரிசையாக இருந்த குடியிருப்புக் கட்டிடங்களை குழந்தைக்குக் காட்டினான். சிறிது நேரம் கழித்துதான் தும்மல் நின்றது. சன்னலின் திரைச் சீலையை இழுத்துவிட்டுவிட்டு சோபாவில் வந்து உட்கார்ந்தான். தொலைக்காட்சியைப் போட்டான். அப்போது சமையல் வேலைகளை பாதியிலேயே விட்டுவிட்டுவந்த வர்ஷா அண்ணாமலையின் பக்கம் பார்க்காமல் வேண்டுமென்றே தொலைக்காட்சியைப் பார்த்தவாறு உட்கார்ந்தாள். தன்னை நோக்கித் தாவிய குழந்தையையும் அவள் வாங்கிக்கொள்ளவில்லை. அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்தான். பிறகு சலிப்படைந்த குரலில் சொன்னான், "ஒனக்கு சித்தர்களப் பத்தித் தெரியல."
"சித்தர்ன்னா என்னா? மாயமந்தரம் செய்றவங்களா?"
"இல்ல. சித்தர்ங்கிறது ஒரு வாழ்க்க முற. எதுவும் தனக்கில்லன்னு ஒதறித் தள்ளிட்டுப்போறது." என்று ஆரம்பித்து சித்தர்களைப் பற்றி, அவர்கள் வாழ்ந்த விதம் பற்றி ஒரு பத்து நிமிடத்திற்கு மேல் விளக்கமாகச் சொன்னான். அவன் சொன்ன எதுவுமே வர்ஷாவை ஆச்சரியப்படுத்தவில்லை "அப்படியா?" என்றுகூட அவள் கேட்கவில்லை. அதற்காக அவன் வருத்தப்படவில்லை. வடநாட்டுக்காரி. சித்தர்களுடைய கதைகள் அவளுக்குப் புரியாது என்று நினைத்துக்கொண்டான்.
        வர்ஷா என்ன நினைத்தாளோ நிதானமாகக் கேட்டாள், "ஒங்க குலதெய்வம் கோவிலுக்குப் போயே ஆகணும்னு உறுதியா இருக்கிங்களா?"
"எங்க திருநீர்சாமியப் பத்தி முழுசா தெரிஞ்சா இந்த கேள்விய கேக்க மாட்ட."
"நீங்க சொல்றது சாமி இல்ல. சாதாரண ஆளு" என்று வர்ஷா சொன்னதில்கூட அவனுக்குக் கோபம் வரவில்லை. சாதாரண ஆளு என்று சொல்லும்போது அவளுடைய குரலிலிருந்த ஏளனம் தான் கோபத்தை உண்டாக்கியது.
"நீ பெரிய மகான்னு சொல்லிக்கிட்டுப் போறியே, அந்த சாமியாருக்கு  இந்தியாவிலயும், வெளிநாட்டுலயும் எத்தன கோடிக்கு சொத்து இருக்குன்னு தெரியுமா? கார்பரேட் நிறுவனம் மாதிரி நாட்டுக்குநாடு கிளை வச்சிருக்கான். சொத்து வச்சிருக்கான். கோடிகோடியா சொத்து சேத்து வைக்கிறவனா சாமி? திருநீர்சாமி யாரு தெரியுமா? ஒம் மனசுதான் சாமி. அது சொல்றபடி செய். கல்ல சாமின்னு சொல்லிக்கிட்டு திரியாத. ‘என் செந்நா பொய் பேசாது’னு சொன்ன ஆளு. தங்களுக்கின்னு பேருகூட வச்சிக்காதவங்கதான் சித்தருங்க. திருநீர்சாமின்னு பேர்  வச்சதுகூட சனங்கதான். எவ்வளவோ அற்புதங்கள செஞ்சும் எந்த அடயாளமும் இல்லாம போனவங்க. அடயாளமே கூடாதுனு சொன்னவங்கதான் சித்தருங்க."
        அண்ணாமலை சொன்ன எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட வர்ஷா ரொம்ப அன்பாக சொன்னாள். "எனக்கு சமைக்கிற வேல இருக்கு." சொன்ன வேகத்திலேயே எழுந்து சமையல்கட்டிற்குள் போனாள். கோபத்தில் மடியிலிருந்த குழந்தையை இறக்கி தரையில் விளையாடவிட்டான். தொலைக்காட்சியைப் பார்க்க முயன்றான். மனம் ஒன்றவில்லை. எழுந்து சென்று ஜன்னல் திரைச்சீலையை விலக்கிப் பார்த்தான். கண்பார்வைக்கு தெரியும் தூரம்வரை இருபதுமாடி, முப்பதுமாடி கட்டிடங்களாகவே தெரிந்தன. ஒவ்வொரு கட்டிடமாகப் பார்த்தான். பார்த்த எதுவும் மனதில் பதியவில்லை. வர்ஷாவினுடைய செயல், பேச்சு நெருப்புத்துண்டு மாதிரி மனதிற்குள் எரிந்துகொண்டிருந்தது. தொடர்ந்து பேசினால் வாக்குவாதம் வரும், சண்டை வருமே என்று நினைத்தான். ’வரட்டும்’ என்று சொல்லிவிட்டு சமையலறைக்குப் போனான். போன வேகத்திலேயே வேகமாக சொன்னான். "நீ நினைக்கிற மாதிரி திருநீர்சாமி ஒண்ணும் சாதாரண ஆளில்ல. ஊர்க்காரங்க நீ சாமின்னா இந்த சுடாத மண்சட்டியில சோறாக்கு பாக்கலாம்ன்னு கொடுத்திருக்காங்க.“ என்று அவன் சொல்லிமுடிப்பதற்குள் வர்ஷா குறுக்கிட்டு "சமைச்சாரு அதான?" என்று கேட்டாள். "ஆமாம்" என்று தலையாட்டினான். திடீரென்று வர்ஷாவின் மூக்கை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. உடனே சொன்னான் "ஆறு நெறயா தண்ணி போகயில ஆத்த கடந்து வா பாக்கலாம்ன்னு சொல்லி இருக்காங்க." அவன் முடிக்கவில்லை அதற்குள் முந்திக்கொண்டு "ஒங்க சாமி வெள்ளத்தில இந்தப்பக்கத்திலிருந்து அந்தப்பக்கம் போயிட்டு வந்திட்டாரு அதான? இத நான் பலமுற கேட்டாச்சு" சிரித்துக்கொண்டே சொன்னாள்.
"நீ சொல்ற மாதிரி இல்ல. தக்க மாதிரி தண்ணிமேலயே நடந்துபோயி, திரும்பி நடந்துவந்திருக்கார். அப்பத்தான் ஊர்சனங்க அவர அதிசயமான ஆளு. சித்து வேலயெல்லாம் செய்றார்னு சொல்லி கும்புட ஆரம்பிச்சி இருக்காங்க"
"நாம்ப ரெண்டு பேரும் எய்ம்ஸ்ல சயின்டிஸ்ட்டா இருக்கங்கிறத மறந்திட்டுப் பேசக் கூடாது."
        வர்ஷாவின் பேச்சும், முகபாவனையும் அவனுக்கு எரிச்சலை உண்டாக்கியது. அவளுக்கு எப்படிப் புரியவைப்பது என்று யோசித்தான். அப்போது குழந்தை ஊர்ந்துகொண்டு வந்தது தெரிந்ததும் குழந்தையை தூக்கிக்கொண்டு "இன்னும் வேல முடிய எவ்வளவு நேரமாகும்?" என்று கேட்டான்.
"டென் மினிட்ஸ்" குழந்தை தன்னை நோக்கித் தாவுவதைப் பார்த்ததும் "ஹாலுக்குத் தூக்கிக்கிட்டுப் போங்க. வந்திடுறன்" என்று சொன்னாள். அவள் சொன்னதை செய்யாமல் "நான் திருநீர்சாமியப் பத்தி சொல்றது பொய்ன்னு நெனைக்கிறியா?" என்று கேட்டான். அதற்கு எந்தப் பதிலையும் அவள் சொல்லவில்லை. நிஜமாகவே சமையல் வேலைகளைச் செய்வதில் கவனமாக இருந்தாள். அதைப் பற்றிக் கவலைப்படாமல் "அது சாதாரண கோவில் இல்ல. இரட்டைத் தலை நாகம் எப்பவும் அந்த கோவில சுத்தி வரும். அதப் பாத்து யாரும் பயப்பட மாட்டாங்க. அத அடிக்கவும் மாட்டாங்க. திருநீர்சாமிதான் பாம்பா ரூபம் மாறி வர்றார்னு சொல்றாங்க. ராத்திரி நேரத்தில கோவில்லருந்து மணி ஓசயும், உடுக்க ஒலியும் கேக்குமாம். சப்த கன்னிகளும், பரிவார தேவதகளும் கோவில சுத்தி நடனமாடுறதா சொல்றாங்க. சாமி உயிரோடிருந்தப்ப குளிச்ச எடத்தில ஒரு கிணறு வெட்டி வச்சிருக்காங்க. முந்நூறு நானூறு வருசத்து கிணறு. எவ்வளவு கோடைகாலமா, எவ்வளவு வறட்சியான காலமா இருந்தாலும் அந்த கிணறுல ஒரு நாளும் தண்ணி இல்லாம இருந்ததே இல்லை. சாமி கும்பிடப் போற எல்லாரும் முதல்ல அந்தக் கிணத்துக்குப்போயி தண்ணி எறைச்சி குளிச்சிட்டுத்தான் கோவிலுக்குள்ளாரியே அடிவைப்பாங்க. அந்தக் கிணத்து தண்ணிய குடிச்சா இளநீர் குடிச்ச மாதிரி இருக்கும்." என்று சொன்னான்.
        அண்ணாமலை பேசிமுடிக்கும்வரை அமைதியாக வேலைகளைப் பார்த்துகொண்டிருந்த வர்ஷா கடைசியாக சொன்னாள். "எனக்கு வேல இருக்கு." பாத்திரங்களை கழுவிப்போட ஆரம்பித்தாள். அவனுக்கு நல்ல கோபம் வந்தது. கோபத்தை வெளிக்காட்டாமல் நிதானமாகச் சொன்னான். "நீ அந்தக் கோவிலுக்கு வந்து பாத்தின்னாதான் நான் சொல்றதெல்லாம் உண்மன்னு புரியும்.”
        பந்தயம் கட்டினது மாதிரி அவன்பேசி முடிக்கும்வரை அமைதியாக இருந்த வர்ஷா கடைசியாகச் சொன்னாள், "பாட்டீங்ககூட இவ்வளவு அருமயா கத சொல்ல மாட்டாங்க."
        வர்ஷாவின் பேச்சிலும், குரலிலும் திமிர்த்தனமும், தடித்தனமும் இருந்தது. அதை அவன் பொருட்படுத்தவில்லை. அவளுக்குப் புரியவேண்டும் என்ற எண்ணத்தில் சொன்னான், "ஒனக்கு சந்தேகம்ன்னா என்னோட ஷெல்பில இருக்கிற திருநீர் சாமியப் பத்தி எழுதின புத்தகத்த படிச்சிப்பாரு. ஒனக்குப் புரியும். எத்தினிமுற அந்தப் புத்தகங்கள எடுத்து சும்மா பாருன்னு சொல்லியிருக்கன். நீ ஒருமுறகூட நான் சொல்றத செய்யுறதில்ல."
"எனக்கு தமிழ் தெரியுமா?
"நான் சொல்றது, தமிழ்நாட்டு பொண்ணாயிருந்தா இந்நேரம் எல்லாம் புரிஞ்சிருக்கும்."
"தமிழ்நாட்டு பொண்ண காதல் செஞ்சி கல்யாணம் கட்ட வேண்டியது தான? எப்பப் பாரு தமிழ்நாட்டு பொண்ணுன்னு சொல்லிக்கிட்டு" கடுமையான குரலில் கத்தினாள்.
"வடநாட்டுக்காரிகளுக்கு தமிழ் பொண்ணுங்கன்னாலே கோபம் வந்திடும்" அண்ணாமலை தமிழில் சொன்னதைக் கேட்ட வர்ஷா, "இப்ப என்னா சொன்னிங்க?" என்று கேட்டாள். "ஒண்ணும் சொல்லல" என்று சொல்லி மழுப்பினான். குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஹாலுக்கு வந்து சோபாவில் உட்கார்ந்தான். "தமிழில எவ்வளவோ நல்ல விசயம் சொல்றன். அதெல்லாம் அவளோட செவிட்டுக் காதில விழ மாட்டங்குது. அப்பல்லாம் தமிழ் புரிய மாட்டங்குது. திட்டுறது மட்டும் நல்லா புரியுது" லேசாகத்தான் சொன்னான். அது எப்படியோ அவளுக் கேட்டுவிட்டது. வேகமாக வந்து, "என்ன தமிழில திட்டிக்கிட்டுத்தான இருந்திங்க" என்று கோபமாகக் கேட்டாள். அதற்கு அவன் கோபப்படவில்லை. சிரித்தான். "தமிழ்ல நான் சொல்ற நல்ல விசயம் எதுவும் ஒனக்கு புரிய மாட்டங்குது. ஆனா திட்டினா மட்டும் எப்பிடி தெளிவா புரியுது?” என்று கேட்டு சிரித்தான்.
"ஒங்களோட கருத்துப்போன மூஞ்சியப் பாத்தே கண்டுபுடிச்சிடுவன்" பல்லைக்கடித்துகொண்டே சொன்னாள். "ஒரு விசயமும் இல்லாம எதுக்கு கோபப்படுற? ஒக்காரு" என்று சொன்னதோடு அவளுடைய கையைப்பிடித்து இழுத்து பக்கத்தில் உட்காரவைத்தான். "நீங்க என்ன செஞ்சாலும், என்ன சொன்னாலும் நான் அந்த கோவிலுக்குப் போய் அலயப்போறதில்ல."
"டிக்கட் போட்டாச்சி. இனி மாத்த முடியாது."
"மொட்டப்போடுறதுக்காக யாராச்சும் இவ்வளவு தூரம் போவாங்களா?" சிடுசிடுப்பாக கேட்டாள்.
"என்னா பேசுற நீ?”
"நான் வரல. நீங்க போயிட்டு வாங்க. நான் தடுக்கல."
"குடும்பத்தோட போகணும். அதான் முற."
"என்ன விட்டுடுங்க" என்று சொன்னதோடு குழந்தையைத் தூக்கிக்கொண்டு படுக்கை அறைக்குள் போனாள். அவளை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைக்க வர்ஷாவுக்குப் பின்னாலேயே அவனும் போனான். குலதெய்வம் கோவிலுக்குப் போகவேண்டியதன் அவசியத்தை பத்து நிமிசத்திற்குமேல் விளக்கி சொன்ன பிறகு மனம் இறங்கியது மாதிரி சொன்னாள்.
"ஆன் லைனிலியே செய்ய முடியுமான்னு பாருங்க."
"என்ன பேசுற? முட்டாள் மாதிரி."
"அமெரிக்காவில இருக்கிற இந்தியாக்காரங்க திதி கொடுக்கிறது மாதிரியான பல காரியங்கள ஆன்லைன்லதான் செய்றாங்க."
"ஆன் லைன்ல பொடவ வாங்குறாங்க. பீர், பிராந்தி, பிரியாணி எல்லாம் ஆர்டர் பண்றாங்க. குலசாமி கும்பிடப்போறதும் அந்த மாதிரியா?" என்று கேட்ட அண்ணாமலை "நீயும் நானும் தொடர்ந்து பேசினா சண்டதான் வரும். நான் ஒங்கம்மாவ வரச்சொல்லி அவுங்ககிட்டப் பேசிக்கிறன்." என்று சொன்னான். “திருப்பதிக்கு கூப்பிடுங்க வர்றன். ஆனா அந்த மயிரு சாமி கோவிலுக்கு மட்டும் வர மாட்டன்" என்று சொன்னதுதான். "மயிரு சாமியா?" என்று கேட்டு கொஞ்சம்கூட யோசிக்காமல் ஓங்கி வர்ஷாவின் கன்னத்தில் அறைந்தான். மறுநொடியே என்ன இப்படி செய்துவிட்டோம் என்று யோசித்தான்.
"என்ன செஞ்சிட்டிங்க?" திரும்பத்திரும்பக் கேட்டாள். அழுதாள். என்ன நினைத்தாளோ செல்போனை எடுத்து தன்னுடைய அம்மாவுக்கு போன்போட்டு "ஒடனே வா" அழுதுகொண்டே சொன்னாள். வர்ஷா அழுததால் குழந்தையும் அழுதது. சட்டென்று எழுந்து ஹாலுக்கு வந்தான். மறுநொடியே கதவை சாத்திக்கொண்டாள்.
        அண்ணாமலைக்குக் குழப்பமாகவும். கோபமாகவும் இருந்தது. நான்காண்டுகளுக்குப் பிறகு முதன்முதலாக வர்ஷாவை திருமணம் செய்துகொண்டது சரியா என்ற எண்ணம் எழுந்தது. எம்.எஸ்ஸி., வேதியியல் முடித்துவிட்டு பிஎச்.டி., படிப்பதற்காக தில்லிக்கு வந்தபோதுதான் வர்ஷா அறிமுகமானாள். அவளும் பி.எச்.டி., படிப்பதற்காகத்தான் வந்தாள். இரண்டு பேருக்கும் பழக்கமானது. உறவானது. எய்ம்ஸில் வேலை கிடைத்தபிறகு தான் திருமணம் என்ற முடிவில் இருவரும் இருந்தார்கள். வேலை கிடைத்ததும் விசயத்தை சொன்னபோது அவளுடைய வீட்டில்தான் அதிகம் பிரச்சனை செய்தார்கள். அவனுடைய வீட்டில் "வடநாட்டுக்காரி நம்ப இதுக்கு ஒத்துவருமா?" என்று கேட்டதோடு "கல்யாணம் மட்டும் நம்ப குலசாமி கோவில்லதான் நடக்கணும்" என்று நிபந்தனை போட்டார்கள். வர்ஷாவின் பிடிவாதத்தால்தான் அவளை, அவளுடைய வீட்டார்கள் அவனுக்கு கல்யாணம் செய்து வைத்தார்கள். பையனுக்கு இரண்டு வயது, பெண் குழந்தைக்கு ஒரு வயது. கல்யாணம் முடிந்ததிலிருந்து இதுவரை அவளுக்கும் அவனுக்கும் சண்டை என்று இதுவரை பெரிதாக வந்ததில்லை. ஒருமுறைகூட அவன் அவளைத் திட்டியதில்லை. முறைத்ததில்லை. அவளுடைய விருப்பத்திற்கு எதிராக நடந்ததில்லை. அவள்தான் அதிகம் பேசுவாள். அதிகம் அடம்பிடிப்பாள். சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பாள். எப்போதும் தன்னுடைய விருப்பத்தை, காரியத்தை மட்டும்தான் பேசுவாள். விட்டுகொடுத்துப் போவது என்பது அவளுடைய இயல்பிலேயே இல்லை. அவளை அடித்தது சரியா என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான். அப்போது ஹாலிங் பெல் அடிக்கிற சத்தம் கேட்டது. எழுந்து சென்று கதவைத் திறந்தான். வர்ஷாவினுடைய அம்மா நவநீதா பாண்டே நின்றுகொண்டிருந்தாள். "வாங்க” என்று சொன்னான். அதற்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. முகம் கடுகடுவென்றிருந்தது. விர்ரென்று வேகமாக படுக்கை அறைக்குள் சென்றாள். மறுநொடியே கதவு சாத்தப்பட்டது.

        சோபாவில் உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த அண்ணாமலையினுடைய மனதில் குழப்பமான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. வர்ஷாவினுடைய வீட்டு சனங்களைப் பற்றி, தன்னுடைய வீட்டுசனங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தான். அப்போது அரைமணி நேரத்திற்குமேல் படுக்கை அறைக்குள் பேசிக்கொண்டிருந்துவிட்டு வெளியே வந்த நவநீதா, அண்ணாமலை உட்கார்ந்திருந்த சோபாவிற்கு நேரெதிரில் கிடந்த சோபாவில் உட்கார்ந்துகொண்டு “ஒங்க மேல இருந்த மரியாதயே போயிடிச்சி. கேக்கறதுக்கே அசிங்கமா இருக்கு" படபடவென்று பேசினாள்.
"ஐம்பது ரூபா கொடுத்தா பார்பர்ஷாப்ல கிளீன் பண்ணிட்டுப்போறான். இதுக்கு எதுக்கு சண்ட?" நவநீதா பாண்டேவின் குரல் உயர்ந்திருந்தது. "பதில்சொல்லுங்க எதுக்காக அடிச்சிங்க?"
"பிறந்த முடிய பார்பர்ஷாப்ல எடுக்கக் கூடாது.”
"கோவில்லதான் செய்யணுமின்னா, இங்க எத்தன கோவில் இருக்கு? அதுல ஒரு கோவிலுக்குப்போயி காரியத்த முடிக்க வேண்டியதுதான?" நவநீதா பாண்டேவிற்கு கோபம் கூடியதே தவிர, குறையவில்லை.
"மத்த கோவில்ல செய்யக் கூடாது."
"அதுக்காக அவ்வளவு தூரம் போக முடியுமா?"
"போய்தான் ஆகணும்."
"பைத்தியக்காரத்தனமா இருக்கு. எந்த காலத்தில இருக்கிங்க?" நவநீதா பாண்டே சத்தமாகவே கேட்டாள்.
"பெரியவங்க நீங்க. ஒங்கலுக்குத் தெரியும்ன்னு நெனச்சன்.”
"நீங்க சொல்றது கோயிலே இல்லியாம். யாரோ ஒருத்தர் செத்துப்போன எடமாமே."
"யாரோ ஒருத்தர் இல்ல. எங்களோட மூதாதியர்."
"யாரா இருக்கட்டும். ஒருத்தரோட சமாதியிலப்போயா நல்லக்காரியம் செய்வாங்க?" கடுமையான குரலில் கேட்டாள் நவநீதா.
"ஒங்களுக்கு தமிழ் நாட்டோட பழக்கம் தெரியல."
"ஒங்க பிடிவாதத்தால லீவ்போடணும். அலயணும், நாலுநாளைக்கு குழந்தங்க தாங்குமா? தில்லியில மழ சீசன் இன்னம் முடியல. ரெண்டும் சின்னப்பிள்ளைங்க. இடம் மாறும்போது ஒடம்புக்கு முடியாட்டி என்னா செய்விங்க?" அதிகாரமாகக் கேட்டாள்.
"எதுவும் ஆகாது"
"எப்படி சொல்றிங்க?"
"திருநீர்சாமி பாத்துக்குவான்."
"யாரு அது?"
"எங்க குலசாமி."
"அப்பிடி ஒரு சாமியா?"
        நவநீதா லேசாக சிரித்தாள். அவளுடைய சிரிப்பில் ஏளனமும், இளக்காரமும் நிறைந்திருந்தது. முகத்தில் அலட்சியம் நிறைந்திருந்தது.
“சிரிக்காதிங்க.”
        அண்ணாமலையினுடைய குரலிலிருந்த மாற்றத்தைக் கண்ட நவநீதாவின் முகம் மாறிப்போயிற்று. நான்காண்டில் அவன் இவ்வளவு கடுமையாகப் பேசி அவள் கேட்டதே இல்லை. அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். கோபமாக இருக்கிறான் என்பது வெளிப்படையாகவேத் தெரிந்தது. "நான் சாதாரணமாத்தான் சிரிச்சன். தப்பா எடுத்துக்காதிங்க" நவநீதா பாண்டே சொன்னதைக் கேட்காமல் தீர்மானமாகச் சொன்னான்.
"என்னோட பிள்ளைங்களுக்கு எங்க குலதெய்வம் கோவில்லதான் பிறந்த முடி எடுப்பன்."
"யோசிச்சி செய்ங்க. இங்க எத்தினியோ கோவில் இருக்கு." நவநீதா பாண்டேவின் குரலில் பழைய வேகம் இல்லை. அண்ணாமலையைப் பார்ப்பதைத் தவிர்க்க விரும்பியது மாதிரி தொலைக்காட்சியைப் பார்த்தாள். ஆனாலும் அவன் நவநீதா பாண்டேவைப் பார்த்து சொன்னான். "ஒரே முடிவுதான். யோசிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்ல." அப்போது படுக்கையறையிலிருந்து எழுந்து வந்த வர்ஷா கேட்டாள், "நான் வரலன்னா என்னா செய்விங்க?"
"நானும், என்னோட பிள்ளைங்களும் போவோம்."
"பாப்பாவுக்கு ஒரு வயசுதான் ஆகுது. அவளத் தூக்கிக்கிட்டுப் போயீடுவிங்களா?"
"நிச்சயமா?"
"நானும் வர மாட்டன். பிள்ளைங்களையும் அனுப்ப மாட்டன்." தீர்மானமாக வர்ஷா சொன்னதைக் கேட்ட அண்ணாமலை அவளுடைய முகத்தில அடிப்பது மாதிரி சொன்னான். "ஒனக்கு டைவர்ஸ் கொடுத்திட்டு தூக்கிக்கிட்டுப் போவன்."
        அண்ணாமலை எடுத்த வேகத்தில் அந்த வார்த்தையைச் சொல்வான் என்று வர்ஷா மட்டுமல்ல நவநீதா பாண்டேவும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு பேருக்கும் அதிர்ச்சியும் கோபமும் ஒரே நேரத்தில் உண்டாயிற்று. வர்ஷா வைத்தகண் வாங்காமல் அவனையே  பார்த்தாள். கோபத்தைக் குறைப்பதற்காக நவநீதா பாண்டே தொலைக்காட்சியையும், வீட்டிலுள்ள மற்றப் பொருட்களையும் பார்த்தாள். வர்ஷாவுக்கு என்ன தோன்றியதோ, "ஆர் யூ ஷ்யூர்" என்று கேட்டாள். அவள் கேட்ட வேகத்திலேயே அவனும் பதில் சொன்னான் "ஷ்யூர்."
        வர்ஷாவுக்கும் நவநீதா பாண்டேவுக்கும் இப்போதுதான் கூடுதலான அதிர்ச்சி உண்டாயிற்று. தெரியாமல் சொல்லிவிட்டேன். வாய்தவறி வந்துவிட்டது என்று சொல்வான் என்று இரண்டுபேரும் எதிர்பார்த்தார்கள். அவன் அப்படி சொல்லவில்லை. நிதானமாக, தீர்மானமாக, குரலில் அவசரமோ, பதட்டமோ இல்லாமல்தான் சொன்னான். அதுதான் அவர்கள் இருவரையும் எரிச்சலடையச் செய்தது. கன்னத் தசைகளும், உதடுகளும் துடிக்க வர்ஷா சொன்னாள், "அதையும் பாத்திடலாம்.”
        "டைவர்ஸ் செய்யத்தான் எம் பொண்ண கல்யாணம் கட்டுனிங்களா?"
நவநீதா பாண்டே சத்தமாகக் கேட்டாள்.
        "இல்ல."
"அப்பறம் எதுக்கு சொன்னிங்க."
        அண்ணாமலை பதில் சொல்லாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவனைப் பார்க்கபார்க்க வர்ஷாவுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. தன்னை அடித்தது மட்டுமில்லாமல் டைவர்ஸ் தருவேன் என்றும் சொல்கிறான். அதையும் தன்னுடைய அம்மாவின் முன்னால் சொல்லிவிட்டானே என்ற ஆத்திரம் அவளுடைய கண்களில் கண்ணீராக வழிந்தது. அவள் அழுததைப் பார்த்ததும் நவநீதா பாண்டேவிற்கும் அழுகை வந்துவிட்டது. தன்னுடைய அம்மா அழுததைப் பார்த்ததும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபம் வந்தது. "நீங்க கூப்புடுற கோவிலுக்கு நான் வரலன்னதும் என்னெ டைவர்ஸ் செஞ்சிடுவன்னு சொல்றிங்க. நான் நம்ம அப்பார்ட்மெண்டுக்கு வர்றவழியில இருக்கிற ஹனுமன் கோவிலுக்கு வரச்சொல்லி எத்தனமுற கூப்பிட்டிருக்கன். ஒரு முறையாவது வந்திருக்கிங்களா?"
"இத்தன வயசுவர எங்க குலசாமி கோவிலத்தவிர நான் வேற எந்த கோவிலுக்கும் அதிகமா போனதில்ல."
"ஹனுமனவிட ஒங்க சாமி பெருசா?"
"சாமியில பெரியசாமி. சின்னசாமின்னு இருக்கா?".
"நிச்சயம் இருக்கு."
"அப்பிடின்னா எங்க குலசாமிதான் பெருசு. காரணம் என்னன்னா நீதான் சாமி. ஒம் மனசுதான் சாமி. அதுக்குமேல வேற சாமி இல்லன்னு சொன்னவர். ஒருமுற சிலபேரு அவர திருச்செந்தூர் கோவிலுக்கு கூப்பிட்டு இருக்காங்க. அதுக்கு, நான்தான் அவன். அவன்தான் நான். என்னயே நான் கும்பிட்டுக்கணுமா? மனுசன்தான் தன்னயே கும்புட்டுக்குவான். நான் வரலன்னு சொல்லிட்டாராம்."
"நீங்க சொல்றதயெல்லாம் நம்புற மாதிரி இல்லெ. கதெ மாதிரிதான் இருக்கு."
"நான் சொல்றது கதென்னா நீ கும்பிடுற ஹனுமனும் கதெதான். ராமனும் சீதையும் கதெதான். வால்மீகியும், கம்பனும் உருவாக்கின கதைங்க. சாமிங்க"
"இல்லெ. இல்லெ..." என்று கத்திய வர்ஷா "ஜெய் ஹனுமன்" என்று சொல்லி தாடையில் போட்டுக்கொண்டாள். அப்போது நவநீதா பாண்டே அண்ணாமலையை எரித்துவிடுவது மாதிரி பார்த்துக்கொண்டே சொன்னாள் "தப்பா மனுசங்களப் பத்தி பேசலாம், கடவுளப் பத்திப் பேசக் கூடாது."
"நான் தப்பா பேசல. வட நாட்டுல வால்மீகியும், தமிழ் நாட்டுல கம்பனும் உருவாக்கினதுதான் ராமனும், ஹனுமனும். காவியத்த எழுதின ரெண்டுபேருக்கும் ராமன் கடவுள் இல்ல. சாதாரண கதாபாத்திரம் மட்டும்தான்."
வர்ஷாவும், நவநீதா பாண்டேயும் ஒரே நேரத்தில் கத்தினார்கள்.
"அப்பிடி சொல்லாதிங்க."
        அவன் பதில் பேசவில்லை. வர்ஷாவையும், நவநீதா பாண்டேவையும் அவன் பார்க்க விரும்பாதவன் மாதிரி உட்கார்ந்திருந்தான். ஆனால் அவனை அவர்கள் எரித்து சாம்பலாக்கிவிடுவது மாதிரி பார்த்தார்கள். நவநீதா பாண்டே சொன்னாள் "புது அண்ணாமலைய இன்னிக்கித்தான் பாக்குறன். அமைதியா இருக்கிற ஆள நம்பக் கூடாதுன்னு சொன்னது சரியா இருக்கு. மதராஸிங்க பொதுவா சாதுவான குமஸ்தாக்களா இருப்பாங்கன்னுதான் தில்லியில சொல்வாங்க. அது பொய்யின்னு இப்பதான் தெரியுது."
        அவன் வாயைத் திறக்கவில்லை. வர்ஷாவையும், நவநீதா பாண்டேவையும் பார்க்கவில்லை.
"இங்கியே ஏதாவது ஒரு கோவில்ல காரியத்த முடிங்க. குழந்தைகளுக்கு மொட்டப்போடாம, பேரு வைக்காம இருக்கிறது நல்லதில்ல." நவநீதா பாண்டே சொன்னதை முழுமையாக ஏற்றுக்கொள்வது மாதிரி சொன்னான்.
"பையன் பிறந்த ஒரு வருசத்திலியே போய் இருக்கணும். இரண்டாவது பாப்பா பிறந்து ஒரு வருசம் ஆகட்டும்னுதான் இதுவர காத்திருந்தன். ஒரு வயசு ஆயிடிச்சி. இனிமே லேட் பண்ணக் கூடாதுன்னுதான் டிக்கட் போட்டன். அதுதான் வர்ஷாவுக்கு பிடிக்கல."
        நவநீதா பாண்டேவுக்கும் வர்ஷாவுக்கும் அண்ணாமலை கிறுக்கனாக இருப்பானோ என்ற சந்தேகம் வந்தது. சொன்னதையே சொல்கிறான். தான் சொன்னதையே சரி என்று சொல்கிறான். என்ன ஆள் இவன் என்ற குழப்பம் இருவருக்கும் ஏற்பட்டது. திடீரென்று நினைவுக்கு வந்ததுபோல் வர்ஷா கேட்டாள், "பையன் பிறந்தப்ப பேரு சொல்லுங்கன்னு சொன்னப்ப இதனாலதான் பேசாம இருந்தீங்களா?"
"ஆமாம். அதப் பத்தி ஒங்கிட்ட பலமுற சொல்லியிருக்கன். ஒனக்கும் விசயம் தெரியும்."
"வீணா அலயாதீங்க. காரியத்த இங்கியே முடிக்கப்பாருங்க." நவநீதா பாண்டே சொன்னாள்.
"ஊர்லபோய்தான் செய்வன். வேற எங்கியும் செய்ய மாட்டன்."
"படிச்சவங்க மாதிரி நடந்துக்குங்க" நவநீதா பாண்டே சொன்னதும் அவனுடைய முகம் மாறிவிட்டது.
"நான் படிச்சது மனுசங்கள இல்ல. மனுசங்களோட கதய இல்ல. நான் படிச்சது தகவல்கள, புள்ளி விவரங்கள, அதான் பிரச்சன."
"எங்கம்மா சொன்னதே வேற" வர்ஷா முகத்தைக் கோணிக்காட்டினாள். அதை அவன் பார்க்கவில்லை.
"புரியுது வர்ஷா. ஒங்க பார்வயில நான் முட்டாளா இருந்திட்டுப் போறன். ஆனா என் முடிவு மட்டும் மாறாது.” உறுதியாகச் சொன்னான்.
"இதுக்குமேல நான் என்னா சொல்றது?" வர்ஷாயிடம் சொன்ன நவநீதா பாண்டே ரொம்பவும் அலுத்துக்கொண்டு சொன்னாள். பிறகு கிண்டலாக சொன்னாள். "ஒங்க பையனுக்கு ஒங்க சாமி பேர வச்சிடாதீங்க."
"பையனுக்கு முறைப்படி அண்ணாமலைன்னுதான் பேர் வைக்கணும். எனக்கு அந்த பேரு இருக்கிறதால அத வைக்க முடியாது. அருணாசலம்ன்னு வைக்கலாம். ஆனா நீங்க ஒத்துக்க மாட்டீங்க. அதனால அருணாசலஸ்வரன்னு வைக்கப்போறன்."
        வர்ஷாவோட முகமும், நவநீதா பாண்டேவோட முகமும் சுருங்கிப்போயிற்று. வாந்தி வருவது மாதிரி வர்ஷா முகத்தைச் சுளித்தாள். ஆனாலும் அவனை சீண்டுவது மாதிரி "பாப்பாவுக்கு எனனா பேரு?" என்று கேட்டாள். முகத்தைக்காட்டுங்கள், கோணிக்காட்டுங்கள் அதைப் பற்றி எனக்கொன்றும் இல்லையென்பது மாதிரி அவன் சொன்னான்.
"திருநீர்சாமியோட அம்மா பேரு உண்ணாமல. முறைப்படிப் பாத்தா அதத்தான் வைக்கணும். தில்லியில் இருக்கிறதால அந்தப் பேர வைக்க முடியாது. அதனால எங்கம்மா பேரு உமையாள். உண்ணாமலயோட இன்னொரு பேரு இது. எம் பொண்ணுக்கு இதான் பேரு."
"நாட்டுல வேற பேரே இல்லியா?" நவநீதா பாண்டே கிண்டலாகக் கேட்டாள்.
"எனக்கு இந்த பேர்தான் புடிச்சிருக்கு."
"எனக்குப் புடிக்கல" வெறுப்பாக சொன்னாள் வர்ஷா.
"அப்பிடின்னா ஒங்கப்பா, ஒங்கம்மா பேர வையி. ஒங்க தாத்தா பாட்டி பேர வையி. நான் தடுக்கல."
"எனக்கு மாடர்ன் பேருதான் வைக்கணும். ஒங்க பேரே எனக்குப் புடிக்கல" முகத்தை கோணிக்கொண்டு வர்ஷா சொன்னாள்.
"புடிக்காட்டிப் பரவாயில்ல. திருநீர்சாமியோட பேரு அண்ணாமலங்கறதால எங்க வீட்டுல மட்டுமில்ல எங்க ஊர்ல, எங்க சுத்துவட்டாரத்தில வீட்டுக்கு வீடு அந்த பேரு இருக்கும். சில வீட்டுல பெரிய அண்ணாமல, சின்ன அண்ணாமல, நடு அண்ணாமலன்னுகூட இருக்கும்."
"ஒங்க ஊர்ல ஆம்பளக்கி மட்டும்தான் அந்தப்பேரா, பொம்பளைக்குமா?" என்று நவநீதா பாண்டே கேலி நிறைந்த குரலில் கேட்டாள். அவளுடைய கிண்டலை ஒரு நூல் அளவுக்குக்கூட அவன் பொருட்படுத்தவில்லை. முகத்தில், குரலில் எந்த மாற்றத்தையும் காட்டாமல் சொன்னான். "உண்ணாமல."
"எல்லா வீட்டுலயுமா?" ஆச்சரியமாகக் கேட்டாள் நவநீதா பாண்டே.
"வீட்டுக்கு ஒரு உண்ணாமலயாவது இல்லாம இருக்காது."
"இத தெரிஞ்சிக்கிறதுக்காகவே நான் ஒங்க ஊருக்கு வரணும்ன்னு நெனைக்கிறன்." நவநீதா பாண்டே சொன்னாள். அப்போது வர்ஷா சொன்னாள். "ஒங்க ஊர்ல யாருக்கு வேணுமின்னாலும் என்ன பேர் வேணுமின்னாலும் இருந்திட்டுப் போவட்டும். என்னோட பிள்ளைகளுக்கு பழங்காலத்து பேர், அதுவும் தமிழ்நாட்டோட பேர நான் வைக்க மாட்டன். வச்சாலும் ஒத்துக்க மாட்டன். தமிழ்நாட்டுல இப்ப வடநாட்டு பேரதான் எல்லாரும் வைக்கிறாங்க?"
        "வர்ஷா நீ எத வேணுமின்னாலும் சொல்லு. கேக்குறன். செய்றன். குழந்தைகளோட விஷயத்தில மட்டும் தயவுசெஞ்சி என்னிஷ்டத்துக்கு விட்டுடு. பிளிஸ்" கெஞ்சுவது மாதிரி கேட்டான்.
"நீங்க வைக்கிற பேர நான் சொல்ல மாட்டன்." முகத்தைத் திருப்பிக்கொண்டு பிடிவாதமாகச் சொன்னாள். அதற்கு மொட்டையாக "ஒன்னிஷ்டம்" என்று மட்டுமே சொன்னான்.
"நான்தான் பேரு வைப்பன். நான் வைக்கிற பேரத்தான் கூப்பிடுவன்."
"நீ என்ன பேருன்னாலும் வை. எப்பிடி வேணுமின்னாலும் கூப்பிட்டுக்க. சர்டிபிகேட்டுல மட்டும் நான் வைக்கிற பேர்தான் இருக்கணும்."
"நீங்க சொல்றதெல்லாம் ஒரு பேரா?" நவநீதா பாண்டே கேட்டாள்.
"ஆமாம். நல்லபேரு. இந்த மாதிரி அமையுறது கஷ்டம்."
"நீங்க சொல்ற அண்ணாமல, உண்ணாமலங்கிறதெல்லாம் என்னா மயிரு பேரு?" என்று வர்ஷா சொன்னதுதான் தாமதம். பைத்தியம் பிடித்தவன்போல் சட்டென்று ஓங்கி அவளுடைய கன்னத்தில் அறைந்தான். "இப்ப சொன்ன வாத்தய திரும்பவும் சொன்னா உயிரோட இருக்க மாட்ட. முன்னோர்கள மறக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் சாமியா கும்பிடுறது. பேரு வைக்கிறது. புரியுதா?" என்று சொல்லிக் கத்தினான்.
        ஒரே நாளில் இரண்டுமுறை தன்னை அறைந்துவிட்டான் என்பதைவிட தன்னுடைய அம்மாவின் முன்னால் அடித்துவிட்டானே என்ற ஆத்திரம் வர்ஷாவுக்குத் தலைகால் புரியாத அளவுக்குக் கோபத்தை உண்டாக்கியது. தன்னுடைய அம்மாவின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்க விர்ரென்று எழுந்து படுக்கை அறையை நோக்கி ஓடினாள். கதவைத் தாழிட்டுக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
"எம் முன்னாலியே எம் பொண்ண அடிப்பியா? எம் பொண்ணு அழுதுகிட்டுப்போனா பாத்தீல்ல. இதுதான் தமிழ் நாட்டோட பழக்கமா?" என்று கேட்டு சிறிதுநேரம் நவநீதா பாண்டே கத்தினாள். எதற்கும் அண்ணாமலை பதில் பேசாததால் வேகமாக சென்று படுக்கை அறைக் கதவைத் தட்டினாள். வர்ஷா திறக்கவில்லை. பலமுறைத் தட்டிக் கத்தியபிறகுதான் கதவைத் திறந்தாள். "வா வீட்டுக்குப் போகலாம்" என்று சொல்லி அவளுடைய கையைப் பிடித்து இழுத்தாள். அப்போது தூங்கிக்கொண்டிருந்த குழந்தை விழித்துக்கொண்டு அழ ஆரம்பித்தது. வர்ஷா குழந்தையைத் தூக்கப்போனாள். நவநீதா பாண்டேவும் அறைக்குள் போனாள், மறுநொடியே படுக்கை அறை கதவு படீர்ரென்று அறைந்து சாத்தப்பட்டது. மூடப்பட்டிருந்த கதவையேப் பார்த்தான். பிறகு தெற்குப்புற சுவரில் மாட்டியிருந்த கல்யாண போட்டோவைப் பார்த்தான். அதைக் கழற்றி தூக்கியெறிய வேண்டும் என்பதுபோல ஆத்திரம் உண்டாயிற்று. வெளியே எங்காவது போகலாமா என்று யோசித்தான்.
        எழுந்து சென்று ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். கண்ணில்பட்ட குடியிருப்புகள் வெறும் கட்டிடங்களாகவே தெரிந்தது. எத்தனையோ கட்டிடங்களைப் பார்த்தான். அப்பார்ட்மண்டின் முனையில் நின்றுகொண்டிருந்த பீகார் கை-ரிக்க்ஷக்காரர்களைப் பார்த்தான். எதுவுமே அவனுடைய மனதில் பதியவில்லை. அவனுடைய கண்கள் மட்டும்தான் கட்டிடங்களைப் பார்த்தது. மனது திருநீர்சாமி கோவிலைச் சுற்றிவந்துகொண்டிருந்தது. அவனுடைய அப்பா தோளில் தூக்கிக்கொண்டு போனது, அக்காவின் கையைப்பிடித்துகொண்டு நடந்துபோனது, ஊர்சனங்களோடு மாட்டு வண்டியில் போனது, பத்தாவது பரீட்சைக்குப் போவதற்குமுன் ஹால்டிக்கட்டை வைத்து கும்பிடப்போனது, பிளஸ்டு பரீட்சை எழுத போவதற்குமுன் ஹால் டிக்கட்டை வைத்துக் கும்பிட்டது, இளம் அறிவியல், முதுகலை அறிவியல் படிக்கும்போது ஒவ்வொரு தேர்விற்கு முன்னும் ஹால்டிக்கட்டை எடுத்துக்கொண்டுபோயி கும்பிட்டது. பிஎச்.டி.,க்கான விண்ணப்பத்தை வைத்துப் படைத்தது, வேலை கிடைத்ததும், வேலைக்கான ஆணையை வைத்துப் படைத்தது, கல்யாணத்திற்கான பத்திரிகையை வைத்துப் படைத்தது என்று ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. அவனுக்கு நடந்த எல்லா நல்லக்காரியங்களும் திருநீர்சாமியால்தான் நடந்தது என்று வீட்டார் மட்டுமல்ல, ஊர்க்காரர்களும் சொல்வார்கள். பரீட்சை என்று எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து ஒரு பரிட்சையில்கூட அவன் தோற்றது இல்லை. வீட்டாருக்கு மட்டுமல்ல, ஊராருக்கு மட்டுமல்ல தான் எழுதிய எல்லா பரிட்சையிலும் பாசானதற்கு திருநீர்சாமிதான் காரணம் என்று முழுமையாக நம்பினான். ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு போகும்போது ஸ்படிக லிங்கத்தைப் பார்த்தவாறு உட்கார்ந்திருப்பான். அப்போது உடலே இல்லாத மாதிரி, உயிரே இல்லாத மாதிரி இருக்கும். வர்ஷாவின் மீது கடுமையான கோபம் உண்டாயிற்று. அதோடு தில்லியின்மீதும் ஏற்பட்டது. தில்லிக்கு படிக்க வந்தது, தில்லியிலேயே வேலைக்கு சேர்ந்தது, வர்ஷாயை விரும்பியது, கல்யாணம் கட்டிக்கொண்டது தவறு என்று நினைத்தான்.
“வட நாட்டுக்கு வேலக்கிப் போயிட்டா ஊர்ப்பக்கம் வர்றது நின்னுடுமே. நீ படிச்ச படிப்புக்கு நம்ப நாட்டிலியே வேல கிடைக்காதா?” என்று வருத்தத்தோடு தன்னுடைய அக்கா உண்ணாமலை கேட்டது நினைவுக்கு வந்தது. வர்ஷாவைக் கல்யாணம் செய்துக்கொள்ளப்போகிறேன் என்று சொன்னபோது அழுததும் நினைவுக்கு வந்தது. “வட நாட்டுப் பொண்ண கட்டுனா நீ எப்பிடி ஊருக்கு வர முடியும்? சாதி சனம்ன்னு அடிக்கடி பாக்க வர முடியாதே. எனக்கு இருக்கிறது நீ ஒரு தம்பிதான? ஒன்னயும் வட நாட்டுக்காரிகூட அனுப்பிட்டு இந்த மண்ணுல என்னால ஊசுரோட இருக்க முடியுமா?” என்று கேட்டு எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தாள். தமிழ் நாட்டிலேயே ஒரு பெண்ணை பார் என்று வற்புறுத்தினாள். தன்னுடைய அக்காவும் சொந்தக்காரர்களும் சொன்ன எதையும் கேட்காமல் தடுத்தது எது என்று யோசித்தான். கெஞ்சிகெஞ்சிப் பார்த்துவிட்டு கடைசியாக “எத மறந்தாலும், யார மறந்தாலும் நம்ப குடிசாமிய மட்டும் மறக்காத. நம்ப சுத்துவட்டாரத்திலேயே நீதான் பெரிய படிப்பு படிச்சிருக்க. பெரிய வேலயில இருக்க. இதெல்லாம் நம்ப குடிசாமி காட்டுன வழிதான். அத மட்டும் மறந்திடாத” என்று சொல்லிவிட்டு அழுதுகொண்டே போனதை நினைத்துப் பார்த்ததும் அவனுக்கு கண்கள் கலங்கிவிட்டன. தன்னுடைய அப்பா, அம்மா உயிரோடு இருந்திருந்தால் தில்லியில் வேலையில் சேர்வதற்கு சம்மதித்து இருந்தாலும் வர்ஷாயை கல்யாணம் கட்டிக்கொள்வதற்கு சம்மதித்து இருக்க மாட்டார்கள். திருநீர்சாமி கோவிலுக்கு வர மாட்டேன் என்று வர்ஷா சொல்வதைக் கேட்பதற்கு அவர்கள் உயிரோடு இல்லாததே நல்லது என்று நினைத்தான். அவள் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறாள்? இதற்குமுன் இவ்வளவு பிடிவாதமாக இருந்ததோ, திமிர்த்தனமாக பேசியதோ கிடையாது. அவளைப் பற்றி நினைக்கநினைக்க குழப்பம் உண்டாயிற்று. குழப்பம் கூடக்கூட கோபம் கூடியது. கோபத்தைக் குறைப்பதற்காக கிழக்கில் பார்த்தான். ஸ்ரீஅரபிந்தோ மார்க்குக்கு செல்லும் வழியில் இருக்கும் ரிங்ரோடு தெரிந்தது. எறும்புகள் மாதிரி அடுக்கடுக்காக கார்கள் செல்வது தெரிந்தது. அப்போது காலிங் பெல் அடிக்கிற சத்தம் கேட்டது. யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டேபோய் கதவைத் திறந்தான். வர்ஷாவின் அண்ணன் அலோக் பாண்டே நின்றுகொண்டிருந்தார். "பிளீஸ் கம்" என்று சொன்னான். பாண்டே சிரிக்க மட்டுமே செய்தார். அந்தச் சிரிப்பில் உயிர் இல்லை. இருவரும் வந்து எதிரெதிர் சோபாவில் உட்கார்ந்தபோது படுக்கை அறைக்குள் வர்ஷாவிடம், அவளுடைய அம்மா கத்துவது தெளிவாகக் கேட்டது.
"மதராஸிக்காரன் சரிவர மாட்டான்னு நான் அப்பவே சொன்னன். நீ கேட்டியா? அடம்புடிச்ச. அழுத. செத்திடுவன்னு சொன்ன. இப்ப என்னா ஆச்சி? எம் முன்னாலியே ஒன்ன அடிக்கிறான். இப்ப என்னா செய்யப்போற? தில்லியில இருக்கிற பசங்களையெல்லாம் ஒனக்கு புடிக்கல. இப்ப அடிவாங்கி சாகிற." வர்ஷாவோடு சேர்ந்துகொண்டு நவநீதா பாண்டேவும் அழுகிற சத்தம் கேட்டதும் பாண்டே பதறிப்போனார். "என்னா நடந்துச்சி" என்று கேட்டார். அண்ணாமலை எதுவும் பேசவில்லை. சட்டென்று எழுந்துசென்று படுக்கை அறை கதவைத் தட்டினார். நவநீதா பாண்டேதான் கதவை திறந்தாள். பாண்டேவை பார்த்ததும் அவளுக்கு என்ன தோன்றியதோ அழ ஆரம்பித்தாள். பாண்டே படுக்கை அறைக்குள் போனதும் கதவு சாத்தப்பட்டது. அண்ணாமலையை காதலித்ததற்காக கல்யாணம் கட்டிக்கொண்டதற்காக நவநீதா பாண்டே வர்ஷாவைத் திட்டுவது தெளிவாகக் கேட்டது. எல்லா வசைகளையும் கேட்டவாறு அமைதியாக நின்றுகொண்டிருந்தான்.        அரைமணிநேரம் கழிந்து இருக்கும்.
கதவைத் திறந்துகொண்டு வெளியே ஹாலுக்கு வந்த அலோக் பாண்டே சோபாவில் உட்கார்ந்தார். ஜன்னலின் வழியே கட்டிடங்களைப் பார்த்துக்கொண்டிருந்த அண்ணாமலையைக் கூப்பிட்டார். அவன் வந்து உட்கார்ந்ததும் "எங்கிட்ட ஒரு வாத்த சொல்லக் கூடாதா?" என்று கேட்டார்.
அவன் எதுவும் பேசவில்லை.
"ஒங்களுக்குக் கோவம் வரும்னு நான் நெனச்சதே இல்ல."
அவன் எதுவும் பேசவில்லை.
"ஒங்க ஊர் தெரியாது. வீடு தெரியாது. நாடு தெரியாது. மொழிகூட தெரியாது. ஒங்களோட படிப்ப இல்ல. நடத்தய மட்டும் நம்பித்தான் பொண்ணக் கொடுத்தோம்."
அவன் எதுவும் பேசவில்லை.
"வர்ஷாவும் அழுவுறா. எங்கம்மாவும் அழுவுறாங்க. பாக்கறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணாமலை" பாண்டேவின் முகம் மட்டுமல்ல, குரலும் மாறிவிட்டது.
“சின்ன விசயம் விடுங்க” ரொம்பவும் மனம் கசந்து சொன்னான்.
        படுக்கை அறைக்குள்ளிலிருந்து வேகமாக எழுந்து வந்து வர்ஷா கத்தினாள். "எது சின்ன விசயம்?"
நான்கு வருசமாக அண்ணாமலையின் மீது இருந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் மொத்தமாக கொட்டித்தீர்த்தாள். எதற்குமே அவன் வாயைத்திறக்கவில்லை. வர்ஷா கத்தியது போதாதென்று நவநீதாவும் வந்து கத்தினாள்.
"நான் பேசுறன் இருங்க" என்று பாண்டே சொன்னதை வர்ஷாவும் கேட்கவில்லை. நவநீதாவும் கேட்கவில்லை. பொறுத்துபொறுத்துப் பார்த்த பாண்டே, "நீங்க பேசுறதுக்கு, கத்துறதுக்கு என்ன எதுக்கு கூப்பிட்டிங்க?" என்று கத்தியபிறகுதான் இரண்டு பெண்களுடைய  வாயும் கொஞ்சம் மட்டுப்பட்டது.
"நான் பேசிட்டு சொல்றன். நீங்க போங்க" இருவரையும் படுக்கை அறைக்குள் அனுப்பிய பிறகுதான் பாண்டேவிற்கு நிதானமாக மூச்சுவிடவே முடிந்தது.
"என்ன நடந்தது" பாண்டே கேட்டார்.
"எங்க குலதெய்வம் கோவில்ல முடி எறக்கணுமின்னு டிக்கட்போட்டன். அங்க வர மாட்டன்னு சொல்லிதான் தகராறு. என்னெ முரடனாவும் முட்டாளாவும் மாத்துறாங்க."
        படுக்கை அறையிலிருந்து எழுந்து வந்த வர்ஷா "வர மாட்டன்னு சொன்னதுக்காக ரெண்டுமுற அடிப்பிங்க. டைவர்ஸ் பண்ணிடுவன்னு சொல்விங்களா?"
"வர மாட்டன்னு சொன்னதுக்காக அடிக்கல. டைவர்ஸ் தருவன்னு சொல்லல. தப்பாப் பேசக் கூடாது."
"பின்ன எதுக்காக அடீச்சிங்களாம்? சொன்னிங்களாம்?" அடித்துவிடுவது மாதிரி கத்தினாள்.
"எங்க குலதெய்வத்த மயிரு சாமி, மயிரு பேருன்னு சொன்னதுக்காக."
"இப்பியும் சொல்றன். அடிப்பிங்களா?"
"நிச்சயமா" உறுதியாக சொன்னான்.
"அப்படியா?" என்று கேட்டு வர்ஷா கத்தினாள். அப்போது ஹாலுக்கு வந்த நவநீதா வர்ஷாவைவிட வேகமாகச் சத்தம் போட்டாள்.
"நீ எதுக்கு கோபப்படுற? கத்துற? என்று கேட்டார். அவருடைய பேச்சை வர்ஷாவும், நவநீதா பாண்டேவும் காதுகொடுத்துக் கேட்பதாக இல்லை. ஆனாலும் பாண்டே அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார்.
"நீ இதுவர தமிழ்நாட்டுக்கு போனதில்ல. இதயே காரணமா வச்சி போய்ப் பாத்திட்டு வா."
"இத சொல்லத்தான் வந்தியா? ஒனக்கென்ன பைத்தியம் புடிச்சிடிச்சா?" வர்ஷா கத்தினாள்.
"முதல்ல கத்தறத நிறுத்து. அவர் அடிச்சது தப்பு. டைவர்ஸ் தருவன்னு சொன்னதும் தப்பு, நீ அவர்கூட போக மாட்டன்னு சொல்றதும் தப்பு."
"அப்பிடின்னா நீயே போயிக்க." வீம்பாக சொன்னாள்.
"நான் சொல்றத புரிஞ்சிக்க."
"நீபோ கூட." அழுதுகொண்டே சொன்னாள் வர்ஷா.
"கோவிலுக்குத்தான போறன்ங்குறாரு. அதுல தப்பு என்னா இருக்கு?"
"என்னா பேசுற? முட்டாளா நீ?" என்று நவநீதா பாண்டேவிடம் கேட்டாள். அவர் பதில் சொல்வதற்கு முன்பாகவே நவநீதா சொன்னாள். "பேசாம இருந்தே நல்ல ஆளுங்கிற பேர வாங்க முடியும், மத்தவங்கள ஏமாத்த முடியும்ங்கிறத இப்பத்தான் பாக்குறன். ரெண்டாயிரத்து பதினாறுலயும் முடி எடுக்கிறதுக்காக ரெண்டாயிரம் மூவாயிரம் கிலோமீட்டர் தூரம் தாண்டி போவன்னு சொல்றத இப்பதான் கேள்விப்படுறன்."
        பாண்டே பேசினார். வர்ஷா பேசினாள். நவநீதா பேசினாள். எதற்கும் அண்ணாமலை வாயைத்திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. வேறவழி இருக்கா? என்று கேட்டு மூன்று பேருமே பதில் சொல்லுங்க என்று கட்டாயப்படுத்திய பிறகு அவன் மெதுவாக சொன்னான்.
"சோபாவுல ஒக்காந்து கால்மேல கால் போட்டுக்கிட்டு மருமகன்கிட்ட தமிழ்நாட்டுல எந்த மாமியாரும் கேள்வி கேட்க மாட்டாங்க. பேச மாட்டாங்க.‘’
பாண்டேவுக்கு, வர்ஷாவுக்கு மட்டுமல்ல நவநீதாவுக்கும் இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. "ஒவ்வொரு வாத்தையும் விஷமா இருக்கு" என்று சொல்லிவிட்டு நவநீதா எழுந்து படுக்கை அறைக்குள் சென்றுவிட்டாள். தன்னுடைய அம்மா கோபித்துக்கொண்டு போனதைப் பார்த்த வர்ஷாவுக்கு எப்போதும் இல்லாத அளவுக்குக் கோபம் உண்டாயிற்று. "எப்பவும் தமிழ்நாட்டுப் பெருமதானா? மத்தவங்கள மதிக்கத் தெரியல. வெக்கமில்லாம நெனச்சதுக்கெல்லாம் ஒய்ஃப அடிக்கிறதுதான் தமிழ்நாட்டுப் பெருமயா? நீங்க என்ன அடிச்சது, எதிர் பிளாட்டுக்காரங்களுக்கு, பக்கத்து பிளாட்காரங்களுக்குத் தெரிஞ்சா என்ன நெனைப்பாங்க?" வாய் ஓயாமல் வர்ஷா கேள்விகளாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். கடைசியாக "நீங்க என்ன தர்றது? நானே தரன் டைவர்ஸ்" என்று சொல்லிவிட்டு கையெழுத்துபோட்டுத் தருவதற்காக காகிதத்தைத்தேட ஆரம்பித்தாள்.
"உள்ளப்போயி ஒக்காரு. நான் பேசிக்கிறன்" என்று சொல்லிக் கட்டாயப்படுத்தி அவளை படுக்கை அறைக்குள் அனுப்பினார் பாண்டே. பிறகு முன்பு உட்கார்ந்த இடத்திற்கு வந்து உட்கார்ந்துகொண்டு நிதானமாகக் கேட்டார். "ஒங்க பிளான் என்ன?"
        தில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை, அங்கிருந்து ரயில் மூலம் போவது, ஸ்டேசனிலிருந்து வாடகைக் காரில் ஊருக்குப்போவது, தன்னுடைய அக்காவை அழைத்துக்கொண்டு கோவிலுக்குப்போவது, காரியம் முடிந்ததும் நேராக ரயில்வே ஸ்டேசன் வருவது, பிறகு சென்னை. அங்கிருந்து தில்லி. நான்குநாள் பயணத்திற்கானத் திட்டத்தை தெளிவாக சொன்னான் அவன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட பாண்டே "ஒங்க குலசாமி கிருஷ்ணனா, சிவனா?" என்று கேட்டார்.
"ரெண்டுமில்ல."
"சிதம்பரம் நடராஜரா, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாதிரி இருக்குமா?"
"அப்பிடியெல்லாம் இருக்காது.”
"" என்றார் பாண்டே. அவருடைய குரலில் மகிழ்ச்சியுமில்லை. எளக்காரமுமில்லை. திடீரென்று என்ன நினைத்தாரோ "ஒங்க சாமியோட போட்டோ இருக்கா?" என்று கேட்டார்.
        “அப்போ போட்டோ ஏது? வீடியோ ஏது?" லேசாக சிரிக்க முயன்றான். வர்ஷாவும், நவநீதாவும் போட்ட சத்தத்தின் போது ஏற்பட்ட இறுக்கத்திலிருந்து இப்போதுதான் அவனுடைய முகம் லேசாக  இயல்பாகியிருந்தது.
"அவர் எழுதின சுலோகம், பாட்டு, புத்தகம், அருள்வாக்குன்னு ஏதாச்சும் இருக்கா?"
"எதுவுமில்லை" என்பது மாதிரி உதட்டைப் பிதுக்கிக்காட்டினான்.
"அப்புறம் எப்பிடி சாமிங்குங்றிங்க?" அலுப்பான குரலில் பாண்டே கேட்டார்.
"எதுவுமே இல்லாததாலதான் அவுரு சாமி."
"வேற எங்கியாச்சும் பிராஞ்ச் இருக்கா?"
"இதென்ன ஐடி கம்பனியா? பேங்க்கா, இல்லெ துணிகட, ஹோட்டலா? ஊர்ஊருக்கு பிரான்ஞ் வைக்கிறதுக்கு?"
        அண்ணாமலையினுடைய பேச்சு பாண்டேவின்  முகத்தைக் கோண வைத்தது. பேச்சை முடித்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தை உண்டாக்கியது. இருந்தாலும் கேட்டார் "குருகுலம், ட்ரஸ்ட், மடம், யோகா பயிற்சி மையம், தியான மண்டபமின்னு ஏதாச்சும் இருக்கா?"
"எதுவுமே இல்லெ. தானே தனக்கு சும, தன்னோட மனசே தனக்கு சத்ரு, கொல்லுகொல்லு மனச கொல்லு, கொல்லுகொல்லு மனப்பேய கொல்லுன்னு சொல்லியே வாழ்ந்தவரு. அவுருக்கு நீங்க சொல்ற மாதிரியான விசயங்க  எதிலயும் விருப்பம் இருந்ததில்ல."
"அருள்வாக்கு சொல்லி இருக்காரா?"
        அண்ணாமலைக்கு அலுப்பாக இருந்தது. என்ன இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறார் என்று பாண்டேவின் மீது எரிச்சல்கூட வந்தது. வர்ஷாவும், நவநீதா பாண்டேவும் ஒருவிதமாக தொல்லை தந்தார்கள் என்றால் இவர் வேறுவிதமாக தொல்லை தருகிறாரே என்று யோசித்தான். அதே நேரத்தில் திருநீர்சாமி ஏன் இப்பிடியெல்லாம் செய்யவில்லை என்ற எண்ணமும் முதன்முதலாக அவனுக்கு உண்டானது. ஆனாலும் திருநீர்சாமி சொன்ன வார்த்தைகளைச் சொன்னான்.
"வாயக்கட்டு வாயக்கட்டு. வயித்தக்கட்டு, வயித்தக்கட்டு சும்மாயிரு. சும்மாயிரு. இதுதான் அவர் சொன்னது.
""
"தான் சாகப்போற நாள முன்கூட்டியே சொல்லி இருக்காரு."
"அப்பிடியா?" ஆச்சரியமாகக் கேட்டார் பாண்டே.
"நான் வந்த வேல முடிஞ்சிப்போச்சி. எனக்கு உத்தரவு ஆயிடிச்சி. என்னோட கர்மவென முடிஞ்சதால நான் இந்த ஒடலவிட்டு நீங்கப்போறன். புரட்டாசி மாசம், உத்திரட்டாதி நட்சத்திரம், பௌர்ணமி அன்னிக்கி, புறப்பாடு நடக்கும். குழியவெட்டுங்கன்னு சொல்லியிருக்கார். அதே மாதிரி குறிப்பிட்ட நாளில தானே போய் குழியில எறங்கிக்கிட்டு, பெரிய பாராங்கல்ல வச்சி மூடிக்கிட்டாராம். ஒரு வருசம் கழிச்சி தோண்டிப் பாத்திருக்காங்க. அழுகின உடலோ, எலும்புக் கூடோ இல்லாம படிக லிங்கம் இருந்துச்சாம். அத எடுத்து வச்சி கோவில்கட்டி கும்புட்டு இருக்காங்க. அதுதான் இப்ப திருநீர்சாமி."
"நீங்க சொல்றது ஆச்சரியமா இருக்கு."
தமிழ்நாட்டுல இருந்த சித்தருங்க அதிசயமான ஆளுங்க சார். ஏழாம் நூற்றாண்டிலிருந்தே இருந்திருக்காங்க. திருமூலர்ல ஆரம்பிக்குது சித்தர் மரபு. அப்பவே ‘தன்னை அறிந்து ஒழுகுவோர் தன்னை மறப்பர். தன்னை அறியாதவரே தன்னைக் காட்டுவர்’னு எழுதி வச்சிருக்காங்க."
"நீங்க சொல்றதயெல்லாம் கேக்கும்போது எனக்கு ஆச்சரியமா இருக்கு. அதே நேரத்தில, நீங்க சித்தர் ஆயிடுவிங்களோன்னு பயமாவும் இருக்கு" வாய்விட்டு சிரித்தார் பாண்டே. ஆனால் அவனுக்கு சிரிப்பு வரவில்லை. அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவனுடைய முகத்தையே கூர்ந்துக் கவனித்த பாண்டே ஏதோ சொல்ல வாயைத்திறந்தார். ஒன்றும்சொல்லாமல் எழுந்து சென்று பிரிட்ஜிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொஞ்சம் குடித்தார். திரும்ப வந்து உட்கார்ந்தார். கிண்டலாக சொன்னார் "சொல்லுங்க சித்தர்".
"சித்தர் ஆவுறதுக்கான மனசு எங்கிட்ட இல்ல. என்னோடது எலிவளை. சித்தர் ஆவறதுக்கு கடலவிட பெரிய மனசு இருக்கணும். தான் கடல் இல்லன்னு தெரிஞ்சிக்கிற மனசும், அறிவும், இருக்கணும். அது எல்லாருக்கும் வாய்க்காது. ‘ஆற்றில் கிடந்தும் துறையறியாமல் அலைகின்றாயே மடநெஞ்சே, இருப்பது பொய், போவது மெய்’ன்னு சொல்றதுதான் சித்தர் மரபு. "தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை’ன்னுதான் கோவில் வாசப்படியில எழுதியிருக்கு."
"கோவில் பெருசா இருக்குமா?"
"இருக்காது."
"சீடருங்க யாராச்சும் இருக்காங்களா?"
"சித்தர்களோட வாழ்க்கயில சீடனுமில்ல, குருவுமில்ல. கொடுக்கிறதுமில்ல. வாங்குறதுமில்ல. வேதபாடம் கேட்டதில்ல. தீர்த்த யாத்திர போனதில்ல. தியானம் செஞ்சதில்ல. மடங்கள, ஆதீனங்கள, குருகுலங்கள உண்டாக்குனதில்ல. மடாதிபதியா, ஆதீனமா, குருவா, ஆன்மீக பெரியவர் ஆகணுமின்னு நெனச்சதில்ல. அப்படி ஆனதுமில்ல. தீட்ச வாங்குனதில்ல. தீட்ச கொடுத்ததில்ல. சந்நியாசம் வாங்கல. காவி ஆட உடுத்தினதில்ல. ‘அன்ன விசாரம் அதுவே விசாரம்’ன்னு சொன்னவங்க. புளியம் பழத்தில ஓடு இருக்கிற மாதிரிதான் அவுங்க வாழ்க்க."
"நீங்க சொல்றதெல்லாம் புதுசா இருக்கு.”
திருநீர்சாமிங்கிறது எங்க குலதெய்வத்தோட பேர் இல்லெ. அவர் பேரு அண்ணாமல. சாது தரிசனம் சாப விமோசனம்ன்னு சனங்களாத்தான் அவர சாமின்னாங்க. சித்தர்ன்னாங்க, அவரா ஒருநாளும் நான் சாமி, நான் சித்தர்ன்னு சொல்லிக்கிட்டது கெடயாது. ஒன்னோட சாமியும், ஒன்னோட சுடுகாடும் ஒங்கிட்டதான் இருக்குன்னு சொன்னவரு. இவர் மட்டுமில்ல, சொந்த பேரக்கூட வெளிய சொல்லாதவங்கதான் சித்தருங்க. அவுங்க என்னா செஞ்சாங்களோ, எப்பிடி வாழ்ந்தாங்களோ அதுதான் அவங்களோட பேரா, அடயாளமா ஆயிருக்கு. அதுகூட சனங்க வச்ச பேருதான். அடயாளம்தான். இப்பகூட தலயாட்டி சித்தர், காரை சித்தர், சுரைக்காய் சித்தர், மதகு சித்தர், ஆத்துசாமி, தீப்பெட்டிசாமி, மாடி சாமின்னு பலபேரு இருக்காங்க. பழயகாலத்தில பாம்பாட்டி சித்தர், சிவவாக்கியர், பத்திரகிரின்னு பலபேரு இருந்திருக்காங்க. இந்த பேருகூட அவுங்களா தங்களுக்கு வச்சிக்கிட்டது கெடயாது. நான் சொல்றத நம்பலன்னா தமிழ்நாட்டுல இப்ப இருக்கிற சதுரகிரிமல, மகேந்திரமல, சுருளிமல, கொல்லிமல, நம்பிமல, பச்ச மலப் பக்கம் போய்ப்பாருங்க. எத்தினியோ சித்தருங்க இருக்கிறத பாக்கலாம். அங்க சந்நியாசி பாறன்னே ஒண்ணு இருக்கு.”
"நீங்க சொல்றது புதுசா இருக்கு."
"சார் நமக்கு தெரிஞ்ச வாழ்க்க வேற. நாம தேடுற வாழ்க்க வேற. நாம வாழற வாழ்க்கயும் வேற. நிஜமான சித்தர்களோட வாழ்க்கமுற, தன்னையே இல்லன்னு சொல்றது. தன்னோட காலடித் தடத்த தானே அழிச்சவங்க. தன்னோட நிழலயே சுமைன்னு கருதினவங்க. தன்னோட மரணத்தயே கொண்டாடுனவங்க. செத்துப்போறது மட்டும்தான் அவுங்க விருப்பமா, வாழ்க்கயா இருந்திருக்கு."
        பாண்டே அண்ணாமலையை விநோதமாகப் பார்த்தார். அவனுடைய பேச்சும், முகபாவமும் புதுவிதமாக இருந்தது. பேச்சிலும், குரலிலும் எந்தப் பதட்டமுமில்லை. வரலாற்றுப் பேராசிரியர்கள் மாதிரி வாய் ஓயாமல் இவ்வளவு பேசுவான் என்பதையே அவரால் நம்ப முடியவில்லை. பொதுவாக அவன் அதிகம் பேசிப் பார்த்ததில்லை. அதிலும் வர்ஷா குடும்பத்து மனிதர்களிடம் அவன் அதிகம் பேச்சு வைத்துக்கொள்ள மாட்டான். எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்துப் பேசுவான். கேட்டால் கேட்கிற கேள்விக்கு மட்டும்தான் பதில் சொல்வான். அதையும் சத்தமாகவோ அதிர்ந்தோ சொல்ல மாட்டான். தானாகவே பதில் சொல்கிற பழக்கம் அவனிடம் இல்லை. எதை சொன்னாலும் சரி என்று கூட சொல்ல மாட்டான். சரி என்பது மாதிரி தலையைத்தான் ஆட்டுவான். ஒரு விசயத்தை சொன்னால், தான் சொன்னதுதான் சரி என்பது மாதிரி வாதித்து பேச மாட்டான். மற்றவர்களிடம்தான் குறைத்து பேசுவான் என்றில்லை. வர்ஷாவிடம்கூட அளவாகத்தான் பேசுவான். அவனுடைய குணத்திற்காகத்தான் தமிழ்நாட்டுக்காரனாக இருந்தாலும், கருப்பாக இருந்தாலும் பெண் தரலாம் என்று அவளைக் கட்டி வைத்தார்கள். பாண்டேவையும், அவருடைய அப்பாவையும் எப்போதும் ‘சார்’‘சார்’ என்றுதான் சொல்வான். வர்ஷாவை அடித்திருக்கிறான். அதுவும் தன்னுடைய அம்மாவின் முன்னாலேயே அடித்திருக்கிறான். டைவர்ஸ் தருவேன் என்று சொல்லியிருக்கிறான். ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்த பாண்டே, அவனைத் திட்டச்சொல்லி, கண்டிக்கச்சொல்லி, குலதெய்வம் கோவிலுக்குப் போக முடியாது என்று சொல்லி வை என்று வர்ஷாவும், தன்னுடைய அம்மாவும் சொன்னதையெல்லாம் படிப்படியாக மறந்துவிட்டார்.
"ஒங்க சாமி என்னதான் சாப்பிட்டார்?"
"அவர பாக்க வர்றவங்க பழம்கொண்டு வந்து கொடுப்பாங்களாம். அத அவர் திரும்பிக்கூட பாக்க மாட்டாராம். காக்கா, பருந்து, குருவி, பறவைங்கதான் வந்து கொத்தி திங்குமாம். அவர் முன்னால வச்ச பழத்தில ஈ, எறும்பு ஏறவே ஏறாதாம். எத்தன நாள் ஆனாலும். அதே மாதிரி அழுகியும் போகாதாம்."
"ரியலி?" ஆச்சரியமாகக் கேட்டார் பாண்டே.
"அட்டமா சித்திகள், மந்திர சக்திகள், யோக சித்திகள்னு பலதும் அவுருக்கு தெரிஞ்சியிருக்கு. ஒரே நேரத்தில ஆலமரத்து கீழயும் இருப்பாராம். திருச்செந்தூர் முருகன் கோவில்லயும் இருப்பாராம். கூடுவிட்டு கூடு பாய்வாராம். இந்த மாதிரி சித்து வேலகள செய்யுறதாலதான் அவருக்கு சித்தர்ன்னு பேரு."
"இப்பிடி இருக்கிற சாமியாருங்ககிட்ட எனக்கு அதுவேணும், இதுவேணும். எனக்கு அது நடக்கணும், இது நடக்கணும்ன்னு கேட்டு கூட்டம் வருமே. அவுங்களுக்கெல்லாம் என்னா செஞ்சாரு?"
"அப்பிடி வர்றவங்ககிட்டயெல்லாம் ‘கடலும் என்னுதில்ல, காத்தும் என்னுதில்ல, மண்ணும் என்னுதில்ல, மலயும் என்னுதில்ல. நீரும் என்னுதில்ல, நிலமும் என்னுதில்ல, இந்த ஊரும் என்னுதில்ல, இந்த உலகமும் என்னுதில்ல, இந்த ஒடலும் என்னுதில்ல, உயிரும் என்னுதில்லன்னு சொல்லிக்கிட்டே இந்த அரச மரத்த சுத்திக்கிட்டு வா’ன்னு சொல்வாராம். அவர் சொல்றத கேட்டு ‘இது என்ன கிறுக்கு சாமியா இருக்கு’ன்னு சொல்வாங்களாம். இதனால அவுருக்கு கிறுக்குசாமிங்கிற பேரும் இருந்திருக்கு. வியாபாரம் பெருகணும், வீடு கட்டணும், தொழில் செய்யணும் ஆசி சொல்லுங்க சாமி’ன்னு கேட்டு ‘வர்றவங்ககிட்ட ‘ஒன்னோட சாமிதான் நெறஞ்சி இருக்கே, அப்பறம் எதுக்கு னக்கு இந்த சனியனெல்லாம்?’னு கேப்பாராம். அவர் சொல்றது புரியாம ‘என்னா சாமி சொல்றிங்க?’ன்னு கேட்டா, ‘ஒன்னோட வயித்தத்தான் சொன்னன். அதுதான் எந்த குறயும் இல்லாம இருக்கே. அப்புறமென்ன? லகத்திலியே பெரிய சாமி வயிறுதான். அது நெறஞ்ச பின்னால மத்ததெல்லாம் எதுக்கு? வயிறுதான் சாமி. அதுக்கு மட்டும் வழியப்பாரு. கும்பித் தீய மட்டும் அண. வயித்து சுமதான் பெரிய சும. அத மறந்திடு. ஒலகம் மறந்திடும். எல்லா தொந்தரவு போயிடும்ன்னு சொல்லிடுவாராம். கிறுக்குசாமின்னு சொன்னாலும் அவரப் பாக்குறதுக்கு எப்பவும் கூட்டம் வந்துகிட்டே இருக்குமாம். ‘குழந்த பாக்கியம் இல்ல சாமி’ன்னு கேக்குறவங்ககிட்ட காத்த கையிலப் புடிச்சிக் கொடு, சூரிய வெளிச்சத்த கையிலப் புடிச்சிக் கொடு. நீ கேட்டத கொடுக்கிறன்’னு சொல்லிவிடுவாராம். சொந்தக்காரங்க, ஊர்க்காரங்கன்னு போனா, "வீழ்ந்தவன்மேல மாடு ஏறிமிதிக்கிற மாதிரி எதுக்கு எங்கிட்ட வரீங்க? இது அச்சாணி இல்லாத வண்டி. இதுல ஒங்க பாரத்த ஏத்தாதிங்க’ன்னு சொல்லிடுவாராம்"
        அண்ணாமலையின் பேச்சைக் கேட்ககேட்க பாண்டேவுக்கு திருநீர்சாமி பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. அதே நேரத்தில் பசியாகவும் இருந்தது. வர்ஷாவும், நவநீதாவும் படுக்கை அறைக்குள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எதிரில் அண்ணாமலை வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறான். இந்த நேரத்தில் மதிய சாப்பாடு பற்றிப் பேசினால் நன்றாக இருக்குமா என்று யோசித்தார். எழுந்து தன்னுடைய வீட்டிற்குப் போய்விடலாமா என்று யோசித்தார். எதிரில் ஒரு ஆள் முழு ஈடுபாட்டுடன் பேசிக்கொண்டிருக்கும்போது எழுந்துபோவது நல்லதா என்ற குழப்பத்தில் இருந்தார். ஆனாலும் திருநீர்சாமி பற்றி அறிந்துகொள்ளும் ஆசையில் "ஒங்க சாமி சின்ன வயசிலியே சாமியாரா ஆயிட்டாரா? கல்யாணமான பிறகு சாமியாரா ஆனாரா?" பாண்டே கேட்டார்.
"கல்யாணம் கட்ட கட்டாயப்படுத்தி இருக்காங்க. ‘ஒரு கம்பத்தில ரெண்டு யானய கட்டக் கூடாது. ‘ஒலகமே தன்னோட சந்ததிக்காகத்தான் வாழுது. அந்த வாழ்க்க எனக்கு வேண்டாம்’ன்னு சொல்லிட்டாராம். கல்யாணம் கட்டியேத் தீரணும்ன்னு வீட்டுல அடம்புடிச்சப்பதான் வீட்டவிட்டு ஓடிப்போயிட்டாரு. கடசிவர வீடு திரும்பல. ஊர்ப்பக்கம் வரல."
"ஊர் எது?"
"நான் பிறந்த ஊர்தான். ஆண்பிள்ளை பிறந்தான்."
"ஆச்சரியமான பேரு " பசியோடு இருந்தாலும் பாண்டே வாய்விட்டு சிரித்தார்.
“அவர்போய் தங்கி செத்த ஊர கேட்டா இன்னும் சிரிப்பிங்க”
“என்னா ஊரு?”
“வாழ்வாங்கி.”
பாண்டே சத்தம் போட்டு சிரித்தார். பிரமாதமான பெயர் என்று சொன்னார்.
"அன்னிபெசண்ட் அந்த கோவிலுக்கு வந்து இருக்காங்க. சொந்த செலவில ஒரு ஆர்ச் கட்டியிருக்காங்க. விவேகானந்தர் வந்து அஞ்சி நாள் தங்கி தியானம் செஞ்சிருக்காரு. எங்க மாவட்டத்தோட கலக்ட்டரா இருந்த ஐடன் வந்து இருக்காரு. ரமண மகரிஷி வந்து வணங்கிட்டுப்போயிருக்காரு. தமிழ்நாட்டோட மாடர்ன் பொயட் பாரதி. திருநீர்சாமியப் பத்தி, ‘உள்ளத்தழுக்கும் உடலிற்குறைகளும் ஓட்டவரும் சுடர்’ன்னு பாட்டு எழுதி இருக்காரு சார்.”
        அண்ணாமலை சொன்னதைக் கேட்ட பாண்டே வியப்பின் உச்சிக்கே போனார். "ஒரு நிமிசம்" என்று சொல்லிவிட்டு உற்சாக மிகுதியில் எழுந்து படுக்கை அறையை நோக்கி ஓடினார். வர்ஷாவிடமும், நவநீதாவிடமும், திருநீர்சாமி கோவிலுக்கு யார்யாரெல்லாம் வந்துவிட்டுப்போய் இருக்கிறார்கள் என்பதைப் படபடப்பாக சொன்னார். எல்லாவற்றையும் நிதானமாகவும் பொறுமையாகவும் கேட்ட வர்ஷா, பாண்டேவின் மொத்த உற்சாகத்தையும் ஒரே வார்த்தையில் அடித்து நொறுக்கினாள். "கதைக்கு காலுமில்ல. வாலுமில்ல."
"அண்ணாமலை பொய் சொல்ல மாட்டார்னு நம்புறன்" பாண்டே சொன்னார்.
"பொய் சொல்ல மாட்டார். ஆனா கத சொல்வார். அதுவும் கட்டுக் கதயா" வர்ஷாவினுடைய ஒவ்வொரு வார்த்தையும் அவள் அண்ணாமலை மீது எவ்வளவு கோபமாக இருக்கிறாள் என்பதைக் காட்டியது. அதனால் அவளிடம் பேச்சுக் கொடுக்கக் கூடாது என்று நினைத்தார். தன்னுடைய அம்மாவிடம், "மணி ஆச்சே சாப்பிட வேண்டாமா?" என்று கேட்டார்.
எம் பொண்ண என் கண்ணு முன்னாலியே அடிச்சிட்டான். அத கேக்க ஒனக்கு தெரியல. மிரட்டி வைக்க தெரியல. அவன் சொன்னக் கதையக் கேட்டுட்டு வந்து எங்கிட்ட சொல்றியே, ஒனக்கு அசிங்கமா இல்ல." நவநீதா பொரிந்துத் தள்ளினாள்.
        அண்ணாமலையின் மீது வர்ஷா நூறு சதவிகிதம் கோபமாக இருக்கிறாள் என்றால், நவநீதா ஆயிரம் மடங்கு கோபமாக இருக்கிறாள் என்பது தெரிந்தது. ஒன்றும் பேசாமல் திரும்பி வந்து முன்பு உட்கார்ந்திருந்த இடத்தில் உட்கார்ந்தார். அண்ணாமலை சொல்வது பொய்யாக, கட்டுக்கதையாக, வெறும் வாய்மொழிக் கதையாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. நேரிடையாகக் கேட்டால் தவறாக நினைக்கலாம் என்ற எண்ணம் இருந்தாலும் மனம் பொறுக்காமல் கேட்டேவிட்டார்.
"நீங்க சொல்றதெல்லாம் நிஜமா?"
        பாண்டேவிற்கு பதில் சொல்லாமல் எழுந்து சென்று தன்னுடைய ஷெல்பில் இருந்த இருபது முப்பது புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்து சோபா மீதுவைத்தான். அதிலிருந்து ஒரே ஒரு புத்தகத்தை எடுத்து அதில் அச்சிடப்பட்டிருந்த புகைப்படங்களை காட்டினான். விவேகானந்தர், ரமண மகரிஷி, பாரதி, கே.பி.சுந்தராம்பாள், அன்னிபெசண்ட், ஐடன் நிற்கும் நிழற்படத்தை காட்டினான். ஒவ்வொரு படமாகப் பார்த்த பாண்டே ஆச்சரியத்தில் "ஓ கிரேட்" என்ற வார்த்தையைத் திரும்பத்திரும்ப சொன்னார்.
"திருநீர்சாமி கோவிலுக்கு வந்திட்டுப் போனவங்களோட போட்டோ உள்ள இன்னொரு புத்தகம் இருக்கு தரட்டுமா? பாக்குறீங்களா? தமிழ்நாட்டுல உள்ள அரசியல்வாதிங்க, பெரிய மனுசங்க எல்லாம் இருப்பாங்க" என்று சொன்னதோடு ஒரு புத்தகத்தை எடுத்துக்கொடுத்தான். ஆவலோடு புத்தகத்தை வாங்கி போட்டோக்களை மட்டும் பார்த்தார்.
"திருநீர்சாமியப் பத்தி சொல்றதுக்கு நூத்துக்கணக்கான விசயங்கள் இருக்கு. சொன்னா நீங்க யாருமே நம்ப மாட்டிங்க."
"நான் நம்புறன்" அடித்துச் சொன்னார் பாண்டே. உற்சாகமாகி அண்ணாமலை கொடுத்த இரண்டு புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு வர்ஷாவிடம் ஓடி விவேகானந்தர், அன்னிபெசண்ட், ஐடன் இருந்த போட்டோக்களை எல்லாம் வரிசையாகக் காட்டினார். உற்சாக மிகுதியில் "பாத்தியா, பாத்தியா?" என்று கேட்டார். பாண்டேவின் பேச்சைக்கேட்டு, ஆர்வத்தைப் பார்த்து வர்ஷா,  ரொம்பவும் நிதானமாக கேட்டாள் "அவரோட பித்து ஒனக்கும் புடிச்சிடிச்சா அண்ணா."
        "நீங்க ரெண்டுபேரும் பாத்துக்கிட்டு இருங்க வர்றன்" என்று புத்தகத்தைக் கொடுத்துவிட்டு பாண்டே அண்ணாமலையிடம் வந்தார்.
"உண்மையாவே ஆச்சரியமான விசயம்தான்."
        "இதெல்லாம் பெரிசில்ல. அவர் செஞ்ச சித்து விளையாட்டுக்கள்தான் பெருசு. பச்ச தண்ணிய ஊத்தி விளக்க எரியவிட்டிருக்கார். செப்புத் தகட தங்கமா மாத்தியிருக்கார். சுடாத மண் பானயில சோறாக்கி காட்டியிருக்கார். நோய்ன்னு வர்றவங்க வாயில ஒரு சிட்டிக மண்ண அள்ளி போடுவாராம். அது மறுநொடியே திருநீராமாறிடுமாம். வயித்துவலி, தலவலி, காய்ச்சல் எல்லாமே கொஞ்ச நேரத்திலியே காணாம போயிடுமாம். அவராலதான் அந்த ஊரோட, சுத்து வட்டாரத்தோட கத பேசப்படுது. அவுரு இல்லன்னா அந்த ஊருக்கும், சுத்து வட்டாரத்துக்கும் கத ஏது? வெறும் வாழ்வாங்கிங்கிற பேராவே இருந்திருக்கும். அவரோட சின்னசின்ன விசயங்கள் கூட கதயாயிடிச்சி. வரலாறு ஆயிடிச்சி. தலமுறைக்கு தலமுறயா கத வளந்துகிட்டே வருது. அழியல. வாழ்வாங்கியில சாராயக்கட கெடயாது. போலீஸ் ஸ்டேஷன், சினிமா தியேட்டர்ன்னு எதுவும் கெடையாது. போலீஸ் ஷ்டேஷன், கோர்ட்டுன்னு இதுவர யாரும் போனதில்ல. எந்தப் பிரச்சனயா இருந்தாலும், அந்த ஊர்ல இருக்கிற எல்லாச் சாதிய சேந்தவங்களும் ஒன்னாக்கூடி பேசி முடிவு சொல்லுவாங்க. அத இதுவர யாரும் மீறினதில்ல."
"நீங்க சொல்றதயெல்லாம் கேக்கும்போது பிரமிப்பா இருக்கு.”
"சராசரி மனுஷ வாழ்க்கயிலிருந்து மாறினவங்க, விலகுனவங்க வரலாறு ஆயிடுறாங்க. தனிவீடுதனிரூம், தனி கம்யூட்டர், தனி செல்போன், தனித்தனின்னு வாழற நமக்கு, என்னுது, என்னுதுன்னு சொல்ற நமக்கு எதுவுமே சாத்தியமில்ல. கோவிலோட வாசல்ல தவஞ்செய்வார் தம் கரும்ம் செய்வார், மற்றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட்பட்டுனு எழுதியிருக்கு சார்."
"அப்பிடின்னா என்னா?" பாண்டே ஆர்வமாகக் கேட்டார். அந்த பாட்டுக்கான விளக்கத்தை விளக்கிசொன்னான். விளக்கத்தைக் கேட்ட பாண்டே சிரித்துக்கொண்டே “எங்களவிட இந்தி நல்லாப் பேசுறிங்க” என்று சொன்னார். அப்போதுதான் நினைவுக்கு வந்த மாதிரி கேட்டார் :
"திருப்பதி கோவிலுக்கு வர்ற தங்கத்த டெபாசிட் செய்றாங்களே. அந்த மாதிரி ஏதாச்சும் இருக்குமா? வருசத்துக்கு எவ்வளவு வசூல் ஆகும்."
"அந்தக்கோவில்லே உண்டியலே கெடயாது."
"வாட்? சொத்து இல்லாம எப்பிடி கோவில் இயங்குது?"
"அவர் உயிரோட இருந்திருந்தா இந்த கோவிலகூட கட்டச் சொல்லியிருக்க மாட்டார். சாமிங்கிறது காத்துடா, பூமிடா, ஆகாயம்டா, நீருடா, சூரியன்டா, அதுக்குக் கோவில் கட்டுறீங்களான்னு கேட்டிருப்பாரு. இப்ப கோவில் இருக்கிற எடம் அந்த காலத்திலயிருந்த ராசா தானமா கொடுத்தது."
"அப்பிடியா? "
"அது ஒரு பெரிய கத" களைப்படைந்த மாதிரி சொன்னான் அண்ணாமலை.
பாண்டே கட்டாயப்படுத்தவே திருநீர்சாமி கோவிலுக்கு நிலம் வந்த கதையைச் சொன்னான்.
"அந்த காலத்தில எங்க பகுதிய ஆண்ட ராசாவுக்கு கடுமையான வயித்துவலி இருந்திருக்கு. பல வைத்தியம் செஞ்சி பாத்திருக்காங்க. எதுலயும் வலி நிக்கல. அப்ப யாரோ ஒரு ஆள் இவரப் பத்தி சொல்லியிருக்கான். ஒடனே அழச்சிக்கிட்டு வா’ன்னு ராசா சொல்லிட்டாரு. ஆளுங்க வந்து கூப்பிட்டிருக்காங்க. அதுக்கு, ‘தாகமெடுத்தா கன்னுகுட்டிதான் குளத்துக்குப் போகணும். குளம் கன்னுகுட்டி இருக்கிற எடத்துக்கு வராது’ன்னு சொல்லிட்டாராம்."
"ஃபியூட்டிஃபுல். அப்பறம்?" சிறுகுழந்தை மாதிரி பாண்டே கதையை கேட்டார்.
"ராசாவோட ஆளுங்க போயி விசயத்த சொன்னதும் கோபமாகி, ‘ஆள கட்டித் தூக்கிக்கிட்டு வாங்க’ன்னு உத்தரவு போட்டிருக்காரு. பத்து இருபதுபேர் வந்து கூப்பிட்டு இருக்காங்க. அவர் முடியாதுன்னு சொல்லியிருக்காரு. ஆள தூக்கறதுக்கு பாத்திருக்காங்க. முடியல. ‘காத்த எவன்டா தூக்க முடியும். கடல, மலய, வெளிச்சத்த எவன்டா தூக்க முடியும்’ன்னு சொல்லி சிரிச்சி இருக்காரு. இருபதுபேரால அவர அசைக்கக்கூட முடியலங்கிறதப் போயி ராசாகிட்ட சொல்லியிருக்காங்க. சிரச்சேதம் செய்யச்சொல்லி உத்தரவுபோட கோபம் வந்தாலும் வயித்துவலி தீரனுமேன்னு அவரே நேர்ல வந்திருக்காரு. திருநீர்சாமி ஒரு சிட்டிக மண்ண எடுத்து ராசாவோட வயித்தில பூசியிருக்காரு. மறுநிமிசமே வயித்துவலி இருந்த எடம்தெரியாம போயிருக்கு. ‘எந்த நாட்டு வைத்தியனாலயும் போக்க முடியாத வயித்துவலிய போக்கிட்ட. ஒனக்கு என்னா வேணும்கேளு’ன்னு சொல்லியிருக்காரு. அதுக்கு ‘காத்துக்கு நீ என்னா தருவ, கடலுக்கு என்னா தருவ, ஆகாயத்துக்கு, பூமாதேவிக்கு, வெளிச்சத்துக்கு, சூரியனுக்கு என்னா தருவ? போடா போ’ன்னு சொல்லிட்டாராம். அதகேட்ட ராசா ‘வேணாமின்னு சொல்றது ஒங் குணம். கொடுக்காம போறது எங் குணமில்ல’ன்னு சொல்லிருக்காரு. அப்ப, ‘அங்கப்பாரு ஆகாய மார்க்கமா பட்டினத்தாரும், சிவவாக்கியரும், பத்திரகிரியாரும், பாம்பாட்டி சித்தனும் போறாங்க. நான் அவுங்ககூட பேசணும். நீ எட்டபோ’ன்னு சொல்லிட்டு வானத்தப் பாத்துக் கும்பிட்டுக்கிட்டேயிருந்தாராம்."
"சித்தனும் சரி, பித்தனும் சரி யாரு சொன்னாலும் கேக்க மாட்டானுவ. நீ வேணாமின்னாலும் கொடுக்காம போறது எனக்கு மரியாத இல்ல. இப்ப இந்த குதிரய அடிச்சி துரத்தப்போறன். ஓடுற குதிர ஓட முடியாம களச்சிப்போயி எந்த எடத்தில நடக்க ஆரம்பிக்குதோ அந்த எடம்வர ஒனக்கு தானம்’னு சொல்லி ராசா குதிரய சவுக்கால அடிச்சி விரட்டிவிட்டாராம். ஓடிஓடி களச்சிப்போன குதிர ஒரு எடத்தில நடக்க ஆரம்பிச்சியிருக்கு. அந்த எடத்த அடயாளம் செஞ்சி, ஆத்தங்கர அரசமரத்திலிருந்து அந்த எடம்வர திருநீர்சாமிக்கு தானம்ன்னு அந்த எடத்திலியே பட்டயத்தில எழுதி கொடுத்திட்டுப்போயிட்டாராம்."
        "ஆச்சரியமா இருக்கு. அந்த எடம் இப்பவும் பயன்பாட்டுலதான் இருக்கா?"
"ஆமாம்."
"கோவில யார் கட்டுனது?"
" ’எனக்கொரு ஆலயத்த எழுப்பு’ன்னு   திருநீர்சாமி கனவுல வந்து சொன்னதா சொல்லி புன்னைவனம் செட்டியார் வந்து கட்டினதுதான் இப்ப இருக்கிற கோவில்."
"ஒங்க குடும்பத்திலிருந்து எதுவும் செய்யலியா?"
"சாமியா கும்புட்டிருக்காங்க. அவ்வளவுதான்."
"அந்த செட்டியாரு யாரு?"
"வியாபாரம் செய்யுற ஆளு. அப்பவே கடல்வழியா வியாபாரம் செஞ்சிருக்காரு. வியாபாரத்தில பெரிய அடி விழுந்திருக்கு. ஒரு நாள் அந்த வழியா வந்து ஆத்தில குளிச்சிட்டு அரசமரத்துக்கு வந்திருக்காரு. திருநீர்சாமியப் பாத்ததும் மனசுல என்ன தோணிச்சோ, ‘சாமி வியாபாரம் போயிடிச்சி’ன்னு சொல்லி அழுதிருக்கார். சாமி ஒருபுடி மண்ண அள்ளிக்கொடுத்து ‘எடுத்துக்கிட்டுபோ’ன்னு சொல்லியிருக்கார். அதுபூராவும் தங்கமா மாறி இருக்கு. அத வச்சி வியாபாரம் செஞ்சி பெரிய கோடீஸ்வரனா ஆனவர்தான் புன்னைவனம் செட்டியார். வியாபாரத்தில் பணம் கொட்ட ஆரம்பிச்சப்ப மூணு நாலு சாக்கு நிறைய பணத்த கொண்டாந்து சாமியோட காலடியில கொட்டியிருக்காரு. ‘இந்தக் குப்பய எதுக்கு இங்க கொண்டாந்த? இதனாலதான் ஒலகத்தில எல்லாச் சனியனும் நடக்குது. அடுப்புக் கரியக்கூட காசாக்கிற ஒலகம். அள்ளி ஆத்தில கொட்டிட்டுப்போ’ன்னு சொன்னாராம். சாமி சொல்லிடிச்சேன்னு செட்டியாரும் நாலு சாக்கு பணத்த ஆத்தில அள்ளிக் கொட்டிட்டாராம்."
"மிராக்கிள்." வாய் நிறைய சொன்ன பாண்டே "சாமி பெரியாளா, செட்டியாரு பெரியாளான்னு புரியல" என்று சொன்னார். திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி கேட்டார் “இதெல்லாம் ஒங்களுக்கு எப்பிடி தெரியும்?”
“அவரோட இருந்தவங்க, பழகுனவங்க, நேர்ல பாத்தவங்க சொன்னதுதான். பின்னால கதயா ஆயிடிச்சி. வரலாறா ஆயிடிச்சி. செட்டியாருக்கு மட்டுமில்ல, இன்னிக்கும் அந்த கோவிலுக்குப்போய் தன்னுடைய மனக்குறைய சொல்றவங்களுக்கு தீந்திடும். கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் எல்லாம் உண்டாகும்.”
"இப்பவுமா?"
"ஆமாம்" என்று சொன்ன அண்ணாமலை "இப்ப நான் சொல்லப்போற விசயத்த கேட்டா நம்பவே மாட்டிங்க. அந்த கோவில்ல திருநீர் தர்றது ஒரு முஸ்லீம்" என்று சொன்னான்.
"வாட்?" அதிர்ச்சியில் பாண்டே எம்பி குதிக்காத குறைதான் சார்.
"உண்மதான் சார், அந்த காலத்தில வெத்திலபேட்ட அலாவுதின்னு ஒருத்தர் இருந்திருக்கார். அவருக்கு பதிமூணு பிள்ளைங்க. வெத்தில வியாபாரம் செஞ்சிருக்காரு. ரொம்ப கஷ்டமான குடும்பம். ஊர்ஊராப்போயி வெத்தில வித்திட்டு வரும்போது நிழலுக்கு வந்து அரச மரத்துக்குக்கீழ ஒக்கார்ந்திருக்காரு. சாமியவே பாத்துக்கிட்டு இருந்திருக்காரு. என்ன மனசுல பட்டதோ தன்னோட கஷ்டத்த சாமிக்கிட்ட சொல்லியிருக்காரு. சாமி எதுவும்பேசாம ஒரு கைப்பிடி மண்ண அள்ளிக் கொடுத்து ‘போ’ன்னு சொல்லியிருக்காரு. அதுக்கு மறுநாளிலிருந்து அலாவுதினுக்கு வியாபாரம் நல்லாப்போயிருக்கு. இலங்கைக்கு கும்பகோணம் சீவல், நாகப்பட்டினம் சுருட்டு, தஞ்சாவூர் வெத்தில, திருச்செந்தூர் சில்லுக்கருப்பட்டி, கொட ரோடு கொடி முந்திரி, மலநாட்டு வாழப்பழம், பேரிக்கா, சோழவந்தான் துளிர் வெத்திலன்னு ஏற்றுமதி செய்யுற அளவுக்கு வளந்திட்டாரு. எல்லாம் சாமியாலதான் நடந்ததின்னு நம்பி, நாள் தவறாம சாமிய வந்து பாப்பாராம். சாமி செத்ததிலிருந்து ஒவ்வொரு மாச பௌர்ணமிக்கும் அவருதான் வந்து திருநீர்கொடுத்திருக்காரு. அவருக்குப் பின்னால அவரோட மனைவி ஆயிஷா பீவி கொடுத்திருக்காங்க. அப்பறம் அவுங்களோட மூத்தமகன் காஜா மைதீன் கொடுத்திருக்காரு. அப்பறம் காஜா மைதீனோட பெரியமகன் ஜமால் முகமது, இப்ப ராஜா முகமது கொடுத்துகிட்டு இருக்காரு. ஒவ்வொரு மாச பௌர்ணமிக்கு மட்டுமல்ல, ஆவணி மாச பௌணர்மி அன்னிக்குத்தான் கூட்டம் அதிகம் வரும். திருநீர் கொடுப்பாங்க. சொந்தக்காரங்களா இருந்தாலும் நாங்களும் அவுங்ககிட்டதான் திருநீர் வாங்கணும்."
"எப்பிடி இது நடந்துச்சி?"
"தெரியல. அந்த காலத்திலிருந்து இதுதான் நடமுற."
"சண்ட வரலியா?"
"எதுக்காக?"
"முஸ்லீம் குடும்பம் திருநீர் கொடுக்கிறதுக்காக."
"இதுவர வந்ததில்ல."
"திருநீர் கொடுக்கிறவங்க எந்த சாமிய கும்புடுறாங்க?"
அல்லாவத்தான்."
"அந்த கோவிலுக்கு எப்ப கடைசியா போனிங்க?"
“போன வருசம் ஆவணி மாசம்.”
"அப்ப யார் திருநீர் கொடுத்தாங்க?"
"ராஜா முகமதுதான்.”
"இதுவர ஒரு முறகூட சண்ட வந்ததே இல்லியா?"
"மனுசனுக்கு மனுசனுக்கிடயில சண்டய, கலவரத்த உண்டாக்குறதுக்கா சாமி, கடவுளு?"
"பியூட்டிஃபுல். இருங்க வர்றன்" என்று சொல்லிவிட்டு எழுந்து வேகமாக தன்னுடைய அம்மாவிடமும், தங்கையிடமும் போய் திருநீர்சாமி கோவிலில் முஸ்லீம் திருநீர் தருகிற செய்தியை சொன்னார். பாண்டேவினுடைய உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் பார்த்த நவநீதா பாண்டே முகத்தை திருப்பிக்கொண்டாள். வாய்க்குள்ளாகவே "லூசு" என்று சொன்னாள்.
"கத முடிஞ்சிடிச்சா இன்னும் இருக்கா? நாலு வருசமா நான் கேட்ட கதெதான்." வர்ஷா கேலி செய்கிற விதமாக சொன்னாள்.
"கதன்னு நெனைக்கிறியா?"
"இல்ல கட்டுக் கதன்னு நெனைக்கிறன்" வர்ஷாவினுடைய முகம் சிவந்துப்போயிற்று. என்ன சொல்வது என்று தெரியாமல் நின்ற பாண்டேவிடம் ஆக்ரோஷமாகக் கேட்டாள். "பொண்டாட்டிய அடின்னும், டைவர்ஸ் செய்யுன்னும் அவுங்க சாமி சொல்லிச்சாமா?"
ஏதாவது பேசவேண்டுமே என்று “சாப்பிடுங்க. மணி ஆயிடிச்சி” என்று சொல்லிவிட்டு அண்ணாமலையிடம் வந்தார்.
"நான் அந்த கோவில ஒரு முற பாக்கணுமே."
"முறப்படி பாத்தா தாய்மாமன் மடியில வச்சித்தான் முடி எறக்கணும். காது குத்தணும். பேரு வைக்கணும். நீங்க வடநாட்டுக்காரங்க சொன்னா வர மாட்டிங்கன்னுதான் சொல்லல. மொத்த செலவையும் நீங்கதான் செய்யணும்."
"அப்பிடியா? எல்லா செலவயும் நானே செய்யுறன். எம் மடியில வச்சே எல்லாக் காரியத்தயும் செய்ங்க. வெரிகுட். அதுப் பத்தி நெனைக்கும்போதே சந்தோஷமா இருக்கு. டிக்கட்டப் போடுங்க" பாண்டே சொன்னார். சோபாமீது கிடந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து பார்த்துவிட்டு “இதெல்லாம் ஒங்க சாமி எழுதினதா?"
"இல்ல. அவரப் பத்தி மத்தவங்க எழுதினது."
"சரி டிக்கட்டப்போடுங்க. சாப்பிடப்போவோம்." பாண்டே அவசரப்படுத்தினார். எழுந்து வர்ஷாவிடம் சென்று "கோபத்த விடு. நானும் வரன். அம்மாவும் வரட்டும். போயிட்டு வந்திடலாம். இதெல்லாம் எங்களோட கடமதான?" என்று சொன்னார்.
"அம்மா முன்னாலியே என்ன அடிச்சிட்டு, டைவர்ஸ் தந்திட்டு புள்ளைங்கள தூக்கிக்கிட்டுப் போறன்னு சொல்லிட்டாரில்ல, நான் செத்தாலும் வர மாட்டன்." வர்ஷா அழுதுகொண்டே சொன்னாள். அதை கேட்ட அண்ணாமலை நிதானமாகவும், தீர்க்கமாகவும் சொன்னான்.
"திருநீர்சாமியே வந்து நேர்ல சொன்னாலும் கேக்க மாட்டன். என்னோட குழந்தைகளுக்கு எங்க குல தெய்வம் கோவில்லதான் பிறந்த முடி எறக்கணும், காது குத்தணும், பேரு வைக்கணும்."


உயிர்மை – ஜனவரி 2017

3 கருத்துகள்:

  1. இமையத்தின் எந்தவொரு கதையும் சோடை போனதில்லை. அவரின் இந்தத் திருநீர்சாமி...ஜனவரி 2017 மாதத்தில் நான் படித்த பல கதைகளில் மிகச் சிறந்த கதை என்று சொல்வேன். குலசாமியைக் கும்பிடுதல், கொண்டாடுதல் என்கிற பழக்கம் நம் கிராமத்து மக்களின் காலம் காலமான ஒழுக்க நடைமுறை. அந்த நம்பிக்கையை யாராலும் குலைக்க இயலாது. கிராமத்து மக்களின் என்று மட்டுமில்லை. நம் குடும்ப அமைப்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குலதெய்வம் என்று ஒன்று உண்டு. அந்த தெய்வத்திற்கு வருடாந்திர வழிபாடும், குலம் தழைக்கவென்று குடும்பத்தில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் அவர்களின் குலதெய்வத்தை முன்னிறுத்தலும், வழிபடுதலும், அதன் மூலம்தான் சந்ததி செழித்தோங்கும் என்கிற ஆழ்ந்த நம்பிக்கையின்பாற்பட்ட செயல்பாடும் வழி வழியாக வந்த பெரியோர் வகுத்த செயல்பாடு. அதில் ஆழமாய் ஊன்றிப்போன அண்ணாமலை தன் குழந்தைகளுக்கு முடி எடுக்கவும், காது குத்தவும் என்று சென்றுதான் ஆக வேண்டும் என்று மனைவியோடு பொருதுவதும், இதுக்காக டெல்லியிலிருந்து தமிழ்நாட்டுக்குப் போகணுமா என்று அவள் வாதிப்பதும்...அதனால் சண்டை மூளுவதும்....ஒவ்வொரு வாக்கியமும்...ஆழமாகவும்...அழுத்தமாகவும் சொல்லப்பட்டு படிக்கும் வாசகனை முழுமையாக உள்ளே இழுத்துக் கொள்கிறது. தமிழ்நாட்டிலேயே பெண் எடுத்து....குலதெய்வ வழிபாட்டிற்குச் சென்றாக வேண்டும் என்று சொல்லி...அதற்கு அவள் மறுத்து...என்று கதை சொல்லப்பட்டிருந்தால் இந்த அளவுக்கு வீரியம் இருந்திருக்காது...இருக்காது என்றுதான் இன்னொரு மாநிலப் பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டதாய்ச் சொல்லி...அதன் மூலம் கிராமத்து நம்பிக்கைகளை அழுத்தமாய் நிலை நிறுத்தியிருக்கிறார் இமையம். தமிழ்நாட்டுப் பெண்ணே அப்படி மறுதலிக்க வாய்ப்பில்லை என்பதும், இதற்காக வெகுதூரம் அலைதல் என்ற கருத்து பொருந்தி வராது என்பதும் உணர்ந்து, டெல்லிப் பெண்ணாய் வகுத்து, அந்த மனைவி மறுதலிப்பதாய்க் கதை சொல்லியிருப்பது அவரது புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. மனைவியும், அவளின் தாயாரும் ஒத்த கருத்தினராய் நிற்பதும், மனைவியைத் தன் முன்னேயே கைநீட்டியதில் கோபம் கொண்டவளாய் தாயார் மருமகனை இழித்துரைப்பதும், மனைவியி்ன் அண்ணன் அண்ணாமலையிடம் பொறுமையாக விஷயங்களைக் கேட்டு குலசாமியின் மகிமைகளை உணர்ந்து கொள்வதும்.....அவர்களுக்கு எடுத்துச் சொல்ல முயல்வதும், அப்படியும் கடைசிவரை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பதும்...எப்படியானாலும் என் குழந்தைகளுக்கு முடி இறக்குறதும், காது குத்துறதும் என் குல சாமி முன்னாடிதான் நடக்கும் என்று அண்ணாமலை இறுதிவரை உறுதியாக நிற்பதோடு கதை முடிந்து போகிறது. கதை வெறுமே முடிவதில்லை. படிக்கும் வாசகர்களின் மனதிலும் அவரவர்களின் குலதெய்வ நம்பிக்கைகளை மேலும் உறுதிப்படுத்திவிட்டு நகர்கிறது. தான் சொல்ல நினைத்ததை மனதுக்குள்ளேயே இத்தனை அழுத்தமாய் வடித்துக் கொள்ளவில்லையென்றால் அதை எழுத்தில் கொண்டு வருவது மெத்தக் கடினம். எழுதிக் கொண்டே போவோம்...அது தானாய் ஒரு முடிவைத் தேடிக் கொள்ளட்டும் என்பது போன்றதான வெறும் வாசிப்பு ரசனைக்கான படைப்பல்ல இது. காலத்தால் நிற்பது. அழுந்தி ஊன்றி தன்னை நிலை நிறுத்திக் கொள்வது. இமையத்தின் இந்தத் திருநீர்சாமி அப்படித்தான் தன்னை ஆழப் பதிய வைத்து விடுகிறது.

    பதிலளிநீக்கு
  2. அருமையான சிறுகதை மனதுக்கு பிடித்தது

    பதிலளிநீக்கு