திங்கள், 9 பிப்ரவரி, 2015

புனைவுகளில் கூட தகர்க்கப்படாத உத்தப்புரம் மதில் சுவர் - இமையம்.


2000க்குப் பிந்தைய தமிழ் இலக்கிய உலகம் விசித்திரமானது. ஒரு வகையில் வண்ணமயமானது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, விளிம்பு நிலை, நாடோடி, பழங்குடியின மனிதர்களுடைய வாழ்க்கைக் கதைகளாலும், மொழிகளாலும் இன்றைய தமிழ் இலக்கியம் நிறைந்திருக்கிறது என்று நம்பலாம். காலம் காலமாக அறிவுத்துறையில் குறிப்பாக இலக்கியத் துறையில் அசைக்க முடியாத பெரும் சக்தியாக இருந்தவர்கள் பிராமண வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர்கள்தான். தீவிர இலக்கியப் பரப்பிலும் சரி, வெகுஜன இலக்கியப் பரப்பிலும் சரி பிராமண வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர்களே அதிகம் எழுதினர். அவர்களுடைய வாழ்க்கையும் மொழியும்தான் தீவிர இலக்கியப் பரப்பிலும், வெகுஜன இலக்கியப் பரப்பிலும் கோலோச்சின. அதைத்தான் அனைத்து தரப்பு வாசகர்களும் படித்தார்கள். கொண்டாடினார்கள். ஆனால் இன்று அந்த நிலை இல்லை. தீவிர இலக்கியப் பரப்பிலும் சரி, வெகுஜன இலக்கிய பரப்பிலும் சரி பிராமண வகுப்பைச் சார்ந்த எழுத்தாளர்களின் எண்ணிக்கை இன்று சொற்பம்தான். இருக்கிறவர்களும் எழுதுவது பிராமண வாழ்க்கையை அல்ல, அவர்களுடைய மொழியை அல்ல. பொது மொழியில் எழுதுகிறார்கள். பொது சமூகத்தின் வாழ்க்கையை எழுதுகிறார்கள். ஏன்? பிராமணர்களுடைய வாழ்க்கை முறையை, அவர்களுடைய மொழியிலேயே எழுதினால் பொது வாசகர்கள் படிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் – பிராமண வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு வந்துவிட்டதா- பிராமணர்களுடைய வாழ்க்கையைப்பற்றி சொல்வதற்கு இன்று ஒன்றுமே இல்லையா? இன்று தமிழில் எழுதப்படுவதெல்லாம் பிராமணர் அல்லாதோர் இலக்கியங்கள்தானா?
2000க்கு சற்று முந்தைய காலத்திலிருந்தே தமிழ் இலக்கியப் பரப்பிலிருந்து மட்டுமல்ல, தமிழ் மொழியிலிருந்தும் தங்களை முற்றிலுமாக துண்டித்துக்கொண்டார்கள் பிராமணர்கள். ‘தமிழ் சோறு போடாது‘ என்ற எண்ணம் வந்து, வீட்டுச்சூழலிலிருந்தும், கல்விச் சூழலிலிருந்தும், சமூகச் சூழலிலிருந்தும் தமிழ் மொழியை திட்டமிட்டே தவிர்த்துவிட்டார்கள். ஒரு மொழியின் தேவையைப் பொருத்துத்தான், சம்பந்தப்பட்ட மொழியின் மீது ஈடுபாடும் அக்கறையும் ஏற்படும். இன்றைய பிராமணர்களுக்கு தமிழ்மொழி தேவை இல்லை என்றாகிவிட்டது. அதனால் தங்களுடைய குழுந்தைகளை தமிழ்மொழியை அறியாதவர்களாக வளர்த்து – மொழி இழப்பு செய்தார்கள். ஒரு தலைமுறை – தமிழ் மொழியை அறியாமலேயே வளர்ந்துவிட்டது.
எழுத்தின் மூலம் கதை சொல்லுதல் என்ற செயல்பாட்டிலிருந்து பிராமணர்கள் மெல்லமெல்ல ஒதுங்கினார்கள். அதே நேரத்தில் சமூகச் சூழலும் அவர்களை ஒதுக்கியது.  சமூகத்தின் அனைத்து தரப்பினரும் கல்வி கற்கலாம் என்ற சூழல், கல்வி பரவலான சூழல். சமூகத்தின் அனைத்து தரப்பினரும் கல்வி கற்றார்கள். அதனால் கதை எழுத வந்தார்கள். நிறையவே எழுதவும் செய்தார்கள். யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் எழுதலாம், எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற, எழுத்தில் – இலக்கியத்தில் ஏற்பட்ட ஜனநாயகத் தன்மை பிராமண வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர்களுடைய ஆதிக்கத்தை குறைத்தது. பிராமண வாழ்க்கையை, அவர்களுடைய மொழியில் படித்துப்படித்துக்  களைத்துப் போயிருந்த வாசகர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை, நாடோடி, பழங்குடியின மனிதர்களுடைய மொழியும், வாழ்க்கையும் புதிது என்பதால் வரவேற்றனர். இதுவும் பிராமண எழுத்தாளர்கள் – எழுத்து செயல்பாட்டிலிருந்து விலகுவதற்கு காரணம். பிராமணர் அல்லாதோர் இலக்கியப் படைப்புகளுக்கு இன்று கிடைக்கிற வரவேற்பு என்பது, அதன் வணிகமயத்திற்கான வரவேற்புதான். கலைக்காக அல்ல, அழகியல் தன்மைக்காக அல்ல.
நிகழ்காலத்தில் பிராமண எழுத்தாளர்கள் அதிகம் இல்லை. அவர்களுடைய வாழ்க்கையோ, மொழியோ தமிழ் இலக்கியத்தில் அதிகம் இல்லை என்பதை கொண்டாட வேண்டுமா - வரலாற்றில் இதுபோன்று நிகழ்வது இயற்கை என்று எடுத்து கொள்ள வேண்டுமா? தற்காலத்தில் எழுதப்படுவதெல்லாம் பிராமணர் அல்லாதோரின் எழுத்துக்கள்தான், இலக்கியங்கள்தான் என்று நூறு சதவிகிதம் சொல்ல முடியுமா ? பிராமணியக் கறையும், கசடும் படியாத தமிழ் இலக்கியம் சாத்தியமா ? அப்படி சொன்னால் அது பெரிய மூடநம்பிக்கை.
பிராமணர் அல்லாதவர்கள் பிராமண வாழ்க்கையை,மொழியை எவ்வளவு சிறப்பாக எழுதி காட்டுகிறோம் பாருங்கள் என்று எழுதிக் காட்டியவர்கள் பலர். அதில் முதன்மையானவர் ஜெயகாந்தன். “அக்னி பிரவேசம்” போன்ற பல சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். பிராமண வாழ்க்கையையும், மொழியையும், பிராமணர்களைவிட சிறப்பாக எழுதியதால்தான் ஆனந்த விகடன் அவரைக் கொண்டாடியது. பொது சமூகமும் கொண்டாடியது. ஜெயகாந்தன் கடைசியாக எழுதிய ஜெய ஜெய சங்கர – நாவல் எந்த மொழியில், யாருடைய வாழ்க்கையை, எந்த பண்பாட்டு கூறுகளை தூக்கி நிறுத்தியது என்பதை நாடறியும். பூமணி “நைவேத்தியம்“ என்ற நாவலை எழுதியிருக்கிறார். ஜெயமோகன் பல கதைகளை எழுதியிருக்கிறார்.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு, சமூக அந்தஸ்து என்று கிடைத்த பிறகு, இந்த கால் நூற்றாண்டு காலத்தில்தான் – பிராமணிய இந்துமத நம்பிக்கைகளை, சடங்குகளை, சம்பிரதாயங்களை, ஐதீகங்களை, கலாச்சாரப் பண்பாட்டுக் கூறுகளை பிராமணர் அல்லாத சமூகத்தினர் அதிகமாகவும், விரும்பியும் பின்பற்றுகின்றனர். வரதட்சணை என்ற பிராமணிய பண்பாடு – தமிழ் சமுகத்தின் பொது பண்பாடானது இப்படித்தான். ஆவணி அவிட்டம், வைகுண்ட ஏகாதேசி, சிவராத்திரி போன்ற பெருந் தெய்வ வழிபாட்டு முறைகள் – தமிழ் மொத்த சமூகத்திற்குமான பண்பாடாக எப்படி மாறியது? ‘புரட்டாசி மாதத்தில் கறி சாப்பிடமாட்டேன்‘ என்று சொல்கிற மனிதர்கள் கிராமத்திலும்கூட அதிகம் பேர் இன்று இருக்கின்றனர். எப்படி இது சாத்தியமாயிற்று? சிறு தெய்வ வழிபாட்டு முறைகள் எல்லாம் கைவிடப்பட்டு பெருந் தெய்வ வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. அப்படி பின்பற்றுவதை பெரிய கௌரவமாகக் கருதுகின்றனர்.
நாடு, மொழி, தனித்த கலாச்சாரம், பண்பாடு, சிறுசிறு இனக்குழுக்களுக்கான அடையாளங்கள் எல்லாம் அவசியமில்லை. இனி சாத்தியமுமில்லை. இதுபோன்ற தனித்த அடையாளங்கள் வளர்ச்சியை, முன்னேற்றத்தைப் பாதிக்கும். ஆகவே உலகமயம், தாரளமயம், வியாபாரமயம், ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம், உலகம் ஒரே குடையின் கீழ் என்ற முழக்கம் முழுமையாகப் பின்பற்றப்பட்டு வருவது போலவே, மற்ற விசயங்களும் மைய நீரோடத்தில் கலக்க வேண்டும் என்ற பேராசை எல்லாரையும் பிடித்தாட்டுகிறது.  சிறுசிறு இனங்களின் நிலவியல் சார்ந்த, அடையாளங்கள் வேகமாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், இனப்பாரம்பரியமும், நம்பிக்கைகளும், கதைகளும் முற்றாக இழந்துவிட்ட நிலையில், விளிம்பு நிலை மனிதர்களின் சிறு தெய்வ வழிபாடு, கலாச்சாரம் என்பதெல்லாம் காலாவதியாகிவிட்டது என்ற நிலையில் அப்படியிருப்பது நாகரீகமற்றது  என்ற மனப்போக்கு அடித்தட்டு கிராமப்புற  மக்களிடமும் பரவிவிட்டது. இருபத்தியோராம் நூற்றாண்டு வாழ்க்கைக்கு அது ஏற்றதல்ல என்ற மனோபாவம் கிராம, நகர மக்கள் என்று எல்லாரிடத்தும் வளர்ந்துவிட்டது. பிராமணிய இந்து மத ஆதிக்கம் செலுத்தும் – சடங்குகளை, விழுமியங்களை, சம்பிரதாயங்களை, நம்பிக்கைகளை பின்பற்றுவதால் மட்டுமே மைய நீரோட்டத்தில் ஒன்றிணைய முடியும் என்ற முனைப்பும், எப்படியாவது பிராமணராகிவிட வேண்டும் என்ற பேராசையும் படித்த, பதவியில் இருக்கிற, பணம் படைத்த, பிராமணர் அல்லாத சமூகத்தினரிடம் வந்துவிட்டது. எங்கிருந்து வந்தோம், என்னவாக இருக்கிறோம், என்னவாக போகிறோம் என்ற தெளிவு பிராமணர் அல்லாத சமூகங்களின் மக்களிடம் மட்டுமல்ல, எழுத்தாளர்களிடமும், அவர்களுடைய படைப்புகளிலும் இருக்கிறதா? எதிர்க்கலாச்சார, கலகக் குரல் கொண்ட படைப்புகள் இதுவரை தமிழில் வந்திருக்கிறதா? பிராமணியமாதலை நோக்கி, உலயமயமாதலை, நிறுவனமயமாதலை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருக்கிறோம். அவ்வாறு செல்லும்போது எற்படும் சாதக, பாதகமான அம்சங்களைப் பேசிய படைப்புகள் எவை? 1960லிருந்து 1990வரை  எழுதிய – பிராமணர், பிராமணர் அல்லாத எழுத்தாளர்கள் ‘கடவுள்‘ என்ற சொல்லை பயன்படுத்துவதையும், கடவுள் நம்பிக்கை சம்பந்தமான தகவல்களை எழுதவும் அஞ்சினர். ‘பிற்போக்குவாதி‘ என்று முத்திரை குத்தி விடுவார்கள் என்று பயந்தார்கள். முற்போக்குவாதியாக காட்டிக்கொள்வதில்தான் அப்போது எல்லாருக்கும் விருப்பம் இருந்தது. இன்று அந்த நிலை இருக்கிறதா?
ஒருவர் சென்னையில் வாழலாம். கன்னியாகுமரியில், கடலூரில், கோயம்புத்தூரில் – தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் வாழலாம். எங்கு வாழ்ந்தாலும் பெரும்பான்மையோரின் திருமணம் எப்படி, யாரால், எந்த முறையில் நடத்தப்படுகிறது? புதுமனை புகு விழா, மஞ்சள் நீராட்டு விழா , கருமகாரியச் செயல்பாடுகள் யாரால், எந்த முறைப்படி செய்யப்படுகிறது- ‘உபநயன விவாஹ சுப முகூர்த்த பத்திரிக்கை‘‘ என்பதை ‘திருமண அழைப்பிதழ்‘ என்றும், உக்கிரத சஷ்டியப்த பூர்த்தி சாந்தி ஆஹ்வாகன சுபமுகூர்த்தப் பத்திரிக்கை‘ என்பதை ‘அறுபதாம் கல்யாணம்‘ என்று போடலாம். ‘ஜீர்ணோதாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகத்தை ‘திருக்குட புனித நன்னீராட்டு பெரு விழா’ என்றோ ‘குடமுழுக்கு’ என்றோ பத்திரிக்கை அச்சிடலாம். ‘கிரகப் பிரவேசத்தை’ ‘புதுமனை புகுவிழா’ என்றும் பத்திரிக்கை மட்டும்தான் அச்சிட முடியும். திருமணமோ, வீடு குடி புகுதலோ, மஞ்சள் நீராட்டோ, அறுபதாம் கல்யாணமோ, கரும காரியமோ எதுவாக இருந்தாலும் இக்காரியங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள், சடங்குகள் எல்லாமே – பிராமணிய இந்துமத சடங்குகள்தான். வசதிபடைத்த, உயர் பதவியிலுள்ள, சமூக அந்தஸ்து பெற்ற தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்களுடைய திருமணங்களை மட்டுமல்ல, அவர்களுடைய வீட்டு அனைத்து விசேஷங்களையும் இன்று பிராமணர்கள்தான் நடத்தி வைக்கின்றனர். பிராமணிய இந்துமத வைதீக முறைப்படி. காசு இல்லாதவர்களிடம்மட்டும்தான் பிராமணர்களுக்குத் ‘தீட்டு‘.
பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எழுதுவது – மீட்டுருவாக்கம் செய்வதுதான் இலக்கியம் என்றால் – இன்று தமிழ் மொழியில் எழுதப்படுகிற பண்பாடு, கலாச்சாரம், சடங்கு, நம்பிக்கை, யாருடையது - யாருடைய இலக்கியம் எழுதப்படுகிறது என்ற கேள்வி முக்கியமானது. பிராமணிய இந்துமதக் கருத்தியல்களையும், நம்பிக்கைகளையும், சடங்குகளையும் பின்பற்றுவேன் – அதே நேரத்தில் நான் எழுதுவது பிற்பட்டோர் இலக்கியம், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்டோர் விளிம்புநிலை நாடோடி பழங்குடியின இலக்கியம் என்று ஒருவர் சொன்னால் அது உண்மையா? கொங்கு நாட்டு இலக்கியம், கரிசல், நாஞ்சில் நாட்டு இலக்கியம், பிற்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், தலித் இலக்கியம் என்று சொல்வதெல்லாம் பிராமணிய இந்து மத – நெறிமுறைகளை, அறத்தை, சாதி, மத நம்பிக்கைகளை வேறுவேறு பெயர்களில் எழுதுகிறோம் என்றுதான் அர்த்தம். பிராமணிய இந்துமதம் வகுத்த – கவுண்டர், வெள்ளாளர், தலித்கள்‘ என்ற சாதி பாகுபாடுகளையும் அதன் நடைமுறைகளையும்  எழுதுவது என்பது – பிராமணிய இந்து மதம் வகுத்த நெறிமுறைகளை சரி என்று ஏற்றுகொள்கிற செயல். பொதுமையத்தை நோக்கிய விழைவை அதிகம் கொண்டுள்ளோர், உலகமயத்தை, நிறுவனமயத்தை விரும்புகிறவர்கள் இன, அடையாள அரசியலைப் பேசுவதும், வட்டாரம், தலித்தியம் என்ற அடையாளங்களையும் பேணுவதிலும் அர்த்தமுண்டா? பிராமணியம் அனைத்தையும் தன் வயமாக்கிக்கொள்ள முனைகிறது. இச்செயலுக்கு நிஜமான எழுத்தாளன் எதிர்வினையாற்றுவார். மாறாக அச்செயலுக்கு சமூகத்தின் எல்லாத் தரப்பிலும் ஊக்கமே அளிக்கப்படுகிறது. சிறுசிறு அடையாளங்களும் வேகமாக பிராமணியமாக மாறிக்கொண்டிருக்கிற காலத்தில், பிராமணியமாக மாறுவதற்கு வேகமாக சென்று கொண்டிருக்கிற காலத்தில், வட்டார எழுத்தாளன், தலித், விளிம்பு நிலை எழுத்தாளன்  என்று எப்படி சொல்ல முடியும்? அப்படி சொல்வது சரி என்றால் அவர்கள் எழுதியிருக்க வேண்டிய இலக்கியம் எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்?
1957ல் நடந்த இமானுவேல் சேகரன் படுகொலை, 1968ல் கீழ்வெண்மணி படுகொலை, 1979ல் உஞ்ஞனை, 1997ல் மேல வளவு, 1990ல் ராமநாதபுரம் கலவரம், 1999ல் மாஞ்சோலை தேயிலை தொழிலாளர் – தாமிரபரணி படுகொலை, 2001ல் சங்கரலிங்கபுரம் கலவரம், 2002ல் திண்ணியத்தில் ராமசாமி, முருகேசன் வாயில் மலம் திணித்த சம்பவம் எதுவும் தமிழ் மொழியில் கதையாகவில்லை. இலக்கியமாகவில்லை. கடலூர் மாவட்டம் புளியங்குடியில் 2000ல் காந்தி, வெள்ளையன், மதியழகன் மூன்று பேரையும் கழுத்தறுத்து கொன்றது, பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்காய்ச்சி ஏந்தல் – ஆகிய ஊர்களில் பஞ்சாயத்த தேர்தலை நடத்த முடியாது நின்ற இந்திய அரசு – போன்ற  விசயங்கள் எதுவும் தமிழில் கதையாகவில்லை. 2012ல் நடந்த நாயக்கன் கொட்டாய் – நத்தம் காலனி சூரையாடல் – கண்ணகி முருகேசன் படுகொலை, தமிழ் இலக்கியப் பரப்பிற்கு வரவே இல்லை. மீனாட்சிபுரம் மதமாற்றம், உத்தப்புரம் – மதில் சுவர் – புனை கதைகளில்கூட தகர்க்கப்படவில்லை என்றால் தமிழகத்தில் எழுதப்பட்ட தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு மனிதர்களுடைய கதைகள் என்பது என்ன? மேடைகளில் பேச மட்டுமே இந்த சமூகக் கொடூரங்கள், ஆண்டுகள், ஊர்களின் பெயர்கள் பயன்படுகின்றன. அதற்குமேல் இந்த சம்பவங்கள் சமூகத்தில், அறிவுலகத்தில், இலக்கிய உலகத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? ஒரு சம்பவம் வெறும் தகவலாக சொல்லப்படுவதற்கும், இலக்கியப் படைப்பாக படிப்பதற்குமான வேறுபாடு அளப்பரியது. நாம் எல்லாவற்றையும் வெறும் தகவலாக, புள்ளிவிபரமாக, பட்டியலாக மட்டுமே தந்துகொண்டிருக்கிறோம். புள்ளி விபரத்திற்கு சமூகத்தில் எந்த மதிப்பும் இல்லை. தமிழில் எழுதப்பட்டதெல்லாம் தனிமனித கதைகள், இழப்புகள், வலி, ஒப்பாரி, கண்ணீர் மட்டும்தான். இது தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை சமூகத்தின் கதை அல்ல, வரலாறு அல்ல, கலாச்சார, பண்பாட்டு மரபுகள் அல்ல. அரசியல், பொருளாதார மாற்றங்கள் அல்ல. இலக்கியத்தில், வரலாற்றில் தனிமனித கதைகளைவிட ஒரு சமூகத்தின் கதையும் வரலாறும்தான் முக்கியம்.
வங்காள மொழியில் ‘காட்டில் உரிமை‘ (1995) என்ற நாவலை மகாசுவேதா தேவி எழுதியிருக்கிறார். 1890 காலக்கட்டத்தில் பீர்ஸா முண்டா என்பவர் பழங்குடியின மக்களை திரட்டி, பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு எதிராகவும், உள்ளூர் நிலபிரப்புகளுக்கு எதிராகவும் நடத்திய போராட்டத்தை காட்டில் உரிமை நாவல் பேசுகிறது. உண்மையான வரலாறு நாவலாகியிருக்கிறது. எப்படி? பீர்ஸா முண்டா கலவரம் என்பது உலகம் அறிந்த பெரும் போராட்டம். ஆனால் இன்று அதை படிக்கக்கூடியவர்களுக்கு பீர்ஸா முண்டா கலவரம் என்பது ஒன்றுமே இல்லை. தகவல் மட்டும்தான். ஆனால் பீர்ஸா முண்டா கலவரத்தையே ‘காட்டில் உரிமை‘ என்ற நாவலாக படிக்கும்போது வரலாறு புனைவாகி வேறுவிதமான அனுபவத்தை தருகிறது. நாவலில் வரும் பாத்திரங்கள் நமக்குள்ளும், நிகழ்காலத்திலும் என்றும் நிலைபெற்ற மனிதர்களாகிவிடுகிறார்கள். இதுதான் நாவல் கலையின் வலிமை. வரலாற்றைப் புனைவாக்குவது பெரும் சவால். நாம் எளிய சவாலுக்குக்கூட முகம் கொடுத்ததில்லை.  
‘தெலுங்கு மொழியில் ‘அவன் காட்டை வென்றான்‘ (1996) என்ற நாவலை கேசவரெட்டி – எழுதியிருக்கிறார். பன்றி மேய்ப்பவனுடைய வாழ்க்கைக் கதை. பன்றி என்பது நம் சமூகத்தில் அருவருப்பானது. சாதியோடு இணைத்துப் பார்க்கப்படுவது. ஒரு பன்றி எட்டு குட்டிகளைப் போடுகிறது. அன்று நிலவு தாமதமாக வருகிறது. பன்றியின் உரிமையாளன் ‘நிலவே, இன்று ஏன் தாமதமாக வருகிறாய்? உன்னைவிட அழகான எட்டு நிலாக்கள் இங்கு உள்ளன. அதைப் பார்த்து பொறாமைப் படுவதற்காகவாவது சீக்கிரம் வா.’ என்று அழைக்கிறான். ஒரு பன்றியும் எட்டு குட்டிகளும்தான் நாவலின் மையம். மொத்த நாவலுமே அவைகள்தான். இந்திய நாவல் வரலாற்றில் நிகழ்ந்த பெரும் அதிசயம் இது. இதுவரை இந்திய நாவல்களின் கதாநாயகர்கள்  யார்யார் என்பதை இந்த இடத்தில் நினைவு கொள்ளலாம். மலையாள மொழியில் தகழி சிவசங்கர பிள்ளை எழுதிய ‘தோட்டியின் மகன்‘ போன்ற நாவல்கள் இதுவரை தமிழில் ஏன் உருவாகவில்லை?
கேரள மாநிலத்தின் மேற்குக்கடைக் கோடியிலும், கர்நாடகத்தின் தெற்கு எல்லையை ஒட்டியும் அமைந்த ஊர் – கையூர். 1938-1941 காலக்கட்டத்தில் விவசாயிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கையூரில் 1941- மார்ச் 28ம் தேதி நடைபெற்ற விவசாயிகளின் ஊர்வலத்தில் ஒரு போலீஸ்காரர் இறந்துவிட, நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்படுகின்றனர். கீழ் கோர்ட், மேல் கோர்ட், கருணை மனு என்று எல்லா முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன. கடைசியாக மன்னிக்க முடியாதவர்களாக மடத்தில் அப்பு, சிருகண்டன், குஞ்ஞம்பு நாயர், அபுபக்கர் ஆகிய நான்கு பேரையும் கண்ணனூர் சிறையில் 29.03.1943ல் தூக்கிலிட்டனர். சி.கே.நம்பியார் என்ற சிறுவனுக்கு வயது காரணமாக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இது நடந்த வரலாறு. இந்த வரலாற்றை வைத்து கன்னட மொழியில் நிரஞ்சனா ‘சிரஸ் மரணா’ என்ற நாவலை 1955ல் எழுதி வெளியிட்டார். மலையாள மண்ணில் நடந்த கதையை கன்னட மொழிக்காரர் நாவலாக எழுதுகிறார். 1974ல் மலையாளத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டது. தமிழில் மொழிப்பெயர்த்தவர் மகேஸ்வரன் – தலைப்பு – ‘நினைவுகள் அழிவதில்லை.’ கையூர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுகிற காலக்கட்டதத்தில் நாவலாசிரியர் – நிரஞ்சனா, பள்ளி மாணவராக இருந்தார் என்பது முக்கியமானது. இதுபோன்ற அதிசயங்கள் எதுவும் தமிழில் நிகழவில்லை.
தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில்  ஆயிரக்கணக்கான அரசியல் கொலைகள் நிகழ்ந்துள்ளன. எதுவுமே கதையாகவில்லை. ஆனால் வங்காளம், தெலுங்கு, மலையாள மொழியில் அரசியல் கொலைகள், நக்சலைட் ஒழிப்பு – என்ற பெயரில் செய்யப்பட்ட கொலைகள் எல்லாம் நாவல்களாகியிருக்கின்றன. தன் வரலாற்று கதைகளாகியிருக்கின்றன. வங்காள மொழியில் வந்த - ஸதீநாத் பாதுரி எழுதிய ‘விடியுமா‘ (1980) என்ற நாவல் தீவிரவாதி என்று அரசால் முத்திரை குத்தப்பட்ட ஒரு கைதியின் சிறை வாழ்க்கையைப் பேசுகிறது. கேரளத்தில் 1971ல் சுட்டுக்கொல்லப்பட்ட ‘வர்க்கீஸ்‘ என்ற நக்சலைட் பற்றிய கதையை சொல்கிறது - ராமச்சந்திரன் நாயர் எழுதிய “நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி“ (2007) என்ற சுயசரிதை. 1976ல் பொறியியல் கல்லூரியிலிருந்து அழைத்து செல்லப்பட்ட ‘ராஜன்‘ என்ற திரும்பி வராத தன்னுடைய மகனை தேடி அலைந்த டி.வி. ஈச்சர வாரியர் என்பவரின் சுயசரிதை “ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள்“ (2005) இப்படியான எழுத்துக்கள் ஏன் தமிழில் உருவாகவே இல்லை? விடியுமா நாவலில் வரும் கைதியும், நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியில் வரும்  ‘வர்க்கீசும்‘, ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகளில் வரும் ‘ராஜனும்‘ 1970களில் இந்தியாவில் நடந்த நக்சலைட் தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்ட மனிதர்களுடைய கதை மட்டமல்ல. 1970-1980 காலக்கட்டத்தில் இந்தியாவில் நிலவிய அரசியல் சூழல், மிஸா கொடுமை, அறிவுச் சூழலில், சமூகச்சூழலில் நிகழ்ந்த மாற்றங்கள், சமூகம் சந்தித்த கொடூரங்கள் அனைத்தும் சொல்லப்படுகின்றன. அதற்காகத்தான் இந்த நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன.  மலையாளத்தில் ஒரு ‘பாலியல் தொழிலாளி’ – ‘நளினி ஜமிலா’ – வின் தன் வரலாற்றுக் கதையும், ஒரு திருடனின் கதை – ‘திருடன் மணியண்பிள்ளை கதை’ தன் வரலாற்றுக் கதையும்கூட வந்திருக்கிறது. இலக்கியமாக இருக்கிறது. கேரளாவில் ஆதிவாசிகளின் நிலங்களின் மீது ஆக்கிரமிப்பு செய்யும் அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக. ஒரு ஆதிவாசி பெண் போராடுகிறாள். அந்த போராட்டம் கே.ஜானு வாழ்க்கை வரலாறு (2003) என்ற பெயரில் நூலாக வெளிவருகிறது. தமிழில் அப்படி எதுவுமே நிகழவில்லை. தமிழகச் சூழல் எல்லா சம்பவங்களையும் சுருக்கி தகவல்களாக மட்டுமே மாற்றி வைத்திருக்கிறது. தனிமனித ஊளைதான் தமிழ்நாட்டில் தலித் இலக்கியம்.
1920 வரை தமிழகத்தில் எங்கு கொலை நடந்தாலும், திருட்டு நடந்தாலும், பஞ்சம், வன்முறை, கலவரம் நடந்தாலும் அவற்றை பாட்டாக கட்டி மக்கள் கூடும் இடங்களில், டேப் அடித்துப்பாடப்படும். அதற்கு ‘கொலை சிந்து‘ என்று பெயர். அச்சு வசதி ஏற்பட்ட பிறகு ‘கொலை சிந்து நூல்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டன. பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு கொலை சிந்து பாடுபவர்கள் பெரும் சவாலாக இருந்தனர். வாய்மொழி கதை சொல்லும் மரபிலிருந்து உருவானது கொலைசிந்து. தாழ்த்தப்பட்ட, விளிம்பு நிலை எழுத்தாளர்கள் வளர்தெடுத்திருக்க வேண்டிய வடிவம் அது. தற்காலத்தில் தமிழகத்தில் எவ்வளவு கலவரங்கள், கொலைகள் நடக்கின்றன? அவை எல்லாம் ஏன் இலக்கியமாகவில்லை? பாடல்களாக பாடப்படவில்லை? அப்படிப் பாடப்பட்டிருந்தால் மதுரை வீரன் கதை மாதிரி, நல்லத்தங்காள் கதை மாதிரி, சீவலப்பேரி பாண்டியன் கதை மாதிரி, கண்ணகி முருகேசன் கதையும், திவ்யா இளவரன் கதையும், தாமிரபரணி படுகொலையும் தமிழகம் முழுவதும் அழியாத கலைகளாக மாறியிருக்கும். மதுரை வீரனும், நல்லத்தங்காளும் எப்படி தெய்வமாக மாற்றப்பட்டார்கள்? மற்ற கொலைகள் எல்லாம் ஏன் சிறு தெய்வங்களாக மாற்றப்படவில்லை என்ற கேள்வி முக்கியமானது.
தமிழக எழுத்தாளர்கள் – குறிப்பாக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை எழுத்தாளர்கள் எல்லாம் ‘நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். நாங்கள் எழுதுவது தூய இலக்கியம். அரசியல் அல்ல, அரசியலை பேசுவது உன்னத இலக்கியம் அல்ல‘ என்று சொல்கிறார்களா? அப்படியென்றால் ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், விளிம்புநிலை மக்களின் இலக்கியம் என்று சொல்வது எதை? அரசியலுக்கு அப்பாற்பட்ட இலக்கியமோ, இலக்கியவாதியோ உலகில் உண்டா?
கீழ்வெண்மணி படுகொலையைப்பற்றி ‘குருதிப் புனல்‘ (1977) என்ற நாடகத்தை இந்திரா பார்த்தசாரதி எழுதியிருக்கிறார். 2014ல் மீனா கந்தசாமி கீழ் வெண்மணியைப்பற்றி ஆங்கிலத்தில் Gypsy Goddess என்ற நாவலை எழுதியிருக்கிறார். கீழ்வெண்மணி படுகொலையைப்பற்றி ‘நாங்க மனுசங்கடா‘ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார் இன்குலாப். அதில் “நாங்க எரியும்போது எவன் மசுர புடுங்கப்போனிங்க?‘ என்று ஒரு வரி வரும். அந்த ஒரு வரி தந்த வேகம் – மீனா கந்தசாமியின் மொத்த நாவலும் தரவில்லை. இந்திரா பார்த்தசாரதி, மீனா கந்தசாமி, இன்குலாப் – மூவருமே தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர்கள் அல்ல. தாமிரபரணி படுகொலையைப்பற்றி மாரி செல்வராஜ். ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்‘ (2012) என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார். இவ்வளவுதான் தமிழ் இலக்கியம் பதிவு செய்துள்ள – வரலாற்று நிகழ்வுகள். அரசியல் கொலைகள் பற்றிய பதிவுகள். இந்தப் பதிவுகளின் வழியே அறிய நேர்வது இன்று தமிழ் மொழியில் எழுதப்படுவதெல்லாம் – சமூக நிகழ்வுகள் அல்ல. சமூக வாழ்க்கை அல்ல வரலாறு அல்ல. கற்பனையாக ஏதோ ஒன்றை எழுதுகிறார்கள் என்பதும் அதையும் பிராமணிய மனோபாவத்துடனும் எழுதுகிறார்கள் என்பதும் தெளிவு. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை எழுத்தாளர்கள் சமூக நிகழ்வுகளை, வரலாறுகளை, சமூக வாழ்க்கையை படைப்பாக மாற்றுவதில்லை. ஆனால் தன் வரலாற்றுக் கதைகளை மட்டும் எப்படி ஆர்வத்துடன் எழுதுகிறார்கள்? தாழ்த்தப்பட்டவர்களுடைய தன் வரலாற்றுக் கதைகள் மட்டும் எப்படி வரவேற்கவும், கொண்டாடவும்படுகின்றன?
மன்னர்களுடைய கதைகளை மட்டுமே வரலாறுகளாக, வரலாற்று நாவல்களாக புனையப்பட்டதிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு – சமகால சம்பவங்களையும், வரலாற்று நாவல்களாக எழுத முடியும் என்று ச.பாலமுருகனுடைய சோளகர் தொட்டி (2004) நிரூபித்துள்ளது. சந்தனக் கடத்தல் வீரப்பனை தேடி வந்த கர்நாடக போலீசாரும், அதிரடிப் படையினரும் மலை வாழ் மக்களிடம் எப்படி நடந்து கொண்டனர்? எவ்வளவு வன்முறைகள், எவ்வளவு மனித உரிமை மீறல்கள், வன்புணர்ச்சிகள், கணவன் முன்னிலையிலேயே பலர் மாறிமாறி வன்புணர்ச்சி செய்யப்பட்ட பெண்களின் அலறலும் பெண்ணுறுப்பில் லத்திகளை செருகித் துன்புறுத்தப்பட்ட பெண்களின் அலறலும், மேற்குத் தொடர்ச்சி மலையெங்கும் எதிரொலித்தது. அந்த கதறல்களின் தொகுப்புத்தான் சோளகர் தொட்டி. சோளகர் என்பது மலைவாழ் மக்களின் பெயர் – ஒரு பிரிவு. தொட்டி – என்பது வாழிடத்திற்கான பெயர். ஆவணத்தை, அரசுக் கோப்புகளை வைத்து நாவலாக்க முடியும், கலையாக்க முடியும் என்பதற்கு நல்ல உதாரணம் ‘சோளகர் தொட்டி‘. அரசும், அச்சு, காட்சி ஊடகங்களும், போலீசும், உருவாக்கிக் காட்டிய உலகத்தின் மறுபக்கத்தை வீரப்பன் தொடர்பான, மலை வாழ் மக்களின் துயரத்தைக் காட்டியது சோளகர் தொட்டி. சந்தன கடத்தல் வீரப்பன் தமிழ் நாவலில் முக்கியமான பாத்திரம். அவருடைய மனைவி முத்து லட்சுமியும் ஒரு பாத்திரம். இன்று உயிருடன் உள்ள பல மனிதர்கள் நாவலில் முக்கியமான பாத்திரங்களா இருக்கிறார்கள் என்பது தமிழ் நாவல் உலகில் நிகழ்ந்த பெரிய அதிசயம். ச.பாலமுருகனும் சரி, சந்தன கடத்தல் வீரப்பனும் சரி இடைநிலை சாதியினர் என்பது முக்கியமானது.
கலாச்சாரத்தில், பண்பாட்டில் மட்டுமா இன்று பிராமணிய இந்துமதம் கோலோச்சுகிறது. திருமணம், வீடு கட்டுதல் போன்ற காரியங்களில் மட்டும் நாம் பிராமணியம் ஆகிவிடவில்லை. பிராமணர் அல்லாத இனத்தவர்களுடைய குழந்தைகளுடைய பெயர்களை தொகுத்தால் தெரியும். தமிழகம் எப்படி பிராமணியமாக மாறியிருக்கிறது என்பது. பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதில்கூட பிராமணர்களை விஞ்சி பிராமணியத்தை கடைபிடிக்கிறார்கள் தமிழர்கள்.
பிராமணிய இந்து மதக் கருத்தியல், சடங்குகள், நம்பிக்கைகள், கலாச்சாரப் பண்பாட்டுக் கூறுகளுக்கு எதிரான அத்தனை காரியங்களும், சிந்தனைகளும், கூர் மழுங்கிப்போட்ட நிலை. இன்று பிராமணியம் சகலத்தையும் தன் வயமாக்கிக்கொண்டிருக்கும் காலத்தில் – தமிழ் இலக்கிய உலகில் பிராமண வகுப்பை சேர்ந்த எழுத்தாளர்கள் இல்லை. பிராமண வாழ்க்கை முறை இல்லை, மொழி இல்லை என்று இன்று சொல்ல முடியுமா? நம்முடைய சிந்தனையில் நடத்தையில், மனோபாவத்தில் என்ன இருக்கிறதோ அதுதானே இலக்கியப் படைப்பாக மாறும்? நாம்தான் இரட்டை பிராமணர்களாக இருக்கிறோமே. அப்படி இருக்கும்போது – தமிழில் எழுதப்படுவதெல்லாம் பிராமணிய இந்துமத கோட்பாட்டு, மைய நீரோட்ட இலக்கியங்களாகத்தானே இருக்க முடியும்?

உயிர்மை – பிப்ரவரி 2015

1 கருத்து: