வியாழன், 1 ஜனவரி, 2015

நிஜமான கலைஞன் – பூமணி

நிஜமான கலைஞன் – பூமணி
-    இமையம்.
1966ல் எழுத்து பத்திரிக்கையில் கவிதை எழுத ஆரம்பித்த பூமணி கடந்த நாற்பத்தி எட்டு ஆண்டுகளாக எழுதிகொண்டிருக்கிறார். பிறகு, வெக்கை, நைவேத்யம், வாய்க்கால், வரப்புகள், அஞ்ஞாடி ஆகிய நாவல்களையும், ரீதி, வயிறுகள், நொறுங்கல், நல்ல நாள், பூமணி கதைகள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். அதோடு ‘ஏலேய்’ என்ற தன் வரலாற்றுக் கதை பாணியில் அமைந்த கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார். கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். ‘யானை’ என்ற பெயரில் போலீஸ் மொழிக்கவிதைகளை மொழிப்பெயர்த்திருக்கிறார்.
பூமணியினுடைய எழுத்தின் வலிமைக்காக இதுவரை பல பரிசுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக இலக்கிய சிந்தனை விருது, கீதாஞ்சலி இலக்கியப் பரிசு, விஷ்ணுபுரம் இலக்கிய விருது, எஸ்.ஆர்.எம். அறக்கட்டளை விருது, கலைஞர் பொற்கிழி என்று பல மதிப்பு வாய்ந்த விருதுகளை பெற்றுள்ள பூமணிக்கு 2014க்கான சாகித்ய அகாடமி விருது மத்திய அரசால் அஞ்ஞாடி நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படுகிறபோது பெரும் சர்ச்சை கிளம்பும். இந்த ஆண்டு அவ்வாறான சர்ச்சை எதுவும் நிகழாதது மட்டுமல்ல – பூமணிக்கு விருது கொடுத்ததற்காக பல தரப்பிலிருந்தும் சாகித்ய அகாடமிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இந்த பாராட்டு சாகித்ய அகாடமிக்கு கிடைத்த பாராட்டு என்பதைவிடவும் – பூமணியின் எழுத்திற்கு கிடைத்த பாராட்டு என்று சொல்வது பொருத்தமானது.
பூமணியினுடைய நாவல்கள், சிறுகதைகள் எல்லாமே எதார்த்த வகை கதை சொல்லல் முறையில் எழுதப்பட்டவை. அதே நேரத்தில் புதுப்புது வகையில், வேறு வேறுபட்ட வாழ்வை எழுதியவர். கிராமப்புற கோவிலை சார்ந்து வாழும் ஒரு பிராமண குடும்பத்தின் வீழ்ச்சியை சொன்ன நாவல் நைவேத்யம், பூமணி எப்படி இப்படியொரு நாவலை எழுதலாம் என்ற விவாதம் எழுந்தது. ஒரே வாழ்க்கை, தனக்கு தெரிந்த வாழ்க்கையை மட்டும்தான் ஒரு எழுத்தாளன் எழுத வேண்டுமா? தலைமறைவு வாழ்க்கையின் துயரத்தை – அதுவும் ஒரு சிறுவனுடைய மன உலகு, அலைச்சலின் வழியே விவரித்த நாவல் வெக்கை. நொறுங்கல் – தொகுப்பில் உள்ள பல சிறுகதைகள் 1970-1990 காலக்கட்டத்தில் நகர்ப்புறத்தில் – பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களின் அன்றாட தேவைகளுக்கானப் போராட்டங்களையும், சராசரி தேவைகள் நிறைவேறாதபோது ஏற்படுகிற மனக் கசப்புகளையும் அழகியல் தன்மையோடு சொன்ன கதைகள்.
பூமணியினுடைய நாவல்களிலும், சிறுகதைகளிலும் வருகிற மனிதர்கள் லட்சிய தாகம் கொண்டவர்கள் அல்ல. அதற்காகப் போறாடுகிறவர்களும் அல்ல. சாதாரண வாழ்வை வாழ்கிற எளிய மனிதர்கள். அவர்களைப் போலவே, அவர்களுடைய தேவைகளும் எளியவைகள்தான்.  ‘பிறகு’ நாவலில் வரும் ஆவுடையும், அஞ்ஞாடியில் வரும் ஆண்டியும், கருப்பியும் அத்தகைய மனிதர்களே. பெரிய பெரிய ஆசைகளால் வாழ்வை நரகமாக்கிக்கொள்ளாதவர்கள். சின்னசின்ன உதவிகள், அனுசரிப்புகளின் வழியே மனித உறவுகளை பேணுகிறவர்கள். அதையே பெரிய சொத்தாக மதிப்பவர்கள். இதை அவர்கள் வார்த்தைகளின் வழியே சொல்கிறவர்கள் அல்ல. செயல்பாடுகளின் வழியே நிரூபிக்கிறவர்கள்.
       இருநூறு வருட காலமாற்றத்தை விவரிக்கிறது அஞ்ஞாடி நாவல். குடும்பத்தில், மனித உறவில், சடங்கு முறையில், மனித உறவுகளின் மீதான நம்பிக்கைகளில், வேலையில், வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், தன் விருப்பங்களும், பேராசைகளும், பொருள் சார்ந்த ஈடுபாடும் எப்படி மனிதர்களை பிரிக்கிறது, தனித்தனி தீவுகளாக மாற்றுகிறது என்பதை கோட்பாடாக, வரட்டுத்தத்துவத்தின் மூலம் விளக்காமல் வாழ்க்கை அனுபவத்தின் வழியே, தனி மனித, சமூக உளவியலின் வழியே பூச்சற்ற மொழியின் வழியே விவரிக்கிறது அஞ்ஞாடி.
       தமிழகத்தையே உலுக்கிய சிவகாசி கலவரம், கழுகுமலை கலவரம் எப்படி, யாரால், எதன் பொருட்டு நடத்தப்பட்டது? கலவரத்தினால் சிறுசிறு வேறுபாடுகளுடன், விலகல்களுடன் வாழ்ந்தாலும் பெருமளவில் அந்நியோன்யமாக வாழ்ந்த மனிதர்கள் எப்படி விரோதிகளாக, கொலைக்காரர்களாக மாற்றப்பட்டார்கள்? சமயங்களும், சமயம் சார்ந்த நம்பிக்கைகளும், கடவுள்களும் ஏன் மனிதர்களை ஒன்றிணைந்து வாழவிடாமல் செய்கின்றன என்பதுபோன்ற பல கேள்விகளின் வழியே நாவல் விரிகிறது. பல்வேறு சமூக காரணங்களால் கேராளவிலிருந்து வருகிற நாடார்கள் தமிழகமெங்கும் எப்படி நிலைபெற்றார்கள், குறிப்பாக சிவகாசி பகுதிகளில் அடர்த்தியாக நிலைபெற்றார்கள் என்ற வரலாறு, இடம் பெயர்தலின் துயரம், பனையேறிகள், சாணார்கள் என்று இழிவுப்படுத்திய, தோல் சீலைக்கூட போட அனுமதிக்கப்படாத சமூகம் எப்படி வர்த்தகத்தில் பெரும் ஆற்றலாக தமிழகத்தில் வளர்ந்தார்கள், வளர்ச்சி பெற்றார்கள் என்ற வரலாறு, பிரிட்டிஷ் நிர்வாகம் பெரும் திரளான மக்களை பாதுகாப்பு என்ற பெயரில் மதமாற்றம் செய்தது என்ற வரலாறு, மிஷனரிகளின் பிரச்சாரம், மத மாற்ற நடவடிக்கைகள் அடங்கிய வரலாறு, பாளையக்காரர்களின் குறிப்பாக கட்ட பொம்மு – குறித்த வரலாறுகள் எல்லாம் புள்ளி விபரங்களாக, தகவல்களாக, அறிக்கைகளாக, ஆவணங்களாக இல்லாமல் புனைவாகியிருக்கிறது. கலையாகி இருக்கிறது அஞ்ஞாடி நாவலில். நாம் இதுவரை வரலாற்று நாவல்கள் என்று படித்தது மன்னர்களுடைய வீரதீரங்களை, படையெடுப்புகளை, கொள்ளையிடுதலை, சூரையாடுதலை, வீரம் என்ற பெயரில் மனிதர்களை கொன்று குவித்ததை, படையெடுப்புகளை, கோட்டை கொத்தளங்கள், அரசர்களின் அறிவுக்கூர்மை, அந்தப்புர அழகிகள், தான தருமங்கள், காம விளையாட்டு, அதிகார போட்டி, சதியால் வீழ்ந்த ராஜ்ஜியங்கள்தான். ஆனால் அஞ்ஞாடியில் வருவது பொது சமூக - அண்மைக்கால வாழ்க்கை. எளிய மனிதர்களுடைய வாழ்க்கை கதை. எது வரலாற்று நாவல் என்பதற்கு அஞ்ஞாடியில் பதில் இருக்கிறது.
பூமணியின் எழுத்துலகம் என்பது அவர் வாழ்ந்த சமூகச் சூழல்தான். நிஜமான எழுத்தாளன் தான் வாழ்கிற சூழலில், காலத்தில், அரசியல், பொருளாதார, பண்பாட்டு கலாச்சாரத்தில், நிகழும் மாற்றங்களை பதிவு செய்வான், எதிர்வினையாற்றுவான் என்றால் அந்தக் காரியத்தை பூமணி – ஒரு எழுத்தாளனாக சரியாகவே செய்திருக்கிறார். வட்டாரம் சார்ந்த, பிரதேசம் சார்ந்த, இனம் சார்ந்த அடையாளங்கள், பெருமிதங்கள் நிஜமான படைப்பாளிக்கு தடைகள் என்று தன் எழுத்தின் வழியே நிரூபித்தவர். தன்னுடைய எழுத்தில் சமரசம் செய்துகொள்ளாதவர். நாவல்களிலும், சிறு கதைகளிலும் தன்னுடைய விருப்பத் தேர்வுகளை திணிக்காதவர். கதாபாத்திரங்களில் குறுக்கீடு செய்யாத மாதிரி, பாத்திரங்களின் மொழியிலும் குறுக்கீடு செய்யாதவர் – இதுதான் அவருடைய எழுத்தின் பலம். மற்றொரு பலம் படைப்பின் கச்சிதத்தன்மை. தான் ஒரு நிஜமான கலைஞன் என்று தன்னுடைய எழுத்துக்களின் வழியே நீரூபித்தவர் – பூமணி.

இந்தியா டுடே – 07.01.15


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக