செவ்வாய், 7 மே, 2013

வட்டார வழக்கின் வனப்பு - இமையம்




இருபத்தியோராம் நூற்றாண்டின் இன்றைய காலக்கட்டத்தில் கிராமங்கள், வட்டாரங்கள் என்று சொல்வதற்கு தயக்கமாக இருக்கிறது.  உலகம் ஒரே குடையின்கீழ் என்றாகிவிட்ட நிலையில், தமிழர்களின் மொழி-சினிமாமொழி, தமிழ் சமூகம்-சினிமா சமூகம், தமிழ் பெண்களின் உடை நைட்டி, தமிழர்களின் விளையாட்டு கிரிக்கெட், தமிழர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல் சூப்பர் என்றாகிவிட்ட நிலையில் நாம் வட்டார வனப்புக் குறித்து பேசுகிறோம்.  தொலைக்காட்சி, கைப்பேசி இல்லாத வீடுகள் எந்த கிராமத்தில் இருக்கின்றன.  காட்சி ஊடகங்கள் முற்றிலுமாக கிராமங்களின் மொழியை. அடையாளத்தை அழித்துவிட்டது.  ஊடகங்களின் கபளீகரத்திற்கு தப்பி குற்றுயிரும் கொலை உயிருமாக இருக்கிற வட்டார வழக்குகள் குறித்தே நான் பேசுகிறேன்.
       
        வாய்மொழி – வட்டார இலக்கியம் என்பது பொது சொத்து.  இவர்தான் உருவாக்கினார்.  இந்தக் காலத்தில், இந்த சூழலில் உருவாக்கப்பட்டது என்ற வரலாறு இல்லை.  இவர்தான் பயன்படுத்த வேண்டும்.  இந்த சாதியினர்தான், இந்த வயதிலுள்ளவர்கள்தான் பயன்படுத்த வேண்டும் என்ற வரையறை ஏதும் கிடையாது.  வட்டார – வாய்மொழி இலக்கியம் என்பது – சமுத்திரம்.  அதில் அவரவர் சக்திக்கேற்ப, தேவைக்கேற்ப அள்ளிக்கொள்ளலாம்.  யார் அள்ளினாலும் கைப்பிடி நீரைத்தான் அள்ள முடியும்.  கடலிலிருந்து கைப்பிடி அளவு நீர். ஆத்து நிறைய தண்ணீர்ப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கணும்.  இதுதான் வாய்மொழி – வட்டார வழக்கின் வனப்பு.

இன்று. நம் வீட்டுக்கு ஒருவர் வந்தால்.  ஹாய், ஹலோ, கம் இன், ஹௌ ஆர் யு? என்றுதான் வரவேற்கிறோம்.  விருந்தினர் வெளியே போகும்போது ஒ.கே.’ ‘சி.யூ.’ ‘பாய் என்று சொல்கிறோம்.  இது நாம் இன்று அதிகபட்சமாக பயன்படுத்துகிற வார்த்தைகள்.  அந்த அளவுக்கு நம்மிடம் சொற்கள் பஞ்சமாக இருக்கிறது.  மீறி நான்கு வார்த்தை பேசினால் என்ன கிழவன் (அ) கிழவி மாதிரி பேசிக்கிட்டிருக்கிற என்று கேட்கிறோம்.  இதே கிராமப்புறத்தில் ஒருவர் வீட்டுக்குவந்தால் வாப்பா.  இப்பத்தான் ஒனக்குத் தடம் தெரிஞ்சுதா?  வீட்டுல எல்லாம் எப்பிடி? பொண்டாட்டி புள்ளெ எல்லாம் எப்பிடி? காட்டுல என்னா பயிரு? மழ மாரி எல்லாம் எப்பிடி? வெள்ளாம பரவாயில்லியா? நீ இங்க வந்து எம்மாம் நாளாச்சு? சொந்தம் வாணாம் பந்தம் வாணாமின்னு இருக்கிறியா?  பாடி பரதேசியா இருந்தாலும் என்னா ஏதுன்னு ஒரு வா வாத்த கேக்கக் கூடாதா? வா வாத்தயிலியா பணம் செலவாயிடும்? ஒன்னெ பாத்து எம்மாம் நாளாச்சி? எந்த வழியா வந்த? சோறு தண்ணி குடிச்சியா? இந்த வேவாத வெயில்ல எதுக்குவந்த? வந்த கால்லியே எதுக்கு நிக்குற?  குந்து..... வந்த காலிலே ஓடாத. ஒரு வாய் சோறு தின்னுட்டுதான் போவணும் என்று சொல்லி வார்த்தைகளை வடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
வாய்மொழி – வட்டார வழக்கு எதையும் ரகசியமாக பேணாது.  சிரிப்பு, மகிழ்ச்சி, சந்தோசம், துன்பம், துயரம், ஏக்கம், கவலை, நட்பு, காதல், இழப்பு, சமூக மாற்றம் என்று சகலத்தையும் பழமொழியாக, பாட்டாக, ஒப்பாரியாக, கதையாக அசாத்தியமாக சொல்லிவிடும்.  அப்படி சொல்வதுதான் வட்டார வழக்கின் அழகு.  கிராமப்புற மக்கள் – எந்த வட்டாரமாக இருந்தாலும் பேசுவதை வெறும் பேச்சாக நினைப்பதில்லை.  அப்படி பேசுவதுமில்லை.  ஒரு ஆள் மற்றொரு மனிதரிடம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அவன்கிட்டெ என்னெ பேசிக்கிட்டிருந்த? என்று கேட்க மாட்டார்கள்.  அவன்கிட்டெ என்னா வாத்த வடிச்சிக்கிட்டிருந்த? என்றுதான் கேட்பார்கள்.  கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் பேசுதல் என்பது வெறும் பேச்சல்ல.  வார்த்தைகளை வடித்தல்.  வடித்தல் என்பது – உருவாக்குதல், உருவம் கொடுத்தல், செழுமையாக்குதல், மிளிரச்செய்தல் என்று பொருளாகிறது.  படிக்காத, எழுத்துரு அறியாத, நீச பாஷை பேசுகிற மக்கள் உருவாக்கிய – வடித்த வார்த்தைகள்தான் வாய்மொழி இலக்கியம்.
குறிப்பிட்ட நிலப்பரப்பினுடைய அடையாளமாக, ஒரு இனக்குழுவின் அடையாளமாக, ஒரு மனிதனுடைய அடையாளமாக இருப்பது மொழிதான்.  ஒரு இனக்குழு பிற இனக்குழுவிலிருந்து எந்த வகையில் மேம்பட்டதாக, செழுமையுடையதாக இருந்தது – இருக்கிறது என்பதை அறிவதற்கான கருவியும் – மொழி மட்டும்தான்.  ஒரு இனக்குழு கலாச்சார, பண்பாட்டு கூறுகளில் சிறந்து விளங்கியது – விளங்குகிறது என்பதை குறிப்பிட்ட இனக்குழு உருவாக்கிய இலக்கிய இலக்கண படைப்புகளின் வழியேதான் அறியமுடியும்.  கலாச்சார பண்பாட்டு செயற்பாடுகளில் சிறந்து விளங்கிய இனக்குழுவின் மொழிதான் இலக்கிய ஆக்கங்களிலும் மேலோங்கியதாக இருக்க முடியும்.  அதனால்தான் ஒரு இனக்குழுவை அழிக்க வேண்டுமானால், அக்குழுவினுடைய மொழியை அழிக்க வேண்டும்.  அம்மொழியில் உருவான இலக்கிய ஆக்கங்களை, இலக்கண நூல்களை அழிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.  நாம் நம்மை எதன் வழியாக அறிகிறோம்.  எதன் வழியாக அடையாளப்படுத்திக் கொள்கிறோம் என்றால் மொழியின் வழியாகத்தான்.  நமக்கான அடையாளம் என்பது நம்முடைய மொழிதான்.  எல்லா அடையாளங்களைக்காட்டிலும் முக்கியமான அடையாளம் – மொழி சார்ந்த அடையாளமே.  மொழி என்பது வெறும் ஒலி அல்ல, வெறும் சத்தமல்ல.   வெறும் எழுத்துருக்கள் அல்ல.  ஆயிரக்கணக்கான தலைமுறைகள் வாழ்ந்த வாழ்க்கையின் சாரம். அது நம்முடைய முதாதையர்கள் நமக்கு தந்த அரிய செல்வம் – சொத்து, பொக்கிஷம்.
இலக்கியத்தில் இரண்டு வகை இருக்கிறது.  ஒன்று எழுத்து இலக்கியம்.  மற்றொன்று வாய்மொழி இலக்கியம்.  இங்கு பேசப்படுவது வாய்மொழி இலக்கியம் குறித்து மட்டும்தான்.  மொழி ஒரு வாழ்க்கையை உருவாக்குவதில்லை.  மாறாக வாழ்க்கைதான் ஒரு மொழியை உருவாக்குகிறது.  வாழ்க்கையிலிருந்து உருவான இலக்கியமே – வாய்மொழி இலக்கியம் அல்லது வட்டார இலக்கியம் என்பது.  எழுத்து இலக்கியத்திற்கு வரையறை உண்டு, இலக்கணக் கோட்பாடுகள் உண்டு.  ஆனால் வாய்மொழி /வட்டார இலக்கியத்திற்கு வரையறை ஏதும் கிடையாது என்பதுதான் அதனுடைய சிறப்பு.  ஒரு மொழிக்கு அதிக செழிப்பை, வலிமையை, ஈர்ப்பைத் தருவது மக்களின் பயன்பாட்டால் உருவாவது.  அதேமாதிரி ஒரு மொழியின் வளர்ச்சியில் எழுத்து இலக்கியத்தைவிட – வாய்மொழி – வட்டார இலக்கியங்களே அதிகமான பங்களிப்பை செய்கின்றன.  காரணம் வாய்மொழி – வட்டார இலக்கியம் என்பது மக்கள் பேசும் மொழி மட்டுமல்ல, வாழும் மொழி.  வாழும் மொழிக்குத்தான் வலிமை, உயிர்ப்புத்தன்மை அதிகம்.  அதனால்தான் ஒவ்வொரு சொல்லிலும், வாக்கியத்திலும் படைப்பின் குணமான கற்பனையும், வாழ்வியல் நெறியும் வெளிப்படுகின்றன.  இந்த வெளிப்பாட்டை வைத்துத்தான் கலாச்சார மதிப்பு என்பது மதிப்பிடப்படுகிறது.  பண்பாட்டு உருவாக்கத்தில் வாய்மொழி இலக்கியம்தான் உயிர்நாடி.
ஒரு மொழியின் உச்சப்பட்ச நிஜமான வெளிப்பாடு வாய்மொழி இலக்கியம்.  மக்கள் மொழியை உருவாக்குகிறார்கள்.  மக்கள் உருவாக்கிய மொழிக்கு இலக்கண ஆசிரியர்கள் – மொழியியல் அறிஞர்கள் இலக்கணம் வகுக்கிறார்கள்.  மொழியில் இந்த சொல் இழிவானது – இந்த சொல் உயர்வானது என்று இருக்க முடியுமா? ஆனால் இலக்கண, அறிஞர்கள் இது நல்லவார்த்தை என்றும், இது கெட்ட வார்த்தை என்றும் வரையறுக்கிறார்கள்.  சாப்பிடுகிற வாய் எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி கழிவை வெளியேற்றுகிற ஆசனவாயும் முக்கியமானதுதானே. எது உயர்ந்தது – எது தாழ்ந்தது ஒரு உடம்பில்?  ஆனால் நம்முடைய இலக்கண, அறிஞர்கள், வாய் மட்டும் இருந்தால் போதும் என்கிறார்கள்.  ஆசனவாய் அவசியமில்லை என்கிறார்கள்.  இப்படித்தான் நம்முடைய இலக்கண ஆசிரியர்கள் உழைக்கிற, நிலத்தோடு தொடர்புடைய, உழைப்பையே வாழ்வாதாரமாகக்கொண்ட மக்களுடைய மொழியை நீச பாஷை என்றும் அவர்களுடைய வாய்மொழி இலக்கியத்தை தரம்தாழ்ந்தது – நாட்டுப்புறத்து இலக்கியம், வட்டார இலக்கியம் என்று ஆசனவாய்க்கான தகுதியை வழங்கியுள்ளனர்.  ஒரு சமூகத்தில் அரிதி பெரும்பான்மையாக இருக்கக்கூடிய மக்களுடைய மொழியும், அவர்களால் உருவாக்கப்படும் வாய்மொழி இலக்கியமும் தரம்தாழ்ந்ததாக, இலக்கிய தகுதி இழந்ததாக, கேலி, கிண்டல் செய்வதற்கான இலக்கியமாக எப்படி இருக்க முடியும்?  ஒரு சமூகத்தில் மிகவும் சொற்பமாக இருக்கக்கூடிய மக்களுடைய மொழியும், அதனுடைய இலக்கிய ஆக்கங்கள் மட்டுமே எப்படி மேம்பட்டதாக, உயர்வானதாக இருக்க முடியும்?  அப்படித்தான் இருக்க முடியும் என்று நம்முடைய இலக்கண ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.  ஒரு சொல்லுக்கான குணநல பண்புகளை மனிதர்கள்தான் வகுக்கிறார்கள்.  இது சிறந்தது – இது இழிவானது என்று. உழைப்பையும், நிலத்தையும் தங்களுடைய வாழ்வாதாரமாகக்கொண்ட மக்களுடைய மொழியும் – அவர்களுடைய இலக்கியங்களான வாய்மொழி இலக்கியங்களும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது.  அப்படிப் புறக்கணிக்கப்பட்ட, நீச பாஷை என்று ஒதுக்கித் தள்ளப்பட்ட வெகுமக்களுடைய இலக்கியந்தான் – வாய்மொழி – வட்டார நாட்டார் இலக்கியம் என்பது. சோறு என்ற சொல் எத்தனை நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருக்கிறது?  தற்காலத்தில் அச்சொல் வழக்கொழிந்து போவதோடு – அச்சொல்லை பயன்படுத்துகிறவர்கள்.  மட்டரகமானவர்கள், பட்டிக்காட்டான்கள் என்ற விதமாகப் பார்க்கப்படுகிறது.  இப்படி நாம் இழந்த சொற்கள் எவ்வளவு? சித்தாட, உள்பாவாட, முந்தாணி, சீனி, சவுகாரம், தித்திப்பு. வட்டார, வாய்மொழி சொல்லாடல்கள், பாட்டுக்கள் என்றாலே அது காமம் சார்ந்த  வெளிப்பாடு, கிண்டலுக்குரியது, நகைச்சுவையை ஏற்படுத்தக்கூடியது என்ற அளவில் மட்டுமே நம்முடைய பொது புத்தியில் ஓர் எண்ணம் உருவாகியிருக்கிறது.  அந்த எண்ணத்தை வளர்ப்பது சரிதான் என்பதுபோல் நமது ஊடகங்கள் செயல்படுகின்றன.  வாய்மொழி, வட்டார இலக்கியம் – வாழ்க்கையை – அதன் நிஜத்தை மட்டுமே பேசும்.
மொழியின் அடிப்படையில் குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள் வாழ்ந்த மக்கள் தமிழர்கள் என்று ஒரு பொது அடையாளத்தின் கீழ் வரையறுக்கப்பட்டாலும் – தமிழ்ச் சமூகம் ஒரு பொது அடையாளத்தின் கீழ் அடங்குமா என்பது சந்தேகமே.  தமிழகத்தில் நூற்றுக்கணக்கான சாதிகள் இருக்கின்றன.  ஒவ்வொரு சாதியும் தனக்கேயான சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் என்று கொண்டிருப்பதோடு – அவற்றிற்கே உரிய சொல்லாடல்களையும் உருவாக்கி பயன்படுத்தி வருகின்றன.  பொது சமூகத்தில் ஒரு மொழியையும், தங்கள் குடும்பம் சார்ந்த, சாதி சார்ந்த நிகழ்வுகளில் ஒரு மொழியையும் பயன்படுத்திவருகின்றன.  எனவே அந்தந்த சாதிக்குரிய, சம்பிரதாயங்கள், சடங்குகள் குறித்த பழமொழிகள், பாடல்கள், கதைகள் என்று தனித்த பிரத்யோகமான சொல்லாடல்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன.  சாதிய வழக்குகளோடு குறிப்பிட்ட நிலப்பரப்பிற்கான பொதுவழக்குகளையும், சொல்லாடல்களையும் – அதாவது ஒரு பொது மொழியையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  அவ்வாறு சாதிய வழக்குகளோடு, குறிப்பிட்ட நிலப்பரப்பிற்கான வழக்குகளையும் சேர்த்து வழங்குவதையே நாம் வட்டார வழக்குகள் – அல்லது வட்டார இலக்கியம் – நாட்டார் இலக்கியம் என்று வரையறுக்கலாம்.  சாதிய மொழியும், பொதுமொழியும் கலந்த கலவை.  சுயசாதி சார்ந்த வழக்குகள், கதைகள், பாடல்களோடு, குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள் வாழ்ந்த பல சாதிகள் சேர்ந்து உருவாக்கிய ஒருபொது வழக்குகள், பாடல்கள், கதைகளையும் சேர்த்து – பொதுவாக பயன்படுத்திய மொழியைத்தான் நாம் வட்டார வழக்குகள் என்று அழைக்கிறோம்.  இது போக்குவரத்து வசதி ஏற்படாத,  ஊடகங்களும் அது உருவாக்கிய ஊடக மொழியும் ஆதிக்கம் செலுத்தாத காலத்தில் பேசப்பட்ட வழக்குகள் – வட்டார வழக்குகள்.
பிழைப்புத்தேடியும், தொழில் சார்ந்தும், பல்வேறு காரணங்களாலும் இடம்பெயர்ந்த மக்கள் வட்டார வழக்கு என்கிற பொதுமொழியை வழக்குசொற்களை, பாடல்களை, கதைகளை விட்டுவிட்டு தங்கள் சுயசாதி சார்ந்த, சடங்குகள், சம்பிரதாயங்கள் சார்ந்த வழக்கு சொற்களை, கதைகளை, பாடல்களை மட்டுமே சுமந்து சென்றார்கள் என்பது விநோதம் மட்டுமல்ல.  நம்முடைய சமூகம் – சாதி சார்ந்த சமூகமே என்பதற்கு அடையாளம். 
வட்டார வழக்குகள் என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள் செய்யப்படும் தொழில்கள், மக்களின் வாழ்க்கை சார்ந்து, சடங்குகள், சம்பிரதாயங்கள், உணவு பழக்க வழக்கங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டு, அன்றாட வாழ்வியல் சார்ந்தும், கடந்த தலைமுறையினர் கைமாற்றிவிட்டு சென்ற கதைகள், பாடல்கள், புராண, இதிகாச, ஐதீக கட்டுக்கதைகளின் வழியாகவும் உருவாகிறது.  இது ஒரு சொல்லாக, ஒரு தொடராக, பலவாக்கிய அமைப்புகளாக, சிறுபாடலாக, நெடும்பாடலாக, கதையாகக்கூட இருக்கலாம்.  இது தலைமுறை தலைமுறையாக கைமாற்றப்பட்டு வருகிறது.  நிலைத்த நீடித்த வாய்மொழி இலக்கியம் என்றோ வட்டார இலக்கியம் என்றோ எதுவும் இருக்க முடியாது.  காலத்திற்கேற்றவாறு, சூழலுக்கேற்றவாறு, பிறசாதியோடு பழகுவதால், பிறவட்டார மக்களோடு பழகுவதால் புதுவழக்குகள் ஏற்படுவதும் உண்டு.  பூக்கு என்பது ஆண் உறுப்பை குறிக்கக்கூடிய தெலுங்கு சொல்.  இச்சொல் தமிழில் சரளமாக பயன்படுத்தப்படுகிறது.
வட்டார வழக்கு இதை பேசும் – இதை பேசாது என்று சொல்ல முடியாது. அது எல்லாவற்றையும் பேசும்.  எழுத்து இலக்கியத்திற்கு இல்லாத சுதந்திரம் இது.  ஒரு வாக்கியத்திலியே ஒரு முழுவாழ்வையும் சொல்லிவிட முடியும்.  இதுதான் வட்டார வழக்கின் வனப்பு என்பது.  (உ-ம்)  வாழும் காலம் சங்கட்டம், போவும் காலம் போராட்டம்.  இது எளிமையான வாக்கியம் அல்ல. 
வாய்மொழி – வட்டார இலக்கியம் என்பது வாழ்வியலோடு தொடர்புடைய அனைத்து விசயங்களையும் பேசினாலும் குறிப்பாக பாலியல் தொடர்பாகவும், பெண் உறுப்புகளை முதன்மைப்படுத்தியும், தாழ்த்தப்பட்ட இனத்தவர்களை இழிவுப்படுத்துவதாகவும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.  (உ.ம்) பறச்சி முலயப் பாக்கணும், வண்ணாத்தித் தொடய பாக்கணும் என்று ஒரு பேச்சு இருக்கிறது.  பெண்களை உச்சப்பட்சமாக இழிவுப்படுத்தி பேசுவது வட்டார வழக்கு.  அதேமாதிரி வாய்மொழி வட்டார வழக்கில் சரளமாக புராண, இதிகாச, ஐதீக கதைகளின் கதை மாந்தர்கள் பயன்படுத்தப்படுவதையும் அறியலாம்.
ஒரே சாதியை சார்ந்த மக்கள் தமிழகம் முழுவதும் ஒரே விதமான பேச்சு மொழியை பயன்படுத்துவதில்லை.  ஒரே விதமான சடங்குகளை, சம்பிரதாயங்களை பின்பற்றுவதில்லை.  அந்தந்த நிலப்பரப்பிற்கான சுயசாதி வழக்குகளையே பயன்படுத்திவருகின்றனர்.  இது பிராமணர்களுக்கு பொருந்தாது.  கன்னியாக்குமரியில் இருக்கிற பிராமணரும், சென்னை, டில்லி, அமெரிக்காவில் இருக்கிற பிராமணரும் ஒரே மொழியைத்தான் பயன்படுத்துகின்றனர்.  அது மட்டுமல்ல ஒரு மாநிலத்தின் தலைமை செயலாளராக இருக்கிற பிராமணரும், சுண்டல் விற்கிற பிராமணரும் ஒரே மொழியைத்தான் பயன்படுத்துகின்றனர்.  வட்டார வழக்கு என்பது பிராமணர் அல்லாதோருக்கானது.  அந்த வகையில் வட்டார வழக்கு என்பதே அந்தந்த பகுதிக்குறிய அந்தந்த சாதிக்குறிய வழக்குதான்.  சாதிய வழக்குகள்தான் இருக்கின்றன.  வட்டார வழக்கு என்று எதுவுமில்லை.  அதேமாதிரி சாதிய எழுத்துக்கள் தான் இருக்கின்றன.  வட்டார எழுத்துக்கள் என்று எதுவுமில்லை.  சாதியை குறிப்பிட்டால் நன்றாக இருக்காது என்பதற்காக வட்டாரம் என்று அழைக்கப்படுகிறது.  கி.ராஜநாராயணன் எழுதியது கரிசல் பகுதியில் வாழ்ந்த நாயக்கர்களுடைய வாழ்க்கை.  நாயக்கர்களின் எழுத்து, இலக்கியம் என்று சொன்னால் நன்றாக இருக்காது.  அதனால் அதற்கு பெயர் கரிசல்காட்டு இலக்கியம்.  பெருமாள், முருகன், சண்முகசுந்தரம் போன்றோர் எழுதியது கொங்கு வட்டாரத்தை சார்ந்த கவுண்டர்களின் வாழ்க்கையை. அது கவுண்டர்களின் இலக்கியமல்ல.  அது கொங்குவட்டார இலக்கியம்.  நாஞ்சில்நாடன் எழுதியது நாஞ்சில் வட்டாரத்து பிள்ளைமார்களின் வாழ்க்கையை. அது பிள்ளைமார் இலக்கியமல்ல.  நாஞ்சில் நாட்டு இலக்கியம். பறையர், பள்ளர், சக்கிலியர் எழுதும் இலக்கியத்திற்கு வட்டார அந்தஸ்துகூட தரவில்லை.  அதற்கு பெயர் தலித் இலக்கியம்.  மொழியிலும் பாகுபாடு. இலக்கியத்திலும் பாகுபாடு. உயர்ந்த சாதியினர் பேசினால் அது உயர்நத் மொழி.  தாழ்த்தப்பட்டவர்கள் பேசுவது தாழ்ந்த மொழி.  வட்டார வழக்கு என்பதே நிலத்தை குறிப்பதாக இல்லாமல் சாதியை அடையாளம் காட்டுவதாக இருக்கிறது.  பிராமணர் எழுதுவது மட்டுமே இலக்கியம்.  பிறர் எழுதுவதெல்லாம் வட்டார-சாதி இலக்கியம்.
வட்டார வழக்குகள் சொல்நயம், பொருள்நயம், ஓசைநயம், அடுக்குத்தொடர் என்று அமைந்திருப்பதோடு ஒரு வாக்கியத்திலியே, ஒரு பாடலிலேயே, ஒப்பாரியிலேயே ஒரு மனிதனுடைய, ஒரு குடும்பத்தினுடைய ஒரு சமூகத்தினுடைய முழுக்கதையையும் சொல்லிவிடும்.  இதுதான் வாய்மொழி – வட்டார வழக்கின் ஆகச்சிறந்த சிறப்பு – ஆற்றல்.  வட்டார வழக்குகளை ஒருவரையறைக்குள் நிச்சயமாக கொண்டுவர முடியாது.  அப்படிக்கொண்டு வருவது எளிதான காரியமுமல்ல.  ஆனாலும் சில சௌகரியத்திற்காக சில தலைப்புகளின் வழியே வகைப்படுத்தலாம்.
புதிர் – பழமொழி – ஒப்பாரி – சடங்கு பாடல்கள் –ஏற்றப்பாட்டு, ஏர்ப்பாட்டு, நடவுப்பாட்டு, களையெடுப்புப்பாட்டு, கதிர்அறுப்புப்பாட்டு, போர்ப்பாட்டு (போரடித்தல்), நெல்தூற்றும்பாட்டு, வண்டிக்காரன்பாட்டு, சடங்கு பாட்டு என்று பல பெயர்களில் பாடப்படுகிறது. விளையாடும்போது பாடப்படும் பாடல், கும்மிபாட்டு, வசை, காமம், கேலி, சாவு குறித்த வாய்மொழி – வட்டார வழக்குகள் என்று வகைப்படுத்தலாம்.  தனிமனிதனுடைய விசயங்கள் குறித்து மட்டுமல்ல, சமூக நிகழ்வுகளான கொலை, கொள்ளை, பசி, பஞ்சம், கொள்ளை நோய், சாதிய மோதல்கள், அரசு, அதிகார மாற்றங்கள் குறித்த வழக்குகளும் இடம்பெற்றிருக்கும்.  இவ்வழக்குகளை பெரியவர்கள்தான் பேசுவார்கள் சொல்வார்கள் என்பதில்லை.  சிறுவர்கள்கூட சர்வசாதாரணமாக பயன்படுத்துவார்கள் என்பது தனிச் சிறப்பு.  முன் தயாரிப்புகள், முன் யோசனைகள், திட்டமிடல் ஏதுமின்றி சட்டென்று தன்னியல்பாக பேசுவதுதான் வாய்மொழி வட்டார இலக்கியம்.  ஒருவர் பழிவாங்கிவிட்டார், சதி செய்துவிட்டார்  என்பதை கொடுக்கூரான் புடுக்க அறுத்தாப்ல என்று சொல்வார்கள்.  ஒருவர் செய்த உதவி சரியில்லை, உதவி செய்வது மாதிரி நடித்தார் என்பதற்கு பொண்ணயும் கொடுத்தான் புடுக்கயும் அறுத்தான் என்று சொல்கிறார்கள்.  செருப்பு தொலஞ்சா சனியன் தொலைஞ்ச மாரி என்பது ஒரு வழக்கு.  செருப்பு என்பது தூய்மையானது அல்ல.  தெருப்புழுதியெல்லாம் படிந்த ஒன்று.  ஆகவே அது தொலைந்தால் தன்னை பிடித்திருந்த அனைத்து தொந்தரவுகளும் நீங்கியதுமாதிரி என்ற பொருளில் இந்த வழக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஒப்பாரிபாடல்

கணவன் இறந்துபோய்விட்டான்.  அவனுடைய பிணத்தைப் பார்த்து மனைவி அழுகிறாள்.

எல்லாரும் போடும் தாலி
எனக்கு வந்த மன்னவருக்கோ ஒரு பவுனு முழுதாலி
இந்தக் கன்னிக்குச் செய்த தாலி
அரக்கில்லாப் பொன் தாலி.

என் தாலி செய்தவரு தருமபுரி ஆசாரி
குண்டுரெண்டும் செய்தவரு கும்பகோணம் ஆசாரி – அத
சரிபார்த்துச் சொன்னவரு சாத்தங்குளம் ஆசாரி – அத
எடபோட்டு நிறுத்தவரு எமலோகத்து ஆசாரி.

தங்க எலுமிச்சங்கா தனிநாட்டு ஊரத்தங்கா
தங்காளுக்கு வேணுமின்னு தழ ஒதுக்கிப் பறிக்கையில
எனக்கு வந்த தருமர கருநாகம் தீண்டினதும்
வாழ்வேயில்ல, சாவேயின்னாங்க
அப்பவே தலகுனிஞ்சன் அல்லிப்பொண்ணு நெறம் கொலஞ்சன்

வாழுற பெண்களெல்லாம் வடக்க போயி நில்லுங்கம்மா
எஞ்சோட்டுப் பொண்களெல்லாம் எட்டப்போயி நில்லுங்கம்மா
கன்னிப் பெண்களெல்லாம் காதம் போயி நில்லுங்கம்மா
வையகம் கண்டமட்டும் வளயக்கடய மூடிடுங்க.

சேலம் ஜில்லா கண்டமட்டும் சேலக்கடய சாத்திடுங்க
நான் தாலியறுக்கப் போறன் தங்கக்கொடி வாங்கப்போறன்
தலய முழுகிடுங்க என்ன என் தாய் வீடு அனுப்பிடுங்க.
                                                                ***
நான் அஞ்சி வயசினிலே அரசாணி சுத்திவந்தன்
நான் பத்து வயசினிலே பந்தக்காலச் சுத்திவந்தன்
நான் வயசுல அறுப்பன்னு ஒரு வள்ளுவனும் சொல்லலியே
நான் சிறுசுல அறுப்பன்னு ஒரு ஜோசியனும் சொல்லலியே

அய்யா நீங்க பூசும் திருநீறு எனக்கு வந்து சீமானே
பொய் சொல்லா புண்ணியனே
நீங்க பூசி வெளிய வந்தா பொண்ணு மணியடிக்கும்
நீங்க போகுமிடம் பூ மணக்கும்.

எனக்குக் கால செவந்திப் பூ கா பவுனு பொன்தாலி
எங்க கர்ணன் இருக்க மட்டும் எனக்குக் கத்தி சுழண்டு வரும்
எங்க கர்ணன் பட வென்னுவரும்
எங்க கர்ணன் போன நாள் முதலா எனக்குக் கத்தி சுழலவில்லெ

எங்க கர்ணன் பட வெல்லவில்ல
இந்தக் கன்னி திருமுகத்த களங்கமில்லா சஞ்சலத்த
நீங்க காலயில பாருங்கம்மா.

        எவ்வளவு கட்டுச்செட்டான சொற்கள், வாய்க்காலில் தண்ணீர் ஓடுவதுமாதிரி எப்படி வார்த்தைகள் வந்து விழுகின்றன?  ஒரு பெண் என்பவள் தனி மனுஷி அல்ல. ஒரு சமூகத்தின்-அந்த சமூகத்தின் கலாச்சார பண்பாட்டு பிரதிநிதி என்பதைத்தான் இப்பாடல் சொல்கிறது.

அரசியல்

        கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு அரசியல் செயல்பாடுகள் தெரியாது.  அவர்களுக்கு உலக நடப்புகள் தெரியாது பட்டிக்காட்டான்கள், படிக்காதவர்கள் என்ற நம் பொது புத்தியின் எண்ணத்தை இப்பாடல் பொய் என்று நிரூபிக்கிறது.  அதோடு இப்பாடலில் கூர்மையான, சமூக, அரசியல் அறிவு மட்டுமல்ல விமர்சன குரல் வெளிப்படுவதையும் காணமுடியும்.

காங்கிரஸ் ஆட்சி முறையா நீங்க சொல்வதெல்லாம் சரியா
ஜனவரி பிப்ரவரி குனிஞ்சா நிமிர்ந்தா வரியாம்
காலணா காசுக்கு கற்பூரம் வாங்கி
கோயிலுக்கு போனா திருவிளக்கப்போட வரியாம்,
சட்டப்படி கவர்மண்டு திட்டமுடன் செலவுக்கு
வட்டவட்டமான வரியாம், பார்த்துப் போட்ட வரியாம்,
சர்க்காருக்கு சேர்த்துக் கொடுத்த வரியாம்
நரச்ச தலை கிழவி வறுத்த கடல வித்தா காலணா வரிகொடுக்கணும்
இல்லாட்டா வாரண்டு பசங்களுக்கு சூரண்டு வரி கொடுக்கணும்.

கத்தரிக்காய் கூடைக்காரி நித்தம் விற்பனை செஞ்சா பத்தணா வரிக்கொடுக்கணும்
இல்லாட்டா சட்டப்படி உள்ளே இருக்கணும்
சுதந்திரம் வந்ததின்னு சொல்லாதீங்க நீங்க
சும்மா சும்மா வெறும் வாயை மெல்லாதீங்க
சோத்துப் பஞ்சம் துணிகள் பஞ்சம் நீங்கவே இல்ல
சம்பளம் கேட்டா கோபமா, சும்மா பொறப்பட்டு நாங்க போவமா?
                                                                ***
வெயிலிலே    நாங்க நிக்க – சாமி
வெள்ளாமய    நீங்க பாக்க
கானலிலே     நாங்க நிக்க – சாமி
கதிருகள       நீங்க பாக்க
பாலும் பழமும் உங்களுக்கு – சாமி
பழையநீராரம் எங்களுக்கு
இட்லி காபி உங்களுக்கு – சாமி
இருத்த நீராரம் எங்களுக்கு.

        இப்பாடலை பாடியவர்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள் அல்ல.  தீவிரவாத அமைப்புகளைச் சார்ந்தவர்கள் அல்ல.  அறிவுஜீவிகளும் அல்ல.  புரட்சிப் பேசியவர்கள் அல்ல.  வ்வுறு நெறஞ்சா சோத்து சட்டிய மூடமறந்த சாதியைச் சேர்ந்தவர்கள் பாடியது.  நீராரம் கீராரம் குடிக்கிறியா? என்பது போய் டீ-காபி குடிக்கிறியா? டிபன்-காபி சாப்பிட்டியா? என்பது எப்போது வந்தது.

தகாத உறவு

சின்ன மச்சான் பெரிய மச்சான்
சீப்பு வாங்கி எனக்கு வச்சான்
அண்ட ஊட்டு பெரியப்பன் மவன் . என்
அடி  வவுத்த பெருக்க வச்சான்.

ஒரு பெண்ணினுடைய அழகு, மதிப்பு என்பது நிரந்தரமானது அல்ல.  ஒரு குழந்தை பிறக்கும்வரைதான் என்பதை இப்பாடல் நிரூபிக்கிறது.  பழைய காலத்தில்தான் அப்படி இருந்த்து.  இப்போது அப்படி இல்லை.  படித்தவர்களாகிவிட்டோம் பண்பாட்டில் நாகரீகத்தில் உயர்ந்துவிட்டோம் என்று சொல்ல முடியுமா?   

பச்ச பொடவ எடுத்தான்
எனக்கு பங்குனி மாசம் புள்ளெயத் தந்தான்
புள்ளெப் பெத்த நாள்முதலா என்னெ
போகச் சொன்னான் அப்பன் வூடு

        தமிழ் சமூகம் அதற்கான மொத்த ஒழுக்கத்தையும் பெண்களிடமே காலங்காலமாக எதிர்ப்பார்க்கிறது.  சாதிய ஒழுக்கம், மத ஒழுக்கம், சடங்கு, சம்பிரதாய ஒழுக்கம், கலாச்சார பண்பாட்டு ஒழுக்கம் என்பதெல்லாம் பெண்களுக்காக மட்டுமே.  சமூகம் விதித்த ஒழுக்கத்தை சிறு அளவு மீறினால் கூட என்னாகும் என்பதை இப்பாடல் விவரிக்கிறது.

பொட்டச்சிக்கி எத்தன வேலி
அத்தனயும் தாண்டுனாப் பாவி
மானங்கெட்டவன் உடுத்துறது காவி
எப்பிடி நான் வச்சியிருப்பன் ஆவி?

                ஆண் குழந்தை வேண்டும் என்று ஒரு பெண் விரும்புகிறாள்.  அதற்காக எல்லாக் கடவுளிடமும் வேண்டுகிறாள்.   எப்போதும் யாருடைய விருப்பத்தையும் நிறைவேற்றாத நம்முடைய கடவுள்கள்  எளிய இப்பெண்ணின் வேண்டுகோளையும் நிறைவேற்றவில்லை.  பிறப்பது பெண் குழந்தை. நம்முடைய சமூகத்தில் ஒரு பெண் எப்படியான சவால்களை சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டுமென்று இப்பாடல் விவரிக்கிறது.  இப்பாடலை பாடுகிறவர்கள், பாடியவர்கள் பெண்ணியவாதிகள் அல்ல. நவீன பெண்கவிகளும் அல்ல.

செஞ்சி மலயினிலே செல்லியம்மன் கோயிலம்மா
சீமான் பொறப்பான்னு சிவ பூச செய்தனம்மா
சீமான் பொறக்கலியே சிறுமி பொறந்தாளம்மா - அந்த
சீத பட்ட துன்பமெல்லாம் இந்த சிறுமி படப்போறாளம்மா.
.......
காடு மலயினிலே காளியம்மன் கோயிலம்மா
கர்ணன் பொறப்பான்னு கடும்பூச செய்தனம்மா
கர்ணன் பொறக்கலியே கள்ளி பொறந்தாளம்மா - அந்த
கர்ணன் பட்டதுன்பமெல்லாம் இந்த கள்ளி படப்போறாளம்மா

உலகில் எந்த சமூகத்திற்கும் இல்லாத பண்பாடாக, நாகரீகமாக, அறச்செயலாக இந்திய-தமிழ்ச் சமூகம் பின்பற்றுவதும் போற்றுவதும் எது என்றால் மறுபிறவி குறித்த நம்பிக்கைதான்.  அடுத்தடுத்த பிறவிகளில் நீ மனிதனாக பிறக்க வேண்டுமானால் இப்பிறவியில் நல்லது மட்டுமே செய் என்று போதிக்கிற பண்பு.  நம்முடைய நீதி நெறி இலக்கியங்களிலும், புராண, இதிகாச, ஐதீக கதைகளிலும் சொல்வதெல்லாம் இதுதான்.  நல்லதையே செய்.  நல்லதையே நினை.  மீறினால், நாயாக, நரியாக, பூனையாக, பாம்பாக பிறப்பாய் என்று. வாய்மொழி இலக்கியமும் இவ்வகையான போதனைகளிலிருந்து தப்பியது இல்லை என்பதற்கு இப்பாடல் ஒரு உதாரணம்.  

உன்னையே நீயெண்ணிப்பாரு – இந்த
உலகத்தில எது சொந்தம் யோசித்துக்கூறு
பாழும்பணத்தை நம்பாதே, நாளை
பாடையில் போகும்முன் கூட வராதே
பாழும் பணத்தை நம்பாதே.

தாயும் தகப்பனும், இரவல்
தாலி கட்டிக்கொண்ட பெண்டிரும், இரவல்
இடும் பிச்சைதனை மறவாதே, நல்ல
இறுமாப்புக் கொண்டவன்போல் திரியாதே.

கஞ்சிக்குக் கலம் கொண்டாட்டம்
கடன்கார மூளிக்குக் கோபம் கொண்டாட்டம்
இஞ்சிக்கு ஏலம் கொண்டாட்டம்
எலுமிச்சைப் பழத்துக்குப் புளிப்புக்கொண்டாட்டம்.

        வாய்மொழி இலக்கியம் வாழ்ந்த வாழ்வின் கசப்புகளை, இழப்புகளை, சந்தித்தக் கொடூரங்களை சொற்களாக்குவது.  ஒரு பெண் இச்சமூகத்தில் வாழ்வது எளிதான காரியமல்ல.  தீக்குள் ஒரு புழு அல்லது பூச்சி வாழ்வதை போன்றதுதான்.  நம்சமூகம் இயற்கையாகவே பெண் குழந்தை என்றால் கருவிலேயே கலைக்கிற செயலை ஒரு பண்பாட்டு செயலாக காலந்தோறும் செய்துவருகிறது.  ஆனால் இப்பாடலில் ஒரு விநோதம் ஒரு இளம்பெண் தன்னை ஏன் கருவிலேயே கலைக்கவில்லை என்று கவலைப்பட்டு அழுகிறாள். 

வெள்ளிக் கிழமயில என்னெப் பெத்தியே மாதாவே
ஒன் வெள்ளி வயித்திலியும் நான் கருவா தரிச்சதும்
பச்ச கற்பூரமெல்லாம் தீஞ்சதும்
அன்னிக்கி இந்தக் கருவ கலச்சியிருந்தா
இன்னிக்கி எனக்கு இந்தக் கலகம் வந்து நேராது
அந்தக்கருவ சிசுவாக்கி இந்தப் பொல்லாத சீமையிலெ
என்னெக் களங்கப்பட வச்சியம்மா......

வறுமை

அக்காலம் கண்டு பருத்தி வௌஞ்சா
அப்பா எனக்கொரு சித்தாடன்னாளாம் மவ
வேலியில மாட்டி கிழிக்கவான்னு
அப்பவே அடிச்சானாம் அப்பங்காரன்..

அறக்க பறக்க சம்பாரிச்சாலும் படுக்க பாய் இல்லெ என்று வாழ்ந்த மக்கள் வாழ்வு குறித்து என்ன மன நிலையைக் கொண்டிருந்தார்கள்? வாழ்வின் வெறுமையை, நிலையாமையை எவ்விதமாக தங்களுடைய வாழ்வின் வழியாகவே அறிந்திருந்தார்கள் என்பதற்கு இந்த வாக்கியம் ஒரு உதாரணம்.  இவர்கள் தத்துவ மேதைகளோ, ரிஷிகளோ, ஞானிகளோ அல்லர்.  மிகவும் எளிய மனிதர்கள்.  அன்றாடம் காய்ச்சிகள்.  வாளியும் ஓட்டெ, வாளி கயிறும் பிஞ்ச கயிறு, கிணறும் துந்துபோனது-தண்ணீ கொண்டு வாடின்னானாம்.

மாசிவரைக்கும் மத்தளம்கொட்டு
சித்தர பொறந்தா குப்புற முட்டு
                                                ***
அலுத்து சலிச்சி அக்காக்காரி
தங்கச்சி வூட்டுக்கு போனாளாம்
தங்கச்சிக்காரி தூக்கி தம் புருசன்கிட்ட போட்டாளாம்.

தாலாட்டு

தரயில நடந்தா தண்டுக்கால் நோகுமின்னு
பூமியில நடந்தா பொன்னுக்கால் நோகுமின்னு

தோளிலே யானக்கட்டி
தொடை மேலே நடைபழகி
வளர்த்தேனே என் மகனே.


சொலவடைகள்

வெறும் கழுதக்கி வேசம்கட்டி ஆடுன கதெ
                                                ***
பொண்டாட்டின்னா புழுக்கச்சி – வப்பாட்டின்னா கொலசாமி தான்
                                                ***
வட்டுக்கருப்பட்டியில ஈ மொச்சாபல.
                                                ***
மூங்கில் காட்டுக்குள்ளார ரகசியம் பேசினாமாரி.
                                                ***
பானத் தண்ணியில கல்ல விட்டு எரிஞ்ச மாரி.
                                                ***
நல்ல புள்ள நாணயந்தான் ஆத்தூரு வெங்காயந்தான்.
                                                ***
ஒண்ணு விதைக்க மூணு முளைக்க.
                                                ***
பல்லிக்கு பயந்து பாம்பு வாயில விழுந்தாபுல.
                                                ***
கவுரு இல்லாத பம்பரம் தான் கமலை இல்லாத கிணறுதான்.
                                                ***
வாய்க்காலுக்கும் வரப்புக்கும் வித்தியாசம் தெரியாத மாதிரிதான்.
                                                ***
உள்ளங்கையும் புறங்கையும் மாரி.

பொது

கிழிஞ்ச சேலயும், புழுங்கரிசி தின்ன வாயும் சும்மா இருக்காது.
                                                                ***
மாமியா செத்த ஆறாம் மாசம் மருமகளுக்கு கண்ணுல தண்ணீ வந்துச்சாம்.
                                                                ***

அடுப்புல வச்ச கொள்ளி எரிஞ்சித்தான ஆவணும்.
                                                                ***
இன்னியப் பொழுது எமப் பொழுது – நாளயப் பொழுது நல்லப் பொழுது.
                                                                ***
மழக் காளானா மனசுல ஆச மொளைக்க.

துயரம்

காரா பூந்தியும் காரமில்லெ
கட்டுன புருசனும் சாரமில்லெ
ஒதச்சி வுட்டான சந்துக்குள்ளெ
ஓடி வுழுந்தன் பொந்துக்குள்ளெ.
                                                ***
செம்போட சீரோட யாரு வராங்க
... அப்பா வராங்க ரோட்டுமேல
அப்பாவுக்கு வேணுமின்னு துப்பட்டி எடுத்து வச்சன்
அப்பாவும் வரக்காணும் துப்பட்டியும் போவக்காணும்.

சோம்பேறி

என்னெயும் தூக்கிவிட்டு
என் கோவணத்தயும் கட்டிவிட்டா
எட்டாள் வேல செய்வன்னு சொன்னானாம்.
                                                                ***
அல ஓஞ்சபின்னால கடல்ல குளிக்கிறன் பாருன்னானாம்.
                                                                ***
கல்யாண வீட்டுல பந்தலகட்டி அழுதவன்
சொந்த வீட்டுல சும்மா இருப்பானா?
                                                                ***
மேயப் போற மாடு கொம்புல புல்லக்கட்டிக்கிட்டுப் போச்சாம்.
                                                                ***
ஆத்த முட்டாதவன் சித்தப்பன் ஊட்டுல பொண்ணு கட்டுனானாம்.
                                                                ***
ஆத்த மாட்டாதவனுக்கு வாக்கப்பட்டு
ஆயாளும் மவளும் தூக்கம் கெட்டா.
                                                                ***
பசியாது இருக்க மருந்து தரன்
பழயது இருந்தா போடுதாயேன்னானாம்.

விடுகதை

ஒரு நெல்குத்தி வீடெல்லாம் உமி – அது என்ன? - விளக்கு
இலை இல்லாத மரம் கலகல என்று ஆடுது – அது என்ன? - கொடி மரம்

என்னுத ரெண்டயும் புடிச்சிக்க
இழுத்து இழுத்து அடிச்சிக்க
தண்ணிய வுட்டு எடுத்துக்க
கழுவிக்கிட்டுப் போயிக்க – அது என்ன? - அம்மி

ஆல மரத்துக்குக் கீழ பாயப்போட்டு
கன்னி பொண்ணோட கையப்புடிச்சிக்கிட்டு
பையன் பொறு பொறுங்கிறான்
குட்டி வுடு வுடுங்கிறா – அது என்னா? - வளையல்

எண்ணெயிலியே பொறந்து
எண்ணெயிலியே வளந்த
எண்ணெ செக்கான் மவளே
எள்ளுக்கும் சின்ன எல – என்னா எலெ? - விடத்தரம் இலை

அணில் ஏறாத மரம் – என்ன மரம்? - சீவாங்குச்சி

கண்டுக்காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் – அது என்ன மரம்? - அத்தி மரம்

தரையைப்பாத்து பூ பூக்கும் – வானத்தப்பாத்து காய் காய்க்கும் அது என்ன செடி? - எள் செடி

மாடுகட்டியிருக்கு மூக்கணாங் கயிறு மேயுது அது என்ன? - பூசணிக்கொடி

பாத்தா பசப்புக்காரி
கடிச்சா கசப்புக்காரி – அது என்ன? - பாகற்காய்

வெளியே வெள்ளக்கட்டி
உள்ளே தங்கக்கட்டி – அது என்ன? - முட்டை
எலும்பு இல்லாத மனிதன்
கிளை இல்லாத மரத்தில் ஏறுகிறான் – அது என்ன? - பேன்

பாதாளத்துலயிருந்து வந்தவரு யாரு
பம்பரம்போல சொயண்டவரு யாரு
அக்கினியில எரிஞ்சவரு யாரு
அவங்க அவங்க வூட்டுல அமந்தவரு யாரு
நல்லதும் பொல்லதும் உண்டவரு யாரு?
நாயிலயும் கேடாயி தெருவுல கிடந்தவரு யாரு?  - மண்பானை

காமம்
        ஆண் பெண் சேர்க்கையை பேச்சு பழக்கம் ஆயிட்டாங்க, பொண்ணும் மாப்ளயும் இன்னும் புழங்கல என்றுதான் இன்றும் கிராமத்து மனிதர்கள் பேசுகிறார்கள்.  ஆனால் நாம் வெட்கமின்றி ப்ஸ்ட் நைட் முடிஞ்சிடுச்சா என்று கேட்கிறோம்.  நம்முடைய சொற்களில் எந்த நளினமும், ஒளிவு மறைவும் இல்லை.

தம்பிக்கு தடி கொஞ்சம் நீளம்
தாயோலி மவளுக்கு குழி கொஞ்சம் ஆழம்.
                                                ***
புண்ணாக்கும் புளியம் பிஞ்சும்
மல்லாக்கொட்டயும் தின்னவருக்கு
கண்மணி எங்க அக்காகிட்டெ
கணக்கான சாப்பாடாச்சு..
                                                ***
ஆதி ஒறவு அடியோட போனாலும்
கூதி ஒறவு கொழுந்துவிட்டு எரியும்
                                                ***
மாம்பழத்து வண்டு
மார்ல ரெண்டு குண்டு – அது
தொங்குவத கண்டு
துடிக்குதடி தண்டு.
                                                ***
ரெண்டுகால் சந்துல
வச்சடிச்சான் பொந்துல.

விளையாட்டு

        கிராமத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கு முன் இரண்டு அணிகளாக பிரிவர்.  இதற்கு உத்தி பிரித்தல் என்று பெயர்.  இரண்டு அணி தலைவர்களும் தன்னுடைய அணிக்கு தேவையான பையன்களை தேர்ந்தெடுக்கும் போது வானத்த வில்லா வளைக்கிறவன் வேணுமா? கடல கயிறா திரிக்கிறவன் வேணுமா? என்று கேட்பார்கள்.  ஒருவன் எனக்கு வானத்த வில்லா வளைக்கிறவன் வேணும் என்பான்.  மற்றவன் எனக்கு கடல கயிறா திரிக்கிறவன் வேணும் என்பான்.  இதையே வேறுவிதமாகவும் கேட்பார்கள்.  மானத்த தாண்டி குதிச்ச மஞ்ச குதிர வேணுமா? கடல தாண்டி குதிச்ச கருப்பு குதிர வேணுமா? எப்படியான கற்பனை இது? கிராமங்களில் குழந்தைகள் இப்படித்தான் வளர்கிறார்கள்.  வாழ்க்கையின் போக்கில். விளையாட்டில் நாம் ஒன், டு, திரி என்று சொல்கிறோமே அதை கிராமத்தில் ஆரம்பம், ஆயத்தம், ஓட்டம் என்றுதான் சொல்வார்கள்.,
கிராமப்புறங்களில் இன்றும் குழந்தைகள் தங்கள் கற்பனைகளுக்கேற்றவாறு, அந்தந்த சூழல்களுக்கேற்றவாறு விளையாட்டுக்களை உருவாக்கி – விளையாடி வருகின்றனர்.  அதோடு வழமையாக விளையாடப்பட்டு வரும் விளையாட்டுகளையும் விளையாடுவர்.  தற்போது குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகள்:
        ஆபியம், சடுகுடு, ஓரி, கார்த்திகை சுற்றுதல், ஏழாங்காய், திம்பி, அம்புலி, சில்லி, கல்பாரி, ஆலா சோலா, குலைகுலையா முந்திரிக்காய், கண்ணாமூச்சி, அம்பால், பம்பரம், கோட்டிப்புள், சரணா, ஒரு குடம் தண்ணீ ஊற்றி, கிச்சு கிச்சு தாம்பாளம், பல்லாங்குழி, குண்டு, பந்து, காயே கடுப்பங்காய், சங்கிலி புங்கிலி, நொண்டி ஆட்டம், காற்றாடி சுற்றுதல்.

காயே கடுப்பங்கா
கஞ்சி வார்த்த நெல்லிக்கா
உப்பே புளியங்கா
ஊற வச்ச நெல்லிக்கா
கள்ளன் வரான் கதவ சாத்து
வெள்ளன வரன் வௌக்கேத்து.
                                                ***
நொண்டி நொடிச்சிக்க
வெல்லம் தரன் கடிச்சிக்க.

தெருக்கூத்துப் பாடல்

                புராண, இதிகாச பாத்திரங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தவர்கள் தெருக்கூத்து கலைஞர்கள். அதோடு நிகழ்கால சமூகம் குறித்த கூர்மையான விமர்சனத்தையும் அவர்கள் வைப்பதற்கு தவறியதே இல்லை.
                பாரதப் போரில் 17 ஆம் நாள் யுத்தத்திற்கு தலைமையேற்று போரிட செல்கிற கர்ணன் தன் மனைவியான பொன்னருவியிடம் விடைபெற்று போவதற்காக வரும்போது கர்ணனும் அவனுடைய மனைவியும் பாடுவதாக அமைந்தது இந்தப் பாடல்

கர்ணன் :        பதினேழாம் நாள் யுத்தமதில் பார்த்தீபன்தனை எதிர்க்க
                விதிவந்து நேர்ந்ததென்று விடைபெற்றுப்போக வந்தேன்
                சதி செய்ய வேண்டாம் கண்ணே இப்போது சடுதியில் எழுந்து வாராய்

பொன்னருவி :  ஆவின்பால் கறந்து விற்று அதில் முகம் பார்த்தாய் நன்றாய்
                மேவிய முகத்தின் ரூபம் விளங்கிட தெரியுமோதான்
                வாவியும் இரண்டும் ஒன்றாக இந்த வையகமும் மூழ்கிட்டாலும்
                தீவினை வந்திட்டாலும் குலம் தெரியாமல் பேசலாமோ

கர்ணன் :       கன்னியில் குந்தி தேவி கவனித்தாள் பரிதி தன்னை
                வண்ணமாய் கதிரோன் வந்து வனப்பமாய் அயர்ந்த பின்பு
                மன்னன் நான் பாரில் விழ மாதாவும் பங்கப்பட்டு
                என்னையும் பேழையில் வைத்து ஏகிடச்செய்தாள் ஆற்றில்

                போர் செய்து பாண்டவரை வென்று நானும் புகழுடனே வருவனோ தெரியாது-அந்த
                தீரமுள்ள காண்டீபனின் கணையால் மாண்டு
                சிதறியே பார்தனிலே வீழ்ந்தேனானால்
                சூரசேனன் ஈன்றெடுத்த குந்தி தேவி
                மாரடித்து மடிமேலே விழுவாள் அப்போ
        மதிகுலத்தான் என்ற பெயர் தெரியும் பெண்ணே.

நடவுப்பாட்டு

நாலுகாணி வயலுக்குள்ள
நாத்து நடும் நங்கமாரே
நாத்த நல்லா நெருக்கிப் போடு
நானும் ரொம்ப ஏழப் பாரு.

கண்ணழக காண நானும்
களத்து மேட்டுல காத்திருந்தன்
கண்ணழக பாத்த நாளா
காணலியே கண்ணுறக்கம்

நடவ நல்லா கூட்டிப் போடு
நானும் இங்க ஏழப் பாரு

நெத்தி வங்கி மினுமினுக்க
கொலுசுமணி ஜலஜலங்க – உன்
கொலுசு சத்தம் கேட்டுப்புட்டு
தூக்கம் கெட்டேன் அஞ்சு மாசம்

நாத்த நல்லா ஒட்டிப்போடு
நானும் ரொம்ப ஏழப்பாரு.

பச்சரிசி பல்லழகா நித்தம் ஒரு பொட்டழகா
மையிடும் கண்ணழகா கண்ணையா
மறந்தேனடா என் சனத்த செல்லையா
மறந்தாலும் மறவதில்ல மருந்து தின்னா தீர்வதில்ல
உன்னால நானும் கெட்டேன் கண்ணையா
ஓடிப்போவம் ரெங்கோனுக்கு சொல்லையா.
                                                                ***

ஆன கட்டி சேர் கலக்கி ஏலேலோ சேர்கலக்கி
அழகுச் சம்பா நாத்துவிட்டு ஏலேலோ நாத்துவிட்டு
கூலி ஆளக் கூப்புடுங்க ஏலேலோ கூப்புடுங்க
கொத்துகொத்தா நாத்துவிட்டு ஏலேலோ நாத்துவிட்டு
கொடுக்கிறது முக்காதுட்டு ஏலேலோ முக்காதுட்டு

கும்மிப்பாடல்

        நம்முடைய சமூகம் சாதிய சமூகம்.  எந்தநிலையிலும் தன்னுடைய சாதிய அடையாளத்தை மட்டும் மனிதர்கள் இழப்பதில்லை.  இது தமிழ் சமூகத்தின் அத்தனை கலாச்சார பண்பாட்டு கூறுகளிலும் வெளிப்படுவதை இப்பாடல் உணர்த்துகிறது.

ஏ பள்ளத்திலே ஏலேலோ பயிரழகாம்
ஏ பற செருக்கி ஏலேலோ நடையழகாம்
ஏ கொளத்துல ஏலேலோ கொக்கழகாம்
ஏ குறத்தியோட ஏலேலோ முலையழகாம்

பர்த்தாவும் மாண்டதினால் ஒரு
பறச்சியப்போல நின்றழுதேன்.

மருத்துவம்
வேலம்பட்டெ வலியப்போக்கும் ஆலம்பட்டெ பித்தத்த நீக்கும்.
எட்டு மிளகு இருந்தா எதிரி வீட்டுலயும் சாப்புடலாம்.

ஊர்ப்பெயர்களில் இருக்கும் அழகு
வாழ வந்தான், வெண்கரும்பூர், பூந்துறை, கார்கூடல், கல்விராய நல்லூர், நாட்டுச் சாலை, காணாதுகண்டான், நறுமணம், மட்டிகை, பாலூர் ஊர்ப்பெயர்கள் எல்லாமே காரண பெயர்கள்தான்.  காரணம் இல்லாமல் எந்த சொல்லும் இல்லை.  ஒரு பெண்ணின் நிறம் குறித்து கூறும் போது. தாழம்பூ நிறம் என்று சொல்கிறார்கள்.  நம்மைப்போல் வெறுமனே கருப்பு சிவப்பு என்று சொல்வதில்லை.  கிராமத்தில் மக்கள் பேசுகிற ஒவ்வொரு பேச்சிலும் பொருட் செறிவு, மொழிச்செறிவு மட்டுமல்ல அறிவுச் செறிவு வெளிப்படுவதையும் அறியலாம்.
        துணியைப் பற்றி சொல்லும்போது தும்பப்பூவாட்டம்.
        அழகிய பெண்ணைப்பற்றிக்கூறும்போது வஞ்சிகொடியாட்டம்
        கைகால்களைப்பற்றிக் கூறும்போது வாழபட்டயாட்டம்
                இட்லி எப்பிடி இருக்கிறது? பூப்போல இருக்கு
                நிறம் எப்பிடி இருக்கிறது? தேகமெல்லாம் தங்க நிறம்

காதல்
காதலன் அழைத்த இடத்திற்கு வரமுடியாமல் போனதற்கான காரியங்களை காதலி சொல்கிறாள்.

வெட்டியதால் சாகவில்லை, வெட்டாதிருந்திருந்தால் செத்திருப்பேன்
செத்ததால் சாகவில்லை, சாகாதிருந்திருந்தால் செத்திருப்பேன்
வந்ததால் வரவில்லை, வராதிருந்திருந்தால் வந்திருப்பேன்

ஏறுறது கோயமுத்தூரு ஏலேலோ சாமி
எறங்குறது பாலக்காடு ஏலேலோ சாமி
பாலக்காடு போற மச்சா ஏலேலோ சாமி
பாதசரொ வாங்கி வாங்கோ ஏலேலோ சாமி.

உறவு
அத்த மகனிருக்க எனக்கு
அயல் நாட்டாரு வந்ததென்ன?
மாமன் மகனிருக்க எனக்கு
மறுநாட்டாரு வந்ததென்ன?


சாமிபாட்டு

ஆரு கடன் நின்னாலும் மாரி கடன் ஆவாது
மாரி கடன் தீத்தவருக்கு மனக்கவல தீருமம்மா.

நாம் தொலைத்தது சொற்கள் அல்ல.  மரபு, பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம், எல்லாவற்றுக்கும் மேலாக மொழி அறிவு.  அறிவுபகிர்வை. வட்டார வழக்குகள் மட்டும் அழியவில்லை.  கிராமத்து மனிதர்களில் தற்சார்பு வாழ்க்கை அழிகிறது என்று பொருள்.


        இது மக்கள் தங்களுடைய மூளையிலிருந்து உருவாக்கிய மொழி அல்ல.  தங்களுடைய வாழ்வியல் அனுபவங்களிலிருந்து அன்றாட செயல்பாடுகளிலிருந்து – மனதிலிருந்து உருவானது – உருவாவது – வாய்மொழி இலக்கியம்.  இது மன்னர்களாலும், பேரரசுகளாலும் உருவாக்கப்பட்ட மொழி அல்ல.  ஏழை எளிய சாமான்ய பாமர மக்களால் உருவாக்கப்பட்ட, பேசப்பட்ட, பேசப்படுகிற மொழி.  இது பழைய காலத்தில் நீசர்களின், சண்டாளர்களின் மொழி, கொச்சை மொழி, நாலாம் சாதிகளின் மொழி என்று ஒதுக்கப்பட்டது.  இன்று அது ஊடகங்களில் கிண்டல், கேலி செய்யப் பயன்படுவதாக இருக்கிறது.  ஆனாலும் இதுதான் தமிழ்ச் சமூகத்தின் அடித்தட்டு மக்களுடைய மொழி.  அதாவது வெகுசன மக்களின் எண்ணங்கள், உணர்வுகள், வெகுசன இலக்கியமாக இருக்கிற வாய்மொழி இலக்கியத்திற்கு பெரிய எழுத்து புத்தகங்கள், குஜிலி நூல்கள், காலணா, அரையணா பாட்டுப் புத்தகங்கள், கொலைசிந்து, தெருக்கூத்துப் பாடல்கள், கதைகள், வசனங்கள் இவை எல்லாம் முக்கியமான பங்களிப்பை செய்திருக்கின்றன.  ஒரு மொழிக்கு – எழுத்து வழக்கு உடல் என்றால் வாய்மொழி வழக்கு உயிர்.

1 கருத்து:

  1. ஒரு மொழிக்கு – எழுத்து வழக்கு உடல் என்றால் வாய்மொழி வழக்கு உயிர்.

    Outstanding essay about the treasure that is spoken language. There is no literary creation if it doesn't breathe the language in which the people speak.
    I completely agree that the so- called regional literature is in reality "caste" or "community" literature. No speaker of Thamizh can be free of "caste" and region markers, and I include Brahmin speakers in this, too, because often the regional and sub-sect variations among Brahmin speakers is a matter of pride or derision among Brahmins themselves.
    This is a very important essay. I am definitely going to use Imayam's viewpoint when I describe the richness of Thamizh language and the semiotics of Thamizh diglossia.

    பதிலளிநீக்கு