“செழுமை மிக்க சமூகமாகச் சங்ககாலத் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு இனம் கடந்தகால வரலாற்றை முழுமையாக அறிந்திருக்க வேண்டும்; அதை ஆவணப்படுத்தி, வருங்காலத் தலைமுறையினருக்குச் சொல்லித் தர வேண்டும். எத்தகைய சிறப்புமிக்க வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம் என்ற பெருமிதம் நமக்கு வர வேண்டும்”
மு.க. ஸ்டாலின்
வரலாற்று அறிவை மட்டுமல்ல, சமூக, பண்பாட்டு, கலாச்சார அறிவையும் இன்றைய தலைமுறையினர் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, ‘ஆதி கலைக்கோல்’ என்ற மாபெரும் பண்பாட்டு விழாவைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நடத்தி வருகிறார். ‘ஆதி கலைக்கோல்’ விழாவில் ஆதிகுடிகளின் கலை, பண்பாட்டு மரபு சார்ந்த இசை, நடனம், பாட்டு, கூத்து போன்ற துறைகளின் பொருட்களைக் காட்சிப்படுத்தியதோடு தெருக்கூத்து, பாவைகூத்துக் கலைஞர்களும் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். கலைஞர்களைப் பாதுகாப்பதும், அவர்களைப் பாராட்டி ஊக்குவிப்பதன் மூலமே அந்தக் கலைகளைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். அந்த நம்பிக்கையில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். ‘ஆதி கலைக்கோல்’ போன்ற ஒரு பண்பாட்டுத் திருவிழாவை இந்திய அளவில் இதுவரை எந்த மாநில முதலமைச்சரும் நடத்தியதில்லை.
படிப்பு என்பது பாடத் திட்டத்தைப் படிப்பது மட்டுமே அல்ல, சமூகத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் படிப்பதுதான் உண்மையான கல்வி. நாம் வாழும் சமூகத்தையும், அதன் முந்தைய வரலாற்றையும் அறிவதுதான் சமூகப் படிப்பு. ‘படிக்காதே’, ‘படிக்கக் கூடாது’ என்பது ஆரியர் பண்பாடு. ஆனால், ‘படி’ என்று சொல்வது மட்டுமல்ல, எல்லோரும் படிக்க வேண்டும் என்பது தமிழர் பண்பாடு. அதனால்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர், “படி, படி, படி, அதற்குத் துணையாக இந்தத் திராவிட மாடல் அரசு என்றும் துணையாக இருக்கும்” என்று அறிவித்திருக்கிறார். நம்முடைய வேர்களைத் தேடிச் செல்ல வேண்டும். நம்முடைய ஆதிகுடிகளின் பண்பாட்டு விழுமியங்களை மீட்டெடுத்து, அவற்றைப் பாதுகாக்க வேண்டும். அப்படிப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே நமக்கான அடையாளத்தைப் பாதுகாக்க முடியும், தனது வேர்களை இழந்த சமூகம் உலகில் மேம்பட்ட சமூகமாக இருக்க முடியாது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்து கலை, இலக்கியம், மொழி, பண்பாட்டு, தொல்லியல், கல்வெட்டியல் போன்ற துறைகள் புது வெளிச்சம் பெற்று வருகின்றன. ஒரு அரசு சமூக நலத் திட்டங்களை மட்டுமே நிறைவேற்றுவது முக்கியமல்ல, சமூக, பண்பாட்டு வாழ்வியலை, அதற்குரிய பண்பாட்டு நகர்வுகளை, மறு உருவாக்கங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் விரும்புகிறார். கீழடி, கொடுமணல் ஆதிச்சநல்லூர், சிவகலை, மயிலாடும்பாறை, கொற்கை, அழகன் குளம் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கிடைத்த பொருட்களைக் காட்சிப்படுத்தி, தமிழர்களுடைய நாகரிகம் எத்தனை பழமையானது என்பதையும் அதன் செழுமையையும் உலகறியச் செய்திருக்கிறார். கீழடியில் உலகமே வியந்து பார்க்கும் வகையில் தொல்லியல் அருங்காட்சியகத்தை அமைத்திருக்கிறார். மேலும், புதிதாக ஏழு இடங்களில் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறார்.
‘ஆதி கலைக்கோல்’ பண்பாட்டு நிகழ்வின் நோக்கம் தெளிவானது. நம்முடைய சமூக மனப்பதிவில் உயர்ந்த சாதியினர் பாடினால் அது உயர்ந்த பாடல்; நாடகம் நடத்தினால் அது உயர்ந்த நாடகம்; நடனம் செய்தால் அது உயர்ந்த நடனம்; மற்றவர்கள் எழுதினால் அது உயர்ந்த இலக்கியம்; மற்றவர்கள் பேசுவது உயர்ந்த மொழி; நாகரிக மொழி. மற்றவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் உயர்ந்த பொருட்கள். ஆனால், இம்மண்ணின் பூர்வகுடி மக்களான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எதைச் செய்தாலும் அது இழிவானது என்ற கருத்தாக்கம் சமூகத்தில் எப்படி உருவானது, நிலை பெற்றது? ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பேசுவது, நாகரிகமற்ற மொழி, இழிவானது, நீசபாஷை.
கூத்தில், நாடகத்தில், நடனத்தில், பாட்டில், இசையில், வாத்தியக் கருவிகளில் மேலானது, கீழானது என எப்படி இருக்க முடியும்? சமூகத்தின் பெரும்பான்மையான மக்களின் கலைச் செயல்பாடுகள் இழிவானவை என்றும், சமூகத்தில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடிய மக்களுடைய கலை, பண்பாட்டுச் செயல்பாடுகள் மட்டுமே உயர்வானவை என்றும் சமூகம் நம்பி வருகிறது. அந்தத் தவறான நம்பிக்கையை உடைக்கத்தான் ‘ஆதி கலைக்கோல்’ பண்பாட்டு நிகழ்வைத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நடத்திவருகிறார். இதை ‘எதிர்’ செயல்பாடாகக் கருத வேண்டியதில்லை. வரலாற்று உண்மையை நிரூபிக்கும் செயல் என்று கொள்ள வேண்டும். நம்முடைய மரபில் சாதி எப்போது தோன்றியது, சாதியோடு சேர்த்து கலைகளையும் இணைத்துப் பார்க்கும் வழக்கம் எப்போது வந்தது என்பதை ஆராய வேண்டும். நம் நாட்டில் கலையைக் கலையாகப் பார்க்காமல் சாதியாகப் பார்க்கும் பழக்கம் இயல்பல்ல, அது சமூக வன்முறையின் வெளிப்பாடு.
உலகெங்கும் அறிவை அறிவாக, திறமையைத் திறமையாக, இலக்கியத்தை இலக்கியமாக, ஓவியத்தை ஓவியமாக மட்டுமே பார்க்கிறார்கள். சிற்பம், சினிமா உள்ளிட்ட அனைத்துக் கலைகளையும் கலையாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மட்டும்தான் அறிவு, திறமை, இலக்கியம், ஓவியம், சிற்பம், நடனம், இசை போன்ற துறைகள் என்று எதுவாக இருந்தாலும், சாதியோடு இணைத்துப் பார்க்கும் மனப்போக்கும், சமூகப் போக்கும் இருக்கிறது.
‘ஆதி கலைக்கோல்’ முதல் நிகழ்வு 2024 டிசம்பர் 2 அன்று சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் தொன்மையான கலைகள், கலாச்சாரம், இலக்கியம், வரலாறு, புத்தகக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, இசைக் கருவிகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. பழைய 42 இதழ்களும், குறும்பர், தோடா பழங்குடியின மக்களின் அன்றாட வாழ்க்கைக் குறித்த, பழைய இசைக் கருவிகள் 1000க்கும் மேற்பட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இரண்டாவது நிகழ்வு 2025 செப்டம்பர் 22, 23, 24 ஆகிய தேதிகளில் மூன்று நாள் நிகழ்வாக, சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் முதன்மையான பேசுபொருளாக இருந்தது, இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் விதத்தில் பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. கரகம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, பாவைக் கூத்துகளும் நிகழ்த்தப்பட்டன. சாதிய மேட்டிமைத்தனத்தால் நமது பாரம்பரியமான 300க்கும் மேற்பட்ட நிகழ்த்துக் கலைகளை இழந்துள்ளோம்; இருக்கிற கலைகளையும் இழக்காமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘ஆதி கலைக்கோல்’ நிகழ்வை நடத்துகிறோம் என்று மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் குறிப்பிட்டது மிகவும் முக்கியமானது.
இந்த ஆண்டு நடைபெற்ற ‘ஆதி கலைக்கோல்’ நிகழ்வில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது பழங்காலத்துப் பொருட்களின் கண்காட்சிதான். உழவுக் கருவிகள், வேட்டைக் கருவிகள், இசைக் கருவிகள், ஓவியங்கள், அணிகலன்கள், விளையாட்டுப் பொருள்கள், மண்பாண்டங்கள் (முதுமக்கள்தாழி) போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டன. குறிப்பாக, கி.மு.600 – கி.மு. 2200 காலத்தில் பயன்படுத்திய பொருட்களும்கூட இடம்பெற்றிருந்தன.
வாய்மொழி இசை, கருவி இசை என்று இருக்கிறது. கருவி இசையில் நான்கு பிரிவுகள் இருக்கிறது. அந்த நான்கு பிரிவுகளுக்குமான கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. துளையிசைக் கருவிகளான குழல், சங்கு, கொம்பு; கஞ்சிராக் கருவிகளான தாளம், கைத்தாளம், சிறிய தாளம், சிரட்டைத் தாளம், சிலம்பு; நரம்பிசைக் கருவிகளான யாழ், கின்னரம்; தோல் கருவிகளான பறை, முரசு, தண்ணுமை, திமிலை, தமுக்கு, டொக்க, கயம்ப, உடு, டமருசம், ஒத்தை, மகுடி, பெப்பா, உடுக்கை, ஊது கொம்பு, எக்காளம், துக்கரி, சாலரா, சேகண்டி, திமிலை, முரசு, முழவு, போன்றவற்றோடு மூங்கிலாலான பேரியாழ், செங்கோட்டியாழ், வேய்ங்குழல், புல்லாங்குழல், காட்டுக் குழல், மானிடக் குழல் போன்ற பல கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. திருச்சின்னம், இசைக்கின்னம், வடி சிலம்பு, சரவொளி மணி, சுரபலகை போன்ற கருவிகள் பார்ப்பதற்குப் புதுமையாக இருந்தன. அவற்றைத் தொட்டு உணர்ந்தது மன எழுச்சியைத் தந்தது.
அதோடு கி.மு.600 – கி.மு.2200 காலகட்டத்தில் பயன்படுத்திய கல்கோடாரிகள், தானியங்களை அரைக்கும் கற்கள், அறுவடை செய்யும் கருவிகள், கூழாங்கற்கருவிகள், துளையிடும் கருவிகள், அம்புகள், செதுக்கிகள் போன்ற பொருட்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. கி.மு. 1300 காலகட்டத்தில் பயன்படுத்திய இரும்பினாலான கொழுமுனை, கத்தி, வாள், ஈட்டி, நீர் இறைக்கும் அம்ரி, கீழார் போன்ற கருவிகளும் இருந்தன. கறுப்பு சிவப்பு நிற மண்பாண்டங்களில், சுடுமண் பொம்மைகளில் மனித உருவம், மலைமான், ஆமை உருவங்கள் ஓவியங்களாக வரையப்பட்டிருந்த பொருட்களும், சங்கு வளையல், தந்தத்தினாலான அணிகலன்கள், பந்து போன்ற பல பொருட்களும் இருந்தன.
கண்காட்சியைப் பார்வையிட்ட பிறகு, தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இங்கே வைக்கப்பட்டிருப்பவை சாதாரணப் பொருட்கள் அல்ல; தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்கள். நமக்கான பெருமிதங்கள், இவற்றைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. நமது பண்பாட்டின் வேர்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். நமது வரலாறுதான் நமக்கான வாழ்க்கை நெறி. வரலாற்றுச் சாட்சியங்களைப் பார்வையிடுவது மட்டுமல்ல, பாதுகாக்க வேண்டும். பழைய வரலாற்றுச் சாட்சியங்களைப் பாதுகாப்போம், புதிய வரலாற்றுச் சாட்சியங்களை உருவாக்குவோம்” என்று பேசினார்.
கண்காட்சி செயற்கையாக உருவாக்கப்பட்டதல்ல, ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு காலம் இருக்கிறது, வரலாறு இருக்கிறது. வரலாற்றை, வாழ்வியலை நிரூபித்துக்காட்ட இலக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன.
ஒரு இனம் பண்பாட்டில், கலையில் மேம்பட்டது என்று சொல்வதற்கு, அதனுடைய இலக்கியங்களே சான்றுகளாக இருக்கின்றன. அந்த விதத்தில் கி.மு. 711இலேயே தமிழ் மொழியில் தொல்காப்பிய இலக்கண நூல் எழுதப்பட்டிருக்கிறது. உலகில் வேறு எந்த மொழியிலும் கி.பி. 300 – 600 காலத்தில் நீதிநூல்கள் எழுதப்படவில்லை. சமணர்களுடைய காலத்தில்தான் நீதிநூல்கள் எழுதப்பட்டன. இது இருண்ட காலம் என்று சொல்லப்பட்டது. நீதிநூல்கள் செழித்து வளர்ந்த காலம் எப்படி இருண்ட காலமாக இருக்க முடியும். உலகில் முதன்முதலாக இரும்புப் பயன்பாட்டைத் தமிழர்கள் கி.மு. 3345 காலத்தில் தொடங்கினர் என்று அறிவியல் ரீதியாக ஸ்டாலின் அரசு நிரூபித்துள்ளது. இதன் அடிப்படையில், கி.மு. 3345 காலத்திலிருந்து கணக்கிட்டால் இன்றிலிருந்து 5300 ஆண்டுகளுக்கு முந்தையது. கீழடியில் கிடைத்திருக்கக்கூடிய கட்டுமானங்கள் கி.மு.2600 காலத்திலேயே நகர நாகரிகம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது. ஆரிய நாகரிகத்தில் வேத காலம் என்று சொல்லப்படுகிறது. அப்போது அவர்களிடம் இருந்தது கிராம நாகரிகம்தான். இதனால்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர், “தமிழ்நாட்டிலிருந்துதான் இந்தியப் பண்பாட்டுக்கான வரலாற்றை எழுத வேண்டும்” என்று கூறினார்.
கீழடியில் கிடைத்த மண்பாண்டங்களில் எழுதப்பட்டுள்ள எழுத்துகளின் மூலம் தமிழ் மொழியின் வயது 3500 ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் பொருள், 3500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் மொழி அறிவைப் பெற்றிருந்தனர். தமிழர்கள் கூத்து, இசை, நடனம், ஓவியம், சிற்பக் கலை, உழவுத் தொழில் போன்ற அனைத்துத் துறைகளிலும் மேம்பட்ட சமூகமாக இருந்தனர். இதை நாம் வெறும் வாய்மொழியால் மட்டுமே சொல்லவில்லை. இலக்கிய ஆதாரங்கள், தொல்லியல், கல்வெட்டியல் ஆதாரங்களின் மூலம் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பண்பாட்டில் கூத்து மற்றும் நாடகக் கலை வடிவங்கள் தொல்காப்பியக் காலத்திற்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்தது என்பதற்கான இலக்கியச் சான்றுகள் நிறைய இருக்கின்றன.
“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்” (தொல்காப்பியம் அகம் – 56.) “நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த வீசி வீங்கு இன்னியங்கடுப்ப” (பெரும்பாணாற்றுப்படை 55 – 56), “பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும்” (பட்டினப்பாலை – 113), “நாடக மேத்தும் நாடகக் கணிக்கை (சிலப்பதிகாரம் பதிகம் 15), “நாடக மடந்தையர் நலங்கெழுவீதி (மணிமேகலை 4: 51), “கூத்தர் ஆடுகளம் கடுக்கும்” (புறம் – 28), “இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து” (சிலப்பதிகாரம் 3 : 12), “கூத்தாட்டு அவைக்களம்” (திருக்குறள் 332), “நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து” (சிலப்பதிகாரம் 3: 40).
“கூத்தரும் பாணரும் பொருநரும் விறவிலியும்
ஆற்றிடைக் காட்சி உறழதோன்றிப்
பெற்ற பெருவளம் பெறா அர்க் குறிவுறீஇச்
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்” (தொல்காப்பியம் பொருளதிகாரம், 36) என்று தொல்காப்பியம் சொல்கிறது. மேற்சொன்ன பாடல்கள் மட்டுமல்ல. தமிழ்ச் சமூக வாழ்வில் கூத்து, மக்கள் வாழ்வியலோடு பண்பாட்டுக் கலாச்சாரத்தோடு இரண்டறக் கலந்து ஒன்றாக இருந்திருக்கிறது என்பதற்கான பல நூறு சான்றுகள் இருக்கின்றன. அதே நேரத்தில் கூத்தாடும் கலைஞர்கள் சமூகத்தைப் பாடியும் ஆடியும் மகிழ்வித்தாலும் அவர்கள் எப்போதும் வறுமையிலும் பசியிலும் இருந்தனர் என்பதற்கு, “ஆடுபசி உழந்த நின்இரும்பேர் ஒக்கலொடு, நீடுபசி ஒரா அல் வேண்டின் நீடு இன்று” (பொருநராற்றுப்படை – 60 - 61-1) என்ற பாடல் கூறுகிறது. தெருக்கூத்துக் கலையில் மட்டுமல்ல, இசையிலும் தமிழ்ச் சமூகம் செழித்து இருந்திருக்கிறது. கூத்தும் இசையும் நடனமும் சேர்ந்ததுதான் கூத்துக் கலை அல்லது நாடகக் கலை என்பது.
“ஒரு திறம் கண்ணார் குழலின் கரைபு எழ” (பரிபாடல் 17) “தீம் தொடை விளரி நரம்பின் நயவரு சீறியாழ்” (அகப்பாடல் 279)
“புரிநரம்பின் கொளைப் புகல் பாலையேழும்
எழு உப்புணர் யாழூம் இசையும் கூடக்
குழலளந்து நிற்ப முழ வெமுந்தார்ப்ப
மன் மகளிர் சென்னியராடல் தொடங்க” (பரிபாடல் 7) “வல்லோன் தைவரும் வண்னுயிர்ப் பாலை - நரம்பு ஆர்தன்ன வண்டினமும் முரலும்” (அகப்பாடல் 355), “வல்லான் இயற்றிய பாவை” (மதுரைக்காஞ்சி), “கம்மியர் நூலறிவு புலவர்” (நெடுநல்வாடை), “மண்ணிலும் கல்லிலும் மரத்திலும் சுவரிலும் தெய்வம் காட்டினும் வகுக்க” (மணிமேகலை)
“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் வெகுளி பெருமிதம் உவகை என
அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப என” (தொல்காப்பியம் மெய் நூற் – 3). இசை, தமிழர்களின் வாழ்வில் ஒரு பகுதியாக இருந்தது என்பதற்கு இப்படிப் பல சான்றுகளைக் காட்ட முடியும். தமிழர்கள் காட்டுமிராண்டிச் சமூகமாக இருக்கவில்லை என்பதைத்தான் இப்பாடல்கள் மெய்ப்பிக்கின்றன.
தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 711 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அந்தக் காலத்திலேயே சிற்பக் கலை குறித்த தெளிவான நூற்பாக்கள் எழுதப்பட்டிருந்தன. இதன் மூலம் சிற்பக் கலை வடிவமைப்பில் தமிழர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. சிற்பக் கலையில்தான் என்றில்லை ஓவியக் கலையிலும் தமிழர்கள் முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதற்குச் சிலப்பதிகாரத்தில் வரக்கூடிய பல பாடல்கள் சான்றாக இருக்கின்றன. சுவர், துணி, செப்பேடு, ஓலை, பலகை, கண்ணாடி, தந்தம் போன்ற பொருள்களிலும் ஓவியத்தை வரைந்ததாக பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. அதற்கு உதாரணமாக, “எண்ணென்கிரட்டி யிருங்கலை பயின்ற, பண்ணியல் மடந்தையர்” (சிலப்பதிகாரம் 22) என்ற பாடலைச் சொல்லலாம்.
தமிழ் இலக்கியங்களில் பிற கலைகளைக் காட்டிலும் நடனக் கலை குறித்த பதிவுகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. சிலப்பதிகாரத்தில் வரும் அரங்கேற்றுக் காதை முழுவதும் நடனம் குறித்தே எழுதப்பட்டுள்ளது. ஒரு காப்பியத்தில் நடனக் கலை குறித்த பதிவுகள் எழுதப்பட்டிருப்பது, தமிழ்க் கவிகள் நடனக் கலை அறிவையும், நுணுக்கத்தையும் அறிந்திருக்கிறார்கள் என்பதும், அதை இலக்கியத்தில் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதும் வியப்பிற்குரியதாக இருக்கிறது.
“எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது
மண்ணகம் ஒரு வழிவகுத்தனர்” (சிலப்பதிகாரம் புகார் காண்டம்) “வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின்…” (சிலப்பதிகாரம் 3 – 39), “உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை வைத்த இடை நிலம் நாற்கோல் ஆக” (சிலப்பதிகாரம் புகார் – அரங்கேற்று காதை – 2) “வேத்தியல் பொதுவியல் என்று இவ்விரண்டின் / கூத்தியல் அறிந்து கூத்தியர் மறுகு” (மணிமேகலை) “நாடக மகளிருக்கு நன் களம் வகுத்த / ஓவிய செந்நூல் உரைநூல் கிடக்கையும்” (மணிமேகலை) இப்படி, கட்டடக்கலை குறித்த பதிவுகளும் நம்முடைய பழந்தமிழ் இலக்கியத்தில் நிறைய கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்குத் தெரியவருவது, தமிழர்கள் பழங்காலத்திலேயே கட்டடக் கலையில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்பதுதான். நம்முடைய திராவிட கட்டடக் கலையின் சிறப்போடு ஒப்பிடும்போது, ஆரிய கட்டடக் கலை எந்த நிலையில் இருந்தது என்பதை ஒப்பிட்டு புரிந்துகொள்ள முடியும்.
“மாடமதுரை” (புறப்பாடல் – 32) “மாடமலி மறுகிற் கூடல்” (திருமுக்காற்றுப்படை – 71) “மாடம் பிறங்கி மலிடிகழ்க்கூடல்” (மதுரைக் காஞ்சி (629). இந்தப் பாடல்கள் வெறும் பாடல்கள் அல்ல, கவிதை வரிகள் அல்ல. இந்த வரிகளின் மூலம் நாம் அறிவது நம் முன்னோர்களின் தொல்குடி வாழ்க்கை முறையை. அந்த வாழ்க்கை முறைதான் நமக்கான இன்றைய வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கிறது.
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அமைச்சர் மாண்புமிகு மதிவேந்தன், செயலர் திருமதி லட்சுமி பிரியா, இயக்குநர் ஆனந்த், இயக்குநர் அண்ணாதுரை, தாட்கோ மேலாளர் கந்தசாமி, தாட்கோ சேர்மன் இளையராஜா ஆகியோர் எடுத்த முயற்சியும் ஈடுபாடும் அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் ‘ஆதி கலைக்கோல்’ நிகழ்வில் வெளிப்பட்டன. பழங்காலத்துப் பொருட்களைப் பார்வையிடும் வாய்ப்பையும், அவற்றைப் பற்றிய இலக்கியப் பதிவுகளைப் படிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தியிருந்தார்கள். கற்பனையான பண்பாட்டிற்கு எதிராக நிஜமான, உண்மையான பண்பாட்டினை நிலைநாட்டும் செயல்தான் ‘ஆதி கலைக்கோல்’ நிகழ்வு.
முரசொலி 06.11.2025