செவ்வாய், 15 ஜூலை, 2025

இயந்திரங்கள் (சிறுகதை) - இமையம்

இயந்திரங்கள் - இமையம்

“ஐயோ மணி ஆயிடிச்சே” என்று சொல்லிக்கொண்டே படுக்கையிலிருந்து எழுந்த லட்சுமிக்குக் கடிகாரத்தைப் பார்த்ததும் பதற்றம் ஏற்பட்டது. சேலையைச் சரி செய்தவாறே அடுப்படிக்குப் போனாள். அவசரஅவசரமாகப் பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவினாள். அரிசியை அலசி குக்கரில் வைத்தாள். அடுப்பைப் பற்ற வைத்தாள். நேற்றிரவே அரிந்து வைத்திருந்த காய்களை எடுத்துவந்து மற்றொரு அடுப்பில் வேக வைத்தாள். 

“என்னா படுத்தே கெடக்குறீங்க? நேரமாவறது தெரியல? எத்தன தடவதான் எழுப்புறது?” என்று கேட்டு லட்சுமி கத்தியதால் அலுத்துக்கொண்டே எழுந்த ராஜு, என்றைக்கும் போல முதலில் கடிகாரத்தைத்தான் பார்த்தான். “முன்னாடியே எழுப்புறதுக்கென்னா?” என்று கேட்டான். “மோட்டாரப் போடுங்க” என்று சொல்லிவிட்டு குடங்களைக் கழுவினாள்  லட்சுமி. 

தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த லட்சுமி, “ஒங்களாலதான் இன்னிக்கி லேட்டாயிடிச்சி” என்று சொன்னாள். “நான் என்னா செஞ்சன்?” என்று கேட்டான். லேசாகச் சிரித்துக்கொண்டே, “சனிக்கிழம வழக்கத்துக்குப் பதிலா நேத்து ராத்திரி மாத்துனதாலதான்” என்று சொன்னாள். “பொண்டாட்டிக்கிட்டெ படுக்குறத்துக்குக்கூட நாளு, கிழம, நேரம், காலம் பாத்துக்கிட்டா படுக்க முடியும்” என்று வெடுக்கென்று கேட்டான். “நாட்டுல எல்லாத்துக்கும் இப்ப அப்பிடித்தான் ஆயிப்போச்சி. ரெண்டு சம்பளத்துக்கு ஆசப்பட்டா நம்ப இஷ்டமின்னு ஒண்ணும் இருக்காது” என்று சொல்லிக்கொண்டே தண்ணீர்க் குடத்தைத் தூக்கிவைத்தாள். 

“இந்தப் பூண்ட உரிங்க” என்று சொல்லி, பூண்டு ஒன்றை ராஜுவிடம் கொடுத்துவிட்டு சேமியாவை வறுக்க ஆரம்பித்தாள் லட்சுமி. “மாவு என்னாச்சி” என்று ராஜு கேட்டான். “தீந்து போச்சி” என்று சொன்னாள்.

“இன்னிக்கி வியாழக்கிழமதானெ? வழக்கமா சனிக்கிழம வர மாவு இருக்குமே.”

“ஒங்க அக்கா மகளுங்க வந்து டேராபோட்டது மறந்துபோச்சா?”

“முன்னெபின்னெ ஒரு கிலோ, ரெண்டு கிலோன்னு சேத்துப்போட்டு அரைக்கணும்.”

“இனிமே அரைக்கிறன் சாமி, கல்யாண மண்டபத்திலெ இருக்கிற மாரி கிரைண்டரும், ஒரு இட்லி குண்டானும் வாங்கிப் போட்டுடுங்க. அப்பிடியே ஒங்க கூட்டத்துக்கும் சேதிய சொல்லிடுங்க.”

“வாய மூடுறியா? காலயிலியே சனியனாட்டம்.” 

“என்னா சொல்லிப்புட்டன்னு கத்துறீங்க? சின்னவன் ஒண்ணுக்கு விட்டு, அதிலியே தூங்கறது தெரியல? தூக்கிக்கிட்டுப் போயி மொகத்தக் கழுவி விடுங்க” என்று சொல்லிவிட்டு வாசலைப் பெருக்குவதற்காகப் போனான் லட்சுமி. 

“கண்ணெ முழிச்சிப்பாரு. கண்ணெத் தொறப்பா” என்று சொல்லிப் பையனை எழுப்புவதற்கு முயன்றான் ராஜு. “எங்கிட்ட கொடுங்க” என்று சொல்லி பையனை வாங்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, “கண்ணெ முழிச்சிப்பாரு. அம்மாவப் பாருடா” என்று சொல்லி கன்னத்தை உருவிவிட்டாள். குக்கரிலிருந்து சத்தம் வந்ததும் வேகமாக அடுப்படிக்குப் போய் அடுப்பை நிறுத்தினாள். “ஒங்க மிஸ் வராங்கப்பா” என்று சொன்னதும் பையன் பட்டென்று கண்களைத் திறந்து மலங்கமலங்கப் பார்த்தான். பிறகு அழ ஆரம்பித்தான். அவனுடைய அழுகையைப் பொருட்படுத்தாமல், பையனுடைய முகம், வாய் என்று கழுவிவிட்டு, “சின்னவனத் தூக்கிக்கிட்டு வாங்க” என்று ராஜுவிடம் சொன்னாள்.

“இதெ ஆத்திக் கொடுங்க” என்று சொல்லி தம்ளர்களையும் பாலையும் கொண்டுவந்து ராஜுவின் முன் வைத்தாள் லட்சுமி. பாலை நன்றாக ஆற்றித் தம்ளர்களில் ஊற்றி இரண்டு பையன்களிடமும் கொடுத்தான் ராஜு. அப்போது டீ தம்பளரைக் கொண்டுவந்து கொடுத்து, “சீக்கிரம் குடிச்சிடுங்க. சூடு ஆறிடும்” என்று சொல்லிவிட்டு அடுப்படிக்குப் போனாள்.

“தன்னுடைய டீயைக் குடித்து முடித்துவிட்டு அடுப்படியிலிருந்த லட்சுமியிடம் “இவனுங்களப் பாத்துக்க” என்று சொல்லிவிட்டு கழிவறைப் பக்கம் போனான்.

“சின்னவன் ஹோம் ஒர்க்க முடிக்கல. அதெ எழுத வையிங்க இல்லன்னா ஃபைன் போட்டுடுவாளுங்க” என்று சொல்லிக்கொண்டே கூடத்திற்கு வந்தாள் லட்சுமி. “யாருடா பால கீழ ஊத்துனது? பாலக் கொடுத்த மனுசன் குடிக்கிறமட்டும் இருக்கக் கூடாது. நேத்து ராத்திரி எட்டு மணிக்கு சாப்புட்டெ புள்ளங்களாச்சே, ரவ பாலு வயித்துக்குள்ளார போவ கொடுத்து வைக்கல. எல்லாம் எந் தல எயித்து. காலயிலியே மனுசனுக்கு என்னா கெடுதி வந்துச்சோ தெரியல” என்று பொரிந்து தள்ளினாள். தரையில் ஊற்றியிருந்த பாலைத் துடைத்தெடுத்தாள். சத்தமாக, “சீக்கிரமா வெளிய வாங்க. காலயில எழுந்திருச்சதும் உள்ள போயி ஒக்காந்துக்க வேண்டியது, ஹோம் ஒர்க் நோட்டெ எடுடா” என்று சொன்னாள். பையன்கள் வீட்டுப்பாடத்தை எழுத ஆரம்பித்தனர்.

“பசங்களக் கூட்டிக்கிட்டுபோயி ஆயி இருக்க வையிங்க” என்று சொல்லிவிட்டு வீட்டைக் கூட்ட ஆரம்பித்தாள் லட்சுமி. “பெரிய பையனைத் தூக்கிக் கொண்டுபோய் கழிவறையில் உட்கார வைத்தான். அப்போது “என்னோட சாப்பாட்டு கேரியர் கம்பியக் காணோம் பாத்தீங்களா?” என்று லட்சுமி கேட்டதற்கு, “எம் மடியிலதான் வச்சியிருக்கன், வந்து எடுத்துக்கிட்டுப் போ” என்று சொல்லி முறைத்தான். அதே வேகத்தில் பையனிடம், “ஆயி இருடா” என்று சொல்லிக் கத்தினான். 

“காலயிலியே இந்த மனுசனுக்கு என்னா வந்திருக்கும்? எதுக்கெடுத்தாலும் சள்ளுப்புள்ளுன்னு விழுறாரு” என்று லட்சுமி சொல்வது ராஜுக்குக் கேட்டது.

கழிவறையில் உட்கார்ந்திருந்த பையன் தரையில் ஏ, பி, சி, டி என்று விரலால் எழுதுவதைப் பார்த்த ராஜு, “சீ. கையை எடு, எழுதுறதுக்கு ஒனக்கு வேற எடமே கெடக்கலியா?

“ஆயி இருந்திட்டானா? சின்னவனத் தூக்கிட்டு வரட்டுமா?” என்று கேட்டுக்கொண்டே வந்த லட்சுமி பையன் அழுதுகொண்டிருந்ததைப் பார்த்ததும், “எதுக்கு அழுவுறான்? அழுவாதப்பா. ஸ்கூலுக்கு லேட்டாயிடும். சீக்கிரம் ஆயி இருந்திடு. ஸ்கூலுக்கு லேட்டானா கேட்ட பூட்டிடுவாங்க. நீ வெளியதான் நிக்கணும். ஏன் லேட்டுன்னு கேட்டு மிஸ் அடிப்பாங்கப்பா? அப்பறம் லேட் கம்மர்ஸ்ன்னு ஃபைன் போட்டுடுவாங்க” என்று சொல்லிவிட்டு ராஜுவிடம் “மணி ஆவறது தெரியல? இது ஒரு வேலதானா? போயி அடுப்பக் கொறச்சி வையிங்க, அப்பிடியே சின்னவன் என்னா பண்றான்னு பாருங்க” என்று சொன்னாள். எழுந்துபோனான் ராஜு.

“ஆயி இருடி என் தங்கமே.” 

“ஆயி வல்லம்மா. கால வலிக்குது.”

“அம்மாவுக்கு லேட்டாவுதுப்பா. ஒனக்கு ஆட்டோ வந்துடும்” என்று சொன்ன லட்சுமி, எழுந்து சமையலறைக்கு ஓடினாள். கொதித்துப்போய் வழிந்துகொண்டிருந்த குழம்பை இறக்கி வைத்தாள். “இந்த வீட்டுல எதெத்தான் சரியா செய்ய முடியுது?” என்று சொல்லி அலுத்துக்கொண்டே பொரியலுக்குரிய காயை எடுத்து வேகப்போட்டாள். அடுப்பு மேடையில் வழிந்திருந்த குழம்பைத் துடைத்தெடுத்தாள்.

பையனிடம் வந்து, “இன்னிக்கிப்பூரா இப்பிடியே குந்தியிருப்பியாடா?” என்று கேட்டு, தலையில் பலமாக ஒரு கொட்டுகொட்டிய பிறகுதான் வேலை முடிந்தது.  சின்னப் பையனை அழைத்துக்கொண்டுவந்து உட்கார வைத்த ராஜு,  “ஆயி இருடா. மணி ஆவறது தெரியல. நான் ஆபிஸ் போவணுமா வேணாமா?” என்று சொல்லிக் கத்தியதும் பையன் அழ ஆரம்பித்தான். “புள்ளய எதுக்கு அழ வைக்கிறீங்க? நான் பாத்துக்கிறன். நீங்க போயி ரெடியாவுங்க. அப்பிடியே பசங்களோட பையயும் ரெடி பண்ணுங்க” என்று லட்சுமி சொன்னாள். 

“விடிஞ்சா ஒவ்வொரு நாளும் இதே போராட்டமா இருக்கு, யாண்டா கல்யாணம் கட்டுனமின்னு இருக்கு” என்று சொல்லிக்கொண்டே போனான் ராஜு. “புள்ள வாணாம், பொண்டாட்டி வாணாமின்னு சொல்ற மனுசனுக்கு எதுக்கு வேலயும் பணமும் வேணும்?” என்று சொன்னாள். 

“ஒன்னோட தண்ணி பாட்டல காணுமே எங்கடா போட்ட?” என்று ராஜு பெரிய பையனிடம் கேட்டான். “தெரியல.” “ஒனக்கு என்னாத்தான் தெரியும்?” என்று சொல்லி முறைத்துவிட்டு தண்ணீர் பாட்டிலை தேட ஆரம்பித்தான். “பாட்டில தேடுறதே தெனமும் பெரிய வேலயா போச்சி” என்று சொல்லிக் கத்த ஆரம்பித்தபோது, “ஏங்க, பெரியவன அழச்சிக்கிட்டுவந்து பல்ல வெளக்கி வுடுங்க” என்று லட்சுமி சொன்னது கேட்டது. “இவ எப்பச் செத்துத் தொலவான்னு தெரியல” முனகிய ராஜு பையனிடம், “பல்லு வெளக்க போடா” என்று சொன்னான்.

“ஏங்க, அடுப்ப நிறுத்திப்புட்டு, துண்டெ எடுத்துக்கிட்டு வாங்க” என்று சொல்லி குளியலறையிலிருந்து லட்சுமி கத்தியது கேட்டது. கையிலிருந்த பென்சில் டப்பாவை விட்டெறிந்துவிட்டு போய் அடுப்பை நிறுத்தினான். துண்டைத் தேடி எடுத்துக்கொண்டு குளியலறைக்குப் போனான். இரண்டு பையன்களுக்கும் துவட்டிவிட்டான். இரண்டு பேருக்கும் கால் சட்டை, மேல் சட்டை என்று போட்டு விட்டான். தலை காய்ந்ததும் எண்ணெய் தடவிவிட்டான். பெரிய பையன், “எனக்கு இன்னும் பெல்ட்டு போடல” என்று சொன்னான். ராஜு பெல்ட்டைத் தேட ஆரம்பித்தான். பெல்ட் கிடைக்கவில்லை. ராஜுவோடு சேர்ந்து லட்சுமியும் தேட ஆரம்பித்தாள். பெல்ட் கிடைக்காததால் “இன்னிக்கி மட்டும் பெல்ட்டு இல்லாம போப்பா” என்று லட்சுமி சொன்னதும், “மிஸ் அடிப்பாங்கம்மா. ஃபைன் போட்டுடுவாங்க” என்று சொல்லிவிட்டு பையன் அழ ஆரம்பித்தான்.

 “நெனச்சதுக்கெல்லாம் ஃபைன், ஃபைன்னு சொல்லி புள்ளைகள மிரட்டி வச்சியிருக்காளுவோ பாரு. என்னா பள்ளிக்கூடமோ” என்று சொல்லிவிட்டு கடிகாரத்தைப் பார்த்தாள். “நேரம் எப்பிடித்தான் ஓடிப் போவுதோ தெரியல. பைய ரெடி பண்ணுங்க. இன்னிக்கி நான் லேட்டாத்தான் வருவன். ஸ்டாஃப் மீட்டிங் இருக்கு. ஸ்டாஃப் மீட்டிங்கின்னுதான் பேரு தன்னோட பெருமய பேசவே அந்த ஹெட்மாஸ்டருக்கு நேரம் பத்தாது. புதுசா வந்திருக்கிற டீச்சர்கிட்டெ பேசுறதுதான் நாள் முழுக்க அந்தாளு செய்யுற ஒரே வேல” என்று சொன்னாள்.

“பெல்ட்டுப்பா” என்று பெரிய பையன் சொன்னதைக் காதில் வாங்காமல் அவனுடைய காலில் ஸாக்ஸை மாட்டிவிட ஆரம்பித்தான் ராஜு. “இன்னிக்கிப் பள்ளிக்கூடம் வேண்டாம்ப்பா” என்று பெரிய பையன் சொன்னதை ராஜுவோ, லட்சுமியோ பொருட்படுத்தவில்லை. “சின்னவன பள்ளிக்கூடத்தில சேத்தது தப்பா போச்சி. அவனாலதான் பெரியவனும் தகராறு செய்யுறான். தீயற வாடை வருதே” என்றவாறு பதட்டத்துடன் அடுப்படிக்கு ஓடினாள். பொரியலுக்கு வேக வைத்திருந்த காய் முழுவதும் தீய்ந்துபோயிருந்தைப் பார்த்து, திடுக்கிட்டு “எல்லாச் சனியனயும் தேச்சிக் கழுவணுமே. பள்ளிக்கூடத்திலியும் மாரடிக்க வேண்டியிருக்கு, ஊட்டுலயும் மாரடிக்க வேண்டியிருக்கு” என்று சொல்லிக்கொண்டே பாத்திரத்தைத் தூக்கி, கழுவுகிற இடத்தில் போட்டாள்.

“பெல்ட்டுப்பா” என்றான் பெரிய பையன். அவன் சொன்னது காதில் விழுந்தாலும் விழாதது மாதிரி இருந்தான்.

தோள்பையில் சாப்பாட்டு டப்பாக்களை எடுத்து வைத்த லட்சுமி, “ஒங்க அக்கா மவ பெரியவ பொழுதினிக்கும் ஊட்டுல டி.வி.யப் பாத்துக்கிட்டு சும்மாதான குந்தியிருக்கிறா? அவள வந்து கொஞ்ச நாளக்கி இங்க இருக்கச் சொல்லுங்களேன். அவளுக்குக் கல்யாணம் காரியமின்னா நீங்கதான நோட்டு எடுக்கணும்” என்று சொன்னாள்.

“சொன்னா வருவாதான், யாரா இருந்தாலும் ஒன்னால ஒரு வாரம்தான் ஓட்ட முடியும். அப்பறம் அது சொத்த, இது சொத்தன்னு பேச ஆரம்பிச்சி, பிரச்சனய உண்டாக்கிடுவ.”

“நான்தான் பிரச்சனய உண்டாக்குற ஆளா?”

“பேச்செ விடு. காசு போனாப்போவுது, ஒரு வேலக்காரிய புடி. ஒனக்கு ஒரு நாள் சம்பளம் வேலக்காரிக்கு ஒரு மாச சம்பளம். அதனால ஸ்கூல்ல இருந்து பசங்கள அழச்சிக்கிட்டு வர்ற மாரி ஒரு வேலக்காரிய தேடிப் புடி.”

“ஒங்க அக்கா மவ வந்தா என்னா? வேலக்காரியோட என்னால மல்லுக்கட்ட முடியாது.” 

“சும்மா இருடி. அக்கா மவ நொக்கா மவன்னுக்கிட்டு.”

“மவ ஊட்டுலப் போயி மாசக்கணக்குல டேராப் போடுற ஒங்கம்மாவ வந்து இருக்க சொல்லுங்களேன் பாப்பம். அதெ செய்யல, இதெ செய்யலங்கிற பேச்சுத்தான். ஒரு நாளக்கி மூணு பஸ் ஏறி சாவுற நான் எதுக்கு மத்தவங்களுக்குச் செய்யணும், பண்ணணும்? யாரால எனக்கு என்னா ஒதவி இருக்கு.”

“ஒங்கம்மாவ வந்து இருக்கச் சொல்லேன்.”

“எதுக்கு? ஒங்க ஊட்டு புள்ளகள எங்கம்மா வந்து வளக்கணுமா? எங்கம்மா என்ன ஒங்க ஊட்டு வேலக்காரியா? ஒதவிக்கு ஒரு சனியனும் இருக்காது. காசு புடுங்க மட்டும் வந்துடுங்க மாசா மாசம்.”

“பேசுறத நிறுத்து. மணி ஆவறது தெரியல? பசங்களோட பென்சில் பாக்ச, பைய செக் பண்ணு. ஏதாச்சும் இல்லாமப் போயிடப் போவுது.”

“எனக்கு மத்த வேல இல்லியா? காய் வேற தீஞ்சிப் போச்சி. ரசம் இன்னம் கொதிக்கல. அடுப்புல ஏகப்பட்ட வேல கெடக்கு. நீங்களே செக் பண்ணுங்க. ஒங்க பைய ரெடி பண்ணிட்டீங்களா?” என்று கேட்டுவிட்டு வேகமாக அடுப்படிக்குப் போனாள். போன வேகத்திலேயே “அடடா?” என்று லட்சுமி அலுத்துக்கொண்டாள். 

“என்னோட பென்சிலக் காணோம்” என்று சின்னப் பையன் சொன்னதும், “நேத்துத்தான புது பென்சில் வாங்கித் தந்தன். ஒரே நாளிலியே எயிதிக் கிழிச்சிட்டியா? எங்கடா தொலச்சா? ஒரு நாளக்கி ஒரு பென்சிலா தொலப்ப?” என்று ராஜு கேட்டதும், பையனுடைய கண்கள் கலங்கின.

அடுப்படியிலிருந்த லட்சுமி “வண்டிய எடுத்து வெளிய வையிங்க, எம் பாட்டில்ல தண்ணீ ஊத்தி வையிங்க. ஆம்பள ஆச்சிக்கு மேலதான் இருக்கு பொம்பள ஆச்சி. கால் காசின்னாலும் கவர்மண்டு வேலன்னு சொன்ன காலமெல்லாம் போயிடிச்சி. வேலய விட்டு நின்னுட்டா போதுமின்னு இருக்கு. எஸ்மா, டெஸ்மான்னு சொல்லி ஒரு உத்தரவிலியே பல லட்சம் பேர ஊட்டுக்கு அனுப்பிட்டாங்களே. இப்பிடி இருக்கிற நாட்டத்தான் ஒலகத்திலியே பெரிய ஜனநாயக நாடுன்னு சொல்றாங்க. எஸ்மா, டெஸ்மான்னு எவன்தான் சட்டம் போட்டான்னு தெரியல” என்று சொல்லிக்கொண்டே குளியலறைப் பக்கம் ஓடினாள் லட்சுமி.

தன்னுடைய பை, லட்சுமியினுடைய பை, பையன்களுடைய பை என்று ஒவ்வொன்றாகத் தயார் செய்துகொண்டிருந்தான் ராஜு. அவசரத்தில் பொருள்களை மாற்றிமாற்றி வைத்தான். முன்னால் கிடக்கிற பொருள்கூட அவனுடைய கண்ணில் படவில்லை. கோபத்தில் “சனியன் புடிச்ச ஊடு இருக்கு” என்று சொன்னான்.

குளித்துவிட்டு வந்த லட்சுமி அவசரஅவசரமாக துணிகளை மாற்றிக்கொண்டு பையன்களுடைய பையைச் சரிபார்த்தாள். “சின்னவனோட ஸ்நாக்ஸ் டப்பாவக் காணுமே. பிஸ்கட் வைக்கலியா?” என்று கேட்டாள். டப்பாவைத் தேட ஆரம்பித்தான் ராஜு. பிஸ்கட் டப்பா போன மாயம் தெரியவில்லை. “வீட்ட ஒழுங்கா வச்சியிருந்தாத்தானே எல்லாம் ஒழுங்கா இருக்கும்.” புலம்பினான் ராஜு.

பெரிய பையன் திடுதிடுவென்று சமையலறைக்கு ஓடிப்போய் கிரைண்டருக்குள் கிடந்த பாட்டிலை எடுத்துவந்து கொடுத்தான். ராஜுவும் லட்சுமியும் சிரித்தனர். “ஆட்டோக்காரன் வத்துடுவானே” என்று சொல்லி பாட்டிலை எடுத்துக்கொண்டு லட்சுமி ஓடினாள்.

“அப்பா என்னோட பெல்ட்டு” என்று சொல்லி பெரிய பையன் சிணுங்கினான். ராஜுக்குச் சொல்ல முடியாத எரிச்சல் உண்டாயிற்று. “எங்கடா வச்ச? வச்ச பொருள் வச்ச எடத்திலெ இல்லாம எங்க போயிடும்? இது வீடா, இல்லெ காடா?” என்று சொல்லிக் கத்தினான். தண்ணீர் பாட்டிலை கொண்டுவந்த லட்சுமி “சாயங்காலம் பஜ்ஜி சுட்டுத் தரண்டா” என்று சொல்லி பெரிய பையனை சமாதானப்படுத்த முயன்றாள். அவன் அழுவதைப் பொருட்படுத்தாமல் அவனுடைய வாயில் உப்புமாவைத் திணித்தாள்.

ஆட்டோ சத்தம் கேட்டதும் பையன்களுடைய புத்தகப்பை, சாப்பாட்டுப்பை என்று எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போனான் ராஜு. பையன்களை இழுத்துக்கொண்டு வந்தாள் லட்சுமி. வாசலுக்கு வந்தபோது அவளுடைய பிடியிலிருந்து கையைப் பிடுங்கிக்கொண்டு சின்னப் பையன் வீட்டுக்குள் ஓடினான். ஓடிய வேகத்திலேயே பெரியவனுடைய பெல்ட்டுடன் ஓடி வந்தான். ராஜுவும் லட்சுமியும் சிரித்தனர். பையன்களை ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தனர். 

“ஒரு நாளக்கி எத்தன தடவ கூட்டுனாலும் வீடு களம் மாதிரிதான் இருக்கு” என்று சொன்ன லட்சுமி வீட்டைக் கூட்ட ஆரம்பித்தாள். குளிப்பதற்காக வந்த ராஜுவிடம், “என்னோட வாச்சிய எங்க வைச்சன்னு தெரியல. பாத்தீங்களா?” என்று கேட்டாள்.

“இல்லெ.”

 “ஒங்க பைய ரெடி பண்ணீட்டிங்களா? கொஞ்சம் லேட்டாப் போனாலே பஸ் போயிடும். வழி நெடுக பஸ் மறியல், சால மறியல்னு தெனம்தெனம் ஏதாச்சும் நடக்குறதால போயிச்சேருவமான்னே சந்தேகமாயிடுது. எவன்தான் புளியமரத்த வெட்டி ரோட்டுல போட கத்துக் கொடுத்தானோ. ஒரு பஸ்ஸ வுட்டா, எல்லா பஸ்ஸயும் விடுற மாரி ஆயிடும். வெளிய போயிட்டு வீட்டுக்கு வந்தாத்தான் உண்டு.”

“ரெடியாவு.”

“பக்கத்து வீட்டு மணி நம்ப சின்னப் பையன் வயசுதான். அதுக்குள்ளார எல்லா ரைம்சும் சொல்றான். கையெழுத்தும் வந்துடுச்சாம். அவங்கம்மா சொல்றாங்க.”

“எதுனா வந்துட்டுப் போவுது.” 

“நம்ப பசங்களயும் டியூசன்ல சேத்திடலாமா?”

“நாலு, அஞ்சி வயசிலியே டியூசன் படிச்சி அவனுங்க ஒண்ணும் புடுங்க வேணாம். எல்.கே.ஜி. யூ.கே.ஜி.யிலேயே டியூசன் படிச்சிட்டுத்தான் நீயும் நானும் வேலக்கி வந்தமா? போயி ரெடியாவு. மணி ஆவறது தெரியாம” என்று சொன்ன ராஜு வேகமாகக் குளியலறை பக்கம் போனான்.


உயிர்மை ஜூன் 2025