வெள்ளி, 16 டிசம்பர், 2016

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் (சிறுகதை தொகுப்பு) – அ.வெண்ணிலா விமர்சனம் – எழுத்தாளர் இமையம்.

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் (சிறுகதை தொகுப்பு) – அ.வெண்ணிலா
விமர்சனம் – எழுத்தாளர் இமையம்.
       பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள பதினேழு கதைகளும் ஆண்களைப்பற்றி பெண்கள் சொன்னவை. குறிப்பாக சிறுமிகள் சொன்ன கதைகள். கோபம் இல்லாமல், வன்மம் இல்லாமல், பகை, விரோதம், கூப்பாடு இல்லாமல் சொல்லப்பட்டவை. பதினேழு கதைகளிலும் ஏதோ ஒரு விதத்தில் சிறுமிகளும், பெண்களும், கிழவிகளும் ஆண்களாலும், நமது சமூகத்தாலும், சமூகக், கலாச்சாரப், பண்பாட்டாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் ஆண்கள் மீது பெண்களுக்கு வஞ்சம், பழிதீர்த்தல் இல்லை. ஆண்களைப்பற்றி பெண்கள் சொன்ன காரணத்தினால் இவை ‘பெண்ணியச் சிறுகதைகள்’ என்று முத்திரை குத்த முடியாது. பெண்களை உயர்த்தியும் ஆண்களை மட்டப்படுத்தியும் எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட கதைகள் அல்ல இவை. நிஜ வாழ்வில் என்ன நிகழ்கின்றனவோ அவை கதைகளாகி இருக்கின்றன. உண்மைக்கு அருகில் இருக்கின்றது என்பதைவிட நிஜமாக இருக்கிறது என்பதுதான் இக்கதைகளின் பலம்.
       வயதான பெண்களைப்பற்றி எழுதுவது சுலபம். காரணம் அவர்கள் பேசுவார்கள், அழுவார்கள். அவர்களுடைய பேச்சையும், கண்ணீரையும் எழுதுவது சுலபம். சிறுவர்களைப்பற்றி எழுதுவதுகூட சுலபம்தான். ஆனால் சிறுமிகளைப்பற்றி எழுதுவது கடினம். அதுவும் வயதுக்கு வருகிற பக்குவத்தில் இருக்கிற பெண் குழந்தைகளைப்பற்றி எழுதுவது மிகவும் சிரமம். அந்த பருவத்தில் இருப்பவர்களுடைய மன இயல்பு விசித்திரமானது. அந்த விசித்திரத்தை எழுத்தாக்குவது, கதையாக்குவது எளிதல்ல. அது அ.வெண்ணிலாவுக்கு சாத்தியமாகி இருக்கிறது. தொகுப்பிலுள்ள பதினேழு கதைகளில் பதினைந்து கதைகள் பெண் குழந்தைகளின் வழியே சொல்லப்பட்டது என்பதைவிடவும், அவர்களுடைய வாழ்விலிருந்து, வலியிலிருந்து, சிரிப்பிலிருந்து, காயத்திலிருந்து, கண்ணீரிலிருந்து, ரகசியத்திலிருந்து எழுதப்பட்டவை. எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுடைய மனதின் மொழியிலிருந்து எழுதப்பட்ட கதைகள்.
       பெற்ற மகளை ‘அம்மா’ என்று அழைக்கிற பழக்கமும், தங்கையை ‘அம்மா’ என்று அழைக்கிற பண்பும் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது. பொதுவாக பெண் பிள்ளைகளை ‘அம்மா’ என்று அழைக்கிற பண்பும் இருக்கிறது. இதற்காக நாம் பெருமை கொள்ள முடியுமா? ‘அம்மா-அம்மா’ என்று அழைத்த, வளர்த்த அப்பாதான் சொந்த மகளிடமே உறவு கொள்ள முனைகிறார். டியூஷனுக்கு வருகிற பிள்ளையிடம் உறவுகொள்ள முனைகிறார் ஆசிரியர். ‘அண்ணா-அண்ணா’ என்று அழைக்கிற தங்கையிடம் செய்யக்கூடாததை எல்லாம் செய்கிறார் அண்ணன். பேரப் பிள்ளையிடம் தாத்தா எப்படி நடந்துகொள்கிறார்? ‘வயதுக்கு வரும்போது உனக்கு நான்தான் சீர் கொண்டுவருவேன்’ என்று சொல்கிற மாமா என்ன செய்கிறார்? எல்லாம் கதையாகியிருக்கிறது. பொய் கலப்பில்லாமல், தாத்தாவிடம், மாமாவிடம், அப்பாவிடம், அண்ணனிடம், ஆசிரியரிடம் – வயதுக்கு வருகிற பக்குவத்தில் இருக்கிற பெண் பிள்ளைகள் படுகிற அவஸ்தைகள் சாகிறவரைக்கும் சொல்ல முடியாத ரகசியம். பிறரிடம் காட்ட முடியாத காயம். துயரம். வெளியில் சொல்லமுடியாத எரிக்கும் ரகசியங்கள். இந்த கதைகள், பெண் பிள்ளைகளை ‘அம்மா-அம்மா’ என்றழைக்கிறீர்களே – அது உண்மைதானா என்ற கேள்வியை கேட்கிறது. கேள்வி முழக்கமாக இல்லை. கோஷமாக இல்லை. வாழ்க்கை அனுபவமாக இருக்கிறது. நம்முடைய சமூகம் பெண்களை எப்படி பார்க்கிறது, எப்படி நடத்துகிறது என்பதற்கு அ.வெண்ணிலாவின் கதைகள் நேரடி சமூக சாட்சிகளாக இருக்கின்றன. நிஜமான இலக்கியப்படைப்பு என்பது சமூக வாழ்விலிருந்தும், அதனுடைய அவலத்திலிருந்தும் எழுதப்படுவதுதானே?
       பிருந்தாவும் இளம்பருவத்து ஆண்களும் கதைத் தொகுப்பில் முதல் ஐந்து கதைகள் பிருந்தாவைப்பற்றியது மட்டுமே என்று சொல்ல முடியாது. இப்படியான பிருந்தாக்கள் நம்முடைய வீட்டிலும் இருக்கலாம். பக்கத்து வீட்டில், தெருவில், ஊரில் என்று பல பிருந்தாக்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய துயரம் வெளியே தெரியாது. அவர்களால் வாய்விட்டுக்கூட அழமுடியாது. காரணம் பழி அவர்கள் மீது விழுந்துவிடும். நம்முடைய சமூகம் ஆண்களால் கட்டமைக்கப்பட்ட, ஆண்களுக்கான சமூகம் என்பதைத்தான் பிருந்தாக்களின் கதைகள் சொல்கின்றன. நாம் அன்றாடம் பல பிருந்தாக்களை சந்திக்கிறோம். உருவாக்குகிறோம். எதிலும் நமக்கு வெட்கமில்லை.
       சிறுமிகள் மட்டும்தான் தவறாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று சொல்லமுடியாது. படித்த, நாகரீகமிக்க, உயர்பதவியில் இருக்கிற பெண்களிடம் ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதையும் ஒரு கதை சொல்கிறது. கதையில் நிகழும் சம்பவங்களைப் பார்க்கும்போது நாம் படித்தவர்கள்தானா? உயர்ந்த பதவியில் இருப்பவர்கள்தானா? என்ற கேள்வி எழுகிறது. படித்தவர்கள் நாகரீகமிக்கவர்கள் முகநூல் பக்கத்தில் எப்படி, எவ்விதமாக நடந்துகொள்கிறார்கள்? மூன்று வேளை உணவைவிட, குடிக்கிற தண்ணீரைவிட முகநூல் பக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றைய வாழ்க்கையில் எவ்வளவு அத்தியாவசியமாகிவிட்டது என்பதை ஒரு கதை சொல்கிறது. பிள்ளை கனியமுதே கதையிலும், பொன்னம்மா கதையில் வரும் மனிதர்களும் மனிதர்கள்தானா? சோடாக்கடை பொன்னம்மா, ஏற்கெனவே கல்யாணமாகி, மனைவி, குழந்தைகளுடன் இருக்கிற ராமய்யா தேவருடன் இணைந்து முருகன் என்ற குழந்தைக்கு தாயாகிறாள். முதல் தாரத்து குழந்தைகளிடமும், குடும்பத்தாரிடமும் தெருவில் உள்ளவர்களிடமும் முருகன் படுகிற அவமானம் எவ்வளவு? அதே மாதிரி பிள்ளை கனியமுதே கதையில் வருகிற ஜெயாவின் அம்மா, ஏற்கனவே கல்யாணமாகி, குழந்தைகளுடன் இருக்கிற ஆளுடன் இணைந்து வாழ்கிறாள். இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிறாள். ஜெயாவும், அவளுடைய தம்பி குமாரும் முதல் தாரத்து மனைவியிடமும், குழந்தைகளிடமும் படுகிற அவமானம் எவ்வளவு? முதல் தாரத்து மனைவிகள் கோபப்படுவதில்கூட நியாயம் உண்டு. இரண்டாவது மனைவி வைத்துக்கொள்கிற மகன்களிடம் கோபப்படாத தாய்கள், மகனுடைய இரண்டாம் தாரத்துக் குழந்தைகளிடம் ஏன் கோபப்படுகிறார்கள் என்பதுதான் முரண். தானே விரும்பி இரண்டாம் தாரமாக போகிற பெண்கள் படுகிற துயரத்தைவிட அவர்களுடைய தாய்கள் படுகிற துயரம் இன்னும் கொடூரமானது. இந்த இரண்டு கதையிலும் இரண்டாம் தாரத்துக் குழந்தைகள் படுகிற அவமானங்களை எளிதாக விவரிக்க முடியாது. இந்த இரண்டு கதைகளில் பெண்களின், குழந்தைகளின் துயரினை மட்டும் சொல்லவில்லை. இரண்டாம் தாரம் வைத்துகொண்ட ஆண்களின் இயலாமையையும், பரிதவிப்பையும், தத்தளிப்பையும் ஜோடனை இல்லாமல் சொல்கிறார். அ.வெண்ணிலா துயரத்தையும், துயரமில்லாமல் சொல்கிறார். வாழ்க்கையின் நிஜம் இப்படித்தான் இருக்கிறது என்ற அளவோடு நிறுத்திக்கொள்கிறார். கூடுதல் அழுத்தம் தரவில்லை. கூடுதல் அழுத்தம் தரும்போது கதை செயற்கையாகிவிடும் என்பது கதாசிரியருக்கு தெரிந்திருக்கிறது. இந்த அறிதல்தான் கதை சொல்லிக்கான திறன். தனக்கு தெரிந்ததையெல்லாம் கொட்டித்தீர்ப்பது அல்ல இலக்கியப் படைப்பு. கண்ணீரின் வழியே கதைகளுக்கு வலு சேர்க்க விரும்பவில்லை அ.வெண்ணிலா.
       இந்தியா தொழில்நுட்பத்தில், பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்துவிட்டது. அணு ஆயுதத்தில் வல்லரசாகிவிட்டது என்று பெருமை கொள்வதில் ஒரு துளிகூட நியாயமில்லை. இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய பெண்கள் பொது இடங்களில்தான் இன்றுவரை சிறுநீரும், மலமும் கழிக்கிறார்கள். கிராமப்புறத்திலிருக்கிற ஒரு பெண்ணினுடைய உச்சப்பட்ச ஆசையாக இருப்பது – தான் ஒரு மறைவான இடத்தில் சிறுநீரும், மலமும் கழிக்க வேண்டும் என்பது. அந்த எளிய ஆசையைக்கூட நிறைவேற்ற முடியாத நாடு அணு ஆயுதத்தில் வல்லரசாகி என்ன செய்யப் போகிறது என்பதுதான் ‘வெளிய’ என்கிற கதை. சிறுமிகள் முதல் கிழவிவரை ஒவ்வொரு நாளும் சிறுநீரும் மலமும் கழிப்பதற்காக படுகிற சித்திரவதை எளிதில் விவரிக்க முடியாது. அதை மிக அழகான கதையாக அல்ல, காட்சியாக செய்திருக்கிறார் கதாசிரியர். ‘வெளிய’ கதையை படிக்கிற எல்லாருடைய மூக்கிலும் மலவாடையின் வீச்சம் நிறையும். அ.வெண்ணிலாவின் கதைகள் எந்த அளவுக்கு சிரிக்க வைக்கிறதோ அதே அளவுக்கு அழவும் வைக்கிறது. தினம்தினம் மலம் கழிப்பதற்காக கையில் குச்சியை வைத்துக்கொண்டு பன்றிகளுடன் போராடுகிற பெண்கள் வேறு எந்த நாட்டில் இருக்கிறார்கள்? பெண்ணியப் பிரச்சனை என்பது இதுதான். பெண்ணியவாதிகள் பேசவேண்டிய விசயம் இதுதான்.
       ‘திறப்பு’ கதை நகரத்துக் குழந்தைகள் அன்றாடம் சந்திக்கிற கொடூரத்தை விவரிக்கிறது. கணவனும், மனைவியும் அலுவலகம் செல்லும்போது குழந்தைகளை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு போகிறார்கள். பூட்டப்பட்ட வீட்டிற்குள் குழந்தைகளின் உலகம் என்னவாக இருக்கிறது என்பதுதான் கதை. ‘மூக்குச்சளி மரமும் ஒரு விடுமுறை நாளும்’ என்ற சிறுகதை கிராமத்தில் இருக்கிற குழந்தைகளின் முழுமையான உலகைக் காட்டுகிறது. இரண்டு முரண்பட்ட உலகம். வாழ்க்கை, கிராமப்புறங்களில் குழந்தைகள். குழந்தைகளாக இல்லாமல் பெரியவர்களாக வாழ்கிறார்கள். வளர்கிறார்கள். நகரத்தில் பூட்டப்பட்ட வீட்டிற்குள் தொலைக்காட்சி, கணினி, வீடியோ கேம் என்று பொருள்களோடு பொருள்களாக வாழ்கிறார்கள். குழந்தைகளை குழந்தைகளாக வாழவும், வளரவும் விடாத சமூகம் நம்முடையது என்பதை நாசூக்காக சொல்கிறது இந்த இரண்டு கதைகளும். அடையாளம் என்ற கதை மிகவும் சுவாரசியமாக சொல்லப்பட்ட கதைகளில் ஒன்று. கதாசிரியர் நகைச்சுவையாகவும் எழுதுவார் என்பதற்கு ‘அடையாளம்’ கதை சாட்சி. தமிழ்நாட்டில் இருக்கிற அரசுப்பள்ளிக்கூடங்கள், ஆசிரியர்கள், வகுப்பு லீடர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிய இக்கதையைப் படித்தால் போதும். முழு சித்திரமும் கிடைத்துவிடும். மனிதர்கள் ஏன் சின்னச்சின்ன விசயங்களுக்கெல்லாம் மிருகத்தனமாகிவிடுகிறார்கள்? கணவனை இழந்த ஒரு பெண் தனி வாழ்வில், சமூக வாழ்வில் சந்திக்கும் நெருக்கடிகள் எவ்வளவு? சிறுமிகளாக இருந்தாலும், நடுத்தரப் பெண்களாக இருந்தாலும் கிழவிகளாக இருந்தாலும் சாபம் மாதிரி ஏன் அவர்களை மட்டும் துயரம் வாட்டிக்கொண்டே இருக்கிறது?  தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் பெண்கள்படும் துயரினை விவரிப்பதாக இருக்கிறது. இந்த துயர் இட்டுக்கட்டியதல்ல. நிஜம். பெண்களாக ஏற்படுத்திக்கொண்ட துயரமல்ல இது.  ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் கதை. மனித வாழ்வின் அவலம், கீழ்மை, பசி, அவமானம். கயமை, சிறுமைத்தனம் என்று எல்லா எதார்த்தங்களையும் இயல்பான போக்கில் அ.வெண்ணிலா எழுதியிருக்கிறார். ‘பகிர்தல்’ புதுவிதமாக எழுதப்பட்ட நல்ல கதை. சவாலான கதை. மொழியும் வலுவானது. எழுத்து வழக்கைவிடவும் கதாசிரியரிடம் பேச்சுவழக்கு பூச்சில்லாமல் அசலாக வெளிப்படுகிறது. இது கதைகளுக்கு கூடுதல் ஈர்ப்பை தருகிறது.
       பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் – கதைத் தொகுப்பில் மூன்று கதைகளைத்தவிர மற்ற எல்லாக் கதைகளுமே குழந்தைகளை அதுவும் பெண் குழந்தைகளைப்பற்றிய கதைகள்தான். சிறு வயது பிள்ளை முதல் சாகப்போகிற கிழவிவரை என்ற வரிசையில் – அடுக்கிப்பார்த்தால் ஒரு நாவலில் அடுத்தடுத்த அத்தியாயங்கள்போல இந்த சிறுகதைகளுக்குள் ஒற்றுமையும் தொடர்ச்சியும், இணைப்பும் இருப்பது தெரியும். இத்தன்மை இக்கதைகளுக்கு கூடுதலான கணத்தைக் கொடுக்கிறது. நாம் அன்றாட வாழ்வில் சாதாரணம் என்று பார்த்துவிட்டு ஒதுங்கிப்போன பல விசயங்களை அ.வெண்ணிலா அசாதாரண கதைகளாக உயிர்ப்புள்ள மொழியில் எழுதியிருக்கிறார். இக்கதைகளை படித்துவிட்டு ரசிக்க முடியாது. வருத்தப்படலாம். அழலாம். நம்முடைய சமூகத்தின் மற்றுமொரு முகத்தை இக்கதைகள் கண்ணாடி மாதிரி காட்டுகின்றன.

பிருந்தாவும் இளம்பருவத்து ஆண்களும்,
(சிறுகதை தொகுப்பு)
அ.வெண்ணிலா,
விகடன் பிரசுரம் – 2013,
757 – அண்ணா சாலை,
சென்னை.
விலை – ரூ.100

16.12.2016 – புதிய தலைமுறை

வெள்ளி, 9 டிசம்பர், 2016

ததும்பி வழியும் மௌனம் (கட்டுரைத் தொகுப்பு)– அ.வெண்ணிலா விமர்சனம் – எழுத்தாளர் இமையம்.

ததும்பி வழியும் மௌனம் (கட்டுரைத் தொகுப்பு)– அ.வெண்ணிலா
விமர்சனம் – எழுத்தாளர் இமையம்.
ததும்பி வழியும் மௌனம் நூலில் முப்பத்தியெட்டு கட்டுரைகள் இருக்கின்றன. தமிழ்ச் சமூக வாழ்வை முப்பத்தியெட்டு விதமாக பார்த்திருக்கிறார், விமர்சித்திருக்கிறார் அ.வெண்ணிலா என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். குழந்தைகளைப்பற்றி, கல்வி முறை, மருத்துவம், வீடு, சினிமா, நகர்மயம், காட்சி ஊடகங்கள், கிராமம், நவீன வாழ்க்கைமுறை தொழில்நுட்பம், கைவிடப்பட்ட முதியோர்கள், பெண்கள் சந்திக்கும் கொடூரங்கள், உணவு பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம், நவீன வாழ்க்கை, விளையாட மறந்த குழந்தைகள் என்று சமூகத்திலுள்ள பல விசயங்கள் குறித்து தெளிவாகவும், துல்லியமாகவும் இக்கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
       இன்றையக் கல்விமுறை குறித்த அ.வெண்ணிலாவின் அக்கறை முக்கியமானது. இலவசமாக பெற வேண்டிய கல்வியை ஏன் விலைகொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது? எல்.கே.ஜி. முதல் மருத்துவப் படிப்புவரை ஒவ்வொரு படிப்புக்கும் ஒவ்வொரு விலையென பகிரங்கமாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்கப்படுவது எப்படி? தனியார்மய கல்வி கொள்ளையை அரசும், பெற்றோர்களும் ஆதிரிப்பதற்கான, ஊக்கப்படுதுவதற்கான காரணங்கள் என்ன? பத்தாம் வகுப்பு பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலிருந்தும், பனிரெண்டாம் வகுப்பு பாடத்தை பதினொன்றாம் வகுப்பிலேயே தனியார் பள்ளிகள் ஏன் நடத்துகின்றன? இந்த போக்கை அரசும், பெற்றோர்களும் ஏன் ஆதரிக்கிறார்கள் என்று நூற்றுக்கணக்கான கேள்விகளை கட்டுரைகளின் வழியே ஆசிரியர் கேட்கிறார். இந்தக் கேள்விகள் கற்பனையாகவோ, யூகமாகவோ கேட்கப்படவில்லை. தமிழ்நாட்டிலுள்ள எல்லாருக்குமே இந்த கேள்விகளுக்குப் பின்னால் உள்ள உண்மை தெரியும். ஆனால் யாருமே பதில் சொல்லப்போவதில்லை. காரணம் – எல்லாருமே குற்றவாளிகள். கல்வித்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பது சமூகத்தின் வீழ்ச்சி. என்பதை ‘அனல் மேலே பனித்துளி’ என்ற கட்டுரை விவரிக்கிறது. அசலான அறிவை பெறுவதற்கு எதிராக நம்முடைய கல்விச்சூழல் இருக்கிறது என்பது கட்டுரை -  ஆசிரியரின் கவலை.
       மூன்று நான்கு நூற்றாண்டுகளில் அடைய வேண்டிய வளர்ச்சியை, மாற்றத்தை கடந்த இருபது முப்பதே ஆண்டுகளில் தமிழகம் பெற்றிருக்கிறது. குறிப்பாக தொலைத்தொடர்பில், போக்குவரத்தில், காட்சி ஊடகத்துறையில். இந்த வளர்ச்சி தனிமனித வாழ்வில், சமூக வாழ்வில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது? இந்த மாற்றங்களினால் தமிழ்ச்சமூகம் பெற்றது என்ன, இழந்தது என்ன? பெற்றது அதிகமா, இழந்தது அதிகமா என்பதை மிகவும் நுணுக்கமாக புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மட்டுமல்ல சமூக உளவியலின் அடிப்படையிலும் நிதானமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார் அ.வெண்ணிலா. எதையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேச வேண்டும் என்ற உள்நோக்கம் சிறிதுமின்றி பிரச்சினைகளையும் அது ஏற்படுத்திய தாக்கங்களையும் மட்டுமே எழுதியிருக்கிறார். மனதில் பதியும்படியும், உரைக்கும்படியும். தொலைபேசிகள் பொய்களை வளர்க்கும் கருவியாக மாறிப்போன விந்தைப்பற்றியும் பேசியிருக்கிறார்.
       நகர்மயம் கிராமத் தற்சார்பு தன்மையை எப்படி அழித்தது என்பதுபற்றி அ.வெண்ணிலா எழுதியிருக்கிறார். விளை நிலங்கள் மனைகளானது, ஏரி, குளங்கள் பிளாட்டுகளானது, நீர்நிலைகளை அழித்தது மட்டுமல்ல, தயிர்க்காரி, வளையல்காரன், பூம்பூம் மாட்டுக்காரன், இரவில் குறி சொல்கிறவன் என்று நூற்றுக்கணக்கான கிராம வாழ்வோடு ஒட்டியிருந்த மனிதர்களை காணாமல் செய்துவிட்டது. மனிதர்கள் மட்டும் அழிந்து போகவில்லை. அவர்களோடிருந்த தொழிலும் மறைந்துவிட்டது. கிராமத் தெருக்கள் இன்று வெறிச்சோடி கிடக்கின்றன என்பதை ‘தெரு மனிதர்கள்’ கட்டுரையில் பார்க்கலாம். கிரிக்கெட் என்ற மீடியா அரசியல் விளையாட்டு – தமிழகத்திலுள்ள எல்லா கிராம விளையாட்டுகளையும் அடையாளமில்லாமல் செய்துவிட்டது. நகரத்து மனிதர்கள் மட்டுமல்ல கிராமத்து மனிதர்களும் இன்று தொலைக்காட்சியின்முன்தான் உட்கார்ந்திருக்கிறார்கள். தொலைக்காட்சியைத்தான் பார்க்கிறார்கள். தொலைக்காட்சியோடு மட்டும்தான் பேசுகிறார்கள். மனிதர்களோடு பேசுவதற்கு யாருக்கும் நேரமில்லை. விருப்பமுமில்லை. இன்று நகரத்து மனிதர்களுக்கும் கிராமத்து மனிதர்களுக்குமிடையே மனரீதியான வேற்றுமைகளைப் பார்ப்பது அரிது. நகரம் – கிராமம் இரண்டு வாழ்வையும் ஒப்பிட்டு, சமூக வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் மிகுந்த அக்கறையோடு எழுதியிருக்கிறார். கட்டுரை ஆசிரியரின் அக்கறையும், கவலையும், நம்மையும் பிடித்துக்கொள்கிறது. இன்றைய இளைஞர்களின் மனோபாவம் என்னவாக இருக்கிறது? எப்படிப்பட்ட உயர்வான விசயத்தையும் உதாசினம் செய்கிற குணம் எப்படி வளர்ந்தது என்று வேதனையோடு கேட்கிறார்.
       பெண்கள் என்றாலே சமையல், பட்டுப் புடவை, நகை, அலங்காரம், ஊர் வம்பு பேசுதல் என்பதாக மட்டுமே சமுக மனதில் பதிந்துள்ளதற்கு யார் காரணம்? பெண்கள் சமைப்பது பெண்களுக்காக மட்டுமா? முதல் குழந்தை – பெண்ணாக பிறந்தால் ‘லட்சுமி’ வந்துள்ளது என்று பெருமை கொள்கிறோம். பெண் தெய்வங்களை அதிகமாக கொண்டுள்ள சமூகம். எல்லாவற்றிற்கும் பெண்களை முன்னிருத்துகிற தமிழ்ச்சமூகத்தில்தான் ஐந்துவயது பெண் குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறது. காதலிக்க மாட்டேன் என்று சொல்கிற பெண்ணின் மீது ஆசிட் ஊற்றப்படுகிறது. கவர்ச்சிகரமாக ஆடை அணிந்திருந்ததால் வன்புணர்ச்சிக்குட்படுத்தப்பட்டாள் என்று கூறுகிறது. படித்த, நாகரீகமிக்க சமூகத்தில் நடைபெறக்கூடிய செயல்களா இவை என்று அ.வெண்ணிலா கேட்கிறார். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பணிக்கு செல்லும் பெண்கள், பஸ்ஸில், ரயிலில், அலுவலகத்தில் தினம்தினம் சந்திக்கும் இழிவுகள், கொடூரங்கள் எவ்வளவு? பெண் என்பதைத்தவிர இவர்கள் செய்த குற்றம் என்ன என்ற கட்டுரை ஆசிரியரின் கேள்விக்கு யாரிடத்தில் பதில் இருக்கிறது? உண்மையை உண்மையாக எழுதி இருக்கிறார். தமிழ் சமூகம் வெட்கப்பட வேண்டிய பல இடங்களை நாசூக்காக சுட்டிக்காட்டிருக்கிறார். பெண்ணிய கோசமில்லாமல், முழக்கமில்லாமல், நடைமுறை வாழ்விலிருந்தே அனைத்து விசயங்களும் பார்க்கப்ட்டுள்ளன. விமர்சிக்கப்பட்டுள்ளன. அ.வெண்ணிலா ஒரு பெண். அதனால் அவர் பெண்களுக்கு ஆதரவாகவும், ஆண்களுக்கு எதிராகவும் எழுதியிருப்பார் என்று சந்தேகப்பட அவசியமில்லாமல் ‘ஆண் குழந்தைகளை அரவணைப்போம்’ என்ற கட்டுரையில் ஆண் குழந்தைகளின் இன்றைய பரிதாப நிலைக்காகவும் வருந்துகிறார். இது கட்டுரை ஆசிரியரின் சமநிலை மனதினைக் காட்டுகிறது.
       ததும்பி வழியும் மௌனம் கட்டுரைத் தொகுப்பில் ‘சாயுங்கால மனிதர்கள், பசுமை நிறைந்த நினைவுகளில், வேருக்கு நீரானவர்கள் ஆகிய கட்டுரைகளை கண்ணீருடன்தான் படிக்கமுடியும். இந்த மூன்று கட்டுரைகளையும் – கட்டுரை என்று சொல்லாமல் சிறுகதைகள் என்று சொல்வது கூடுதல் பொருத்தமாக இருக்கும். இன்று படிப்பும், பணமும், நகரமும் மனித உறவுகளை பிய்த்தெறிந்துவிட்டது. கிராமத்தில் இருப்பதே இழிவானது என்ற மனப்போக்கு. ஏற்பட்டுள்ளது. சொந்த வீட்டிலேயே எத்தனையோ மனிதர்கள் அனாதைகளாக வாழவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இன்றைய வாழ்க்கை எல்லாவற்றையுமே பணமாகவும், பொருளாகவும் பார்க்க கற்றுத்தந்திருக்கிறது. மனித உறவுகள் சார்ந்த மதிப்பீடுகள் கேலிக்குரியனவாகிவிட்டன என்பதை மூன்று கட்டுரைகளிலும் நேர்த்தியாக எழுதியிருக்கிறார். தமிழ் சினிமா பெண்களுடைய வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த மாற்றங்கள் என்ன விதமான விளைவுகளை உண்டாக்கியிருக்கிறது என்பதை விரிவாக எழுதியிருக்கிறார். பெண்களுடைய மனதுக்கு பெரிய ஆறுதலை சினிமாப் பாடல்கள் தந்திருக்கின்றன. 1990க்கு முந்தைய சினிமாப் பாடல்கள் ஏதாவது ஒரு விதத்தில் நம்மை பாதித்திருக்கிறது. சமூகத்தைப் பாதித்திருக்கிறது. இதன் தாக்கம்தான் தமிழகத்தினுடைய அரசியல்வாதிகள் சினிமாத்துறையிலிருந்தே வருகிறார்கள் என்பதை சரியான உதாரணங்களுடன் அ.வெண்ணிலா எழுதியிருக்கிறார். அதே நேரத்தில் ஒரு நடிகர் அரசியல்வாதியாக மாறும்போது சமூகம் அவரைப் பார்க்கிற விதமும், விமர்சிக்கிற விதமும் வேறாக இருக்கிறது. ஒரு நடிகை அரசியல்வாதியாக மாறும்போது சமூகம் அவரைப் பார்க்கிற விதம், விமர்சிக்கிற விதம் வேறாக இருக்கிறது, இந்த வேறுபாடு ஏன்? ஒரு கட்டுரையை கண்ணீர் நிறைந்த கண்களுடன் படிக்கமுடியும் என்று நிரூபித்த கட்டுரைத் தொகுப்பு இது. கட்டுரையை படிக்கிறோம் என்ற உணர்வு மொத்த நூலிலும் வரவில்லை. உண்மையாகவே இது அதிசயம். இதற்குக் காரணம் பல கட்டுரைகள் சுயசரிதை தன்மையுடன் எழுதப்பட்டிருப்பது. கட்டுரையை வெறும் தகவல்களாக, புள்ளிவிபரத்தொகுப்புகளாக இல்லாமல் சமூகத்தில் நடந்த யாரோ ஒருவருடைய விசயம் என்ற அளவில் மட்டும் எழுதாமல் பொது விஷயத்தோடு தன்னுடைய சொந்த விசயத்தையும் இணைத்து எழுதியிருப்பதுதான் இக்கட்டுரைகளின் பலம். அதுதான் படிக்க வைக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் பாரபட்சமற்ற கூர்மையான சமூக விமர்சனம்.
       இன்று விசேஷ நாட்கள், பண்டிகை நாட்கள் என்பது நடிகர், நடிகைகளின் சிறப்பு பேட்டிகளையும், சிறப்பு பட்டிமன்றங்களையும் பார்ப்பது என்றாகிவிட்டது. தீபாவளி, பொங்கல் என்பது பெரிய கொண்டாட்டத்திற்குரியன அல்ல. பொங்கல் என்பது இன்று ஒன்றுமே இல்லை. தீபாவளிதான் தமிழர் பண்டிகை என்று மாற்றிவிட்டது ஊடகங்கள், இன்றைய தலைமுறையினருக்கும், முந்தைய தலைமுறையினருக்கும் பொங்கல் என்பது வேறுவேறு பொருளில் உணரப்படுகிறது. நேற்றைய வாழ்க்கை இன்றைய வாழ்க்கைக்கு படிப்பாக இல்லை. வெறும் நினைவாக மட்டுமே இருக்கிறது. தொலைக்காட்சியாலும், சினிமாவாலும் தமிழ்ச்சமூகம் இழந்ததை அளவிட முடியுமா என்று கட்டுரை. ஆசிரியர் கவலை கொள்கிறார். அவருடைய கவலை மொத்த சமூகத்திற்குமானது. அதே மாதிரி போன தலைமுறைக்கும் இந்த தலைமுறைக்கும் ‘வீடு’ என்பதின் பொருள் மாறியிருக்கிறது. இன்று வீடு என்பது ஆடம்பரம். பிரம்மாண்டம். பிற மனிதர்களிடமிருந்து துண்டித்துக்கொள்வதற்கான இடம். ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்று போர்டு தொங்கவிடுகிற இடம். தகுதி. கௌரவம். அந்தஸ்து. வீடு பற்றிய நம்முடைய மதிப்பீடுகள் எப்படி மாறிவிட்டன என்பது குறித்து ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்.
       வீடே இன்று சினிமா தியேட்டர்போல இருக்கிறது. இன்றைய நம்முடைய வீடுகளில் பேச்சு என்பது அரிதான ஒன்றாக இருக்கிறது. ஒரு காலத்தில் பேச்சுதான் மனிதர்களை வாழ வைத்தது. ஒன்றிணைத்தது. சோறாக இருந்தது என்பதை ‘அனிச்சை மலரல்ல’ என்ற கட்டுரை விரிவாகப் பேசுகிறது. படித்தவர்கள், நாகரீகமிக்கவர்கள் என்ற போர்வையில் நாம் தொலைத்த, பேச மறுத்த சொற்கள் எவ்வளவு? இன்று நாம் பேசுகிற சொற்களில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? பொருளிழந்த, சாரமிழந்த சொற்களைத்தான் இன்று பயன்படுத்துகிறோம். ‘சூப்பர்’ என்ற ஒரு சொல் எத்தனை தமிழ் சொற்களை கொன்றிருக்கிறது? சொற்களில் இழிவானது, கெட்டது என்று உண்டா? ஆனால் நாம் அப்படித்தான் பாகுபடுத்தி வைத்திருக்கிறோம். இந்த பாகுபாடு மனித மனதிற்கு மட்டுமே உண்டானது. சொற்களுக்கு அல்ல என்பது அ.வெண்ணிலாவின் வாதம். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம். ‘அழகு மலராட’ கட்டுரையில் பள்ளி ஆண்டுவிழாவில் நடக்கும் நிகழ்ச்சிகளை அப்படியே காட்சியாக்கி இருக்கிறார். நிர்வாகத்திற்கு ஒரு கவலை, ஆரிரியர்களுக்கு ஒரு கவலை, நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளின் மனநிலை, தங்களுடைய பிள்ளைகளின் நிகழ்ச்சியை காணவந்த பெற்றோர்களின் மனநிலை, சிறப்பு அழைப்பாளர்களின் மனநிலையென்று ஒவ்வொரு விசயமாக விவரித்து ஒரு சினிமாவை பார்த்த நிறைவை ஏற்படுத்தியிருக்கிறார் அ.வெண்ணிலா.
       மரணங்கள் ஏன் நம்மை அதிரவைப்பதில்லை? அழ வைப்பதில்லை என்று ‘நிழல் மனிதர்கள்’ என்ற கட்டுரையில் கேட்கிறார். எது நம்மை மரத்துப்போக வைத்திருக்கிறது? மரணங்களின் எண்ணிக்கையா? அது ஒரு காரணம் மட்டுமே. தனிமனித மனோபாவமும், சமூகத்தின் மனோபாவமும் முற்றிலும் இன்று மாறிவிட்டது. தனிமனித அறமும், சமூக அறமும் இன்று பெயர் அளவில் மட்டுமே இருக்கிறது. எங்கே நாம் தோற்றுப்போனோம்? நகர வாழ்வும், தொழில்நுட்பமும் நம்மை இயந்திரங்களாக்கிவிட்டன என்ற கவலை அ.வெண்ணிலாவுக்கு மட்டுமே உரியதல்ல. ஒரே நாளில் நாம் விபத்துகளின் வழியே விதவிதமான மரணங்களை ஒரு துளி கண்ணீரின்றி கடந்துபோகிறோம். எப்படி? சமூக வெளி என்பது இன்று அச்சுறுத்தக்கூடிய இடமாக இருக்கிறது. யாருமே இன்று பாதுகாப்பாக இல்லை. ஏன்? காட்சி ஊடகங்கள்தான் குழந்தைகளுக்கு இன்று பெரும் ஆபத்தாக இருக்கிறது. அந்த ஆபத்திலிருந்து குழந்தைகளை எப்படி காப்பாற்றப் போகிறோம்? அதே மாதிரி பொது வெளியும் இன்று குழந்தைகளுக்கு ஆபத்தான இடமாகத்தான் இருக்கிறது.
கட்டுரைகளில் அறிவார்ந்த விசயம், தமிழக, இந்தியப் பிரச்சனைகள், சமூகத்தை உலுக்கிய விசயங்கள் மட்டுமே பேசப்பட்டிருக்கும். ரொம்ப பெரியப்பெரிய விசயங்கள்தான் விவாதிக்கப்பட்டிருக்கும் என்று நம்பினால் – நமது நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக பல கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ‘அப்படியே சாப்பிடலாம்’ என்ற கட்டுரை உணவைப்பற்றி பேசுகிறது. நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ், பீட்சா, பர்கர், கட்லெட், குளிர்பானங்கள், சாக்லெட்டுக்கள் எப்படி நம்முடைய அன்றாட உணவாக மாறின என்பதையும், வாரத்தின் ஏழு நாட்களும் இட்லியும், தோசையும் சாப்பிடும் தலைமுறையின் உணவின் ருசி எப்படி இருக்கிறது என்பதையும் பாரம்பரிய தமிழ் உணவு கலாச்சாரம் எப்படி மாறியது, உணவையே மருந்தாக, கடவுளாக கருதிய நமது பாரம்பரியம் என்னவானது? அரிசி மரத்தை காட்டுங்கள் என்று கேட்கிற குழந்தைகள், சாப்பிடுவது என்றால் என்னவென்றே தெரியாத குழந்தைகள் என்று உணவின் அருமைப்பற்றி நேர்த்தியாக எழுதியிருக்கிறார் அ.வெண்ணிலா. நாகரீகம், நவீன உணவு என்ற பெயரில் உடலுக்கு தீங்கான உணவுகளை விரும்பி சாப்பிடுகிற அவலத்திற்கு எது நம்மை தள்ளியது என்று பெரிய ஆய்வையே நடத்தியிருக்கிறார். இந்த ஆய்வு மிகவும் முக்கியமானது. உணவுதான் வாழ்க்கை.
சமூகத்தை திறந்த மனதோடு பார்த்திருக்கிறார். சமூகத்தை பாதித்த, பாதிக்கக்கூடிய அத்தனை விசயங்களையும் பாரபட்சமின்றி எழுதியிருக்கிறார். மேம்போக்காக போகிற போக்கில் எழுதியிருக்கிறார் என்று ஒரு வாக்கியத்தைக்கூட காட்ட முடியாது அதே மாதிரி அவர் எழுதாத விசயம் என்று ஒன்றையும் சுட்டிக்காட்ட முடியாது. சில இடங்களில் அன்பாகவும், சில இடங்களில் கோபமாகவும் எழுதியிருக்கிறார். அன்பும், கோபமும் சமூக அக்கறையினால் ஏற்பட்டது. கட்டுரை ஆசிரியருக்கு வெறும் சமூக அக்கறை மட்டும் இருக்கவில்லை. பரந்துபட்ட பல்துறை சார்ந்த அறிவும் இருக்கிறது என்பதற்கு, கட்டுரைக்குத் தேவையான சான்றுகளை இலக்கியங்களிலிருந்தும் வரலாறுகளிலிருந்தும் நடைமுறை வாழ்விலிருந்தும் எடுத்து பயன்படுத்தியிருப்பது மட்டுமல்ல, சரியான இடத்தில் சரியான மேற்கோளை பயன்படுத்தி வாசகரின் கவனத்தைத் தக்க வைக்கிறார். அதே நேரத்தில் நாட்டுப்புற வழக்குகளையும் சிறப்பாக கையாண்டிருக்கிறார். படித்துவிட்டு மறந்துபோகிற, தூக்கிப்போடுகிற கட்டுரைத் தொகுப்பல்ல இது.    முப்பத்தியெட்டு கட்டுரையும் உயிரோட்டமான மொழியில், சிடுக்குகளற்ற சரளமான மொழியில் மனதை நெகிழச்செய்யக்கூடிய விதமாக எழுதப்பட்டிருப்பதால் அலுப்பு, சோர்வு எந்தக் கட்டுரையிலும் ஏற்படவில்லை. தமிழ்ச் சமூகத்தை புரிந்துகொள்வதற்கு காலத்தின் கண்ணாடியாக இருக்கிறது அ.வெண்ணிலா எழுதிய ‘ததும்பி வழியும் மௌனம்’. இந்நூல்பற்றி சொல்வதற்கு ஏராளம் இருக்கிறது. நான் அள்ளியது கைப்பிடி நீர்தான்.

ததும்பி வழியும் மௌனம்,
(கட்டுரைத் தொகுப்பு – 2015),
அ.வெண்ணிலா,
சூரியன் பதிப்பகம்,
229 – கச்சேரி சாலை,
மயிலாப்பூர்,
சென்னை – 4,
விலை – ரூ.160
அம்ருதா – டிசம்பர் 2016


சாந்தா (சிறுகதை) - இமையம்

சாந்தா  -  இமையம்
                சாந்தாவின் வீட்டிற்குமுன் காரை நிறுத்திவிட்டு இறங்கினான் செல்வக்குமார். வீட்டிற்குமுன் யாரும் இல்லாததால், இது அவளுடைய வீடுதானா என்ற சந்தேகம் வந்தது. திரும்பிப் பார்த்தான். எதிர்வீட்டுத் திண்ணையில் ஒரு பெண் தலைசீவிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவளிடம் “இது சாந்தா வீடுதான? ஆள் இருக்காங்களா?" என்று கேட்டான்.
"இருக்காங்க" என்று சொன்ன அந்த பெண் தலையை சீவி முடித்துவிட்டு சீப்பிலிருந்த முடியை பிடுங்கி, சுருட்டி தெருவில் விட்டெறிந்துவிட்டு வீட்டிற்குள் போனாள்.  வீடு தெருவிலிருந்து பத்தடி தள்ளி உள்ளேயிருந்தது. வீட்டைச்சுற்றி படல்வேலி போடப்பட்டிருந்தது. வாசல் படலை திறந்துகொண்டு போவதா, வேண்டாமா என்று யோசித்தான். "யார் வீட்டுல?" என்று கூப்பிடவும் தயக்கமாக இருந்தது. வீட்டில் யார் இருப்பார்கள்? அவளுடைய புருசன் இருப்பானா? மாமியார், பிள்ளைகள் என்று வேறு யாராவது இருப்பார்களா? வீட்டிற்கு ஏன் வந்தீர்கள் என்று கேட்பாளா, வீட்டிற்கு வந்தது சந்தோசம் என்று சொல்வாளா என்று பல விதமாக யோசித்தான். விருத்தாசலத்திலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரம்வரை வரும்போது எழாத கேள்விகள் எல்லாம் இப்போதுதான் அவனுக்குள் எழுந்தது. முப்பது கிலோமீட்டர் தூரம் தாண்டி வரமுடிந்த செல்வகுமாரால் ஏழுஎட்டு அடிதூரம் தாண்டி உள்ளே போக முடியவில்லை. அது பெரிய தூரமாக தெரிந்தது. போவதா, வேண்டாமா என்ற குழப்பம் உண்டாயிற்று.. சாந்தா இல்லாமல் வேறு யாராவது இருந்தால் "அடிப்பட்டத பாக்க  வந்தன்" என்று சொல்லிவிடலாம். தன்னையே சமாதானப்படுத்திக்கொண்டான். வேலை செய்கிற இடத்தில் அடிப்பட்டதை விசாரிப்பதற்காக வீட்டு முதலாளியே சித்தாள் வீட்டுக்கு வந்ததை யாராவது நம்புவார்களா என்ற  சந்தேகமும் உண்டாயிற்று. வீட்டைவிட்டு கிளம்பும்போது, ஆபிஸிற்கு போகிறேன் என்று மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு கிளம்பும்போது இருந்த உற்சாகத்தில் இப்போது ஒரு துளிகூட அவனிடத்தில் இல்லை. அப்போது வடக்கு பக்கமிருந்து வந்த ஒரு பையன் காரையே வெறித்துப் பார்த்தான். பிறகு செல்வக்குமாரை பார்த்தான். அந்த பையனிடம் கேட்டான் "இது சாந்தா வீடுதான? சித்தாள் வேல செய்யுறவங்க."
"இரு வரன்" என்று சொல்லிவிட்டு வேகமாக வாசல் படலை திறந்துவிட்டு நேராக வீட்டிற்கு சென்று லேசாக சாத்தியிருந்த கதவைத் திறந்து "ஒங்க ஊட்டுக்கு யாரோ கார்ல வந்திருக்காங்க" என்று சொல்லிவிட்டு திரும்பிவந்தான். வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த சாந்தா செல்வக்குமாரைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். உடனே வீட்டிற்குள் ஓடி சீலை, தலைமுடியை சரிசெய்துகொண்டு வெளியே வந்து, "வாங்க சார், உள்ளார வாங்க" சிரித்துக்கொண்டே கூப்பிட்டாள். செல்வக்குமார் வாசல் படலை தாண்டி வீட்டிற்குமுன் சென்றான். காரை வேடிக்கைப் பார்த்துகொண்டிருந்த பையனிடம் "யே தம்பி, ஒங்க ஊட்டுல இருந்து ஒரு சேர கொண்டா" சாந்தா சொன்னதும், பையன் ஒரே ஓட்டமாக ஓடிப்போய் பிளாஸ்டிக் சேர் ஒன்றை தூக்கிக்கொண்டு வந்து வாசல் முன்போட்டுவிட்டு திரும்பவும்போய் காரை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.
"உள்ளார ஒக்காருறீங்களா? இப்பிடியே ஒக்காருறிங்களா? வெளியில ஒக்காந்தா காத்தோட்டமா இருக்கும்" என்று சொன்னதோடு, சேரை செல்வக்குமார் உட்காருவதற்கு வசதியாக நகர்த்திப்போட்டாள். செல்வக்குமார் சேரில் வடக்குப் பார்த்து உட்கார்ந்தான். அவனுக்கு மூன்று நான்கடி தூரம் தள்ளி வாசலை ஒட்டி மேற்கு பக்கம் பார்த்த நிலையில் உட்கார்ந்தாள் சாந்தா.
"பக்கத்தில எங்கியாச்சும் வேல நடக்குதா?"
"இல்லியே" என்று சொன்ன செல்வக்குமார் சாந்தாவினுடைய முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று பார்த்தான். எதையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னையே செல்வக்குமார் பார்ப்பதை பார்த்த சாந்தா லேசாகச் சிரித்துக்கொண்டே "என்ன புதுசா பாக்குறப்ல பாக்குறீங்க சார்" என்று கேட்டதும் செல்வக்குமாருக்கு வெட்கமாகிவிட்டது. பதில் சொல்லாமல் சிரிக்க மட்டுமே செய்தான்.
"என்னா சார் இவ்வளவு தூரம் வந்து இருக்கிங்க?"
"ஒன்னெ பாக்கத்தான். அடிப்பட்டது சரி ஆயிடிச்சான்னு விசாரிக்கத்தான் வந்தன். அன்னிக்கி என்னா நடந்துச்சி?"
"அன்னிக்கி மூணுமணி இருக்கும். கலவய அள்ளி தூக்கிக்கிட்டுப் போறதுக்கு மேல இருந்த பாண்ட கீழ போடுன்னு ராணிகிட்ட சொன்னன். அது ஒவ்வொன்னா போட, நான் கீழயிருந்து புடிச்சி வச்சிக்கிட்டிருந்தன். அப்ப கலவய பாண்டுல, அள்ளிப் போட்டுக்கிட்டு இருந்த கொத்தனாரு ‘கொஞ்சம்கிட்ட தள்ளி வை’யின்னு சொன்னாரு. சரின்னு ஒரு பாண்ட  நவுத்தி வைக்கலாமின்னு போனன். அது தெரியாம ராணி போட்ட பாண்டு, நேரா வந்து எந் தலயில விழுந்துபோச்சி. மண்ட பொத்துக்கிச்சி. ஆறு தையலு போட்டுச்சி" என்று சொன்ன சாந்தா தலையில் தையல் போட்ட இடத்தைக் காட்டினாள். அதைப் பார்த்த செல்வக்குமார் "பெரிய காயம்தான்" என்று சொன்னான். அப்போது தெருவிலிருந்து வந்த சாந்தாவின் புருசன் பன்னீர், சாந்தாவையும், செல்வக்குமாரையும் மாறிமாறிப் பார்த்தான். பன்னீர் கேட்காமலேயே சாந்தா சொன்னாள். "நான் வேல செய்யப்போறனில்ல அந்த ஊட்டு சாரு. அடிப்பட்டது என்னாச்சின்னு கேக்கறதுக்கு வந்திருக்காரு." உடனே பன்னீர் செல்வக்குமாருக்கு வணக்கம் சொன்னான். செல்வக்குமார் வீட்டில் சாந்தா வேலை செய்து கொண்டிருக்கும்போது பாண்டு அவளுடைய தலையில் விழுந்தது, மருத்துவமனைக்குப் போனது, தையல்போட்டது, வீட்டுக்கு வந்தது என்று எல்லாவற்றையும் நேரில் பார்த்தவன் மாதிரி தானாகவே பன்னீர் சொன்னதைக் கேட்ட செல்வக்குமார் "அடிப்பட்ட அன்னிக்கி நான் ஊர்ல இல்ல. சி.ஈ மீட்டிங் மெட்ராசில. அதுக்கு நான் போயிட்டன். டனே வரமுடியல. ஆபிஸ் வேல. இன்னிக்கித்தான் வர முடிஞ்சிது. அதான் என்னான்னு பாத்திட்டு போவலாமின்னு வந்தன். கொத்தனார்கிட்ட அட்ரஸ் கேட்டன். கொடுத்தாரு. அடிப்பட்டதுமே போன்ல சொன்னாங்க. ஒடனே எங்க ஆளுங்களவிட்டு ஆஸ்பத்திரிக்கி கொண்டு போகசொன்னன். ஆஸ்பத்திரி செலவுக்கு பணமும் கொடுக்கச் சொன்னன்" என்று சொன்ன செல்வக்குமார் "பணம் கொடுத்தாங்களா?" என்று சாந்தாவிடம் கேட்டான்.
"கொடுத்தாங்க. காரிலியே ஊட்டுல கொண்டாந்து வுட்டுட்டுப் போனாங்க".
"அந்த நேரத்தில நீங்க செஞ்சது பெரியக் காரியம். எனக்கு என்னான்னு போயிருந்திங்கின்னா என்னா ஆவறது?" என்று சொன்ன பன்னீர் "டீ, கலரு, சோடா ஏதாச்சும் குடிக்கிறிங்களா சார்?" என்று கேட்டான்.
"அதெல்லாம் ஒண்ணும் வாண்டாம். நான் இப்ப கிளம்பிடுவன்" என்று சொன்னான்.
"அப்பிடின்னா நீங்க பேசிக்கிட்டு இருங்க" என்று செல்வக்குமாரிடம் சொன்ன பன்னீர் சாந்தா பக்கம் திரும்பி "நெல்லு அறுக்கிற மிஷன கூப்புட போவணும் வான்னு வேலுமயிலு கூப்பிட்டாரு. போயிட்டு வரன்" என்று சொன்னான். பிறகு "வரன் சார்" என்று செல்வக்குமாரிடம் சொன்னதோடு வணக்கமும் வைத்துவிட்டுப் போனான். பன்னீர்போன சிறிது நேரம் கழித்துசெல்வக்குமார் கேட்டான். "என்னா வேல செய்யுறாரு?"
"இன்னா வேலன்னு இல்ல. கூப்புடுற எடத்துக்குப் போவும், சொல்ற வேலய செய்யும். நெனச்சிக்கிட்டா ரெண்டு மூணு மாசம் பெங்களுருக்குப் போவும்."
"அடிக்கிறது. ஒதக்கிறதுன்னு ஒண்ணும் பிரச்சன இல்லியே."
"பணம் காசு இருக்கிற ஊட்டுல, கவர்மண்டு வேலயில இருக்கிறவங்க ஊட்டுல சண்டயே வராதா? புருசன் பொண்டாட்டின்னு இருந்தா, குடும்பமின்னு இருந்தா சண்ட சச்சரவு இல்லாம எப்பிடி சார் இருக்கும்?" சாந்தா சிரித்தாள். ஆனாலும் அவளுடைய குரலிலும் முகத்திலும் லேசான மாற்றம் ஏற்பட்டிருப்பதை பார்த்த செல்வக்குமார் "கஷ்டம்தான்" என்று சொன்னான். செல்வக்குமார் எதற்காக அந்த வார்த்தையை சொன்னான் என்பதை புரிந்துகொண்ட மாதிரி "கைகாலு நல்லா இருக்கணும் சார். அது ஒண்ணுதான் எனக்கு வேணும், எவ்வளவு கஷ்டமான வேலயா இருந்தாலும் செஞ்சிட்டு, சோறு தின்னுக்குவன்" என்று சொன்ன சாந்தாவின் குரலில் பெரிய மாற்றம் தெரிந்து. செல்வக்குமார் சாந்தாவினுடைய முகத்தையே கூர்ந்துப் பார்த்தான். ஆறுமாதமாக பார்த்துகொண்டிருந்தாலும் இவ்வளவு நெருக்கமாக அவன் அவளுடைய முகத்தை ஒருமுறைகூட பார்த்ததில்லை. தலையில் இருந்த காயத்தை மறைப்பதற்காக சிறுதுண்டை தலையில் போட்டிருந்தாள். அது ஒன்றுதான் உறுத்தலாக இருந்தது. அதை எடுத்துவிட்டால் அழகாகவே இருப்பாள் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. அவனுடைய மனதை அறிந்த மாதிரி சிரித்துக்கொண்டே "என்னா சார் அப்பிடி பாக்குறிங்க?" என்று கேட்டாள். அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் "செலவுக்கு என்னா செய்யுற?" என்று கேட்டான்.
"சோத்துக்குத்தான? அப்பறம் என்னா செலவு இருக்கு?" என்று கேட்ட சாந்தா, செல்வக்குமாரை பார்க்காமல் தரையைப் பார்த்தவாறு சொன்னாள். "ரெண்டு புள்ளங்களயும் கான்வெண்டுல சேத்ததால பெரிய கஷ்டமா இருக்கு. அதுக்கிட்ட சொன்னா கேக்க மாட்டங்குது. ஊர்ல ஏழு எட்டுப் புள்ளங்கல தவுத்து மத்ததெல்லாம் கான்வெண்டுலதான் படிக்குது. எம் புள்ளங்களும் கான்வெண்டுலதான் படிக்கணும். ஊரே ஒருவழியா போவயில, நான் மட்டும் தனி வழியா போவணுமா? இப்பலாம் கவர்மண்டு பள்ளிக்கூடத்தில எவன் பாடம் நடத்தறான்னு கேட்டு சண்டக்கி வருது" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு கோழி படலின்வழியே நுழைந்துவந்தது. சாந்தாவையும், செல்வக்குமாரையும் பார்த்தது. தயங்கியபடியே இரண்டு மூன்றடி முன்னே வந்தது. வீட்டிற்குள் போவதற்கு பார்த்தது. "த்தூ. த்தூ" என்று கோழியை விரட்டினாள் சாந்தா. கோழி வெளியே போகவில்லை. தலையில் போட்டிருந்த துண்டை எடுத்து பலமாக விசிறிய பிறகுதான் கோழி படலின் சந்துவழியே வீட்டிற்குப் பின்புறமாக எந்த பயமுமில்லாமல், எந்த அவசரமுமில்லாமல் தன்னிஷ்டப்படியே நடந்துசென்ற கோழியையே பார்த்துகொண்டிருந்த செல்வக்குமார் சாந்தாவிடம் "பீஸ் எப்பிடி கட்டுறிங்க" என்று கேட்டான்.
"பீஸ் கட்டமுடியாமத்தான் நான் சித்தாளு வேலக்கிப் போக ஆரம்பிச்சன். ஒரு வருசத்துக்கு மேல ஓடிப்போச்சி."
"எத்தன புள்ளங்க, எந்த கிளாஸ் படிக்குதுங்க?"
"பொண்ணு ஒண்ணாவது, பையன் எல்.கே.ஜி."
"ஸ்கூல் விட்டு வந்ததும் பசங்கள யாரு பாத்துக்குவாங்க?"
"எம் மாமியாரு."
"அவுங்க என்னாப் பண்றாங்க?"
"ஆடு மேய்க்குது."
"நான் ஒன்னெ பாக்க வந்ததில பிரச்சன ஒண்ணும் வராதே."
"அது அப்பிடிப்பட்ட ஆளில்ல சார்" சாந்தா சிரித்தாள்.
"எப்பிடி சொல்ற?"
"ஒங்களப் பத்தி அதுகிட்ட நான் சொல்லியிருக்கன் சார்."
"என்னான்னு?"
சாந்தா சிரித்தாள். அவள் சிரித்த விதம் ரகசியம் மாதிரி இருந்தது. எப்போதும் ரசிப்பதுபோல இப்போது செல்வக்குமாரால் அவளுடைய சிரிப்பை ரசிக்க முடியவில்லை. தன்னைப் பற்றி நல்ல விதமாக சொல்லியிருப்பாளா, கெட்டவிதமாக சொல்லியிருப்பாளா? செல்போன் நெம்பர் கேட்டு நச்சரித்ததை, தனியாக பேசமுயன்றதை, பஸ்ஸீற்கு பணம் கொடுக்க முயன்றதை, தீபாவளிக்கு சீலை எடுத்துக்கொடுக்கிறேன் என்று சொன்னதை, செருப்பை மாற்று என்று பணம் கொடுக்க முயன்றதை சொல்லியிருப்பாளா? எதை சொல்லியிருப்பாள்? என்று யோசித்தான். அப்போது தெருவிலிருந்து வந்த கிழவி சாந்தாவை நோக்கி வந்து "யாரு?" என்று கேட்டாள்.
"நான் வேல செய்யப்போன எடத்தில மண்ட ஒடஞ்சிப்போச்சில்ல. அந்த ஊட்டுக்கார சார். எப்பிடி அடிப்பட்டுதுன்னு விசாரிக்க வந்திருக்காரு." என்று சாந்தா சொன்னதும் "அன்னிக்கி இவுரு இல்லியா?" என்று கிழவி  கேட்டாள்.
"இல்ல." என்று சாந்தா சொன்னதை அந்த பெண் நம்ப மாட்டாளோ என்ற சந்தேகத்தில் தானாகவே செல்வக்குமார் சொன்னான். "நான் அன்னிக்கி மெட்ராசில மீட்டிங்குக்குப் போயிட்டன். இன்னிக்கித்தான் வந்தன். அதான் பாத்திட்டு போவலாமின்னு வந்தன்."
"கவர்மண்டு வேலயா?" கிழவி நேரிடையாக செல்வக்குமாரிடம் கேட்டாள்.
"ஆமாம். பி.டபிள்.யூ. டிபார்ட்மண்டுல இஞ்ஞினியர்."
"எம்மாம் சம்பளம்?"
கிழவி கேட்ட கேள்விக்கு செல்வக்குமார் உடனடியாக பதில் சொல்லவில்லை.
செல்வக்குமார் தயங்குவதைப் பார்த்த சாந்தா தன்னுடைய மாமியாரிடம் "ஒனக்கு எதுக்கு அந்த கிராசு கேள்வி எல்லாம்" என்று கேட்டாள். சாந்தாவைப் பார்த்து "கேட்டாப் போறாங்க. நீ பேசாம இரு" என்று சொல்லிவிட்டு கிழவியைப் பார்த்து சொன்னான். "ஒரு லட்சத்துக்கு மேல."
"மாசத்துக்கா?"
"ஆமாம்."
"யே அப்பா. அப்ப, பெரிய ஊடாதான் கட்டுவீங்க" கிழவி சொன்னதும் சாந்தாவுக்கு கோபம் வந்துவிட்டது. "பேசாம இருக்கியா?" என்று தன்னுடைய மாமியாரிடம் சொன்னாள்.
"மனுசாள்கிட்ட ரெண்டு வாத்த பேசுறது குத்தமா?" கிழவி கோபமாகக் கேட்டாள். அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல், பேச்சை மாற்றும்விதமாக "இம்மாம் நேரம் எங்க போன? நேரமாவலியா? ஆடுவுள ஓட்டிக்கிட்டுப் போவ வாணாமா?" சாந்தா கேட்டாள்.
"மேற்கால தெரு சின்ன பையனோட பெரிய மவன் சேகரு சிங்கப்பூருக்கு போறானாம். அவன வழியனுப்புறதுக்கு ஊரே திரண்டு நின்னுச்சி. அத வேடிக்கப் பாத்துக்கிட்டிருந்தன்" கடமைக்குச் சொன்னாள் .
"அடுத்தது எந்த ஊர்ல பஞ்சாயத்து?" கிண்டலாகக் கேட்டாள் சாந்தா. அதற்கு கிழவி உடனே பதில் சொன்னாள் "ஒங்கப்பன் ஊட்டுலதான்."
"நான் என்னா கேக்குறன். நீ என்னா சொல்ற? அடுத்தது எங்க வேலன்னுதான் கேட்டன்" செல்வக்குமாரின் முன் பேச்சை வளர்க்க வேண்டாம் என்ற விதத்தில் சாந்தா சொன்னாள். ஆனால் சாந்தாவின் முகத்திலடிப்பது மாதிரி கிழவி சொன்னாள். "சுடுகாட்டுலதான்." சாந்தாவினுடைய முகம் மாறிவிட்டது. மாமியாரைப் பார்க்காமல் தெருப் பக்கம் பார்க்க ஆரம்பித்தாள். கிழவியும் தனக்கென்ன பேச்சு என்பது மாதிரி உடனே வீட்டிற்கு பின்புறம் சென்று கட்டியிருந்த ஏழு எட்டு ஆடுகளை அவிழ்த்து மேய்ப்பதற்காக ஓட்டிக்கொண்டு வந்த வேகத்திலேயே " ஒங்கப்பன் ஊட்டுல செய்யுற மாரி ஊட்டுக்கு வந்தவங்கள வா வாத்த பேசியே அனுப்பாத. ஒரு டீத் தண்ணீய, சோடா, கலர வாங்கிக் கொடுத்து அனுப்பு" என்று சொல்லிவிட்டு ஆடுகளுக்குப் பின்னால் நடக்க ஆரம்பித்தாள்.
"தண்ணிய எடுத்துக்கிட்டு போவலியா? ஒன்னோட பாட்டுலு எங்க?" சாந்தா அக்கறையோடு கேட்டாள். அதற்கு வெடுக்கென்று "எம் பொணத்துமேல ஒன் தண்ணிய கொண்டாந்து ஊத்து" என்று சொல்லிவிட்டுப் போனாள் கிழவி. சாந்தாவும், கிழவியும் பேசிக்கொண்டது செல்வக்குமாருக்கு ஆச்சரியமாக இருந்தது. "ஒம் மாமியாருதான அந்தம்மா" என்று செல்வக்குமார் கேட்டான்.
"ஆமாம்."
"ஒனக்கும் ஒம் மாமியாருக்கும் சண்டயா? "
சாந்தா வாய்விட்டு சிரித்தாள். "அது பேசுனத பாத்து அப்பிடி கேக்குறிங்களா? அது பேச்சே அப்பிடித்தான். எப்பியுமே வெடுக்கு வெடுக்குன்னுதான் பேசும்." சாந்தா மீண்டும் சிரித்தாள். சட்டென்று அவளுக்கு என்ன தோன்றியதோ "ஆளுதான் நாளக்கி சாவுற மாரி இருக்கும். ஆனா ஒலகத்து வாயி. வாய தொறந்தாலே கல்லடிக்க மிஷின் மாரிதான்." மீண்டும் சிரித்தாள். சாதாரணமாக சிரிக்கும்போது இருப்பதைவிட இப்போது அவள் அதிக அழகாக இருப்பது மாதிரி தெரிந்தது.
"பேரு என்னா?"
"சின்னம்மா. பேருதான் சின்னம்மா. வாயத் தொறந்தா ஊருக்கே பெரியம்மாதான். என்னெதான் அதுக்கு புடிக்காது. ஆனா மவனயும் பேரப்புள்ளைங்களையும் ஒரு மணிநேரம் பாக்காட்டி அதுக்கு உசுருப் போயிடும்." சாந்தா வாய்விட்டு சிரித்தாள்.
                செல்வக்குமார் தெருப்பக்கம் பார்த்தான். சின்னம்மா திரும்பி வருவாளோ என்ற சந்தேகம் அவனுக்கு இருந்தது. அவனிடம் கேள்வி கேட்ட விதம், சாந்தாவிடம் பேசிய விதம் எல்லாமே சின்னம்மா கோபமாக இருந்த மாதிரி தெரிந்தது. தான் வந்ததுப் பற்றி தவறாக நினைத்திருப்பாளோ என்ற சந்தேகம் வந்தது. தானாக வந்து வம்பில் மாட்டிக்கொண்டோமோ? சாந்தாவை வம்பில் மாட்டிவிட்டுவிட்டோமோ என்ற எண்ணம் உண்டாயிற்று. சாந்தாவினுடைய புருசன் என்ன நினைத்திருப்பான், அவளுடைய மாமியார் என்ன நினைத்திருப்பாள் என்று யோசித்தான். வீட்டிற்கு வந்தது பற்றி, தன்னைப் பற்றி சாந்தா என்ன நினைக்கிறாள்? வீட்டிற்கு வந்து வம்பில் மாட்டிவிட்டுட்டீங்களே என்று நினைப்பாளா? தெருவில், ஊரில் சனங்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைப்பாளா என்று யோசித்தபடியே சாந்தாவினுடைய முகத்தைப் பார்த்தான். அவளுடைய முகத்திலிருந்து, அவள் உட்கார்ந்திருக்கும் விதத்திலிருந்து எதையும் யூகத்தறிய முடியவில்லை. அவளுடைய மனதில் திருட்டு எண்ணம் இருப்பது மாதிரி தெரியவில்லை.
                செல்வக்குமார் வீட்டுக் கட்டிட வேலை நடக்கும்போது சாந்தாவின் தலையில் பாண்டு விழுந்து காயமாகிவிட்டது என்பதை போனில் சொன்ன போது அவன் சென்னையில் இருந்தாலும் உடனே கார் டிரைவரை அனுப்பி மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போகவைத்து, தையல் போடவைத்து, வீட்டில்கொண்டு போய்விட சொன்னான். அதோடு அஸ்பத்திரி செலவுக்கு ஐந்தாயிரம் கொடுத்துவிட்டு வரச்சொன்னான். இவன் சொன்னபடியே டிரைவர் செய்துவிட்டான். எல்லா விசயமும் முடிந்து ஒன்பது நாட்களாகிவிட்டது. ஒரு காரணமும் இல்லாமல் வந்து உட்கார்ந்துகொண்டு கழுத்தை அறுக்கிறானே என்று நினைப்பாளோ என்று சாந்தா மீது சந்தேகப்பட்டான். அவளுடைய புருசனும், மாமியாரும் பழக்கப்பட்ட ஆளிடம் பேசுவது மாதிரி எப்படி பேசினார்கள் என்று யோசித்தான். அப்போது தெருவில் போன நடுத்தர வயதுள்ள பெண் சட்டென்று திரும்பி சிரித்துக்கொண்டே சாந்தாவிடம் வந்து "என்னா காரு நிக்குது?" என்று கேட்டாள்.
"போன வாரம் எந் தலயில அடிப்பட்டுதில்ல. அந்த ஊட்டு சாரு. விசாரிக்க வந்திருக்காரு."
"அப்பிடியா?" என்று கேட்டு அந்த பெண் சிரித்தாள். அவள் சிரித்தவிதம் சாந்தாவை கோபப்படுத்தியது. "எதுக்கு பல்லக் காட்டுற?" என்று கேட்டாள். சாந்தா கேட்டதற்கு பதில் சொல்லாத அந்த பெண் "நான் இன்னிக்கி வேலக்கிப் போவல. என் நாத்தனாருக்கு புள்ளைப் பொறந்திருக்கு. அதப் பாக்கப் போறன். வாசல்ல காரு நின்னுதா. அதான் என்னான்னு கேட்டுட்டுப்போவ வந்தன்" என்று சொன்னதோடு கண்ணடித்து சிரித்துவிட்டுப் போனாள் அந்த பெண். அவள் கண்ணடித்து சிரித்தது சாந்தாவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. கோபத்தில் "நாயி" என்று சொன்னாள். அதைக்கேட்ட செல்வக்குமார் "என்னாச்சி?" என்று கேட்டான்.
"சித்தாள் வேல செய்யுற நாயிதான். அதோட புத்தியக் காட்டிட்டுப் போவுது" கோபமாகச் சொன்னாள். சட்டென்று ஏன் கோபமாகப் பேசுகிறாள் என்று புரியாது குழம்பிப்போன செல்வக்குமார் "அந்த பொண்ணு ஒண்ணும் சொல்லாதப்ப நீ ஏன் கோபப்படுற?" என்று கேட்டான்.
"ஒங்களுக்குப் புரியாது சார்." என்று லேசான கோபத்தோடு சொன்னாள்.
"சரி. நான் கிளம்பறன்." என்று சொல்லிய செல்வக்குமார் "செல்போன் நெம்பர சொல்லு" என்று சொன்னதோடு, தன்னுடைய செல்போனை எடுத்து எண்களை பதிவதற்கு தயாராக இருந்தான்.
"எதுக்கு சார்?"
"சும்மாதான்" செல்வக்குமார் சிரிக்க முயன்றான். ஆனால் சிரிப்பு வரவில்லை.
"அதெல்லாம் வாண்டாம் சார். எதாயிருந்தாலும் நீங்க கொத்தனார்கிட்டியே பேசிக்குங்க" சாந்தா சொன்னதும் செல்வக்குமாருக்கு கோபம்வந்துவிட்டது. கோபத்தை வெளியேக் காட்டாமல் "ஒங்கிட்ட எத்தினியோ முற கேட்டிருக்கன். நீ தரல. வீட்டுக்கு வந்தும் கேக்கறன். நீ தர மாட்டன்ங்குற. இந்த நெம்பர கொத்தனார்கிட்டியோ, மத்த சித்தாள்கிட்டியோ, கேட்டு வாங்க முடியாதா? இன்னிக்கி வரும்போதுகூட வீட்டு அட்ரஸ் கேட்டுட்டுத்தான் வந்தன். ஆனா போன் நெம்பர கேக்கல. மத்தவங்க மூலமா வாங்குறது அசிங்கம்ன்னு நெனக்கிறன்" என்று சொன்னான்.
"ஒங்க பொண்டாட்டிக்கித் தெரிஞ்சா என்னாவறது?"
"ஒண்ணும் ஆவாது, நான் பாத்துக்கிறன்."
"எம் புருசனுக்குத் தெரிஞ்சா?"
செல்வக்குமார் பேசவில்லை. இப்படியொரு கேள்வியை அவன் சாந்தாவிடமிருந்து எதிர்பார்க்கவில்லை "நீங்க ஆம்பள சார். சமாளிச்சிடுவிங்க. நான் பொம்பள. அதுவும் இல்லாத பட்டவ. என்னால சமாளிக்க முடியாது சார். ஆம்பள தப்பு செஞ்சா வேற வழியில்லாம பொம்பள பொறுத்துக்குவாங்க. அனுசரிச்சிப் போயிடுவாங்க. பொம்பள தப்பு செஞ்சிட்டா ஆம்பள மனசு ஏத்துக்காது. அனுசரிச்சிப்போவாது. வெட்டு, குத்து, கொலன்னு ஆயிடும். ஒலகம் முழுக்க ஆம்பள மனசு ஒரே மாரியாதான் இருக்கும்" என்று சொன்ன சாந்தா சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். தெருவைப் பார்த்தாள். பிறகு செல்வக்குமாரை பார்த்தாள். அப்போது அவளுடைய மனதில் என்ன தோன்றியதோ "ஒங்க பொண்டாட்டி வேல செய்யுற எடத்துக்கு வந்தாலே வேலய பாக்காம என்னையேதான் முறச்சி முறச்சி பாக்குறாங்க. அவுங்க மனசுல சந்தேகம்  வந்துடுச்சி சார்." என்று சாந்தா சொன்னதும் "அப்பிடியா?" என்பது மாதிரி ஆச்சரியமாகப் பார்த்தான் செல்வக்குமார்.
"ஒங்க வௌயாட்டுக்கு வேற எடம் பாருங்க சார்".
அந்த வார்த்தையைக் கேட்டதும் செல்வக்குமாரின் முகம் சுண்டிப்போயிற்று. சாந்தாவைப் பார்ப்பதற்காக ஏன் வந்தோம் என்று நினைத்தான்.
                செல்வக்குமார் வீடு கட்ட ஆரம்பித்ததிலிருந்தே சாந்தா சித்தாள் வேலைக்குப் போகிறாள். வீட்டு வேலை ஆரம்பித்த இரண்டாவது மூன்றாவது வாரத்திலேயே சாந்தாவிடம் செல்வக்குமார் அவளுடைய செல்போன் எண்களை கேட்டான். "எதுக்கு சார்?" என்று சிரித்து மழுப்பிவிட்டு போய்விட்டாள். அதிலிருந்து இன்றுவரை அவளிடம் அவன் செல்போன் எண்களை கேட்டுகொண்டுதான் இருக்கிறான். சாந்தா தரவில்லை. அவன் எதற்காக செல்போன் எண்களை கேட்கிறான் என்பது அவளுக்குத் தெரியாமலில்லை. செல்வக்குமாரைப் பார்த்தாள்.
                செல்வக்குமார் பொதுப்பணித்துறையில் கோட்டப் பொறியாளராக இருக்கிறான். சம்பளம் ஒன்னரை லட்சம் வாங்குகிறான். பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் ஊட்டியில் ஒருபங்களா, கொடைக்கானலில் ஒரு பங்களா என்று வாங்கி போட்டிருக்கிறான். விருத்தாசலத்தில் இரண்டு வீடுகட்டி வாடகைக்கு விட்டிருக்கிறான். இரண்டு கார் வைத்திருக்கிறான். அதில்லாமல் அரசாங்க கார் ஒன்றும் இருக்கிறது. அவனுக்குக்கீழே பத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள், ஓவர்சியர்ஸ், சாலைப் பணியாளர்கள் என்று நூறு இருநூறு பேர் வேலை செய்கிறார்கள் என்று மேஸ்திரி வேலு சொல்லியிருக்கிறான். இப்போது கட்டுகிற வீட்டின் மதிப்பு மூணு கோடி என்றும் ஒரு வருசத்திற்குமேல் வேலை நடக்கும் என்றும் மேஸ்திரி சொல்லியிருக்கிறான். பெரிய அதிகாரி, பெரிய பணக்காரன் டியுசன் வாத்தியாருக்கு முன் பையன் உட்கார்ந்திருப்பது மாதிரி உட்கார்ந்திருக்கிறானே? அப்படியென்ன தன்னிடம் இருக்கிறது, எதற்காக அலைகிறான் என்று செல்வக்குமாருக்காக வருத்தப்பட்டாள். அவனை சமாதானப்படுத்துவது மாதிரி "நான் ஒண்ணு சொன்னா கேப்பிங்களா சார்?" என்று கேட்டாள்.
"சொல்லு" என்பது மாதிரி வெறுப்புடன் செல்வக்குமார் சாந்தாவைப் பார்த்தான்.
"காலயில ஆறுமணிக்கெல்லாம் நான் ஊட்ட வுட்டு கௌம்பணும். ஊட்டுலயிருந்து ரோட்டுக்கு ரெண்டு மைலு நடக்கணும். அப்பறம் ரோட்டுலயிருந்து ஒரு பஸ்ஸபுடிச்சி விருத்தாசலம் போவணும். பஸ்ஸில கா வச்சி நிக்க எடமிருக்காது. அம்மாம் கூட்டம். அம்மாம் நெரிச இருக்கும். இடிபுடின்னு பஸ்ஸில நின்னுக்கிட்டே ஒரு மணிநேரம் போவணும். பஸ்ஸவுட்டு எறங்கி சித்தாளு, கொத்தனாரு, மேஸ்திரிங்க நிக்குற எடத்துக்குப் போவணும். அந்த எடத்தில என்னெ மாரி ஆயிரம் ரெண்டாயிரம் பேராவது ஆடு, மாடு மாரி நிப்பாங்க. எவன், எங்க கூப்புடுறான்னு கூட்டத்தில நிக்கணும். வரியா, வரியா, நான் சொல்ற எடத்துக்கு வரியா? செங்கல் தூக்க, மணல் மூட்ட தூக்க, காங்கிரீட் போ வரியான்னு கூப்புடுற எடத்துக்குப் போவணும். சில எடம் பக்கத்திலியே இருக்கும். சில எடம் ரெண்டு மூணு மைலு நடக்கணும். கார்ல போவலாம். அதுக்கு மினி பஸ்ஸீக்கு அஞ்சி ரூவா கொடுக்கணுமேன்னு நடந்தே போவணும். போனதுமே எடுத்துக்கிட்டுப் போன சோத்த நாலுவாயா அள்ளிப் போட்டுக்கிட்டு வேலய ஆரம்பிச்சா மத்தியானம் ரெண்டு மணிக்குத்தான் செத்த குந்தமுடியும். அதுகூட சோறு திங்கிறதுக்கு. அப்பறம் மூணு மணிக்கு ஆரம்பிச்சா ஆறு மணிக்குத்தான் வேல முடியும். கூலிய வாங்கிகிட்டு திரும்பி நடந்து பஸ்ஸடாண்டுக்கு நடக்கணும். அப்பறம் பஸ்ஸ புடிச்சி ரோட்டுக்கு வந்து, ரெண்டு மைலு நடந்து வந்து ஊட்டுக்கு சேரும்போது மணி ராத்தி எட்டு ஒம்போதாயிடும். அப்பறம்தான் சோறு ஆக்கணும். சோறு திங்கணும். தூங்கணும், மறுநாளு விடியக்காலமே எழுந்திரிச்சி சோறாக்கி வச்சிட்டு, சோத்த எடுத்துக்கிட்டு ஆறு மணிக்கே பஸ்ஸ புடிக்க ரோட்டுக்கு ஓடணும்."
                நான் சொன்னதெல்லாம் புரிந்ததா என்று கேட்பது மாதிரி சாந்தா செல்வக்குமாரின் முகத்தைப் பார்த்தாள். இந்த கதையெல்லாம் எதற்காக என்னிடம் சொல்கிறாய் என்பது மாதிரி அவன் அவளுடைய முகத்தைப் பார்த்தான். ஒருவருக்கொருவர் நேருக்குநேர் பார்த்துகொண்டது மட்டுமல்ல, பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து பார்த்துகொண்டது இருவருக்குமே ஆச்சரியமாக இருந்தது. அதனால் இருவருக்குமே தயக்கமாக இருந்தது. ஆனால் இரண்டு பேருக்கும் சிரிப்பு வந்தது. சிரித்துக்கொண்டே "நான் இம்மாம் நேரம் எதுக்கு பேசுனன்னு புரியுதா சார்?" என்று கேட்டாள்.
பதில் சொல்லாமல் செல்வக்குமார் சிரிக்க மட்டுமே செய்தான்.
"காலயில ஆறு மணிக்கு ஊட்டவுட்டு கிளம்புனா, திரும்பி ஊட்டுக்குவர ராத்திரி எட்டு ஒம்போது மணி ஆயிடும். ரோட்டுக்கு நடந்து போவயில, பஸ்ஸில போவயில ஆள் கூப்புட வர எடத்தில நிக்கயில, வேல செய்யுற எடத்தில, திரும்பி ஊட்டுக்கு வந்து சேருறதுக்குள்ளார ஒரு நாளக்கி எத்தன ஆம்பள என்ன பாப்பாங்க? எல்லார் மனசுமா நல்லா இருக்கும்? எத்தன பேரு ஆசப்படுவாங்க? ஆசப்பட்டுட்டாங்களேன்னு அத்தன பேர்கூடயும் நான் போவ முடியுமா சார்? அப்பிடின்னா ஒரு நாளக்கி நான் எத்தன பேர் கூட போவணும்?" சாந்தா கேட்டது செல்வக்குமாருக்கு செருப்பால் அடித்த மாதிரி இருந்தது. அவள் இப்படி கேட்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஏன் வந்தோம்? வந்திருக்ககூடாது. பெரிய தவறு செய்துவிட்டோம் என்று கவலைப்பட்டான். கண்மண் தெரியாத அளவுக்கு கோபம் வந்தது. வேலை செய்கிற இடத்தில் ஒரு விதமாகவும், வீட்டில் ஒரு விதமாகவும் நடந்துகொள்கிறாளா என்ற சந்தேகம் உண்டாயிற்று. இவ்வளவு அதிகமாக பேசுவாள், முகத்திலடிப்பது மாதிரி பேசுவாள் என்று தெரிந்திருந்தால் அவன் வந்திருக்கவே மாட்டான். ஒன்பது நாட்களாக அவளைப் பார்க்காமல் அவன் எவ்வளவு தூரம் அல்லாடிப்போனான் என்பது அவளுக்குத் தெரியுமா? உண்மையாகவே பேசுகிறாளா, நடிக்கிறாளா என்ற சந்தேகம் அவனுக்கு உண்டாயிற்று.
                செல்வக்குமார் கட்டுகிற வீட்டிற்கு சித்தாள் என்று சாந்தா என்றைக்குப் போனாளோ, அதிலிருந்து அவளை அவன் பார்த்துகொண்டுதான் இருக்கிறான். செல்போன் எண்களை கேட்டுக்கொண்டிருக்கிறான். அவள் எந்த இடத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறாளோ அதே இடத்தில் நின்றுகொண்டிருந்திருக்கிறான். அவளிடம் தனியாகப் பேசுவதற்கு முயன்றிருக்கிறான். சீலை வாங்க, செருப்பு வாங்க பணம் கொடுக்க முயன்றிருக்கிறான். அப்போதெல்லாம் ஒரு வார்த்தை முறைத்துப் பேசியதில்லை. முகத்தைக் கோணிக்கொண்டு போனதில்லை. மற்ற சித்தாள், கொத்தனார்களிடம் எதுவும் சொன்னதில்லை. எது செய்தாலும் மர்மமாக சிரித்துக்கொண்டே போய்விடுவாள். அந்த நம்பிக்கையில்தான் அவளைப் பார்ப்பதற்காக வந்தான். ஆனால் சாந்தா என்ன சொல்லிவிட்டாள் என்று யோசித்துக்கொண்டிருந்தான் செல்வக்குமார். அவன் என்ன நினைக்கிறான், என்ன யோசிக்கிறான் என்று பார்க்காமல் கேட்டாள் "எதுக்காக சார் துணி கட்டுறம்?"
"மரியாதக்காக. கௌரவத்துக்காக" கடுப்புடன் சொன்னான்.
"அது ஒங்கள மாரி படிச்சவங்களுக்கு. பணக்காரங்களுக்கு. நான் அதுக்காக கட்டல."
"பின்னெ?" வேகமாகக் கேட்டான்.
"மானத்த மறைக்கிறதுக்கு."
"புத்திசாலி" என்று அழுத்தம் திருத்தமாக சொன்னான். சரியான வாயாடிதான். லேசுப்பட்ட ஆளில்லை என்று நினைத்தான். உடனே கிளம்பிவிட வேண்டும் என்று கடிகாரத்தைப் பார்த்தான். மணியாகிவிட்டது தெரிந்தது. உடனே எழுந்து நின்றான். சாந்தாவைப் பார்க்காமல் தெருவையும், காரையும் பார்த்தான். செல்வக்குமார் கோபமாகிவிட்டான் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. அவனுடைய கோபத்தைக் குறைக்க நினைத்த சாந்தா "ஒக்காருங்க சார். போவலாம். தண்ணி குடிக்கிறிங்களா?" என்று கேட்டாள்.
"ஒன்னெ பாக்க வந்ததுக்காக என்ன வேணுமின்னாலும் பேசுவியா?" ஆத்திரத்தோடு கேட்டான்.
"ஊர்ல போறவங்க கிட்டயா சொன்னன்?" சாந்தா சிரித்தாள். அது விஷமமான சிரிப்பாக இருந்தது. சாந்தாவினுடைய முகத்தைப் பார்த்தான். அவளுடைய முகத்தை இப்போது அவனால் ரசிக்கமுடியவில்லை. கடிகாரத்தைப் பார்த்தான். சைலன்ட்மோடில் போட்டிருந்த செல்போனை எடுத்து, சைலன்ட் மோடை நீக்கினான். பத்துஇருபது மிஸ்டுகால் இருப்பது தெரிந்தது.
"ஒக்காருங்க சார், ஒக்காருங்க சார்" என்று ஏழுஎட்டுமுறை சொன்ன பிறகுதான் விருப்பமின்றி முகத்தை கோணிக்கொண்டு உட்கார்ந்தான். அப்போது அவனுடைய செல்போன் மணி அடித்தது. அவனுடைய மனைவி கூப்பிட்டாள். பேசலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஏற்கெனவே சாந்தா பேசியப் பேச்சால் அளவுக்கடந்த கோபத்தில் இருந்தான். மனைவியினுடைய போன் வந்ததும் இன்னும் அவனுக்குக் கோபம் கூடியது. போனை மீண்டும் சைலன்ஸ் மோடில் போட்டான். மனதிற்குள் தன்னுடைய மனைவியைத் திட்டினான்.
                வீடு கட்ட ஆரம்பித்து எட்டு மாதம் ஆகிறது. முதல் நாள் வேலைக்கு வந்ததிலிருந்து சாந்தாவை காரணமின்றி செல்வக்குமாருக்குப் பிடித்துப்போயிற்று. அவளிடம் அதிகம் பேசியதில்லை. அதிகம் பழகியதில்லை. அவளைப் பற்றிய விபரம் எதுவும் தெரியாது. சித்தாள் வேலைதான் செய்கிறாள். ஆனாலும் அவளை அவனுக்குப் பிடித்துப்போயிற்று. அவளைப் பார்க்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டான். படிப்படியாக மற்ற சித்தாள்களிடம் விசாரித்ததில் கல்யாணமாகிவிட்டது. இரண்டு குழந்தை இருக்கிறது என்று தெரிந்த பிறகும் அவளைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நாளாகநாளாக ஆசை கூடியது. தான் ஒரு கோட்டப்பொறியாளர், மனைவி இருக்கிறாள், இரண்டு பிள்ளைகள் இருக்கிறது, ஐம்பது வயது  ஆரம்பிக்கப்போகிறது என்பது தெரிந்தது. விசுயம் வெளியே தெரிந்தால் வீட்டில் அசிங்கமாகும், அலுவலகத்தில், தெரிந்தவர்கள் மத்தியில் அசிங்கமாகும் என்பது தெளிவாக தெரிந்தது. எல்லாவற்றையும் சாந்தா மீது இருந்த ஆசை காலி செய்துவிட்டது "என்மேல் விழுந்த மழைத்துளியே, இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?" என்ற சினிமாப் பாடலை பாட ஆரம்பித்தான். செல்போனில் பதியவைத்து கார் ஓட்டும்போது, வேலையைப் பார்வையிடும்போது, பைல் பார்க்கும்போது, வீட்டில் தூங்கப் போவதற்கு முன்கூட அந்தப் பாட்டைத் திரும்பத்திரும்ப கேட்டான். ஒருநாளைக்கு குறைந்தது நூறுமுறையாவது அந்த ஒரு பாட்டை கேட்டிருப்பான். அப்படியும் அந்தப்பாட்டு அவனுக்கு அலுக்கவில்லை. ஒவ்வொருமுறை கேட்கும்போது பெரிய ஆற்றல் வருவது மாதிரிதான் இருந்தது. வீடு கட்டுகிற இடத்தில் நிற்கும்போதுகூட அந்த பாட்டைத்தான் கேட்பான். சித்தாள், கொத்தனார் எல்லாம் "எதுக்கு சார் ஒரே பாட்ட திரும்பத்திரும்ப கேக்குறிங்க? வேற பாட்டு புடிக்காதா?" என்று கேட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் கேட்கும்போதெல்லாம் செல்வக்குமார் சிரிக்கமட்டுமே செய்திருக்கிறான். சாந்தாகூட ஒருமுறை கேட்டாள். அதற்கு "புடிச்சிருக்கு" என்று மட்டுமே சொன்னான். அவனுக்கு அந்த பாட்டு பிடித்திருக்கிறது என்பதற்கான காரணம் புரிந்த மாதிரி அடுத்த வார்த்தை பேசாமல் சிரித்துக்கொண்டே போய்விட்டாள். சாந்தாபோன மாதிரி அவனுடைய மனைவி போகவில்லை. ஒரு மாதம் இரண்டு மாதம் என்று பொறுத்துப்பார்த்துவிட்டு ஒரு நாள் கடுமையான கோபத்தில் கேட்டாள்.
"என்னா பாட்டெல்லாம் புதுசா இருக்கு?"
"சும்மாதான்" சிரித்து மழுப்பினான். ஆனால் அவனுடைய மனைவி விடவில்லை.
"வயது அம்பது ஆவப்போவுது. வீட்டுல வளந்த பசங்க ரெண்டு இருக்கு. அதுக்கேத்த மாதிரி நடந்துக்குங்க." செல்வக்குமாருக்குக் கோபம் வந்துவிட்டது. "சினிமா பாட்டு கேக்குறது தப்பா?"
"ஒரே பாட்ட ஒரு நாளக்கி எத்தன முற கேப்பிங்க?"
"அது என்னிஷ்டம்."
"ஒரே பாட்ட கேக்குறது. தனியா சிரிக்கிறது. நீங்க இருவது வயசு பையனில்ல. கொஞ்ச நாளா ஒங்க நடவடிக்கயே சரியில்ல" என்று சொல்லி மாலினி கத்தினாள்.
"ஏன் எப்பவுமே ஒன்னோட மூள மட்டும் கோணலாவே வேல செய்யுது?"
"என்னோட மூள கோணலா வேல செஞ்சா போவுது? ஒங்க மூள நேரா வேல செஞ்சா சரி. பதினேழு வருசமா ஒங்கள பாத்துக்கிட்டு வரன், எனக்குத் தெரியாதா?" என்று கேட்டுவிட்டு அடுத்த வார்த்தை பேசவிரும்பாத மாதிரி போய்விட்டாள். அந்த சண்டை நேற்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கிறது. சண்டை நடக்கிற நேரத்தில் மட்டும்தான் பாட்டை நிறுத்துவான். அந்த பாட்டால் வீட்டில் சண்டை நடக்காத நாள் எது என்று யோசித்த செல்வக்குமார் "அவ என்னடான்னா தினம் சண்ட வாங்குறா? இவ என்னடான்னா இப்பிடி சொல்றா. பொட்டச்சியெல்லாம் ஒலகத்தில ஒரே மாதிரியாதான் இருக்காளுங்க" என்று அலுப்புடன் முணுமுணுத்தான்.
                செல்வக்குமார் பள்ளியில் படிக்கும்போதும், இஞ்ஞினியரிங் படிக்கும்போதும் பெண் பிள்ளைகளோடு பேசியிருக்கிறான். பழகியிருக்கிறான், சில பிள்ளைகள்மீது ஆசைப்பட்டும் இருக்கிறான். ஆனால் சாந்தா அளவுக்கு அவனை யாருமே ஈர்த்ததில்லை. ஒரு நாள் அவள் வேலைக்கு வராவிட்டால் "ஏன் வரல, ஏன் வரல?" என்று ஒவ்வொரு சித்தாளிடமும் கேட்பான். ஒரு காரணமும் இல்லையென்றாலும் அவளைப் பார்ப்பதற்காக வேலை நடக்கிற இடத்திற்கு ஒரு நாளைக்குள் மூன்று நான்குமுறை வருவான். ஒரு காரணமும் இல்லாமல் உட்கார்ந்திருப்பான். அலுவலகத்திற்குக்கூட, ரோடு போடுகிற இடத்திற்குகூட அவ்வளவு பொறுப்பாக போக மாட்டான், ஃபைல் பார்ப்பதைகூட, கையெழுத்து போடுவதைக்கூட அவ்வளவு பொறுப்பாக செய்ய மாட்டான். சாந்தா இருக்கிற இடத்திற்கு வருவதில் மட்டும் அவ்வளவு பொறுப்பு, அவ்வளவு அக்கறை. சாந்தாவை ஒரு நாள் பார்க்காவிட்டால் அன்று அவனுக்கு பைத்தியம் பிடித்த மாதிரிதான். கடலூரில் மீட்டிங், சென்னையில் மீட்டிங் என்று போகிற அன்று யாரை கண்டாலும் எரிந்துஎரிந்து விழுவான். மற்ற அலுவலர்களோடு முகம் கொடுத்து பேச மாட்டான். கார் டிரைவரைத் திட்டுவான். ஃபியூனைத் திட்டுவான். செல்போனில் பேசுகிறவர்களிடம் "அப்பறம் பாக்கலாம். இப்ப போன வையிங்க. நான் ரொம்ப பிஸி" என்று சொல்லிவிடுவான். அதே வீட்டுவேலை நடக்கிற இடத்திற்கு வந்து, சாந்தாவைப் பார்த்துவிட்டால் போதும் உருகிப்போய்விடுவான். "வேலயெல்லாம் நல்லாப் போவுதா? கஷ்டமா இருக்கா? டீ குடிக்கிறீங்களா? கொஞ்சம் நேரம் பிரேக் விடுங்களன்" என்று கொத்தனாரிடம் சொல்வான். சாந்தாவைத் தனியாகப் பார்த்து "எப்ப வந்த? நடந்தா வந்த? ஏன் உம்முன்னு இருக்க? கொத்தனாரு திட்டிட்டானா?" என்று கேட்தற்கு வாய்ப்பு கிடைத்து,  அவளிடம் ஒன்றிரண்டு வார்த்தை பேசிவிட்டால் போதும், ஒரே சிரிப்பாக, மகிழ்ச்சியாக இருப்பான். அந்த நேரத்தில் கொத்தனார், சித்தாள் எது கேட்டாலும் "இல்ல" என்றோ, "நாளைக்கிப் பாக்கலாம்" என்ற வார்த்தை அவனுடைய வாயிலிருந்து வராது. இதற்கே அவன் சாந்தாவிடம் பத்து இருபது வார்த்தைகளை தொடர்ச்சியாக பேசியது கிடையாது. தனியாக பார்த்ததோ, பேசியதோ, பழகியதோ கிடையாது. என்ன காரணமோ அவளைப் பார்த்தால் மகிழ்ச்சியாகிவிடுகிறான். உற்சாகமாகிவிடுகிறான். எந்த தகுதியும் பார்க்காமல் சாதாரண கூரைவீட்டின் முன், நான்கு ஐந்துபேர்கூட படுக்க முடியாத வீட்டின்முன், அழுக்கடைந்த, குப்பைக்கூளமான, ஆட்டின் மூத்திரவாடை அடிக்கும் வீட்டின்முன். ஏன் வந்து உட்கார்ந்திருக்கிறோம் என்று யோசித்துக்கொண்டிருந்தான் செல்வக்குமார்.
                சாந்தா செல்வக்குமாரையே பார்த்துக்கொண்டிருந்தாள். எவ்வளவு பெரிய பணக்காரன், எவ்வளவு பெரிய அதிகாரி, இப்படி வந்து உட்கார்ந்திருக்கிறானே என்று யோசித்தாள். வீட்டுவேலை நடக்கிற இடத்திற்கு வரும்போதெல்லாம் தன்னையேதான் பார்ப்பான். தன்னிடம் பேசுவதற்கு, சிரிப்பதற்கு, பக்கத்தில் வருவதற்கு எப்படியெல்லாம் முயன்று, முடியாத நிலையில் தவித்துப்போய் நிற்பான் என்பதையெல்லாம் நினைத்துப்பார்த்தாள். ஒவ்வொன்றாக நினைக்கநினைக்க அவளுக்கு சிரிப்புத்தான் வந்தது.
"ஆம்பளங்க இப்படியெல்லாமா இருப்பாங்க?"
                கட்டிட வேலைக்கென்று எந்த இடத்திற்குப் போனாலும் ஒரு நாளக்கி ஒரு டீதான் வாங்கித் தருவார்கள். செல்வக்குமாரும் ஆரம்பத்தில் அப்படித்தான் வாங்கித்தந்தான். இரண்டாவது, மூன்றாவது வாரம் கழிந்ததும் என்ன நினைத்தானோ ஒரு நாளைக்கி இரண்டுமுறை டீ வாங்கி குடிப்பதற்கு பணம் தந்தான். அதற்கடுத்த வாரம் டீயோடு இரண்டு வடையும் வாங்கித்தர ஆரம்பித்தான். மணல் சலிக்கும்போது, செங்கல் தூக்கும்போது, மணல் மூட்டையை, சிமெண்ட் மூட்டையைத் தூக்கும்போது வேண்டாம் என்று தடுத்தாலும் உதவி செய்ய வருவான். மீறிக் கேட்டால் "என்னோட வீட்டுலதான வேல செய்யுறன்" என்று சொல்வான். அவன் உண்மையை சொன்னாலும் சித்தாள்களும், கொத்தனார்களும் நம்பவே மாட்டார்கள். டீ வாங்கித் தருவது, வடை வாங்கித் தருவது, உதவி செய்ய வருவது, எல்லாமே சாந்தாவுக்காகத்தான் செய்கிறான் என்பது எல்லாருக்குமே தெரியும். வேலை நடக்கிற இடத்திற்கு வந்ததுமே செல்வக்குமார் எந்த இடத்தில் நிற்கிறான், யாரிடம் பேசுகிறான், யாரைப் பார்க்கிறான், யாரிடம் சிரிக்கிறான், யாரிடம் பேசமுயல்கிறான் என்பதெல்லாம் எல்லாருக்கும் தெரியும். எட்டு மாசத்தில் செல்வக்குமார் வீட்டுக்கு சாந்தா வேலைக்குப் போகாத நாள் மூன்று நாள்கூட இருக்காது. மற்ற சித்தாள்கள் மாதிரி ஒரு நாளைக்கு ஒரு இடம் என்று அவள் வேலைக்குப் போகவில்லை. கொத்தனாரே இன்று வேலை இல்லையென்றாலும் தானாகவே மணல் சலிக்கலாம், மணலை அள்ளிக்கொட்டலாம், செங்கல்லை மேலே, தூக்கி வைக்கலாம் என்று சொல்லி வேலையை உருவாக்கிக்கொண்டு வேறு ஒரு சித்தாளையும் அழைத்துக்கொண்டு வந்துவிடுவாள். அதையெல்லாம் புரிந்துகொண்டு சித்தாள்களாக இருப்பவர்கள் "பஸ்ஸீக்கு காசு இல்ல சார்" என்று கேட்பார்கள். செல்வக்குமார் இல்லை என்று சொல்ல மாட்டான். கொத்தனார்களும் கேட்பார்கள், அவர்களுக்கும் கொடுப்பான். பத்து ரூபாய்தான் பஸ்ஸீக்கு என்றால் இருபது ரூபாயாக கொடுப்பான்.  அவனிடம் சித்தாள்கள் காசு பிடுங்குவதை பார்க்கும்போது சாந்தாவுக்குக் கோபமாக இருக்கும். ஒரு நாள் கோபத்தை அடக்க முடியாமல் "சம்பளம்தான் தர்றிங்களே. அப்பறம் எதுக்கு பஸ்ஸீக்குன்னு தனியா பணம் தர்றிங்க?" என்று கேட்டாள்.
"பரவாயில்ல. இருக்கட்டும்" என்று செல்வக்குமார் சொன்னான். ஆனால் சித்தாள்கள் "ஒனக்கென்ன? ஒங் காசியவா தர? ஏழ சனங்களாச்சேன்னு சாராப் பாத்து பிரியப்பட்டு தராரு" என்று சண்டைக்கு வந்துவிட்டார்கள்.
                சித்தாள்களுக்கும், கொத்தனார்களுக்கும் செல்வக்குமார் பஸ்ஸீகென்று என்றெல்லாம் பணம் தருகிறானோ அன்றெல்லாம் சாந்தா பொறுமிப்போவாள். பணம் தருவதைகூட அவளால் பொறுத்துக்கொள்ள முடியும். சில நேரங்களில் அவனேப் போய் டீ வாங்கிக்கொண்டு, வடை வாங்கிக்கொண்டு, சாப்பாடு கொண்டு வராதவர்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொண்டு வந்து தருவான். அதைத்தான் அவளால் தாங்கிக்கொள்ளவே முடியாது. "ஒங்களுக்கு வேற வேல இல்லியா" என்று கேட்பாள். அதற்கு செல்வக்குமார் சிரிக்க மட்டுமே செய்வான்.
"கொடுக்கிறதெல்லாம் வாங்கித் தின்னுப்புட்டு, பின்னால கண்ணடிச்சி சிரிக்கிறது தெரியுமா?" என்று கேட்பாள். அதற்கும் அவன் சிரிக்க மட்டுமே செய்வான். தன்னால்தான் எல்லாம் செய்கிறான் என்பது தெரிந்தபிறகு சாந்தா. வேலை முடிந்து போவதற்கு முன் பொருள்கள் ஏதாவது தவறி கிடக்கிறதா, திருடுபோகும் நிலையில் எந்த பொருளாவது கிடக்கிறதா, மழையில் நனையுமளவுக்கு சிமெண்ட் மூட்டைக் கிடக்கிறதா என்று பார்ப்பாள். ஒரு ஆணி, ஒரு செங்கல் தவறிப்போய்க் கிடந்தால்கூட அதை எடுத்து வந்து பத்திரப்படுத்திவிட்டுத்தான் போவாள். அவள் செய்கிற வேலைகளைப் பார்த்துவிட்டு மற்ற சித்தாள்களும், கொத்தனார்களும் ரகசியமாக சிரிப்பார்கள். மற்றவர்கள் சிரிக்கிறார்களே என்று தெரிந்தாலும் தான் செய்ய நினைத்த வேலையை செய்யாமல் போக மாட்டாள்.
"ரொம்ப அக்கதான்" என்று மற்றவர்கள் கிண்டலடிப்பதை பொருட்படுத்த மாட்டாள். சித்தாள் வேலைக்கு போக ஆரம்பித்து ஒரு வருசத்துக்குமேல் ஆகிவிட்டது. எந்த இடத்திலும் சாந்தா இந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் வேலை செய்தது கிடையாது. எப்போதாவது உடம்புக்கு முடியாமல் வீட்டில் இருந்துவிட்டால், அன்று முழுவதும் கட்டிடத்தில் என்ன வேலை நடக்கிறதோ என்ற எண்ணத்துடன்தான் இருப்பாள். ஏன் தன்னுடைய மனம் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது பேண்ட் பாக்கட்டிலிருந்து நூறு ரூபாய் பணக்கட்டை எடுத்து சாந்தாவிடம் செல்வக்குமார் நீட்டினான்.
"எதுக்கு சார்?"
"ஆஸ்பத்திரி செலவுக்கு"
"அன்னிக்கேதான் ஒங்க ஆபிஸ் ஆளுங்க வந்து எல்லாத்தயும் பாத்துக்கிட்டாங்களே."
"அடுத்து நீ போவணுமில்ல."
"நேத்துதான் கட்டுப்பிரிச்சிட்டு வந்தன். இனிமே செலவு ஒண்ணுமில்ல சார்."
"ஆஸ்பத்திரி செலவ நாந்தான் பாக்கணும்."
"பாத்தது போதும்" ஒரு தினுசாக சிரித்தாள்.
"அடிப்பட்டதிலிருந்து நீ வேலக்கிப் போவல."
"ஒடம்பு சரியில்லன்னு ஊட்டுல குந்தியிருந்தா அதுக்கும் நீங்க சம்பளம் தருவிங்களா?" கிண்டலாகச் சிரித்தாள்.
"தருவன்."
"அது எனக்குத் தெரியும்."  லேசாகச் சிரித்தாள்.
"புடி."
"வாணாம் சார். பையில வையிங்க. தெருவே போறவங்க யாராச்சும் பாத்தா தப்பா நெனப்பாங்க."
"என்ன புரிஞ்சிக்க மாட்டியா?" என்று கெஞ்சுவது மாதிரி சொன்ன செல்வக்குமார் சாந்தாவினுடைய கையைப் பிடித்துப் பணக்கட்டைத் திணித்தான்.
"நான் தனியாளு இல்ல சார். என்ன தல குனிய வச்சிடாதிங்க" என்று சொல்லும்போதே அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் இறங்க ஆரம்பித்துவிட்டது. கண்ணீரைப் பார்த்ததும் அவளுடையப் கையை விட்டுவிட்டான். பயந்துபோய் "என்னாச்சி?" என்று கேட்டான்.
"இந்த கூர ஊட்டுலத்தான் இருக்கம். சொத்து பத்து ஒண்ணும் இல்ல. நாலுபேருகூட படுத்து எழுந்திருக்க முடியாது. தலவலி, காய்ச்சன்னு படுத்தா மறுநாளு சோத்துக்கு இல்லதான். ஆனா இன்னமுட்டும் மனசுல அழுக்கு இல்லாம, பாரம் இல்லாம இருக்கன் சார். அது போதும் எனக்கு" அவள் சொல்லி முடிப்பதற்குள் கண்களிலிருந்து கண்ணீர் சரம்சரமாக இறங்கியது.
"என்ன தப்பா நெனக்காத, நிசமாவே ஆஸ்பத்திரி செலவுக்குத்தான் கொடுத்தன்".
அவன் சொன்னதைக் காதில் வாங்காத சாந்தா சொன்னாள் "சித்தாள் வேலக்கிப் போறவங்க ஒரே எடத்துக்கா சார் போவ முடியும்? தெனம் ஒரு எடத்துக்குத்தான போவ முடியும்? ஒரு சில எடத்திலதான் ஒரு வாரம் பத்து நாள்ன்னு வேல இருக்கும். வேல செய்யுற எடத்தில எல்லாம் என்னா நடக்கும்ன்னு நெனைக்கிறிங்க? மேஸ்திரிங்க, கொத்தனாருங்க தொல்ல ஒரு பக்கம், வீட்டுக்காரங்க தொல்ல ஒரு பக்கம் இருக்கும். முறச்சிமுறச்சி பாப்பாங்க. இடிக்கிற மாரி கிட்டக்கிட்ட வருவாங்க. பின்னாலியே சுத்திசுத்தி வருவாங்க. மேல இடிக்கிற மாரி, ஒரசுற மாரி வருவாங்க. ஐயோ பாவமேன்னு, நான் எக்கப்பட்டா இதுவர நான் எத்தனபேர்கூட சார் போயிருக்கணும்? கண்சிமிட்டுற நேரத்துக்குள்ளார முடிஞ்சிபோற வேலக்காக காலம்முழுக்க நாந்தான் பங்கப்பட்டு நிக்கணும்? அப்பிடிப் போற மாரி இருந்தா நான் எதுக்கு சார், சித்தாள் வேலக்கிப் போயி பாண்டு தூக்குறன், செங்கல், மணல், சிமெண்ட் மூட்டத் தூக்குறன்?"
                செல்வக்குமாருக்கு வெட்கமாக இருந்தது. இதையெல்லாம் சொல்வதற்காகத்தான் இவ்வளவு நேரம் உட்காரவைத்திருந்தாளா என்று நினைத்தான். போய்விடுவோம் என்று எழுந்துநின்றான். "பொம்பளைங்க தெருத்தெருவா அலஞ்சிதிரிஞ்சி, கூவிகூவி மீனு விக்கிறாங்க. கீர, காயி விக்குறாங்க. தள்ளுவண்டியில பழம் விக்குறாங்க. ஊட்டு வேல செய்றாங்க இன்னம் இப்பிடி என்னென்னமோ வேலயெல்லாம் செய்றாங்க? ஒரு அஞ்சி நிமிசநேரம் சீலயத் தூக்கிக்காட்டி சம்பாரிக்க தெரியாமியா?"
                செல்வக்குமாருக்கு ஆத்திரம் உண்டாயிற்று. பார்ப்பதற்காக வந்த இடத்தில் அசிங்கப்படுத்துகிறாளே என்ற எண்ணம் வந்தது. "நான் கிளம்பறன்" என்று சொல்லிவிட்டு இரண்டு மூன்றடி தூரம் போனவனை கட்டாயப்படுத்தித் திரும்ப அழைத்து வந்து  உட்கார வைத்தாள் சாந்தா. சிறிதுநேரம் அவனும் பேசவில்லை. அவளும் பேசவில்லை.
"எம் மேல கோவமா சார்?"
செல்வக்குமார் வாயைத் திறக்கவில்லை.
"ஒங்கக்கிட்ட தனியா பேசணுமின்னு ரொம்ப நாளா ஆச சார் எனக்கு."
"அதான் பேசுறதெல்லாம் பேசிட்டியே அப்பறமென்ன?" கடுமையான குரலில் சொன்னான் செல்வக்குமார்.
"நல்லதா இருந்தாலும், கெட்டதா இருந்தாலும் மனசுக்கு புடிச்சவங்ககிட்ட தான பேச முடியும்?" சாந்தாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
"பாக்க வந்ததுக்காக என்னவெல்லாம் நீ பேசிட்ட."
"நீங்க கஷ்டப்பட்டு பேசாதிங்க சார். நீங்க கஷ்டப்படுறத என்னாலப் பாக்க முடியாது" சாந்தா அழுதாள்.
"நீ எதுக்கு நெனச்சதுக்கெல்லாம் அழுதுஅழுது என்ன கஷ்டப்படுத்துற?" செல்வக்குமாருக்கு லேசாக கோபம் குறைந்திருந்தது.
"நான் ஒண்ணு ஒங்கள கேக்கட்டா சார்?"
"என்னா?"
"பொட்டச்சி சோறு திங்கிறதுக்கு ஒலகத்தில இருக்கிற  ஒரே வழி சீலய தூக்கிக்காட்டுறது மட்டும்தானா சார்?"
                செல்வக்குமாருக்கு முகத்தில் காறித்துப்பியது மாதிரி இருந்தது. பதில் சொல்ல முடியாமல் தவித்துப்போனான். ஏன் வந்தோம் என்று தன்னையே நொந்துகொண்டான். தெருவைப் பார்த்தான். கடுமையான வெயில் இருப்பது தெரிந்தது. உட்கார்ந்திருப்பதா, எழுந்து போவதா என்று குழப்பத்தில் உட்கார்ந்திருந்தான். செல்வக்குமாரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துகொண்டிருந்த சாந்தா சொன்னாள்.
"ஒங்கள தப்பு சொல்லல சார். ஒலகம் அப்பிடி இருக்கு. யாருக்குத் தெரியபோவுது, சாட்சி வச்சிக்கிட்டு செய்யுற காரியமா இது? நாம்பளா சொன்னாதான் வெளிய தெரியப்போவுது? ஒடம்போட ஒட்டிக்கிட்டு வரப் போவுதா, இல்ல தேஞ்சிடத்தான் போவுதா, இல்ல காணாமத்தான் போயிடப்போவுதா? ஒண்ணுக்கு வுடுற நேரம்தானன்னு மனம் துணிஞ்சி போறவங்களும் ஒலகத்தில இருக்கத்தான் செய்யுறாங்க. எனக்கு அந்த மனசு இல்ல சார்."
"நான் ஓங்கிட்ட என்னா கேட்டன்? சம்பந்தம் இல்லாம எதுக்கு பேசுற?" சாந்தாவை முறைப்பது மாதிரி கேட்டான்.
"நீங்க நல்ல ஆளு சார், அதனாலதான் இதெல்லாம் சொல்றன்."
"கண்ணாடி மாரி ஒடஞ்சிப் போச்சி."
"எது?"
"எம் மனசு." செல்வக்குமார் முகத்தைத் தாழ்த்திக்கொண்டான்.
                சாந்தா அடுத்த வார்த்தை பேசவில்லை. தான் இதுவரை சொன்னதையெல்லாம் அவன் கேட்கவே இல்லையோ என்ற சந்தேகம் அவளுக்கு வந்தது. செல்வக்குமாரை பார்த்தாள். பார்ப்பதற்கு பாவமாக இருந்தது. அவனுடைய மனதை மாற்றவும், கோபத்தை குறைக்கவும் நினைத்தாள்.
"எங்கூட வேலக்கி வருதில்ல மல்லிகா. அந்த புள்ளய வேணுமின்னா பாருங்க. அதுதான் அப்பிடி இப்பிடி இருக்கும். நான் ஒங்களப் பத்தி சொல்றன். நான் சொன்னா அந்த புள்ள கேக்கும்." சாந்தா சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அடக்க முடியாத ஆத்திரத்துடன் செல்வக்குமார் சொன்னான் "பெரிய புத்திசாலிதான்."
"ஒங்களுக்கு இது வௌயாட்டு சார். எனக்கு வாழ்க்க. ஒங்க தகுதிக்கு நான் ஏத்தவ இல்ல. எங்கூட இருக்றிங்கன்னு வெளிய சொன்னா ஒங்களுக்குத்தான் அசிங்கம். தெரியுமா? ஒங்களுக்கு என்னால ஒரு அசிங்கம் வரக் கூடாதின்னு சொல்றன்" சாந்தா சொல்லி முடிப்பதற்குள்ளாகவே "நான் கிளம்பறன்" என்று சொல்லிவிட்டு எழுந்து நின்றான். அப்போது படலை தாண்டி உள்ளே வருவதற்கு முயன்ற பன்றி ஒன்றினை "த்தூ. த்தூ" என்று கத்தி விரட்ட முயன்றாள். அது நகராததால் எழுந்து சென்று "சனியன. எங்க வர?" என்று திட்டி பன்றியை ஓட்டிவிட்டு வந்தாள். வெளியேப் போவதற்கு தயாராக நின்றுகொண்டிருந்த செல்வக்குமாரிடம் "ஒக்காருங்க சார் போவலாம்." என்று சிரித்துக்கொண்டே சொன்னாள். செல்வக்குமார் உட்காரவில்லை. "உட்காருங்க" என்று பலமுறை சொல்லி கெஞ்சிய பிறகும் அவன் உட்காரவில்லை.
"வெயிலா இருக்கா சார்?" என்று சாந்தா கேட்டாள். செல்வக்குமார் வாயைத்திறக்கவில்லை.
"மத்த கொத்தனாருக்கு இவன் எம்மானோ தேவலாம் சார். அதனாலதான் சிடுமூஞ்சா இருந்தாலும் அவன் கூப்புட்ட இடத்துக்குப் போறன். கொத்தனாரு பயலுவோ எம்மாம் மோசம்ன்னு எனக்குத்தான் தெரியும்."
"இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட சொல்ற?" முறைப்பது மாதிரி கேட்டான்.
"ஒங்ககிட்ட சொல்லாம ரோட்டு பொறுக்கிங்ககிட்ட சொல்லணுமா?"
"..........."
"காலயில ஆறுமணிக்கு ஊட்டவுட்டுப் போனா திரும்பி ஊட்டுக்கு வர ராத்திரி எட்டு ஒம்போது மணி ஆயிடும். இதுவர, ஏன் லேட்டு, எங்க சுத்திட்டு வரன்னு அது கேட்டதில்ல சார்."
"சரி. அதுக்கு நான் என்னா செய்யணும்?"
"அது என்ன நம்புது சார்."
" நான் வந்தது தப்புத்தான்" செல்வக்குமாரின் குரலில் வேகம் கூடிவிட்டது.
"எட்டு மாசமா ஒங்கள பாக்குறன். ஒங்க மனசு எனக்குத் தெரியாதா?"
"என்னத் தெரியும் ஒனக்கு?"
"கடவுளு ஒங்க மனச கெடுத்துட்டான் சார். எம் மனசக் கெடுக்காம இருக்கணும். அதான் எங் கவல." சொல்லும்போதே அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. முந்தாணையால் முகத்தைத் துடைத்தாள். மூக்கை உறிஞ்சினாள்.
"நான் கெளம்பறன். மனுசன புரிஞ்சிக்கத் தெரியல. இத வச்சிக்கிட்டா நான் நிம்மதியாப் போவன்" என்று சொல்லி பணக்கட்டை நீட்டினான். பணக்கட்டைப் பார்க்காமல் செல்வக்குமாரின் வாடிப்போன முகத்தையே சாந்தா பார்த்தாள். சரி என்று பணக்கட்டை வாங்கினாள். கட்டிலிருந்து ஒரே ஒரு நோட்டை மட்டும் உருவி எடுத்துக்கொண்டு பணக்கட்டை திருப்பிக்கொடுத்தாள். பணக்கட்டை வாங்கி சேரில் வைத்துவிட்டு விர்ரென்று காரிடம் சென்ற செல்வக்குமாரிடம் "ஒங்க வீட்டு வேல முடியுறவரைக்கும் அந்த எடத்துக்கு நான் வரணுமின்னு நெனச்சிங்கின்னா பணத்த எடுத்துக்கிட்டுப் போங்க. சோத்துக்கு இல்லாத நாயிதான இதுன்னு நெனச்சிங்கின்னா வச்சிட்டுப் போங்க" சாந்தா சொன்னதும் திகைத்துப்போய் நின்றுவிட்டான் செல்வக்குமார்.
"எடுத்துக்கிட்டு வா."
"நீங்களே வந்து எடுத்துக்கிட்டு போங்க."
"பெரிய ராங்கிக்காரிதான்" என்று சொல்லிக்கொண்டே வந்து பணத்தை எடுத்துக்கொண்டுபோய் காரில் ஏறினான்.
                கார் கிளம்பும்வரை சிரித்த மாதிரி நின்றுகொண்டிருந்த சாந்தா, கார் கண்ணைவிட்டு மறைந்ததும் அழ ஆரம்பித்தாள்.


உயிர்மை – டிசம்பர் 2016