ரயில்
ஏற்றிவிடுவதற்கு செல்வமணிக்கென்று யாரும் வரவில்லை. கோகிலாவுக்கு அவளுடைய அப்பா, அம்மா, பாட்டி
என்று வந்திருந்தனர். வந்திருந்தாலும்
அவர்களுடைய முகத்தில் சிரிப்பில்லை. ஆனால்
கோகிலா கலகலப்பாகத்தான் இருந்தாள்.
புருசனோடு அதுவும் முதன்முதலாக ரயிலில் போகிறாள். அதுவே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்பா அம்மாவை பிரிந்துபோகிறோம் என்ற கவலை
துளியும் அவளுடைய முகத்தில் இல்லை. செல்வமணி
மாதிரியே அவளும் அடிக்கடி ரயில் வரும் திசையில் பார்த்தவாறு இருந்தாள். அவளுடைய பாட்டி முத்தம்மா ஏதோ சொன்னாள்.
சரி என்பது மாதிரி தலையை மட்டும் வெறுமனே ஆட்டினாள். ரயில் வருகிறது என்பதற்கான அறிவிப்பு வந்ததும் “நான் முதல்ல ஏறிக்கிறன். நீ கடைசியில்
ஏறு” என்று சொல்லிவிட்டு செல்வமணி சற்று முன்னோக்கி நடந்தான். பைகளை எடுத்துக் கொடுத்த கோகிலாவின் அம்மா
பூமாரி “எங்க பேச்சயெல்லாம் மீறிக் கல்யாணம் கட்டிக்கிட்டுப்போற, ஆளு எப்பிடி என்னா,
ஏதுன்னு தெரியல. மெட்ராசு என்ன
பக்கத்திலியா இருக்கு? ஒண்ணுன்னா
சட்டுன்னு ஓடியாறதுக்கு? எதுக்கும் வாயத்தொறக்காத, எதாயிருந்தாலும் ‘ம்‘, ‘ம்’ங்கிறதோட நிறுத்திக்க. பொட்டச்சி வாயி
இல்லாம இருந்தாத்தான் காலத்த ஓட்டலாம்.
செட்டா இருந்துக்க. நாக்கே
இல்லன்னு இருந்திடு” என்று சொன்னாள். ‘நான் பாத்துக்கிறன்’ என்பது மாதிரி கோகிலா தலையை மட்டும்
ஆட்டினாள்.
ரயில்
வந்து நிற்பதற்குள்ளாகவே கூட்டதோடு கூட்டமாக முட்டிமோதி செல்வமணி ஏறி இடம்
பிடித்து உட்காந்துகொண்டு ஜன்னல் வழியாக “சீக்கிரம்
ஏறிவா. எடம் போயிடும்” என்று சொல்லி கத்தினான். கோகிலா
ரயிலில் ஏறினாள். “எப்பியும்
இப்ப மாரியே சிரிச்ச முகமா இரு” என்று முத்தம்மா சொன்னாள். பூமாரி அழுதாள். “பத்தரம்” என்று அவளுடைய அப்பா சொன்னார். ரயில் புறப்பட்டது. கோகிலா வந்து செல்வமணிக்குப் பக்கத்தில்
உட்கார்ந்தாள்.
“பைய பத்தரமா காலுக்குக் கீழ தள்ளி
வை. காணாமப் போயிடும்.”
“ரயில்லகூட திருடுவாங்களா?” என்று கோகிலா கேட்டாள்.
“திருடங்க எல்லா இடத்திலயும்தான்
இருக்காங்க.”
“எனக்குத் தெரியாது” என்று
சொல்லிவிட்டு எதிர் சீட்டில் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்தாள். உட்காருவதற்கு இடம் கிடைக்காமல் நடைபாதையில்
நின்றுகொண்டிருந்தவர்களையும், உட்கார்ந்திருந்தவர்களையும், பொருட்களை வைப்பதற்காக
தலைக்குமேலே இருந்த இடத்தில் உட்கார்ந்திருந்தவர்களையும் பார்த்தாள். கசகசவென்று ஒரே கூட்டமாக இருந்தது.
“மேல எதுக்கு குந்தியிருக்காங்க?”
“எடம் கெடைக்காமத்தான். நானே ஓடிப்போயி முதல்ல ஏறி எடம் புடிக்காட்டி
நின்னுக்கிட்டுத்தான் வரணும்” என்று சொன்ன செல்வமணி “பை பத்தரம். மொத்தம் எத்தன பை?” என்று கேட்டான்.
“அஞ்சி.”
“எதுக்கு இத்தன பை?”
“ஊட்டுக்குண்டான சின்னச்சின்ன
சாமானுவோதான் இருக்கு..”
“---------”
அரைமணிநேரம்தான்
கழிந்திருக்கும். செல்வமணி தலையைத்
தொங்கபோட்டுக்கொண்டு தூங்க ஆரம்பித்துவிட்டான்.
கோகிலா சன்னலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்தாள். சிறிதுநேரத்தில் செல்வமணியின் தலை அவளுடைய
தோளில் சாய்ந்தது. எதிரிலும்,
பக்கத்திலும் கூட்டமாக சனங்கள்
இருக்கும்போது தோளில் சாய்ந்துகொண்டு இப்படி தூங்குகிறானே என்று ஆச்சரியப்பட்டாள். அப்படியேவிடவும் முடியவில்லை. எழுப்பிவிடவும் பயமாக இருந்தது. லேசாக அசைந்து உட்கார்ந்தால்
விழித்துக்கொள்வான் என்று நினைத்தாள்.
ஆனால் அவள் எதிர்பார்த்தது நடக்கவில்லை.
நகர்ந்து உட்கார்ந்த பிறகுதான் அவன் முன்பைவிட சௌகரியமாக தலையை
சாய்த்துகொண்டு தூங்கிக்கொண்டிருந்தான்.
தோளில் சாய்ந்திருந்த செல்வமணியினுடைய தலையைப் பார்த்தாள். ‘அநியாயத்துக்கு மோசம்தான்’ என்று நினைத்தாள். பெண் பார்க்க வந்த
அன்று செல்வமணியினுடைய தலையைப் பார்த்து “பயிறு ஏறாத
கட்டாந்தரையாட்டம் இப்பியே இருந்தா பிங் காலத்தில எப்பிடி இருக்கும்?” என்று முத்தம்மா கேட்டது நினைவுக்கு வந்ததும் லேசாக சிரித்தாள்.
“வாய் அதிகம்தான் கிழடிக்கு” என்று முணுமுணுத்தாள்.
பெண்
பார்க்க வந்தபோது செல்வமணி தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் மட்டும்தான்
கூப்பிட்டுக்கொண்டு வந்திருந்தான். சொந்தமில்லை.
பக்கத்து ஊருமில்லை. மாரியம்மன்
கோவிலுக்கு எதிர் வீட்டில் புதிதாக தங்கம்மா என்ற பெண் கல்யாணம் கட்டிக்கொண்டு
வந்திருந்தாள். அவள் மூலமாக செய்தி
அறிந்து வந்திருந்தார்கள். பெண் கேட்டு
மாப்பிள்ளை வருகிறார் என்ற தகவல் தெரிந்தபோது எல்லாருக்குமே சந்தோசமாகத்தான்
இருந்தது. ஆனால் மாப்பிள்ளையைப் பார்த்த
பிறகு ‘சீ’ என்றாகிவிட்டது.
கோகிலாவோடு
பிறந்தது மூன்றும் பெண்தான்.
ஒருத்திக்கும் கல்யாணம் நடக்கவில்லை.
பெண் கேட்டு வருகிற மாப்பிள்ளை எல்லாம், கழுத்துக்கு செயின், கைக்கு
மோதிரம், பீரோ, கட்டில், கலர் டி.வி.
என்று கேட்டதால் ஒருத்திக்கும் கல்யாணமாகவில்லை.
கூரை வீடு மட்டும்தான். வேறு சொத்தென்று
ஒன்றும் இல்லை. நான்கு ஐந்துபேர்
பாடுபட்டாலும் வாயிக்கும் வயித்துக்குமே இழுபறி என்றுதான் காலம் ஓடியது. மீறி நூறு இருநூறு மிஞ்சினால் அது எப்படி
மிச்சமாக இருக்கலாம் என்பது மாதிரி யாருக்காவது உடம்புக்கு வந்துவிடும். ஆண் பிள்ளை வேண்டும் என்றுதான் வரிசையாக பிள்ளை
பெற்றார்கள். ஆனால் பிறந்தது நான்கும் பெண்ணாக இருக்கும் என்று கோகிலாவின்
அப்பா அம்மா நினைக்கவில்லை. ‘சொத்து பத்து ஒண்ணுமில்ல. எதுக்கு
இத்தன புள்ளெ பொறந்துச்சி” என்று இப்போது கேட்கிறார்கள்.
நான்கு
பெண்களில் ஒருத்திக்கும் கல்யாணம் நடக்கவில்லை.
அதனால் போய் கேட்டால் உடனே கொடுத்துவிடுவார்கள் என்றுதான் செல்வமணியின்
அப்பா அம்மா நினைத்துக்கொண்டு வந்தார்கள்.
ஆனால் நடந்தது வேறு. பெண் தர
முடியாது என்று சொல்லாமல் ‘ஜாதகம் சரியில்ல’, ‘தோசம்
இருக்கு’, ‘தோசமுள்ள மாப்பளக்கித்தான் கொடுக்க முடியும்’, என்று என்னென்னவோ சாக்கு சொல்லியும் செல்வமணியின் அப்பா
அம்மா கேட்காததால் கடைசியில் ‘எங்கக்கிட்டெ பொண்ணு மட்டும்தான் இருக்கு.
மத்தது ஒண்ணுமில்லெ. துணிமணி
எடுக்கக்கூட வழியில்லெ’ என்று சொன்னார்கள். அதற்கு மாப்பிள்ளையின் அம்மா “நீங்க ஒண்ணும் செய்ய வாணாம்.
பொண்ண மட்டும் எங்ககூட கட்டுன சேலயோட அனுப்புங்க. கல்யாணத்த நாங்க நடத்திக்கிறம். நீங்க ஒண்ணும் போடலன்னு சொல்லியெல்லாம் காட்ட மாட்டம். அது தெரிஞ்சித்தான பொண்ணு கேட்டு வந்திருக்கம்’ என்று சொன்னதும், கோகிலா வீட்டிலுள்ளவர்களுக்கு அதற்குமேல் பேசுவதற்கு
வழியில்லாமல் போய்விட்டது.
“நீங்களே எல்லாத்தயும் செஞ்சிக்கிட்டாலும்
எங்க பங்குக்கு நாங்க ஏதாச்சும் செஞ்சாத்தான எங்களுக்கு மரியாத. ஒரு வருசமாவும் பணம் வர்றதுக்கு. அதுக்குப் பின்னாலதான் கண்ணாலம்” என்று முத்தம்மா அடித்து சொன்னாள்.
“ நீங்க ஒரு பைசாகூட போட வாணாம். பொண்ண அனுப்புங்க. பந்தியில குந்தி சாப்புட்டுட்டு போங்க. அதெ மட்டும் நீங்க செஞ்சா போதும்” என்று மாப்பிள்ளையின் அம்மா சொன்னதும், முத்தம்மாவுக்கு கோபம் வந்துவிட்டது.
“இப்பியே கழுவி வச்ச வெங்கல பானயாட்டம்
மாப்ள தல இருக்கு. அப்பறம் என்னாத்த
சொல்றது” என்று நேரிடையாகவே விசயத்தைப் போட்டு உடைத்தாள். முத்தம்மா சொன்னதை பெரிய கௌரவம்மாதிரி எடுத்துக்கொண்ட
மாப்பிள்ளையின் அம்மா “இது எங்க குடும்ப வழுக்க. எங்க ஊட்டுக்காரர பாத்தீங்கில்லெ. என்னெ பொண்ணு பாக்க வந்தப்பவும் இப்பிடித்தான்
இருந்தாரு. நான் கல்யாணம்தான்
கட்டிக்கலியா? புள்ளெதான் பெத்துக்கலியா? குடும்பம்தான் நடத்தலியா? எங்க மாமனாரு தலய பாத்தீங்கன்னா
சிரிப்பீங்க. தொடச்சி வச்ச கண்ணாடியாட்டம்
இருக்கும். மொட்ட
போட்டாக்கூட அம்மாம் சுத்தமா இருக்காது” என்று சொல்லி
சிரித்தாள். கோகிலா வீட்டு சனங்கள்
சிரிக்காததால் அவளுடைய முகம் வாடிப்போயிற்று.
அதை மறைப்பதற்காக “எந்தலயில பாத்தீங்கில்லெ. இந்த வயசிலயும் எப்பிடி எம்மாம் நீட்டுக்கு
சாட்ட சாட்டயாட்டம் மசுரு இருக்கு” என்று சொல்லி தன்னுடைய தலையைத் திருப்பிக் காட்டினாள். அதற்கும் யாருமே பேசாததால் அலுப்பான குரலில் “தலயில இருக்கிற மசுரயா ஆக்கித் திங்கப்போறம்.
பையனுக்கு படுப்பு இருக்கு.
கவர்மண்டு உத்தியோகம் இருக்கு” என்று சொன்னாள்.
யாருமே பேசவில்லை.
“வர்ற வழியில பொண்ண பாத்தான்
எம்மவன். அதுலயிருந்து கட்டுனா இந்தப்
பொண்ணத்தான் கட்டுவன்னு ஒரே புடியா நிக்குறான்.
தங்கம்மாவும் பொண்ணெப்பத்தி நல்லத்தனமாத்தான் சொன்னா” என்று
மாப்பிள்ளையின் அம்மா யாரும் கேட்காமலே தானாகவே சொன்னாள்.
“வேல எப்ப கெடச்சிச்சி?”
“ரெண்டாயிரத்து பத்திலெ.”
“எந்த வயசில வேல கெடச்சிச்சி?”
முத்தம்மா எதற்காக கேட்கிறாள் என்பது
தெரிந்ததும் மாப்பிள்ளையின் அம்மா முப்பத்தி மூன்று என்று சொல்வதற்குப்பதிலாக “இருவத்தியெட்டுலதான்” என்று சொன்னாள். முத்தம்மா உதட்டைப் பிதுக்கினாள். ஆனால் வாயைத் திறக்கவில்லை. அதனால் மாப்பிள்ளையின் அம்மா தானாகவே சொன்னாள் “எத்தன வயசனாலும் கவர்மண்டு உத்தியோகம் கெடச்சாத்தான் கண்ணாலமின்னு ஒரேபுடியா
நின்னுட்டான். அதனாலதான் ரெண்டு வயசி
கூடிப்போச்சி. இந்த காலத்திலெ வயச யாரு
பாக்குறா? கவர்மண்டு உத்தியோகம்
இருக்கான்னுதான் பாக்குறாங்க. தனியாரு
வேலன்னாகூட வாணாங்குதுவோ. ஜாதகத்தில
எல்லாம் ஒரு குத்தமுமில்லெ. வேணுமின்னா
ஜாதகத்த வாங்கி பாத்துக்குங்க” என்று சொன்னாள்.
“வேணுமின்னாத்தான அதெல்லாம் பாக்கணும்” என்று ஒரு தினுசாக முத்தம்மா சொன்னாள்.
“பையன் தடியா, கொஞ்சம் கருப்பா
இருக்கான்னு நெனக்காதீங்க. அது நான்
பொறந்த குடும்பத்தோட வாட்டம்.”
“எத்தன புள்ளீங்க? கூடப் பொறந்தவங்கின்னு உண்டா?”
“ஒரே பையன்தான்.”
“குடும்ப வாட்டம் தெரிஞ்சி ஒண்ணே
போதுமின்னு வுட்டுட்டீங்களாட்டம் இருக்கு” என்று முத்தம்மா
சொன்னதும் மாப்பிள்ளையின் அம்மாவினுடைய
முகம் தொங்கிப்போயிற்று. அப்போது ‘சும்மா இரு’ என்பது மாதிரி மாமியாரை இடித்தாள் பூமாரி.
“ஒரு புள்ளெ பெக்குற முட்டும்தான பொண்ணு,
மாப்ள. அப்பறம் கிழவன் கிழவிதான”
“யோசிச்சி சொல்றம்” என்று
கோகிலாவின் அப்பா சொன்னார்.
“ஒலகம் தெரியாம பேசுறீங்க. வேலயில இருக்கிற கெடக்கிற மாப்ள கெடக்கிறது
லேசில்லெ. இப்பியே பத்தாயிரம்
வாங்குறான். போவப்போவ சம்பளம்
எகிறிக்கிட்டுத்தான் போவும்.”
“காசு பணத்த திங்க முடியுமா? காசு பணம் கூட
நடந்து வருமா? கூட ஒக்காந்து
சிரிக்குமா?” வெடுக்கென்று கேட்டாள் முத்தம்மா.
“எங்க பையன கட்டிக்கிட்டா ஒங்க பொண்ணு
காடு கரைக்குப் போவ வாணாம். கூலி
வேலக்கிப் போவ வாணாம். ஊட்டுல
குந்திக்கிட்டு மூணு வேளக்கும் சுடுசோறு சாப்புடலாம். காலத்துக்கும் வெயில் படாம இருக்கலாம். ஊட்டெ வுட்டு வெளிய வர்ற வேண்டியதில்லெ. மொகத்தில இருக்கிற பவுடரு கலையாம
இருக்கலாம். வேலக்காரன் பொண்டாட்டின்னு
ஊருல மரியாதி இருக்கும். எத்தன
காலத்துக்கு கழுத்த கழுவி வச்சிக்கிட்டு கல்யாணத்துக்காக ஒங்க பொண்ணுவோ
குந்தியிருக்கிறது?” என்று மாப்பிள்ளையின் அம்மா சொன்னாள்.
மாப்பிள்ளையின்
அம்மா சொல்வதெல்லாம் சரிதான் என்று கோகிலாவின் வீட்டு சனங்களுக்குத்
தெரிந்தது. நான்கு பேரில் ஒருத்திக்கும்
இதுவரை நல்லக்காரியம் நடக்கவில்லை கட்டிக்கொடுக்க வழியில்லை வேலையில் இருக்கிற மாப்பிள்ளை பெண்
கேட்கிறான். அதுவும் கல்யாண செலவை தானே
பார்த்துக்கொள்வதாகச் சொல்லியும் கோகிலாவை செல்வமணிக்குத் தர யாருக்குமே
விருப்பமில்லை. சாணியில் பிடித்த
கொழுக்கட்டை மாதிரி இருந்தான். அவனுக்கு
எப்படி கோகிலாவை தருவது? ஊரில் என்ன
சொல்வார்கள்? கல்யாணம்
நடக்கவில்லையென்றாலும் பரவாயில்லை, கண்ணுக்குக் பிடித்தவனை இழுத்துக்கொண்டு
ஓடினாலும்சரி செல்வமணிக்கு மட்டும் பெண் கொடுப்பதில்லை என்று தீர்மானமாக இருந்தாள்
முத்தம்மா. தன்னுடைய மகனும் மருமகளும்
மனம்மாறி சரி என்று சொல்விடப் போகிறார்களோ என்ற கவலையில்தான் அவள் மாப்பிள்ளையின்
அம்மாவை ஒரேடியாக மட்டம் தட்டி பேசிக்கொண்டிருந்தாள். அங்கு நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது மாதிரி
உட்கார்ந்திருந்தான் செல்வமணி.
“ நீங்க போங்க. பொண்ண கேட்டு தகவலு சொல்றம்” என்று கோகிலாவின் அப்பா சொன்னார்.
“வேலயில சேந்து ஒரு வருசம்தான் ஆவுது.
அடிக்கடி லீவ் போட முடியாது.
அப்பறம் மெட்ராசிலயிருந்து இம்மாம் தொலவட்டு வந்துவந்து போவ முடியாது. உண்டு இல்லன்னு இப்பியே சொன்னீங்ன்னா
நல்லது. பொண்ணயும் ஒரு வாத்த
கேட்டுக்குங்க. மொறயெல்லாம் சரியாத்தான்
இருக்கு.”
“சரிம்மா. அவுங்க கேட்டுட்டே சொல்லட்டும். கிளம்பு போவலாம்” என்று
செல்வமணி நச்சரிக்க ஆரம்பித்தான் தன் அம்மாவிடம்.
அவனை ஒரு பொருட்டாக கருதாமல் “ஒங்க குடும்பத்தப்பத்தியும் ஊருல
விசாரிச்சம். ஒவ்வொரு டிக்கட்டா வெளியேத்த
வாணாமா? காலத்துக்கும் ஊட்டுலியே
வச்சிக்கிட்டு சீராட்டவா முடியும்?” என்று மாப்பிள்ளையின் அம்மா சொன்னதும்
முத்தம்மாவுக்குக் கோபம் வந்து “எம் பேத்திவோ ஒண்ணும் செல்லாத சரக்கு இல்லெ.
கால நேரம் கூடிவந்தா எந்த நாடோ எந்த பட்டணமோ போவத்தான் போறாளுவோ. எம் பேத்திவுளுக்கு இனிமேலா மாப்ளவோ பொறக்க
போறானுவோ. எம் பேத்திவோ நெறத்துக்கும்
வாட்டத்துக்கும் அடுக்கடுக்கா வரத்தான் செய்யுறானுவோ” என்று
சற்று சத்தமாகவே சொன்னாள்.
“நீங்க பொண்ண கேட்டு சொல்லுங்க. நாங்க கிளம்பறம்” என்று
சொன்ன செல்வமணி எழுந்து நின்றான்.
“அப்பறம் என்ன சொல்றது? இரு இப்பியே கேட்டு சொல்றன். தண்ணி இல்லாத கிணத்தில யாரு குதிப்பாங்க?” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் பின்புறமாக
நின்றுகொண்டிருந்த கோகிலாவிடம் வந்து எல்லா விசயத்தையும் சொன்னாள்
முத்தம்மா. கடைசியில் “நீயே வந்து மூஞ்சியில கரிய பூசு” என்று கூப்பிட்டாள்.
“நான் இந்த மாப்ளய கட்டிக்கிறன் ஆயா.”
முத்தம்மாவின் முகத்தில் கரியைப் பூசுவது
மாதிரி கோகிலா சொன்னாள்:
“என்னடி
சொல்ற?”
“நாளக் குறிக்கச் சொல்லு. போ.”
“சோத்துக்கு இல்லாதவனா இருந்தாலும்
கண்ணுக்கு பகரா இருக்க வாணாமாடி?”
“வாணாம்.”
“ஒனக்கு கண்ணு கருகிப் போச்சா? புத்தி குழம்பிப் போச்சா? நாலு புள்ளெ பெத்த அர கிழவனாட்டம்
இருக்காண்டி. அதோடவும் சுட்டெடுத்த பன்னி மாரி இருக்கான்.”
“இருந்துட்டுப் போவட்டும். ஒனக்கென்ன?
எனக்குப் புடிச்சி இருக்கு.”
“இதத்தான் பொட்டச்சி மனசு பீ திங்கும்ன்னு
சொன்னாங்களாட்டம் இருக்கு.”
“நாந்தான வாக்கப்பட போறென்.”
“சீ வாய மூடுடி. வாய பட்டயாட்டம் இருக்க ஒன்னெ அந்த
கருஞ்சட்டிக்கி கட்டி வைக்கச் சொல்லுறியாடி?
இரு. ஒன்னெ பெத்தவன வரச்சொல்றன். அவன் வந்து ஒம் மூஞ்சியில காறித் துப்பட்டும்” என்று
சொன்னாள் முத்தம்மா.
முத்தம்மாவிடம்
சொன்ன அதே பதிலைத்தான் கோகிலா தன்னுடைய அப்பா அம்மாவுக்கும் சொன்னாள். அவர்கள் இருவரும் பதில் பேச முடியாமல்
நின்றார்கள்.
“நம்பள மாரி சோத்துக்கு இல்லாதவன்
இல்லாமியா போயிடுவான்? அவன் வாயும்
வவுறும். பாத்தாலே ஒட்டிக்கிம்மாட்டம்
இருக்கு. அப்பிடியொரு கருப்பு. சாவப்போற கிழவி நானு. எனக்கே அவன புடிக்கலெ. தங்க பதுமயாட்டம் இருக்கிற ஒனக்கு புடிச்சி
இருக்கா?”
“ம்”
“வேல இருக்குங்கிறத தவுத்து வேற
ஒண்ணுமில்லெ அவங்கிட்டெ. அவசரப் படாத. வயசி கூடிப்போனா என்ன? ஒடம்பு தடிச்ச பின்னால கண்ணாலம் கட்டுறதுதான்
நல்லது. ஒனக்கின்னு ஒருத்தன் பூமியில
இனிமேலா பொறக்கப்போறான்? மத்த
குட்டிவுளுக்கு கண்ணாலம் ஆவணுமின்னு முடுவு பண்ணாத” என்று
முத்தம்மாவோடு அவளுடைய அப்பா அம்மாவும் இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று சொன்னார்கள்.
“முடிச்சி வுட்டுடுங்க.”
“புள்ளெ பெத்திருக்கா பாரு அழுவிப்போன
பூசணி பயமாட்டம். எம் புள்ளெயும்தான்
புள்ளெ பெத்திருக்கான் தென்னங்குருத்தாட்டம்.
புள்ளெ பெத்தா மட்டும் ஆச்சா? நான்
சொல்றத கேளு” என்று சொல்லி முத்தம்மா காறித் துப்பினாள்.
“நீ ஒரு மண்ணும் சொல்ல வாணாம். போ எட்டெ.
நாந்தான வாழப்போறன்?”
“ஓகோ அப்பிடியா? இவன கட்டிக்கிறதுக்குப் பதிலா எவனயாவது
இயித்துக்கிட்டு ஓடிப்போடி. நானே வழி
அனுப்பி வைக்கிறன். மொகப் பொருத்தம்கூட
இல்லியே.”
“வாய வச்சிக்கிட்டு சும்மா இரு. ஒருத்தியாச்சும் ஊட்டெ வுட்டு வெளிய பாவ வாணாமா?
சட்டம் சரா பேசுறதுக்கு சம்பாரிச்சி வச்சியிருக்கனும். வாய மட்டும் வளத்து வச்சியிருக்கிற. வாயால கூடி வர்றத கெடுத்துப்புடாத” என்று பூமாரி மாமியாரை முறைத்தாள். “எம்மாம் நாளக்கிப் பொட்டச்சிவுள ஊட்டுல வச்சியிருக்கிறது. ஊருல சனங்க எம்மாம் பேசுதுவோ” என்று சொல்லி பூமாரி கண்கலங்கினாள்.
“நீ பேசாம இரும்மா. இப்ப அவுங்கள அனுப்பி வைப்பம். மத்தத அப்பறமா பேசிக்கலாம்” என்று சொன்னதோடு வீட்டுக்குள் போய் “ரெண்டு நாளு
கழிச்சி வாங்க சொல்றம்” என்று சொல்லி பெண் பார்க்க வந்தவர்களை
அனுப்பி வைத்தார் கோகிலாவின் அப்பா.
கோகிலாவின்
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. ஆனால் முத்தம்மா இந்த மாப்பிள்ளை வேண்டாம்
என்று ஒரேடியாக பாடம் போட்டாள். “வௌக்காட்டம் தகதகன்னு இருக்கிற ஒம் மொகத்துக்கு அவன் பொருத்தமா? கண்ணுல வெளிச்சம்போன கிழடிகூட அவன கட்டிக்க மாட்டா.” அவள் பாடம்
பலிக்கவில்லை. கடைசியில் “ஒருத்தியாவது கன்னிக் கழியட்டும்” என்று கோகிலாவின் அப்பாவுக்கும்
அம்மாவுக்கும் எண்ணம் உண்டாயிற்று. எல்லாவற்றுக்கும்
மேலாக வேலையில் இருக்கிறான். அடுத்தடுத்த
பிள்ளைகளின் கல்யாணத்திற்கு உதவுவான் என்று நம்பினார்கள். அதற்கும் மேலாக ஒரு டிக்கட்டாவது வீட்டைவிட்டு
வெளியேறட்டும் என்று நினைத்தார்கள். திரும்பி
வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தார்கள்.
சொல்லி வைத்த மாதிரி மூன்றாம் நாள் காலையில் செல்வமணியின் அப்பாவும்
அம்மாவும் வந்தார்கள். “பொண்ணுக்கு சம்மதம்தான். நீங்கதான்
ஒரு கோவுல்ல வச்சி தாலிய கட்டிக்கணும்.
நாங்க வெறும் ஆளாத்தான் வருவம்” என்று கோகிலாவின் அப்பா சொன்னதுதான் “பொண்ண மட்டும் அனுப்புங்க. நாங்க
பாத்துக்கிறம். பணம் காசு
என்னாங்க? எங்க ஊருலியே இப்பிடிப்பட்ட
மருமவ யாருக்கும் இல்லங்கிற பேருதான் எனக்கு வேணும்” என்று
சொன்னதோடு அடுத்த எட்டாம் நாள் வந்து தேதி
வைத்தார்கள். அடுத்த பத்தாம் நாள்
கல்யாணம். தாலிக் கட்டிக்கொண்ட ஆறாம் நாளே
ரயிலேறிவிட்டாள் கோகிலா.
ஒவ்வொன்றாக
நினைத்த கோகிலாவுக்கு வியப்பாக இருந்தது.
ரயில் ஏற்றிவிட வரும்போதும்கூட வழியில் முத்தம்மா கேட்டாள்: “சண்டாதி சண்டனா
ராசாதி ராசனெல்லாம் வாணாமின்னுட்டு எதுக்குடி எரிஞ்சிப்போன புளியாமரம் மாரி
இருக்கிற இத்துப்போன இந்த பயலெ கட்டிக்கிட்டெ” கோகிலா
வாயைத் திறக்கவில்லை. தன்னுடைய அப்பா
அம்மா கேட்டபோதும், தங்கைகள், ஊர்ப்பெண்கள் கேட்டபோதும்கூட அவள் வாயைத்
திறக்கவில்லை. அந்த ரகசியத்தை இனிமேலும்
சொல்ல முடியாது என்றுதான் கோகிலாவுக்கு தோன்றியது. வெளியே சொன்னால் சிரிப்பார்கள். மலம்ஜலம் கழிப்பது பெரிய விசயமா என்று கேட்பார்கள்?
கோகிலா
வயதுக்கு வந்த நான்காவது வருசத்திலிருந்து பெண் கேட்டு மாப்பிள்ளைகள் வந்தார்கள். உள்ளூரில் நான்கு பேரும் வெளியூரிலிருந்து ஏழு
பேரூம் வந்தார்கள். எல்லாருமே எட்டாவது
பத்தாவது என்று படித்தவர்கள்.
செல்வமணியைவிட பத்து வயது
குறைந்தவர்கள்தான். வாட்டச்சாட்டமான பையன்கள்தான்.
அதிலும் ஆத்தூரிலிருந்து வந்த பையன் நன்றாகவே இருந்தான். நல்ல வளர்த்தி, நல்ல உயரம். கோகிலாவுக்கு பொருத்தமாக இருந்தான். கோகிலாவை கட்டியே தீர்வேன் என்று பிடிவாதமாக
இருந்தான். நகை, பணம் இல்லையென்றாலும்
பரவாயில்லை என்று அடிக்கடி வந்தான்.
கோகிலாவைத்தவிர வீட்டில் எல்லோருக்கும் விருப்பம்தான். கட்டாயப்படுத்தியும் பார்த்தார்கள். ஆனால் கோகிலா பிடிவாதமாக மறுத்துவிட்டாள். அதற்கு காரணம் ஆத்தூர் பையன் மட்டுமல்ல மற்ற
எல்லோருமே கிராமத்தில் இருப்பவர்கள்.
அவர்களில் யாரைக்கல்யாணம் கட்டிக்கொண்டாலும் உள்ளூரில் மலம்ஜலம்
கழிப்பதுபோலதான் அங்கு போயும் இருக்க வேண்டும்.
அது அவளுக்குப் பிடிக்கவில்லை.
அதனால்தான் ஆள் மோசமாக இருந்தாலும் படித்திருக்கிறான், வேலையில்
இருக்கிறான். மெட்ராசில் தனி வீடு
இருக்கும். யாருக்கும் தெரியாமல் மலஜலம்
கழிக்கலாம் என்ற காரணத்திற்காகத்தான் செல்வமணியை பிடிவாதம் பிடித்துக் கட்டிக்கொண்டாள். அவளுடைய சொந்தக்காரர்கள் மாப்பிள்ளைப்பற்றி
ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டார்கள்.
ஆனால் கோகிலா ஒரு கேள்விக்கூட
கேட்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே சரி
என்று சொல்லிவிட்டாள். அதற்கு காரணம் அவளுடைய அம்மாதான். வயதுக்கு வந்த பிறகு மலஜலம் கழிக்க இருட்டிய
பிறகு போகும் ஒவ்வொரு முறையும் காவல்காரன் மாதிரிகூடவே வருவதோடு சற்று தள்ளிக்கூட
நிற்காமல் எதிரிலேயே நின்று கொண்டிருந்ததுதான்.
வயதுக்கு
வருவதற்குமுன் ஊர்ப் பிள்ளைகளோடும், தன் தங்கைகளோடும் சேர்ந்து வட்டமாகவோ, வரிசையாகவோ உட்கார்ந்து மலஜலம் கழித்திருக்கிறாள். எந்த இடம் விருப்பமோ அந்த இடத்தில். எப்போது வருகிறதோ அப்போது. பிள்ளைகளோடு மட்டுமல்ல ஊர்ப்பெண்களோடும் தன்
அம்மா கூடவும் உட்கார்ந்து காரியத்தை
முடித்திருக்கிறாள். பக்கத்துவீட்டு,
எதிர் வீட்டுப் பெண்கள் இவளை துணைக்கு அழைத்துக்கொண்டு போய் இருக்கிறார்கள். எந்த பிரச்சனையும் இல்லாமல் ஊர்ப்
பிள்ளைகள்போலத்தான் இருந்தாள். வயதுக்கு
வந்து தலைக்கு தண்ணீர் ஊற்றி வீட்டுக்கு வந்த மறுநாள் விடியற்காலையில் இவளை மலஜலம்
கழிக்க அழைத்துக்கொண்டு போனாள் பூமாரி.
இரண்டடி தூரத்திலேயே எதிரிலேயே நின்று கொண்டிருந்தாள். கோகிலா தொடையில் உட்கார்ந்த கொசுக்களை அடித்து
கொண்டிருந்தாள். பூமாரி சுற்றி
வந்துகொண்டிருந்த பன்றிகளை விரட்டிக்கொண்டிருந்தாள்.
“நீ ஊட்டுக்குப்போ” என்று
சொன்னாள். கோகிலா சொன்னதை காதில் வாங்காத
பூமாரி “இருட்டுல பூச்சிப்பொட்டு கடிச்சிடும் சீக்கிரம் எயிந்திரு” என்று சொன்னாள்.
“பக்கத்திலதான் சனங்க இருக்குதில்லெ. நான் வந்துடுறன். நீ மொதல்ல ஊட்டுக்குப்போ” என்று
பலமுறை சொல்லிப் பார்த்தாள்.
“காத்து கருப்பு புடிச்சிக்கும். நான் நின்னா ஒனக்கு என்னா? சீக்கிரம் எழுந்திரு. வல்லன்னா முக்கு” என்று
சொன்னாள். கோகிலாவுக்குக் கோபம்
உண்டாயிற்று. கோபத்தில் முகத்தைத்
திருப்பிக்கொண்டு கிழக்குப் பக்கமாகப் பார்த்தாள். மூன்று பெண்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். உட்கார்ந்திருந்ததோடு
பேசிக்கொண்டிருந்தனர். அதேமாதிரி
கோகிலாவுக்கு பத்தடி தூரம் தள்ளி இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தனர். அவர்களும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். தூக்கத்தில் எழுப்பி அழைத்து வந்தது, எதிரிலேயே
நின்றுகொண்டிருப்பது, புது வழக்கமாக விடியற்காலையிலேயே எழுப்பியது என்று
கோகிலாவுக்கு பூமாரி மீது கோபம் உண்டாயிற்று.
வந்த காரியம் நடக்கவில்லை. “எம்மா நேரமாடி குந்தியிருப்ப?” என்று கேட்ட பூமாரி கோகிலாவைச் சுற்றி
வந்த பன்றிகளை “த்தூ-த்தூ” என்று விரட்டியடித்ததோடு பன்றி
வளர்ப்பவர்களை கெட்ட வார்த்தைச் சொல்லி திட்டினாள். அப்போதுதான் ஏன் ஊருக்குள் யாருடைய வீட்டிலும் மலஜலம் கழிப்பதற்கான
வசதி இல்லை என்ற கேள்வி அவளுக்குள் முதன்முதலாக எழுந்தது.
ஊருக்குள்
குறைந்தது ஐநூறு ஆறு நூறு வீடுகளாவது
இருக்கும். அதில் செட்டியார் வீட்டில்
மட்டும்தான் பாத்ரூம் இருந்தது.
செட்டியாரும் இரண்டு வருசத்திற்கு முன்புதான் கட்டினார். ஊரில் ஆயிரத்துக்கும்மேல் பெண்கள், பிள்ளைகள்
என்று இருப்பார்கள். அதில் வசதி படைத்த
வீட்டுப்பெண்கள் என்று முந்நூறு நானூறு
பேராவது இருப்பார்கள். சோற்றுக்கு
அல்லாடுகிற வீட்டுப்பெண்கள் என்று நூறு இருநூறு பெண்கள் இருப்பார்கள். ஏன் இப்படி தெருவில் வந்து
உட்கார்ந்திருக்கிறோம் என்று யாருக்குமே தோன்றவில்லை என்று யோசித்துக்கொண்டு வந்த
காரியத்தை மறந்துவிட்டு உட்கார்ந்திருந்தாள் கோகிலா. “எம்மாம் நேரம்மா குந்தியிருப்ப?” என்று பூமாரி கேட்டதும் வந்த காரியம் முடியாமலேயே எழுந்துவிட்டாள். வரும்
வழியில் கேட்டாள்:
“செட்டியார் ஊட்டுல கட்டுன மாரி நம்ப
ஊட்டுக்குப் பின்னாடி பாத் ரூம் கட்டுனா என்னம்மா?” என்று
கேட்டாள்.
“ஒங்கப்பன கட்டச்சொல்லு நானா
வாணாங்கிறன். சோத்துக்கே வழிய காணும்.”
“கூட்டத்திலெ குந்துறதுக்கு கூச்சமா
இருக்கு.”
“வயசுக்கு வந்த புதுசில அப்பிடித்தான்
இருக்கும். போவப்போவ சரியாப்போயிடும். வரிசியா எத்தினி பொட்டச்சி குந்தியிருக்கிறாங்க-பாக்கல? ஊரு ஒலகத்து பொட்டச்சியெல்லாம் வெளிய வாசல
இப்பிடித்தான போறாங்க. ஒனக்கு மட்டும்
என்னா? நீ மட்டும் அதிசயமா?” என்று கேட்ட பூமாரி பத்து இருவதடி தூரம் வந்ததும் மகளோடு சேர்ந்து
உட்கார்ந்திருந்த பூங்காவனத்திடம் “விடிஞ்சதும் என்னா வேல, எங்க போறது?
யாரு ஊட்டுக்கு” என்று விசாரிக்க ஆரம்பித்தாள். பூங்காவனம் கையிலிருந்த குச்சியால் பன்றிகளை
விரட்டிக்கொண்டே பூமாரியின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். கோகிலா சற்று தள்ளி வந்து நின்றாள்.
அன்றிலிருந்து
நேற்றிரவுவரை அதே கூத்துதான். ஒவ்வொரு
நாளும் விடியற்காலையில் பூமாரியோ தவறினால் தங்கைகளில் ஒருத்தியோகூட வருவாள்.
நான்குபேரூம் வயசுக்கு வந்த பிறகு “சேந்து போங்கடி” என்று சொல்லி நான்கு பேரையும் ஒரே நேரத்தில் கையில் குச்சியை கொடுத்து அனுப்ப
ஆரம்பித்தாள். நேரம் கெட்ட நேரத்தில்
அவளுக்கு வந்தால் “கூட ஒருத்தி போ” என்று ஒருத்தியை அனுப்புவாள். ஒவ்வொரு
நாளும் விடிவதற்குள்ளாகவே அம்மாவுடனோ தங்கைகளுடனோ கையில் குச்சியுடன்
எழுந்துபோய் வரிசையாகவோ, வட்டமாகவோ
உட்கார்ந்திருக்கும் பெண்களுக்கு மத்தியில் இடம் பிடித்து உட்கார்ந்து, இடையில்
ஆண்கள் வந்தால் எழுந்து முகத்தை திருப்பிக்கொண்டு நின்றிருந்துவிட்டு திரும்பவும்
உட்கார்ந்து மலஜலம் கழிக்கும் ஒவ்வொரு முறையும் கல்யாணம் கட்டினால் வேலையில்
அதுவும் நகரத்திலிருக்கும் மாப்பிள்ளையைத்தான் கட்ட வேண்டும் என்று
நினைப்பாள். அந்த ஒரு காரணத்திற்காகத்தான்
வந்த மாப்பிள்ளைகளையெல்லாம் வேண்டாம் என்று உதறித் தள்ளினாள். வீட்டிலுள்ளவர்களின் பேச்சையும் ஊரிலுள்ளவர்களின் பேச்சையும் மீறி செல்வமணியை
கட்டிக்கொள்கிறேன் என்று பிடிவாதம் பிடித்து கட்டிக்கொண்டாள். இப்போது நினைத்தாலும் வேடிக்கையாகத்தான்
இருந்தது. வரிசையாகவும் வட்டமாகவும் சிறுபிள்ளைகள்
கிழவிகள் என்று வயது வித்தியாசமில்லாமல் ஒன்றாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கும்போது
எப்படி பேசிக்கொள்ள முடியும்? ஆனால்
ஒவ்வொருத்தியும் அந்த நேரத்தை விட்டால் அடுத்த நேரம் கிடைக்காது என்பது மாதிரிதான்
நேற்று ஆக்கின சோறு குழம்பு முதல் வீட்டில் நடந்த சண்டைகள், மனக்கசப்புகள், மாமியார்,
மருமகள் சண்டைகள்வரை பேசுவார்கள்.
மெல்லமாகக்கூட பேச மாட்டார்கள்.
இடையிடையே பன்றிகளை விரட்டிக்கொண்டும், பன்றி வளர்ப்பவர்களை
திட்டிக்கொண்டும் பேசுவார்கள். காரியம்
முடிந்துவிட்டாலும் அதேஇடத்தில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருப்பார்கள். அதோடு
மலஜலம் கழிக்க வருபவர்களையும், மலஜலம் கழித்துவிட்டுப் போகிறவர்களையும் மறித்து
வைத்துக்கொண்டு அப்படியொரு பேச்சு பேசுவார்கள்.
பேச்சுக்கிடையில் நடைபாதையிலே மலஜலம் கழித்துவிட்டு போனவர்களை திட்டி
தீர்க்கவும் மறக்க மாட்டார்கள்.
“கழிசடங்க. ஒரு ஓரமா ஒதுங்கி இருந்தா என்ன? தடத்திலெ கழிஞ்சி வச்சியிருக்கிறத பாரு. அவுங்க கொடல அறுக்க” என்று
விடியற்காலையில் மட்டுமில்லை, விடிந்த பிறகும் அந்த வழியே போகிறவர்கள்
திட்டிக்கொண்டும் காறித் துப்பிக்கொண்டும்தான் போவார்கள். அந்த நேரத்தில் யாராவது ஆண்கள் வந்து
அவசரத்திலோ, பார்க்காமலோ எழுந்திருக்காமல் உட்கார்ந்திருந்துவிட்டால் காறித்
துப்பி “மானங்கெட்ட கழுத, ஆம்பள வரான்னுகூட இல்லாம குந்தியிருக்கிறத பாரு” என்று திட்டிக்கொண்டே போவார்கள்.
அந்தப் பேச்சையும் கேட்க வேண்டும்.
வெயில் காலத்தைவிட மழைக்காலம்தான் ரொம்ப
மோசமாக இருக்கும். வழியெங்கும் சேறும்
சகதியுமாக இருக்கும். லேசாக தூறலும்
இருக்கும். அதில்தான் போய் வரவேண்டும். சேறு சகதிக்கு ஈரத்திற்கு பூச்சி, பொட்டு,
பாம்பு பல்லி வரும் என்று ஒதுங்கி உட்காராமல் நடைபாதையிலேயே
உட்கார்ந்துவிடுவார்கள். வழிநெடுக பார்த்துகொண்டேதான்
போக வேண்டும். இடம் பார்த்து
உட்கார்ந்தாலும் தவளைகள், வண்டுகளின் சத்தத்தை கேட்டுக்கொண்டே இருக்க
வேண்டும். மழைக்காலமாக இருந்தாலும்
வழியில் பேசுவதை, எதிரில் நின்றுகொண்டு பேசுவதை, வழியில் வருகிற போகிறவர்களிடம்
பேசாமல் இருக்க மாட்டார்கள். இதனால் சில
வீடுகளில் பெரிய சண்டையே நடக்கும். “பீக்காட்டுக்குப் போனமா வந்தமான்னு
இல்லாம இம்மாம் நேரம் என்னாடி பண்ணிக்கிட்டிருந்த? கள பீ பேண்டுக்கிட்டு இருந்தியா? இல்லெ வழியே போன, வந்த நாயிவோகிட்டெ கதெ
போட்டுக்கிட்டிருந்தியா” என்று கேட்டு மாமியார்கள் மருமகள்களிடமும்,
அம்மாக்கள் மகள்களிடமும் சண்டை பிடிப்பார்கள்.
அவ்வாறு சண்டை பிடிப்பதற்கு காரணமும் இருக்கும். தோட்டத்துக்குப் போகிறேன் என்று போகிற
நேரத்தில்தான் தங்களுக்குப் பிடித்த பையன்களை சந்திப்பார்கள். இளம்பெண்களும் இளம்பையன்களும் சந்திக்கிற
இடமும் நேரமும் அதுதான். பீக்காடு. அதனால் வயதுக்கு வந்த பெண்களுக்கு அந்த
நேரத்தில்தான் காவல் அதிகம் இருக்கும். யார்யார்
எங்கெங்கு நின்று பேசிக்கொண்டிருப்பார்கள் என்று நினைத்த கோகிலாவுக்கு சிரிப்பு
வந்தது. செல்வமணியை கல்யாணம்
கட்டிக்கொண்டது பரவாயில்லை என்று நினைத்தாள்.
கல்யாணம் நடந்த அன்று “ஒன் யாகத்த முடிச்சிட்டடி” என்று சொல்லி முத்தம்மா சிரித்தது நினைவுக்கு வந்தது.
மலஜலம்பற்றியே யோசித்துக்கொண்டிருந்ததால்
கோகிலாவுக்கு ddfasfdsafசிறுநீர் கழிக்க வேண்டும்போல் இருந்தது. எப்படி செல்வமணியிடம் சொல்வதென்று
தயங்கினாள். சிறிதுநேரம் பொருத்திருந்து
பார்த்தாள். தாங்க முடியாது என்ற நிலையில்
ரொம்பவும் கூச்சத்துடன் செல்வமணியை எழுப்பி ‘தோட்டத்துக்குப்
போவணும்’ என்று சொன்னாள். அவன் சட்டென்று
தூங்கியது மாதிரியே சட்டென்று எழுந்தது ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு.
“போயிட்டு வா” என்று
சொன்னாள்.
“இம்மாம் கூட்டத்திலெ பொட்டச்சி நான்
எப்பிடி தனியா போறது?”
“சரி. வா” என்று
சொல்லி எழுந்தான் செல்வமணி.
கல்யாண
பெண்ணுக்கு மாலை மாற்றி போடுவதற்காக போவது மாதிரி ‘கொஞ்சம்
வழிவிடுங்க”, ‘கொஞ்சம் நவுறுங்க”, ‘வழி-வழி” என்று சொல்லி நடைபாதையில் நின்றுகொண்டிருந்தவர்களையும்,
உட்கார்ந்திருந்தவர்களையும் நகர்த்திவிட்டு, இடித்துக்கொண்டு செல்வமணி முன்னால்
நடக்க கோகிலா அவன் பின்னாலேயே
போனாள். புதுச்சீலை, சட்டை, கைநிறையக்
கண்ணாடி வளையல்கள், தலை நிறைய பூ, மஞ்சள் பூசிய முகம், கழுத்தில் புது
தாலிக்கயிறு, புது தோடு, புது மூக்குத்தி, கால் கொலுசு என்று அனைத்தும் அவளை
புதுப்பெண் என்பதை அடையாளம் காட்டின.
அதனால் அந்த பெட்டியிலிருந்த ஆண்-பெண் என்று வித்தியாசமில்லாமல் எல்லாக்
கண்களும் அவளையே மொய்த்தன. இரண்டு கழிப்பறைகளிலும் உள்ளே
தாழிடப்பட்டிருந்தது. பக்கத்திலிருந்த
இரண்டு அறைகளின் கதவையும் தள்ளிப் பார்த்தான்.
உள்ளே ஆட்கள் இருந்தார்கள். ஒரு
அடி தூரம்தான் இருக்கும். இருந்தாலும் “பக்கத்தில் வா”
என்று சொன்னான். கழிப்பறைக் கதவை ஒட்டி கோகிலாவை நிற்கச்
சொன்னான். இரண்டு கழிப்பறைகளை ஒட்டியும்,
ரயிலில் ஏறுவதற்கான இரண்டு வழியிலும் பத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் நின்றுகொண்டிருந்தனர். இவ்வளவு ஆண்களுக்கு மத்தியில் ஒரு இஞ்ச்,
இரண்டு இஞ்ச் இடைவெளியில் இதற்குமுன் அவள் நின்றதே இல்லை. அவ்வாறு நிற்பதே அவளுக்குக் கூச்சமாக
இருந்தது. அதோடு கழிப்பறைக் கதவு எப்போது
திறக்கும் என்று நின்றுகொண்டிருப்பது கூடுதலான வெட்கத்தையும் கூச்சத்தையும்
உண்டாக்கிற்று. அந்த நேரம் பார்த்துத்தான் செல்வமணி இவளிடம் தன்னுடைய
அலுவலகத்திற்கு நாளைக் காலையிலேயே போய்விடவேண்டும் என்று சொன்னான். “நேரத்திலியே எழுந்திருப்பியா?” என்று கேட்டான். அவனுக்கு பதில் சொல்லாமல் வெறுமனே ‘ம்’ என்பது மாதிரி தலைமயை மட்டும்
ஆட்டினாள். அப்போது ஒரு ஆள் வேகமாக வந்து
இரண்டு கழிப்பறைக் கதவுகளையும் தள்ளிப் பார்த்துவிட்டு செல்வமணியை ஒட்டி நின்றுகொண்டு
கதவு எப்போது திறக்கும் என்று காத்திருந்தான்.
நடைபாதையில் உட்கார்ந்திருந்த, நின்றுகொண்டிருந்த ஆட்களைப் பார்த்தாள். மெட்ராஸ்வரை இப்படியேதான் போகவேண்டுமோ என்று
யோசித்தாள். அப்போது கிழக்குப் பக்கமாக
இருந்த கழிப்பறைக் கதவை திறந்துகொண்டு குண்டான பெண் ஒருத்தி வெளியே வந்தாள். உடனே ‘போ’ என்று கோகிலாவிடம்
சொன்னான். அவள் உள்ளே போவதற்குள்ளாக
செல்வமணிக்கு பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஆள் உள்ளே போக முயன்றான். “இருங்க. லேடீஸ்
போவட்டும்”
என்று சொல்லி கோகிலாவை
கழிப்பறைக்குள் அனுப்பினான்.
கதவை சாத்தி தாழ்போட்டதுதான். அப்படியொரு நாற்றம் அடித்தது. காய்ந்து போயும், ஈரமாகவும் மலம்
கிடந்தது. மூத்திர வாடை குடலை பிடுங்கிற்று. பத்து இருபது பீடி சிகரட் துண்டுகள்
கிடந்தன. எல்லா இடத்திலும் எச்சில்
கறையாகவும், சளி கறையாகவும் அப்பிக் கிடந்தது.
வாந்தி வருவது மாதிரி குமட்டிக்கொண்டு வந்தது. காறித் துப்பலாம் என்று பேசினைப்
பார்த்தாள். சளியும், பீடி, சிகரெட்
துண்டும், எச்சில் கறையுமாக இருந்தது.
அதற்குள் வாய், உதடு, மூக்கு என்று அரிக்க ஆரம்பித்துவிட்டது. நான்கு ஐந்து இடத்தில் ஆண், பெண் குறிகளின்
படம் வரைந்து பாகங்களை கோடுப்போட்டு குறித்து வைத்திருந்தனர். எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு கீழே
உட்காரலாம் என்றால் ஒரே ஈரமாக இருந்தது.
அது தண்ணீரா, மூத்திரமா? மீறி
உட்கார்ந்தாலும் கால்களில் சீலையில் மலஜலம் ஒட்டாது என்று சொல்ல முடியாது. “ஊரவிட மோசமா இருக்கே” என்று முணுமுணுத்தாள். எல்லாவற்றையும் மீறி உட்காரலாம் என்றால் கதவுக்கு
முன்னால் செல்வமணி நின்றுகொண்டிருக்கிறான்.
அவனுக்குப் பக்கத்தில் இவள் எப்போது கதவை திறப்பாள் என்று வேறு ஒரு ஆள்
நின்றுகொண்டிருக்கிறான். அதற்கடுத்து ஒரு
அடி இரண்டு அடி தூரத்தில் பத்துக்கும் அதிகமான ஆண்கள்
நின்றுகொண்டிருக்கின்றனர். அதோடு ஒவ்வொரு
ஆளாக அவள் தாண்டி-தாண்டி வந்தபோது கோச்சில் இருந்த பாதி பேருக்குமேல் அவளைப்
பார்த்திருப்பார்கள். எல்லாருக்கும் இவள்
எங்கே போகிறாள் என்பது தெரிந்திருக்கும்.
இவள் திரும்பி போகும்போதும் எல்லாரும் பார்ப்பார்கள். என்ன நினைப்பார்கள், நினைத்திருப்பார்கள் என்று
யோசித்ததுமே அருவருப்பு உண்டாயிற்று. என்ன
செய்வது என்று யோசிக்கும்போது யாரோ கதவை தள்ளிப் பார்ப்பது தெரிந்தது-சிறுநீர்
கழிக்காமல் கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள்.
கோகிலாவை இடித்துக்கொணடு அவசரமாக ஒரு ஆள் உள்ளே ஓடினான்.
“வழிவிடுங்க”, “கொஞ்சம் நவுறுங்க”, “வழி”, “வழி” என்று சொல்லி ஒவ்வொரு ஆளாக
இடித்துக்கொண்டு தாண்டி செல்வமணி முன்னே செல்ல கோகிலா பின்னால் யாரையும்
பார்க்காமல் நடக்க முயன்றாள்.
இடத்திற்கு
வந்து உட்கார்ந்த சிறிதுநேரம் கழித்துத்தான் கோகிலாவுக்கு மூச்சுவிடவே
முடிந்தது. வாயில் உதட்டில் ஏற்பட்டிருந்த
அரிப்பு குறையவே இல்லை. சீலை,
சட்டையெல்லாம் வியர்வையில் உடம்போடு ஒட்டிக்கொண்டு கிடந்தது. சிறிதுநேரத்திற்குள்ளாகவே இவ்வளவு வியர்வை
வியர்த்து விட்டதே என்று ஆச்சரியமாக இருந்தது.
சன்னல் பக்கமாக முகத்தை வைத்து காற்று வாங்கினாள். அப்படியும் மூத்திரவாடை போனது மாதிரி தெரியவில்லை. சீலை, சட்டை என்று உடம்பில் எல்லா இடத்திலும்
அந்த வாடை படை மாதிரி ஒட்டிக்கொண்டுவிட்டதுப்போல் இருந்தது. பெரிய ஆபத்திலிருந்து தப்பி வந்தது மாதிரி உணர்ந்தாள்.
ரயில்
நின்றது. டீ, காபி, வெள்ளரிக்காய்
விற்பவர்கள் பிளாட்பாரத்தில் கூவிக்கொண்டே போனார்கள். அதைப் பார்த்ததும் “டீ சாப்புடுறியா?”
என்று செல்வமணி கேட்டான்.
“வாணாம்.”
“ஏன்?”
“கூட்டத்திலெ அதுவும் இம்மாம் ஆம்பளங்க
இருக்கிற எடத்திலெ எப்பிடி குடிக்கிறது?”
“அதெல்லாம் பாக்க முடியுமா?”
“எனக்கு வாணாம்.”
“வெள்ளரிக்கா வாங்கட்டுமா?”
“வாங்குங்க.”
செல்வமணி
வெள்ளரிக்காய் வாங்கினான். ஒன்றை
கோகிலாவிடம் கொடுத்தான். காயை வாங்கி
தின்னாமல் கையிலேயே வைத்திருந்தாள். நான்கு
ஐந்து காய்களை பையில் வைத்துவிட்டு அடுத்தடுத்து மூன்று காய்களை மாடு சோளத்தட்டையை
‘மரக், மரக்’கென்று கடித்து தின்பது மாதிரி தின்றான்.
யானையின் வாய் அசைவது மாதிரி அவனுடைய வாய் அசைவதைப் பார்த்த கோகிலாவுக்கு
சிரிப்பு வந்தது.
“வீட்டுக்கு எப்பப் போவம்?”
“இன்னம் முக்கால் அவர் ஆவும். இன்னிக்கி வண்டி லேட்டு வேற. எதுக்குக் கேக்குற?”
“வீட்டுக்குப் போனதும் தோட்டத்துக்குப்
போவணும்.”
“இப்பத்தான போயிட்டு வந்த?”
“போவல.”
“ஏன், என்னாச்சி?”
“வாசல்ல அம்மாம் ஆளுங்க நிக்குறாங்க. எப்பிடி போறது? எல்லாத்துககும்மேல அந்த எடம் இருக்கே. எங்க ஊரு பீக்காட்டவிட மோசமா நாறிகெடக்கு. யே அப்பா, இன்னம் சித்த நேரம் இருந்திருந்தா
செத்தேப் போயிருப்பன். நாத்தம் தாங்க
முடியல. கொடல புடுங்குது. வேர்த்துக் கொட்டிடிச்சி. விகாரமா இருந்துச்சி. ரயிலுவேற ஓடுது” லேசாக
சிரித்தாள் கோகிலா.
“ரயிலுல வர்ற எல்லாரும் அதுலதான போறாங்க?”
“எனக்கு கூச்சமா இருந்துச்சி. வந்துட்டன்.
ஒரு மணிநேரம் அதுக்குள்ளார ஒரு ஆளு இருந்தா செத்தேபோயிடுவான்.”
“அதுல போறவங்க, வர்றவங்க எல்லாம் மனுசங்க
இல்லியா?” செல்வமணியின் குரலும் முகமும மாறிவிட்டது.
“இதென்ன நம்ப ஊடா? இல்லெ ஊரா? இஷ்டப்பட்டெ எடத்தில போயிட்டு வர்றதுக்கு?” என்று கேட்ட செல்வமணி மெட்ராஸ்ப்பற்றி சொல்ல ஆரம்பித்தான். ஆண்களே ஒண்ணுக்குவிட மூன்று நான்கு
கிலோமீட்டர்கூட நடக்க வேண்டும் என்று சொன்னான்.
என்ன நினைத்தானோ “கூவத்த ஒட்டி இருக்கிற சனங்கள பாத்தா நீ
என்னா சொல்லுவ?” என்று கேட்டு சிரித்தான்.
“கூவம்ன்னா என்னா?”
கூவம்பற்றியும்
அங்கு குடிசைப் போட்டுக்கொண்டு இருக்கும் லட்சக்கணக்கான மக்கள்பற்றியும் சொல்ல
ஆரம்பித்த செல்வமணியின் பேச்சு ரயிலைவிட்டு இறங்கி, ஆட்டோ பிடித்து வீட்டுக்கு
வந்து பைகளை வைத்த பிறகுதான் நின்றது. மொத்த வீடே மூன்று பாய் அளவுக்குத்தான்
இருந்தது. வீட்டைப் பார்த்ததும்
கோகிலாவுக்கு திக்கென்றிருந்தது.
“தோட்டத்துக்குப் போவணும்.”
“வா” என்று
சொல்லிக்கொண்டே வெளியே போனான்.
“அங்க எதுக்கு?”
“வா சொல்றன்.”
கோகிலாவை
அழைத்துக்கொண்டு ஆறு வீடுகளை தாண்டி வந்து ஒரு அறையைக்காட்டி “போ” என்று சொன்னான்.
“இதுக்குள்ளாரயா?”
“ம்.
லைன் வீடுன்னாலே ஒண்ணுதான் இருக்கும்.
இங்க இருக்கிற ஒம்போது வீட்டுக்கும் இதுதான். மெட்ராசில ரெண்டாயிரம் ரூவா வாடகக்கி இதுவே
பெருசு. போ” என்று
சொன்னதோடு கக்கூஸ் அறைக்குள் தள்ளி வெளியே கதவை இழுத்து சாத்தினான். “தாழ்ப்பாள் போட்டுக்க.”
“ஒலகத்தில ஒரு பொட்டச்சி எல மறவா காய் மறவா ஒதுங்கிறதுக்கு ரவ எடமில்லியே” என்று முணுமுறுத்தாள். கோகிலாவுக்கு
கண்களில் கண்ணீர் திரை கட்டியது.
அடிவயிற்றிலிருந்து அழுகையும் ஆத்திரமும் பொங்கி வந்தது.
கதவை தட்டி “எம்மாம்
நேரமா இருக்கிற? வா. வெளியே’. அடுத்த ஆளு நிக்குது பாரு. லேட்டு பண்ணுனா
சண்ட வந்துடும். சீக்கிரம் வா” என்று செல்வமணி கத்திய வேகத்தில் பயந்துபோன கோகிலாவின் தொடைகளின் வழியே
சிறுநீர் இறங்கிற்று.
-----------