செவ்வாய், 8 ஜனவரி, 2019

ஒளிரும் பெண்கள் – மிளிரும் பெண்கள் – இருட்டில் இருக்கும் பெண்கள்? – இமையம்



       நவீன சமூக பொது வெளியில் பெண்கள் முழு சுதந்திரத்துடன் புழங்குவதற்கும், செயல்படுவதற்குமான வாய்ப்பை உலகமயமும், தாராளமயமும் ஏற்ப்படுத்திதந்திருக்கிறது. “பொம்பள பிள்ள படிச்சி என்ன செய்யப் போவுது?” என்று கேட்ட காலம், “பொம்பள பிள்ளைக்குச் சமைக்க தெரிஞ்சா போதும்என்று சொன்ன காலம், “பொட்ட கோழி கூவியா விடியப் போவுதுஎன்று கிண்டலடித்த காலமும் மலையேறிவிட்டன. இன்றைய நிலையில் எங்கும் பெண்கள், எதிலும் பெண்கள் என்ற நிலைதான். பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் கடந்த இருபதாண்டுகளாக பெண் பிள்ளைகள்தான் அதிக தேர்ச்சி சதவிகிதமும்; அதிக மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார்கள். இன்று பெண் பிள்ளையை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் என்று சொல்கிற ஒரு பெற்றோரை நம்மால் காட்ட முடியாது. “பொம்பள பிள்ளங்கதான் நல்லா படிக்குதுங்கஎன்று பெற்றோர்களும், சமூகமும் கொண்டாடுகிற நிலைதான் இருக்கிறது. மாநில, மத்திய அரசுகள் நடத்துகிற தேர்வுகளில் அதிக எண்ணிக்கையில் பெண்கள்தான் தேர்வாகின்றனர்.

        பொம்பள பிள்ள அதிகமாக படிச்சியிருந்தா மதிக்காதுஎன்று சொன்ன, ”பொம்பள பிள்ள வேலக்கிப் போனா மதிக்காது. நடத்த சரியிருக்காதுஎன்று சொன்ன பேச்சுகள் இன்று அர்த்தமிழந்துவிட்டன. “சொத்து இருக்கு. வசதி இருக்கு. வேலைக்கு அனுப்ப மாட்டேன்என்று எந்த ஒரு பெற்றோரும், எந்த கணவரும் சொல்வதில்லை. அப்படி யாராவது இன்று சொன்னால் அவர்கள் பைத்தியமாகத்தான் இருக்க வேண்டும். ”ஒரு சம்பளத்த  வச்சிக்கிட்டு குடும்பத்த ஓட்ட முடியாதுஎன்றும்ஒருத்தர் சம்பார்த்தனையில வாழ முடியாதுஎன்றும் சொல்கிற காலம் இது. பழமை வாய்ந்த சமூக மதிப்பீடுகள், பழக்கவழக்கங்கள் இன்று அர்த்தம் இழந்துவிட்டன. பெண்கள் குறித்த புனைவுகள், கற்பனைகள் எல்லாம் மரித்துவிட்டன. இது நவீன அறிவியல் தொழிநுட்ப யுகம். பெண்கள் யுகம்.

        1990-2000ம் வரையிலான காலக்கட்டத்தில்கூட பெண்களை வாசலில் நிற்கக் கூடாது, திண்ணையில் உட்காரக் கூடாது, நாற்காலியில் உட்காரக் கூடாது. பெண்கள் தனியாக வெளியூர் போகக் கூடாது என்ற நிலைதான் இருந்தது. இரவில் பயணம் செய்யக் கூடிய பெண்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம். விடுதியில் தங்கி படிக்கவைக்கக்கூட தயங்கியக் காலம். ஆனால் இன்று நிலைமை வேறு. பேருந்தில், ரயலில், விமானத்தில் என்று பெண்கள் இரவு, பகல் என்றில்லாமல் பிரயாணம் செய்கிறார்கள். தனியாக வெளி நாடு செல்கிற, வெளிநாடுகளில் பணி செய்கிற பெண்களும் பெருகிவிட்டனர். எல்லாம் இயல்பாகிவிட்டது.

        பெண்கள் இன்று பணியாற்றாத, சாதனை செய்யாத துறை எது? ராணுவத்தில், கப்பல், விமான படையிலும் பணியாற்றுகிறார்கள். அறிவியல் துறையில், பொருளாதார, கலை இலக்கியம், நிர்வாகம், ஊடகம் என்று எல்லா துறைகளிலும் ஒளிர்பவர்களாக, மிளிர்பவர்களாக இருப்பவர்கள் பெண்கள்தான். உலக பணக்காரர்களின் பட்டியலில், சிறந்த தொழில் முனைவோர், பட்டியலில் இடம் பெறுகின்றனர். வங்கி, பெரும் தொழில் நிறுவனங்களில், பன்னாட்டு கம்பெனிகளில் சி...வாக, முதன்மை நிர்வாகியாக் இருக்கின்றனர். .டி. துறையில், வங்கி, பள்ளி, கல்லூரிகளிலும் பெண்கள்தான் அதிகமாக பணியாற்றுகின்றனர். விண்வெளி ஓடத்தில் செல்கிறார்கள். விமானம் ஓட்டுகிறார்கள். மாட்டு வண்டி, ஆட்டோ ஓட்டுகிறார்கள். பாண்டிச்சேரியில் ஒரு பெண் பிணம் எரிக்கிறார். மனைவி கார் ஓட்ட கணவன் உட்கார்ந்து செல்கிற காட்சியை இன்று நாம் சாதாரணமாகக் காண முடியும். இன்று தனிமனித வாழ்வில், குடும்ப, சமூக வாழ்வில் ஏற்பட்டுள்ள பொருளாதார மேம்பாடு என்பது பெண்களால் ஏற்பட்டதுதான்.

        இந்த பள்ளியில், கல்லூரியில், இன்ன படிப்பில் இன்ன பாடப்பிரிவில்தான் படிப்பேன், இந்த துறைச்சார்ந்த வேலைக்குத்தான் போவேன் என்று தீர்மானிக்கிற ஆற்றல் இன்று பெண்களுக்கு வந்திருக்கிறது. இன்னாரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று முடிவெடுக்கிற அதிகாரமும் இன்று பெண்களின் கைகளில்தான் இருக்கிறது. ஆண் குழந்தைக்காக இரண்டாம் திருமணம் செய்துக்கொள்வது குறைந்திருக்கிறது. குழந்தை வேண்டுமா? வேண்டாமா? என்று தீர்மானிக்கிற இடத்தில் இன்று பெண் இருக்கிறாள். இது சமூகம் தன்னியல்பாக ஏற்படுத்திக்கொண்ட மாற்றம்.
பெண்கள் இன்றைய வாழ்வில் பெற்றிருக்கிற சுதந்திரம், சுயமாக சிந்தித்தல், சுயமாக முடிவெடுத்தல், பொருளாதார தற்சார்பு நிலை அனைத்தும் பிரமிக்க தக்க வகையில்தான் இருக்கிறது. ஆனாலும் பெண்கள் நவீன வாழ்வில் இரண்டு விதமான உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகிறார்கள் எனபதை மறுக்க முடியாது. வீட்டிலும் உழைக்க வேண்டும். வேலை செய்கிற இடத்திலும் உழைக்க வேண்டும். ஒரு துணிக்கடையில் வேலை செய்கிற அணுக்கும், பெண்ணுக்குமான சம்பளம் ஏற்றத் தாழ்வாகத்தான் இருக்கிறது. ஒரே உழைப்பு, ஆண்பெண் என்பதற்காக சம்பளம் மட்டும் ஏற்றத்தாழ்வானது. இந்த வித்தியாசம் நகரம், கிராமம் என்று எல்லா இடத்திலும் இருக்கிறது. இது களையப்பட வேண்டும்.

        சமூகத்தின் எல்லா துறைகளிலும் பெண்கள் முதன்மையான இடத்திற்கும், தகுதியான இடத்திற்கும் வந்துவிட்டார்கள். ஆனால் அரசியல் துறையில் பெண்களின் நிலை என்ன? உள்ளாட்சி நிர்வாகத்தில் மட்டும் 33 சதவிகிதம் இடம் பெற்றுள்ளனர். சட்ட மன்றத்தில், மக்களவைவில், மாநிலங்கவையில் 33 சதவிகித இட ஒதுக்கீடுகூட கிடையாது. 33 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கன மசோதா மாநிலங்கவையில் மட்டும்தான் நிறைவேறியது. மக்களவையில் நிறைவேறவில்லை. 33 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கே ஒத்துக்கொள்ளாதவர்கள் 50 இட ஒதுக்கீட்டிற்காக எப்படி ஒத்துக்கொள்வார்கள். “பொம்பளக்கி அரசியல் எதுக்கு?” என்று எல்லாரும் கேட்கிறார்கள். அதே நேரத்தில் ஓட்டுப்போட மட்டும் அழைக்கிறார்கள். ஓட்டுப்போட மட்டும் பெண்கள் வேண்டும். ஓட்டு போடுபவர்களின் எண்ணிக்கையில் பெண்கள்தான் இன்றும் முதல் இடத்தில் இருக்கிறார்கள். இந்த முரணை எப்படிப் புரிந்துக்கொள்வது? மாநில, மத்திய அமைச்சரவையில் ஒரு சதவிகித பெண்கள்கூட இல்லை. ஓட்டுப்போட வரவேண்டும். பதவிக்கு, அதிகாரத்திற்கு  வரக் கூடாது என்று எண்ணுகிற சமூக மனோபாவத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

        இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள  அடிப்படை உரிமைகளில் தான் விரும்புகிற மதத்தை பின்பற்ற, வழிபட, பிரச்சாரம் செய்ய வழிவகை செய்திருக்கிறது. இந்தியாவிலேயே அதிகமாக படித்தவர்கள் என்று வர்ணிக்கப்படுகின்ற கேரள மாநிலத்தில் ஐயப்பன் கோவிலுக்குள் சென்று பெண்கள் வழிப்படக் கூடாது என்று போராட்டமும், ஆர்ப்பட்டமும் நடந்துக்கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில், அடிப்படை உரிமையை மறுக்கும் வகையில் கலவரங்கள் நடந்துகொண்டிருக்கிறது. பெண் அமைப்புகள் சில இந்த போராட்டத்தில் தீவிரமாக இருப்பதுதான் விந்தையானது.
       
        ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் சென்று வழிப்படக் கூடாது என்று சொல்வதற்கான காரணங்கள் மரபை மீறக் கூடாது, நூற்றாண்டு பழக்கம் என்பது. இது அறிவியல் பூர்வமான காரணங்கள் அல்ல. ஒரு காலத்திய மூடநம்பிக்கைக்காக சமூகத்தின் சரிபாதியினரை அவமானப்படுத்துவதை ஏற்க முடியாது. அமெரிக்காவில் இருக்கிற தமிழக, இந்தியர்கள் தங்களுடைய பெற்றோர்களின் திதியை ஆன்லைனிலிலேயே பதிவு செய்து திதியை முடித்துக்கொள்வது மரபு மீறல் இல்லையா? ஒரு காலத்தில் கடல் தாண்டி செல்லக்கூடாது என்ற மரபு இருந்தது. இன்று அந்த மரபு பின்பற்றப்படுகிறதா?  இந்தியர்கள் எந்த நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்? இந்திய சமூகம் படித்த, நாகரீக மிக்க, பண்பாடுமிக்க சமூகம்தான? இந்தியாவில் அதிகப்பட்சமாக இருப்பது பெண் தெய்வங்கள்தான். பெண்களை தெய்வமாக வழிபடுவோம். ஆனால் பெண்களை மட்டும் கோவிலுக்குள் நுழைய விடமாட்டோம் என்று சொல்வது அறிவுப் பூர்வமானதா? இன்று பெண் தெய்வங்களாக கொண்டாடப்படுகின்ற எல்லா தெய்வங்களும் நூற்றாண்டு, நூற்றாண்டாக ஆண்களால், ஆணாதிக்க சமூகத்தால் கொலைச் செய்யப்பட்ட பெண்களே.

        ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால் மரபு கெட்டுவிடும் என்று சொல்கிற புனிதர்களுக்கு, ஐயப்ப பக்தர்களுக்கு வீட்டில் அனைத்துவிதமான உதவிகளையும், பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்வது பெண்கள்தானே. எங்களை அனுமதிக்காத கோவிலுக்கு செல்ல, எங்களுடைய கணவர்களுக்கு நோன்பு காலத்தில் உதவி செய்ய மாட்டோம், மனைவியாக இருக்க மாட்டோம் என்று பெண்கள்தான் போராட வேண்டும். ஒவ்வொரு இந்திய ஆணும் எந்த அளவிற்கு ஆணாதிக்க மனோபாவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது ஐயப்பன் கோவில் விவகாரம் தெளிவுப்படுத்திவிட்டது. என்னுடைய மனைவியை, தாயை, சகோதிரியை, மகளை அனுமதிக்காத கோவிலுக்கு நானும் செல்ல மாட்டேன் என்று அறிவித்த ஒரே ஒரு ஆண் உண்டா? இன்றும் இந்தியா ஆணாதிக்க சமூகமாகத்தான் இருக்கிறது.
        சட்டமன்றத்தில், மக்களவையில், மாநிலங்கவையில் 50 சதவிகித இடஒதுக்கீடு பெறுகிற வரையில், ஐயப்பன் கோவில் போன்ற இடங்களில் சென்று வழிப்பட்டே தீர்வோம் என்று போராடி வெற்றி பெறுகிறவரையில் நம்முடைய பெண்கள் முன்னேற்றம் அடைந்துவிட்டார்கள் என்று சொல்ல முடியாது.

புதிய தலைமுறை டிசம்பர் 20 2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக