கலைஞர் தமிழ் இலக்கியத்தில் பெரும் கடல். கலைஞரின் எழுத்தின் வன்மை குறித்து, அவருடைய எழுத்துலகம்
குறித்து பேசுவது என்பது, கடலிலிருந்து அள்ளிய கைப்பிடி நீராகத்தான்
இருக்கும். 72 சினிமா படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறார்.
20க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறார். 25க்கும் மேற்பட்ட வரலாற்று நாவல்கள், குடும்ப நாவல்கள்
என்று எழுதியிருக்கிறார். 68 சிறுகதைகள், 500க்கும் அதிகமான கவிதைகள் என்று படைப்பிலக்கியமாக எழுதியிருக்கிறார்.
குறளோவியம், சங்கத்தமிழ்,தொல்காப்பிய பூங்கா என்று உரை எழுதியிருக்கிறார். இனியவை
இருபது என்று பயண நுல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். மக்சிம்
கார்க்கி எழுதிய ரஷிய நாவலை தன்னுடைய உரைநடை கவிதை வடிவில் மறு ஆக்கம் செய்திருக்கிறார்.
நெஞ்சுக்கு நீதி என்ற தன்னுடைய தன்வரலாற்று நுலையும் எழுதியிருக்கிறார்.
நெஞ்சுக்கு நீதி மட்டும் 4165 பக்கங்கள்.
1947 முதல் 2011 வரை ஓயாமல் எழுதி குவித்தவர்.
தமிழ் எழுத்தாளர்களில் கலைஞர் அளவுக்கு எழுதிய எழுத்தாளர் யாருமில்லை.
எழுத்தின் வழியாக அவர் அளவுக்கு புகழ்பெற்றவரும் ஒருவருமில்லை.
”புத்தகத்தில் உலகைப் படிப்போம். உலகத்தையே புத்தகமாகப் படிப்போம்” என்று சொன்னவர் கலைஞர்.
மற்ற எழுத்தாளர்களை போல கலைஞர் தனிமனிதர்களுடைய கதையை எழுதியவரில்லை.
சமூகத்தின் கதையை எழுதியவர். கலைஞரின் எழுத்தின்
நோக்கம் மிகவும் தெளிவானது. தமிழர் மேம்பாடு, தமிழ்ச் சமூக மேம்பாடு, சாதிசார்ந்த, மதம் சார்ந்த மூடத்தனங்களுக்கு எதிரானது. கலைஞரே தன்னுடைய
எழுத்தின் நோக்கம் குறித்து ”யாப்பின்றி போனாலும் போகட்டும்,
நம்நாடு, மொழி, மனம்,
உணர்வெல்லாம் காப்பின்றி போகக்கூடாதெனும் கொள்கை” என்று தெளிவாக கூறுகிறார். தன்னுடைய கொள்கைக்கு,
லட்சியத்திற்கு, மொழியைப் பயன்படுத்திய
–மொழி போராளி கலைஞர். தமிழ்மொழி செவ்வியல் தன்மை
கொண்டது. தமிழின் செவ்வியல் தன்மை மாறாமல், எழுத்தில், பேச்சில் பயன்படுத்தியவர். தமிழகத்திலுள்ள எளிய மனிதர்களும் தமிழின் செவ்வியல் தன்மையை அறியும்படி,
உணரும்படி, பயன்படுத்தும்படி செய்த மகத்தான எழுத்தாளர்
கலைஞர் மட்டுமே. தன்னுடைய இலக்கிய படைப்புகளின் வழியாக தமிழ்
சமூக வாழ்வை அப்பட்டமாக தோலுரித்து காட்டியவர். 70 ஆண்டுகளில்
கலைஞரின் எழுத்துக்களை படிக்காதவன், அவருடைய கவிதைகளை,
சினிமா வசனங்களை திரும்பத்திரும்ப சொல்லி மகிழாதவர்கள் என்று தமிழ்நாட்டில்
யாரும் இருக்க முடியாது.
கலைஞரின் எழுத்துக்கள்தான் 70 ஆண்டுகளில் அதிகமாக பேசப்பட்டது, கொண்டாடப்பட்டது.
அதனால்தான் கலைஞர் என்றால் தமிழ் என்று மக்களால் அடையாளப்படுத்தப்பட்டது.
70 ஆண்டு கால இலக்கிய தமிழ். 60 ஆண்டுகால அரசியல்
தமிழும் கலைஞர் தான். அதனால் அவரை தமிழ்மொழியின் வெகுமதி என்று
எழுத்தாளர்கள் போற்றுகிறார்கள். 2 லட்சம் பக்கங்களுக்குமேல் எழுதிக்
குவித்த ஒரே தமிழ் எழுத்தாளர் கலைஞர் மட்டும்தான். எழுத்தில்
அவர் பெருவெள்ளம். நீர் திவலைகள் அல்ல.
சினிமா கதைவசனம் என்றால் கலைஞர், நாவல் சிறுகதை என்றால் கலைஞர், மேடைப்பேச்சு என்றால்
கலைஞர், தமிழ் என்றால் கலைஞர் அரசியல் என்றால் கலைஞர்,
அரசியல் சாணக்கியத்தனம் என்றால் கலைஞர் போராட்டம் என்றால் கலைஞர்,
அறிக்கை என்றால் கலைஞர், சிறந்த நிர்வாகி என்றால்
கலைஞர், நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்றவர் என்றால் கலைஞர்,
14 பிரதமர்களை பார்த்தவர் என்றால் கலைஞர், நான்கு
ஜனாதிபதிகளை உருவாக்கியவர் என்றால் கலைஞர், 12 முதலமைச்சர்களை
பார்த்தவர் என்றால் கலைஞர், 50 வருடம் ஒரு கட்சியின் தலைவராக
இருந்தவர் என்றால் கலைஞர், ஒரு கடிதத்தின் மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்களை திரட்டக்கூடிய வல்லமை கொண்டவர் என்றால்
கலைஞர். இதனால்தான் கலைஞர் ஒரு அதிசயம்.
பள்ளியில் சேர்க்க மறுத்த போது, குளத்தில் குதிப்பேன் என்று சொல்லி குதிக்கப்போனது முதல் மெரினாவில் உடல் அடக்கம்
செய்ய உயிரற்ற அவருடைய உடல் போராடியது வரை பெரும் அதிசயமாக இருந்தவர். இளமை பலி கதையை எழுதிய கருணாநிதி யார்? என்று அண்ணா கேட்டது
முதல் 70 ஆண்டுகளாக தமிழுகத்தில் இலக்கியத்தில். அரசியலில், கலைஞரின் பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும்
இல்லை. 70 ஆண்டுகாலமாக இலக்கியத்தில், அரசியலில்
அவர் பேசப்படாத நாட்களில்லை. 70 ஆண்டுகளில் அவர் பெயர் அச்சு
அடிக்காத நாளிதழ்கள் என்று ஒன்றுகூட வந்ததில்லை.. 11 வயதில் திருவாரூரிலுள்ள
ஓடம்போக்கி என்ற நதியில்தான் முதன்முதலாக அவர் திராவிடர் இயக்க கூட்டங்களை நடத்தினார்.
11 வயதில் தொடங்கிய அவருடைய போராட்டம் ஆகஸ்ட் 07.08.2018ல் வங்க கடலோரம் சென்று முடியும்வரை தொடர்ந்தது. ”அம்பாள்
என்றைக்கடா பேசினாள்” என்று பராசக்தி படத்தில் ஒரு வசனம் வரும்.
அந்த வசனமும் ”ராமன் எந்த பொறியியல் கல்லுரியில்
படித்தான்?” என்று கேட்டதற்குமிடையில் 60 ஆண்டுகள். கடைசிவரை அவர் கொள்கைகளிலிருந்து மாறவே இல்லை
என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு.
நவீன தமிழ்
சமூகத்தின் தந்தை
முப்பதுக்கும் மேற்பட்ட
அணைகளை கட்டியது. டவுன் பஸ் விட்டது, கிராம
சாலைகளை இணைத்தது மின்சாரம் வழங்கியது, குடிசை மாற்று வாரியம்
அமைத்தது. கான்கிரீட் வீடு கட்டிக்கொடுத்தது. தொலைக்காட்சி கொடுத்தது. சிமிண்ட் சாலை அமைத்தது.
மினி பேருந்துகள் விட்டது. சமச்சீர் கல்வியை கொண்டுவந்தது,
மேம்பாலங்கள் கட்டியது, இந்தியாவில் முதல் டைடல்
பார்க் அமைத்தது, ஐ.டி. கம்பெனிகளை கொண்டுவந்தது, இந்தியாவில் முதல் இணைய மாநாடு
நடத்தியது என்று தமிழ்ச்சமூகம் இன்றைய நவீன சமூகமாக மாறுவதற்கு காரணமாக இருந்தவர் கலைஞர்.
அவர் இல்லை என்றால் தமிழ்நாடு சகலதுறைகளிலும் மேம்பட்ட மாநிலமாக இன்று
மாறி இருக்காது.
கலைஞர்
ரொம்பவும் மார்டனான ஆள்
கலைஞர் ஒரு போதும் தன்னுடைய
கலாச்சார அடையாளங்களை கைவிட்டதே இல்லை. கலாச்சார அடையாளங்களை
கொண்டாடிய அதே அளவிற்கு அவர் நவீனத்துவத்தையும் கொண்டாடினார். புறநானுற்று வீரத்தாயின் பெருமையையும் பேசுவார், அதேநேரத்தில்
முகநூலிலும் பதிவுகளிடுவார். தொல்காப்பிய பூங்காவும் எழுதுவார்.
நவீன நாவலான தாயை மறுஆக்கம் செய்வார். திருவள்ளுவரையும்
கண்ணகியையும் தமிழ் அடையாளமாக முன்னிறுத்துவார். அதே நேரத்தில்
தொழில்நுட்ப பூங்காவையும் அமைப்பார். அதனால்தான் கலைஞரை நவீன
தமிழ்சமூகத்தின் தந்தை என சொல்கிறேன்.
கலைஞர்
கட்டிட கலையின் ரசிகர்.
கலைஞர் அளவுக்கு கட்டிட
கலையின் மீது ஆர்வமும் ரசனையும் கொண்ட வேறு ஒரு மனிதரை பார்ப்பது அரிது. வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமாரியில் உள்ள திருவள்ளுவர்
சிலை, அண்ணா நூற்றாண்டு நூலகம், பூம்புகார்
சிற்பம், புதிய சட்டசபை கட்டிடம் போன்றவை கலைஞரின் கட்டிட கலையின்
மீதான ரசனைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
கலைஞரின்
நாவல்கள்
ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம், பாயும் புலி, பண்டாரக வன்னியன் என்று வரலாற்று நாவல்களை எழுதிய கலைஞர், வான்கோழி, அரும்பு, ஒரு மரம் பூத்தது,
ஒரே ரத்தம், பெரிய இடத்து பெண், சுருளி மலை, வெள்ளிமலை, நடுத்தெரு
நாராயணி, சாராப்பள்ளம் சாமுண்டி ஆகிய குடும்ப நாவல்களையும் எழுதியுள்ளார்.
வரலாற்று நாவல்களையும் குடும்ப நாவல்களையும் திரும்ப திரும்ப படிக்கும்
வண்ணம் எழுதிருக்கிறார். எத்தனை முறை படித்தாலும் அலுக்காத சளிக்காத
உணர்வை தருகிற மொழிநடையில் எழுதிருக்கிறார். கலைஞரின் எழுத்து
வலிமை என்பது அவருடைய மொழிநடைதான். அவருடைய மொழிநடை உரைநடை கவிதை
எனலாம்.
கலைஞர்
எழுதிய நாவல்கள்
நச்சுக்கோப்பை, சிலப்பதிகாரம், மணிமகுடம், ஒரே
ரத்தம், தூக்குமேடை, பரபிரம்மம்,
காகித பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, உதய சூரியன், வாழ
முடியாதவர்கள், சாந்தா, பொன்முடி,
ரத்தகண்ணீர், முத்து மண்டபம், திருவாளர் தேசியம் பிள்ளை, முஜ்புர் ரகுமான்,
புனித ராஜ்யம், மகான் பெற்ற மகான், அனார்கலி, சாக்ரட்டீஸ், சேரன் செங்குட்டுவன்,
பரதாயணம், சாம்ராட் அசோகன் என்று 24 நாடகங்களை எழுதிருக்கிறார். நாடகங்களிலும், நாவல்களிலும் கலைஞர் மொழியை கையாண்டவிதம் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.
கலைஞர் 64 சிறுகதைகளை எழுதிருக்கிறார். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு
விதம். ஒவ்வொரு ரகம். ஒவ்வொரு கதையிலும்
புதுமை. மொழியின் செழுமை. கலைஞர் கதையை
மட்டுமல்ல மொழியை கையாண்ட விதமும் ஆச்சரியம் அளிக்கிறது. “என்னை
எழுது, என்னை எழுது” என்று தமிழ் கலைஞரிடம்
தவம் கிடக்கிறது. ஒரு வார்த்தையில் பல பொருட்களை உள்ளடக்கி எழுதும்
வல்லமை கொண்டவர் கலைஞர்.
கலைஞரின் சிறுகதைகளில் மறக்க
முடியாத கதைகள் என்று ‘சங்கிலி சாமி’ ‘ஒரிஜினலில் உள்ளபடி’ ஆகிய சிறுகதைகளை சொல்வேன்.
இந்த கதைகளை படிக்கும்போது சிரிக்காமல் இருக்க முடியாது. கலைஞரின் நகைச்சுவை உணர்வுக்கு இக்கதைகள் உதாரணமாக இருக்கின்றன. கதைககளில் வெறும் நகைச்சுவை உணர்வு மட்டும் மேலோங்கி இருக்கவில்லை.
கருத்தாழமும் நிறைந்திருப்பதை காணலாம். ‘சங்கிலி
சாமி’ கதையில் “வழக்கில் வெற்றி பெற வேண்டும்.
வாத நோய் தீர வேண்டும். பிள்ளையில்லை அருள் வேண்டும்.
கொள்ளை போய்விட்டது. கள்ளனை காட்டுக” என்று பக்த கோடிகள் வேண்டிக்கொள்ள எல்லாவற்றுக்கும் ஒரே மருந்தாக விபூதி தருகிறார்
பூசாரி என்று கலைஞர் எழுதிருக்கிறார். இந்த கதையில் மக்களின்
அறியாமையை மட்டுமல்ல பூசாரிகளின் தந்திரங்களையும் ஏமாற்றுகளையும் நகைச்சுவை உணர்வோடு
எழுதிருக்கிறார்.
கலைஞர் தான் ஏற்றுக்கொண்டு
கொள்கையில் இருந்து ஒரு போதும் விலகியதில்லை. அதே போன்று அவர்
எழுதிய சினிமா கதை வசனங்களில், நாவல்களில், நாடகங்களில், சிறுகதைகளில், கவிதைகளில்,
மேடைப்பேச்சுகளில் எந்த காரணத்திற்காகாவும் அவர் சமரசம் செய்துகொண்டதே
இல்லை. மான உணர்ச்சி, இன உணர்ச்சியும்தான்
அவருடைய பேச்சும் எழுத்தும். அவர் மத்திய அரசில் அங்கம் வகித்த
போதெல்லாம் பேச்சுவார்த்தை என்ற ஆய்தத்தின் வழியாக தமிழகத்திற்கு பல அரிய திட்டங்களை
கொண்டுவந்து தமிழகத்தை மேம்படுத்தினார். மத்தியில் அவர் கூட்டணி
வைத்திருந்தாலும் கொள்கை ரீதியாக அவர் சமரசம் செய்துகொண்டதில்லை. ஆனால் தன்னுடைய பேச்சில் எழுத்தில் அரசியல் நடவடிக்கைகளில் எப்போதும் ஜனநாயகத்தையே
விரும்பினார். ஜனநாயகத்தியே நிலைநாட்டினார். அவர் அளவுக்கு ஜனநாயகத்தை போற்றிய, பின்பற்றிய ஒரு அரசியல்
தலைவர் இந்தியாவில் இல்லை. ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’
என்று தன்னை அறிவித்துக்கொண்ட ஒரே தலைவர் – கலைஞர்
மட்டுமே.
ஒளிரும்
சொற்களை உருவாக்கியவர் கலைஞர்
தமிழ்நாடு ஒரு அமைதி பூங்காவாக
இருக்கிறது என்று கலைஞர் சொன்னார். இந்த சொல்லை தமிழக மக்கள்
மட்டுமல்ல. எதிர்க்கட்சிக்காரர்களும் பயன்படுத்துகிறார்கள்.
அய்யன் திருவள்ளுவர் என்று அவர்தான் சொன்னார். தமிழகமே அய்யன் திருவள்ளுவர் என்று சொல்கிறது. சிங்கார
சென்னை என்று அவர்தான் சொன்னார். சிங்கார சென்னை என்று தமிழகமே
சொல்கிறது. மாற்றுத்திறனாளி என்று அவர்தான் சொன்னார்.
தமிழகமே மாற்றுத்திறானாளி என்று சொல்கிறது. திருநங்கை
என்று அவர்தான் சொன்னார். தமிழகமே திருநங்கை என்று சொல்கிறது.
இன்று அது சட்டமாகவும் அங்கீகாரமாகவும் மாறியிருக்கிறது. இப்படி தன்னுடைய எழுத்துகளின் வழியாக பேச்சுகளின் வழியாக நூற்றுக்கணக்கான அழியாத
சொற்களை உருவாக்கித்தந்தவர் கலைஞர். அழியாத சொற்களை உருவாக்கிறவனே
எழுத்தாளன்.
தமிழ் இனம் என்று ஒன்று
இருக்கும் வரை, தமிழ் மொழி என்று ஒன்று இருக்கும் வரை,
தமிழ் இலக்கியம் என்று ஒன்று இருக்கும் வரை, கலைஞர்
என்ற எழுத்தாளர் இருப்பார், கலைஞர் என்ற சொல் இருக்கும்.
19.08.2018 அன்று தி.மு.க. ஏற்பாடு செய்திருந்த கலைஞர்
புகழுக்கு வணக்கம் நினைவஞ்சலி கூட்டத்தில் பேசியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக