கே.எஸ். மணியம் சிறுகதைகள்
விமர்சனம் - இமையம்
விமர்சனம் - இமையம்
புலம்பெயர்ந்தோர்
இலக்கியம் என்ற வகையில் ஈழத் தமிழ் இலக்கியங்களே பேசப்பட்டுவருகிறது. கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் என்று சென்று தங்கி அவர்கள்
எழுதும் எழுத்தும் கவனம் பெற்றிருக்கிறது. ஆனால் மலேசியத் தமிழர்கள் எழுதிய இலக்கியம் குறித்த பேச்சு
இல்லை. சி.முத்துசாமியின் ‘மண்புழுக்கள்’ அ.அரங்கசாமியின் ‘மரண ரயில் பாதை’ எம்.குமரனின் ‘செம்மண்ணும் நீல மலர்களும்’, முத்தம்மாள் பழனிசாமியின் ‘நாடுவிட்டு நாடு’ போன்ற படைப்புகள் குறித்தும்
படைப்பாளிகள் குறித்தும் தமிழகத்தில் பேசப்படுவதில்லை. தற்காலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் மா.சண்முகசிவா, ம.நவீன் சிறுகதைகள் குறித்தும்
பேச்சில்லை.
ஒதுக்குதல்,
புறக்கணித்தல்,
விலகிச் செல்லுதல் என்பது அறிவுசார் துறையினர், இலக்கியத் துறையினர் செய்யக்கூடிய
நற்செயல்கள் அல்ல. மலேசியாவில் வெளிப்படையான அரசியல் பார்வையுடன்
எழுதி வருபவர் கே.எஸ்.மணியம் The Return என்ற
தன் வரலாற்று கதையையும், In a Far Country என்ற நாவலையும்,
Plot, The Aborting parablames and other stories ஆகிய சிறுகதைத்
தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். ஆனாலும் தமிழகத்தில் அவர்
பெயர் அறியப்படவில்லை.
கே.எஸ்.மணியத்தின் ஆறு சிறுகதைகளை விஜயலட்சுமி
மொழிபெயர்த்திருக்கிறார். ஆறு கதைகளும் புலம்பெயர்ந்து வாழும் மலேசியத் தமிழர்களின் மூன்று தலைமுறைகளின்
வாழ்க்கையை பேசுகிறது. மனித மலத்தால் நிரம்பியிருந்த கப்பலில் சென்று ரப்பர்
தோட்டங்களில் இறக்கி விடப்பட்ட மனிதர்கள், அவர்களுக்கு பிறந்த இரண்டாம்
தலைமுறையினர்.
இன்றைய மூன்றாம் தலைமுறையினர். முதல் தலைமுறையினர் உயிர்வாழ்தல், உயிரோடு இருத்தல் என்ற அளவில் மட்டுமே
சிந்தித்துள்ளனர். இரண்டாம் தலைமுறையினர் அடிமை வாழ்வில் இருந்து விடுபட
முடியாத நிலையில் இருந்தனர். மூன்றாம்
தலைமுறையினர் படித்தவர்களாக நகரங்களில் குடியேறியவர்களாக குடியேறிகள்
என்ற அவமானத்திற்கு
ஆளாகிறவர்களாக அவமானத்தால் மனம் குழம்பி
தங்களுக்கான வேர்களை தேடுபவர்களாக இருக்கிறார்கள்.
‘புலிவேட்டை’ என்ற கதை சாகக்கிடக்கிற முத்து என்ற கதாபாத்திரத்தின் நினைவோட்டமாக
சொல்லப்படுகிறது. ”நாட்டை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாட்டில் வாழும் விலங்குகளை
புரிந்துகொள்ளவேண்டும்” ஒரு நாட்டின் ஆன்மா
காட்டில்தான் இருக்கிறது. முத்துவின் அப்பா புலம்பெயர்ந்தவர். அவர் மலேசியக் காடுகளில் எவ்வாறு வேட்டை நடத்தினார், முத்து எவ்வாறு வேட்டையாடினார் என்று
சொல்வதன் மூலம் முதல் தலைமுறையினருக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் இடையே உள்ள
கால வேறுபாடு, மனவேறுபாடு, புலம்பெயர்ந்து வாழ்தலின்
அவஸ்தை,
கால இடைவெளியில் ஏற்பட்ட சமூக மாற்றங்களும் சுட்டிக்காட்டப்படுகிறது. மனிதமனம்
பக்குவம் அடையும் தருணம், மரணம் வரும் நேரமாக இருக்கிறது. ”எல்லாமே வன்முறை தான்” என்று கதையில் வரும்
வரி முக்கியமானது.
முதல்
தலைமுறையாக மலேசிய ரப்பர் தோட்டங்களில் வேலை செய்தவர்களுக்கு குடியேறிகள், ’பெண்டாத்தாங்’ என்ற பட்டங்கள் கிடையாது. உழைப்புச் சுரண்டலும் பாலியல்
வன்முறையும் மட்டுமே இருந்தது. இரண்டாம், மூன்றாம் தலைமுறையினருக்கு சவாலாக
இருப்பது குடியேறிகள் என்ற சொல். படகு மூலம் வந்த வியட்நாம் மக்களும், இந்தோனேசியர்களும் படுகிற அவலத்தையும் குடியேறிகள் கதை சொல்கிறது. புலம்பெயர்ந்த மண்ணிலும் வேர் ஊன்ற
முடியாமல் முந்தைய தலைமுறையினரின் தாய் நாட்டிற்கும் திரும்ப முடியாமல் தவிக்கும்
அவஸ்தைதான் குடியேறிகள் கதை.
ரப்பர்
தோட்ட காடுகளில் பெண்கள் எவ்விதமான உடல் உழைப்பை கொடுத்தார்கள், எப்படியெல்லாம் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள் என்பதை சொல்லும் கதை ‘க்ளிங்
க்ளிங் பெண்’. இக்கதையில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண்களின் கதையை
காணமுடியும்.
கதைசொல்லி உமா, அவளுடைய தாய், அவளுடைய பாட்டி. ரயில்
சடக்கு தொழிலாளியான உமாவின் பாட்டி ஆண்களின் பாலியல் வன்முறைகளிலிருந்து விடுபடுவதற்காக காலில் கொலுசு போட்டுக்கொள்கிறாள். ஆண்கள் தூக்கிக்கொண்டு போகும் போது எழும்
சத்தத்தின் மூலம் தன்னை காப்பாற்றிக்
கொள்ளமுடியும் என்று நம்புகிறாள். தன்னுடைய நம்பிக்கையில் கொஞ்சம் வெற்றி பெறவும் செய்கிறாள். ”எனக்கு காட்ட மாட்டேன்னு
சொன்ன இல்ல, இப்ப வெள்ளைக்காரனுக்கு காட்டு” என்று கேட்கிற தமிழர்களும் உண்டு. உமாவின் அம்மா வழக்கமான தோட்டத்
தொழிலாளி. அடிமை
வாழ்வினை அமைதியாக ஏற்றுக்கொள்கிற பெண். ஆனால் உமா, நவீன பெண். பெண்ணுரிமை, சமத்துவம் பேசுகிறவள், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறவள். மூன்று பெண்கள், மூன்று காலங்கள், மூன்று வாழ்க்கை, மூன்றையும் ஒன்றிணைத்து கதை
உருவாக்கியதில் எழுத்தாளரின் சமூக உணர்வையும் வரலாற்று உணர்வையும் புரிந்துகொள்ள முடியும்.
‘வசந்தாவின் கனவு’ கதையில் இளம் விதவை, அவளுடைய மகன் கணேஷ்-வசந்தா வேலை செய்யும் கண்டாசிங் வீடு, கணேஷின் நண்பர்கள், பள்ளிக்கூடம் என்று கதை சொல்லப்படுகிறது. வசந்தாவின் கனவு எப்படி பொய்யாகிறது
என்பதுதான் கதையின் முடிவு. எளிய மனிதர்களின் கனவுகள் எப்படி சிதைந்து போகிறது? காசு உள்ளவர்களுக்கு கனவு காணவும், அதனை சாத்தியப்படுத்தி கொள்ளவும்
முடிகிறது.
கணேஷ் எப்படி சலவைத் தொழிலாளியாக மாறுகிறான், மாற்றப்படுகிறான் என்பதுதான் கதையின்
உள்ளீடு. வளர்ந்த நாடாக கருதப்படும் மலேசியாவில் கல்விமுறை எப்படி உடல்
ரீதியாகவும் மனரீதியாகவும் குழந்தைகளை பலி வாங்குகிறது என்பதுதான் ’பலி’ கதை. குழந்தை பெறுவதற்காக பல ஆண்டுகள் போராடிய நளினிக்கு பெண் குழந்தை
பிறக்கிறது.
பெயர் செல்வி. பள்ளியில் செல்விக்கு ஏற்படும்
மனநெருக்கடியால் பள்ளியில் சண்டை போடுகிறாள்
நளினி.
நவீன கல்விமுறையால் குழந்தைகள், நவீன வாழ்க்கை முறையால் பெற்றோர்கள் படும் அவஸ்தை கதையாகியிருக்கிறது.”நளினி முலைப்பால் சுரந்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து, குழந்தைக்குப் பசிக்கும் போதெல்லாம் சூடுகாட்டி கொடுக்கும்படி செய்தாள்.” இதுதான் நவீன வாழ்க்கை தந்த பரிசு. வேலை வேலை என்று அலைகிற
பெற்றோர்களாலும், நவீன பள்ளிக்கூடங்களாலும் குழந்தைகள்
மனபிறழ்வுக்கு ஆளாவது இயற்கையாகி வருகிறது. ”வெறும்
ஸ்லீப்பிங் பார்ட்னராக மட்டும் இருந்துவிட்டால் பிரச்சினை இல்லை” என்று நளினியின் கணவன் குமார் கூறுவது இன்று ஆண் பெண் உறவு எத்தகைய
நிலையில் இருக்கிறது என்பதை கே.எஸ்.மணியம்
கதையில் இயல்பாக சொல்லியிருக்கிறார். இந்தக் கதையில்
வந்தேறிகளுக்கு சம உரிமை எதற்கு என்று கேட்கப்பட்ட கேள்வியால் ஏற்படும் மன உளைச்சல்
என்ன என்பதை குமார் என்ற கதாபாத்திரத்தின் வழியாக புலம்பெயர்தலின் வலியை உணர முடியும்.
‘மாயமான்’
கதையில் வளர்ச்சி என்ற பெயரில் தோட்டத் தொழிலாளிகளை தோட்டத்தில் இருந்து
அப்புறப்படுத்தி நகரம் சார்ந்த ஒதுக்குப்புறத்தில் சிறிய அளவிலான மாடி
குடியிருப்பில் தங்க வைக்கப்படுவது. இரண்டாம் புலப்பெயர்வு. பிறந்து வளர்ந்ததிலிருந்து தோட்டம்தான் அவர்களுடைய வாழ்க்கையாக இருந்தது. இப்போது அது ஒரு நினைவாக மாறி இருக்கிறது.
தோட்டத்து வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட மனிதர்கள், நகர
வாழ்க்கைக்கு மாற முடியாமல் சிரமப்படுவதுதான் கதையின் மையம். ராமன் சீதை, மாயமான் கதை கதைக்குள் ஒரு கதையாக இருக்கிறது.
தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு புலம்பெயர்ந்தவர்களையும்,
மலேசிய ரப்பர் தோட்டங்கள், செம்பனை தோட்டங்களிலிருந்து
நகரத்திற்கு தள்ளியபோதும் தமிழர்களை ஒன்றிணைத்தது சாமி கோவில்களே.
புலம்பெயர்தல், புலம்பெயர்தலுக்கு
பின்னாலான வாழ்க்கை, வேர்களைத் தேடும் மனங்களின் அவஸ்தை,
கலாச்சார மேலாதிக்கம், கலாச்சார அடையாள மீட்டுருவாக்கம்,
அடையாள அரசியல் பேசுதல் நாடற்றவர்களின் கதை போன்றவையே கே.எஸ்.மணியத்தின் சிறுகதைகளின் உலகமாக இருக்கிறது. கே.எஸ்.மணியத்தின் சிறுகதைகளை
விஜயலட்சுமி மொழிபெயர்த்திருக்கிறார். கதை தந்த ஈர்ப்பும், கதையின் மையப் புள்ளியும்தான் மொழிபெயர்ப்பு செய்ய தூண்டியிருக்க
வேண்டும். மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாத அளவிற்கு
விஜயலட்சுமியின் மொழிபெயர்ப்பு இருக்கிறது. இதற்கு காரணம் கதையாசிரியரும், மொழிபெயர்ப்பாளரும் ஒரே தாய்மொழியை கொண்டவர்கள்,
ஒரே கலாச்சாரப் பின்புலத்தில் வாழ்கிறவர்கள் என்பது.
கே.எஸ்.மணியம் சிறுகதைகள்
மொழிப் பெயர்ப்பு – விஜயலட்சுமி புதிய தலைமுறை
வல்லினம் பதிப்பகம் டிசம்பர் 13 2018
#3 Jalang sg,7/8, Taman SriGombak,
68100 Batu Caves, Selangor, Malaysia
மொழிப் பெயர்ப்பு – விஜயலட்சுமி புதிய தலைமுறை
வல்லினம் பதிப்பகம் டிசம்பர் 13 2018
#3 Jalang sg,7/8, Taman SriGombak,
68100 Batu Caves, Selangor, Malaysia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக