போலிகளை அடையாளம் காட்டும் கதைகள் - இமையம்
மா.சண்முகசிவா சிறுகதைகள் என்ற நூலில் எட்டுக்கதைகள் இருக்கின்றன. மலேசியா குறித்த
நம்முடைய கற்பனைகளை, யூகங்களை பொய்யாக்கி, மலேசியாவில் இருக்கும் இரட்டை
கோபுரத்தின் ஒளிரும் மின்விளக்குகளுக்குப் பின்னால் இருக்கும் இருட்டையும், இருட்டில் வாழ்கிற
மனிதர்களின் வாழ்வையும் ஜோடனைகள்
இல்லாமல் சித்தரித்துக்காட்டுகின்றன எட்டுக்கதைகளும்.
மா.சண்முகசிவாவின்
சிறுகதைகளில் அதிகம் இடம் பிடிப்பவர்கள் குழந்தைகள். பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும்
குழந்தைகள், கர்ப்பம் என்றால் என்னவென்றே தெரியாத வயதிலேயே கர்ப்பமாகும்
குழந்தைகள், தவறான உறவில் பிறக்கும் குழந்தைகள், குடும்ப, சமூக வன்முறையால் மனப்பிறழ்வுக்கு ஆளாகும் குழந்தைகள்.
தனக்கும், தன்னைச்சுற்றியும் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாமல் நோயால் வதங்கிப்போய்
கிடக்கும் குழந்தைகள், கேங் லீடர் ஆகும் குழந்தைகள், இவர்கள் கதை எழுதுவதற்காக
உருவாக்கப்பட்ட குழந்தைகள் அல்ல. நம்முடனும், நம்மைச்சுற்றியும் வாழ்கிற
குழந்தைகள்.

‘எல்லாம் சரி’ கதையில் வரும் நாகராஜ், மலேசியாவில் பெரிய கேங் லீடர்.
அரசியல் தலைவர் ஒருவருக்கு பாதுகாப்புப்படை தளபதியாக இருப்பவன். ஒரு விபத்தில்
நாகராஜீக்கு ஆண்தன்மை போய்விடுகிறது. விஷயம் தெரிந்தாலும் திருமணம்
செய்துகொள்கிறான். பத்தாண்டுகளுக்கு பிறகு அவனுடைய மனைவிக்கு குழந்தை பிறக்கிறது.
குழந்தை யார் மூலம் பிறந்தது என்று கேட்கவில்லை. மனைவியை கொலை செய்யவில்லை.
அடித்து துன்புறுத்தவில்லை. தன்மனைவிக்கு கள்ள உறவின் மூலம் பிறந்த குழந்தையிடமும்
அவனுக்கு வெறுப்போ கசப்போ இல்லை. அந்த குழந்தையை காப்பாற்றத்தான் பலர் சூழ்ந்திருக்க மலேசியாவின்
பெரிய கேங் லீடர் கூச்சமில்லாமல், தயக்கமில்லாமல் மருத்துவரின் காலில் விழுந்து
கெஞ்சுகிறான். நாகராஜ் எதற்காக கெஞ்சுகிறான் என்ற புள்ளியை தொடுவதற்குத்தான் எல்லா
மதங்களும் பேசுகின்றன. இலக்கியம் என்று சொல்லப்படுகின்ற ஒவ்வொரு சொல்லும் கலைகளும்
முயல்கின்றன. அது மட்டும் இதுவரை
சாத்தியமாகவில்லை என்பதுதான் நிஜம். மா.சண்முகசிவா, அன்பாக இருங்கள் என்று
போதிக்கவில்லை. அன்பாக இருப்பது எப்படி என்று பாடம் நடத்தவில்லை. அன்பாக இருக்கிற
ஒரு ஆளை காட்டித்தருகிறார். அவ்வளவுதான். நாகராஜீன் மனநிலையை பெறுவது எப்படி?
மனிதகுலம் அதைத் தேடிக்கொண்டுதான் இன்றுவரை அலைந்துகொண்டிருக்கிறது. தத்துவநோக்குடன், இலக்கிய, அரசியல்,
சமூகவியல், மத, சாதி, இன நோக்கோடு எழுதப்படுவதல்ல இலக்கியம்.
எது நிஜமோ அதை எழுதுவது.
தொகுப்பில்
அரசியல் கதையாகவும், ஆகச்சிறந்த கதையாகவும் இருப்பது ‘சாமிகுத்தம்’. கிராமத்தின் சாலையோரமாக இருக்கிற
முனியாண்டி சாமியின் மதில்சுவரை குப்பை லாரி ஒன்று இடித்துவிடுகிறது. செய்தி
ஒருபையன் மூலம் நிருபருக்கு வருகிறது. விஷயத்தை பணமாக்கவும், அரசியலாக்கவும் நிருபர் விரும்புகிறார். செய்தியாக்குகிறார்.
அடுத்தடுத்த நிலைகளில் காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் விஷயத்தை, நிலநடுக்கம்
ஏற்பட்டதுபோல, சுனாமி வந்ததுபோல செய்தியாக்கிவிடுகின்றன. ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும்
பகையை உண்டாக்கி சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்திவிடுகின்றன. மதில் சுவர் பிரச்சனை
மதப்பிரச்சனையாக, இனப் பிரச்சனையாக அரசியல்
பிரச்சனையாக, உருவெடுக்கவே, நிலைமையை சமாளிக்க அரசாங்கமே இடிந்த மதில்சுவரை அல்ல.
கோவில்கட்டுவதற்கு பல ஏக்கர் நிலத்தையும், அதிகப்படியான பணத்தையும் ஒதுக்குகிறது.
மத நிறுவனங்களும்,
அமைப்புகளும் கோயில்கட்டுவதற்கு போட்டிப்போட்டுக்கொண்டு பணத்தை தருகின்றன. புதிய
கோவில் கட்டப்படுகிறது. முனியாண்டிசாமி, முனிஸ்வரசாமியாகி, பிறகு
ஈசுவரசாமியாக்கப்படுகிறது. புதிய
சிலை வைக்கப்படுகிறது. முன்பு
மூலசாமியாக இருந்த முனியாண்டி இப்போது காவல் தெய்வமாக வெளியே நிறுத்தப்படுகிறது. முன்பு முனியாண்டிசாமியின் பூசாரியாக
இருந்தவர் இப்போது துப்புரவு தொழிலாளியாக்கப்படுகிறார். கோவிலில் பூஜை நடத்த சிவாச்சாரியார்கள்
நியமிக்கப்படுகிறார்கள். முன்பு சுருட்டு, பீடி, கள், சாராயம் என்று
குடித்துக்கொண்டிருந்த சாமி, கோழி, ஆடு, பன்றி என்று பலிகேட்டுக் கொண்டிருந்தசாமி,
இப்போது வெண்பொங்கலும் நெய்யும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது. இதுதான் கதை.
எப்போதோ நடந்த கதை அல்ல. இப்போது நடந்துகொண்டிருக்கும் கதை. வளர்ந்த
நாடான மலேசியாவில்.
தமிழகத்தில்,
இந்தியாவில் மட்டுமல்ல, மலேசியாவிலும் சிறு தெய்வங்கள் பெரும் தெய்வங்களாக
மாற்றப்பட்டது, சிறுதெய்வ வழிபாடு முறை ஒழிக்கப்பட்டு, பெருந்தெய்வ வழிபாட்டுமுறை
புகுத்தப்பட்டது. அசைவ சாமிகள் சைவ சாமிகளாக மாற்றப்பட்டது,
பூசாரிகளுக்குப் பதிலாக, குருக்கள் நிமியமிக்கப்பட்டது, அந்தந்த நிலப்பரப்பிற்கான கலாச்சார
செயல்பாடுகள் அழிக்கப்பட்டு பிறருடைய கலாச்சார செயல்பாடுகள் எவ்வாறு நிலை
நிறுத்தப்பட்டது. முன்பு அல்ல. இன்றும் எவ்வாறு நிலைநிறுத்தப்படுகிறது என்பதுதான்
கதை
கலாச்சார மேலாதிக்கம் எதையெல்லாம்
அழிக்கும், எதையெல்லாம் புகுத்தும் என்பதை பிரச்சாரமில்லாமல் இலக்கிய அழகியலோடு
எழுதப்பட்டிருக்கிறது சாமிகுத்தம் கதை.
சிறுகதையை
எப்படி எழுத வேண்டுமோ, அப்படி எழுதிருக்கிறார். கதையில் எதை எழுதவேண்டுமோ அதை மட்டுமே எழுதியிருக்கிறார். அதனால்
மா.சண்முகசிவாவை நல்ல சிறுகதையாசிரியர் என்று சொல்லலாம். இத்தொகுப்பிலுள்ள
கதைகளின் வழியாக மலேசிய சமூக வாழ்வையும், அரசியலையும் நிச்சயமாக
புரிந்துகொள்ளமுடியும். இத்தொகுப்பிலுள்ள கதைகளின் சிறப்பு நம்மிடம் இருக்கும் உண்மைகளை
அல்ல, பொய்களை நமக்கே காட்டி தருவதுதான்.
1998ல் வீடும் விழுதுகளும் என்ற சிறுகதைத்தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார்.
20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு தொகுப்பு வெளியிடுகிறார். இது ஆச்சரியமாக இருக்கிறது. ஆண்டுக்கு பத்து புத்தகங்கள்
என்று கொத்தாக வெளியிடுகிற தமிழ்ச்சூழலில் 20ஆண்டுகள் கழித்து
தனது இரண்டாவது சிறுகதைத்தொகுப்பை வெளியிடுகிறார் என்பதிலிருந்தே அவர் தனித்துவம் மிக்கவர்
என்று தெரியவருகிறது. சண்முகசிவாவின் சிறுகதைகளில் ஆர்ப்பாட்டம்
இல்லை. கூச்சல் இல்லை. தன்முனைப்பு இல்லை.
எதை சொல்லவேண்டும் என்று விரும்புகிறாரோ அதை நல்ல தமிழில் தெளிவாக எழுதிருக்கிறார்.
கதாசிரியர் நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்பது கதைகளை படிக்கும்போது தெரியும்.
சமயம் சார்ந்த சடங்குகள் மீது ஓயாமல் கேள்விகளையும், கிண்டல்களையும் வைத்தபடியே இருக்கிறார். தமிழ் மொழியை
புதுப்பிக்க வந்தேன். மீட்டெடுக்க வந்தேன். என்னால்தான் நவீன தமிழ் இலக்கியம் செழித்திருக்கிறது என்ற ஆணவப்பேச்செல்லாம்
கதையாசிரியரிடம் இல்லை.
மா.சண்முகசிவா
சிறுகதைகள்
மா.சண்முகசிவா
வல்லினம் பதிப்பகம்
மலேசியா
9042461472
புதிய தலைமுறை
ஜனவரி 03 2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக