திங்கள், 10 டிசம்பர், 2018

தமிழ்மொழி இருக்கும்வரை கலைஞர் இருப்பார் – எழுத்தாளர் இமையம்



        கலைஞர் தமிழ் இலக்கியத்தில் பெரும் கடல். கலைஞரின் எழுத்தின் வன்மை குறித்து, அவருடைய எழுத்துலகம் குறித்து பேசுவது என்பது, கடலிலிருந்து அள்ளிய கைப்பிடி நீராகத்தான் இருக்கும். 72 சினிமா படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறார். 20க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறார். 25க்கும் மேற்பட்ட வரலாற்று நாவல்கள், குடும்ப நாவல்கள் என்று எழுதியிருக்கிறார். 68 சிறுகதைகள், 500க்கும் அதிகமான கவிதைகள் என்று படைப்பிலக்கியமாக எழுதியிருக்கிறார். குறளோவியம், சங்கத்தமிழ்,தொல்காப்பிய பூங்கா என்று உரை எழுதியிருக்கிறார். இனியவை இருபது என்று பயண நுல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். மக்சிம் கார்க்கி எழுதிய ரஷிய நாவலை தன்னுடைய உரைநடை கவிதை வடிவில் மறு ஆக்கம் செய்திருக்கிறார். நெஞ்சுக்கு நீதி என்ற தன்னுடைய தன்வரலாற்று நுலையும் எழுதியிருக்கிறார். நெஞ்சுக்கு நீதி மட்டும் 4165 பக்கங்கள். 1947 முதல் 2011 வரை ஓயாமல் எழுதி குவித்தவர். தமிழ் எழுத்தாளர்களில் கலைஞர் அளவுக்கு எழுதிய எழுத்தாளர் யாருமில்லை. எழுத்தின் வழியாக அவர் அளவுக்கு புகழ்பெற்றவரும் ஒருவருமில்லை.
        புத்தகத்தில் உலகைப் படிப்போம். உலகத்தையே புத்தகமாகப் படிப்போம்என்று சொன்னவர் கலைஞர். மற்ற எழுத்தாளர்களை போல கலைஞர் தனிமனிதர்களுடைய கதையை எழுதியவரில்லை. சமூகத்தின் கதையை எழுதியவர். கலைஞரின் எழுத்தின் நோக்கம் மிகவும் தெளிவானது. தமிழர் மேம்பாடு, தமிழ்ச் சமூக மேம்பாடு, சாதிசார்ந்த, மதம் சார்ந்த மூடத்தனங்களுக்கு எதிரானது. கலைஞரே தன்னுடைய எழுத்தின் நோக்கம் குறித்து யாப்பின்றி போனாலும் போகட்டும், நம்நாடு, மொழி, மனம், உணர்வெல்லாம் காப்பின்றி போகக்கூடாதெனும் கொள்கைஎன்று தெளிவாக கூறுகிறார். தன்னுடைய கொள்கைக்கு, லட்சியத்திற்கு, மொழியைப் பயன்படுத்தியமொழி போராளி கலைஞர். தமிழ்மொழி செவ்வியல் தன்மை கொண்டது. தமிழின் செவ்வியல் தன்மை மாறாமல், எழுத்தில், பேச்சில் பயன்படுத்தியவர். தமிழகத்திலுள்ள எளிய மனிதர்களும் தமிழின் செவ்வியல் தன்மையை அறியும்படி, உணரும்படி, பயன்படுத்தும்படி செய்த மகத்தான எழுத்தாளர் கலைஞர் மட்டுமே. தன்னுடைய இலக்கிய படைப்புகளின் வழியாக தமிழ் சமூக வாழ்வை அப்பட்டமாக தோலுரித்து காட்டியவர். 70 ஆண்டுகளில் கலைஞரின் எழுத்துக்களை படிக்காதவன், அவருடைய கவிதைகளை, சினிமா வசனங்களை திரும்பத்திரும்ப சொல்லி மகிழாதவர்கள் என்று தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது.
        கலைஞரின் எழுத்துக்கள்தான் 70 ஆண்டுகளில் அதிகமாக பேசப்பட்டது, கொண்டாடப்பட்டது. அதனால்தான் கலைஞர் என்றால் தமிழ் என்று மக்களால் அடையாளப்படுத்தப்பட்டது. 70 ஆண்டு கால இலக்கிய தமிழ். 60 ஆண்டுகால அரசியல் தமிழும் கலைஞர் தான். அதனால் அவரை தமிழ்மொழியின் வெகுமதி என்று எழுத்தாளர்கள் போற்றுகிறார்கள். 2 லட்சம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்த ஒரே தமிழ் எழுத்தாளர் கலைஞர் மட்டும்தான். எழுத்தில் அவர் பெருவெள்ளம். நீர் திவலைகள் அல்ல.
        சினிமா கதைவசனம் என்றால் கலைஞர், நாவல் சிறுகதை என்றால் கலைஞர், மேடைப்பேச்சு என்றால் கலைஞர், தமிழ் என்றால் கலைஞர் அரசியல் என்றால் கலைஞர், அரசியல் சாணக்கியத்தனம் என்றால் கலைஞர் போராட்டம் என்றால் கலைஞர், அறிக்கை என்றால் கலைஞர், சிறந்த நிர்வாகி என்றால் கலைஞர், நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்றவர் என்றால் கலைஞர், 14 பிரதமர்களை பார்த்தவர் என்றால் கலைஞர், நான்கு ஜனாதிபதிகளை உருவாக்கியவர் என்றால் கலைஞர், 12 முதலமைச்சர்களை பார்த்தவர் என்றால் கலைஞர், 50 வருடம் ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் என்றால் கலைஞர், ஒரு கடிதத்தின் மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்களை திரட்டக்கூடிய வல்லமை கொண்டவர் என்றால் கலைஞர். இதனால்தான் கலைஞர் ஒரு அதிசயம்.
        பள்ளியில் சேர்க்க மறுத்த போது, குளத்தில் குதிப்பேன் என்று சொல்லி குதிக்கப்போனது முதல் மெரினாவில் உடல் அடக்கம் செய்ய உயிரற்ற அவருடைய உடல் போராடியது வரை பெரும் அதிசயமாக இருந்தவர். இளமை பலி கதையை எழுதிய கருணாநிதி யார்? என்று அண்ணா கேட்டது முதல் 70 ஆண்டுகளாக தமிழுகத்தில் இலக்கியத்தில். அரசியலில், கலைஞரின் பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை. 70 ஆண்டுகாலமாக இலக்கியத்தில், அரசியலில் அவர் பேசப்படாத நாட்களில்லை. 70 ஆண்டுகளில் அவர் பெயர் அச்சு அடிக்காத நாளிதழ்கள் என்று ஒன்றுகூட வந்ததில்லை.. 11 வயதில் திருவாரூரிலுள்ள ஓடம்போக்கி என்ற நதியில்தான் முதன்முதலாக அவர் திராவிடர் இயக்க கூட்டங்களை நடத்தினார். 11 வயதில் தொடங்கிய அவருடைய போராட்டம் ஆகஸ்ட் 07.08.2018ல் வங்க கடலோரம் சென்று முடியும்வரை தொடர்ந்தது. ”அம்பாள் என்றைக்கடா பேசினாள்என்று பராசக்தி படத்தில் ஒரு வசனம் வரும். அந்த வசனமும் ராமன் எந்த பொறியியல் கல்லுரியில் படித்தான்?” என்று கேட்டதற்குமிடையில் 60 ஆண்டுகள். கடைசிவரை அவர் கொள்கைகளிலிருந்து மாறவே இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு.
நவீன தமிழ் சமூகத்தின் தந்தை
முப்பதுக்கும் மேற்பட்ட அணைகளை கட்டியது. டவுன் பஸ் விட்டது, கிராம சாலைகளை இணைத்தது மின்சாரம் வழங்கியது, குடிசை மாற்று வாரியம் அமைத்தது. கான்கிரீட் வீடு கட்டிக்கொடுத்தது. தொலைக்காட்சி கொடுத்தது. சிமிண்ட் சாலை அமைத்தது. மினி பேருந்துகள் விட்டது. சமச்சீர் கல்வியை கொண்டுவந்தது, மேம்பாலங்கள் கட்டியது, இந்தியாவில் முதல் டைடல் பார்க் அமைத்தது, .டி. கம்பெனிகளை கொண்டுவந்தது, இந்தியாவில் முதல் இணைய மாநாடு நடத்தியது என்று தமிழ்ச்சமூகம் இன்றைய நவீன சமூகமாக மாறுவதற்கு காரணமாக இருந்தவர் கலைஞர். அவர் இல்லை என்றால் தமிழ்நாடு சகலதுறைகளிலும் மேம்பட்ட மாநிலமாக இன்று மாறி இருக்காது.
கலைஞர் ரொம்பவும் மார்டனான ஆள்
கலைஞர் ஒரு போதும் தன்னுடைய கலாச்சார அடையாளங்களை கைவிட்டதே இல்லை. கலாச்சார அடையாளங்களை கொண்டாடிய அதே அளவிற்கு அவர் நவீனத்துவத்தையும் கொண்டாடினார். புறநானுற்று வீரத்தாயின் பெருமையையும் பேசுவார், அதேநேரத்தில் முகநூலிலும் பதிவுகளிடுவார். தொல்காப்பிய பூங்காவும் எழுதுவார். நவீன நாவலான தாயை மறுஆக்கம் செய்வார். திருவள்ளுவரையும் கண்ணகியையும் தமிழ் அடையாளமாக முன்னிறுத்துவார். அதே நேரத்தில் தொழில்நுட்ப பூங்காவையும் அமைப்பார். அதனால்தான் கலைஞரை நவீன தமிழ்சமூகத்தின் தந்தை என சொல்கிறேன்.
கலைஞர் கட்டிட கலையின் ரசிகர்.
கலைஞர் அளவுக்கு கட்டிட கலையின் மீது ஆர்வமும் ரசனையும் கொண்ட வேறு ஒரு மனிதரை பார்ப்பது அரிது. வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமாரியில் உள்ள திருவள்ளுவர் சிலை, அண்ணா நூற்றாண்டு நூலகம், பூம்புகார் சிற்பம், புதிய சட்டசபை கட்டிடம் போன்றவை கலைஞரின் கட்டிட கலையின் மீதான ரசனைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
கலைஞரின் நாவல்கள்
ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம், பாயும் புலி, பண்டாரக வன்னியன் என்று வரலாற்று நாவல்களை எழுதிய கலைஞர், வான்கோழி, அரும்பு, ஒரு மரம் பூத்தது, ஒரே ரத்தம், பெரிய இடத்து பெண், சுருளி மலை, வெள்ளிமலை, நடுத்தெரு நாராயணி, சாராப்பள்ளம் சாமுண்டி ஆகிய குடும்ப நாவல்களையும் எழுதியுள்ளார். வரலாற்று நாவல்களையும் குடும்ப நாவல்களையும் திரும்ப திரும்ப படிக்கும் வண்ணம் எழுதிருக்கிறார். எத்தனை முறை படித்தாலும் அலுக்காத சளிக்காத உணர்வை தருகிற மொழிநடையில் எழுதிருக்கிறார். கலைஞரின் எழுத்து வலிமை என்பது அவருடைய மொழிநடைதான். அவருடைய மொழிநடை உரைநடை கவிதை எனலாம்.
கலைஞர் எழுதிய நாவல்கள்
நச்சுக்கோப்பை, சிலப்பதிகாரம், மணிமகுடம், ஒரே ரத்தம், தூக்குமேடை, பரபிரம்மம், காகித பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, உதய சூரியன், வாழ முடியாதவர்கள், சாந்தா, பொன்முடி, ரத்தகண்ணீர், முத்து மண்டபம், திருவாளர் தேசியம் பிள்ளை, முஜ்புர் ரகுமான், புனித ராஜ்யம், மகான் பெற்ற மகான், அனார்கலி, சாக்ரட்டீஸ், சேரன் செங்குட்டுவன், பரதாயணம், சாம்ராட் அசோகன் என்று 24 நாடகங்களை எழுதிருக்கிறார். நாடகங்களிலும், நாவல்களிலும் கலைஞர் மொழியை கையாண்டவிதம் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.
கலைஞர் 64 சிறுகதைகளை எழுதிருக்கிறார். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். ஒவ்வொரு ரகம். ஒவ்வொரு கதையிலும் புதுமை. மொழியின் செழுமை. கலைஞர் கதையை மட்டுமல்ல மொழியை கையாண்ட விதமும் ஆச்சரியம் அளிக்கிறது. “என்னை எழுது, என்னை எழுதுஎன்று தமிழ் கலைஞரிடம் தவம் கிடக்கிறது. ஒரு வார்த்தையில் பல பொருட்களை உள்ளடக்கி எழுதும் வல்லமை கொண்டவர் கலைஞர்.
கலைஞரின் சிறுகதைகளில் மறக்க முடியாத கதைகள் என்றுசங்கிலி சாமி’ ‘ஒரிஜினலில் உள்ளபடி  ஆகிய சிறுகதைகளை சொல்வேன். இந்த கதைகளை படிக்கும்போது சிரிக்காமல் இருக்க முடியாது. கலைஞரின் நகைச்சுவை உணர்வுக்கு இக்கதைகள் உதாரணமாக இருக்கின்றன. கதைககளில் வெறும் நகைச்சுவை உணர்வு மட்டும் மேலோங்கி இருக்கவில்லை. கருத்தாழமும் நிறைந்திருப்பதை காணலாம். ‘சங்கிலி சாமிகதையில்வழக்கில் வெற்றி பெற வேண்டும். வாத நோய் தீர வேண்டும். பிள்ளையில்லை அருள் வேண்டும். கொள்ளை போய்விட்டது. கள்ளனை காட்டுகஎன்று பக்த கோடிகள் வேண்டிக்கொள்ள எல்லாவற்றுக்கும் ஒரே மருந்தாக விபூதி தருகிறார் பூசாரி என்று கலைஞர் எழுதிருக்கிறார். இந்த கதையில் மக்களின் அறியாமையை மட்டுமல்ல பூசாரிகளின் தந்திரங்களையும் ஏமாற்றுகளையும் நகைச்சுவை உணர்வோடு எழுதிருக்கிறார்.
கலைஞர் தான் ஏற்றுக்கொண்டு கொள்கையில் இருந்து ஒரு போதும் விலகியதில்லை. அதே போன்று அவர் எழுதிய சினிமா கதை வசனங்களில், நாவல்களில், நாடகங்களில், சிறுகதைகளில், கவிதைகளில், மேடைப்பேச்சுகளில் எந்த காரணத்திற்காகாவும் அவர் சமரசம் செய்துகொண்டதே இல்லை. மான உணர்ச்சி, இன உணர்ச்சியும்தான் அவருடைய பேச்சும் எழுத்தும். அவர் மத்திய அரசில் அங்கம் வகித்த போதெல்லாம் பேச்சுவார்த்தை என்ற ஆய்தத்தின் வழியாக தமிழகத்திற்கு பல அரிய திட்டங்களை கொண்டுவந்து தமிழகத்தை மேம்படுத்தினார். மத்தியில் அவர் கூட்டணி வைத்திருந்தாலும் கொள்கை ரீதியாக அவர் சமரசம் செய்துகொண்டதில்லை. ஆனால் தன்னுடைய பேச்சில் எழுத்தில் அரசியல் நடவடிக்கைகளில் எப்போதும் ஜனநாயகத்தையே விரும்பினார். ஜனநாயகத்தியே நிலைநாட்டினார். அவர் அளவுக்கு ஜனநாயகத்தை போற்றிய, பின்பற்றிய ஒரு அரசியல் தலைவர் இந்தியாவில் இல்லை. ‘மானமிகு சுயமரியாதைக்காரன்என்று தன்னை அறிவித்துக்கொண்ட ஒரே தலைவர்கலைஞர் மட்டுமே.
ஒளிரும் சொற்களை உருவாக்கியவர் கலைஞர்
தமிழ்நாடு ஒரு அமைதி பூங்காவாக இருக்கிறது என்று கலைஞர் சொன்னார். இந்த சொல்லை தமிழக மக்கள் மட்டுமல்ல. எதிர்க்கட்சிக்காரர்களும் பயன்படுத்துகிறார்கள். அய்யன் திருவள்ளுவர் என்று அவர்தான் சொன்னார். தமிழகமே அய்யன் திருவள்ளுவர் என்று சொல்கிறது. சிங்கார சென்னை என்று அவர்தான் சொன்னார். சிங்கார சென்னை என்று தமிழகமே சொல்கிறது. மாற்றுத்திறனாளி என்று அவர்தான் சொன்னார். தமிழகமே மாற்றுத்திறானாளி என்று சொல்கிறது. திருநங்கை என்று அவர்தான் சொன்னார். தமிழகமே திருநங்கை என்று சொல்கிறது. இன்று அது சட்டமாகவும் அங்கீகாரமாகவும் மாறியிருக்கிறது. இப்படி தன்னுடைய எழுத்துகளின் வழியாக பேச்சுகளின் வழியாக நூற்றுக்கணக்கான அழியாத சொற்களை உருவாக்கித்தந்தவர் கலைஞர். அழியாத சொற்களை உருவாக்கிறவனே எழுத்தாளன்.
தமிழ் இனம் என்று ஒன்று இருக்கும் வரை, தமிழ் மொழி என்று ஒன்று இருக்கும் வரை, தமிழ் இலக்கியம் என்று ஒன்று இருக்கும் வரை, கலைஞர் என்ற எழுத்தாளர் இருப்பார், கலைஞர் என்ற சொல் இருக்கும்.

19.08.2018 அன்று தி.மு.க. ஏற்பாடு செய்திருந்த கலைஞர் புகழுக்கு வணக்கம் நினைவஞ்சலி கூட்டத்தில் பேசியது.

வெள்ளி, 7 டிசம்பர், 2018

கே.எஸ். மணியம் சிறுகதைகள் விமர்சனம் - இமையம்


கே.எஸ். மணியம் சிறுகதைகள்
                                        விமர்சனம் - இமையம்
புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற வகையில் ஈழத் தமிழ் இலக்கியங்களே பேசப்பட்டுவருகிறது. கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் என்று சென்று தங்கி அவர்கள் எழுதும் எழுத்தும் கவனம் பெற்றிருக்கிறது. ஆனால் மலேசியத் தமிழர்கள் எழுதிய இலக்கியம் குறித்த பேச்சு இல்லை. சி.முத்துசாமியின் மண்புழுக்கள் .அரங்கசாமியின் மரண ரயில் பாதை எம்.குமரனின் செம்மண்ணும் நீல மலர்களும்’, முத்தம்மாள் பழனிசாமியின் நாடுவிட்டு நாடு போன்ற படைப்புகள் குறித்தும் படைப்பாளிகள் குறித்தும் தமிழகத்தில் பேசப்படுவதில்லை. தற்காலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் மா.சண்முகசிவா, .நவீன் சிறுகதைகள் குறித்தும் பேச்சில்லை. ஒதுக்குதல், புறக்கணித்தல், விலகிச் செல்லுதல் என்பது அறிவுசார் துறையினர், இலக்கியத் துறையினர் செய்யக்கூடிய நற்செயல்கள் அல்ல. மலேசியாவில் வெளிப்படையான அரசியல் பார்வையுடன் எழுதி வருபவர் கே.ஸ்.மணியம் The Return என்ற தன் வரலாற்று கதையையும், In a Far Country என்ற நாவலையும், Plot, The Aborting parablames and other stories ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். ஆனாலும் தமிழகத்தில் அவர் பெயர் அறியப்படவில்லை.
கே.எஸ்.மணியத்தின் ஆறு சிறுகதைகளை விஜயலட்சுமி மொழிபெயர்த்திருக்கிறார். ஆறு கதைகளும் புலம்பெயர்ந்து வாழும் மலேசியத் தமிழர்களின் மூன்று தலைமுறைகளின் வாழ்க்கையை பேசுகிறது. மனித மத்தால் நிரம்பியிருந்த கப்பலில் சென்று ரப்பர் தோட்டங்களில் இறக்கி விடப்பட்ட மனிதர்கள், அவர்களுக்கு பிறந்த இரண்டாம் தலைமுறையினர். இன்றைய மூன்றாம் தலைமுறையினர். முதல் தலைமுறையினர் உயிர்வாழ்தல், உயிரோடு இருத்தல் என்ற அளவில் மட்டுமே சிந்தித்துள்ளனர். இரண்டாம் தலைமுறையினர் அடிமை வாழ்வில் இருந்து விடுபட முடியாத நிலையில் இருந்தனர்.  மூன்றாம் தலைமுறையினர் படித்தவர்களாக நகரங்களில் குடியேறியவர்களாக குடியேறிகள் என்ற அவமானத்திற்கு ஆளாகிறவர்களாக அவமானத்தால் மனம் குழம்பி  தங்களுக்கா வேர்களை தேடுபவர்களாக இருக்கிறார்கள்.
புலிவேட்டை என்ற கதை சாகக்கிடக்கிற முத்து என்ற கதாபாத்திரத்தின் நினைவோட்டமாக சொல்லப்படுகிறது. நாட்டை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாட்டில் வாழும் விலங்குகளை புரிந்துகொள்ளவேண்டும்  ஒரு நாட்டின் ஆன்மா காட்டில்தான் இருக்கிறது. முத்துவின் அப்பா புலம்பெயர்ந்தவர். அவர் மலேசியக் காடுகளில் எவ்வாறு வேட்டை நடத்தினார், முத்து எவ்வாறு வேட்டையாடினார் என்று சொல்வதன் மூலம் முதல் தலைமுறையினருக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் இடையே உள்ள கால வேறுபாடு, மனவேறுபாடு, புலம்பெயர்ந்து வாழ்தலின் அவஸ்தை, கால இடைவெளியில் ஏற்பட்ட சமூக மாற்றங்களும் சுட்டிக்காட்டப்படுகிறது. மனிதமனம் பக்குவம் அடையும் தருணம், மரணம் வரும் நேரமாக இருக்கிறது. எல்லாமே வன்முறை தான் என்று கதையில் வரும் வரி முக்கியமானது.
முதல் தலைமுறையாக மலேசிய ரப்பர் தோட்டங்களில் வேலை செய்தவர்களுக்கு குடியேறிகள், பெண்டாத்தாங் என்ற பட்டங்கள் கிடையாது. உழைப்புச் சுரண்டலும் பாலியல் வன்முறையும் மட்டுமே இருந்தது. இரண்டாம், மூன்றாம் தலைமுறையினருக்கு சவாலாக இருப்பது குடியேறிகள் என்ற சொல். படகு மூலம் வந்த வியட்நாம் மக்களும், இந்தோனேசியர்களும் படுகிற அவலத்தையும் குடியேறிகள் கதை சொல்கிறது. புலம்பெயர்ந்த மண்ணிலும் வேர் ஊன்ற முடியாமல் முந்தைய தலைமுறையினரின் தாய் நாட்டிற்கும் திரும்ப முடியாமல் தவிக்கும் அவஸ்தைதான் குடியேறிகள் கதை.
ரப்பர் தோட்ட காடுகளில் பெண்கள் எவ்விதமான உடல் உழைப்பை கொடுத்தார்கள், எப்படியெல்லாம் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள் என்பதை சொல்லும் கதை க்ளிங் க்ளிங்  பெண்’. இக்கதையில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண்களின் கதையை காணமுடியும். கதைசொல்லி உமா, அவளுடைய தாய், அவளுடைய பாட்டி. ரயில் சடக்கு தொழிலாளியான உமாவின் பாட்டி ஆண்களின் பாலியல் வன்முறைகளிலிருந்து விடுபடுவதற்காக காலில் கொலுசு போட்டுக்கொள்கிறாள். ஆண்கள் தூக்கிக்கொண்டு போகும் போது எழும் த்தத்தின் மூலம் தன்னை காப்பாற்றிக் கொள்ளமுடியும் என்று நம்புகிறாள். தன்னுடைய நம்பிக்கையில் கொஞ்சம் வெற்றி பெறவும் செய்கிறாள். எனக்கு காட்ட மாட்டேன்னு சொன்ன இல்ல, இப்ப வெள்ளைக்காரனுக்கு காட்டு என்று கேட்கிற தமிழர்களும் உண்டு. உமாவின் அம்மா வழக்கமான தோட்டத் தொழிலாளி. அடிமை வாழ்வினை அமைதியாக ஏற்றுக்கொள்கிற பெண். ஆனால் உமா, நவீன பெண். பெண்ணுரிமை, சமத்துவம் பேசுகிறவள், மூடநம்பிக்கைகளுக்கு எதிரா குரல் கொடுக்கிறவள். மூன்று பெண்கள், மூன்று காலங்கள், மூன்று வாழ்க்கை, மூன்றையும் ஒன்றிணைத்து கதை உருவாக்கியதில் எழுத்தாளரின் சமூக உணர்வையும் வரலாற்று உணர்வையும் புரிந்துகொள்ள முடியும்.
வசந்தாவின் கனவு கதையில் இளம் விதவை, அவளுடைய மகன் கணேஷ்-வசந்தா வேலை செய்யும்  கண்டாசிங் வீடு, கணேஷின் நண்பர்கள், பள்ளிக்கூடம் என்று கதை சொல்லப்படுகிறது. வசந்தாவின் கனவு எப்படி பொய்யாகிறது என்பதுதான் கதையின் முடிவு. எளிய மனிதர்களின் கனவுகள் எப்படி சிதைந்து போகிறது? காசு உள்ளவர்களுக்கு கனவு காணவும், அதனை சாத்தியப்படுத்தி கொள்ளவும் முடிகிறது. கணேஷ் எப்படி சலவைத் தொழிலாளியாக மாறுகிறான், மாற்றப்படுகிறான் என்பதுதான் கதையின் உள்ளீடு. வளர்ந்த நாடாக கருதப்படும் மலேசியாவில் கல்விமுறை எப்படி உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் குழந்தைகளை லி வாங்குகிறது என்பதுதான்பலிகதை. குழந்தை பெறுவதற்காக பல ஆண்டுகள் போராடிய நளினிக்கு பெண் குழந்தை பிறக்கிறது. பெயர் செல்வி. ள்ளியில் செல்விக்கு ஏற்படும் மனநெருக்கடியால் பள்ளியில் சண்டை போடுகிறாள் நளினி. நவீன கல்விமுறையால் குழந்தைகள், நவீன வாழ்க்கை முறையால் பெற்றோர்கள் படும் அவஸ்தை கதையாகியிருக்கிறது.”நளினி முலைப்பால் சுரந்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து, குழந்தைக்குப் பசிக்கும் போதெல்லாம் சூடுகாட்டி கொடுக்கும்படி செய்தாள்.” இதுதான் நவீன வாழ்க்கை தந்த பரிசு. வேலை வேலை என்று அலைகிற பெற்றோர்களாலும், நவீன பள்ளிக்கூடங்களாலும் குழந்தைகள் மனபிறழ்வுக்கு ஆளாவது இயற்கையாகி வருகிறது. வெறும் ஸ்லீப்பிங் பார்ட்னராக மட்டும் இருந்துவிட்டால் பிரச்சினை இல்லை என்று நளினியின் கணவன் குமார் கூறுவது இன்று ஆண் பெண் உறவு எத்தகைய நிலையில் இருக்கிறது என்பதை கே.எஸ்.மணியம் கதையில் இயல்பாக சொல்லியிருக்கிறார். இந்தக் கதையில் வந்தேறிகளுக்கு சம உரிமை எதற்கு என்று கேட்கப்பட்ட கேள்வியால் ஏற்படும் மன உளைச்சல் என்ன என்பதை குமார் என்ற கதாபாத்திரத்தின் வழியாக புலம்பெயர்தலின் வலியை உணர முடியும்.
மாயமான் கதையில் வளர்ச்சி என்ற பெயரில் தோட்டத் தொழிலாளிகளை தோட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தி நகரம் சார்ந்த ஒதுக்குப்புறத்தில் சிறிய அளவிலான மாடி குடியிருப்பில் தங்க வைக்கப்படுவது. இரண்டாம் புலப்பெயர்வு. பிறந்து வளர்ந்ததிலிருந்து தோட்டம்தான் அவர்களுடைய வாழ்க்கையாக இருந்தது. இப்போது அது ஒரு நினைவாக மாறி இருக்கிறது. தோட்டத்து வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட மனிதர்கள், நகர வாழ்க்கைக்கு மாற முடியாமல் சிரமப்படுவதுதான் கதையின் மையம். ராமன் சீதை, மாயமான் கதை கதைக்குள் ஒரு கதையாக இருக்கிறது. தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு புலம்பெயர்ந்தவர்களையும், மலேசிய ரப்பர் தோட்டங்கள், செம்பனை தோட்டங்களிலிருந்து நகரத்திற்கு தள்ளியபோதும் தமிழர்களை ஒன்றிணைத்தது சாமி கோவில்களே.
புலம்பெயர்தல், புலம்பெயர்தலுக்கு பின்னாலான வாழ்க்கை, வேர்களைத் தேடும் மனங்களின் அவஸ்தை, கலாச்சார மேலாதிக்கம், கலாச்சார அடையாள மீட்டுருவாக்கம், அடையாள அரசியல் பேசுதல் நாடற்றவர்களின் கதை போன்றவையே கே.எஸ்.மணியத்தின் சிறுகதைகளின் உலகமாக இருக்கிறது. கே.எஸ்.மணியத்தின் சிறுகதைகளை விஜயலட்சுமி மொழிபெயர்த்திருக்கிறார். கதை தந்த ஈர்ப்பும், கதையின் மையப் புள்ளியும்தான் மொழிபெயர்ப்பு செய்ய தூண்டியிருக்க வேண்டும். மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாத அளவிற்கு விஜயலட்சுமியின் மொழிபெயர்ப்பு இருக்கிறது. இதற்கு காரணம் கதையாசிரியரும், மொழிபெயர்ப்பாளரும் ஒரே தாய்மொழியை கொண்டவர்கள், ஒரே கலாச்சாரப் பின்புலத்தில் வாழ்கிறவர்கள் என்பது.
கே.எஸ்.மணியம் சிறுகதைகள்
மொழிப் பெயர்ப்புவிஜயலட்சுமி                                       புதிய தலைமுறை
வல்லினம் பதிப்பகம்                                                    டிசம்பர் 13 2018
#3 Jalang sg,7/8, Taman SriGombak,
68100 Batu Caves, Selangor, Malaysia




வியாழன், 6 டிசம்பர், 2018

மண்டை ஓடி - ம.நவீன் வாழ்க்கையிலிருந்து வந்த கதைகள் - விமர்சனம் இமையம்


வாழ்க்கையிலிருந்து வந்த கதைகள் -இமையம்

எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகளுக்குத்தான் இலக்கணம் வகுக்க முடியும். எழுதப்படாத படைப்புகளுக்கு இலக்கியக் கோட்பாடு, வரையறையை முன்கூட்டியே எழுத முடியாது. காரணம் ஒவ்வொரு படைப்பும் உருவாக்கப்படும்போதே தனக்கான புதிய இலக்கணத்தை, வரையறையை, அழகியலை, வடிவத்தை, மொழியை தானே உருவாக்கிக்கொள்ளும். அவ்வாறு உருவாக்கிக்கொள்ளும் எழுத்துக்களையே கலைப்படைப்பு என்று கூறமுடியும். .நவீன் எழுதியுள்ளமண்டை ஓடிசிறுகதை தொகுப்பு கலைப்படைப்பு என்று கூறுவதற்கான கூறுகளைக் கொண்டிருக்கிறது. தொகுப்பில் எட்டுக் கதைகள் இருக்கின்றன. கொள்கைகளை, கோட்பாடுகளை, தத்துவங்களை, முழக்கங்களை முன்னிருத்தி எழுதப்பட்ட கதை என்று ஒன்றையும் சொல்ல முடியாது. எளிய மனிதர்களுடைய வாழ்வில் அன்றாடம் நிகழும் சில கணங்களை இக்கதைகள் காட்சிப்படுத்தியுள்ளன. மனிதர்களுடைய வலியை, காயத்தை, கண்ணீரை, இயலாமையை, மேன்மைகளை, கீழ்மைத்தனங்களை, முழக்கமாக இல்லாமல் வாழ்க்கை அனுபவமாக எழுதப்பட்ட கதைகள்.

கதைகளில் கிராமமும் நகரமும் சம அளவில் இடம் பெறுகின்றன. கிராமம் சார்ந்து, நகரம் சார்ந்து கூடுதல் அபிப்பிராயம் சொல்லப்படவில்லை. எதன்மீதும் புனிதப் பட்டங்கள் ஏற்றப்படவில்லை. கிராமத்திற்கு அதனுடைய இயல்பு அழகு, நகரத்திற்கு அதனுடைய இயல்பு அழகு என்ற அளவில் மட்டுமே கதைகளை ம.நவீன் எழுதியிருக்கிறார். கிராமம், நகரம் மட்டுமல்ல சிறுவர்களு. அதே மாதிரிஇழப்பு’, ‘மணிமங்கலம்’, ‘நெஞ்சிக்கொம்பு’, ‘மண்டை ஓடிஆகிய கதைகள் சிறுவர்களின் வழியாக சொல்லப்படுகிறது. இந்த கதைகளில் கதாசிரியனின் தலையீடு இல்லை. ஒவ்வொம்பெண்களும் கதைகளில் முக்கிய பாத்திரங்களாக இருக்கிறார்கள். ‘நொண்டி’, ‘அவன் இருக்கும் அறை’ – இரண்டு கதைகளையும் தவிர்த்து – மற்ற ஆறு கதைகளில் மிகவும் முக்கியமான பாத்திரமாக இருப்பது நகைச்சுவைதிட்டமிட்டோசெயற்கையாகவோ உருவாக்கப்படவில்லைகதைகளின் போக்கினிலேயே முக்கியமான இழையாக நகைச்சுவை அமைந்திருக்கிறதுஇது இக்கதைகளின் பலங்களில் முக்கியமானதுதமிழ் மொழியில் எழுதப்படும் கதைகளில் காணக்கிடைக்காத அம்சம் இதுரு கதையும் தன்னியல்பில் நிகழ்கிறது. இந்த இயல்புகதைகளுக்கு வலு சேர்த்திருக்கிறது.
 
இழப்புகதையில் வரக்கூடிய சிறுவனுடைய ஆசை பந்தை உதைத்து விளையாட வேண்டும் என்பது. அழுது, ஆர்ப்பாட்டம் செய்து, உதை வாங்கி, மூன்றாண்டுகள் கழித்து கடைசியாக பந்தைப் பெறுகிறான். ஆனால் அவனால் பந்தை உதைத்த விளையாட முடியவில்லை. புதிய நவீன நகரத்தை உருவாக்க ஒரு தோட்டத்தை காலி செய்கிறது அரசாங்கம். கிராமத்திலிருந்தவர்களுக்கு நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தருகிறது. குடியிருப்பிற்கு முன் மைதானம் இல்லை. பையன் எங்கே விளையாடுவான்? பந்து புதுசாகவே இருக்கிறது. வேறுவழியின்றி சிறுவன் பந்தை நெஞ்சின் மீது உருட்டி விளையாடுகிறான். இறுதியில் பந்தை ஏரியில் உதைத்து தன் ஆசையைத் தீர்ப்பதில் கதை முடிந்துவிடுகிறது. நவீன வாழ்விற்காக பெரியவர்கள் மட்டுமல்ல சிறுவர்களும் எதையெல்லாம் இழந்து எதையெல்லாம் பெற்றிருக்கிறார்கள்? .நவீன் எதையும் சொல்லவில்லை. போகிறபோக்கில் ஒரு காட்சியை வாசகர்களுக்கு காட்டிவிட்டுப்போகிறார். ஒரு நல்ல கதையாசிரியன் செய்யவேண்டியது அவ்வளவுதானே.

இழப்பு கதையில் வருவதுபோலவே மண்டை ஓடிகதையிலும் ஒரு சிறுவன் வருகிறான். கதையின் மையமே அவன்தான். கோடை விடுமுறையில் ஊரைச்சுற்றுகிறான் என்று சிறுவனுடைய தாய் தன்னுடைய தம்பியுடன் அனுப்பிவைக்கிறாள். சிறுவன் போவது உல்லாசப்பயணம் அல்ல. சபா எனும் மாநிலத்தில் இருந்து வந்த தாய்மாமன்  நடத்தும் ஓட்டலில் வேலை செய்வதற்காக. பத்துபேர் மட்டுமே அமர்ந்து சாப்பிடக்கூடிய ஓட்டல் அது. ஓட்டலில் சமையல்க்காரராக இருக்கக்கூடிய விச்சுதான் ஓட்டலை நிர்வாகம் செய்கிறார். பட்டப்பெயர் வைப்பதில் கை தேர்ந்தவர். பையனுக்கு அவர் வைத்த பெயர் கருப்பட்டி. விச்சு ஓயாமல் பையனை அவமானப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார். அதை ஏன் என்று அவனுடைய மாமா கேட்பதில்லை. விச்சுவின் தொல்லைகளைத் தாங்க முடியாமல் இறுதியாண்டு விடுமுறை முடிய இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்று சிறுவன் தினம் தினம் கணக்குப்போடுகிறான். ஓட்டல் முதலாளியை மட்டுமல்ல, பையனை மட்டுமல்ல, மற்றப்பணியாளர்களையும், வாடிக்கையாளர்களையும் விச்சு ஏளனமாகவே நடத்துகிறார். திடீரென்று ஒரு நாள் விச்சு தன்னுடைய ஐந்து மாதச் சம்பளத்தை மொத்தமாக வாங்கி கிட்னி செயலிழந்த காசியின் மனைவியிடம் கொடுத்துவிட்டு ஓட்டலைவிட்டுப் போய்விடுகிறார். காசி மனைவிக்கும் விச்சுவிற்கும் எந்த தொடர்புமில்லை. அறிமுகம் மட்டும்தான். ஓட்டலில் ஒரு பொருளையும் திருடாமல் போய்விடுகிறார். மாமாவின் மூலம் செய்தியை அறிகிற பையன் விச்சுவின் செய்கை அறிந்து பிரமித்துப் போகிறான். அதேநேரத்தில் தன்னுடைய தாய்மாமாவின் சிறுமைத்தனமும் அவனுக்குத் தெரிகிறது. எல்லாருக்கும் பட்டப்பெயர் வைத்து, தூக்கியெறிந்து பேசுகிற, எப்படிப்பட்டவரையும் அலட்சியம் செய்கிற மனம்கொண்ட விச்சு காசியின் மனைவிக்கு எதற்காக பணம் தருகிறார். இதுதான் மனித மனத்தின் விசித்திரம். சபா மாமாவுக்கு விச்சு மண்டை ஓடி. ஆனால், காசியின் மனைவிக்கு சாமி. எப்படி? கதையில் புதிர் அவிழ்க்கப்படுவதில்லை. அதனால்தான் இது கதை.

அம்மாவுக்கு ஒரு மணி கிடைத்தது கதையில் வரக்கூடிய சிறுவன் என்ன செய்வது, என்ன நடக்கிறது என்று திகைத்துப்போய் நிற்பதைப் பார்க்கிறோம். சாதாரணமான பெண்ணாக இருந்த மங்கலம், மணிமங்கலமாக, தெய்வீக அருள்கொண்டவளாக எப்படி மாறுகிறாள், எப்படி பொதுமக்களால் மாற்றப்படுகிறாள் என்பதுதான் கதை. மனித மனங்களைப் புரிந்துகொள்வது சாத்தியமில்லை. மனிதர்களுக்கு உண்மையைவிட பொய்யும் கற்பனையும் தேவையாக இருக்கிறது. உண்மை தராத நம்பிக்கையை பொய்யும், கற்பனை கதையும் தருகிறது. சகமனிதர்கள் மீது கொள்ள முடியாத நம்பிக்கையைசாமி என்ற பெயரில் கல்மீது, மண்மீது, மரத்தின்மீது, கட்டுக்கதைகளின் மீது கொள்ளமுடிகிறது. இதுதான் மனித குலத்தின் விசித்திரம். வாழ்வின் அடித்தளம். இன்றுவரை அறிந்துகொள்ள முடியாத ரகசியம். ஒரு சிறுவனுக்கு தேவை அம்மா. சாமி அல்ல. வணங்கப்படும் பெண்ணல்ல. நிஜத்தில் தன்னுடைய தாய் தெய்வமாக வணங்கப்படுவதைப் பார்த்து திகைத்துப்போய் நிற்கிறான் சிறுவன். கதையின் கடைசியில் தன்னுடைய தாய்க்கு பொதுசனங்களால் போர்த்தப்பட்ட சாமி என்ற கற்பனையை சிறுவனும் நம்ப தொடங்குகிறான். வணங்குகிறான். கணவனும் மனைவியை சாமியாக வணங்குகிறான். கொண்டாடுகிறான்.

என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்பதுதான் மனித வாழ்வின் மிகப் பெரிய அவலம். இழப்பு கதையில் வருகிற, மண்டை ஓடியில் வருகிற, அம்மாவுக்கு ஒரு மணி கிடைத்தது கதையில் வருகிற மூன்று சிறுவர்களும் திகைத்துப்போய்தான் நிற்கிறார்கள். அவர்களால் எதையும் செய்ய முடியாது. அதனால் வேடிக்கை பார்க்கிறார்கள். நிகழும் சம்பவத்தில் ஒரு பகுதியாகிவிடுகிறார்கள். அபத்த வாழ்விற்குள் மனிதர்கள் இப்படித்தான் சமூகத்தாலும், சந்தர்ப்பத்தாலும் சிக்கிக்கொண்டு உழல்கிறார்கள். பிறகு அதுவே வாழ்வின் நியதியாகிவிடுகிறது. அபத்தம் சமூக வாழ்வின் கதையாக, வரலாறாக, கலாச்சாரமாக மாறிவிடுகிறது.

உருத்திரமூர்த்திகூலிகதையில் வரக்கூடிய இளைஞன், அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் என்று எல்லாராலும் உருப்படாதவன், உதவாக்கரைஎன்று பட்டம் தரப்பட்டவன். ஒவ்வொரு நொடியும் அந்தப்பட்டத்தைத்தான் அவனுக்கான பெயராக குடும்பத்து நபர்கள் உச்சரிக்கிறார்கள். மற்றவர்கள் சொல்கிற மாதிரிதான் அவன் செய்கிற காரியங்களும் நடக்கின்றன. விபத்தில் சிக்கி மருத்துவமனையில் படுத்திருக்கிற அண்ணனைப் பார்க்கப்போவதில் ஆரம்பித்து, அண்ணனை பார்க்காமலேயே வீட்டிற்குத் திரும்புவதோடு கதை முடிவிற்கு வருகிறது. மருத்துவமனையின் அமைப்பு, அதனுடைய செயல்பாடு, நோயாளிகள், என்பதோடு உருத்திரமூர்த்தியை அவனுடைய குடும்பத்தார்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதுதான் கதை. ஊருக்குப்போக இரண்டு ரிங்கிட் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் திகைத்துப்போய் நிற்கும்போது முன்பின் அறியாத வயதான நோயாளி ஒருவர் எழுந்து சென்று சிறுநீர்கழிக்க முடியாமல் தத்தளிப்பதைப் பார்த்துவிட்டு உறுத்திரமூர்த்தி சென்று கிழவரை தூக்கி உட்கார வைத்து, நடத்தி சென்று, அவருடைய உருப்பைப் பிடித்து சிறுநீர் கழிப்பதற்கு உதவுகிறான். சிறுநீர் பிரிந்ததும் போன உயிர் திரும்பி வந்த மாதிரி நோயாளி நிம்மதி அடைகிறார். பத்து ரிங்கிட்டை கொடுக்கிறார். அதை வாங்காமல் நடந்தே ஊருக்குப்போகிறான் உருத்திரமூர்த்தி. மனிதர்களில் யார் நல்லவர்கள்? இரண்டு ரூபாய் கொடுத்து வீட்டிற்கு அனுப்பாத அப்பா, அம்மா, அக்காவா? சிறு உதவிக்காக பத்து ரூபாய் கொடுத்த நோயாளியா? மனிதர்களை எதைக்கொண்டு அடையாளப்படுத்துவது? அவ்வாறு அடையாளப்படுத்துவது சரிதானா? ஒவ்வொரு இலக்கியப் பிரதியும் இதுபோன்ற கேள்விகளுக்கானப் பதிலை தேடித்தான் எழுதப்படுகின்றன. அதற்கு உருத்திரமூர்த்தி போன்றவர்கள் நம்கண்ணில் அபூர்வமாக தென்படுகிறார்கள். மற்றவர்களால் அசடு என்று சொல்லப்பட்டாலும், மற்ற மனிதர்களை அசடு என்று காட்ட ஒரு கருவியாகவே உருத்திரமூர்த்தி இருக்கிறான். அவன் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பாத்திரமல்ல. பிரசாங்கம் செய்வதற்காக உருவாக்கப்பட்டவனல்ல. சிலர் இப்படித்தான் இருக்கிறார்கள். அதற்குக் காரணமோ விளக்கமோ சொல்ல முடியாது என்று கதையின் வழியே கதாசிரியர் சொல்கிறார். வாழ்வில் நம்பிக்கைக்கொள்வதற்கு சிறு ஒளி கீற்றுதான் உருத்திரமூர்த்தி போன்றவர்கள்.

மனிதர்கள் மொழியின் வழியாகத்தான் தங்களை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள் என்று சொன்னால் அது முழு உண்மை அல்ல. சிறுசிறு காரியங்கள், பயன்படுத்திய பொருட்கள், வாழ்ந்த இடம், நினைவுகள் என்று பலவற்றின் வழியாகவும் மனிதர்கள் தங்களை ஓயாமல் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். பிணங்கள்கூட நினைவில் வாழவே செய்கின்றன. அப்படித்தான்அவன் வாழும் அறைகதையில் நிகழ்கிறது. வழக்கமான முறையில், வழக்கமான மொழியில் சொல்லப்பட்ட கதை அல்ல. வாடகை அறையில் ஏற்கெனவே இருந்தவன் விட்டு சென்ற அடையாளங்கள் புதிதாக வாடகைக்கு குடியிருக்க வந்தவனை எப்படி துன்புறுத்துகிறது என்பதுதான் கதை. ரசிக்கும்படியாக எழுதப்பட்ட கதை. ஒருமனிதன் மற்றொரு மனிதனுடன் இணைந்து வாழ்வது மட்டுமல்ல நரகம், ஒரு மனிதன் வாழ்ந்த இடத்தில் மற்றொருவன் வாழ நேர்வதும், மற்றவனுடைய அடையாளங்கள், நினைவுகள் உள்ள இடத்தில் வாழ நேர்வதும்கூட நரகம்தான். எல்லாவற்றையும்விட பெரிய நகரம்நினைவுகள். அதுதான்அவன் வாழும் அறையின் கதை. நரகம்பற்றி ஓயாமல் அச்சப்பட்டு பதட்டம் கொள்கிற மனிதர்கள் மட்டுமல்ல எல்லா மனிதர்களும்எப்போதும் நரகத்தைத் தேடிக்கொண்டுதான் அலைகிறார்கள் என்பது எளிய முரண் அல்ல.

ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே பரிசோதனைக்குட்படுத்திக்கொள்ளும் காலம்வரும் என்று சொல்கிறதுநொண்டிகதை. ஒரு நொண்டி நாயும், சேது என்ற மனிதனும்தான் கதையின் மையம். சேது அரசியல்வாதியின் கையாள். செல்வாக்கு மிக்கவர். பணமும், வசதியும் இருக்கிறது. வாய் ஜாலாக்கு உள்ளவர். பலருக்கு நன்மை செய்தவர்கூட. இரண்டு பேரினுடைய கைகளை எடுத்துவிடுகிறார். அவ்வளவுதான். அதுதான் அவருடைய வாழ்வில் அவர் செய்த பெரிய கொடூரம். கடைசியில் தான் செய்த நன்மைகளைவிட அந்தச் சம்பவம்தான் அவருக்கு  பெரும் தொந்தரவாக இருக்கிறது. நரம்புத் தளர்ச்சி, முடக்குவாதம் என்று வந்துவிட்ட நிலையில் தன்னுடைய மொத்த வாழ்வையும் ஆராய்கிறார். கூட்டிக்கழித்துப் பார்த்தால் அவர் அரசியல்வாதியாக இருந்த காலத்தில் செய்த நன்மைகளே அதிகம். கடைசியாக அவரிடம் எஞ்சி நிற்பது நொண்டி நாய் மட்டும்தான். அதுவும் தெரு நாய். அதுவும் அதனால் முடிந்த அளவிற்கு வித்தைக்காட்டுகிறது. ஆனாலும் அவரைவிட்டு விலகுவதில்லை. வாழ்க்கையில் தோற்றுப்போனவனுக்கு துணையாகவும் ஆதரவாகவும் அந்த நாய் மட்டும்தான் இருக்கிறது. காதலிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அவரால் பயன்படுத்த முடியாது. சேது தன்னுடைய மனதுடன் பேசவில்லை. அந்த நாயுடன்தான் பேசுகிறார். அந்த நாய்தான் சேதுவினுடைய மனசாட்சியாக இருக்கிறது. அவருடைய கடந்தகாலத்தை ஓயாமல் அவருக்கு நினைவுக்குக்கொண்டு வருவது அந்த நாய்தான். அதாவது மனசாட்சி. ஒருபோதும் விட்டுவிலகாத நாய். நினைவுகள் பேசும். மனங்களின் வெறுமையும் பேசும் என்று சொல்கிறது நொண்டி கதை.

தனிமனிதனுடைய கதையின் வழியே சமூகத்தின் கதையை சொல்ல வேண்டும். அதுதான் நிஜமான இலக்கியப் படைப்பு. தனிமனிதனுடைய வாழ்வைவிட ஒரு சமூகத்தின் வாழ்வுதான் முக்கியமானது. சமூக வாழ்வை எழுதுவதுதான் எழுத்தாளனின் வேலை என்பதற்குநெஞ்சுகொம்புகதை நல்ல உதாரணம். இந்த கதையில் மலேசியத் தமிழர்களுடைய வாழ்க்கை சித்திரம் வரையப்படுகிறது. அதற்கு வழியாக கொய்த்தியோ மணியம் இருக்கிறார். தமிழர்களுக்கிடையே இருக்கக்கூடிய பக்தி உணர்வு, அதனுடைய அடையாளமாக இருக்கிற முனியாண்டி சாமி, சாராயம் குடிப்பது, பஞ்சாயத்து, ,நயவஞ்சகமாகப் பெண்களை சீண்டுவது, பெண்டாட்டி ஆக்கிக்கொள்வது, எழவு சொல்கிறவனுடைய வாழ்க்கை என்று இந்த ஒரு கதைக்குள் பலகதைகளை எழுதியிருக்கிறார். இது கைதேர்ந்த கலைஞனுக்கு மட்டுமே வசப்படக்கூடியது. அது ம.நவீனுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. மணியம் பெரிய சண்டியர். அவருடைய மனைவி ஓலம்மாவும் ஒருவகையில் சண்டியர்தான். ரகசியங்கள் நிறைந்தவள். அவள் பெரிய புதிர்நிறைந்த பெண்ணாகவே கடைசிவரை இருக்கிறாள். ஆண் பெண்ணை கணவன் மனைவியாக நீடித்திருக்க வைப்பது குழந்தை. அந்த பாக்கியம் மணியத்திற்கு வாய்த்ததா? ஆனால் அவருடைய மனைவி ஓலம்மாவிற்கு பிள்ளை பிறக்கிறது. எப்படி? அது ரகசியம். அந்த ரகசியம்தான் மணியத்தின் சாவாக இருந்தது. கிண்டலும், கேலியுமாக, வலியுமாக ஒரு சிறுவனுடைய பார்வையிலிருந்து சொல்லப்பட்ட கதை. செட்டி கம்பத்தின் வாழ்க்கை சுருக்கம்நெஞ்சுக்கொம்பு’.

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கிற சீனப் பெண்ணும், சாராயம் குடிக்க வருகிற தமிழ் ஆண்களும், அவர்களுடைய சேட்டைகளும், கள்ளச்சாராயம் குடிப்பதால் கண்பார்வை மங்கி மயங்கி, பலர் இறந்துபோன மனிதர்களுடைய கதையுமாக விரிவதுஒலி’. மனிதர்கள் திடீர்திடீரென்று இறந்துபோவது தெரியாமல் அரசு விழிக்கிறது. முனியாண்டியின் சாபமாக இருக்கலாம் என்று மக்கள் நம்புகிறார்கள். மருத்துவ ஆய்வுகள் காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறது. ஆனால் மனிதர்கள் இறந்து போவது மட்டும் நிற்கவில்லை. தருமபுரியில் ஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்து 183 பேர் இறந்துபோன சம்பவத்தை ஒலி கதை நினைவூட்டுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல மலேசியாவிலும் கள்ளச்சாராயம் குடித்து மனிதர்கள் இறந்துபோவார்கள் என்பது கதை அல்ல, நிஜம். தன்னுடைய வாழ்நாள் எல்லாம் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்த சீனப் பெண் சின்னி பைத்தியமாகிவிடுகிறாள். அவளுடைய குலுக்கலையும், தளுக்கு மொழியையும் ரசிப்பதற்காக சாராயம் குடித்தவர்கள் மாண்டுபோகிறார்கள். முனியாண்டி சாமி எப்போதும் போல இருக்கிறார் மௌனமாக. அவருடைய கை முடமானது அவருக்கு தெரியுமா ?

.நவீன் நல்ல கதை சொல்லி என்பதையும், கதையை எப்படிச்சொல்ல வேண்டும், எந்த மொழியில், எந்த அளவில், சொல்லவேண்டும் என்பதை நன்றாக அறிந்தவர் என்றுமண்டை ஓடி’ – தொகுப்பு சொல்கிறது. தமிழ்மொழியில் எழுதப்பட்ட நல்ல சிறுகதை தொகுப்புகளின் பட்டியலில்மண்டை ஓடியும் இடம் பெறும். வாழ்வதும் கற்பதும்தான் வாழ்க்கை. இலக்கியப் படைப்பு என்பது நிஜ வாழ்க்கையிலிருந்துதான் வரமுடியும். தான் வாழ்ந்ததை, கற்றதை அலங்காரமில்லாமல், ஜோடனைகள் இல்லாமல், வெற்று வார்த்தை சேர்க்கைகள், போதனைகள் இல்லாமல் வாழ்வனுபவமாக கதைகளை திறம்பட, மேம்பட எழுதியிருக்கிறார் ம.நவீன்.

மண்டை ஓடிசிறுகதை தொகுப்பு.நவீன்                                                        கணையாழி
யாவரும் பதிப்பகம்                                                                                                         டிசம்பர் - 2018
214, மூன்றாவது பிரதான சாலை,
புவனேஸ்வரி நகர்,
வேளச்சேரி,
சென்னை - 42