சும்மா இரு – இமையம்
நாம்
அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளில் முதலிடத்தில் இருப்பது ‘சும்மா இரு’.
பொய், பாவனை, நாடகம்,
ஒன்றுமில்லை என்ற அர்த்தத்தில்தான் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
ஞானிகள், யோகிகள், துறவிகள்,
மதபோதகர்கள் சொன்ன முக்கியமான வார்த்தையும், கடைசிவரை
மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று சொன்ன வார்த்தையும்; அதிகமாக
விளக்கம் சொன்ன வார்த்தையும் ‘சும்மா இரு’ என்பதுதான். அப்படியென்றால் அமைதியாக இரு, செயலின்மையில் இரு. வெறுமென இரு. என்று அர்த்தம். உலகமெங்கும் ஞானத்தைத் தேடி சென்றவர்கள்
எல்லாரும் கண்டடைந்த ஒரே விஷயமும், ஒரே சொல்லும் ‘சும்மா இரு’ தான். இதுதான் ஞானம்.
’சும்மா இரு’ என்று சொல்வது பொறுப்பை துறந்துவிடு
என்பதுதான். சராசரி மனிதர்களிடமிருந்து ஞானிகள், யோகிகள், மகான்கள்வரை அதிகமாக இந்த வார்த்தையை ஏன் பயன்படுத்துகிறார்கள்.
நாம் பயன்படுத்துகிற வார்த்தைகளிலேயே இதுதான் பயங்கரமானதா?
மனிதர்கள்
பயன்படுத்துகிற பெரும்பாலான வார்த்தைகளுக்கு முன்னெட்டாக ’சும்மா இரு’
வருகிறது. தெரிந்து சொல்கிறோமா தெரியாமல் சொல்கிறோமா?
நம்முடைய மரபு அப்படி பழக்கியிருக்கிறதா? ஒரு ஆளை
ஊக்கப்படுத்த நினைக்கிற நாம் ஏன் ‘சும்மா பாடு’, ‘சும்மா ஓடு’, ‘சும்மா பேசு’, ‘சும்மா
படிச்சிப் பாரு’ என்று சொல்கிறோம்? சும்மா
என்றால் உண்மையில்லை என்று அர்த்தம். உண்மையில்லாத விஷயத்தையும்,
உண்மையில்லாத வார்த்தைகளையும் ஏன் பயன்படுத்துகிறோம்? ஊக்கப்படுத்துவதற்கு மட்டுமல்ல ஒருவரை எச்சரிக்கை செய்வதற்கும் இதே வார்த்தையைத்தான்
பயன்படுத்துகிறோம். ‘சும்மா பேசிக்கிட்டிருக்காத’ ‘சும்மா இருக்கமாட்டன்’ ‘சும்மா அலட்டிக்காத’,
‘சும்மா வெளயாடாத’ என்று. ’சும்மா இரு’ என்பதற்கு நேரெதிரான விஷயத்திற்கும் இதே
வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறோம். ’சும்மா இருக்காத’,
‘ சும்மா படுத்திருக்காத’, ‘சும்மா தூங்கிட்டியிருக்காத’,
‘சும்மா ஊரச்சுத்திக்கிட்டிருக்காத’, ‘சும்மா பொழுத
போக்காத’ என்று. சாதாரண விஷயங்களுக்கு மட்டுமல்ல
கோபமான நேரத்தில்கூட இதே வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறோம். ‘சும்மா எங்கிட்ட பேசிக்கிட்டிருக்காத’, ‘சும்மா சீண்டிக்கிட்டு
இருக்காத’ என்று. ‘சும்மா தூங்கு’
என்று சொல்கிற நாம் ‘சும்மா தூங்கிட்டியிருக்காத’
என்றும் சொல்கிறோம். நாம் நிஜத்தை பேசவில்லை.
பொய்தான் சொன்னோம் என்பதற்கும் இதே வார்த்தைதான் பயன்படுகிறது.
‘சும்மா சிரிச்சன்’, ‘சும்மா பாத்தன்’,
‘சும்மா பேசிக்கிட்டிருந்தன்’, ‘சும்மா படுத்தியிருந்தன்’.
ஒரு நாளைக்கு எவ்வளவு ‘சும்மா’க்களை பயன்படுத்துகிறோம்?
‘சும்மா நடி’ என்றும் சொல்கிறோம். ‘சும்மா நடிக்காத’ என்றும் சொல்கிறோம். அதேபோல் ‘கத விட்டு வை பாத்துக்கலாம்’ என்றும் ‘சும்மா கத விடாத’ என்றும்
சொல்கிறோம். ‘சும்மா சொன்னன்’ என்றும்
‘சும்மா சொன்னன்னு நெனச்சிக்காத’ என்றும் சொல்கிறோம்.
ஒரே வார்த்தை எதிரெதிர் நிலையிலும் எப்படி பொருத்தமாக இருக்கிறது?
’சும்மா வா ஒரு டீ குடிச்சிட்டு வரலாம்’ ‘சும்மா
ஒரு முற ஊருக்கு போயிட்டு வா’, ‘சும்மா கடைக்குப் போயிருந்தன்’,
‘சும்மா உளறிக்கிட்டிருக்காத’, ‘சும்மா பேசிக்கிட்டிருக்கன்னு
நெனக்காத’ ‘சும்மான்னு இந்த பிள்ள இருக்காது’, ‘சும்மான்னு செத்த நேரம் இந்த வீட்டில உட்கார முடியுதா?’ ‘சும்மா கனவு காணாத’, ’சும்மா எதுக்கு தெருவுல சுத்துற?’,
‘சும்மா, சும்மா பேசிக்கிட்டிருக்காத’ ‘சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னன்’ இப்படி பொருத்தமில்லாமல்,
காரணமில்லாமல் கவனமில்லாமல் ஒரு நாளுக்குள் எவ்வளவு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம்?
நாம் திரும்பத்திரும்ப பொருத்தமில்லாமல் பயன்படுத்துகிற வார்த்தைகள்
எவ்வளவு இருக்கும்? இதற்கான வேர்ச்சொல் எங்கிருந்து ஆரம்பித்திருக்கும்?
’சும்மா இரு’ என்று ஞானிகள், யோகிகள்,
மதபோதகர்காள், சந்நியாசிகள் சொன்னதுபோல,
வற்புறுத்தியது போல மனிதர்களால் இருக்க முடியுமா? எல்லாரும் சும்மா இருந்தால் ‘சந்நியாசிகளுக்கு யார் சோறு
போடுவது? எறும்புகள்கூட சும்மா இருப்பதில்லை. சும்மா இருந்தால் அவைகளுக்கு எங்கிருந்து சோறு வரும்? மனிதர்கள் சும்மா இருந்திருந்தால் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் சாத்தியப்பட்டிருக்குமா?
உலகில் எது சும்மா இருக்கிறது? தாவரங்கள்,
பூச்சியினங்கள், பறவையினங்கள், விலங்கினங்கள் சும்மா இருக்கிறதா? பூமியும், சூரியனும் சும்மா இருந்தால் நம் நிலை
என்ன? நாம் சும்மா இருந்தாலும் நம்முடைய வயிறு சும்மா இருக்கிறதா?
நம்முடைய வாய் சும்மா இருந்தால் பிரச்சனையில்லை. நம்முடைய உடலிலுள்ள உறுப்புகள் எல்லாம் ஒரு நாளைக்கு அல்ல, ஒரு மணிநேரம் சும்மா இருக்கிறேன் என்று இருந்துவிட்டால் மனிதர்களின் நிலை என்ன?
எல்லா மனிதர்களும் ஆசைப்படுகிற, விரும்புகிற,
வேண்டுகிற ஒரே விஷயம் சும்மா இருக்க வேண்டும் என்பதுதான். அதுமட்டும் தான் மனிதர்களுக்கு விதிக்கப்படவில்லை. ‘சும்மா
இரு’ என்று சொல்வதெல்லாம் சும்மா இருப்பதற்காக சொல்லவில்லை.
தடம்
– விகடன் செப்டெம்பர் 2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக