நம்பாளு
– இமையம்
ஊரை விட்டுத் தள்ளி
முந்திரிக்காட்டுக்குள் இருந்த ஒரு வீட்டுக்கு இரவு
பத்து மணிக்கு ஆர்.கே.எஸ். பைக்கில் வந்து இறங்குவார் என்று யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. அவர்
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தொன்பதில் அமைச்சரான
பிறகு ஒருநாளும் பைக்கில் என்ன, ஏ.சி.
இல்லாத காரிலும்
ஏறியதில்லை. அவர் இரண்டு முறை
அமைச்சராக இருந்தபோது மட்டுமல்ல அமைச்சராக இல்லாமல்
வெறும் எம்.எல்.ஏ.வாக இருந்த ஒரு
முறையும் எம்.எல்.ஏ.வாகக்கூட
இல்லாத ஒரு முறையும், கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், கல்யாணம்
போன்ற நிகழ்ச்சிகளுக்குப் போகும்போதும் குறைந்தது மூன்று நான்கு கார்களாவது
தன்னுடைய காருக்குப் பின்னால் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். அதற்காகத் தனக்கு வேண்டப்பட்ட
ஒன்றிய, நகரச் செயலாளர்களை வரவழைத்துவிடுவார். மூன்று நான்கு கார்கள் வந்த பிறகுதான்
நிகழ்ச்சிக்குக் கிளம்புவார். ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மாவட்டத்திற்குள் தன்னுடைய செல்வாக்கு
எப்போதும்போல் இருக்கிறது என்று காட்டிக்கொள்ள விரும்புவார். அமைச்சராக
இருந்தபோதும் சரி, வெறும் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் சரி, எம்.எல்.ஏ.வாக
இல்லாதபோதும் சரி, யார் அவரைப் பார்க்கப் போனாலும் வந்தவரை ‘உட்கார்’ என்று
சொல்ல மாட்டார். ஐந்து நிமிஷம் கழித்த பிறகு "ஏன்
நிக்குற?" என்று கேட்பார். அப்போதும் ‘உட்கார்’ என்று
சொல்ல மாட்டார். தான் உட்கார்ந்திருக்கிற இடத்தில் வேறு ஒரு நாற்காலி இல்லாமல்
பார்த்துக்கொள்வார். அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்றாலும் அவர் முன் நின்றுகொண்டுதான்
கட்சிக்காரர்கள்
பேச வேண்டும். மிகவும்
முக்கியமானவர்கள், அதிகாரிகள் என்றால் மட்டும்தான் உட்காரச் சொல்வார். இருபத்தியெட்டு வருஷமாக அவர்தான் மாவட்டச் செயலாளர். இருபத்தியெட்டு வருஷமாக மாவட்டத்திற்குள்
அவரால் நியமிக்கப்பட்டவர்கள்தான் நகர,
ஒன்றியச் செயலாளர்கள். அதனால் அவருக்கு முன் கட்சிக்காரர்கள் யாரும் உட்கார மாட்டார்கள்.
கூடலூர் மாவட்டக் கட்சிக்கு அவர்தான் ராஜா. "நம்ப மாவட்டத்தப் பொறுத்தவர நீங்கதாண்ணே ராஜா" என்று கட்சிக்காரர்கள் அவரிடமே சொல்வார்கள். அப்படிச் சொல்லும்போதெல்லாம் சிரிக்க மட்டுமே செய்வார்.
ஆர்.கே.எஸ். என்றைக்கு மாவட்டச் செயலாளர் ஆனாரோ அன்றிலிருந்து இன்றுரை அவர் நினைத்ததுதான் கட்சி. அவர் விரும்பிய
ஆட்கள் மட்டும்தான் கட்சிப்
பதவியிலிருந்தார்கள். அவர் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் கட்சிக்காரர்கள், "மாவட்டக் கழகமே வருக" என்றும், "மாவட்டக் கழகக் காவலரே வருக’ என்றும் போட்டுதான் போஸ்டர் அடிப்பார்கள். அவருடைய
உண்மையான பெயரான ‘ஆர்.கே.செல்வம்’ என்பதைப் போட்டு போஸ்டர் அடிக்க மாட்டார்கள். ஆயிரத்துத்
தொள்ளாயிரத்து எண்பத்தொன்பதில் அவர் அமைச்சரான பிறகு, அமைச்சராக இல்லாதபோதும்,
எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும், எம்.எல்.ஏ.வாக இல்லாதபோதும், கட்சிக்காரர்களும்
மற்றவர்களும் ஆர்.கே.எஸ்.ஸை ‘அமைச்சர்’ என்றுதான் சொல்வார்கள். அப்படிப்பட்டவர் சாதாரண மோட்டார்
பைக்கில் வந்து இறங்கினால் யார்
நம்புவார்கள்?
மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்த
ஆட்களில் சிலர் ஆர்.கே.எஸ். மோட்டார் பைக்கில்
வந்து இறங்கியதைப் பார்த்துப்
பதறிப்போய்க் கீழே இறங்கி வந்தார்கள். ஆர்.கே.எஸ்.ஸின்
உதவியாளர் முருகனும் ஓடி வந்தான். தன்னைப் பார்க்க வந்தவர்களுடைய
முகத்திலடிப்பதுபோல் "எதுக்கு வரீங்க? போங்க மேல" என்று சொல்லி ஆர்.கே.எஸ். சத்தம் போட்டதும்
மாடியிலிருந்து வந்தவர்கள் திரும்பி மாடிக்குப் போனார்கள். முருகன் மட்டும்தான்
நின்றுகொண்டிருந்தான். வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளை ஆர்.கே.எஸ்.
பார்த்தார். கார் எதுவும் இல்லை. கீழே எரிந்துகொண்டிருந்த மூன்று டியூப்லைட்டுகளைப் பார்த்தார்.
மாடியிலிருந்து தன்னைப் பல
பேர் பார்த்துகொண்டிருப்பதைப் பார்த்தார். மாடியிலிருந்தபடியே ஒரு சிலர் வணக்கம்
வைத்தனர். அதைப் பார்த்து எரிச்சல்பட்ட ஆர்.கே.எஸ். "மேல நிக்குறவனுங்கள ஒக்காரச் சொல்லு. எதுக்கு இத்தன லைட்?" என்று முருகனிடம் கேட்டார். மாடியில்
நின்றுகொண்டு ஆர்.கே.எஸ்.ஸையே பார்த்துக்கொண்டிருந்தவர்களிடம் "ஒக்காருங்க. யாரும் நிக்கக் கூடாது" என்று சொன்னான் முருகன். பிறகு "ஒரு லைட் போதும். ரெண்ட நிறுத்துங்க" என்று சொன்னான். நின்றுகொண்டிருந்த ஆட்கள்
உட்கார்ந்தனர். இரண்டு டியூப்லைட்கள் நிறுத்தப்பட்டன. முருகன் சொன்னால் அது ஆர்.கே.எஸ்.ஸே
சொன்னதுபோல்தான்.
ஆர்.கே.எஸ். சுற்றுமுற்றும்
பார்த்தார். எங்கு பார்த்தாலும் இருட்டாக இருந்தது. வீட்டுக்குப்
பின்புறமும், பக்கவாட்டிலும் முந்திரி மரங்கள் நிறைந்து காடாக
இருந்தது. ஊரை விட்டுக் குறைந்தது இரண்டு கிலோமீட்டர் தூரமாவது
தள்ளியிருக்கும். இந்தக் காட்டில் வந்து ஒருவன் வீடு கட்டியிருக்கிறானே என்று ஆச்சரியப்பட்ட ஆர்.கே.எஸ். "எல்லாரும் வந்திட்டாங்களா?" என்று கேட்டார்.
"எட்டு மணிக்கே வந்திட்டாங்க."
"எவ்வளவு பேர் இருக்கும்?"
"நீங்க கொடுத்த லிஸ்ட்டுல உள்ள
ஆளுங்கதான்." அதிக சத்தமில்லாமல் சொன்னான் முருகன். அப்போது
ஆர்.கே.எஸ்.ஸை
பைக்கில் உட்கார வைத்து ஓட்டிவந்த தனபால், "உள்ளாரப் போயிடலாம்ண்ணே. வெளியில நீங்க நிக்க
வேணாம்" என்று சொன்னதும் சரி என்பதுபோல் ஆர்.கே.எஸ்.
வீட்டுக்குள் போனார். முருகனும் தனபாலும் வேகமாக
முன்னால் நடந்து போய் வீட்டுக்குள்ளிருந்த ஒரு அறையின் கதவைத் திறந்துவிட்டனர். அறை சின்னதாக இருந்தது. ஒரே
ஒரு நாற்காலி மட்டும் போடப்பட்டிருந்தது. நாற்காலியில் உட்கார்ந்த ஆர்.கே.எஸ்.
தனபாலிடம், "வெளியில எரியுற லைட்ட நிறுத்து" என்று சொன்னார். உடனே தனபால் வெளியே போனான்.
அவன் வெளியே போனதும் முருகன் கதவைச் சாத்தினான். ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின்
வேகத்தைக் கூட்டினான்.
"முக்கியமான ஆளுங்க யாரு யாரு
வந்திருக்கிறது?"
"நம்ப கட்சியிலிருந்து ஒரு பத்து பேர்
இருக்கும். நடுநாட்டு மக்கள் கட்சியிலிருந்து பத்திருபது பேர் இருக்கும். மத்த
கட்சியிலிருந்து முப்பது பேர் இருக்கும். அப்பறம் அரசு ஊழியர் சங்கம், ஆசிரியர்
சங்கம், கட்டிடத் தொழிலாளர் சங்கம், ரசிகர் மன்றத்துக்காரங்கன்னு
வந்திருக்காங்கண்ணே."
"மகளிர்
சுய உதவிக் குழு எத்தன வந்திருக்கு?"
"பன்னண்டு
பேர்."
"ஒரு ஆளுக்கு எவ்வளவு கொடுக்கிறம்?"
"சாதாரண ஆளுன்னா அஞ்சாயிரம். மாவட்டப் பொறுப்புல, ஒன்றியப் பொறுப்புல இருந்தா பத்து, மாநில பொறுப்புன்னா இருவதுன்னு அண்ணன்தான் சொன்னிங்க. அப்படிதான் கவர் போட்டிருக்கு."
"ரசிகர் மன்றத்துக்காரன் எத்தன பேர்
வந்திருக்கானுங்க?"
"ஏழு குருப் வந்திருக்கண்ணே. மன்றத்துக்கு அம்பதாயிரம் கேப்பாங்கபோல
இருக்கு."
"சந்தேகமான ஆளுண்ணு யாராச்சும்
இருக்காங்களா?"
"வந்திருக்கிறதெல்லாம் நம்பாளுங்க
மட்டும்தான். எல்லாரும் ஒங்களோட விசுவாசிங்க."
"விஷயம்
வெளிய பரவக் கூடாது."
"சரிண்ணே."
"வேட்பாளரா நிக்குற பயலுங்க கிட்ட செலவுக்குப் பணம் கேட்டிருந்தனே, எவனாச்சும் வந்தானா?" என்று கேட்டார்.
"எட்டு பேர்ல ஆறு பேர் மட்டும்தான்
வந்து தந்தாங்க. ரெண்டு பேர் மட்டும் வரன்னு சொன்னாங்க."
"வந்த பயலுவோ எம்மாம் கொடுத்தானுங்க?"
"பத்து ’எல்’ண்ணே."
"வராத ரெண்டு பேரு யாரு?"
"சிவபாலனும், தண்டபாணியும்."
"திருட்டு நாயிங்க. போன் போட்டு ரெண்டு
பேரயும் வரச் சொல்லு. சாதிக்கார நாயா இருந்தாலும் ரெண்டும் ரெண்டு ஜில்லா
கத்திரிங்க. ஓவரா நடிப்பானுங்க" என்று ஆர்.கே.எஸ். சொன்னதற்குப் பதில் எதுவும் சொல்லாமல் பணிவாக
நின்றுகொண்டிருந்தான் முருகன்.
"சுய
உதவிக் குழு பொம்பளங்களுக்கு நூறு இரநூறு சேத்துக் கொடு. பொம்பளங்கதான்
காசு வாங்கிட்டமேன்னு காரியம் பாப்பாளுங்க."
முருகன் பதில் எதுவும் பேசவில்லை.
"இத முடிச்சிட்டு நேரா வீட்டுக்கு
வந்திடு. நாளக்கி ராத்திரி நம்ப தொகுதியில வீடு வீடா ஓட்டுக்கு ஆயிரம்ன்னு ஒவ்வொரு
ஊர்லயும் பணத்த டெலிவரி செய்யணும்"
என்று சொன்ன ஆர்.கே.எஸ்., "மேல போவலாம்" என்று சொன்னார். உடனே கதவைத் திறந்துவிட்டான் முருகன். அறையை விட்டு ஆர்.கே.எஸ்.
வெளியே வந்ததும் மாடிக்குப் போகிற படிக்கட்டில் வேகமாக ஏறினான். அவனுக்குப்
பின்னால் தன்னுடைய
பெரிய உடம்பைத் தூக்கிக்கொண்டு
நடக்க ஆரம்பித்தார் ஆர்.கே.எஸ்.
மாடிக்கு ஆர்.கே.எஸ்.
வந்ததும், ஜமுக்காளத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் ஒரே நேரத்தில் எழுந்து நின்று பணிவாக இரண்டு
கைகளையும் குவித்துக்
கும்பிட்டார்கள். தனக்கு எதிரில் கும்பிட்டபடி நின்றுகொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்துக் கும்பிட்ட ஆர்.கே.எஸ். வழக்கத்துக்கு மாறாக "ஒக்காருங்க" என்று சொன்னார். "முதல்ல நீங்க ஒக்காருங்கண்ணே" என்று கூட்டம் சொன்னதும் சிரித்துக்கொண்டே தனக்காகப் போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். பிறகு
"ஒக்காருங்க"
என்று சொன்னார். அதன் பிறகுதான் கூட்டம் தயக்கத்துடன் உட்கார்ந்தது. கூட்டத்திலிருந்த குமார் மட்டும் உட்காராமல் "மாவட்டக் கழகக் காவலர் வாழ்க" என்று சொல்லிச்
சத்தமாகக் கத்தினான். உடனே மொத்தக் கூட்டமும்
உட்கார்ந்தபடியே "வாழ்க"
என்று சொன்னதும் ஆர்.கே.எஸ்.ஸுக்குக்
கோபம் வந்துவிட்டது. கோஷம் போட்ட குமாரைப் பார்த்து "நந்திமங்கலத்து
குமார்தானடா நீ? எங்க வந்து என்னா செய்ற? நாய. உட்கார்" என்று சொல்லி முறைத்தார். கோஷம் போட்ட ஆர்வம் வடிந்துபோய் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு
உட்கார்ந்தான் குமார். ஆர்.கே.எஸ். கோபமாக இருக்கிறார் என்பதை உணர்ந்த
கூட்டத்தினர் பேசாமல் இருக்க முயன்றனர்.
தனக்கு எதிரில்
உட்கார்ந்திருப்பதில் முழுமையாக நம்பக்கூடிய ஆள் யார், ஓரளவு நம்பக்கூடிய ஆள்,
நம்பவே முடியாத ஆள் யார் என்று பரிசோதிப்பதுபோல் ஒவ்வொரு முகமாகப் பார்த்தார். உட்கார்ந்திருந்த ஒவ்வொரு ஆளும்
ஆர்.கே.எஸ்.ஸின் பார்வையில் பட்டுவிட வேண்டும், தான் வந்திருப்பது தெரிய வேண்டும்
என்ற எண்ணத்தில் முகத்தைத் தூக்கித்தூக்கிக் காட்டினர். உட்கார்ந்திருப்பதில் சந்தேகத்துக்துகிடமான ஆள் என்று யாருமில்லை. எல்லாருமே
தன்னுடைய விசுவாசிகள்தான். தன்னால் பதவிக்கு வந்தவர்கள், பலன்
பெற்றவர்கள்தான் என்று தெரிந்த பிறகுதான்
ஆர்.கே.எஸ்.ஸின் முகத்திலிருந்த இறுக்கம்
குறைந்தது.
ஆர்.கே.எஸ்.ஸுக்கு முன்னால் ஒன்பது வரிசையில் ஆட்கள்
உட்கார்ந்திருந்தனர். கிழக்குப் பக்கமாகச் சுவரை ஒட்டி மகளிர் சுய உதவிக் குழுவைச்
சேர்ந்த பெண்கள் உட்கார்ந்திருந்தனர். கடைசி வரிசையில் வெளிச்சம் கொஞ்சம் மங்கலாகத்தான் இருந்தது. அதனால்
கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த ஆட்கள் தங்களுடைய முகம் ஆர்.கே.எஸ்.ஸுக்குத் தெரிந்திருக்குமா என்று சந்தேகப்பட்டனர்.
அதனால் கடைசி வரிசையில் மூன்றாவதாக உட்கார்ந்திருந்த கணபதி என்ற ஆள் எழுந்து "வணக்கங்க"
என்று சொல்லி இரண்டு கைகளையும் குவித்து, ஆண்டைக்கு அடிமை கும்பிடுவதுபோல் கும்பிட்டார். அதற்கு "நீயா?" என்று
ஏளனமாக ஆர்.கே.எஸ். கேட்டார். "சரிசரி"
என்பதுபோல் தலையை ஆட்டியதும் கணபதி கீழே உட்கார்ந்தார். அவர் உட்கார்ந்ததும்,
அவருக்குப் பக்கத்திலிருந்து முத்துசாமி என்ற ஆள் எழுந்து சென்று ஆர்.கே.எஸ்.ஸின்
காலில் சாமி சிலையின் முன் விழுந்து கும்பிடுவதுபோல்
விழுந்து கும்பிட்டான். "எழுந்திரு" என்று அவர் சொல்லாமல் லேசாகச்
சிரிக்க மட்டுமே செய்தார். தன்னைப் பார்த்துச் சிரித்ததே போதும் என்ற மகிழ்ச்சியில் அவன் எழுந்து வந்து தன்னுடைய இடத்தில் உட்கார்ந்தான். முத்துசாமியை அடுத்து
மூன்று நான்கு பேர் எழுந்து சென்று ஆர்.கே.எஸ்.ஸின் காலில் விழுந்து
கும்பிட்டதால், ஒருத்தன் கும்பிட்டு, மற்றவன் கும்பிடாமல் உட்கார்ந்திருந்தால்
சிக்கலாகிவிடுமே என்ற கவலையில் உட்கார்ந்திருந்த ஒவ்வொரு ஆளும் ஆர்.கே.எஸ்.ஸின்
காலில் விழுந்து கும்பிட எழுந்ததும், "எல்லாரும்
எதுக்கு எழுந்திரிக்கிறீங்க? மத்ததெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்" என்று சொன்னதும், ஆர்.கே.எஸ்.
கோபித்துக்கொள்வார் என்ற பயத்தில் கும்பிடவும் முடியாமல், உட்காரவும் முடியாமல் ஒரு சிலர் நின்றுகொண்டிருந்தனர். மீண்டும் "ஒக்காருங்க"
என்று ஆர்.கே.எஸ். விரட்டிய பிறகுதான் காலில் விழுந்து கும்பிட முடியவில்லையே என்ற
வருத்தத்தோடு தங்களுடைய இடத்துக்குப் போய் உட்கார்ந்தனர். ஆர்.கே.எஸ்.ஸின் பேச்சையும் மீறிப்போய்
அவருடைய காலில் விழுந்து கும்பிட்டான் மதியழகன். லேசாகச் சிரித்துக்கொண்டே "ஒன்னெ எனக்குத் தெரியும்ண்டா. போ. ரொம்ப
நடிக்காத" என்று ஆர்.கே.எஸ். சொன்னார். அப்படிச் சொன்னதையே பெரிய கௌரவமாகக் கருதிச் சிரித்துக்கொண்டே போய் மதியழகன் தன்னுடைய இடத்தில் உட்கார்ந்துகொண்டான்.
ஆர்.கே.எஸ்.
தனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த ஆட்களை கவனமாகப் பார்த்தார். பிறகு தனக்குப் பின்னால்
கையைக் கட்டிக்கொண்டு பந்தோபஸ்துக்கு நிற்கும் போலீஸ்காரர்கள் மாதிரி இரண்டு
பக்கமும் நின்றுகொண்டிருந்த முருகனையும்
தனபாலையும் பார்த்தார். அவர்கள் வாயைத் திறந்து எதுவும் சொல்லாததால் மீண்டும் தனக்கு முன்னால் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து "ஒங்களயெல்லாம்
எதுக்காக வரச் சொல்லியிருக்கன் தெரியுமா?"
என்று கேட்டார்.
"தெரியலிங்க" என்று முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த
ஆட்கள் சொன்னார்கள்.
"முருகன் எதுவும் சொல்லலியா?"
"இல்லீங்க" என்று மொத்தக் கூட்டமும் சொன்னது.
ஆர்.கே.எஸ்.
தனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த கூட்டத்தைப்
பார்த்து ரொம்பவும் நிதானமாக, "நான் இந்த முற மந்திரி ஆவணுமா, வேணாமா?" என்று கேட்டார்.
கூட்டத்தினர்
பதறிப்போய் "என்னங்க, இப்பிடிக் கேக்குறீங்க?" என்று கேட்டனர். இரண்டாவது வரிசையில் முதல் ஆளாக உட்கார்ந்திருந்த
நடுநாட்டு மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் எழுந்து, "நீங்க மந்திரி ஆவறது உறுதி. நீங்க மந்திரி
ஆவறதுக்காக நாங்க உசுரயும் விடுவோம்ண்ணே"
என்று சொன்னதைக் கேட்ட ஆர்.கே.எஸ். "நீ
உசுரயும் விட வேணாம். மசுரயும் விட வேணாம். சொல்றத மட்டும் செய். அது போதும்" என்று சொன்னார்.
ஆர்.கே.எஸ். மயிர் என்று சொன்னதற்காக சுரேஷ் கவலைப்படவில்லை.
அவர் பத்து வார்த்தை பேசினால் அதில் இரண்டு வார்த்தை ‘மயிர்’ என்பதாகத்தான்
இருக்கும் என்பது மாவட்டத்திலுள்ள எல்லாருக்கும் தெரியும். அதற்காக யாரும் அவரிடம் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். சுரேஷும் கோபித்துக்கொள்ளவில்லை. திட்டுவார். கெட்ட
வார்த்தை பேசுவார்தான். ஆனால் "நான்
ஒங்க ஆளுங்க"
என்றோ, "இவர் நம்பாளுங்க" என்றோ சொன்னால்
போதும், வந்தவர் கேட்கிற காரியத்தைச் செய்துகொடுத்துவிடுவார். கெட்ட வார்த்தையால் ஒரு ஆளைத் திட்டுகிறார் என்றால் அந்த ஆளுக்கு நிறைய நன்மை
செய்திருக்கிறார் என்று அர்த்தம். அதனால் மாவட்டத்திலுள்ள கட்சிக்காரர்களும்,
மற்றவர்களும் ஆர்.கே.எஸ்.
திட்டுவதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். விஷயம் கட்சியின் தலைமைக்கும் தெரியும். மாவட்டத்தில்
மெஜாரிட்டி சாதிக்காரர் என்பதால் அவர்மீது இதுவரை தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
"நீங்க மந்திரியானதிலிருந்து ஒங்க பேச்சத்தான்
இத்தினி வருஷமா கேட்டுக்கிட்டிருக்கம். கட்சி வேறயா இருந்தாலும் ஒங்க பேச்ச
என்னிக்கி மீறி இருக்கம்?" என்று சுரேஷ் சத்தமாகச் சொன்னதும் ஆர்.கே.எஸ்.ஸுக்குக்
கோபம் வந்துவிட்டது.
"எதுக்காக கத்துற? இதென்ன கல்யாண வீடா?
அறிவு வேணாம்?" என்று ஆர்.கே.எஸ். கேட்டதும் சுரேஷ்
மட்டுமல்ல, மொத்தக் கூட்டமும் அமைதியாகிவிட்டது.
பொதுவாக
ஆர்.கே.எஸ். அமைச்சராக இருந்தபோதும், எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும்
கட்சிக்காரர்களும் சரி, மற்றவர்களும் சரி, யாரும் நெருங்கி நின்று அவரிடம் பேச முடியாது.
இரண்டு மூன்றடி தூரம் தள்ளி நின்றுகொண்டுதான், அதுவும் வாயை மூடியபடிதான் பேச வேண்டும். அதுவும் சத்தமாகப் பேச முடியாது. மீறிப் பேசிவிட்டால் அவருடைய வாயிலிருந்து கெட்ட
வார்த்தைதான் வரும். அதற்கு பயந்துகொண்டே பல பேர் ஏழெட்டு அடி தூரம் தள்ளி நின்றுகொண்டுதான் பேசுவார்கள். கூட்டம் குறைவாக இருக்கிறது,
அவராகத்தான் கூப்பிட்டிருக்கிறார் என்ற முறையில், அதுவும் வேறு கட்சியில் இருப்பதாலும் ஒரே சாதிக்காரன் என்பதாலும்தான் ஆர்.கே.எஸ்.ஸின் முன்னால் சுரேஷ் நின்று தைரியமாகப் பேசினான். இல்லையென்றால் அவனும் பேசியிருக்க மாட்டான்.
டியூப்லைட்
வெளிச்சத்தால் டியூப்லைட்டைச் சுற்றிப் பறந்த சிறு வண்டுகளில் ஒன்று வந்து தன்மேல்
உட்கார்ந்ததைப் பார்த்த ஆர்.கே.எஸ். வண்டைத் தட்டிவிட்டுவிட்டுக் கூட்டத்தைப் பார்த்து, "தொகுதி நிலவரம் எப்பிடி இருக்கு?" என்று கேட்டார்.
"ஒங்களுக்கு என்னண்ணே, கொறஞ்சது
முப்பத்திலிருந்து நாப்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில ஜெயிக்கப்போறீங்க. மூணாவது
முறையாக மந்திரியா ஆவப்போறிங்கண்ணே"
என்று மூன்றாவது வரிசையில் உட்கார்ந்திருந்த வீரத் தமிழன் ரசிகர் மன்றத் தலைவர்
கோபி சொன்னார். கோபியின் முகத்திலடிப்பதுபோல் "என்னோட
தொகுதியப் பத்தி கேக்கல. ஒங்க தொகுதியப் பத்திக் கேட்டன்"
என்று சொன்னதும் கோபியின் முகம் தொங்கிப்போயிற்று. ஆனாலும் சமாளித்துக்கொண்டு "எங்க தொகுதியிலயும் ஒங்க கட்சிதாண்ணே
ஜெயிக்கும். அண்ணனுக்காகக்
கடுமையாக உழச்சி ஜெயிக்க வைக்கிறம்ண்ணே"
என்று சொன்னதும், முன்பைவிட இப்போதுதான் கோபியைக் கூடுதலாக முறைத்துப் பார்த்தார் ஆர்.கே.எஸ்.
எதற்காக முறைத்துப் பார்க்கிறார் என்று தெரியாமல் குழம்பிப்போன கோபி, கையைக் கட்டாமல்
நிற்பதற்காகக் கோபித்துக்கொண்டாரோ என்ற சந்தேகத்தில் கைகளைக் கட்டிக்கொண்டான்.
ஆர்.கே.எஸ்.ஸை
சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நினைத்த நான்காவது வரிசையில் உட்கார்ந்திருந்த ஒன்றியச்
செயலாளர் திராவிடமணி எழுந்து, "எங்க தொகுதிய ஜெயிக்க வச்சி காட்டுறம்ண்ணே" என்று சொன்னதும் ஆர்.கே.எஸ்.ஸின் முகம் முற்றிலுமாக
மாறிவிட்டது "கடுமையா உழச்சி ஜெயிக்க வைக்கப் போறியா?" என்று கேட்டார்.
திராவிடமணிக்குக்
குழப்பமாகிவிட்டது. தவறாகத்
தான் எதுவும் சொல்லவில்லை. பின் எதற்காகக் கோபப்படுகிறார் என்று யோசித்த திராவிடமணி எதுவும் பேசாமல் நின்றுகொண்டிருந்தார். "உட்கார்"
என்று ஆர்.கே.எஸ். சொல்லாமல் உட்கார்ந்தால் தவறாகிவிடுமே என்பதால் நின்றுகொண்டிருந்தார்.
கோபியையும்,
திராவிடமணியையும் அலட்சியமாகப் பார்த்துவிட்டு, கூட்டத்தைப் பார்த்து "எதுக்காக ஒங்களயெல்லாம் வரச் சொல்லியிருக்கன்
தெரியுமா?" என்று கேட்டார்.
"தெரியும்" என்று சொன்னால் "உனக்கெப்படித் தெரியும்?"
என்று கேட்பார். "தெரியாது"
என்று சொன்னால் "தெரியாததுக்கு எதுக்கு வந்து
உட்கார்ந்திருக்கீங்க?" என்று கேட்டுச் சத்தம்போடுவார் என்பதால் உட்கார்ந்திருந்த
மொத்தப் பேரும் வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தனர்.
தேர்தல் நேரத்தில் தன்னுடைய தொகுதியைச் சார்ந்த ஆட்களை வரச் சொல்லாமல் எதற்காகக் கடம்பூர் தொகுதி ஆட்களை மட்டும் வரச் சொல்லியிருக்கிறார்,
அதிலும் பொறுக்கியெடுத்த மாதிரி சில பேரை மட்டும் எதற்காகக் காட்டிலுள்ள வீட்டுக்கு ரகசியமாக இரவு பத்து மணிக்கு வரச் சொல்லியிருக்கிறார்
என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. முருகனிடம் கேட்டதற்கு, "அமைச்சர் வரச் சொன்னாரு. வந்திடுங்க. என்ன
விஷயம்ன்னு எனக்குத் தெரியாது" என்று ஒரே வார்த்தையாகச் சொல்லிவிட்டான். வந்திருந்தவர்களில் ஒரு
ஆளுக்குக்கூட ஆர்.கே.எஸ். எதற்காகத் தன்னை வரச் சொன்னார் என்பது தெரியாது. காரணம்
கேட்டால் திட்டுவார் என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால். சுய உதவிக் குழுவைச் சேர்ந்த
பெண்கள் மட்டுமல்ல ஆண்கள்கூட வாயே இல்லாததுபோல் உட்கார்ந்திருந்தனர்.
கோபியும்,
திராவிடமணியும் நின்றுகொண்டிருப்பதைப்
பார்த்தார். பார்த்தாலும் அவர்களைப் பார்க்காதது போல் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார். "நான் ரெண்டு முறை மந்திரியா இருந்தப்ப நீங்க கேட்டதெல்லாம்
செஞ்சனா இல்லியா?"
"செஞ்சிங்கண்ணே. கேட்டும் செஞ்சீங்க. கேக்காமியும்
செஞ்சீங்கண்ணே" என்று சொல்லிக் கூட்டம் கத்தியது. உடனே வாயில் விரலை வைத்து,
கத்தக் கூடாது என்பதுபோல் ஆர்.கே.எஸ். காட்டியதும் கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது.
"நீங்க மட்டும் மந்திரியா வரலன்னா
நம்பாளுங்க இந்த மாவட்டத்தில தல தூக்கியிருக்க முடியாதிண்ணே. நாங்க நம்ப சாதிக் கட்சியில இருந்தாலும் ஒருநாளும் எங்கள நீங்க ஒதுக்கிவச்சதில்ல.
காரியம் செஞ்சிதராம இருந்ததில்ல. நாங்க எங்க கட்சிக்குக் கட்டுப்பட்டதவிட ஒங்களுக்குத்தாண்ணே அதிகம்
கட்டுப்பட்டிருக்கம்" என்று சுரேஷ் சொன்னதும் "தெரியும்"
என்பதுபோல் தலையை மட்டுமே
ஆட்டினார் ஆர்.கே.எஸ்.
அமைச்சரைப் புகழ்ந்து பேசி சுரேஷ் மட்டும் நல்ல பெயர்
வாங்கிவிடுவான் என்று கவலைப்பட்ட திராவிடமணி, "நாங்க
என்னா செய்யணும்ன்னு அமைச்சர் சொன்னா போதும். நீங்க
நெனைக்கிறத வாயாலகூட சொல்ல வாண்டாம். கையாலகூடக் காட்ட வேண்டாம். கண்ணால ஜாடை
காட்டினாலே போதும். செஞ்சிடுவம்ண்ணே" என்று
எவ்வளவு பணிவாகச் சொல்ல முடியுமோ, அவ்வளவு பணிவாகச் சொன்னார்.
"உட்கார்" என்பதுபோல் ஆர்.கே.எஸ். கையைக் காட்டினார். மறு பேச்சு இல்லை. திராவிடமணி தரையில் உட்கார்ந்துவிட்டார்.
"நாங்க ஒங்க விசுவாசிங்கண்ணே" என்று சுரேஷ் சொன்னதைக் கேட்ட ஆர்.கே.எஸ். "விசுவாசத்த காரியத்தில காட்டு. வாயால காட்டாத" என்று சொல்லிவிட்டு "உட்கார்" என்பதுபோல் கையை ஆர்.கே.எஸ். ஆட்டியதும் சுரேஷ் தரையில்
உட்கார்ந்துகொண்டான்.
"நான் மந்திரியா ஆவணுமா? வேணாமா?"
"என்னண்ணே வந்ததிலிருந்து இதே வாத்தயக் கேக்குறிங்க? நீங்க மந்திரி ஆவாம வேற எந்த நாயிண்ணே
ஆவும்?" என்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில்
கூட்டத்தினர் ஒரே குரலாகக் கேட்டனர்.
"நீங்க எல்லாரும் நான்
மந்திரியாவணும்ன்னு நெனைக்கிறிங்களா?"
"ஆமாண்ணே" என்று சற்று சத்தமாகவே சொன்னார்கள்.
மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த மஞ்சுளா எழுந்து நின்று
ரொம்பவும் மரியாதையாகக் கும்பிட்டுவிட்டு, "உயிரோட இருக்கிறவர நீங்கதாங்க இந்த மாவட்டத்துக்கு
மந்திரி" என்று சொன்னாள்.
மஞ்சுளாவைப் பார்த்து ஆர்.கே.எஸ். சிரிக்க மட்டுமே செய்தார். அவர் எதுவும் சொல்லாததால் மஞ்சுளா தானாகவே உட்கார்ந்துகொண்டாள்.
கூட்டம்
அமைதியாக இருந்ததைப் பார்த்த ஆர்.கே.எஸ். எச்சரிக்கை செய்வதுபோல் குரலைக் கடுமையாக்கிக்கொண்டு, "நான் சொல்றத செய்ய மாட்டன்னு சொல்ற பயலுவோ இனிமே எம் முகத்தில முழிக்கக் கூடாது" என்று கறாராகச் சொன்னதைக் கேட்டதும் கூட்டத்திலிருந்தவர்களுக்குக் குழப்பம் உண்டாயிற்று. எதற்காக பீடிகை போட்டுப் பேசுகிறார், சிக்கலான விஷயம் எதையும்
சொல்லப்போகிறாரோ என்று யோசித்தனர். என்ன விஷயம் என்று கேட்க முடியாது. கேட்டால்
கோபப்படுவார் என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால் கூட்டத்திலிருந்த ஒரு ஆள்கூட "என்ன விஷயம்?" என்று கேட்கவில்லை.
ஆர்.கே.எஸ். நிதானமாகக் கூட்டத்தினரைப் பார்த்தாலும் எதுவும் பேசாமல் இருந்தார். எப்படிச் சொல்வது என்று தயங்குவதுபோல்
உட்கார்ந்திருந்தார். கடைசியாக ஒரு தீர்மானத்திற்கு வந்ததுபோல் "நான் மந்திரி ஆவணுமின்னா ஒங்க கடம்பூர் தொகுதியில நம்ப கட்சி ஜெயிக்கக் கூடாது" என்று சொன்னதும் கூட்டத்திலிருந்த மொத்தப் பேரும்
அமைதியாகிவிட்டனர். என்ன சொல்கிறார், எதற்காகச் சொல்கிறார் என்று புரிந்துகொள்ளவே
கூட்டத்தினருக்குச் சிறிது நேரம் ஆயிற்று. பலருக்குக் குழப்பம் உண்டாயிற்று. உண்மையைத்தான்
சொல்கிறாரா, இல்லை தங்களைச்
சோதித்துப்பார்ப்பதற்காகச்
சொல்கிறாரா என்று ஒரு சிலருக்கு சந்தேகம் உண்டாயிற்று. "சொன்னதத் திரும்ப சொல்லுங்க" என்று கேட்கலாமா என்று ஒன்றிரண்டு பேருக்குத்
தோன்றியது. கேட்டால் கோபப்படுவார். சத்தம்போடுவார் என்பதால் எதுவும் கேட்காமல்,
பேசாமல் உட்கார்ந்திருந்தனர். கூட்டத்தினரின் அமைதியைக் கவனமாகப் பார்த்த ஆர்.கே.எஸ்.
பக்குவமான குரலில், "அவன் கட்சியில் சீனியர். மூணு முறயா
தோத்துட்டான். இந்த முற ஜெயிச்சா அவனுக்கு மந்திரி பதவி கெடச்சாலும் கெடைக்கலாம்.
அவன் ஜெயிச்சி, மந்திரியாயிட்டா நம்ப மாவட்டத்துக்கு ரெண்டு மந்திரியாயிடும்" என்று சொல்லிவிட்டுப் பேச்சை நிறுத்திக்கொண்டார்.
உட்கார்ந்திருந்தவர்களுக்கு
ஆர்.கே.எஸ். என்ன சொல்கிறார் என்பது இப்போது புரிந்துவிட்டது.
"இந்த மாவட்டத்தில நானும் மந்திரி,
அவனும் மந்திரியா இருக்கிறதா? அவன் சைரன் வச்ச காருல போறதா?" என்று ஆர்.கே.எஸ். கேட்டதும் மொத்தப் பேரும் அவ்வளவு வன்மத்தோடு கத்தினார்கள், "கூடாதுண்ணே."
"அவன் மந்திரி ஆவ மாட்டான். அது
எனக்குத் தெரியும். மூணு முற
தோத்துப்போயிட்டான். சாதியில மட்டம். அதனால இந்த முற ஜெயிச்சிட்டா, மூணு முற தோத்த பயன்னு மனமிறங்கி தலவரு
எதயாச்சும் மந்திரின்னு கொடுத்திட்டா என்னா பண்றது?" என்று கேட்டு முடிவை நீங்களே எடுங்கள் என்பதுபோல் சொன்னார்.
"இந்த மாவட்டத்துக்கு நீங்கதாண்ணே
நிரந்தர மந்திரி. வேற எந்தப் பயலும் வர முடியாது. நீங்க கவலப்படாதிங்க. நாங்க பூத்திலியே விஷயத்தப் பாத்துக்கிறம்" என்று ஏழாவது வரிசையில் உட்கார்ந்திருந்த கட்டிடத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் குமரேசன் சொன்னார். அப்போது வேகமாக எழுந்த திராவிடமணி "அம்பது வருஷமா இந்த மாவட்டத்தில நம்பாளுங்க மட்டும்தான்
மந்திரி ஆகியிருக்காங்க. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த மாவட்டத்தப்
பொறுத்தவர நம்பாளுங்கள தவித்து வேற யாரயும்
மந்திரியா போட முடியாது. போட்டதுமில்ல. அதனால நீங்கதாண்ணே மந்திரி, இது சத்தியம்" என்று சொல்லித் தன்னுடைய தலையில் தானே கையை வைத்து சத்தியம்
செய்தார். அப்போது எழுந்த சுரேஷ் "நீங்க
பேர்ல மட்டுமில்லண்ணே. நம்ப எனத்துக்கே நீங்கதாண்ணே செல்வம்" என்று சொன்னதும் உட்கார்ந்திருந்த எல்லாருமே
கைதட்டினார்கள். கைத்தட்டல் நின்றதும் சுரேஷ் உட்கார்ந்துகொண்டான்.
"நான்
சொன்ன விஷயம் புரிஞ்சிதா?" என்று ஆர்.கே.எஸ். பொதுவாகக் கேட்டார்.
"புரிஞ்சிதண்ணே. இனி நீங்க ஒண்ணும் சொல்ல
வேண்டாம். எல்லாத்தயும் நாங்க பாத்துக்கிறம்"
என்று கூட்டத்தினர் ஒரே குரலாகச்
சொன்னார்கள். ஐந்தாவது வரிசையில் இரண்டாவதாக உட்கார்ந்திருந்த ராஜேந்திரன் எழுந்து,
"இத நீங்க போன்ல சொல்லியிருந்தாலே செஞ்சியிருப்பம். இதுக்காக நீங்க எலக்ஷன் வேலயப் போட்டுட்டு அலயணுமா?" என்று அக்கறையுடன் கேட்டான். பிறகு உரத்த குரலில் "எங்க
மந்திரிய மீறி எந்தப்
பயலும் இந்த மாவட்டத்தில தல தூக்க முடியாது. மீறித் தூக்குனா தல இருக்காது" என்று சொன்னதும் கூட்டத்தில் கைத்தட்டல்
எழுந்தது. "போதும், ஒக்காரு" என்பதுபோல் ஆர்.கே.எஸ். கையைக் காட்டியதும் ராஜேந்திரன் உட்கார்ந்தான்.
நடுநாட்டு
மக்கள் கட்சியின் மாவட்டச்
செயலாளர் ஆனந்தன் எழுந்ததும் "மேட பேச்சுப் பேசப்போறியா?" என்று கேட்டு ஆர்.கே.எஸ். சிரித்ததும், சொல்ல
வந்ததை மறந்துபோய் நின்றுகொண்டிருந்தார் ஆனந்தன்.
"ஒம் பொண்டாட்டிக்கி நான்தான் சத்துணவு
டீச்சர் வேல வாங்கிக்கொடுத்தன். ஞாபகம் இருக்கா?" என்று ஆர்.கே.எஸ். கேட்டதும் பதறிப்போன ஆனந்தன், "என்னண்ணே அப்பிடிக் கேட்டுட்டீங்க? ஒங்க கட்சி
ஒன்றியச் செயலாளர் பொண்டாட்டிக்கி போட்ட ஆர்டர மாத்தி
ஒத்த பைசா வாங்காம எம் பொண்டாட்டிக்கிக் கொடுத்தீங்க. அத என்னிக்கும் நாங்க மறக்க மாட்டம்" என்று உணர்ச்சிப் பெருக்கோடு சொன்னார் ஆனந்தன்.
"நான் மந்திரியா இருந்தப்ப செஞ்ச
காரியத்துக்காகச் செய்ய வேண்டாம். சாதிக்காரன் சொல்றன்.
அதுக்காகச் செய்ங்க"
என்று ஆர்.கே.எஸ். சொன்னதும் கூட்டத்தில் லேசாக சலசலப்பு உண்டாயிற்று.
ஐந்தாவது
வரிசையில் முதல் ஆளாக உட்கார்ந்திருந்த ஏழுமலை எழுந்து பவ்வியமாக, "அமைச்சர்
இவ்வளவு பேச வேண்டியதில்ல. விஷயத்தச்
சொல்லிட்டிங்க. காரியத்த முடிக்கிறம். நம்புலன்னா சத்தியம் செய்றம்" என்று சொன்னதோடு நிற்காமல் தோளில் கிடந்த
துண்டை எடுத்துத் தரையில் போட்டுத் தாண்டினார்.
உடனே உட்கார்ந்திருந்தவர்களில் ஒரு சிலர் எழுந்து சத்தியம் செய்ய
ஆரம்பித்தனர். பெண்களில் இரண்டு மூன்று
பேர் சத்தியம் செய்வதற்காக எழுந்தனர்.
"எல்லாரும் ஒக்காருங்க. ஒங்களயெல்லாம்
நம்பாமியா வரச் சொன்னன்?" என்று ஆர்.கே.எஸ். கேட்ட பிறகுதான் சத்தியம் செய்வதும் நின்றது.
ஏழுமலையைப்
பார்த்து, "தண்ணி போட்டிருக்கியா?" என்று ஆர்.கே.எஸ் கேட்டார்.
"இல்லீங்க."
"அப்பறம் ஏன் வாய் நீளுது?" என்று கேட்டதும் லேசாகச் சிரித்துக்கொண்டே ஏழுமலை உட்கார்ந்தார்.
அப்போது கூட்டத்தைப் பார்த்து "நான் மந்திரியானா நீங்க மந்திரியான
மாதிரிதான்" என்று ஆர்.கே.எஸ். சொல்லி முடிப்பதற்குள்ளாகவே
கூட்டத்திலிருந்த பல பேர் ஒரே நேரத்தில் "இன்னிக்கி ராத்திரிக்கே போய் தொகுதியிலுள்ள
நம்பாளுங்ககிட்டப் பேசி முடிச்சிடுறோம்" என்று சொன்னார்கள்.
"தொகுதியிலுள்ள
மொத்த சுய உதவிக் குழு பொம்பளங்களோட நான் பேசி முடிக்கிறங்க" என்று மஞ்சுளா
சற்றுச் சத்தமாகவே சொன்னாள்.
"நான் சொன்னத செய்யுறது உதவியில்ல.
வெளியில சொல்லாம இருக்கிறதுதான் பெரிய உதவி."
"பெரிய வாத்தயெல்லாம் சொல்லாதீங்க" என்று கூட்டம் கத்தியது.
"இந்த ரெண்டாயிரத்து பதினாறு தேர்தல்ல
அவன் ஜெயிச்சியிட்டா நம்பளுக்கு பெரிய எதிரியா ஆயிடுவான். அப்புறம் அவன ஒழிக்கிறது
லேசில்ல."
"அவன் மந்திரியா ஆவக் கூடாதிண்ணே" கூட்டம் கத்தியது.
"நீங்க நம்பாளுங்களுக்கு செஞ்சது இந்த
ஒலகத்துக்கே தெரியும்ண்ணே. ஒங்க ஒடம்புல ஓடுற அதே சாதி ரத்தம்தான் எங்க
ஒடம்புலயும் ஓடுது. இங்க ஒம்போது கட்சிக்காரங்க வந்திருக்கம். எதுக்காக? அமைச்சரு
வரச் சொன்னாருன்னு சொன்ன ஒரு வார்த்தைக்காக. அமைச்சர் எது நடக்கணும்ன்னு
விரும்புறாரோ அது நடக்கும். அத நாங்க நடத்திக்காட்டுறம்" என்று நான்காவது வரிசையில் உட்கார்ந்திருந்த
கண்ணதாசன் சொன்னதும் கூட்டத்தில்
பலத்த கைத்தட்டல் எழுந்தது. தான் சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்லி முடித்துவிட்ட திருப்தியில் கண்ணதாசன்
உட்கார்ந்தார்.
"தலைமக்குத் தெரிஞ்சா என்னெ கட்டம்
கட்டிடுவானுங்க. பாத்து செய்ங்க" என்று நிதானமாகவும் பொறுமையாகவும்
சொன்ன ஆர்.கே.எஸ். நாற்காலியை விட்டு எழுந்து நின்றுகொண்டு, “நான்
கிளம்பறன். என்னோட தொகுதி ஆளுங்க வீட்டுல வந்து காத்துக்கிட்டு இருக்காங்க.
ஓட்டுப் போடுறதுக்கு இன்னம் நாலு நாள்தான் இருக்கு. ஓட்டு எண்ணுறதுக்கு ஆறு நாள்
இருக்கு. ஆக மொத்தம் பத்து நாள்தான். அப்பறம் மந்திரியாயிடுவன். யாருக்கு என்ன
வேணுமோ, வாங்க செய்றன். சொன்னா செய்வன்னு ஒங்களுக்கெல்லாம் தெரியும்" என்று சொல்லிவிட்டுக் கூட்டத்தைப் பார்த்துக் கும்பிட்டார். உடனே தரையில் உட்கார்ந்திருந்த மொத்தக்
கூட்டமும் எழுந்து நின்று கும்பிட்டது.
"மத்த தொகுதி எப்பிடியோ. ஒங்க தொகுதிய
பொறுத்தவர எந்தக் கட்சியில் இருந்தாலும் நம்பாளுங்க எல்லாரும்
ஒட்டுமொத்தமா ஒங்களுக்குத்தாண்ணே போடுவாங்க. நாங்க தனியா நின்னாலும் ஒங்க
தொகுதியில மட்டும் பேருக்குத்தாண்ணே பிரச்சாரம் செய்வம்" என்று சொன்ன சுரேஷ், ஆர்.கே.எஸ்.ஸின் பக்கத்தில்
போய் நின்றுகொண்டு ரகசியம்போல, "நம்ப தலைவர்கிட்டயும் ஒரு வார்த்த
போன்ல பேசிட்டிங்கின்னா நல்லா இருக்கும்ண்ணே"
என்று பணிவாகச் சொன்னான்.
"போன வாரமே பேசிட்டன். ஜெயிச்சி
மந்திரியா வான்னு ஆசீர்வாதம்
பண்ணிட்டாரு. முதல் ஆசீர்வாதமே ஒனக்குத்தாண்ணு சொல்லிட்டாரு" என்று சொன்ன ஆர்.கே.எஸ். சுரேஷை எச்சரிக்கை செய்வதுபோல் "தலைவர பொறுத்தவர எனக்கு சரியாத்தான் இருக்காரு. நீங்க
சரியா இருந்தா போதும்" என்று சொன்னார். பிறகு கூட்டத்தைப்
பார்த்து. ”மாவட்டத்தில நிக்குற மத்த ஏழு பேரும் புது ஆளுங்க. அவனுங்களால பிரச்சன
வராது. வந்தா இவனால மட்டும்தான் வரும். பாத்துச் செய்ங்க" என்று
சொல்லிவிட்டு மீண்டும் கூட்டத்தைப் பார்த்துக் கும்பிட்டார். இரண்டு மூன்றடி தூரம்
வந்தவருக்கு என்ன தோன்றியதோ, நின்று கூட்டத்தைப் பார்த்து "நான் கிளம்பறன். மத்தத விவரமா முருகன் சொல்வான். நான் போனதும் ஒங்க
எல்லாரயும் பாப்பான்" என்று சொல்லிவிட்டு மாடியிலிருந்து
கீழே இறங்க ஆரம்பித்தார். அவரோடு முருகன், தனபால், பத்து இருபது பேர் கொண்ட கூட்டம்,
எல்லாம் கீழே இறங்கியது.
ஆர்.கே.எஸ். கூப்பிடுவதாகச் சொல்லி தனபால் மாடிக்கு வந்து
மஞ்சுளாவை அழைத்துக்கொண்டு போனான்.
மாடியிலிருந்த
கூட்டம் முருகன் மேலே வருவதற்காகக்
காத்திருக்காமல் ஒவ்வொருவராகக்
கீழே இறங்க ஆரம்பித்தனர். கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த முருகேசனும்,
ஆசைத்தம்பியும் கீழே இறங்குவதா, முருகன் மேலே வரும்வரை மாடியிலேயே இருப்பதா என்று
தெரியாமல் குழப்பத்தில் நின்றுகொண்டிருந்தனர். ஆர்.கே.எஸ். போய்விட்டாரா என்று
பார்த்துவிட்டு சிகரெட்
ஒன்றைப் பற்றவைத்தார் முருகேசன், "எனக்கொண்ணு கொடு"
என்று கேட்டு சிகரட்டைப்
பற்ற வைத்த ஆசைத்தம்பி. "இப்பிடி
வா" என்று சொல்லி மாடியின் மூலைக்குச் சென்றார். அவருடன் முருகேசனும் சென்றார்.
"என்னப்பா அமைச்சர் இப்பிடி
நெனைக்கிறாரு?" என்று ஆசைத்தம்பி கேட்டார். சுற்றுமுற்றும்
பார்த்தார். பக்கத்தில் ஆளில்லை என்பது தெரிந்ததும் "மெதுவா"
என்று முருகேசன் சொன்னார்.
"கட்சிக்காரனே கட்சிக்காரனத் தோக்கடிக்கிற அதிசயம் நம்ப கட்சியில
மட்டும்தான் நடக்கும்.”
"மெதுவாப் பேசு. யார் காதிலயாவது விழப்போவுது" என்று சொன்ன முருகேசன் குசுகுசுவென்று, "எனக்குத் தெரிஞ்சி இருவத்தியெட்டு வருஷமா
கட்சியில இருக்கான். இவரோட நிழலாவே இருந்திருக்கான். “அப்படிப்பட்டவன நாலாவது முறயும் தோக்கடிக்கிறது
பாமில்லியா?" என்று சொன்ன முருகேசன் பக்கத்தில் யாராவது
வருகிறார்களா என்று பார்த்தார். பிறகு சிகரெட்டைத் தரையில் போட்டுக் காலால் தேய்த்து அணைத்தார். மாடியிலிருந்த
ஆட்கள் படிப்படியாகக்
கீழே இறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு "கீழ போவலாமா?"
என்று கேட்டார். அதற்குப் பதில் சொல்லாமல் "இருபத்தியெட்டு
வருஷமா மாவட்டச் செயலாளரு. ரெண்டு முற மந்திரி, ஒரு முற எம்.எல்.ஏ. மூணாவது முறயா மந்திரி ஆவப்போறாரு, அவரோட மனசு எப்பிடி
இருக்கு பாத்தியா?" என்று ஆசைத்தம்பி கேட்டார்.
"முன்னால நிக்குறவன இடிச்சித் தள்ளிப்புட்டு
பின்னால நிக்குறவன் முன்னால போயி நிக்குறதுதான் அரசியல். அவரு எடத்தில நீ
இருந்தாலும் இதத்தான் செய்வ. நான் இருந்தாலும் இதத்தான் செய்வன்" என்று ரகசியமான குரலில் சொன்னார் முருகேசன்.
"மாவட்டச் செயலாளரே இப்பிடி செஞ்சா கட்சி எப்பிடி
ஆட்சிக்கு வரும்?" என்று கேட்டார் ஆசைத்தம்பி.
"வரும். நீ கொஞ்சம் பேசாம இரு. எந்த
எடத்தில நின்னுக்கிட்டு என்னா பேசுற? தமிழ்நாடு முழுக்க மாவட்டச் செயலாளரா இருக்கவன், மந்திரியா இருந்தவன்
எல்லாம் மாவட்டத்தில வேற எவனும் தலய தூக்கக் கூடாதுன்னு இப்பிடித்தான் செய்றாங்க" என்று சொன்னார்.
"நம்ப கட்சியில மட்டும்தான் இப்படி
செய்ய முடியும்."
"எல்லாக் கட்சியிலியுந்தான் நடக்குது.
நீ வாயக் கீய வெளிய வுடாத. கட்சியில கட்டம் கட்டிப்புடுவாரு" என்று சொன்ன முருகேசன். "மாவட்டச் செயலாளரு. மந்திரியா இருந்தவரு. மந்திரியா
ஆவப்போறவரு. நல்லது கெட்டது செஞ்சவரு.
எல்லாத்துக்கும் மேல சாதிக்காரரு. நம்பாளுக்கு ஒண்ணுன்னா வுட்டுக் கொடுத்திட முடியுமா?" என்று கேட்ட முருகேசன் கீழே இறங்குவதற்கான
படியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவருடன் ஆசைத்தம்பியும் போனார்.
உயிர்மை
ஆகஸ்ட் 2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக