புதன், 18 ஜூலை, 2018

பணியாரக்காரம்மா - இமையம் (சிறுகதை)


பணியாரக்காரம்மா - இமையம்
  -1-
"யார் வீட்டுல?" என்ற குரல்கேட்டு வாசலுக்கு வந்தாள் நாகம்மா. கண்ணன் செட்டியார் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து திகைத்துப்போய் அதிசயம்போல வாயில் கையை வைத்தாள். "என்ன செட்டியார?" என்று கேட்பதற்குகூட அவளுக்கு மறந்துபோய் விட்டது.
        நாகம்மாவுக்கு தெரிந்து கண்ணன் ஊரில் யாருடைய வீட்டிற்கும் போனதில்லை. வீடும் கடையும் ஒன்று என்பதால் அதிகமாக கடைக்குவெளியே வந்துகூட நிற்க மாட்டார். உள்ளூரில் தவிர்க்க முடியாத கல்யாணம் என்றால்தான் போவார். போனாலும் போன வேகத்திலேயே மொய் கவரை கொடுத்துவிட்டு வந்துவிடுவார். "சாப்பிட்டு போங்க" என்று சொன்னால் "வயிறு சரியில்ல" என்று சொல்லிவிட்டு வந்துவிடுவார். அப்படிப்பட்டவர் தன்னுடைய வீட்டிற்கு எதற்காக வந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்ட நாகம்மா "என்னா செட்டியார இம்மாம் தூரம்?" என்று கேட்டாள்.
"வரக் கூடாதா?"
"செட்டிவந்து என் ஊட்டு வாசப்படியில நிக்கிறத பாத்து வானம் இடிஞ்சி விழுந்திடப்போவுது" என்று சொல்லிவிட்டு கிண்டலாகச் சிரித்தாள்.
"ஒரு வாத்த சொல்லணும்."
"ஆள் வுட்டிருந்தா நானே வந்திருக்க மாட்டனா? அதுக்காக செட்டியாரு இம்மாம் தூரம் வரணுமா?"
கண்ணன் எதுவும் பேசாமல் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த நாகம்மா "அதிசயம்தான். நீ என் ஊட்டு முன்னால நிக்கிறத பாத்தா கடலே வத்திப்புடும்" என்று சொல்லி சிரித்தாள். பிறகு "செட்டியாரு என் ஊட்டுக்குள்ளார வந்தா தீட்டாவாதில்ல?" என்று கேட்டாள்.
        கண்ணன் வீட்டிற்குள் வந்தார். பாயை எடுத்துப்போடவில்லை. உட்கார் என்று சொல்லவில்லை. தண்ணீர் வேண்டுமா என்று கேட்கவில்லை. கூட்டுகிறேன் பிறகு உட்கார் என்று சொல்லவில்லை. கண்ணனைப் பார்ப்பதும், சிரிப்பதுமாக இருந்தாள்.
"உட்காரு" என்று கண்ணன் பலமுறை சொல்லிவிட்டார். நாகம்மா உட்காரவில்லை. நின்றுகொண்டேயிருந்தாள். தன்னுடைய வீட்டிற்கு நாகம்மா வந்திருப்பதுபோல "உட்கார்" என்று அவர்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். ரொம்பவும் கட்டாயப்படுத்திய பிறகுதான் உட்கார்ந்தாள். அவளுக்கு ஒரே சிரிப்பாக இருந்தது. சந்தோஷமாக இருந்தது. ஆனால் என்ன பேசுவது என்பது மட்டும்தான் தெரியாமலிருந்தது.
        கண்ணன் தரையைப் பார்த்தபடி, கையில் வைத்திருந்த மஞ்சள் நிறப் பையைப் பார்த்தபடி இருந்தார். நாகம்மா கண்ணனை இதுவரை பார்க்காத ஆளைப் பார்ப்பதுபோல் பார்த்துக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் கழித்து கேட்டாள். "வந்தது என்னா செட்டியார?" ஒரு முறை அல்ல. பலமுறை கேட்டாள். திரும்பத்திரும்ப கேட்டாள். கட்டாயப்படுத்தியும், வற்புறுத்தியும் கேட்டாள். அப்படியும்  வாயைத்திறக்கவில்லை.
        கண்ணன் சாதாரணமாக அதிகமாக பேச மாட்டார். பேசுவதையும் சத்தமாகப் பேச மாட்டார். கடைக்கு வருபவர்களிடம்கூட "என்னா வேணும்?" என்று தானாக கேட்க மாட்டார். பொருள் வாங்குவதற்காக வந்திருப்பவர் ஒவ்வொரு பொருளாக சொல்லச்சொல்ல ஒரு காகிதத்தில் எழுதிக்கொண்டு "அப்பறம்?" என்று கேட்பார். அதனால் அவருக்கு ஊருக்குள் "ஊமைச் செட்டி" என்ற பெயர் இருந்தது. கண்ணனுக்கு நேரெதிர் நாகம்மா நிதானமாக,பொறுமையாக, சத்தமில்லாமல் அவளுக்குப் பேசவே வராது. முன்பின் தெரியாத ஆளிடம்கூட சத்தமாகவும், சளசளவென்றும் பேசுவாள். அதனால் அவளுக்குகல்யாண மேளம்என்று பெயர் இருந்தது. அப்படிப்பட்டவளுக்கே இப்போது வாய் பூட்டிக்கொண்டதுபோல் இருந்தது.
"யே ஆயாவ்" என்று கூப்பிட்டுக்கொண்டே வீட்டிற்குள் வந்த காவியா கண்ணன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து குழம்பிப்போனவளாய் நாகம்மாவைப் பார்த்தாள். தானாகவே தண்ணீர் மொண்டு குடித்தாள். கண்ணனையும், நாகம்மாவையும் மாறிமாறிப் பார்த்தாள். அப்போதும் நாகம்மா வாயத்திறந்து பேசாததால் பின் வாசல் வழியே வெளியே போனாள்.
"ஊட்டுல ஆளிருக்கா?"
"இல்ல."
கண்ணன் முன்புபோலவே அமைதியாகிவிட்டதைப் பார்த்த நாகம்மா "செட்டியார் வந்தது என்ன?" என்று கேட்டாள்.
        கண்ணன் தனக்குப் பக்கத்தில் இருக்கிற ஆளுக்குக்கூட கேட்காத தணிந்த குரலில் சொன்னார் "ஒங்கூட ஒரு நாள் இருக்கணும்."
        நாகம்மா கண்ணனை ஆச்சரியமாகவும் பார்த்தாள். சட்டென்று உடம்பு சூடாயிற்று. மறுநொடியே குளிர்ந்துப்போயிற்று. அச்சொல் சுமக்க முடியாத பெரும் பாரம்போல இருந்தது. சந்தோஷம் என்றும் வருத்தம் என்றும் சொல்ல முடியாத ஒன்று அவளுக்குள் உண்டாயிற்று. இப்போது கண்ணனை நேருக்குநேராக மட்டுமல்ல, ஓரக்கண்ணால்கூட பார்க்க முடியவில்லை. பதட்டமும், படபடப்பும் உண்டாயிற்று. திருடிவிட்டு மாட்டிக்கொண்டதுபோல நெஞ்சுத் துடிப்பு வேகமாயிற்று. கண்களை மூடிக்கொண்டாள். வியர்த்த்து. கண்களை திறந்துப்பார்ப்பதற்குக்கூட தெம்பற்றவளாக உட்கார்ந்திருந்தாள். கண்ணன் சொன்ன வார்த்தை அவளுடைய மனதின், உடலின் இயல்பையே மாற்றிவிட்டது. "சொன்னதை இன்னொரு வாட்டி சொல்லு" என்று கேட்கவேண்டும் என்ற எண்ணம் மனம் முழுவதும் நிறைந்திருந்தது. ஆனால் வாயைத்திறந்து கேட்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்துத்தான் அவளால் வாயை அசைக்க முடிந்தது. கண்களைத் திறக்க முடிந்தது. காதோடு காதாக கேட்பதுபோல நாகம்மா கேட்டாள். "மனம் நெறஞ்சிதான் சொல்றியா செட்டி?"
"ஆமாம்" என்பதுபோல கண்ணன் லேசாக தலையை மட்டும் ஆட்டினார்.
"வேற என்னலாம் ஒம் மனசில  இருக்கு?"
"அதுமட்டும்தான்."
"கடவுள் சத்தியமா?"
"ஏழுமலயான்மேல ஆண." கண்ணன் சொன்னதும் பட்டென்று நாகம்மாவின் கண்கள் கலங்கிவிட்டன. கோபித்துக்கொண்டதுபோல "நான் அம்மாம் நம்பிக்க அத்தவளா? எதுக்கு கடவுள்மேல சத்தியம் செய்யணும்?" என்று கேட்டாள். அழுகையை மறைப்பதற்காக முந்தானையால் கண்களைத் துடைத்தாள். மூக்கை உறிஞ்சினாள். தரையையேப் பார்த்தவாறு இருந்தாள். ஆள்காட்டிவிரலால் தரையில் கோடுகிழிப்பதுபோல் பலமுறை கிழித்தாள். பிறகு மனம் கசந்துபோய் "ஒங் டைக்கும், என் ஊட்டுக்குமிடயில இருபதுமுப்பது ஊடு இருக்குமா?. இருவது ஊட்ட தாண்டிவர செட்டிக்கி இத்தன வருஷமாச்சா?" என்று கேட்டாள். கண்ணன் பதில் பேசவில்லை. நாகம்மாவை பார்க்கவுமில்லை. தன்னுடைய மளிகைக்கடையில் எப்படி உட்கார்ந்திருப்பாரோ அதே மாதிரிதான் இப்போதும் உட்கார்ந்திருந்தார்.
"இந்த வாத்தய சொல்ல செட்டிக்கி முப்பது முப்பத்தஞ்சி வருஷம் தேவப்பட்டுச்சா?" என்று அதிகாரத் தோரணையில் கேட்டாள். கண்ணன் வாயைத்திறக்காததால் ரொம்பவும் சலித்துப்போன குரலில் "நான் இப்ப கிழவி செட்டியார" என்று சொன்னாள். சட்டென்று அவளுக்கு அழுகை வந்துவிட்டது. கண்ணன் எதிரில் உட்கார்ந்திருக்காவிட்டால் வாய்விட்டு அழுதிருப்பாள். பொங்கிக்கொண்டு வந்த அழுகையை அடக்கமுடியாமல் உட்கார்ந்திருந்தாள். கண்ணீரை மறைப்பதற்காகத் தரையைப்பார்த்தாள். பொட்டுபொட்டா தரையில் விழுந்தது கண்ணீர் துளிகள்.
"ஒங் டைக்கிப் பக்கத்தில் எங்க ஆயாகூட நான் பணியாரம் விக்க வந்தப்ப எனக்கு பன்னண்டு வயசு. அப்ப செட்டிக்கி பதனஞ்சி பதனாறு இருக்குமா? இத்தினி வருஷமா இல்லாம இன்னிக்கித்தான் செட்டிக்கி நெனப்பெடுத்துக்கிச்சா?" என்று காட்டமாகக்  கேட்டாள்.
"அப்பயிலிருந்து மனசுல இருந்துச்சி." தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோல சொன்னார் கண்ணன்.
"நரச்சிப்போன கிழவியானப்பறம்தான் சொல்ல முடிஞ்சிதாக்கும்" சீண்டுவதுபோல் கேட்டாள்.
"ஒம் மனசில இல்லியா?" கண்ணன் கேட்டதும் நாகம்மாவுக்குக் கோபம் வந்துவிட்டது. "நான் பொட்டச்சி" என்று கொஞ்சம் சத்தமாகச் சொன்னாள். பிறகு குரலைத் தாழ்த்திக்கொண்டு நொந்துபோன குரலில் "சோத்துக்கில்லாதவ. தெருவுல பணியாரம் விக்கிறவ." என்று சொல்லிவிட்டு அழுதாள். எதற்காக அழுகிறாய் என்று கண்ணன் கேட்கவில்லை, அழாதே என்றும் சொல்லவில்லை. நாகம்மா அழுவதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் உட்கார்ந்திருந்தார்.
"இன்னிக்கிம் காரியமாத்தான் வந்திருக்கிற? செட்டிப் புடுக்கு சும்மா ஆடாதின்னு ஊர்ல சும்மாவா சொல்றாங்க?"
கண்ணன் எதுவும் பேசவில்லை. நாகம்மா கண்ணனை நேருக்குநேராகப் பார்த்தாள். கோபமான குரலா, வருத்தமான குரலா என்று கண்டுபிடிக்க முடியாத குரலில் "எனக்கு நல்லது செய்ய வந்தியா, எந் தலயில நெருப்பள்ளி கொட்ட வந்தியா செட்டியார?" என்று கேட்டாள்.
"........"
"பணியாரம் வித்து எதுக்கு வயித்த கழுவிக்கிட்டிருக்கா அதுல மண்ண அள்ளிப் போட்டுட்டுப் போவலாம்ன்னு வந்திருக்கப்போல இருக்கு" என்று சொன்ன நாகம்மா கண்ணனை கவனமாகப் பார்த்தாள். பிறகு நிதானமாக "நீ சாதாரண செட்டியில்ல. காரியக்கார செட்டிதான்" என்று ஏளனக்குரலில் சொன்னாள்.
"உள்ளதத்தான் சொன்னன்" கண்ணன் முனகினார்.
"உள்ளத நான் செத்தப்பறம் சொல்ல வேண்டியதுதான? செட்டிக்கி பணத்தப் பத்தி மட்டும்தான் கவல. அக்கற. என் நெஞ்சு பணியார சட்டி மாதிரி எப்பிடி தீஞ்சீப்போயி கெடக்குன்னு தெரியுமா?" கோபமாகக்  கேட்டாள்.
"நீதான் பெரிய வாய்க்காரியாச்சே."
"நான் செட்டிச்சியா?"
"செட்டிச்சிய கட்டியும் ஒண்ணுமில்லியே" என்று சொன்ன கண்ணன் கையில் வைத்திருந்த பையை தரையில் வைத்தார். நாகம்மாவைப் பார்க்கக் கூடாதென்பதுபோல் உட்கார்ந்திருந்தார். ஆனால் நாகம்மா  அவரை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவர் சொன்னதை நம்ப முடியாதவளாக உட்கார்ந்திருந்தாள். அவளுடைய அழுகை, கோபம், சட்டென்று தணிந்திருந்தது. வைத்தகண் வாங்காமல் கண்ணனையே பார்த்துக்கொண்டிருந்த நாகம்மா "என்னா செட்டியார சொல்ற?" என்று சந்தேகத்தோடு கேட்டாள்.
"சேந்திருந்தா புள்ள பொறந்திருக்கும்ல."
"இத்தினி வருஷமாவா?"
"தொட்டதில்ல."
        நாகம்மாவுக்குக் கோபம் வந்துவிட்டது. தன்னுடைய வாழ்நாளிலேயே முதன்முதலாக கண்ணனை வெறுப்புடன் பார்த்தாள். இவனெல்லாம் ஒரு ஆளா என்று நினைத்தாள். மனம் நிறைந்த வெறுப்புடன் "செட்டி இம்மாம் பெரிய கொலகாரனா இருப்பன்னு நான் எண்ணலியே. செட்டிச்சியோட பாவம் ஒன்னெ ஏழேழு ஜென்மத்துக்கும் சும்மா வுடாது" சாபமிடுவதுபோல் சொன்னாள்.
"நான் காசிக்குப்போறன்."
"நீ காசிக்குத்தான் போ ராமேஸ்வரத்துக்குத்தான் போ. செட்டிச்சியோட சாவம் ஒம் பொணம் எரியுறமுட்டும் வுடாது. ஒன்னெப்போயி நல்ல செட்டின்னு எண்ணிட்டனே."
".........."
"ஒருத்திக்கி தாலியகட்டிக்கொண்டாந்து ஊட்டுல வச்சிக்கிட்டு முப்பது வருஷமா தொடாம வச்சி நாசம் பண்ணிட்டியே. செட்டி செய்யுற வேலயா இது? அந்த பொம்பள ஒரு சொட்டு கண்ணீர்வுட்டா ஒங் கொலமே நாசமத்துப்போயிடுமே" ஆங்காரத்தோடு கேட்டாள்.
"போயிடிச்சி" அடங்கின குரலில் கண்ணன் சொன்னார்.
"எதனால இப்பிடி செஞ்ச?" சண்டைக்காரனிடம் கேட்பதுபோல வெறுப்புடன் கேட்டாள்.
"ஒன்னாலதான்."
"என்னாலியா?" நம்முடியாமல் திரும்பத்திரும்ப கேட்டாள். கண்ணன் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து தன்மையான குரலில் மீண்டும் கேட்டாள். "என்னாலியா?"
கண்ணன் வாயைத்திறக்கவில்லை.
நீ செஞ்ச பாவம் தண்ணியில கரச்சாலும் கரையாது. நெருப்புல எரிச்சாலும் எரியாது செட்டியாரநாகம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
“என்ன?” என்பதுபோல் தலையைத் தூக்கிப் பார்த்தார் கண்ணன்.
“ஒண்ணுமில்ல” என்பதுபோல் தலையை மட்டும் ஆட்டினாள் நாகம்மா.
        புருஷன் பெண்டாட்டி சண்டையில் நாகம்மாவின் அம்மா வெள்ளையம்மா தூக்குமாட்டிக்கொண்டு செத்துவிட்டாள். அப்போது நாகம்மாவுக்கு பதினோரு வயது. அவளுடைய அண்ணனுக்கு பதினாறு வயது. நாகம்மாவின் அப்பா வீரமுத்து இரண்டாம் கல்யாணம் கட்டிக்கொண்டதும், "நான் வளத்துக்கிறன்" என்று சொல்லி வெள்ளையம்மாவின் அம்மா சின்னம்மா, நாகம்மாவையும், செல்லமுத்துவையும் அழைத்துகொண்டு வந்துவிட்டாள். ஊரிலுள்ள மற்ற பெண்களைப்போல காட்டுவேலைக்குப் போகாமல், பசுமாடு வைத்து பால் கறந்து ஊற்றாமல் பணியாரக்கடை வைத்தாள். ஊரில் நான்கு தெருகூடுகிற, பஸ்வந்து நின்று செல்கிற, தேரை நிறுத்தியிருக்கிற இடத்திற்கு பக்கத்தில்தான் ராமன் செட்டியின் மளிகைக்கடை இருந்தது. கடையின் சுவரை ஒட்டிதான் சின்னம்மா பணியாரம் விற்றாள். காலை ஆறுமணிக்கு பணியாரக் கூடையை தூக்கிக்கொண்டுபோய் பணியாரம் விற்க ஆரம்பிப்பாள். பணியாரம் விற்றுத்தீர பதினோரு, பனிரெண்டு மணியாகிவிடும். சின்னம்மாவுக்கு ஒத்தாசையாக தினமும் நாகம்மாவும் பணியாரம் விற்பதற்குப் போவாள். ராமன் சாப்பிடப்போகிற நேரத்தில், வெளியூர்போகிற நேரத்தில் மட்டும் கண்ணன் கடையில் உட்காருவான். ராமன் செட்டி செத்த பிறகு கண்ணன்தான் முழுநேரமும் கடையில் வியாபாரம் பார்க்க ஆரம்பித்தான். ராமன் செட்டிக்கு ஒரே பிள்ளை கண்ணன் மட்டும்தான்.
        நாகம்மாவுக்கு அவளுடைய இருபத்தி இரண்டாவது வயதில் கல்யாணம் நடந்தது. கல்யாணமான மூன்றாம் நாளே "குடிகாரன்கூட நானிருந்து வாழ மாட்டன்" என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாள். அவளுடைய புருஷன்வந்து அடித்து, உதைத்து, ஊர்ப்பஞ்சாயத்து வைத்து கூப்பிட்டுப் பார்த்தான். கடைசிவரை பிடிவாதமாக போக மாட்டேன் என்று வீம்பு பிடித்ததால் அடுத்த மாதமே அவன் மறுகல்யாணம் கட்டிக்கொண்டான். விட்டது சனியன் என்று இருந்த நாகம்மாவிடம், அவளுடைய அண்ணனும், ஆயாவும் மறுகல்யாணம் கட்டிக்கொள்ள கட்டாயப்படுத்திப் பார்த்தார்கள். அவள் கேட்கவில்லை.  ஊரிலிருந்தவர்கள் "குமரியா இருக்கும்போதே ஒரு பயல புடிச்சிக்க. கிழவியாயிட்டா ஒரு பய சீந்திப்பாக்க மாட்டான்" என்று எவ்வளவோ சொன்னார்கள். யாருடைய பேச்சையும் கேட்கவில்லை. மறுகல்யாணம் கட்டிக்கொள்கிறேன் என்று இரண்டு மூன்று பேர் வந்து எவ்வளவோ கேட்டுப் பார்த்தார்கள். “ரெண்டாம் தாராமா போயி ஒரு குடும்பத்திலிருந்து என்னால வாழ்க்க செய்ய முடியாதுஎன்று ஒரே தீர்னானமாகச் சொல்லிவிட்டாள். சின்னம்மா செத்தபிறகும் பணியாரம் விற்பதை மட்டும் நிறுத்தவில்லை. பணியாரக்காரம்மா பேத்தி என்று இருந்த பெயர் பிறகு, பணியாரக்காரப்பொண்ணு என்று மாறி இப்போது பணியாரக்காரம்மா என்றாகிவிட்டது.
"எதுக்கு ஊர் ஆம்பளயெல்லாம் வந்துபோற தேர்முட்டியிலப்போயி பணியாரம் வித்துக்கிட்டு கெடக்கிற?" என்று யாராவது கேட்டால் ஒரே வார்த்தையாக "எனக்கு வெயிலு ஆவாது" என்று சொல்லிவிடுவாள்.
        சின்னம்மாவுடன் பணியாரம் விற்பதற்காக என்று போனாளோ அதிலிருந்து கண்ணனைப் பார்ப்பது அவளுக்கு ஒரு வேடிக்கை. சின்னம்மா செத்த பிறகு அவள் காய்ச்சல், தலைவலி என்று ஒருநாளும் வீட்டில் படுத்திருந்ததில்லை.  அபூர்வமாக  வெளியூருக்கு கல்யாணம், விசேஷம் என்று போனாலும் வியாபாரத்தை முடித்துக்கொண்டுதான் போவாள். போனாலும் கண்ணன் கடையை மூடுவதற்குள் வந்துவிடுவாள். பதினோரு, பனிரெண்டு மணிக்கு பணியாரத்தை விற்றுவிட்டு வீட்டிற்கு கிளம்பும்போதே மறுநாளுக்குத் தேவையான, அரிசி, உளுந்து, பருப்பு, எண்ணெய், கடுகு, வெந்தயம், சோம்பு, கருவேப்பிலை, பச்சைமிளகாய் என்று வாங்கிக்கொண்டு வர மாட்டாள். கடை மூடுகிற நேரமாகத்தான் போவாள். கண்ணனும் நாகம்மா வந்த பிறகு கடையை மூடிக்கொள்ளலாம் என்பதுபோல்தான் உட்கார்ந்திருப்பார். "கடய மூடுறப்பதான் வருவியா" என்று கண்ணன் ஒருநாளும் கேட்டதில்லை. "கடய மூடாம எதுக்கு செட்டியார இன்னமுட்டும் குந்தியிருந்த?" என்று நாகம்மாவும் கேட்டதில்லை. "வரட்டும்" என்று கண்ணன் உட்கார்ந்திருப்பார். "குந்தியிருக்கட்டும்" என்று நாகம்மா வருவாள். கண்ணன் தனி பொறுப்பாக கடையை நடத்த ஆரம்பித்ததிலிருந்து நேற்றிரவுவரை இருவருக்கும் இதுதான் வாடிக்கை.
நாகம்மா பணியாரம் விற்கும்போது உள்ளுர் ஆட்கள், வெளியூர் ஆட்கள் என்று எல்லாரிடமும் சகஜமாகப் பேசுவாள். சிரிப்பாள். வாயடிப்பாள். ஆனால் மளிகைக்கடைக்கு வந்து ஒரு பெண் கண்ணனிடம் இரண்டு வார்த்தை கூடுதலாகப் பேசிவிட்டதுபோல் தெரிந்தால்போதும், பணியாரம் விற்பதை அப்படியே போட்டுவிட்டுப்போய் "என்னா இன்னிக்கி செட்டி ரொம்ப குஷாலா இருக்காரு?" என்று கேட்டு சீண்டுவாள். பணியாரத்தில் ஈ உட்காருகிறதா, சட்டினியில் ஈ உட்காருகிறதா, தூசுப்படுகிறதா, பணியாரம் விற்காமல் இருக்கிறதா என்று பார்ப்பதைவிட கண்ணன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று பார்ப்பதில்தான் அவளுடைய கவனமெல்லாம் இருக்கும். கண்ணனுக்கு கல்யாணமான புதிதில் சரியான நேரத்தில் அவர் வந்து கடையை திறந்தால்கூட தாமதமாக திறந்ததுபோல் நாகம்மாவுக்குத் தோன்றும். "என்னா செட்டிக்கி புதுப்பெண்டாட்டியோட மயக்கம் இன்னம் தீரலயாக்கும்" என்று கேட்பாள். பொருள் வாங்க, சொந்தக்காரார்கள் கல்யாணத்திற்கு, விசேஷத்திற்கு என்று வெளியூர் போய் ஒருநாள் தங்கிவிட்டு மறுநாள் வந்தால் "என்னா செட்டிக்கு சுத்துப்பிரயாணம் இன்னிக்கித்தான் முடிஞ்சிதா? இன்னமும் இருக்கா?" என்று கேட்பாள். வெயில் காலத்தில் எப்போதாவது உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிவிட்டார் என்றால் "பட்டப்பகல்லியே எவள நெனச்சிக்கிட்டு கண்ண மூடிக்கிட்டு குந்தியிருக்க?" என்று கேட்பாள். நாகம்மா மட்டும்தான் நேரிலேயே ஒருமையில் ‘என்னா செட்டி?’ என்று கேட்பாள். நாகம்மா எதைக் கேட்டாலும் கண்ணன் வாயைத்திறக்கவே மாட்டார்.
        அம்மாவோடு, அப்பாவோடு அழுதுகொண்டு எந்தப் பிள்ளையாவதுபோனால் தானாகவே கூப்பிட்டு ஒரு பணியாரத்தைக் கையில் கொடுத்து அனுப்புவாள். அவ்வாறு கொடுக்கும்போது மட்டும் கூப்பிட்டு "இப்பிடியிருந்தா எப்பிடி பொழைப்ப?" என்று ஒரே ஒரு வார்த்தை மட்டும்தான் கேட்பார். அதுகூட பிறருக்குத் தெரிந்துவிடக் கூடாது, பிறருக்கு கேட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தோடுதான் கேட்பார். "நான் என்ன செட்டியா? செட்டி மாதிரி நான் காச சேத்துவைக்கவாப் போறன்?" என்று கேட்டு வம்பிழுப்பாள். நாகம்மா எவ்வளவுதான் கிண்டல், கேலிசெய்தாலும், சீண்டுவதுபோல பேசினாலும் தனக்கு காதுகேட்காது என்பதுபோல்தான் உட்கார்ந்திருப்பார். பெரிய பாராங்கல்லைத் தூக்கிப்போட்டாலும் தன்மேல் தூசுதான் விழுந்தது என்பதுபோல் உட்கார்ந்திருப்பது கண்ணனின் இயல்பு. இப்போதும் அப்படித்தான் உட்கார்ந்திருந்தார்.
        நாகம்மாவுக்கு கண்கள் கலங்கின. என்ன இப்படி இருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டுப்போனாள். செட்டியார்கள் இப்படி இருக்க மாட்டார்களே என்று சந்தேகப்பட்டாள். கண்ணனுக்குக் குழந்தை இல்லை என்பது அவளுக்குத் தெரியும். அவருடைய மனைவியின் தங்கை மகனை அழைத்துவந்து சுவீகாரம் எடுத்துகொண்டு வளர்த்தார் என்பதும், அவனுக்கு ஆறு மாதத்திற்கு முன்புதான் கல்யாணம் நடந்தது என்பதும் தெரியும். தன்னால்தான் கண்ணன் இப்படி செய்தாரா என்று நினைக்கநினைக்க அவளுக்கு உட்கார்ந்திருக்க முடியவில்லை. வாய்விட்டு அழவேண்டும்போல இருந்தது. கண்கலங்கியபடியே "செட்டி செஞ்சது சரியா?" என்று கேட்டாள். அவர் எதுவும் சொல்லாததால் அடுத்த கேள்வியாக "இப்பிடி செய்யலாமா?" என்று கேட்டாள்.
"நீ ஏன் புருஷன் வாணாமின்னு வந்த?"
"செட்டி என் நெஞ்சில கல்லாட்டம் குந்தியிருக்கயில நான் இன்னொருத்தன்கூட படுக்கவா?" என்று கோபத்தோடு கேட்டாள்.
"செட்டியும் மனுஷன்தா?" என்று கண்ணன் கேட்டதும் நாகம்மாவுக்கு பட்டென்று கண்கள் கலங்கிவிட்டன. அழுகையை மறைப்பதற்காக முந்தானையால் முகத்தைத் துடைத்தாள்.
இத்தினி வருஷமா இல்லாம இன்னிக்கி வந்து பாவத்த செஞ்சிப்புட்டு போவலாமின்னு வந்திருக்கிற போல இருக்கு.என்று சொன்னாள். சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டுஒரே தீர்மானம்தானா? மாத்தமில்லியா?” என்று கேட்டாள். கண்ணன் பதில் பேசவில்லை. “ஆட்ட வெட்ட கத்தியத் தூக்கிக்கிட்டு நிக்கிறாப்ல திடுதிப்புன்னு வந்து நின்னா என்னா அர்த்தம்?” என்று கேட்டாள். நீ எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்டுக்கொள். எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் கண்ணன் உட்கார்ந்திருந்தார்.
“நேத்துவர என் நெஞ்சில பாரமில்ல. ஒரு வாத்தய சொல்லி இப்பப் பாரத்த ஏத்திப்புட்ட.”
“-------”
“என்னெதான் செட்டியாருக்குத் தெரியும். எம் மனச தெரியாது. கல்லு செட்டியார.”
”-------”
“கடன்காரன் மாதிரிவந்து ஊட்டுல குந்தியிருக்கிற. நான் என்ன செய்யணும்?”
”-------”
“நெனப்பெடுத்த காரியம் முடியணும். அப்பறந்தான் குந்த முடியும் ஆம்பளக்கி”
“-------”
“பயமா இருக்கு. திகிலா இருக்கு செட்டியார” என்று சொன்னாள். அவள் சொன்னது அவளுக்கே கேட்கவில்லை. அழுகை வந்தது. பயம் வந்தது. ”நேரம் காலம் வாணாமா?என்று கெஞ்சுவது போல் கேட்டாள்.
காசிக்குப் போறன்.
ரகசியம் கேட்பதுபோல "செட்டி ஒவ்வொரு அடியயும் முகூர்த்தம் பாத்துதான வச்சிருப்ப?" என்று கேட்டாள். கண்ணன் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் விரலால் தரையில் கோடு கிழித்தாள். தலையைக் கவிழ்த்படியே உட்கார்ந்திருந்தாள். என்ன நினைத்தாளோ எழுந்து "தலயில ஒரு சொம்பு தண்ணிய ஊத்திக்கிட்டு வரன்" என்று சொல்லிவிட்டு பின்கதவு வழியாக தோட்டத்திற்கு வந்தாள்.
பகுதி 2
        குளிப்பதற்காக தென்னங்கீற்றால் மறைப்பு கட்டியிருந்த இடத்திற்குள்ளிருந்த சிமெண்ட் தொட்டியில் தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்தாள். முக்கால் தொட்டி தண்ணீர்தான் இருந்தது. இருந்த தண்ணீரேபோதும். ஆனால் பத்தாது என்ற எண்ணம் நாகம்மாவிற்கு உண்டானது. வேகமாக வீட்டிற்குள் சென்று ஒரு குடத்திலிருந்த தண்ணீரைத் தூக்கிக்கொண்டு வந்து சிமெண்ட் தொட்டியில் ஊற்றினாள். குளிப்பதற்காக சீலையை அவிழ்த்துப் போடும்போது காவியா வந்தாள். "என்னடி திடுத்திப்புன்னு வந்து நிக்குற?" என்று நாகம்மா கேட்டாள். "இதென்ன கேள்வி? புதுசா?" என்பதுபோல் பார்த்தாள் காவியா.
        நாகம்மாவின் அண்ணன் பேத்திதான் காவியா. நாகம்மா வீட்டிற்கும், காவியா வீட்டிற்கும் முப்பது நாப்பதடி தூரம்கூட இருக்காது. பணியாரம் விற்கப் போகிற நேரத்தைத்தவிர, மற்ற நேரமெல்லாம் காவியா நாகம்மாவோடுதான் இருப்பாள். பல நாட்களில் நாகம்மாவோடு படுத்துக்கொள்வாள். நாகம்மாவுக்கு காவியாதான் சித்தாள். அவளிடம்போய் என்ன திடீரென்று வந்திருக்கிறாய் என்று கேட்டால் என்ன பதில் சொல்வாள்? நாகம்மாவை ஆச்சரியத்துடன் பார்த்த காவியா "என்ன இந்த நேரத்தில குளிக்கிற?" என்று ஒரு தினுசாகக்  கேட்டாள்.
        நாகம்மாவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. மேல்சட்டையை அவிழ்த்துக்கொண்டே "ஒரே வெயிலு, வேர்வ நாத்தம்" என்று சொன்னாள்.
"வெயிலா? காலயிலதான மழபேஞ்சிது? இப்ப வெயிலே இல்லியே."
        நாகம்மாவுக்கு வெட்கமாகிவிட்டது. வெட்கத்தை மறைப்பதற்காக சிரிக்க முயன்றாள். அவளுக்கு சுத்தமாக சிரிப்பே வரவில்லை. "போலீஸ்காரன் மாதிரி என்னடி கேள்விகேட்டுக்கிட்டு. எட்டப் போ. தலயில தண்ணிய ஊத்திக்கிட்டு வரன்" என்று சொல்லிவிட்டு தென்னந்தடுப்பிற்குள் சென்றாள். அப்போதுதான் சோப் எடுத்துக்கொண்டு வரவில்லை என்பது தெரிந்தது. தடுப்பிற்குள் இருந்தபடியே "யே, உள்ளாரப்போயி சோப்பு இருக்கும் எடுத்தா?" என்று சொன்னாள். காவியா சோப்பை எடுத்துவந்து கொடுத்தாள். சோப்பை வாங்கிய நாகம்மா "கடயில போயி ஷாம்பு ஒண்ணு வாங்கியாடி" என்று சொன்னாள்.
"எங்க ஊட்டுலியே இருக்கும்."
"ஓடிப்போயி எடுத்தாடி என் தங்கம்" என்று சொன்னதும் காவியா ஒரே ஓட்டமாக ஓடிப்போய் ஷாம்பு பாக்கெட் ஒன்றை கொண்டுவந்து கொடுத்தாள். "நான் குளிச்சிட்டு வரன். நீ வேணுமின்னா ஒன் ஊட்டுக்குப்போயிட்டு அப்புறமா வா" என்று சொன்னாள். காவியா நகரவில்லை.
        நாகம்மா முழுபாக்கெட் ஷாம்பையும் தலையில்ஊற்றி தேய்த்ததைப் பார்த்ததும் காவியா சொன்னாள் "பாதியே போதும்." நாகம்மா பதில் பேசவில்லை. நாகம்மா தண்ணீரை மொண்டுமொண்டு தலையில் ஊற்றுவதைப் பார்த்த காவியா கேட்டாள். "எதுக்கு இம்மாம் தண்ணீய ஊத்துற?"
        ஒரு சொம்பு தண்ணீரில் குளி என்றாலும், ஒரு நொடியில் குளி என்றாலும் குளித்துவிடுவாள். அப்படிப்பட்டவள் எதற்காக சொம்புசொம்பாக தண்ணீரைத் தலையில் ஊற்றிக்கொண்டிருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருந்தது. நாகம்மா ஷாம்பு போட்டு தலையை அலசுவதையே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த காவியாவிடம் "ஒங்கம்மா மஞ்சக்கட்டிப்போட்டு குளிப்பாளாடி?" என்று கேட்டாள்.
"எப்பியாச்சும் குளிக்கும்."
"மஞ்சக்கட்டி இருக்குமாடி?"
"பாத்திட்டு வரன்" என்று சொல்லிவிட்டு தன்னுடைய வீட்டிற்குப் போன காவியா போன வேகத்திலேயே ஒரு மஞ்சள்கட்டியை கொண்டுவந்து கொடுத்தாள். நாகம்மா மஞ்சள் கட்டியை வாங்கி தரையில் கிடந்த கல்லில் தேய்க்க ஆரம்பித்தாள்.
"மூணு முறதான் மூஞ்சிக்கு சோப்புப் போட்டுட்டியே. அப்பறம் எதுக்கு மஞ்ச தேய்க்கிற?" என்று காவியா கேட்டதும், அதற்கு என்ன பதில் சொல்வதென்று நாகம்மாவுக்கு தெரியவில்லை. மூன்றுமுறை முகத்திற்கு சோப்புப்போட்டதும் அவளுக்கு மறந்துவிட்டிருந்தது. காவியாவுக்கு பதில் சொல்லாமல் காது, கண், மூக்கு, கை, கால், பாதம், கழுத்து, முதுகு என்று உடம்பின் ஒவ்வொரு இடத்தையும் சோப்புப் போட்டு தேய்த்துத்தேய்த்துக் குளித்தாள். தேய்த்த இடத்தையே திரும்பத்திரும்பத் தேய்த்தாள். திரும்பத்திரும்ப சோப்புப்போட்டாள்.
"இன்னிக்கே சோப்ப கரச்சிப்புடா?"
"நீ ஊட்டுக்குப் போறதின்னா போயிட்டு வா" நாகம்மா சொன்னதற்கு காவியா பதில் சொல்லாமல் இருந்தாள்.
        காவியாவுக்குத் தெரிந்து நாகம்மா ஷாம்புப்போட்டு குளித்ததும், மஞ்சள் தேய்த்துக்குளித்ததும் கிடையாது. அதே மாதிரி மூன்றுமுறை முகத்திற்கு சோப்புப் போட்டு குளித்தும் பார்த்ததில்லை. கை நகங்களில் கால் நகங்களில் அழுக்கு இருக்கிறதா என்று பார்த்துப்பார்த்து, தேய்த்துத்தேய்த்துக் குளித்ததும் கிடையாது.  என்ன இன்று இப்படி குளிக்கிறாள் என்று ஆச்சரியப்பட்ட காவியா கேட்டாள். "எம்மாம் நேரந்தான் குளிப்ப?"
"நான் குளிக்கிறதால ஒனக்கு எங்கடி வலிக்குது?"
"முதுவுல நொர."
"தேய்ச்சிவுடு."
காவியா முதுகை நன்றாகத் தேய்த்துவிட்டாள். தண்ணீரை மொண்டு முதுகில் ஊற்றினாள் நாகம்மா.
"தண்ணி ஆயிப்போச்சி" என்று லேசான கோபத்துடன் காவியா சொன்ன பிறகுதான் தண்ணீர் சொம்பை கீழேவைத்தாள் நாகம்மா. ஒவ்வொரு நாளும் காவியாதான் தண்ணீர் பிடித்துக்கொண்டு வந்து தொட்டியை நிரப்ப வேண்டும். அந்த எரிச்சல் அவளுக்கு இருந்தது.
"உள்ளாரப்போயி தகரப் பொட்டியில புதுசா ஒரு மஞ்ச சீல இருக்கும் எடுத்தா." என்று சொல்லிவிட்டு எழுந்து நின்று தலைமுடியை முறுக்கி, முடியிலிருந்த தண்ணீரைப் பிழிந்துவிட்டாள். காவியா கொண்டுவந்து கொடுத்த சீலையை வாங்கிக்கொண்டு "உள்பாவாட எங்கடி?" என்று கேட்டாள்.
"நீ சொல்லலியே?" என்று கேட்டு முறைத்துவிட்டு உள்பாவாடையை எடுத்துக்கொண்டு வருவதற்கு வீட்டிற்குள் போனாள் காவியா. சிறிது நேரம் கழித்து பாவாடையை கொண்டுவந்து கொடுத்தாள். பாவாடையை வாங்கிய நாகம்மா "மே சட்ட எங்கடி?" என்று லேசான கோபத்துடன் கேட்டாள்.
"நீ எதுக்கு ஒவ்வொண்ணா கேக்குற? மறந்துப்புட்டு, மறந்துப்புட்டு என்னெ கேக்குற?" என்று கேட்டு முறைத்தாள் காவியா. நாகம்மாவுக்கு அசிங்கமாகிவிட்டது. அவள் எப்போது குளிப்பதற்காக வந்தாலும் மாற்றுச் சீலை, உள்பாவாடை, மேல்சட்டையுடன்தான் வருவாள். இன்றுதான் அவள் மாற்றுத்துணி எடுத்துக்கொண்டுவராமல் வந்துவிட்டாள். எப்படி மறந்துபோனது என்று அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. காவியா எடுத்துகொண்டு வந்து கொடுத்த சட்டையைப் போட்டுக்கொண்டாள். சீலையைக் கட்டிக்கொண்டாள். தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து தலைமுடியைத் தொங்கவிட்டு நான்கு ஐந்து முறை தட்டி உலர வைத்தாள்.
"இன்னிக்கி வெள்ளிக்கிழம இல்லியே. எதுக்கு தல குளிச்ச?"
        நாகம்மாவுக்கு சிரிப்பு வந்தது, சிரிப்பை மறைப்பதற்காக கஷ்டப்பட்டாள். காவியாவின்முன் சிரிக்கவும் முடியவில்லை. அவளுடைய கேள்விக்குப் பதில் சொல்லவும் முடியவில்லை. "இந்த வயசிலியே எப்பிடி கேள்விகேக்குது பார்?" என்று மனதில் நினைத்துக்கொண்டாள். வாய்க்குள்ளாகவே முனுமுனுத்தப்படி "ஒங்க ஊட்டுல கண்ணாடியிருந்தா எடுத்தா" என்று சொன்னாள். நாகம்மாவை ஏறஇறங்கப் பார்த்த காவியா ஒன்றும் பேசாமல் தன்னுடைய வீட்டிற்குப்போய் முகம் பார்க்கிற கண்ணாடியை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள். கண்ணாடியில் தன்னுடைய முகத்தை ஒருமுறைக்கு பலமுறை பார்த்துக்கொண்ட நாகம்மா "சனியன் பாதிக்கிப்பாதி நரச்சிப்போச்சே" என்று சொல்லி சலித்துக்கொண்டாள். பிறகுபூராவும் நரச்சிப் போச்சாடி?” என்று கேட்டாள்.
எல்லாம் கருப்பாத்தான் இருக்கு. வேண்டுமென்றே அடித்தொண்டையால் அழுத்தி சொன்னாள் காவியா.
நாகம்மா திரும்பத்திரும்ப கண்ணாடியில் தன்னுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டாள். ரகசியமாகக் கேட்பதுபோல "ஒங்க ஊட்டுல பொட்டு இருக்குமாடி?" என்று கேட்டாள்.
பெரியமனுஷி தோரணையில் காவியா சொன்னாள் "இரு. எடுத்தாரன்." சடசடவென்று வேகமாக நடந்துபோய் ஒரு ஸ்டிக்கர் பொட்டை கொண்டு வந்துகொடுத்தாள்.
"என்னா பொட்டுடுடி இது?"
"ஸ்டிக்கர்" என்று சொன்னதோடு பொட்டை எப்படிப் பிரிக்க வேண்டும், எப்படி நெற்றியில் ஒட்டி அழுத்திவிட வேண்டும் என்று காவியா சொல்லித்தந்தாள். அவள் சொன்னது மாதிரியே நாகம்மா செய்தாள். பிறகு நெற்றியில் ஒட்டிய பொட்டு சரியாக இருக்கிறதா என்று கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள்.
"எத்தன தடவதான் கண்ணாடிய பாப்ப?"
"பெரிய வாயாடிதான்" என்று சொன்ன நாகம்மா காவியாவின் கன்னத்தை லேசாகக் கிள்ளினாள். சத்தமில்லாமல் சிரித்தாள். பிறகு கண்ணாடியில் தன்னுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டாள்.
"ஒங்க ஊட்டுக்குப் பொறத்தால ஒரு பூச்செடி இருந்துச்சே இப்ப இருக்கா?" என்று கேட்டாள். கேட்கக்கூடாத பொருளை கேட்டுவிட்டதுபோல் அவளுடைய குரலில் அவ்வளவு பணிவும், குழைவும் இருந்தது.
"பறிச்சியாரன்" என்று சலிப்புடன் சொல்லிவிட்டு எவ்வித அவசரமுமில்லாமல் தன்னுடைய வீட்டிற்குப் பின்னால்போய் கனகாம்பர பூவை ஒரு கை அளவுக்கு பறித்துக்கொண்டுவந்து கொடுத்தாள்.
"இம்மாம் எதுக்குடி? பேருக்கு ஒண்ணு இருந்தா போதாதா?" என்று காவியாவுக்கு சலுகைசெய்வதுபோல சொல்லிவிட்டு இரண்டு மூன்று பூவை மட்டும் பின்மண்டையில் வைத்துக்கொண்டாள். அவசரம் என்பதுபோல கண்ணாடியை எடுத்துப் பார்த்துகொண்டாள்.
"பவுடர் வேணுமா?" என்று கேட்ட காவியாவின் குரலில் அவ்வளவு ஏளனம் இருந்தது. காவியாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மேல்சட்டை சரியாக இருக்கிறதா, மாராக்கு சீலை, இடுப்புசீலை சரியாக இருக்கிறதா என்று ஒருமுறைக்குப் பலமுறைப் பார்த்துக்கொண்டதைப் பார்த்த காவியா "எல்லாம் சரியாதான் இருக்கு" என்று முகத்தைக் கோணிக்கொண்டு சொன்னாள். பிறகு "ஊருக்குப் போறியா ஆயா?" என்று கேட்டாள்.
"இல்ல."
"கல்யாணத்துக்குப் போறியா?"
"இல்லடி."
"சாமி கோவுலுக்குப் போறியா?"
"எதுக்கு கேக்குறவ?"
"மேக்கெப்பெல்லாம் போடுறியே."
நாகம்மாவுக்கு கூச்சமாகிவிட்டது. ஆனாலும் லேசாகச் சிரித்துக்கொண்டே "குளிக்கிறதும், சீலகட்டுறதும் ஒனக்கு மேக்கப்பாடி? பத்து வயசிலியே ஒனக்கு இம்மாம் கூர் இருக்கக்கூடாதிடி" என்று சொல்லிவிட்டு செல்லமாக காவியாவின் தலையில் தட்டினாள். பிறகு சட்டையும், சீலையும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள்.
நீ எதுக்கு படபடன்னு இருக்கிற?
நான் எங்கடி படபடன்னு இருக்கிறன்?
நாகம்மாவின் கேள்விக்கு பதில் சொல்லாத காவியா "செட்டியாரு எதுக்கு வந்திருக்காரு ஆயா?" என்று கேட்டாள்.
நாகம்மாவுக்கு வாய் அடைத்துப்போய் விட்டது.காவியாவை நேருக்குநேர் பார்ப்பதற்கு அவளுக்கு வெட்கமாக இருந்தது. தலைமுடியை சரிசெய்வதுபோல தலையைச் சாய்த்துக்கொண்டு, பொருத்தமாக என்ன சொல்லலாம் என்று யோசித்தாள். சட்டென்று பொருத்தமான பொய்கூட அவளுக்குத் தோன்றவில்லை. காவியாவினுடைய வாயை எப்படி அடைப்பது? சரியான காரணத்தைக் கண்டுபிடித்துவிட்ட மாதிரி தலையை நிமிர்த்தி நேராக நின்றுகொண்டு பொய்யான கோபத்துடன் "வாயிக்குவாயி எதுக்குடி ஆயா, ஆயான்னு சொல்ற?" என்று கேட்டாள்.
காவியா கொஞ்சம்கூட யோசிக்கவில்லை, கொஞ்சம்கூட தயங்கவில்லை, ஒரு நொடி நேரம்கூட தாமதிக்கவில்லை. ஒரே கேள்வியாகக் கேட்டாள் "நீ ஆயா தான?"
        என்ன பதில் சொல்வது? நாகம்மா பேசாமல் இருந்தாள். எதிரில் நின்றுகொண்டு கேள்விமேல் கேள்வியாகக் கேட்கிறாளே என்று முதன்முதலாக காவியாவின்மீது கோபம் வந்தது. கோபத்தைக் காட்டாமல் மாராக்கு சீலையை சரிசெய்தாள். இடுப்பு சீலையை சரி செய்தாள். சட்டை சரியாக இருக்கிறதா. பொட்டு சரியாக இருக்கிறதா, தலையில் வைத்த பூ கீழே விழுந்துவிடாமல் இருக்கிறதா, முகத்தில் பூசிய மஞ்சள் அதிகமாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள். நாகம்மாவின் செய்கைகளையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த காவியா மெதுவாகக் கேட்டாள்.
"ஒனக்கு இன்னிக்கி என்னாச்சி?"
        நாகம்மா அதிர்ந்துபோனாள். காவியாவை நேருக்குநேராகப் பார்த்தாள். காவியாவின்மீது கோபம் வந்தது, அதே நேரத்தில் சிரிப்பும் வந்தது, கோபத்தில் செய்தாளா, மகிழ்ச்சியில் செய்தாளா தெரியாது. நாகம்மா காவியாவின் மூக்கைப் பிடித்துக்கிள்ளினாள். பிறகு "எதுக்குடி குட்டி புது ஆளப்பாக்குற மாதிரி பாக்குற?" என்று கேட்டாள்.
"நீ என்னா செய்யுறன்னுதான்" காவியா அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.
நாகம்மாவுக்கு தன்னை எப்படி மறைத்துக்கொள்வது என்று தெரியாததால் முடிகாய்ந்துவிட்டதா என்று பார்ப்பதுபோல் பாவனை செய்து தலைமுடியை நெஞ்சின்மீது தூக்கிப்போட்டு குழந்தைப்பிள்ளையை தூங்கசெய்ய தடவிக்கொடுப்பதுபோல தடவிக்கொடுத்தாள். காவியாவை எப்படி அனுப்புவது என்று யோசித்தாள். ‘ஒன்ன காணுமின்னு ஒங்கம்மா தேடப்போறாடி? என்று அவளுக்கு நன்மை செய்வதுபோல் சொன்னாள். நாகம்மா சொன்னதை காதில் வாங்கிக்கொள்ளாமல் "நீ எதுக்கு தானா சிரிச்சிக்கிற?" என்று கேட்டாள் காவியா.
"நான் எங்கடி சிரிச்சன்?" என்று கேட்டுவிட்டு நாகம்மா சிரித்தாள்.
"எல்லாம் எனக்குத் தெரியும்" என்று கட்டைக்குரலில் காவியா சொன்னதும், "இந்த வயசிலியே எல்லாச் சனியனயும் இந்த குட்டி தெரிஞ்சிவச்சிருக்கா பாரன்" என்று வாய்விட்டு சொல்லத்தான் நினைத்தாள். ஆனால் ஒரு வார்த்தையைக்கூட வெளியே சொல்லவில்லை. கழுத்தைப்பிடிப்பதுபோல இருந்ததால் சட்டையை கொஞ்சம் கீழே இறக்குவதுபோல இழுத்துவிட்டதை பார்த்த காவியா "நீ பிரா போட்டுக்க" என்று சொன்னதும் நாகம்மாவுக்குக் கோபம் வந்துவிட்டது.
"சீ. வாய மூடு. நானென்ன அறியாக் குட்டியா?" என்று கேட்டாள்.
"ஒனக்கு நல்லதுக்குத்தான் சொன்னன்"
"நீயாடி எனக்கு நல்லது சொல்றவ? பாம்பு கண்ணவச்சிக்கிட்டு. ஊர்ப்பட்ட வாய வச்சிக்கிட்டு. நல்லது சொல்றாளாம். நீ எதுத்த ஊட்டு வெள்ளாயக்குட்டி பாண்டியன் மவ ஜோதி மாதிரியே வாயடிச்சி பேசக் கத்துக்கிட்ட." என்று சொல்லி முகத்தைக் கோணிக்காட்டினாள். பிறகு "எங்க ஆயாகிட்ட நான் இப்பிடியாடி பேசுனன்?" என்று கேட்டாள்.  அதற்கு பதில் சொல்லாமல் “நீ எதுக்கு ஒரே அவசரமா இருக்க?” என்று கேட்டாள் காவியா.
“இல்லியே” என்று சொல்லி நாகம்மா மழுப்பினாள்.
         தேர்முட்டிக்கி பணியாரம் விற்பதற்காக போகும்போது முகத்தைக் கழுவி, தலையை சீவி, பவுடர் போட்டுக்கொண்டு போனால் சின்னம்மாவுக்குக் கோபம் வந்துவிடும் "ஆயிரம் ஆம்பள வந்துபோற எடத்தில குந்தியிருக்கிறவ எடுப்பாப் போவலாமாடி? ஆள் மயக்கித்தான் அப்பிடி போவா" என்று சொல்வாள். அதனால் தன்னுடைய ஆயாவுடன் போனபோதும், தனியாக பணியாரம் விற்பதற்காக போகும்போதும் முகத்தை பளிச்சென்று வைத்துக்கொள்ள மாட்டாள். தலைசீவ மாட்டாள். பொட்டு, பூ என்று எதுவும் வைத்துக்கொள்ள மாட்டாள். புதுசீலை கட்டிக்கொண்டுப் போக மாட்டாள். பெயருக்கு முகத்தைக் கழுவிக்கொண்டு, பெயருக்கு இடுப்பில் ஒரு சீலையை சுற்றிக்கொண்டு போவாள். அடுப்பு சாம்பலில் விரலை தேய்த்து, திருநீரு என்று நெற்றியில் சிக்கொள்வாள். அதிசயமாக இன்றுதான் அவள் நிதானமாகக் குளித்திருக்கிறாள். தலைமயிரை உலர்த்தியிருக்கிறாள். மஞ்சள் பூசியிருக்கிறாள். பூ வைத்திருக்கிறாள். வீட்டில் இருக்கும்போதே புதுசீலை கட்டியிருக்கிறாள். கண்ணாடியில் முகத்தைப் பார்த்திருக்கிறாள். இது இந்த சின்னக்குட்டிக்கிக்கூட பொறுக்கவில்லையே என்று நினைத்த நாகம்மாவுக்கு காவியாவை அனுப்பிவிட்டால் போதும் என்ற எண்ணம் வந்துவிட்டது. அவளுடைய எண்ணத்திற்கு ஏற்றவாறு காவியா, "நான் இருக்கட்டுமா, போவட்டுமா" என்று வீம்பாகக் கேட்டாள். அப்படி கேட்டதே பெரிய உபகாரம் என்பதுபோல "இம்மாம்நேரம் எங்கப்போனன்னு ஒங்கம்மா கேப்பா. இப்ப ஊட்டுக்குப் போயிட்டு, அப்பறமா வா" என்று மெதுவான குரலில் நாகம்மா சொன்னதும் "நீ இன்னிக்கி சரியில்ல" என்று ஒரே வார்த்தையாகச்  சொல்லிவிட்டு விர்ரென்று தன்னுடைய வீட்டுப்பக்கம் நடக்க ஆரம்பித்தாள் காவியா.
"பத்து வயசிலேயே திருட்டுக்குட்டியா இருக்காளே" என்று சொல்லி சிரித்த நாகம்மா வீட்டிற்குள்வந்து பின்புறக் கதவைச் சாத்தினாள். கண்ணனுக்கு முன்வந்து அடக்கஒடுக்கமாக நின்றாள். புது ஆளைப் பார்ப்பதுபோல கண்ணனைப் பார்த்தாள். மிகவும் மெதுவா ரகசியக் குரலில் கேட்டாள்.
"செட்டிக்கி நேரமாச்சா?"
"இல்ல."
"கடக்கிப்போவணுமா?"
"ஆளிருக்கு."
"இங்க காத்தாடி இல்ல."
"அது எதுக்கு தொந்தரவு. வெயிலா இருக்கு. கதவ சாத்து."
பகுதி 3  
"காசிக்கிப் போறன்."
"பயணம் என்னிக்கி?"
"இன்னிக்கி ராத்திரிக்கி."
"என்னா திடுத்திப்புன்னு காசி, ராமேஸ்வரம்ன்னு?"
"ரொம்ப நாளா மனசில இருந்ததுதான்."
"திரும்பிவர எத்தன நாளாவும்?"
"தெரியல."
"முடிவுப் பண்ணாமத்தான் போறியா?"
"........."
"காசிக்கி கருமத்தத் தொலைக்கிறதுக்குப்போறியா? கருத்த சேக்கறதுக்குப்போறியா?"
கண்ணன் வாயைத்திறக்கவில்லை.
"எனக்குப் பாவத்தக் கொடுத்திட்டு நீ புண்ணியத்தத் தேடிப்போற?"
“-------”
தனியாவா? ஜோடியாவா?
கண்ணன் எதுவும் பேசவில்லை. நாகம்மாவையும் முகம் கொடுத்துப் பார்க்கவில்லை. ஆனால் நாகம்மா கண்ணனைப் பார்த்து "நான் இத்தினி வருஷமா தேர்முட்டியில பணியாரம் வித்தது வயித்த கழுவுறதுக்காக மட்டுமில்ல" என்று சொன்னாள். அதற்கு தெரியும் என்றும் சொல்லவில்லை. தெரியாது என்றும் கண்ணன் சொல்லவில்லை. எப்போதும்போல வாய் அடைத்துப்போய் உட்கார்ந்திருந்தார். நாகம்மாளுக்கு கண்கள் கலங்கியதைக்கூட அவர் பார்க்கவில்லை.
"நாளயிலிருந்து நான் தேர்முட்டியில பணியாரம் விக்க மாட்டன்."
"வயித்துக்கு?"
"செட்டிப்பாத்த ஒடம்ப இனி தெருவுல படயல் போட மாட்டன்" கறாராக நாகம்மா சொன்னதையும், அவளுடைய குரலிலிருந்த அழுத்தத்தையும் கேட்ட கண்ணன் நாகம்மாவின் முகத்தைக் கூர்ந்துப் பார்த்தார். அவளுக்கு எப்படியும் ஐம்பது வயதாவது இருக்கும். ஆனால் அவருடைய கண்ணுக்கு இப்போது இருபது வயது பெண்போல தெரிந்தாள்.
"ஆகாரத்துக்கு வழி?"
"செத்துப்போறன்" அழுத்தம் திருத்தமாக மட்டுமல்ல, சற்று சத்தமாகவும் சொன்னாள். நாகம்மா எதை சொன்னாலும் தெளிவாக சொல்வாள். பயமில்லாமல் சொல்வாள் என்பது தெரியும் என்பதால் கண்ணன் "எதுக்கு அப்பிடி சொல்ற?" என்று கேட்காமல் உட்கார்ந்திருந்தார். அவர் எளிதில் பதில் சொல்ல மாட்டார் என்பது தெரியும் என்பதால் "செட்டிச்சி கதவுக்குள்ளாரதான இருக்கணும்?" என்று கேட்டாள். நாகம்மாவின் குரலில் அதிகாரம் நிறைந்திருந்தது. கண்ணன் வாயைத்திறக்கவில்லை. நாகம்மாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
        கண்ணன் மடியில் வைத்திருந்த ஒரு மஞ்சள் நிறப் பையை எடுத்து நாகம்மாவிடம் நீட்டினார். பையை வாங்கிப் பார்த்தாள். இரண்டாயிரம் ரூபாய் கட்டு மூன்று இருந்தது. ஒரு காகிதத்தில் மடித்து நான்கு சங்கிலிகள் வைக்கப்பட்டிருந்தன. பணத்தையும், நகையையும் பார்த்த நாகம்மாவுக்கு கண்கள் கலங்கின. அழுகையை அடக்குவதற்காக மூக்கை உறிஞ்சினாள். பிறகு உடைந்துபோன குரலில் "இதுக்கெல்லாம் என் நெஞ்சில எடமில்ல செட்டியார" என்று சொன்னாள்.
இத்தினி வருஷத்தில நீ சாமான் வாங்கனப்ப நான் காலணா தள்ளி கொடுத்து ஒனக்கு சகாயம் செஞ்சதில்ல."
"நீ செட்டி, அப்பிடித்தான் இருப்ப? மாறி இருந்தாத்தான அதிசயம். "
"நீயும் கேட்டதில்ல.”
நான் எதுக்குக் கேக்கணும்? நான் என்னிக்கும் செட்டிக்கிட்ட கடன் கேட்டதில்ல. வெலயத் தள்ளி கொடுன்னும் கேட்டதில்ல. இனியும் கேக்க மாட்டன்" வீறாப்பாக சொன்னாள். பிறகு நிதானமான குரலில் " எனக்குத்தான் இந்த பொருளுன்னா எம் பேர சொல்லி சாமி உண்டியல்ல போட்டுடு" என்று சொல்லி நகையும், பணமும் இருந்த பையைத் திருப்பிக் கொடுத்தாள்.
முதன்முதலாகப் பார்ப்பதுபோலவும், ஆராய்வதுபோலவும் நாகம்மாவைப் பார்த்தார் கண்ணன். மறுவார்த்தை பேச தெம்பில்லாதவர்போல பையை வாங்கிக்கொண்டார். பெரிய பாரத்தை சுமந்துகொண்டிருக்கிற ஆள் மாதிரி பெருமூச்சு விட்டார். கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார். தானாகவே ‘சரிதான்என்று சொல்லுவதுபோல தலையை ஆட்டினார். ரொம்பவும் நிதானமான குரலில் "தண்ணி கொடு" என்று கேட்டார். நாகம்மா கொடுத்தத் தண்ணீரை மிச்சம் வைக்காமல் குடித்தார். ‘வரன்என்றுகூட சொல்லாமல் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அடுத்த நிமிஷம் என்றைக்குமில்லாத புதுப்பழக்கமாக நாகம்மா பட்டப்பகலிலேயே கதவைச் சாத்திக்கொண்டாள்.    
உயிர்மை - ஜூலை 2018 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக