வியாழன், 7 ஜூன், 2018

வட்டார வழக்கு இலக்கியத்தில் இருப்பது சாதிய சிக்கலா? அரசியல் சிக்கலா? – இமையம்


வட்டார வழக்கு இலக்கியத்தில் இருப்பது சாதிய சிக்கலா? அரசியல் சிக்கலா? – இமையம்

மொழியின் வழியாகத்தான் மக்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு இனக்குழுவும் தனக்கான மொழியை  பாதுகாத்துக் கொள்வதில் அக்கறையுடன் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பல வட்டாரங்கள் இருக்கின்றன. அந்தந்த வட்டாரத்திற்கேற்ப தனித்த பேச்சு வழக்கும், வட்டார வழக்கும் இருக்கிறது. வட்டார வழக்கு நிலம் சார்ந்து, வாழும் முறை, செய்யும் தொழில், நிலவியல், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், சடங்குகள் சார்ந்து உருவாவது.
மொழியில் எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு, உயர் வழக்கு, புலவர் வழக்கு வட்டார வழக்கு என்று பல வகைமைகள் இருக்கின்றன. எழுத்து வழக்கு இலக்கண ரீதியாக ஒருங்குபடுத்தப்பட்ட வாக்கிய அமைப்பைக் கொண்டது. பேச்சு வழக்கு எந்த வரையறையுமின்றி, மக்கள் தங்கள் இஷ்டம் போல் தெருவில், வீட்டில், வேலை பார்க்கும் இடங்களில் இயல்பாக பேசுவது. இதில் ஒழுங்கான  வாக்கிய அமைப்போ, இலக்கண அமைப்போ இருக்காது.  வட்டார வழக்கு என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பில், பண்பாட்டுக் கலாச்சார சூழலில் வாழக்கூடிய மக்கள், பிரத்யோகமாக பயன்படுத்தப்படும் சொற்கள் மட்டுமே. ஒரே சொல்லை பல வட்டாரத்து மக்கள் பயன்படுத்தினால் அது வட்டார வழக்கு அல்ல. மதுரை தமிழ், நெல்லை தமிழ், சென்னை தமிழ், கொங்கு தமிழ் என்று சொல்வதெல்லாம் இந்த அடிப்படையில் தான். எழுத்து வழக்கிற்கு ஒரு அழகு இருப்பது போல பேச்சு வழக்கிற்கும், வட்டார வழக்கிற்கும் ஒரு அழகு இருக்கிறது. மதுரைப் பகுதி மக்கள் பேசுவதுபோல சென்னைப்பகுதி மக்கள் பேசுவதில்லை. சென்னை மக்கள் பேசுவதுபோல கொங்கு வட்டார மக்கள் பேசுவதில்லை. பேச்சு வழக்கில் மட்டும்தான் இந்த வேறுபாட்டை உணர முடியும். ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த மக்களும் ஒவ்வொரு தொனியில் பேசுகிறார்கள். அதனால் இந்த வேறுபாட்டை பிராமணர் பேச்சுவழக்கு, பிள்ளைமார், முதலியார், தேவர், தலித், செட்டியார், வன்னியர் பேச்சுவழக்கு என வகைப்படுத்தலாம். இஸ்லாமியர்களின், கிறித்தவர்களின் பேச்சுவழக்கும் வேறுபட்டுக் காணப்படுகிறது.
வட்டார வழக்குச் சொற்கள் மொழிக்கு வலிமையையும், வளமையையும் சேர்க்கக்கூடியது. ஒரு வட்டார வழக்குச் சொல், மற்றொரு வட்டார வழக்கு மக்களுக்கு புரியாமல் இருக்கலாம். புரியாமல் இருப்பதனால் அந்த சொல் வீண் என்றோ; தேவையற்றது என்றோ சொல்ல முடியாது. ஒரு மொழிக்கு உயர் வழக்கு, புலவர், இலக்கிய, பொது, எழுத்து வழக்கு எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு வட்டார வழக்குச் சொல்லும் முக்கியமானது. வட்டார வழக்குச் சொற்களில் உயர்ந்தது தாழ்ந்தது இல்லை. ஒரு மொழியின் சொல்வளத்தைப் பெருக்குவதற்கு வட்டார வழக்குகள் பெரிய பங்களிப்பைச் செய்ய முடியும். வட்டார வழக்கு என்பதே சாதிய வழக்குத்தான். சில சாதி வாழ்க்கை மட்டும் இழிவாகப் பார்ப்பதும் பேசுவதும்தான் சாதிய அரசியல். அது இலக்கியத்திலும் இருக்கிறது.
விகடன் – தடம் ஜுன் 2018


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக