வியாழன், 7 ஜூன், 2018

காதல் (சிறுகதை) – இமையம்


காதல் (சிறுகதை) – இமையம்
1
சாரா வீட்டிற்கு வருவாள் என்று காந்திமதி கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அவளைப் பார்த்ததும் அழுகைதான் வந்தது. ஆனால் காளியம்மாவுக்கும், ஊக்கி ஆட்டனுக்கும் சாராவைப் பார்த்ததும் கோபம்தான் வந்தது.
"ஒன்னோட கூட்டாளி என்னா செஞ்சிருக்கா தெரியுமா?" என்று கேட்டாள் காளியம்மா.
"போன்ல சொன்னா" என்று சொன்ன சாரா, "ஒக்காரு" என்று யாருமே சொல்லாததால், உட்காருவதா வேண்டாமா என்று யோசித்தாள். சிறிது நேரம் கழித்துத் தானாகவே உட்கார்ந்துகொண்டாள்.
காந்திமதியின்மீது இருந்த கோபத்தையெல்லாம் காளியம்மாவும், ஊக்கி ஆட்டனும் சாராவிடம் கொட்ட ஆரம்பித்தனர்.
சாராவின் முன் காளியம்மா அழுததைப் பார்க்க முடிந்தது. "படிக்கணும்ன்னு நெனச்சன். வேற ஒரு தப்பும் நான் செய்யல" என்று சொல்லிவிட்டு ஊக்கி ஆட்டன் அழுததை மட்டும் காந்திமதியால் பார்க்க முடியவில்லை. வாய்விட்டு அழ வேண்டும் என்று தோன்றியது. காளியம்மாவின், ஊக்கி ஆட்டனின் முன் அழ வேண்டாம் என்று நினைத்த காந்திமதி எழுந்து ஒண்ணுக்குப் போவதுபோல வீட்டிற்கு பின்புறமாக வந்தாள். தூரத்திலிருந்த குளத்தைப் பார்க்க முயன்றாள். குளத்தை மறைத்தது கண்ணீர். "ஒம் மூஞ்சிக்கெல்லாம் காதலு கேக்குதா?" என்று செந்தூர்பாண்டியின் மனைவி கேட்டது நினைவுக்கு வந்ததும் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
இருபத்தியெட்டு நாட்களுக்கு முன் ஐந்து மணிவாக்கில் செந்தூர்பாண்டியின் மனைவி காந்திமதியின் வீட்டிற்கு வந்தாள். அவள் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்தான் காளியம்மாவும், ஊக்கி ஆட்டனும் வேலைக்குப் போய்விட்டு வந்திருந்தனர். வீட்டிற்கு வந்த செந்தூர்பாண்டியின் மனைவி, தான் இன்னார்,  இந்த ஊரிலிருந்து வருகிறேன் என்றுகூட சொல்லாமல், வீட்டில் நுழைந்த வேகத்திலேயே காந்திமதியைப் பார்த்து, "நீ காலேஜிக்கு படிக்கிறதுக்குப் போறியா, புருஷன் புடிக்கிறதுக்கு போறியா? ஒன் அரிப்புக்கு என் புருசன் தான் கெடச்சானா?" என்று கேட்ட பிறகுதான், வந்திருப்பது செந்தூர்பாண்டியின் மனைவி என்பதும், செந்தூர்பாண்டிக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்பதும் தெரிந்தது. காளியம்மாவும் ஊக்கி ஆட்டனும் வந்திருப்பது யார், என்ன பேசுகிறாள் என்பதே தெரியாமல் விழித்தனர். முன்பின் தெரியாத வீட்டிற்கு வந்திருக்கிறோம், முன்பின் தெரியாத மனிதர்கள் முன் பேசுகிறோம் என்பதெல்லாம் இல்லாமல் செந்தூர்பாண்டியின் மனைவி தெருவுக்கே கேட்கிற மாதிரி சத்தம் போட்டு காந்திமதியிடம் கத்தினாள்.
"ரெண்டு பிள்ள பெத்தவன புடிச்சிருக்கும்போதே தெரியுது ஒன்னோட லட்சணம். என்னோட அதப் பாரு, இதெப் பாருன்னு தெனம் நூறு செல்ஃபி எடுத்துப் போட்டிருக்கிறே, துணியோட எதுக்குப் போட்ட? துணியில்லாம போட்டிருந்தா பாக்குறதுக்கு இன்னும் நல்லா இருந்திருக்கும்ல. தெனம் பஸ்ஸிலதான போற, வர, படிக்கிற பய எவனும் ஒனக்கு சிக்கலியா? டிரைவர், கண்டக்டர் கூடவா ஒனக்கு மாட்டல? ஒன் மூஞ்சிக்கி எவன் மாட்டுவான்? ஒலகத்திலியே வாத்தியார புடிச்சவ நீயாத்தான் இருப்ப? அடுத்தவ புருஷன புடிச்சியிருக்கியே ஒனக்கு வெக்கமா இல்லெ. வெக்கம் மானம் இருந்தா ஒரு ஆம்பளக்கி தெனம் செல்ஃபி எடுத்து போட்டோ போடுவியா? நீயும் அவனும் காலேஜ் கேன்டீன்ல எடுத்த செல்ஃபி, கோவில்ல, சினிமா தியேட்டர்ல, ஹோட்டல்ல, லேபுல எடுத்த செல்ஃபியெல்லாம் இப்ப எங் கையில இருக்கு. அங்கவா, இங்க வான்னு, அங்க நிக்குறன், இங்க நிக்குறன்னு, ராவும் பகலும், நீ போட்டிருந்த மெசேஜ் எல்லாம் இப்ப என் செல்போன்ல இருக்கு. ’மாமா மாமா’ன்னு ஒரு நாளக்கி ஆயிரம் மெசேஜ் போட்டிருக்கியே. அவன் என்ன ஒனக்குத் தாலி கட்டுன புருஷனா? இல்லெ தாய் மாமனா? வாத்தியார போயி ’மாமா மாமா’ன்னு கூப்புட்டிருக்கியே நீ படிக்கிறவளா? வெக்கங்கெட்ட கழுத. நீயெல்லாம் உயிரோட இருக்கணுமா? பிற்காலத்தில நீ ஐயிட்டமாத்தான் ஆவ. இன்னியோட எல்லாத்தயும் வுட்டுடு. இனிமே அவனுக்கு மெசேஜ் போடுறது, போட்டோ போடுறதெல்லாத்தயும் வுட்டுடு. இனிமே அவன்கூட சேந்துகிட்டு சுத்தினன்னு தெரிஞ்சா, நேராப் போயி காலேஜில சொல்லி ஒன் மானத்த வாங்குவன். அதோட நிக்க மாட்டன். போலீசுக்குப் போவன். டி.வி.யிலப் போயும் சொல்லுவன். முத தடவங்கிறதால வீட்டுக்கு வந்து சொல்றன். அதுகூட நீ படிக்கிற குட்டிங்கிறதால. புரியுதா?" செந்தூர்பாண்டியின் மனைவி பேசிய ஒவ்வொரு வார்த்தையும் வெடி வெடிப்பது போல்தான் இருந்தது. அவமானத்தில், வெட்கத்தில், பயத்தில் நடுங்கிப்போய் நின்றுகொண்டிருந்த காந்திமதிக்கு வாயை அசைக்கக்கூட முடியவில்லை. அழ மட்டும்தான் முடிந்தது. செந்தூர்பாண்டிக்கு கல்யாணமாகிவிட்டது, இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதை நம்ப முடியாமல் வாயடைத்துப்போய் நின்றுகொண்டிருந்தாள்.
        செந்தூர்பாண்டியின் மனைவி நிற்கிற கோலத்தையும், பேசுகிற விதத்தையும் பார்த்து காளியம்மாவும், ஊக்கி ஆட்டனும் விதிர்விதிர்த்துப் போய் உட்கார்ந்திருந்தனர். விஷயம் என்னவென்று புரியாமல் உட்கார்ந்திருந்தவர்களிடம் "ஒங்க பொண்ணு என்னா செஞ்சியிருக்கா பாருங்க?" என்று சொன்னதோடு தன்னுடைய போனிலிருந்த காந்திமதி செல்ஃபி எடுத்து விதவிதமாக செந்தூர்பாண்டிக்கு அனுப்பியிருந்த போட்டோக்களையும், செந்தூர்பாண்டியும் காந்திமதியும் சேர்ந்து கோவிலில், கேண்டீனில், ஹோட்டலில், சினிமா தியேட்டர்களில் என்று  இணைந்து எடுத்திருந்த செல்ஃபி நிழற்படங்களை எல்லாம் "இதப் பாருங்க. இதப் பாருங்க" என்று ஒவ்வொன்றாகக் காட்டினாள். அதன் பிறகு ளக்காரமாக சிரித்துக்கொண்டே "எம் புருசனுக்கு ஒங்க பொண்ணு போட்டிருக்கிற மெசேஜ கேளுங்க" என்று சொல்லி காந்திமதி செந்தூர்பாண்டிக்கு அனுப்பியிருந்த ஒவ்வொரு செய்தியையும் படித்துக்காட்டினாள். காந்திமதி செந்தூர்பாண்டியுடன் சேர்ந்து எடுத்திருந்த நிழற்படங்களைப் பார்த்தபிறகு, காந்திமதி செந்தூர்பாண்டிக்கு அனுப்பியிருந்த செய்திகளை, செந்தூர்பாண்டியின் மனைவி படித்துக்காட்டிய பிறகுதான் காளியம்மாவுக்கும் ஊக்கி ஆட்டனுக்கும் விஷயம் என்னவென்று புரிந்தது. விஷயம் தெரிந்ததும் காளியம்மா உயிர்போவதுபோல் நெஞ்சில் அடித்துகொண்டு அழ ஆரம்பித்தாள். "என் குடும்ப மானம் போச்சே" என்று சொல்லி ஊக்கி ஆட்டன் முகத்திலேயே அடித்துக்கொண்டார்.
        காந்திமதி வாயைத் திறக்காமல் அழுதுகொண்டிருப்பதைப் பற்றி, காளியம்மா, ஊக்கி ஆட்டன் அழுவதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் தான் என்ன சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டு வந்திருந்தாளோ, அத்தனையையும் பொரிந்துதள்ளிக்கொண்டிருந்தாள் செந்தூர்பாண்டியின் மனைவி.
"சத்தமா பேசாதிங்க. ஊர்ல மானம் போயிடும். நீங்க வீட்டுக்குப் போங்க. இனி ஒரு தப்பும் நடக்காது. மீறி நடந்தா நானே தலயில நெருப்ப வச்சி எரிச்சிப்புடுவன்" என்று சொல்லிக் கையெடுத்துக் கும்பிட்டு அரை மணி நேரத்திற்குமேல் கெஞ்சிய பிறகுதான் சூறைக் காற்றுப்போலப் பேசிய செந்தூர்பாண்டி மனைவியின் வாய் மட்டுப்பட்டது.
        காளியம்மாவும், ஊக்கி ஆட்டனும் "இனிமே அப்படி நடக்காது" என்று நூறு இரு நூறுமுறைக்குமேல் சத்தியம் செய்த பிறகுதான் "ஜாக்கிரத" என்று சொல்லிவிட்டு செந்தூர்பாண்டியின் மனைவி வீட்டை விட்டுப் போனாள். அவள் போன பிறகு காந்திமதியிடம் வந்து காளியம்மாவோ, ஊக்கி ஆட்டனோ "ஏன் இப்படி செஞ்ச? இந்த வயசிலியே ஆம்பள கேக்குதா?" என்று ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை. கேட்டாலும் காந்திமதியால் பதில் சொல்லியிருக்க முடியாது. பொய் சொல்வதற்கு, மாற்றி சொல்வதற்கு வாய்ப்பே இல்லாமல் சினிமா படம் போல் எல்லாவற்றையும் விளக்கிக் காட்டிவிட்டுதான் போயிருந்தாள் செந்தூர்பாண்டியின் மனைவி.
        செந்தூர்பாண்டி அனுப்பிய வாட்ஸப் செய்தியிலேயே கிணற்றில் குதிப்பதுபோல் எப்படி சட்டென்று விழுந்தோம், எப்படி அவன் கூப்பிட்ட இடத்திற்கெல்லாம் யோசிக்காமல், கொஞ்சம்கூட தயங்காமல் பட்டுபட்டென்று போனோம் என்று யோசித்தாள் காந்திமதி. “திருடன்” என்று சொன்னாள்.
இளங்கலை கணினி அறிவியல் பாடப்பிரிவில் உதவிப் பேராசிரியையாக வேலை செய்து கொண்டிருந்த மகேஸ்வரி பேறுகால விடுப்பில் சென்றதால், அவருடைய விடுப்புக் காலத்தில் பாடம் நடத்துவதற்காகக் கல்லூரி நிர்வாகத்தால் வருகைதரு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டவன்தான் செந்தூர்பாண்டி. இளங்கலை கணினி அறிவியலில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்த காந்திமதி வகுப்புக்கும் பாடம் எடுத்தான். அவன் பாடம் எடுக்க ஆரம்பித்து ஒரு மாதம்கூட கழிந்திருக்காது, திடீரென்று ஒருநாள் காந்திமதியின் வாட்ஸப்பிற்கு "ஹாய்" என்று ஒரு செய்தி வந்தது. புது எண்களிலிருந்து செய்தி வந்திருந்ததால் ‘ஹாய்என்று போட்டது யார் என்று கேட்காமல் விட்டுவிட்டாள். அடுத்தடுத்த நாட்களில் "ஹாய், ஹாய்" என்று தொடர்ந்து செய்தி வந்து கொண்டிருந்ததால் போன்போட்டு "யார்?" என்று கேட்டாள். செந்தூர்பாண்டி என்று தெரிந்ததும் விஷயத்தை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டாள். தொடர்ந்து அவனிடமிருந்து செய்திகள் வர ஆரம்பித்ததும் விஷயத்தை சாராவிடம் சொன்னாள்.
"லூசா அவன்? மொகம் வடிவா இருந்தா இப்படித்தாம்" என்று சொன்னாள் சாரா.
"என்னா சினிமா பார்த்த, எந்த நடிகரைப் பிடிக்கும், எந்த நடிகையைப் பிடிக்கும், என்ன சினிமா பாட்டு பிடிக்கும்?" என்று ஓயாமல் செய்திகளை அனுப்பிக்கொண்டே இருந்ததால், ஆசிரியர்தானே, சாதாரண கேள்விகள்தானே என்று பதில் போட ஆரம்பித்தாள்.
"டேட்டிங் போவலாமா?" என்று கேட்டு ஒருநாள் செய்தி அனுப்பியிருந்தான். விஷயம் புரியாத மாதிரி "எதுக்கு?" என்று கேட்டதற்கு "டேட்டிங் போறதெல்லாம் இப்ப டீ குடிக்கப் போற மாதிரிதான்" என்று பதில் போட்டான். ஒரு வாரம் கழித்து "செல்ஃபி எடுத்துக்கலாமா?" என்று கேட்டிருந்தான். "நோ" என்று பதில் போட்டதற்கு "செல்ஃபி எடுக்கிறதெல்லாம் இப்ப பிரண்டுங்க கை குலுக்கிக்கிற மாதிரிதான்" என்று பதில் போட்டான்.
        காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுப்பதற்குள் ஒரு நாளைக்குக் குறைந்தது நூறு செய்திகளாவது அனுப்புவான். முக்கியமானது என்று எதுவுமே இருக்காது. காலையில் சாப்பிட்டது, மதியம் சாப்பிட்டது, டீ குடித்தது, எங்கே இருக்கிறான், எங்கே போய்க்கொண்டிருக்கிறான் என்பது போன்ற விஷயங்களைத்தான் செய்திகளாக அனுப்புவான். கவிதை மாதிரி எழுதியிருக்கிற ஒன்றிரண்டு விஷயங்களுக்கு மட்டும்தான் காந்திமதி ‘கமண்ட் போடுவாள். ஒரு நாள்மலக்காட்டு குறத்தியோட ஓர்மயாவே இருக்குஎன்று அவன் அனுப்பிய செய்திக்கு பதில் போடாமல் சிரிக்க மட்டுமே செய்தாள்.
        முதல் பருவத் தேர்வு ஆரம்பித்த சமயத்தில் ஒரு நாள் "யார் கூடயாவது டச்சில இருக்கியா?" என்று கேட்டு செய்தி அனுப்பியிருந்தான். அதற்கு காந்திமதி பதிலே போடாமல் விட்டுவிட்டாள். "ஏன் பதிலே இல்ல?" என்று கேட்டு திரும்பத் திரும்பச் செய்தி அனுப்பிக்கொண்டிருந்ததால், "பேலன்ஸ் இல்ல" என்று பதில்போட்டாள். பதில்போட்ட ஐந்து நிமிஷத்தில் காந்திமதியின் போனுக்கு இருநூறு ரூபாய் பணம் போடப்பட்டிருந்தது தெரிந்தது. செந்தூர்பாண்டிதான் பணம் போட்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உடனே போன்போட்டு "இனிமே எம் போனுக்கு ரீசார்ஜ் செய்யாதிங்க சார்" என்று சொன்னாள்.
        மறுநாள் "ஐ மிஸ் யூ" என்று செய்தி அனுப்பியிருந்தான். செய்தியைப் படித்துவிட்டு ”என்ன சார் இப்படி மெசேஜ் போட்டிருக்கிய?” என்று போன்போட்டு கேட்டதற்கு “ஐ மிஸ் யுன்னு சொல்றது ஓ.கே பைன்னு சொல்றது போலத்தான்” என்று சொன்னான். மறுநாள் "காந்திமதிங்கிற பேய் புடிச்சிருக்கு" என்று அனுப்பியிருந்த செய்தியைப் படித்த காந்திமதி "லூசுப்போல" என்று சொல்லி சிரித்தாள். “நினைவுகளைச் சுமப்பதுதான் பெரும் பாரம். உன் நினைவுகளால் நிரம்பியிருக்கிறது என் அறை.” என்று அடுத்த நாள் செய்தி அனுப்பியிருந்தான். அந்தச் செய்திக்குப் பிறகுதான் காந்திமதி சறுக்கி விழுந்தாள். “யு டு நாட் நோ யுவர் கிரேட்னஸ். பட் ஐ நோ யுவர் கிரேட்னஸ். யு ஆர் மை கிரேட்னஸ்.” “யு பிரிங் சம் லைட்ஸ் இன் மை லைஃப்.” “நைட் அண்ட் டே யு ஆர் மை ஐஸ், அண்ட் பாத்வே.” “ஐ லாஸ்ட் மை ஸ்லீப்”, “உன் நினைவுதான் எனக்கு இப்பொழுது சோறு தண்ணி” ”இன்று காந்திமதி அம்மன் கோவிலுக்குப் போயிருந்தேன்” என்று தொடர்ந்து வந்த செய்திகளுக்கு பிறகுதான் அவனோடு சாட்டிங்கில் அதிகமாகப் பேச ஆரம்பித்தாள். அவன் கூப்பிட்டான் என்று கேண்டீனுக்கு போனாள். மூன்று முறை கோவிலுக்குப் போனாள். இரண்டு முறை சினிமாவுக்குப் போனாள்.
                        செந்தர்பாண்டியின் மனைவிவந்து திட்டிவிட்டுப் போனதிலிருந்து இத்தனை நாட்களாக கல்லூரிக்கு மட்டுமல்ல, தெருவுக்குக்கூட அவள் போகவில்லை. கல்லூரியில் மட்டுமல்ல, தெருவில், ஊரில் என்ன நடந்தது என்றுகூட அவளுக்குத் தெரியாது. நாட்கள் எப்படிப் போனது? செந்தூர்பாண்டியின் மனைவி வந்து திட்டிவிட்டுப்போன மறுநாள் விஷயத்தைச் சொல்வதற்காக சாராவுக்கு போன்போட்டாள். அவ்வளவுதான். அதன் பிறகு அவளாக யாரிடமும் பேசவில்லை. செந்தூர்பாண்டியிடமிருந்து போன் வந்துகொண்டேயிருந்ததால் அடக்க முடியாத ஆத்திரத்தில் போனை எடுத்து "ஒங்களுக்குக் கல்யாணமாயிடிச்சா?" என்று கேட்டதற்கு பதில் சொல்லாததால் "ஒங்க பொண்டாட்டி வந்தாங்க. திட்டிட்டுப் போனாங்க" என்று சொன்னதும் போனை அணைத்துவிட்டான். மூன்று நாள் கழித்துத்தான் மீண்டும் அவனிடமிருந்து போன் வந்தது. ஆனால் காந்திமதி போனை எடுக்கவே இல்லை.
காளியம்மா திட்டுவதற்காக மட்டும்தான் இவளிடம் அவ்வப்போது பேசினாள். அதைக்கூடச் செய்யவில்லை ஊக்கி ஆட்டன். இத்தனை நாட்களில் ஒருமுறைகூட இவளுடைய முகத்தைப் பார்க்கவில்லை. அதே மாதிரி காந்திமதியும் அவர்களிடம் ஒருவார்த்தை பேசவில்லை.
அழுதது தெரியக் கூடாது என்று முகத்தைத் துடைத்துக்கொண்டு வீட்டிற்குள் வந்தாள் காந்திமதி. அதுவரை சாதாரணமாகத்தான் பேசிக்கொண்டிருந் காளியம்மா காந்திமதியைப் பார்த்ததும் கோபம் வந்துவிட்டது. "நீயும்தான் படிக்கப் போன? அசிங்கத்தோடவா வீட்டுக்கு வந்த?" என்று சாராவிடம் கேட்டாள். சாராவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. வாயைத் திறக்காமல் உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்த காந்திமதியையும் அவள் பார்க்கவில்லை.
"வீட்டு வேல செஞ்சிருப்பாளா? கூலி வேலக்கிப் போயிருப்பாளா? எங்ககிட்ட காசு பணம் இல்லதான். அதுக்காக இவள கஷ்டப்பட விட்டிருக்கமா? இவ கண்ணுல தண்ணீ வரத்தான் வுட்டிருக்கமா? என்னா காரியம் செஞ்சிருக்கா?" என்று ஆத்திரத்துடன் காளியம்மா கேட்டாள். "காலேஜில படிக்கிற புள்ளைங்க எல்லாரும் செய்யுறத பாத்தா, காந்திமதி செஞ்சது ஒண்ணுமே இல்ல" என்று சொல்லத்தான் சாரா நினைத்தாள். ஆனால் சொல்லவில்லை. பேச்சை மாற்ற வேண்டும் என்று "ஆறு பரீட்ச இருக்கு. ஆறு நாள்தான். மூணு வருஷம் படிச்சது வேஸ்ட்டு ஆயிடும். அனுப்புங்க. பேசுனதையே பேச வேண்டாம்." என்று சொன்னாள்.
"விஷயம் தெரிஞ்சா ஊர் வாய் என்ன பேசுமோ? நான் பொண்ண பெக்கல. பேயதான் பெத்துருக்கன். இருட்டுல திருட்டு நடந்தாலும் வெளிய தெரியாம போவாது. பெண் ஜென்மம் புண்ணு ஜென்மம்ன்னு சொன்னது சரியாதான் இருக்கு. நான் பரீட்சக்கிப் போறன்னு கேட்டாளா அந்த கல்லு மனசுக்காரி. ஒன்னெ வச்சி கேக்குறா. ஆனாலும் நீ வீடேறி வந்து சொல்ற. அதுக்காக அனுப்புறன். போனா அவமானத்தோட வரக் கூடாது. அப்பிடித்தான் வருவன்னா, இப்பவே எங்க தலயில நெருப்ப வச்சிட்டுப் போவச்சொல்லு. இப்பயும் அவள நம்பித்தான் அனுப்புறம். மூணு வருஷம் படிச்சது வீணா ஆவக் கூடாதுன்னு." என்று சொன்ன ஊக்கி ஆட்டன் கண் கலங்கியபடியே எழுந்து வாசலுக்குப் போய் நின்றுகொண்டார்.
"ஒங்கப்பாவும், நானும் துணி கட்டிக்கிட்டு தெருவுல நடக்கணும்ன்னு மனசுல நெனச்சிக்கிட்டுப் போறதா இருந்தா போ. இல்லன்னா பரீட்சயும் வாணாம். ஒரு மண்ணும் வாணாம்" என்று திட்டவட்டமாகக் காளியம்மா சொன்னாள்.
"எதுவும் செய்ய மாட்டா. அவளப் பத்தி எனக்குத் தெரியும். நான் பாத்துக்குறன். நாளக்கி அனுப்புங்க. நான் கிளம்பறன். நேரமாயிடிச்சி" என்று சொல்லிவிட்டு எழுந்து நின்றாள் சாரா. பிறகு காந்திமதியிடம் "நான் கிளம்பறன்" என்று சொல்லிவிட்டு வாசலுக்கு வந்தாள். அவளோடு பேருந்து நிலையம் வரை போக வேண்டும் என்று நினைத்தாள் காந்திமதி. பேருந்தில் ஏற்றிவிட சாராவுடன் காளியம்மாவும், ஊக்கி ஆட்டனும் கிளம்பியதைப் பார்த்த சாரா "வேண்டாம். நான் போயிக்கிறன்" என்று சொன்னதைக் கேட்காமல் "பொட்ட புள்ளய தெருவுல தனியா அனுப்பவா? பஸ் வர நேரம் தெரியாதில்ல" என்று சொல்லி அவளுடன் பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். சாராவை பஸ் ஏற்றிவிட போக முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது.  தன்னைப் பற்றி அவளிடம் காளியம்மாவும் ஊக்கி ஆட்டனும் என்ன சொல்லுவார்கள் என்று யோசித்தாள்.
செந்தூர்பாண்டியின் மனைவி வந்து திட்டிவிட்டு போனதிலிருந்து கல்லூரிக்கும் போக வேண்டாம். பரிட்சையும் எழுத வேண்டாம் என்று ஒரே தீர்மானமாக இருந்தாள். சாரா வந்து பரீட்சை எழுது என்று கட்டாயப்படுத்தி சொன்னதோடு, காளியம்மாவிடவும், ஊக்கி ஆட்டனிடமும் பரீட்சைக்கு அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டாள். அதிசயமாக அவர்களும் அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டார்கள். ஆனாலும் பரீட்சைக்கு போவதா வேண்டாமா என்ற குழப்பம் காந்திமதிக்கு ஏற்பட்டது. ஆனாலும் அரைகுறை மனதுடன் புத்தகங்கள் எங்கே இருக்கின்றன என்று தேட ஆரம்பித்தாள்.
2
                        பரீட்சை எழுதிவிட்டு அறையிலிருந்து வெளியே வந்த காந்திமதி, சாராவுக்காக ராண்டாவில் காத்துக்கொண்டிருந்தாள். பக்கத்து அறையில் மேற்பார்வையாளராக இருந்த செந்தூர்பாண்டி ஜன்னல் வழியாக காந்திமதியைப் பார்த்துவிட்டு வெளியேவந்து "பரீட்ச எப்படி?" என்று ரகசியம்போல கேட்டான். அதற்குப் பதில் சொல்லாமல் எதிராளியைக் கண்டதுபோல் வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு பிள்ளைகள், பேராசிரியர்கள் யாராவது தன்னைப் பார்க்கிறார்களா என்று நோட்டம் பார்த்தாள்.
நீ நாளக்கி பரீட்சைய முடிச்சிட்டு புது பஸ் ஸ்டாண்டுக்கு வா.என்று சொல்லிவிட்டு வேகமாக அறைக்குள் போய்விட்டான்.
        பரீட்சை எழுதும் அறையிலிருந்து சாரா வெளியே வந்ததும், "எப்படி எழுதின?" என்று காந்திமதி கேட்டாள். "ஓ.கே.தான். வா போவலாம்" என்று சொன்ன சாரா கல்லூரியின் பிரதான வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்., அவளோடு காந்திமதியும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள். காலை வேளை பரீட்சையை முடித்துவிட்டு வெளியே வந்த பிள்ளைகள், மதியப் பரீட்சைக்குக் கல்லூரிக்குள் வந்த பிள்ளைகள் என்று கல்லூரியின் மைதானம் முழுவதும் கூட்டமாக இருந்தது.
        பேருந்து நிலையத்திலிருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு, "அடுத்த பஸ்ஸூக்குப் போவலாம்" என்று சாரா சொன்னதற்கு "லேட்டா போனா எங்கம் வைவா" என்று சொன்ன காந்திமதி பேருந்து வருகிறதா என்று பார்த்தாள். பேருந்து வந்ததும் இருவரும் ஏறிக்கொண்டனர்.
        பேருந்திற்குள் கால் வைப்பதற்குக்கூட இடமில்லை. அவ்வளவு கூட்டம். பேருந்து புறப்பட்டு ஐந்து பத்து நிமிஷம்கூடக் கழிந்திருக்காது. காந்திமதியினுடைய போன் மணி அடித்தது. போனை எடுத்து யார் கூப்பிடுவது என்று பார்த்தாள். செந்தூர்பாண்டி என்று தெரிந்ததும் போனை எடுக்காமல் விட்டுவிட்டாள். ஆனால் போன் தொடர்ந்து வந்துகொண்டே இருந்ததைப் பார்த்த சாரா ”அந்த அருதலி பயலா?” என்று கேட்டாள். ஆமாம் என்பது போல் தலையை ஆட்டிய காந்திமதிப் போனை சைலண்ட் மோடில் வைத்தாள். அப்போதும் போன் வந்துக் கொண்டேயிருந்ததால் எரிச்சலாகி “சனியன் புடிச்சவன் எதுக்கு சாவடிக்கிறான்னே தெரியல.” என்று முனகிக்கொண்டே போனை எடுத்து ”பஸ்ஸூல இருக்கன்.என்று சொன்னாள். செந்தூர்பாண்டி "இதுக்கு முன்னாடி நீ பஸ்ஸூலா இருக்கும்போது பேசினதே இல்லியோ?" என்று கேட்டான். அதற்கு காந்திமதி எந்த பதிலும் சொல்லவில்லை.
"நாளக்கி நீ வர."
"சான்சே இல்லெ."
"நீ வர." என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்.
"நிக்கக்கூட முடிய. ஒரே கூட்டம்" என்று காந்திமதி சொன்னதற்கு சாரா பதில் சொல்லாமல் நாளைக்கி எழுத வேண்டிய கடைசிப் பரீட்சையைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள்.
        சாராவின் ஊரான வடகரை வரும்வரை இருவரும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே வந்தனர். வடகரைக்கு அடுத்த ஊர்தான் மேக்கரை. வடகரையிலிருந்து கால் மணிநேரத்தில் மேக்கரைக்குக் பேருந்து வந்ததும் காந்திமதி இறங்கிக்கொண்டாள். பேருந்தை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்துகொண்டியிருந்த போது போன் வந்தது. செந்தூர்பாண்டிதான் கூப்பிட்டான். போனை எடுத்து அடக்க முடியாத ஆத்திரத்துடன் “என்ன?” என்று கோபமாகக் கேட்டாள்.
"நாளக்கி  நீ வரணும். வரலன்னா நீ சாட்டிங்கில பேசுனதயெல்லாம் வாட்ஸப் குருப்ல போட்டுடுவன்." என்று சொன்ன வேகத்திலேயே போனை வைத்துவிட்டான். என்ன இப்படிப் பேசுகிறான்? "மர கழண்டு போச்சோ." என்று நினைத்த காந்திமதி எரிச்சலுடன் வந்து வீட்டின் கதவைத் திறந்தாள்.
        முகம், கைகால் கழுவிக்கொண்டு, சாப்பிட உட்கார்ந்தபோது போனில் செய்தி வந்த சத்தம் கேட்டது. போனை எடுத்துப் பார்த்தாள். "நாளக்கி வரணும். இல்லன்னா நான் சொன்னது நடக்கும்." என்ற செய்தியைப் படித்ததும் கடுமையான கோபம் வந்தது. உடனே போன்போட்டாள். செந்தூர்பாண்டி போனை எடுத்ததும், "எதுக்காக சார் இப்படி மெசேஜ் போட்டு இருக்கீங்க? வெளையாடுறிங்களா? ங்களால நான் இன்னுமா சாவணும்?" என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் "வா. சொல்ன்." என்று சொன்னான்.
"நான் வர மாட்டன்." என்று கடுமையாகச் சொன்னதைக் கேட்காமல் பட்டென்று போனை வைத்துவிட்டான், அவனுக்கு போன்போடுவதா வேண்டாமா என்ற குழப்பம் உண்டாயிற்று. அவனிடம் சண்டை போட வேண்டும் என்ற வெறி உண்டாயிற்று. போன்போட்டாள். போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது காந்திமதிக்குக் கூடுதல் கோபத்தை உண்டாக்கியது. கோபத்தில் அவளால் சாப்பிடக்கூட முடியவில்லை. ”நான் என்ன அவன் பொண்டாட்டியோ. இவ்வளவு அதிகாரம் செய்யுறான்?”
        நாளைக்கு எழுத வேண்டிய பரீட்சைக்குரிய புத்தகங்களை, நோட்டுகளை எடுத்துகொண்டு உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தாள். ஒரு பக்க அளவிற்குக்கூடப் படிக்க முடியவில்லை. ஒரு வரிகூட மனப்பாடம் ஆகவில்லை. எழுந்து வாசலுக்கு வந்தாள். மழை வருவதுபோல் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. தெருவின் இரண்டு பக்கமும் பார்த்தாள். ஆட்கள் நடமாட்டமில்லாமல் இருந்தது. பூட்டியிருந்த எதிர் வீட்டையும், அந்த வீட்டிற்குப் பின்னாலிருந்த தென்னை மரத்தையும், அதற்குப் பின்னாலிருந்த மலையையும் பார்த்தாள். பசியாகவும், தாகமாகவும் இருந்ததால் திரும்பி வீட்டிற்குள் வந்தாள். சாப்பிடப் பிடிக்காததால் தண்ணீர் மட்டும் குடித்தாள். பாயைப் போட்டுப் படுத்தாள். படுத்தபடியே புத்தகத்தை எடுத்துப் புரட்டினாள். நேரத்தைப் பார்த்தாள். மணி ஐந்து.
        கப்பக் கிழங்கு பிடுங்குவதற்குப் போய்விட்டு வந்த காளியம்மா, காந்திமதி படுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, “எதுக்கு மொடங்கி கெடக்க?" என்று கேட்ட வேகத்திலேயே வீட்டிற்குப் பின்புறமாகப் போனாள்.  பாயைவிட்டு காந்திமதி எழுந்தபோதுதான் கப்பக் கிழங்கு பிடுங்குவதற்காகப் போயிருந்த ஊக்கி ஆட்டன் வந்தார். ஒரு வார்த்தைகூடப் பேசாமல் வந்த வேகத்திலேயே முகத்தைத் திருப்பிக்கொண்டு படுத்துக்கொண்டார்.
        வீட்டிற்குள் வந்த காளியம்மா கோபத்துடன், "எதுக்கு ஒக்காந்திருக்க?" என்று கேட்டாள். அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாததால் காந்திமதி பேசாமல் இருந்தாள். தொடர்ந்து கேள்விகேட்டால் காளியம்மாவுக்கு பதில் சொல்ல முடியாதே என்ற பயத்தில் புத்தகத்தை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தாள்.
        பரீட்சைக்குப் படிக்கிறாள் என்பதால் காளியம்மாவே சோறு பொங்க ஆரம்பித்ததோடு வீட்டு வேலைகளையும் தானே பரபரவென்று செய்தாள்.
ஏதாவது பேச வேண்டுமே என்ற எண்ணத்தில் "பரிட்சய நல்லா எழுதினியா?" என்று கேட்டாள். அதற்கு ‘ம்என்று மட்டும்தான் காந்திமதி பதில் சொன்னாள்.
"சோறு திங்கிறியா?" என்று காளியம்மா கேட்டாள்.
"அப்பறமா சாப்புடுறன்" என்று சொல்லிவிட்டு அக்கறையுடன் படித்துக்கொண்டிருப்பதுபோல் பாவனை செய்தாள்.
        காளியம்மாவும் ஊக்கி ஆட்டனும் சாப்பிட ஆரம்பித்தனர். சாப்பிட்டு முடிந்ததும் பாத்திரங்களையெல்லாம் எடுத்து ஒழுங்குபடுத்திய காளியம்மா "தம்பிகிட்ட பேசினியா?" என்று காந்திமதியிடம் கேட்டாள்.
"பேசுன்."
"பாத்து இரு. சீவ போயிட்டு வாரம்."
"சரி."
"கதவ பூட்டிக்க. வார ரெண்டு மணி ஆவும்." என்று கடமைக்குச் சொல்லிவிட்டுக் கப்பக்கிழங்கு சீவுவதற்காக கிளம்பினாள் காளியம்மா. வாசலில் நின்றபடி பீடியைக் குடித்துக்கொண்டிருந்த ஊக்கி ஆட்டனும் காளியம்மாவோடு போனார். அவர்கள் போன மறு கணமே நேரத்தைப் பார்த்தாள். இரவு மணி எட்டு.
        சாப்பிடலாமா என்று யோசித்த போது வளுடைய போனுக்கு செய்தி ஒன்று வந்தது. செய்தியைப் பார்த்தாள். செந்தூர்பாண்டியும் இவளும் சேர்ந்து எடுத்திருந்த செல்ஃபி நிழற்படத்தைப் போட்டு, "வாட்ஸப்பில் பரவும்." என்று இருந்தது. அதைப் படித்ததும் காந்திமதிக்குக் கண் மண் தெரியாத அளவுக்குக் கோபம் உண்டாயிற்று. முகம் வெளிறிப்போயிற்று. "சைக்கோவா இருப்பானோ." என்று நினைத்துக்கொண்டே போன்போட்டாள். போன் எடுக்கப்படவில்லை. அதனால் கூடுதலாகக் கோபம் உண்டாயிற்று.
        செந்தூர்பாண்டியும் காந்திமதியும் சேர்ந்து எடுத்திருந்த நிழற்படத்தையும் அதற்குக் கீழே இருந்த செய்தியையும் மீண்டும் பார்த்தாள். செந்தூர்பாண்டியா இப்படி செய்தது என்று அதிர்ச்சியாக இருந்தது. கோபத்துடன் போன்போட்டாள். போன் எடுக்கப்பட்டதும் "என்ன சார், இப்படி செஞ்சியிருக்கீங்க?" என்று கேட்கும்போதே அவளுக்கு அழுகை வந்துவிட்டது.
"போட்டோவ ஒக்கு மட்டும்தான் இப்ப போட்டிருக்கன். நாளக்கி நீ வரலன்னா வாட்ஸப் குரூப்ல போட்டுடுவன்."
"மிரட்டுறீங்களோ?"
"போட்டோவ மட்டுமல்ல வாட்ஸப்புல நீ சாட்டிங் பண்ணினத எல்லாம் போட்டுடுவன் என்ன."
போடுங்க பாக்கலாம்.” வீராப்பாகச் சொன்னாள்.
"வாயாலியே வட சுட்டுட்டுப் போவலாமின்னு பாக்குறியோ?" என்று கேட்ட வேகத்திலேயே போனின் இணைப்பைத் துண்டித்துவிட்டான். உடனே கோபத்தில் தரையில் எட்டி உதைத்தாள். "வாயாலியே வட சுட்டுட்டுப் போவப் பாக்குறியா?" என்றால் என்ன அர்த்தம் என்று யோசித்தாள். சிறிது நேரம் கழித்துத்தான் அதற்கான பொருள் புரிந்தது. உடனே அவளுக்கு மண்டை கொள்ளாத ஆத்திரம் உண்டாயிற்று. மனம் நிறைந்த வெறுப்பில் சொன்னாள். "சீ."
        வாட்ஸப் குரூப்பில் போட்டால் போடட்டும் என்று நினைத்தாள். அப்படிப் போடுவதற்கு அவனுக்கு துணிச்சல் இருக்காது என்று நினைத்தாள். சாட்டிங்கில் தான் ஒன்றும் தவறாகப் பேசிவிடவில்லையே என்று தன்னையே சமாதானப்படுத்திக்கொண்டாள். விளையாட்டு, பொழுதுபோக்கு, ஜாலி என்று செய்தது வினையாகிவிட்டதே என்று கவலைப்பட்டாள். செல்போனைக் கண்டுபிடித்தவன், கேமரா, இண்டர்நெட்டை கண்டு பிடித்தவன், பேறு கால விடுப்பில் சென்ற மகேஸ்வரி, ஒன்பது மாத காலப் பேறு கால விடுப்பு கொடுத்த அரசாங்கத்தின்  மீதெல்லாம் கோபம் உண்டாயிற்று. "செல்போன் எமனாயிடிச்சு." என்று மனம் கசந்துபோய் சொன்னாள். கோபத்தில் அவளுக்கு தாகம் எடுத்தது. தண்ணீர் குடித்தாள். ஆனால் தாகம் தணியவில்லை. நெஞ்சு சூடு குறையவில்லை. செந்தூர்பாண்டியின் மீது அளவற்ற வெறுப்பு உண்டாயிற்று.
        வீட்டின் பின்பக்க ஜன்னலை திறந்து பார்த்தாள். இருட்டாக இருந்தது, அதனால் கொஞ்ச தூரத்தில் இருந்த குளம் தெரியவில்லை. குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. காற்றில் ஈர வாடை மிகுந்திருந்தது. எந்த நிமிஷமும் மழை வரலாம் என்று நினைத்தாள். ஜன்னல்களைப் பிடித்துக்கொண்டு இருட்டையே பார்த்துக்கொண்டிருந்த காந்திமதி சொன்னாள்,கள்ளப் பய”
        நாளைக்குக் கடைசிப்ரீட்சை. காந்திமதி இனி கல்லூரிக்கு வர மாட்டாள். மகேஸ்வரி நாளைக்கே பணியில் சேர்ந்துவிடுவாள். தன்னுடைய வேலையும் முடிந்துவிடும். இனிமேல் தன்னால் கல்லூரிக்குள் நுழைய முடியாது என்ற எண்ணத்தில்தான் தொந்தரவு செய்கிறானோ என்ற எண்ணம் வந்தது. ஜன்னலைச் சாத்திவிட்டு வந்து செந்தூர்பாண்டிக்கு போன்போட்டாள். போனை எடுத்தான். அவனும் பேசவில்லை. இவளும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து இவளாகத்தான், “என்ன செஞ்சிக்கிட்டு இருக்கீங்க தெரியுமா?”
“ம்.”
"உங்க ஒஃப்க்கு தெரிஞ்சா?"
"தெரியாது."
நான் வரல. பட்ட அசிங்கம் போதும் சார்.
நீ வர.
"நாலு மணிக்குள்ள வீட்டுக்குப் போகலண்டா அம்ம வைவா."
"வையட்டும்."
"எங்கய்யா வைவாரு."
"அப்படின்னா நான் சொன்னது நடக்கும்."
உயிர் போனாலும் வர மாட்டன்..”
"நீ எங்கூட ஒரு நாள் இருக்கணும்."
"நான் என்ன ஒன் பொண்டாட்டியா?"
"நீ இருக்கணும். அவ்வளவுதான்."
"நான் என்ன தேவிடியாளா?"
"அது எனக்குத் தெரியாது."
"நீ இனிமே எனக்கு போன் பண்ணக் கூடாது. மீறி போன் பண்ணீனா ஒன் பொண்டாட்டிகிட்ட சொல்லிடுவன்."
"சொல்லு பாக்கலாம்."
"கல்யாணமாவலன்னு சொல்லி என்னெ ஏமாத்துனதும் இல்லாம, இப்ப மிரட்டவும் செய்றியா?"
"அதெப் பத்தி இப்பப் பேச வேணாம்."
"அப்புறம் எதப் பத்தி பேசறது? ஒன் பொண்டாட்டி வந்து என்னெ திட்டிட்டுப்போனதிலிருந்து நான் படுற கஷ்டம் ஒனக்குத் தெரியுமா?"
"ஒரு நாள் மட்டும் எங்கூட இரு. அதுக்குப் பின்னால ஒன்ன தொந்தரவு செய்ய மாட்டன்."
"இப்படி சொல்றதுக்கு ஒனக்கு வெக்கமா இல்லெ?"
"ஒம் மேல இருக்கிற ஆசயிலதான் கேக்குறன்."
"ஒரு நாளோட ஆச முடிஞ்சிடுமா?"
"முடிஞ்சிடும்."
"இதான் ஒன்னோட காதலா? சீ.போன வை."
"நான் நெனைக்கிறது நடக்கும்."
"நடக்கும். நடக்கும். நான் செத்ததுக்கு அப்பறம்தான் நடக்கும்." என்று சொன்னதைக்கூட கேட்காமல் போனை வைத்துவிட்டான். எப்போது திரும்பிப் பார்ப்பாள், எப்போது சிரிப்பாள், எப்போது வாட்ஸப்பில் பதில் போடுவாள் என்று காத்திருந்தவன்தான். இன்று சட்சட்டென்று போனின் இணைப்பைத் துண்டிக்கிறான். காந்திமதிக்கு அழுகை வந்தது. “பாவப்பட்டது கூப்பிட்டதும் படுக்க வரும்ன்னு நெனைக்கானோ.” இப்படிப்பட்டவனுக்காவா தினம் தினம் செல்ஃபி எடுத்து போட்டோ அனுப்பினோம்? கூப்பிட்டதுமே கேண்டீனுக்கு, கோவிலுக்கு, சினிமாவுக்குப் போனோம் என்று நினைத்தாள் “அப்ப கல்யாணமாயிடுச்சான்னுகூட கேக்க தோணல. மூள வேல செய்யல. சனியன் புடிச்சது.” என்று தன்னையே திட்டிக்கொண்டாள். மனதிற்குள் அடக்க முடியாத ஆங்காரம் உண்டானது, எதிரில் இருக்கும் ஆளை எட்டி உதைப்பதுபோல சுவரில் உதைத்தாள். கல்யாணமாகிவிட்டது என்று சொல்லாதது மட்டுமல்ல, கல்யாணமாகாதவன் எப்படி நடந்துகொள்வானோ அதே மாதிரிதான் கடைசிவரை நடந்துகொண்டான். ”ஆறு மணிக்குமேல போன் போட வேண்டாம். மெசேஜ் அனுப்ப வேண்டாம்ன்னு சொன்னதுக்கு காரணம் அவனுடைய மனைவி வந்து திட்டிய பிறகுதான் புரிந்தது.   கல்யாணமான விஷயத்தை மறைத்ததற்காக என்னுடைய மனைவி திட்டியதற்காக  வருத்தப்படுகிறேன் என்று ஒரு வார்த்தை பேசவில்லை. சமாதானம் செய்வதற்கு எந்த முயற்சியையும் செய்யவில்லை. என்னுடைய மனைவியை திட்டிவிட்டேன். அடித்துவிட்டேன். இனிமேல் உன்னிடம் வர மாட்டாள். உன்னிடம் பேச மாட்டாள் என்பது போல் அவனிடமிருந்து ஒரு சொல்கூட வரவில்லை. அதுதான் காந்திமதியை அதிகமாகக் கஷ்டப்படுத்தியது. அப்படி அவன் சொல்லியிருந்தால், அவனுடைய மனைவி திட்டிவிட்டுப் போனது மறந்துபோயிருக்கும். எதையும் அவன் செய்யவில்லை. எதுவுமே தனக்குத் தெரியாத மாதிரி நடந்ததெல்லாம் தனக்கு சம்பந்தம் இல்லாத மாதிரி அவனால் எப்படி பேச முடிகிறது? இந்த நிலையில் படுப்பதற்கு கூப்பிடுகிறானே அவன் மனிதனா என்று நினைத்ததும் அவனுடைய மனதில் தோன்றிய வார்த்தை “பீ.” அந்த வார்த்தையை வாயால் சொல்லவும் செய்தாள். பிறகு மனம் நிறைந்த வெறுப்பில் காறித் துப்பினாள்.
        பசித்தது. தாகமாக இருந்தது. ஆனால் சாப்பிட முடியவில்லை. தண்ணீரைக்கூடக் குடிக்க முடியவில்லை. மனதில் ஆங்காரம் உண்டாயிற்று. தரையில் கிடந்த தலையணையை எட்டி உதைத்தாள். படுக்கலாம் என்று படுத்தாள். தூக்கம் வரவில்லை. விளக்கை அணைத்தால் தூக்கம் வரும் என்று விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்துக்கொண்டாள். அப்படியும் தூக்கம் வரவில்லை. நாளைக்கு எழுத வேண்டிய பரீட்சையின் பாடங்களை நினைவுக்குக் கொண்டுவர முயன்றாள். பாடங்கள் நினைவுக்கு வரவில்லை.
        செந்தூர்பாண்டி தனியார் பெண்கள் கல்லூரி என்பதால் வரும்போதும் சரி, கல்லூரியை விட்டு வெளியே போகும்போதும் சரி குனிந்த தலை நிமிராமல்தான் வருவான், போவான். வகுப்பில் பாடம் எடுக்கும்போதும் பிள்ளைகளின் முகத்தைப் பார்த்துப் பேச மாட்டான். மற்ற பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களிடமும் அதிகம் பேச்சு வைத்துக்கொள்ள மாட்டான். பிள்ளைகளிடம் பேசும்போதுகூட "வாங்க, போங்க." என்றுதான் பேசுவான். வயது முப்பதுக்குள்தான் இருக்கும். பார்ப்பதற்கு முரடன் மாதிரி தெரிய மாட்டான். அப்படிப்பட்டவனா மிரட்டுகிறான்? அவன் உண்மையாகவே என்னதான் நினைக்கிறான் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்று அவளுக்கு தோன்றியது. உடனே போன்போட்டாள். போன் எடுக்கப்படவில்லை. ஆனால் செய்தி வந்தது. செய்தியைப் பார்த்தாள். காந்திமதி இதுவரை செந்தூர்பாண்டியோடு வாட்ஸப்பில் சாட்டிங் செய்திருந்த அத்தனையையும் ‘ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து அனுப்பியிருந்தான். அதோடு "இதெல்லாம் வாட்ஸப் குரூப்பில் வரும்." என்றும் போட்டிருந்தான்.
        காந்திமதிக்குத் திகிலாகிவிட்டது. இதுவரை பொய்யாகத்தான் மிரட்டுகிறான் என்று நினைத்தாள். இப்போதுதான் அவன் நிஜமாகவே மிரட்டுகிறான் என்பது தெரிந்தது. பயந்துபோய் என்ன இப்படி இருக்கிறான் என்று யோசித்தாள். ஏன் இப்படித் தொந்தரவு செய்கிறீர்கள் என்று கேட்பதற்காக போன் போட்டாள். போனை அவன் எடுக்கவில்லை. அவனுடைய மனைவி போனை எடுத்துவிடுவாளோ என்ற கவலை நெருப்புப் போல சுட்டுகொண்டிருந்தாலும் மீண்டும் மீண்டும் போன் போட்டாள். அவன் எடுக்கவில்லை. போன்போட்டு, போன்போட்டு சலித்துப்போனாள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் படபடப்புடன் சாராவுக்கு போன்போட்டாள். போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்ததும் அவளுக்கு மண்டையே வெடித்துவிடும் போல் இருந்தது. "எதுக்கு ஆப் பண்ணி வச்சிருக்கா." என்று திட்டினாள். தொடர்ந்து சாராவின் எண்களுக்கு போன் போட்டுக்கொண்டேயிருந்தாள். அவள் போன்போட்ட விதம் சாராவிடம் பேசிவிட்டால் எல்லாப் பிரச்தசினைகளும் தீர்ந்துவிடும் என்பதுபோல் இருந்தது.
இரண்டாயிரத்துப் பதிமூன்றில் பி.எஸ்.ஸி. கணினி பிரிவில் சேர்ந்த அன்றுதான் சாரா பாத்திமா அறிமுகமானாள். சாரா பாத்திமா என்று பெயர் இருந்தாலும் எல்லோரும் அவளை சாரா என்றுதான் கூப்பிடுவார்கள். வகுப்பிலேயும், கல்லூரியிலேயும் காந்திமதிக்குப் பிடித்த ஒரே ஆள் அவள் மட்டும்தான். பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துப்போக வைக்கிற முகம் அவளுக்கு இருந்தது. கல்யாணப் பெண் மாதிரி காதுகளில் ஜிமிக்கி போட்டிருப்பாள். சிவப்பு நிறப் புடவைதான் அதிகம் கட்டுவாள். கால்மேல் கால் போட்டுத்தான் உட்காருவாள். பேராசிரியர்களிடம் தயக்கம் இல்லாமல் பேசுவாள். கேள்விகள் கேட்பாள். பிள்ளைகளுக்கும் பேராசிரியைகளுக்கும்  விதவிதமாகப் பட்டப் பெயர் வைப்பாள். அவள் மற்றவர்களுக்குப் பட்டப் பெயர் வைத்தது போலவே பிள்ளைகளும், பேராசிரியைகளும் அவளுக்கு "ஊர் சங்கு." என்று பட்டப் பெயர் வைத்திருந்தனர். அதற்குக் காரணம் இருந்தது. சாரா வாயைத் திறந்தால் மூடவே மாட்டாள். "எதுக்கு வாயப் பூட்டாம பேசுற?" என்று யாராவது கேட்டால் "வீட்டுல போயி பேச முடியாது. ஆளா இருப்பாங்க." என்று சொல்லிச் சிரிப்பாள். பேருந்தை விட்டு இறங்கியதுமே பர்தாவைக் கழற்றினால் கல்லூரியை விட்டுப் பேருந்தில் ஏறப் போகும்போதுதான் மீண்டும் போடுவாள் "துலுக்கக் குட்டி என்ன இப்பிடி திரியுறா?" என்று யாராவது கல்லூரிக்குள் சொன்னால் "துலுக்கக் குட்டியும் பொண்ணுதான். நான் போட்டிருக்க ட்ரஸ் நாலு பேருக்கு தெரியாண்டாமா?" என்று சொல்வாள். கைக்கு இரண்டு மோதிரம் போட்டிருப்பாள். வலது கை நிறைய கண்ணாடி வளையல்களை மாட்டியிருப்பாள். அதனால்அவுங்கத்தா பீடி கட வச்சியிருக்காரு. கேரளாவுக்கு போற பீடி கொண்டார காசால பவுசு காட்டுறாஎன்று பிள்ளைகள் சொல்வதைக் காதில் வாங்க மாட்டாள். வகுப்பிலுள்ள மற்ற பிள்ளைகளையும்விட அவளோடு மட்டும்தான் காந்திமதிக்கு மனதிலிருக்கும் விஷயங்களைப் பேச முடியும்.
                        சாரா அழகாக இருப்பாள். அவளைப் போன்ற அழகான பிள்ளைகள் வகுப்பிலும், கல்லூரியிலும் பல பேர் இருக்கிறார்கள். இருபத்தி நான்கு மணிநேரமும் வாட்ஸப்பிலேயே இருக்கக்கூடிய பிள்ளைகளும் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு எதற்காகத் தன்னைப் பிடித்தான்? தன்னிடம் செய்வதுபோல் சாராவிடம் செய்திருந்தால் இந்நேரம் செந்தூர்பாண்டியை வெட்டிப்போட்டிருப்பாள். ஊரைக் கூட்டியிருப்பாள். அவ்வாறு ஏன் தன்னால் செய்ய முடியவில்லை என்று தனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டாள்.
        பத்தரை மணிக்குத்தான் சாராவிடமிருந்து போன் வந்தது. மணி அடிக்கிற சத்தம் கேட்டதுமே காந்திமதிக்குப் போன உயிர் திரும்பி வந்ததுபோல இருந்தது. போனை எடுத்து "ஹலோ" என்று சொல்லக் கூட அவளுக்கு முடியவில்லை. அழுகைதான் பொங்கிக்கொண்டு வந்தது. காந்திமதி அழுகிற சத்தத்தைக் கேட்டு "எதுக்கு அழுவுற?" என்று பலமுறை கேட்ட பிறகுதான் மூக்கை உறிஞ்சிகொண்டே விஷயத்தை சொன்னாள். விஷயத்தைக் கேட்ட சாரா "இதுக்கா அழுவுற? ஒரு நாளக்கி எத்தன பேர்கூட சாட்டிங் பண்றம்? அவன் கெடக்கான். அவன் நெம்பர கொடு. நான் பேசிக்கன். படிக்கிற பசங்களோட தொல்ல கம்மி. வாத்தியாருங்க தொல்லதான் அதிகம்." என்று சொல்லி செந்தூர்பாண்டியின் வாட்ப் எண்களை வாங்கிக்கொண்டு போனின் இணைப்பைத் துண்டித்தாள். மறுகணம் காந்திமதிக்குப் படபடப்பு உண்டாயிற்று. செந்தூர்பாண்டி போனை எடுப்பானா, எடுக்க மாட்டானா, என்ன பதில் சொல்வான்? தன்னை மிரட்டுவது போலவே அவளையும் மிரட்டுவானோ, பதிலுக்கு சாரா என்ன பேசுவாள் என்பது பற்றியே யோசித்துக்கொண்டிருந்தாள். ஐந்து நிமிஷம் கழித்து சாராவிடமிருந்து போன் வந்தது. பதற்றத்துடன் எடுத்தாள்.
"அந்த பொண்ணப் பய போன ஆப் பண்ணி வச்சிருக்கான்.  நான் மெசேஜ் பண்ணியிருக்கன். கூப்புடட்டும். நான் பேசிக்கன்." என்று சாரா சொன்னதும் "என்ன செய்யட்டும்?" என்று லேசாக அழுதுகொண்டே காந்திமதி கேட்டாள்.
"போன எடுக்கட்டும். நான் பேசிக்கன். நீ ஒறங்கு. அள்ளி முத்தற மாரியா இருக்கான் அந்த பன்னாடி பய? அந்த மயிராண்டி கெடக்கான்." என்று சொல்லிக் கால் மணிநேரத்திற்கு மேல்  மறுநாள் எழுத வேண்டிய பரீட்சையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்துவிட்டு போனை வைத்தாள் சாரா.
        சாராவிடம் பேசிய பிறகுதான் காந்திமதிக்குக் கொஞ்சம் நிம்மதி வந்தது. புத்தகத்தை எடுத்துப் படித்தாள். ஒரு கேள்விக்கான பதிலைக்கூட அவளால் மனப்பாடம் செய்ய முடியவில்லை. செந்தூர்பாண்டி சொல்கிறபடி நாளை சாயங்காலம் புதிய பேருந்து நிலையத்திற்குப் போகாவிட்டால் என்ன நடக்கும்? பரீட்சை எழுதிவிட்டு வெளியே வரும்போது, இல்லையென்றால் பஸ்ஸில் ஏறிவரும்போது ஏதாவது தொந்தரவு செய்வானோ? அப்படிச் செய்தால் பேருந்தை விட்டு இறங்கிப் போய்க் கல்லூரி முதல்வரிடம் சொல்லிவிடலாம் என்று நினைத்ததும் மனதில் கொஞ்சம் நிம்மதி உண்டாயிற்று. மறுநிமிஷமே முதல்வரிடம் சொன்னால், அவர் துறைத் தலைவரிடம் சொல்வார், துறைத்தலைவர் வகுப்பாசிரியரிடம் சொல்வார். அப்படியே கல்லூரி முழுவதும் விஷயம் பரவிவிடும். அதோடு நாளைக் காலையோடுதான் செந்தூர்பாண்டி கல்லூரியை விட்டுப் போய்விடுவானே என்ற எண்ணம் வந்ததும், முதல்வரிடம் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தாள். பரீட்சை எழுதாமல் விட்டுவிட்டால் என்ன என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது. பரீட்சை எழுதாமல் விடுவதுதான் நல்லது என்று முடிவெடுத்த மறு நிமிஷமே போன்போட்டு சாராவிடம் சொன்னாள். "வாய மூடு. பன்னி தின்ன பயலுக்குப் பயந்துகிட்டு நீ பரீட்ச எழுத வல்லங்க. சாட்டிங் செய்யாத பிள்ள நம்ப காலேஜில உண்டா? நான் பேசிக்கன். நீ படி. சாட்டிங்கில ஒரே நேரத்தில பல குதிரயில சவாரி செய்ற பிள்ளயெல்லாம் நம்ப காலேஜிலியே இருக்காளுங்க." என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் சாரா. காந்திமதி தூங்க முயன்றாள். பரீட்சைக்குப் போகும்போது துணைக்கு அப்பா, அம்மாவை அழைத்துக்கொண்டு போகலாமா என்று யோசித்தாள். அப்படிக் கூப்பிட்டால் பிரச்சினை  பெரிதாக ஆகிவிட்டதோ என்று எண்ணி அழுதுமாய்வார்களே என்ற எண்ணம் வந்ததும், எது நடந்தாலும் காளியம்மாவிடமோ, ஊக்கி ஆட்டனிடமோ வாயைத் திறக்கக் கூடாது என்று தீர்மானமாக முடிவெடுத்தாள்.
        படிக்கலாம் என்று புத்தகத்தை எடுத்தாள். படித்தாள். ஆனால் படித்தது எதுவும் நினைவில் நிற்கவில்லை. திடீரென்று அவளுடைய மனதில் செந்தூர்பாண்டிக்கு போன்போட்டு "நாளக்கி வரல. திங்கக் கிழம வரன்." என்று சொல்லிவிடலாம். பிறகு போனின் எண்களை மாற்றிவிடலாம் அல்லது, அவனுடைய எண்களை ‘பிளாக்’ செய்துவிடலாம். அது நல்ல திட்டமாக இருந்தது. அவனிடம் பேசும்போது சாதாரணமாகப் பேச வேண்டும். கோபமாகவோ, எடுத்தெறிந்தோ, விரைப்பாகவோ பேசக் கூடாது என்று தனக்குள் திட்டம்போட்டுக் கொண்டு செந்தூர்பாண்டிக்கு போன்போட்டாள். போன் எடுக்கப்படாததால் "திங்கக்கிழ வரன். ஓ.கே. வா?" என்று செய்தி அனுப்பினாள். அடுத்த சில நொடிகளில் இவளுடைய திட்டம் தெரிந்ததுபோல் "நோ." என்று செய்தி வந்தது. ”பெறவா பயலா இருப்பானோ.” என்று நினைத்துக்கொண்டு "கால் மி." என்று செய்தி அனுப்பினாள். அதற்கு எந்தப் பதிலும் வரவில்லை. அதனால் போன் போட்டாள். எடுக்கவில்லை. "கிரிமினலாக இருக்கானே." என்று சொன்னாள். "கால் மி." என்று  மீண்டும் செய்தி அனுப்பினாள். அதற்கும் பதிலில்லாததால் கோபம் தலைக்கு ஏறியது. போனை அணைத்து வைத்துவிடலாமா? அப்படி செய்தால் அவன் என்ன செய்கிறான் என்பது தெரியாமல் போய்விடுமோ என்று யோசித்தாள். இதுவரை தன்னுடைய செல்போன் எண்களை மாற்றாதது தவறு என்று நினைத்தாள். அவன் சொல்கிறபடி போய் என்னதான் செய்கிறான் என்று பார்க்கலாம் என்று ஒரு கணம் தோன்றியது. மறு கணமே அவளுடைய மனம் புது விதமாகச் சிந்தித்தது. அவன் சொல்கிற இடத்துக்குப் போய், அவன் பேசுவதையெல்லாம் போனில் பதிவு செய்துகொண்டு வந்து, இப்போது அவன் மிரட்டுவதுபோல் நாமும் மிரட்டினால் என்ன? நல்ல திட்டமாகத் தோன்றியது. "அவன் பிளாக்மெயில் செஞ்சா. நானும் செய்வன் என்ன." என்று சொன்னாள். மனம் தெளிவாகிவிட்டதுபோல், உடலில் கொஞ்சம் தெம்பு வந்துவிட்டதுபோல் இருந்ததால் சென்று தண்ணீர் குடித்தாள். பிறகு திரும்பி வந்து பாயில் உட்கார்ந்ததும் ஒரு சந்தேகம் வந்தது. அவனைப் பார்க்கப் போவதை, அவனோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதை, சேர்ந்து டீ, காபி குடிப்பதையெல்லாம் நிழற்படமாக எடுத்து வைத்துக்கொண்டு பின்னால் மிரட்டினால் என்ன செய்வது? "போலீசுக்கு போவன்."
        போலீசுக்குப் போகலாமா? பொண்டாட்டி இருக்கு. புள்ள இருக்குன்னு தெரிஞ்ச பிறகு எதுக்கு அவன்கூட சுத்துன? இப்ப ஏன் புடிக்கலன்னு வர? புது ஆள் புடிச்சிக்கிட்டியா? சாட்டிங்கில கொஞ்சிகொஞ்சி பேசிட்டு இப்ப வந்து நடிக்கிறியோ?" என்றுதான் கேட்பார்கள். போலீசுக்குப் போனால், விஷயம் பத்திரிகைகளுக்குப் போகும். தொலைக்காட்சிகளுக்குப் போகும் என்று நினைத்ததுமே காந்திமதிக்கு உடல் பதறியது. குலை நடுங்கிப்போயிற்று. கண்களில் கண்ணீர் துளிர்த்து நின்றது.
        நிஜமாகவே வாட்ஸப் குருப்பில் போட்டுவிடுவானா? "போட்டா எனக்கு மட்டுமா அசிங்கம்?" என்று வாய்விட்டுச் சொன்னாள். அதன் பிறகுதான் அவளுடைய மனம் கொஞ்சம் சமாதானமடைந்தது. விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தாள்.
        செந்தூர்பாண்டியின் மனைவிக்கு போன் போட்டுச் சொல்லிவிடலாமா என்று யோசித்தாள். ரொம்பவும் தொல்லை செய்தால் அப்படிதான் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாள். அதே நேரத்தில் அவளுடைய எண்களைக் கண்டுபிடிப்பது எப்படி என்ற குழப்பம் உண்டாயிற்று. ஆளைப் பார்த்ததால்தான் தொந்தரவு செய்கிறானா? பரீட்சைக்குப் போகாமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பான்? யோசித்துயோசித்து அவளுக்கு மண்டைக் குழம்பிப் போயிற்று.
        காந்திமதி முதன் முதலாகத் தன்னுடைய வீட்டைப் பற்றி, அப்பா, அம்மா, தம்பி பற்றி யோசித்தாள். சின்னதாகச் சமைக்கிற இடம், படுக்கிற இடம், குளிக்கிற இடம், அவ்வளவுதான் வீடு. அதுகூட மலையை ஒட்டி புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டது. வீட்டைத் தவிர நிலமென்று ஒரு துண்டு அளவிற்குக்கூட இல்லை. தம்பி பரமேஸ்வரன் பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருக்கிறான். அப்பா தேங்காய் இறக்குவதற்குப் போவார். நூற்றிஐம்பது ரூபாய் கிடைக்கும். இரவில் கப்பக் கிழங்கு சீவல் போடுவதற்கு போனால்ருநூறு ரூபாய் கிடைக்கும். அம்மா தேங்காய் சுமப்பதற்குப் போவாள். நூறு ரூபாய் கிடைக்கும். இரவில் கப்பக் கிழங்கு சீவல் போடுவதற்குப் போனால் நூற்றி ஐம்பது ரூபாய் கிடைக்கும். மழைக்காலத்தில் முஸ்லிம் பெண்கள் மாதிரி பீடி சுற்றுவாள். உடம்புக்கு ரொம்பவும் முடியவில்லை என்றால்தான் இருவரும் வீட்டில் இருப்பார்கள். மற்ற நாட்களில் இரவும், பகலும் வேலைக்குத்தான் போவார்கள். ஆனால் காந்திமதியை ஒரு நாள்கூட “வேலைக்குப் போ.” என்று இதுவரை சொன்னதில்லை. விடுமுறை நாட்களில் காந்திமதி தானாகவே பீடி சுற்றுவாள். பீடி சுற்றியதில் வந்த காசைச் சேர்த்துவைத்துதான் விலை கொண்ட செல்போன் வாங்கினாள்.
        கல்லூரியில் சேர்ந்த பிறகு தினமும் பேருந்திற்காக நாற்பது ரூபாய் ஊக்கி ஆட்டன் கொடுப்பார். பணம் இல்லாதபோது, பணம் இல்லை என்று சொல்லாமல் "நாளக்கி காலேஜிக்குப் போகாண்டாம்." என்று மட்டும்தான் சொல்வார். அப்படிச் சொல்லும்போது அவருடைய குரலில் உயிர் இருக்காது. அப்போது அவருடைய  முகமும் வாடிப்போய் இருக்கும்.
 "பிள்ளய எதுக்கு கெட்டிக் கொடுக்காம வச்சிருக்க?" என்று யாராவது கேட்டால் "எம் பிள்ள நல்லா படிக்கா. அவள போயி எதுக்கு கெட்டிக் கொடுக்க? பதினெட்டு வயசிலியே பிள்ள பெக்கவா? எம் பிள்ளய தேங்கா செமக்கவும், கப்பக் கிழங்கு புடுங்கவும், சீவல் போடவும் அனுப்ப மாட்டன். தோளு பை மாட்டிக்கிட்டு கவர்மண்டு வேலக்கிலா போவா" என்று சொல்லும்போது காளியம்மாவின் முகம் அவ்வளவு மலர்ச்சியாக இருக்கும். வாயெல்லாம் சிரிப்பாக இருக்கும். ஊக்கி ட்னின் முகத்தையும், காளியம்மாவின் முகத்தையும் நினைத்துப் பார்த்ததுமே சரம்சரமாக காந்திமதியின் கண்களிலிருந்து கண்ணீர் இறங்கியது. "காந்திமதி அம்மன் தொண இருக்கா. ஊக்கி ஆட்டன் மாடசாமி தொண இருக்கா. பரீட்சக்கிப் போவன். எந்த மயிராண்டி என்னா செய்யுறான்னு பாக்கிறன். மீறினா அவன் பொண்டாட்டிக்கிட்டதான் நேரா போவன்." தனக்குத்தானே வீம்பாகச் சொல்லிகொண்டு விர்ரென்று எழுந்து விளக்கைப் போட்டாள். தண்ணீர் குடித்தாள். புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள். பாடங்கள் மனப்பாடமாயின.
        சீவல் போட்டுவிட்டு காளியம்மாவும், ஊக்கி ஆட்டனும் வீட்டுக்கு வரும்போது மணி இரண்டரை, காந்திமதி படித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த காளியம்மா "நீ இன்னும் ஒறங்குலியோ. அப்பிடி என்ன கெடக்கு படிக்க?" என்று கேட்டாள். காந்திமதியின்மீது எரிச்சல் இருந்தது. கோபம் இருந்தது. ஆனாலும் படிக்கிறாளே என்றுடீ குடிக்கிறியா?” என்று கேட்டுவிட்டு தானாகவே டீ போட்டுக்கொண்டு வந்து கொடுத்தாள். பாலில்லாத சூடான டீயைக் குடிக்கும்போது காந்திமதியின் கண்களிலிருந்து இறங்கிய கண்ணீர் தரையில் சொட்டியது.
                                                                                                                                                                        3
        ஆறு மணிக்கே எழுந்தாள். குளித்தாள். சாப்பிடாமலேயே எட்டு மணிப் பேருந்தைப் பிடிப்பதற்காக கிளம்பினாள். கப்பக் கிழங்கு பிடுங்குவதற்காகக் கிளம்பிக்கொண்டிருந்த காளியம்மாவிடம் சொல்லிவிட்டு, பரீட்சைக்குரிய புத்தகம், நோட்டு என்று எடுத்துக்கொண்டாள். வாசலில் பீடி குடித்துக்கொண்டிருந்த ஊக்கி ஆட்டனின் முன் வந்து நின்றாள். அவர் எதுவும் பேசாமல், ஆளைப் பார்க்காமல் பணத்தைத் தரையில் வைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார். புதுப் பழக்கமாக இந்த ஆறு நாட்களாகத்தான் தெரு நாய்க்குச் சோறு வைப்பதுபோல பேருந்துக்கான பணத்தைத் தரையில் வைக்க ஆரம்பித்தார். காந்திமதி அவருடைய முகத்தைப் பார்க்காமலேயே பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவாள். இப்போதும் அப்படித்தான். ஒரு வார்த்தை பேசாமல் பணத்தை எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கினாள். விடுவிடுவென்று பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
        பேருந்தில் ஏறியதும் சாராவுக்கு போன்போட்டு "பஸ் ஸ்டாண்டுக்கு வந்திட்டியோ?" என்று கேட்டாள். "இன்னம் பத்து நிமிஷத்தில பஸ் வந்திடும்." என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள். பிறகு புத்தகத்தை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தாள். வடகரையில் பேருந்து நின்றதும் சாரா ஏறி வந்து காந்திமதி பிடித்து வைத்திருந்த இடத்தில் உட்கார்ந்தாள்.
"எதுக்கு மொகம் வீங்கி கெடக்கு?" என்று கேட்ட சாராவிடம் செந்தூர்பாண்டியை எப்படி சமாளிப்பது என்று கேட்டாள். அது பற்றியே கல்லூரியின் வாசலில் பேருந்துவந்து நிற்கும்வரை இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
        பேருந்தில் வரும்போது பேசி வைத்திருந்தபடியே இருவரும் தனியாக வந்தனர். காந்திமதி செந்தூர்பாண்டிக்கு போன்போட்டு "எங்க சார் இருக்கீங்க? கொஞ்சம் பேசணும். வரிங்களா?" என்று கேட்டாள். "கேண்டீனுக்கு வா" என்று செந்தூர்பாண்டி  சொன்னதற்கு "அங்க புள்ளைங்க இருக்கும். புரபஸர்ஸ் இருப்பாங்க. நம்ப லேபுக்கு வாங்க. நான் அங்க இருக்கன்." என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள். பிறகு காந்திமதியும் சாராவும் கணினி ஆய்வகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
"நீ பேச கூடாது. நான் பேசிக்கன். கோவத்த காட்டக் கூடாது. கண்டுபிடிக்கக் கூடாது. புரியுதா?" என்று சாரா கேட்டாள். புரிகிறது என்பதுபோல் காந்திமதி தலையை மட்டும் ஆட்டினாள். கணினி ஆய்வகம் திறந்திருந்தது. பேராசிரியர்கள் யாருமில்லை. சுடலை மாடத்தி பெருக்கிக்கொண்டிருந்தாள். திட்டமிட்டபடி நேராக வந்து ஒரு கணினியை ஆன் செய்துவிட்டு நாற்காலியில் சாரா உட்கார்ந்துகொண்டு மவுசை முன்னும் பின்னுமாக அசைக்க ஆரம்பித்தாள். மாணவிகள், பேராசிரியர்கள் யாராவது உள்ளே வருகிறார்களா என்று பார்த்தாள் காந்திமதி.
        கணினி ஆய்வகத்திற்குள் வந்த செந்தூர்பாண்டி காந்திமதியுடன் சாராவும் இருப்பதை கண்டு திடுக்கிட்டுப் போய் நின்றுவிட்டான். வாசல் பக்கம் பார்த்தான். பெருக்கிக்கொண்டிருந்த சுடலை மாடத்தியைப் பார்த்தான். பிறகு இயல்பாக இருப்பதுபோல் அவசரமில்லாமல் நடந்து சாராவும், காந்திமதியும் இருந்த இடத்திற்கு வந்தான். அவன் வந்ததும் நாற்காலியை விட்டு எழுந்துகொண்ட சாரா "ஒக்காருங்க சார்" என்று சொன்னாள், உட்காருவதா, வேண்டாமா என்று யோசித்த செந்தூர்பாண்டி சுடலை மாடத்தியைப் பார்த்துகொண்டே தயக்கத்துடன் நாற்காலியில் உட்கார்ந்தான். கணினியில் முக்கியமான வேலை செய்வதுபோ, கணினியின் திரையை மட்டுமே பார்த்தவாறு இருந்தான். அவனுடைய முகத் தோற்றத்தை வைத்து சாதாரணமாக இருக்கிறானா, கோபமாக இருக்கிறானா என்று காந்திமதியால் கண்டுபிடிக்க முடியவில்லை. “நடிக்கானோ?” என்று காந்திமதி நினைத்தாள்.
"எதுக்கு சார் அப்படி மெசேஜ் போட்டீங்க?" என்று கேட்டாள் சாரா.
"......."
"நல்ல சார்னு, சாட்டிங்ல பேசினா, பேசுனதயெல்லாம் வாட்ப் குருப்ல போட்டுடுவன்னு மிரட்டுவீங்களோ?" என்று சாரா கேட்டாள்.
கணினியின் திரையிலிருந்து பார்வையை விலக்காமலேயே லேசாகச் சிரிக்க மட்டுமே செய்தான் செந்தூர்பாண்டி.
ஒங்க பொண்டாட்டிக்கு தெரிஞ்சா பேய் ஆடுற மாதிரிதான் ஆடுவாங்க தெரியும்தான?என்று சாரா கேட்டதும் செந்தூர்பாண்டியின் முகம் இறுகிப்போய்விட்டது.
"நீங்க எங்களுக்கு புரபஸர் சார்." என்று சொல்லிவிட்டு வாசல் பக்கம் பார்த்தாள்.
 "சாரி."
"கடசி பரீட்ச அன்னிக்கி மூட்அவுட் செஞ்சிட்டிங்க. ராத்திரிபூரா அவ படிக்க." என்று அடங்கின குரலில் சொன்னாள் சாரா.
"சாரி."
இயல்பாகக் கேட்பது போல் "அவ்வளவு தேடுதோ?" என்று சாரா கேட்டாள். அதற்கு செந்தூர்பாண்டி செயற்கையாக சிரிக்க மட்டுமே செய்தான்.
அப்போது இரண்டு பேராசிரியர்கள் கணினி ஆய்வகத்தை நோக்கி வருவது தெரிந்ததும் "சாருங்க வாராங்க. நாங்க போறம். ஏற்கனவே பிரச்சனயாடிச்சி. இதோட விட்டுங்க சார்." என்று சொன்ன சாரா, கெஞ்சுவது மாதிரி "அவள அழ வைக்காதிங்க என்ன. மீறினா ஒங்க பொண்டாட்டிகிட்டத்தான் விஷயம் போவும்." என்று சொல்லிவிட்டு வாசல்படியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். காந்திமதி சாராவுடன் சேர்ந்து நடந்து கணினி ஆய்வகத்தை விட்டு வெளியே வந்தாள். இருவரும் பரீட்சை நடக்க இருக்கும் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
”இன்னியோட அந்த பன்னாடி பயல கை கழுவி விட்டுடு." என்று சாரா சொன்னாள். காந்திமதி தங்களுடைய நாடகம் வெற்றி பெற்றுவிட்டதாகவே நம்பினாள். பிறகு ரகசியக் குரலில் சொன்னாள். “காலாடி பயலா இருப்பான் போல.”
4
பரீட்சை முடிந்ததும் பேருந்தைப் பிடித்து வீட்டிற்கு வந்தாள். நேற்றிரவு சாப்பிடாதது, தூங்காதது, காலையில் சாப்பிடாதது, பரீட்சை எழுதியது என்று எல்லாமும் சேர்ந்து காந்திமதியைக் களைப்படையச் செய்திருந்த. வீட்டிற்குள் வந்த வேகத்தில் நின்றுகொண்டே சாப்பிட்டாள். பாயைப் போட்டுப் படுத்துக்கொண்டு, வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று தன்னுடைய அம்மாவுக்குச் சொல்வதற்காக போனை எடுத்து ஆன் செய்தாள். போன் ஆன் ஆனதும் செய்தி வந்திருப்பது தெரிந்தது. செந்தூர்பாண்டிதான் அனுப்பியிருந்தான். “இந்த நாயோட தொல்ல தீராதுபோல இருக்கே.” என்று சொல்லிக்கொண்டே செய்தியைப் பார்த்தாள். யூ டியூப்பிற்கான இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. சினிமா, நகைச்சுவை, பட்டிமன்றப் பேச்சுக்கான இணைப்பை கொடுத்திருப்பானோ என்று சந்தேகப்பட்டுக்கொண்டே இணைப்பிற்குள் சென்றாள், காந்திமதி நடந்து வருவது மாதிரி ஒரு நிழற்படம் வந்தது. அதற்கடுத்து அவன் கேட்டான் என்று இவள் செல்ஃபி எடுத்து அவனுக்கு அனுப்பியிருந்த பத்துக்கும் அதிகமான நிழற்படங்கள் வரிசையாக வந்தன. அதற்கடுத்து செந்தூர்பாண்டியுடன் சாட்டிங்கில் இவள் பேசியது மட்டும்  வந்தது. அதன் பிறகு இவளுடைய முகத்தை வைத்து மார்பிங் செய்யப்பட்ட விதவிதமான நிர்வாணப் படங்களும், ஆபாசமான படங்களும், வீடியோக்களும் வரிசையாக வந்துகொண்டிருந்ததைப் பார்த்த காந்திமதிக்கு தரை அப்படியே கீழே இறங்குவது மாதிரி இருந்தது. மூச்சே நின்றுவிடும்போல் இருந்தது. வியர்த்தது. உடல் ஜில்லிட்டுப் போயிற்று. கை கால்கள் உதறலெடுத்தன. வெறிகொண்டது போல் தரையில் ஓங்கி அடித்து போனை உடைத்தாள். வாய்விட்டுக் கதறி அழுதாள். உடலிலிருந்து வழிந்த வியர்வை காலின் வழியாகத் தரையில் இறங்கியது. அவளுக்கு தலைத்தெறிக்க எங்காவது ஓட வேண்டும் போல் இருந்தது. ஆத்திரத்தில் கத்தினாள். ”கொள்ளி முடிஞ்சி போவான்”
        இனி என்ன நடக்கும்? வாட்ஸப் வட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல, உலகிலுள்ளவர்களெல்லாம் பார்ப்பார்களே என்று நினைத்ததுமே பயத்தில் அவளுக்குச் சிறுநீரே வந்துவிட்டது. பிளாக் செய்ய முடியுமா? பிளாக் செய்வதற்குள் எத்தனை ஆயிரம் பேர் பார்ப்பார்கள்? வாட்ஸப் குருப்பில் மட்டும் போட்டிருந்தால் ‘ரீ கால் ஆப்’ பயன்படுத்தி சாட்டிங் செய்த விஷயங்களை நீக்கிவிடுவாள் என்பதற்காக யூ டியூப்பில் போட்டுவிட்டிருப்பதை நினைத்ததும். ”சைக்கோவாக இருப்பானோ?” என்று அவளுடைய வாய் முணுமுணுத்தது. நெஞ்சு வெடிக்க அழ வேண்டும்போல் இருந்தது. ”எமன் போல.” என்ற வார்த்தையை அழுத்தமாகச் சொன்னாள். ‘தப்பு-தப்பு‘ என்று தன்னுடைய கன்னத்திலேயே அடித்துக்கொண்டாள். “கடல்ல தள்ளிட்டான்.” என்று சொன்னாள். விஷயம் ஊக்கி ஆட்டனுக்கும், காளியம்மாவுக்கும் தெரிந்தால் என்னாகும்? அச்சத்தில் உறைந்துபோனாள். சாராவிடம் விஷயத்தைச் சொல்லலாமா என்று நினைத்த மறுகணமே இந்நேரம் அவளுக்குத் தானாக விஷயம் தெரிந்திருக்கும். அவளுக்கு மட்டுமா தெரிந்திருக்கும்? பல்லைக் கடித்தாள். “ஆத்தாள கெடந்தவன் இதுக்கு மேலயும் போவான்.” என்று சொன்னாள். தரையில் இரண்டு மூன்று முறை எட்டி உதைத்தாள்.
அவனைப் பழிவாங்க அவன் அனுப்பிய செய்திகளை பிறரிடம் சொன்னால் ”பொட்டக் குட்டி என்ன வேல செஞ்சியிருக்கா?” என்று கேட்டு தன்னைத்தான் கேவலமாகவும் மட்டரகமாகவும் பேசுவார்கள். அவனுடைய பெண்டாட்டியிடம் சொல்லிவிடலாம் என்று நினைத்ததும் போனை அவசரப்பட்டு உடைத்துவிட்டோமே என்று கவலைப்பட்டாள். நேராக அவனுடைய வீட்டுக்குப் போய்ச் சொல்லிவிடலாமா என்று யோசித்தாள். மறு நொடி அலுப்புடன் இனி யாரிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது. இந்த நேரத்திற்குள் எத்தனை ஆயிரம் பேர் பார்த்திருப்பார்களோ என்ற நினைத்துமே அவளுடைய உடல் திருவிழாக் கூட்டத்தில் துணியில்லாமல் நின்றுக்கொண்டிருப்பதுபோல் கூசிப் போய் நடுங்கியது.
சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு தூக்க முடியாத பாரத்தை தூக்கிக்கொண்டு நிற்பது போல்  நின்றுகொண்டிருந்தாள். காந்திமதி அம்மனையும், ஊக்கி ஆட்டன் மாடசாமியையும் நினைத்தாள். அழுகை வந்தது. சிறு குழந்தையைப் போல் வாய்விட்டுக் கதறி அழுதாள். சற்று நேரத்தில் அவளுடைய மனம் காற்றுப்போன பலூன் போல இருந்தது.
காந்திமதி நிதானமாக வாசலுக்கு வந்தாள். பதற்றமோ, அவசரமோ இல்லாமல் தெருவின் இரண்டு பக்கமும் பார்த்தாள். பிறகு கதவை எளிதில் திறக்க முடியாதபடி சாத்தினாள்.
சிறிது நேரத்தில் காந்திமதியின் உடலை முழுமையாகத் தின்று தீர்த்தது தீ.  

உயிர்மை மே 2018


       


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக