ஒளிரும் சொற்களை
உருவாக்கியவர்
– கலைஞர்
-
இமையம்
திராவிட இயக்கம் சமத்துவம், சகோதரதத்துவம், சம நீதி, சமூக நீதி, மூட நம்பிக்கை
ஒழிப்பு, இன உணர்வு, மான உணர்வை உண்டாக்குவதற்கு
சினிமா, நாடகம், கவிதை, பேச்சு என்று கலையின் அத்தனை வடிவங்களையும் பயன்படுத்தியதோடு, அந்தந்த துறை சார்ந்த கலைஞர்களையும் உருவாக்கியது. திராவிட
இயக்கம் கலைஞர்களை உருவாக்கியதா? கலைஞர்கள் திராவிட இயக்கத்தை
உருவாக்கினார்களா? இரண்டுமே ஒரே நேரத்தில் நிகழ்ந்தது.
ஒன்றாகவே நடந்தது.
திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பரப்புவதற்காக நாடகம் எழுதினார்கள்,
கவிதை, சிறுகதை என்று எழுதினார்கள். சினிமாவில் கதை-வசனம் எழுதினார்கள். பேச்சுக் கலையை முழுமையாக பயன்படுத்தினார்கள். திராவிட
இயக்கம் உருவாக்கிய எழுத்தாளர்களில், பேச்சாளர்களில்,
கவிஞர்களில், சிறுகதை ஆசிரியர்களில், சினிமா வசனகர்த்தாக்களில் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் கலைஞர். அறுபத்தி நான்கு சினிமாக்களுக்கு கதை வசனமும், இருபத்தி
ஐந்து நாடகங்களும், இருபது நாவல்களும், அறுபத்தியெட்டு சிறுகதைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட
கவிதைகளும், இனியவை இருபது என்ற பயண நூலையும் படைப்பிலக்கியமாக
எழுதியிருக்கிறார். குறளோவியம், தொல்காப்பிய
பூங்கா என்ற உரை நூல்களையும் எழுதியிருக்கிறார். ‘தாய்’
நாவலை தன்னுடைய உரைநடை கவிதை பாணியில் மறுஆக்கம் செய்திருக்கிறார்.
கலைஞரின் மொத்த எழுத்தின் நோக்கமும், பேச்சின் நோக்கமும்
தமிழ் சமூக மேம்பாடு, முன்னேற்றம், வளர்ச்சி,
சம நீதி, சமூக நீதி, மூட
நம்பிக்கை எதிர்ப்பு, மத கற்பிதங்களுக்கு எதிர்ப்பு, அறிவியல் ரீதியில் சமூகத்தை, அதன் சிக்கல்களை ஆராய்வது,
தீர்வு காண்பது. சாதி சார்ந்த இழிவுகளுக்கு,
மதம் சார்ந்த பிற்போக்கு தனங்களுக்கு எழுத்தின் வழியே சவுக்கடி கொடுப்பது.
பழைய தமிழ் இலக்கியங்களை கொண்டாடுவது. பழைய இலக்கியங்களை
தமிழின் அடையாளமாக, தமிழரின் அடையாளமாக, பெருமையாக, பொக்கிஷமாக நிலை நிறுத்துவது.
கலைஞர் தன்னுடைய எழுத்துக்களை, தன்னுடைய கொள்கை முழக்கமாகவே
கருதினார். கடைசிவரை தன்னுடைய கொள்கைகளையும் மாற்றிக்கொள்ளவில்லை.
தன்னுடைய எழுத்தின் தன்மையையும் அவர் கடைசிவரை மாற்றிக் கொள்ளவில்லை.
சமரசமும் செய்துகொள்ளவில்லை.
தமிழில் உரைநடை இலக்கியம் தோன்றி ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது.
நூற்றாண்டு காலத்தில் வெகு மக்களால் அதிகமாகப் பேசப்பட்ட, கொண்டாடப்பட்ட எழுத்தும், பேச்சும் கலைஞருடையதுதான்.
கலைஞருடைய எழுத்தும், பேச்சும் தமிழ் சமூகத்தில்
திரும்பத்திரும்ப நினைவுக்கொண்டு பேசப்பட்டிருக்கிறது. கொண்டாடப்பட்டிருக்கிறது.
கலைஞரின் அளவுக்கு வேறு எந்த எழுத்தாளரின் பேச்சும், எழுத்தும் கொண்டாடப்பட்டதில்லை. நினைவுகொள்ளப்பட்டதில்லை.
கலைஞர் என்றதும் பராசக்தி படமும், மனோகரா,
பூம்புகார், ராஜகுமாரி, மந்திரிகுமாரி
போன்ற படங்கள் எப்படி நினைவுக்கு வருகின்றன? கலைஞர் என்றாலும்
எல்லாருக்கும் எப்படி ‘பேச்சு’ என்ற சொல்லும்,
’கவிதை’ என்ற சொல்லும் ’தமிழ்’
என்ற சொல்லும் நினைவுக்கு வருகின்றன. கலைஞர் சில
சொற்களின் அடையாளமாக இருக்கிறார். அதிசயம்.
கலைஞருடைய சினிமா வசனங்கள், நாவல், நாடகம், கவிதை, சிறுகதைகளில் வரக்கூடிய
சில சொற்கள், சில வாக்கியங்கள் பலருக்கும் தெரிந்த வாக்கியமாக
இருப்பது ஆச்சரியம். சில சொற்களுக்காகவும், சில வாக்கியங்களுக்காகவும்தான் அவர் திரைக்கதை எழுதிய சினிமா படங்கள் திரும்பத்திரும்பப்
பேசப்படுகின்றன. கலைஞருடைய நாவல்களும், சிறுகதைகளும் பெரும்பாலும் வசனங்களால் கட்டமைக்கப்பட்டவை. பாத்திரங்கள் சார்ந்த, சூழல் சார்ந்த விவரிப்புகள் அரிதாகவே
இடம்பெறும். கதை சொல்வது என்பதைவிட உரையாடலை எவ்வாறு சிறப்பாக
அமைப்பது என்பது குறித்தே அதிகம் அக்கறை காட்டியிருக்கிறார். கலைஞரின் சிறுகதைகள், நாவல்கள் அனைத்துமே உரையாடல்களால்
நிரம்பியவை, உரையாடல்களின் வழியேதான் கதை சித்தரித்துக்காட்டப்படும்.
காரசாரமான, விவாதத்தன்மையில் அமைந்த, ஒருவிதமான உரைநடை கவிதை தன்மையில் அமைந்திருப்பதால் படிப்பவர்களை ஈர்க்கும்
தன்மையை தனக்குள் கொண்டிருக்கும். கலைஞர் சிறுகதை எழுதியதும்,
நாவல், கவிதை எழுதியதும் தன்னுடைய கொள்கைகளை சொல்வதற்காகத்தான்.
சில தெறிப்பான சொற்களை, வாக்கியங்களை உருவாக்கவுமே
எழுதினார்.
சினிமாவில், நாடகத்தில், நாவலில்,
சிறுகதையில் அவர் உருவாக்கிக் காட்ட விரும்பிய கதைகளைவிட அவர் உருவாக்கிய
சொற்களும், வாக்கியங்களும்தான் வெகுசன மக்களால் கொண்டாடப்பட்டது.
அதே மாதிரி தன்னுடைய மேடைப் பேச்சுகளின் வழியாகவும், கவியரங்கங்களின் வழியாகவும் அரிதான சில சொற்களையும், அரிதான வாக்கிய சேர்க்கைகளையும் உருவாக்கிக் காட்டினார். அவர் பயன்படுத்துகிற சில சொற்களும், சில வாக்கியங்களும்
வெகுசன மக்களை ஈர்த்தது என்பதைவிட, அவர்கள் அதை அன்றாட வாழ்வில்
பயன்படுத்தவும் செய்தார்கள்.
“சிங்கார சென்னை,”
“தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது.” “அய்யன்
திருவள்ளுவர்” “தமிழ் வெல்லும்” இது போன்று
பல சொற்களை அவர்தான் உருவாக்கினார். “வீழ்வது நாமாக இருப்பினும்,
வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்பது முரசொலி நாளிதழிற்காகக்
கலைஞர் உருவாக்கியது. 1984-88 காலக்கட்டத்தில் இந்த வாக்கியம்
பெரும் முழக்கமாக தமிழிகமெங்கும் ஒலித்தது. ஈழத்தமிழர் ஆதரவு
போராட்டங்களை முன்னெடுத்த மாணவர்கள் இந்த வாக்கியத்தைத்தான் ஊர்வலத்தில் முழங்கினார்கள்.
பாரதிதாசனின் ”தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்பது மற்றொரு முழக்கமாக இருந்தது.
இந்த முழக்கங்கள் இன்றும் உயிருடன்தான் இருக்கின்றன. அதே மாதிரி “இன்றைய செய்தி நாளைய வரலாறு” என்பது முரசொலிக்காக, எழுதப்பட்டதுதான் என்றாலும் தமிழக
ஊடகங்களில், மேடைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் முழக்கமாக இருக்கிறது.
கலைஞர் மட்டும்தான் முழக்கத்தை உருவாக்குவார் என்றில்லை. அவருடைய கட்சிக்காரர்களும் முழக்கத்தை உருவாக்குவார்கள். தி.மு.க.வினரால்
உருவாக்கப்பட்ட “இந்த படை போதுமா? இன்னும்
கொஞ்சம் வேணுமா?” என்ற முழக்கமும் இன்று அனைத்துத் தரப்பினராலும்
பயன்படுத்தப்படுகின்றது. ’எழுந்து வா தலைவா’ என்று கலைஞரின் கட்சிக்காரர்கள் உருவாக்கிய முழக்கம் தமிழக மக்களின் மனதில்
ஆழமாக பதிந்த ஒன்று. எமர்ஜென்சியின் போது “Revoke Emergency,
Restore Democracy” என்று சொல்லும் ஆற்றல் கலைஞருக்கு மட்டுமே இருந்தது.
‘மாற்றுத்திறனாளி’ என்ற சொல்லும், ‘திருநங்கை’, ‘கைம்பெண்’ ’நெஞ்சுக்கு
நீதி’ என்கின்ற சொற்களும் கலைஞரால் உருவாக்கப்பட்டதுதான்.
இந்த சொற்கள் அரசு நிறுவனங்களில் மட்டுமல்ல, பொது
மக்களும் இயல்பாக பயன்படுத்துகிற சொற்களாகி, அடையாளமாகிவிட்டது.
சாதி சான்றுகளில், தாழ்த்தப்பட்டேர் என்பதை
‘தாழ்த்தப்படுத்தப்பட்டோர்’ என்றும், ‘பிற்பட்டோர்’ என்பதை ‘பிற்படுத்தப்பட்டோர்’
என்றும் மாற்றியது அவர்தான். தற்போது தமிழகத்தில்
இருக்கிற, இனிமேல் பிறக்கப்போகிற அனைவருக்குமான சாதி சான்றுகளில்
இந்த வார்த்தை இருக்கும். தமிழினம் என்று ஒன்று இருக்கும் வரை,
சாதிச்சான்று என்று ஒன்று இருக்கும்வரை, கலைஞர்
மாற்றிய சொல் இருக்கும். சொற்களின் மதிப்பை கலைஞர் உணர்ந்த அளவிற்கு
தமிழகத்தில் வேறுயாரும் உணர்ந்ததில்லை. கலைஞர் ஒரு சொல்லை பயன்படுத்தினால்
அதற்கு உடனே தமிழகமெங்கும் மதிப்பு ஏற்பட்டுவிடும் மாயம் நிகழ்ந்த்தது. ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் “தமிழ் வாழ்க” என்று எழுதவைத்தது அவர்தான். 1938ல் “தமிழ் வாழ்க. இந்தி ஒழிக” என கலைஞர்
முழங்கியது எத்தனை ஆயிரம் மேடைகளில் நினைவுகொள்ளப்பட்டிருக்கும்? அன்புள்ள மு.க. என்பது யாரை குறிக்கும்
என்பது தமிழர்களுக்கு தெரியும். முரசொலி என்ற சொல், யாரை உணர்த்தும், அதன் அடையாளம் என்ன? அது தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம்குறித்து தமிழகம் அறியும்.
சட்டமன்றத்தில் இது சூத்திரர்கள்
அரசு என்று சொன்னவர் கலைஞர். இரண்டாயிரம் ஆண்டுகள் அரசியல் வரலாற்றில்
இது சூத்திரர்கள் அரசு என்று சொல்லும் வல்லமை இந்தியாவில் கலைஞருக்கு மட்டுமே இருந்தது.
கலைஞர் அதிகமாக மட்டுமல்ல திரும்பத்திரும்ப எழுதிய சொல்லும், அதிகமாக மட்டுமல்ல திரும்பத்திரும் ஒவ்வொரு மேடையிலும் பயன்படுத்திய வார்த்தை
– “உடன் பிறப்பே” என்பதுதான். மற்றவர்களுக்கும், அவருடைய கட்சிக்காரர்களுக்கும்தான்
தெரியும் ‘உடன் பிறப்பே’ என்ற சொல்லின்
மகத்துவம். அதே போன்று “என் உயிரினும் மேலான
அன்பு உடன் பிறப்புகளே” என்ற வாக்கியத்தின் மதிப்பு கலைஞருக்கும்,
அவருடைய கட்சிக்காரர்களுக்கும்தான் தெரியும். ‘உடன் பிறப்பே’ என்று அவர் எழுதும் கடிதங்கள் பத்து லட்சம்
பேரை திரட்டும் வல்லமை கொண்டது என்பது ஒரு அதிசயம். உடன் பிறப்பே
என்று அவர் எழுதிய கடிதங்கள் எழுபதாயிரம் இருக்கும் என்று சொல்கிறார்கள். இதுவும் ஒரு அதிசயம்தான்.
1952ல் “அம்பாள் என்றைக்கடா பேசினாள்?” என்று பராசக்தி படத்திற்காக அவர் எழுதிய ஒற்றை வசனத்தை அறியாதவர்கள் தமிழகத்தில்
இருக்க வாய்ப்பில்லை. “ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான்?”
என்று அவர் கேட்ட ஒரு கேள்வி இந்தியாவையே உலுக்கியது. தான் எழுதிய சினிமாவிற்கான கதை வசனங்களிலும், நாடகங்களிலும்,
நாவல்களிலும், சிறுகதைகளிலும், கவிதைகளிலும் ஆயிரக்கணக்கான அழியாத வாக்கியங்களை உருவாக்கியது மட்டுமல்ல,
அவ்வாக்கியங்களை வெகுமக்களும் அன்றாடம் பயன்படுத்தும் விதத்திலும் மாற்றியதில்
அவருக்கு இணையான வேறு ஒரு எழுத்தாளர் தமிழ் மொழியில் இல்லை. வெகுமக்களின்
மனதில் ஒரு சொல்லை, ஒரு வாக்கியத்தை நிலை நிறுத்துவது எளியக்காரியமல்ல.
ஒரு சொல்லை உருவாக்குவது, ஒரு வாக்கியத்தை உருவாக்குவது
என்பது மொழி சார்ந்த செயல்பாடு மட்டுமல்ல, கலாச்சார செயல்பாடு.
“செங்கோலைவிட எழுதுகோலே நிலையானது” என்று எழுதியது,
“இதயத்தை இரவலாக தந்திடண்ணா” என்று அவர் அண்ணாவின்
மறைவிற்கு எழுதிய கவிதை வரிகள்:
“மூன்றெழுத்திலே ஒரு சிறப்புண்டு, முத்தமிழ் மணமுண்டு!
மூவேந்தர் முக்கொடி முக்கனியென
மும்முர சார்த்தவர் தமிழர் -- அவர் வாழ்ந்த
தமிழ் வாழ்வுக்கு மூன்றெழுத்து -- அந்த
வாழ்வுக்கு அடிப்படையாம் அன்புக்கு மூன்றெழுத்து..
அன்புக்குத் துணை நிற்கும் அறிவுக்கு மூன்றெழுத்து
அறிவார்ந்தோர் இடையிலெழும், காதலுக்கு மூன்றெழுத்து..
காதலர்கள் போற்றி நின்ற கடும் வீரமோ மூன்றெழுத்து..
வீரம் விளைக்கின்ற களம் மூன்றெழுத்து...
களம் சென்று காணுகின்ற வெற்றி மூன்றெழுத்து
அந்த வெற்றிக்கு நமையெலாம் ஊக்குவிக்கும்
அமைதி மிகு அண்ணா மூன்றெழுத்து”
மூவேந்தர் முக்கொடி முக்கனியென
மும்முர சார்த்தவர் தமிழர் -- அவர் வாழ்ந்த
தமிழ் வாழ்வுக்கு மூன்றெழுத்து -- அந்த
வாழ்வுக்கு அடிப்படையாம் அன்புக்கு மூன்றெழுத்து..
அன்புக்குத் துணை நிற்கும் அறிவுக்கு மூன்றெழுத்து
அறிவார்ந்தோர் இடையிலெழும், காதலுக்கு மூன்றெழுத்து..
காதலர்கள் போற்றி நின்ற கடும் வீரமோ மூன்றெழுத்து..
வீரம் விளைக்கின்ற களம் மூன்றெழுத்து...
களம் சென்று காணுகின்ற வெற்றி மூன்றெழுத்து
அந்த வெற்றிக்கு நமையெலாம் ஊக்குவிக்கும்
அமைதி மிகு அண்ணா மூன்றெழுத்து”
என்று எழுதியது எப்படி எல்லாத்
தமிழர்களுக்கும் தெரிந்திருக்கிறது. இந்த வரிகள் எழுதப்பட்டு ஐம்பது
ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழகத்தில் இன்று அவர்தான் சொல்விளையாட்டின்
தலைவர். இலக்கியம் என்பது மக்களுக்காக என்றால் கலைஞரின் எழுத்துக்கள்
மக்களுக்கானது என்பதில் சந்தேகமில்லை. கலைஞர் என்றால்
‘தமிழ்’ என்று அடையாளப்படுத்துகிறார்கள்.
‘தமிழ் வெல்லும்’ என்று எழுதிய கலைஞருக்கும்
‘தமிழ்’ என்று அடையாளமிட்டது சரிதான் என்று தோன்றுகிறது.
”ஓய்வெடுக்காமல் உழைத்தவன்
இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்று முப்பது ஆண்டுகள் முன்பு கலைஞர்
எழுதிய வாக்கியம்தான் இன்று தமிழகத்தின் முக்கியமான பேசுபொருள்
கலைஞர் என்ற சொல் எப்படி கலைஞரை மட்டும் அடையாளப்படுத்துமோ, அதே மாதிரி அவர் உருவாக்கிய சொற்களும், வாக்கியங்களும்
அவரை மட்டுமே அடையாளப்படுத்தும். அழியாத சொற்களை உருவாக்குகிறவன்தான்
எழுத்தாளன்.
“நான், நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால்தான்
ஒட்டும்.” கலைஞர் உருவாக்கிய மகாத்தான வாக்கியம் இது.
“மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான்
மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.”
மு.க.வின் “தமிழ் வெல்லும்” என்றும்.
உயிர்மை செப்டெம்பர் 2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக