புதன், 3 ஜூன், 2015

துடைக்கப்படாத இரத்தக் கறைகள் : யோகி. (விமர்சனம்) – இமையம்.

துடைக்கப்படாத இரத்தக் கறைகள் – யோகி
விமர்சனம் – இமையம்.
       இந்திய மொழிகளில் தன் வரலாற்றுக் கதைகள் அதிகம் எழுதப்பட்டது மராத்தியில்தான். அதற்கடுத்த நிலையில் இருப்பது மலையாளம். தமிழ் மொழியில் தன் வரலாற்றுக் கதைகளின் எண்ணிக்கை சற்றுக் குறைவுதான். தன் வரலாற்றுக் கதைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பொது வாழ்வில் ஈடுபட்டவர்களுடைய கதை. மற்றொன்று பொது வாழ்வில் ஈடுபடாத – தனி மனிதர்களுடைய கதைகள்.
       1985க்குப் பிறகு தமிழ் மொழியில் எழுதப்பட்ட தன் வரலாற்றுக் கதைகள் சாதியக் கொடுமைகளை, இழிவுகளை, பிறப்பின் வழி ஏற்பட்ட சங்கடங்களைப் பேசியவை. அதுவும் தன்னைப்பற்றியும், தன்னுடைய தனிப்பட்ட துயரங்கள், இழப்புகள், வலிகள், காயங்களை கண்ணீரின் மொழியில் எழுதப்பட்டவை. வாசகரின், சமூகத்தின் இரக்கத்தை, அனுதாபத்தை கோரியவை. திட்டமிட்டு எழுதப்பட்டவை. இதற்கு நேர் எதிரான குணத்தை கொண்டிருப்பவை ஆ.ரங்கசாமி எழுதிய – சிவகங்கையிலிருந்து சீசாங் வரை என்ற தன் வரலாற்றுக் கதையும், யோகி எழுதிய துடைக்கப்படாத இரத்தக் கறைகள் என்ற தன் வரலாற்றுக் கதையும்,. இந்த இரண்டு தன் வரலாற்றுக் கதைகளும் தமிழ்மொழியில் எழுதப்பட்டவை. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து அல்ல. மலேசியாவிலிருந்து.
       யோகியின் துடைக்கப்படாத இரத்தக் கறைகள் – என்ற தன் வரலற்றுக் கதை பதினோரு தலைப்புகளில் பதினாறு ஆண்டுகால வாழ்வை மட்டுமே பேசுகிறது. பொதுவாக சொன்னால் ஒரு இளம்பெண் பதினாறு ஆண்டுகள் வேலை தேடி அலைந்த கதை, வேலை செய்த கதை. சிறிய மருத்துவமனையில் தாதியாக, கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் பார்த்த வேலை, மருத்துவமனை காவலர், சமையல் உதவியாளர், தங்கும் விடுதியின் கணக்கர், பத்திரிக்கை செய்தியாளர் என்று பல வேலை. புதியபுதிய வேலைகள், புதியபுதிய இடங்கள், புதியபுதிய மனிதர்கள். புதியபுதிய நடைமுறைகள், சட்டதிட்டங்கள், ஒவ்வொரு வேலையும், ஒவ்வொரு இடமும் புதிதுபுதிதாக கற்றுத்தருகின்றன. ‘திருடி’ என்று பழி சுமப்பது, ‘அதான் நீ வந்திட்டியே’ என்றும், ‘கூலி’ என்றும் பட்டம் சுமக்கிற இடம். ‘இப்பவே ஆம்பள கேக்குதா?’ என்று கேலி செய்கிற இடம், இருபது கோழிகளை வெட்ட சொல்கிற இடம், காதல் செய்வதால் வேலை இல்லை என்கிற இடம், அனைத்தையும் ஒளிவு மறைவின்றி நேர்மையாகவும் நல்ல தமிழிலும் யோகி எழுதியிருக்கிறார்.
       தந்தையின் மரணத்தால் வேலை தேடிப் போகிற இளம்பெண். பதினாறு ஆண்டுகள் துரத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறாள். அவளும் சலிக்காமல் ஓடிக்கொண்டேயிருக்கிறாள். வேறு வழியில்லை. ஓடித்தான் ஆக வேண்டும். அன்றாட நெருக்கடிகள், தேவைகள் ஓட வைக்கிறது. வாழ்க்கை என்பது ஓடித்தீர்க்க வேண்டிய ஒன்றுதானே. யோகி ஓடுகிறார். தனக்கான ஓட்டம் விதியால் ஏற்பட்டது, சாபத்தால், சதியால் ஏற்பட்டது என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. முக்கியமாக அழவில்லை. அழுது இரக்கத்தை கோரவில்லை. ‘இதென்ன பிரமாதம்? இன்னும் இருக்கிறது பார்” என்று யோகி ஓடுகிறார். அவருடைய ஓட்டத்தின் வேகத்தை வரைகிறது – சொற்கள்.
       குழந்தையின் மனதில் ‘சாதி’ என்கிற விதை எப்படி தூவப்படுகிறது? சாதி என்னென்ன விதமாக, எந்தெந்த இடங்களில் எப்படி வெளிப்படுத்தப்படுகிறது என்பதை போகிற போக்கில், ஓரிரு வார்த்தைகளில் சொல்கிறார். சாதி இல்லை. சாதி அடையாளம் வேண்டாம் என்று சொல்கிற மனிதர்கள் சந்திக்கக்கூடிய அக, புற நெருக்கடிகள் எவைஎவை? கலப்புத்திருமணம் செய்துகொண்டவர்களும், அவர்களுக்கு பிறக்கிற குழந்தைகளும் சந்திக்கிற பிரச்சினைகள் என்னென்ன என்பதை ஆச்சரியப்படும் விதத்தில் நாசுக்காக பொருள் நிறைந்த சொற்களில் சொல்கிறார். குழந்தைகளுக்கு நம்முடைய குடும்பங்களும், சமூகமும் எதை கற்றுத் தருகின்றன என்ற யோகியின் கேள்வி முக்கியமானது.
       யோகி இரண்டு மருத்துவமனைகளில் பணியாற்றி இருக்கிறார். ஒரு இடத்தில் தாதியாக, ஒரு இடத்தில் காவலராக. இரண்டு இடத்திலும் அவர் நிலைத்திருக்கவில்லை. தானாக வெளியேறுகிறார். அவருடைய கருணை மனம் இரண்டு இடத்திலிருந்தும் அவரைத் துரத்துகிறது. தாதியாக இருக்கும்போது விபத்துக்குள்ளான மனிதர்களிடம் மருத்துவர் நடந்துகொள்ளும் முறை துரத்துகிறது. காவலராக இருக்கும்போது வங்காள தேசத்துக்காரன் அப்துலின் மரணம் துரத்துகிறது. சாகக்கிடக்கிற மனிதன் ஒரு இளம் பெண்ணின் கையைப் பிடித்துக்கொள்ள கேட்கிறான். அதிசயம்தான். இளம் பெண்ணும் தருகிறாள்.. மறுநாள் அப்துல் இறந்து விடுகிறான். இளம்பெண் அப்துலின் மறைவால் வேலையை விட்டுவிடுகிறாள். இதற்கு பெயர் காதல் அல்ல. அன்பு. மனிதர்களை கருணையற்றவர்களாக எது மாற்றுகிறது? பணமா? ஆமாம் என்கிறார் யோகி. மருத்துவர்களை எது கருணையற்றவர்களாக மாற்றுகிறது என்ற கேள்விக்கு பதிலில்லை. மனித உடலில் தேவையற்றது என்று அகற்றுகிற பொறுப்பிலிருக்கிற கடைநிலை ஊழியர் எப்படி கருணையோடு இருக்கிறார்? இதுதான் அதிசயம். இப்படி பல அதிசயங்களை தன் சொற்களின் வழியே உருவாக்கிக் காட்டுகிறார் யோகி. எதையும் வலிந்து, தூக்கிப் பிடித்து எழுதவில்லை. தன்னுடைய அப்பா இறந்த செய்தியைக்கூட போகிற போக்கில்தான் சொல்கிறார். எதற்குமே கூடுதல் அழுத்தம் தரவில்லை. அழுத்தம் தரவில்லை என்பதால் அது முக்கியமற்றது என்று பொருள் அல்ல. எப்படிப்பட்ட சம்பவமாக இருந்தாலும் அதை கண்ணீரால் கடக்க விரும்பாதவர். கண்ணீரை மூலதனமாக்கி எதையும் கோராத, எந்த சலுகையையும் பெற விரும்பாத ஜாலமற்ற எழுத்து. இழப்பு, வலி, மரணம், மனஸ்தாபங்கள், துரோகம், நோய் என்று அனைத்தையும் கண்ணீரின் வழியே கடக்க முயல்கிறார்கள். அழுவது என்பது ஒரு போதை. அந்த போதை யோகியிடம் குறைவாக இருக்கிறது. மனிதர்கள் அழுகிறார்கள். அழ வைக்கிறார்கள். மனிதர்களுடைய அழுகை விசித்திரமானது.
       இந்த நூலில் யோகி திரும்பத்திரும்ப பேசுகிறார் ஒரு மரணத்தைப்பற்றி மட்டும். சிலருக்கு சில மரணங்கள் பரிசாகவும், விடுதலையாகவும் இருக்கின்றன. யோகியின் தந்தையின் மரணம் அவருக்கு விடுதலையாக இல்லை, பரிசாக இல்லை. சுமக்க முடியாத பெரும் பாரம். ஓயாமல் சட்டம் பேசுகிற, ஒழுங்கு, கௌரவம்பற்றி  பேசுகிற மனிதர். தன்னுடயை எல்லா நீதி நியாயங்களையும் எல்லாரும் கடைபிடிக்கவேண்டும் என்று விரும்புகிற மனிதர். மீறினால் இடுப்பு வாரை கழற்றி விளாசிவிடுகிற மனிதர். தன்னுடைய அண்ணனின் சொல்லுக்கு மட்டும் கையைக்கட்டி நிற்கிற மனிதர். ஒரு குழந்தை விரும்பாத அப்பா அவர். ஆனால் அவர்தான் இந்த நூலில் எங்கும் நிறைந்திருக்கிறார். பிரதானமான கதாபாத்திரம் அவர்தான். அவருடைய பெயர் என்ன என்பதுகூட நூலில் இல்லை. ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும், வாக்கியத்திற்கும் பின்னால் அவர்தான் நிழல் மாதிரி ஒளிந்திருக்கிறார். யோகியின் ஒவ்வொரு செயலிலும், நடவடிக்கைகளிலும், அவர்தான் ஓயாமல் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறார்.  தன்னுடைய மரணத்தால் யோகியை ஒரு இடத்திலும் நிலைக்க விடாமல் துரத்திக்கொண்டே இருப்பவர். உண்மையைச் சொன்னால் இது யோகியினுடைய கதை அல்ல. அவருடைய அப்பாவினுடைய கதை.
       துடைக்கப்படாத இரத்தக் கறைகள் - யோகி தன்னுடைய கதையின் வழியே மலேசியாவின் கதையையும் சொல்கிறார். கம்பத்து வாழ்க்கை, நகர வாழ்க்கை, கூலி வாழ்க்கை, தோட்டத்து வாழ்க்கை, கால மாற்றம் நிகழ்த்தும் – நல்லதும் கெட்டதும் என்று அனைத்தையும் சேர்த்து சொல்கிறர். தன்னுடைய பாட்டி தோட்டத்தில் வேலை செய்துவிட்டு எப்படி வருவார்? தன்னுடைய வாரிசுகள் ‘கூலி’ என்ற அடையாளத்துடன் வாழக்கூடாது என்று முடிவெடுத்து அதற்காக போராடி தோற்ற அப்பா, அப்பாவினுடைய மறைவுக்குப்பிறகு அம்மா எப்படி – அப்பாவினுடைய சிந்தனையோடு மறு உருவாக செயல்பட்டாள் என்பதையும் சொல்லியிருக்கிறார். சுருக்கமாக, ஆனால் அழுத்தமாக.
       இந்த நூல் யோகியினுடைய கதையை, அவருடைய குடும்பக் கதையை மட்டும் பேசவில்லை. மலேசியாவில் வசிக்கக்கூடிய சீனர்களுடய, வங்காள தேசத்தவர்களுடைய, தமிழர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்றும் சொல்கிறது. ஒவ்வொரு இனத்தவரின் மன இயல்புகள் என்ன? மூவரும் ஒன்றுபடும் இடங்கள், வேறுபடும் இடங்கள் எதுஎது? கலாச்சார, பண்பாட்டு வேறுபாடுகள் என்று அனைத்தையும் ஒரு சில சொற்களில் சொல்கிறார். துல்லியமாக. யோகியினுடைய வார்த்தைகள் வேகத்துடன் வெளிப்படுகின்றன. அவருடைய கோபம் தனிமனித காழ்ப்பல்ல. மனிதர்கள் செய்கிற இழிவான காரியங்கள் மீது, அவர்கள் பின்பற்றுகிற போலியான மதிப்பீடுகளின் மீதுதான் கோபம். அறச் சீற்றம் என்பது இதுதான்.
       தமிழர்கள் உலகின் எந்த மூலையில் வசித்தாலும் அவர்களுடயை மன இயல்புகள் மட்டும் மாறுவதே இல்லை. பெண்கள் சார்ந்த விசயத்தில் அவர்கள் ஒருபோதும் மாறுவதில்லை. பெண்களுக்கு அவர்கள் எந்த உதவியும் செய்வதில்லை. ஆனால் பெண்களுடைய கற்பை காப்பதில் மட்டும் அவர்களுடைய ஆர்வம், ஈடுபாடு வியப்பளிக்கக்கூடியது. குறிப்பாக வங்காள தேசத்தவர்களுடன் தமிழ்பெண்கள் சேர்ந்துவிடக் கூடாது – கலப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் எவ்வளவு அக்கறையாக இருக்கிறார்கள்? தமிழ் ஆண்கள் பாதுகாக்க விரும்புவது பெண்களின் உடலையா, அவர்கள் நம்புகிற புனித பண்பாட்டையா என்று யோகி கேள்வி கேட்கிறார். இது கேள்வி அல்ல. தமிழ் பண்பாட்டின், கலாச்சாரத்தின் முகத்தில் விழுந்த பலமான குத்து.
       மலேசியாவில் தமிழர்களைக்காட்டிலும் வங்காள தேசத்தவர்கள் பாவப்பட்டவர்களாக இருக்கிறார்கள். கூடுதலான உழைப்பிற்கும், கூடுதலான அடிமைத்தனத்திற்கும் உள்ளாகிறார்கள். சீனர்களிடம் மட்டுமல்ல, தமிழர்களிடமும் அவர்கள் பணிந்து, பயந்துதான் நடக்கிறார்கள். தமிழ் பெண்களை கண்டாலே நெருப்பைக் கண்ட மாதிரி பயந்து ஓடுகிறார்கள். இல்லையென்றால் தமிழ் பண்பாட்டுக் கலாச்சாரக் காவலர்களிடம் அவர்கள் அடியும் உதையும் வாங்க வேண்டும். இதே தமிழ் பண்பாட்டுக் காவலர்கள் தமிழ் பெண்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது விநோதம். அதிலும் அறிவுத் துறை என்று அறியப்படுகிற பத்திரிக்கைத் துறை எப்படி இருக்கிறது, அதனுடைய ஆசிரியர்களின் மாண்பு எப்படி இருக்கிறது என்று கேட்டு யோகி ஒரு விளாசு விளாசுகிறார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனி மனித, சமூக இழிவுகளின் மீது ஓங்கி ஒரு குத்து. குறிப்பாக ஆண்களின் மீதும், அவர்களுடைய திமிர்த்தனத்தின் மீதும் வலுவாகவே குத்துகள் விழுகின்றன. குத்துகள் சரியான இடத்தில் விழுகின்றன. கோபத்தையும், இழப்பையும், வலியையும்கூட யோகி கண்ணீரின் மொழியில் எழுதவில்லை. துணிச்சலாக எள்ளல் மொழியில் எழுதியிருக்கிறார். அதோடு எந்த வயதிலும் தன்வரலாற்றுக் கதையை எழுதலாம் என்பதையும் நிரூபித்திருக்கிறார். மிக அழகாக. மிக இயல்பாக.
       துடைக்கப்படாத இரத்தக் கறைகள் – யோகியினுடைய தனிப்பட்ட வாழ்க்கை கதை என்பதைவிடவும், மலேசிய சமூக வாழ்வின் நடப்பியல் சிக்கல்கள் என்று சொல்லலாம். யோகியின் தன் வரலாற்றுக் கதை நன்றாக எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்ல மாட்டேன். சக மனிதனுடைய வலி, இழப்பு, துயரம், காயம், கண்ணீர், ஓலம், பரிதவிப்பு, தத்தளிப்பு, விரட்டப்படடுக்கொண்டே இருப்பது, அவமானப்படுத்தப்பட்டுக்கொண்டே இருப்பது நன்றாக இருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்? இதுபோன்ற துயர்கள் யாருக்கும் வரக்கூடாது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒருவர் அழுவதைப் பார்ப்பதைவிட கொடுமையானது வேறென்ன இருக்க முடியும்?
       யோகி எல்லாவற்றையும் – புனிதக் கோட்பாடுகளையும்தான் ‘பட் – பட்’ என்று போட்டு உடைக்கிறார். அதற்கு அவருடைய மொழி உதவியாக இருக்கிறது. அலட்டலும், கூச்சலும் இல்லாத கூர்மையான சமூக விமர்சனம் இந்நூல். தன்னுடைய வலிமையால் தமிழ் இலக்கியத்தில் ‘துடைக்கப்படாத இரத்தக் கறைகள்’ தனக்கான இடத்தை உறுதி செய்துக்கொள்ளும்.


கணையாழி – ஜுன் 2015                                                  துடைக்கப்படாத இரத்தக் கறைகள்,
(தன் வரலாற்றுக் கதை) – யோகி,
வெளியீடு – வல்லினம்,
28. C. Jalan SG 3/2,
Taman Sri Gombak,
Batu Caves,
Selangor, Malaysia.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக