பெயர்களில்
தொலைந்த அழகு – இமையம்.
உலகில் எது நிரந்தரம்? எதுவுமில்லை. மாறிக்கொண்டேயிருப்பதுதான்
ஒரு வகையில் அழகு. ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு காலத்தில் மதிப்பு வாய்ந்தது, புனிதமானது
என்று நம்பப்படுகின்ற மதிப்பீடுகள் அடுத்தடுத்த காலங்களில் ஒன்றுமே இல்லையென்றாகிவிடுகிறது.
முந்தைய தலைமுறையினரின் வாழ்க்கை நெறிகள் அடுத்தத் தலைமுறையினருக்கு கேலிக்குரிய ஒன்றாகிவிடுகிறது.
மனித நடவடிக்கைகள், நம்பிக்கைகள், மதிப்பீடுகள் மட்டுமல்ல அறிவியல் கண்டுபிடிப்புகளும்கூட
மாறுகின்றன. நேற்றைய கண்டுபிடிப்புகளை இன்றைய கண்டுபிடிப்புகள், ஒன்றுமே இல்லை என்பதுபோல்
செய்துவிடுகிறது. சங்ககாலக் கவிதைகளில் வர்ணிக்கப்படும் – பிரிவின் துயர் என்பது இன்றில்லை.
யார் வேண்டுமானாலும் உலகின் எந்த மூலையிலுள்ளவருடனும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.
பேசமுடியும் நினைத்த நேரத்தில் மட்டுமல்ல, விரும்புகிறவரையும் பேச முடியும். தூரம்
என்பது இன்று ஒன்றுமே இல்லை.
தமிழ்ச் சமூகம் காலந்தோறும் பெரும் மாற்றத்தை ஏற்றுக்கொண்டு, மாறிவந்திருக்கிறது.
உணவில், உடையில், பழக்கவழக்கத்தில், கலாச்சாரத்தில், பண்பாட்டில் என்று எல்லாவற்றிலும் மாற்றம் நிகழ்ந்துவிட்டது.
மற்ற நூற்றாண்டுகளைவிட, 19 – 20ம் நூற்றாண்டுகள் நம்ப முடியாத அளவுக்கு மாற்றத்தை கொண்டு
வந்தது. அந்த மாற்றம் மனிதர்களுக்கு பெயர் வைப்பதிலும் நிகழ்ந்திருக்கிறது.
19ம் நூற்றாண்டின் தொடக்கக்காலம் வரை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு
பெயர் வைப்பதில் பெரிதாக அக்கறை காட்டவில்லை. ஒரு வீட்டில் மூன்று பெண் பிள்ளைகள் இருந்தால்
பெரிய மொட்டை, நடு மொட்டை, சின்ன மொட்டை என்று
பெயர்கள் இருந்தன. இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்தால் முதல் பிள்ளைக்கு பெரிய கருப்பன்,
இரண்டாவது பிள்ளைக்கு சின்ன கருப்பன் – என்றிருந்தது. இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தால்
ஒன்றுக்கு பெயர் பெரிய பொண்ணு. இரண்டாவது பிள்ளைக்குப் பெயர் சின்ன பொண்ணு. பெயரில் என்ன இருக்கிறது? பிள்ளை உயிரோடு இருந்தால்
போதும். என்ன பெயர் இருந்தால் என்ன என்று நினைத்த பெற்றோர்கள் இருந்திருக்கிறார்கள்.
மீறி வைத்தால் இயற்கையோடு தொடர்புடைய பெயர்களையே வைத்திருக்கின்றனர். பூங்காவனம், மலர்,
பூங்கொடி, மலர்கொடி, அல்லி, பூங்கோதை, அன்னக்கிளி, கார்மேகம், பூஞ்சோலை, பூவாயி, பூவரும்பு,
பூவரசி, பஞ்சவர்ணம், பூமாரி, பூங்குழலி, பூவம்மா என்பதாக இருந்தது. அதோடு எந்தத் திட்டமும்
இல்லாமல், யோசனையும் இல்லாமல் முன்னோர்களுடைய பெயர்களை வைப்பதை, குலசாமிகளுடையப் பெயர்களை
வைப்பதை ஒரு மரபாக பின்பற்றி வந்திருக்கின்றனர்.
யார்யாருக்கு
எதுஎது குலதெய்வமோ, அவற்றின் பெயர்களே குழந்தைகளுடைய பெயர்களாக இருந்திருக்கின்றன.
ஜக்கம்மா, வீரன், முனியன், ஐயனார், செங்கேணி, இசக்கி, இசக்கியம்மாள், சேவாயி, சடைச்சி,
சடையன், ஆண்டி, ஆகாச கருப்பு, ஆகாச வீரன், நொண்டி கருப்பன், மாரியம்மா, காளியம்மா,
காத்தாயி, பெரிய நாயகி, பெரியாயி, செல்லியாயி, மஞ்சாயி, வேடச்சி என்பது தெய்வங்களுடைய
பெயர்களாக மட்டும் இல்லை. மனிதர்களுடைய பெயர்களாகவும் இருந்தன. ஒரே குடும்பத்தில் ஆறு
ஏழு பெண் பிள்ளைகளாக பிறந்தால் “போதும் பொண்ணு” என்றும், “கசம்பாயி, வேம்பு” என்றும்
பெயர் வைத்தால் அதோடு பெண் குழந்தை பிறப்பது நின்று ஆண் குழந்தை பிறக்கும் என்ற எண்ணத்திலும்
பெயர் வைத்திருக்கிறார்கள். சில குழந்தைகளுக்கு பள்ளி ஆசிரியர்களே பெயர் வைத்த அதிசயமெல்லாம்
தமிழகத்தில் நிகழ்ந்தது.
சிறு தெய்வங்களின் பெயர்களை வைக்கிற அதே அளவுக்கு
பெரும் தெய்வங்களுடைய பெயர்களை வைக்கிற வழக்கமும் இருந்திருக்கிறது. எந்தெந்த நிலப்பகுதியில்,
எந்தெந்த பெரும் தெய்வக் கோயில்கள் இருக்கின்றனவோ அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அந்தத்
தெய்வத்தினுடைய பெயர்கள் – அதிகளவில் மனிதர்களுடைய பெயர்களாகவும் இருந்திருக்கின்றன.
திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அண்ணாமலை என்ற பெயரும், சிதம்பரத்தைச் சுற்றியுள்ள
பகுதிகளில் நடராஜன் என்ற பெயரும், ஸ்ரீரங்கத்தை சுற்றியுள்ளப் பகுதிகளில் ‘ரங்கநாதன்’
என்ற பெயரும் அதிகம் இருந்தன. விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் கோயில் இருக்கிறது.
அதனால் ‘விருத்தகிரி’ என்ற பெயர் விருத்தாசலம் பகுதியில் அதிகம். அதே மாதிரி விருத்தகிரீஸ்வரருக்கு
மற்றொரு பெயர் பழமலை. அந்த பெயரும் விருத்தாசலம் பகுதியில் அதிகம். விருத்தாசலத்திலேயே
கொளஞ்சியப்பர் கோவில் இருக்கிறது. அதனால் ‘கொளஞ்சியப்பன், கொளஞ்சிநாதன், கொளஞ்சியம்மாள்’
என்ற பெயர்கள் அதிகம் இருந்தன. இப்படி தமிழகமெங்கும் எங்கெங்கு பெரிய கோயில்கள் இருக்கின்றனவோ
அந்தப் பகுதியில் அந்தத் தெய்வத்தினுடைய பெயர்கள் ஒரு காலத்தில் அதிகமாக இருந்தன. தெய்வங்களுடைய
பெயரை வைப்பதை யாரும் தாழ்வாக கருதவில்லை. மாறாக பெருமையாகவும், விருப்பத்துடனும் வைத்திருக்கின்றனர்.
வாய்க்கு வந்தபடியும், சிறு - பெரும்தெய்வங்களின்
பெயர்களை வைக்கிற வழக்கம் – சுதந்திரப் போராட்ட காலக்கட்டத்தில் லேசாக மாறத் தொடங்கியது.
சுதந்திரப் போராட்டம் முடிந்த பிறகும் அதனுடைய தாக்கம் கொஞ்ச காலம் இருந்தது. அப்போதுதான்
தலைவர்களுடைய பெயர்களை வைக்கிற வழக்கம் ஏற்பட்டது. காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ்,
ஜான்சி ராணி என்பது போன்ற பெயர்களை சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் தங்களுடைய
குழந்தைகளுக்கு வைத்தனர். இதன் பிறகு அரசியல் கட்சி தலைவர்களுடைய பெயர்களை குழந்தைகளுக்கு
பெயர்களாக வைக்கிற வழக்கம் ஏற்பட்டது. அப்படி வைக்கப்பட்ட பெயர்கள்தான் காமராஜ், அண்ணாதுரை,
கருணாநிதி, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, ஜீவா என்ற பெயர்கள். அரசியல் கட்சி தலைவர்களுடைய
பெயர்கள் தமிழ்நாடு, இந்தியா என்ற எல்லையை கடந்தும் வந்தது. மார்க்சிய சிந்தனையும்,
இயக்கங்களும் தமிழகத்தில் வேரூன்றி வளர்ந்த பிறகு ஸ்டாலின், லெனின், மார்க்ஸ், ஏங்கல்ஸ்
என்ற பெயர்கள் குழந்தைகளுக்கு வைக்கப்பட்டன. இதே மாதிரி அம்பேத்கருடைய சிந்தனைகளும்,
செயல்பாடுகளும் அறியப்பட்டபிறகு ‘அம்பேத்கர்’ என்ற பெயரும் வைக்கப்பட்டது. அம்பேத்கர்
என்று பெயர் வைக்கப்பட்டது போலவே சித்தார்த்தன் என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர்
புத்த மதத்தை தழுவிய போது – சித்தார்த்தன் என்ற பெயரை அதிகம் வைத்துள்ளனர். இன்று சித்தார்த்,
கௌதம் என்ற பெயர்கள் இருக்கின்றன. எந்த அர்த்தத்தில் வைத்தார்கள் என்பது தெரியாது.
நாகரீக பெயர்கள் என்றளவில்தான் வைக்கிறார்கள். புத்தர்மீதோ, அவருடைய போதனைகள் மீதோ
நம்பிக்கை, பற்று வைத்தல்ல.
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு
என்ற நிலை உருவான சூழலில் முதல் தலைமுறையாக படிக்க வந்தவர்களும், வேலைக்கு வந்தவர்களில்
ஆசிரியர்கள், பேராசிரியர்கள் குறிப்பாக தமிழ் ஆசிரியர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு
தமிழ் மன்னர்களுடைய பெயர்களையும், புலவர்களுடைய பெயர்களையும் வைத்தனர். செங்குட்டுவன்,
ராஜேந்திரன், பாண்டியன், பாரி, நெடுஞ்செழியன், மகேந்திரன், அதியமான், ராஜராஜன், குலோத்துங்கன்,
கரிகாலன் என்பன அவற்றில் சில. பழைய காலத்து தமிழ் மன்னர்களுடைய பெயர்களையும், தமிழ்ப்
புலவர்களுடைய பெயர்களையும் வைப்பதின் வழியே தமிழையும், தமிழ் அடையாளத்தையும் காப்பதாக
கருதினர். அந்த வகையில் வைக்கப்பட்ட பெயர்கள்தான் வள்ளுவன், திருவள்ளுவன், புகழேந்தி,
பூங்குன்றன், கம்பன், கபிலன், இளங்கோவன் என்ற பெயர்கள். இந்த மரபின் தொடர்ச்சியாகத்தான்
19ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதி, பாரதிதாசன் என்ற கவிஞர்களுடைய பெயர்களும் குழந்தைகளுக்கு
வைக்கப்பட்டன. கடைசியாக சினிமாவுக்கு பாட்டு எழுதி புகழ்பெற்ற கண்ணதாசனுடைய பெயரும்
இப்படித்தான் குழந்தைகளுடைய பெயர்களாயின. பெரும் புலவர்களாக இருந்தாலும் சுந்தரர்,
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், ராமலிங்க அடிகளார் போன்றவர்கள் சைவ இலக்கியத்தை
எழுதியதின் காரணமாக இப்பெயர்களை சைவ சமயத்தை பின்பற்றுகிறவர்கள் மட்டுமே தங்களுடைய
குழந்தைகளுக்கு சுந்தரம், ராமலிங்கம், திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தம் என்று பெயர்
வைத்தனர். காலப்போக்கில் இப்பெயர்கள் சைவ சமயம் என்றால் என்னவென்று அறியாதவர்களும்
வைக்கிற பொது பெயர்களாகவும் மாறின.
தமிழகத்தில் திராவிட இயக்கம் வளர்ச்சி பெற்ற
நிலையில், தமிழ் பண்பாடு, கலாச்சாரம் மட்டுமே மேன்மையானது என்று பேசிய நிலையில் தமிழ்,
தூய் தமிழ் என்றும் பிற மொழிக் கலப்புக்கூடாது என்றும் எதிர்த்த நிலையில் திட்டமிட்டே
தமிழ் மன்னர்களுடைய தமிழ்ப் புலவர்களுடைய பெயர்களை குழந்தைகளுக்கு வைத்தனர். எல்லாவற்றுக்கும்
மேலாக ‘தமிழ்’ என்பதை பெயரோடு சேர்த்து வைக்கும் வழக்கத்தையும் கொண்டு வந்தார்கள்.
தமிழரசன், தமிழ்ச்செல்வன், செந்தமிழ்ச்செல்வன், முத்தமிழ்செல்வன், முத்தமிழ், தமிழரசி,
தமிழ்ச்செல்வி, முத்தமிழ்செல்வி, செந்தமிழ்செல்வி, செந்தமிழ், கதிரவன், ஆதவன், பொற்செல்வி,
கலைச்செல்வி, கலையரசி, எழிலரசி, எழிலரசன், செந்தாமரை, பூவேந்தன், தமிழினியன், கமலம், செங்கமலம், மதியழகன், அன்பழகன், இளம்பரிதி, தமிழ்த்தென்றல்,
பூந்தென்றல், பொழிலன், பூங்குழலி, கனிமொழி, தமிழிசை, தேன்மொழி, யாழினி, கயல்விழி, மலர்விழி,
நன்னெறி, பூமழை, அன்புமலர், பொன்மலர், அன்பரசி என்ற பெயர்கள் அதிகம் வைக்கப்பட்டன.
தமிழ் என்பதை முதன்மைப்படுத்தி பெயர் வைத்தது, தூய தமிழ் என்று பெயர் வைத்தது மட்டுமல்லாமல்
அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் தங்களுடைய பெயர்களை மாற்றிக்கொள்கிற வரலாற்று அதிசயத்தையும்
நிகழ்த்தினார்கள். அப்படித்தான் தட்சிணாமூர்த்தி கருணாநிதி ஆனார், ராமய்யா – அன்பழகன்,
முருகேசன் – ஜெயகாந்தன், தண்டபாணி – வீரமணி என்ற பெயர்கள் மாறின. பெயர் பிடிக்கவில்லையென்றால்
கெசட்டில் மாற்றிக்கொள்ளலாம், மாற்றிக்கொள்ள முடியும் என்பதை திராவிட இயக்கத்தவர்கள்
செய்துகாட்டினர். திராவிட இயத்தவர்கள் பெயர் வைப்பதில் ஏற்படுத்திய மாற்றத்தால் செட்டியார்,
உடையார், கவுண்டர், பிள்ளை, ஐயர், ஐயங்கார், படையாட்சி என்று பெயருக்கு பின்னால் சாதியின்
பெயரை இணைத்துப்போடுகிற வழக்கம் குறைந்தது. அப்படி போடக்கூடாது என்று திராவிட இயக்கம்
எதிர்க்கவும் செய்தது. ஆனால் தற்போது சாதி கட்சிகள் பெருகிவிட்ட நிலையில் – சாதியை
முன்வைத்து அரசியல் செய்ய வேண்டிய சூழல். அதனால் மீண்டும் பெயருக்கு பின்னால் சாதியின்
பெயரைப் பெருமையாகப் போட்டுக்கொள்கிற வழக்கம் ஏற்பட்டுள்ளது. முன்பு சாதியின் பெயர்
இருந்தது - அது வெறும் இணைப்பாக மட்டும்தான் இருந்தது. தற்காலம் மாதிர பெருமையாக, அடையாளமாக,
ஆணவமாக இல்லை.
திராவிட இயக்கம் ‘தமிழ்’ பெயர்களை வைக்கிற செயல்பாட்டிலிருந்து
படிப்படியாக விலகிய நிலையில், திராவிடத் தலைவர்களின் குடும்பங்களில், தொண்டர்களின்
குடும்பங்களில் ‘தமிழ்’ என்ற வெறி அடங்கியிருந்த காலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி
‘தமிழ்’ – தமிழ்ப் பெயர் வைப்பது என்ற அரசியல் செயல்பாட்டை முன்னெடுத்தது. பெயர் மாற்றம்,
பெயர் சூட்டு – விழா என்றே மதுரையில் நடத்தினார்கள். ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோருக்கு
பெயர்கள் மாற்றப்பட்டன. திராவிட இயக்கத்தவர்கள், தமிழ் பற்றாளர்கள் தங்களுடைய பெயரை
மட்டும்தான் மாற்றிக்கொண்டனர். திருமாவளவன் தன்னுடைய தந்தையின் பெயரையே மாற்றினார்.
தமிழ் மன்னர்கள், புலவர்களுடைய பெயர்கள் மட்டுமல்ல தூய தமிழ்ப் பெயர்களையும் வைத்தனர்.
அதன்படி அய்யாசாமி – திருமாறன் என்று மாறினார். கருப்பையா பெரும் சித்திரனராக மாறினார்.
சின்னசாமி, வெற்றிச்செல்வன் என்றும், சடையமுத்து, பொன்னிவளவன் என்றும் மாறினார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வைத்த பெயர்களில் அதிகம் வைக்கப்பட்டது – பிரபாகரன்
என்பதாக இருந்தது. என்ன காரணத்தினாலோ அவர்கள் ‘அம்பேத்கர்’ என்கிற பெயரை வைக்கவில்லை.
அதிகம் படிக்காத, விபரமறியாத 1940-60 காலக்கட்டத்தில் அம்பேத்கரால் ஏற்பட்ட நன்மைகளை,
உரிமைகளை, சலுகைகளை பயன்படுத்தாத மக்கள் அம்பேத்கர் என்று பெயர் வைத்துள்ளனர். நன்கு
விபரமறிந்த, அவரால் ஏற்பட்ட நன்மைகளை அனுபவித்தவர்கள் யாரும் ‘அம்பேத்கர்’ என்று பெயர்
வைக்கவில்லை. தலித்களில் அதிகம் படித்த, அதிகம் பேர் பதவியில் இருக்கிற, அரசியல் நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ள இக்காலத்தில்தான் ‘அம்பேத்கர்’ என்ற பெயர் வைக்கிற வழக்கம் அருகிவிட்டது.
ஆனால் ‘தலித் அழகி, தலித் ப்ரியா, தலித் சுப்பைய்யா’ என்று பெயர் வைக்கிற தைரியத்தை
விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் உருவாக்கியது.
தமிழகத்தில் 1980 காலப்பகுதியில் கேரளாவிலுள்ள
ஐயப்பன்சாமி புகழ்பெறத் தொடங்கியது. தமிழர்கள் லட்சக்கணக்கில் ஐயப்ப பக்தர்களாக மாறினார்கள்.
அதனால் தமிழகமெங்கும் ஐயப்பன் என்ற பெயர் குழந்தைகளுக்கு வைக்கப்பட்டது. மணிகண்டன்
என்ற பெயரும் பிரபலமானது. ஐயப்பன் புகழ்பெறத் தொடங்கிய அதே காலக்கட்டத்தில்தான் மேல்மருவத்தூர்
ஆதிபராசக்தி என்ற சாமி புகழ்பெறத்தொடங்கியது. ஓம் சக்தி, சிவ சக்தி, ஞான சக்தி, சக்தி,
சக்தி பிரியா, சக்தி ஜோதி, சக்தி ஓவியா, சக்தி செல்வம் என்ற பெயர்கள் வைக்கப்பட்டன.
ஐயப்ப சாமியும், ஆதிபராசக்தியும் புகழ்பெற்றது போலவே வேலுபிள்ளை பிரபாகரனும் தமிழகத்தில்
பெயர்பெற்றார். தமிழின் பெருமைக்கும், தமிழரின் வீரத்திற்குமான அடையாளமாகவே அவர் அறியப்பட்டார்.
முன்னிறுத்தப்பட்டார். அதனால் அவர் பெயர் வைப்பது அதிகரித்தது. பிரபாகரனுடைய பெயர்
மட்டுமல்ல, அவருடைய மனைவி – மதிவதனி என்ற பெயரும் குழந்தைகளுக்கு வைக்கப்பட்டன.
1990 – காலப் பகுதிகிளில் அமெரிக்கா – ஈராக் மீது போர் தொடுத்தப்போதுதான் சதாம் உசேன்
– என்ற பெயர் உலகம் முழுவதும் புகழ்பெற்றது. அமெரிக்கா என்ற வல்லரசையே எதிர்க்கிறார்,
பின்வாங்கச் செய்கிறார், போரிடுகிறார் என்ற செய்திகள் உலகம் முழுவதும் சதாம் உசேனுக்கு
பெரும் புகழைத் தந்தது. அவர் இஸ்லாமிய மக்களின் பாதுகாவலராக, இஸ்லாமியர்களின் வீரத்தின்
சின்னமாக கருதப்பட்டதால், தமிழகம் மட்டுமல்ல உலகமெங்கும் இஸ்லாமியக் குழந்தைகளுக்கு,
சதாம் உசேன் என்ற பெயர் வைக்கப்பட்டது.
மார்க்சிய கொள்கையால், அதனுடைய இயக்கங்களால்
– மார்க்சிய சிந்தனையாளர்களுடைய பெயர்களை வைப்பது வழக்கமானதுபோலவே செம்மலர், செங்கொடி,
கதிர், செங்கதிர் போன்ற பெயர்களையும் வைத்தார்கள். மார்க்சியவாதிகள் பெயர் வைத்ததுபோல
பெரியாரின் கொள்கைகளை பின்பற்றியவர்கள் புதிய பெயர்களை வைத்தார்கள். சாதனை, சமத்துவம்,
விடுதலை, வெற்றி, வணக்கம், சந்தோசம், பெரியார், மகிழ்ச்சி, என்று பெயர் வைத்ததோடு பீடை,
சனியன், ஏது சாமி, போன்ற - யாரும் வைக்க விரும்பாத பெயர்களையும் வைத்தனர். பெரியார்
கொள்கையில் பற்றுள்ளவர்கள் இதுபோன்ற சமூகம் ஏற்காத பெயர்களை வைப்பதில்தான் அதிக ஆர்வம்
காட்டுகின்றனர்.
தமிழர்கள் மட்டுமல்ல கிருத்துவர்களும் பெயர்
வைப்பதில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தனர். முதல் தலைமுறையாக கிருத்துவ மதத்தை தழுவியவர்கள்
தமிழ்ப் பெயரையும், கிருத்துவப் பெயரையும் இணைத்தே வைத்தனர். அல்லது பெயரை மாற்றிக்கொண்டனர்.
பாக்கியராஜ், பாக்கிய நாதன், செல்வநாதன், அருள் டேவிட், தாமஸ் பொன்னைய்யா, பீட்டர்
முடியப்பன், சின்னப்ப ராஜன், மைக்கேல் செல்வராஜ், விக்டர் மனோகர் ராஜ், ஹெப்சிபா ஜெயராணி,
தேவராஜ், தேவ சகாயம், வேத சகாயம், ஜெயமணி, ஆரோக்கியம், ஞானம்மா என்பதாக இருந்தது. இரண்டாம்
மற்றும் மூன்றாம் தலைமுறைகளின் பெயர்கள் – எந்த தமிழ் அடையாளத்தையும் கொண்டிருக்கவில்லை.
ரூத் ஹெப்சிபா, ஜோகானா எபிசா, ஜோபினா எபிசா, ஜாய்ஸ் ஆலிவ், ஆடலின், அல்பீனா, ஹெலன்,
ஷம்மி, டிசோசா, ரோசாரியோ, டேவிட் போனி பேஷ் என்பது போன்ற பெயர்கள்தான் இன்றைய கிருத்துவப்
பெயர்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு முன்பு, திராவிட இயக்கங்களுக்கு முன்பு –
ஒரு ஆள் விரும்பினால் தன்னுடைய பெயரை மாற்றிக்கொள்ள முடியும் என்பதை – செய்தும், மாற்றியும்
காட்டியவர்கள் கிருத்துவ மிஷனரிகளும், இஸ்லாமைத் தழுவியவர்களும்தான். அப்படித்தான்
‘கருப்பாயி’ என்கிற பெண் ‘நூர்ஜஹான்’ ஆனது. . கட்டையன் அந்தோனிசாமி என்றும் செல்வராஜ்
இருதய ராஜ் ஆனதும், அஞ்சலை – மேரியானதும் பெயர் மாற்றியதால்தான்.
கிருத்துவர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்களும்கூட
முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓரளவு தமிழ் கலந்த பெயர்களை வைத்துள்ளனர்.
ராஜா, முகைதீன் பிச்சை, அகிலா பானு, பொன்னப்ப ராவுத்தர், வரிசை முகமது, நாகூர் மீரான்,
பிச்சை கனி, நாகூர் பிச்சை, நாகூர் கனி, அன்வர் பாலசிங்கம், தெரு சாய்பு, ராஜா முகமது,
ராஜா ஷெரிஃப், நஸ்ரின் பானு, தமிழ்மகன் உசைன், ஆட்டுக்குட்டி காசா, கருப்பட்டி முகமது,
குட்டியப்பா, அப்புக்குட்டி, அப்பாக்குட்டி, கருத்தப்பா, அசன் மரைக்காயர், கணக்கன்
முகமது, செல்லப்பா, அண்ணாவி ராவுத்தர், கனியம்மா, கனியப்பா, முத்துக்கண் என்பது போன்ற
பெயர்கள் முன்பு இருந்தன. இப்போது முற்றிலுமாக அரபு பெயர்களாக இருக்கின்றன. அப்துல்
அஹாட்டி, மஜ்ஜிதா பர்வின், தவ்ஹிது இப்புனு ஹசன், ஜென்னத்துல் ஃபிரதவ்ஸ், நவாஸ் ஷெரிப்
போன்ற பெயர்கள். ஹாரீஷ் என்ற பெயரை இஸ்லாமியர்களும் வைக்கின்றனர். இந்துக்களும் வைக்கின்றனர்.
1960-70 காலப் பகுதிகளிலேயே தமிழ் சமூகத்தில்
சினிமா நடிகர், நடிகைகளுடைய பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கிற பழக்கம் ஏற்பட்டது. அந்த
வகையில் வைக்கப்பட்ட பெயர்கள் என்று சரோஜா தேவி, விஜயா, மஞ்சுளா, லதா, பத்மினி என்பதாக
இருந்தது. இப்போது குஷ்பு, ராதிகா, ராதா, ஸ்ரீதேவி, கௌதமி, நக்மா, த்ரிஷா, சிம்ரன்,
சிநேகா, ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா, தனுஷா, போன்றவை குழந்தைகளுடைய பெயர்களாக இருக்கின்றன.
அஜித், விஜய், விக்ரம், சூர்யா, விஜயகாந்த், தனுஷ் என்பவை ஆண் குழந்தைகளுடைய பெயர்களாக
இருக்கின்றன. குழந்தைகளுக்கு சினிமா நடிகர், நடிகைகளுடைய பெயர்களை வைப்பதுகூட அதிசயமல்ல.
தந்தையினுடைய பெயருக்குப் பதிலாக சினிமா நடிகருடைய பெயரையே வைத்துக்கொண்ட அதிசயமும்
தமிழ் நாட்டில் நடந்துள்ளது. ரஜினி பாஸ்கர், ரஜினி கோபி, ரஜினி குமார், அஜித் துரைசாமி
என்று பெயர் வைத்துக்கொண்டுள்ளனர். அஜித் ப்ரியா, ரஜினி ப்ரியா என்று பெயர் வைத்துள்ளார்கள்.
1970 – 80 காலப் பகுதிக்குப் பிறகுதான் தமிழ்நாட்டில்
சுரேஷ், சுரேஷ் குமார், மகேஷ், மகேஷ் குமார், ரமேஷ், சந்தோஷ், சந்தோஷ்குமார், சதீஷ்,
சதீஷ் குமார் என்பது போன்ற பெயர்கள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்தன. அப்பெயர்கள்
இப்போது தமிழ்ப்பெயர்கள் போலவே பயன்படுத்தப்படுகின்றன. நகரத்தில்தான் இதுபோன்ற பெயர்கள்
இருக்கின்றன - கிராமத்தில் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது.
குழந்தைகளுடைய நிறம், உடல், ஊனம் போன்றவற்றையே
பெயராகக் கூப்பிடுகிற பழக்கம் மட்டுமல்ல – பெயராக வைக்கிற வழக்கமும் இருந்திருக்கிறது.
ஊமையன், செவிடி, ஒத்த காதன், கொடக்காதன், சப்பாணி, நொண்டிப்பாண்டி, மொட்டையன், கட்டையன்,
குள்ளன், குள்ளம்மாள் என்பது நிஜப் பெயர்களாகவே இருக்கின்றன. உடல் ஊனம் பெயர்களாக மாறுவது
மாதிரி பிறந்த இடங்களும் பெயரைத் தீர்மானித்திருக்கின்றன. பிரசவத்திற்காக மாட்டுவண்டியில்
போகும்போது – பிறந்த குழந்தைக்குப் பெயர் – வண்டி. வசந்த மாளிகை சினிமா பார்த்துக்கொண்டிருக்கும்போது
பிறந்த குழந்தைக்குப் பெயர் வசந்தமாளிகை. அதே மாதிரி மீனவ நண்பன் என்ற சினிமாவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது
பிறந்த குழந்தைக்குப் பெயர் மீனவன். செடல் (குடை ராட்டினம்) சுற்றிக்கொண்டிருப்பதை
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது பிறந்ததால் – ஒரு பெண்ணுக்குப் பெயர் – செடல்.
உடல் ஊனம், பிறந்த இடத்தை மட்டும் பெயராக வைக்கிற பழக்கத்தோடு பணத்தையே பெயராக வைக்கிற
வழக்கமும் தமிழகத்தில் இருந்தது. ஐயாயிரம், லட்சம், அஞ்சு லட்சம், கோடீஸ்வரன், குழலாமணி,
வெண்டங்காய் என்று பெயர்கள் வைத்திருக்கிறார்கள். மண்கொடஞ்சான், மம்பட்டியான், இருளடியான்
என்ற பெயர்களும், இப்படி பெயர்களுள்ள மனிதர்களும் இருக்கிறார்கள். கோடீஸ்வரன், லட்சம் என்று பெயர் இருக்கிற நாட்டில்
– பிச்சைக்காரன், மடிப்பிச்சை, பிச்சாயி, பிச்சை, பிச்சையம்மாள், பிச்சைய்யா என்ற பெயர்களும்
இருக்கின்றன. குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தங்களுடைய குலத்தெய்வத்திடமோ, பிற சாமியிடமோ
குழந்தைப் பேறு ஏற்பட்டால் உன்னுடைய பெயரையே வைக்கிறேன் என்று வேண்டிக்கொள்வதும், குழந்தை
பிறந்ததும் வேண்டிக்கொண்ட சாமியின் பெயரையே வைப்பதும் ஒரு வழக்கம் என்றால், “எனக்கு
குழந்தை வரம் கொடு, பிச்சைப் போடு’ என்று வேண்டிக்கொள்கிறவர்கள் – வைக்கிற பெயர்கள்தான்
– பிச்சை, பிச்சைக்காரன், மடி பிச்சை, பிச்சாயி, தவமணி என்பன. வேட்டைக்காரன் சாமி என்று
ஒன்று இருக்கிறது. அவருடைய அருளால் பிறந்ததாக நம்பப்படுகிற குழந்தைக்குப் பெயர் – வேட்டைக்காரன்.
தூண்டிக்காரன் சாமியின் அருளால் பிறந்த குழந்தைக்குப் பெயர் தூண்டிக்காரன். கவர்னர்
என்றும் அந்தணன், ஒளிவிளக்கு, ஏட்டு, மின்னல் ராஜா, மின்னல் கொடி என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தெலுங்காயி என்று ஒரு சாமி இருக்கிறது. தெலுங்காயி என்று ஒரு பெண்ணுக்கு பெயரும் இருக்கிறது.
அமாவாசை, பாவாடை, மண்ணாங்கட்டி, ஊக்கையன், ஊக்கியாட்டன்,
சுருட்டையன், குழம்பு சட்டி, சோத்து சட்டி, சோத்துப் புட்டி, வாழக்காய் என்று பெயர்
வைத்த காலமும், குடிசாமிகளின் பெயர் வைத்த காலமும் போய்விட்டது. பெரும் தெய்வங்களுடைய
பெயர்களான நடராஜன், ரங்கநாதன், ராமன், வெங்கடாசலம், வெங்கடாசலபதி, திருவேங்கடம், ஏழுமலை,
நாராயணன், கணேசன், கணபதி, முருகன், விநாயகம், பழனி, பழனியம்மாள், பெருமாள், லட்சுமணன்,
தனலட்சுமி, சீதாலட்சுமி, ராஜ லட்சுமி, மகாலட்சுமி, சிவமாலை, ஆண்டாள், பாக்கியலட்சுமி
என்பது போன்ற தெய்வங்களுடைய பெயர்கள் அழிந்துவிட்டன என்பதைவிட செத்துவிட்டன என்று சொல்லலாம்.
வீட்டில் செல்வம் இல்லை, லட்சுமி என்று பெயர் வைத்தாலாவது செல்வம் வரும் என்ற நம்பிக்கை
இன்று இல்லை. கல்வி செல்வம் கிடைக்க ‘சரஸ்வதி, கலைவாணி’ என்று பெயர் வைத்த காலமில்லை
இது. சரஸ்வதி இன்று யாருக்கும் தேவையில்லை.
‘மங்களம்’ என்ற பெயரும் தேவையில்லாமல் போய்விட்டது. அதே மாதிரி தேசத்திற்காக
உழைத்தவர்களுடைய பெயர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடைய பெயர்கள், தமிழ் மன்னர்களுடைய
பெயர்கள், தமிழ்ப் புலவர்களுடைய பெயர்கள், ஐயப்பன், சக்தி என்ற பெயர்களைக்கூட இப்போது
வைப்பதில்லை. அவையெல்லாம் இப்போது அசிங்கம் பிடித்த கேவலமான பெயர்களாக இருக்கின்றன.
2000க்குப் பிறகு பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்குப்
பெயர் வைப்பதில் அதிக அக்கறையும், ஈடுபாடும் காட்டத் துவங்கினர். பெயர் புத்தகம் படித்தனர்.
நியூமராலஜி படி பெயர் வைக்க ஆசைப்பட்டனர். பெயர் என்பது வெறும் பெயராக இருக்கக்கூடாது,
விநோதமாக இருக்க வேண்டும். பெற்றோர்கள், பெரியவர்கள் சொல்கிற பெயர்களை வைக்கக்கூடாது.
எந்த நாட்டு பெயர், எந்த மொழியில் பயன்படுத்தப்படுகிற பெயர் என்று கண்டறிய முடியாத
பெயர்களை வைக்கின்றனர். உதாரணமாக – தீப்ஷிகா, தக்ஷண்யா, ஷ்ரதா, அவின், எவின், ராதேஷ்,
தார்க்ஷியா, நம்ரதா, அர்ஷ்யா, வர்ஷினி, மோக்க்ஷிதா, ஹெர்ண்மித்ரா, அபிஜித், அஷ்விதா,
யாஷாஸ்ரீ, சாய் ஸ்ரீ, திவ்யேஷ், ரோகேஷ், யோகேஷ், தர்ஷன், விர்திகா, ஐவின், தீக்க்ஷா,
துருவ், அக்க்ஷிதா, அனன்யா, வெரோனிகா, மனீஷா, ஹரீஷ், சோனியா, நேகா, ரிபப்ளிகா, வவ்யா,
சோனாலி, தனுஷா, மனீஷ் – ஆகாஷ், தினேஷ், கௌஷிக், தீட்ஷித் என்பது போன்ற பெயர்கள் நகரம்,
பெரு நகரங்களில் மட்டும்தான் இருக்கின்றன - குக்கிராமங்களில் இல்லை என்று சொல்ல முடியாது.
அப்படி சொன்னால் அது பெரிய பொய். நகரமோ, கிராமமோ முன்பெல்லாம் சில பெயர்களை வைத்தே
அவர்கள் என்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை எளிதில் அறிந்துகொள்ள முடியும். இந்த நவீனமான
பெயர்கள் யார் என்ன சாதி என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த விதத்தில் வாயில் நுழையாத பெயர்களாக இருந்தாலும் நவீன பெயர்களை மதிக்கலாம்.
உலகிலேயே மொழியைத் தாயாகவும், கடவுளாகவும்,
அடையாளமாகவும் போற்றுகிற, வணங்குகிற நாடு – தமிழ்நாடுதான். உலகிலேயே மனிதன் முதன்முதலில்
தோன்றியது – குமரிக்கண்டத்தில்தான், உலகிலேயே மூத்த குடி, மூத்த மொழி, செம்மொழி – தமிழ்மொழி
என்று இனி பெருமை பேசமுடியாது. ‘ஸ்ரீ’ என்ற எழுத்தை போடமாட்டோம் ‘திரு’ என்றுதான் போடவேண்டும்
என்று போராட்டம் நடத்திய தலைமுறையினர் இப்போதும் உயிரோடுதான் இருக்கின்றார்கள். ‘ஸ்’ என்ற எழுத்தை பயன்படுத்தமாட்டோம், இந்தி திணிப்புக்கூடாது,
வடமொழி, சமஸ்கிருத கலப்புக்கூடாது, மொழி ஆதிக்கம் கூடாது என்று போராடி சிறைக்கு சென்றவர்கள்,
வாழ்கிற நாடுதான். கடந்த இருபது ஆண்டுகளில் எண்பது சதவிகித குழந்தைகளுடைய பெயர்கள்
எப்படி வடமொழி பெயர்களாக மாறியது? யார் மாற்றினார்கள்? எது மாற்றியது? பெயரையே – கௌரவக்
குறைச்சலாகவும், இழிவாகவும் கருதும் மனோபாவம் எப்படி ஏற்பட்டது? பெரியசாமி, சின்னசாமி,
கந்தசாமி, ரெங்கசாமி, முனியசாமி, பெருமாள்சாமி, ராமசாமி, அய்யாசாமி, கண்ணுசாமி, தங்கசாமி,
ரத்தினசாமி, கிருஷ்ணசாமி போன்ற எல்லா சாமிகளும் செத்துவிட்டன. வண்டி, வசந்த மாளிகை,
மீனவன், சோத்துப் புட்டி, வாழைக்காய் என்ற பெயர் வைத்ததில்கூட, கருப்பன், பெரியக் கருப்பன்,
சின்னக் கருப்பன், குள்ளக் கருப்பன், கருப்பாயி, பாலாயி, மூக்காயி, பாப்பா என்று பெயர்
வைத்ததில்கூட ஒரு கதை இருந்தது. ஒரு நம்பிக்கை, பொருள் இருந்தது. இந்த பெயர்களுக்குப்
பின்னால் ஒரு நிலப்பகுதி, நாட்டார் தெய்வங்கள் இருந்தன. மண் சார்ந்த அடையாளம் இருந்தன.
‘அலங்காரம்’ என்றும் காத்தவராயன், சிங்காரம் என்றும் பெயர் வைத்ததற்குப் பின்னால் கூட
ஒரு கதை இருந்தது.
புராண, இதிகாசங்களில் இருந்த பெயர்கள் எல்லாம்
மனிதர்களுடையப் பெயர்களாக இருந்தன. தருமன், வீமன், அர்ச்சுனன், அரிச்சந்திரன், சந்திரமதி,
பாஞ்சாலி, மாயக் கிருஷ்ணன், கர்ணன் என்ற பெயர்கள் எல்லாம் வெறும் பெயர்களாக மட்டும்
வைக்கவில்லை. பெயர்களை தொலைத்தவர்களா தமிழர்கள்? பெயர் என்பது வெறும் பெயர் மட்டும்தானா?
அதற்கு எந்த அர்த்தமும் இல்லையா? ஊரின் பெயரையே குழந்தைகளுக்கு பெயர்களாக வைத்தார்கள்.
சிதம்பரம், நாகூரான், திருப்பதி, வேளாங்கண்ணி, பழனி, காசி என்பதெல்லாம் வெறும் பெயர்கள்
மட்டும்தானா? அப்படியென்றால் அம்பேத்கர், பெரியார், காந்தி, மார்க்ஸ், லெனின், பாரதி,
பாரதிதாசன், திருநாவுக்கரசு, ராமலிங்கம், திருஞானசம்பந்தம், புனிதவதி, மண்டோதரி, ஆண்டாள்,
கண்ணகி, மாதவி, ராவணன் என்ற பெயர்கள் – வெறும் பெயர்கள் மட்டும்தானா? பெயர்களில் தொலைந்ததா
அழகு?
ஒரு மனிதனுக்கான அடையாளம்தானே பெயர். அந்த அடையாளம் இன்று எப்படி
இருக்கிறது? பெயர் என்பது சாப்பாடா? சாப்பிட்டவுடனேயே ஜீரணமாகிப்போவதற்கு? பெயர் ஒரு
மனிதனுக்கு மட்டுமல்ல. அவனுடைய சந்ததியினருக்கும் அதுதான் அடையாளம். தூக்கி சுமக்க
வேண்டிய அடையாளம். அந்த அடையாளம் இன்று எப்படி இருக்கிறது?
கோடிகோடியாக, லட்சம்லட்சமாக தங்களுடைய குழந்தைகளுக்காக பணம் சேர்த்து
வைத்திருக்கிறார்கள். மூன்று மனை நான்கு மனை என்று வாங்கிப்போட்டு இருக்கிறார்கள்.
இன்சுரன்ஸ் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு பிளாட், மூன்று பிளாட் என்று வாங்கிப்போட்டிருக்கிறார்கள்.
பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். எல்லாவற்றிலும் அக்கறையாக இருக்கிற பெற்றோர்கள் தங்களுடைய
குழந்தைகளுக்கு அடையாளமாக, இருக்க வேண்டிய பெயரை எப்படி வைத்திருக்கிறார்கள்?
உயிர்மை
ஜுன் 2015
அருமையான கருத்து......
பதிலளிநீக்குஆழமான நடை., வாழ்த்துகள்..
பிபிப்ட்
பதிலளிநீக்குமக்கள் உணரவேண்டிய ஒரு விடயம் இது. அருமை.
பதிலளிநீக்குதமிழ் பெயர் வேண்டும்
பதிலளிநீக்குமகேந்திர குமார்
நீக்குARUMAI
பதிலளிநீக்குஆண்பிள்ளை தமிழ் பெயர் வேண்டும்
பதிலளிநீக்குSathish
பதிலளிநீக்கு