திங்கள், 1 ஜூன், 2015

யாருடைய எலிகள் நாம்? (கட்டுரை தொகுப்பு) : சமஸ் விமர்சனம் – இமையம்

யாருடைய எலிகள் நாம்? :      சமஸ்
விமர்சனம் – இமையம்.
      கடந்த பத்தாண்டுகளில் தமிழக, இந்திய, சர்வதேச சமூகத்தில் நிகழ்ந்த அரசியல், பொருளாதார, பண்பாட்டு, சூழல், வாழ்க்கை மாற்றங்கள் என்னென்ன என்பதை, யாருடைய எலிகள் நாம் என்ற கட்டுரைத் தொகுப்பு விரிவாக பேசுகிறது. தமிழ் அரசியல், மொழியும் கல்வியும், வாழ்க்கை, ஊடகம், சாதி மத இன அரசியல், பொருளாதாரம், சர்வதேசியம், கடல், நிலம், காடு, சூழல், ஓர் ஆட்சி, ஓர் ஆவணம் – என்ற பத்து தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள இந்நூலில் நூற்றி பத்தொன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
      பரபரப்பு செய்திகளையும், துணுக்குச் செய்திகளையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் எழுதுவதே பத்திரிக்கையாளரின் நெறி என்று செயல்படுகிற சூழலில் “யாருடைய எலிகள் நாம்” என்ற சமஸின் கட்டுரைத் தொகுப்பு முக்கியமானது. பிற பத்திரிக்கையாளர்களுடைய, எழுத்துக்களிலிருந்து மாறுபட்டிருப்பதற்கு காரணம் “எந்த ஒரு விசயத்தையும் என் நாட்டின் மீதும், சமூகத்தின் மீதும் கொண்டிருக்கும் அக்கரையினூடாகவே பார்க்கிறேன்” என்று சமஸ் சொல்வதுதான். எழுதுவதுதான். அரசியல், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், நீர், நிலம், இயற்கை வளம், அரசின் ஒப்பந்தங்கள் என்று எல்லா விசயங்களின் மீதும் ஒரு பத்திரிக்கையாளனாக கடமைக்கு எழுதினார் என்பதைவிடவும், சமூக அக்கறையின் பொருட்டே எழுதியிருக்கிறார். எல்லாக் கட்டுரைகளின் மூலமாகவும் அவர் சொல்ல விரும்புவது அறம் செய விரும்பு என்பதுதான். சமஸின் அக்கறை ஒவ்வொரு இந்தியனும் கொள்ள வேண்டியது. யாருடைய எலிகள் நாம் – நூலிலுள்ள எல்லாக் கட்டுரைகளுமே அரசியல் கட்டுரைகள்தான். சுய விருப்பு, வெறுப்பு, கட்சி சார்ந்த, அரசியல் சார்ந்த எந்த மனச்சாய்வுமின்றி எழுதப்பட்டுள்ளது. இதை சமஸே ‘சமூக அறம்தான் என் எழுத்துக்கான அளவுகோல்’ என்று சொல்கிறார். அவர் சொல்வது உண்மை என்று நிரூபிக்கின்றன இக்கட்டுரைகள். சமஸின் எழுத்தில் பயம், அச்ச உணர்வு, தயக்கம் இல்லை. உண்மைகளை, ஆதாரங்களோடு, புள்ளிவிவரங்களோடு சொல்கிறார். அதையும் சற்று உரத்த குரலில் சொல்கிறார். எந்த சலுகையையும் காட்டாத, கோராத எழுத்து.     
      அரசியல் என்றாலே எனக்குப் பிடிக்காது. அரசியல்வாதிகள் மோசம். கொள்ளை அடிப்பவர்கள். அவர்களால்தான் நாடே சீரழிந்துவிட்டது என்று பொதுசனம் சொல்வது நிஜமா? அப்படி சொல்கிறவர்கள் யார்? நல்ல படிப்பும், நல்ல வேலையும் உள்ளவர்கள் அரசியல்வாதிகளைப் பார்த்து ‘மலத்தை’ கண்டதுபோல ஒதுங்கிப்போய்விடுகிறார்கள். அரசியலுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறார்கள். இப்படி கேட்கிறவர்கள், பால் விலை உயர்ந்தபோது, மின்சாரக் கட்டணம், பேருந்துக் கட்டணம், ரயில் கட்டணம், கல்வி கட்டணம் உயர்ந்த போதெல்லாம் என்ன செய்தார்கள்? அரசியல்வாதிகளை கடவுளாக்கி வழிபடுகிறோம். இல்லையென்றால் கொச்சைப்படுத்தி இழிவாகப் பேசுகிறோம். அரசியல்வாதிகள் மோசமல்ல. நாம்தான் மோசமானவர்கள். அரசியல்வாதிகள் மோசமாவதற்கும், சொத்து சேர்ப்பதற்கும், கொள்ளை அடிப்பதற்கும் நாம்தான் உறுதுணையாக இருந்தோம். அரசியல்வாதிகள் கொள்ளையடித்தபோதும், சொத்து சேர்த்தபோதும் அவர்களை கண்டிப்பதற்குப் பதிலாக, தண்டிப்பதற்குப் பதிலாக பங்கு கேட்டோம். இதைத்தான் சமஸ் ‘‘நாம் அவர்களை சீரழித்தோம். அவர்கள் நம்மை சீரழித்ததோடு நாட்டையும் சீரழித்தார்கள்” என்று சொல்கிறார். அரசியல்வாதிகள் மோசமானவர்களாக இருப்பதற்கு சமூகம்தான் காரணம்.
      இந்தியாவையே உலுக்கிய அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், மாட்டுத் தீவன ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி நடத்துவதில் ஏற்பட்ட ஊழல், அரசு நிலத்தையே தன் சொந்தப் பெயரில் எழுதிகொண்ட முதலமைச்சர் – என்று எதுவும் நம்மை பாதிக்கவில்லை. குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களை பிரமாண்ட வரவேற்பு கொடுத்து ஊர்வலமாக அழைத்து வந்த பெருமை தமிழர்களுக்கு மட்டுமே உரியது. குற்றவாளிகளுக்கு நாம் அளித்த உற்சாகமான வரவேற்பும், ஊர்வலமும் ஊழலை நாம் எப்படி கொண்டாடினோம் என்பதை உலகுக்கு காட்டியது. இதைத்தான் சமஸ் “நாம் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவர்களாக இருக்கிறோம்” என்று சொல்கிறார். இந்தியாவில் ஊழல் என்பது பெரிய விசயமல்ல. காரணம் இங்கு சாதாரண மனிதனிலிருந்து, முதல்வர்கள்வரை ஊழல் செய்கிறார்கள். ஊழலில் பங்குதாரர்களாக, பங்கு கேட்பவர்களாக இருக்கிறோம். நம்முடைய அன்றாட வாழ்வில் ஊழலற்ற கணம் எது? கண்டுபிடிப்பது சிரமம் என்பதை “எங்களுக்கு என்ன தண்டனை” என்ற கட்டுரையிலும், ஊழல் நமக்குப் பழக்கமாகிவிட்டது’ என்ற கட்டுரையிலும் தெளிவாக எழுதியிருக்கிறார். இந்தியாவில் ஊழல் பெருகியதற்கும், அரசியல்வாதிகள் அதிகளவில் சொத்து சேர்த்ததற்கும் ஒவ்வொரு இந்தியனும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தூண்டுகோலாக இருந்திருக்கிறார்கள் என்பதை ‘உங்கள் உள்ளங்கைகளை உற்றுப் பாருங்கள்’ என்று சொல்கிறார். நாம் ஒருபோதும் செய்யவிரும்பாத காரியத்தை செய்யச்சொல்லி கேட்கிறார்.
      ஊழலுக்கு அடுத்தப்படியாக சமஸ் அதிகம் கவலைப்படுவது நம்முடைய கல்வி சூழல்பற்றி. தமிழகக் கல்விச்சூழல் இன்று எப்படி இருக்கிறது? அரசிடமிருந்த கல்வித்துறை எப்படி இருபதே ஆண்டுகளில் தனியார் மயமானது? இலவசமாக பெற வேண்டிய கல்வியை ஏன் லட்சம் லட்சமாக கொடுத்து வாங்குகிறோம். இதற்கான சமூக சூழல் எப்படி உருவாயிற்று என்று பலநூறு கேள்விகளை ‘ஒரு பள்ளிக்கூடத்தின் கதை’, ‘அரசுப்பள்ளிகள் கொலை’ என்ற கட்டுரைகளின் வழியே கேட்கிறார். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பது போய் – கல்வி வியாபாரம் சிறந்த தமிழ்நாடாக மாறியது. அரசுப் பள்ளிகள் மூடுவிழாவை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதற்கு ஆசிரியர்களும், அரசு மட்டும்தான் காரணமா, பெற்றோர்களும் அவர்களுடைய பேராசைகளும் காரணம் இல்லையா? கல்வி வியாபாரத்தை, கொள்ளையை ஊக்குவித்தது யார்? இலவசக் கல்வி என்ற சமூக செயல்பாட்டை சீரழித்ததில் எல்லாருக்குமே பங்கு இருக்கிறது. அரசுப் பள்ளி, அரசுக் கல்லூரி என்ற பொது சொத்தை – நாம்தானே தரமற்றது என்று இழிவுப்படுத்தினோம். புறக்கணித்தோம். இன்று மேம்பட்டது, சிறந்தது என்று கொண்டாடுகிற தனியார் கல்வி எப்படிப்பட்டது? மதிப்பெண் மட்டும்தான் படிப்பா? என்று கேட்கிற சமஸ் “இன்று கல்வியிலிருந்து, விளையாட்டை நீக்கிவிட்டோம். இன்று எந்தப் பள்ளியிலிலும் விளையாட்டு என்ற செயற்பாடே இல்லை’ என்று கவலை கொள்கிறார். பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டை நீக்கிவிட்ட நம் கல்விச் சூழலும், நாடும் -  ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல ஆசைப்பட முடியாது என்பதை ‘நோஞ்சான் இந்தியா’, ‘இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கைப் பார்க்கிறது’ என்ற கட்டுரைகளின் வழியே விவரிக்கிறார். பள்ளிகளிலேயே விளையாட்டை ஒதுக்கிவிட்ட நாடு நோஞ்சானாக இல்லாமல் வேறு எப்படி இருக்கும்? இன்று கல்வி மட்டுமல்ல விளையாட்டும் வியாபாரம்தான். கிரிக்கெட் விளையாட்டில் ஆண்டுக்கு ரூ.2500 கோடி எப்படி லாபம் வருகிறது? கல்வி தொடர்பான சமஸின் கட்டுரைகள் கற்பனை அல்ல. அனுமானம் அல்ல. உண்மைகள். கல்வி, குடிநீர், சுகாதாரம் என்று முக்கியமான விசயங்களிலிருந்து அரசு படிப்படியாக விலகிக்கொள்வதும், தனியார் மயமாக்குவதும், ஆழிப் பேரலையைவிட, நிலநடுக்கத்தைவிட பெரிய அழிவைக்கொண்டு வரும் என்று சமஸ் கவலைப்படுகிறார். அவருடைய கவலை நியாயமானது. எல்லாருக்குமானது. ஆங்கிலத்தில் படிப்பதுதான் படிப்பு, தனியாரில் படிப்பதுதான் படிப்பு. அப்போதுதான் அறிவாளி ஆவான் என்ற பொய்யை, விளம்பரத்தை மொத்த தமிழ்ச் சமூகமும் எப்படி நம்புகிறது என்பதுதான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அதிசயம்.
      இந்தியா – உண்மையில் இந்தியர்களுக்கானது மட்டும்தானா என்ற கேள்வியை ‘இந்தியா விற்பனைக்கு’, ‘இந்த நாடு யாருடையது?’, ‘நம் காலத்தின் இந்தியா’, ‘இந்தியாவில் உருவாக்கி விற்கப்போகிறோமோ’, ‘இந்தியாவை அறுத்து விற்கப்போகிறோமா’, ‘வறுமை ஒழிப்பா, ஏழைகள் ஒழிப்பா?’ ஆகிய கட்டுரைகளின் வழியே  கேட்கிறார். கட்டுரைகளின் தலைப்பும், கட்டுரைகளுக்குள் தரப்பட்டுள்ள புள்ளி விபரங்களும் நமக்கு அதிர்ச்சியை தரக்கூடியனதான். நம்முடைய பிரதமர்கள் நாடுநாடாக போய் கையெழுத்திடுகிற ஒப்பந்தங்கள் எப்படிப்பட்டவை? உலக நாட்டிலுள்ள பெரும் பணக்காரர்களை இந்தியாவிற்கு அழைப்பது நண்பர்களாகவா, விருந்தாளிகளாகவா, நட்புறவை பேணுவதற்காகவா என்றால் இல்லை. இந்தியாவிற்கு வந்து சுரண்டிக்கொண்டுப்போங்கள் என்று அழைக்கிறார்கள். அண்மையில் ஜப்பான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள பெரும் பணக்காரர்களிடம் “உங்களுடைய அதிர்ஷ்டத்தை இந்தியாவுக்கு வந்து சோதித்துப்பாருங்கள். இந்தியாவில் குறைந்த செலவில் அதிக உற்பத்தி நிகழும் அதிசயங்கள் நிகழ்வதை நீங்கள் பார்க்க முடியும். இந்தியாவில் ஏராளமான தொழிளாளிகள் உள்ளனர்” என்று கூறி இந்தியாவில் தொழில் தொடங்க அழைத்தார்.  இந்த அழைப்பு யாரை வளப்படுத்த? யாரை மேம்படுத்த? ஒவ்வொரு நாடாக சென்று பிரதமர் மோடி – பெரும் பணக்காரர்களை மட்டும்தான் அழைத்திருக்கிறார். உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கு அவர் ஒன்றுமே செய்யவில்லை என்று யாரும் குற்றம் சொல்ல முடியாது. உள்நாட்டு பெரும் முதலாளிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். “பல்வேறு காரணங்களால் தொழிலதிபர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. உங்களுடைய அச்சத்தை அகற்றவும், நம்பிக்கையை ஏற்படுத்தவும், நான் உறுதியான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். உங்களுக்கு அச்சம் தரும் சட்டங்கள் பலவற்றை நீக்கிவிடுகிறேன். இந்த நாடு உங்களுடையது. உங்களுடைய நிறுவனங்கள் – பன்னாட்டு நிறுவனங்களாக மாற வேண்டும்” என்று மோடி உள்ளூர் முதலாளிகளுக்கு உத்தரவாதம் அளித்தார். அவர் நீக்குவதாக சொன்ன சட்டங்கள் தொழிலாளர்கள் நலன் சார்ந்த சட்டங்களைத்தான். அவர் உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்குக் கொடுத்த உத்தரவாதம் – சட்ட சிக்கல் இருக்காது. நிலம், நீர், மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படும். வாராக் கடனாக வங்கிகளில் வாங்கியக் கடன்களை செலுத்த வேண்டாம். இதுபோன்ற சலுகைகளையும், இன்னும் பல சலுகைகளையும் மோடி, உள்ளூர், வெளிநாட்டு பெரு முதலாளிகளுக்கு வழங்கியுள்ளார். அதற்காகத்தான் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றத் துடிக்கிறார். முதலாளித்துவம் மனிதர்களை வெறும் உற்பத்திக்கான சாதனங்களாக மட்டுமே பார்க்கின்றன.
      மோடி இந்தியாவை வளர்க்க விரும்புகிறாரா, விற்க விரும்புகிறாரா என்று கேட்கிற சமஸ், விற்கத்தான் முயல்கிறார் என்பதை ஆதாரங்களுடன் விளக்குகிறார். நாம் உருவாக்கும் அரசுகளும், பிரதமர்களும் யாரை பாதுகாக்கவும், வளப்படுத்தவும் விரும்புகிறார்கள்? இங்குதான் சமஸினுடைய ‘யாருடைய எலிகள் நாம்?’ என்ற கேள்வியும், கட்டுரையும் முக்கியத்துவம் பெறுகின்றன. நமது பிரதமர் ஏழ்மையை ஒழிக்க விரும்புகிறாரா, ஏழைகளை ஒழிக்க விரும்புகிறாரா? ஏழ்மையை ஒழிப்பதைவிட ஏழைகளை மேலும் ஏழைகளாக்குவதில்தான் அதிக ஆர்வம். பன்னாட்டு முதலாளிகளுக்கு உழைப்பை மட்டும் நாம் கொடுக்கவில்லை. அவர்கள் மருத்துவத் துறையில் செய்ய விரும்பும் சோதனைகளுக்கும் நாம்தான் எலிகள். பிரதமர் மோடி – நல்ல எலிக்கூண்டு என்பதை சமஸ் காட்டமான வார்த்தைகளால் விமர்சிக்கிரார். நாம் விரும்பிய, உருவாக்கிய எலிக்கூண்டுதான் மோடி.
      இந்தியா குறைந்த கூலிக்கு அதிக உழைப்பைக் கொடுக்கும் நாடாக மட்டுமல்ல. பல நாடுகள் தங்களுடைய கழிவுகளைக் கொட்டுகிற குப்பைத் தொட்டியாகவும் இருக்கிறது. வெளிநாட்டுக் குப்பைகளால் மட்டுமல்ல, உள் நாட்டுக் குப்பைகளாலும் எப்படி இயற்கை ஆதார வளங்களான நிலம், நீர், காற்று மாசுபடுகிறது என்பதை – வெப்ப அரசியல், ‘அழிவு சக்தி’, ‘வன அரசியல்’, ‘நீரும் விஷமும்’, ‘மன்னார்குடி ஏன் இப்படி ஆனது?’ போன்ற பல கட்டுரைகளின் வழியே விவரிக்கிறார். வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் நாம் எப்படி நம்முடைய நீர் ஆதாரங்களான – ஏரி, குளங்களை குப்பை மேடுகளாக்கி வருகிறோம் என்று மிகுந்த வேதனையோடு சொல்கிறார். நீர் எப்படி விஷமாக மாறுகிறது – எதனால் அப்படி மாறுகிறது, அதற்கான காரணிகள் எவை என்பதையும் விரிவாக எழுதியிருக்கிறார். நான்கு வழி சாலைக்காக நாம் பறிகொடுத்த நிலங்கள் எவ்வளவு? இயற்கை வளங்களை அழித்தொழிப்பதில் பன்னாட்டு, உள்நாட்டுக் கம்பனிகள் மட்டுமல்ல தனிமனிதர்களும் எப்படி போட்டிப்போட்டுக்கொண்டு செயல்படுகிறோம் என்பதை சொல்கிறார். மட்கும் குப்பைகளைவிட மட்காத குப்பைகளையே ஏன் நாம் பயன்படுத்துகிறோம்? சமஸின் கோபம் மிகையானது என்று சொல்லமுடியாது. அவர் தருகிற புள்ளிவிவரங்கள் பொய்யானது என்று சொல்ல முடியாது.
      இந்தியாவில் இருக்கின்ற ஊடகங்களினுடைய செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை சக் கா சாம்னா, எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன், ‘ஆளுக்கொரு செய்தி - ஜமாய்’ ஆகிய கட்டுரைகளில் விமர்சிக்கிறார். ஊடக செயல்பாடு இன்று எப்படி இருக்கிறது? ஒன்றுமில்லாத தூசியைக்கூட பூதாகாரமாக உருமாற்றிவிட முடியும். அதற்கான ஆற்றலும், சக்தியும் ஊடகத்திற்கு இருக்கிறது. அப்படித்தான் அன்னா ஹசாரே – என்ற களிமண்ணை தங்கக்கட்டி என்றல்ல தங்கப் புதையலாக காட்டியது. களிமண்ணை தங்கப்புதையல் என்று நாமும் எண்ணினோம். அன்னா ஹசாரே இந்தியாவில் உருவாக்க நினைத்த புரட்சி என்ன? அவர் செய்ய நினைத்த சமூக மாற்றம் என்ன? அவர் நடத்திய கூட்டங்கள் எல்லாம் அற்புத சுகமளிக்கும் கூட்டங்களாக எப்படி மாறிப்போயின என்பதை சமஸ் விரிவாக எழுதியிருக்கிறார். அன்னா ஹசாரேவும், அரவிந்த் கெஜ்ரிவாலும் – புனித பிம்பங்களாக, ஊடகங்களால் எப்படி உருமாற்றம் செய்யப்பட்டார்கள்? உண்மையில் அவர்கள் புனிதர்கள் அல்ல என்பதை நடைமுறை நிகழ்வுகள் நிரூபித்தன. ஊழல் ஒழிந்துவிட்டால் இந்தியா சுபிட்சமடைந்துவிடும் என்பது எவ்வளவு பெரிய பொய்யான கற்பனை. ஊழல் ஒழிந்துவிட்டால் இந்தியாவில் நிலவக்கூடிய சாதியப் பிரச்சனைகள், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், தனியார் மயமாதல், உலகமயமாதல், வணிகமயமாதல் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்துவிடுமா? “மக்களின் நுகர்வை அதிகரிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தவர் நமது முன்னாள் ஜனாதிபதி பாட்டீல். அன்னா ஹசாரேவும், அரவிந்த் கெஜ்ரிவாலும் நடத்திய நாடகம் என்பது – அற்புத சுகமளிக்கும் கூட்டங்களில் பிரசங்கம் செய்யப்படும் – குருடர் பார்க்கிறார், செவிடர் கேட்கிறார், நொண்டி நடக்கிறார், ஊமை பேசுகிறார் என்பதை போலத்தான் இருந்தது. அதைத்தான் உண்மையென ஊடகங்கள் வெட்கமின்றி பரப்புரை செய்தன. அதைத்தான் தக்க ஆதாரங்களுடன் சமஸ் எழுதியிருக்கிறார். ஊடகங்கள் நினைத்தால் எவ்வளவு பெரிய ஆளையும் செல்லாக் காசாக்க முடியும், கரிக்கட்டையை வைரமாகக் காட்ட முடியும். மொத்த இந்திய ஊடகமும் மோடியை எப்படி ‘புதிய ரட்சகராக ஊதிப்பெருக்கிக் காட்டியது என்பதையும், பெரு முதலாளிகளின் ஊக்குவிப்பால் அவர் எப்படி பிரதமராக்கப்பட்டார் என்பதையும் விரிவாக எழுதியிருக்கிறார் சமஸ். அரசியல்வாதிகள் செய்கிற அரசியலைவிட, ஊடகம் செய்கிற அரசியல்தான் பெரியது. “பணம் வாங்கிக்கொண்டு செய்தி வெளியிடும் முறைக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றிப் போராடுகிற அளவுக்கு நமது நாட்டில் ஊடகக்காரர்களின் ஜனநாயக மாண்பு செயல்படுகிறது என்று நூலாசிரியர் கவலைப்படுகிறார். அது அவருக்கு மட்டுமான கவலை அல்ல.
      ‘யாருடைய எலிகள் நாம்?’ – கட்டுரைத் தொகுப்பு நூல், கடந்த பத்தாண்டுகளில் தமிழக, இந்திய, சர்வதேச அளவில் நிகழ்ந்த மிக முக்கியமான விசயங்கள் குறித்து – எவ்விதமான சமரசமும், விட்டுக்கொடுத்தலுமின்றி எழுதப்பட்டிருக்கிறது. சமூக அறத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது. இதுதான் இந்நூலின் பலம். பத்தாண்டு கால மதிப்பு வாய்ந்த சமூக ஆவணம் மட்டுமல்ல, சமூக அறத்தைக் கொன்றதில் நமக்கு எவ்வளவு பங்கு இருக்கிறது என்பதை சொல்கிற ஆவணம். நாம் எந்த அளவுக்கு நிரபராதிகள் என்று கேட்கிற கேள்விகளின் தொகுப்பு. ஒரு பத்திரிக்கையாளனின் அறச்சீற்றம் – ‘யாருடைய எலிகள் நாம்?’ என்ற நூல்.

யாருடைய எலிகள் நாம்?,
(கட்டுரைத் தொகுப்பு) – சமஸ்,
வெளியீடு – துளி, சென்னை – 2014,
விலை – ரூ.300
உயிர்மை ஜுன் 2015


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக