சமகால நாவல்களில்
மொழிச் சிக்கல்கள்
- இமையம்.
நாவல் என்ற கலை வடிவம்
தமிழுக்கு அறிமுகமாகி ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த ஒரு நூறு ஆண்டுக்
காலத்தில் நாவலின் வடிவம்,
உள்ளடக்கம்
மட்டுமல்ல மொழியும் மாறிமாறி உருமாற்றம் பெற்று வளர்ந்து வந்திருக்கிறது. கதையும்
மொழியும் அந்தந்த எழுத்தாளர்களுடைய பின்புலத்தையும் காலத்தையும் காட்டுவதாக
இருந்திருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான கதை சொல்லல் முறையும், அதற்குத்
தேர்ந்தெடுத்த மொழியும் செல்வாக்குப் பெற்றதாக இருந்திருக்கிறது. ஒரு காலத்தில்
பேச்சு வழக்கில், வட்டார வழக்கில்
எழுதுவது மதிப்பிற்குரியதாக இல்லை. பிற்காலத்தில் இப்போக்கு செல்வாக்குப் பெற்றதாக
இருந்தது. அந்த வகையில் 1980-90களுக்குப் பிறகு
தமிழில் விவாதிக்கப்பட்ட நவீனத்துவம், பின் நவீனத்துவம், அமைப்பியல் வாதங்கள், கட்டுடைத்தல், இருத்தலியல், சர்ரியலிசம்,.... போன்ற பல கோட்பாடுகள் மரபான கதை சொல்லும் முறையையும், அதற்கான
மொழியையும் மாற்றி அமைத்தது. இப்போக்குத் தமிழில் தற்போது ஆதிக்கம் செலுத்திக்
கொண்டிருக்கிறது. இப்போக்கை பின்பற்றி எழுதும் நாவலாசிரியர்களின் நாவல்களில்
பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி-நாவலில் உருவாக்கிக்காட்ட நினைத்த சித்திரத்தை
வாசகனுக்குச் சரியான விதத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பதில், சமகால வாழ்வின்
புதிர்களை, சிக்கல்களைப்
புரிந்து கொள்வதில் - மொழி வளர்ச்சிக்கும், நாவல் என்ற கலை வளர்ச்சிக்கும் எந்த அளவுக்குப்
பயன்படுகிறது என்ற கேள்விகளின் வழியே-சமகால நாவல்களின் மொழியை ஆராய வேண்டியுள்ளது.
60-80- காலம் வரைகூட எழுத்தாளர்களுக்கு மொழி
குறித்துக் கூர்மையான அறிவு இருந்தது. கதை எழுதுவதற்கு ஒரு நோக்கம் இருந்தது.
தொடக்கக்கால நாவலாசிரியர்களுக்குச் சமூகச் சீர்திருத்தம், விதவை திருமணம், நீதி போதனைகளை, அறநெறிகளைப்
போதிப்பது போன்ற நோக்கங்கள் இருந்தன. அதற்கடுத்து வந்த எழுத்தாளர்களுக்குத்
தீண்டாமை, பெண் கொடுமை, சுதந்திரப்
போராட்டம் என்று ஒரு நோக்கம் இருந்தது. 60-70களில் தொழிலாளர் போராட்டம், புரட்சி என்று சமூகம் சார்ந்து, உழைக்கும்
வர்க்கம் சார்ந்து நோக்கம் இருந்தது. 80-90களில் பெண்ணியமும், 90-2000 காலத்தில் தலித்தியம், விளிம்பு நிலை
மக்களின் வாழ்வைச் சித்தரித்தல் என்ற நோக்கம் இருந்தது. தற்காலத்தில் நோக்கம்
எதுவும் இல்லை. தற்போது தன் முனைப்பு மட்டுமே இருக்கிறது. தமிழ்
எழுத்தாளர்களைத்தவிர உலகில் வேறு எந்த மொழி எழுத்தாளர்களும் தாங்கள் அறிவு
ஜீவிகளுக்கு மட்டுமே எழுதுவதாக அறிவித்துக் கொள்ளவில்லை. சமகால நாவலாசிரியர்கள்
தங்களுடைய முன்மாதிரிகளாக,
முன்னோடிகளாக
வர்ணித்திருக்கிற எல்லா எழுத்தாளர்களுமே வார்த்தைகளைக் குறைத்து எழுதியவர்கள், அலங்காரங்களைத்
தவிர்த்தவர்கள், எளிமையான
சொற்களையே தங்களுடைய பெரிய பலமாகக் கொண்டவர்கள்தான்.
சமகால நாவல்களின் மொழி
எளிதில் அணுக முடியாததாக இருக்கிறது. காரணம் நாவல் மொழி கவிதையாகவும் இல்லாமல்
உரைநடையாகவும் இல்லாமல் இருக்கிறது. அதோடு எழுத்து மொழியாகவும் இல்லாமல், பேச்சு மொழியாகவும்
இல்லாமல் ஒரு நிலையில் இரண்டும் கலந்த கலவையாகவும், மற்றொரு நிலையில் தனித்தனியாகவும் இருக்கிறது.
அதீதமாகப் பூடகத்தன்மைக் கொண்டதாகவும், கவிதை குணம் கொண்ட வார்த்தை சேர்க்கைகளாகவும், பொருள் எதுவும்
தராத சொற்களின் அடுக்குகளாகவுமே இருக்கிறது. வழக்கிலிருந்து மறைந்துபோன, காலாவதியான
பண்டிதத் தமிழ் மற்றும் புலவர் வழக்குகளும் நிறைந்து காணப்படுகின்றன. பேச்சு
வழக்கு, வட்டார வழக்கு
என்ற பெயரில் வட்டார வழக்காகவும் இல்லாமல் அல்லது இரண்டும் கலந்த கலவையாக அதுவும்
செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு மொழியில் எழுதுவது என்பது நடைமுறையாக இருக்கிறது.
நாவலின் பாத்திரங்களின் வாழ்வியலுக்கு, இயல்புகளுக்கு மீறிய அல்லது அவர்களுக்குத் தொடர்பில்லாத ஒரு
மொழியில் எழுதுவது, பாதிக்கு பாதி
ஆங்கிலத்தில் எழுதுவது அல்லது ஆங்கிலப் பதத்தை அப்படியே தமிழில் எழுதுவது, தெலுங்கு, மலையாளம், உருது தெரிந்தால்
தேவைக்கு அதிகமாக அம்மொழிகளைப் பயன்படுத்துவது போன்றவை வாசிப்பிற்குப் பெரும்
இடையூறாக இருக்கிறது. இவ்வகையான போக்கால், மொழியால் நாவலுக்குள் வாசகனால் எளிதில் நுழைய முடியாமல்
போய்விடுகிறது. இதனால் நாவலாசிரியரின் நோக்கம் எதுவோ அது நிறைவேறாமல்
போய்விடுகிறது. தன் எழுத்து-நாவல் பலபேரை சென்று சேர வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு
எழுத்தாளனின் நோக்கம். அந்த நோக்கம் கடந்த பத்தாண்டுகளில் எந்த எழுத்தாளனுடைய
நூலிலும் நிறைவேறியதாகக் கூறமுடியாது.
பாக்கெட் நாவல்கள்
உருவாக்கிக் காட்டுகிற உலகமும், மொழியும் தரம் இல்லாதது. வியாபார பத்திரிகைகளில் வரும்
படைப்புகளும், மொழியும் தரம்
தாழ்ந்தது. அதற்கு எந்த இலக்கியத் தகுதியும் இல்லை என்று கூறுகிற, வெகு சனங்கள்
படிக்கிற படைப்புகளையும், மொழியையும்
நிராகரிக்கிற எழுத்தாளர்களுடைய படைப்பும், மொழியும் எப்படிப்பட்டதாக இருக்கிறது? காத்திரமான படைப்புகள், தீவிரமான
படைப்புகள், மனித வாழ்வை, மனித குலத்தை, மொழியை
மேம்படுத்துகிற சர்வதேச தரமுள்ள எழுத்து-படைப்புகள் தங்களுடையதே என்று
வர்ணித்துக்கொள்கிறவர்களுடைய படைப்பும், மொழியும் எப்படிப்பட்டதாக இருக்கிறது? தரம்மிக்க மொழியை, சமூகத்தை
மேம்படுத்த எழுதப்படும் இலக்கிய ஆக்கங்களைத் தேர்ந்த வாசகனால்கூட அணுக முடியாமல்
போவதற்கு எது காரணமாக இருக்கிறது? நாவலாசிரியர்கள் சித்தரித்துக் காட்டுகிற வாழ்க்கைக்கும், மனிதர்களுக்கும்
தொடர்பில்லாதது மட்டுமல்ல அந்நியமானதாகவும் இருக்கிறது நாவலின் மொழி. எழுத்தின்
வழியே எந்த வாழ்க்கையையும்,
காட்சியையும்
உருவாக்கிக் காட்டாத, வாசக
கற்பனைகளுக்குச் சிறிதும் இடமளிக்காத வெறும் சொற்களால் மட்டுமே கட்டமைக்கப்படுகிற
நாவல்களில் வரும் வாழ்க்கை முறையும், பாத்திரங்களும் வாசகனுடன் எப்படி உறவு கொள்ளும்? சமகால
நாவலாசிரியர்கள் தங்களுடைய நாவல்களின் வழியே, நாவல்களை எழுதிய மொழியின் வழியே கண்டறிந்த உண்மைகள் என்ன? புதிய மொழி, புதிய உள்ளடக்கம், புதிய கதைகூறும்
முறை, புது வடிவம்
இதுதான் நவீன நாவல் இலக்கியம் என்ற பிரகடனத்தோடு எழுதப்பட்ட புனைவுகள் புதிய
மாதிரிகளை?எதையும்
உருவாக்கிக் காட்டிடவில்லை. நவீன மொழி, புதிய மொழி எதுவும்-மொழியில் புதிய வெளிச்சம் எதையும்
ஏற்படுத்தியதாகக்கூற முடியாது. புரியாத மொழியில், அலங்காரமான வார்த்தைகளில் எழுதப்படுவதுதான்
இலக்கியம். எளிய சொற்களில்,
எளிய மொழியில்
எழுதப்படுவது தரம் தாழ்ந்த இலக்கியம் என்ற கருத்தாக்கம் நவீன சமகால நாவலாசிரியர்களால்
நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இப்போக்கு இலக்கியத்திற்கும் மொழிக்கும் எந்த விதத்தில்
உதவியாக இருக்கிறது?
எழுத்து வடிவில் கதை சொல்வதற்கு மொழிதான் ஊடகம்-வழி.
மொழிதான் வாசல் என்றால் அந்த வாசலை நன்றாகத் திறந்து வைக்கப்பட வேண்டியது அவசியம்.
இறுக சாத்தப்பட்ட கதவு கொண்ட வீட்டுக்கு, வாசலே இல்லாத வீட்டிற்குள் யார் போவார்கள்? நவீன நாவல்களின்
வாசல் கதவு யாராலும் திறக்க முடியாத அளவுக்கு ஆணி அடித்துச்
சாத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான் அதற்குள் எந்த வாசகனாலும் நுழைய முடியவில்லை.
இதற்கு வாசகன் பொறுப்பாளி அல்ல. எழுத்தாளன்தான் காரணம். இதற்குச் சிறந்த
உதாரணமாகக் கோணங்கியின் நாவல்களைச் சொல்லலாம். பிறரைக் காட்டிலும் எழுத்தாளன்தான்
மொழிக் குறித்த கூடுதலான அறிவும் அக்கறையும் கொண்டவனாக இருக்க வேண்டும். அவ்வாறு
இருந்திருந்தால் சமகால நாவல்களில் மொழி சார்ந்த சிக்கல்கள் அதிகம் ஏற்பட்டிருக்காது.
சமகாலத் தமிழ் நாவல்களில்
- நாவலின் மையத்தை அடையாளம் காண்பது எளியக்காரியம் அல்ல. அதற்குக் காரணம் சிக்கலான
சிடுக்குகள் நிறைந்த மொழிதான். மொழியின் வழியேதான் ஒரு வாழ்க்கையைக் கதையாக
விவரிக்க முடியம். குறிப்பிட்ட காலத்திற்குள், கதைக்குள், வாழ்க்கைக்குள், பாத்திரங்களுக்குள் அழைத்துச் செல்வது மொழிதான். மொழி ஒரு
உபகரணம். உபகரணமே பெரும் தடையாக இருப்பது விநோதமானது. நாவலாசிரியர் விவரிக்கிற
காலத்திற்குள், வாழ்க்கைக்குள், பாத்திரங்களுக்குள்
வாசகனால் இணைந்து செல்ல முடியாமல், இணைந்து வாழ முடியாமல் போவதற்கு, வாசகன்
நாவலாசிரியருடன் இணைந்து நாவலை பூர்த்திச் செய்ய முடியாமல் போவதற்குக் காரணம்
சமகால நாவலாசிரியர்களிடம் இருக்கும் மொழிக்குறித்த பொறுப்பற்றத்தனமும்
அக்கறையின்மையும்தான். தனக்குத்தான் எல்லாம் தெரியும். தான் எழுதுவதுதான் சரி என்ற
போக்கு ஆழமாக வேரூன்றி உள்ளது. இது வாசகனை முட்டாளாக்குகிற செயல். சமகால
நாவல்களில் உயிரோட்டமுள்ள ஒரு வார்த்தையை, வாக்கியத்தைக் காண்பது அரிதாக இருக்கிறது.
2000 முதல் 2009- இந்த 10 ஆண்டுகால இடைவெளியில் வந்த சில நாவல்களில் காணப்படும்
மொழிச் சார்ந்த சிக்கல்கள் எவை எவையென அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த
அடையாளப்படுத்துதல்கள் அலங்காரமான வார்த்தைகள் சார்ந்து, கவிதைக் குணம்
கொண்ட வாக்கியங்கள் சார்ந்து, பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு கலந்து வருவது, நாவலுக்கு வெளியே
கோர்க்கப்பட்ட வாக்கியங்கள்,
பாத்திரங்களின்
மொழிக்கும் எழுத்தாளரின் மொழிக்கும் அதிகப் பேதமின்றி இருப்பது, வாக்கியக்
குழப்பங்கள், பொருள் சார்ந்த
குழப்பங்கள், நாவல் விவரிக்கிற
உலகத்திற்கும், மனிதர்களுக்கும்
தொடர்பில்லாமல் அமைக்கப்பட்ட வாக்கியங்கள் - வழக்கொழிந்துபோன மொழியைப்
பயன்படுத்துவது சார்ந்து அடையாளப்படுத்தப்படுகின்றன. இந்த அடையாளப்படுத்துதல்கள்
வாசக அனுபவத்திற்கு இடையூறாக இருப்பது சார்ந்து மட்டுமே. மொழிக் கொள்கைகள்
சார்ந்து அல்ல. இந்த அடையாளப்படுத்துதல்கள் நாவலாசிரியர்கள் மொழியில் கூடுதல்
கவனம் கொண்டு சிறந்த வகையில் எழுத வேண்டும் என்பதே. இந்த நாவல்களும், நாவலாசிரியர்களும்
மாதிரிகள் மட்டுமே. குறிப்பிடப்பட்ட நாவலாசிரியர்களிடம்தான், குறிப்பிட்ட
நாவல்களில் மட்டும்தான் தற்காலத் தமிழ் சார்ந்த, படைப்பிலக்கிய மொழிச் சார்ந்த தெளிவின்மையும்
சிக்கல்களும் இருக்கின்றன என்று கூறமுடியாது. சமகாலத்தில் தமிழ் மொழியில் எழுதுகிற
எல்லா எழுத்தாளர்களிடமும் இந்தச் சிக்கல்கள் இருக்கின்றன. சமகால நாவல்களில் மொழிச் சார்ந்த சிக்கல்களும் தெளிவின்மையும்
எந்தெந்தவிதமாக இருக்கின்றன என்பதைச் சில உதாரணங்கள் வழியே அறியலாம்.
ஆங்கிலத்தை அதிகமாகப்
பயன்படுத்துவது
சமகால நாவல்கள்
கிட்டத்தட்ட ஆங்கில நாவல்களைப் படிப்பதுபோலவே இருக்கின்றன. பல நாவலாசிரியர்கள்
ஆங்கிலத்திலேயே பல பகுதிகளை எழுதுகிறார்கள். சிலர் ஆங்கிலத்தை அப்படியே
தமிழ்ப்படுத்தி எழுதுகிறார்கள். பெரும்பாலானவர்கள் சரிக்குசமமாக ஆங்கிலத்தையும்
தமிழையும் கலந்து எழுதுகிறார்கள். இப்படி எழுதுவதால் நாவலை புரிந்து கொள்வதற்கும், பாத்திரத்தை
புரிந்துகொள்வதற்கும் எந்த வகையில் துணை புரிகின்றன?
“Doubting and doubting his doubts and
doubting the doubting of the doubts...” (g.46)*3 . “Have you
seen her”. “I will seen her”. “How is
she?”. “which no girl there, she, ok” (g.127)*11. “I count
myself fortunate to have met you, my dear man, what did I do to deserve you?” (g.479)*11
ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து எழுதுவது
சமகாலத்தில் எழுதப்படுகிற
பெரும்பாலான நாவல்களில் இயல்பாக ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து எழுதுகிறார்கள். ஆங்கிலத்தில்
எழுதுவதால் கூடுதலான பொருளும் அர்த்தச் செறிவும் கிடைக்குமா? எழுதுவது தமிழ்
வாழ்க்கைக் குறித்து, தமிழ்ச் சூழல்
குறித்து, தமிழ்
வாசகர்களுக்காக என்கிறபோது தேவைக்கு அதிகமாக ஆங்கிலத்தைக் கலந்து எழுதுவது தமிழ்
நாவல் கலைக்கும், தமிழ் நாவல்
மொழிக்கும் எந்த அளவுக்கு வளம் சேர்க்கும்? மேதமை என்பது ஆங்கிலத்தில் எழுதுவதால் மட்டுமே
நிரூபிக்கப்படாது. ஆங்கிலத்தில் யோசித்துத் தமிழில் எழுதுவது ஒரு மரபாகப்
பின்பற்றப்படுகிறது. னுநஉயனந என்ற ஆங்கிலப் பதத்தைப் பல பத்து வருடங்கள் என்றும், ஐ நேநன ய கசநளா
யசை என்பதை எனக்கு வெளிக்காற்று வேண்டும் என்றும் எழுதுவது நடைமுறையில்
இருக்கிறது. காரணம் கேட்டால் தமிழில் போதிய அளவிற்கு வார்த்தைகள் இல்லை என்று
கூறுவதை முடியுமா? செழுமையான
கச்சிதத்தன்மை கொண்ட சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுவதற்குப் பதில் சாக்கு சொல்வது
ஒருவகைப் பாணியாக இருக்கிறது.
“காலை பத்து மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை வேலை. என்னது, எட்டு மணி நேரமா? Fuck
off man” (ப.223)*11. “எல்லா மொழியும்
சமமானதுதான் என்று கூறும் political correctness என்னிடம் கிடையாது” (ப.241)*11. “உன் மொபைல் எண்ணை
கொடுடா சின்னூ. “I honestly
admit. I am dying for you”
(ப.446).*11 “ஏய் put on web
cam....” . “DC ஆகிப்போச்சு” . “DC?”. “Got disconnected” (ப.557)*11
“எக்ஸ்மீடியாவை டபுள் கிளிக் செய்தாள்”(ப.198)*10. “ஸ்கூல் லீவ் போட்டிருக்கீங்களா?” என்று கேட்டார்”(ப.220)*10. “லீவுலதான் இருந்தேன்”(ப.220)*10. “கம்ப்யூட்டர் யூஸ்புல்லா இருக்கா? என்று கேட்டார்”(ப.224)*10. “ஆளுமட்டுமில்லெ அவனோட பெயிண்டிங்கும்
அப்படித்தான் இருக்கும். பக்கா அமெச்சூர்தனம்”(ப.123)*10.
“இது ஒரு
காம்போசீஸன்ஸ்”(ப.16)*10. “இன்னிக்கி
ஓவியம்ங்கிறது கலர்களோட பர்பாமன்ஸ்.
பேஷன்னுகூடச்
சொல்லலாம். எலைட்டிஸ்ட் பேஷன்”(ப.124)*10. “இவனோட மெயின்
மார்கெட் பிளேஸ் கோபாலரோட ஆஸ்ரமம்தான்”(ப.123)*10.
“ஐரோப்பிய
கிளாசிக்கல் பீரியட் பெயின்டிங்க்ஸ்ல அது இருக்கு” (ப.124)*10.
பின் நவீனத்துவ நாவலின் மொழி
பின் நவீனத்துவச்
சர்ரியலிஸ நாவலாசிரியர்களின் மொழி எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதற்கு
எம்.ஜி.சுரேஷின் சிலந்தி, சாருநிவேதிதாவின்
ராஸலீலா நாவலும் சிறந்த உதாரணங்களாக இருக்கின்றன. எந்த வாழ்க்கையைப்பற்றி
எழுதுகிறோமோ, அந்த
வாழ்க்கைதான் அதற்கான மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும். நம்முடைய நாவலாசிரியர்கள்
தங்களுடைய சத்தில்லாத மொழியையே பாத்திரங்களின் மொழியாக உருவாக்குகிறார்கள்.
தாங்கள் எழுதுகிற பகுதி நாவலுக்கு எந்த அளவுக்கு முக்கியமானதாக, பொருத்தமாக
இருக்கிறது என்று யோசிக்கவேமாட்டார்கள் என்பதற்கு இவை உதாரணங்கள்.
“தனது நீண்ண்ண்ட
மேல் கோட்டைக் கழற்றி இடது கையில் போட்டுக் கொண்டு மாடிப் படிகளில் டி.எஸ்.பி” (ப.144)*3
(நீண்ட என்பதற்குப் பதிலாக நீண்ண்ண்ட என்று மூன்று ‘ண்’ போட்டும், ஏறினார் என்பதை
ஒரே வரிசையில் எழுதாமல் கீழிருந்து மேலாக ஏணிப்படி அமைப்பில் ஏறினார் என்று
எழுதப்பட்டுள்ளது. அதேமாதிரி டி.எஸ்.பி.யின் கண்கள்
சுழன்றன என்பதைத் தனிப்பத்தியாக எழுதியதோடு சதுரமாகவும் அல்லாமல் முக்கோணமும்
அல்லாமல் புதுவகையான ஒரு அமைப்பில் எழுதப்பட்டுள்ளது.)
உன் என் பின் பன்
விண் கண் மண் பண்
இன் முன் தன் முன்
உண் தண் டுன் - டுன் (ப.129)*3
ஊளைச்சதைகள்
SHIT, SHIT என்று இருபத்தி
ஒன்பது முறை எழுதுவதால், வேண்டும், வேண்டும் என்று
பதினாறுமுறை எழுதுவதால் நாவலுக்கு இச்சொற்கள் எந்த வகையில் பலம் சேர்க்கும்? பொருள் எதுவும்
தராத, தட்டையான
சொற்களைக் கொட்டி நிரப்புவதால் பக்கங்கள் கூடுமே தவிர வேறு பலன் இருக்காது. இது
வாசகனை அலுப்புற செய்கிற காரியமாகவும் இருக்கிறது. அதோடு இதுபோன்ற சொற்களைப்
பயன்படுத்தப்படுவதுதற்குக் காரணம் செறிவான சொற்களைத் தேடுவதற்குப்
பொறுமையில்லாததுதான். இவ்வாறான வாக்கியங்கள் நாவலுக்குள் ஊளைச்சதையாக இருந்து
நாவலை வாசிப்பதற்கு இடையூறாக இருக்கிறது. அவ்வாறு இருக்கிற வாக்கியங்கள் சில:
“SHIT, SHIT, SHIT, SHIT, SHIT, SHIT, SHIT, SHIT, SHIT
SHIT,
SHIT, SHIT, SHIT, SHIT, SHIT, SHIT, SHIT, SHIT
SHIT,
SHIT, SHIT, SHIT, SHIT, SHIT, SHIT, SHIT, SHIT” (ப.413)*11
“வேண்டும்
வேண்டும் வேண்டும் வேண்டும்
வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும்
வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும்
வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் ” (ப.129)*3
வழக்கொழிந்துபோன அலங்கார மொழி
தமிழ்மொழி குறிப்பாகப்
படைப்பு மொழி எப்போதோ உயர் வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டுவிட்டது.
இலக்கியம் எப்போது மக்களுடைய நிஜவாழ்க்கையைப் பதிவு செய்ய ஆரம்பித்ததோ அப்போதே
புலவர் தமிழ் வழக்கொழிந்து போய்விட்டது. எல்லாவற்றிலும் புதுமை, புரட்சி என்று
பேசுகிற நம்முடைய நவீனத்துவ நாவலாசிரியர்கள் இந்த அலங்காரமான பண்டித-புலவர் தமிழை
மட்டும் இன்னும் விடாமலிருக்கிறார்கள்.
“கோபம் மீதுர சதைகள் இறுகின”(ப.24)*1. “கருவாடு வாத்தியார் அவனை முடிவினைஞன் என்று
சொல்வார்.”(ப.100)*2. “கூட்டம்
நடக்குமிடத்தில் சனங்கள் மம்மார்ந்து இருந்தார்கள்”(ப.95)*2. “கறுப்பல்ல, சிவப்புமல்ல இரண்டும் கலந்த காந்தர்வ நிறம். வளத்திகேற்ற
வண்ணம், வில்லொத்த
புருவம், வேலொத்த விழிகள்”(ப.1114)*13. “சாலையின்
இருபுறமும் வெண்ணுடையில் செவிலியர் நடமாட்டம்”(ப.1107)*13.
“ஆணின் கை அவளின்
கொடி இடையை இறுக அணைத்திருந்தது”(ப.760)*13.
“தேவகியின்
அல்குல் மேட்டைத் தடவ வேண்டும்”(ப.227)*10.
“அறிவு நடை, ஆங்கார நடை, அலட்சிய நடை, பயிற்சி நடை என
நடைகள் பல”(ப.757)*13. ”அவன் ஒரு
சிரிப்பு சிரிப்பான். அது மந்திரப் புன்னகை”(ப.55)*1.
“அப்புறம் ஒரு
அரைமணிநேரம் முசுமுசுவென்று அழுது கண்ணீர் சொரிவாள். கண் சிவந்து எழுந்திருப்பாள்.
மடியில் விரித்து வைத்திருக்கும் கோடிச் சேலையில் கண்ணிர் உருளும்”(ப.33)*7. “கபர்மீது
பீறிட்டுச் சொரிந்தது ரத்தம்”(ப.175)*12.
எழுத்து வழக்கு, பேச்சு வழக்குக் குழப்பம்
உலகத்தரத்துக்கு
எழுதுகிறோம், வாழ்க்கையை முன்
எப்போதும் இல்லாத அளவுக்கு நுணுகிப் பார்த்து அலசி ஆராய்ந்து எழுதுகிறோம், உளுத்துப்போன
மொழியால் எழுதாமல் புது மொழியால் புரட்சி மொழியால், புதிய மதிப்பீடுகளை உருவாக்க எழுதுகிறோம் என்று
விளம்பரப்படுத்திக்கொண்ட ‘நவீன’ எழுத்தாளர்களுக்கு
எது பேச்சு வழக்கு, எது எழுத்து
வழக்கு, எது உயர் வழக்கு
என்ற வேறுபாடு கூடத் தெரியாது என்று அவர்களுடைய நாவல்கள் காட்டுகின்றன.
இக்குழப்பம் நூறு சதவிகிதமும் நிறைந்த நாவல் என்று தோப்பில் முகமது மீரான் எழுதிய
அஞ்சுவண்ணம் தெரு பாமாவின் வன்மம், சோ.தருமனின் கூகை போன்ற நாவல்களையும் சொல்லலாம்.
இந்நாவல்களில்மட்டும்தான் இக்குழப்பம் இருக்கிறது என்று சொல்ல முடியாது.
பெரும்பாலான தமிழ் நாவல்களில் இக்குழப்பம் மிகுந்து காணப்படுகிறது என்பதை இந்த
உதாரணங்கள் காட்டுகின்றன.
“தாய் ஆடுகளிடம் அவன் வவுசி ஒன்றும் பலிக்காது”(ப.17)*1. “மல்வதும்
பேழ்வதும் எல்லாமே கட்டிலோடுதான்”(ப.34)*1.
“போனவாரம்
ஆண்டிபாளையத்து ஏவாரி வந்து தொண்ணூறு ரூபாய்க்குக் கேட்டான். கவுண்டர்
நூற்றியிருபது சொல்லிக் கொண்டிருந்தார்”(ப.131)*1
. “நிஜ ராவாய் இருக்குமோ என்று தோன்றியது”(ப.7)*2.
“எப்பேர் கொந்த
கனவு. அவன் உடம்பு சிலிர்த்தது”(ப.8)*2.
“சின்னக்
குட்டையிலும், பெரிய
குட்டையிலும் தண்ணீர் மொண்டு போவார்கள்”(ப.101)*2.
“அண்ணங்காரனின்
வாய் பொறப்பு என்னவாக இருக்குமோ என்று குத்தலாக இருந்தது அவளுக்கு”(ப.64)*2. “கன்றுகளை
இழுத்துக்கொண்டு கொல்லி கொல்லியாக எங்கே திரிவது?”(ப.65)*2. “அவன் கிட்டவரும்போது குழந்தை இறுக்கமாக
அம்மாவைத் தழுவிக்கொண்டு கத்தினான்”(ப.115)*2.
“என்ன இருந்தாலும்
ஆசைக்கு வர்றவ தாசிதானே”(ப.116)*6. “எடுத்துச் செலவு
செய்ய வியாபாரமும் ஓஞ்சு போச்சு”(ப.150)*12.
“படச்சவன் இப்படி
அதறப்பதற புடிச்சிரிக்க வேண்டாம்”(ப.204)*12.
“வேறு வழியின்றி
மச்சானுக்கும் வியாபாரத்தை நிப்பாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது”(ப.120)*12.“கண்ணில் பட்ட
ஆசாமிகளைத் தூக்கி வேனில் போட்டு அஞ்சாறு வெள்ளாவி வைக்கத் தெருவைச் சுற்றிச்
சுற்றி வந்தது”(ப.178)*12. “இதைப் பார்த்துப்
பார்த்துப் புளுங்கிய எழிலரசின் மாமனாரை தகப்பனாரைப்போலப் பாவித்து அக்கறை காட்ட
ஆரம்பித்தாள்”(ப.1092)*13. “நட்டி முதல்
குட்டிவரை விஷக்காய்ச்சல் வந்து உருட்டிப்போட்டது”(ப.251)*12. “இவர் குத்தமோ, அவொ குத்தமோ குழந்தை பிறக்கல்ல. இவர் இவரையே
மலடுனு நெனச்சாரு. அவொ அவளையே மலடுனு நெனச்சா. இந்த மனுசன்கூட வாழ்ந்து
அலுத்துப்போய் அவொ தாய்க்காரியாட்டே போயிட்டாள்”(ப.172)*12.
குழப்பமான வாக்கிய அமைப்புகள்
சமகால நாவல்களில் மொழி
மிகவும் சிக்கலாக இருப்பதற்கு முக்கியக் காரணம் வாக்கியங்களைச் சரியாக எழுதாததே.
சிறந்த முறையில் எழுதுகிறோம் என்ற முறையில் சாத்தியமில்லாத, எதிர் பொருள்
தரக்கூடிய, எழுதவே முடியாத
வாக்கியங்களைக் காரணமின்றிப் பக்கம் பக்கமாக எழுதுவதோடு காரணமே இல்லாமல், நாவலுக்குத்
தொடர்பு இல்லாமல் பல வாக்கியங்களையும் எழுதிக் குவிக்கிறார்கள் என்பதற்குக் கீழ்
கண்ட உதாரணங்களே சான்று.
“இருளின் பாதுகாப்பில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தவனைக்
காற்று எழுப்ப முயன்றது” (ப.105)*1. “காற்று அவனைப்
புரள வைத்ததே தவிர அவனை எழுப்ப முடியவில்லை. காட்டுச் சருகுகளையும் ஓலைகளையும்
அசைத்தெழும்பி ஓசை உண்டாக்கிப் பார்த்தது. காற்றுக்குச் சலிப்பு உண்டாயிற்று.
வேறெங்கோ ஓடிக் கொஞ்சநேரம் ஒளிந்து கொண்டது... பலம் கூட்டிக்கொண்டு காற்று
திரும்பவும் வந்தது”(ப.106)*1. “தெளிவானவானம்.
மேகத் துணிக்கைகளோ, ஒளிக்கிறுக்கல்களோ
இல்லை. பயிர் பச்சைகளும், மரம் மட்டுகளும்
அசையவில்லை. எல்லாம் எதற்கோ காத்திருப்பதுபோல் மௌனம் சாதித்திருந்தன.
நிலத்தின்மேல் தகித்துக்கொண்டிருந்த சினமுடைய சூரியனின் ஒளி தணிந்து குழைந்தது (ப.7)*2. “கால் கொலுசின்
சில்க்சில்க் சத்தம் கேட்காமல் மூடியிருந்தன மொட்டுக்கள்.” கொலுசின் ஓசை
பூக்களின் சிலிர்ப்பு. நீர் ஊற்றும் கையெழுப்பும் வளையோசை நளினம் இலையசைக்கும்
காற்றின் தூது”(ப.72)*7. “அவரது வண்டி
ஒயிட் டவுனை நோக்கிப் பயணிக்கத் துவங்கியது. கடற்கரையோரம் வெயில் வாங்கியிருந்தது.
ரிட்லித் துறையின் வீடு வேப்பேரி பகுதியிலிருந்தது. குதிரை சீராகச் சென்று
கொண்டிருந்தது. மரங்கள் அடர்ந்த சாலையில் அதிக வாகனப்போக்குவரத்து இல்லை. ஒரேயொரு
மாட்டு வண்டியொன்று பொதியேற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. கிருஷ்ணப்ப கரையாளர்
அங்கும் இங்குமாகச் சிதறிக்கிடந்த பட்டணத்தை வேடிக்கைப் பார்த்தபடியே செல்லத்
துவங்கினார்”(ப.85)*9. “தலைமை நீதிமன்றச்
சுவரையொட்டியிருந்த நடைபாதையில் குறவர் கூட்டம் தீக்கொளுத்தி குளிர்
காய்ந்தப்படியிருந்தார்கள்........ சென்னை துறைமுகத்தின் பிரதான வாசலில் மார்கழிப்
பனியையும் மீறி கடுங்கூட்டம்...... அழுது அடம்பிடித்து மூக்கு வழிய நின்றிருந்த
குழந்தைகளுக்குப் பஞ்சுமிட்டாய் வாங்கிக்கொடுத்தாள்”(ப.1107)*13. “அம்மாசி உடல் விறைத்துக் கொண்டு நின்றபடி தன்
எதிரில் இருக்கிற மாபெரும் நீர் மிருகத்தின் சீறலைச் சிறுமையுடன் பார்த்துக்கொணடிருந்தான்”(ப.73)*2 .“வேனிற்காலத்தின்
வெயில் ஊரின்மேல் அப்படியே இருந்தது. மேற்கில் இறங்கும் சூரியனின் இறுதிப் புன்னகை
கங்காசரத்திலே பட்டு ஊருக்கு மேலே வெகு நேரத்துக்குப் பிரதிபலித்துக்
கொண்டிருந்தது”(ப.96)*2. “அறுப்புக்கு
தயாராக இருந்த கழனிகளிலிருந்து நெற்கதிர்கள் பழுத்துக் குனிந்திருந்தன”(ப.174)*2. “நடுமத்தியானத்துக்கு
வெயில் இருந்தது”(ப.117)*2.
செயற்கையான வட்டார வழக்கு
சமகால நாவலாசிரியர்கள்
வட்டார வழக்கில் பேச்சு வழக்கில் எழுதுகிறோம் என்ற பெயரில் செயற்கையான ஒரு பேச்சு
வழக்கையும், வட்டார
வழக்கையும் உருவாக்கிக் காட்டுகிறார்கள். நாவலில் பயன்படுத்தப்படும் பேச்சு
வழக்கும், வட்டார வழக்கும்
பாசாங்காக மட்டுமே இருக்கிறது. இப்படி எழுதப்படுகிற நாவல்களில் எது பாத்திரங்களின்
உரையாடல், எது
நாவலாசிரியரின் கூற்று என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. பேச்சு
வழக்கின், வட்டார வழக்கின்
பலத்தில் ஒரு பங்குகூடப் பதிவாகவில்லை. மாறாகப் பாசாங்கு மட்டுமே இருக்கிறது
என்பதற்குப் பாமாவின் வன்மம், சோ.தருமனின் கூகை, தோப்பில் முகமது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு நாவல்களும்
சிறந்த உதாரணங்கள்.
“அனாவசியமா பல உயிர்களப் பறிகுடுத்துட்ட வேதனையையும், அதுக்குப் பெறகு
அடைஞ்ச அளவு கடந்த துன்ப துயரங்களும் ரெண்டு தெருக்காரர்களையும் ஒரு உலுக்கு
உலுக்கி எடுத்திருச்சு. அதுனால எல்லாருமே ஒரு அமைதியான சந்தோசமான வாழ்க்க
வாழனும்னு ஏக்கத்தோடுதான் இருந்தாக” (ப.158)*4.
“சனங்க
வாழ்ந்தாங்க. காலந்தான் பட்ட காயங்கள மெல்ல மெல்ல ஆத்தும்னு ரெண்டு சாதிக்காரரும்
ஒருத்தர ஒருத்தரு சகிச்சுக்கிட்டு, சமாதானமா வாழ்ந்தாக”(ப.159)*4.
“இனிவரும்
தலைமுறையாவது வன்மமில்லாமெ,
வன்முறையில்லாமெ, சண்ட சச்சரவு
இல்லாமெ, ஒன்னா மண்ணா
இருக்கனும்னு இப்ப உள்ள சனங்க கடுமையா பெரயாசப்பட்டு, திட்டமிட்டு
செயல்பட்டாக. வருங்காலத்தப் பத்திய நம்பிக்கையோடெ. பயமும் இருக்கத்தான் செய்யுது.
இருந்தாலும மனசுல தெளிவும் தீர்க்கமான உறுதியும் இருந்துச்சு”(ப.159)*4.
நம்ப முடியாத வாக்கியச் சேர்க்கைகள்
சமகால நாவல்களின்
வாக்கியங்களைக் கவிதையா, உரைநடையா என்று
பிரித்துணர முடியாது. நாவல் விவரிக்கிற வாழ்க்கைக்கும், இந்தக் கவிதையான
உரைநடைக்கும் சிறுதொடர்புகூட இருப்பதில்லை. இந்த வாக்கியங்கள் ஒரு முழுமையான
பொருளை, அர்த்தத்தையாவது
தருகிறதா என்றால் அதுவும் இல்லை. காட்டுகிற உதாரணங்கள் பொருந்தாமல் பல்
இளிக்கின்றன. இப்படிப் பொருந்தாத வாக்கியச் சேர்க்கைகள்தான் நாவல் முழுவதும்
நிறைந்து காணப்படுகின்றன. சமகாலத் தமிழ் நாவல்களில் நாம் பல அதிசயங்களைக் காண
முடியும். ரேடியோ சத்தம் தெருவில் ஓடும், மழை மாதிரி வெயில் மொழியும், இரவு மாதிரி நீர் கசிந்துவரும், வெயில் ஊர்ந்து
செல்லும், இது போன்ற
அதிசயமான உருவகங்களைப் பார்க்க முடியும். இவையெல்லாம் நிஜமா, சாத்தியமா என்று
வாசகன் கேட்க முடியாது. மீறி கேட்டால் அவனுக்கு நாவலைப் படிக்கத் தெரியவில்லை என்ற
குற்றச்சாட்டுதான் வரும். சமகாலத் தமிழ்நாவல்களில் காணப்படும் பல அதிசயங்களில்
சிலவற்றை மட்டும் பார்க்கலாம். “எனக்கு மனம் மின்னியது”(ப.64), “வியர்த்துவிட்டேன்”(ப.62)*5. “எதிர் வெயில்
கூசகூச அடித்தது”(ப.27)*5. “இருநூறு பக்க
நோட்டுப் புத்தகம் முழுக்க முடிவடையாமல் துடிதுடிக்கும் வரிகள்”(ப.22)*5, “காலையில்
விழிக்கும்போது வெளியே இருந்து ஒளி உள்ளே பீரிட்டு சிதறிக்கிடக்கும்” (ப.26)*5. “நான் கண்ணீர்
வருவதை உணர்ந்ததும் எனக்குத் தடையற்ற அழுகை எழுந்தது”(ப.64)*5 என்று
ஜெயமோகனின் காடு நாவலில் மட்டும் இதுபோன்ற வாக்கியங்கள் இருக்கின்றன என்று சொல்ல
முடியாது. சமகால எல்லாத் தமிழ் நாவல்களிலும் இதுபோன்ற வாக்கியங்களைப் பார்க்க
முடியும் என்பதற்குச் சில உதாரணங்கள்.
“வெயில் பொழிந்து கொண்டிருந்தது”(ப.29)*5. “குசுகுசுவென
ஒலித்தது அவளது குரல்” (ப.48)*6. “தெருவை இறுகிய
வெயில் நிறைந்திருக்கிறது”(ப.218)*6. “தொலைவில்
ஒலிக்கும் ரேடியோ சத்தம் கனத்துக்கிடந்த இருளைத் துளைத்து தெரு நெடுக
ஓடிக்கொண்டிருந்தது”(ப.206)*6. “தொலைவிலிருந்து
இரவு கசிந்து வரத் துவங்கியிருந்தது”(ப.358)*6.
“காலை வெயில்
குன்றின்மீது ஊர்ந்து கொண்டிருந்தது” (ப.107)*9.
“அஞ்சாச்
சிரிப்பு. அறிவின் வெளிப்பாடு”(ப.51)*7.
“இரண்டு
தும்மல்கள். ஆண் தும்மல் ஒன்று. பெண் தும்மல் ஒன்று என்று நினைத்துக் கொண்டார்”(ப.117)*7. “மிருதுவான புழுதி
படிந்த வண்டிப்பாதை தெரிகிறதல்லவா”(ப.24)*8.
“அவர் பின்னோடு
ஒரு சிறுவன்”(ப.71)*8. “அவள் பின்னாடியே
இருட்டும் கூடவே நடந்து வந்து கொண்டிருந்தது” (ப.195)*9.
“பாறைகளில் வெயில்
கசிந்து கொண்டிருந்தது”(ப.196)*9. “குளிர் காற்று
எதையோ புலம்பியபடி அலைந்து கொண்டிருந்தது”(ப.152)*9.
“இருட்டு தாரை
தாரையாக வடிந்து வீட்டைச் சுற்றிலும் நிரம்பிக்கொண்டிருந்தது”(ப.154)*9. “அந்த விளக்கை
எப்படியாவது கவ்வி தின்றுவிட வேண்டும் என்பதுபோல இருட்டு வீட்டைச் சுற்றிச்சுற்றி
வந்து கொண்டிருந்தது”(ப.154)*9. “வெளிச்சம்
வீட்டின் வாசல் கதவைத் தாண்டி உள்ளே வரலாமா இல்லையா என்று யோசித்துக்
கொண்டிருந்தது”(ப.155)*9. “நீண்ட நேரத்தின்
பிறகு லண்டன் தெருக்களில் வெயில் மெதுவாக ஊர்ந்து வரத்துவங்கியிருந்தது”(ப.171)*9. “காற்று வயல்களில்
ஊர்ந்து சென்று கொண்டிருந்தது” (ப.358)*9.
“மறதியின் பனியில்
மூழ்கியுள்ளன அந்த அகன்ற தெருக்கள்”(ப.12)*10.
“இந்தத் தனிமை
தனபாலுடையதுதான் என்பதில் சந்தேகமில்லை”(ப.133)*10.
“அது நட்பின்
கதறல்போல் அவளுக்குத் தோன்றியது”(ப.146)*10.
“சொற்கள்
சிக்கிக்கொண்ட தொண்டைக்குள்ளிருந்து மிகச் சிரமப்பட்டுச் சொற்களை உருவினார்”(ப.10)*12. “மௌனம் மிகவும்
எடை கொண்டது”(ப.298)*5.
பொருள் தராத வாக்கியங்கள்
நாவலுக்குள் பொருந்தாமல்
துருத்திக்கொண்டு இருக்கின்ற வாக்கியங்கள்தான் சமகால நாவல்கள் முழுவதும் நிறைந்து
இருக்கின்றன. இவ்வாக்கியங்களும், இவ்வாக்கியங்கள் தரும் பொருளும் நாவலுக்குள் ஒட்டாமல்
அந்நியப்பட்டு நிற்பதை வாசகனால் எளிதில் உணர முடியும். அவ்வாறான சில பொருள் தராத, நேர் எதிரான
பொருள் தரக்கூடிய, எந்தப்
பொருளையும் தராத வாக்கியங்கள் சில:
“அதன் கண்கள் ஆர்வம் கொண்டு மினுங்கி ஒளிர்ந்தன”(ப.7)*1. “காலில் கிடந்த
தளர் கொலுசு மெல்லச் சிணுங்கி அழுதது”(ப.31)*1.
“நிலா மேற்கின்
அந்தியில் இருந்தது. மதியம் முடிந்து ஒரிரு நாட்கள்தான் ஆகியிருக்க வேண்டும்”(ப.114)*1. “இரவும் குளிரும்
நெருங்கி வருவதைக் கண்ணால் பார்ப்பேன்”(ப.24)*5.
“தலையைத்
தலையணையில் அறைந்தேன்”(ப.107)*5. “தேவாங்கு மெல்ல
தலையைத் திருப்பி அவரை ஞானம் ததும்பப் பார்த்துக் கண்களைச் சிமிட்டியது”(ப.111)*5. “ஏதோ கொட்டைகள்
பாறை முழுக்கக் கிடந்தன... அவற்றைப் பொறுக்கி நீரில் எறிந்தேன். மூழ்கி எழுந்து
மிதந்து அருவியில் விழுந்து அப்பால் எழுந்து சென்றன”(ப.139)*5. “அடையும் பறவைகளின் அந்தரங்கமற்ற பேச்சொலிகள்!
அனுபவ பகிர்மானம். இரை தேடியலைந்ததில் எல்லை மாறிய செய்திகள்” (ப.75)*7. “தென்னை மர ஓலைகள்
சிரிக்கின்றன. துளசிச் செடி தலையசைத்துச் சிரிக்கிறது. நெற்கதிரின்மேல்
உட்கார்ந்திருக்கும் மணிப்புறா அலகு பிரியாமல் தொண்டைக்குள் கலகலவெனச் சிரிக்கிறது”(ப.30)*8. “மேகங்களில் ஒரு
புன்னகை மலர்ந்திருந்தது”
(ப.157)*5. “சோக நூல் வேர்கள்
ஓடும் கண்கள்”(ப.146)*12. “பேரிரைச்சலோடு
துள்ளிக் குதித்துச் சாலை மேலேறியது ஃபியட்”(ப.761)*13.
“அவனுடைய குரல்
புதர்களுக்குள் நுழைய இயலாமல் திரும்ப அவனையே வந்து சேர்ந்தது”(ப.39)*1. “அப்போது பார்க்க
அவன் முகம் இறுகி ஒளி வீசும்”(ப.54)*1.
“அதன் குரலில்
பொறுக்க முடியாத வலி கசிந்தது”(ப.64)*1.
“குடுசைக்
குறிவைத்து காற்று தாக்கத் தொடங்கிவிட்டது தெளிவாயிற்று”(ப.109)*1. “இருட்டோடிருந்து
தூக்கம் வராமல் கிடந்தான் அம்மாசி”
(ப.51)*2. “அதிகாலை இரவு
குளிராகக் குத்தியது”(ப.60)*2. “கோலங்கள்
பொலிந்தன”
(ப.104)*2.
“வேனிற்காலத்தின்
வெயில் ஊரின்மேல் அப்படியே இருந்தது”(ப.96)*2.
“இருளகன்று பரவிய
வெளிச்சம் வீட்டை நிறைத்தது”(ப.39)*7. “தலைக் குப்புற
விழுந்து அழுது புரண்டான்”(ப.45)*7. “அதிகாலையின்
சாந்தத்தை நெடுக்காகக் கீறும் அலறல் ஒன்றை விடுத்துவிட்டு, மிகப்பெரிய
பெருமூச்சுடன் நகர்கிறது கரி என்ஜின்” (ப.20)*8.
“இறந்த பல பத்து
வருடங்களாகிறது”(ப.26)*8. “கொத்துக் கொத்தாக
வீடுகள் தென்படுகின்றன”(ப.27)*8. “தற்கொலை
செய்துகொண்ட சிலரின் எலும்புகள், மலையில் பாலிதீன் குப்பைகளுக்கிடையே ரகசியமாகப் பதுங்கிக்
கிடக்கின்றன”(ப.12)*10. “வயோதிகர்களும்.....அந்நியர்களும்
நகரத்துக்கு வெளியே இறைந்து கிடக்கும் வீடுகளில் தங்கிக்கொள்கிறார்கள்”(ப.12)*10.
‘குபீர்’,‘குபுக்’,‘டபுக்’,‘அவுக்’,‘சிவுக்’ வாக்கியங்கள்
“குபீரென்று சிரித்தான்”, “குபீரென்று எழுந்தான்”, “அவுக் அவுக்” என்று சாப்பிட்டான். ‘அவுக்கென்று’, ‘சிவுக்கென்று’ எழுந்தான் என்று எழுதுகிறார்கள். இப்பிடி எழுதுவதுதான் நவீன
மொழியா என்ற கேள்வி எழுகிறது. என்ன எழுதுகிறோம், எப்படி எழுதுகிறோம் என்ற குறைந்தப்பட்ச
ஒழுங்குகூட இல்லாமல் எழுதப்படுகிற எழுத்து-இலக்கியம் எப்படி உலகத் தரத்திற்கு
இருக்கும்? தமிழ் நாவல்கள்
ஒருபோதும் உலகத்தரத்திற்கு இருக்காது என்பதற்கு இவ்வாக்கியங்களே உதாணரங்கள்.
“குளிர் காற்று குபீரென்று முகத்தில் அறைகிறது”(ப.156)*3 “இட்டிலிகள்
கொட்டிவிட்டதைக் கேட்டவுடன் அவுக்கென்று நின்றுவிட்டவள்”(ப.116)*2. “முகத்தைத்
துடைத்து சிவுக்கென்று எழுந்து கொண்டவள்”(ப.117)*2.
“திடீரென்று அம்மா
போய்விட்டதில் அவுக்கென்று நின்றுவிட்டான் குழந்தை”(ப.173)*2. “வேகமாகத் தள்ளவும் பிணம் ‘லபக்கென்று’ மல்லாக்க
மலர்ந்தது”(ப.293)*7. “அபரஞ்சிக்கு
முகம் சிவுக்கென்று ஆகிவிட்டது”(ப.44)*2.
“விலுக்கென
எழுந்து வீட்டுக்குள் ஓடினான் அம்மாசி”(ப.70)*2.
“தீ குபுக்கென்று
கிளம்பி உடனே அணைந்தது”(ப.170)*12. “நட்டு உச்சி
நேரம்”(ப.144)*12. “கிட்ட
நெருங்கும்போது பகல் நட்டப் பாதிராவானது”(ப.144)*12.
“சிலருடைய
தலைக்குள் கேள்விகள் நுரைத்தன”(ப.206)*12.
“மரநிழல் ஸ்தூல அமைதியானது”(ப.289)*7. “மழை வெறித்த அமைதி”(ப.225)*7 .
21ம் நூற்றாண்டு மற்ற எல்லாக் காலத்தையும்விட மனித
வாழ்க்கையில் அதிக நெருக்கடிகளைக் கொண்டு வந்த நூற்றாண்டு. போன நூற்றாண்டில் வெகுமதியாக
இருந்தவை எல்லாம் இந்த நூற்றாண்டில் மதிப்பிழந்து நிற்கின்றன. அதனால் மனித
வாழ்வில், மனித உறவில்
மிகப்பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த விரிசல்களை ஆராய்வதற்குக் கலைஞன்
கூடுதலான உழைப்பைச் செலுத்த வேண்டும். அதற்கு மொழி மிக முக்கியமான கருவியாக
இருக்கும். கலையின் செயல் எது? கலைஞனின் செயல் எது? என்ற கேள்விகளுக்குப் படைப்பு மட்டுமே பதில் தருவதாக இருக்க
வேண்டும். அதற்குச் சமகால நாவலாசிரியர்கள் சமூகத்தைக் கூர்ந்துப் பார்க்க
வேண்டும். அவ்வாறு பார்க்காதபோது தங்களது படைப்புகளைத் தட்டையான பொருளற்ற மொழியால்
மட்டுமே உருவாக்க இயலும். அப்படி உருவாகும் படைப்புகள் எவ்விதமான தாக்கத்தையும்
உருவாக்காது.
சமகால நாவல்களில் அதிகமாக
மொழிசார்ந்த சிக்கல்கள் இருப்பதற்கு நாவலாசிரியர்கள் நிதானமாக எழுதாததுதான்.
எழுதியது சரியாக இருக்கிறதா என்று பார்க்காததும், திரும்பப் திரும்பப் படித்துப் பார்த்து, திருத்தி
எழுதாததும்தான் காரணம். கூடுதல் அக்கறையும், சிரத்தையும் கொண்டால் பிசிறற்ற, நேர்த்தியான
மொழியில் எழுத முடியும். அதற்கு மொழி குறித்த கூடுதல் அக்கறையும், கவனமும், கொஞ்சம்
உழைப்பும் தேவை. கூடுதல் உழைப்பை தரும்போது மொழி சார்ந்த சிக்கல்கள்
களையப்படும்போது தமிழ்மொழியும், தமிழ்நாவல் இலக்கியமும் மேலும் துலக்கம் பெறும். இதற்குச்
சமகால நாவலாசிரியர்கள் தயாராகும்போது எந்தக் குழப்பமும் இல்லாத நாவல்கள்
உருவாகும்.
பின்குறிப்பு :
*1 கூளமாதாரி -
பெருமாள் முருகன் - 2000
*2 தகப்பன் கொடி -
அழகியபெரியவன் - 2001
*3 சிலந்தி -
எம்.ஜி.சுரேஷ்-2001
*4 வன்மம் - பாமா -
2002
*5 காடு - ஜெயமோகன்
- 2003
*6 இரண்டாம்
ஜாமங்களின் கதை -சல்மா - 2004
*7 கூகை-சோ.தருமன்
- 2005
*8 கானல் நதி -
யுவன் சந்திரசேகர் - 2006
*9 யாமம் - எஸ்.இராமகிருஷ்ணன்-2007
*10 மரம் - ஜி.முருகன்
- 2007
*11 ராஸ
லீலா-சாருநிவேதிதா - 2008?
*12 அஞ்சுவண்ணம்
தெரு - தோப்பில் முகமது மீரான் - 2008
*13 கொற்கை -
ஜே.டி.குரூஸ் – 2009
1. கோவையில்
நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் 23.06.2010 முதல் 27.06.2010 படிக்கப்பட்ட கட்டுரை.
2. அம்ருதா
ஆகஸ்ட் 2010ல் வெளியிடப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக