இப்போது உயிரோடிருக்கிறேன் நாவல் குறித்து அ. ராமசாமி
துன்பியல் முடிவுகளைச் சந்திக்கும் பாத்திர உருவாக்கம் எப்போதும் இலக்கியத்தின் சக்தி வாய்ந்த வெளிப்பாடாக இருந்து வருகிறது. துன்பியல் முடிவைத் தவிர்க்கும் வாய்ப்புகளைக் காட்டத் தவறியதற்காக அந்தப் பாத்திரத்தைத் சுற்றி வாழ்ந்த மனிதர்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் குற்றச்சாட்டுகளை வைப்பதின் வழியாகவே திறன்வாய்ந்த எழுத்தின் – எழுத்தாளரின்- தனித்துவம் உருவாகிறது. ஒரு பாத்திரம் தானே தெரிவுசெய்த வாழ்க்கைமுறையின் காரணமாக ஆகப்பெரும் துன்பியல் முடிவைச் சந்திக்க நேர்ந்தது என்பதைத் தனது பனுவலில் முன்வைக்கும் எழுத்தாளர்கூட, தன்னையும் உள்ளடக்கிய சமூகத்தைக் குற்றவுணர்வுக்குள் நிறுத்தி விவாதிக்கும் சாத்தியங்களைத் தவறவிடுவதில்லை. உலக இலக்கியத்தில் கொண்டாடப்படும் இலக்கியப்பனுவல்களைக் கவனித்தால் இந்தக்கூற்றின் உண்மை புரியவரலாம்.
தானே தெரிவுசெய்த வாழ்க்கைமுறையால் பாதிக்கப்பட்டவர்களைக் குறைவாக எழுதியவர் இமையம். மரபான இந்திய சமூகம் வழங்கிய வாழ்க்கையால் பாதிக்கப்பட்டவர்களைத் தனது புனைகதைகளில் உருவாக்கிக் காட்டுவதைத் தனது இலக்கியப் பார்வையாக – எழுத்தின் அடையாளமாக நிறுவிக் கொண்டவர். அந்த இலக்கியப்பார்வையைத் தனது நாவல்களிலும் சிறுகதைகளிலும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் அவர், தெரிவுசெய்து முன்வைக்க வேண்டிய பாத்திரங்கள், அவை உலவும் வெளி, கால அளவு என்பதில் காட்டும் கச்சிதத்தன்மை ஆகியனவற்றால் சிறந்த இலக்கியப் பனுவல்களைத் தருபவராக அறியப்படுகிறார். பேசப்படுகிறார்.
புதிய நகர்வு.
இமையத்தின் முதல் நாவலான கோவேறு கழுதைகள் தொடங்கி ஆறுமுகம், செடல், எங்கதெ, செல்லாத பணம் என ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாகத் தனித்தன்மையோடு வெளிப்பட்ட நாவல்கள். ஒவ்வொன்றையும் தனித்தன்மை கொண்ட நாவல்களாக ஆக்கியதில் முதன்மையான இடம் வகிப்பது அவரது புனைவாக்கத்திறன். குறிப்பாக அவரது பாத்திரத் தெரிவுகளையும் பாத்திரமாக்கலையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அத்தோடு பேச்சுமொழியின் ஒலிப்புத் தன்மையைக் கவனமாக எழுத்தில் கொண்டுவரும் நீண்ட உரையாடல்கள் வழியாகக் கதை நிகழ்வுகளை முன்வைப்பது அவரது எழுத்தின் அடுத்த சிறப்பு. அதன் வழியாகத் தனது புனைவுலகத்திற்கு நம்பகத் தன்மையை உண்டாக்கும் இமையம், பெரும்பாலும் கதைசொல்லியைப் படர்க்கை இடத்தில் நிறுத்தி அடையாளமற்ற ஆளாகவே இதுவரை கையாண்டு வந்துள்ளார்.
நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் எனத் தானெழுதிய புனைவுகளில் படர்க்கைக் கூற்றுக் கதைசொல்லல் முறையையே பின்பற்றி வந்த இமையம். ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ என்ற புதிய நாவலில் (2022, ஜனவரி,க்ரியா) அதிலிருந்து விலகியிருக்கிறார். எழுத நினைத்த உரிப்பொருளின் (Content) தேவைக்காகவே இந்த விலகல் நிகழ்ந்திருக்கிறது. உரிப்பொருளே வடிவத்தைத் தீர்மானிக்கிறது என்பது இலக்கியத்திறனாய்வில் முக்கியமான கருத்து.
ஆழ்மன நினைவோட்ட விவரிப்புப் போல ஆரம்பிக்கும் முதல் அத்தியாயத்திலிருந்து தொடங்கும் துயரத்தின் அலைவுகளும் அச்சத்தின் பரவலும் இணைந்து, இந்த நாவலைப் படர்க்கைக் கூற்றுக் கதைசொல்லலைப் பின்பற்றாமல், தன்மைக் கூற்றுக் கதைசொல்லலுக்கு நகர்த்தியுள்ளது. இந்த நகர்வு,‘மரபான இந்திய சமூகம் உருவாக்கும் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்களை–ஒதுக்கப்படுகிறவர்களை எழுதும் எழுத்தாளர் இமையம்’ என்ற அடையாளத்தையும் மாற்றியிருக்கிறது. அதற்குப் பதிலாக நிகழ்கால வாழ்க்கையில் பெரும் தாக்கம் செலுத்தும் அமைப்பொன்றின் அபத்தமான நிகழ்வுகளுக்குள் இருக்கும் நம்பிக்கை அழிப்பை விவாதிக்கும் எழுத்தாளராக மாறியிருக்கிறார். அதற்காக நிகழ்காலத்தின் ஆகப்பெரும் சேவையாகவும் வணிகமாகவும் விளங்கும் மருத்துவ உலகத்தைப் பின்னணியாக்கிய எழுத்தாக ‘நான் இன்னும் உயிரோடிருக்கிறேன்’ நாவலை தந்துள்ளார். அந்நாவலை வாசிப்பவர்கள், பல்நோக்கு வசதிகள் கொண்ட – கார்ப்பரேட்- மருத்துவ அமைப்புக்குள் இருக்கும் குரூரமான உண்மைகளையும் கைவிட முடியாத அபத்தங்களையும் வாசித்துக் கடக்க முடியாமல் திணறித்தான் ஆகவேண்டும்.
நாவலின் கட்டமைப்பு விவரணத் தொகுப்பும்
பள்ளிக்கல்வியில் மேல்நிலை வகுப்புக்குள் நுழையும் நிலையில் இருக்கும் பதினைந்து வயதைத் தாண்டிய தமிழரசன் தன் கதையைச் சொல்வதே நாவலின் பரப்பு. நீண்டு விரியும் கதையைச் சொல்கிறான் என்பதுகூடச் சரியானதில்லை. தமிழரசன் சொல்வது கதையல்ல; நிகழ்வுகள். சாதாரணக் காய்ச்சல் போலத் தமிழரசனின் உடலில் வெளிப்பட்ட நோயின் தீவிரம் சிறுநீரகப்பாதிப்பாக மாறியதின் தொடர்ச்சியால் நடந்த நிகழ்வுகளே நாவலாக – மூன்று பாகங்கள் கொண்ட நாவலாக – இமையத்தால் எழுதப் பெற்றுள்ளது.
குறிப்பான காலம், வெளி, பாத்திரங்கள் என எதையும் அடையாளம் காட்டாமல் அச்சத்தில் இருக்கும் மனித மனத்தின் ஆழ்மன நினைவோட்டத்தை எழுதிக் காட்டித் தொடங்குகிறது நாவல்.
நான் நின்றுகொண்டிருந்த இடம் காடு மாதிரி தெரிந்த து மரம், செடி, கொடி என்று எதுவும் கண்ணில் படவில்லை. வெறும் கட்டாந்தரையாக இருந்தது கண்பார்வை எட்டும் தூரம்வரை ஆள்நடமாட்டம் இல்லை. நான் எங்கே இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ள முயன்றேன். எந்த இடம் என்பதை என்னால் அடையாளம் காணமுடிய வில்லை.
என்பது தொடக்கச் சித்திரிப்பு. இச்சித்திரிப்பு கனவு நிலையை விவரிக்கும் சித்திரிப்புக் காட்சி என்பதை விளக்கிக் காட்டிவிட்டு தன் நினைவுகளைச் சொல்லப்போகும் பாத்திரம் கனவு நிலையிலிருந்து நனவு நிலைக்கு வருவதாகச் சொல்லி முதல் பாகத்தின் முதல் இயலைத் தொடங்குகிறார் இமையம்:
என் ஓட்டத்தின் முடிவில் ஊர் வரவில்லை. கடல் மாதிரி பெரிய நீர்ப்பரப்புதான் வந்தது. கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நீர்ப்பரப்பு. ஓடுவதை நிறுத்திவிட்டு நீர்ப்பரப்பையும் என்னை நோக்கி ஓடிவரும் பாம்புக்கூட்டத்தையும் மாறிமாறிப் பார்த்தேன். ஒரு சில நொடிகளிலேயே மொத்தப்பாம்புக்கூட்டமும் என்னை வட்டமிட்டது. ஆயிரக்கணக்கான பாம்புகள் என்னைக் கொத்துவதற்காக ஒரே நேரத்தில் தலையைத் தூக்கியதும் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு ‘ஐயோ, அம்மா’ என்று கத்தினேன்.
இக்கனவு நிலையில் வரும் நீர்ப்பரப்பும், பாம்புக்கூட்டமும் தமிழரசனின் உடலுக்குள் உருவாகப்போகும் சிறுநீரகச் சிக்கலையும் மருத்துவ உலகத்தின் இறுக்கமான வலைப் பின்னலையும் முன்னுணர்த்தும் குறியீட்டுக் காட்சிகளாக வந்து விலகிவிடுகின்றன. முதல் இயலைத் தொடர்ந்து 23 இயல்களாக விரியும் நிகழ்வுகள் முதல் பாகத்தில் எழுதப்பெற்றுள்ளன. ஊரிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து, காய்ச்சல் அல்ல; சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்துவிட்டன என்பது உறுதியான பின் தொடரும் நீண்ட 28 நாட்கள் எழுதப்பெற்றுள்ளன. சோதனைகள், மருந்து மாத்திரைகள், ஐ.சி.யூ. வார்டில் மருத்துவக் கண்காணிப்புகள், ஐ.ஜே.வி. லைன் வழியாக டயாலிசிஸ் என்னும் ரத்தச்சுத்திகரிப்பு என நீண்ட 28 நாட்கள் எழுதப்பெற்றுள்ளன. இவ்விருபத்தெட்டு நாட்களோடு மருத்துவ மனை இருப்பு முடிவடையவில்லை என்ற குறிப்பையும் முதல் பாகத்தின் கடைசிப் பத்தி தருகிறது:
திலகவதிக்குப் போன் போட்டு, “ரிசல்ட்டு நல்லா வந்திடிச்சி. ஒரு வீடு பாருங்க. கொஞ்சம் உதவி செய்யுங்கம்மா” என்று சொல்லிக் கெஞ்சினார். மெடிக்கல் சிவாவுக்கு போன் போட்டு கிராஸ் மேட்சிங் ரிசல்ட்பற்றி சொன்னார். அப்பா என்ன பேசுகிறார், யாரிடம் பேசுகிறார் என்பதைக் கவனிக்காமல் இருபத்தெட்டு நாள் கழித்து, வீட்டுக்குப் போகிறேன் என்ற சந்தோஷத்தில் காரில் ஏறிய கொஞ்ச நேரத்திலேயே நான் தூங்கி விட்டேன்.
இப்படி முடியும் அந்தப் பகுதியிலேயே திரும்பவும் அதே மருத்துவமனைக்கு வரப் போகிறார்கள். சிறுநீரக மாற்று என்னும் ட்ரான்ஸ்பிளாண்ட் செய்து கொள்ளப் போகிறார்கள் என்கிற குறிப்பும் இருக்கிறது.
****
நாவலின் இரண்டாம் பாகம் முழுவதும் (16 இயல்கள்) ட்ரான்ஸ்பிளாண்ட் செய்வதற்கான நடவடிக்கைகளின் விரிவு. அப்பாகம் இப்படி ஆரம்பிக்கிறது;
“வீடு பிடிச்சிருக்கா?” என்று லேசாகச் சிரித்துக்கொண்டே கிருஷ்ணன் கேட்டார்.
எனத் தொடங்கும் இரண்டாவது பாகத்தை, மருத்துவ மனையின் நடைமுறைகள் மீது விமரிசன வெளிச்சத்தைப் பாய்ச்சும் பகுதியாக அமைத்துள்ளார். தனி வீடுபிடித்துத் தங்கி, தமிழரசனின் தாய் வள்ளியம்மையின் சிறுநீரகத்தையே மாற்றுச் சிறுநீரகமாகப் பொருத்தலாம் என்ற முடிவோடு திரும்பக் கொண்டுவரப்படும் தமிழரசனின் உடலுக்குள் அதைப் பொருத்துவதற்கு மருத்துவர்கள் பின்பற்றும் மருத்துவ நடைமுறைகள், மருத்துவமனை நிர்வாகமும் பின்பற்றும் நிர்வாக நடைமுறைகள், அரசு விதிகளின் குறுக்கீடுகள் என ஒவ்வொன்றையும் விரிவாக எழுதுகிறார். அந்தப் பாகம் முடியும்போதும் தமிழரசனின் துயரம் தீர்ந்தபாடில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்தி முடிக்கும் அந்த முடிவுப்பத்தியை இமையம் எழுதி முடிக்கும் விதம் இப்படி இருக்கிறது:
……….. அந்தப் பெண் ஸ்டெச்சரைத் தள்ள ஆரம்பித்தார். ஸ்டெச்சரின் சக்கரங்கள் உருளும் சத்தம் கேட்க ஆரம்பித்த து. ஸ்டெச்சர் தரையில் போய்க்கொண்டிருப்பது தண்ணீருக்குள் போய்க்கொண்டிருப்பதுபோல இருந்தது. கண்களைத் திறந்து பார்த்தேன். ஒரே வெளிச்சமாக இருந்தது. கண்களை மூடிக்கொண்டேன். இருட்டாக இருந்தது.
வெளிச்சத்தைத் தொடர்ந்து, இருட்டு கவிவதற்குக் காரணம், அவனது உடல் தாயின் சிறுநீரகத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான்.
நம்பிக்கை இழப்பின் உச்சத்தவிப்புடன் தொடங்கும் மூன்றாம் பாகம் (8 இயல்கள்) முதல் பாகத்தின் ஆரம்ப வரிகளைப்போலக் கனவுநிலை விவரிப்பாகவே தொடங்குகிறது:
ஏரியோ, குளமோ, கடலோ தெரியவில்லை. பெரிய நீர்ப்பரப்பின் மீது நான் நிமிர்ந்த வாட்டத்தில் படுத்துக்கொண்டிருப்பது தெரிந்தது. நீர்ப்பரப்பில் அலைகள் ஏதுமில்லை. தொட்டிக்குள் ஊற்றிவைத்த தண்ணீர்போன்று சலனமற்றிருந்தது. படுத்திருந்த நிலையிலேயே இரண்டு பக்கமும் திரும்பிப் பார்த்தேன். ஆட்கள் யாருமே இல்லை. பேச்சுக் குரல் இல்லை. காற்றடிக்கிற சத்தம்கூடக் கேட்கவில்லை. நான் எங்கே இருக்கிறேன் என்பது தெரியவில்லை.
கனவுநிலைப் பிதற்றலின் பின்னணியில் இருப்பது தொடரும் மருத்துவமனை சூழலில் இருக்கவேண்டியதின் மீது உண்டாகும் எரிச்சல். மருத்துவமனையின் அலைக்கழிப்புகள், மருத்துவ விளக்கங்கள், நம்பிக்கையூட்டல்கள், சோதனைகள் என்பதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் தனது இருப்பையே கேள்விக்குள்ளாக்கிக் கொள்ளும் தமிழரசனின் பின்வரும் கூற்றோடு நாவல் முடிகிறது:
சக்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருப்பது கொதிக்கிற அண்டா தண்ணீருக்குள் உட்கார்ந்துகொண்டிருப்பதுபோல் இருந்தது. உடம்பு சூடாகி வாய் உலர்ந்தது. தொண்டைக்குழி வறண்டு போயிருந்தது. பயாப்சியின் முடிவு நன்றாக வருமா? நான் ஊருக்குப் போவேனா? பள்ளிக்கூட த்துக்குப் போவேனா? தெரியவில்லை. பயாப்சியின் முடிவு மோசமாக வந்தால் நான்வீட்டுக்குப் போகமுடியாததோடு, மருத்துவ மனையை விட்டும் போக முடியாது. மருத்துவமனைக்குள் இருப்பது பைத்தியக்கார விடுதியில் இருப்பதை போன்றதுதான் என்று நினைத்ததுமே எனக்கு அழுகை வந்தது. அழுகையை அடக்குவதற்குப் பற்களைக் கடித்துக்கொண்டிருந்தேன். அப்படியும் அழுகையை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. கால்களின் நடுக்கத்தை, கைகளின் நடுக்கத்தைப் போர்வை மூடியிருந்த தால் அழுகையை மறைக்க முடிந்தது. போர்வையால் முகத்தையும் மூடியிருந்ததால் அழுகையை மறைத்திருப்பேன். அழுகையை மறைப்பதற்காகக் கண்களை மூடிக் கொண்டேன். உடனே என்னைச் சுற்றி இருட்டாகிவிட்டது போலிருந்தது. முதன் முதலாக என்மீதே எனக்கு வருத்தமும் கோபமும் அருவருப்பும் உண்டானது. “சீ” என்று சொன்னேன்.
நான் உட்கார்ந்துகொண்டிருந்த சக்கர நாற்காலியின் சக்கரங்கள் உருள்கிற சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தச் சத்தம் இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது.
*********
தன்னிலையும் இருப்பும்
தனிமனிதர்களின் தன்னிலை உருவாக்கத்தோடு உருவாகும் அறிவுத்தோற்றத்தின் விளைவாக, ஒவ்வொரு மனிதர்களும் இந்த உலகத்திற்கு எப்படி வந்தோம்? என்ற கேள்வியைக் கேட்டுகொள்வதுண்டு. அறிவியல் தரும் விடையோடு, சமய நம்பிக்கை தரும் விடைகளையும் இணைத்துக் கடந்துவிடுவதுமுண்டு. வந்ததைப் பற்றிய கேள்விக்கான விடைகளைப்போல இருப்புக்கான கேள்விகளையும் மனிதர்கள் கேட்டுக் கடக்கவே செய்கிறார்கள். அப்படிக் கடக்கும் நிலையிலும் இந்த உலகம் வாழ்வதற்கானது என்ற நம்பிக்கை தூக்கலாக வெளிப்படுவதுண்டு. அதன் தொடர்ச்சியாக, இந்த உலகத்தைவிட்டு எப்போது போவோம்; எப்படிப் போவோம்? என்று கேட்டு விடைதேடும் வேலையைச் சாதாரண மனிதர்கள் செய்வதில்லை. ஆனால் எல்லா மனிதர்களும் அந்த இறுதி நாளை – உலகத்தைவிட்டுப் போகும் நாளைத் தள்ளிப் போட முடியும் என்று நம்புகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. அந்த நம்பிக்கையின் வெளிப்பாடுகளாகச் சமய நடவடிக்கைகளும் இருக்கின்றன. அதைவிடக் கூடுதலாக மருத்துவ அறிவு தரும் நம்பிக்கைகளும் இருக்கின்றன.
15 வயதுச் சிறுவனாக வளர்ந்தது வரை தமிழரசன் இந்த உலகத்தின் அனைத்து உருவாக்கங்களையும் மகிழ்ச்சிகளையும் தனக்கானதாக ஆக்கி வாழ வந்ததாகவே நினைத்திருப்பான்; நம்பியிருப்பான். ஆனால் சிறுநீரகச் செயலிழப்பு என்னும் நோய்க்குப் பின் அவனது எதிர்காலம் சார்ந்த நம்பிக்கை தொலைந்தது மட்டுமல்லாமல், நிகழ்காலத்தின் இருப்பே வெறுப்பானதாக மாறுவிடுகிறது. அந்த நிலையில் அவனது இருப்பு கேலிக்குரிய ஒன்றாக அவனுக்கே தோன்றுவதை யார் தடுக்க முடியும்?. அப்படி தோன்றியபின் உருவான சொற்களின் கூட்டம் தான் ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ என்ற தலைப்புக்குப் பின்னிருந்து வந்து விழும் நம்பிக்கையற்ற நம்பிக்கைக் குரல்.
*********
இமையத்தின் புனைகதைத்திறன்
ஒரு புனைகதையை வாசிக்கும்போது வாசிப்பவரின் தன்னுணர்வைத் தாண்டி உருவாகி வினையாற்றக்கூடிய கூறுகள் இரண்டு. கதைசொல்லியாக இருக்கும் பாத்திரத்தின் இடம் முதல் கூறு; சொல்பவர் வழியாக வெளிப்படும் காலம் இரண்டாவது கூறு. வாசிக்கப்படும் புனைவு கடந்த காலத்தின் நிகழ்வுகளால் பின்னப்பட்ட புனைவாக இருக்கும் நிலையில், எழுதிய எழுத்தாளரின் அனுபவம் சார்ந்த புனைவாக இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவோடு வாசிக்க முடியும். எல்லாப்பாத்திரங்களுக்குள்ளும் எழுதுபவரே பாத்திரமாக இருக்கிறார் என்ற புரிதலோடு கூடிய வாசிப்பு அது. அதற்குப் பதிலாக முழுவதும் நிகழ்காலத்து நிகழ்வுகளால் பின்னப்படும் நிலையில் எழுதியவரின் நேரடி அனுபவங்களின் பங்கு பற்றிய கேள்வி வாசிப்பவரின் மனதிற்குள் எழுவதைத் தவிர்க்க முடியாது. விரியும் நிகழ்வுகளில் எழுத்தாளரின் இடம் சொல்லியின் இடமாக இல்லாமல் நேரடிப்பங்கேற்புகொண்ட பாத்திரத்தின் இடமாக மாறும்போது படர்க்கைக் கதைசொல்லல் முறை தவிர்க்கப்பட்டு தன்மை அல்லது முன்னிலை கதைசொல்லல் முறை சொல்முறையாக மாறிவிடுகிறது. இந்நாவலில் பதினைந்து வயதுச் சிறுவனின் வழியாகச் சொல்லப்படும் நிகழ்வுகள் எழுத்தாளர் இமையத்தின் பங்கேற்ற அனுபவம் என்பதைவிடப் பக்கத்திலிருந்து பார்த்துச் சேகரித்த ஆவணங்களின் தொகுதியாக விரிந்துள்ளது எனலாம். தமிழரசனின் தந்தை அருணாசலத்திற்குள் புகுந்து இமையம் பேசுவதாக அவரையும் அவரது எழுத்துகளையும் அறிந்தவர்கள் நினைத்துக்கொள்ள அதிக வாய்ப்புண்டு.
நடப்பியலின் இருநிலைகள்
இப்போது உயிரோடிருக்கிறேன் நாவலை வாசிக்கும்போது நடப்பியல் எழுத்தின் இரண்டு வகைமைகளின் வெளிப்பாடுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது. நோயை எதிர்கொண்ட உடலின் இருப்பையும், நோயைக் குணப்படுத்த மருத்துவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும் சொல்லும் தமிழரசன், தன்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொன்றையும் நுட்பமாக கவனிக்கிறான்; விவரிக்கிறான். அந்தக் கவனிப்பும் விவரிப்பும் ஒரு ஆவணப்படக் காமிராவின் பதிவுகளைப்போல ஒவ்வொரு நகர்வையும், ஒவ்வொரு பொருட்களின் இருப்பையும், இயக்கத்தையும், இயக்கும் மனிதர்களின் மனவோட்டங்களையும் தகவல்களாகவும் காட்சிகளாகவும் உணர்ச்சி வெளிப்பாடுகளாகவும் தருவதாக இருக்கின்றன. அவனது கவனமும் விவரிப்பும் மருத்துவமனை என்னும் வெளிக்குள் இயங்கும் மருத்துவப் பணியாளர்களின் செயல்பாடுகளையும் ஈடுபாட்டையும் மட்டும் பேசுவதாக இருக்கிறது என்று நினைக்க வேண்டியதில்லை. அவனது உறவினர்களின் இருப்பையும் அதே கவனத்துடன் முன்வைத்துள்ளது. தன்னுடன் இருப்பவராகவும், தனது சிறுநீரகங்களில் ஒன்றைத் தனக்குத் தருவதின் மூலம் தனது வாழ்நாளை நீட்டிக்க விரும்பும் அம்மா வள்ளியம்மையின் மனவோட்டங்களில் எந்தவிதத் தயக்கமும் வெளிப்பட்டதில்லை என்பதைச் சொல்வதோடு, அப்பா அருணாசலம் மருத்துவச் செலவுக்காகப் பணம் திரட்டுவதற்குப் படும்பாடுகளை அவரது தொலைபேசி உரையாடல்களைக் கவனித்துச் சொல்வதின் வழியாகவும் முன்வைக்கிறான். அரிசி&மாவு அரைக்கும் மில்லின் உரிமையாளரான அப்பாவின் படிப்புக்காலத் தொடர்புகள் வழியாக் கிடைக்கும் உதவிகளைப் பேசும்போது இந்த உலகம் நல்லவர்களாலும் நிரம்பியிருப்பதைக் காட்டுகிறான். அப்பாவின் ஆசிரியரான திலகவதியின் உதவி, அவரது தொடர்பால் அறிமுகமாகும் தாமரைச்செல்வியின் உதவி, சென்னையில் வாடகை வீட்டிற்கு ஏற்பாடு செய்யும் கிருஷ்ணனின் பங்களிப்பு என ஒவ்வொன்றையும் – ஒவ்வொருவரையும் – கவனித்துச் சொல்லும் விதம் நுட்பமான அவதானிப்புகள். இதில் வெளிப்படும் மொழிநடையும் அடுக்குகளும் ஆவண நடப்பியலாக அமைந்துள்ளது.
மையப்பாத்திரத்தின் சொல்முறைமைக்குள் ஆவண நடப்பியல் (Documentary Realism) வெளிப்படுகிறது என்றால், அவனது அப்பாவின் பேச்சுகளிலும், உணர்ச்சி வெளிப்பாடுகளிலும், ஒவ்வொன்றிலும் அவருக்கு எழும் சந்தேகங்களிலும், அதன் தொடர்ச்சியான வினாக்களிலும் வெளிப்படுவது விமரிசன நடப்பியல் (Critical Realism)தன்மை. மருத்துவமனை ஊழியர்கள் ஒவ்வொருவரிடமும் – அடிமட்ட ஊழியரான தாதியிடம் தொடங்கி, நர்சு, கம்பவுண்டர், பணம் வசூலிக்கும் கணக்காளர், பயிற்சி மருத்துவர், துறைத்தலைவர், மருத்துவ இயக்ககத்தின் விசாரணைக்குழு உறுப்பினர்கள் என ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார். அந்த ஆர்வம் தெரிந்துகொள்ளும் ஆர்வமாக மட்டுமல்லாமல், அவர்களின் செயல்பாட்டில் இருக்கும் மனித உறவுகளுக்கப்பாலான இயந்திரத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தும் விமரிசனப்பாங்கையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆலோசனை வழங்கும் அதிகாரி அகிலாவோடு அவர் நடத்தும் உரையாடல்களில் தனது அறியாமையையும், காலந்தாழ்ச்சி உண்டாவதால் அடையும் எரிச்சல்களையும் முன்வைத்துக் கேள்விகளால் மொத்த அமைப்பையும் விமரிசனத்திற்குட்படுத்துகிறார். அவரது பொறுமையான பதில்களுக்குப் பின் தெளிவு கிடைக்கும்போது நடைமுறைகள் ஏன் இப்படிச் சிக்கலாக இருக்கின்றன என்ற தவிப்பையும் ஆற்றாமையையும் காட்டுகிறார். அவரது விமரிசனம், ஆகப்பெரும் மருத்துவ அமைப்பு மீது சாதாரண மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் விமரிசனம். .
*******
இமையத்தின் ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ என்ற நாவலை வாசித்து முடித்தவுடன், இந்நாவல் எழுதப்பெற்ற நோக்கம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை ஒருவர் எழுப்பலாம். அந்தக் கேள்விக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விடையை நாவல் முன்வைக்கிறது. தமிழரசனின் துயரம் சுமக்கும் வாழ்க்கையையும், நாவலின் முடிவில் அவன் வெளிப்படுத்தும் நம்பிக்கையிழப்புச் சொற்களையும் முன்வைத்து, மனிதர்களின் இருப்புக்குப் பின்னால் இருக்கும் அபத்தத்தைக் காட்டுவதற்காக எழுதப்பெற்ற நாவல் என ஒரு விடையை உருவாக்கிக் கொண்டு ஒருவர் விலகலாம். அந்த விடையே பொதுவான வாசகர்கள் உருவாக்கிக்கொள்ளும் விடை. அதைத் தாண்டிய இன்னொரு நோக்கம் இந்நாவலை எழுதியதின் பின்னால் இருக்கிறது. பொறுப்புமிக்க எழுத்தாளர் ஒருவர் தனது காலத்தின் மீது கவியும் – மனிதர்களின் வாழ்க்கை மீது செலுத்தும் அழுத்தத்தை விசாரிக்கும் விசாரணை அது. மரபான சமூக நடைமுறைகளின் பின்னணியில் சமய நம்பிக்கைகள் உருவாக்கும் அழுத்தம் போலவே, நவீன வாழ்க்கையில் அறிவியல் நடைமுறைகளும் கண்டுபிடிப்புகளும் உருவாக்கும் அழுத்தங்களும் விசாரிக்கப்படவேண்டும் என்பதின் வெளிப்பாடே அந்த நோக்கம். மரபான அமைப்புகளை விசாரணை செய்து, நவீனத்துவத்தைப் பரிந்துரை செய்ததைத் தாண்டிய நோக்கம் கொண்டது இது. நவீனத்துவ அறிவான மருத்துவத்தின் மீதும் விசாரணையைக் கோரும் பின் நவீனத்துவ நிலை இது.
நவீன அறிவியலின் ஆதாரத்தில் இயங்கும் பெரும் மருத்துவமனைகள் – கார்ப்பரேட் / பல்நோக்கு மருத்துவ மையங்கள், அறிவியல் தரவேண்டிய உறுதியான முடிவுகளை முன்வைக்கத் தயங்கிக் கொண்டே இருக்கின்றன; தொடர்ச்சியாக நிச்சயமற்ற தன்மையைத் தருவதையே தொடர் வினைகளாகக் கொண்டிருக்கின்றன என்ற கடும் விமரிசனத்தை நாவல் வழி உருவாக்கியுள்ளார். சேவையாகவும் வணிகமாகவும் இயங்கும் அப்பெரும் அமைப்புக்குள் புலப்படாத விதிகள் செயல்படுகின்றன; அவையே மனிதர்களைத் தொடர்ச்சியான வேதனைச் சுழலில் இயங்கும்படி நிர்ப்பந்திக்கின்றன என்பதைத் காட்சிப்படுத்தும் மொழியின் மூலம் வாசிக்கத் தருகின்றார். ஒவ்வொரு நிகழ்வையும் நகர்வையும் சித்திரிப்பவராக மட்டுமல்லாமல், அந்நிகழ்வில் பங்கேற்கும் பாத்திரங்கள் வழி தொடர்ச்சியாக வினாக்களை எழுப்பிக்கொண்டே இருக்கிறார். மருத்துவ மனைக்குள் இருக்கும் பிரமாண்டமான வெளி, கருவிகள், பணியாளர்களான மருத்துவர்கள், தாதியர்கள், ஆலோசகர்கள், செயலர்கள் ஆகியோரின் இயக்கம், சுத்தம் பேணுதல் ஆகியவற்றை இயக்கும் நிர்வாக அமைப்பு பணப் பரிவர்த்தனைக்குக் கையாளும் உத்திகள் என ஒவ்வொன்றும் புதிர்களாகவும் ஆச்சரியமூட்டுவனவாகவும் இருப்பதை நுட்பமாக விவரிக்கிறார். அவ்விவரிப்புகளின் வழியாகவே அங்கு நிலவும் பொருளாதார ரீதியான வேறுபாடுகளையும், உள்ளே நுழைந்தவர்கள் அந்தச் சுழலில் சிக்கி வெளியேற முடியாமல் தவிக்கும் பரிதவிப்புகளையும் கவனப்படுத்தியிருக்கிறார். இதுவரையிலான தனது எழுத்துப்பரப்பில் அதிகமும் கிராமப்புற வெளிகளையும் மனிதர்களையும் எழுதிக்காட்டிய இமையம், இந்நாவலில் தேர்வுசெய்த பொருண்மையால் புதிய பரப்பை விசாரணைக்குள்ளாக்கித் தனது புனைவுத்திறனைக் கூட்டியிருக்கிறார். *********************
முதல் நாவலிலிருந்து ஒவ்வொரு நாவலிலும் சிறுகதைத் தொகுதியிலும் தொடர்ச்சியாக வித்தியாசங்களையும் படைப்பு நுட்பங்களையும் அதிகரித்துக்கொண்டே வந்துள்ள இமையம், கடந்த ஆண்டு தனது ‘செல்லாத பணம்’ நாவலுக்காக இந்திய அரசு, இலக்கியத்திற்காக வழங்கும் சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவர். கிராமப்புற மனிதர்களை எழுதும் போக்கிலிருந்து நகரும் திசையை அந்த நாவலே கொண்டிருந்தது. அந்த நாவலின் கதைக்களனில் ஒன்றாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இருந்தது. தீக்காயங்களுடன் மருத்துவ மனைக்குள் அனுமதிக்கப்பட்ட நோயாளியோடு தொடர்புடைய காட்சிகளை நுட்பமாக எழுதியதன் மூலம் இலக்கியவியலின் அடிப்படைக் கூறுகளான காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றிலும் நூறுசதவீதம் தனது ஈடுபாடும் வெளிப்பாடும் இருக்கவேண்டும் என்பதைக் காட்டியிருந்தார். தான் எழுத நினைக்கும் பொருண்மை சார்ந்து கூடுதல் அர்ப்பணிப்பை வழங்கும் இமையம், அந்த அர்ப்பணி காரணமாகவே பல விருதுகளைப் பெற்றவராக ஆகியிருக்கிறார். அதே அர்ப்பணிப்பை இன்னும் கூடுதலாக்கி இன்னும் இன்னும் விருதுகள் பெற வேண்டியவர் என்பதை இந்த நாவலில் உறுதிப்படுத்தியிருக்கிறார். பொதுவாக சாகித்திய அகாதெமி விருதுக்குப் பிறகு தனது முந்திய எழுத்துகளைத் தாங்களே தாண்ட நினைக்காத நிலையே தமிழின் சாகித்திய அகாதெமி பெற்றவர்களின் நிலையாக இருக்கிறது. ஆனால் இமையம், சாகித்திய அகாதெமி விருதுக்குப் பின் அடுத்த நாவலிலேயே அதனைத் தாண்டியிருக்கிறார் எனச் சொல்வது புகழ்ச்சியில்லை.
தலித்/மார்ச்- ஏப்ரல் 22,
உயிர்மை, மார்ச் 22
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக