கோவேறு கழுதைகள் நாவல் வெளிவந்து 26 ஆண்டுகளாகிவிட்டது. அதன் பிறகு 7 நாவல்கள், 6 சிறுகதை தொகுப்புகள் என்று எழுதிவிட்டீர்கள். இத்தனை ஆண்டுகால எழுத்து வாழ்க்கையில் எழுத்தில் சாதித்துவிட்டேன் என்று சொல்ல முடியுமா? எழுத்து வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன? சாதித்தது என்ன?
எழுதுதல் என்பதே படிப்பதுதான். பயிற்சிதான். எழுத்தில் சாதித்துவிட்டேன் என்று என்னால் ஒருபோதும் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. சாதித்துவிட்டேன் என்று சொல்வது நிறைவடைந்துவிட்ட செயல். எழுத்தாளனின் வாழ்க்கையில் அப்படி ஒரு நிலை இல்லை. இதுதான் உச்சம், இதற்கு மேல் ஒன்றுமில்லை என்பது இல்லை. ஒவ்வொரு சிறுகதையும் ஆரம்பம்தான். ஒவ்வொரு நாவலும் ஆரம்பம்தான். எழுத்தில் முடிவு என்பது கிடையாது. சாதித்துவிட்டேன், உச்சத்தைத் தொட்டுவிட்டேன் என்று ஓர் எழுத்தாளன் சொன்னால் அது அவனுடைய வீழ்ச்சியையே காட்டும்.
ஒவ்வொரு சிறுகதையை எழுதும்போதும், ஒவ்வொரு நாவலை எழுதும்போதும் எனக்கு ஒரு தொடக்க நிலை எழுத்தாளனின் மனநிலைதான் இருக்கிறது. பதற்றம் இருக்கிறது. நன்றாக வர வேண்டும் என்ற கவலை இருக்கிறது. எழுதியது சரியாக இருக்கிறதா என்று கூடுதல் அக்கறையுடன் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் சமூகத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது. நான் எழுத்தில் எதையும் சாதிக்கவில்லை. என்னுடைய எழுத்து பெரிய சாதனையான எழுத்து என்றும் நான் சொல்ல மாட்டேன். எல்லாமே எனக்குப் புதியதாக இருக்கிறது. தொடக்க நிலையாகவே இருக்கிறது. எழுத்துப் பயிற்சியில் இருக்கும் மாணவன் நான். எழுத்து என்பது தொடர் ஓட்டம்.
‘கோவேறு கழுதைகள்’ நாவல் தொடங்கி இப்போது வந்திருக்கிற ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ நாவல்வரை, உங்களுடைய எழுத்து, யதார்த்த வகை பாணியிலான எழுத்தாகவே இருக்கிறது. நீங்கள் ஏன் புது வகையிலான கதைசொல்லல் முறையை முயற்சிக்கவில்லை.
ஒரு சிறுகதையோ, நாவலோ எப்படி எழுத வேண்டும் என்பதை எழுத்தாளன் முடிவெடுக்கிறான் என்பதைவிட, அந்தச் சிறுகதையும், நாவலும்தான் தீர்மானிக்கிறது. யதார்த்த வகையில் எழுத வேண்டும் என்பது என்னுடைய லட்சியமல்ல, கொள்கை அல்ல. புது வகையான எழுத்தை எழுதிப்பார்க்க வேண்டும் என்றுதான் எல்லா எழுத்தாளர்களுமே விரும்புகிறார்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் தன்னுடைய எழுத்தை மாற்றிமாற்றி எழுதிப்பார்க்க வேண்டும் என்றுதான் முயற்சிக்கிறார்கள். அது வெளிப்படையாகத் தெரியாது. புது முயற்சியில் வெற்றி பெறலாம், தோல்வி அடையலாம், வெற்றி தோல்வி சம்பந்தப்பட்டது அல்ல படைப்பிலக்கியம். முயற்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது, எழுதப்படுவது இலக்கியப் படைப்பாக இருக்கிறதா என்பது.
என்னுடைய ‘பொன்னம்மாவின் குடும்பக் கதை’ என்ற சிறுகதை சர்ரியலிசப் பாணியில் எழுதப்பட்டது. ‘எங் கதெ’ நாவல் சங்க இலக்கியப் பாடல் முறையைப் பின்பற்றி எழுதியது. தற்போது வந்திருக்கிற ‘இப்போது உயிரேடிருக்கிறேன்’ என்ற நாவல் 15 வயது சிறுவனின் பார்வையில் எழுதப்பட்டது. ‘கோவேறு கழுதைகள்’ நாவலை எழுதும்போது எனக்கு 19 வயது. 19 வயதில் 65-70 வயது கொண்ட மனிதர்களை எழுதினேன். இப்போது எனக்கு 56 வயது. 15 வயது சிறுவனின் மனநிலையில் எழுதியிருக்கிறேன். இது ஓர் எழுத்தாளன் தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்கிற சவால், நான் சவாலை ஏற்றுக்கொண்டு செயல்பட்டிருக்கிறேன்.
புதிய உத்தியில், புதிய மொழியில், புதிய முறையில் கதை எழுதுகிறோம் என்பதும், இசங்களின் புரிந்துணர்வில் எழுதுகிறோம் என்று ஆவேசமாகப் பேசுவதும் முக்கியமல்ல. எழுதப்பட்டப் படைப்பு தரமாக இருக்கிறதா, இலக்கியப் படைப்பாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.
உங்களுடைய ‘வாழ்க வாழ்க’ நாவல் முற்றிலும் அரசியலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. நாவலில் விவரிக்கப்பட்டுள்ள மாதிரிதான், பொதுமக்களும், அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் இருக்கிறார்களா? சற்று மிகையாக இருக்குமோ என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது.
மிகை அல்ல. நிஜம். தமிழ்நாட்டு அரசியலில் 32 ஆண்டு கால நேரடி அனுபவம் எனக்கு இருக்கிறது. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு செல்லப்படும் மனிதர்கள், குறிப்பாகப் பெண்கள், எதற்காக வருகிறார்கள்? கட்சியில் விருப்பம் கொண்டா, கட்சித் தலைவரின் மீது விருப்பம் கொண்டா என்றால், இல்லை என்றுதான் நான் சொல்வேன். கூலிக்காக வருகிறார்கள். முதல் நாள் 500 ரூபாய்க்காக அ.தி.மு.க. கூட்டத்திற்குப் போகிறவர்கள், மறுநாள் பி.ஜே.பி., தி.மு.க. கூட்டத்திற்கும் போவார்கள். அரசியல் கட்சியினரைப் பொறுத்தவரை கூட்டம் கூட்டிக் காட்ட வேண்டும். ஜனநாயகக் கடமை என்பதெல்லாம் கற்பனையான வார்த்தை. கட்சி ஈடுபாட்டுடன் செல்கிறவர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் ஒரு சதவிகிதத்திற்கும் கீழ்தான் இருக்கும். அரசியல் கட்சிகள் எப்படி இருக்கின்றன. அரசியல் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள், நம்முடைய மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பச்சையாக விவரித்துக்காட்டிய நாவல்தான் ‘வாழ்க, வாழ்க’. நான் அறிந்தவரையில் தமிழ்நாட்டில், இந்தியாவில் தற்போதைய நடைமுறைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நேரடியாக விவரித்த நாவல் வேறில்லை.
வளர்ந்து வரும் டிஜிட்டல் வாழ்க்கைச் சூழலில் ஓர் எழுத்தாளராக, வாசகராக நீங்கள் சந்திக்கும் சவால்கள், நெருக்கடிகள் என்ன? வாசிப்பு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து உங்களுடைய கருத்தென்ன?
ஓலைச்சுவடியில் ஊசியால் எழுதினார்கள், பின்பு பேனாவால் எழுதினார்கள். பிறகு டைப் மெஷினில் டைப் செய்தார்கள். இப்போது கம்ப்யூட்டரில் டைப் செய்கிறார்கள். கவிதைகளை, குறிப்புகளை செல்போனிலேயே டைப் செய்கிறார்கள். அதையும் தாண்டி வாயாலேயே பேசி டைப் செய்கிற முறையும் புழக்கத்திற்கு வந்துவிட்டது. அதே மாதிரி இப்போது கிண்டிலில் படிக்கிறார்கள். டிஜிட்டல் புக்ஸ், பி.டி.எஃப். என்ற முறையில் படிக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி இப்போது ஆடியோ புக்ஸ் வந்துவிட்டது. படிக்க வேண்டியதில்லை. கதை கேட்கலாம். முன்பு ரேடியோவில் கேட்டது மாதிரி, நாடகம் கேட்டது மாதிரி. அதையும் தாண்டி பல யூடியூப் சேனல்களில் கதை சொல்கிறார்கள். விமர்சனம் செய்கிறார்கள். இதிலிருந்து படிப்பது என்பது ஏதோ ஒரு வடிவத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இருக்கும். காரணம் மனிதனால் கதை சொல்லாமலோ, கதை கேட்காமலோ இருக்க முடியாது. ஓர் எழுத்தாளனாக, ஒரு வாசகனாக எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. சமூகம் எப்படி இருந்தது. எப்படி மாறுகிறது என்பதை எழுதுவதுதான் எழுத்தாளனின் வேலை. டிஜிட்டல் உலகத்தில் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது என்பதும், அச்சு ஊடகம், அழிந்துவிடும் என்பதும் மிகை கற்பனை. டிஜிட்டல் யுகம் எழுத்தாளர்களுக்கு, வாசகர்களுக்கு நன்மை செய்திருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.
உங்களுடைய ‘பெத்தவன்’ நெடுங்கதை பேசப்பட்ட அளவிற்கு மற்ற சிறுகதைகள் பேசப்படவில்லையே ஏன்?
அரசியல் சூழல், சமூக சூழல்தான் காரணம். ‘பெத்தவன்’ நெடுங்கதை வெளியான மறு மாதம்தான் திவ்யா-இளவரசன் பிரச்சினை உருவானது. அதன் காரணமாக, ‘பெத்தவன்’ கதைக்குக் கூடுதல் கவனம் கிடைத்தது. மற்ற சிறுகதைகளுக்குப் போதிய வெளிச்சம் கிடைக்கவில்லை என்று கூற முடியாது. ‘வீடியோ மாரியம்மன்’ என்ற தலைப்பில் 17 கதைகள் The speaking Tiger என்ற பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. Ratna Books வெளியீட்டில் If there is a God என்ற தலைப்பில் 13 கதைகள் ஏப்ரல் மாதம் வெளியிட இருக்கிறது. Korpor Collins பதிப்பகத்தின் மூலம் 11 கதைகள் Order of the Sky என்ற தலைப்பில், மே மாத இறுதியில் வெளிவர இருக்கிறது. நான் எழுதிய சிறுகதைகளில் 90 சதவிகிதக் கதைகள் ஆங்கிலத்தில் வெளியாகி இருக்கிறது, வெளிவர இருக்கிறது முக்கியமான விஷயம். சிறுகதைகள் போதிய கவனம் பெறவில்லை என்பது தவறானது.
உங்களுடைய ‘செல்லாத பணம்’ நாவலும், ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ நாவலும், ‘ஆண்டவரின் கிருபை’ என்ற சிறுகதையும் முழுக்க மருத்துவமனையிலேயே நிகழக்கூடியவை. மருத்துவமனைக்குள் நிகழ்கிற சம்பவங்களைத் தத்துரூபமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள். மருத்துவமனை சம்பந்தமான கதைகளை விரும்பி எழுதுகிறீர்களா?
நிச்சயமாக இல்லை. கட்டாயம் எழுத வேண்டும், எழுதாமல் விடக் கூடாது என்ற மனக்கொந்தளிப்பு ஏற்பட்ட பிறகுதான் எழுத ஆரம்பித்தேன். ‘செல்லாத பணம்’ தீக்குளித்து இறந்துபோகிற ரேவதி என்கிற ஒரு இளம் பெண்ணின் கதை. 15 வயது சிறுவன் சிறுநீரகச் செயலிழப்பால் சந்திக்க நேரிடுகிற கொடும் துயரம்தான் ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ என்ற கதை. தமிழரசன் என்ற சிறுவன்தான் கதையின் மையம். அவனுடைய பார்வையில்தான் கதை எழுதப்பட்டுள்ளது. ‘ஆண்டவரின் கிருபை’ என்ற சிறுகதை, குழந்தை பெறுவதற்காக அவஸ்தைப்படுகிற பிரேமா என்ற பெண்ணின் கதை. இந்த மூன்று கதைகளும் மருத்துவமனை, மருத்துவர்கள், நர்சுகள், நோயாளிகள் என்று பேசப்படுகிறது.
பெண்கள் ஏன் தீக்குளிக்கிறார்கள்? சிறுநீரகச் செயலிழப்பு ஏன் ஏற்படுகிறது? குழந்தையின்மை பிரச்சினை ஏன் வருகிறது? என்றுதான் கேட்க வேண்டும். ஏன் மருத்துவமனையை வைத்து கதையை எழுதினீர்கள் என்று கேட்கக் கூடாது. மருத்துவமனைகளிலும் மனிதர்கள்தானே இருக்கிறார்கள். நாம் வேறு எங்குமே கேட்டிராத அவலக் குரல்களை மருத்துவமனைகளில்தான் கேட்க முடியும். வேறு எங்குமே பார்த்திராத கண்ணீரை, நெஞ்சின் தவிப்பை மருத்துவமனைகளில் மட்டும்தான் பார்க்க முடியும். சுடுகாட்டில்கூட அவ்வளவு வேதனையை, கண்ணீரைப் பார்க்க முடியாது. என்னைக் கேட்டால் மருத்துவமனைகளைவிட கதை எழுதுவதற்கு சிறந்த இடம் உலகில் வேறு இல்லை. அந்த உலகத்தைப் பற்றி எழுதியதில் எனக்கு மகிழ்ச்சிதான்.
உயிர்நாடி I, உயிர்நாடி II, நறுமணம் மூன்று சிறு கதைகளுமே சிறு விவசாயிகள், பல காரணங்களுக்காக நிலத்தை இழக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அம்பேத்கார் கிராமத்தைவிட்டு வெளியேறுங்கள் என்று சொன்னார். கிராமம் என்பது நிலத்தோடு சம்பந்தப்பட்ட வாழ்க்கை. ஆனால், நீங்கள் நிலத்துடனான வாழ்வைப் பெருமைப்படுத்தி எழுதுவதாகத் தோன்றுகிறது.
அம்பேத்கார் வேறு ஒரு பொருளில் சொன்னார். நான் வேறு ஒரு பொருளில் மூன்று சிறுகதைகளையும் எழுதியிருக்கிறேன். நான்கு வழிச்சாலை, எட்டு வழிச்சாலை, புற வழிச்சாலை, பெரிய தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியின் அடையாளங்களாகப் பார்க்கப்படுகிறது. ஒரு கிராமத்தில் பத்து, இருபது மாடி வீடுகள் வந்துவிட்டாலே பெரிய வளர்ச்சி ஏற்பட்டுவிட்டதாகக் கருதுகிறோம். எது வளர்ச்சி, எது வீழ்ச்சி என்று அறியாததன் விளைவுதான் அப்படிப் பேசவைக்கிறது. கால் காணி, அரை காணி, ஒரு காணி நிலம் வைத்திருந்த மனிதர்களை நான்குவழி, எட்டுவழி, புறவழிச் சாலை அமைப்பதற்காக, பெருநிறுவனங்களுக்காகக் கட்டாயப்படுத்திப் பிடுங்கப்பட்டவர்களின் நிலை என்ன என்று ஆராய்ந்து இதுவரை எழுதியிருக்கிறார்களா? சென்னை போன்ற பெருநகரங்களுக்குக் கிராமப்புறங்களிலிருந்து கூலிகளாக வருகிற மனிதர்கள் எத்தகைய சூழ்நிலையிலிருந்து வருகிறார்கள் என்று நாம் யோசித்திருக்கிறோமா? கதை எழுதுவது என்பது சமுகத்தின் நிகழ்வுகளைப் பதிவு செய்வது, கலையாக. இலக்கியமாக. மொழியின் வழியாக. வறட்டுத்தனமாகக் கொள்கை பேசுவது அல்ல. இலக்கியம் மேடைப் பேச்சல்ல. அரசியல் கட்சியின் கொள்கை விளக்க அறிக்கை அல்ல.
இப்போதும் கிராமத்தில் வாழ வேண்டும், விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?
நிச்சயமாக. என்னுடைய இளமைக் காலம் முழுவதும் கிராமத்தில்தான் கழிந்தது. நிலத்துடன் எனக்கு நெருக்கமான உறவு இருக்கிறது. சோறு இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாது. சோறு நிலத்திலிருந்துதானே வருகிறது. உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்றால் என்ன அர்த்தம்? நமக்குச் சோறு போட்டவரை நன்றியுணர்வோடு நினைக்க வேண்டும் என்பது. அந்த விதத்தில் எனக்கு நிலம் முக்கியம். அதைவிடவும் மனிதன் நிலத்தில்தான் வாழ்கிறான். வாழ முடியும். ஆகாயத்திலோ, கடலிலோ அல்ல. அந்த விதத்திலும் நிலம் முக்கியம். நான் நிலத்தைப் பற்றி எழுதுகிறேனா மருத்துவமனைகளைப் பற்றி எழுதுகிறேனா என்பது முக்கியமல்ல. அது மனித வாழ்க்கையாக இருக்கிறதா. சமூக வாழ்க்கையாக இருக்கிறதா, வாசகனின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதுதான் முக்கியம். எந்த மனிதனின் கண்ணீர் நிறைந்திருக்கிறதோ, அந்த மனிதனின் கண்ணீருக்கான காரணத்தைத் தேடுவதுதான் என் எழுத்து. என் இலக்கியப் படைப்பு.
உங்களுடைய ‘ஆறுமுகம்’ நாவலும், ‘செல்லாத பணம்’ நாவலும் முழுக்க பாண்டிச்சேரியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. நான் பாண்டிச்சேரியில் வாழ்பவன். ஆனாலும், நான் பார்க்காத பல தெருக்களையும், நான் பார்க்காத ஜிப்மர் மருத்துவமனையின் பல வார்டுகளையும் எழுதியிருக்கிறீர்கள். இது எப்படிச் சாத்தியம் ஆயிற்று?
நான் பாண்டிச்சேரிக்கு அருகிலுள்ள புளிச்சப்பள்ளம் என்ற கிராமத்திலிருக்கும் பள்ளியில் நான்காண்டுகள் ஆசிரியராக வேலைப்பார்த்தேன். அப்போதுதான் நான் பாண்டிச்சேரியைப் புரிந்துகொள்ள முயன்றேன். அதாவது படிக்க முயன்றேன். எனக்கு இன்றும் ஆரோவில் நிறுவனத்தின் மீது கோபம் இருக்கிறது. பல விவசாயிகளிடமிருந்த நிலத்தைக் கையகப்படுத்தித்தான் அந்த நிறுவனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்குச் செய்யப்படும் தியானம் யாருக்கானது? தியானத்தினால் பசியைப் போக்க முடியுமா? கண்ணீரைத் துடைக்க முடியுமா? வறுமையை அகற்ற முடியுமா? என்ற கேள்வியில் எழுந்ததுதான் ஆறுமுகம் நாவல்.
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை என்பது கடலூர், விழுப்புரம் மாவட்டத்து மக்கள் அதிகமாக வரக்கூடிய ஒரு இடம். நான் இரண்டு சந்தர்ப்பங்களில் ஜிப்மர் மருத்துவமனைக்குள் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நான் புளிச்சப்பள்ளத்தில் ஆசிரியராகப் பணியாற்றும்போது எங்கள் மாணவி ஒருவர் தீக்குளித்து இறந்துவிட்டார். இரண்டாவதாக எனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண் தீக்குளித்து இறந்துவிட்டார். ஜிப்மருக்குச் சென்ற இரண்டு முறையும், தீக்குளித்து இறந்துபோனவர்களைப் பார்ப்பதற்காகத்தான் போனேன். நான் ஜிப்மர் மருத்துவமனையில் இருந்த நேரத்தில் 90 சதவிகித நேரம், பிணவறைக்கு முன்தான் இருந்தேன். பிணவறைக்கு முன் காத்திருந்த நேரத்தில் உருவானதுதான் ‘செல்லாத பணம்’ நாவல். மருத்துவமனையில் இருக்கிற பிணவறையும் கிராமத்திலிருக்கிற சுடுகாடும்தான் எனக்குச் சிறந்த பள்ளிக்கூடங்கள்.
உங்களுடைய நாவல்களிலும் சரி, சிறுகதைகளிலும் சரி, மகிழ்ச்சி, கொண்டாட்டம், நகைச்சுவை என்பது அரிதாகவே இருக்கிறது. துயரத்தையும் கண்ணீரையுமே அதிகமாக எழுதுகிறீர்களே ஏன்?
என்னுடைய நாவல்களில், சிறுகதைகளில் நகைச்சுவை குறைவாக இருக்கிறது என்று சொல்வது உண்மையல்ல. ‘செடல்’ நாவலில், ‘எங் கதெ’ நாவலில் ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ நாவலிலும்கூட நிறைய நகைச்சுவை மிக்க இடங்கள் இருக்கின்றன. நகைச்சுவை அற்ப விசயங்களில் வெளிப்படுவதில்லை. என்னுடைய மணலூரின் கதை, ஆகாசத்தின் உத்தரவு, பிராது மனு போன்ற சிறுகதைகளைப் படிக்க வேண்டும். நகைச்சுவை உணர்வு சில்லி ஜோக்குகளால் ஏற்படாது.
நாவல்களிலும், சிறுகதைகளிலும் சோகத்தையே எழுத வேண்டும் என்பது என்னுடைய விருப்பத் தேர்வல்ல. சமூகம் மகிழ்ச்சியாக இல்லை. அதனால் படைப்பிலக்கியமும் மகிழ்ச்சியைப் பற்றி பேசவில்லை. ஈழ எழுத்தாளர்களிடம் ஏன் கொண்டாட்டமான கதையை எழுதவில்லை என்று கேட்பீர்களா? இஸ்ரேலில் அப்படிக் கேட்க முடியுமா? இன்று உக்ரேனியில் உள்ள எழுத்தாளர்களிடம் ஏன் கொண்டாட்டமான இலக்கியத்தை எழுதவில்லை என்று கேட்க முடியுமா? அங்கெல்லாம் போர். நம் நாட்டில் போரில்லையே என்று கேட்கலாம். போரைவிடக் கொடிய பாதிப்பை ஏற்படுத்தும் சாதி நம்மிடம் இருக்கிறது. மதவாத சக்தி இருக்கிறது. வறுமை இருக்கிறது. நம்முடைய நாட்டில் 90 சதவிகித மக்கள் ஒவ்வொரு நாளும் துயரத்தோடுதான் தூங்கச் செல்கிறார்கள். சமூகம் எப்படி இருக்கிறதோ. அப்படித்தான் இலக்கியமும் இருக்கும். தமிழ்நாட்டில், இந்தியாவில் நேர்மையான எழுத்தாளனாக இருப்பதே சாகசச் செயல்தான். என்னுடைய 35 ஆண்டுகால எழுத்து வாழ்க்கையை இப்போது திரும்பிப்பார்க்கிறேன். எதன் பொருட்டும் நான் சறுக்கி விழவில்லை. அது போதும்.
நீங்கள் எழுத ஆரம்பித்த காலத்தில் எழுதவந்தவர்கள் எல்லாம் 100, 50 புத்தகங்கள் என்று எழுதிக் குவித்துவிட்டார்கள். ஆனால், நீங்கள் இதுவரை 14 புத்தகங்கள் மட்டுமே எழுதியிருக்கிறீர்கள். உங்களுடைய எழுத்துக்கு உரிய கெளரவம் கிடைத்திருக்கிறதா?
எண்ணிக்கை முக்கியமல்ல. தரம் மட்டுமே முக்கியம். அதே நேரத்தில் உலகத்தரமான இலக்கியப் படைப்பு என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்தந்த மொழியில் சிறந்ததாக இருக்க வேண்டும். நிறைய எழுதிக் குவித்தவர்கள் நல்ல எழுத்தாளர்கள் என்றும் குறைவாக எழுதியவர்கள் நல்ல எழுத்தாளர்கள் இல்லை என்றும் எண்ணுவது தவறு.
ஒரு கிலோ தங்கத்தின் மதிப்பு, ஒரு கிலோ வெள்ளி, வெங்கலத்தின் மதிப்பு எப்படி வேறுபடுகிறதோ, அப்படிதான். அதே மாதிரி, விருது பெற்றவர்கள்தான் தரமான எழுத்தாளர்கள், விருது பெறாதவர்கள் தரமற்ற எழுத்தாளர்கள் என்றும் எண்ணக் கூடாது. விருதுகள் எழுத்தின் வலிமையை நிர்ணயிக்காது. தமிழ்நாட்டில் பட்டிமன்றப் பேச்சாளர்கள்தான் அதிகமாக விருதுகளைப் பெறுகிறார்கள். புகழ் வெளிச்சத்தில் இருக்கிறார்கள். எதன் பொருட்டு சாலமன் பாப்பையாவுக்குப் பத்ம விருது வழங்கப்பட்டது?
என்னுடைய எழுத்துக்கு உரிய மரியாதை கிடைத்துகொண்டுதான் இருக்கிறது. ‘கோவேறு கழுதைகள்’ நாவல் 26 ஆண்டுகளாகத் தொடர்ந்து விற்றுக்கொண்டிருக்கிறது. அதே போன்று என்னுடைய 14 புத்தகங்களும் அச்சில் இருக்கிறது. விற்பனையாகிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து வாசகர்கள் எந்தப் புத்தகத்தை வாங்குகிறார்களோ, எந்தப் புத்தகம்பற்றி அதிகமாகப் பேசுகிறார்களோ, அதுவே சிறந்த புத்தகம். அந்தப் பட்டியலில் என்னுடைய புத்தகங்கள் இருக்கின்றன.
சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, அரசியல் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் என்று 35 ஆண்டுகளுக்கு மேலாக ரவிக்குமார் எழுதிக்கொண்டிருக்கிறார். தலித், போதி, மணற்கேணி என்று பத்திரிகைகளை நடத்திக்கொண்டிருக்கிறார். அவருக்கு எந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. விருது வழங்கப்படவில்லை என்பதற்காக அவர் நல்ல எழுத்தாளர் இல்லை என்று அர்த்தமா? அதே மாதிரி அ. மார்க்ஸ், ஆர். ராமசாமி போன்றவர்களும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கும் என்ன விருது வழங்கப்பட்டிருக்கிறது? எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இதுவரை சாகித்ய அகாதெமி விருது வழங்கப்படவில்லை. வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. யார் நல்ல எழுத்தாளர்? யார் தரமற்ற எழுத்தாளர்? விருதுகள் இலக்கியத் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.
என்னை தலித் எழுத்தாளன் என்று சொல்லக் கூடாது. என்னுடைய எழுத்தை தலித் இலக்கியம் என்று வகைப்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறீர்கள். உங்களுடைய நிலைப்பாடு எந்த அளவுக்குச் சரியானது?
நான் மார்க்சியவாதி, பெண்ணியவாதி, பெரியாரியவாதி, தலித்தியவாதி, அம்பேத்காரியவாதி என்று அடையாளப்படுத்திக்கொள்வது அரசியல் ரீதியாக சரி. ஒரு நாவலாசிரியன் அப்படி அடையாளப்படுத்திக்கொள்வது சரியா? மார்க்சியவாதி, பெண்ணியவாதி என்ற அடையாளத்தோடு செயல்படுவது மனத் தடையை, சிந்தனைத் தடையை ஏற்படுத்தும். நம்மைச் சிந்தனை அடிமைகளாக்கும். பெண்ணியவாதி, தலித்தியவாதியை முழுமையாக ஏற்பதில்லை அல்லது சிந்தனையை ஏற்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வீட்டில் இருந்துகொண்டு மற்றொரு வீட்டைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் இருப்பதற்குச் சமமானது, நான் ஆன்மீக நம்பிக்கை அற்றவன், அதற்காக நான் பக்தி இலக்கியங்களைப் படிக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டேன். மதவாதத்தை நான் ஏற்பதில்லை அதற்காக நான் ராமாயணத்தை, மகாபாரதத்தைப் படிக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டேன். ஓர் எழுத்தாளனுக்குப் பொருள் முதல் வாதமும் தெரிய வேண்டும். பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் என்பதும் தெரிய வேண்டும். பெண்ணியம், தலித்தியம், ஆன்மீகம் எதைப் பேசுகிறது, நடைமுறையில் ஆன்மீகம் என்பது என்னவாக இருக்கிறது? என்பதும் தெரிந்திருக்க வேண்டும். மார்க்சியப் பார்வையில்தான் எழுதுவேன் என்பதும், பெண்ணிய, தலித்தியப் பார்வையில் மட்டும்தான் சிறுகதை, நாவல் எழுதுவேன் என்பதும் என்னை நானே ஒரு சிந்தனைக்கு, ஒரு தத்துவத்திற்கு அடிமையாக்கிக்கொள்வதற்கு சமம். நான் சிந்தனை அடிமையாக இருக்க மாட்டேன். அதனால்தான் நான் என்னை தலித் எழுத்தாளன் என்று சொல்லக் கூடாது, என்னுடைய எழுத்தைத் தலித் எழுத்து என்று சொல்லக் கூடாது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டுவருகிறேன். ஒரு எழுத்தாளன் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். சமூக நிகழ்வுகளைச் சார்பற்ற நிலையில் அணுக வேண்டும்.
உங்களுடைய வாழ்க்கை லட்சியமாக எதைச் சொல்வீர்கள்?
சீக்கிரம் செத்துப்போவதுதான். செத்துவிடுவோம் என்பது தெரிந்தே உயிரோடிருப்பதுதான் சாகசம். அந்த சாகசத்தை ரொம்ப காலத்திற்கு நீட்டித்துக்கொண்டே போக முடியாது. அப்புறம் முடிந்தவரை ஆட்களுடன் பேசுவது, பழகுவது, எவ்வளவு முடியுமோ அவ்வளவு படிப்பது, இயன்றவரை ஊர்சுற்றுவது, மன அரிப்பு, சிந்தனைக் குழப்பம் ஏற்பட்டால் சிறுகதை, நாவல் எழுதுவது, முடிந்தவரை இலக்கியச் சண்டை போடாமல் இருப்பது, இலக்கியச் சர்ச்சையில் சிக்காமல் இருப்பது, யாரிடமும் கெட்டவன் என்று பெயர் எடுக்காமல் இருப்பது, எந்தச் சமயத்திலும் எழுத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் இருப்பது. விருதுக்காக யாருடைய காலிலும் விழாமல் இருப்பது.
உங்களுடைய பெத்தவன், ஆகாசத்தின் உத்தரவு, அம்மா, ஆஃபர், வீடும் கதவும், கடிதம் என்று பல கதைகள் நாடகமாக்கப்பட்டிருக்கின்றன. நாடகமாக்கியவர்கள் எந்த அளவிற்குச் சிறப்பாக நாடகமாக மாற்றியிருந்தார்கள்?
பெத்தவன் கதையை பேரா. ராஜீ தமிழகத்தின் பல பகுதிகளிலும் நாடகமாக நிகழ்த்திக் காட்டினார். விவசாயிகளின் மாநாட்டில் லயோலா கல்லூரி, அமெரிக்கன் கல்லூரிகளில் நாடகம் நிகழ்ந்தபோது பார்வையாளர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆகாசத்தின் உத்தரவு, போலீஸ் ஆகிய கதைகளையும் பேரா. ராஜீ, பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறையைச் சார்ந்த மாணவர்களைக் கொண்டு நாடகமாகப் பல இடங்களில் நிகழ்த்திக்காட்டினார். கூத்துப்பட்டறையைச் சார்ந்த பாஸ்கர் ‘அம்மா’ என்ற கதையையும், கூத்துப்பட்டறையின் சார்பில் ‘கடிதம்’ என்ற கதையையும் நாடகமாக்கினார்கள். பிரசன்ன ராமசாமி, ‘வீடும் கதவும்’, ‘ஆஃபர்’ ‘நன்மாறன் கோட்டைக் கதை’, ‘நறுமணம்’ ஆகிய கதைகளை மையமாகக் கொண்டு ‘கதையல்ல வாழ்க்கை’ என்ற பெயரில் நாடகமாக்கியுள்ளார். ‘போலீஸ்’ என்ற கதையை ‘எல்லா உயிர்க்கும்’ என்ற பெயரில் நாடகமாக்கியுள்ளார். எனக்குத் தெரிந்த வகையில் எல்லாருமே நல்ல விதமாகத்தான் நாடகமாக்கியிருந்தார்கள். நான் எதிலும் தலையிடுவதில்லை, அது அவர்களுடைய வடிவம் அதில் நான் தலையிடக் கூடாது. கதைகள் ஏற்படுத்திய தாக்கத்தில்தான் அவர்கள் நாடகப் பிரதியாக மாற்றுகிறார்கள், ரசனையின் அடிப்படையில் அவர்களுடைய நோக்கமும், ரசனையும், செயல்பாடும் உண்மை. அப்படி இருக்கும்போது அவர்களுடைய செயல்பாட்டில் நான் ஒருபோதும் தலையிட்டதில்லை, குறுக்கிட்டதில்லை அவ்வாறு குறுக்கீடு செய்வது நாகரீகமற்ற செயல்.
உங்களுடைய நாவல்களில், சிறுகதைகளில் எவையெல்லாம் பிரெயில் எழுத்தில் இருக்கிறது? பார்வை குறைபாடுடைய வாசகர்கள் உங்களுடைய எழுத்துகளை எந்த அளவிற்குப் படிக்கிறார்கள்? உங்களுடைய எழுத்துகள் குறித்து அவர்களுடைய பார்வை என்னவாக இருக்கிறது?
‘கோவேறு கழுதைகள்’, ‘செடல்’, ‘ஆறுமுகம்’, ‘எங் கதெ’ போன்ற நாவல்களும் ‘ஈசனருள்’ உள்ளிட்ட இருபதுக்கும் அதிகமான சிறுகதைகளும் பிரெயில் எழுத்தில் இருக்கிறது. மதுரையில் இருக்கக்கூடிய பார்வையற்றோர் நலச்சங்கம் வெளியிட்டது. அச்சில் வெளிவந்த ஒன்றிரண்டு மாதங்களிலேயே பிரெயிலியில் வெளிவந்துவிடும், உண்மையைச் சொன்னால் பார்வை திறன்கொண்டவர்கள் படிப்பதைவிட பார்வை குறைபாடு உடையவர்கள்தான் அதிகம் படிக்கிறார்கள். ஆச்சரியப்படும்படிதான் அவர்கள் போனில் பேசுவார்கள். என்னுடைய நாவல்களும், சிறுகதைகளும் பிரெயிலியில் வருவதற்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் ந. ரமணி.
நீங்கள் அதிகமாக விரும்பிப் படிக்கக்கூடிய எழுத்தாளர்கள் யார் யார்? எந்த மாதிரியான புத்தகங்களைப் படிக்கிறீர்கள்?
சில எழுத்தாளர்களுடைய புத்தகங்கள் வெளிவந்த உடனே வாங்கிப் படித்துவிடுவேன். நான் கட்டுரை நூல்களை அதிகமாகப் படிக்க மாட்டேன். நாவல்கள், சிறுகதைகள், கவிதை, மொழிபெயர்ப்பு நூல்களைத்தான் அதிகம் படிப்பேன். விருப்பமான எழுத்தாளர்கள், விருப்பமில்லாத எழுத்தாளர்கள் என்று நான் யாரையும் கூற மாட்டேன். ஓர் எழுத்தாளரின் ஒரு சிறுகதை, ஒரு நாவல் சரியில்லை என்பதால், அவர் மோசமான எழுத்தாளர் என்றாகிவிடாது. எல்லா விதமான புத்தகங்களையும் படிப்பதுதான் எழுத்தாளருக்கும் நல்லது. வாசகருக்கும் நல்லது. அம்பேத்காரின் எழுத்துகளை மார்க்சிய எழுத்தாளர்கள் மோற்கோளுக்காக மட்டுமே படிப்பார்கள். அம்பேத்காரியவாதிகள் மார்க்சியத்தை முழுமையாகப் படிப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதே மாதிரிதான் பெண்ணியவாதிகள், தலித்தியவாதிகள், பெரியாரியவாதிகள், நவீன இலக்கியவாதிகள் எல்லாம் ஒரு எல்லைக்கோட்டிலேயே நின்றுவிடுகிறார்கள். நவீன இலக்கியவாதிகள் திராவிட இயக்க இலக்கியத்தைப் படிக்க மாட்டார்கள். எனக்குத் தெரிந்தது, எனக்குப் பிடித்தமானது மட்டும்தான் உன்னதமானது உலகிலேயே சிறந்தது என்ற எண்ணம் எல்லாரிடமும் இருக்கிறது. அந்த எண்ணத்தை விட்டவன்தான் சிறந்த வாசகன், சிறந்த எழுத்தாளன்.
மொழிபெயர்க்கப்படும் எழுத்துகள், தரமான, நம்பகமான மொழிபெயர்ப்புகளாக இருக்கின்றனவா?
எழுத்தாளனைவிட மொழிபெயர்ப்பாளனுக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. இரண்டு விதமான கலாச்சார, பண்பாட்டுக் கூறுகளையும் குறித்த தெளிவான பார்வை வேண்டும். நல்ல மொழிபெயர்ப்புகளும் வருகின்றன. மொழிபெயர்ப்பாளர் திறமை வாய்ந்தவராக இருந்தால் மோசமான படைப்பையும் தரமான படைப்பாக மாற்ற முடியும். மோசமான மொழிபெயர்ப்பாளர் தரமான படைப்பையும் மோசமாக்குவார். இரண்டுக்கும் நிறைய உதாரணங்கள் தமிழில் இருக்கின்றன. நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் என்று ஒரு பட்டியலையும், மோசமான மொழிபெயர்ப்பாளர்கள் என்று ஒரு பட்டியலையும் என்னால் தர முடியும். பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கிறவர்கள் இருக்கிறார்கள். நம்முடைய பல தமிழ் எழுத்தாளர்கள் தங்களுடைய நூல்கள் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்ப்பாகி இருக்கிறது என்று சொல்லிப் பெருமைப்படுகிறார்கள். அது தரமான மொழிபெயர்ப்பில் வந்து இருக்கிறதா என்று அக்கறை கொள்வதில்லை.
இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?
‘நெஞ்சறுப்பு’ என்ற ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘கடவுளைக் கைவிட்டவன்’ என்ற சிறுகதையை எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ என்ற நாவலின் இரண்டாவது பாகம் எழுதலாம் என்ற திட்டம் இருக்கிறது.
நீங்கள் எழுதவந்த காலத்தில் இருந்த இலக்கிய வகைமைக்கும் இப்போது இருக்கிற இலக்கிய வகைமைக்கும் வித்தியாசம் இருப்பதாகக் கருதுகிறீர்களா?
நிறைய இருக்கிறது. மார்க்சிய எழுத்து, பெண்ணிய, தலித்திய, விளிம்பு நிலை எழுத்துகள் என்று உத்வேகத்துடன் செயல்பட்ட காலம் இருந்தது. இப்போது அது இல்லை. முன்பு சமூக மாற்றம் என்ற லட்சிய நோக்கம் எழுத்தாளர்களிடம் இருந்தது. அது இப்போது இல்லை. முகநூலில் பதிவிடுவது மட்டுமே இப்போது நோக்கமாக இருக்கிறது. நம்முடைய எழுத்தாளர்கள் முகநூல் பதிவாளர்களாக மாறிவிட்டார்கள். முக்கியமான கவி ஆளுமைகள் என்று போற்றப்பட்டவர்கள்கூட இன்று முகநூல் கவிஞர்களாக மாறிவிட்டார்கள். எழுத்தாளர்கள் இப்போது பதிப்பாளர்களாகவும் மாறிவிட்டார்கள், புதிய இலக்கியப் போக்கு என்பது இல்லை. சமூக மாற்றம் என்ற பேச்சே இல்லை. தற்போது இலக்கியப் பேச்சு, விவாதம், விமர்சனம் என்பதெல்லாம் முகநூலில் ஒருவருக்கொருவர் காறித்துப்பிக்கொள்வதாக மட்டுமே இருக்கிறது.
புதிதாக எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
நிறைய எழுதுங்கள், நிறைய படியுங்கள், நிறைய பேசாதீர்கள், எழுத்து என்பது இலக்கியம் என்பது மொழி என்பது தற்காலத்துக்கானது என்று எண்ணாதீர்கள்.
உங்களுடைய 14 நூல்களில் வாசகர்களுக்குப் பரிந்துரைக்கும் முதல் புத்தகம் எதுவாக இருக்கும்?
14 நூல்களையும்தான் சொல்வேன். நீங்கள் கேட்டதற்காக ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ என்ற நாவலைச் சொல்வேன்.
உங்களுடைய நாவல்களிலேயே, உங்களால் திரும்பவும் எழுத முடியாது என்று எதைச் சொல்வீர்கள்?
‘கோவேறு கழுதைகள்’, ‘செடல்’. தமிழ், இலக்கியப் பரப்பில் அதிசயமான நாவல் செடல், அதே மாதிரி ‘எங் கதெ’. அப்படியொரு எழுத்து முயற்சி தமிழில் மேற்கொள்ளப்படவில்லை.
இதுவரை நீங்கள் எந்த இலக்கிய அமைப்புடனும் சேர்ந்திருந்ததில்லை, எந்த ஒரு இலக்கியக் குழுவுடனும், இலக்கியப் பத்திரிகையுடனும் அடையாளப்படுத்திக் கொண்டதில்லையே ஏன்?
ஓர் எழுத்தாளனுக்கு நீங்கள் சொன்னதெல்லாம் அவசியமற்றவை. அமைப்புக்கு அடையாளத்துக்கு எதிரானவன் எழுத்தாளன். மனதை, சிந்தனையை, எழுத்தைச் சுருங்கிப்போகச் செய்யும் எதையும் நான் செய்வதில்லை. என்னுடைய எழுத்து வாழ்க்கையில் நான் எந்த இடத்திலும் சமரசம் செய்துகொண்டதில்லை. யாருக்காகவும் எதன் பொருட்டும், இதுதான் என் எழுத்தின் மேன்மையான பகுதி என்று நான் கருதுகிறேன்.
இப்படிச் சொல்கிற நீங்கள்தான் “நான் திராவிட இயக்க எழுத்தாளன், தி.மு.க.க்காரன்” என்று பல இடங்களிலும் பேசி இருக்கிறீர்கள். அது எந்த விதத்தில் சரி?
நீங்கள் சொல்வது உண்மைதான். மறுக்கவில்லை. நான் விரும்புகிற அரசியல் நிலைப்பாட்டை ஒருபோதும் மறைத்ததில்லை. என்னுடைய எழுத்தில் அரசியல் இல்லை என்றும் சொன்னதில்லை. தமிழ்நாட்டை சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள் என்று பல பரம்பரையினர் ஆண்டுள்ளனர். பொற்காலம் என்று சில பரம்பரையினரின் ஆட்சிக் காலம் சொல்லப்படுகிறது. வரலாற்றில், நான் முதன் முதலாகப் படிக்க வேண்டும், மனிதனாக வாழ வேண்டும் என்று சொன்னது. மற்றவர்களைப் போல் நானும் வாழ வேண்டும் என்று சொன்னது, இட ஒதுக்கீடு முறையைத் தமிழ்நாட்டில் கொண்டுவந்தது யார்? நீதிக்கட்சி, அடுத்ததாக திராவிடர் கழகம், அதற்கடுத்து தி.மு.க.தான் பேசிக்கொண்டிருக்கிறது. அதனால்தான் நான் திராவிட இயக்க எழுத்தாளன், தி.மு.க.காரன் என்று சொல்கிறேன். இந்த இடத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்களும் எனக்காகப் போராடின என்பதைச் சொல்ல மறந்தால் நான் நன்றி கெட்டவன் என்று அர்த்தம். நான் திராவிட இயக்க எழுத்தாளன், தி.மு.க.க்காரன் என்றாலும் நான் என் எழுத்தில் சமரசம் செய்துகொண்டதில்லை என்பது நட்டுக்கே தெரியும். நான் யாருக்காகவும், எந்தச் சூழ்நிலையிலும், எதன் பொருட்டும் எழுத்தில் சமரசம் செய்துகொண்டதில்லை. இனி மேலும் செய்துகொள்ள மாட்டேன்.
உங்களுடைய நாவல்களில் சிறுகதைகளில் பெரும்பாலும் ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் என்றுதான் நிறைந்திருக்கிறார்கள். இதை திட்டமிட்டே செய்கிறீர்களா? படித்தவர்கள், மேல்தட்டு வர்க்கத்தினர் உங்கள் எழுத்தில் அதிகம் இடம்பெறுவதில்லை. அது முறையாகத் தெரியவில்லையா?
நீங்கள் என்னுடைய சிறுகதைகளை, நாவல்களைச் சரியாகப் படிக்கவில்லை என்று தெரிகிறது. ‘எங் கதெ’ நாவலில் வரும் கமலா, சி.இ.ஒ. அம்பலவாணன் என்று எல்லாருமே படித்தவர்கள்தான். ‘வீடும் கதவும்’ கதையில் வரக்கூடிய இரண்டு பெண்களுமே நன்றாகப் படித்தவர்கள்தான். ‘ஆஃபர்’ கதையில் வரக்கூடியவர்கள் படித்தவர்கள்தான். ‘செல்லாத பணம்’ நாவலில் வரும் பல பாத்திரங்கள் திறமையானவர்கள்தான் படித்தவர்கள்தான். ஆகவே, படிக்காதவர்களை மட்டுமே நான் எழுதுகிறேன் என்பது உண்மையல்ல. ‘கோவேறு கழுதைகள்’, ‘செடல்’, ‘செல்லாத பணம்’ நாவலில் வரக்கூடிய பல பாத்திரங்கள் உயர் வகுப்பைச் சார்ந்தவர்களே. ‘ஈசனருள்’ கதையில் வரக்கூடிய சந்திரோதயம் மேல் இனத்துப் பெண்தான். நான் கதை எழுதும்போது சாதி பார்த்து கதை எழுதுவதில்லை. வர்க்கம் பார்த்து கதை எழுதுவதில்லை. மேல்தட்டு வர்க்கமோ, கீழ்த்தட்டு வர்க்கமோ - மனிதர்கள் வாழும் சூழ்நிலையைத்தான் நான் கதையாக எழுதுகிறேன். குறிப்பாக, மனித மனங்களின் காயங்களை, குரூரங்களை, கண்ணீரைத்தான் நான் கதையாக்குகிறேன். நாவலாக்குகிறேன். நீங்கள் சொல்கிற பொருளில் நான் இதுவரை ஒரு சிறுகதையோ ஒரு நாவலையோ எழுதியதில்லை.
புத்தம் பேசுகிறது
இதழ் : ஏப்ரல் 2022
பிரதிபா ஜெயசந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக