செங்குறிச்சி காவல் நிலையத்திற்கு கிழக்குப்
பக்கத்திலிருந்த அரசமர நிழலில் வசந்தாவும், அவளுடைய தங்கை
கண்ணகியும் உட்கார்ந்திருந்தனர். தலையைக் கவிழ்த்தபடி உட்கார்ந்திருந்த
வசந்தா உடைந்துபோன குரலில் “புள்ளயயும் சாவ கொடுத்திட்டு இப்பிடி வந்து
குந்தியிருக்கனே.
கடவுளே” என்று சொல்லும்போதே
அவளுக்கு கண்களில் கண்ணீர் நிறைந்துவிட்டது. வசந்தா அழுததைப்
பார்த்ததும் கண்ணகிக்கும் அழுகை வந்துவிட்டது. இரண்டு பேரும்
ஒருவரை பார்த்து ஒருவர் அழுதுகொண்டிருக்கும்போது காவல் நிலையத்தை நோக்கி வக்கீல் உடை
போட்டிருந்தவர்கள் ஐந்து பேரும், சாதாரண உடையிலிருந்த எட்டு பேரும், ஒரு பெண்ணும்
வருவதைப் பார்த்தாள் கண்ணகி. வந்தவர்கள் காவல் நிலையத்திற்கு எதிரில்
இருந்த வேப்ப மர நிழலில் நின்றுகொண்டனர். வக்கீல் உடையிலிருந்த
ஒரு ஆள் மட்டும் காவல் நிலையத்திற்குள் போனதைப் பார்த்து சந்தேகப்பட்ட கண்ணகி “அங்க நிக்கிற
ஆளுவோதானா?”
என்று
கேட்டாள்.
தலையைத்
தூக்கிப் பார்த்த வசந்தா “ஆமாம்” என்பதுபோல் தலையை
மட்டும் ஆட்டினாள்.
“வாத்தி யாரு?” என்று கண்ணகி
கேட்டாள்.
“வெடவெடன்னு நிக்கிறான் பாரு செவப்பா. அவன்தான்” என்று வெறுப்பான
குரலில் சொன்னாள் வசந்தா.
“கூட நிக்கிறவங்க?”‘
“வக்கீல்கள தவிர மத்தவனுவோ எல்லாம் பள்ளிக்கூடத்தில்
வேல செய்யுற வாத்திவோதான்” என்று பல்லைக் கடித்தப்படி சொன்னாள். பிறகு “திருட்டுப் பயலுக்கு
சப்போட்டுக்கு வந்திருக்காணுவ பாரு. இவனுவோ எல்லாம் வாத்தியாரா?” என்று கேட்டாள்.
“பேரு என்னா?”
“செல்வதுர.”
“இரு வரன்” என்று சொல்லிவிட்டு
எழுந்த கண்ணகி நேராக வேப்பமர நிழலில் நின்றுகொண்டிருந்த ஆட்களிடம் வந்தாள். வசந்தா அடையாளம்
காட்டியிருந்த ஆளிடம் “கொஞ்சம் பேசணும். இப்படி வா” என்று கூப்பிட்டாள். திடீரென்று ஒரு
பெண் வந்து எதற்காக தன்னை கூப்பிடுகிறாள் என்று யோசித்த செல்வதுரை பேசாமல் நின்றுகொண்டிருந்தான். பதில் பேசாமல்
நின்றுகொண்டிருந்த செல்வதுரையைப் பார்க்கப் பார்க்க கண்ணகிக்கு கண்மண் தெரியாத அளவுக்குக்
கோபம் வந்துவிட்டது. எடுத்த எடுப்பில் ”நீ ஆம்பளயாடா? வாத்தியாராடா? கல்யாணம் கட்டி
ரெண்டு மூணு புள்ள பெத்திருப்பல்ல? ஒம் புள்ளய இந்த மாதிரி செய்வியாடா? பால் குடி மாறாத
புள்ளய கொன்னுப்புட்டு பெரிய இவன் மாதிரி வந்து நிக்குற?” என்று கேட்ட
பிறகுதான் செல்வதுரைக்கும், அவனுடன் வந்திருந்த ஆட்களுக்கும் வசந்தாவுடன்
வந்திருக்கும் பெண் என்று கண்ணகியை தெரிந்தது. செல்வதுரை எதுவும்
பேசவில்லை.
அவனுக்குப்
பக்கத்தில் நின்றுகொண்டிருந்த குண்டாக இருந்த வக்கீல் “ஸ்டேசன் முன்னாடி
நின்னுக்கிட்டு என்னம்மா பேசற?” என்று கேட்டான். வக்கீல் கேட்டதற்கு
பதில் சொல்லாமல்,
பக்கத்தில்
நின்றுகொண்டிருந்த பெண்ணைப் பார்த்தாள். அவள்தான் செல்வதுரையின்
மனைவியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு “ஒம் பொண்டாட்டி சென புடிச்ச பசு மாடு மாதிரி
தளதளன்னுதான இருக்கா? அவகிட்டப் போயி ஒன்னோட வீரத்த காட்ட வேண்டியதுதான? பத்து வயசு பையன்கிட்டத்தான்
காட்டுவியா?
அரிப்பெடுத்தா
தரயில வச்சி தேய்க்க வேண்டியதுதான நாய.” என்று சொல்லி கண்ணகி
திட்ட ஆரம்பித்ததும் அந்த இடத்திலிருந்த ஆட்கள் எல்லாம் ஒரே நேரத்தில் சண்டைக்குப்
பாய்ந்தனர்.
கண்ணகி
பயப்படவில்லை.
“கொலகாரனுக்கு
சப்போட்டு பண்றிங்களா?” என்று கேட்டு எல்லாரையும் திட்ட ஆரம்பித்தாள். அப்போது மோட்டார்
பைக்கில் வந்து இறங்கிய வக்கீல் அன்புசெல்வன் “எந்த எடத்தில
என்னா பேசறதின்னு இல்லையா?” என்று கேட்டு கண்ணகியை முறைத்தான். அப்போதும் கண்ணகியின்
வாய் அடங்கவில்லை.
“எட்ட வாம்மா” என்று சொல்லி
கட்டாயப்படுத்தி கண்ணகியை இழுத்துக்கொண்டு வசந்தாவிடம் வந்தான் அன்புசெல்வன்.
“டேசனவுட்டு வெளிய வாடா. ஒன்னோட அதிலியே
ஒதைக்கிறன்.
ஊரு
பக்கம் வா.
ஒம்
மூஞ்சியில பன்னி பீய கரச்சி ஊத்துறன்” என்று சொல்லி சத்தமாக
திட்டிக்கொண்டிந்தாள்.
“ஸ்டேசன் பக்கத்தில நின்னுக்கிட்டு இப்படியெல்லாம்
பேசக் கூடாது”
என்று
அன்புசெல்வன் சொன்னதும் கண்ணகிக்கு தலைகால் புரியாத அளவிற்கு கோபம் வந்துவிட்டது. “‘எங்களுக்காக
வந்த வக்கீல்தான நீ? என்னமோ அவனுங்களுக்காக வந்த மாதிரி பேசுற?” என்று கேட்டாள்.
“ஸ்டேசன் பக்கத்தில நின்னுகிட்டு கெட்ட வாத்தயில
பேசலாமா?”
என்று
அன்புசெல்வன் கேட்டதற்கு கண்ணகி பதில் சொல்லவில்லை. அவளுடைய கவனமெல்லாம்
செல்வதுரையை திட்டுவதில்தான் இருந்தது.
“அரச்சி வச்ச உளுந்து மாவு மாதிரி அவன் பொண்டாட்டி
பொதபொதன்னு உப்பிப் போயிதான இருக்கா? அவகிட்டப் போயி அவனோட
ஆம்பள தனத்த காட்ட வேண்டியதுதான? அறியா பையன்கிட்டத்தான் காட்டுவானா? அவன் ஆம்பள. நான் பொம்பள. எங்கிட்ட வந்து
அவனோட வீரத்த காட்ட சொல்லு பாக்கலாம். அவன் கொட்டய பஞ்சாக்குறனா
இல்லயா பாரு”
என்று
கேட்டு சவால் விட்டாள்.
“பேசாம இரும்மா. பேசாம இரும்மா.” என்று பலமுறை
கெஞ்சிப் பார்த்தான் அன்புசெல்வன். அப்படியும் கண்ணகியின் வாய் அடங்கவில்லை. டீ கடைக்குப்
போய்விட்டு கண்ணகியின் புருசன் ராஜவேலு, மேலக்கோட்டை பஞ்சாயத்து
தலைவர் ரமணி,
மேலக்கோட்டை
சக்திவேல்,
முருகன், சொக்கலிங்கம்
என்று வந்து அன்பு செல்வனை சூழ்ந்துகொண்டு நின்றனர்.
“இன்ஸ்பெக்ட்டரு இன்னும் ஏன் வல்ல?” என்று ரமணி கேட்டான்.
“வரன்னு சொன்னாரு. இன்னும் வரல. வந்துடுவாருன்னு
நெனைக்கிறன்.”
“காலயில பத்து மணிக்கு வந்தம். மணி ஒன்னுக்கு
மேல ஆயிடிச்சி.
இனிமே
சாப்புட்டுட்டுத்தான் வருவாரு” என்று ரமணி சொன்னதைக் காதில் வாங்காத அன்புசெல்வன் “இருங்க வரன்” என்று சொல்லிவிட்டு
போய் செல்வதுரையுடன் நின்றுகொண்டிருந்த வக்கீல்களிடம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த
கண்ணகி
“என்னா
வக்கீல புடிச்சியிருக்க?” என்று வசந்தாவை முறைத்தாள். பிறகு விட்டுப்போன
காரியத்தை செய்வதுபோல் “நான் மட்டும அன்னிக்கி இருந்திருந்தா அவன் சாமான்ல
கல்லப் போட்டு நசுக்கியிருப்பன். அவன் மூஞ்சியப் பாத்தா வாத்தியாரு மாதிரி
தெரியல.
மாமா
பய மாதிரிதான் தெரியுறான்” என்று சொல்லி செல்வதுரையைத் திட்டிகொண்டிருந்தாள்.
பம்பாயிலிருந்து
இன்று காலைதான் கண்ணகியும் அவளுடைய புருசன் ராஜவேலுவும் வந்தனர். வந்ததிலிருந்து “அவன எதுக்கு
சும்மா வுட்ட?”
என்ற
கேள்வியைத்தான் அடிக்கடி வசந்தாவிடம் கேட்டுக்கொண்டிருந்தாள். இப்போதும் அதே
கேள்வியைத்தான் கேட்டாள். வசந்தாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
விஜயகுமார் டவுன்
பஸ்ஸில் அடிப்பட்டுவிட்டான், ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு
போயிருக்கிறார்கள் என்று ஏரிக்கரையில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் மண் எடுத்துக்கொண்டிருக்கும்போது
பள்ளிக்கூட ஆசிரியர் கணேசமூர்த்தி வந்து சொன்னார். தகவல் சொல்லவந்த
ஆசிரியரின் பைக்கில்தான் மருத்துவமனைக்கு வந்தாள். பள்ளிக்கூட கேட்டைத்
தாண்டி வேகமாக ஓடிவந்து தானாகத்தான் டவுன் பஸ்ஸில் மோதிவிட்டான். ஆம்புலன்ஸில்
ஏற்றிக்கொண்டு வரும்போதே காதிலும், மூக்கிலும் ரத்தம் வந்து இறந்துவிட்டான். ஆம்புலன்ஸில்
ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்துவிட்டதால், போஸ்ட்மார்டம்
செய்துதான் பிணத்தை தருவார்கள் என்று விஜயகுமார் படித்துக்கொண்டிருந்த பள்ளிக்கூட ஆசிரியர்
ஒருவர் சொன்னார்.
ஆட்களை
இறக்கிவிட்டுக்கொண்டிருந்த பஸ்ஸில் பையன் தானாக ஓடிப்போய் மோதியதால், பஸ் டிரைவர்
மீது வழக்குப் போட முடியவில்லை என்று ஒரு ஆசிரியர் சொன்னார். “பஸ்ஸில் மாட்டி
செத்திருந்தால் நஷ்ட ஈடாக பணம் வரும். அதுக்கும் வழியில்லாம
போச்சி”
என்று
கணேசமூர்த்தி சொன்னார். ஆசிரியர்கள் சொன்னதையும், பள்ளி நேரத்தில்
பையனை எதற்காக வெளியே அனுப்பினீர்கள் என்று கேட்டு ஊரார்கள் ஆசிரியர்களை
குறை சொன்னதையும் கேட்காமல் வசந்தா நெஞ்சிலும், தலையிலும் அடித்துக்கொண்டு
அழுது மாய்ந்துபோனாள்.
மருத்துவமனையிலிருந்து
பிணத்தை வாங்கும்போது சாயங்காலம் ஆறு மணி ஆகிவிட்டது. பிணத்தை ஊருக்கு
கொண்டு வந்த,
கொஞ்ச
நேரத்திலியே எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். “பொணத்த தூக்கப்
போறாங்க.
கடசியா
வந்து முகத்த பாக்குறவங்க பாத்துக்கலாம்” என்று வண்ணான் சொல்லும்வரை, என்ன நடக்கிறது, எப்படி நடக்கிறது, யார் என்ன செய்கிறார்கள்
என்பதை புரிந்துகொள்ள வசந்தாவுக்கு நிதானமில்லை. “எம் புள்ள எங்க? எம் புள்ள எங்க?” என்று கேட்டு
முகத்திலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தாள். இரண்டு முறை
அவளுக்கு மயக்கம் வந்துவிட்டது.
செல்வதுரை ஆசிரியர்
விஜயகுமாரை பள்ளிக்கூட கழிவறையில் வைத்து ‘தப்பு‘ செய்தார். கழிவறையிலிருந்து
தப்பித்து அழுதுகொண்டே வெளியே வந்து, வகுப்பறைக்கு போகாமல்
வீட்டிற்குப் போவதற்காக
நடந்தான். வீட்டில்போய்
சொல்லி விடுவானோ என்ற அச்சத்தில் “கிளாசுக்கு போடா” என்று சொல்லி
துரத்திக்கொண்டே செல்வதுரை வந்தார். அடித்துவிடுவாரோ என்ற பயத்தில் விஜயகுமார்
பள்ளிக்கூடத்தை விட்டு வேகமாக வெளியே ஓடிவரும்போது டவுன் பஸ்ஸில் மோதிக்கொண்டான் என்ற
தகவல் பள்ளிக்கூடத்து பிள்ளைகளின் மூலம் மறுநாள் காலையில்தான் தெரிந்தது. நிறைய பையன்களை
வீணாக்கியிருக்கிறார் என்ற தகவலும் ஊருக்குள் பரவியது. அதன் பிறகுதான்
வசந்தா ஊர் ஆட்களிடம் விஷயத்தை சொன்னாள். ஊர் ஆட்களை அழைத்துக்கொண்டு
பள்ளிக்கூடத்திற்குப் போனாள். செல்வதுரை விடுமுறை என்று தெரிந்தது. இருபது முப்பது ஆட்களை அழைத்துக்கெண்டு செல்வதுரையின்
ஊருக்குப் போனாள். வீட்டிலிருந்த செல்வதுரையை நெட்டித்தள்ளி அடித்து
கெட்ட வார்த்தைச் சொல்லி அசிங்க அசிங்கமாகத் திட்டினாள். அவளோடு போயிருந்த
மேலக்கோட்டை ஆட்களும் அடித்தார்கள். திட்டினார்கள். செல்வதுரையின்
ஊர் ஆட்கள்
“எப்பிடி
எங்க ஊரு ஆள வந்து அடிப்பிங்க?” என்று கேட்டு சண்டைக்கு வந்தார்கள். இரண்டு ஊர்க்காரர்களுக்கும்
கைகலப்பாகிவிட்டது. அன்று சாயங்காலம் காவல் நிலையத்தில் புகார் மனு
கொடுத்தாள்.
புகார்
மனு கொடுத்து இன்றோடு ஐந்து நாட்களாகிவிட்டது. “இன்ஸ்பெக்ட்டரு
வெளியில் போயிட்டாரு. காலயில வாங்க. சாயங்காலம் வாங்க” என்று நான்கு
நாட்களாக இழுத்தடித்தார்கள். இன்றும் அப்படித்தான் சொல்லப் போகிறார்களோ
என்ற கவலையில் உட்கார்ந்துகொண்டிருந்தாள் வசந்தா.
அரச மரத்திலிருந்த காகம் ஒன்று ஓயாமல் கத்திக்கொண்டிருந்ததை
பார்த்து
“எதுக்கு
ஒத்த காகம் வெயில் நேரத்தில கத்துதின்னு தெரியலியே. என்னா கெட்ட
சேதி வரப் போவுதோ” என்று சொன்னாள். அடுத்த நொடியே
மன சலிப்புடன்
“இனிமே
என் வீட்டில எப்படியாப்பட்ட இடி விழுந்தாலும் என்ன ஆயிடப் போவுது? நடக்க வேண்டியது
எல்லாம்தான் நடந்துபோச்சே” என்று அழுதாள்.
“ஒரு எரநூறு கொடு” என்று முருகன்
கேட்டான்.
“எதுக்கு?” என்பதுபோல் வசந்தா
முருகனைப் பார்த்தாள். “எந்த எடத்தில வந்து எப்படி குந்திருக்கன்னு தெரிய
வாணாம்?,
சாவு
வீட்டுலயும் சாராயம் குடிக்க பணம் கேக்கறதுக்கு எப்படித்தான் மனசு வருமோ” என்று நினைத்தாலும்
ராஜவேலுவிடம் பணத்தைக் கொடுக்க சொன்னாள். முருகன் மீதுதான் கோபம்
என்றில்லை.
மேலக்கோட்டையிலிருந்து
வந்திருந்த ஐந்து பேரின் மீதுமே அவளுக்குக் கோபம் இருந்தது. அதே நேரத்தில் ஐந்து பேராவது வந்தார்களே என்ற
எண்ணமும் இருந்தது. வந்திருக்கிற ஐந்து பேரை அழைத்துக்கொண்டு வருவதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும்
குறைந்தது மூன்று நான்கு முறையாவது நடந்திருப்பாள். “பொழப்ப வுட்டுட்டு
தெனம் டேசன்ல வந்து குந்தியிருக்க முடியுமா?” என்று ஒரு சிலர்
கேட்டனர்.
ஒரு
சிலர்
‘போ
வரன்’
என்று
சொன்னதோடு சரி.
தலைவர்
வீட்டுக்குத்தான் அதிகம் நடந்தாள். காவல் நிலையத்திற்கு நான்கு நாட்களாக வந்துகொண்டிருக்கும்
ஆட்களுக்கு காலை டிபன், மதிய சாப்பாடு, டீ, சிகரெட், பிராந்திக்கு
பணம் என்று கொடுத்தாள். அதோடு தலைக்கு ஐநூறு என்று ஒவ்வொரு நாளும் கொடுத்தாலும், காவல் நிலையத்திற்கு
வந்த ஒரு மணிநேரம் வரையிலும்தான் பேசாமல் இருப்பார்கள். பிறகு “நேரமாவுது நேரமாவுது” என்று சொல்லி
புலம்ப ஆரம்பிப்பார்கள். அப்படி புலம்ப ஆரம்பிக்கும்போதெல்லாம் “போயி டீ குடிச்சிட்டு வாங்க ” என்று சொல்லி
நூறு ரூபாய் கொடுப்பாள். சிறுநீரக கோளாறால் வயிறு வீங்கிப்போய்
இரண்டு மாதத்திற்கு முன் இறந்துபோன தன்னுடைய கணவன் குருமூர்த்தி உயிருடன் இருந்திருந்தால்
தனியாக வந்து உட்கார்ந்திருக்க வேண்டிய நிலை வந்திருக்காதே என்று நினைத்தாள். குருமூர்த்தியை
நினைத்து அழுதாள். குருமூர்த்திக்கு அண்ணன் தம்பி, அக்கா தங்கை
என்று யாருமில்லை. வசந்தாவுக்கு ஒரே தங்கை கண்ணகி மட்டும்தான். தனியாளாக இருக்கிறோமே
என்று வருத்தப்பட்டு அழுதாள். அப்போது “காலயிலிருந்து
வந்து குந்தியிருக்கம் போலீசு ஏன் நம்பள கூப்பிட்டு விசாரிக்கல?” என்று கண்ணகி
கேட்டாள்.
லயில வா’னு சொல்லுவாங்க. இன்னவர ‘என்னா ஏது’னு ஒரு வாத்த கேக்கல. அம்மாம் பணத்த கொடுத்திருப்பான் கொலகார பய. எம் புள்ளய கொன்னுப்புட்டு வந்து எப்பிடி நிக்குறான் பாரு. திருட்டுப் பய” என்று சொல்லி செல்வதுரையை திட்டினாள் வசந்தா.
“ஊருக்குப் போயிட்டு நாளக்கி வரலாமா?” என்று ரமணி கேட்டான். அதற்கு எந்தப்
பதிலும் சொல்லாமல் இருந்தாள் வசந்தா. முகத்தைச் சுளித்துக்கொண்டே “இன்னிக்கும்
வேலக்கி ஆவும்னு தெரியல. விசயத்த ஆறப் போடுறாங்கன்னு நெனைக்கிறன்” என்று சொன்னான். ரமணிக்குப் பக்கத்தில்
நின்றுகொண்டிருந்த சக்திவேல் “நம்பளுக்கு பொழப்பு இல்லியா? தெனம்தெனம் டேசன்ல
வந்து குந்தியிருக்கிறதா வேல?” என்று சலிப்புடன் கேட்டான்.
வசந்தாவும், கண்ணகியும் உட்கார்ந்திருந்த
இடத்திலேயே உட்கார்ந்திருந்தனர். ஆண்கள் எல்லாம் அரச மர நிழலுக்கு வருவதும், டீ கடைக்கு, பெட்டி கடைக்குப்
போவதுமாக இருந்தனர். காலையிலிருந்து ஒரு வாய் தண்ணிர்கூட குடிக்காமல்
இருந்தது வசந்தாவும்
கண்ணகியும்தான்.
மற்றவர்கள்
எல்லாம் மதியத்திற்கு பிரியாணிதான் வேண்டும் என்று கேட்டு சாப்பிட்டார்கள்.
நான்கு பெண்கள், ஏழெட்டு ஆண்கள்
என்று கூட்டமாக காவல் நிலையத்தை நோக்கி வந்தார்கள். வந்த வேகத்தில்
நேராக காவல் நிலையத்திற்குள் அவர்கள் போனதைப்
பார்த்த கண்ணகி நாமும் போகலாமா என்று யோசித்தாள்.
மூன்று மணி வாக்கில்
ஆய்வாளர் வந்தார். உடனே செல்வதுரைக்காக வந்திருந்த வக்கீல்களும், அன்புசெல்வனும்
ஆய்வாளரின் அறைக்குள் போனார்கள். சிறிது நேரம் கழித்து வக்கீல்கள் வெளியே
வந்ததும், ஒரு காவலர் வந்து ”ஐயா கூப்புடுறாரு” என்று சொன்னதும், அவசரஅவசரமாக
எழுந்து வசந்தாவும், கண்ணகியும் ஆய்வாளர் அறையை நோக்கி ஓடினார்கள்.
“கேசு நடத்தப்
போறியா?”
என்று
முதல் கேள்வியாக ஆய்வாளர் கேட்டார். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழம்பிப்
போன வசந்தா சாமி சிலையின் முன்விழுந்து கும்பிடுவதுபோல நெடுஞ்சாண்கிடையாக விழுந்து
கும்பிட்டு
“எம்
புள்ளய கொன்னுட்டான் சாமி” என்று சொல்லிவிட்டு அழுதாள்.
“எழுந்திரு” என்று ஆய்வாளர்
சொன்னார்.
வசந்தாவையே
கூர்ந்து பார்த்தார். “கேசு நடத்தப் போறியா?” என்று முன்பு
கேட்ட கேள்வியையே திரும்பவும் கேட்டார்.
“அஞ்சாவது படிச்சிக்கிட்டிருந்த பையன் சாமி” என்று வசந்தா
சொன்னதற்கு ஆய்வாளர் எதுவும் பேசாமல் இருந்தார்.
“ரெண்டு மாசத்துக்கு முன்னாலதான் எம் புருசன்
செத்திட்டாரு”
என்று
சொல்லும்போதே வசந்தாவின் கண்கள் நிறைந்துவிட்டன. காதில், கழுத்தில், மூக்கில் பொட்டு
தங்கம்கூட இல்லாமல் அழுதுகொண்டிருந்த வசந்தாவையும், பக்கத்தில் நின்றுகொண்டிருந்த
கண்ணகியையும் ஏற இறங்க பார்த்த ஆய்வாளர் “வசதி இருக்கா?” என்று கேட்டார். அதற்கு வசந்தா
பதில் சொல்லவில்லை. அழ மட்டுமே செய்தாள்.
“அன்னன்னிக்கி வேலக்கிப் போனாத்தான் அடுப்பெரியும்
சார்”
என்று
கண்ணகி சொன்னாள்.
“ஒன்னால கேசு நடத்த முடியுமின்னா இப்பவே அவன ரிமாண்ட்
பண்ணிடுறன்.”
“செய்ங்க சாமி” என்று வசந்தா
சொன்னாள்.
“அவன் ஜெயிலுக்குப் போவணும் சார்” என்று கண்ணகி
சொன்னாள்.
“கோர்ட், கேசுன்னு அலய
முடியுமா?”
“நீங்கதான் எனக்கொரு நல்லது செய்யணும் சாமி” என்று சொல்லி
அழுதுகொண்டே தரையில் விழுந்து கும்பிட்டாள்.
காய்ந்துபோன கருப்பங்கழி போன்றிருந்த வசந்தாவின் தோற்றத்தையும், அழுகையையும்
பார்த்த ஆய்வாளருக்கு என்ன தோன்றியதோ ஒரு காவலரைக் கூப்பிட்டு செல்வதுரையை அழைத்துக்கொண்டு
வரச் சொன்னார்.
செல்வதுரை
வந்து வாசலில் நின்றதும், ஆய்வாளரின் முகம் மாறிவிட்டது.
“ஒன்னயெல்லாம் எவன்டா வாத்தியாரு வேலக்கிப் போட்டான்? ராஸ்கல். புள்ளைங்களுக்கு
பாடம் நடத்துடான்னா நீ என்னா காரியம் செஞ்சியிருக்க? நீ மனுசனா மிருகமாடா? ஒரு வாத்தியாரு
செய்யுற வேலயாடா இது? இப்பவே சி.இ.ஓ.கிட்ட சொல்லி
ஒன்னெ சஸ்பண்ட் பண்ண சொல்றன். ஒன்னெ மாரி பயலுகளயெல்லாம் ரிமாண்ட் பண்ணி
ஜெயிலுக்கு அனுப்புனாத்தான் சரியா இருப்பிங்க. ஆறு மாசம் வேல
இல்லாம இருந்தாத்தான் புத்தி வரும். தப்பு செஞ்சதும் இல்லாம அஞ்சு வக்கீலோட
வந்து நிக்குற.
ராஸ்கல். ஒங்கிட்ட அவ்வளவு
பணம் இருக்கா?
ஒனக்கெல்லாம்
சப்போட்டுக்கு வராணுவ பாரு. ஒன்னெ பாத்தா வாத்தியாரு மாதிரி தெரியல. கஞ்சா விக்கிற
பய மாதிரி தெரியுற. வெளிய இரு. ஒன்னெ அப்பறம்
விசாரிக்கிறன்.
முன்னால
நிக்காத.
போ
எட்ட.
நாய” என்று சொல்லி
சத்தம் போட்டார்.
செல்வதுரை
போன பிறகு
“சொல்லு” என்று வசந்தாவிடம்
சொன்னார்.
“எம் புள்ளய கொன்னுட்டான் சாமி. அவன் ஜெயிலுக்குப்
போவணும்”
என்று
சொல்லி வசந்தா முடிப்பதற்குள் குறுக்கிட்ட கண்ணகி ‘‘எங்க பையன வீணாக்குன
மாதிரி எத்தன பசங்கள வீணாக்குனான்னு தெரியல. வெளிய சொல்ல
முடியாம எத்தன பசங்க இருக்காங்கன்னு தெரியல சார். பள்ளிக்கூடத்தில
வந்து விசாரிங்க.
அப்பத்தான்
உண்ம தெரியும்.
அவனோட
திருட்டுத்தனம் வெளிய வரும். தடி மாடு மாதிரி இருந்துகிட்டு என்னா காரியம்
செஞ்சியிருக்கான்?” என்று சொன்னாள். வசந்தாவுக்குத்தான்
காவல் ஆய்வாளரின் முன் நின்றுகொண்டிருக்கிறோம் என்ற பயம் இருந்தது. வசந்தாவிடமிருந்த
பயத்தில் பாதிதான் கண்ணகியிடம்
இருந்தது.
“போன மாசம் நாலாவது படிக்கிற பொண்ண ஒரு வாத்தி
பய வீணாக்கிப்புட்டான்னு ஒரு கேசு வந்துச்சி. வேலக்கி வந்து
ஆறு வருசம்தான் ஆவுது. அதுக்குள்ளார மூணு எடத்துக்கு மாத்திட்டாங்க. அப்பவும் அவன்
திருந்தல.
ஒலகம்
முழுக்க சின்ன புள்ளைகளயும், பசங்களயும் வீணாக்குற இந்த மாதிரியான திருட்டுப்
பசங்க இருக்காணுவ. அதுல அவனுங்களுக்கு ஒரு இன்டரஸ்டு. என்னா செய்யுறது? மனநோய்தான். ரெண்டாயிரத்து
இருவதிலயும் வாத்தியாருங்க இப்பிடி இருந்தா நாடு எப்பிடி உருப்படும்?” என்று பொறுமையாக
சொன்னார் ஆய்வாளர்.
“ரெண்டு மூணு மாசமா நான் பள்ளிக்கூடத்துக்கு போவலன்னு
சொல்லி அடம்புடிப்பான். நான்தான் அடிச்சி அடிச்சி அனுப்புவன். அன்னக்கும் அப்படித்தான்
பள்ளிக்கூடத்துக்கு போவலன்னு சொன்னான். புள்ள எதுக்குச் சொல்லுதுன்னு
தெரியாம அடிச்சி இழுத்துக்கிப் போயி வுட்டன் சாமி. எம் புள்ளக்கி
எமனா வந்திட்டான் சாமி” என்று சொன்ன வசந்தா ஆய்வாளரின் முன்பு நின்றுகொண்டிருக்கிறோம்
என்பதுகூட மறந்துபோய் வீட்டில் இருப்பதுபோல் வாய்விட்டு கதறி அழுதாள். அழுகை சத்தம்
கேட்டு இரண்டு மூன்று காவலர்கள், மேலக்கோட்டை ஆட்கள் என்று வந்து எட்டிப்
பார்த்துவிட்டு போனார்கள்.
வசந்தா கதறி
அழுததைப் பார்த்த ஆய்வாளருக்கு என்ன தோன்றியதோ “வெளிய இரு கூப்புடுறன்” என்று சொன்னார். “சாமிதான் எனக்கு
நல்லது பண்ணனும்.
எம்
புருசன் செத்தப்ப எம் மவனத்தான் நம்பியிருந்தன். இப்ப அவனும்
மண்ணுக்குள்ளார போயிட்டான். எட்டு வயசிலயும், ஏழு வயசிலயும்
ரெண்டு பொட்ட புள்ளய வச்சிக்கிட்டு நடுத் தெருவுல நாராயணா, கோவிந்தான்ன
நிக்குறன்.
எனக்கும்
எம் புள்ளைங்களுக்கும் ஒரு வழிய காட்டுங்க சாமி” அழுதுகொண்டே
மனம் நிறைந்த வேண்டுகோளாகச் சொன்ன வசந்தா விழுந்து கும்பிட்டாள். வசந்தாவின் இடுப்பு
சீலை நழுவியிருந்ததையும் உடல் நடுங்குவதையும் பார்த்த ஆய்வாளர் “கூட்டிக்கிட்டு
போ”
என்று
சொன்னார்.
தரையில்
கிடந்த வசந்தாவை தூக்கி நிறுத்தி வெளியே அழைத்துக்கொண்டு வந்தாள் கண்ணகி.
“யே அந்த வாத்திப் பயல கூப்புடு” என்று சத்தமாக
சொன்னார்.
செல்வதுரை
வந்து வாசலில் நின்றதும் ஆய்வாளருக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ, காட்டுக் கத்தலாகக்
கத்தி “ஏன்டா தேவிடியா
பயல,
ஒனக்கு
பொட்டச்சியே கெடைக்கலியா? புள்ளக்காரி வந்து புள்ள வேணுமின்னு கேக்குறாளே. என்னடா சொல்லப்
போற?
புறம்போக்கு
பயல.
ஒன்னயெல்லாம்
காயடிச்சி வுட்டாத்தான் சரியா வருவ, ராஸ்கல்” என்று சொல்லி
கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தார். உலகத்திலேயே
தான்தான் நல்லவன் என்பது மாதிரி செல்வதுரை கையைக் கட்டியபடி நின்றுகொண்டிருந்தான். அவனுடைய முகத்தைப்
பார்க்கப் பார்க்க வசந்தாவுக்கு மண்டை கொள்ளாத கோபம் வந்தது. நரநரவென்று பல்லைக்
கடித்தாள்.
கெட்ட
வார்த்தைச் சொல்லி திட்டினாள்.
ஆய்வாளரின் அறைக்கு
பத்திருபதடி தூரம் தள்ளி நின்றுகொண்டிருந்த வசந்தாவுக்கும், கண்ணகிக்கும், ஆய்வாளர் திட்டுகிற
ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாகக் கேட்டது. செல்வதுரையை ஆய்வாளர்
திட்டுகிற விதத்தை வைத்து நிச்சயம் அவனை ஜெயிலுக்கு அனுப்பிவிடுவார் என்று வசந்தா முழுமனதாக
நம்பினாள்.
“நல்லா திட்டட்டும்” என்று சொன்ன
கண்ணகி ஆய்வாளரின் அறைக்கு சற்று தள்ளி மூன்று நான்கு பெண் காவலர்களும், ஆண் காவலர்களும்
சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
செல்வதுரைக்காக வந்திருந்த வக்கீல்கள் ஆய்வாளரின்
அறைக்குள் போனார்கள். ”நீங்களும் போங்க” என்று ரமணி அன்புசெல்வனை
ஆய்வாளரின் அறைக்குள் அனுப்பினான். சிறிது நேரம் கழித்து செல்வதுரையுடன் வந்திருந்த
ஆசிரியர்களையும்,
மேலக்
கோட்டையிலிருந்து வசந்தாவுக்காக வந்திருந்த ஆட்களையும் கூப்பிட்டு விசாரித்தார் ஆய்வாளர். பிறகு எல்லாரையும்
வெளியே அனுப்பிவிட்டு மீண்டும் வசந்தாவைக் கூப்பிட்டார்.
“கேசு நடத்தப் போறியா வாபஸ் வாங்கப் போறியா?”
“எம் புள்ளய கொன்னுட்டான் சாமி.”
“கொல செஞ்சான்னு கேசு போட முடியாது. சாவுக்கு தூண்டுதலா
இருந்தான்னுதான் போடலாம்.”
“அவன் ஜெயிலுக்கு போவணும் சார்” என்று கண்ணகி
அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.
“அவன ஜெயிலுக்கு அனுப்புறது பெரிசில்ல. வக்கீல் ஆபிஸ், கோர்ட்டுன்னு
நீங்களும்தான் அலயணும். வாபஸ் வாங்கினா இன்னியோட தலவலி வுட்டுடும். கேசுன்னா அலஞ்சி
சாவணும்.
பணமும்
செலவு ஆவும்.
எது
வேணுமின்னு சொல்லு. கேசுதான் வேணுமின்னா, எனக்கு ஒரு கையெழுத்துதான். புரியுதா? ஒன்னெ அலயவுட
நான் விரும்பல.
ஒரு
லட்சம் தரன்ங்கிறான். வாங்கிக்கிறியா?”
“அவன் ஒரு நாளாச்சும் ஜெயிலுக்கு போவணும் சாமி” என்று சொல்லி
வசந்தா கையெடுத்துக் கும்பிட்டாள்.
“கேசுன்னா நீதான் அதிகம் செலவு செய்யணும். வாபஸ்ன்னா ஒனக்கு
ஒரு பைசா செலவு இல்ல. அவன் கொடுக்கிற பணத்த வாங்கிக்கிட்டு போயிடலாம். எது வேணுமின்னு
யோசிச்சு சொல்லு.
பத்து
நிமிஷம் டைம் தரன்” என்று சொல்லி
வசந்தாவையும்,
கண்ணகியையும்
வெளியே அனுப்பினார். ஆய்வாளரின் பேச்சு செல்வதுரை ஜெயிலுக்குப் போக
மாட்டானோ என்ற சந்தேகத்தை உண்டாக்கிற்று. செல்வதுரை ஜெயிலுக்குப்
போக வேண்டும் என்று குடி தெய்வத்திடம் வேண்டிக்கொண்டாள் வசந்தா.
வசந்தாவும் கண்ணகியும் அரச மர நிழலுக்கு வந்தனர். பின்னாலேயே அன்பு
செல்வனும்,
மேலக்கோட்டை
ஆட்களும் வந்தனர்.
வசந்தாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து
அக்கறையுடன் பேசுவது மாதிரி தணிந்த குரலில் “வாத்தியாரு ஒரு
லட்சம் தரன்ங்கிறாரு. பணமா கேசாங்கிறத நீங்கதான் முடிவு பண்ணனும். கேச போட்டாலும், ரிமாண்ட் பண்ணாலும் மறுநாளே ஜாமீன்ல வெளிய வந்திடுவாரு. கேசு பல வருசம்
போவும்.
தீர்ப்பு
வந்தாலும் கீழ் கோர்ட்டு, மேல் கோர்ட்டு, ஹைகோர்ட்டுன்னு
இழுத்துக்கிட்டு கெடக்கும். பையன அவரு அடிச்சிக் கொல்லல. பையன் தானா ஓடிப்
போயிதான் பஸ்ஸில மோதி செத்திருக்கான். கேசு நிக்காது. கீழ் கோர்ட், மேல் கோர்ட், ஹை கோர்ட்டுன்னு
வாத்தியாரு மட்டும் போவ மாட்டாரு. நீங்களும்தான் போகணும். நீங்க வக்கீல
வச்சி வாதாட வாதாடத்தான் கேசு இழுத்துக்கிட்டு இருக்கும். நீங்க ஒரு வாய்தாவுக்குப்
போகலன்னாலும் கேசு அவரு பக்கம் தீர்ப்பாயிடும். பாத்துக்குங்க” என்று சொல்லி
அன்புசெல்வன் முடிப்பதற்குள் குறுக்கிட்ட கண்ணகி “அதுக்காக அவன
அப்படியே வுட்டுடணுமா?” என்று கேட்டாள்.
“சும்மா வுட வேணாம். ஒரு லட்சம் பணம்
வாங்கிடலாம்.”
“ஒரு லட்சமும் எம் புள்ளயும் ஒண்ணா?” என்று ஆத்திரத்துடன்
கேட்டாள் வசந்தா.
“ஒங்கிட்ட பணம் இருக்குன்னு சொல்லுங்க. கேச நடத்திடலாம். எனக்கும் பணம்
வந்த மாதிரி இருக்கும்” என்று சொன்ன அன்புசெல்வன் லேசாக சிரித்தான்.
“அவன் ஜெயிலுக்குப் போனாத்தான் எம் மனசு ஆறும்” என்று கடுமையான
குரலில் சொன்னாள் வசந்தா.
“நீ பெட்டிசன் கொடுத்திட்டங்கிறதுக்காக யாரயும்
புடிச்சி ஒடனே ஜெயில்ல போட மாட்டாங்க. சட்டம்ன்னு ஒண்ணு இருக்கு. நடமுறன்னு ஒண்ணு
இருக்கு. வாத்தியாரு
எத்தன வக்கீலோட வந்திருக்காரு பாத்தில்ல” என்று சொன்ன அன்புசெல்வன், தலை முடியை ஒரு
முறை கோதிவிட்டுக் கொண்டான். முன்பைவிட பக்குவமான குரலில் சொன்னான். “நீங்க எப்பிடித்தான்
கேசு கொடுத்தாலும் ஒரு நாளுதான் ஜெயிலுக்குப் போவாரு. மறுநாளே ஜாமீன்ல
வெளிய வந்துடுவாரு.”
“எம் புள்ளய வீணாக்குன்னு சட்டம் அவனுக்கு சொல்லுச்சா? பரவாயில்ல. ஒரு நாளாவது
அவன் ஜெயில்ல இருக்கட்டும்” என்று வீம்பாகச் சொன்னாள் வசந்தா.
“நான் சொல்றது ஒனக்கு புரியல. ஸ்டேசன், கோர்ட்டு, கேசு எல்லாம்
காசு உள்ளவங்களுக்குத்தான். நீ அழுவுறத ஸ்டேசனும் பாக்காது. கோர்ட்டும் பாக்காது. புரியுதா? கோர்ட்டுக்கு
உண்ம,
பொய்யிங்கிறது
முக்கியமல்ல.
சாட்சி
வேணும்.
நிஜமா
இருந்தாலும் சாட்சி வேணும். வாத்தியாரு கொடுக்கிற பணத்த வாங்கிக்கிறதுதான்
நல்லது” என்று சொல்லி
முடிப்பதற்குள் வேகப்பட்ட வசந்தா “எனக்கு பணம் வாணாம்” என்று ஒரே தீர்மானமாகச்
சொன்னாள்.
“அப்படின்னா போயி
இன்ஸ்பெக்ட்டர்கிட்ட சொல்லிடு. ஸ்டேசன்ல கேக்குற பணத்த கொடு. கேசு போட்டுடுவாங்க” என்று சொல்லிவிட்டு
விர்ரென்று எழுந்து நின்றுகொண்டான்.
“எதுக்கு பணம்?” என்று கண்ணகி
கேட்டாள்.
“நீ கொடுத்த பெட்டிசன மட்டும் வச்சி கேச போட்டு
வாத்தியார ஜெயிலுக்கு அனுப்பிடுவாங்களா? அததுக்குன்னு ஒரு ரேட்டு
இருக்கு.
அத
கொடுத்தாத்தான் வேல நடக்கும்” என்று கிண்டலாகச் சிரித்த அன்புசெல்வன்
ரமணியைப் பார்த்து “என்னா தலைவரே. ஒங்களுக்கும்
விஷயம் தெரியாதா?”
என்று
கேட்டான்.
வசந்தாவுக்கு அன்புசெல்வன் சொன்னது புரியவில்லை. பிள்ளையை பறிகொடுத்துவிட்டு
நின்றாலும்,
பணம்
கொடுத்தால்தான் வழக்கு போடுவார்கள் என்பதை அவளால் நம் முடியவில்லை. காசு கொடுத்து
அழைத்துக்கொண்டு வந்த வக்கீலே இப்படி பேசுகிறானே என்று ஆச்சரியமாக இருந்தது. செல்வதுரையிடம் பணம் வாங்கிகொண்டு பேசுகிறானோ
என்று சந்தேகமும் வந்தது.
“ஒரு முடிவுக்கு வாங்க வக்கீலு” என்று சலிப்புடன்
ரமணி அன்புசெல்வனிடம் சொன்னான்.
“ஒரு லட்சம்ங்கிறத கூடுதலா கொஞ்சம் கொடுன்னு கேக்கலாம்” என்று அன்புசெல்வன்
சொன்னதும்
“வாங்கப்
போயி பேசிப் பாக்கலாம்” என்று சொல்லிவிட்டு அன்புசெல்வனை அழைத்துக்கொண்டு, செல்வதுரையிடம்
போனான் ரமணி.
அவர்களோடு
ராஜவேலுவும் மற்ற நான்கு பேரும் போனார்கள்.
“யாரு வச்ச செய்வினயோ. ரெண்டு மாசத்துக்கு
முன்னால எம் புருசன் செத்தான். இப்ப எம் புள்ளயும் போயிடிச்சி, நான் பெத்த மூணு
புள்ளயில அவன் ஒருத்தன்தான் முக வடுத்தமாவும், செவசெவன்னும், கண்ணுக்கு லட்சணமாவும்
இருந்தான்.
அவன்
முகவாட்டம்தான் அவன சாவடிச்சிடிச்சி.” என்று சொல்லி வசந்தா
அழ ஆரம்பித்தாள்.
“அழுது அழுது நீ செத்துப்புடாத. காலயிலிருந்து
ஒரு வாய் பச்ச தண்ணிகூட வயித்துக்குள்ளாரப் போவல. தொண்ட அடைக்கிது
பாரு”
என்று
கண்ணகி சொன்னாள்.
“மண்ணுல போடவா எம் புள்ளய மாருல தூக்கி வளத்தன்? பாடயில போகவா
எம் புள்ளய பாலூட்டி வளத்தன்? எம் புள்ள அம்மான்னு கூப்புடலியே அழுத
வாயி மூடலியே.”
“விடுக்கா. அழுவறதுக்குக்கூட
ஒனக்குத் தெம்பில்ல.”
“ஓடி திரிஞ்ச கால இப்ப மண்ணுத் தின்னுப் போயிடுச்சி. பேசி சிரிச்ச
வாய இப்ப மங்கரயான் தின்னுடுச்சி.’’
“வீட்டுலப் போயி அழுதுக்கலாம் பேசாம இருக்கா” என்று கண்ணகி
சொல்லி வசந்தாவை ஆறுதல் படுத்த முயன்றாள்.
“கல்லுல நடந்தா கால் நோகி போகுமின்னு – எம் புள்ளய
கையில வச்சி
நான் வளத்தன்
புல்லுல நடந்தா
புண்ணாகி போகுமின்னு – எம் புள்ளய
மாருல வச்சி
நான் வளத்தன்
வெயிலுல நடந்தா
நெறம் மங்கிப் போகுமின்னு– எம் புள்ளய
சீலயால குட புடிச்சி
நான் வளத்தன்
காத்துல கரஞ்ச கற்பூரமாயிடிச்சே எம் புள்ள.”
“ஒனக்கு பேசறதுக்கே தெம்பில்ல. எப்பிடித்தான்
அழுவ மட்டும் முடியுதோ” என்று சொன்ன கண்ணகி வசந்தாவுக்குப் பக்கத்தில்
உட்கார்ந்துகொண்டு தன்னுடைய முந்தானையால், வசந்தாவின் முகத்தையும், கண்களிலிருந்த
பீளையையும்,
அழுது
அழுது நுரை தள்ளியிருந்த வாயையும் துடைத்துவிட்டாள். வசந்தாவைப் பார்க்கப்
பார்க்க கண்ணகிக்கும் அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. இரண்டு மாதத்திற்கு
முன் பார்த்தபோது இருந்த உடம்பில் இப்போது பாதிகூட இல்லை. கை கால்களெல்லாம்
குச்சி குச்சியாக இருந்தது. மார்பகங்கள் இருந்த இடத்தில்கூட இப்போது
சதை இல்லை.
வயது
முப்பத்தி ஆறுதான். ஆனால் எழுபது எண்பது வயது கிழவிபோல் இருந்தாள். ”அழுவாத அழுவாத” என்று சொல்லிக்கொண்டே
கண்ணகியும் அழுதாள்.
ஆய்வாளரின் அறைப்
பக்கமிருந்து வந்த ரமணி “வாத்தியாரு கொடுக்கிற பணத்த வாங்கிக்கிட்டுப்
போறதுதான் நல்லது. நீ என்ன சொல்ற?” என்று கேட்டதுதான், வசந்தாவிற்கு
தலை கொள்ளாத கோபம் வந்துவிட்டது. ஆத்திரத்தில் “வாத்தி பய எம்மாம்
பணம் கொடுத்தான்?”
என்று
கேட்டாள்.
“நான் பணத்துக்காகத்தான் வந்தனா? பணம் வாங்கிக்கிட்டுத்தான்
பேசுறனா?”
என்று
சத்தமாகக் கேட்டான் ரமணி.
“அவங்க அவங்க புள்ளெ செத்துப்போனாத்தான் அவங்க
அவங்களுக்கு வலிக்கும்” என்று சொன்ன வசந்தா மூக்கிலிருந்து வழிந்த சளியை
முந்தாணையால் துடைத்தாள்.
“வாய் இருக்குன்னு பேசாத” என்று சொல்லி
முறைத்தான்.
பிறகு
ஆய்வாளரின் அறைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த செல்வதுரையையும், அவனுடைய பொண்டாட்டியையும்
பார்த்துவிட்டு
“ஒரே
சாதிக்காரனா இருக்கான். இல்லன்னா உண்டு இல்லன்னு பாத்திடுவன்” என்று சொன்னான்.
“சாதி ஒத்துமயிலியா
எம் புள்ளய கொன்னான்?” ஆங்காரத்துடன் கேட்டாள் வசந்தா.
“சாதிக்காரன். பாத்து செய்யுங்கன்னு
வாத்தியும்,
அவன்
பொண்டாட்டியும் கால்ல விழுந்து விழுந்து கும்புடுறாங்க. வேல போயிடும்ன்னு
சொல்றாங்க.”
“கொலகார நாயெல்லாம் எதுக்கு சாதிய இழுக்குது? சாதி எம் புள்ளய
உசுரோட கொண்டாருமா? திருட்டுத்தனம் செய்யுற நாயெல்லாம் சாதிய சொல்லித்தான்
தப்பிக்கப் பாக்குது. அவனுக்கு வேல போனா எனக்கென்னா? எம் புள்ளய வீணாக்கும்போது
சாதி தெரியலியா அந்த நாயிக்கி? சாதியப் பத்தி பேசுனான்னா அவன முறத்தாலியே
அடிப்பன்”
என்று
ஆங்காரமாக கத்தினாள் வசந்தா.
“போலீஸ்காரங்க, வக்கீலுங்க என்னா
பேசுறாங்கன்னு தெரியாமப் பேசாத” என்று சொல்லி ரமணி முறைத்தான்.
“வக்கீலுவோ, போலீசெல்லாம்
கூட்டு சேந்துக்கிட்டு பேசுறாங்கன்னு எங்களுக்குத் தெரியாமியா இருக்கு?” என்று கோபப்பட்ட
மாதிரி கண்ணகி கேட்டாள். அப்போது ஆய்வாளரின் அறையிலிருந்து ராஜவேலு
வந்தான்.
“ரெண்டு லட்சம் வாங்கித் தரன்னு இன்ஸ்பெக்ட்டரு
சொல்றாரு”
என்று
ராஜவேலு சொல்லி முடிப்பதற்குள் “பெத்தவன் இருந்தா இப்படி வந்து சொல்லுவானா?” என்று வசந்தா
கேட்டாள்.
அவன்
எதுவும் பேசாமல் நின்றுகொண்டிருந்தான்.
‘’நீ கேச நடத்திக்க. நாங்க வீட்டுக்குப்
போறம்”
என்று
சொல்லிவிட்டு தூரமாகப் போனான் ரமணி. அவனை சமாதானம் செய்து அழைத்துக்கொண்டு
வருவது பெரும் பாடாக இருந்தது ராஜவேலுவுக்கு.
ரமணி கோபித்துக்கொண்டதும்
போதையில் இருந்த முருகனும், சக்திவேலுவும் வசந்தாவிடம் சத்தம் போட்டனர். “தெனம் டேசனுக்கு
வந்துகிட்டு இருக்கிறதா எங்களுக்கு பொழப்பு?”என்று கேட்டு
முறைத்தான் முருகன். சக்திவேல் வாய்க்கு வந்தபடி பேசினான். “கேச இன்னியோட
முடிச்சிக்கணும்”
என்று
எச்சரிக்கை செய்தான்.
“நீ கேச நடத்திக்க. நாங்க கௌம்புறம்” என்று சொக்கலிங்கம்
சொன்னான்.
அவன்தான்
வசந்தாவுக்கு பங்காளி. வழக்கை முடிக்க வேண்டும் என்று காலையிலிருந்து
அவன்தான் வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தான்.
வசந்தாவுக்கு
என்ன செய்வதென்றே தெரியவில்லை. உதவிக்கு வந்த ஆட்களே எதிராக பேசுவது அவளுக்கு
வியப்பாக இருந்தது. ஆய்வாளர் சொல்வது, அன்புசெல்வன்
சொல்வதுதான் நிஜமா? கோர்ட்டுக்குப் போனால் செலவாகுமா, வழக்கு நிற்காமல்
போய்விடுமா?
விஜயகுமாரின்
சாவு செலவிற்கு,
செல்வதுரை
வீட்டிற்கு போனதற்கு, நான்கு நாட்களாக காவல் நிலையத்திற்கு வந்ததற்கு
என்று முப்பதாயிரத்திற்கும் மேல் செலவாகிவிட்டது. முப்பதாயிரத்தையும்
கடன்தான் வாங்கி இருந்தாள். முப்பதாயிரத்தை எப்படி அடைப்பது என்று
நினைத்ததுமே அவளுக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது. “காசு உள்ளவங்களக்குத்தான்
டேசன்,
கோர்ட்டு
எல்லாம் பேசுமா?”
என்று
யோசித்ததுமே அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. வசந்தா அழுவதைப்
பார்த்த ரமணி பரிதாபமான குரலில் “ஒனக்கு கெடுதல் செய்வமா? குடும்ப நெலவரத்தயும்
யோசிக்க வாணாமா?”
என்று
கேட்டான்.
“ஒம் புள்ள செத்தா பணம் வாங்கிக்கிட்டுத்தான்
போவியா?”
என்று
வசந்தா கேட்டதும் “அப்பறம் ஒன்னிஷ்டம்” என்று சொல்லிவிட்டுப்போய்
சற்று தள்ளி நின்றுகொண்டான் ரமணி .
“கேசு கேசுங்கிறியே கேசு நடத்த ஒங்கிட்ட என்னா
இருக்கு?”
என்று
முருகன் கேட்டது வசந்தாவுக்கு முகத்தில் செருப்பால் அடித்ததுபோல் இருந்தது.
“என்னா செய்யுறது?” என்று ராஜவேலு
கேட்டான்.
அவனை
முறைப்பதுபோல் பார்த்த வசந்தா “பொட்டச்சிக்கிட்ட வந்து என்னா செய்யுறதின்னு
கேட்டா என்னா அர்த்தம்?” என்று கேட்டு வசந்தா முறைத்தாள்.
“வாபஸ் வாங்குறதுதான் நல்லது. கேசு போட்டாலும்
நிக்காது.
கேசு
போடலாம்.
ஆனா
ரிமாண்ட் பண்ண முடியாதின்னு இன்ஸ்பெக்ட்டரு சொல்லிட்டாரு” என்று ராஜவேலு
சொன்னதும்,
“அவன்
ஜெயிலுக்கு போவ மாட்டானா? அவன் அவ்வளவு நல்லவனா? ஒரு உசுர கொன்ன
பாவிக்கு எல்லாரும் சப்போட்டு பண்றாங்களே. கடவுளே. எல்லாத்தயும்
நீயும்தான பாத்துக்கிட்டிருக்க?” என்று பரிதாபமான குரலில் கேட்டாள்.
“கேசு நடத்தி, தீர்ப்பு வந்தாதான்
தெரியுமாம்.”
“அட பாழும் ஒலகமே” என்று சொன்னாள். தலையில் அடித்துக்கொண்டாள். அப்போது ஆய்வாளரின்
அறை பக்கமிருந்து வேகமாக வந்த அன்புசெல்வன் “சமாதானமின்னா
எழுதி வாங்கியார சொல்றாரு. கேசுன்னா நாளக்கி வர சொல்றாரு. அஞ்சு நிமிஷத்தில
பதில் சொல்ல சொன்னாரு. பொண்டாட்டிக்காரி கள்ளக் காதலனோட சேந்து புருசன
விஷம் வச்சி கொன்னுட்டாளாம். அந்த கேச விசாரிக்கிறதுக்கு வெளிய போறாராம்” என்று சொன்னான்.
அன்புசெல்வன்தான்
என்றில்லை,
ரமணி, முருகன் என்று
எல்லாருமே வாபஸ் வாங்குவதுதான் நல்லது, வழக்கு நடத்துவது சிரமம்
என்று திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்கள். ராஜவேலுவும்
வாபஸ் வாங்குவதுதான் நல்லது என்று சொன்னான். “புள்ளய பறிகொடுத்திட்டு
நிக்குறது யாரு கண்ணிலயும் படலியே” என்று வசந்தா நினைத்தாள். அப்போது செல்வதுரையுடன்
வந்திருந்த இரண்டு ஆசிரியர்கள்
வந்து வாபஸ் வாங்குவதுதான் நல்லது என்று சொன்னார்கள். செல்வதுரைக்காக
வந்திருந்த வக்கீல் ஒருவன் வந்து, பையன் தானாக ஓடிப்போய்தான் பஸ்ஸில் மோதி
இருக்கிறான்,
வழக்கு
நிற்காது என்று சொன்னான். “கேசு போட்டா ரெண்டு லட்சமும் கெடைக்காது” என்று அழுத்தம்
திருத்தமாக சொன்னான். எல்லாருடைய பேச்சையும் கேட்ட வசந்தாவுக்கு என்ன
செய்வதென்றே தெரியவில்லை. குழப்பமாக இருந்தது. “எல்லாரும் ஒரு
வாயப்போல சொல்றாங்ளே எப்பிடி? என்னா சூது இருக்கும்? எல்லாரும் கூட்டு
சேந்திட்டாங்களா? முண்டச்சிக்கு, காசு பணம் இல்லாதவளுக்கு
யாரு பேசுவாங்க?”
என்ற
யோசித்ததுமே அவளுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்துவிட்டது. என்ன முடிவு எடுப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. கண்ணகியும் குழம்பிப்போய்தான்
நின்றுகொண்டிருந்தாள்.
“மணி ஆறுக்கு மேலாயிடிச்சி” என்று ரமணி சொன்னான்.
“செத்தப் புள்ள திருப்பி உசுரோடவா வரப்போவுது? கையெழுத்துப்போட்டு
தொலச்சிப்புட்டு எழுந்திரு. குளிச்சி முழுகிட்டுபோய் ஒரு கோவில்ல விளக்கேத்தி
வச்சி மண்ண வாரி விட்டுட்டுப் போவம்க்கா. அவனும் அவன் புள்ளைங்களும்
எத்தன காலத்துக்கு வாழ்ந்திடுவாங்க” என்று அழுதுகொண்டே சொன்னதும், வசந்தா கண்ணகியைப்
பார்த்தாள்.
அப்போது
அவளுடைய இரண்டு கண்களும் கண்ணீரால் நிறைந்திருந்தது.
“போயி எழுதி கொண்டாங்க. ரெண்டு லட்சமும்
கையோட வந்தாவணும்” என்று கட்டளை மாதிரி கண்ணகி சொன்னதும், வசந்தாவை சூழ்ந்துகொண்டிருந்த
மொத்த பேரும் ஆய்வாளரின் அறைக்குப் போனார்கள். போன வேகத்திலேயே
திரும்பி வந்து வாபஸ் மனுவை நீட்டினார்கள். ஏற்கெனவே எழுதி
தயாராக வைத்திருப்பார்கள்போல என்று வசந்தா நினைத்தாள்.
“சாட்சி கையெழுத்து போடுங்க” என்று அன்புசெல்வன்
சொன்னான்.
ஊர்ப்
பஞ்சாயத்து தலைவர் என்ற முறையில் ரமணியும், உறவினர் என்ற
முறையில் ராஜவேலுவும் கையெழுத்துப் போட்டனர். வாபஸ் மனுவை
வாங்கி கையெழுத்துப் போடச் சொல்லி வசந்தாவிடம் கண்ணகி கொடுத்தாள். வசந்தா தனக்கு
முன்னால் நின்றுகொண்டிருந்த ஆட்களைப் பார்த்தாள். “எம் புள்ளய வாத்தி
மட்டும் கொல்லல.
எம்
புள்ளய தூக்கி மண்ணுல போட்ட கையாலத்தான் இப்ப கையெழுத்தும் போடுறன்” என்று சொல்லிவிட்டு
அழ ஆரம்பித்தாள்.
அழுதுகொண்டே
கையெழுத்தைப் போட்டு தரையில் விட்டெறிந்தாள். “நான் எம் புள்ளய
பறிகொடுத்திட்டு நிக்குறாப்ல அவனும் ஒரு நாளு நடுத் தெருவுல நிப்பான். நான் சொல்றத
சாமி இருந்தா கேக்கும்“ என்று சொன்னாள்.
“எந்த சாமி இருக்கு கேக்கிறதுக்கு?” என்று சலிப்பான
குரலில் கண்ணகி சொன்னாள்.
வாபஸ் மனுவை
எடுத்துக்கொண்டு ஆய்வாளரின் அறையை நோக்கிப் போனார்கள்.
“கிளம்புக்கா” என்று சொல்லி
வசந்தாவை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்தின் வாசலுக்கு சற்று தள்ளி வந்தாள் கண்ணகி. ஆய்வாளரின் அறையிலிருந்து
அன்புசெல்வன்,
ரமணி, ராஜவேலு என்று
எல்லாரும் வந்தனர்.
“விஷயம் முடிஞ்சிப் போச்சி. வீட்டுக்குப்
போங்க”
என்று
ஒரே
பேச்சாக சொல்லிவிட்டு
மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு அன்புசெல்வன் கிளம்பியதும், “நாங்களும் கிளம்புறம்” என்று சொல்லிவிட்டு
முக்கியமான
வேலை இருப்பதுபோல் அவசர அவசரமாக ரமணி, முருகன் என்று
மேலக்கோட்டை ஆட்கள் கிளம்பிப் போனார்கள்.
“டேசன் செலவு அம்பதாயிரம். வக்கீலுக்கு
இருபதாயிரம்,
தலைவருக்கு
அஞ்சாயிரம்.
மத்த
நாலு பேருக்கும் தலக்கி ரெண்டாயிரம், இன்னிய சாப்பாட்டு செலவு
ரெண்டாயிரம்னு போக மிச்சம் இதுல இருக்கு. ஆளாளுக்குப் பங்கு பிரிச்சிக்கிட்டுத்தான்
பணத்தயே கொடுத்தாங்க. வாத்திக்கிட்டயும் பணம் வாங்குவாங்கன்னு நெனைக்குறன்” என்று சொல்லி
ராஜவேலு பணத்தை வசந்தாவிடம் கொடுத்தான்.
“அந்த கருமத்த
எதுக்கு எங்கிட்ட கொடுக்கிற? எம் புள்ள செத்ததுக்கு கொடுத்த பணத்தில
அரிசி வாங்கி சோறு திங்கிறவளா நானு? அவனுவோகிட்டயே கொடுத்திடு. இல்லன்னா எம்
புள்ளய பொதச்ச எடத்திலியே இதயும் போட்டு மண்ண தள்ளி மூடிடு. நம்பி வந்தன். கண்ணு முன்னாலியே
கூட்டம் கூடி கழுத்தறுத்திட்டானுவ. ஒத்த காகம் கத்தும்போதே நெனச்சன். சாமி இருந்தா
எல்லாப் பயலயும் கேக்கும்” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று பேருந்து
நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். எதுவும் பேசாமல் வசந்தாவுக்குப்
பின்னால் கண்ணகியும் ராஜவேலுவும் நடக்க ஆரம்பித்தனர்.
நீலம் மாத இதழ் பிப்ரவரி 2021
Sad stories in India & Srilanka! Same in many countries too! But bad karma traps them all Who harmed innocent People!It happened infront of us to many!
பதிலளிநீக்குவன்கொடுமை பிரிவில்தான் பணியாற்றுகிறேன் இதுபோன்ற பல நிகழ்வுகளை தாங்கி பல மனுக்கள் வரும்போது மனம் கணத்துபோகிறது உண்மை இயலாமையால் மறித்துபோகும்போது?
பதிலளிநீக்கு