ஞாயிறு, 17 ஜனவரி, 2021

நீலம் மாத இதழ் நேர்காணல் (நவம்பர் 2020)

 

நீலம் மாத இதழ் நேர்காணல் (நவம்பர் 2020) 


• கோவேறு கழுதைகள் நாவல்தான் உங்களுடைய முதல் படைப்பாகவும், அதுவே இன்றுவரை உங்களுடைய அடையாளமாகவும் இருக்கிறது. கோவேறு கழுதைகள் நாவலுக்கு முன் எழுதிய படைப்புகள் என்று ஏதாவது இருக்கிறதா? ஆரம்பகால உங்களுடைய எழுத்து முயற்சிகள் எப்படி இருந்தது?

            கவிதைகள் எழுத முயன்றேன். சிறுகதைகள் எழுத முயன்றேன். கட்டுரைகள் எழுத முயன்றேன். எதுவும் சரியாக வரவில்லை. பிறகுதான் கோவேறு கழுதைகள் நாவலை எழுதினேன். அதற்கு முன்பாக இரண்டு நூல்களை எழுதினேன். முதலாவது ராஜீவ்காந்தி கொண்டு வந்த புதிய கல்வி கொள்கைக்கு எதிராக “புதிய கல்வி கொள்கை ஒரு xray கண்ணோட்டம்” என்ற 36 பக்கம் கொண்ட சிறு வெளியீடு. அந்நூல் அப்போது அதிகமாக பேசப்பட்டது. கொண்டாடப்பட்டது. இரண்டாவது நூல் ‘பத்திரிகை ஒரு பார்வை‘ நூறு பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்டது. பத்திரிகை ஒரு பார்வை நூல், அச்சிடப்பட்ட விஷயம் எனக்கும் பிரிண்டருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்தது. இன்றுவரை.

கோவேறு கழுதைகள் வெளிவந்து 25 ஆண்டுகள் முடிந்துவிட்டது. ஆனாலும் இன்றும் அது பேசப்படுகிற ஒன்றாக, கொண்டாடப்படுகிற ஒன்றாக இருக்கிறது. இப்படி நிகழும் என்று எதிர்பார்த்தீர்களா?

            நிச்சயமாக இல்லை. ஒரு படைப்பு தனக்கான ஆயுளை தானேதான் உருவாக்கிக்கொள்கிறது. எழுத்தாளன் உருவாக்குவதில்லை. கோவேறு கழுதைகள் நாவல் எனக்குள் ஏற்பட்ட பெருவெடிப்பு என்று தான் சொல்ல வேண்டும். ஒரு படைப்புக்கான மதிப்பு என்பது படைப்பின் உண்மை தன்மையை பொறுத்தே ஏற்படுகிறது. அதே மாதிரி சமூகப் பொருத்தம் சார்ந்தும் ஏற்படுகிறது.

• கோவேறு கழுதைகள் நாவல் வெளிவந்ததுமே கவனம் பெற்றதா, கால தாமதமாக கவனம் பெற்றதா? நாவலுக்கான வரவேற்பு எப்படி இருந்தது?

            நாவல் வெளிவந்த உடனேயே மதுரையில் என்.சிவராமன் என்பவர் ஒரு விமர்சனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த கூட்டத்திற்கு வந்து சுந்தர ராமசாமி பேசினார். அன்று அவர் நாவல் குறித்து பேசியது, பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது. அதன் பிறகு காலச்சுவடில் சுந்தர ராமசாமி எழுதிய விமர்சனமும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. ஒரு பக்கம் அளவுக்கு மீறிப் புகழ்கிறார், கொண்டாடுகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. மறுபுறம் தலித் இலக்கியத்திற்கு எதிராக கிடைத்த ஆயுதமாக பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் இருந்தது. தலித்திய சிந்தனையாளர்கள், தலித் இலக்கிய ஆய்வாளர்கள், விமர்சகர்கள் என்பவர்களால் தூற்றப்பட்டது. நாவலை வெளியிட்ட க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு பிராமணர். நாவலைப் பாராட்டி எழுதிய சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் பிராமணர்கள். அப்போது அதுவும் குற்றமாகப் பார்க்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் செத்துவிட்டன. நாவல் இன்றும் உயிரோடிருக்கிறது.

• தலித் இலக்கிய அரசியலுக்கு எதிரான நாவலாகவும் பேசப்பட்டது, தலித் இலக்கியத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் பேசப்பட்டது. தலித் இலக்கிய அடையாளம் வேண்டாம் என்று இன்று சொல்கிற நீங்கள், நாவல் வெளிவந்த காலத்தில், தலித் இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டீர்கள்தானே?

            நான் நாவலின் முதல் பிரதியை எழுதுகிற சமயத்தில் இலக்கிய உலகில் தலித் அரசியல், தலித் இலக்கியம், தலித் சிந்தனையாளர், தலித் ஆய்வாளர், தலித் அறிஞர், கவிஞர், நாவலாசிரியர், தலித் தன்வரலாற்று நூலாசிரியர் என்ற பட்டங்கள் யாருக்கும் அப்போது இல்லை. தலித் இலக்கியம் குறித்த புரிதல் எனக்கு அப்போது இல்லை. இலக்கியம் குறித்தும்தான். அப்போது பலரும் அப்படித்தான் இருந்தார்கள் என்று நினைக்கிறேன். நாவல் அச்சாகி வெளிவந்த காலத்தில் தலித் அரசியல், தலித் இலக்கியம், கலக இலக்கியம் என்ற பேச்செல்லாம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. எல்லாவற்றையும் எதிர்ப்போம் என்ற நிலைப்பாட்டில் கோவேறு கழுதைகள் நாவலையும் எதிர்த்தார்கள். உட்சாதி முரணைப் பேசுகிறது. உட்சாதி முரணை பேசுகிற நேரம் இதுவல்ல என்று கூச்சல் போட்டார்கள். அது அன்றைய இலக்கிய அரசியலாக இருந்தது. அந்த அரசியல் எனக்கு அப்போது புரியவில்லை. அதனால் நான் தலித் இலக்கிய கூட்டங்களிலும் பங்கேற்றேன், மற்ற பொதுவான இலக்கியக் கூட்டங்களிலும் பங்கேற்றேன்.

இப்போது இலக்கிய அரசியல் புரிந்துவிட்டதா?

            ஓரளவுக்கு என்றுதான் சொல்வேன். தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகளின் அரசியலைவிட இலக்கியவாதிகள் செய்கிற அரசியல்தான் மோசம் என்பது என்னுடைய கருத்து. தமிழில் தலித் இலக்கியத்திற்கு இதுதான் சிறந்த எடுத்துக்காட்டான படைப்பு என்று கொண்டாடப்பட்ட படைப்புகள் இன்று காலாவதியாகிவிட்டது. ‘தலித்’ இலக்கிய அரசியலை பயன்படுத்திக்கொண்டு சிலர், தங்களை விளம்பரப்படுத்திக்கொண்டார்கள். அறுவடையும் செய்தார்கள். நான் ஒருபோதும் அரசியலுக்காக எழுதுவதில்லை. சூழலுக்காக எழுதுவதில்லை, விளம்பரம் செய்து அறுவடையும் நடத்தியதில்லை. தலித் இலக்கியம் குறித்த பேச்சு இப்போது அரிதாகத்தான் காதில் விழுகிறது. உங்களுக்கு சத்தமாக கேட்கிறதா?

எழுத்தாளனுக்கு அடையாளம் பெரும் சுமை என்று நீங்களே பலமுறை சொல்லி இருக்கிறீர்கள். அதே நேரத்தில் திராவிட இயக்க இலக்கியத்தின் பங்களிப்பு பற்றி அதிகம் இப்போது பேசுகிறீர்கள். இது முரண்பாடாக தெரியவில்லையா?

            தெரியவில்லை. காரணம், தமிழ்நாட்டில் இருக்கிற எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்களைவிட, இலக்கிய ஆதினங்கள், இலக்கியப் பூசாரிகள் அதிகம். தமிழ்நாட்டில் முதல் தலைமுறையாக ஆங்கிலம்படித்த பிராமணர்கள் எல்லாம் ஒன்று கூடி “தமிழில் ஒன்றுமே இல்லை. வெளிநாட்டு இலக்கியத்தில்தான் எல்லாம் இருக்கிறது” என்று பிரகடனப்படுத்தினார்கள். அந்த பிரகடனம்தான் இன்றுவரை நம்பப்படுகிறது. நமக்குத்தான் எப்போதும் பூசாரிகளும், ஆதினங்களும் சொன்னால்போதுமே. நம்முடைய இலக்கியப் பூசாரிகளும், இலக்கிய ஆதினங்களும் எப்படிப்பட்டவர்கள் என்றால் அறிஞர் அண்ணா எழுதிய சிவாஜிகண்ட இந்து ராஜ்ஜியம் நாடகத்தில் வரும் பட்டரை போன்றவர்கள். கலைஞர் எழுதிய சங்கிலி சாமி சிறுகதையில் வரும் ‘சங்கிலிசாமி யார்’ போன்றவர்கள். அவர்கள் உதிர்த்த முத்தான வாக்கியம்தான் ‘நவீன இலக்கியத்தில்தான் எல்லாம் இருக்கிறது. பழைய இலக்கியத்தில் ஒன்றுமே இல்லை’ என்பது. அதை நாம் நம்பத்தான் செய்தோம். அதே மாதிரிதான் “திராவிட இயக்க இலக்கியம் என்று ஒன்று இல்லை. இருப்பதுகூட வெறும் பிரச்சாரம். வெறும் கோஷம்” என்று. அதையும் நாம் நம்பினோம். நமக்கு பூசாரிகளும், ஆதினங்களும் சொல்வதுதானே உண்மை. பழைய இலக்கியப் பூசாரிகளும் ஆதினங்களும் மட்டுமல்ல இன்றைய இலக்கியப் பூசாரிகளும், ஆதினங்களும் திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகளை, நாவல்களை, நாடகங்களை, கவிதைகளை படித்திருக்கிறார்களா? இல்லை. படிக்காமலேயே கருத்துசொல்கிறார்கள். அவர்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டு நாமும் அப்படியே நம்பிக்கொண்டிருக்கிறோம். படித்துப் பார்த்துவிட்டு ஏற்கலாம். நிராகரிக்கலாம். அதற்கு உரிமை இருக்கிறது. படிக்காமலேயே கருத்து சொல்வதற்கு உரிமை இருக்கிறதா? முதன் முதலாக பிராமணர் அல்லாதோரின் வாழ்க்கையை தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்தவர்கள் யார் என்ற கேள்வி முக்கியமானது. திராவிட இயக்க எழுத்தாளர்களின் இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது என்றே நான் நம்புகிறேன். இன்றைக்கு திராவிட இயக்க இலக்கியம் என்று ஒன்று இல்லை என்று சொல்கிற இதே இலக்கியப் பூசாரிகள், ஆதினங்கள் நாளைக்கு தலித் இலக்கியம் என்று ஒன்று இல்லை என்று சொல்வார்கள். அதை நீங்கள் ஏற்பீர்களா? அதற்காகத்தான் நான் திராவிட இயக்க எழுத்தாளர்களின் இலக்கிய பங்களிப்புப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன்.

• திராவிட இயக்க இலக்கியம் வேண்டும் என்று சொல்லும் போது தலித் இலக்கியம் என்பதும் அவசியமல்லவா?

            கட்டாயமாக. நம்முடைய எல்லாக் கிராமங்களிலும், நடைபாதை இரண்டு இருக்கிறது. பள்ளிக்கூடம், ரேஷன் கடை, கிணறு, பிணம் எரிப்பதற்கான இடம் என்று இரண்டு இரண்டாக இருக்கும்போது, இலக்கியம் மட்டும் இரண்டாக இருப்பதில் தவறில்லை. இது எதிர் இலக்கிய அரசியல் நிலைப்பாடு.

• நீங்கள் உங்களை ‘தலித்’ எழுத்தாளர் என்று அடையாளப்படுத்திகொள்ளவில்லை என்றாலும், நீங்கள் எழுதிய படைப்புகள் எல்லாம் தலித்களினுடைய வாழ்க்கையாகத்தான் இருக்கிறது. இது பற்றிய உங்களுடைய கருத்தென்ன?

            நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என்று சொல்ல முடியாது. நான் ஒரு கதையை எழுத நினைக்கும்போது, இது தலித்களின் வாழ்க்கையை சொல்ல வேண்டும் என்றோ, அல்லது தலித் அல்லாதவர்களின் வாழ்க்கையை சொல்ல வேண்டும் என்றோ தீர்மானித்துக்கொண்டு எழுதுவதில்லை. ஒரு எழுத்தாளனின் எழுத்து வாழ்க்கையில் அவனுடைய இளமைக்கால வாழ்க்கைதான் பெரும் பங்கு வகிக்கும். அந்த விதி – என்னுடைய எழுத்துகளுக்கும் பொருந்தும். இன்னொரு வகையில் சொன்னால், நான் வாழ்ந்ததுதான் என்னுடைய எழுத்து. அதற்கு யார் வேண்டுமானாலும் என்ன பெயர் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஒரு பெயரை, அடையாளத்தை முன்னிறுத்தி நான் எழுதுவதில்லை. எனக்கு சமூகத்துடன் உறவு கொள்வதற்கு சிறந்த கருவியாக இருப்பது எழுத்தாக இருக்கிறது. இலக்கியமாக இருக்கிறது. இசங்களின் சாயத்தை பூசிக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கோ, என் எழுத்திற்கோ ‘முற்போக்கு’ முகம் வேண்டாம்.

• நீங்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் முரண்பாடு இருக்கிறது. நீங்கள் தலித் என்கிற அடையாளத்தை தவிர்க்க நினைத்தாலும், தவிர்ப்பதாக நடித்தாலும் உங்களுடைய முதல் நாவலான கோவேறு கழுதைகள் நாவலே ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாழ்வைத்தானே எழுதினீர்கள்?

            நான் திரும்பவும் சொல்கிறன். நாவலை எழுதும்போது எனக்கு ஒடுக்கப்பட்ட சமூக வாழ்வை எழுதுகிறோம் என்ற அறிவோ, இப்படித்தான் எழுத வேண்டும், ஒடுக்கப்பட்டவரின் சார்பாகத்தான் எழுத வேண்டும் என்ற தெளிவான புரிதலோ இருந்தது என்று சொல்லமாட்டேன். அப்படி சொன்னால் அது முழுபொய். கோவேறு கழுதைகள் நாவலின் முதல் பிரதியை எழுதும்போது, நாவலுக்கான வடிவம், மொழி என்பது குறித்த அறிவுகூட எனக்கு இல்லை. போதிய எழுத்துப் பயிற்சிகூட எனக்கு அப்போது இல்லை. அப்போது நான் அதிகமாக படித்திருக்கவுமில்லை. நான் புரட்சியைப்பற்றி, விடியலைப்பற்றி, எழுதியதைதெல்லாம் படித்துவிட்டு திரு.எஸ்.ஆல்பர்ட், “புரட்சி, விடியல் பத்தியெல்லாம் நீ ஒண்ணும் எழுத வாணாம். ஒனக்கென்ன தெரியுமோ அத எழுது. திருச்சியப் பத்தி எழுதறத விட்டுட்டு ஒங்க ஊரப்பத்தி எழுது” என்று சொன்னார். எனக்கு என்னுடைய ஊரைப் பற்றித்தானே தெரியும். அதனால் என்னுடைய ஊரைப்பற்றி எழுதினேன். அதுதான் கோவேறு கழுதைகள் நாவல், செடல் நாவல். நான் எழுதியது தலித் இலக்கியமா, தலித் விரோத இலக்கியமா, உட்சாதி முரண்பாடா, நவீன இலக்கியமா, பின்நவீனத்துவ இலக்கியமா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னுடைய நாவலுக்கும் தெரியாது. கோவேறு கழுதைகள் நாவலும் சரி, செடல் நாவலும் சரி திட்டமிட்டு எழுதப்பட்டதல்ல. தானாக நிகழ்ந்த ஒன்று.

• கோவேறு கழுதைகள் எழுதியபோது இருந்த நிலையில்தான் இன்றும் இருக்கிறீர்களா? மாற்றம், புரிதல் ஏற்பட்டிருக்கிறதா?

            மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. புரிதல் ஏற்பட்டிருக்கிறது. அது என் எழுத்தில் வெளிப்படவே செய்கிறது. ஆனால் கோவேறு கழுதைகள் நாவல் எழுதியபோது இருந்த மனநிலை அப்படியே இருப்பது ஒரு வகையில் நல்லது. மற்றொரு வகையில் நல்லதல்ல.

• ஒடுக்கப்பட்டவர்களின் மனநிலையிலிருந்து எழுதிகொண்டிருந்த நீங்கள் கால மாற்றத்தால்தான் ஒடுக்குபவர்களின் மனநிலையிலிருந்து சாவுசோறு, போலீஸ், பெத்தவன் போன்ற கதைகளை எழுதினீர்களா?

            தொடர்ந்து படிப்பதால், தொடர்ந்து எழுதுவதால், ஒரு பயிற்சி ஏற்படுகிறது. அந்த பயிற்சியைத்தான் நான் சொன்னேன். கொள்கை மாற்றத்தைப் பற்றியல்ல. ஒடுக்கப்பட்டவரின் மனநிலையிலிருந்து சொல்வதா, ஒடுக்குபவரின் மனநிலையிலிருந்து சொல்வதா எது சரியானதாக இருக்கும். எது கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று யோசித்து எழுதினேன். பெத்தவன் கதையை பழனியின் குடும்பத்தின் மூலம் சொல்வதுதான் சரி என்று தோன்றியது. பாதிக்கப்பட்ட பையனின் குடும்பத்தின் வழியே கதையை சொல்லியிருந்தால் அது பச்சாதாபத்தை, இரக்கத்தை மட்டுமே கோரி இருக்கும். இதே நிலைதான் போலீஸ் கதைக்கும், ஒடுக்குபவரின் மனநிலையிலிருந்து ஒரு விஷயத்தை அணுகுவதற்கும், ஒடுக்கப்பட்டவரின் மனநிலையிலிருந்து ஒரு விஷயத்தை அணுகுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எழுதத் தொடங்குவது மட்டும்தான் எழுத்தாளனின் வேலை. எழுத ஆரம்பித்த பிறகு கதை தன்னைத்தானே எழுதிகொள்ள ஆரம்பித்துவிடும். கதையின் போக்கில் நல்ல எழுத்தாளன் குறுக்கீடு செய்ய மாட்டான். நானும் செய்வதில்லை.

• ஆனாலும் சாவுசோறு, போலீஸ், பெத்தவன் போன்ற கதைகளை ஒடுக்கப்பட்டவர்களின் பார்வையிலிருந்து எழுதியிருந்தால் இன்னும் மேலான படைப்பாக வந்திருக்குமோ என்ற எண்ணம் இருக்கிறது.

            அப்படி சொல்ல முடியாது. நீங்கள் சொல்வது உங்களுடைய அரசியல் பார்வையினால்தான். அரசியல் பார்வையை முன்னிருத்தி கதை எழுத முடியாது. கூடாது. அப்படி நான் எழுதியிருந்தால் பெத்தவன், போலீஸ் போன்ற கதைகள் இலக்கியப் படைப்பாக இருந்திருக்காது. சாதிசங்க அறிக்கையாக மட்டும்தான் இருந்திருக்கும். இலக்கியம் வேறு சாதி சங்க அறிக்கை வேறு. தமிழகத்தில் எப்போதெல்லாம் சாதிய ஆணவக்கொலை நடக்கிறதோ அப்போதெல்லாம் ஆயிரக்கணக்கான கண்டன அறிக்கைகள், கட்டுரைகள் எழுதப்படுகின்றன. இனியும் எழுதப்படும். அவ்வாறு எழுதப்படும் ஆயிரக்கணக்கான கண்டன அறிக்கைகளைவிட, கட்டுரைகளைவிட சாவு சோறு, போலிஸ், பெத்தவன்தான் உயிருடன் இருக்கிறது. இருக்கும். காரணம் அது இலக்கியப் படைப்பு. அரசியல் முழக்கம் எழுதுவது என் நோக்கமல்ல, வேலையல்ல. அசலான வாழ்வை குறுக்கீடு செய்யாமல் எழுதுவதுதான் என் வேலை. அப்படி எழுதப்படுவதுதான் இலக்கியம். கொள்கை அறிக்கை எழுதுவது எழுத்தாளனின் வேலை அல்ல. ஒரு செடி அதன் இயல்பில் முளைத்து வளர்ந்து வர வேண்டும். ஒரு பறவை அதன் இயல்பில் பறக்க வேண்டும். ஒரு செடியை உங்கள் இஷ்டத்திற்கு வளர்க்க முடியாது. ஒரு பறவையை உங்கள் இஷ்டத்திற்கு பறக்க வைக்க முடியாது. இது இலக்கியத்திற்கும் பொருந்தும்.

•உங்களுடைய மற்ற நாவல்களைக் காட்டிலும் செடலில் ஆவணத்தன்மை கூடுதலாக இருப்பதுபோல் தோன்றுகிறது. நான் சொல்வதை ஏற்பீர்கள் என்று நினைக்கிறேன்.

            நான் ஏற்கமாட்டேன். அதே நேரத்தில் தெருக்கூத்து சம்பந்தப்பட்ட பகுதிகளை சொல்கிறீர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். பல நூற்றாண்டுகளாக தெருகூத்து என்ற கலை வடிவம் நம்முடைய வாழ்வின் ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது. தெருக்கூத்துப் பற்றிய இலக்கியமாக எழுதப்பட்ட பிரதிகள் தமிழில் ஒன்றைக்கூட காட்ட முடியாது. அப்புறம், ஒரு நாவல் தனக்கு என்னென்ன வேண்டுமோ, அதை தானே உருவாக்கிக்கொள்ளும். ஆவணமும் ஒரு இலக்கிய வகைமைதான், மனித உடலில் எது அவசியமான பாகம், எது அவசியமற்ற பாகம்? தலையில் இருக்கும் முடிதான் நாம் உயிர்வாழ்வதற்கு உதவாத ஒன்று. ஆனால் முடிவெட்டும்போது கண்ணாடியை எத்தனை முறை நாம் பார்க்கிறோம். தவித்துப்போகிறோம். அது மாதிரிதான். செடலில் தேவையற்ற பகுதி என்று எதுவுமில்லை. ஆவணத்தன்மையான பகுதி என்று எதை கூறுகிறீர்களோ அந்த பகுதிதான் நாவலுக்கான உயிர் என்று நான் நம்புகிறேன்.

• உங்களுடைய சிறுகதைகள், நாவல்கள் எல்லாமே ஒரே சொல்முறையாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதை ஏற்றுக்கொள்வீர்களா?

            ஏற்றுக்கொள்ளமாட்டேன். எங்கதெ-யை படித்திருக்கிறீர்களா? ஈசனருள் கதையை படித்திருக்கிறீர்களா? படித்துவிட்டு வந்து பேசுங்கள். பொன்னம்மாவின் குடும்ப கதை என்ற சிறுகதையையும் படியுங்கள். அதையும் மீறி ஒரே சொல்முறையாகத்தான் இருக்கிறது என்று உங்களுக்குத் தோன்றினால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று நான் கட்டாயப்படுத்தமாட்டேன். ஒரு கதையை ஆயிரம் பேர் படிப்பார்கள். ஆயிரம் பேரும் ஆயிரம் விதமான கருத்தை சொல்வார்கள். ஆயிரம் விதமான கருத்தையும் கேட்டுவிட்டு கதையை எழுத முடியுமா? கதை மாந்தர்கள் சொல்வதைத்தான் நான் எழுதுகிறேன். கதை படிப்பவர்கள் சொல்வதை அல்ல.

•உங்களுடைய படைப்புகள் எல்லாமே எதார்த்த கதைகளாக இருக்கின்றன. பின் நவீனத்துவ, மேஜிக் ரியலிசம், சர்ரியலிசம், எக்ஸிஸ்டன்ஸியலிசம் போன்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டு எழுதுவதற்கு நீங்கள் ஏன் முயற்சிக்கவில்லை?

            நான் எழுதுவது பின் நவீனத்துவ எழுத்து, நான் எழுதுவது மேஜிக் ரியலிச எழுத்து. என் எழுத்து சர்ரியலிச எழுத்து, என் எழுத்து எக்ஸிஸ்டன்ஸியலிச எழுத்து என்று அறிக்கை விட்டுக்கொண்டு, விளம்பரப் படுத்திக்கொண்டு எழுதப்பட்ட எல்லா எழுத்துகளுமே அதை எழுதிய எழுத்தாளர்களின் கண்முன்னாலேயே செத்துப்போனதை பார்த்திருக்கிறேன். தத்துவம் தத்துவமாக இருக்கட்டும். இலக்கியம் இலக்கியமாக இருக்கட்டும். தரைமீதுதான் வீடு கட்டமுடியும். நீரின்மீதோ, ஆகாயத்திலோ கட்ட முடியாது. நீரின் மீதும் வீடு கட்டலாம் என்று சொன்னால், அதற்கு பெயர் மிதக்கும் வீடுகள் என்று பெயர். நான் எனக்கான வீடுகளை தரையில்தான் கட்டுவேன். மிதக்கும் வீடுகளை அல்ல. நான் எதார்த்த வகை கதைகளையே எழுதவிரும்புகிறேன். நிஜ வாழ்க்கையின் மீது கட்டப்பட்ட கட்டிடம்தான் என் எழுத்து. யதார்த்தத்தை மீறி நான் ஒருவரிகூட என் கதைகளில் எழுதியதில்லை. வாழ்க்கையின் வாழ்க்கைதான் இலக்கியம். என்னுடைய எழுத்துக்கள் எல்லாமே வாழ்க்கையின் வாழ்க்கைதான். எனக்கு தத்துவம் முக்கியமல்ல. வாழ்க்கைதான் முக்கியம். எனக்கு கற்பனை முக்கியமல்ல உண்மைதான் முக்கியம். நான் இதுவரை எழுதியதெல்லாம் நிஜத்தில் நாம் காண்பதுதான். ஒரு புகைப்படக் கருவியின் லென்ஸ் எப்படி பதிவு செய்யுமோ அப்படி ஒரு எழுத்தாளன் சமூகத்தை பதிவு செய்யவேண்டும். நான் ஒரு தத்துவத்தை விளக்குவதற்காக கதை எழுதவில்லை. வாழ்க்கைக்கு ஒரு விளக்கத்தை சொல்வதற்காகவும் கதை எழுதவில்லை. வாழ்க்கை இப்படி இருந்தது, இப்படி இருக்கிறது என்று சொல்வதற்காக மட்டுமே எழுதுகிறேன். இசங்களின் நிழலில் நானோ, என் எழுத்தோ ஒதுங்கி நிற்பதற்கு விரும்பியதில்லை. அதே மாதிரி இசங்களின் பாரத்தை என் எழுத்தின்மீது ஏற்றவும் நான் விரும்புவதில்லை.

•உங்களுடைய எழுத்துக்கான வரையறையாக எழுதச்சொல்வீர்கள்?

எதுவுமே இல்லை என்பதுதான். வாழ்க்கைக்கு எப்படி ஒரு வரையறையை உருவாக்க முடியாதோ, அதே மாதிரிதான் இலக்கியத்திற்கும் ஒரு வரையறையை உருவாக்க முடியாது. உலகம் எப்போதும் எழுதப்படுவதற்காக காத்துக்கொண்டிருக்கிறது. உலகம் எப்படி இருக்கிறதோ அப்படியே எழுதுவதுதான் இலக்கியத்திற்கான வரையறை என்று நம்புகிறேன். வாசிப்பனுபவம் இலக்கிய அனுபவம் என்பது மொழியால் கட்டமைக்கப்படுவது. Literature is explained literature understood என்பதுதான் என்னுடைய பதில்.

• நவீனத்துவ இலக்கியம், பின் நவீனத்துவ, மேஜிக்ரியலிச இலக்கியம் என்று வகைப்படுத்துவதெல்லாம்?

            விமர்சகர்கள், உங்களைப்போன்ற பேராசிரியர்கள் சூட்டுகிற பட்டப்பெயர்கள். எனக்கு தேவை இலக்கியம். பட்டப் பெயர்கள் அல்ல. பலருக்கும் பட்டப் பெயர்கள் அவசியமாக இருக்கிறது. எழுத்தாளருக்கும், பின் நவீனத்துவ எழுத்தாளர் என்று விளம்பர படுத்திக்கொள்பவருக்குமான வேறுபாடு என்ன? எழுதத் தெரியாதவர்கள்தான், நவீனத்துவ பின் நவீனத்துவ எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்வார்கள். அப்படி சொல்கிறவர்களின் எழுத்துகள், தினமலர் செய்தித்தாளைவிட மோசமாக இருக்கும். தலித்யம், பெண்ணியம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், மேஜிக் ரியலிசம் என்பதெல்லாம் பிராண்ட்தான். திறமையற்றவர்கள் பிராண்டுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

•உங்களுடைய கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், எங் கதெ, செல்லாத பணம் நாவல்களில் ஆங்காங்கே அரசியல் சார்ந்த செயல்பாடுகள் வெளிப்படும். கட்சிக்காரன், நம்பாளு, சிறுகதைகளில் கூடுதலாக அரசியல்தன்மை வெளிப்பட்டது. குறிப்பாக தி.மு.க.விற்குள் இருக்கக்கூடிய சாதிய மேலாதிக்கம் பற்றி பேசிய கதைகள் என்று அவற்றை சொல்லமுடியும். இதுவரை மறைமுகமாக அரசியலை எழுதிவந்த நீங்கள் ‘வாழ்கவாழ்க’ நாவலில் நேரிடியாக அரசியலை எழுதியிருக்கிறீர்கள். அதலும் கடுமையாக ஜெயலலிதாவையும், அ.தி.மு.க.வையும் விமர்ச்சித்துள்ளீர்கள். இந்த மாற்றம் உங்களுக்குள் எப்படி நடந்தது?

            போலீஸ், நன்மாறன்கோட்டைகதை, நம்பாளு, கட்சிக்காரன் போன்ற கதைகளை எழுதும்போது அரசியலை மறைமுகமாக சுட்டிக்காட்ட வேண்டிய நிலை இருந்தது. வாழ்க வாழ்க – நாவலில் நேரிடியாக பேச வேண்டிய சூழல். கதையின் அமைப்பு அப்படி. ஜெயலலிதாவையும், அ.தி.மு.க.வை விமர்க்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. தமிழ்நாட்டு அரசியல் சூழலை முழுமையாக பாரபட்சமின்றி காட்டவேண்டும் என்று நினைத்தேன், பொதுவாக தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் ‘எனக்கும் என் எழுத்துக்கும் அரசியல் இல்லை என்று அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். தங்களை புனித இலக்கியவாதியாக காட்டிக்கொள்கிற மனப்போக்கும், அதில் ஒரு மேட்டுக்குடித்தனமும் இருப்பதைப் பார்க்க முடியும். எழுதுவதுகூட ஒரு அரசியல்தான் என்பதைகூட அறியாதவர்களாக தமிழ் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் தாங்கள் எழுதுவது உன்னதமான புனித இலக்கியம் என்றும் சொல்கிறார்கள். ஒன்றை எழுதிக்காட்ட தெரியாதவன் நூறை எழுதி காட்டியது போன்றதுதான் இது. தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவில்கூட இவ்வளவு நேரடியாக அரசியலை - அதுவும் நிகழ்கால அரசியலை பேசிய படைப்பு வேறு இல்லை என்றே நினைக்கிறேன். அரசியலைப் பற்றிப் பேசினாலும், அது வெற்று அரசியல் கோஷமாக இல்லாமல் இலக்கியப் படைப்பாக இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். வாழ்கவாழ்க நாவலை முன்வைத்து தமிழ்நாட்டில் அரசியல் நாவல்கள் வரவேண்டும் என்பதுதான் என் ஆசை. நம்முடைய எழுத்தாளர்கள் அரசியல் வேறு, இலக்கியம் வேறு என்று நினைக்கிறார்கள். அப்படியே எழுதவும் செய்கிறார்கள். அது தவறு. இரண்டும் இரண்டற கலக்க வேண்டும். தமிழ் எழுத்தாளர்கள் கவிதை, நாவல், சிறுகதைகளைத்தவிர வேறு எதையும் படிப்பதில்லை. அதுவும் அவரவர் எழுதியதைத்தான் அவரவர்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அறிவியல் சார்ந்த, வரலாறு, அரசியல், பொருளாதாரம் சார்ந்த நூல்களை படிப்பதே இல்லை. அவ்வாறு படிக்கும்போது இலக்கியத்தின் தன்மையே மாறிவிடும். பிறத் துறை சார்ந்த நூல்களைப் படிக்காததால்தான் தமிழ் எழுத்தாளர்கள் திரும்பத்திரும்ப குடும்பக் கதையை மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

எழுத ஆரம்பிப்பதற்கு முன்பு உங்களுடைய வாசிப்பு எப்படி இருந்தது?

            நான் எழுதுவதற்கு முன்பு நிறைய படித்ததில்லை. அதற்கான வாய்ப்பும் எனக்கு இல்லை. படிக்க வேண்டும் என்று தோன்றியதுமில்லை. இலக்கியக் கூட்டங்களுக்கு போக ஆரம்பித்த பிறகுதான் எனக்கு புத்தகங்கள் அறிமுகமாயின. படிக்க ஆரம்பித்ததுமே எழுத வேண்டும் என்று தோன்றியது. எழுதஎழுத நிறைய நிறைய படிக்கிறேன்.

எழுதுவதற்கு முன்பாக நிறைய வாசித்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நன்றாக எழுத வராது என்று கூறுகிறார்களே?

            எழுதத் தொடங்குவதற்கு முன்பு படித்திருந்தால், படிக்கிற பழக்கம் இருந்தால் நல்லது. எழுத ஆரம்பித்த பிறகுகூட படிக்கலாம். அது ஒரு குற்றம் இல்லை. நன்றாக படித்தவர்களால்தான் எழுத முடியும் என்பதை நான் ஏற்கமாட்டேன். மழைக்காககூட நான் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கியதில்லை என்று சொன்ன கி.ரா. எழுத்தாளர் இல்லையா? அவர் எழுதியது இலக்கியங்களாக மதிக்கப்படவில்லையா? அச்சிடப்பட்ட புத்தகங்களை படித்தவர், படிக்க தெரிந்தவர்கள்தான் அறிவாளியாக இருக்க முடியும், இலக்கிய மேதையாக இருக்க முடியும் என்பது கற்பனை. நம்முடைய முன்னோர்கள் பலரும் அச்சிடப்பட்ட புத்தகங்களை படித்தவர்களில்லை. ஆனால் நல்ல கதை சொல்லிகளாக இருந்திருக்கிறார்கள். ஒப்பாரி பாடல்கள் படித்த பெண்களால் பாடப்பட்டதில்லை. ஒப்பாரி பாடல்கள், நாட்டுபுறப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் எல்லாம் படிக்காதவர்களால்தான் உருவாக்கப்பட்டன. அனுபவத்தை சொல்வதற்கு மொழி எப்படி ஒரு கருவியாக இருக்கிறதோ அதேமாதிரிதான் படிப்பு என்பது. படிப்பு உங்களுடைய எழுத்தை மேம்படுத்த முடியும். அவ்வளவே. வாழ்க்கைதான் பெரிய படிப்பு. அதை படித்தால் போதும். ஆனாலும் படிப்பதற்கும் எழுதுவதற்கும் இடையில் நெருக்கமான உறவு இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

உங்களுடைய சிறுகதைளான ஆகாசத்தின் உத்தரவு, போலீஸ், அணையும் நெருப்பு, பெத்தவன், அம்மா, நிஜமும் பொய்யும் போன்றவை நாடகமாக பல இடங்களில் நிகழ்த்திக்காட்டப்பட்டிருக்கிறது. அந்த நாடகங்கள் உங்களுக்கு பிடித்திருந்ததா? கதையை சிதைத்துவிட்டார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டதா?

            ஒரு கதை எழுத்து வடிவத்திலிருந்து காட்சி வடிவத்திற்கு மாறும்போது மாற்றங்கள் ஏற்படலாம். ஏற்படும். மூலக்கதையை அப்படியேதான் நாடகமாக மாற்றவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. அதற்கு அவசியமுமில்லை. எழுத்து எப்படி ஒரு கலை வடிவமோ, அதே மாதிரி நாடகமும் ஒரு கலை வடிவம். அதற்கென்று தனித்த கூறுகள் உண்டு. அந்த கூறுகளில் அவை முழுமைபெற்று ஒளிர வேண்டும் என்பதுதான் என் விருப்பம். நா.முத்துசாமி என்னுடைய இரண்டு கதைகளை நாடகமாக்கி இருக்கிறார் பேரா.சி.ராஜி. நான்கு கதைகளை நாடகமாக்கி இருக்கிறார். அவர்களுடைய உரிமைகளில் நான் தலையிட்டதில்லை. முடிந்தவரை அவர்களும் மூலக்கதைக்கு நியாயம் செய்யும் விதத்தில்தான் நாடகமாக்கியிருந்தார்கள்.

• உங்களுடைய பார்வையில் சிறந்த இலக்கிய படைப்பு என்பது எப்படியாக இருக்க வேண்டும்?

            ஒவ்வொரு கவிதையும் மற்றொரு கவிதையினுடைய நகல்தான். ஒவ்வொரு நாவலும் மற்றொரு நாவலினுடைய நகல்தான். ஒவ்வொரு சிறுகதையும் மற்றொரு சிறுகதையின் நகல்தான். ஒவ்வொரு புத்தகமும் அப்படித்தான். இலக்கிய நகலெடுப்பு. எல்லா ஒலிகளையும்விட மேம்பட்டது சொற்களின் ஒலி. அதுதான் வார்த்தையாக, வாக்கியமாக, இலகக்கியமாக மாறுகிறது. சொற்களை கூட்டு சேர்ப்பது என்பது ஒரு புதிர் விளையாட்டு. அதிகமான புதிர் விளையாட்டுகளைக் கொண்டிருப்பதுதான் சிறந்த படைப்பு. வார்த்தைகளின் கூட்டு சேர்க்கையில் நிறைந்திருக்கிற புதிரை அவிழ்ப்பது எளிதல்ல. வார்த்தைகளின் கூட்டு சேர்க்கையில் உருவான புதிரை உருவாக்குவதும், அவிழ்ப்பதும்தான் எழுத்து. இலக்கியம். படிப்பு.

சிறுகதைக்கான, நாவலுக்கான கரு எப்படி உங்களுக்கு கிடைக்கிறது. கிடைத்த கருவை எப்படி சிறுகதையாக, நாவலாக எழுதுகிறீர்கள்?

            என்னுடைய எந்த ஒரு சிறுகதையும், எந்த ஒரு நாவலும், கதை எழுதியே ஆகவேண்டும், நாவல் எழுதியே ஆகவேண்டும் என்று திட்டம்போட்டு, ரூம்போட்டுக்கொண்டு எழுதியதில்லை. பத்திரிகைக்காரர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக நான் ஒரு கதையைக்கூட எழுதியதில்லை. நடந்துபோகும்போது, பஸ்ஸில், ரயிலில் போகும்போது பார்த்தது, கேட்டதுதான். பிறருடன் பேசிக்கொண்டிருக்கும் போதுகூட ஒரு கதைக்கான கரு கிடைக்கும். சில நேரங்களில் ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கும்போதுகூட ஒரு கதைக்கான கரு தோன்றும். ஒரு வார்த்தை, ஒரு வாக்கியம்கூட ஒரு கதையை கொடுத்துவிடும். நன்மாறன் கோட்டை கதை, போலீஸ், உயிர்நாடி, ஈசனருள், திருட்டுப்போன பொண்ணு போன்ற கதைகள் புத்தகங்களை படித்துக்கொண்டிருக்கும்போது உருவானது. அதேமாதிரி ஜெயலலிதா பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது உருவானதுதான் ‘வாழ்கவாழ்க’ நாவல். ஆலடி பஸ், கொலைச்சேவல், வீடும் கதவும், சாமி மேல சத்தியம் போன்ற கதைகள் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது உருவான கதைகள்தான். கதை எழுதுவது மட்டும் கலை அல்ல. ஒரு கருவை அணுகுவதும் ஒரு கலைதான். கதையை படிப்பதும் ஒரு கலைதான். நான் பல இடங்களில் சொன்ன வார்த்தையைத்தான் நான் இப்போதும் சொல்கிறேன். என்னுடைய சிறுகதைகளும், நாவல்களும் சமூகம் உருவாக்கிய கதைகள்தான். சமூகம் எழுதிய கதைகள்தான். சமூகம் உருவாக்கிய, சமூகம் எழுதிய கதைகளில் நான் ஒரு பாத்திரம் மட்டுமே. எழுத்தாளன் என்ற பாத்திரம். அதற்குமேல் நான் எழுதிய சிறுகதைகளில், நாவல்களில் எனக்கு எந்த உறவுமில்லை. உரிமையுமில்லை.

நீலம் மாத இதழ் (நவம்பர் 2020)

1 கருத்து: