மரணத்தின்
வாசனை (சிறுகதைத் தொகுப்பு) – த.அகிலன்
விமர்சனம்
இமையம்
கடந்த
கால் நூற்றாண்டுகளுக்கு மேல் தமிழ் மொழியில் எழுதப்பட்ட இலக்கிய படைப்புகளில்
உயிரோட்டமுள்ள படைப்புகள், அன்றாட வாழ்வின் நெருக்கடிகளை பாசாங்கு இல்லாமல்
எழுதிய படைப்புகள் என்று ஈழத்து படைப்புகளை மட்டுமே சொல்லமுடியும். ஈழத்தில்தான் வாழ்வதற்கான நெருக்கடிகள் இருந்தன. அடுத்த கணத்தில் உயிருடன்
இருப்போமா? யார் உயிருடன் இருப்பார்கள்? யார் இறப்பார்கள் என்ற நிச்சயமில்லாத வாழ்க்கை.
அடுத்த கணத்தை உயிருடன் இருந்து எப்படி எதிர்கொள்வது என்ற சவால் ஈழத்தில்
இருந்ததால் அங்கு இலக்கியம் படைக்கப்பட்டது. தமிழ்நாட்டில்
வாழ்வதற்கான நெருக்கடிகள் இல்லை. போராட்டங்கள் சவால்கள் இல்லை. அதனால் இங்கு
வீரியமான இலக்கிய படைப்புகள் உருவாகவில்லை. அதனால் தமிழ்நாட்டு எழுத்தாளர்கள்
நகலெடுக்கிற, போலச் செய்கிற வேலைகளில் ஈடுபட்டார்கள்.
நகலெடுக்கிற போலச்செய்கிற வேலைகள்கூட நிறைவாகச்
செய்யவில்லை.
1980க்குப் பிறகு ஈழத்தில் எழுதப்பட்ட படைப்புகள் தமிழ்நாட்டிலிருந்த
வாசகர்களை படைப்பாளிகளை முற்றிலும் நிலைகுலையச் செய்தவை. ஈழப் படைப்புகளின் வழியாக
அனுபவித்த துயரங்களை எளிதில் மதிப்பிட முடியாது. தமிழ்நாடு ஈழத்துக்கு முழுமையாக
ஆதரவு கொடுத்த நேரம் அது. இலங்கை பேரினவாத அரசின் கொடூர முகத்தையும்
நடவடிக்கைகளையும் அறிந்து வேதனைப்பட்ட காலத்தில்தான் ஈழ விடுதலைப் போராட்ட
இயக்கங்களின் நடவடிக்கைகள் குறித்து வந்த படைப்புகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தின.
கோவிந்தனின் புதியதோர் உலகம் என்ற நாவல் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் ஒரு
முகத்தைக் காட்டியது. அதை அடுத்து விடுதலைப் போராட்ட இயக்கங்களின் இன்னொரு
முகத்தைக் காட்டியது ஷோபாசக்தியின் கொரில்லா, ம்
இந்த நாவல்கள் தந்த அதிர்ச்சி விவரிக்க முடியாதது. எது நிஜம்?
சேரன், வ.ஐ.ச ஜெயபாலன், சோலைக்கிளி,
அனார் போன்றவர்கள் காட்டிய உலகம் வேறு. கோவிந்தன், ஷோபாசக்தி, ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்
மு.புஸ்பராசா போன்றவர்கள் காட்டிய உலகம் வேறு. அண்மையில் வெளிவந்த உமா வரதராஜனின்
மூன்றாம் சிலுவை நாவல் காட்டிய உலகம் மற்றவர்கள் காட்டிய உலகத்திற்கு நேர்
எதிரானது மட்டுமல்ல முரண்பட்டதும் கூட. இலக்கிய படைப்புகளின் வழியாக, ஊடகங்கள் வழியாக அறிந்திருந்த ஈழ மக்களின் வாழ்வு குறித்த நம்முடைய
எண்ணங்களை கற்பனைகளை முற்றிலுமாக மாற்றிப் போடுவதாக இருந்தது மூன்றாவது சிலுவை
நாவல். கடந்த 30 ஆண்டுகளில் ஈழத்திலிருந்து இப்படியான
படைப்பு ஒன்று வந்ததில்லை. மூன்றாவது சிலுவை காதல் சம்பந்தப்பட்ட நாவல்.
கிழவனுக்கும் குமரிக்குமான காதல். இல்லாதவளுக்கும் இருக்கப்பட்டவனுக்குமான
காதல். கிழவனை மகிழ்ச்சிப்படுத்தி குமரிப்பெண் பெறும் பணம் அதற்கான நாடகம்,
பணத்தை பொருளைக் கொடுத்து குமரியோடு உறவுகொள்ளுதலுக்கான நாடகம்,
மகளின் இளமையைப் பயன்படுத்தி பணம் பார்க்கும் சுகத்தை அனுபவிக்கும்
தாய். இந்நாவலின் வழியாக தமிழ் வாசகன் அடைந்த அதிர்ச்சி ஏமாற்றம் கொஞ்சமல்ல. இலங்கை
பேரினவாத அரசின் கொடூரம் குறித்த ஈழவிடுதலைப் போராட்ட சாதக பாதகமான நடவடிக்கைகள்,
செயற்பாடுகள் இருபக்க போரினால் புறப்பட்ட நெருக்கடிகள், மக்கள் பட்ட அவதி குறித்து நாவலின் எங்குமே பதியப்படவில்லை. விநோதம்தான்
இந்த நாவலைப் படித்த பிறகு மனதில் ஈழப்போரினால் அகதிகளானவர்கள் யார்? உயிரிழந்தவர்கள் யார்? என்ற கேள்வி எழுகிறது.
கோவிந்தன்,
ஷோபாசக்தி, சக்கரவர்த்தி, சேரன், ஜெயபாலன், உமா வரதராஜன்,
சோலைக்கிளி, அனார், மு.புஸ்பராசா
போன்றவர்கள் காட்டிய உலகிற்கு நேர் எதிரான முற்றிலும் புதிய ஒரு உலகத்தை மரணத்தின்
வாசனை என்னும் சிறுகதைத் தொகுப்பில் த.அகிலன் காட்டியிருக்கிறார். அதாவது போர்
தின்ற சனங்களைப் பற்றிய கதைகள். ஈழப்படைப்பாளிகளில் யாரும் காட்டாத ஒரு உலகத்தை
த.அகிலன் காட்டுகிறார். இது அசல். நகல் எடுத்ததோ போலி
செய்ததோ அல்ல. இது கதை அல்ல. நிஜம். வாழ்ந்த வாழ்க்கையில்
இருந்து ஒரு பகுதியை எடுத்து அதற்கு மொழி வழியாக வடிவம் கொடுக்கப்பட்டது.
மரணத்தின் வாசனை தொகுப்பில் உள்ள கதைகளில் விவரிக்கப்பட்டுள்ள காட்சிகள் மனதிலும்
கண்களிலும் கற்சிற்பமாக நிற்கின்றன. பொதுவாக போர் தின்ற சனங்களைப் பற்றிய
கதைகள்தான் என்றாலும், தன் சொந்த மனிதர்களை பறிகொடுத்த
இழப்புக்களின் வழியாக கதை சொல்லப்படுகிறது. 7 வயதிலிருக்கிற
சிறுவன் 20 வயதுக்குள் சந்திக்கிற மரணங்களின்
காட்சிகளே இச்சிறுகதைகள்.
மரணத்தின்
வாசனை தொகுப்பின் முதல் கதை “ஒரு சின்ன பையனின்
அப்பா செத்துப் போனார்” என்பது. போர்
என்றால் என்ன? மரணம் என்றால் என்ன?
எதற்காக எப்படி போர் நடக்கிறது என்று தெரியாத வயதில் ஒரு சிறுவன் தன் தந்தையை
போருக்குத் தின்னக்கொடுக்கிறான். ஏழு வயது குழந்தை,
இயற்கையாக அல்ல போரினால் பீரங்கியால் கொல்லப்பட்ட தன் தந்தையின் உடலை பிணத்தைப்
பார்த்து என்ன நினைத்திருக்கும்? அந்தப் பிஞ்சு உள்ளத்தின்
துயரினை மொழி தாங்குமா சொல்லுமா என்பது சந்தேகமே. நிஜமான வாழ்க்கையைப் பதிவு
செய்யும் போது வாழ்வின் பலம் தான், அதன் உண்மை தான்,
முதன்மை பெறுகிறது. மொழி இரண்டாம் பட்சமாகிறது. அது கவிதையாக
இருந்தாலும் . ஒரு ஊரில் ஒரு கிழவி என்ற கதையிலும் மொழி, சொற்கள்,
வார்த்தைகள் என்பது ஒரு ஊடகம் மட்டுமே என்பதை வாசகனால் எளிதில்
உணரமுடியும். தான் வாழ்ந்த தன்னை வாழவைத்த மண்ணை விட்டு பிரிய முடியாமல்
தவிக்கிறாள் ஒரு கிழவி. விமானக் குண்டுவீச்சுகளுக்குப் பயந்து கொண்டு ஊரே காலியாகி
விடுகிறது, ஆனால் கிழவி போகவில்லை. மண்ணும் சாமியும் தன்னை
காக்கும் என்று நம்புகிறாள். சாமி தனிமையில் கிடக்குமே என்று கவலைப்படுகிறாள்.
தனிமையில் கிடக்கிற சாமியை அவள்தான் உருவாக்கினாள். மனிதர்கள் இல்லாத இடத்தில்
தெய்வங்களுக்கு என்ன வேலை?
விலங்கினங்களிலேயே பாவப்பட்ட விலங்கினம் மனித இனம் ஆகத்தான் இருக்க முடியும். அதற்குத்தான் ஆசைகள் கனவுகள் ஏக்கங்கள் நோக்கங்கள் கொள்கைகள் தத்துவங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும்விட இடத்தின் மீதான ஆசை இருக்கிறது. குமார் அண்ணாவும் மிளகாய் கண்டுகளும் என்ற கதையில் இதைத்தான் நாம் பார்க்கின்றோம். ஒரு விவசாயி தன் பெண்டாட்டி பிள்ளைகளை விட அவன் உருவாக்கிய பயிர்களைத்தான் அதிகமாக நேசிக்கிறான். அந்தப் பயிர்களை காப்பதே தன் வாழ்க்கை என்று கருதுகிறான். தன் நிலமே தன் வாழ்வு என்று வாழ்கின்ற நிலத்தை விட்டுப் பிரிந்தால் செத்து விடுவோம் என்று எண்ணுகிற ஒரு மனிதனின் மனதை கதையில் பதிய வைப்பது சாத்தியமல்ல. விமானக் குண்டுகளுக்கு, பீரங்கிக் குண்டுகளுக்குப் பயந்துகொண்டு முகமறியாத முன்பின் தெரியாத திசையில் மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கிற நேரத்தில், வயலில் தான் நட்டு வளர்த்த மிளகாய் செடிகள் தண்ணீர் இல்லாமல் கருகி விடுமே என்ற கவலையில் சுடுகாடு மாதிரி மாறிவிட்ட கிராமத்தில் இருக்கிற வயலுக்கு வருகிற ஒரு மனிதன் பைத்தியமாக்கப் படுகிறான், பைத்தியம் ஆகி விடுகிறான். குமார் என்ற மனிதனை எது பைத்தியமாக்கியது? மிளகாய்க்கு தண்ணீர் பாய்ச்சுவது குற்றமா? இந்தக் குற்றத்திற்காகவா ராணுவம் அவனைப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்து பைத்தியமாக்குகிறது. மனிதர்களை ஒட்டுமொத்தமாக விஷவாயு குண்டுகளை வீசி கொல்கிறவர்களுக்கு பதக்கம், சமூக அந்தஸ்து, வீரன் என்ற பட்டம் மிளகாய் செடிக்கு தண்ணீர் பாய்ச்சப் போகிறவனுக்கு துப்பாக்கி ரவையின் மூலம் மரணம் பரிசாக அளிக்கப்படுகிறது. இப்படியான பரிசை கொடுக்கிற மனித இனத்தை விட கேவலமான விலங்கு உலகில் வேறு என்ன இருக்க முடியும்? த. அகிலனின் கதைகளில் மனிதர்கள் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் அதோடு காணாமல் போகிறார்கள். காணாமல் போகிறவர்களுக்குகூட தாங்கள் காணாமல் போய் இருக்கிறோம் என்பது தெரியவில்லை. காணாமல் போனவர்களை மருத்துவமனையின் பிணவறைகளில் தான் தேட வேண்டியிருக்கிறது. குவிக்கப்பட்டுள்ள பிணங்களுக்கிடையில், குவிக்கப்பட்டுள்ள எலும்புகளுக்கிடையில் தங்கள் உறவினர்களுடைய பிணம் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு தான் எல்லோரும் தேடுகிறார்கள். தங்களுடைய ஆசையில் வெற்றி பெற்றவர்கள் என்று ஒருவரையும் காட்ட முடியாது. தாயை, தந்தையை, சகோதரனை,குழந்தைகளை, உறவுகளைப் பறிகொடுத்தபடியே இருக்கிறார்கள். இழப்பின் வலியை பொறுக்க முடியாமல் கதாசிரியர் கேட்கிறார் ”போரை யார் கொண்டு வந்தது?” இந்த கேள்வி ஒவ்வொரு கதையிலும் திரும்பத் திரும்ப கேட்கப்படுகிறது. இக்கேள்விக்கு யாரிடம் இருக்கிறது பதில்?
எந்த கணம் வரை
உயிருடன் இருப்போம் என்று தெரியாது. தன்னுடன் இருக்கும் மனிதர்களில் யார் எப்போது
காணாமல் போவார்கள் என்பது தெரியாது. விமானக் குண்டுவீச்சில் பீரங்கி குண்டு
வீச்சில் யாருடைய உடல் கூழாகும் என்பது தெரியாது. யாரை எப்போது ராணுவம் பிடித்துக்
கொண்டு போகும் என்பதும் பிடித்துக் கொண்டு போன மனிதனை விடுவார்களா என்பதும் தெரியாது.
ஒவ்வொரு ஊராக ஒவ்வொரு இடமாக எத்தனை காலத்திற்கு மாறி மாறிச் சென்று
கொண்டே இருக்க வேண்டும் என்பதும் தெரியாத நிலையில் அடுத்த வேளை சோறு சாப்பிட
முடியுமா என்பது கூடத் தெரியாத நிலையில் ஒரு மனிதனுக்கு பைத்தியம்
பிடிக்காமல்(விசர்) இருந்தால் தான் அதிசயம். ”தோற்ற
மயக்கங்களோ” கதையில் அகிலனின் அண்ணனுக்குப் பைத்தியம்
பிடித்துவிடுகிறது. பைத்தியம் பிடித்ததற்கு அவனா காரணம்? தலைக்கு
மேலே குண்டுவீச விமானம் பறந்துகொண்டிருக்கிற சத்தம் ஓயாமல்
கேட்டுக்கொண்டிருக்கிறது. சுற்றி வளைத்திருக்கிறது ராணுவம்
துப்பாக்கிகளுடன், பீரங்கிகளுடன் - ஆனாலும் மனிதர்கள்
உண்டார்கள், உறங்கினார்கள், முன்பின்
தெரியாத ஊர்களுக்கு ஓடினார்கள், செத்துப்போனார்கள். மரணங்கள்
பல மாதங்களுக்குப் பிறகே அறிவிக்கப்படுகின்றன. அதுவும் குறுஞ்செய்தியாக. ”நீ போய் விட்ட பிறகு” என்ற கதையில் வரும் சம்பவங்கள்
மனதை உறைய வைக்கின்றன. நாம் எப்படிப்பட்ட காலத்தில், எப்படிப்பட்ட
சமூகச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி முக்கியமானது. இந்த
கேள்வியைத்தான் த.அகிலன் தன் வலியின் வழியே, தன் எழுத்தின்
வழியே கேட்கிறார். நம்மால் வெட்கப்பட மட்டுமே முடியும்.
மரணத்தின்
வாசனை தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளுமே போரில் வென்றவர்களைப் பற்றி பேசவில்லை,
போரில் தோற்றவர்களைப் பற்றியும் பேசவில்லை, இருபக்க
போரிலும் மாண்டவர்களைப் பற்றி, போர் தின்றவர்களுடைய கதையைப்
பேசுகிறது. ஒரு மரணத்திற்காக அழுதுகொண்டிருக்கும் போது
அடுத்த மரணம் நிகழ்கிறது. அந்த மரணத்தை அடுத்து அடுத்த மரணம் - அடுத்தடுத்து
மரணங்கள் நிகழும் காலத்தில் எந்த மரணத்திற்காக அழுவது. சாவு மட்டுமே சொந்தம்,
மரணம் மட்டுமே எஞ்சி இருக்கிறது என்ற சூழலில்
வாழ்ந்த, செத்த மனிதர்களுடைய கதைகள் எனலாம். தினம் தினம்
மனிதர்களை சாவுக்கு கொடுத்துவிட்டு வாழ்ந்த ஒருவன் சொன்ன கதைகள். விவரணைகளாக,
விளக்கங்களாக இல்லாமல் வாழ்க்கை அனுபவமாக இருக்கிறது. போர் என்றால்
வெற்றி ,வீரம், பெருமை, கௌரவம், பட்டம், பதக்கம்
இதைத்தான் நாம் போற்றி வந்திருக்கிறோம். இதைத்தான்
நாம் வரலாறாக்கி, குழந்தைகளுக்குப் பாடமாகச் சொல்லித்
தருகிறோம். போருக்குச் சம்பந்தமில்லாத போரினால் செத்தவர்களைப் பற்றி, அகதியாக்கப்பட்டவர்களைப் பற்றி நாம் பேசுவதில்லை. உலகம் எங்கும் மனிதர்கள்
போரினால் கொல்லப்படுவது மட்டுமல்ல அகதிகளாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். மனிதர்களுடைய
மரணங்கள் மரணங்கள் அல்ல. இன்று வெறும்
எண்ணிக்கையாகிவிட்டன.
போர்கள் எதன்
பொருட்டு நடத்தப்படுகின்றன? மனிதர்களைக் கொன்று குவித்துவிட்டு அடையப்பெறும் வெற்றிக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? போர் மனிதர்களை அகதிகளாக்கியது. பெயர் தெரியாத ஊர்களுக்கு
விரட்டியடித்தது. மொழிதெரியாத நாட்டில் வாழவைத்தது. உறவுகளைப்
பிரித்தது. பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளையும், குழந்தைகளிடமிருந்து
பெற்றோர்களையும் பிரித்தது. குழந்தைகள் இறந்தன. பெற்றோர்கள்
இறந்தார்கள். ஊமையாக்கப்பட்டார்கள். காணாமல் போனார்கள். பைத்தியம் பிடித்து
அலைகிறார்கள். இத்தனை கொடூரங்களுக்குப் பிறகும் போர் நடக்கிறது. யாருக்கான,
எதற்கான போர், அந்தப் போர் தேவையா ? என்று அகிலன் தன் கதைகளின் வழியே கேட்கிறார். மனித
சமுதாயம் பதில் சொல்ல வேண்டிய கேள்வி.
ஒரு இலக்கியப்
படைப்பின் வெற்றி, பலம் என்பது அடிப்படையில் இருக்கும் உண்மையைச் சார்ந்தே
நிர்ணயமாகும். அகிலனின் மரணத்தின் வாசனை- போர் தின்ற
சனங்களின் கதை- சிறுகதை தொகுப்பு ஒரு இலக்கியப் படைப்பு.
மரணத்தின் வாசனை
த.அகிலன்
வடலி
மணற்கேணி
நவம்பர் டிசம்பர் 2010
நவம்பர் டிசம்பர் 2010
War in Srilanka created lot of sufferings to Tamils! Leaders from bothsides could have been avoided these Sufferings by Dialogue!toleranse!Compassion!Understanding!political & diplomatic moves towards political solution!
பதிலளிநீக்கு