ஞாயிறு, 19 ஜனவரி, 2020

விஷப்பூச்சி - இமையம் சிறுகதை


விஷப்பூச்சி
இமையம்

"இனி அவ செத்தா நானில்ல. நான் செத்தா அவ இல்ல. நான் சொல்றத புரிஞ்சிக்கம்மா. அண்ணன் தம்பி, அக்கா தங்கச்சி, அப்பா அம்மா வேணாமின்னுதான ஓடிப்போயிட்டா? இனி அவ நம்ப வீட்டுக்குள்ளார வரக் கூடாது. மீறி வந்தா நானே அவள வெட்டி கொன்னுடுவன். என்னாம்மா சொல்ற? நான் போயி தேடிக் கொண்டாரணுமா? மூளயோடதான் பேசுறியா? என் ஜென்மமே அழிஞ்சாலும் அவளப்போயி தேட மாட்டன். இன்னியோட அவ ஓடிப்போயி நாலு நாளாயிடிச்சி. ஊரு ஒலகத்துக்கே தெரிஞ்சிப்போச்சி. ஓடிப்போனவள இட்டாந்து வீட்டுல வச்சிக்கச் சொல்றியா? மவ வேணுமின்னா நீ போயி தேடிக்க. என்னது? காதல் பண்றன்னு சொல்லிக்கிட்டு யாரோ ஒரு பயகூட ஓடிப்போனவளப் போயி என்னோட தங்கச்சின்னு சொல்ற? அவள எங்கப்பனுக்குப் பெத்தியா வேற யாருக்காச்சும் பெத்தியாம்மா?" என்று கேட்டதும் எதிர்முனையில் பேசிக்கொண்டிருந்த அவருடைய அம்மா சட்டென்று போனை வைத்துவிட்டது தெரிந்ததும் குணசேகரனுக்கு மண்டையே வெடித்துப்போகிற அளவுக்கு கோபம் உண்டாயிற்று. கோபத்தில் "வச்சிட்டுப்போனா போவட்டும். எனக்கென்ன?" என்று தன்னையே சமாதானம் செய்துகொள்கிற மாதிரி சொல்லிக்கொண்டார். ஆனாலும், அவருடைய அம்மா போனைச் சட்டென்று வைத்துவிட்டதைப் பெரிய அவமானமாகக் கருதினார். கோபம் தணியாத மாதிரி மேசைமீதிருந்த செய்தித்தாளைத் தூக்கி தரையில் விட்டெறிந்தார். தலையை வலிப்பதுபோல் நெற்றிப்பொட்டில் தேய்த்துவிட்டார். தானாகவே தன்னுடைய அம்மாவுக்கு போன்போட்டார். போன் எடுக்கப்படவில்லை என்பது தெரிந்ததும் முன்னைவிட இப்போதுதான் அவருக்குக் கோபம் கூடுதலாக வந்தது. கோபத்தில் மேசையை ஒரு குத்துவிட்டார். "பொட்ட நாய்களத் திருத்தவே முடியாது" என்று சொன்னார். உட்கார்ந்திருப்பதற்குப் பிடிக்காமல் எங்காவது போகலாம் என்ற எண்ணத்துடன் எழுந்து நின்றுகொண்டு "யே சிவமூர்த்தி" என்று கொஞ்சம் சத்தமாகவே கூப்பிட்டார். சமையலறையில் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்த சிவமூர்த்தி கைவேலையை அப்படியே போட்டுவிட்டு விடுதியின் அலுவலக அறைக்கு முன் வந்து நின்றுகொண்டு "கூப்பிட்டீங்களா சார்?" என்று கேட்டான்.
"எல்லாப் பசங்களும் சாப்பிட்டுட்டுப் போயிட்டாங்களா?" என்று குணசேகரன் கேட்டதற்கு "போயிட்டாங்க சார்" என்று சிவமூர்த்தி சொன்னான்.
"ஸ்கூல் விட்டதும் நேரா வீட்டுக்குத்தான போவாங்க?"
"ஆமாம் சார்."
"இங்க வர மாட்டாங்கல்ல?"
"வர மாட்டாங்க சார்."
"அஞ்சு மணிக்கே ஹாஸ்டல மூடிடுவம்ன்னு சொல்லிட்டியா?"
"சொல்லிட்டன் சார்."
"வாட்ச்மேன் வந்திட்டானா?"
"மூணு மணிக்கு வந்திடுறன்னு சொன்னாரு."
"லீவ் விடுற நாளிலகூட நேரத்தில வரக் கூடாதாமா?" என்று கேட்கும்போது அவருடைய போன் மணி அடித்தது. அவருடைய மனைவிதான் கூப்பிட்டார். போனை எடுத்த குணசேகரன் பேசுவதற்கு விருப்பமில்லாத குரலில் "என்ன?" என்று கேட்டார். அவருடைய மனைவி என்ன சொன்னாரோ உடனே அவருடைய முகம் மாறிவிட்டது. கோபத்துடன் "என்னா சொன்னன்னா கேக்குற? மயிரச் சொன்னன். புரியுதா? ஓடிப்போனவளத் தேடுன்னா என்னா அர்த்தம்? நான் ஒரு வாத்தியாருங்கிறத மறந்திட்டுப் பேசுறதா? எனக்கு புத்திமதி சொல்ற வேலய விட்டுட்டு ஒன்னோட வேலய மட்டும் பாரு. முதல்ல போன வை. அதிகமாப் பேசிக்கிட்டு" என்று சொல்லி வேகமாக போனை மேசைமீது வைத்தார். போனில் பேசிய கோபத்துடனேயே "வாட்ச்மேன் வந்தா பாரு. இல்லன்னா நீயே பூட்டிட்டுப் போயிடு. டிவியத் தூக்கி ஸ்டோர் ரூம்ல வச்சிடு. பீஸ் கேரியரப் புடுங்கிடு. வெளியில ஒரு பொருளும் கெடக்கக் கூடாது. புரியுதா? நான் வீட்டுக்குக் கெளம்பறன். எதாயிருந்தாலும் போன்ல பேசுஎன்று படபடவென்று சொல்லிவிட்டு, பேனாவை எடுத்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டார். செல்போனை எடுத்துக்கொண்டார். இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு நாற்காலியை விட்டு எழுந்துவந்து இரண்டு தப்படி தூரம்கூட நடந்திருக்க மாட்டார். அப்போது அவருடைய செல்போன் மணி அடித்தது. எடுத்துப் பார்த்தார். அவருடைய மனைவிதான் அழைத்தார். போனை எடுப்பதா, வேண்டாமா என்று யோசிப்பதுபோல் நின்றுகொண்டிருந்தார். பிறகு, முகத்தைச் சுளித்துக்கொண்டே செய்ய விரும்பாத காரியத்தைச் செய்வதுபோல் போனை எடுத்து "என்ன?" என்று கொடூரமான குரலில் கேட்டார். "ஒங்கம்மா அழுதுகிட்டு இருக்காங்க" என்று அவருடைய மனைவி சொன்னதற்கு சினத்துடன் "அழுவட்டும் ஓடிப்போற புள்ளயப் பெத்ததுக்காகத் தூக்குமாட்டி சாவட்டும். அவளப் பத்தி எங்கிட்ட பேசக் கூடாது. எனக்கு இருக்கிற டார்ச்சரே போதும். வை போன" என்று சொல்லி கத்திவிட்டு போனை வைத்தார். எரிச்சலில் வெளியே போக மனமில்லாததுபோல் திரும்பி வந்து நாற்காலியில் உட்கார்ந்துகொண்டார். நெற்றியை இரண்டு மூன்றுமுறை தேய்த்துவிட்டுக்கொண்டார். வாசலில் நின்றுகொண்டிருந்த சிவமூர்த்தியிடம் "போயி வேலயப் பாரு" என்று சொன்னார். கண்களை மூடியபடி உட்கார்ந்துகொண்டிருந்தார்.
அறைக்குள் யாரோ வந்திருக்கிற அசைவுகேட்டு கண்களைத் திறந்து பார்த்தார். அவருக்கு எதிரில் வசந்த் நின்றுகொண்டிருந்தான். அவனைப் பார்த்ததுமே பகீர் என்றிருந்தது. ‘என்ன விஷப்பாம்பு வந்து நிக்குது?’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.
"என்ன?" என்று கேட்ட விதத்திலேயே வசந்த்தின் மீது குணசேகரனுக்கு எவ்வளவு வெறுப்பு இருந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது. வசந்த் எதுவும் பேசாததால் மீண்டும் தானாகவே "ஸ்கூலுக்குப் போகலியா?" என்று கேட்டார். அதற்கும் அவன் பதில் சொல்லவில்லை.
"எல்லாப் பசங்களும் ஸ்கூலுக்குப் போயாச்சி? நீ மட்டும் போவாம ஆஸ்டல்ல என்ன செஞ்சிக்கிட்டிருக்க?" என்று கேட்டார். அதற்கும் அவன் பதில் சொல்லவில்லை. பதில் சொல்லாததோடு அவன் நின்றுகொண்டிருந்த விதம், கிராப் வெட்டியிருந்த விதம் என்று எல்லாமும் சேர்ந்து வசந்த்தின் மீது குணசேகரனுக்குக் கோபத்தை அதிகரிக்கச்செய்தது. ‘என்ன வில்லங்கத்தோடு வந்திருப்பானோ, பையன் தேளோட கொடுக்கைவிட மோசமானவனாச்சேஎன்ற எண்ணம் மேலோங்கமேலோங்க வசந்த்தின் மீதான கோபமும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அவனை வெளியே அனுப்பிவிடும் எண்ணத்துடன் "தம்பி இன்னிக்கி எனக்குக் கொஞ்சம் மனசு சரியில்ல. எதாயிருந்தாலும் பொங்கல் லீவ் முடிஞ்சி வா பேசிக்கலாம்" என்று சொன்னார். வசந்த்திடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. வெளியேயும் அவன் போகவில்லை. நின்றது நின்றபடியே நின்றுகொண்டிருந்தான். பொறுமையிழந்துபோன குணசேகரன் "வந்த விஷயத்தச் சொல்லு. இல்லன்னா ஸ்கூலுக்குப் போற வேலய பாரு. அதுவும் இல்லன்னா வீட்டுக்குப் போயிச் சேரு" என்று சொன்னார். அதற்கும் அவன் பதில் சொல்லாததால் அவருக்குத் தலைகால் புரியாத அளவுக்குக் கோபம் வந்துவிட்டது "என்ன முட்டாள்ன்னு நெனைக்கிறியாடா?" என்று சத்தமாகவே கேட்டார். ‘கத்தினால் கத்திக்கொள். அதனால் எனக்கென்ன?’ என்பதுபோல் வசந்த் நின்றுகொண்டிருந்தான். அவன் நின்றுகொண்டிருந்த தோரணையே அவனை அடித்துக்கொல்ல வேண்டும் என்ற வெறியை அவருக்கு உண்டாக்கியது. சாதாரணமாகவே அவருக்கு வசந்த்தைப் பிடிக்காது. கோபத்தில் இருக்கும்போது, கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாததது என்று அவருக்கு அவன்மீது எல்லையில்லாத அளவுக்குக் கோபத்தை உண்டாக்கியது. ஆனாலும், பொறுமையாக "ஸ்கூல்ல தப்பு எதுவும் செஞ்சிட்டியாடா?" என்று கேட்டார். அதற்கும் அவன் பதில் சொல்லவில்லை. இப்படியொரு பையனா என்று யோசித்தார்.
"நான் ஒரு அவசர வேலயா வீட்டுக்குப் போகணும். விஷயத்தச் சொல்லு. ஒன்னோட கொளவிப் புத்தியெல்லாம் இப்பக் காட்டாத."
                குணசேகரன் இந்த விடுதிக்குக் காப்பாளராக வந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டன. மூன்று ஆண்டுகளில் விடுதியில் அதிகமான பிரச்சினைகளை உண்டாக்கியவன் வசந்த்தான். அதனால், குணசேகரனுக்கு மட்டுமல்ல, சமையலர்களுக்கும் அவனைப் பிடிக்காது. எப்போது என்ன பிரச்சினையைக் கொண்டுவருவான் என்றே தெரியாது. சமையலர்கள்தான் என்றில்லை, குணசேகரன்கூட அவனிடம் எச்சரிக்கையாகத்தான் இருப்பார். ஒரு நாளைக்கு "குழம்பில் உப்பே இல்ல சார்" என்பான். ஒரு நாளைக்கு "குழம்பில் காரமே இல்ல" என்று சொல்வான். சனி ஞாயிறு என்றால் "சட்னி தண்ணி மாதிரி இருக்குது. அதுவும் பத்தல" என்று சொல்வான். மறுநாள் "இட்லி வேகல சார்" என்று எடுத்துக்கொண்டு வந்து காட்டுவான். இட்லியை நன்றாக வேகவைத்துவிட்டால் "இட்லி இன்னிக்கிக் கருங்கல்லாட்டம் இருக்கு சார்" என்று சொல்வான். சில நாட்களில் இரவு ஒன்பது மணிக்கு போன் செய்து "சார் சோத்தில எறும்பு இருக்கு" என்று சொல்வான். "ஒன்பது மணிவர சாப்பிடாம எங்க போன?" என்று கேட்டால் பதிலே சொல்ல மாட்டான். போன் லைனையும் கட்பண்ண மாட்டான். "ஹோட்டல்ல சாப்பிட்டுக்க. நான் காலயில வந்து காசு தந்திடுறன்" என்று சொல்லும்வரை போன்லைனைத் துண்டிக்க மாட்டான். ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்று முடிவெடுக்கிற அன்று இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் போன் செய்வான். அவனோட புத்தி தெரியும் என்பதால் குணசேகரன் விஷயத்தைப் பெரிதாக்க மாட்டார்.
எப்போது என்ன குறை சொல்வானோ என்ற கவலையுடன்தான் சமையலர்களும் குணசேகரனும் பயந்துபோய் இருப்பார்கள். சில நாட்களில் மட்டும்தான் பிரச்சினையை நேரிடையாகக் கொண்டுவருவான். பல நாட்களில் பிரச்சினையைச் சொல்லி பையன்களைத் தூண்டிவிடுவான். "ஒங்க உரிமயத்தான்டா கேக்குறிங்க. போயி கேளுங்க" என்று சொல்லி பையன்களுக்குக் கிர் ஏற்றிவிடுவான். ஆறாம் வகுப்பிலிருந்து விடுதியில் இருப்பதால், விடுதியின் நடைமுறைகள், சட்டத்திட்டங்கள் சலுகைகள் எல்லாம் அவனுக்கு அத்துப்படியாகத் தெரியும். எப்போது அவன் பிளஸ் டூ முடித்துவிட்டு வெளியே போவான் என்றுதான் சமையலர்களும் குணசேகரனும் காத்துக்கொண்டிருந்தனர்.
விடுதியில் மொத்தம் ஐம்பத்திஐந்து பையன்கள் இருந்தாலும் வசந்த் ஒருவனைச் சமாளிப்பதுதான் பெரிய பிரச்சினையாக இருக்கும். பிளஸ் டூ படித்துக்கொண்டிருந்தாலும் ஆளைப் பார்ப்பதற்கு ஒன்பதாவது பத்தாவது படிக்கிற பையன் மாதிரிதான் தெரிவான். "ஒடம்பு பூராவும் விஷமா இருந்தா எப்படி உடம்பு தேறும்?" என்று சமையலர்கள் சொல்வார்கள். சமையலர்கள் அவனுக்கு "விஷப்பூச்சி" என்று பெயர்வைத்திருந்தார்கள். பெயருக்கேற்ற மாதிரிதான் அவனுடைய நடவடிக்கையும் இருக்கும். எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் அவனிடமிருந்து மட்டும் தப்பிக்கவே முடியாது. சாதாரணமாக மோரில் உப்பு குறைவாக இருந்தால்கூட விட மாட்டான். "உப்புதான இல்ல. நீயே போட்டுக்க" என்று குணசேகரன் சொன்னால் "நானா உப்பு போட்டுக்கிறதுக்கு சமயக்காரங்க எதுக்கு சார் இருக்காங்க?" என்று கேட்பான். அந்த மாதிரி வசந்த் கேட்கும்போதெல்லாம் குணசேகரனுக்குப் பைத்தியம் பிடிக்கிற அளவுக்குக் கோபம்வரும். "சனியன் புடிச்ச வேலய வுட்டாத்தான் நிம்மதி" என்று சொல்வார். சில நாட்களில் வந்து "ஹாஸ்டல் நடக்கிற விதமே சரியில்ல சார்" என்று சொல்வான். அந்த வார்த்தையைக் கேட்டதுமே அவனை அடித்துக்கொல்ல வேண்டும் என்ற வெறி உண்டாகும். கோபத்தை அடக்கிக்கொண்டு "நீ ஒரு நாளக்கி வார்டனா வந்து பாரு. அப்பத் தெரியும்" என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். காப்பாளர் கோபமாக இருக்கிறார். அதனால் அப்பறமாகப் பேசிக்கொள்ளலாம் என்று ஒருநாளும் இருக்க மாட்டான். ரொம்பவும் சட்டம் பேசினால் "நான் வார்டனா இருக்கிறதால நீ பேசிக்கிட்டிருக்க. இதே நான் வாத்தியாரா இருந்து, நீ வந்து வசனம் பேசிக்கிட்டிருந்தா தெரியும், ஒன்னோட கத என்னாவும்ன்னு" என்று சொல்லுவார். அதைப் பற்றியெல்லாம் அவன் கவலைப்படவே மாட்டான். கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றினால் கொஞ்சம்கூட தயங்காமல் நேராக அலுவலக அறைக்கு வந்து, தான் கேட்க நினைத்திருந்த கேள்வியைக் கேட்டு குணசேகரனைச் சீண்டிவிட்டுவிட்டு, தன்போக்கில் போய்க்கொண்டேயிருப்பான்.
இப்படி இருக்கிறானே என்று பள்ளிக்கூடத்துக்குப் போய் தலைமை ஆசிரியரிடமும், வகுப்பு ஆசிரியரிடமும் "கொஞ்சம் கண்டிச்சிவைங்க" என்று சொன்னபோது அவர்கள் மிரண்டுபோய் "கண்டிக்கிறதா? சாதாரணமா கண்டிச்சாலே, என்னெ கெட்டவார்த்த சொல்லி திட்டுனாரு, சாதியச் சொல்லி திட்டுனாருன்னு பத்திரிக்கைகாரன்கிட்ட டிவிக்காரன்கிட்ட சொல்லிடுவானுவ சார். ஒவ்வொருநாளும் சாயங்காலம் நாலர மணி எப்ப வரும்ன்னு குந்தியிருக்கம். பசங்க வெட்டியிருக்கிற கிராப்புக்கே வகுப்பில வுடக் கூடாது. வுடாம இருக்க முடியுமா? இந்த காலத்தில அரசாங்கப் பள்ளிக்கூடத்தில வேல பாக்குறது சர்க்கஸ் கம்பி மேல நடக்கிற மாதிரி சார்" என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
                வசந்த்தைத்தான் என்றில்லை, விடுதியில் குறும்புசெய்கிற பையன்களை விரட்டிவைக்க முடியும், அடித்து கண்ட்ரோல்செய்ய முடியும்தான். ஆனால், பையன்களை ஒரு அளவுக்கு மேல் குணசேகரன் கண்டிக்க மாட்டார். விரட்டிவைக்க மாட்டார். ரொம்பவும் மிரட்டினால் பையன்களே விடுதியில் சோறுபோடவில்லை, முட்டை, கறிபோடவில்லை, பழையசோறு போடுகிறார்கள் என்று மொட்டை புகார் மனு போட்டுவிடுவார்கள். புகார் மனு வந்ததுமே மாவட்ட அதிகாரி ஜீப்பை எடுத்துக்கொண்டு வந்துவிடுவார். புகார் மனு பொய்யென்று தெரிந்தாலும் விசாரிக்கிறேன் என்று மாவட்ட அதிகாரி ஒரு வாரத்துக்கு அலையவிடுவார். ஒரு வாரத்துக்கு அவருடைய அலுவலகத்திலேயே காத்திருக்கவைப்பார். பெறப்பட்ட புகார் மனு பொய்யெனத் தெரியவந்தது என்று எழுதுவதற்குக் குறைந்தது பத்து நாட்களாவது எடுத்துக்கொள்வார். மாவட்ட அதிகாரியின் அலுவலகத்துக்கு விசாரணைக்காகப் போகிற ஒவ்வொருநாளும், கார் டிரைவர், அலுவலக உதவியாளர், சம்பந்தப்பட்ட கிளார்க், கண்காணிப்பாளர் என்று காசு கொடுக்க வேண்டும். காசை வாங்கிக்கொண்டு ஒரே வார்த்தைதான் சொல்வார்கள். "ஐயாகிட்ட சொல்றன்."
மாவட்ட அதிகாரியும் பெறப்பட்ட புகார் மனு விசாரணையில் பொய்யெனத் தெரியவந்தது என்று எளிதில் எழுதிவிட மாட்டார். அவருக்குத் தேவையான தொகையை வாங்கிக்கொண்டுதான் எழுதுவார். வாங்குவதையும் உடனே வாங்கிக்கொள்ள மாட்டார். அலையவிட்டுத்தான் வாங்குவார். எவ்வளவு அலையவிடுகிறமோ அந்த அளவுக்குக் கையூட்டுத் தொகை கூடும் என்பது அவருக்குத் தெரியும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு அலையவிட்டு வாங்குவதையும் குறையில்லாமல் வாங்கிக்கொண்டு "பையன்களுக்கு முடிஞ்சவர செய்ங்க. கம்ப்ளயின்ட் இல்லாமப் பாத்துக்குங்க. சோறுபோடுற புண்ணியம் எல்லாருக்கும் கெடைக்காது" என்று சொல்லி அனுப்புவார். பணம் செலவாவதைவிட அலைந்துதிரிய வேண்டும். நாள் கணக்கில் காத்துக்கிடக்க வேண்டும். அந்த சள்ளைக்காகவே குணசேகரன் பையன்களிடம் பணிந்துபோய்விடுவார். பையன்கள் சொல்வதை உடனே செய்துவிடுவார். மற்ற விடுதிக் காப்பாளர்களோடு ஒப்பிட்டால் குணசேகரன் மோசமில்லைதான். தினமும் விடுதிக்கு வருவதிலும், விடுதியைப் பராமரிப்பதிலும், பையன்களுக்குத் தேவையானதைச் செய்வதிலும், பையன்களை அனுசரித்து போவதிலும் பரவாயில்லை என்று பெயர் எடுத்தவர்.

காலாண்டு விடுமுறை, அரையாண்டு விடுமுறை, தீபாவளி, பொங்கல், கோடை விடுமுறை என்று வரும்போது மட்டும்தான் குணசேகரனுக்கு நிம்மதியே வரும். அப்போதுதான் அவருடைய முகத்தில் சிரிப்பே வரும். "அப்பாடா, ஒரு வாரத்துக்கு நிம்மதி, எந்த சனியனும் இருக்காது" என்று சொல்லிச் சிரிப்பார். விடுதி நடக்கிற ஒவ்வொருநாளும் "ரனகளம்தான்" என்று சொல்வார்.
                குணசேகரனுடைய போன் மணி அடித்தது. யார் கூப்பிடுவது என்று போனை எடுத்துப் பார்த்தார். அலுப்புடன் "எதுக்கு இந்த சனியன் ஒயாமக் கூப்பிட்டுக்கிட்டே இருக்கு" என்று சொல்லிக்கொண்டே போனை எடுத்து கடுப்புடன் "என்ன?" என்ற கேட்டார். "பேருக்காவது ஒரு முற தேடிப்பாக்க வாணாமா? ஒங்கம்மாவ என்னா வாத்த கேட்டிருக்கிங்க?" என்று அவருடைய மனைவி கேட்டதும் பல்லைக்கடித்துக்கொண்டே "யே லூசு, ஓடிப்போனவளப் போயி தேடச்சொல்றீங்களே ஒங்களுக்கு வெக்கமா இல்ல? அவளயெல்லாம் பன்னண்டாவது படிக்கும்போதே கட்டிக்கொடுத்திருக்கணும். அப்படி செய்யாததுதான் பெரிய தப்பாப்போச்சி, அவ விஷயமா பேசறதாயிருந்தா எனக்கு போன் போடக் கூடாது. மீறி போட்டா ஒனக்கு ஒததான் கெடைக்கும். வையிடி போன, சனியன்" என்று சொல்லி கத்திய வேகத்திலேயே போனை மேசைமீது டக்கென்று வைத்தார். பிறகு, வெறுப்புடன் வசந்த்தைப் பார்த்தார்.
                வசந்த்தான் என்றில்லை. வேறு யார் வந்திருந்தாலும் பேசக்கூடிய மனநிலை இப்போது அவருக்கு இல்லை. அதற்குக் காரணம் அவருடைய தங்கை வீட்டைவிட்டு ஓடிப்போய் நான்கு நாட்களாகிவிட்டது. நான்கு நாட்களாகவே அவருக்கு மனசு சரியில்லை. கோபமும் குறையவில்லை. வீட்டில் அமைதி இல்லையென்றுதான் இன்று நேரத்திலேயே விடுதிக்கு வந்தார். விடுதிக்கு வந்தும் அவருக்கு நிம்மதி இல்லை. வீட்டுப் பிரச்சினையே பெரிய பிரச்சினையாக இருக்கும்போது இவன் எதற்காக வந்து நின்றுகொண்டு கழுத்தை அறுக்கிறான் என்று யோசித்த குணசேகரன் "விஷயத்தச் சொல்லு" என்று கேட்டார்.
"கொஞ்சம் பணம் வேணும் சார்."
"இன்னியிலிருந்து பொங்கல் லீவ் விடப்போறாங்கன்னு ஒனக்குத் தெரியுமில்லியா? பஸ்ஸுக்குக் காசு ரெடி பண்ணி வச்சிக்க வாணாமா?" என்று எரிச்சலுடன் கேட்டார். அதற்கு வசந்த் எந்தப் பதிலும் சொல்லாததால், பிரச்சினையை நீட்டித்துக்கொண்டே போக வேண்டாம் என்ற எண்ணத்துடன் "பஸ்ஸுக்கு எவ்வளவுடா?" என்று கேட்டார்.
"டவுன் பஸ்ஸுன்னா எட்டு ரூபா. ரூட் பஸ்ஸுன்னா பதினஞ்சி ரூபா சார்."
சனியன் சீக்கிரம் போய்த்தொலையட்டும் என்ற எண்ணத்துடன் சட்டைப் பையிலிருந்து இருபது ரூபாய்தாள் ஒன்றை எடுத்து மேசைமீது வைத்து "எடுத்துக்கிட்டு போ" என்று சொன்னார். வசந்த் பணத்தை எடுத்துக்கொள்ளாமல் நின்றான்.
"ம். எடுத்துக்கிட்டு கிளம்பு. நீ திருப்பித் தர வேண்டாம்" என்று கொஞ்சம் எரிச்சலுடன் சொன்னார். அப்போது அவருடைய செல்போன் மணி அடித்தது. யார் கூப்பிடுவது என்று பார்த்தார். அவருடைய தம்பி ஞானசேகரன் என்று தெரிந்ததும் போனை எடுத்து "சொல்லு" என்று பேசப்பிடிக்காத ஆளிடம் சொல்வதுபோல் சொன்னார். "ஓடிப்போனவள அப்பிடியே வுட்டுறதா?" என்று அவருடைய தம்பி கேட்டதற்கு "வேற என்ன செய்யச் சொல்ற? ஓடிப்போன திருட்டு நாய தேடச்சொல்றீங்களே. வெளிய சொல்றதுக்கு நமக்கு வெக்கமா இருக்காதா? ஒனக்கு தங்கச்சி வேணுமின்னா நீ போயி தேடிக்க. உயிர் போனாலும் நான் தேட மாட்டன். வச்சிடு" என்று போனை வைத்த குணசேகரன் "பெரிய சனியனா இருக்கு. ஒரு பொட்டக்குட்டி செஞ்ச காரியம். வீட்டயே எரிச்சிடிச்சி" என்று சொல்லிக்கொண்டே நெற்றியைத் தடவிவிட்டுக்கொண்டார். "பணம்தான் வச்சிட்டனில்ல. எடுத்துக்கிட்டு போயண்டா. எதுக்கு நிக்குற? நீயும் எதுக்கு என் உசுர வாங்குற?" ஆத்திரத்துடன் கேட்டார். அப்போதும் பணத்தை எடுத்துக்கொண்டு போகாமலிருந்த வசந்த்தை எரித்துவிடுவதுபோல் பார்த்தார்.
"ஆயிரத்து ஐநூறு வேணும் சார்" என்று வசந்த் சொன்னதும் அதிர்ச்சியடைந்ததுபோல் குணசேகரன் வசந்த்தைப் பார்த்தார். பிறகு, கேலியான குரலில் "எதுக்குடா ஒனக்கு அவ்வளவு பணம்?" என்று கேட்டார்.
"ஸ்காலர்ஷிப் வந்ததும் தந்திடுறன் சார்."
"நான் என்ன கேட்டன், நீ என்ன சொல்ற?"
                வசந்த் பதில் சொல்லவில்லை. கையைக் கட்டியபடி அசையாமல் நின்றுகொண்டிருந்தான். ‘என்ன இந்தப் பையன் இப்பிடி இருக்கான்? கிரிமினலா இருக்கிறதுக்கும் ஒரு அளவு இல்லியா?’ என்று நினைத்த குணசேகரன் "இன்னியிலிருந்தே ஒரு வாரத்துக்கு லீவ், கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்ன்னு பாத்தா அதுவும் முடியாதுபோலிருக்கு. இந்த ஆஸ்டல்லியே நீதான்டா எனக்குப் பெரிய டார்ச்சர். இன்னும் நாலு மாசத்துக்குத்தான நீ ஆடுவ. ஆடிட்டுப்போ. அப்பறம் எதுக்கு நான் ஒன்னெ பாக்கப்போறன். நீதான் எதுக்கு என்ன பாக்கப்போற? எதாயிருந்தாலும் அப்பறம் பேசிக்கலாம். இப்ப பணத்த எடுத்துக்கிட்டு ஊருக்குப் போயி சேரு" என்று சொல்லிவிட்டு கைகடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தார். அப்போது அவருடைய போன் மணி அடித்தது. அவருடைய தம்பிதான் அழைத்திருந்தார். போனை எடுத்து "சொல்லு" என்று கேட்டார். "நான் சொல்றதக் கொஞ்சம் கேளு" என்று அவருடைய தம்பி சொல்லி முடிப்பதற்குள்ளாகவே குறுக்கிட்ட குணசேகரன் "நான் ஒரு வாத்தியாருங்கிறத மறந்திட்டுப் பேசக் கூடாது. அவ ஓடிப்போனதிலிருந்து வெளிய தலய காட்ட முடியாம ஒளிஞ்சிகிட்டு ஆஸ்டலுக்கு வந்திட்டுப் போறன்னு ஒனக்குத் தெரியுமா? அவ சம்பந்தமா எங்கிட்ட பேசறதா இருந்தா இனிமே நீ எனக்கு போன் போடாத" என்று சொல்லிவிட்டு டக்கென்று போனை வைத்தார். சமையல்காரன்தான் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் என்பதுபோல் கோபத்துடன் சத்தமாக "யே சிவமூர்த்தி" என்று கூப்பிட்டார். சிவமூர்த்தி வந்ததும் "தண்ணி கொடு" என்று சொன்னார். சிவமூர்த்தி தண்ணீர் கொண்டுவந்து கொடுத்ததும் முழு சொம்பு தண்ணீரையும் ஒரே மூச்சாகக் குடித்து முடித்தார்.
"ஒலகத்தில எந்த மூலைக்கிப் போனாலும் சனியன் வுடாதுபோல இருக்கு" என்று முனகலாகச் சொன்னார். முகத்தை இரண்டு கைகளாலும் அழுத்தித் துடைத்துவிட்டுக்கொண்டு பொறுமையான குரலில் "தம்பி நீ கேட்கிற அளவுக்கு எங்கிட்ட பணமில்ல... போயிட்டுவா" என்று சொன்னார்.
"சத்தியமா திருப்பித் தந்துடுவன் சார்."
"நீயாடா?" என்று கேலியாகச் சிரித்தார். காலாண்டு விடுமுறைக்கு, அரையாண்டு விடுமுறைக்குப் போகும்போதெல்லாம்பஸ்ஸுக்குக் காசில்ல சார்என்று சொல்லி பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று வாங்கிக்கொண்டு போவார்கள். திருப்பி ஒரு பையன்கூட தர மாட்டான். குணசேகரன் வந்ததிலிருந்து வசந்த் ஊருக்குப் போகும்போதெல்லாம் பணம் வாங்குவான். ஆனால், ஒருமுறைகூட திருப்பித் தந்ததில்லை. தர மாட்டான் என்ற தெரிந்துதான் ஒவ்வொருமுறையும் பணம் தருவார். இந்த முறையும் அப்படித்தான் இருபது ரூபாயை எடுத்துவைத்தார்.
"ஸ்காலர்ஷிப் வரலன்னா பீங்கான் பேக்ட்டரிக்கி வேலக்கிப்போயி தந்துடுவன் சார்."
"சனி ஞாயிறுல நீ வேலக்கித்தான் போற இல்லியா? எனக்குத் தெரியும். கேட்டா இல்லன்னு சத்தியம் செய்வ. எதுக்கு சனியன்னுதான் கேக்காம இருக்கன் தெரியுமா?" என்று திமிர்த்தனமான குரலில் கேட்டார்.
"பணம் இருந்தாத்தான் ஊருக்குப் போக முடியும் சார்."
"என்னெ முட்டாளுன்னு நெனைக்கிறியாடா? படிக்கிற பயலுக்கு எதுக்குடா அவ்வளவு பணம்?"
"என் தம்பி தங்கச்சிவுளுக்குப் பொங்கக் காசு கொடுக்கணும் சார்."
"அதெல்லாம் ஒங்கப்பா, ஒங்கம்மா பாத்துக்குவாங்க. நீ ஒன்னோட வேலய மட்டும் பாரு." அலட்சியமாகச் சொன்னார்.
"எனக்கு அம்மா இல்ல சார்."
"ஒங்கம்மா இல்லன்னா ஒங்கப்பா பாத்துக்குவாரு. எங்கிட்ட பணம் இல்ல. அவ்வளவுதான்" என்று சொன்ன குணசேகரன் "ஒங்கம்மா இல்லன்னா நீ யாருகூட இருக்க?" என்று கேட்டார்.
"எங்க ஆயாகூட சார்."
"ஒங்கம்மா இருக்காங்களா, செத்திட்டாங்களா?"
"எங்கம்மாள ஒரு ஆளு கொன்னுட்டான் சார்."
"கொன்னது ஒங்கப்பா இல்லியா?"
"வேற ஆளு சார்."
"ஏன்?"
"நானும் என் தங்கச்சியும் பொறந்த பின்னால எங்கப்பா ஒரு பொம்பளய வச்சிக்கிட்டு எங்கம்மாவ அடிச்சித் துறத்திட்டாரு சார்."
"ஒங்கப்பா என்னா வேல செய்றாரு."
"கொத்தனாரு சார்."
"ஒங்கம்மாவக் கொல செஞ்சது யாரு?"
"எங்கப்பா வுட்டுட்ட பின்னால எங்கம்மா, எங்க ஊரிலியே வேற ஒரு ஆளுகூட சேந்து இருந்துச்சி. ரெண்டு புள்ள பொறந்தப் பின்னால, அந்தாளோட பொண்டாட்டிக்கும் எங்கம்மாவுக்கும் சண்டயானதால எங்கம்மா பிரிஞ்சி வந்துடுச்சி சார்."
"அந்தாளுதான் கொன்னானா?"
"இல்ல சார்."
"அப்பறம்?"
"அந்தாளவுட்டுப் பிரிஞ்சி வந்து எங்காயா வீட்டுல இருந்தப்ப, எதிர்வீட்டுல இருந்த ஒரு ஆளு, வா நான் பாத்துக்கிறன்னு சொல்லி எங்கம்மாவ அழச்சிக்கிட்டு மெட்ராசுக்குப் போயிட்டான் சார்."
"சரி."
"ஒரு புள்ளப் பொறந்த பின்னால சந்தேகப்பட்டு எங்கம்மாவக் கொன்னுட்டான் சார்.”
"அந்தாளு என்ன வேல பாக்குறான்?"
"ஆட்டோ ஓட்டுறான் சார்" என்று வசந்த் சொல்லிக்கொண்டிருக்கும்போது குணசேகரனுடைய போன் மணி அடித்தது. அவருடைய மனைவி அழைப்பது தெரிந்ததும் போனை எடுக்காமலேயே விட்டுவிட்டார். எதிரில் நின்றுகொண்டிருந்த வசந்த்தையே பார்த்தார். அவன் சொன்ன தகவலெல்லாம் அவருக்கு செய்தித்தாளில் படிக்கிற செய்திபோல் இருந்தது. பாதியிலேயே நிறுத்திவிட்ட கதையைக் கேட்பதுபோல்ஒங்கம்மாவுக்கு மொத்தம் எத்தன புருஷன்?’ என்று கேட்கத்தான் நினைத்தார். ஆனால், கேட்க நினைத்ததைக் கேட்காமல் "மொத்தம் ஒங்கம்மாவுக்கு எத்தன பிள்ளைங்க?" என்று கேட்டார்.
"என்னயும் சேத்து மொத்தம் அஞ்சி பேரு சார்."
"மத்தப் பிள்ளைங்க எல்லாம் எங்க இருக்காங்க?"
"எங்க ஆயாகூட சார்."
"அவங்கஅவங்க அப்பாக்கூட இல்லியா?"
"இல்ல சார்."
"ஏன்?" கேள்வி கேட்கிற இயந்திரம் மாதிரி குணசேகரன் கேட்டார்.
"எல்லாப் புள்ளைகளும் எம் மவளுக்குத்தான பொறந்துச்சி. அதனால, நானே வளத்துக்கிறன்னு எங்க ஆயா சொல்லிடிச்சி சார்."
"ஒங்க ஆயா என்னா செய்யுறாங்க?"
"கூலி வேலக்கிப் போவும் சார்" என்று வசந்த் சொன்னதைக் கேட்ட குணசேகரன் ஒரு காரணமும் இல்லாமல் பெருமூச்சுவிட்டார். சனியன் புடிச்ச கதையையெல்லாம் கேட்க வேண்டியிருக்கிறதே என்ற எண்ணத்தில் நெற்றியைத் தடவிவிட்டுக்கொண்டார்.
"ஒங்கப்பா வந்து ஒன்னெ பாப்பாரா?"
"தீவாளி அன்னிக்கும், பொங்கல் அன்னிக்கும் வந்து பாப்பாரு சார்."
"பணம் எதுவும் தருவாரா?"
"தருவாரு சார்."
"மத்த ஆளுங்க?"
"தீபாவளிக்கும் பொங்கலுக்கும் துணிமணி எடுத்துக்கிட்டு வந்து கொடுத்திட்டுப்போவாங்க சார்."
அஞ்சி பேருக்கும் தருவாங்களா? தனித்தனியா தருவாங்களா?”
அஞ்சி பேருக்கும்தான் சார்.”
"ஒங்க ஆயா அந்த ஆளுங்களத் திட்டாதா?"
"அவனவன் புள்ளக்கித்தான அவனவன் செய்யுறான்னு சொல்லும் சார்."
"அப்பிடியா?" என்று கேட்ட குணசேகரனின் குரலிலும் முகத்திலும் எந்த மாற்றமும் வெளிப்படவில்லை. அதேமாதிரி வசந்த்தின் முகத்திலும் குரலிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. "சார் கேட்கிறார். அதனால் சொல்கிறேன்" என்பதுபோல் இருந்தது அவன் சொன்ன விதம்.
                கொஞ்ச நேரம் யோசிப்பதுபோல் உட்கார்ந்துகொண்டிருந்த குணசேகரன் மறந்துவிட்ட கேள்வியைக் கேட்பதுபோல் "மத்தப் புள்ளங்கயெல்லாம் என்னா பண்ணுது?" என்று கேட்டார்.
"ரெண்டு புள்ளங்க இந்த ஊர் கேர்ள்ஸ் ஆஸ்டல்ல படிக்குது சார். ஒரு பாப்பாவும், ஒரு தம்பியும் உள்ளூர்லியே படிக்கிறாங்க சார். இங்கயிருந்து கேர்ள்ஸ் ஆஸ்டலுக்குப் போயி ரெண்டு புள்ளங்களயும் கூட்டிக்கிட்டு ஊருக்குப் போகணும் சார்" என்று வசந்த் சொன்னதைக் கேட்கும்போது, ‘நீ யார வேணும்ன்னாலும் கூட்டிக்கிட்டுபோ, எனக்கென்ன?’ என்பதுபோல் உட்கார்ந்துகொண்டிருந்த குணசேகரன் "நீ யாருக்குப் பொங்க காசு கொடுக்கப் போற?" என்று கேட்டார்.
"என் தம்பி, தங்கச்சிவுளுக்கு சார்."
"மத்த ஆளுங்களுக்குப் பொறந்த பிள்ளைங்களுக்குமா?"
"யாருக்குப் பொறந்தா என்னா சார்? எல்லாரும் எங்கம்மா வயித்தில இருந்துதான சார் பொறந்தாங்க?" என்று வசந்த் கேட்டதற்கு குணசேகரன் பதில் சொல்லவில்லை. வசந்த்தின் முகத்தையே ஆராய்வதுபோல் பார்த்தார். கதை சொல்கிறானோ என்று சந்தேகப்பட்டார். ஆனால், அவன் சொல்கிற விதமும், அவன் நின்றுகொண்டிருந்த விதமும் கதை சொல்வது மாதிரி தெரியவில்லை. “அவ்வளவு நல்ல பையனாடா நீ?” என்று ஆச்சரியப்பட்டார். ஆனாலும், ‘நீ கதை சொன்னாலும் சரி, உண்மையைச் சொன்னாலும் சரி, எனக்கென்ன?’ என்கிற மனநிலையில்தான் குணசேகரன் உட்கார்ந்துகொண்டிருந்தார்.
அப்போது அவருடைய போன் மணி அடித்தது. அவருடைய மனைவிதான் கூப்பிட்டார். கடுமையான கோபத்துடன் போனை எடுத்த குணசேகரன் "சனியனாட்டம் எதுக்கு போன் போட்டுக்கிட்டே இருக்க?" என்று கேட்டார். "ஒங்கம்மா திடீர்ன்னு எங்க போனாங்கன்னு தெரியல. போனயும் வீட்டுலியே வச்சிட்டுப் போயிட்டாங்க. ஒடனே வந்து பாருங்க" என்று படபடவென்று சொன்னதைக் கேட்ட குணசேகரன் "ஓடிப்போற புள்ளயப் பெத்ததுக்கு எங்கியாச்சும் போயி செத்துத் தொலயட்டும். வையிடி போன" என்று சொல்லி அடித்து உடைக்காத குறையாக போனை மேசைமீது வைத்தார். "ஐயோ ராமா, தல வேதனையா இருக்கே" என்று சொல்லிவிட்டு வெளியே போவதற்காக எழுந்துநின்றதும் "எங்கம்மா மேல சத்தியமா திருப்பித் தந்துடுவன் சார்" என்று கெஞ்சுகிற மாதிரி வசந்த் கேட்டான்.
ஏன் தம்பி, மனுஷன் இருக்கிற நெலம தெரியாமப் பேசிக்கிட்டு" என்று சொல்லி கோபப்பட்டார். கோபத்துடனேயே வெளியே போக முயன்ற குணசேகரனுடைய காலில் சட்டென்று விழுந்து கும்பிட்டு "எங்கம்மா மேல சத்தியமா பணத்தத் திருப்பித் தந்திடுவன் சார்" என்று சொல்லும்போதே வசந்த்க்குக் கண்கள் கலங்கிவிட்டன. காலில் வசந்த் விழுந்து கும்பிட்டதும் எப்போதும் இல்லாத அளவுக்கு குணசேகரனுக்கு கோபம் கூடிவிட்டது. "வரதெல்லாம் எனக்கு சனியனா இருக்கே" என்று சொல்லி தலையில் அடித்துக்கொண்டு மேல்சட்டைப் பையிலும், பேன்ட் பையிலும் கையை விட்டு தேடிப்பார்த்தார். முந்நூறு ரூபாய்தான் இருந்தது. முந்நூறு ரூபாயை எடுத்து விட்டெறிவதுபோல் வசந்த்திடம் கொடுத்து "இவ்வளவுதான் எங்கிட்ட இருக்கு. இதுக்கு மேல எங்கிட்ட ஒரு பைசா இல்ல. வேணும்ன்னா என் பையப் பாத்துக்க" என்று சொல்லி மேல்சட்டைப் பையையும், பேன்ட் பையையும் இழுத்துவிட்டுக் காட்டிவிட்டு அறையின் வாசலுக்கு வந்தார். அவர் பணம் கொடுத்ததுகூட விடுமுறை முடிந்து விடுதிக்கு வந்த பிறகு பிரச்சினை பண்ணாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
அப்போது அவருடைய போன் மணி அடித்தது. "இந்த சனியன ஒடச்சாதான் நிம்மதி" என்று சொல்லிக்கொண்டே போனை எடுத்துப் பேசினார். "எம் மவள நானே தேடிக்கிறன்னு சொல்லிட்டு அம்மா வெளியப் போயிடிச்சாம். நான் ஊர்லயிருந்தாக்கூட போயித் தேடிப்பாப்பன். நாளக்கி லீவ் போட்டுட்டு, ராத்திரிக்கே ஊருக்கு வரன். நீ என்னா ஏதுன்னு தேடிப்பாரு" என்று அவருடைய தம்பி ஞானசேகரன் சொன்னதற்கு "நான் ஒரு வாத்தியாரா இருக்கன். என் தங்கச்சி ஓடிப்போயிட்டா. அவள எங்கியாச்சும் பாத்தீங்களான்னு போயி தெரிஞ்சவங்ககிட்ட கேட்டா எனக்கு அசிங்கமா இருக்காதா? சாவச் சொல்லு சாவுறன். அவள மட்டும் தேட மாட்டன். அம்மாவயும் நான் தேட மாட்டன். இது சத்தியம்" என்று சொல்லி போனை வைத்த குணசேகரன் விர்விர்ரென்று விடுதியை விட்டு வெளியே போனார். அவர் போவதையே கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் வசந்த்.

காலம் - ஜனவரி 2020


3 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. Sad! But true! Family honour & honour killings are very common in some countries! Humanity has longway to go on Harmony,Progress & Happiness to all! Good governance May give better Citizens of Human Compassion & Dignity! Freedom!Happiness!

    பதிலளிநீக்கு