திங்கள், 26 ஜூன், 2017

திராவிடத்தால் செழித்த தமிழ் - இமையம்

திராவிடத்தால் செழித்த தமிழ்
       எழுத்தாளர் இமையம்..

      இந்தியாவில் சமூக நீதியை முன்வைத்து உருவானது திராவிட இயக்கங்கள் மட்டும்தான். திராவிட இயக்கங்கள் உருவாகாமல் இருந்திருந்தால் இன்று தமிழ்நாட்டில் கல்வியில், பொருளாதாரத்தில், சமூக வாழ்வியலில், தொழிற்துறையில் ஏற்பட்டிருக்கிற அபரிமிதமான மாற்றங்கள் நிகழ்ந்திருக்காது. பீகாரைவிட பல மடங்கு தமிழ்நாடு பின்தங்கிப் போயிருக்கும். “உண்ட வீட்டிற்கே ரெண்டகம் நினைப்பவர்கள்”, “சாப்பிட்ட கையின் ஈரம் காய்வதற்குள் சாப்பிட்டதை மறந்தவர்கள்” மட்டுமல்ல வரலாற்று அறிவு அறவே இல்லாதவர்கள்தான் திராவிட இயக்கங்களால் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று சொல்வார்கள்.

சட்ட ரீதியாக செய்த சாதனைகள் :
      தோளில் துண்டு போடக்கூடாது, கோவிலுக்குள் நுழையக்கூடாது என்றிருந்த நிலையை மாற்றியது திராவிட இயக்கங்கள்தான். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நுழைவதற்கும், வெள்ளை சட்டை போடுவதற்கும், காலில் செருப்பு போடுவதற்கும் சமமாக நாற்காலியில் உட்காருவதற்கும் வழி அமைத்தது திராவிட இயக்கங்கள்தான். மனிதனை மனிதனாக மதி, மனிதனாக நடத்து என்று கோரிக்கை வைத்து போராடியது திராவிட இயக்கங்கள்தான்.
      உள்ளாட்சியில் பெண்களுக்கு முப்பது சதவிகித ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, கலப்புத் திருமணத்திற்கு சட்ட ரீதியான அங்கீகாரம், கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு ஊக்கத்தொகை, வேலை வாய்ப்பில் முன்னுரிமை தந்தது எந்த ஆட்சி? ஆதிதிராவிடர் நலத்துறையை உருவாக்கியது, அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு, மிகவும் பிற்பட்டோர் என்று ஒரு பிரிவை உருவாக்கி இட ஒதுக்கீடு வழங்கியது எந்த இயக்கத்தின் ஆட்சி?  எட்டாம் வகுப்பு படித்திருந்தாலே பெண்களுக்குத் திருமண உதவித்தொகை, சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தியது எந்த இயக்கத்தின் ஆட்சி? சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது, இலவச 108 ஆம்புலன்ஸ் என்று சமூக நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியது திராவிட இயக்க ஆட்சிதான். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற நிலையை மாற்றி அமைத்தது திராவிட இயக்க ஆட்சியும், திராவிட இயக்கங்களின் சமூகநீதி கொள்கையும்தான்.
மொழியில் செய்த சாதனைகள் :
      சென்னை மாகாணத்தை ‘தமிழ்நாடு’ என்றும், மெட்ராஸை ‘சென்னை’ என்றும், ‘ஸ்ரீ’ என்பதை ‘திரு’ என்றும், ‘விவாஹ சுப முகூர்த்த பத்திரிக்கை’ என்பதை ‘திருமண அழைப்பிதழ்’ என்றும், ‘மஹா கும்பாபிஷேகம்’ என்பதை ‘குட முழுக்கு’ என்றும் ‘கிரகப் பிரவேசம்’ என்பதை ‘புதுமனைப் புகுவிழா’ என்றும், ‘மந்திரி’ என்பதை ‘அமைச்சர்’ என்றும் மாற்றியது திராவிட இயக்க ஆட்சிதான். கட்டையன், மொட்டையன், கருப்பன் என்றிருந்த பெயர்களை கதிரவன், தமிழ்ச்செல்வன், திருவள்ளுவன், கம்பன், இளங்கோவன், பாரி, செங்குட்டுவன் என்று மாற்றியதெல்லாம் திராவிட இயக்கங்கள்தான். பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டிருந்த ‘சாதி’ அடைமொழியை ஒழித்ததும் திராவிட இயக்கங்கள்தான்.
இலக்கியங்களை படிக்க வைத்தது :
      பள்ளிக்கூடத்தில், கல்லூரியில் படித்த காலத்தில் மனப்பாடம் ஆகாத சங்ககாலப் பாடல்கள், காப்பிய வரிகள், சித்தர்களின் பாடல்கள், எல்லாம் திராவிட இயக்க மேடைப்பேச்சால் பலருக்கும் மனப்பாடம் ஆயிற்று. மேட்டுக்குடியினருக்கு மட்டுமே சொந்தமாக இருந்த சங்ககாலப் புலவர்களையும், காப்பிய நாயகர்களையும், எளிய மனிதர்களும் அறியச் செய்தது, சமூகத்தின் பொது சொத்தாக மாற்றியது திராவிட இயக்க மேடைகள்தான். பள்ளிகளில், பேருந்துகளில் திருக்குறளை எழுத வைத்தது, தமிழரின் ஒவ்வொரு திருமணப் பத்திரிக்கையிலும் “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்று அச்சடிக்க வைத்தது திராவிட இயக்கங்கள்தான்.
      திராவிட இயக்க மேடைகள்தான் தமிழர்களை படிக்க வைத்தது, பேச வைத்தது, படிக்கச் சொன்னது, சிந்திக்க சொன்னது. ‘சிந்திப்பீர், செயல்படுவீர்’ என்று சொன்னது. அதற்காக உருவாக்கப்பட்டதுதான் கவியரங்கம், பட்டிமன்றம், வழக்காடுமன்றம் போன்ற வடிவங்கள். இந்த கலை வடிவங்களின் வழியாகத்தான் சங்ககாலப் புலவர்களின் கவிதைகளையும், சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும், திருக்குறளையும், ஆத்திச்சூடியையும், கொன்றை வேந்தனையும், பாரதியையும், பாரதிதாசனையும், பாண்டியனையும், கரிகால் சோழனையும், செங்குட்டுவனையும் கனியன் பூங்குன்றனையும் கொண்டுபோய் சாதாரண மக்களிடம் சேர்த்தார்கள். புலவர் தமிழாக, மேட்டுக்குடித் தமிழாக இருந்ததை சாதாரண மக்களின் தமிழாக மாற்றியது திராவிட இயக்கங்கள்தான். திராவிட இயக்க மேடைப் பேச்சு வீண்பேச்சாக இல்லாமல், சமூக நீதிக்கான பேச்சாக, இலக்கியப் பேச்சாக பேசிய காரணத்தால்தான் ஒரு காலத்தில் முப்பது நாற்பது கிலோமீட்டர் தூரம் தாண்டி சென்றுகூட பேச்சைக் கேட்டார்கள். திருமணத்தில்கூட மேடைபோடவும், மைக்செட் கட்டவும் வைத்து, திருமண விழாவை சமூக மாற்றத்திற்கான பிரச்சாரக் கூட்டமாக மாற்றியது, மேடைப் பேச்சுக்கு அழகையும், இலக்கியத் தகுதியையும் பெற்று தந்தது திராவிட இயக்கங்கள்தான். எதைப் பேசினாலும், எதை எழுதினாலும் அதன் நோக்கம் - தமிழர்களின் நலனும், மேம்பாடும், சமூக நீதியும்தான்.
அழியாத சொற்களை உருவாக்கிய பெருமை :
      “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு”, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று சொன்ன அண்ணாவின் வார்த்தைகள் இன்றும் பல லட்சக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படுகிறது. “நான், நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால்தான் உதடுகள் ஒட்டும்”, “விதவை என்ற வடமொழி சொல்லுக்கு பொட்டு இல்லை. அழகு தமிழில் கைம்பெண் என்று சொன்னால் இரண்டு பொட்டுகள் கிடைக்கும்.” “மானமிகு இல்லையென்றால் மாண்புமிகு இல்லை”, “சட்டமன்றத்தைவிட மக்கள் மன்றமே எங்களுக்கு முக்கியம்” என்று சொன்ன கலைஞரின் வாக்கியங்கள் இன்றும் பல லட்சக்கணக்கான மக்களால் அன்றாடம் சொல்லப்படுகின்றன. “கடவுளை மற, மனிதனை நினை” என்று சொன்ன பெரியாரின் வார்த்தைகள் இன்றும் உயிருடன் இருக்கின்றன. லட்சக்கணக்கானவர்களால் சொல்லப்படுகின்றன. “இந்த படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?” என்று திராவிட இயக்கங்கள் உருவாக்கிய கோஷம் இன்று ஊர்வலமாக செல்கின்ற எல்லாருமே பயன்படுத்துகிற கோஷமாகியிருக்கிறது. “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா”, “வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்”, “உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” போன்ற வார்த்தைகளை தமிழகத்தின் எல்லா மூலைக்கும் எடுத்துச் சென்று சேர்த்ததும், ஒவ்வொரு மனிதனிடத்தும் தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்ததும் திராவிட இயக்கங்கள்தான். ‘விடுதலை’யின் வழியாகவும், ‘முரசொலி’யின் வழியாகவும்தான் தமிழர்களுக்கான உரிமைகள் என்ன என்பது விளக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்டது. மானஉணர்வு, இனஉணர்வு என்றால் என்ன என்று விளக்கப்பட்டது. ஒரு காலத்தில் தமிழர்களின் இரண்டு கண்களாக இருந்தது விடுதலையும், முரசொலியும்தான். மதவாதப் பிற்போக்குச் சக்திகள் தமிழ்மண்ணில் இன்றுவரை கால் வைக்காமல் தடுத்தது திராவிட இயக்கங்கள்தான்.
      யாருடைய பிள்ளை, எந்த ஊர், எந்த இனம், எந்த மதம் என்ற அடையாளங்களைக் காட்டிலும் ஒரு மனிதனுக்கு அவன் பேசுகிற மொழிதான் முக்கியமான அடையாளம். தனி மனிதனின் வாழ்க்கையையும், அவன் இணைந்து வாழ்கிற சமுக வாழ்வின் பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகளும் மொழியில்தான் – இலக்கியங்களாக சேமிக்கப்படுகின்றன. அடுத்தத் தலைமுறைக்கு அதுவே கல்வியாக, சமூக ஒழுக்கமாக, வாழ்வியல் நெறியாக கற்பிக்கப்படுகிறது என்பதை அறிந்துதான் மொழியை முதன்மைப்படுத்தியது திராவிட இயக்கங்கள். அதனால்தான் செம்மொழித் தகுதி பெற்றுத் தந்தது, செம்மொழி மாநாடு நடத்தியது.
      மொழிதான் ஒரு இனத்தின் அடையாளம் என்றால் தமிழர்களின் அடையாளமான தமிழ்மொழியை கடந்த அறுபதாண்டுகளாக காத்தது, செழிக்க வைத்தது திராவிட இயக்கங்கள்தான். உலகில் தமிழ் மொழியைப் பேசுகிற ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் திராவிட இயக்கங்களின் உழைப்பு என்ற உப்பு கலந்திருக்கிறது. தமிழர்கள் நிற்க வேண்டிய மண்ணாகவும், அவர்களுக்கான நிழலாகவும் திராவிட இயக்கங்கள்தான் இன்றும் இருக்கின்றன.    நிழலில்லாதபோது நிழலின் பெருமையும், உப்பு இல்லாதபோது உப்பின் பெருமையும், அப்பன் இல்லாதபோது அப்பனின் பெருமையும் எப்படி தெரியுமோ, அப்படித்தான் திராவிட இயக்கங்கள் இல்லாதபோது அவற்றின் பெருமை தெரியும்.


நக்கீரன் ஜூன் 25-27 2017

2 கருத்துகள்:

  1. திராவிட இயக்கங்களுக்கு எதிர்மறை விமர்சனங்களும் தேவைப்படுகின்றன... மற்றபடி அனைத்தும் வயலாற்று உண்மை அருமை...

    பதிலளிநீக்கு
  2. திராவிட இயக்கங்களுக்கு எதிர்மறை விமர்சனங்களும் தேவைப்படுகின்றன... மற்றபடி அனைத்தும் வயலாற்று உண்மை அருமை...

    பதிலளிநீக்கு