திங்கள், 26 ஜூன், 2017

அறுபது ஆண்டுகால அரசியல் தமிழ் - கலைஞர்

                                                அறுபது ஆண்டுகால அரசியல் தமிழ் - கலைஞர்
 இமையம்

“என் கிராமத்துத் திருவிழாக்களின் போது உயரிய பனைமரங்களில் கட்டப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளிலிருந்து குணசேகரனாகவும், மனோகரனாகவும், செங்குட்டுவனாகவும் எனக்குத் தமிழ் ஏடு தொடங்கி வைத்த கலைஞர். மு.கருணாநிதிக்கு” என்று எழுதி ஒரு எழுத்தாளர் தன்னுடைய சிறுகதைத் தொகுப்பை கலைஞருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். இது மிகை அல்ல. ஒரு காலக்கட்டத்தில் தமிழ் மொழியை பேசுகிற, எழுதுகிறவர்களுக்கு தமிழ்மொழியின் மீது பற்றுக்கொள்வதற்கு கலைஞரின் எழுத்தும், பேச்சும் ஒரு தொடக்கமாக இருந்தது.
       ஐந்துமுறை முதலமைச்சராக இருந்து கலைஞர் என்ன செய்தார் என்பதைவிட, 60 ஆண்டு காலமாக தி.மு.க.வின் தலைவராக இருந்து என்ன செய்தார் என்பது முக்கியம். பழைய காலத்திலும், இன்றும் கட்சியில் இருக்கக்கூடிய கடைமட்டத் தொண்டனிடம் “கட்சியில் எதற்காக இருக்கிறீர்கள்?”என்று கேட்டால் “கலைஞரின் பேச்சுக்காக” என்றுதான் சொல்வார்கள். கட்சியில் இல்லாத ஆனால் கலைஞரை பிடிக்கும் என்று சொல்கிறவர்களிடம் கேட்டாலும் இதே பதிலைத்தான் சொல்வார்கள். எதிர்க்கட்சிக்காரர்களிடம் கேட்டாலும் இதே பதிலைத்தான் சொல்கிறார்கள்.
       நாற்பது, ஐம்பது வருஷங்களாக கட்சியில் இருந்தாலும் கலைஞரை அருகில் சென்று பார்க்க முடியாதவர்கள், கட்சிப் பதவிகளிலும், கட்சி ஆட்சியில் இருக்கும்போது, எந்தப் பதவிக்கும் போகாதவர்கள், போக முடியாதவர்கள், கட்சிப் பதவிக்கோ, ஆட்சிப் பதவிக்கோ கடைசிவரை போகமாட்டோம் என்று தெரிந்துதான் 90 சதவிகிதம் பேர் கட்சியில் இருக்கிறார்கள். இந்தமாதிரி இருக்கிறவர்கள்தான் கட்சி மாறாதவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு கலைஞர் என்ன செய்தார்?
       கலைஞரின் சட்டசபை உரையாக இருந்தாலும், மேடைப் பேச்சு, இலக்கியப் படைப்பு, சினிமா வசனம், உடன் பிறப்புக்கு எழுதிய கடிதம், அறிக்கைகள் என்று எதுவாக இருந்தாலும் தான் பேசுகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், எழுதுகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒரு புதிய சொல்லை, ஒரு புதிய வாக்கியத்தை அவர் பயன்படுத்தத் தவறியதே இல்லை. அவர் பயன்படுத்துகிற புதிய சொல்லை, புதிய வாக்கியத்தைக் கேட்பதற்காகத்தான் கட்சிக்காரர்கள் கூட்டத்திற்குப் போவார்கள். கலைஞர் பயன்படுத்திய சொல்லை, வாக்கியத்தை, சொல்லிச் சொல்லி வியப்பார்கள். கிராமத்திலிருக்கும் கடைமட்டத் தொண்டன் தினம்தினம் முரசொலி படிப்பதற்காக காத்திருந்தது, உடன் பிறப்புக்கு எழுதிய கடிதத்திலோ, புதிதாக விட்டிருக்கும் அறிக்கையிலோ, புதிதாக அவர் பயன்படுத்தயிருக்கும் சொல்லுக்காக, வாக்கியத்திற்காகத்தான்.
       “கலைஞர் பெரிய அறிவாளி, கலைஞர் சாதாரண ஆளில்லை” என்று சொல்லி சாதாரண மனிதனையும் வியக்க வைத்ததற்குக் காரணம் கலைஞரின் நிர்வாகத்திறன் அல்ல. கலைஞரின் பேச்சுதான். தன்னுடைய பேச்சில், எழுத்தில், அவர் பயன்படுத்திய புதிய சொல். புதிய வாக்கியம்தான். கலைஞர், அவருடைய வாழ்நாளில் அதிகம் பயன்படுத்திய வாக்கியம் “என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே” என்பதுதான். அந்த சொல்லை அவர் பயன்படுத்துகிற ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கட்சிக்காரனும் கோடி ரூபாய் கிடைத்ததுபோல் மகிழ்ச்சிகொள்கிறான். கலைஞர் எப்போது வருவார் என்று பல மணிநேரமாக காத்திருந்த தொண்டர்கள், மேடையில் மற்றவர்கள் எல்லாம் பேசி முடிக்கும்வரை பொறுமையாகக் காத்திருந்துவிட்டு “என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே” என்று சொன்ன மறுநொடியே கலைய ஆரம்பித்துவிடுவார்கள். சாதாரண கட்சிக்காரனுக்கு என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே என்ற  சொல்லே போதுமானதாக இருக்கிறது. அந்த ஒரு சொல்லை கேட்பதற்காகத்தான் முப்பது நாற்பது கிலோ மீட்டர் தூரம் வருகிறார்கள்.
       என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே என்ற சொல்தான் கலைஞர். அந்த ஒரு சொல்தான் தி.மு.கழகமாக இருக்கிறது. அந்த ஒரு சொல்தான் 60 ஆண்டுகாலமாக கலைஞரை தி.மு.க.வின் தலைவராக இருக்க வைத்தது. அந்த ஒரு சொல்தான் இன்றுவரை கட்சியை பத்திரமாக வைத்திருக்கிறது. கடைமட்டக் கட்சிக்காரனுக்கு கலைஞர் கொடுத்ததும், கடைமட்டக் கட்சிக்காரன் கலைஞரிடம் எதிர்ப்பார்ப்பதும் அந்த ஒரு சொல்லைத்தான். தி.மு.க. இன்று உயிருடன் இருப்பதற்கும் அந்த சொல்தான் காரணம்.
       கலைஞர் தன்னுடைய சட்டசபை உரையிலும், மேடைப் பேச்சிலும், உடன் பிறப்புக்கு எழுதிய கடிதத்திலும் அரசியலை பேசவில்லை. மாறாக அரசியலை பாடமாக நடத்தினார். கடைமட்டத் தொண்டனையும் அரசியலை படிக்க வைத்தார், அரசியலை பேச வைத்தார். தனக்குத் தெரிந்ததை, தான் படித்ததையெல்லாம் தன்னுடைய தொண்டனுக்குச் சொன்னார். தமிழக அரசியல் மட்டுமல்ல, இந்திய, உலக அரசியலையும் தன்னுடைய தொண்டனுக்கு சொல்லிக் கொடுத்தார். கட்சியின் மேல்மட்டத் தலைவர்களிலிருந்து கடைமட்டத் தொண்டன் வரையிலும், ஒவ்வொருவரையும் அவர் அரசியல் மையப்படுத்தினார். இன்றும் “தி.மு.க.காரன்கிட்ட பேச முடியாது. சட்டம் பேசுவானுவோ” என்று பேசுவார்கள். இப்படி பேசுவதற்கான தகுதியை கட்சிக்காரனுக்கு ஏற்படுத்தியவர் கலைஞர்தான். உலகத் தலைவர்களில் சாதாரணத் தொண்டனையும் அரசியல் மையப்படுத்தியவர் கலைஞர் மட்டும்தான்.
       ஓர் அறிக்கையின் வழியாக, ஒரு பேட்டியின் மூலமாக தமிழக அரசியலை, இந்திய அரசியலையே மாற்றிவிடும் ஆற்றல் கலைஞருக்கு மட்டும்தான் இருந்தது. ‘தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது” என்று அவர்தான் சொன்னார். அது இப்போது எதிர்க் கட்சிக்காரர்களும் பயன்படுத்துகிற வாக்கியமாக இருக்கிறது. “ராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தான்?” என்று அவர் கேட்ட ஒரு கேள்வி இந்தியாவை அதிர வைத்தது. “மானமிகு இல்லாவிட்டால் மாண்புமிகு இல்லை” என்று அவர்தான் சொன்னார். இதன் பொருள் எல்லாருக்கும் தெரியும். “யாப்பின்றி போனாலும் போகட்டும், நம் நாடு, மொழி, மனம், உணர்வெல்லாம் காப்பின்றிப் போகக் கூடாதெனும் கொள்கை” என்று கலைஞரே ஒருமுறை சொன்னார். இந்த கொள்கைதான் கலைஞரின் எழுத்து, பேச்சு, வாழ்க்கையாக இருக்கிறது.


தி இந்து (தமிழ்) 03.06.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக