கட்சிக்காரன்
– இமையம்
சலவை வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு, சட்டையை எடுத்துப்
போட்டுக்கொண்டார் பொன்னுசாமி. வேட்டி சட்டை சரியாக இருக்கிறதா என்று பார்த்தார். எண்ணெய்
தடவி தலை சீவினார். தன்னுடைய துணிகள் இருந்த இடத்தில் துண்டைத் தேடினார். இல்லை. அடுத்தடுத்த
இடங்களில் தேடினார். துண்டு கிடைக்கவில்லை. மீனாட்சியின் துணிகளுக்கிடையே கிடந்த இரண்டு
துண்டுகள் அழுக்காக இருந்தன. அதை எடுத்து கோபத்தில் எறிந்துவிட்டு வந்து மீண்டும் தன்னுடைய
துணிகள் இருந்த இடத்தில் தேடினார். இருந்த சால்வைகளும் உருப்படியாக இல்லை. உடம்பு சரியில்லாத
நிலையில் படுத்திருந்த மீனாட்சி “என்னாத்தத் தேடுறிங்க?” என்று கேட்டாள்.
“துண்டு.”
“வேட்டி சட்டதான் போட்டாச்சில்ல.
அப்புறமென்ன?”
“தோளில கட்சித் துண்டு
இல்லாட்டி நல்லா இருக்காது.”
“வெளியூர் பயணமா?” என்று
மீனாட்சி கேட்டாள். அவள் குரலிலிருந்த இளக்காரத்தைப் பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல்
துண்டைத் தேடினார்.
“எலக்க்ஷன் வந்தாலே கோட்டயப்
புடிக்கப் போற மாதிரிதான் அலயுறது. கோட்டயப் புடிக்கிறவன்கூட இந்த மாதிரி அலய மாட்டான்”
என்று மீனாட்சி சொன்னதும் பொன்னுசாமி அவளை முறைத்துப் பார்த்தார். அதைப் பொருட்படுத்தாமல்
கிண்டலான குரலில் “கல்யாண மாப்ளக்கி இன்னிக்கி எந்த ஊர்ல சுத்துப் பிரயாணம்?” என்று
கேட்டாள். பொன்னுசாமி மீனாட்சியின் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. அவள் கேட்டதற்கும்
பதில் சொல்லவில்லை.
பொன்னுசாமி என்றைக்கெல்லாம் சலவை வேட்டி, சட்டை போடுகிறாரோ
அன்றைக்கெல்லாம் இதே கேள்வியைத்தான் மீனாட்சி கேட்பாள். அந்தக் கேள்விக்கு இதுவரை ஒருமுறைகூட
அவர் பதில் சொன்னதில்லை. இப்போதும் சொல்லவில்லை.
பொன்னுசாமியினுடைய வேட்டி, சட்டை, துண்டு, சால்வை
எல்லாம் தனியாக ஒரு மர பீரோவில் இருக்கும். தன்னுடைய துணிகளை மற்றவர்களுடைய துணியோடு
ஒரு நாளும் கலந்துபோட மாட்டார் மற்றவர்களுடைய துணிகளோடு தன்னுடைய துணிகள் கிடந்துவிட்டால்
அவருக்குக் கோபம் வந்துவிடும். “இது என்ன வண்ணான் வீடா?” என்று கேட்டு சத்தம் போடுவார்.
வீட்டில் எதை வைத்திருக்கிறாரோ இல்லையோ சலவை வேட்டியும், சட்டையும் வைத்திருப்பார்.
எதற்கு செலவு செய்கிறாரோ இல்லையோ சலவைக்கு மட்டும் தாராளமாகச் செலவு செய்வார். கையில்
காசு இல்லாமல்கூட வீட்டைவிட்டுக் கிளம்புவார். ஆனால் சலவை வேட்டி, சட்டை இல்லாமல் கிளம்ப
மாட்டார். அதனால் அவருக்கும் மீனாட்சிக்கும் சண்டை நடக்கும். மீனாட்சி
எவ்வளவு சண்டை போட்டாலும் எத்தனை கேள்வி கேட்டாலும் பொன்னுசாமி ஒரே பதில்தான் சொல்வார்.
“கட்சிக்காரனுக்கு அடயாளம் வெள்ள வேட்டி சட்டதான். அது இல்லன்னா எப்பிடி?”
வீட்டிற்குள் வந்த கதிரவன் பொன்னுசாமி எதையோ தேடிக்கொண்டிருப்பதைப்
பார்த்துவிட்டு “என்னாத் தேடுற?” என்று கேட்டான்.”
“துண்டு”
“சலவத் துண்டா?”
“ஆமாம்.”
“வீட்டுக்குப் பின்னால
கொடியில காயுது.”
“அங்க எப்பிடிப் போச்சி?”
என்று பொன்னுசாமி கேட்டதற்கு கதிரவன் பதில் சொல்லவில்லை. விருட்டென்று பொன்னுசாமி வீட்டிற்குப்
பின்புறம் சென்றார். கொடியில் காய்ந்துகொண்டிருந்த துண்டைப் பார்த்ததும் அவருக்குக்
கோபம் வந்தது. பீரோவிலிருந்த துண்டை யார் எடுத்து பயன்படுத்தியிருப்பார்கள் என்று யோசித்தார்.
கதிரவன்தான் எடுத்திருக்க வேண்டும். வெறுப்புடன் துண்டை எடுத்து பல மடிப்புகளாக மடித்துத்
தோளில் போட்டுக்கொண்டு வீட்டிற்குள் வந்தார். மீனாட்சியிடம் “நான் ஒரு எடத்துக்குப்
போயிட்டு வரன்” என்று சொல்லிவிட்டு வாசலுக்கு வந்து செருப்பைப் போடும்போது கதிரவன்
வந்து “கட்சியில இன்னிக்குத்தான நேர்காணல் நடக்குது?” என்று கேட்டான்.
“ஆமாம்.”
“பணம் கட்டியிருக்கிறதான?”
“ம்.”
“நானும் வரன்” கதிரவன்
சொன்னதும் “இதென்ன புதுப் பழக்கம்?” என்பதுபோல் அவனைப் பார்த்தார். பொன்னுசாமி என்ன
சொல்கிறார் என்பதைக்கூடக் கேட்காமல் “இரு வரன்” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்று
கட்சி வேட்டியைக் கட்டிக்கொண்டு, சட்டையைப் போட்டுக்கொண்டான். வீட்டிற்கு பின்புறமாக
நிறுத்தியிருந்த மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டுவந்து வாசலில் நிறுத்தி “ஏறு போவலாம்.”
என்று சொன்னான்.
“நான் பாத்திட்டு வரன்”
என்று பொன்னுசாமி சொன்னதும் கதிரவனுக்குக் கோபம் வந்துவிட்டது.
“கட்சியில சீட்டுக் கேட்டு
போவும்போது தனியாளா போனா எவன் மதிப்பான்?” வேகமாகக் கேட்டான்.
“காரியம் ஜெயம் ஆவுமான்னு
தெரியலியே.”
“கவுன்சிலர் சீட்டுக்
கேட்டுப் போறவனெல்லாம் தன்னோட செல்வாக்கக் காட்ட நூறு இரநூறு பேர வண்டி வச்சி அழச்சிக்கிட்டுப்
போறான். சீட்டுக் கெடைக்குதா இல்லியான்னு தெரியறதுக்குள்ளாரியே ஒவ்வொருத்தனும் ஒரு
லட்சத்துக்கு மேல செலவு செய்யுறான். கூட்டத்தக் காட்டுனாத்தான ஒன்றிய செயலாளரு, மாவட்ட
செயலாளரு பயப்படுவானுங்க?”
கதிரவன் சொல்கிற விஷயமும், கேட்கிற கேள்வியும் சரிதான்
என்று தோன்றினாலும் “நான் போயிப் பாத்திட்டு வரன்” என்றுதான் சொன்னார் பொன்னுசாமி.
வண்டியை நிறுத்திவிட்டு
பொன்னுசாமிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு எச்சரிக்கை செய்வது மாதிரி சொன்னான்
“இந்தமுற மட்டும் சீட்டு வங்கலன்னா இனிமே நீ கட்சி வேட்டியக் கட்டக் கூடாது.”
பொன்னுசாமி பதில் பேசாமல்
நின்றுகொண்டிருந்தார்.
“போன உள்ளாட்சி தேர்தல்லியே
எங்க கட்சிக்கு வந்துடு. சீட்டு தரன்னு ரெண்டு கட்சியில என்னெ கூப்புட்டப்பவே நான்
போயிருக்கணும். என்னெ மறிக்காம நீ வுட்டிருந்தின்னா நான் கவுன்சிலராயிருப்பன்” பொன்னுசாமியைப்
பார்த்துக் கோபமாகச் சொன்னான் கதிரவன்.
“அப்பனுக்கும் மகனுக்கும்
சண்டய உண்டாக்கத்தான் அப்பிடிச் சொல்றானுவ. சீட்டுத் தர்றதுக்காகச் சொல்லல.”
“ஒரே வீட்டுல அப்பன்
ஒரு கட்சியில, மவன் ஒரு கட்சியில இல்லியா? பதவியிலதான் இல்லியா?”
“அப்பிடியிருக்கிறது
அசிங்கம் இல்லியா?”
“அசிங்கம் பாத்தா அரசியல்ல
இருக்க முடியுமா? பதவியிலதான் இருக்க முடியுமா? ஒன்றியக் கவுன்சிலர் சீட்டோ, மாவட்டக்
கவுன்சிலர் சீட்டோ நீ வாங்கியே ஆவணும். சீட்டு இல்லன்னா நான் நாளைக்கே வேற கட்சிக்குப்
போயிடுவன்.” ஓரே தீர்மானமாகக் கதிரவன் சொன்னான் தன்னுடைய மகனிடமிருந்து இப்படியொரு
வார்த்தை வரும் என்று பொன்னுசாமி எதிர்ப்பார்க்கவில்லை.
பொன்னுசாமிக்கு இப்போது வயது எழுபதுக்கு மேல். இருப்பத்தியோராவது
வயதில் கட்சியில் சேர்ந்தார். மங்களூர் தாலூகாவில் முதன்முதலாகத் தன்னுடைய ஊரில் கட்சிக்கொடியை
அவர்தான் ஏற்றினார். சுற்று வட்டாரத்து ஆட்களிடம் சொல்லி, பேசி கட்சிக்கொடியை ஏற்றச்
சொல்லி அவர்தான் கட்டாயப்படுத்தினார். கட்சிக் கூட்டங்களுக்குத் தன்னுடைய ஊரிலிருந்து
மட்டுமல்ல, பக்கத்து ஊர்களிலுள்ள ஆட்களையும் அழைத்துக்கொண்டு போவார். கட்சிக் கூட்டம்
சம்பந்தமான நோட்டீஸ்களை அவர்தான் சைக்கிளில் சென்று ஒவ்வொரு ஊர் கட்சிக்காரர்களிடமும்
கொடுப்பார். மாவட்டத்திற்குள் கட்சிக் கூட்டம் எங்கு நடந்தாலும் போவார். கட்சிப் பத்திரிகையைப்
படிக்காமல் அவரால் ஒரு நாள்கூட இருக்க முடியாது. கட்சிக் கூட்டத்திற்குப் போவதும்,
ஜெயிலுக்குப் போவதும் அவருக்கு விருந்துக்குப் போவது மாதிரிதான். கண்டன ஆர்ப்பாட்டம்,
முற்றுகைப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம், சிறை நிரப்பும் போராட்டம் என்று தலைமைக்
கழகம் அறிவித்துவிட்டால், போலீஸ் பிடித்துக்கொள்ளும் என்று உறவினர் வீட்டிற்கோ, காட்டிற்கோ
சென்று மறைந்துகொள்ள மாட்டார். போலீஸ் வந்து வீட்டில் கைது செய்யவில்லை என்றால் கூடத்
தானாகவே சென்று போலீஸில் ஆஜராவார். எந்தப் போராட்டத்திற்குச் சென்றாலும் முன்னெச்சரிக்கையாக
இரண்டு ஜோடி துணிகளுடன்தான் செல்வார். இதுவரை பதினெட்டு முறை ஜெயிலுக்குப் போயிருக்கிறார்.
ஒரு முறைகூட அவர் ஜாமினில் வெளியே வந்ததில்லை. ‘ஜாமின் போடு’ என்று யாராவது சொன்னால்
“ஜாமின்ல வெளிய போறதுக்கு எதுக்குப் போராட்டத்தில கலந்துக்கணும்?” என்று கேட்பார்.
ஒரு முறை ஆறுமாதம் ஜெயிலில் இருந்தார். அப்போதும்கூட அவர் ஜாமினில் வெளியே வரலில்லை.
கட்சி மாநாடுகளுக்குப் போனால் கல்யாணத்திற்குப் போவது மாதிரிதான் போவார். கட்சிக்காரன்
பத்திரிகை வைத்தால் மொய் வைக்கிறாரோ இல்லையோ, கல்யாணத்திற்குப் போகாமல் இருக்க மாட்டார்.
சாதாரணக் கட்சிக்காரன் செத்த செய்தி தெரிந்தால்கூட உடனே போய்விடுவார். “இதுக்கெல்லாம்
போவணுமா? அலயணுமா?” என்று மீனாட்சி கேட்கும் போதெல்லாம் “நாலு கட்சிக்காரன் போனாத்தான,
கட்சிக்காரனுக்கு மரியாத?” என்று சொல்வார்.
மாவட்ட அளவில் உள்ள அனைத்துக் கட்சிக்காரர்களுக்கும்
பொன்னுசாமியைத் தெரியும். ஒன்றிய அளவில் கட்சியில் எந்தக் கூட்டம் போட்டாலும் மாவட்டச்
செயலாளர், சிறப்புப் பேச்சாளர் வரும்வரை நேரத்தைப் போக்க, கூட்டத்தைக் கலையாமல்
வைத்திருக்க மைக்கில் பொன்னுசாமியைத்தான் பேசச் சொல்வார்கள். கட்சியின் முழு வரலாற்றையும்,
கட்சி நடத்தியப் போராட்டங்கள், கட்சி ஆட்சியில் இருக்கும்போது செய்த சாதனைகள் என்று
ஒவ்வொன்றையும், தேதி மாறாமல் வருடம் மாறாமல் புள்ளி விபரத்துடன் சொல்வார். தலைவர் எந்தெந்த
தேதியில் என்னென்ன விதமாக அறிக்கைவிட்டார் ‘உயிருக்கும் உயிரான சகோதரர்களே’ என்று எழுதும்
கடிதத்தில் என்ன எழுதினார் என்பதையெல்லாம் தேதிவாரியாக சொல்வார். அதனால் அவரைக் கட்சியில் உள்ளவர்கள் ‘லா பாயிண்ட்’
என்று சொல்வார்கள். கட்சி தோற்கும் போதெல்லாம் இரண்டு மூன்று நாள் சாப்பிடாமல் இருப்பார்.
கட்சி தோற்ற பிறகு கூட்டத்தில் பேசும்போது, “நாம் தோற்கவில்லை. மக்கள்தான் தோற்றார்கள்.
மக்களின் நலத்திட்டங்கள்தான் தோற்றன. நம் கொள்கைகள் தோற்கவில்லை. கொள்கைகளின் எதிரிகள்தான்
தோற்றார்கள். எங்கள் தலைவரின் தமிழ் தோற்கவில்லை. தமிழ் விரோதிகள்தான் தோற்றார்கள்.”
என்று தோற்றுப் போனதையே பெருமையாகப் பேசுவார்.
தன்னுடைய ஒன்றியத்தில் வரக்கூடிய எம்.எல்.ஏ., எம்.பி., சீட்டை கூட்டணிக்கு ஒதுக்கும்போதெல்லாம்
கடுப்பாகி “நம்ப சொட்ட என்னா இப்பிடிச் செஞ்சி கட்சிக்காரன் கைய ஒடிச்சிடிச்சி. மைக்கில
நாலு வார்த்த புகழ்ந்து சொன்னா போதும் அவருக்கு.” என்று சொல்லி தன்னுடைய தலைவரையே திட்டுவார்.
மைக்கில் பேசும்போது மட்டும் “எங்க தலைவரு பேசுறது, எழுதுறது மட்டும் தமிழ் இல்லடா.
அவரு நடக்கறது, செய்யுறது எல்லாமே தமிழ் தாண்டா. தமிழ்த்தாயே எங்க தலைவரு மூலமாத்தான்
உயிரோட இருக்கா” என்று பெருமையாக பேசுவார். எதிர்க் கட்சிக்காரர்களைப் பற்றிப் பேசும்போது
மட்டும் அவருக்கு எப்படித்தான் அவ்வளவு கெட்ட வார்த்தைகள் வருமோ? எதிர்க்கட்சிக்காரர்களை
வறுத்தெடுத்து விடுவார். ஒன்றியச் செயலாளர், மாவட்டச் செயலாளர், பேச்சாளர்களைவிட கட்சி
தொடர்பான விஷயங்களை ஒன்றுவிடாமல் பொன்னுசாமிதான் மைக்கில் பேசுவார். அதனாலேயே அவருக்கு
கட்சியில் பெரிய மதிப்பு. மைக்கில் பேசுவது பொன்னுசாமிக்கு கறிசோறு சாப்பிடுவது போல்தான்.
பொன்னுசாமி, மாவட்டப் பிரதிநிதி, ஒன்றியச் செயலாளர்,
ஒன்றிய அவைத் தலைவர் என்று கட்சியில் பல பதவிகளில் இருந்திருக்கிறார். இப்போதும் அவர்தான்
ஒன்றிய அவைத்தலைவர். நிலவள வங்கியிலும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியிலும் மூன்றுமுறை
நியமன உறுப்பினராக இருந்திருக்கிறார். பெரிய பதவிகளில் இல்லையென்றாலும் அவரால்தான்,
அவருடைய ஊருக்கு மின்சாரம் வந்தது, ரோடு, பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம், நீர்த்தேக்கத்
தொட்டி வந்தது. கட்சி ஆட்சியில் இருக்கும்போது ஒவ்வொன்றாகக் கொண்டு வந்தார். அதனால்
ஊருக்குள் அவருக்கு மதிப்பு இருந்தது. ஊர் மதித்தாலும், கட்சிக்காரர்கள் மதித்தாலும்
வீட்டிலுள்ளவர்கள் அவரை மதிக்க மாட்டார்கள். எப்போது பார்த்தாலும் “என்னா சம்பாதிச்ச?”
என்றுதான் கேட்பார்கள்.
பொன்னுசாமியும் கதிரவனும் வாசலில் நின்று ஏதோ பேசிக்கொண்டருப்பதைப்
பார்த்த கதிரவனுடைய மனைவி திலகவதி “ஒம் மவனுக்கும், ஒம் புருசனுக்கும் சண்ட நடக்குது”
என்று மீனாட்சியிடம் சொன்னாள். உடனே மீனாட்சிக்கு பதைபதைப்பு உண்டாயிற்று. எழுந்து
நிற்பதற்கு, நடப்பதற்கு முடியாவிட்டாலும் சிரமப்பட்டு எழுந்து வாசலுக்கு வந்து “என்னா?”
என்று பொன்னுசாமியிடம் கேட்டாள். அவர் பதில் சொல்லாததால் கதிரவனிடம் “என்னாப்பா சேதி?”
என்று கேட்டாள். இருவருமே பதில் சொல்லாததால் அவளுடைய பதைபதைப்பு அதிகமாயிற்று. இருவரும்
பெரிதாகச் சண்டை போட்டுக்கொண்டு விட்டார்களோ என்ற கவலை வந்தது. கட்சி
கட்சி என்று எதற்காக அலைகிறாய் என்று கதிரவன் கேட்டிருக்க வேண்டும். அதற்காகப் பொன்னுசாமி
கோபித்துக்கொண்டு சண்டை போட்டிருக்க வேண்டும் என்று தானாகவே நினைத்துக்கொண்டு “இந்த
வயசிலயும் எதுக்குக் கட்சி கட்சின்னு அலயுற? கட்சியால பத்து காசுக்கு ஐவேசி உண்டா?”
என்று மீனாட்சி கேட்டதும், கதிரவன்மீது இருந்த கோபத்தை அவளிடம் காட்டினார். “நான் காசுக்காக
கட்சியில இல்ல.”
பொன்னுசாமியைத் திட்டினால்
கதிரவனுடைய கோபம் குறையும் என்ற எண்ணத்தில் “பொழப்பப் பாக்காம இன்னும் எத்தினி வருசத்துக்குத்தான்
கட்சி கட்சின்னு அலைவ? நீ இம்மாம் அலையுறதுக்குக் கட்சி என்னா செஞ்சிச்சி?” கோபமாகக்
கேட்டாள்.
“கட்சி என்னா செய்யல?”
வீம்புடன் கேட்டார் பொன்னுசாமி.
“நீ வெள்ள சட்டப் போட்ட,
வெள்ள வேட்டி கட்டுன. தெனம் காரு ஏறுன. மைக்கில கத்துன. வேறென்ன?” கோபம் வந்த மாதிரி
மீனாட்சி கேட்டாள்.
“மொத பொண்ணுக்கு ஒரு
மந்திரி, ரெண்டு எம்.பி., நாலு எல்.எல்.ஏ.வ வரவச்சி கல்யாணம் கட்டுனன். ரெண்டாவது பொண்ணுக்கு
ரெண்டு மந்திரி, ஒரு எம்.பி., ரெண்டு எம்.எல்.ஏ.வ வரவச்சி கல்யாணம் கட்டுனன். ஒம் மவனுக்கு
மூணு மந்திரி, ரெண்டு எம்.பி., ஆறு எம்.எல்.ஏ.வ வரவச்சி கல்யாணம் கட்டுனன். இந்த வட்டாரத்தில
என் அளவுக்கு பிரபலமா கட்சிக் கல்யாணம் கட்டுனது யாரு? கட்சி எத செய்யணுமோ அதத்தான்
செய்யும்.”
“மந்திரி வரான், எம்.பி.,
எம்.எல்.ஏ., வரான்னு சொல்லிக் கொடி கட்டவும், மேட போடவும்தான எஞ் சொத்த அழிச்ச. எங்கள
கடனாளியாக்குன. ஒங் கட்சிய நீதான் மெச்சிக்கலாம். கட்சி ஆட்சியில இருந்தாத்தான் கல்யாணம்
கட்டுவன்னு சொல்லி ஒவ்வொரு புள்ளைக்கும் வயசு முத்திப் போன பிறகுதான கல்யாணம் கட்டுன?”
என்று மீனாட்சி கேட்டதும் பொன்னுசாமி அவளை முறைத்துப் பார்த்தார்.
“அவரோட புத்திதான் ஒனக்குத்
தெரியுமே. வெள்ள சட்ட, வெள்ள வேட்டிக் கட்டிக்கிட்டு காரு ஏறாட்டி பித்துப்புடிச்சிப்
போவுமின்னு ஒனக்குத் தெரியாதா?” என்று கதிரவனிடம் கேட்டாள். அதற்கு அவன் எந்த பதிலும்
சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
“வயசானவருகிட்ட நீ எதுக்கு
மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கிற?” என்று மீண்டும் மீனாட்சி கேட்டாள்.
“விஷயம் புரியாம பேசிக்கிட்டிருக்காத.
போயிப் படும்மா.” என்று சொல்லி மீனாட்சியைக் கதிரவன் முறைத்தான். பிறகு பொன்னுசாமியிடம்
விறைப்பாக “வண்டிய எடுக்கவா? வேணாமா?” என்று கேட்டான்.
பொன்னுசாமிக்கு என்ன
பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவர் சங்கடத்துடன் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்த மீனாட்சிக்கு
வருத்தமாக இருந்தது.
“அவரு வரலன்னா வுட்டுட்டுப்
போயன் தம்பி” என்று கதிரவனிடம் சொன்னாள். அவள் சொன்னதைக் காதில் வாங்காத மாதிரி நின்றுகொண்டிருந்தான்
கதிரவன்.
“அவன்தான் கூப்புடுறானே.
நீதான் போனா என்ன?” என்று கேட்டாள். ஒன்றும் சொல்லாமல் நின்றுகொண்டிருந்த பொன்னுசாமியைப்
பார்ப்பதற்கு பாவமாக இருந்தது. உள்ளூரிலும்சரி, கட்சியிலும்சரி அவர் சொல்வதைதான் மற்றவர்கள்
கேட்பார்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்கிற பழக்கம் ஒரு நாளும் அவரிடமிருந்ததில்லை.
அவருக்கு மனதில் சரி என்று எது படுகிறதோ, அதை யாராக இருந்தாலும் நேரடியாக சொல்லிவிடுவார்.
அவர் பெரிய பதவிகளுக்குப் போகமால் இருந்ததற்கு வசதி இல்லாதது மட்டுமல்ல, அவருடைய வாயும்
ஒரு காரணம். அப்படிப்பட்டவர் ஒடுங்கிப்போய் நிற்கிறாரே என்று நினைத்த மீனாட்சிக்கு
அழுகை வந்தது. “ஊருல இல்லாத அப்பன் புள்ளையா இருக்கிங்கன்னு நெனச்சன். அதுவும் போச்சா?”
என்று மீனாட்சி சொன்னதும் “ஒனக்கு விஷயம் புரியல. பேசாம இரும்மா” என்று சொல்லிக் கதிரவன்
மீனாட்சியை முறைத்ததைப் பார்த்த பொன்னுசாமி “வண்டிய எடு” என்று சொன்னார்.
கதிரவன் வண்டியை எடுத்ததும்
ஏறி உட்கார்ந்த பொன்னுசாமி “உள்ளாரப் போயி படு” என்று மீனாட்சியிடம் சொன்னார். கதிரவன்
வண்டியை ஒட்ட ஆரம்பித்தான்.
சொந்தக்காரர்கள் நிகழ்ச்சிக்குப் போனாலும், கட்சி
நிகழ்ச்சிகளுக்குப் போனாலும் தனியாகத்தான் போவார். தனியாகத்தான் வருவார். அதே மாதிரி
கதிரவன் எங்கு போனாலும் தனியாகத்தான் போய் வருவான். ஒன்றாக ஒரு இடத்தில் இருவரும் இருக்க
மாட்டார்கள். சாதாரணமாக கதிரவன் பொன்னுசாமி இருக்கிற இடத்திற்கு வரவே மாட்டான். தேவைக்கு
அதிகமாகப் பேச மாட்டான். அப்படிப்பட்டவன் ஏன் இன்று பிடிவாதம் பிடித்துக்கொண்டு வருகிறான்?
ஒவ்வொரு தேர்தலின்போதும் சொல்வதுபோல் இந்த முறையும் ‘அடுத்தமுற பாத்துக்கலாம்’ என்று
சொல்லிவிட்டால் கதிரவன் என்ன நினைப்பான் என்று யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்
பொன்னுசாமி.
ஊரைத்தாண்டி வெகுதூரம் வரும்வரை ஜென்ம விரோதியை வண்டியில்
ஏற்றிக்கொண்டு போவதுபோல் கதிரவனும், ஜென்ம விரோதியின் வண்டியில் உட்கார்ந்துகொண்டு
போவதுபோல் பொன்னுசாமியும் இருந்தனர்.
பொதுவாக பொன்னுசாமி பேச ஆரம்பித்தால் எளிதில் நிறுத்த
மாட்டார். எதிராளியைப் பேசவிட மாட்டார். எதிராளி என்ன சொல்கிறான் என்பதையும் கேட்க
மாட்டார். அதிலும் எதிர்க்கட்சிக்காரர்களிடம் பேசினால் அவர்களை வாயைத் திறக்கவிட மாட்டார்..
அப்படிப்பட்டவர் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தார். பின்னால் கொடி கட்டிக்கொண்டு
வந்த வேனைப் பார்த்தார். அது கண் சிமிட்டும் நேரத்தில் கதிரவனுடைய வண்டியை முந்திக்கொண்டு
சென்றதைப் பார்த்ததும் “நம்ப கட்சி வண்டிதான போவுது? மாவட்டம் வந்திருப்பாரா?” என்று
கதிரவன் கேட்டான்.
“பத்து மணிக்கு நேர்காணல்ன்னு
போட்டிருக்கானுவ. சொன்ன நேரத்துக்கு என்னிக்கி நடந்திருக்கு?” என்று பட்டும்படாமல்
பொன்னுசாமி சொன்னார். காற்றில் பறக்காமல் துண்டையும், வேட்டியையும் கவனத்துடன் பிடித்துக்கொண்டார்.
“ஒன்றியச் செயலாளர் பயல
நம்பிக்கிட்டு இருக்காத. நேரா மாவட்டத்தப் பாரு. அப்பதான் காரியம் நடக்கும்.” புதுக்கட்சிக்காரனிடம்
சொல்வது மாதிரி கதிரவன் சொன்னான். அதற்குப் பொன்னுசாமி பதில் சொல்லாததால் வண்டி போகிற
வேகத்தில் சரியாக கேட்கவில்லையோ என்று சந்தேகப்பட்ட கதிரவன் “நான் சொன்னது புரிஞ்சிதா?”
என்று அறியாப் பிள்ளையிடம் கேட்பதுபோல் கேட்டான்.‘
“மாவட்டத்த எங்க தனியா
பாக்க முடியுது? எப்பப் பாத்தாலும் ரிக்காட் டான்ஸ்க்காரிய சுத்தி நிக்குற மாதிரி நூறு
பேரு ஆள சூழ்ந்துக்கிட்டு நிக்கிறானுவ.”
“இங்கப் பாக்க முடியலன்னா
நான் காரு எடுக்கிறன். மாவட்டத்த வீட்டுலப் போயிப் பாத்திடலாம்.” கட்டளை மாதிரி கதிரவன்
சொன்னான்.
“பாக்கலாம். நீ கொஞ்சம்
புடிச்சிப் போ. நம்ப கெட்ட நேரம் மாவட்டம் நேரத்திலியே வந்திடப் போறாரு” என்று பொன்னுசாமி
சொன்னதும் முன்பைவிட வண்டியின் வேகத்தைக் கூட்டினான் கதிரவன். அப்போது அவனுடைய வண்டியை
முந்திக்கொண்டு கொடி கட்டிக்கொண்டு இரண்டு கார்கள் ‘சர்சர்’ என்று காற்றாக பறந்து ஓடின.
அதைப் பார்த்ததும் வண்டியின் வேகத்தை மேலும் கூட்டினான். பயந்துபோன பொன்னுசாமி “முன்னாலப்போயி
அள்ளுறவன் அள்ளட்டும். நீ மெதுவா போ” என்று சொன்னார். அவர் சொன்னதைக் கதிரவன் காதில்
வாங்கிக்கொள்ளவில்லை. அவனுடைய வண்டியை முந்திக்கொண்டு வேன், டெம்போ என்று போகப்போக
வண்டியின் வேகத்தைக் கூட்டியவாறே இருந்தான். பெண்ணாடம் நகரத்திற்கு வந்ததும்தான் வண்டியின்
வேகத்தைக் குறைத்தான்.
“நேர்காணல் மண்டபத்தில
தான?” என்று கதிரவன் கேட்டான்.
“பர்வதாம்பாள் மண்டபம்”
வழிப்போக்கியிடம் சொல்வதுபோல் சொன்னார் பொன்னுசாமி.
வண்டியை நேராக மண்டபத்திற்கு
ஓட்டினான் கதிரவன்.
கல்யாண மண்டபத்தின்
முன்னும், பக்கவாட்டிலும் கார், வேன், டெம்போக்கள் என்று இருபது முப்பது வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
மோட்டார் பைக்குகள் இருநூறு முந்நூறு இருக்கும். வண்டியை ஓரம்கட்டி நிறுத்தியதும்,
இறங்கிக்கொண்டார் பொன்னுசாமி. வண்டியை ஸ்டேண்ட் போட்டு நிறுத்திய கதிரவன் “வா போவலாம்”
என்று சொல்லிவிட்டு மண்டபத்திற்குள் முதலில் போனது பொன்னுசாமிக்கு எரிச்சலை உண்டாக்கியது.
பொன்னுசாமிக்கு மண்டபத்திற்குள் நுழைவதற்கே சிரமமாக
இருந்தது. அவ்வளவு கூட்டம். மண்டபத்திற்குள் நடப்பதற்கு அல்ல, நிற்பதுக்குக்கூட இடமில்லாமல்
இருந்தது. பொன்னுசாமியைப் பார்த்த பலரும் “வணக்கம்ண்ணே” என்று கும்பிட்டார்கள். “அவைத்
தலைவரே லேட்டா வந்தா எப்பிடி?” என்று ஒரு ஆள் கேட்டான். அதற்கு “அவைத் தலைவர வச்சா
எல்லாக் காரியமும் நடக்குது?” என்று பொன்னுசாமி கேட்டதும், அந்த ஆள் கோபித்துக்கொண்டதுபோல்
“என்னண்ணே நீங்களே இப்பிடி சொல்றிங்க? பெரிய கட்சிக்காரரே இப்பிடி சொன்னா எப்பிடி?”
என்று கேட்டுச் சிரித்தான்.
“உண்மையான கட்சிக்காரனுக்கெல்லாம்
இன்னிக்கி மதிப்பிருக்கா?” என்று பொன்னுசாமி கேட்டார். அதற்கு அந்த ஆள் பதில் சொல்லவில்லை.
“பணம் கட்டி இருக்கிங்களா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டான்.
“கட்டியிருக்கன்” என்று
சொல்லிவிட்டு “இந்த முறயும் ஒனக்குத்தான சீட்டு?” என்று கேட்டார்.
“மூணுமுற நின்னுட்டதால
இந்தமுற நீ நிக்காதன்னு மாவட்டம் சொல்லிட்டாரு. நானும் சனியன் வுட்டதுன்னு வுட்டுட்டன்.
நம்ப வீட்டுக் காசயும் கொடுத்து, கண்ட பய காலுலயும் விழுந்து கும்புடணும். நமக்கு எதுக்கு
அந்த பொழப்புன்னு வுட்டுட்டன். ஆளுங் கட்சியா இல்லாதப்ப கவுன்சிலரா நின்னு என்னாத்த
சாதிக்க முடியும்?” என்று சொல்லிவிட்டு சிரித்தான்.
“அப்பறம் யாருக்காக வந்திருக்க?”
“என் தங்கச்சி மவன் பணம்
கட்டியிருக்கான். அதுக்காக வந்தண்ணே” என்று
சொன்னான் அந்த ஆள்.
“சரி. நான் ஒன்றியத்தப்
பாத்திட்டு வரன்” என்று சொல்லிவிட்டு கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர் தண்டபாணி எங்கே
இருக்கிறான் என்று தேட ஆரம்பித்தார். அப்போது மூன்று நான்கு கட்சிக்காரர்கள் மறித்துக்கொண்டு
பேச ஆரம்பித்ததால் “நீ போய் ஒன்றியம் எங்க இருக்கார்ன்னு பாத்திட்டு வா” என்று கதிரவனிடம்
சொன்னார். உடனே கூட்டத்தில் புகுந்து நடக்க ஆரம்பித்தான் கதிரவன்.
“அண்ணே நல்லாயிருக்கிங்களா?”
என்று கேட்டுக்கொண்டே மகளிரணியைச் சேர்ந்த பெண் வந்தாள். “மாவட்டம் எப்ப வராரு?” என்று
கேட்டாள். “தெரியலம்மா” என்று பொன்னுசாமி சொன்னதும், அந்தப் பெண் சிரித்துக்கொண்டே
“அண்ணனுக்கே தெரியலியா?” என்று கேட்டுச் சிரித்தாள். பிறகு “பணம் கட்டி இருக்கிங்களா?”
என்று கேட்டாள். ஆமாம் என்பதுபோல் பொன்னுசாமி தலையை ஆட்டியதும் “அப்ப அண்ணனுக்கு சீட்டு
கன்ஃபார்ம்” என்று சொல்லிவிட்டு சிரித்தாள். பிறகு “ஊர்க்காரங்கள அழச்சிக்கிட்டு வந்திருக்கன்.
அவங்களப் பாக்குறண்ணே. இருபதாவது வார்டுக்குப் பணம் கட்டியிருக்கன். மாவட்டத்துக்கிட்ட
ஒரு வாத்த சொல்லுங்கண்ணே” என்று சொல்லிவிட்டு மண்டபத்தைவிட்டு வெளியே சென்றாள் அந்தப்
பெண்.
“வணக்கம்ண்ணே” என்று
சொல்லிக்கொண்டே முன்னால் போக முயன்ற ஒன்றியத் துணைச் செயலாளர் ராமுவிடம் “மாவட்டம்
எப்ப வராரு?” என்று பொன்னுசாமி கேட்டார்.
“இந்த நேரத்துக்கு வந்திருக்கணும்.
வீட்ட விட்டுப் புறப்பட்டுட்டார்ன்னு சொல்லி ஒரு மணிநேரத்துக்கு மேல ஆயிடிச்சி” என்று
சொல்லிக்கொண்டே கூட்டத்தில் புகுந்து போனான் ராமு. அப்போது பொன்னுசாமிக்கு அருகில்
வந்த கதிரவன் “மாப்பிள்ள ரூம்ல இருக்காரு” என்று சொன்னான். பேசிக்கொண்டிருந்த ஆட்களிடம்
“ஒன்றியத்தப் பாத்திட்டு வரன்” என்று சொல்லிவிட்டு மாப்பிள்ளை அறை இருக்கும் இடத்திற்கு
நடக்க ஆரம்பித்தார். அவருக்குப் பின்னாலேயே கதிரவனும் சென்றான்.
மாப்பிள்ளையின் அறை உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.
பத்து முறைக்குமேல் தட்டிய பிறகுதான் கதவு திறக்கப்பட்டது. இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர்
ஜெயராமன் பொன்னுசாமியைப் பார்த்ததும் வணக்கம் சொல்லிவிட்டு “வாங்கண்ணே” என்று கூப்பிட்டான்.
பொன்னுசாமியுடன் கதிரவனும் அறைக்குள் போனதும் அவர்களோடு அறைக்குள் நுழைய முயன்ற மூன்று
நான்குபேரை “அப்பறம் அப்பறம்” என்று சொல்லிக் கதவைச் சாத்திக்கொண்டான்.
“வாங்கண்ணே” என்று சொல்லி
இரண்டு கைகளையும் குவித்துக் கும்பிட்டான் தண்டபாணி. பொன்னுசாமியும் கும்பிட்டார்.
பத்திருபது பேருக்கு மேல் உட்கார்ந்திருந்தனர். “யே அண்ணனுக்கு எடம் கொடுங்கப்பா” என்று
தண்டபாணி சொன்னதும் இரண்டு பேர் எழுந்து “ஒக்காருங்கண்ணே” என்று இடம் கொடுத்தார்கள்.
பொன்னுசாமி உட்கார்ந்துகொண்டார். தண்டபாணி உட்காரச்சொல்லியும் உட்காராமல் நின்றுகொண்டிருந்தான்
கதிரவன்.
தண்டபாணியிடம் அங்கிருந்தவர்கள் உள்ளாட்சித்தேர்தல்
பற்றிக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். அவனும் தன்னால் முடிந்தவரை எல்லாருக்கும் பதில்
சொல்லிக்கொண்டிருந்தான். தன்னைத் தவிர்ப்பது மாதிரி மற்றவர்களிடமே பேசிக்கொண்டிருந்த
தண்டபாணியிடம் “மாவட்டம் எப்ப வருவாரு தம்பி” என்று பொன்னுசாமி கேட்டார்.
“கால் மணிநேரத்துக்குள்ளார
வந்துடுவாருண்ணே.”
”பணம் கட்டியிருக்கன்
தம்பி.”
“தெரியும்ண்ணே” என்று
சிரித்துக்கொண்டே தண்டபாணி சொன்னான்.
“நீ ஒரு வார்த்த மாவட்டத்துக்கிட்டச்
சொல்லு.”
“ஒங்களுக்குப்போய் நான்
சொல்லவா?” என்று கேட்டு தண்டபாணி சிரித்தான்.
“நீதான ஒன்றியம்? நீ
சொன்னா மாவட்டம் கேப்பாரு. இந்த ஒரு முற மட்டும் பாத்துச் செய்யிங்க தம்பி”.
“எங் கையில என்னாண்ணே
இருக்கு, எல்லாம் மாவட்டம் பாத்து செய்யுறதுதான். ஒங்களுக்கே தெரியும்.” என்று பொன்னுசாமியிடம்
சொல்லிவிட்டு எதிரில் நின்றுகொண்டிருந்தவர்களிடம் “கொஞ்சம் வெளிய இருங்க” என்று சொன்னான்.
ஒரு ஆள்கூட எழுந்து வெளியே போகவில்லை.
“நம்ப ஒன்றியத்த பொருத்தவர
நீ எழுதித் தரப் பேரத்தான் மாவட்டம் அறிவிக்கப் போறாரு. இந்த ஒரு முற மட்டும் செய்யுங்க
தம்பி.” பொன்னுசாமி தன்னுடைய இயல்புக்கு மீறி இறங்கிப் பேசினார். கதிரவன் விடாப்பிடியாக
வந்திருக்கும்போது சீட்டு இல்லை என்று திரும்பிப்போனால் மட்டரகமாக நினைப்பான் என்ற
கவலை அவருக்கு இருந்தது.
“பெரிய கட்சிக்காரரு
நீங்க. ஒங்களுக்கு கட்சியோட நெலவரம் தெரியும்.” என்று சொல்லிவிட்டுப் பசப்புவது மாதிரி
தண்டபாணி சிரித்ததைப் பார்த்ததும் “ஒன்னோட நாடகமெல்லாம் தெரியும்ண்டா தண்டபாணி. மாவட்டத்தோட
பேரச் சொல்லிக் காச வாங்கிக்கிட்டு சீட்டுத் தரப் போற” என்று மனதில் நினைத்தாலும் வெளியில்
எதுவும் சொல்லாமல் உட்கார்ந்திருந்தார். அப்போது தண்டபாணிக்கு போன் வந்தது. “இருங்கண்ணே
வந்திடுறன்” என்று சொல்லிவிட்டுப் போனை எடுத்துக்கொண்டு வெளியே போனான். வெளியே போன
தண்டபாணி உள்ளே திரும்பி வரவில்லை. பத்து நிமிடத்திற்குமேல் உட்கார்ந்து பார்த்த பொன்னுசாமிக்கு
வெளியேபோய்த் தனியாகப் பேசிப் பார்க்கலாம், பணம் தருவதாகவும் சொல்லலாம் என்ற எண்ணம்
வந்ததும் உட்கார்ந்திருந்த கட்சிக்காரர்களிடம் “வெளியில இருக்கிறன். புழுக்கமா இருக்கு”
என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார். அவருடன் கதிரவனும் வந்தான்.
பொன்னுசாமியும் கதிரவனும் தண்டபாணியை தேடினார்கள்.
ஆள் எங்கே இருக்கிறான். என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. கூட்டத்திற்குள்
சுற்றிச்சுற்றி வந்தார்கள். மண்டபத்திற்கு வெளியே இருப்பானோ என்ற சந்தேகத்தில் மண்டபத்திற்கு
வெளியே வந்து தேடினார்கள். தண்டபாணி கிடைக்கவில்லை. அப்போது கோபம் வந்தது மாதிரி “போன
எலக்க்ஷன்ல எதுக்காக அவனுக்கு ஒன்றியச் செயலாளர் பதவிய விட்டுக்கொடுத்த? நீ ஒன்றியச்
செயலாளரா இருந்தா நீ சொல்றத அவன் கேட்டுக்கிட்டு நிப்பான்” என்று கதிரவன் சொன்னான்.
“மூணு பீரியடா இருக்கிங்க.
விட்டு கொடுங்கன்னு மாவட்டம் சொல்லும்போது என்னா செய்ய முடியும்? எலக்க்ஷன் வச்சா நம்பளால
ஜெயிக்க முடியுமா? அவன மாதிரி செலவுதான் செய்ய முடியுமா? எலக்க்ஷன் வச்சா தோத்துடுவம்ன்னு
தெரிஞ்சிதான் வீம்புப் புடிக்காம விட்டுக் கொடுத்தன்.”
“ஒரு பீரியடுதான் ஒன்றியச்
செயலாளரா இருந்தான். அதுக்குள்ளார காரு, மெத்த விடு, பணம்ன்னு சம்பாரிச்சிட்டான். நீயும்
இத்தினி வருசமாதான் கட்சியில இருந்த” என்று சொன்ன கதிரவன் அதற்குமேல் சொல்ல விரும்பாதவன்போல்
முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
“பழய காலத்துக் கட்சிக்காரன்
வேற. இப்ப இருக்கிறவன் வேற. இப்ப கட்சிக்கு வர்றதே பதவி வேணும், பணம் வேணுமின்னுதான்
வரான். நான் ஒன்றியச் செயலாளரா இருந்தப்ப, எத்தன முற ஜெயிலுக்குப் போயிருக்கான், எத்தன
போராட்டத்தில கலந்துகிட்டான், எவ்வளவு ரூபா கட்சிக்கு நன்கொடையா கொடுத்திருக்கான்னு
பாத்து சீட்டுக் கொடுத்தன். கட்சியோட நடமுற அதுதான். இப்ப கட்சியில மேலயிருந்து கீழவரைக்கும்
எம்மாம் பணம் வச்சியிருக்கான்னு பாக்குறாங்க.” என்று கசந்துபோன குரலில் சொன்னார். என்ன
நினைத்தாரோ “நான் உள்ளார போனதும் அத்தன கட்சிக்காரனும் எழுந்து நின்னானில்ல. அதான்
கட்சியில எனக்குள்ள மரியாத” என்று சொன்னார்.
“மரியாதய வச்சிக்கிட்டு
என்னா செய்யுறது?” வெடுக்கென்று கேட்டான் கதிரவன். அவனை முறைத்துப் பார்த்தாரே தவிர
ஒரு வார்த்தையும் பேசவில்லை.
“இந்தமுற மட்டும் சீட்டு
கொடுக்கலன்னா அவ்வளவுதான். கட்சி கட்சின்னு எங்கேயும் போவக் கூடாது” என்று கட்டளை மாதிரி
கதிரவன் சொன்னதைக் கேட்டதும் பொன்னுசாமிக்கு ஆத்திரம் உண்டாயிற்று.
“அடுத்தமுற பாக்கலாம்ன்னு எப்பவும் சொல்ற மாதிரிதான்
இந்தமுறயும் சொல்லப் போறானுவ” என்று கதிரவன் சொன்னதும் “எந்த எடத்தில நின்னுக்கிட்டு
என்னா பேசுற?” என்று பொன்னுசாமி கேட்டார். அதற்கு அவன் பதில் சொல்லாமல் “போனமுற சீட்டு
தரலன்னு சொன்னதும் நீ எலக்ஷன்ல வேல செய்யாதன்னு சொன்னன். எம் பேச்சக் கேட்டியா? வேட்பாளர்
மாதிரி நீதான் முன்னமுன்ன ஓட்டுக் கேட்டுக்கிட்டுப் போன.” என்று சொல்லும்போது இரண்டு
கட்சிக்காரர்கள் வந்து வணக்கம் வைத்தனர். “என்னண்ணே ஓரமா ஒதுங்கி நின்னுட்டிங்க?” என்று
கேட்டனர்.
“கூட்டமா இருக்கு. அதான்.
வெளியில நிக்குறன்” என்று சொல்லும்போது மூன்று நான்குபேர் வெடியை வைத்து வெடிக்க ஆரம்பித்ததும்
மாவட்டச் செயலாளர் வருகிறார் என்று புரிந்துகொண்டு மண்டபத்தின் வாசலை நோக்கி நடக்க
ஆரம்பித்தார் பொன்னுசாமி. அதற்குள் மாவட்டச் செயலாளர் தங்கத்தின் கார் வந்து நின்றதும்,
ஒரு கூட்டம் காரைச் சூழ்ந்துகொண்டது. “வணக்கம் வணக்கம்” என்று சொல்லிக்கொண்டு காரைவிட்டு
இறங்கிய தங்கம் மண்டபத்தின் வாசலை நோக்கி நடக்க
ஆரம்பித்தார். அவரை நெட்டிக்கொண்டு போவதுபோல அவருக்குப் பின்னாலேயே ஒருகூட்டம் சென்றது.
கூட்டத்தில் நெட்டித் தள்ளிவிடுவார்கள், காலை மிதித்துவிடுவார்கள் என்ற பயத்தில் கூட்டத்தில்
கடைசி ஆளாக பொன்னுசாமி போனார். அவரோடு கதிரவனும் போனான்.
மண்டபத்திற்குள் தங்கம்
நுழைந்ததும் “மாவட்ட செயலாளர் வாழ்க” “எங்கள் தங்கம் வாழ்க”, “தங்கத்தின் தங்கமே வாழ்க.”
என்று ஐந்தாறுபேர் மண்டபமே இடிந்துவிழுகிற
அளவிற்கு கோஷம் போட்டனர். “வழி விடுங்க. வழி விடுங்க” என்று கத்திக்கொண்டே இரண்டுமூன்று
பேர் கூட்டத்தை விலக்கியபடி சென்றனர். தங்கம் எல்லாருக்கும் கும்பிட்டபடியே மாப்பிள்ளையின்
அறைக்குள் சென்றார். அவரோடு வந்த மாவட்டத் துணைச் செயலாளர், மாவட்டப் பொருளாளர், மாவட்ட
இளைஞரணி அமைப்பாளர்களை மட்டுமே அறைக்குள்விட்டு, கதவை சாத்திக்கொண்டான் தண்டபாணி. பொன்னுசாமியும்,
கதிரவனும் வாசலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்தனர். அவர்களோடு இருபதுமுப்பது பேர் நின்றுகொண்டிருந்தார்கள்.
பொன்னுசாமியை உள்ளே விடாததால் கதிரவனுக்குக் கோபம் வந்தது. “அவங்க மட்டும் என்ன பெரிய
ஆளா?” என்று சொன்னான். “நிர்வாகிகளத்தான் உள்ளார விடுவான். பேசாம இரு” என்று பொன்னுசாமி
சொன்னார். அதைக் கேட்காமல் “நீ உள்ளாரப் போயி மாவட்டத்தப் பாரு” என்று கதிரவன் சொன்னான்.
“அவசரப்படாத.” என்று
பொன்னுசாமி சொன்னார். அப்போது கதவைத் திறந்த தண்டபாணி “ஒன்றியக் கவுன்சிலருக்கு பணம்
கட்டுனவங்க – ஒண்ணாவது வார்டு மட்டும் உள்ளார வாங்க” என்று சத்தமாக சொன்னதும் “இடித்துப்
பிடித்துக்கொண்டு பத்திற்கும் அதிகமானோர் உள்ளே சென்றதும் தண்டபாணி கதவை சாத்திக்கொண்டான்.
கதிரவன் ஓயாமல் எதையோ
முணுமுணுத்துக்கொண்டிருந்தான். சாதாரண கட்சிக்காரன் மாதிரி பொன்னுசாமி வெளியே நின்றுகொண்டிருக்கிறாரே
என்று அவனுக்கு வருத்தமாகவும், கோபமாகவும் இருந்தது. இரண்டாவது வார்டுக்கு பணம் கட்டிய
ஆட்கள் தயாராகவந்து நின்றுகொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பொன்னுசாமிக்கு
வணக்கம் வைத்தனர். பலர் உள்ளாட்சித் தேர்தல் பற்றி, எந்தெந்த வார்டுகளில் கட்சி ஜெயிக்கும்,
எந்தெந்த வார்டுகளில் கட்சி தோற்கும் என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். தண்டபாணியைப்
பற்றி பலரும் குறை சொன்னார்கள். கட்சிக்காரனுக்கே பணம் வாங்கிக்கொண்டு சீட்டு தருகிறான்
என்று குறை சொன்னார்கள். குறை சொன்னவர்களோடு கதிரவனும் சேர்ந்துகொண்டான்.
முதலாவது வார்டுக்குரிய
ஆட்களை வெளியே அனுப்பிவிட்டு இரண்டாவது வார்டுக்குரிய ஆட்களை உள்ளே விட்டான் தண்டபாணி.
பத்து நிமிடம்தான் ஆனது. இரண்டாவது வார்டுக்குரிய ஆட்கள் வெளியேவர. மூன்றாவது வார்டுக்குரிய
ஆட்கள் உள்ளே போனார்கள். அடுத்தடுத்த வார்டுக்குரிய ஆட்கள் நேர்காணலுக்கு உள்ளே போவதும்,
வெளியே வருவதுமாக இருந்தனர்.
“பதினோராவது வார்டுக்காரங்க
வாங்க” என்று சொன்னதும் அடித்துப் பிடித்துக்கொண்டு பலர் உள்ளே போனார்கள். பொன்னுசாமியும்
போனார். அவரோடு கதிரவனும் உள்ளே போனான். மொத்தம் பதினான்கு பேர்.
பொன்னுசாமியைப் பார்த்ததும்
“வாங்கண்ணே. ஒக்காருங்க” என்று தங்கம் சொன்னார். இளைஞரணியைச் சேர்ந்த பையன் எழுந்து
நின்றதும் அவன் உட்கார்ந்திருந்த நாற்காலியில் பொன்னுசாமி உட்கார்ந்துகொண்டார். தனக்கு
முன்னால் மூன்று பேர் நின்றுகொண்டிருக்க முதல் ஆளிடம் தங்கம் கேட்டார் “எவ்வளவு செலவு
பண்ணுவிங்க?”
“மூணுலயிருந்து அஞ்சு
லட்சம்ண்ணே” என்று அந்த ஆள் பணிவாகச் சொன்னான்.
“நீங்க?” என்று இரண்டாவது
ஆளிடம் தங்கம் கேட்டார்.
“நீங்க சீட்டு மட்டும்
தாங்கண்ணே. ஜெயிச்சி வர்றது எம் பொறுப்பு” என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.
மூன்றாவது ஆளிடம் “நீங்க
சொல்லுங்க. எவ்வளவு செலவு பண்ணுவிங்க? எப்பிடி ஜெயிப்பிங்க?” என்று கேட்டார் தங்கம்.
“பத்து லட்சம் செலவு
பண்றன். மாவட்டம் சொன்னீங்கன்னா நாளைக்கே பணத்த கொண்டாந்து கட்சியில கட்டிப்பிடுறன்”
என்று அந்த ஆள் சொன்னதும் அவனை முறைத்துப் பார்த்தார் பொன்னுசாமி. அவன் கட்சி மாறி
வந்து ஏழு மாதம்தான் ஆகிறது. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறான். நான்கு பொக்லைன் இயந்திரங்கள்
வைத்திருக்கிறான். இரண்டு லாரிகளை மணல் லோடு அடிப்பதற்கு விட்டிருக்கிறான். இரண்டு
நெல் அறுக்கும் மிஷின்களை வைத்திருக்கிறான். சீட்டு மட்டும் கொடுத்துவிட்டால் உலகத்திலுள்ள
எல்லா தில்லுமுல்லுகளையும் செய்து ஜெயித்துவிடுவான். சேர்மேன் ஆக வேண்டும் என்பதற்காகத்தான்
கட்சிக்கே வந்திருக்கிறான். அவன் வியாபாரி என்று தெரிந்தாலும் தண்டபாணி அவனோடுதான்
நெருக்கமாக இருக்கிறான். இப்போது மூன்று ஊரிலிருந்தும் இருநூறு முந்நூறுபேரை ஒரு குவார்ட்டர்,
ஒரு பிரியாணி பொட்டலம் தலைக்கு ஐநூறு ரூபாய் என்று கொடுத்து அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான்.
அவனுக்குத்தான் தண்டபாணி சீட்டு தருவான் என்றும், சீட்டு கொடுத்தால் ஜெயித்துவிடுவான்
என்றும் ஒரு கோடி செலவு செய்துகூட சேர்மேன் ஆகி விடுவான் என்றும் கட்சிக்காரர்கள் பேசிக்கொள்வது
பொன்னுசாமிக்குத் தெரியும். ‘காசு உள்ளவனுக்குத்தான் கட்சி. உலகம்.’ என்று நினைத்தார்.
நான்காவதாக நின்றுகொண்டிருந்த
பெண்ணிடம் “நீங்க சொல்லுங்க” என்று தங்கம் கேட்டார்.
“எனக்கு சீட்டு கொடுத்தா,
பதினோராவது கவுன்சில்ல கட்சி ஜெயிக்கிறது உறுதிண்ணே” என்று சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த
சால்வையை தங்கத்தின் கையில் கொடுத்துவிட்டு பட்டென்று காலில் விழுந்து கும்பிட்டாள்
அந்தப் பெண். உடனே அவளுடைய புருசனும் தங்கத்தின் காலில் விழுந்து கும்பிட்டான்.
“இதெல்லாம் என்ன பழக்கம்?
எழுந்திருங்க. காலில விழுந்து மத்த கட்சி மாதிரியே நம்ம கட்சியயும் மாத்திடாதிங்க”
என்று சொன்னார் தங்கம்.
பொன்னுசாமி அந்தப் பெண்ணையும்,
அவளுடைய புருசனையும் மாறிமாறிப் பார்த்தார். ‘பொட்டச்சிய கொண்டாந்து காட்டி சீட்டுக்
கேக்குறான்’ என்று நினைத்தார். ஆறாவதாக நின்றுகொண்டிருந்த ஆளிடம் “சொல்லுங்கண்ணே” என்று
கேட்டதும் “மூணு ஊர்லயும் எங்க ஆளுங்கதாண்ணே மெஜாரிட்டி. அண்ணன் மனசு வச்சா நான் ஜெயிச்சிடுவன்”
என்று சொன்னதோடு தங்கத்தின் காலில் விழுந்து கும்பிட்டான்.
தங்கத்திற்கு என்ன தோன்றியதோ
வாய்விட்டுச் சிரித்தார். பிறகு எதிரில் நின்றுகொண்டிருந்தவர்களிடம் “எல்லாரும் ஜெயிப்பன்
ஜெயிப்பன்னு சொன்னா, யாருதான் தோக்குறது? எத்தன பேர் நின்னாலும் ஒரு ஆளுதான ஜெயிக்க
முடியும்?” என்று கேட்டார். அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்தவர்களில் ஒரு சிலர் சிரித்தார்கள்.
நல்லவர் மாதிரி தோன்றினாலும் அவ்வப்போது இதுபோன்று குசும்பான கேள்விகளை கேட்பது அவரது
வழக்கம்.
சீட்டுக்கேட்டு வந்திருந்த
எல்லாரிடமும் தங்கம் கேள்வி கேட்டார். நேர்காணலுக்கு வந்தவர்கள் சொன்ன பதிலைக் கேட்டுவிட்டு
கடைசியாக “எல்லாருக்கும் சீட்டு கொடுக்கணும்ன்னுதான் ஆச. ஆனா யாருக்குக் கொடுத்தாலும்
ஒரே ஒரு ஆளுக்குத்தான கொடுக்க முடியும்? எம்.எல்.ஏ., எம்.பி. எலக்ஷனவிட உள்ளாட்சி
தேர்தல்லதான் ஊர்க்காரன், சாதிக்காரன், சொந்தக்காரன்னு நெறயா உள்ளடி வேல நடக்கும்.
அப்பிடியெல்லாம் நடக்கக் கூடாது. நமக்கு கட்சிதான் முக்கியம். யாருக்கு சீட்டுக்கொடுத்தாலும்
ஜெயிக்க வைக்கணும். எனக்குத் தரல, ஒனக்குத் தரலன்னு சொல்லி கட்சிக்காரனே, கட்சிக்காரனுக்கு
விரோதமா செயல்படக் கூடாது. மத்த மாவட்டத்தவிட நம்ப மாவட்டத்தில அதிகமா ஜெயிச்சாத்தான்
தலைவர்கிட்ட எனக்கு மரியாத இருக்கும்” என்று கண்டிப்பான குரலில் சொன்னார். அப்போது
ஆறாவதாக நின்றுகொண்டிருந்த குணசேகரன் “கூட்டணிக்கு எத்தன சீட்டுண்ணே?” என்று கேட்டான்.
அரிய நகைச்சுவையை கேட்டுவிட்டதுபோல்
தங்கம் சிரித்தார். மாவட்டமே சிரிக்கிறார் என்பதால் அந்த அறைக்குள்ளிலிருந்த எல்லாருமே
சிரித்தனர். சிரித்துக்கொண்டே தங்கம் சொன்னார் “பகல்ல தேடுனாலும் ஊருக்கு ஒரு பய இருக்க
மாட்டான். அவனுங்ககூட போயி எதுக்கு தலைவரு கூட்டணின்னு வச்சிருக்கிறாருன்னே தெரியல.
எலக்க்ஷனுக்கு எலக்க்ஷன்தான் அவனுங்கள பாக்கவே முடியும். துண்டப் போட்டுக்கிட்டு வந்து
தனியா பூத் பணம் தாங்க, வண்டி தாங்கன்னு கேட்டு கழுத்த அறுக்கிறானுவ. கேட்டா, தேசியக்
கட்சிங்கிறான். கூட்டணிக்காரனுவ தொல்லதான் பெரும் தொல்ல. அவனுங்களுக்கு எம்.எல்.ஏ.
சீட்ட அதிகமா கொடுத்ததாலதான் ஆட்சியப் புடிக்க முடியல. அவனுங்க எழவ எப்பிடி எடுக்கிறதுன்னுதான்
தெரியல.” அப்போது அவசரப்பட்ட மாதிரி “அடுத்த கவுன்சில் ஆளுங்கள கூப்புடட்டுமாண்ணே”
என்று தண்டபாணி கேட்டான்.
சரி என்பதுபோல் தலையை
ஆட்டிய தங்கம் எதிரில் நின்றுகொண்டிருந்தவர்களிடம் “எல்லாரும் போய் கட்சி ஜெயிக்கிறதுக்கான
வேல பாக்கணும். புரியுதா? போயிட்டு வாங்க. ஓட்டு கேக்கறப்ப வரன்” என்று சொல்லிக் கையெடுத்துக்
கும்பிட்டார். எல்லாரும் கும்பிட்டுவிட்டு வெளியே போனார்கள். அப்போது பொன்னுசாமி “நானும்
பணம் கட்டியிருக்கங்க” என்று சொன்னார்.
“ஒங்களப் போயி நான் கேள்வி
கேக்கவா?” என்று தங்கம் கேட்டார்.
“கட்சி நடமுறன்னு ஒண்ணு
இருக்குல்ல?”
“அதுக்காக பெரிய கட்சிக்காரர்கிட்டப்
போயி நான் கேள்வி கேக்குறதா?”
“மாவட்டக் கவுன்சிலுக்கும்,
ஒன்றியக் கவுன்சிலுக்கும் பணம் கட்டியிருக்கன்.”
“நான் பாத்துக்கிறன்
போயிட்டு வாங்கண்ணே.”
“ஒவ்வொரு தேர்தல்லயும்
நான் பணம் கட்டிக்கிட்டிருக்கன். ஒரு முறகூட எனக்குக் கட்சியில சீட்டு தரலீங்க.” ரொம்பவும்
குரலை தாழ்த்திச்சொன்னார் பொன்னுசாமி. தங்கத்திற்கு என்ன தோன்றியதோ “கொடுத்தா ஜெயிப்பிங்களா?”
என்று கேட்டார்.
“நான் இத்தினி வருசத்தில
எந்த எலக்க்ஷன்லயும் நின்னதில்ல. அதனால எனக்கு எந்தக் கெட்டப் பேரும் கெடையாது. நின்னா
ஜெயிச்சிடுவன்.”
“ஒன்றியக் கவுன்சிலருக்கு
கொறஞ்சது பத்து லட்சம் செலவு ஆவும்ண்ணே” என்று தங்கம் சொன்னார். அவர் சொன்னதைக் காதில்
வாங்காமல் “இவ்வளவு காலமா கட்சியிலிருந்து என்னாத்த கண்டன்னு வீட்டுல கேக்குறாங்க”
என்று சொல்லும்போது பொன்னுசாமியின் குரல் உடைந்துப்போயிற்று. அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல்
தங்கம் கேட்டார் “எவ்வளவு செலவு செய்விங்க?”
“பணம் இருந்தாத்தான்
கட்சியில சீட்டு வாங்க முடியுமாண்ணே?” என்று பொன்னுசாமி கேட்டதும் தங்கத்திற்குக் கோபம்
வந்துவிட்டது. பக்கத்தில் ஆட்கள் இருந்ததால் கோபத்தைக் அடக்கிக்கொண்டார். இந்த கேள்வியை
பொன்னுசாமியைத்தவிர வேறு ஆள் கேட்டிருந்தால் “வெளிய போ.” என்று சொல்லி கத்தியிருப்பார்.
பொன்னுசாமி என்பதால் பேசாமல் இருந்தார். என்ன தோன்றியதோ “பணம் இருக்கிறவனால மட்டும்தான்
இப்ப எலக்க்ஷன்ல நிக்க முடியும். ஜெயிக்க முடியும். நல்லவன் கெட்டவன், கட்சி எல்லாம்
இப்ப முக்கியமில்ல. காசு தர்றவனுக்கு, அதிலயும் எவன் அதிகமாத் தரானோ அவனுக்கு ஓட்டுப்
போடுறதின்னு சனங்க மாறிட்டாங்கன்னு ஒங்களுக்கேத் தெரியும். நாளக்கி ஒரு பத்து லட்சத்த
எடுத்தாங்க. சீட்டுத் தரன். ஜெயிச்சிட்டா ஒங்களயே சேர்மேன் ஆக்கிடுறன்.” என்று தங்கம்
தெளிவாகச் சொன்னார். பொன்னுசாமியால் பணம் செலவு செய்ய முடியாது என்பது அவருக்குத் தெரியும்.
அதனால்தான் பணத்தைப் பற்றியே பேசினார். ‘‘ஆளுங்கட்சிக்காரன் சேர்மன புடிக்கிறதுக்கு
நெறயா செலவு செய்வாண்ணே” என்று தங்கம் சொன்னதும், பொன்னுசாமி “பணத்தால கட்சிக்காரன்ங்கிற
பேர வாங்க முடியாதுண்ணே” என்று சொன்னார். அப்போது தங்கத்திற்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த
தண்டபாணி “வெளிய போயி டீ குடிச்சிட்டு வாங்க. நேர்காணல் முடிஞ்சதும் தனியாப் பேசிக்கலாம்”
என்று சொன்னதும் பொன்னுசாமிக்குக் கோபம் வந்துவிட்டது.
“கட்சிக்காக ஒழச்சவங்கெல்லாம்
இப்படியே கெடக்க வேண்டியதுதானா மாவட்டம்?” என்று கேட்டார்.
தங்கத்துக்கு கோபம் வந்துவிட்டது.
“இந்த அஞ்சாறு வருசத்தில கொடி கட்டுனன், தோரணம் கட்டுனன், மேட போட்டன், மைக் செட்டு
கட்டுனன்னு யாரும் சொல்ல முடியாது. எல்லாத்தயும் காண்ட்ராக்ட்டுக்காரன்தான் செய்யுறான்.
இப்ப கட்சியே கார்ப்பரேட் கம்பனி மாதிரி செயல்படுது” என்று கடுப்படிப்பது மாதிரி சொன்னதும்
பொன்னுசாமிக்கும் கோபம் வந்துவிட்டது. “கட்சி மாறி வந்தவனுக்கும், ரியல் எஸ்டேட் செய்றவனுக்கும்தான்
கட்சி சீட்டுத் தருமா?” என்று கேட்டதும், பொன்னுசாமி யாரை மனதில் வைத்துக்கொண்டு சொல்கிறார்
என்பது புரிந்த மாதிரி கிண்டலாக “அவங்ககிட்டதான பணம் இருக்கு” என்று சொல்லிவிட்டு தங்கம்
சிரித்தார்.
“நம்ப கட்சியில மட்டும்தான்
‘எம்மாம் செலவு செய்விங்க?’ன்னு கேக்குறிங்க. மத்த கட்சியில எல்லாம் அப்பிடியில்ல.”
என்று பொன்னுசாமி சொன்னதும் தங்கம் முன்பைவிட இப்போதுதான் சத்தமாகச் சிரித்தார். பிறகு
“அவங்கக் கட்சி சினிமாக்காரன் கட்சி. நம்பளது லட்சியக் கட்சி. சினிமாக்காரன் கட்சிக்கு
சனங்க தானா ஓட்டுப்போடுது. நம்பகிட்ட பணம் கேக்குது. பணத்தக் கொடுத்தாலும் நமக்கு ஓட்டுப்
போட மாட்டங்குது. என்னெ என்ன செய்யச் சொல்றிங்க?” என்று கேட்டார்.
“நான் கட்சிக்கு வந்து
அம்பது வருசமாயிடிச்சி.”
“கட்சிக்காரன் முக்கியம்.
அதவிட ஜெயிக்கிறது முக்கியம்.” அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் தங்கம்.
“பழய கட்சிக்காரங்க வேணாம்.
அதான?” என்று பொன்னுசாமி கேட்டதும் தங்கத்திற்கு முகம் மாறிவிட்டது. எச்சரிக்கை செய்கிற
மாதிரி “ஏற்கனவே நம்ப கட்சிய கிழவனுங்க கட்சின்னு எல்லாப் பயலும் கிண்டலடிக்கிறாணுவ.
அதனால தலமயும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கன்னு சொல்லுது” என்று சொன்னார்
தங்கம்.
“அப்ப பழய ஆளுங்க வேணாமாண்ணே?”
“ஓடுற குதிரைக்குத்தான
மதிப்பு?”
“எனக்கு இருவது வயசா
இருக்கும்போது திட்டக்குடிக்கு வாடக சைக்கில எடுத்துக்கிட்டு இருவது கிலோமீட்டர் தாண்டி,
அப்ப ஒன்றிய செயலாளரா இருந்த ராசுக்கிட்டப் போனன். அவரு வீட்டுல இல்ல. ஆத்தோரமா இருந்த
செங்கல் சூளையில இருந்தாரு. நான் அங்கப்போயி கட்சியில சேருணும்ன்னு சொன்னன். அதுக்கு
ராசு சிரிச்சிக்கிட்டே ‘அப்படியா?’ன்னு கேட்டாரு. ஒரு விண்ணப்பத்தக் கொடுத்து பூர்த்திப்
பண்ணி தலமைக்கு அனுப்புன்னாரு. அதோட என்னெ அழச்சிட்டு வந்து நாலு இட்லியும், ஒரு பூரிக்கிழங்கும்
வாங்கித் தந்தாரு. நான் மொதமொதலா பூரிக்கிழங்கு தின்னது அன்னிக்குத்தான். சைக்கில்
வாடகைக்கும் ஒன்னேகால் ரூவா கொடுத்து அனுப்புனாரு. அன்னியிலிருந்து இன்னிய வரைக்கும்
தொண்டத் தண்ணி வத்தக் கட்சிக்காக எம்மாம் கத்தியிருப்பன்? உண்மையான கட்சிக்காரன் நானுன்னா
கொடுங்க, இல்லாட்டி விடுங்க” என்று சொன்னார் பொன்னுசாமி. அப்போது தங்கத்திற்கு நினைவுபடுத்துவது
மாதிரி “அண்ணே நீங்க அடுத்த ஒன்றியத்துக்கு போவணும்” என்று தண்டபாணி சொன்னான். பொன்னுசாமியிடம்
வளவளவென்று பேச வேண்டாம், ஆளை வெளியே அனுப்புங்கள் என்ற தோரணையில் சொன்னதை புரிந்துகொண்ட
பொன்னுசாமி தண்டபாணியை முறைத்துப் பார்த்தார். அப்போது மாவட்டத் துணைச் செயலாளர் “யார்
உண்மையான கட்சிக்காரன்னு தெரிஞ்சிக்கிறதுக்காகவா நேர்காணல் நடக்குது? இது எலக்க்ஷன்
நேரம்ண்ணே” என்று சொன்னதும் அவனுடைய முகத்திலடிப்பது மாதிரி பொன்னுசாமி “நான் மாவட்டத்துக்கிட்டப்
பேசிக்கிட்டிருக்கன். மத்தவங்ககிட்ட இல்லெ” என்று சொன்னார். பொன்னுசாமி கோபமாக இருப்பதைப்
புரிந்துகொண்ட தங்கம், கட்சிக் கூட்டத்தில் பொன்னுசாமி ‘நான் சீட்டுக் கேட்டு பணம்
கட்டுனன். எனக்கு சீட்டுத் தரல. மாவட்டச் செயலாளரு ஆளுப் பாத்து செய்றாரு’ என்று பகிரங்கமாக
சொல்லி அசிங்கப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் “மாவட்டச் செயலாளரா நீங்க இருந்தா என்னா
செய்வீங்களோ அதத்தான் நானும் செய்றன். நான் ஒங்களுக்கு சீட்டு இல்லன்னு சொல்லல. ஜெயிக்க
முடியுமான்னுதான் கேட்டன். செலவு பண்றன், ஜெயிச்சிக் காட்டுறன்னு சொல்லுங்க. ஒங்களுக்கு
சீட்டு இல்லன்னு யாரு சொல்லப்போறா? எலக்ஷன்னு வந்திட்டா செலவு பண்ண முடியுமா, ஜெயிக்க
முடியுமாங்கிறதுதான கேள்வி. கட்சியோட தலமயிலும் அதுதான நடக்குது?” என்று தங்கம் கேட்டார்.
“சரிண்ணே. காசு உள்ளவனுக்கே
சீட்டு தாங்க” என்று சொன்னார் பொன்னுசாமி.
“இத்தன வருசமா கட்சியில
இருக்கிங்க. ஒங்களுக்குத் தெரியாதது என்ன? சாதாரண பிரசிடண்டு எலக்க்ஷன்ல நிக்கிறவன்
எவ்வளவு செலவு செய்றான்னு தெரியுமில்ல? ஒன்றியக் கவுன்சிலர் மூணு ஊர் கொண்டது. மாவட்டக்
கவுன்சில் நாப்பத்தஞ்சி ஊர் கொண்டது. நான் பாத்துக்கிறன்னு சொல்லுங்க. ஒரு லட்சம்,
ரெண்டு லட்சத்த வச்சி இப்ப எலக்க்ஷன்ல நிக்க முடியாது” திட்டவட்டமாக தங்கம் சொன்னார்.
“நான் கட்சிக்காரனா இல்லியா?”
“சொன்னதையே சொல்லிக்கிட்டிருந்தா
கூட்டணிக்கி தள்ளி வுட்டுட்டுப் போயிருவன். நான் எதுக்குச் சொல்றன்னு புரிஞ்சிக்காம
பேசக் கூடாது” என்று சொல்லிவிட்டு கண்ணாடியை கழற்றித் துடைக்க ஆரம்பித்தார். தங்கம்
எப்போதெல்லாம் கோபமாக இருக்கிறாரோ அப்போதேல்லாம் கண்ணாடியைக் கழற்றித் துடைக்க ஆரம்பித்துவிடுவார்
என்பது மாவட்டத்திலுள்ள எல்லாக் கட்சிக்காரர்களுக்கும் தெரியும்.
“கட்சி மாறி வந்தவனுக்கெல்லாம்
சீட்டு கொடுப்பிங்க. கட்சிக்காரன் கேட்டா கூட்டணிக்குத் தள்ளி வுட்டுடுவிங்களா?”
“கட்சி மாறி வந்தவங்க
எந்தக் கட்சியில இல்லெ? கட்சிக்காரனா இல்லியாங்கிறது முக்கியமில்ல. ஜெயிக்க முடியுமா,
முடியாதாங்கிறதுதான் முக்கியம்” கறாராக சொன்னார் தங்கம்.
தங்கம் கோபமாகிவிட்டது தெரிந்தது. அதிகம் பேசினால்
‘கொடுக்க முடியாது. தலமயிலப் போயிப் பாத்துக்குங்க’ என்று ஒரே வார்த்தையாக சொல்லிவிடலாம்
என்று நினைத்த பொன்னுசாமி குரலைத் தாழ்த்திப் பணிந்துபோகிற மாதிரி சொன்னார் “ஒங்கப்பா
மாவட்டச் செயலாளரா இருந்த காலத்திலிருந்து, மந்திரியா இருந்த காலத்திலிருந்து, அப்பறம்
நீங்க மாவட்டச் செயலாளரா ஆனதிலிருந்து, மந்திரியானதிலிருந்து இன்னியவர கட்சியிலதான்
இருக்கன். கட்சி மாறிப் போனதில்ல. வேட்டிய மாத்திக் கட்டுனதில்ல. அப்பன் ஒரு கட்சியில,
மவன் ஒரு கட்சியிலன்னு எங் குடும்பத்தில இல்லெ. ஒரு முற கட்சி சின்னத்தில எலக்க்ஷன்ல
நிக்குறன். தோத்தாலும் பரவாயில்ல.”
“ஒவ்வொரு கவுன்சிலரும்
தோத்துப் போயிட்டா சேர்மேன எப்பிடிப் புடிக்கிறது? தலமயில யாரு கையக் கட்டிக்கிட்டு
நிக்கிறது?” அதிகாரத் தோரணையோடு கேட்டார் தங்கம்.
“இதுவரைக்கும் மாவட்டத்தக்
கட்டாயப்படுத்தனதில்ல. மாவட்டம் சொன்னதக் கேட்டுக்கிட்டுத்தான் போயிருக்கன்” என்று
பொன்னுசாமி சொன்னதும் “நான் இல்லன்னு சொல்லலியே. நான் மந்திரியா இருந்தப்ப ஒங்க ஊருக்கு
கேட்டதெல்லாம் செஞ்சனா இல்லியா?” என்று தங்கம் கேட்டார். பொன்னுசாமி பதில் பேசவில்லை.
“ஒங்களுக்கு சீட்டுக்
கொடுக்கக்கூடாதுன்னா நெனைக்கிறன்? எலக்க்ஷன்ல நின்னா பணத்தயும் செலவழிக்கணும். கண்ட
பய காலுலயும் விழணும். எல்லாம் செஞ்சாலும் ஜெயிக்கணும். ஜெயிக்கலன்னா பல லட்சம் கடனாயிடும்.
கவுன்சிலர் ஜெயிச்சாலும் எதிர்க்கட்சியில ஒண்ணும் செய்ய முடியாது. டீ வாங்கி தரதுக்குக்கூட
ஆளிருக்காது. வந்த கடன் வந்ததுதான். எல்க்ஷன்ல நின்னு தோத்துப் போனவங்களோட குடும்பத்து
நெலம, கட்சிக்காரனோட நெலம என்னான்னு ஒங்களுக்குத் தெரியும். ஜெயிச்சிட்டா ‘வாழ்க’ன்னு
கோஷம் போடுவான். தோத்துட்டா திரும்பிக்கூட பாக்க மாட்டானுங்க. அதனாலதான் சொல்றன். ஒங்க
தகுதிக்கு சாதாரண ஆளுங்கக்கிட்டயெல்லாம் போயி நிக்கணுமா? எப்பவும்போல பெரிய கட்சிக்காரன்ங்கிற
பேரோட, மரியாதயோட இருங்க.”
“வீட்டுல கேக்க மாட்டங்குறாங்க
மாவட்டம்.”
“அவங்களுக்கு அரசியல்
புரியாது. கட்சிக்காரனே உள்ளாட்சியில காலவாறுவான்னு அவங்களுக்குத் தெரியாது” என்று
சொல்லும்போது மாவட்டத் துணைச்செயலாளர் “இப்பவே ரெண்டு மணி நேரம் லேட்டுண்ணே. அடுத்த
ஒன்றியத்துக்காரங்க போன்மேல போன் போட்டுக்கிட்டே இருக்காங்க” என்று சொன்னதும் “இருக்கட்டும்”
என்று தங்கம் சொன்னார்.
“வயசாயிடிச்சி. ஒரு வாட்டி
எலக்க்ஷன்ல நின்னா ஊர்ல மரியாதயா இருக்கும்ண்ணே” என்று கதிரவன் சொன்னான்.
“கட்சிப் பாத்து, ஆளுப்
பாத்து ஓட்டுப் போடுற காலமா இது? 2016ல நடந்த எம்.எல்.ஏ. எலக்க்ஷன்ல ஓட்டுக்கு ஆயிரம்
ரூபாய் சராசரியா கொடுத்து ஜெயிச்சத பாத்திங்கில்ல. எம்.எல்.ஏ எலக்ஷனே அப்பிடின்னா
உள்ளாட்சி தேர்தல் எப்பிடி இருக்கும்? கட்சி ஆட்சியிலிருந்தா, நான் மந்திரியா இருந்தா
ஒங்கப்பாவ நானே கவுன்சிலராக்கி, சேர்மேனாவும் ஆக்கிடுவன். இப்ப மந்திரியா இல்லெ. சொன்னா
எவனும் கேக்க மாட்டான். கேக்கற மாதிரி நடிப்பானுங்க. ஒங்களுக்குத் தெரியும். மீறியும்
சீட்டு தந்துதான் ஆவணுமின்னா தரன். போயி நில்லுங்க.” என்று தங்கம் சொன்னதும் பொன்னுசாமிக்கு
மனம் நெகிழ்ந்துப் போய்விட்டது.
“ஒங்களப் பத்தியும் தெரியும்,
ஒங்க கொணத்தப் பத்தியும் தெரியும். கட்சிக்காரனப் பத்தியும் தெரியும்ண்ணே. நம்ப தலவரு
லேசுப்பட்டவரு இல்ல. உணர்ச்சி வசப்பட்டு ஒரு வாத்தயக்கூட விடாதவரு. வில்லாதி வில்லன்.
அவரே ஒங்களுக்கு தங்கம்ன்னு பேரு வச்சாரு. அது உலக அதிசியம்.” என்று பொன்னுசாமி சொன்னதும்
தங்கம் லேசாக சிரிக்க மட்டுமே செய்தார்.
“யாருக்கு சீட்டு கொடுத்தாலும்
ஜெயிக்கிறவனா பாத்து கொடுங்க. என்னோட கவுன்சில்ல கட்சி தோக்கக் கூடாது. கட்சியில எனக்கு
ஒண்ணுதாண்ணே வேணும்.”
“சொல்லுங்க.”
“நான் செத்திட்டா நீங்க
எங்கயிருந்தாலும் வந்து ஒரு மாலயப் போடுங்க பொணத்து மேல. கட்சி கொடியப் போத்துங்க.
அது போதும் எனக்கு.” என்று சொன்னதும் தங்கம் “என்னண்ணே சொல்றிங்க? நீங்கல்லாம் செத்திட்டா
கட்சிய யாரு காப்பாத்துறது?” என்று கேட்டார்.
“ஒங்கப்பா ரெண்டு பீரியடு
மாவட்டச் செயலாளரு. ஒரு பீரியடு மந்திரி. இப்ப மூணு நாலு பீரியடா நீங்க எம்.எல்.ஏ,
ரெண்டு பீரியடா மாவட்டச் செயலாரு. ஒரு பீரியடு மந்திரியா இருந்தவரு. நான் சாதாரண ஆளு.
நான் கோவிச்சிக்கிட்டுப் போயிடுவன்ங்கிறதுக்காக இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருக்குறிங்களே,
இதாண்ணே நம்ப கட்சி. இதத்தான நம்ப தலவரு கத்து தந்தாரு.” என்று சொல்லும் போதே பொன்னுசாமிக்கு
அழுகை வந்துவிட்டது.
“எங்கப்பா செத்தப்பிறகு
நான் மாவட்டச் செயலாளரா எலக்ஷினில நின்னப்ப எல்லாப் பயலும் எங்கிட்ட காசு வாங்கிகிட்டுத்தான்
ஒட்டுப் போட்டான். மாவட்டப் பிரதிநிதியா இருந்த நீங்க ஒரு ஆளு மட்டும்தான் காசு வாங்காம ஓட்டுப் போட்ட ஆளு. அது நான் மறக்கல. கட்சியில யாரு எப்பிடின்னு எனக்கும் தெரியாம இல்ல.”
“ஒங்கப்பா என்னெ அப்பிடி வச்சிருந்தாரு. ஒங்கப்பாவவிட நூறுபடி மேல போயிட்டிங்க.
சீட்டு தந்தாலும் தரலன்னாலும் நான் கட்சிமாறி ஓட்டுப்போடுறவனில்ல.” என்று சொல்லிவிட்டு
கண்கலங்கியதைப் பார்த்த தங்கம் “ஒங்கள மாதிரியான ஆளுங்க இருக்கிறவர நம்ப கட்சி சாவாதண்ணே.”
என்று சொன்னார்.
பொன்னுசாமி இதுவரை எம்.எல்.ஏ., எம்.பி. சீட்டுக்கு
பணம் கட்டியதில்லை. அதற்கு நிறைய செலவு ஆகும் என்பது அவருக்குத் தெரியும். அந்த அளவுக்குத்
தன்னால் செலவு செய்ய முடியாது என்பதால் பணமே கட்ட மாட்டார். உள்ளாட்சித் தேர்தல் வரும்போது
மட்டும் ஒன்றியக் கவுன்சில், மாவட்டக் கவுன்சிலுக்கு கட்சியில் பணம் கட்டியிருக்கிறார்.
ஒவ்வொரு முறையும் “சீட்டு தாங்க” என்று மாவட்டச் செயலாளரிடம் கேட்பார். ‘இந்தமுற விட்டுத்தாங்க.
அடுத்தமுற பாத்துக்கலாம்.” என்று சொல்லிச் சமாதானம் செய்ததும் ‘எனக்குச் சீட்டு தராட்டியும்
பரவாயில்ல. ஜெயிக்கிறவனா, கட்சிக்காரனாப் பாத்துக் கொடுங்க. எனக்கு என் கட்சி ஜெயிக்கணும்’
என்று சொல்லிவிட்டுப் போய் விடுவார். கோபித்துக்கொண்டு போனாலும் தேர்தல் வேலை பார்க்காமல்
இருக்க மாட்டார். இரவும் பகலுமாக வேட்பாளரைவிட அவர்தான் தூங்காமல் அலைவார். தண்டபாணியும்,
தங்கமும் எப்போதும்போல பொன்னுசாமி போய்விடுவார் என்றுதான் எதிர்ப்பார்த்தார்கள். இந்தமுறை
ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறார் என்பதுதான் அவர்களுக்குப் புரியவில்லை.
தங்கத்திற்கு என்ன தோன்றியதோ “கொஞ்சம் வெளிய இருங்கண்ணே.
எல்லாக் கவுன்சிலயும் முடிச்சிட்டுக் கூப்புடுறன்” என்று சொன்னதும் இரண்டு கைகளையும்
குவித்துத் தங்கத்திற்கு கும்பிட்டுவிட்டு அறையிலிருந்து பொன்னுசாமி வெளியே வந்தார்.
அவருக்குப் பின்னால் கதிரவன் வந்தான். மறுநொடியே மாவட்டத் துணைச் செயலாளர் “ஒரு ஆளுக்காக
இவ்வளவு பேசுறிங்க. அரமணி நேரம் போயிடிச்சி. இந்த நேரத்துக்கு ஒரு ஒன்றியத்தயே முடிச்சிருக்கலாம்.”
என்று சொன்னதும் லேசாக சிரித்த தங்கம் சொன்னார்,
“நாப்பது அம்பது வருஷத்துக்கு
முன்னாடி, நம்ப எல்லாம் பொறக்காத காலத்தில, கட்சி வளருமா, ஆட்சிக்கு வருமா, வராதான்னு
தெரியாத காலத்தில இந்த ஆளு ஒருத்தன்தான் இந்த ஒன்றியத்தில முதன்முதலா கட்சிக் கொடியக்
கட்டுனான். கம்பத்த நட்டான். கட்சி நோட்டீசை சைக்கிள்ளப் போய் ஊரூரா கொடுத்தான். இந்த
மாதிரி ஆளுங்க நட்டு வச்ச மரத்திலதான் நாம்ப இப்ப பழத்தப் பறிச்சித்தன்னுக்கிட்டிருக்கம்
புரியுதா?”
மண்டபத்தைவிட்டு
வெளியே வந்ததும் “டீ குடிக்கலாம்” என்று கதிரவன் சொல்லிவிட்டு டீக் கடையை நோக்கி நடந்தான்.
போகலாமா வேண்டாமா என்று யோசித்த பொன்னுசாமி கோபமாகி கத்தினாலும் கத்துவான் என்ற எண்ணத்தில்
டீக்கடைக்குப் போனார். டீயை வாங்கிக் கொடுத்துவிட்டு தன்னுடைய டீயைக் குடிக்க ஆரம்பித்த
கதிரவன் “நம்பளால பத்து லட்சம் புரட்ட முடியாதா?” என்று கோபமாகக் கேட்டான். அதற்கு
பொன்னுசாமி எந்த பதிலும் சொல்லவில்லை.
“காசு உள்ளவனுக்குத்தான்
சீட்டுத் தருவானுங்க” என்று கதிரவன் சொன்னான். அவன் சொன்னதைக் காதில் வாங்காத மாதிரி
டீயைக் குடித்துக்கொண்டிருந்தார் பொன்னுசாமி.
“எதுக்கு வீணா நின்னுக்கிட்டு
வா வீட்டுக்குப் போவலாம்.”
“இரு. போவலாம்” என்று
பொன்னுசாமி சொன்னார். அவரை முறைத்துப் பார்த்தான் கதிரவன். பிறகு “மாவட்டச் செயலாளர்கிட்ட
நீ சண்ட போட்டிருக்கணும்” என்று சொன்னான்.
“ஒரு மாவட்டச் செயலாளரு
இந்த அளவுக்கு மரியாத கொடுத்து பேசுனதேப் பெருசு. ‘முடியாது போ’ன்னு ஒரு வாத்த சொல்லிட்டா
நாம்ப என்ன செய்ய முடியும்? நம்ப கட்சியில மாவட்டச் செயலாளருங்கிறது மாவட்டத்தோட ராஜா
மாதிரி. மாவட்டம் பூராவும் அவுங்க நெனைக்கிறதுதான் கட்சி. அவுங்க சொல்றதத்தான் தலமையும்
கேக்கும். நமக்கு சீட்டு தர மாட்டன்னா சொன்னாரு? பணம் செலவு செய்ய முடியுமான்னுதான
கேக்குறாரு? இத்தினி வருசத்தில பணம் மட்டும் கையில இருந்திருந்தா எந்தெந்த பதவிக்கோ
போயிருக்கலாம். பணம்தான் இல்லெ. சாதியாவது பெருசா இருக்கணும். அதுவும் இல்லெ. எல்லாத்துக்கும்
மேல பதவிக்குப் போகணுமின்னு தலயில எழுதியிருக்கணும் அது இல்லட்டி எம்மாம் ஆசப்பட்டாலும்
முடியாது.” என்று பொன்னுசாமி சொன்னதும் அவரைப் கதிரவன் வெறுப்புடன் பார்த்தான். ஆனாலும்
அவனை சமாதானப்படுத்துவதுபோல் பொன்னுசாமி சொன்னார் “கட்சிக்காக ஓடியாடி இருக்கோம். அலஞ்சிதிரிஞ்சி
இருக்கோம். அவ்வளவுதான். பெருசா முதலு போடல. முதலு போட்டாத்தான பெருசா லாபத்த எதிர்ப்பார்க்க
முடியும்? நம்ப கட்சியிலயாவது இந்த அளவுக்கு மரியாத இருக்கு. அதுகூட இவரு இருக்கிறதாலதான்.”
“எல்லாரும் ஒண்ணுதான்.”
என்று கிண்டலாக சொன்னான் கதிரவன்.
“அப்பிடி சொல்லாத. சாதிப்
பாக்காத, சாதிக்காரன மட்டும் காருல ஏத்தாத, சாதிக்காரனுக்கு மட்டும் காரியம் செய்யாத
ஆளு. நம்பக் கட்சியில இருக்கிற மத்த மாவட்டச் செயலாளரோட ஒப்பிட்டா இந்தாளு பேருக்கேத்த
மாதிரிதான்.”
“மந்திரியா இருந்தப்ப
நமக்கு என்னா செஞ்சாரு? ஆளு பாத்துத்தான செஞ்சாரு?”
“நம்ப என்னா சிபாரிசு
எடுத்துக்கிட்டுப் போய் கொடுத்து அவரு செய்யலன்னாரு? ஒரு பயலும் நம்பள நம்பி வரல. அவனவன்
நேராப் போயிப் பாக்குறான். பழய காலத்தில் கட்சிக்காரன் கூட போனாத்தான் காரியம் செய்வாங்க.
இப்ப அப்பிடியில்ல. பணம் இருந்தா போதும். மந்திரியா இருக்கயில அவர வச்சி பி.ஏ. பசங்கதான்
சம்பாரிச்சிட்டானுவ. புத்தகம் படிக்கிற பைத்தியம்ன்னு தெரிஞ்சி பலபேரு புத்தகத்த கொண்டாந்து
கொடுத்தே காரியம் செஞ்சிக்கிட்டானுவ. இவரு பேரதான் சம்பாரிச்சாரு.”
“அவருக்கு பொழைக்கத்
தெரியலன்னா யாரு பொறுப்பு? அவுங்கப்பா மந்திரியா இருந்தப்ப சம்பாரிச்சி வச்சிட்டுப்
போயிருப்பாரு” என்று திமிர்தனமாக கதிரவன் சொன்னதும் “அவங்கப்பா பாண்டியனும் பெருசா
சம்பாரிக்கல. மத்த மாவட்டச் செயலாளருங்க மாதிரி அடாவடிப் பேர்வழிங்க இல்லெ. அதனாலதான்
ஏழெட்டுமுற ஒரே தொகுதியில அப்பனாலயும் மவனாலயும் தொடர்ந்து ஜெயிக்க முடியுது. ராத்தியில
சாதி கட்சிக்காரன்கூடயும். பகல்ல நம்ப கட்சிக்காரன்கூடயும் இருக்கிற ஆளுங்க இல்லெ.”
என்று பொன்னுசாமி சொன்னார்.
“அவுங்க ஜெயிப்பாங்க.
ஆனா ஒனக்கு சீட்டு இல்லம்பாங்க. வா போவலாம். வீணாப் போன இந்தக் கட்சியில என்னிக்கி
நல்லது பண்ணியிருக்கானுவ? இன்னிக்கி பண்றதுக்கு?” என்று கேட்டு கதிரவன் முறைத்தான்.
அப்போது நேர்காணலை முடித்துவிட்டு தங்கம் வெளியே வருவது தெரிந்ததும் “அதுக்குள்ளாரவா
முடிச்சிட்டாங்க?” என்று கேட்டுக்கொண்டே தங்கத்தை நோக்கி பொன்னுசாமி நடக்க ஆரம்பித்தார்.
அவரோடு சேர்ந்து நடக்க ஆரம்பித்த கதிரவன் “பேருக்குத்தான நேர்காணல் நடக்குது. ஒன்றியச்
செயலாளர் பயலுவோ எழுதிக் கொடுக்கிற பேரத்தான அறிவிக்கப் போறாரு” என்று சொல்லிக்கொண்டே
வந்தான்.
தங்கம் காரில் ஏறியதும், மொத்தக் கூட்டமும் காரை சூழ்ந்துகொண்டு
நின்றது. “யாருக்கு சீட்டுக் கொடுத்தாலும் ஜெயிக்க வைக்கணும். கட்சியத் தோக்கடிக்கக்
கூடாது. தலமயில என்னெ அசிங்கப்பட வைக்கக் கூடாது” என்று சொன்னதும் “ஒங்கப் பேச்ச மீற
மாட்டோம் போங்கண்ணே” என்று ஒரே குரலாக கூட்டம் கத்தியது. அப்போது பொன்னுசாமி காருக்கு
அருகில் சென்று கும்பிட்டார். “அடுத்தவட்டம் கட்டாயம் செஞ்சித் தரண்ணே” என்று சொல்லிவிட்டு
தங்கம் கும்பிட்டார். பிறகு கூட்டத்தைப் பார்த்துக் கும்பிட்டார். கார் புறப்பட்டுவிட்டது.
தங்கத்தின் காருக்குப் பின்னால் நான்கு கார்கள் வேகமாக ஓடின.
ஆனந்த
விகடன் 28.06.2017