புலம்பெயர்ந்தவர்களுடைய தன் வரலாற்றுக் கதைகள்.
-
இமையம்.
“மண்ணு வளமிருக்க
மகத்தான
நாடிருக்க – நாங்கள்
நாடு விட்டு நாடு வந்து
– மறு
நாட்டான்
சீமையிலே
மரம் வெட்டிப் பால் சுமந்து
மலை வெட்டி மண் சுமந்து
காடு வெட்டிக்
கல்லுடைத்து
கையேந்தி கூலி வாங்கி
பாடுபட்ட கதைகளையும்
பட்ட துன்பம்
அத்தனையும்
பாட்டிலே சொல்லப்போனால்
பலகாலம்
ஆகுமென்று
எண்ணாது எண்ணி
எண்ணி
ஏட்டிலே நான் எழுதி வைத்தேன்.”
போர், சாதி, மத, இன, மொழி, அரசியல்
காழ்ப்பு, பழிவாங்கல் என்று நடக்கும் அழித்தொழிப்புகளிலிருந்து தப்பித்து உயிரோடு இருப்பதற்காக
உலகெங்கும் ஒவ்வொரு நாளும் பிறந்த, வளர்ந்த இடங்களைவிட்டு, பிறந்ததிலிருந்து பழகிய மனிதர்களைவிட்டு, கண்காணாத, மொழி அறியாத, தேசங்களுக்கு ஆயிரக்கணக்கான மைல்களை தாண்டி மனிதர்கள் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள்.
இந்த ஓட்டம் வரலாறு நெடுகிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
பொருளாதார மேம்பாடு, கல்வி, அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் பெருகிய இன்றைய காலக்கட்டத்திலும் உணவிற்காகவும்,
உயிரோடிருப்பதற்காகவும் மனித இனம் செய்கிற சாகசகங்களின் வழியே தெரியவருவது,
மனிதர்களுக்கு வயிறுதான் வாழ்க்கை. வயிறுதான் உலகம்.
அதை நிரப்பத்தான் உலகில் நடக்கும் அத்தனை சாகசங்களும்.
உயிர் வாழ்வதற்காக கண்காணாத
தேசத்திற்கு பயணிக்கிற சில மனிதர்களுடைய பயணத்தைப் பற்றி அகிலன் நடராஜா எழுதியிருக்கிறார்.
அது "நாடு தொலைத்தவனின் பயணக்குறிப்புகள்".
வன்னியில் வனவளத்தில் மீன்வளமாக்கல் துறையில் உதவி அலுவலராக பணிசெய்தவர்.
இளம்வயதில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இறந்துவிடுவார்
என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் அப்போது சாகவில்லை.
இலங்கை ராணுவம் கந்தளையில் குண்டுபோடும் போது செத்திருக்க வேண்டும்.
அப்போதும் அவர் சாகவில்லை. குண்டுமழையிலிருந்து
தப்பிப்பிழைப்பதற்காக கிளாசிக் கடலில் ஒருமுறை விழுந்தார். அப்போதும்
அவர் சாகவில்லை. தேவிபுரத்தில் நடந்த ராணுவ அழிப்பிலும் அவர்
சாகவில்லை. இனி தப்பிக்கவே முடியாது என்று நம்பிய முள்ளி வாய்க்கால்
போரிலும்கூட அவர் சாகவில்லை. இத்தனை முறை சாவு வந்தும் சாகாமல்
தப்பித்த ஒரு மனிதன் அதிர்ஷ்டசாலியா? துரதிஷ்டசாலியா?
இப்போதும் அவர் முன் சாவுவந்து நின்றுகொண்டிருக்கிறது. முன்பெல்லாம்
மரணம், ராணுவம், துப்பாக்கி, பீரங்கிக் குண்டு என்ற வடியில் வரும். இப்போது மரணம் பழுதடைந்த
படகு உருவத்தில் வந்திருக்கிறது. இந்தோனிசியாவிலிருந்து ஆஸ்திரேலியா
செல்லும் வழியில் படகு பழுதாகி நிற்கிறது. பழுதான படகை நடுக்கடலில் நிறுத்திவிட்டு
ஓய்வா எடுக்க முடியும்? நள்ளிரவில் நடுக்கடலில் பழுதாகி நிற்கிற படகிலிருந்து அகிலன்
நடராஜாவும், அவரோடு பயணித்த மனிதர்களும் கடலில் மூழ்கிப் போனார்களா, கரை சேர்ந்தார்களா?
இலங்கையிலிருந்து போருக்கு முன்பும், பின்பும்,
கனடா, லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் என்று செல்கிறவர்களுக்கும், ஈரான், ஈராக், வியாட்நாம்
போன்ற போர் தின்ற நாடுகளிலிருந்து வெளியேற நினைப்பவர்களுக்கும் மலேசியாதான் சத்திரமாக
இருக்கிறது. அங்கிருந்துதான் பல நாடுகளுக்கு போகிறார்கள். போய் இருக்கிறார்கள். போகும்
வழியில் படகு பழுதாகி கடலில் மூழ்கிப்போயிருக்கிறார்கள். கடல் பயணத்தின் போது, கடலோர
காவல்படையினரிடம் சிக்கி, மலேசியா, இந்தோனிசியா சிறைகளில் இருக்கிறார்கள். அகிலன் நடராஜா
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா செல்ல பயணிக்கிறார். வழியெல்லாம் மரணக்குழிகளாகவே இருக்கின்றன.
முதலில் மலேசியா வருகிறார்.
அங்கிருந்து இந்தோனிசியா சென்று, அங்கிருந்து ஜாவா தீவு, அதிலிருந்து போகார் என்ற சுற்றுலா
தளத்திற்கு பயணம். போகோரிலிருந்து சீசரூவா என்ற கிராமத்திற்கு பயணம். சீசருவாவில் வெளிநாடுகளுக்கு
செல்ல மாதகணக்கில், ஆண்டு கணக்கில் காத்திருப்போர் கூட்டம், ஒரு அடிக்கி ஒரு அடி தூரத்தில்கூட ஒரு தமிழரை பார்க்க
முடியும். தடிக்கிவிழுந்தால் தமிழர்கள் மீதுதான் விழவேண்டும். அவ்வளவுக்கூட்டம், வெளிநாடுசெல்ல
ஏஜெண்டுகளிடம் பணம்கட்டி ஏமாந்தவர்கள், ஏஜெண்ட்களிடம் பணம்கட்டி காத்திருப்பவர்கள்,
பயணத்தின்போது இந்தோனிசிய கடற்படையால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வெளியே
வந்தவர்கள் என்று பெரும்கூட்டம். அதில் ஒருவர் அகிலன் நடராஜா.
ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தால் அகிலன் நடராஜாவும்
அவரோடு சேர்ந்த சந்திரன், லக்சன், தீபன், சதிஷ், அரவிந்தன், கலாக்கா, அருளக்கா, பவன்
என்று இலங்கையை சேர்ந்த பலரும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிருஸ்துமஸ் தீவிற்கு பயணமாகிறார்கள்.
அவர்களோடு ஈரான், ஈராக், வியாட்நாமை சேர்ந்தவர்களும், இரண்டு சிங்கள குடும்பங்களும்
சேர்ந்து பயணிக்கின்றனர். சீசருவாவிலிருந்து, ஜாவா தீவிற்கும், அங்கிருந்து ஜகார்த்த
தீவிற்கும் பஸ்பயணம், அங்கிருந்து படகு பயணம், ஜகார்ந்த தீவிலிருந்து புறப்படும்போது
மலேசிய கடல்படையினரிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது. மாட்டிக்கொண்டால் இரண்டாண்டு சிறைவாசம்
அனுபவிக்க வேண்டும். உலகிலேயே மட்டமானது மலேசிய சிறைச்சாலை என்ற கவலை படகில் இருக்கும்
எல்லோரிடமும் இருக்கிறது. மலேசிய கடற் எல்லையைத்தாண்டியதும் "அப்பாடா" என்று
பெருமூச்சுவிடும்போது, திடீரென்று படகிலிருந்த "கூலிங் பம்ப்" வேலை செய்யவில்லை.
வேறு படகு வரவேண்டும். அதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். புதிய படகு எப்போது வரும்? தெரியாது.
அதுவரை படகு கடலில் மூழ்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக படகில் நிறையும் தண்ணீரை
ஆள்மாற்றி ஆள்மாற்றி இரைத்து ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள். நடுக்கடல். நள்ளிரவு. அடுத்தப்படகு
எப்போது வரும் என்ற காத்திருப்பு. அதுவரைக்கும் படகு கடலில் மூழ்காமல் இருக்க வேண்டும்
என்ற பதைபதைப்பு. பயணத்தின்போது நடுக்கடலில் படகு மூழ்கி செத்தவர்கள் ஏராளாம்.
படகில் பயணம் செய்கிறவர்களில் ஒரு ஆள்கூட சொகுசுக்காக,
உல்லாசத்திற்காக, பொழுதுபோக்கிற்காக பயணம் செய்யவில்லை. போரினால் பாதிக்கப்பட்டவர்கள்.
போரிலேயே செத்திருக்கலாம். நடுக்கடலில் வந்தா சாகவேண்டும் என்று அழுகிறார்கள். பவன்
என்பவர் முள்ளிவாய்க்கால் போரில் இரண்டு மகள்களை பறிக்கொடுத்தவர். வெளிநாடு செல்ல வந்த
பயணத்தில் இந்தோனிசிய கடற்படையால் கைதுசெய்யப்பட்டு இரண்டாண்டுகள் இந்தோனேசியா சிறையில்
இருந்தவர். இரண்டாவது முறை ஆஸ்திரேலியா செல்லும் வழியில் படகு பழுதாகி பத்துநாள் ஆள்
அரவமற்ற தீவில் நண்டு, நத்தகளை பொறுக்கி தின்றவர். அருளக்காவிற்கு ஒரு கால் இல்லை.
போருக்கு காணிக்கையா கொடுத்துவிட்டிருந்தாள். அருளக்கா மாதிரி படகிலிருந்த பல இலங்கையரும்
போருக்கு தங்களுடைய பங்களிப்பாக, கை, கால்களை, குழந்தைகளைப் பரிசாக அளித்தவர்கள். எவ்வளவோ
துயரங்களுக்கு, இழப்புகளுக்கு பிறகும் உயிரோடிருந்தவர்கள். இப்போது பழுதடைந்த படகில்
நடுக்கடலில் நிற்கிறார்கள். அவர்கள் உயிரோடு கிருஸ்மஸ்து தீவிற்கு போக போகிறார்களா,
கடலில் மூழ்கி சாகப்போகிறார்களா? எரிபொருள், உணவு, குடிநீர், மருந்துபொருள்களெல்லாம்
இருக்கிறது. ஆனால் படகு மட்டும் பழுது.
விடியும்வரை படகில் நிறையும் தண்ணீரை இரைத்துஇரைத்து
கடலில் ஊற்றிக்கொண்டே இருக்கிறார்கள். பெரிய அதிர்ஷ்டமாக காலையில் மற்றொரு படகு வருகிறது.
உயிர் பிழைத்தோம் என்று எல்லோரும் புதிய படகில் ஏறிக்கொள்கிறார்கள். கையிலிருந்த இந்தோனிசிய
பணத்தையெல்லாம் பழுதடைந்த படகுக்காரனிடம் கொடுத்துவிடுகிறார்கள். மீண்டும் பயணம். இனிமேல்
எந்தத் தொந்தரவும் இருக்காது. உயிரோடு போய்ச் சேர்ந்துவிடலாம் என்று நம்புகிறார்கள்.
அந்த நம்பிக்கையில் மண் விழுகிறது. கடுமையான மழைகொட்டுகிறது. நனைந்த குழந்தைகளும்,
பெண்களும் அழுகிறார்கள். படகு போய்க்கொண்டிருக்கிறது. மழை நிற்கவில்லை. ஆஸ்திரேலிய
எல்லை வந்ததும், ஆஸ்திரேலிய கடற்படைக்கு தாங்களாகவே போன்போட்டு போன்போட்டு லைன்-கிடைக்காமல்
அலுத்துப்போகிறார்கள். எப்படியோ லைன் கிடைத்து ஆஸ்திரேலிய கப்பல் படைக்கு தகவல் தருகிறார்கள்.
“ஆபத்திலிருக்கிறோம். காப்பாற்றுங்கள்” என்ற அலறல்தான் அவர்கள் தந்த தகவல். ஆஸ்திரேலிய
கப்பல் படையினர் வருகின்றனர். மழையில் படகில் நனைந்துகொண்டிருந்தவர்களை காப்பாற்றி
ஒவ்வொருவராக கப்பலில் ஏற்றுகின்றனர். அடையாள எண் தருகின்றனர். அகதிகளை ஏற்றிவந்த இந்தோனிசிய
இளைஞனையும், கிழவனையும் கைது செய்கின்றனர். அகதிகளை ஏற்றிவந்த படகை எரித்துவிடுகின்றனர்.
கப்பல் கிருஸ்மஸ்து தீவை நோக்கி பயணிக்கிறது. அகிலன் நடராஜாவினுடைய இலங்கை பாஸ்போர்ட்டை
பழுதான படகிலேயே அருளக்கா போட்டுவிட்டு வந்துவிட்டார். இப்போது அவர் நாடற்றவராகி கடலில்
பயணம் செய்கிறார். ஆஸ்திரேலியாவில் என்ன நடக்கப்போகிறது? சிறைக்கு அனுப்பப்போகிறார்களா?
கிருஸ்மஸ்து தீவு எப்படி இருக்கும்? ஆஸ்திரேலியா எப்படி இருக்கும்? கப்பலிலிருந்த யாருக்குமே
தெரியாது. ஆனால் பயணிக்கிறார்கள். அவர்களுடைய எதிர்காலம் எங்கே? பயணம் வாழ்வை நோக்கியா,
சாவை நோக்கியா? இரண்டை நோக்கியும்தான்.
"நாடு தொலைத்தவனின் பயணக்குறிப்புகள்"
ஒரு மாதிரிதான். அகிலன் நடராஜா மாதிரி போர் தின்ற நாட்டிலுள்ளவர்களின், போர் தின்ற
நாட்டிலிருந்து வெளியேறி அகதிகளாக சென்ற லட்சக்கணக்கான மக்களின் துயரத்தில், ஒருதுளிதான்
இந்த தன்வரலாற்றுக் கதை. இது இலங்கையில் நடந்த போரைப் பற்றி பேசவில்லை. அகதியாக வெளியேறிய
அதுவும் கடலில் பயணம் செய்தபோது ஏற்பட்ட துயரத்தை மட்டும்தான் பேசுகிறது. நள்ளிரவில்,
நடுக்கடலில் பட்ட அல்லலுக்கு, அழுகைக்கு கண்ணீருக்கு ஓலத்திற்கு, துயரத்திற்கு, பரிதவிப்பிற்கு,
தத்தளிப்பிற்கு யார் காரணம்? எது காரணம்? போர் எதையெல்லாம் கொண்டுவருகிறது? பெரும்
அலைச்சல்களை ஏன் கொண்டுவருகிறது? மக்களை கொன்றும், ஊனமாக்கியும், அகதிகளாக்கியும் பெறுகிற
வெற்றி - யாருக்காக, எதன்பொருட்டு என்ற கேள்வியை நாடு தொலைத்தவனின் பயணக்குறிப்புகள்
என்ற தன்வரலாற்றுக்கதை கேட்கிறது. நடுக்கடலில் பழுதடைந்த படகுபோலத்தான் அகிலன் நடராஜாவின்
குரல். நடுக்கடலில் தனிக்குரல்.
அகிலன் நடராஜாவின்
"நாடு தொலைத்தவனின் பயணக்குறிப்புகள்" தன் வரலாற்றுக்கதையில் ஒரு இரவில் நடக்கும் நிகழ்ச்சிகளை மட்டுமே சொல்லியிருந்தார்.
முத்தாம்மாள் பழனிசாமியின் "நாடுவிட்டு நாடு"
என்ற தன்வரலாற்றுக்கதையில் ஒரு நூற்றாண்டு கதையை, வரலாற்றை, வாழ்வை, சமூக நிகழ்வுகளை
சொல்கிறார். 1890 காலக்கட்டத்தில் தமிழகத்தின் கொங்கு பகுதி
- மூத்தநாயக்கன் வலசு என்ற கிராமத்திலிருந்து எட்டு நாள் கப்பல் பயணம்
செய்து மலேயா, பேரா மாவட்டம் டிண்டிங்ஸ் வட்டத்திலுள்ள கோல்டன்
ஹேப் கம்பனியால் பராமரிக்கப்படும் ரப்பர் தோட்டத்திற்கு குப்பண்ண
கவுண்டர், செல்லம்மாளின் மகன் பழனிசாமி தோட்ட தொழிலாளியாக சேர்ந்ததிலிருந்து
அடுத்த ஒரு நூற்றாண்டு கால, தமிழக, மலேய,
தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வை பேசுகிறது – நாடு
விட்டு நாடு.
வெள்ளைக்காரர்களின் தூண்டுதலால், விளம்பரத்தால்,
கங்காணிகளின் ஆசை பேச்சினால் மலேசியாவிற்கு சென்றவர்களும் உண்டு. மலேயாவிற்கு
வறுமை, சாதி கொடுமை, கொலை குற்றம்,
இப்படி பலகாரணங்களுக்காக சென்ற தமிழர்கள் வெறும் கூலிகளாக மட்டும் செல்லவில்லை.
தங்களுடைய சாதியையும், சாதிக்குறிய பழக்கவழக்கங்களையும்
வாய்மொழிக் கதைகளையும், பாடல்களையும் சேர்த்தே எடுத்துச்சென்றார்கள்.
தன்னுடைய தந்தை குப்பண்ண கவுண்டர்
கொலைகுற்றத்திற்காக ஜெயிலில் இருப்பதால் பிழைப்புக்காக பல தொழில்களையும் செய்துப்பார்க்கிறார்.
எதுவும் சௌகரியபடாத காரணத்தினால் மலேயா வருகிறார். தன்னுடைய புத்திசாலித்தனம், திறமை, அறிவால், 1903ல் ஆங்கிலம் கற்பதால் ரப்பர் தோட்ட மேனேஜர்களாக
இருக்கக்கூடிய வெள்ளைக்காரர்களுடன் நல்ல உறவு ஏற்பட்டு தண்டலாக (கங்காணியாக) மாறுகிறார் பழனிசாமி. தன்னுடைய ஊரிலிருந்தும், பக்கத்து ஊர்களிலிருந்தும் தோட்டவேலைக்கு
ஆட்களை, கூலிகளை வரவழைக்கிறார். ஒவ்வொரு தோட்டமாக ஆட்களை பணியில்
அமர்த்துகிறார். தோட்ட நிர்வாகத்தோடு பேசுகிறார். தோட்ட தொழிலாளர்களுக்கிடையே ஏற்படும் சச்சரவுகள், சிக்கல்களை
தீர்க்கிறார். குறிப்பிட தகுந்த ஆளாக மாறுகிறார். சொந்த தம்பி, உறவினர்களையும் மலேயாவிற்கு வரவழைக்கிறார்.
சொந்த கிராமமான "கம்போங்"கில் 1935ல் வீடுகட்டுகிறார். தண்டலாக
இருந்ததால் கிடைத்த கமிசன்பணத்தில் நூற்றி ஐம்பது ஏக்கர் அளவுக்கு 1939ல் நிலம் வாங்குகிறார். 1950 வரையிலும் பழனிசாமி தமிழகத்திலிருந்து
கூலிகளை வரவழைத்து தோட்டங்களில் வேலைக்கி அமர்த்துகிறார். 1930 காலகட்டத்தில் பென்ஸ் கிராண்ட் என்ற வெள்ளைக்கார மேனேஜருக்கு பிடித்த
"கங்காணி"யாக இருக்கிறார். பழனிசாமி
போன்றவர்களை இலங்கையில் ‘ஆள்காட்டி’ என்பார்கள். பனிரெண்டு வயதிலேயே
திருமணமாகி, திருமணமான இரவிலேயே கல்யாணம் பிடிக்கவில்லை என்று தாலியை கழற்றி வைத்துவிட்டுவந்த
வாழையங்காட்டு வீரண கவுண்டர், வீரம்மாளின் மகளான பழனியம்மாளை
கல்யாணம் செய்துகொள்வதாக கூறி மலேயாவிற்கு அழைத்து வருகிறார். பழனியம்மாளுக்கு எட்டுக்குழந்தைகள் பிறக்கின்றன. எட்டு
குழந்தைகளை பெற்றும், ஐம்பதாண்டுகளுக்கு மேலாக பழனிசாமியுடன்
வாழ்ந்தும், சாகிறவரை தாலி இல்லாமலேயே பழனியம்மாள் இறக்கிறார். கவுண்டர் சாதியில் ஒருமுறைதான் ஒரு பெண்ணுக்கு
தாலி கட்டவேண்டும்.
நாடு விட்டு நாடு, ஒரு தோற்றத்திற்கு பழனிசாமியின் இரண்டு மனைவிகள், அவர்களுடைய
குழந்தைகள், குடும்பம், குடும்பசண்டைகள்,
சாதி பழக்கவழக்கங்கள், முன்னோர்களுடைய வீரதீரங்கள்,
கொங்கு நிலப்பகுதியின் மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கை
முறையைப் பேசுவதாக தோன்றும். அது இந்த நூலுக்கு ஒரு முகம்தான்.
தமிழகத்திலிருந்து கூலிகளாக ரப்பர் தோட்டங்களுக்கு தானாக வந்தவர்கள், கொண்டுவரப்பட்டவர்கள் எந்தெந்த தோட்டங்களில்,
எப்படி வேலை செய்தனர், எப்படி வேலை வாங்கப்பட்டனர், எப்படியான
கொடுமைகளுக்கு ஆளானார்கள், எங்கு வாழ்ந்தனர், சாமி,
பேய், சடங்குகள் சார்ந்த நம்பிக்கைகளை எப்படி பின்பற்றினார்கள்
என்ற வரலாற்றையும் தெளிவாக சொல்கிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கிடையே
இருந்த சுமூகமான உறவுகள், பகை, சச்சரவு,
சண்டை, சாதிய இழிவு போன்ற விபரங்களும் போதிய அளவிற்கு சொல்லப்பட்டிருக்கிறது.
1890ல் ‘கூலிகள் தேவை’ என்று வெள்ளைக்காரர்களால் செய்யப்பட்ட கவர்ச்சிகரமான விளம்பரம்,
1900ல் மலேயாவில் வெரும் ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே இருந்த ரப்பர் தோட்டம்
1911ல் ஐந்து இலட்சத்து நாற்பத்து மூன்றாயிரம் ஏக்கர் பரப்பளவாக எப்படி மாறியது என்பதும்
சொல்லப்படுகிறது.
1946 - காலக்கட்டத்தில் நடந்த
இரண்டாம் உலகப்போர் மலேயாவில் ஏற்படுத்திய தாக்கத்தையும் இந்நூல் விரிவாக பதிவு செய்திருக்கிறது.
மலேயாவில் ஜப்பானியர்களின் கை எப்படி ஓங்கிற்று? வெள்ளைக்கார மேனேஜர்களை நாட்டைவிட்டு எப்படி ஓட வைத்தார்கள்?
ரப்பர் தோட்டங்களை எப்படி அழித்து நாசமாக்கினார்கள்? ஜப்பானியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கூலிகளாக இருந்த தமிழர்கள் எப்படியான
துயரங்களை அனுபவித்தார்கள்? சுபாஷ் சந்திரபோஸிற்கு, தமிழர்கள் எப்படி ஆதரவாக இருந்தனர் – என்று பல வரலாற்று
நிகழ்வுகளும் சொல்லப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போர் முடிந்த
பிறகு 1949க்குப்பிறகு மலேயா எப்படி பழைய நிலைக்கு திரும்பியது,
1947-1948 காலத்தில் மலேயாவை விட்டு ஓடிப்போன வெள்ளைக்கார மேனேஜர்கள்
திரும்பவந்து ரப்பர் தோட்டங்களை எவ்வாறு மறுசீரமைப்பு செய்தனர் என்ற வரலாற்றோடு
1950க்குப்பிறகு தோட்டங்களில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன என்பதையும் சொல்கிறார்.
மலாய்க்காரர்களை வெளியேற்றிவிட்டு சீனர்கள் குடியேறியது, லாரிகள்,
டிரக்குகள் வந்த பிறகு தொழிலாளிகளுக்கு வேலை எப்படி சுலபமாயிற்று,
ரப்பர் தோட்டங்கள் எப்படி செம்பனை தோட்டங்களாக மாறின என்ற வரலாறும் சொல்லப்பட்டுள்ளது.
எதைச் சொன்னாலும் பழனியம்மாள் அழகாக சொல்கிறார். நேர்த்தியாக சொல்கிறார். மொத்தத்தில் சூரிய ஒளிகூட விழ முடியாத அடர்ந்த
வனப்பகுதியாக இருந்த மலேய ரப்பர் தோட்டத்தில் உழைத்து செத்த தமிழர்களைப்பற்றிய கதை
இது.
ரப்பர் தோட்டங்களில்
மேனேஜர்களாக இருந்த வெள்ளைக்கார துரைகள் கூலிகளை ‘கருப்பர்களை’ உடல்ரீதியாக, மனரீதியாக எப்படி சுரண்டினார்கள், சித்ரவதை செய்தார்கள், பெண்கள் எப்படியெல்லாம்
பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்ற வரலாற்றை சொல்கிற அதேநேரத்தில் வட்டிக்காரர்களிடம்
மாட்டிக்கொண்டு எப்படியெல்லாம் சீரழிந்தார்கள், தமிழர்கள் கள்ளுக்கடையில் காசை
எப்படியெல்லாம் செலவழித்தார்கள் என்ற கதையையும் துல்லியமாக சொல்கிறார்.
இரண்டாம் உலகப்போர் தொடங்குகிற
சமயத்தில் பழனிசாமி தன்னுடைய இரண்டாவது மனைவியுடனும், குழந்தைகளுடனும்
1940ல் தமிழகம் வருகிறார். ஏழாண்டுகள் கழித்து
1947ல் திரும்பவும் குடும்பத்தோடு மலேயா செல்கிறார். இடைப்பட்ட ஏழாண்டுகளில் அவர் பல ஊர்களில் வாழ்கிறார். பல தொழில்களை செய்கிறார். பால் வியாபாரம், இட்லி கடை, தோட்டவேலை என்று, எதை
செய்தும் வயிறுநிறைய சாப்பிட முடியாதநிலை. சொந்த ஊரிலும்,
வெள்ளக்கோவிலிலும், ஊட்டியிலும் பழனிசாமியும்,
அவருடைய குடும்பமும் படாதபாடு படுகிறது. மீண்டும்
மலேயாவில் அவருடைய குடும்பம் எப்படி பழைய நிலைமைக்கு திரும்புகிறது, குழந்தைகள் படித்து வளர்கிறார்கள், திருமணம் செய்துகொள்கிறர்கள்
என்ற வரலாறும் சொல்லப்படுகிறது. முத்தம்மாளுக்கு திருமணம்
நடப்பது, குழந்தைகள் பிறந்து, வளர்ந்து, படிப்பில், தகுதியில் உயர்வது, அவர்களுடைய குழந்தைகள் யார்யார் என்ற விபரமெல்லாம் தெளிவாக தரப்பட்டுள்ளது.
அதேமாதிரி முத்தம்மாள் படிக்கப்போனது, ஆசிரியையாக
வேலைக்குப்போனது, பதவி உயர்வு பெற்றது 1988ல் பணி ஓய்வுபெற்றதுவரை எல்லாத் தகவல்களும் தரப்பட்டுள்ளது.
இந்த தன்வரலாற்றுக் கதை தமிழ்பெண்களுக்கும் ரப்பர் தோட்ட மேனேஜர்களாக இருந்த
வெள்ளைக்கார துரைகளுக்கும் ஏற்பட்ட கள்ளக்காதல், கல்யாணம் பற்றிய
வரலாற்றையும் பேசுகிறது. தமிழகத்திலிருந்து வெள்ளைக்காரர்களால்
தென்ஆப்பிரிக்காவிற்கு கூலிகளாகக் கொண்டு செல்லப்பட்ட தொழிலாளர்களில், ஒரு பகுதியினரை
தென்னாப்பிரிக்காவிலிருந்து மலேயாவிற்கு ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கு கொண்டுவந்து
பணி அமர்த்துகிறார்கள். அப்படி பணியமர்த்தப்பட்ட பெண்களில் ஒருத்தி - மாலை. ஸ்காட்லாந்தை
சேர்ந்த ஜார்ஜ் மெக்கல் என்ற ரப்பர் தோட்ட மேனேஜருக்கு மாலையை பிடித்துப்போகிறது. காதல்
செய்கிறார். மாலைக்கும் ஜார்ஜ் மெக்கலுக்கும் ஒருபெண் குழந்தை பிறக்கிறது. பெயர் சரஸ்வதி.
‘சொகமானா’ தோட்ட மேனேஜராக இருந்த பென்ஸ் கிராண்ட் துரைக்கு பதினாறே வயதே நிரம்பிய சரஸ்வதியின்
மீதுகாதல். சரஸ்வதியை திருமணம் செய்துகொள்கிறார். சரஸ்வதிக்கும், கிராண்ட் துரைக்கும்
மேரிகிராண்ட், சார்லஸ் கிராண்ட் என்று இரண்டு பிள்ளைகள். இரண்டாம் உலகப்போர் சமயத்தில்
ஜப்பானியர்களுக்கு பயந்துகொண்டு பென்ஸ் கிராண்ட் மலேயாவைவிட்டு தாய்நாட்டிற்கு முதல்
மனைவியிடம் போய்விடுகிறார். மேரி கிராண்ட்டுக்கு திருமணமாகி வெளிநாடு போகிறாள். சார்லஸ்
கிராண்ட்டுக்கும், முத்தம்மாள் பழனிசாமிக்கும் 1960ல் திருமணம் நடக்கிறது. ஐந்து குழந்தைகள்
பிறக்கிறார்கள். ஐந்துக்கும் தமிழ்ப்பெயர்கள்தான். முத்தம்மாளுக்கு பிறக்கிற ஐந்து
குழந்தைகளில் ஒருவர்கூட கவுண்டர் இனத்தில் திருமணம் செய்துகொள்ளவில்லை. முத்தம்மாளின்
மகன் கண்ணன் ஐஸ்லாந்தை சேர்ந்த அஸ்ரூனை திருமணம் செய்துகொள்கிறார். பென்ஸ் கிராண்டு
ஒடிப்போனதால் வேறுவழியின்றி சரஸ்வதி ஒரு நாட்டுக் கோட்டை செட்டியாரை இரண்டாம் திருமணம்
செய்துகொண்டு ஒரு பெண் குழந்தைக்கும் ஐந்து ஆண் குழந்தைகளுக்கும் தாயாகிறாள்.
நாடு விட்டு நாடு – தன் வரலாற்றுக் கதை பழனிசாமியின்
குடும்பத்துக்கதையை, அவருடைய வாரிசுகளுடைய கதையை மட்டும் பேசவில்லை. இந்நூலை எழுதும்போது
முத்தம்மாளுக்கு வயது எழுபத்திநான்கு. தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, வீட்டில்,
தெருவில், ஊரில் என்ன நடந்தது என்பதை ஒளிவுமறைவின்றி எழுதியிருக்கிறார். தன்னுடைய தாய்வழி
பாட்டியான வீரம்மாள் எவ்வளவு ஆழமாக சாதிய நடைமுறைகளைப் பின்பற்றினார் என்பதையும், கொங்கு
கவுண்டர்கள் சாதி சார்ந்த விசயங்களில் எவ்வளவு அக்கறை காட்டினார்கள் என்பதையும் வெளிப்படையாக
சொல்கிறார். கவுண்டர்கள் உழைப்பதிலும், சேமிப்பதிலும் எவ்வளவு கவனமாக இருந்தார்கள்
என்பதையும் சொல்கிறார். இந்த தன்வரலாற்றுக் கதையில் சுய பெருமைகள், சுயதம்பட்டங்கள்,
சுயபுலம்பல்கள், முக்கியமாக கண்ணீர் இல்லை, பொய், இட்டுக்கட்டுதல் இல்லை. தன்னை காதல்
செய்து ஏமாந்து பைத்தியமான மனிதர் பற்றியும் எழுதியிருக்கிறார். பழனியம்மாள் தாலி கட்டிக்கொள்ளாமலேயே
எட்டுக்குழந்தைகளை பெற்றவர், அதனால் ஏற்பட்ட அவமானங்களை எழுதியதோடு, தன்னுடைய தந்தை
இறந்தபோது, தன்னுடைய தாயையும், தங்களையும் பிணத்தைப் பார்க்கவிடாமல் உறவினர்கள் எப்படி
தடுத்து நிறுத்தினார்கள், அவமானப்படுத்தினார்கள் என்பதையும் ஒருதுளிகூட மறைக்காமல்
எழுதியிருக்கிறார்.
நாடு விட்டு நாடு – தன் வரலாற்றுக்
கதையில் ஆங்காங்கே வரும் ஒப்பாரி பாடல்கள். தனிமனித துயரத்தை,
இழப்பை பாடவில்லை. தோட்டத்தொழிலாளர்களின் வேலையை,
வலியை, இழப்பை, வேதனையை,
கண்ணீரை, காயத்தை பாடுகிறது. நூலின் தொடக்கம் ஒப்பாரி பாடலில் ஆரம்பிக்கிறது.
அதே மாதிரி நூலின் முடிவும் ஒப்பாரி பாடலோடுதான் முடிகிறது. இது இந்நூலுக்கு கூடுதல் சிறப்பை சேர்க்கிறது. இந்த ஒப்பாரி பாடல்களில்
நாடுவிட்டு வந்தது, ரப்பர் தோட்டத்தில் வேலை செய்வது, கங்காணிகளின், வெள்ளைக்கார துறைகளின்
நடவடிக்கைகள், அவர்கள் பெண்களை நடத்திய விதம் பற்றியும் சொல்லப்படுகிறது.
ஒரு மனிதன் தனக்குத்தானே எவ்வளவு நேர்மையாக இருக்க
வேண்டும், இருக்க முடியும் என்பதை தன் எழுத்தில் சொல்லியிருக்கிறார் முத்தம்மாள். நிஜவாழ்க்கை
கதையாக, ஆவணமாக, வரலாறாக எழுதப்பட்டிருக்கிறது. முதலில் இந்நூல் FROM SHORE TO
SHORE என்ற பெயரில் 2003ல் வெளிவந்தது. முத்தம்மாளே இதை 2005ல் தமிழில் எழுதி வெளியிட்டார்.
இது ஒரு பெண்ணின் கதை அல்ல. ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேலாக மலேசியா மண்ணில் வாழ்ந்தவர்களின்
கதை. தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு புலம்பெயர்ந்த தமிழர்களுடைய வாழ்வை அறிவதற்கு
விளக்கைப் போன்று ஒளிர்கிறது – நாடு விட்டு நாடு.
முத்தம்மாள்
பழனிசாமியினுடைய ‘நாடு விட்டு நாடு’ தன் வரலாற்றுக் கதைக்கும் அ.ரெங்கசாமி எழுதிய
‘சிவகங்கையிலிருந்து சீ சங்சாங் வரை’ என்ற தன் வரலாற்றுக் கதைக்கும் நிறைய ஒற்றுமைகள்
இருக்கின்றன. தமிழகத்திலிருந்து மலேயாவிற்கு சென்று வாழ்ந்த மனிதர்களுடைய கதையைத்தான்
இருவரும் எழுதியிருக்கிறார்கள். மலேயாவில் இருந்த ‘கம்பம்’, ‘தோட்டம்’, ‘கூலிகளின்
வாழ்க்கை’ லைன் வீடுகளின் வாழ்க்கைதான் மையம். இரண்டு பேருமே ஆசிரியர்களாக இருந்தவர்கள்.
வேலை நிமித்தமாக பல இடங்களுக்கு சென்றவர்கள். அதனால் பல கம்பத்து, தோட்டத்து வாழ்க்கையை
அறிந்தவர்கள். இரண்டு மனிதர்கள். இரண்டு வாழ்க்கை முறைகள்.
1930ல் மலேயாவில் பிறந்த அ.ரெங்கசாமி தன்னுடைய
தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த கதையை மட்டும் எழுதவில்லை. தன்னுடைய தாத்தா, அப்பா, ஊர்,
ஊரில் வாழ்ந்த மக்கள், அவர்களுடைய இயல்புகள், அந்த காலத்து வாழ்க்கை முறை, குலதெய்வம்
என்று பலதையும் சேர்த்தே எழுதியிருக்கிறார். அ.ரெங்கசாமியின் தாத்தா எருதுமேய்க்கி,
பாட்டி கருப்பாயி. இவர்களுக்கு பெரியான், அடைக்கன், மச்சக்காளை, தீத்தி என்று நான்கு
குழந்தைகள். ஊர் மணப்பாறைக்கு அருகிலுள்ள உலகயூருணிப்பட்டி. எருதுமேய்க்கி உள்ளூரிலுள்ள
செட்டியார் ஒருவரிடம் கடன் வாங்குகிறார். சிறிது காலம் கழித்து கடனை அடைக்கும்போது
‘இதோடு நம் உறவு முடியக்கூடாது. வெறும் ஐந்து போய் மட்டும் பாக்கி இருக்கட்டும்’ என்று
செட்டியார் சொல்ல சரி என்று ஏற்றுக்கொள்கிறார். காலம் ஓடுகிறது. செட்டியார் இறந்துவிட,
அவருடைய மகன் மயன், ன் தந்தைக்கு தர வேண்டிய ஐந்து ரூபாய்க்கு வட்டிமேல் வட்டி போட்டு,
கூட்டு வட்டி போட்டு பெரும்தொகை தர வேண்டும் என்று சொலி எருதுமேய்க்கியின் தொத்துகளை
எல்லாம் எழுதி வாங்கிக்கொள்கிறார். எருது மேய்க்கியின் குடும்பம் நடுத்தெருவுக்கு வருகிறது.
வறுமையில் வாடுகிறது. அப்போது மலேயா தோட்டத்துக்கு ஆள் வேண்டும் என்று வெள்ளைக்காரர்களின்
தூண்டுதலால் ஊர்ஊராக சென்று ‘கிராணிகள்’ ஆள் எடுக்கும்போது, எருதுமேய்க்கியின் மகன்
அடைக்கன் குடும்ப கடனை அடைப்பதற்காக கைவிட்டுப் போன நிலத்தை மீட்பதற்காக வெள்ளைக்காரர்களால்
‘மெயில்’ என்றும், தமிழர்களால் ‘மயில்கப்பல்’ என்றும் அழைக்கப்பட்ட நீராவிக் கப்பல்
மூலம் மலேயா வருகிறார். இரத்த பஞ்சாங், சட்டைக்காரன் தோட்டத்தில் ‘லயத்துக்காடு’ என்ற
வீட்டில் தங்கியபடி இரப்பர் தோட்டத்தில் உளி, குட்டிச்சாக்கு, வாளி, காண்டா போன்ற சாமான்களை
வைத்துக்கொண்டு வேலை செய்தல், பணம் சம்பாதித்தல், திரும்பி ஊருக்கு வருதல், நிலத்தை
மீட்டல் என்று அடைக்கன் வாழ்வு ஓடுகிறது. இரண்டாவது முறையாக மலேயாவிற்கு அத்தை மகன்
தூண்டுதலால் வருகிறார். முன்பு வேலை செய்த இடத்திற்கு போகாமல் அதிக சம்பளம் என்ற காங்காணியின்
பொய்ப் பேச்சை நம்பி ‘அலோர்கா’ காட்டுப் பகுதியில் ரயில்ரோடு போடும் வேலை செய்கிறார். அங்கு தாக்குப்பிடிக்க
முடியாமல் திருட்டுத்தனமாக தப்பித்து ஊருக்கு வருகிறார். மீண்டும் மலேயாவிற்கு வருகிறார்.
பல தோட்டங்களில் வேலை செய்கிறார். காத்தாயி என்ற பெண்ணை மணக்கிறார். அவர்களுக்கு ஐந்து
குழந்தைகள். அதில் ஒருவர்தான் ‘அ.ரெங்கன்’ என்கிற ரெங்கசாமி. அடைக்கன் பாட்டுப் பாடக்கூடியவர்.
ஓரளவு படிக்கத் தெரிந்தவர். அதனால் ஆசிரியராக, ஜோசியம் பார்ப்பவராக, பேய் ஓட்டியாக,
நல்லது கெட்டது சொல்பவராக ஓரளவு மதிப்புப்பெற்றவராக இருக்கிறார்.
நாகப்பட்டினத்திலிருந்து மலேயா ‘கோலா’ துறைமுகத்திற்கு
ஆட்கள் சென்ற விதம், பணம் கட்டிச் சென்றவர்களுக்கும், பணம் கட்டாமல் ஏஜென்டுகள் மூலமாக
சென்றவர்களுக்குமான வேறுபாடு, வெள்ளைக்காரர்களிடம் தொழிலாளிகள் சவுக்கடி பெற்றதுபற்றிய
விபரங்களை அ.ரெங்கசாமி தெளிவாக எழுதியிருக்கிறார். தோட்டங்களில் ஆட்களை எழுப்பவதற்காக
அடிக்கப்பட்ட ‘பெரட்டு மணி’ பற்றியும், ஒரு நாளைக்கு பனிரெண்டு மணிநேரம் வேலை செய்து
தமிழர்கள் பட்ட துன்பம் என்ன என்பதையும் எழுதியிருக்கிறார்.
1948-50 காலப்பகுதியில்
சீன ஆதரவு கம்யூனிஸ படைகள் செய்த அட்டூழியங்கள், மக்களை அடித்து சித்ரவதை செய்தது,
சுடடுக் கொன்றது, சீனர்கள் வாழ்ந்த பகுதியில் குண்டர்கள் அதிகமாக இருந்தது, வளர்ந்தது
என்ற வரலாற்றை சொல்கிறார் அ.ரெங்கசாமி. கம்யூனிஸ்ட்டுகளே மக்களை சித்ரவதை செய்தது,
சுட்டுக்கொன்றது என்பது அதிசயமல்ல. நிஜம். 1942 காலப்பகுதியில் ஜப்பானியர்கள் செய்த
மக்கள் விரோத செயல்கள் என்னென்ன என்று பட்டியல் தரப்பட்டுள்ளது. 1943ல் ஜப்பானியர்கள்
ரேசன் அரிசி போட்டது, 1945ல் ஜப்பானில் குண்டு போட்டதாகவும், ஜப்பான் தோற்றுவிட்டதாகவும்
வந்த செய்தி தமிழர்களிடத்தில் ஏற்படுத்திய எண்ணங்கள், மனமாற்றங்கள், சீன கம்யூனிஸ்ட்
ஆட்சிக்கு எதிராகவும், வெள்ளையர்கள் மீண்டும் வரவேண்டும் என்று தமிழர்கள் ஏன் விரும்பினார்கள்
என்ற விபரங்களும் தரப்பட்டுள்ளன.
1800
முதல் 1940வரை கிட்டத்தட்ட இருநூறு வருடத்திற்குமேல் தமிழர்களின் உழைப்பை சுரண்டி தின்ற
வெள்ளையர்கள், மலேயாவைவிட்டுப் போகும்போது நடந்துகொண்ட கீழ்த்தரமான நடவடிக்கைகள் என்னென்ன
என்பதையும், ‘மேம்பாடு’ என்ற பெயரில் பெரியபெரிய ரப்பர் தோட்டங்களை மலேயா அரசு அரசுடமையாக்கியப்போது
எத்தனாயிரம் தொழிலாளிகள் நடுத்தெருவில் விடப்பட்டார்கள்? புறம்போக்கு நிலத்தில் தங்கினார்கள்,
தங்க இடமின்றி அவதிப்பட்டார்கள் என்ற துயரத்தையும் அ.ரெங்கசாமி வெறும் தகவலாக சொல்லவில்லை.
துயர கதையாகத்தான் எழுதியிருக்கிறார். 1967ல் பூமிப்புத்திரா பட்டம் பெற்றதன்வழியே
மலாய்காரர்கள், எந்தெந்த விதத்தில் நலன் பெற்றார்கள், முன்னுரிமைப் பெற்றார்கள், அதிகாரம்
பெற்றார்கள் என்ற சமூக நிகழ்வை சொல்கிற அ.ரெங்கசாமி மலேயா அப்போது என்ன நிலையில் இருந்தது
என்பதையும் எழுதியிருக்கிறார். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக மலேயாவில் வேலை செய்தாலும்
1941ல்தானே தமிழர்கள் முதன்முதலாக தங்களுக்கான உரிமையைக் கோரிப் போராடினார்கள்.
மலேசிய
தமிழர்களிடம் தீபாவளிப் பண்டிகை மட்டும் எப்படி சிறப்பிடம் பெற்றது? கொண்டாட்டப்படுகிறது?
கோரித் தீவில் வாழ்ந்த தமிழர்களுடைய வீடுகளில் ஆடு, மாடு, கோழி போன்றவை எப்படி பெரும்
செல்வமாக இருந்தது, சிவகங்கை சீமையைச் சேர்ந்தவர்களிடம் ‘தேவர்’ என்ற சாதிபெருமிதம்
எப்படி செழித்து வளர்ந்திருந்தது என்பதையெல்லாம் தெளிவாக நூலாசிரியர் எழுதியிருக்கிறார்.
சங்சாங்
கம்பத்தில், அன்னாசிக் கம்பத்தில், இராமன் செட்டியார் தோட்டத்தில், சட்டைக்காரன், பொட்டைக்கண்ணன்,
ஐலன்ஸ்த் தோட்டத்தில் தொழிலாளிகளுடைய வாழ்க்கைத் தரம் என்னவாக இருந்தது என்பதையும்,
நாட்டுக்கோட்டை செட்டியார்கள் எப்படி பேங்க் மாதிரி செயல்பட்டார்கள் என்பதையும் அச்சு
அசலாக அ.ரெங்கசாமி எழுதியிருக்கிறார். கிள்ளான் பகுதி எப்படி இருந்தது, வட கிள்ளான் பகுதி
எப்படி இருந்தது, மலாக்கா பகுதி எப்படி இருந்தது, சீனர்களுடைய உடை, ‘சீனக்கஞ்சி’ எப்படி
இருந்தது என்பதையும் எழுதியிருக்கிறார்.
தன்
வரலாற்றுக் கதை என்றாலே அழுகை, கண்ணீர், ஓலம், ஒப்பாரி, வறுமை, பட்ட துன்பம், அவமானம்,
இழிவை விவரிப்பது அதன் மூலம் வாசகர்களிடத்தில் பச்சதாபத்தை ஏற்படுத்துவது என்ற போக்குதான்
தமிழகத்தில் 1990க்குப் பிறகு ஏற்பட்டது. அந்த போக்கு அ.ரெங்கசாமி எழுதிய ‘சிவகங்கை
முதல் சீ சங்சாங் வரை’ நூலில் இல்லை. தன்னுடைய வாழ்க்கையில், குடும்பத்தில், தெருவில்,
ஊரில், சூழலில், சமூகத்தில் இதுதான், இப்படித்தான் நடந்தது. நான் வாழ்ந்தது, அனுபவித்தது,
பார்த்தது, கேட்டது, படித்தது இதுதான் என்ற அளவில் மட்டுமே இருக்கிறது. இதில் பாசாங்கு
இல்லை. ஜோடனைகள் இல்லை. உண்மை மட்டுமே இருக்கிறது. அதுதான் இந்நூலின் பலம். கற்பனையிலிருந்தும்
மூளையிலிருந்தும் உருவாவது மட்டுமே இலக்கியமல்ல. அசலான வாழ்க்கையிலிருந்து எழுதப்படுவதான்
நிஜமான இலக்கியம். மனதிலிருந்து எழுதப்படுகிற இலக்கியமே ஆகச் சிறந்தது. அ.ரெங்கசாமி
தன்னுடைய கதையில் தன்னை முன்னிருத்தவில்லை. மாறாக தான் வாழ்ந்த வாழ்க்கையை, சமூகத்தை,
சூழலை அனுபவிக்க நேர்ந்த கொடூரங்களை, அநீதிகளை எழுதியதின் வழியே அன்றைய மலேசியா சமூக
வாழ்வை, வரலாற்றை எழுதியிருக்கிறார்.
நிர்பந்திக்கப்பட்ட,
வரையறுக்கப்பட்ட வாழ்க்கையை வாழ நேர்கிறபோது, தான் வாழ்கிறோம் என்ற உணர்வுகூட சம்பந்தப்பட்ட
மனிதனிடம் இருப்பதில்லை. சுமத்தப்பட்ட ‘கூலி’, ‘கருப்பன்’ என்ற அடையாளத்தை சுமந்துகொண்டு
வாழ்கிறவன் – தன்னுடைய வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டவனாகவே இருப்பான். அ.ரெங்கசாமியும்
அப்படித்தான் இருந்திருக்கிறார். அக்காலத்தில் மலேயாவில் வாழ்ந்த தமிழர்களும் அப்படித்தான்
வாழ்ந்திருக்கிறார்கள்.
ஊரை
பிரிந்து, உறவை பிரிந்து, பிறந்து வளர்ந்த இடத்தைப் பிரிந்து வந்து மனித நடமாட்டம்
குறைந்த அடர்ந்த பெருங்காட்டில் வாட்டிவதைக்கும் பூச்சிக்கடி, வண்டு கடி, குளிர், உயிர்
அச்சத்தோடு தமிழர்கள் எப்படி இருந்தார்கள், வாழ வேண்டும், உயிரோடு இருக்க வேண்டும்
என்ற பெருங்கனவு எப்படி எல்லாத் துயரங்களையும் தாங்கிக்கொள்ள வைத்தது? தனிமையையும்,
வறுமையையும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை அ.ரெங்கசாமி அழகாக எழுதியிருக்கிறார் என்று
சொல்ல முடியாது. வலியை எப்படி அழகாக எழுத முடியும்? ஒரு வகையான கதறல்தான் இந்த தன்
வரலாற்றுக் கதை.
அ.ரெங்கசாமி
கம்பர் தமிழ்ப்பள்ளியில் படித்தது ‘ஆசிரியரானது, ஆசிரியர் வேலை, பள்ளி நிர்வாகம், மாணவர்களின்
நிலைமை’ என்று ஒவ்வொன்றாக சொல்கிறார். மலேயாவில் இருந்த சீனர்கள் கேம்ப், இந்தியர்களின்
கேம்ப் பற்றியும் விரிவாக சொல்கிறார். அதோடு அந்தக் காலத்தில் தமிழர்கள் சந்தித்த பசி,
பட்டினி, நிராசை, விரக்தி, பயம், துயரம், உயிர் பிழைத்திருக்க வேண்டியது மட்டுமே நோக்கமாக
இருந்தது, தமிழர்களிடம் காணப்பட்ட அறியாமை, அதனால் ஏற்பட்ட விளைவுகள், போட்டி, பொறாமை,
குரோதம், சூழ்ச்சி, தாயகம் சார்ந்த ஏக்கம், நினைவுகள், புலம்பெயர் வாழ்வு தந்த வலி,
மண் சார்ந்த அடையாளங்களை பண்பாட்டை, கலாச்சாரத்தை, மொழியை பின்பற்றியது என்று சமூக
நிகழ்வுகள் பலவற்றையும் சொல்கிறார். 1945-50 காலக்கட்டத்தில் மலேயாவில் ஏற்பட்ட உள்நாட்டு
கலவரம், மலேய கம்யூனிஸ்ட்டு பயங்கரவாதிகளுக்கும், வெள்ளைக்காரர்களுக்குமிடையே ஏற்பட்ட
மோதல் – இரண்டு பேருக்குமிடையே மாட்டிக்கொண்டு தமிழர்கள்பட்ட அவஸ்தைகள் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது.
மலேயாவிலிருந்து பர்மாவுக்கு ரயில் ரோடு போடுவதற்காக கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள்
– நோயால் அவதிப்பட்டது, ஜப்பானியர்களின் கொடுமைகளுக்கு ஆளானது, பல ஆயிரம்பேர் செத்துப்போனது
– என்பதையெல்லாம் நெஞ்சை அறுக்கும்விதமாக சொல்லியிருக்கிறார். ஐந்தாண்டு காலத்தில்
போட வேண்டிய ரயில் பாதையை இரண்டே ஆண்டில் ஜப்பானியர்கள் எப்படி போட்டார்கள்? சுபாஷ்
சந்திரபோஸிற்கு ஆதரவாக தமிழர்கள் மாறியது மட்டுமல்ல, அவர் உருவாக்கிய படையில் சேர்வதற்கான
சமூகக் காரணிகள், என்ன என்பதோடு, அப்போது இந்தியாவில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள்
என்ன, அந்த மாற்றங்கள் மலேசியாவில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் சொல்கிறார்.
அ.ரெங்கசாமிக்கு அரசியல் சார்ந்த ஈடுபாடும், பார்வையும், வரலாற்றை கூர்மையாக மட்டுமல்ல
ஆய்வுத் தன்மையோடு அணுகுகிற பக்குவமும் இருக்கிறது. இது அவருடைய எழுத்திற்கு ஒரு ஒழுங்கையும்,
நேர்த்தியையும், கட்டுக்கோப்பையும் தந்திருக்கிறது. பலதகவல்கள், சம்பவங்கள் நம்மை பிரமிப்பில்
ஆழ்த்துகின்றன.
ஒருமுறை
அ.ரெங்கசாமி தமிழகம் வருகிறார். பேண்ட், ஷர்ட், கோட்சூட் எல்லாம் அணிந்து வருகிறார்.
ஊரின் எல்லைக்குள் நுழையும்போது அவருடைய சகோதரர் “செருப்பை கழற்றிவிடு” என்று சொல்ல
“ஏன்?” என்று கேட்பதற்கு அவருடைய அண்ணன் “இங்கு இப்படித்தான். மேல் சாதிக்காரர்கள்
வசிக்கிற தெரு” என்று சொல்கிறார். அண்ணன் சொன்னபடியே அ.ரெங்கசாமி செய்கிறார். 1950ல்
தமிழகத்தில் வாழ்க்கைமுறை எப்படியிருந்தது, சாதி சார்ந்த மனோபாவமும் எப்படியிருந்தது
என்பதோடு அதே காலக்கட்டத்தில் மலேயாவில் தமிழர்களிடையே சாதி சார்ந்த மனநிலை என்னவாக
இருந்தது என்பதையும் எழுதியிருக்கிறார். அ.ரெங்கசாமிக்கு தூய தமிழ் என்ற செயல்பாட்டில்
அதிக ஆர்வம் இருப்பதையும் இந்நூலில் அறியமுடியும். தன்னுடைய குடும்பக் கதையை எழுதுகிற
அதே நேரத்தில் ‘காதல் மன்னன்’, ‘தண்ணீர் பீலிக்காரர்’ கதைகளையும் சேர்த்தே எழுதியிருக்கிறார்.
அதோடு அவர் கதை, நாவல் எழுதிய கதைகளையும் எழுதியிருக்கிறார்.
அ.ரெங்கசாமி
எழுதியிருப்பது அவருடைய கதையை அல்ல. மலேசியத் தமிழர்களின் கதையை. அ.ரெங்கசாமி எழுதியிருப்பதும்,
முத்தம்மாள் பழனிசாமி எழுதியிருப்பதும் நமக்கு வியப்பாக இருக்கலாம். உண்மைகள் எப்போதுமே
வியப்பிலாழ்த்தவே செய்யும். மலேசியாவில் வசிக்கும் இன்றைய தலைமுறை அறியாத கதை இது.
இன்றைய நவீன தகவல் தொழில்நுட்ப உலகில் நாம் எந்த அளவுக்கு புறவயமாகிவிட்டோம் என்பதை சொல்கிற கதை இது. நம்முடைய தலைமுறை ‘கூகுள்’ படிப்பாளிகள்.
‘கூகுள்’ அறிவாளிகள். முத்தம்மாளும் ரெங்கசாமியும் நிஜமாக வாழ்ந்தவர்கள். வாழ்ந்ததை
சொன்னவர்கள். மனித வாழ்வின் விழுமியங்கள் அனைத்தும் – அனுபவமாக இல்லாமல் வெறும் தகவல்களாக
மாறிவிட்ட இன்றைய சூழலில் முத்தம்மாளின், ரெங்கசாமியின் வாழ்வு ‘பெரிய பொக்கிஷம்’ என்பது
எப்படி நமக்கு தெரிய போகிறது? நீர்க் காகம் வேறு, நீர்ப் பறவை வேறு. நமக்குத் தெரிந்ததெல்லாம்
நீர்க் காககம்தான்.
எல்லாவற்றைப்
பற்றியும் எழுதவேண்டும். எவ்வளவு வெட்கத்திற்குரியதாக இருந்தாலும், எவ்வளவு வலி உடையதாக
இருந்தாலும் எழுத வேண்டும். எல்லாமே எழுதுவதற்கு தகுதி உடையவைதான். இந்நூலை அ.ரெங்கசாமி
என்ற தனிப்பட்ட மனிதருடைய தன் வரலாற்றுக் கதை என்று சொல்ல முடியாது. சமூகவியல், மானிடவியல்,
இனவரைவியல், ஆவணம் என்றுதான் சொல்ல வேண்டும்.
1.
நாடு தொலைத்தவனின் பயணக்குறிப்புகள் – அகிலன்
நடராஜா.
எழுநா
– காலாண்டிதழ்,
Ezhuna
Media Foundation,
No.4,
Kettering Road,
Isham,
Kettering,
NN141HQ,
United
Kingdom.
2.
நாடுவிட்டு நாடு – முத்தம்மாள் பழனிசாமி.
தமிழினி,
25
– A, தரைத்தளம்,
முதல்
பகுதி,
ஸ்பென்சர்
பிளாஸா,
769,
அண்ணாசாலை,
சென்னை
– 2.
3.
சிவகங்கையிலிருந்து சீ சங்சாங் வரை – அ.ரெங்கசாமி
வல்லினம்.
3, jalan 7/8,
Taman Sri gombak,
68100 batu caves,
Selangor,
Malaysia.
உயிர்மை
– ஏப்ரல் 2016