ஒரு கூர்வாளின் நிழலில் – தமிழினி.
விமர்சனம் – இமையம்.
ஒரு கூர்வாளின் நிழலில் – தமிழினியால் எழுதப்பட்ட
தன் வரலாற்றுக் கதை. இது தமிழினியினுடைய வாழ்க்கை வரலாறு என்பதைவிட பதினெட்டு ஆண்டு
கால விடுதலைப் புலிகளின் இயக்க வரலாறு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். தமிழினி
தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே மிகுந்த ஈடுபாட்டுடன் இயக்கத்தில் சேர்கிறார். முள்ளிவாய்க்கால்
போர் முடிந்த அன்று அவருடைய பதினெட்டு ஆண்டுகால இயக்க போராளி வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.
இந்த பதினெட்டு ஆண்டு கால இயக்க வாழ்வில் அவர் செய்த காரியங்கள், கண்டது, கேட்டது,
கற்றது, அனுபவித்தது, பேசியது, சக போராளிகளுடன் வாழ்ந்தது, தலைமையின் கட்டளையை ஏற்று
செயல்பட்டது, என்று ஒவ்வொரு விசயத்தையும் துல்லியமாகச் சொல்கிறார். போர் முடிவுக்கு
வந்துவிட்ட நிலையில், இயக்கத்தின் தலைமையால் தகவலின்றி கைவிடப்பட்ட நிலையில் ராணுவத்திடம்
சரண் அடைந்தது, ராணுவ விசாரிப்புகள், ஜெயில் வாழ்க்கை, ஜெயிலில் உள்ளவர்களின் நடத்தைகள்,
புனர்வாழ்வு மையத்தில் இருந்தது, இறுதியாக தன் தாயாரிடம் கையளிக்கப்பட்டதுவரை – எல்லாவற்றையும்
சொல்கிறார். ஒளிவுமறைவின்றி, மிகையின்றி, கூட்டிக் குறைத்து சொல்லாமல் வாழ்ந்த வாழ்க்கையை
அப்படியே தந்திருக்கிறார். உண்மை என்னவோ, நடந்தது என்னவோ, தனக்குத் தெரிந்த வரலாறு
என்னவோ அதை எழுதியிருக்கிறார். தன்னுடைய வலியை, காயத்தை, இழப்பை, கண்ணீரை தமிழினி எழுதவில்லை.
அப்படி எழுதியிருந்தால் இந்த தன் வரலாற்றுக்கதைக்கு எந்த மதிப்பும் இருந்திருக்காது.
இப்படி எழுதியிருக்கலாம், அப்படி எழுதியிருக்கலாம் என்று சொன்னால் அது என் அறிவீனம்.
வேகமாக சொன்னாலும், சாதாரணமாக சொன்னாலும் – உண்மை. உண்மையாக மட்டும் இருக்கும். வலியை,
காயத்தை, கண்ணீரை, கதறலை எப்படி அழகாக எழுத முடியும்?
இது ஒரு போராளியின் கதை. ஐநூறுபேர் கொண்ட படையணியை
வழிநடத்திய அரசியல் துறைப் பொறுப்பாளரின் கதை. பெருமதிமிக்க போராளியின் ஒப்புதல் வாக்குமூலம்.
தன்னிலை விளக்கம். உண்மையை எழுதியதால் தமிழினி குற்றவாளியாக்கப்படலாம். ஆனாலும் இது
ஒரு மகத்தான வரலாற்று ஆவணம். ஒரு சமூக வாழ்வின் இயங்கியலை, ஒரு போராட்ட வரலாற்றினை
இதுபோன்ற நூல்களின் வழியாகத்தான் அறியமுடியும். ஒரு சமூகத்தினுடைய வரலாறு என்பது இப்படியான
நூல்களின் வழியாகத்தான் உருவாகிறது.
தமிழினி பள்ளியில் படிக்கிற காலத்திலேயே விடுதலைப்
புலிகள் இயக்கத்தால் எப்படி கவரப்பட்டார், எப்படித் தானாகவே போய் வீட்டுக்குத் தெரியாமல்
இயக்கத்தில் சேர்ந்தார். அமைதிப் படையினரால் பள்ளிக்கு செல்லும் வழியில் எப்படி அவமானப்படுத்தப்பட்டார்,
சீண்டப்பட்டார், ஒவ்வொரு பள்ளியிலும் இயக்கம் சார்ந்த பேச்சாளர்கள் எப்படியெல்லாம்
பேசினார்கள் என்பதை வரிசைக் கிரமமாக சொல்கிறார். அமைதி ஒப்பந்தத்தை இரண்டு தரப்பினரும்
படிப்படியாக எப்படி மீறி செயல்பட்டார்கள். அதற்கான காரணம், சூழல் என்ன என்பதையும் சொல்கிறார்.
இயக்கம் நடத்தி வந்த ஈழமுரசு, முரசொலி பத்திரிக்கை அலுவலகங்களை இந்திய அமைதிப்படையினர்
எப்படி அடித்து நொறுக்கி நாசமாக்கினார்கள், பெண்களிடம் எப்படி நடந்துகொண்டனர்,
1987 கார்த்திகை மாதம் 10ம் தேதி அமைதிப் படைக்கு எதிராக இயக்கம் போர்த் தொடுக்க வேண்டிய
நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது? “அமைதியை ஏற்படுத்த முடியாவிட்டால் இந்திய அமைதிப்படை
வெளியேறட்டும்” என்று பிரேமதாச அறிவித்தார். இரு தரப்பும் வெறுக்கக்கூடிய நிலையை இந்திய
அமைதிப்படை ஏன் ஏற்படுத்திக்கொண்டது என்பதை வெறும் தகவலாக சொல்லாமல் அதற்கான சூழலையும்
சேர்த்தே சொல்கிறார்.
விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன்
முன் துப்பாக்கி ஏந்தி செல்லக்கூடிய அதிகாரம் பெற்ற மாத்தையா மீது, தலைமைக்கு எதிராக
செயல்பட்டார் என்று எப்படி பழி சுமத்தப்பட்டது, குற்றம் சுமத்தலுக்கு பிறகு மாத்தையா
என்ன ஆனார்? மாத்தையா மீது மட்டுமல்ல, சந்தேகத்திற்கிடமான பலர்மீதும் ஒரே குற்றச்சாட்டு
திரும்பத்திரும்ப எப்படி சுமத்தப்பட்டது, எதனால் சுமத்தப்பட்டது என்பதற்கான காரணங்களை
தமிழினி சொல்கிறார். “நாங்கள் அவமானப்பட்டு வாழவிரும்பவில்லை. சாவதற்கு தயாராக இருக்கிறோம்”
என்று அறிவித்த மாத்தையாவா தலைமைக்கு எதிராக சதிசெய்தார், தலைமை இடத்திற்கு வரவிரும்பினார்?
மாத்தையா தலைமைக்கு எதிராக செயல்பட்டார் என்று சொன்னபோது எத்தனை போராளிகள் அதை நம்பினார்கள்?
கடைசிவரை தமிழ்ச்செல்வன் தலைமைக்கு கட்டுப்பட்டவராக, விசுவாசமிக்கவராக எப்படி இருந்தார்
என்பதையும், கருணா இயக்கத்தைவிட்டு வெளியேறுவதாக அறிவித்தபோது போராளிகளிடையே ஏற்பட்ட
மனநிலை என்ன என்பதையும் தமிழினி எழுதியிருக்கிறார். தமிழினி தன்னுடைய கருத்துக்களை
மட்டும் எழுதவில்லை. மாத்தையா விசயத்தில், கருணா விசயத்தில் மற்ற போராளிகள் என்ன நினைத்தார்கள்,
என்ன சொன்னார்கள் என்பதையும் எழுதியிருக்கிறார். அதே மாதிரி பிரபாகரனின் மூத்த மகன்
சார்லஸ் ஆண்டனி, அவர் தலைமையில் இயங்கிய ‘கணினிப் பிரிவு’ கட்டாய ஆள் சேர்ப்பு பணியில்
ஈடுபட்டது, அவருடைய அதிரடியான முடிவுகளால் போராளிகளுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு என்ன
என்பதையும் எழுதியிருக்கிறார். இயக்கத்தின் இன்னொரு முகத்தை, உண்மையான முகத்தை மக்கள்
காண நேர்ந்த சந்தர்ப்பம் எது என்பதையும் ஆதாரங்களோடு சொல்கிறார்.
இயக்கத்தில் தமிழினியும் இருக்கிறார். அவருடைய
தங்கையும் இருக்கிறார். ஆனால் ஒருவருக்கொருவர் பேசவோ, பழகவோ முடியாது. யார் எந்த பிரிவில்,
எந்த இடத்தில், என்ன வேலை செய்கிறார் என்பதுகூட தெரிந்துகொள்ள முடியாத நிலை. தெரிந்துகொள்ளக்கூடாது
என்பதுதான் இயக்கத்தின் விதி முறை. தன்னுடைய இயக்க வாழ்க்கையில் ஒரு முறைகூட தமிழினி
தலைமையின் ஆணையை மீறவில்லை. மீற வேண்டும் என்று நினைத்ததுமில்லை. அந்த அளவுக்கு அவருடைய
மனமும், உடலும் இயக்கத்தோடு ஒன்றிப்போயிருந்திருக்கிறது. ‘ஆப்ரேசன், லிபரேசன்’ என்ற
முழக்கத்தோடு இலங்கை ராணுவம் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன, அதனால் ஏற்பட்ட விளைவுகள்
என்னென்ன என்பதையும் சொல்கிறார். மகிந்த ராஜபக்ஷே வந்தால் போர் ஒரு முடிவுக்கு வரும்.
அதனால் அவர் ஜெயிக்க வேண்டும். அதனால் அவருக்கு ஓட்டுப்போட்டு ஆதரியுங்கள் என்று தமிழ்
மக்களிடத்தில் அறிவிக்கச் சொன்னதே பிரபாகரன்தான். அப்போது அந்த முடிவை அவர் எடுக்காமல்
இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? தெரியாது. தனக்கான முடிவையும், உலகமே வியந்த,
தான் கட்டி எழுப்பிய மாபெரும் இயக்கத்தின் முடிவையும், ஒரு முடிவுக்கு கொண்டுவர விரும்பியே
ராஜபக்ஷேவை ஆதரிக்கச் சொன்னாரா? அந்த முடிவு வரலாற்றுப் பெருமிதமா?
வரலாற்றுப் பிழையா? பிரபாகரன் எடுத்த முடிவுகளில் எத்தனை சரியானது, எத்தனை பிழையானது?
“அண்ணை ஒரு முடிவு எடுப்பார்” என்று நம்பியிருந்த போராளிகளுக்கும், “தலைவர் ஒரு முடிவு
எடுப்பார்” என்று நம்பியிருந்த தமிழ் மக்களுக்கும் – பிரபாகரன் கடைசியாக செய்தது என்ன?
முள்ளிவாய்க்காலில் போரின்போது உயிர்பிழைப்பதற்கு சிறு வழியுமின்றி புலிகளின் கட்டுப்பாட்டையும்
மீறி ராணுவத்திடம் சரணடையச் சென்ற மக்களின் கால்களுக்குக் கீழே சுட்டுத் தடுத்து நிறுத்தச்
சொன்னது யார்? புலிகளின் உடையை மாற்றிவிட்டு, மக்களோடு மக்களாக ராணுவத்திடம் சரணடை
என்று மாற்றுத் துணிகளைக் கொடுத்து புலிகளை மக்கள் கூட்டத்தில் இழுத்துச் சென்று காப்பாற்றிய
தாய்மார்களின் அன்பு எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை தமிழினி நடந்த சம்பவங்களின் வழியாக
விவரிக்கிறார்.
இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பெரியபெரிய
அதிர்ச்சிகள் வாசகர்களுக்கு காத்திருக்கிறது. இயக்கத்தை நம்பி, நாட்டுக்காக என்று போனவர்களை
எப்படி, ஏன் இயக்கமே சுட்டுக் கொன்றது? சிறுசிறு தவறுகளையும், சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்த
சிறுசிறு பிழைகளையும் மன்னிக்கத் தெரியாத, மன்னிப்பதற்கு பெருந்தன்மையற்ற, இறுக்கம்
நிறைந்ததாக தலைமை இருந்தது ஏன்? வஞ்சகப்பொறியினுள் மாட்டியவர்கள், மாட்டி விடப்பட்டவர்கள்,
காணாமல் போனவர்கள், சுட்டுக்கொல்லப்பட்டவர்கள்,, சகோதர யுத்தம் எதனால் நடந்தது, அதனால்
மக்கள் மத்தியில் ஏற்பட்ட வெறுப்பு எவ்வளவு, குடும்ப வறுமையாலும், சூழலாலும் இயக்கத்திலிருந்து
வெளியேறியவர்கள், படிப்படியாக இயக்கத்தில் ஆளணி குறைந்து கொண்டே வந்ததற்கான காரணங்கள்,
கட்டாயப்படுத்தி சிறுவர் சிறுமியர்களை இயக்கத்தில் சேர்க்க நேர்ந்ததின் விளைவு, சிறு
அளவில் பயிற்சிகூட பெறாதவர்கள் துப்பாக்கியை ஏந்த நேரிட்டதின் விளைவு என்ன என்பதை ஒவ்வொன்றாக
சொல்கிறார். மாபெரும் சக்தியாக, எழுச்சியாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் எப்படிப்
படிப்படியாக சீரழிந்தது, சீரழிவிற்குத் தள்ளப்பட்டது என்ற வரலாற்றை, உண்மைகளைப் பேசுகிறது
இந்த நூல்.
புலிகளின் வீழ்ச்சிக்கும், முள்ளிவாய்க்காலில்
ஏற்பட்ட தோல்விக்கும் காரணம் இதுதான். இது மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. முக்கியமான
காரணம் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் சர்வதேச கடல் எல்லையில் அடுத்தடுத்து மூழ்கடிக்கப்பட்டது.
குறைந்தப்பட்சம் மூன்று நான்கு கப்பல்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கி அழிக்கப்பட்டது.
புலிகளின் ஆயுதங்கள்பற்றி வெளியில் பேசப்பட்ட அளவுக்கு கடைசிக் காலத்தில் இயக்கத்திற்குள்
போதிய ஆயுதங்களும் இல்லை. படையணிகளும் இல்லை.
தமிழினி சாட்சியமளித்திருக்கிறார். ஆயுதப்பயிற்சிபெற்று
நாட்டுக்காக போரிடவந்த போராளிகளுக்கிடையே இருந்த சாதிய மனோபாவம், மதம் சார்ந்த மூடநம்பிக்கைகள்
எப்படி இருந்தது என்பதைச் சொல்கிற தமிழினி தன்னுடைய வீட்டில் சாதி சார்ந்த பார்வை என்னவாக
இருந்தது என்பதையும் சொல்கிறார். குறிப்பாக யாழ்ப்பாணம்போன்ற பகுதிகளில் சைவ, சாதிய
மனோபாவம் எப்படி இருந்தது என்பதையும் சொல்கிறார். தன்னுடைய அம்மம்மா வீட்டிற்கு வேலை
செய்ய வரும் வேலையாளுக்கு சொம்பில் தண்ணீர் தரமாட்டார். மீறி தந்தால் அந்த சொம்பை அப்படியே
தோட்டத்தில் தூக்கி எறிந்து விடுவார் என்று நிஜத்தை எழுதியிருக்கிறார். இந்த உண்மைதான்
இந்நூலில் சொல்லப்பட்ட அத்தனையையும் நம்ப வைக்கிறது.
1984களிலிருந்து ஈழத்திலிருந்து வந்த சிறுகதை, கவிதை,
கட்டுரை என்று பலவற்றைப் படித்திருக்கிறேன். அவையெல்லாம் இயக்கம் குறித்து, அதற்குள்ளிருந்த
முரண்பாடுகள் குறித்து, போர், அதனால் ஏற்பட்ட அழிவுகள், உயிர் பலிகள், அலைக்கழிப்பு
என்று பலவற்றை சொன்னாலும் அவையெல்லாம் புனைவாகி முழு உண்மையைக் காட்ட முடியாத நிலைதான்
இருந்தது. ஆனால் தமிழினியின் தன்வரலாற்றுக்கதை இயக்கத்திற்கு வெளியே, போர் நடந்த இடத்திற்கு
வெளியேயிருந்து யூகமாக, அனுமானமாக எழுதாமல் உள்ளேயிருந்து எழுதப்பட்டிருக்கிறது. அதுதான்
இந்நூலின் பலம். நாம் அறிந்திராத கேள்விப்பட்டிராத ஆச்சரியப்பட வைக்கும் நூற்றுக்கணக்கான
சம்பவங்கள் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது. 1970களில் புஷ்பராணி எழுதிய ‘அகாலம்’, கோவிந்தன்
எழுதிய ‘புதியதோர் உலகம்’, புஷ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ போன்ற
நூல்கள் விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்த வரலாற்றை புரிந்துகொள்வதற்கு உதவியதுபோன்றே
தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ என்ற தன்வரலாற்றுக் கதை நூலும் உதவுகிறது.
ஆயுதம் ஏந்துவதே விடுதலைக்கான வழி என்று சொல்வதும்
அரசியல்தான். ஆயுதம் ஏந்திய பிறகு, ஒருவரை பயங்கரவாதி என்று சொல்வதும் அரசியல்தான்.
யுத்தத்தில், போர்க்களத்தில் கருணைக்கு இடமுண்டா? யுத்தத்தில் இறந்துபோகாமல் உயிருடன்
திரும்பிவந்த ஒரே காரணத்திற்காக தான் சந்திக்க நேர்ந்த அவமானங்கள் எவ்வளவு என்பதையும்
சொல்கிறார். உயிரோடு இல்லாததால் ஒருவர் தியாகியாகிறார். உயிரோடு திரும்பிவந்ததால் ஒருவர்
காட்டிக்கொடுத்தவராகவும், துரோகியாகவும் சித்தரிக்கப்படுகிறார். எந்த சமூகத்திற்காக
போராடினார்களோ, அந்த சமூகம்தானே இன்று போராளிகளை ஒதுக்கி வைத்திருக்கிறது. பழி சுமத்தியிருக்கிறது.
“தமிழர்களுடைய தோலில் செருப்புத் தைத்துப்
போடுவேன்” என்று சொல்லிசொல்லியே ஓட்டு வாங்கி ஜெயித்தவர்கள், ‘சிங்களனயா, மோடையா’ என்று
கிண்டலடித்தே ஓட்டு வாங்க முயற்சித்தவர்கள் பற்றியும், இனத் துவேச நெருப்பை ஓயாமல்
கக்கிக்கொண்டேயிருந்தவர்கள் யார் என்பதையும், இனத் துவேச நெருப்பு கடைசியாக எப்படி
எல்லாவற்றையும் எரித்து சாம்பலாக்கியது, லட்சக்கணக்கானவர்களை நாடற்றவர்களாக்கியது.
என்பதையும் தமிழினி சொல்கிறார். இரண்டே இனம், இரண்டே மொழி – இணைந்து வாழ முடியாமல்போனது
எதனால்? இந்நூலைப் படிப்பவர்கள் விவரிக்கப்பட்ட விசயங்களைப் படித்து ரசிக்க முடியாது.
அழத்தான் முடியும். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஓட்டுப்பெட்டியை
நிரப்புவதற்காக மட்டுமே ஈழப் பிரச்சனையை கையிலெடுத்தார்கள் என்பதையும் போகிற போக்கில்
சொல்லவில்லை. ஆதாரங்களோடு சொல்கிறார். இன்றும் அந்த இழிச்செயல் தமிழ்நாட்டில் நடந்துகொண்டுதான்
இருக்கிறது.
2006 ஜுலை 21ம் தேதி திருகோணமலை பகுதியின்
தளபதியாக இருந்த சொர்ணத்தின் உத்தரவினால் மாவிலாறு மதகு மூடப்பட்டது. இதனால் பதினைந்தாயிரத்துக்கும்
மேற்பட்ட சிங்கள விவசாயிகளின் வாழ்வு பறிபோனது. சிங்கள ராணுவத்தை சீண்டுவதற்காகவும்,
புலிகளின் பலத்தைக் காட்டவுமே மாவிலாற்று மதகு மூடப்பட்டது. இறுதி யுத்தத்திற்கு மாவிலாற்று
பிரச்சனைதான் முதன்மை காரணமாக அமைந்தது. புலிகள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. ஆகஸ்ட்
15 – 2006ல் மூண்ட போரில் மாவிலாறு முழுமையாக ராணுவத்திடம் பறிகொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து
பல பகுதிகள் ராணுவத்தின் வசமானது. சொர்ணத்தின் அதீத நம்பிக்கையால், முரட்டுப் பிடிவாதத்தால்
ஏற்பட்ட இழப்பு இது.
கேணல் சங்கரால் உருவாக்கப்பட்ட
புலிகளின் ‘வான் படை’ 2008ல் போரில் தீரத்துடன் போராடி உயிர்நீத்த ஈழப்பிரியன், கடற்புலி
ஸ்ரீராம், கடற்புலி, பூரணி, சோதியாவை ராணுவத்திடம் சரணடையச் சொல்லிவிட்டு தற்கொலை செய்துகொண்ட
அவருடைய கணவர், மேஜர் சுமங்கலா, விதுஷா, பிரிகேடியர் பால்ராஜ், தாமரை, சாம்பவி, பொட்டம்மான்
என்று பலருடைய கதைகளையும் எழுதியிருக்கிறார். தமிழினி வெறும் மனித பெயர்களை மட்டும்
எழுதவில்லை. அந்த பெயர்களுக்குரிய மனிதர்கள் இயக்கத்திற்காக செய்தத் தியாகங்கள், அர்ப்பணிப்புகள்,
எல்லாவற்றுக்கும் மேலாக அந்த மனிதர்கள் கொண்டிருந்த நம்பிக்கையும், அதற்காக அவர்கள்
செய்த அர்ப்பணிப்புகளையும் படிக்கும்போது கண்ணீரின்றி யாருடைய கதையையும் படிக்க முடியாது.
முப்பதாண்டுகளுக்கு மேலாக லட்சக்கணக்கானோர் செய்த அர்ப்பணிப்பும், தியாகமும் கடைசியில்
கடலில் கரைக்கப்பட்ட உப்பாக எப்படி மாறிப் போனது என்று தமிழினி கேட்கிறார். இங்கே குறிப்பிடப்பட்ட
மனிதர்கள் போன்று பல பேர்களுடைய கதைகளை தமிழினி எழுதியிருக்கிறார். சொல்லிச்சொல்லி
தீராத, எழுதிஎழுதி மாளாத, அழுதுஅழுது தீர்க்க முடியாத பெரும் துயரத்தினைத்தான் எழுதியிருக்கிறார்.
அந்தத் துயரப் பெருங்கடலில் சிறுதுளிதான் இந்த நூல்.
வட பகுதியிலிருந்து முஸ்லீம் மக்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள்?
ஏனைய இயக்கப் போராளிகள் ஏன் புலிகளால் கொல்லப்பட்டார்கள்? நாவற்குலம் பாலத்தை கடந்து
ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் மக்கள் ஏன் வெளியேறினார்கள்? ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச்
சேர்ந்த ‘உஷா’ எப்படி புலிகளின் மாவீரர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்? ஆண்டன் பாலசிங்கம்
மனக் கசப்புடன் கிளிநொச்சியைவிட்டு கடைசியாக வெளியேறியது ஏன்? தமிழ்ச்செல்வனுக்கு பிறகு
மேற்கு உலகுடனான உறவுகளைத் தொடர முடியாமல் போனதற்கு எது காரணம்? நார்வே அரசு எடுத்த
சமாதான முயற்சிகள் படிப்படியாக நீர்த்துப்போனதற்கு எது காரணம்? ஜெனிவாவில் நடக்கவிருந்த
பேச்சுவார்த்தை தள்ளிப்போனது ஏன்? இப்படி பல கேள்விகள் இந்த நூலில் இருக்கிறது. சிலவற்றிற்குப்
பதில்களை தமிழினியே தந்துள்ளார். சில கேள்விகள் காலத்தின்முன் வைக்கப்பட்டுள்ளது. ஈழத்தில்
நடந்த எல்லா நிகழ்வுகளுக்கும் பிரபாகரன் மட்டும்தான் பொறுப்பா? மற்ற போராளிகள் பொறுப்பில்லையா?
ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு, விடுதலைப் புலிகளின் இயக்க வீழ்ச்சிக்கு நேரடியாகவோ,
மறைமுகமாகவோ தமிழினியும் பொறுப்பாளிதான் என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும்.
பிரபாகரன் பெண்புலிகளை மரியாதையாகவும், கௌரவமாகவும்
ஒரு தந்தையின் ஸ்தானத்திலிருந்து அன்பாகவுமே நடத்தினார். இந்த ஒரு விசயத்தில் இயக்கம்
கருங்கல், கோட்டையாகவே திகழ்ந்திருக்கிறது. இயக்கம் ‘சீதனத்தை’ தடைசெய்தது, போராளிகளுக்கிடையே
திருமணத்தை நடத்தி வைத்தது, குழந்தைகளை விரைவாக உற்பத்தி செய்ய வைத்தது, திருமணத்தின்போது
பெண்களுக்கு புலிகளின் சின்னத்தையே தாலியாக அணிவித்தது, புலிகள் நடத்திய ஈழநாதம், விடுதலைப்
புலிகள் பத்திரிக்கை, புலிகளின் குரல் ‘வானொலி பற்றியும், அது அறிவித்த செய்திகள்பற்றியும்
போதுமான அளவுக்கு சொல்லப்பட்டுள்ளது. உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்க, போராளிகள் உலகத்தோடு
எந்தத்தொடர்பும் இல்லாமல், மாற்று உடை இல்லாமல், அடுத்த வேளை உணவில்லாமல், அடர்ந்த
காட்டினிடையே குடும்பத்தோடு, உறவோடு சிறு தொடர்பும் அற்று எந்த நம்பிக்கையில் போராடினார்கள்,
அவர்களுடைய போராட்டத்திற்கு, தியாகத்திற்கு, நம்பிக்கைக்கு கிடைத்த பரிசு என்ன? முப்பதாண்டுகளுக்கு
மேலாக போராடிபோராடி, பலிகொடுத்து பலிகொடுத்து வளர்த்தெடுத்த மாபெரும் கனவு – எப்படி
கருகி தீய்ந்து போயிற்று என்பதை, கண்ணெதிரிலேயே காண நேர்ந்த அவலத்தையும், அதற்கு சாட்சியுமான
அவலத்தையும் கண்ணீரின் வழியே தமிழினி சொல்கிறார். அந்த கனவு மெய்ப்பட வேண்டும் என்று
ஆசைப்பட்ட கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்.
இந்நூலை
மீண்டும் என்னால் படிக்க முடியாது. அதற்கான மனவலிமை என்னிடமில்லை. தமிழினி இறந்துவிட்டார்.
ஆனால் அவருடைய எழுத்துக்கு மரணமிலாப் பெருவாழ்வு.
தி
இந்து (தமிழ்) – 02.04.16
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக