திங்கள், 4 ஏப்ரல், 2016

ஆறஞ்சு (சிறுகதைத் தொகுப்பு) – அழகுநிலா. விமர்சனம் – இமையம்.



       ஆறஞ்சு சிறுகதைத் தொகுப்பில் பதினான்கு கதைகள் இருக்கின்றன. பதினான்கு கதைகளும் தொடர்ந்து படிக்கும்படியாக இருக்கின்றன. ஒரு கதைகூட அயர்ச்சியை ஏற்படுத்தவில்லை. எதை சொல்ல வருகிறாரோ அதை நேரிடையாகவும், சட்டென்றும், துல்லியமாகவும் சொல்வது அழகுநிலாவின் எழுத்தாக இருக்கிறது. இந்தக் கதைகளில் கண்ணீர் இல்லை. புலம்பல்கள் இல்லை. ஒரே விதமான கதை சொல்லல் முறையும் இல்லை. இதுதான் இந்தக் கதையின் பலம். உலகம் என்றால், மனிதர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள், புனிதர்களாக இருக்க மாட்டார்கள் என்பதை போகிற போக்கில் சொல்கிறார் அழகுநிலா. வலிந்து சொல்வது, மிகைப்படுத்துவது என்பது இக்கதைகளில் இல்லை.
       இறந்து போனவர்களுக்கு பிரச்சினைகள் என்று எதுவும் இருப்பதில்லை. உயிரோடு இருப்பவர்களுக்குத்தான் எல்லாச் சிக்கல்களும். தமிழ்நாட்டில் இறந்துவிட்ட தந்தையின் உடலைப் பார்க்க வரமுடியாமல் தடுப்பது, அவன் சிங்கப்பூருக்கு வருவதற்காக பட்டகடன். தாயைவிட தந்தையைவிட உலகில் பெரியது – பணம் என்பதை ஒரு மரணத்தின் வழியே சொல்கிறது ‘பச்சை பெல்ட்’ கதை. பணம்தான் மனித உறவுகளை சிதைக்கின்றன என்றால் அது முழு உண்மையாகாது. புரிந்துகொள்ளாமைதான். புரிந்துகொள்ளாததாலும், அனுசரித்து போகாததாலும் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்பதை ‘சிதறல்கள்’ கதையில் பார்க்க முடியும். காதலித்து திருமணம் செய்துகொண்டவர்களின் நிலைக்கும், பெற்றோர் நிச்சயித்து திருமணம் செய்துகொண்டவர்களின் நிலைக்கும் பெரிய மாறுபாட்டை உணர முடியாது. மனித மனம் எப்போதுமே பலகீனமானதுதான். ‘சுடோக்கு’ கதை மாற்றுத் திறனாளிகள் மீதான கரிசனையை பேசவில்லை. மாறாக அவர்களுடைய மனத்திடம், உறுதி பற்றி பேசப்படுகிறது. செய்தியாக அல்ல. தகவலாக அல்ல. கதையாக. படிப்பு என்பதை, கல்வி என்பதை நாம் எப்படி புரிந்துகொண்டிருக்கிறோம்?  உண்மையான கல்வி என்பது என்ன, பெற்றோர்களின் பேராசை எப்படிப்பட்டதாக இருக்கிறது, படிப்பு என்ற பெயரில் குழந்தைகள் நாள்தோறும் அனுபவிக்கும் தண்டனை என்ன என்பதை ‘ஆறஞ்சு’ கதையைப் படித்தால் புரியும்.
       இருபத்தியோராம் நூற்றாண்டின் வாழ்க்கையில் நாம் எதையெல்லாம் பெற்றிருக்கிறோம், எதையெல்லாம் இழந்திருக்கிறோம், இழந்ததின் பெருமையை, வலியை எப்போதாவது உணர்ந்திருக்கிறோமா என்ற கேள்வியை ‘வேர்க்கொடி’ கதை கேட்கிறது. நவீன வாழ்வு, முன்னேற்றம், வளர்ச்சி, நாகரீகம் என்ற பெயரில் நாம் தொலைத்தது நம்முடைய பாரம்பரிய அறிவை.  நேற்று என்பதை முற்றாக நிராகரித்துவிட்டு. இன்று என்பது இருக்க முடியாது. பணமும், பதவியும், அந்தஸ்தும் வரும்போது எப்படியோ நாம் நம்மிடமிருக்கும் மனிதத் தன்மையை இழந்துவிடுகிறோம். எளிய மனிதர்களை அவமானப்படுத்துவதிலா, சிறுமைப்படுத்துவதிலா, பணமும், பதவியும் பெருமை அடைய முடியும் என்பதை கதாசிரியர் ‘உறவு மயக்கம்’ கதையில் அழகாக நிகழ்த்திக் காட்டுகிறார். அதே மாதிரி அன்பாக இருப்பதற்கு, சக மனிதனோடு உறவாக இருப்பதற்கு மொழியோ, நிறமோ, இனப் பாகுபாடோ தடையாக இருப்பதில்லை என்று ‘தோன்றா துணை’ கதையின் வழியே சொல்கிறார். மனிதர்களை மனிதர்களாக இருக்கவிடாமல் தடுப்பது எது? சாதியா, மதமா, இனமா, நிறமா, மொழியா, பண்பாடா, கலாச்சாரமா? இவைகள்தான் காரணம் என்றால் இவைகளை புறக்கணிப்பதைத் தவிர வேறு வழி என்ன இருக்க முடியும்? சமூக இழிவுகளுக்கு எதிராக எழுதப்படுவதுதான் இலக்கியம் என்றால் அழுகுநிலா எழுதியிருப்பதும் இலக்கியம்தான்.
       நவீன வாழ்க்கை, தொழில் நுட்பம், பணம் தந்த பரிசு – ‘அவசரம்’. ‘பங்பங்’ சிங்கப்பூர் வாழ்வினை சொல்கிறது. அதனுடைய அவசர கதியை, இயந்திரத்தனத்தை சொல்கிறது. மனிதர்களிடத்து இன்று பணம், பங்களா, கார் எல்லாம் இருக்கிறது. ஆனால் நிம்மதி மட்டும் இல்லை. அதை இன்றைய வாழ்வில் பெற முடியுமா என்பதுதான் கதையின் மையம். நிம்மதியாக வாழ்வதற்கான எல்லா வழிகளையும் பணம் என்ற கடவுள் அடைத்துவிட்டார். ‘அலையும் முதல் சுடர்’ மகாபாரதக் கதையில் தர்மனுடைய புதிய முகத்தை, உண்மையானமுகத்தை காட்ட முயல்கிறது. அதிகாரம் சார்ந்த வேட்கை எல்லா மனிதர்களிடத்தும், உயிர்களிடத்தும் இயல்பாக இருப்பது. நீதி போதனைக்காக இயற்கை குணத்தை மாற்ற முயல்வது அறமாகாது. மிகவும் கச்சிதத் தன்மையுடன் எழுதப்பட்ட கதை இது. ‘புதுமலர்கள்’ தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற இரண்டு கீழ்நிலையிலுள்ள ஊழியர்களுடைய அன்பை சொல்லும் கதை. இன்றைய வாழ்வைப்போலவே இன்றைய அன்பும் போலியானவைதான். அவசரமானதுதான்.
       இன்றைய நவீன வாழ்க்கை எத்தனையோ விநோதங்களை கொண்டது என்பதற்கு ‘பொழுதின் தனிமை’ கதை நல்ல உதாரணம். முகநூலில் நண்பர்கள் குறைவாக இருப்பதற்காக, தான் போடுகிற ஸ்டேட்டஸிற்கு குறைவான லைக்குகள் வருகிறது என்பதற்காக வருத்தப்படுவது சிறுவனல்ல, இளைஞனல்ல, கிழவி. நாளெல்லாம் முகநூலில் உட்கார்ந்திருப்பதே கிழவிக்கு வேலையாக இருக்கிறது. இது கற்பனையான கதை என்று சொல்ல முடியாது. மனிதர்கள் எப்போதும் கெட்டவர்களாக இருப்பதில்லை. நீர் மாதிரி மனித மனம் ஓடிக்கொண்டே இருக்கும். மனிதர்கள் கருங்கல் அல்ல. மாறக்கூடியவர்கள், அதுவும் அடிக்கடி மாறக்கூடியவர்கள் என்பதைத்தான் ‘ஒற்றைக்கண்’ கதை சொல்கிறது. இன்றைய வாழ்க்கையில் படிப்பு, பதவி, தகுதி, பணம் பெரிய விசயமல்ல. கணவனுக்கும், மனைவிக்குமான ஈகோதான் பிரச்சனை. சாதியைவிட, மதத்தைவிட மனிதர்களை அதிகம் விலக்கி வைப்பது ஈகோதான். கணவனுக்கும், மனைவிக்குமான ஈகோவால் ஒரு குடும்பம் எப்படி சிதைந்துபோகிறது என்பதுதான் ‘அவள், அவன், அவர்கள்’ என்ற கதை. ‘பெயர்த்தி’ கதை. – ஒரு தமிழ் பெண்ணுக்கும் சீன ஆணுக்கும் பிறந்த ‘லீ’ என்ற இளைஞனின் நிறம் சார்ந்த, இனம் சார்ந்த, நாடு சார்ந்த, மொழி சார்ந்த வேறுபாடு எப்படி ஒரு தாயை சித்ரவதை செய்கிறது என்பதுதான்.
       ‘ஆறஞ்சு’ தொகுப்பிலுள்ள எந்தக் கதையிலும் தேவைக்கதிகமான விவரணைகள், விபரங்கள் இல்லை. எந்த கதைக்கு எது தேவையோ, எந்த அளவுக்குத் தேவையோ அது மட்டுமே, அந்த அளவுக்கு மட்டுமே இருப்பது கதைகளுக்கு சிறப்பை சேர்க்கிறது. அழுகு நிலா நல்ல கதைச் சொல்லி என்பதற்கு கதைகளுக்குள் நிறைய அடையாளங்கள் இருக்கின்றன. தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளுமே ஏதோ ஒரு விதத்தில் நீதி போதனையை சொல்பவைதான். வாசகனுடைய யூகத்திற்கு, சிந்தனைக்கு வாய்ப்புத் தராமல், தானே எல்லாவற்றையும் கூடுதல் வெளிச்சம் தந்து சொல்லிவிடுகிறார் கதாசிரியர். ஒன்றிரண்டு கதைகளைவிட பிற கதைகளில் காலம் குறித்த பதிவுகள் இல்லை. கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களின் பெயர்களும்,  இடங்களின் பெயர்களும் – வெறும் பெயர்களாக மட்டுமே இருக்கிறது. மனிதர்கள் வெறும் பெயர்களாக மட்டுமே சுருங்கிப்போய் இருப்பதில்லை. இடங்களும் அப்படியே. இப்படி கதைகளுக்குள் சிறுசிறு குறைகள் இருக்கின்றன. அதற்காக இக்கதைகளை நிராகரிக்க முடியாது. தரமற்றவை என்று சொல்ல முடியாது. நீண்ட காலமாக எழுதிகொண்டிருக்கிற எழுத்தாளர்களின் எழுத்துக்களில் காணப்படும் குறைகளைவிட அழகுநிலாவிடம் குறைந்தே காணப்படுகின்றன. இது நல்ல அறிகுறி. அழகு நிலா நல்ல கதை சொல்லியாக மலர்வார் என்பதற்கு இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் சாட்சி தருகின்றன.


Malaigal.com April 2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக