ஆஃபர்
– இமையம்
தொலைக்காட்சியைப் பார்த்துகொண்டிருந்த சேகரிடம் “எங்க ஸ்கூல்ல நேத்து
ஒரு சின்ன
பிரச்சன
நடந்துபோச்சி”
என்று
சொல்லிக்கொண்டே வந்து
தரையில்
உட்கார்ந்தாள் கோமதி,
“எச்.எம்-முக்கும் உனக்குமா?”
“சீச்சீ அந்தாளு ஒரு மண்ணாந்த. ஸ்கூல்ல என்னா நடக்குதின்னே அந்தாளுக்கு தெரியாது. வருவான். தூங்குவான். சாயங்காலம் வீட்டுக்குப் போவான். அதுக்குத்தான் அறுபதாயிரம் சம்பளம்.”
“பசங்கள அடிச்சிட்டியா? ரத்தக் காயம் ஆயிடிச்சா?”
“என்னெ பேசவிடுங்க. இல்லாட்டி டீ.வியப் பாருங்க. குறுக்ககுறுக்க பேசிக்கிட்டு” கோமதி முறைத்தாள். அப்போதும் தொலைக்காட்சியிலிருந்து பார்வையைத் திருப்பாமலேயே “நீ எப்பியும் ஊரு ஒலகமெல்லாம் சுத்திட்டு வந்துதான் கதெய சொல்லுவ. ஒரு நாளும் நேராவே விசியத்துக்கு வர மாட்ட” என்று சொல்லிவிட்டு லேசாக சிரித்தான் சேகர். அப்போதும் அவனுடைய மனமும் கண்களும் தொலைக்காட்சியில்தான்
இருந்தது.
“ஒங்க அளவுக்கு நான் புத்திசாலி இல்லெ” என்று கிண்டலாகச் சொல்லி சலித்துக்கொண்ட
கோமதி
“நேத்து
பன்னண்டு
மணிக்கு
அஞ்சாங்கிளாஸ் பையன்
ஒருத்தன் வந்தான். அவன்கூடவே அவனோட அம்மாவும் வந்தாங்க. 'யாண்டா இவ்வளவு லேட்டு'ன்னு கேட்டன்.
'காலயில
எங்க
ஊட்டுல
சோறு
ஆக்கல.
அதான்
லேட்டு'ன்னு
சொன்னதும்,
நான்
அந்தப்
பொம்பளக்கிட்ட 'என்னம்மா ஆச்சி'ன்னு கேட்டதுக்கு
'கொஞ்சம் ஒடம்பு சரியில்லீங்க'ன்னு சொன்னாங்க.
ஒடனே
அந்தப்
பையன்' பொய் டீச்சர். எங்கப்பாவுக்கும் எங்கம்மாவுக்கும் சண்ட. அதான் சோறு ஆக்கல'ன்னு சொன்னான். நான் அந்த பொம்பளயோட முகத்தப் பாத்தன். முகமெல்லாம் வீங்கிப்போயி இருந்துச்சி. ஆள பாக்கவே முடியல. 'என்னம்மா ஆச்சி'ன்னு கேட்டதுமே அந்த பொம்பள கண்ணுல தண்ணி வந்துடுச்சி. அழுதுகிட்டே 'காலயிலியே தண்ணியக் குடிச்சிட்டு வந்துச்சி. எதுக்கு காலயிலியே தண்ணியப் போட்டன்னு கேட்டதுதான். சண்டயாயிடிச்சி'ன்னு சொல்லிட்டு அழுதாங்க. மனசுக்கு கஷ்டமாப் போயிடிச்சி.”
ஆச்சரியப்பட்ட
மாதிரி சேகர் கேட்டான். “ஒனக்கா?”
“சும்மா இருங்க. சின்ன வயசுலியே புள்ளைங்க எவ்வளவு கருத்தா இருக்கு. பாருங்க” என்று சொன்ன கோமதி குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்த படுக்கை அறையைத்
திரும்பிப்பார்த்தாள்.
பிறகு
சேகர்
பக்கம்
திரும்பி
“காலயிலியே
எப்பிடி
பிராந்தி கெடச்சிதுன்னு கேட்டதுக்கு,
‘ஊருக்குஊரு குடிக்கிற தண்ணி எடுக்கிற கெணறு இருக்கோ இல்லியோ பிராந்தி கட மட்டும் இல்லாம இருக்காது’ன்னு
சொன்னதும்
‘இந்த ரவ ஊர்லியா இருக்கு’ன்னு நான் கேட்டதுக்கு ‘இருக்கு, இருக்கு இல்லாம என்னா’ன்னு அந்த பொம்பள
சொன்னதும்
எனக்கு
ஆச்சரியமாப்
போச்சி.
காலயிலியேவா
குடிப்பாங்க?”
என்று
ஆச்சரியமாகக்
கேட்டாள்
கோமதி.
சேகர்
பதில்
எதுவும்
சொல்லாமல்
தொலைக்காட்சியைப் பார்த்தவாறே
இருந்தான்.
“அந்த ஊர்ல யாரோ செத்துட்டாங்களாம். அதனாலதான் அந்த பையனோட அப்பன் குடிச்சிருக்கான். எழவு விழுந்த வீட்டுல எப்பிடிதான் குடிக்கிறாங்களோ” என்று ஆச்சரியமாக சொன்னாள் கோமதி. சிரித்துக்கொண்டே சேகர் சொன்னான்.
“எல்லா ஊர்லயும் நடக்கிறதுதான். எங்க ஊருல யாரு செத்தாலும் முதல்ல எழவு சொல்ல ஆளுவிட மாட்டாங்க. பிராந்தி கடைக்குத்தான் ஆள்விடுவாங்க. சாவு செய்தி தெரிஞ்சதும் ஊரு ஆளுங்க எல்லாம் ஒன்னா வந்து நின்னுக்கிட்டு
‘முதல்ல சரக்குக்கு ஆளுவிடு. அப்பறம்தான் மத்ததெல்லாம்’ன்னு சொல்வாங்க. சரக்கு வந்தாதான் மத்த வேலை நடக்கும். பொணம் சுடுகாட்டுக்குப்போவும்.”
சேகர் சந்தோசமாக சிரித்தான்.
“செத்த ஊட்டுல எப்பிடிதான் குடிக்கிறாங்களோ” கோமதி சலித்துக்கொண்டாள்.
“அதெல்லாம் ஒனக்கு புரியாது. அது ஒரு ஜாலி. ஆனா இப்பிடி எல்லா சாதியிலயும் நடக்காது” என்று சொல்லிவிட்டு தொலைக்காட்சியைப்
பார்த்த
சேகர்.
திடீரென்று
நினைவுக்கு
வந்த மாதிரி
“அப்பறம்
அந்த
பொம்பள
என்னா
சொன்னா?”
என்று
கேட்டான்.
“ஒங்க அப்பா அம்மாவுக்குத்தான சண்ட? ஒனக்கென்ன? நீ ஸ்கூலுக்கு வரவேண்டியதுதான?ன்னு கேட்டதுக்கு “எங்கப்பா எங்கம்மாவ அடிக்கிறப்ப நான் மறிச்சா வுட்டுடுவாரு டீச்சர். அப்பறம் எங்கம்மா சண்டயில சுருக்கு மாட்டி செத்திடக் கூடாதுன்னு இன்னமுட்டும் ஊட்டுல காவ இருந்தன் டீச்சர்”ன்னு அவன் சொன்னதும் எனக்கு பாவமா போயிடிச்சி. அந்த பொம்பள, அந்த பையன கட்டிப்புடிச்சிக்கிட்டு கிளாஸ் ரூம்ன்னுகூட பாக்காம ‘என்
சாமிடா நீ’ன்னு சொல்லி அழுவுது.
மனசுக்கு
கஷ்டமா
இருந்துச்சு.”
கோமதியின் குரலில் அவ்வளவு இரக்கம் இருந்தது.
“இது பரவாயில்ல. போனவாரம் எங்க ஸ்கூல்ல எட்டாவது படிக்கிற பையன் ஒருத்தன் மொட்ட போட்டுக்கிட்டு
வந்தான்.
என்னடா
மொட்டயெல்லாம்,
திருப்பதிக்குப் போனீயான்னு கேட்டன்,
‘எங்கம்மா
மருந்தக்
குடிச்சிட்டு
செத்துப்போயிடிச்சி சார்’ன்னு
சொன்னதக்
கேட்டதுமே
சங்கடமாப்போச்சி.
அந்த
பையன
பாக்குறப்பலாம் கஷ்டமா
இருக்கும்”
என்று
சொல்லிக்கொண்டிருக்கும்போது காலிங்
பெல்
அடிக்கிற
சத்தம்
கேட்டது.
“இந்த நேரத்தில யாரா இருக்கும்?” கோமதி கேட்டாள்.
“தெரியல” என்று சொல்லிவிட்டு சேகர் தொலைக்காட்சியைப் பார்த்தான்.
“அந்த விளம்பரம், இந்த விளம்பரமின்னு நோட்டீசக் கொடுக்கிறதுக்கு எந்தச்சனியனாவது பெல்ல அடிக்குங்க. போயிப் பாருங்க. நான் போயி பசங்களுக்குப் பருப்பு நெய் சாதத்த ரெடி பண்றன். அப்பறமா எழுப்பி ஊட்டிடலாம்” என்று சொல்லிவிட்டு கோமதி எழுந்து சமையல் கட்டுப்பக்கம் போனாள். சேகர் எழுந்து வந்து வாசல் கதவைத் திறந்தான். ஒரு இளம்பெண் நின்றுகொண்டிருந்தாள்.
ஆளைப்
பார்த்ததுமே
சேகருக்கு
என்ன
கேட்பது
என்று
தெரியவில்லை.
“திருப்பதிக்கு, மேல்மருவத்தூருக்கு, பழனிக்குப்போறன் காணிக்க கொடுங்க” என்று கேட்க வந்த பெண் மாதிரி இல்லை, “கல்யாணம் நடக்கல, மாங்கல்ய பிச்சப்போடுங்க”
என்று
கேட்டுக்கொண்டு ஒரு
இளம்பெண்ணும்,
ஒரு
கிழவியும்
வருவார்கள்.
அந்த
மாதிரி
வந்த
பெண் மாதிரியும் இல்லை.
வாய்
ஊமை. காது செவிடு. உதவி செய்யுங்கள் என்று ஒரு அட்டையில் அச்சடித்துகொண்டு
உதவி
கேட்டு
வரும் பெண் மாதிரியும் தெரியவில்லை. “பைபிள் கிளாஸ் எடுக்கிறம். உங்களுக்காக ஜெபிக்கிறம்’ என்று சொல்லிக்கொண்டு பைபிளுடன் வரும் பெண்கள் மாதிரியும் தெரியவில்லை. கையில் பைபிள் இல்லை. பெரிய ஃபைல் இருந்தது. முகவரி கேட்பாளோ என்ற சந்தேகத்தில் “என்ன வேணும்?”
என்று
கேட்டான்.
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் சார்” அந்த பெண் சொன்னாள்.
“எங்கிட்டியா? என்ன விசயம்?” ஆச்சரியப்பட்டான் சேகர்.
“ஒரு நிமிசம் உட்காந்து பேசலாமா சார்?”
“பைபிள் கிளாஸா?”
“இல்ல சார்.”
“பின்னெ?” என்று கேட்ட சேகர் வீட்டுப் பக்கம் திரும்பிப்பார்த்து கோமதி என்று கூப்பிட்டான். சாதாரணமாக அவன்
பெண்களைப்
பார்த்தாலே
ஆயிரம்
கேள்வி
கேட்பாள்.
பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தால்
அவ்வளவுதான்.
ரணகளமாகிவிடும்
“கோமதி”
என்று மீண்டும் கூப்பிட்டான்.
“யாரா இருந்தாலும் ஒண்ணும் வாண்டாம்ன்னு சொல்லி அனுப்பிடுங்க” உள்ளே இருந்தபடியே கோமதி கத்தினாள். அந்த பெண்ணைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்போல இருந்தது. ஆனால் கோமதி முறைப்பாள் என்பதால் “என்ன வேணும்?”
குரலை உயர்த்திக் கேட்டான்.
“ஒரு நிமிசம் சார்” அந்த பெண் கையில் வைத்திருந்த ஃபைலைத் திறக்கப்போனாள்.
“வேல இருக்கு. விசயத்த சொல்லுங்க.”
“ஒரு நிமிசம் சார். ப்ளீஸ்”
சேகருக்கு என்ன
செய்வதென்று
தெரியவில்லை.
அதனால்
“கோமதி”
என்று
மீண்டும்
கூப்பிட்டான்.
பிறகு
அந்த
பெண்ணைப்
பார்த்தான்.
முகத்திலிருந்து வழிந்த
வியர்வை
கழுத்தில்
இறங்கிக்கொண்டிருந்தது.
வெயிலில்
களைத்துப்போய் இருந்தாள்.
பார்ப்பதற்கு
அழகாக
இருந்தாள்.
இளமையாக
இருந்தாள்.
அதனாலேயே
அவளிடம்
பேசுவதற்கு
அவனுக்குத்
தயக்கமாக
இருந்தது.
முனகுவது
மாதிரி
“நிழல்ல
வந்து
நில்லுங்க”
என்று
சொன்னான்.
தான்
சொன்னது
கோமதிக்கு
தெரிந்துவிடப்போகிறது என்ற
கவலையில்
மீண்டும்
“கோமதி”
என்று
கூப்பிட்டான்.
அப்போது கேட்டைத்தாண்டி வந்து
நின்றாள்
அந்த
பெண்.
“எதா இருந்தாலும் முடியாதின்னு சொல்ல வேண்டியதுதான? என்னெ எதுக்கு கூப்புடுறிங்க?” என்று கேட்டுக்கொண்டே கோமதி வாசலுக்குள் வந்தாள். வந்த வேகத்திலேயே “துணிக்கட விளம்பரமா?” என்று கேட்டாள். அதிகாரமாக. அலட்சியமாக.
“இல்லெ மேடம்” அந்த பெண் பணிவாக சொன்னாள்.
“நகக் கடயா?”
“இல்லெ.”
“மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷினா? எக்ஸேஞ்ச் ஆஃபரா?”
“இல்லெ.”
“டிக்னரி, புக் விக்கிறீங்களா?”
“அதெல்லாம் இல்லெ மேடம்.”
“வாஷிங் பவுடர், சோப்பா?”
அந்த பெண்
பேசாமல்
இருந்தாள்.
கோமதி
கேள்விகளை
நிறுத்தவில்லை.
“பழய பொடவ வாங்குறவங்களா?”
“இல்ல மேடம்.”
“பைபிள் கிளாஸ் எடுக்கிறவங்களா?”
“கொஞ்சம் பேசாம இரு. முதல்ல விசயத்தக் கேளு” என்று சேகர் சொன்னதும் கோமதிக்கு கோபம் வந்துவிட்டது.
“மூலம் பவுத்தரம், அற்புத சுகமளிக்கும் கூட்ட அழைப்புன்னு தினம்தினம் வந்து உசுர எடுக்குறாங்க. அது உங்களுக்குத் தெரியுமா?” கோமதியின் குரலில் வேகம் கூடிவிட்டது.
“நான் ஞானாலயா மெட்ரிக் ஸ்கூல்லயிருந்து வரன் மேடம். உங்க பிள்ளைங்கள ஸ்கூல்ல சேக்குறதப் பத்தி
கொஞ்சம்
பேசணும்.”
“அப்பிடியா ஆச்சரியமா இருக்கே, என்ன விசயம்?” கோமதியினுடைய குரலில் குழைவு ஏற்பட்டிருந்தது.
“உங்களுக்கு ரெண்டு குழந்தைங்க இருக்குல்ல மேடம். டுவின்ஸ். அவங்கள ஸ்கூல்ல சேத்திட்டிங்களா?”
“இல்ல.”
“எங்க ஸ்கூல்ல சேக்குறிங்களா?”
“ரெண்டர வயசுதான் ஆவுது. அதுக்குள்ளார எப்பிடி சேக்க முடியும்? சரி. எங்க குழந்தைங்க
டுவின்ஸ்னு எப்பிடி தெரியும்?”
“விசாரிச்சோம். யார்யார் வீட்டுல குழந்தைங்க இருக்குன்னு
நகராட்சியில லிஸ்ட் வாங்கிட்டோம். ரெண்டர வயசா இருந்தாலும் ப்ரி.கே.ஜியில அட்மிஷன் போடலாம் மேடம்.”
“அதுக்கே இன்னம் மூணு மாசம் இருக்கே.”
“சரஸ்வதி பூஜ அன்னிக்கி அட்மிஷன் போட்டுடலாம். அப்ப பிரச்சன வராது. ரெண்டு புள்ளைங்கள அட்மிஷன் போட்டா ஒரு பிள்ளைக்கி ஃபீஸ் கன்செஷன் உண்டு.”
“அப்பிடியா?” கோமதி சிரித்தாள். சேகர் அந்த பெண்ணைப் பார்ப்பதைத்தவிர வேறு வேலை செய்யவில்லை.
“விருத்தாசலத்திலியே எங்க ஸ்கூல்தான் டாப் மேடம்.”
“தெரியும். அட்மிஷனுக்காக வீடு தேடி வந்ததுதான் ஆச்சரியம்.”
“பத்தாவதுலயும் பிளஸ்டூவிலயும் மாவட்டத்திலேயே எங்க ஸ்கூல்தான் பஸ்ட் ரேங்க்.” அந்த பெண் உற்சாகமாக சொன்னாள்.
“பேப்பர்ல பார்த்தன். லோக்கல் டி.வி. விளம்பரத்தில பாத்தன். நீயூஸ் பேப்பர்ல வச்சிருந்த நோட்டீசிலயும், அப்பறம் தெருவுக்கு தெரு வச்சியிருந்த டிஜிட்டல் பேனர்லயும் பாத்தன். உங்க ஸ்கூல பாத்தா ஐ.டி.கம்பெனி மாதிரி இருக்கும்” என்று சொன்ன சேகர் அந்த பெண்ணை கவனமாகப் பார்த்தான். மறுநொடியே அவசரமாக
கோமதியைப்
பார்த்தான்.
“சினிமாவுக்கு விளம்பரம் செய்யுற மாதிரிதான் இப்ப ஸ்கூல் விளம்பரமும் இருக்கு” அவன்
சொன்னதை கோமதிகூட காதில் வாங்கிக்கொண்ட மாதிரி தெரியவில்லை.
“எல்லா கிளாஸ் ருமுமே ஏ.சி.தான் சார்” அந்த பெண் சிரித்தாள்.
அவளுடைய சிரிப்பு
அழகாக
இருந்த மாதிரி சேகருக்குத்
தோன்றியது.
“பிளஸ் -ஒண்ணுல ஒரு அட்மிஷன் போட்டா ப்ரி.கே.ஜி சீட்டு ஒண்ணு ஃபிரி சார்.”
“ஆச்சரியமா இருக்கே. பீஸே கெடையாதா?” கோமதி வியப்புடன் கேட்டாள்.
“இல்லெ மேடம். அதே மாதிரி ஞானாலயா ரியல் எஸ்டேட்டுல ஒரு பிளாட் வாங்கினாலும் ஒரு ப்ரி.கே.ஜி சீட் ஃபிரி மேடம்”
“ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம்ங்கிற மாதிரியா?” என்று கேட்டு சேகர் சிரித்தான். அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் தான் சொல்ல நினைத்ததை வரிசையாக அந்த பெண் சொல்ல ஆரம்பித்தாள்.
“ஸ்கூல்ல சேத்திட்டு பீஸ் கட்ட பணமில்லன்னா கவலப்பட வேண்டியதில்ல சார். ஞானாலயா பைனான்ஸில லோன் வாங்கிக்கலாம். அதோட ஞானாலயா சிட்பண்ட்ஸில சீட்டும் சேந்துக்கலாம். ஞானாலயா ஜவுளிக்கடைக்குப் போனா ஸ்டுடண்ட்டோட ஐ.டி.கார்ட காட்டினா டென் பர்சண்ட் டிஸ்கவுண்ட் தருவாங்க. அதே மாதிரி ஞானாலயா நக கடக்கிப் போனா ஒன் பர்சண்ட் லெஸ் பண்ணுவாங்க சார்.”
"பெரிய ஆச்சரியமா இருக்கே. ஞானாலயா ஸ்கூல்லியா இந்த மாதிரியெல்லாம் செய்றாங்க" கோமதியின் குரலில் அவ்வளவு வியப்பு நிறைந்திருந்தது.
"ஏப்ரல் மேவிலியே அட்மிஷன் போடுறவங்களுக்கு ஒரு குலுக்கல் சீட்டு தருவோம். கார், பைக், வாஷிங் மிஷின்,
கோல்டுகாயின்னு பல பரிசு உண்டு மேடம்."
"நல்ல ஆஃபர்" என்று சேகர் சொன்னான்.
அந்த பெண் பேசவில்லை. கர்ச்சீப்பால் வியர்வையைத் துடைத்துக்கொண்டாள்.
"குலுக்கல்ல பரிசு விழுமா?" ஆர்வமாகக்கேட்டாள்
கோமதி.
"கட்டாயம் விழும் மேடம்." அவளுடைய குரலில் அவ்வளவு
உறுதி இருந்தது.
"கார் என்னெ கம்பனி? என்னா வெல இருக்கும்?" என்று
கோமதி கேட்டதும் - இதுதான் சந்தர்ப்பம் என்பது மாதிரி அந்த பெண் ஃபைலில் வைத்திருந்த
ஒரு விளம்பர நோட்டீஸை எடுத்துக்கொடுத்தாள். நோட்டீஸை வாங்கிப் பார்த்த கோமதி
"இவ்வளவு பரிசா?" என்று ஆச்சரியமாகக் கேட்டாள். லேசாக சிரித்தாள்.
"ஆமாம்" என்பது மாதிரி அந்த பெண் தலையை மட்டும்
ஆட்டினாள்.
"ஒரு பிளாட் வாங்கினா ஒரு பிரி.கே.ஜி.சீட் ஃபிரின்னு
சொன்னிங்களே, பிளாட் எங்க இருக்கு?"
"ஸ்கூலுக்குப் பின்னாலியே ஞானாலாயா நகர்ன்னு போட்டு
இருக்காங்க மேடம்."
"நல்ல எடமாச்சே. வெல என்னா இருக்கும்?" ஆர்வமாகக்
கேட்டாள் கோமதி.
"தெரியல மேடம். காண்டாக்ட் நெம்பர் இருக்கு. காண்டாக்ட்
பண்ணிப்பாருங்க." என்று சொன்னதோடு ஃபைலிலிருந்து ஞானாலயா ரியல் எஸ்டேட் விளம்பர
நோட்டீஸ் ஒன்றை எடுத்துக் கொடுத்தாள்.
நோட்டீஸை வாங்கிப் பார்த்த கோமதி "அந்த எடத்தில் எடம்
வாங்கி வீடு கட்டினா ஈஸியா பசங்கள ஸ்கூலுக்கு அனுப்பிடலாம். டென்சன் இருக்காது. பிளஸ்டூ
வரைக்கும் ஒரே ஸ்கூல்ல படிச்சிடுங்க" என்று சேகரிடம் சொன்னாள். அவள் சொன்னதை சரியாகக்
காதில் வாங்காமல் அவன் அந்த பெண்ணைப் பார்ப்பதிலேயே ஆர்வமாக இருந்தான்.
"இந்த வருசத்திலிருந்து ஸ்கூல்லியே ஸ்நாக்ஸ், வெஜிடபிள்
சூப், ஃப்ரூட் ஜுஸ், வாட்டர், லஞ்ச் எல்லாம் கொடுக்கிறம். தமிழ்நாட்டிலியே எங்க ஸ்கூல்லதான்
இந்த சிஸ்டத்த ஆரம்பிச்சி இருக்கோம். இதுக்கு பேரண்ட்சுகிட்டயும், பப்ளிக்கிலயும் நல்ல
ரெஸ்பான்ஸ் இருக்கு. அதனாலியே அட்மிஷன்ஸ் கூடியிருக்கு" என்று சொல்லிவிட்டு ஃபைலிலிருந்து
ஒரு அட்டையை எடுத்துக்கொடுத்தாள். அதில் பள்ளிக்கூடத்தில் பதினோரு மணிக்கு என்னென்ன
ஸ்நாக்ஸ் வழங்கப்படுகிறது. சூப், ஜுஸ், மதியம் என்னென்ன லஞ்ச் வழங்கப்படுகிறது, மாலையில்
என்னென்ன ஸ்நாக்ஸ் வழங்கப்படுகிறது என்ற பட்டியல் இருந்தது. பல சூப்கள், ஜுஸ்களின்
பெயர்களும், ஸ்நாக்ஸ்களின் பெயர்களும் புதிதாக இருந்தன. அந்த அட்டை ஸ்டார் ஹோட்டலில்
வைக்கப்படும் மெனு லிஸ்ட் மாதிரி இருந்தது. உயர்ந்த தரத்திலும் அச்சிடப்பட்டிருந்தது.
சூப், ஜுஸ், ஸ்நாக்ஸ் மதிய உணவுப் பட்டியலைப் படித்துவிட்டு சேகரும், கோமதியும் அசந்துவிட்டனர்.
அதை நம்புவதற்கு அவர்களுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் ஞானாலாயா என்ற பள்ளியின் பெயர்
அவர்களை நம்ப வைத்தது.
"நல்ல விஷயமா இருக்கு, புது விசயமாகவும் இருக்கு. இந்த
மாதிரி ஒவ்வொரு ஸ்கூல்லயும் செஞ்சிட்டா பேரண்ட்சுக்கு பாதிவேல கொறஞ்சிடும். டென்சனும்
போயிடும்" கோமதி மகிழ்ச்சி பொங்க சிரித்தாள். சேகரும் சிரித்தான்.
"பேரண்ட்சுக்கு எதுக்கு வீண் சிரமம்ன்னு நாங்களே எல்லாத்தயும்
பாத்துக்கிறம் மேடம். இந்த விசயம் நல்லா ரீச் ஆயிருக்கு மேடம்." அந்தபெண் சிரித்தாள்.
"குழந்தய மட்டும் நாங்க பெத்தா போதும். பணத்த மட்டும்
நாங்க கட்டுனா போதும். மத்ததெல்லாம் நீங்களே பாத்துக்குவிங்க" சேகர் சிரித்தான்.
அந்த பெண் சிரிக்கவில்லை. தலையைக் கவிழ்த்துக்கொண்டாள்.
"சும்மா இருங்க. எந்த நேரத்தில என்னா பேசுறதின்னு இல்லாம.
அதிர்ஷ்டம் தானா வந்திருக்குன்னு தெரியாம, நீங்கப்போயி ஞானாலயாவுல சீட்டு வாங்கிடுவிங்களா?
அவனவன் எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரிகிட்டப் போயி நிக்குறான். அதுக்கே சீட்டு கிடைக்க
மாட்டங்குது" சேகரைத் திட்டுவது மாதிரி கோமதி சொன்னாள்.
"ஃபீஸ் எவ்வளவு?" என்று சேகர் கேட்டான். அதற்காகவே
காத்திருந்த மாதிரி அந்தபெண். ஃபைலிலிருந்து ஒரு அட்டையை எடுத்துக் கொடுத்தாள். மளிகைக்கடை
பட்டியல் மாதிரி இருந்தது. உடை, நோட்புக்ஸ், அட்மிஷன் ஃபீஸ், வேன் ஃபீஸ் என்று ஒரு
பக்கம் முழுவதும் அச்சிடப்பட்டிருந்தது. பட்டியலைப் படித்த சேகர் ஆச்சரியத்துடன் ‘‘ப்ரி.கே.ஜி.க்கு
ஒரு லட்சமா?” என்று கேட்டான்.
"ஆமாம்" என்பது மாதிரி அந்தபெண் தலையை மட்டும்
ஆட்டினாள்.
"பிரி.கே.ஜி., எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு எதுக்கு, யோகா,
ஸ்மார்ட் கிளாஸ், நீச்சல், கராத்தே, கம்யூட்டர் பயிற்சி எல்லாம். எல்லாத்துக்கும் பீஸ்
போட்டிருக்கு?"
"இந்த காலத்துப் பிள்ளைங்களுக்கு இதெல்லாம் மஸ்ட்டு
சார். இண்டர்நேஷனல் லெவலுக்கு கோச்சிங் இருக்கும் சார்."
"ப்ரி.கே.ஜி., எல்.கே.ஜி., குழந்தைகளுக்கு சரியா நடக்கவே
முடியாது. அதுங்களுக்கு கராத்தே, நீச்சல், கம்யூட்டர், ஸ்மார்ட் கிளாஸ், யோகாங்கிறதெல்லாம்
ஆச்சரியமா இருக்கு. டூர் பீஸ்ன்னு வேற போட்டிருக்கு?" சேகரின் குரலில் கடுமை ஏறியிருந்தது.
"டூர் உண்டு சார். கம்பல்ஸரி."
கோமதிக்கு கோபம் வந்துவிட்டது. "சும்மா இருங்க. ஞானாலயா
ஸ்கூல்ல அட்மிஷன் கெடைக்கிறதே பெருசு. நெறயா ஆஃபர் வேற தந்திருக்காங்க. ஸ்கூல் கேம்பஸ்ல
தமிழ்ல பேசுனா ஃபைன் போட்டுடுவாங்க தெரியுமா?" என்று மகிழ்ச்சியான குரலில் சொன்னாள்.
“எதுக்கு ஆஃபர் தர்றதுன்னு ஒரு கணக்கு வாண்டாமா? ஃபீஸ் ரொம்ப
அதிகமா இருக்கு.” சேகர் சொன்னதை கோமதி காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
கோமதியினுடைய பேச்சு அந்த பெண்ணுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது
மாதிரி இருந்தது. "நிறையா எக்ஸ்ட்ரா ஆக்ட்டிவிட்டியெல்லாம் இருக்கு மேடம். இதெ
பாருங்க" என்று சொல்லிவிட்டு ஃபைலிலிருந்து
ஒரு நோட்டீஸை எடுத்துக் கொடுத்தாள். அந்த நோட்டீஸ் நகைக்கடை, துணிக்கடை விளம்பரம் செய்ய
மல்டி கலரில் அச்சடித்த காகிதம் மாதிரி இருந்தது.
"டான்ஸ் உண்டு, மியுசிக் உண்டு, கல்ச்சரல் புரோகிராம்
உண்டு, அப்பறம் லிட்ரரி புரோகிராம்ஸ் உண்டு. அப்பறம் ஒவ்வொரு வருசமும் ஆண்டு விழாவுக்கு
சினிமா ஸ்டார்ஸ் வருவாங்க. ஃபங்ஷன் கிராண்டா நடக்கும்." அந்த பெண் சிரித்தாள்.
"தெரியும். போன வருசம் ஸ்ரீயா வந்தாங்கில்ல. நாங்க வந்து
பாத்தம். நல்லா இருந்துச்சி புரோகிராம். ஸ்ரீயாவ எனக்கு ரொம்பப் புடிக்கும். அழகா இருப்பாங்க."
கோமதி சிரித்தாள்.
"ஆர்,டி,ஓ, சாரோட பசங்க, டி.எஸ்.பியோட பசங்க, டி.யூ.ஓ
சாரோட பசங்க எல்லாம் எங்க ஸ்கூல்லதான் படிக்கிறாங்க. கடலூர்லயும், பாண்டியிலயும் எங்க
ஸ்கூலோட பிரான்ஞ் இருக்கு மேடம்."
"ஊரிலியே ஒங்க ஸ்கூல்தான் பெருசு. ஊருல இருக்கிற அதிகாரிங்களோட
பசங்க எல்லாம் உங்க ஸ்கூல்லதான் படிக்குது." சேகர் சொன்னான்.
"மெடிக்கல் கட்ஆப், இஞ்சினியரிங் கட்ஆஃப்ல எங்க ஸ்கூல்
பசங்கதான் அதிகம் வாங்கியிருக்காங்க. ஒவ்வொரு வருசமும் மாவட்டத்திலேயே அதிக ரேங்க்
வாங்குற ஸ்கூல். டென்த்லியும், பிளஸ்டூவிலயும் ஆல் பாஸ் மட்டுமல்ல, எல்லாருமே எபவ்
நைண்டி திரி பர்சண்டுக்குமேலதான் மேடம்." பெருமையாக சொன்னாள் அந்த பெண்.
"தெரியும். டாப் ரேங்க் ஸ்கூல்தான். ஒங்க ஸ்கூல்ல அட்மிஷனுக்காக
மந்திரிவர போவாங்க. இந்த வருசம் என்ன நீங்களே வந்திருக்கிங்க? ஆஃபர் வேற தரிங்க. அதிசயமா
இருக்கே. புள்ளைங்க பிடிக்கவர்ற ஆளு மாதிரி வந்து இருக்கிங்க?" சிரித்துக்கொண்டே
சேகர் சொன்னான். அந்த பெண்ணினுடைய முகம் மாறிவிட்டது.
"இந்த வருசம் புதுசா சி.பி.எஸ்.இ ஸ்கூல் மூணு நம்ப ஊருக்கு
வந்துடுச்சி. எல்லா பேரண்ட்சும் இப்ப சி.பி.எஸ்.இயத்தான் விரும்புறாங்க. புதுசா வந்திருக்கிற
ஸ்கூல்ல முதல்முறயா புதுபுது ஆஃபர் தராங்க, வீடுவீடா போயி அட்மிஷன் போடுறாங்க. அதனால
எங்க ஸ்கூல் அட்மிஷன் பாதிச்சிடுமோன்னு நெனைக்கிறோம். எத்தன ஸ்கூல் வந்தாலும் எங்க
ஸ்கூல் ஸ்டாண்டர்டு வராது. அதோட டார்கெட்ட ரீச் பண்ணுங்கன்னு எங்க கரஸ் சொல்லிட்டாரு."
நிதானமாகச் சொன்னாள் அந்தப்பெண்.
"டார்கெட்டா?" ஆச்சரியத்துடன் கேட்டான் சேகர்.
"ஆமாம் சார். ப்ரி.கே.ஜி.யிலிருந்து பிளஸ் டூ வர எல்லா
கிளாசிலயும் ஐநூறு பசங்க இருக்கணும். முன்னால எங்ககிட்ட மெட்ரிக் மட்டும்தான் இருந்துச்சி.
இந்த வருசம் சி.பி.எஸ்.இயும் ஆரம்பிச்சி இருக்கோம். அதனாலதான் ஸ்பாட் அட்மிஷன் போடுறம்."சந்தோஷமாக
சொன்னாள் அந்த பெண்.
"நாங்க எங்க பசங்கள சேத்தா சி.பி.எஸ்.இலதான் சேப்போம்.
சி.பி.எஸ்.இ.லப் படிக்கிறதுதான் நல்லது." பெருமையாக சொன்னாள் கோமதி.
"அட்மிஷன் போட்டுறலாமா மேடம்?" உற்சாகமாகக் கேட்டாள்
அந்தப்பெண்.
"இங்கியேவா?"
"ஆமாம் மேடம்."
"பீஸ எங்க கட்டுறது?"
"எங்கிட்டயும் கட்டலாம். ஸ்கூல்ல வந்தும் கட்டலாம்.
இப்ப எங்கிட்ட கட்டினா அட்வான்ஸ் குலுக்கல் சீட்டு, ஜவுளிக்கட, நகக்கட, பிளாட் கூப்பன்
எல்லாத்தயும் இங்கியே கொடுத்திடுவன். நீங்க வீணா அலைய வேண்டியதில்ல. என்னிக்கி ஸ்கூலுக்கு
வரணும்ங்கிறத நாங்க போன்ல, ஈமெயில்ல, எஸ்.எம்.எஸ்.லே சொல்லிடுவோம். வேன் வீட்டுக்கு
வந்துடும். எல்லா ரூட்லயும் எங்க ஸ்கூல் வேன் நாப்பது கிலோமீட்டர் தூரம்வர்ற போகுது.
நீங்க பிள்ளைங்கள அனுப்பினா மட்டும்போதும்." மனப்பாடம் செய்து வைத்திருந்ததை ஒப்பிப்பது மாதிரி அந்த பெண்
சொன்னாள். அவளுடைய முகத்தில் வியர்வை அடங்கியிருந்தது. முகத்தில் மலர்ச்சி கூடியிருந்தது.
"மூணுமாசம் கொறயுதே. வயசு பிரச்சன வராதா?" குழப்பத்துடன்
கேட்டாள் கோமதி.
"அதெல்லாம் வராது மேடம். சரஸ்வதி பூஜ அன்னிக்கி அட்மிஷன்
போட்டதா கணக்குல காட்டிடுவோம்.."
"இப்ப எவ்வளவு பணம் கட்டணும்?"
"இருக்கிறத கட்டலாம். மீதிய ஆபிசிலப்போய் கட்டிடலாம்."
அந்த பெண் சிரித்தாள்.
"அவசரப்படாத" என்று சேகர் சொன்னான்.
"சும்மா இருங்க, வீட்டுலியே வேல முடியுது."
"நீங்க ஸ்கூல்ல என்னாவா இருக்கிங்க?" என்று சேகர்
கேட்டதுமே கழுத்தில் மாட்டியிருந்த அடையாள அட்டையைத் தூக்கிக்காட்டி "டீச்சர்"
என்று சொன்னாள்.
"பேரு?"
"புஷ்பா."
“சம்பளம்?”
“ஆறாயிரம் சார்”
“சோப்பு விளம்பரம் மாதிரி இப்ப டீச்சர்ஸ் ஸ்கூல் விளம்பரம்
செய்றாங்க” சேகர் சிரித்தான்.
"உள்ளாரவாங்க" என்று கோமதி சொன்னாள்.
"எதுக்கு அவசரப்படுற? காலயில சரஸ்வதி வித்யாலயாவிலிருந்தும்,
விருதை இண்டர்நேஷனல் ஸ்கூல்லயிருந்தும் வந்தாங்கள்ள. பீஸ் எதுல கம்மின்னு பாத்து சேத்திடலாம்"
என்று சேகர் சொன்னதை காதில் வாங்கும் மனநிலையில் கோமதி இல்லை. ஒரே வார்த்தையாக சொன்னாள்.
"ஞானாலயா ஸ்கூலப்பத்தி ஒங்களுக்கு ஒண்ணும் தெரியாது. ஞானாலயாவுல படிக்கிறதே பெரும
தெரியுமா?"
தெருவில்போன இரண்டு பெண்கள் புஷ்பாவைப் பார்த்துவிட்டு
"என்னாச்சி இன்னும் முடியலியா?" என்று கேட்டுக்கொண்டே வந்தார்கள். அவர்கள்
புஷ்பா அணிந்திருந்த உடைமாதிரியே அணிந்திருந்தார்கள். லேசாக சிரித்துக்கொண்டே "இவங்க
மஜிதா பர்வீன். லதா. எங்கூட வேல செய்யுறாங்க. அடுத்தத் தெருவுல ஒரு குழந்த இருந்துச்சி.
அத அட்மிஷன் கேக்கறதுக்கு போனாங்க" என்று சொன்னாள்.
"போட்டாச்சா?" என்று சந்தேகத்துடன் கோமதி பர்வீனிடம்
கேட்டாள்.
"போட்டாச்சு ஃபுல் பேமண்டும் கட்டிட்டாங்க" மஜிதா
பர்வீன் சிரித்தாள்.
"உள்ள வாங்க. ஏப்ரல் மாச வெயில் கொல்லுது" என்று கோமதி சொன்னாள்.
"அவசரப்படாத. நல்ல நேரமா இல்லியான்னு பாக்க வேண்டாமா?"
என்று கேட்டான். பிறகு மஜிதா பர்வீனை பார்த்தான்.
“அடுத்தத் தெருவுல ஒரு பிள்ளை இருக்காம். பாத்திட்டு வரன்’’
என்று சொல்லிவிட்டு லதா நடக்க ஆரம்பித்தாள்.
“சரி” என்பது போல் புஷ்பாவும், மஜிதா பர்வினும் தலையை ஆட்டினார்கள்.
“ஒரு லட்சம் கட்ட முடியுமா?” என்று சேகர் கேட்டதற்கு அலட்சியமாக
கோமதி சொன்னாள் “நம்ப ரெண்டு பேருக்கும் மாசத்துக்கு ஒரு லட்சத்துக்கு மேல சம்பளம்
வருதில்ல. அப்பறம் என்ன? இவ்வளவு சம்பளம் வாங்கிக்கிட்டு சின்ன ஸ்கூல்ல பசங்கள சேத்தா
மத்த டீச்சர்ஸ் நம்பள மட்டமா நெனைக்க மாட்டாங்களா?”
சேகர் பேசாமல் தெருவைப் பார்த்தான்.
“டென்த் படிக்கிறப்பவும், பிளஸ் டூ படிக்கிறப்பவும் டீச்சர்ஸ்
மூணு மாசம் லீவ் போட்டுட்டுப் போயி ராசிபுரம், நாமக்கல்லுல வீடு எடுத்து தங்கி பசங்கள
படிக்க வைக்கிறாங்க. அந்த மாதிரி உங்களால செய்ய முடியுமா? சட்டந்தான் பேச முடியும்.”
என்று சொல்லி முறைத்தாள் கோமதி..
“சரி. ஒன்னிஷ்டம். நேரத்தப் பாரு”
“நாம்பதான் வீணாப் போன கவர்மண்டு ஸ்கூல்ல படிச்சோம். நம்பப்
புள்ளைங்களாவது நல்ல ஸ்கூல்ல படிக்கட்டுமே”
“சரி.”
"காலண்டர பாக்குறன்" என்று சொல்லிவிட்டு கோமதி
வீட்டிற்குள் போனாள். ஃபைலிலிருந்த சேர்க்கை விண்ணப்பத்தை எடுத்துக்கொண்டு புஷ்பா வீட்டிற்குள்
போனாள். அவளோடு மஜிதா பர்வீனும் போனாள். கடைசியாக சேகரும் போனான் சேர்க்கை விண்ணப்பத்தில்
கையெழுத்துப்போடுவதற்காக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக