வற்றாத
ஊற்று – இமையம்.
கதிரவனுக்குப்
பதட்டமாக இருந்தது. பதட்டத்தை மறைப்பதற்காக ஹாலில் உட்கார்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்தான்.
ஆண் பெண் என்று இருநூறு பேருக்கு மேல் இருந்தனர். எல்லாருடைய முகமும் இயல்பாக இருப்பது
மாதிரிதான் தெரிந்தது. யாருக்கும் வியர்த்திருக்கவில்லை. ஹாலில் சென்ட்ரல் ஏசி இருந்தும்
தனக்கு மட்டும் ஏன வியர்க்கிறது என்று யோசித்துக்கொண்டே தனக்கு வலதுகைப் பக்கம் உட்கார்ந்திருந்த
பையனைப் பார்த்தான். அவனுக்கு வியர்த்திருக்கவில்லை. இடது கைப்பக்கம் உட்கார்ந்திருந்த
பெண்ணைப் பார்த்தான் அவளுக்கும் வியர்த்திருக்கவில்லை. அந்த பெண் வேகவேகமாக செல்போனில்
ஏதோ செய்தியைப் டைப் செய்துகொண்டிருந்தாள். அவளுடைய விரல்கள் நடுங்கவில்லை. பக்கத்தில்
உட்கார்ந்திருந்தவர்கள் இருவருமே புதிது. அவர்களிடம் என்ன பேசுவது? தெரிந்தவர்களாக
இருந்தால் பயத்தை போக்க பேசிக்கொண்டிருக்க முடியும். பையன் ரொம்பவும் கவனமாக மேடையைப்
பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். பெண் டைப் செய்வதில் கவனமாக இருந்தாள். கடைசியாக
வந்தது அவள்தான். முதலாளி வந்துவிடுவாரோ என்ற அவசரத்தில் “கொஞ்சம் நகந்து உக்காருங்க”
என்று சொல்லிவிட்டு பட்டென்று உட்கார்ந்துவிட்டாள். பக்கத்தில் முன்பின் தெரியாத பெண்
உட்கார்ந்திருப்பது கதிரவனுக்கு கூடுதல் பதட்டத்தை ஏற்படுத்தியது. பதட்டத்தை மறைக்க
மேடையைப் பார்த்தான். மூன்று நாற்காலிகள் மட்டும் போடப்பட்டிருந்தது. மூன்றும் காலியாக
இருந்தது. பிறகு கூட்டத்தைப் பார்த்தான். செய்தியாளர்கள், கேமரா மேன்கள், அலுவலகப்
பணியாளர்கள், டெக்னிஷியன்கள் என்று பலரும் இருந்தனர். எல்லாருமே பேசாமல் இருப்பதற்கு
பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் மாதிரி அமைதியாக இருந்தனர். சிறு சத்தம் இல்லை. சளசளப்பு
இல்லை. எல்லாருடைய பார்வையும் கதவின் பக்கமே இருந்தது. முதலாளி எப்போது வருவார், என்ன
சொல்வார்? கதிரவனுக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது.
கடலூர் மாவட்ட செய்தியாளனாக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டது, பொதுமக்களிடம், அரசு அதிகாரிகளிடம்,
அரசியல்வாதிகளிடம் பேட்டி எடுக்கும்போது எப்படி பேசவேண்டும், கேள்வி கேட்கவேண்டும்,
எப்படி வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும், சூழ்நிலைக்கேற்ப எப்படி முகபாவத்தை மாற்ற வேண்டும்
என்று இரண்டு வாரம் பயிற்சி எடுத்தது, இன்று காலையில் சென்னைக்கு வந்தது, கற்பனைக்கு
அப்பாற்பட்ட பிரமாண்டமான கட்டிடத்தில் அதுவும் ஏழாவது மாடியில் உட்கார்ந்திருப்பது
என்று ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தான். ஒவ்வொன்றும் ஆச்சரியமாக இருந்தது. மேனேஜரோ,
முதலாளியோ திடீரென்று யாரிடமாவது ‘எப்படி பேட்டி எடுப்ப, என்னென்ன மாதிரியான கேள்விகள
கேப்ப?’ என்று கேட்கலாம் என்று சொல்லியிருந்தார்கள். அந்த மாதிரி கேட்கப்போய் தவறாக
ஏதாவது சொல்லி மாட்டிக்கொள்வோமோ என்ற பயம்தான் கதிரவனுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது.
‘தமிழன் விடிவெள்ளி’ என்று தொலைக்காட்சி ஆரம்பிக்கப்
போகிறார்கள், அதில் மாவட்ட செய்தியாளனாக வேலை கிடைத்திருக்கிறது என்று ஊர் முழுவதும்
சொல்லி பெருமை பட்டுக்கொண்டிருந்தான். கடைசி நேரத்தில் ஏதாவது பிரச்சினை வந்து வேலை
இல்லை என்று ஆகிவிட்டால் பெரிய அவமானமாகிவிடும் என்ற கவலையில் உட்கார்ந்திருந்தான்.
அந்த கவலையில்தான் அவனுக்கு வியர்த்துக்கொட்டியது. டிகிரி படித்ததிலிருந்து ஏழு வருசமாக
வேலை இல்லாமல் இருந்தது. அவசரப்பட்டு கல்யாணம் கட்டிக்கொண்டது. இரண்டு பிள்ளை பிறந்தது.
பிள்ளைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் அப்பா அம்மாவிடம் கையேந்தி நிற்பது, அதனால்
பொண்டாட்டி திட்டுவது என்று ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. இந்த வேலையும் இல்லை என்றாகிவிட்டால்
தன்னுடைய பாடு மோசம்தான். முன்பு வேலை செய்த ஜெராக்ஸ் கடையிலோ, பால் பாக்கட் போடவோதான்
போக வேண்டும் என்று நினைத்தான். முதலாளி கேள்வி கேட்காமல் இருக்கவேண்டும் என்று தனக்கு
தெரிந்த எல்லா சாமிகளிடமும் வேண்டிக்கொண்டான்.
மேடையைப்
பார்த்தான். காலியாக இருந்தது. கதவைப் பார்த்தான். முதலாளி வருவதற்கான அறிகுறி தெரியவில்லை.
பக்கத்திலிருந்த பெண்ணைப் பார்த்தான். அவள் செல்போனில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தாள்.
மறு நொடியே மேடையைப்பார்த்தான். அப்போது கதவு திறப்பது தெரிந்தது. உட்கார்ந்திருந்த
எல்லாரும் பணிவாகவும், மரியாதையாகவும் எழுந்து நின்றனர். சிலநொடிகள் கழித்துதான் செய்திப்
பிரிவு ஆசிரியர் உள்ளே வந்தார். அவருக்கு பின் மேனேஜர் வந்தார். அடுத்த சில நொடிகளில்
முதலாளி வந்தார். நாற்காலியில் உட்கார்ந்தார். மற்றவர்களை உட்காரும்படி சைகை காட்டினார். மேனேஜர், செய்திப்
பிரிவு ஆசிரியர் உட்கார்ந்த பிறகுதான் மற்றவர்கள் உட்கார்ந்தனர். அசைவு மட்டும்தான்
இருந்தது. சத்தம் எழவில்லை.
மேடைக்கு
எதிரில் உட்கார்ந்திருந்த எல்லாருடைய பார்வையும் முதலாளியின் மீதுதான் இருந்தது. குள்ளமாகவும்
கருப்பாகவும் இருந்தார். கதர் வேட்டி சட்டை அணிந்திருந்தார். வாளி கயிறு தடிமனில் கை
காப்பு போட்டிருந்தார். அதே அளவுக்கு தடி மனிலுள்ள இரண்டு மூன்று சாங்கிலிகளை கழுத்தில்
போட்டிருந்தார். ஒரு முடிகூட வெள்ளையாக இல்லாத அளவுக்கு டை அடித்திருந்தார். முகம்
களையாக இருந்தது. அவருடைய கன்னங்கள் ஊதி வைத்த பலூன் மாதிரி இருந்தது. வைத்த கண் வாங்காமல்
கதிரவன் முதலாளியையேப் பார்த்துக்கொண்டிருந்தான். பார்த்த உடனேயே அவரை அவனுக்குப் பிடித்துப்போயிற்று.
அருகில்விட்டால் காலில் விழுந்து கும்பிட்டிருப்பான். மனதிலேயே கும்பிட்டுக்கொண்டான்.
“நல்ல ஆள்”. கடுமையாக கேள்வி கேட்க மாட்டார், கோபப்பட மாட்டார் என்ற எண்ணம் ஏற்பட்டது.
அதனால் அவனுக்கு லேசாகப் பதட்டம் குறைய ஆரம்பித்தது.
முதலாளியிடம்
மேனேஜரும், செய்திப் பிரிவு ஆசிரியரும் ஏதோ சொன்னார்கள். கை மைக்கை எடுத்து கொடுத்தார்கள்.
மைக்கை வாங்கிய முதலாளி சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் எதிரிலிருந்த கூட்டத்தையே பார்த்தார்.
பிறகு நிதானமான குரலில் சொன்னார் “உங்க எல்லாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். தமிழன்
விடிவெள்ளி டி.வி.யில வேல செய்யுறதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிங்க. நாளயிலிருந்து
வேல செய்யப்போறிங்க. அதுக்கு என்னோட வாழ்த்துக்கள். வர வெள்ளிக்கிழம ஒளிபரப்ப தொடங்கப்போற
நம்மோட சேனல் மத்த சேனல்களவிட முதன்மையான இடத்துக்கு போறதுக்கு உங்களோட உழைப்புதான்
தேவ. அர்ப்பணிப்பும் தேவ. பணத்த நான் போட்டிருக்கன். உழைப்ப நீங்க போடப்போறிங்க. என்னோட
பணத்தால இந்த சேனல் புகழ்பெற போவுதுங்கிறதவிட உங்களோட உழைப்பால புகழ்பெற போவுதுங்கிறதுதான்
உண்ம.”
முதலாளியின்
பேச்சைக்கேட்டு ரொம்பவும் ரசித்த மாதிரி மேனேஜர் கையைத் தட்டினார். அதைப் பார்த்து
செய்திப் பிரிவு ஆசிரியர் கைத் தட்டினார். அவரைப் பார்த்து எதிரிலிருந்த ஊழியர்கள்
கைத் தட்டினார்கள். கை தட்டல் அடங்க சிறிது நேரமாயிற்று. மற்றவர்களைவிட கதிரவன் வேகமாகவும்,
பலமாகவும் கையைத் தட்டினான். அப்போது போதும் என்பது மாதிரி முதலாளி இடது கையைக் காட்டினார்.
கூட்டத்தில் கைத் தட்டல் அடங்கியது.
“இதுவர
தமிழ்நாட்டில் எந்த நியூஸ் சேனலும் செய்யாத காரியத்த நான் செஞ்சிருக்கன். மாவட்டத்துக்கு
ரெண்டு ரிப்போர்ட்டர், ரெண்டு கேமரா மேன் போட்டிருக்கன். எதுக்குன்னா மத்த சேனலவிட
முதல்லியே வேகமா நீங்க நியூஸ கொடுக்கறதுக்காக. எந்த நியூசும் விட்டுப்போகக் கூடாதுங்கிறதுக்காக.
புரியுதா? நீங்க கொடுக்கிற ஒவ்வொரு நியூசும் முக்கியமானதாக இருக்கணும். ஒவ்வொரு நியூசும்
உங்களுக்கு பரிட்சயா இருக்கணும், சோதனையா இருக்கணும். பிளாஷ் நியூஸா இருக்கணும். மாவட்ட
நியூஸ் எடுக்கிறவங்களுக்கும், ஸ்டுடியோவில நியூஸ படிக்கிறவங்களுக்கும் குரல் முக்கியம்.
தோற்றம் முக்கியம். அதுதான் உங்களோட மூலதனம். நீங்க சொல்றது பொய்யா இருந்தாலும் அத
உண்ர்ச்சி பூர்வமா நிஜம் மாதிரி சொல்லணும். விஷுவலா காட்டணும். அதுதான் திறம. மாவட்ட
நியூஸ் எடுங்கிறவங்களுக்கு கூட்டத்தில முண்டியடிச்சிபோவத் தெரியணும். சண்ட போடவும்,
தேவப்பட்டா தகராறு செய்யவும் தெரியணும். அதுக்கு மன தைரியம் வேணும். கூச்ச சுபாவமுள்ள
ஆளால ஜெயிக்க முடியாது. நீங்க ஜெயிப்பீங்களா?” என்று முதலாளி கேட்டதும் மேனேஜர் ‘ஜெயிப்போம்’
என்பது மாதிரி கட்டை விரலை உயர்த்தி காட்டினார். கூட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த
செய்திப் பிரிவு ஆசிரியர் அவசரஅவசரமாக ஜெயிப்போம் என்று விரலை உயர்த்திக் காட்டினார்.
கூட்டமும் ஜெயிப்போம் என்பது மாதிரி கையை உயர்த்திக்காட்டியது. “போதும்” என்பது மாதிரி
முதலாளி கையால் சைகைக்காட்டினார். மற்றவர்களைக் காட்டிலும் கதிரவன் உடனேயே கையை கீழே
போட்டான். முதலாளி கேள்வி கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அவனுக்கு.
“பப்ளிக்குக்கிட்ட
கேள்வி கேக்கும்போது, நீங்க விரும்புகிற பதிலதான் அவுங்க சொல்லணும். அவுங்க சொல்றத
நீங்க கேக்கக் கூடாது. உங்க விருப்பத்துக்கு பப்ளிக்க மாத்தணும். லேசா மழ பேஞ்சாலே
இயல்பு வாழ்க்க பாதிப்பு, வெயில் அடிச்சா, காத்து அடிச்சா, பாலம் ஒடஞ்சா இயல்பு வாழ்க்க
பாதிப்புன்னு சொல்ல வைக்கணும். சின்ன விசயத்தக்கூட பெருசா சொல்லணும். காட்டணும். மழ
பேயுறதயும், வெயில் அடிக்கிறதயும் மனுசனால தடுக்க முடியாதுன்னு எல்லாத்துக்கும் தெரியும்.
அப்பிடி சொல்லக் கூடாது. அரசாங்கம் எதுவும் செய்யலன்னு சொல்ல வைக்கணும். மக்கள் கொதிச்சிப்போயி
இருக்காங்கன்னு சொல்லணும். உண்மய மட்டுமே சொல்றவன் நல்ல ரிப்போர்ட்டர் இல்ல. உண்ம யாருக்கு
வேணும்?” என்று கேட்டு முதலாளி சிரித்தார். முதலாளி சிரித்ததால் மேனேஜரும், செய்திப்
பிரிவு ஆசிரியரும் சிரித்தனர். அதைப் பார்த்து எதிரில் உட்கார்ந்திருந்த ஊழியர்களும்
லேசாக சிரித்தனர். நல்ல ஜோக்கை முதலாளி சொல்லிவிட்ட மாதிரி கையைத்தட்டி கதிரவன் சிரித்தான்.
பக்கத்திலிருந்த பெண்ணைப் பார்த்தான். அவள் செல்போனில் முதலாளியைப் படம் எடுத்தாள்.
பிறகு தன்னை எடுத்தாள். அவளுடைய ஐடி கார்டைப் பார்த்தான். பூங்குழலி.
“எத
சொன்னாலும், எதக் காட்டுனாலும் சுநாமி வந்த மாதிரி, நில நடுக்கம் வந்த மாதிரி, வெள்ளப்
பெருக்குல ஆயிரம் பேர் செத்த மாதிரி சொல்லணும், காட்டணும். அதுக்கு உணர்ச்சிப் பூர்வமான
வார்த்தைகள் முக்கியம். காட்சிகள் முக்கியம். பேசிபேசி செத்துப்போன வார்த்தகள பயன்படுத்தக்
கூடாது. புதுசா இருக்கணும். புதுசா இருக்கிறதுக்குத்தான் மதிப்பு அதிகம். விலையும்
அதிகம். நீங்க பயன்படுத்துற ஒவ்வொரு வார்த்தயும் முக்கியம். வார்த்த ஜாலம் முக்கியம்.
சொல் விளையாட்டு. எல்லாத்தயும் தகவலா, செய்தியா மாத்தணும். அடுத்து என்ன, அடுத்து என்னங்கிற
எதிர்ப்பார்ப்ப உண்டாக்கணும். ஒவ்வொரு முற நியூஸ முடிக்கும்போதும், பதட்டம் நிலவுகிறது,
பரபரப்பு ஏற்பட்டுள்ளது, கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது, அச்சம் ஏற்பட்டுள்ளது, எப்போது
என்ன நிகழுமோங்கிற பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது, அரசு அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை
என்று மக்கள் கொதித்துப்போய் உள்ளனர், கலவரம் ஏற்படலாம், கலவர சூழல் ஏற்பட்டுள்ளது,
அடுத்தக்கட்டப் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர் – இது மாதிரியான வார்த்தைகளதான்
பயன்படுத்தணும். மறக்கக் கூடாது. எல்லாம் சொல்லிக்கொடுத்திருப்பாங்க” என்று சொன்ன முதலாளி
சிறிது நேரம் பேசாமல் இருந்தார். அப்போது எதிரில் உட்கார்ந்திருந்தவர்கள் “ஆமாம். ட்ரய்னிங்
கொடுத்தாங்க” என்று அதிக சத்தமில்லாமல் சொன்னார்கள். அந்த நேரத்தில் தண்ணீர் பாட்டிலை
திறந்து தருவதில் மேனேஜரும், செய்திப் பிரிவு ஆசிரியரும் போட்டியிட்டனர். “பேசாம இருங்க”
என்று முதலாளி இடது கையால் சைகைக்காட்டினார். அப்போதும் மேனேஜரும், செய்திப் பிரிவு
ஆசிரியரும் அமைதி அடையவில்லை. முதலாளிக்கு தண்ணீர் தர முடியவில்லையே என்ற ஏக்கம் அவர்களுடைய
முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
“நாம
செய்யப்போறது தெய்வ சேவ இல்ல. நாட்டு நலப்பணி திட்டமில்ல. அரசாங்கத்தோட நலத்திட்ட உதவி
இல்லெ. வர்த்தகம். வியாபாரம். நட்டம் வந்தா பரவாயில்லியா? வியாபாரத்தில தோத்துப் போவ
முடியுமா? ஜெயிக்க வேணாமா?” என்று முதலாளி கேட்டார். அதற்கு மேனேஜர், செய்திப் பிரிவு
ஆசிரியர் மட்டுமல்ல எதிரில் உட்கார்ந்திருந்திருந்த மொத்த ஊழியர்களும் ஒரே குரலாக சொன்னார்கள்.
“ஜெயிக்கணும். தோத்துப்போகக் கூடாது.”
“நான் மத்த முதலாளி மாதிரி இல்லெ. அதனாலதான்
எந்த முதலாளியும் செய்யாத காரியத்த இப்ப நான் செஞ்சிக்கிட்டு இருக்கன். இந்த மாதிரி
ஒரு மீட்டிங் இதுவரைக்கும் எந்த டி.வி. சேனல்லயும் நடந்திருக்காது. தொழிலாளிக்கு முன்னுரிமை
கொடுக்கிறவன் நான். அதனாலதான் நான் முதலாளியா ஆயிருக்கன். புரியுதா?” என்று கேட்டார்.
அந்த ஒரு கணத்தில் எல்லாருக்குமே முதலாளியின் மீது அன்பு உண்டாயிற்று. மதிப்பு கூடியது.
எல்லாரையும்விட கதிரவனுக்குத்தான் முதலாளியின் மீது அன்பு அதிமாயிற்று. கேள்வி கேட்க
மாட்டார் என்ற நம்பிக்கை கூடியிருந்தது. அதனாலேயே முதலாளியின் மீது பாசம் கூடியது.
தண்ணீர்கூட குடிக்காமல் ரொம்ப நேரமாகப் பேசிக்கொண்டிருக்கிறாரே என்று கவலைப்பட்டான்.
அதனால் ஆர்வத்துடன் முதலாளியைப் பார்த்தான்.
“செய்தி
விறுவிறுப்பா இருக்கணும். கவர்ச்சியாவும் இருக்கணும். கவர்ச்சி இல்லாத எந்த பொருளுக்கும்
மார்க்கெட்டுல மதிப்பு இல்லெ. பணம் இல்லெ. பணம் வரணுமின்னா நியூஸ பாக்குற வீவர்ஸ அசயாம
நீங்க உட்கார வைக்கணும். அத எப்பிடி செய்யப்போறிங்க? அதான் கேள்வி. சவால். சவால்ல ஜெயிக்கணும்.
வீவர்ஸ்கிட்ட ஒரு பசிய உருவாக்கணும். அந்த பசி தீராம, அணையாம பாத்துக்கணும். ஒரு ஆள்
ஒருமுற நம்ம சேனல பாத்தா, அவன் அடுத்த சேனல பாக்கப் போவாம தடுக்கணும். இதுதான் சவால்.
இதுல எப்பிடி ஜெயிக்கப் போறிங்க? ஜெயிக்கிறவங்க மட்டுமே வாழற உலகம் இது. தோல்விக்கு
எடமில்ல. தோத்துப்போறது நீங்க இல்ல. பணம். ஆயிரத்து ஐநூறு கோடி. ஜெயிக்கணும். அதுக்கு
புதுசா சிந்திக்கணும். புதுமதான் எல்லாத்தயும் ஜெயிக்கும்” என்று சொன்ன முதலாளி சிறிது
நேரம் பேச்சை நிறுத்தினார். அதற்காகவே காத்திருந்த மாதிரி மேனேஜரும், செய்திப் பிரிவு
ஆசிரியரும் தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினார்கள். “வேண்டாம்” என்பது மாதிரி கையைக்காட்டிவிட்டு
சொன்னார்.
“புது நியூஸ் இல்லன்னு நீங்க கவலப்பட வேண்டியதில்ல
மனுசன் எங்கெல்லாம் இருக்கானோ அங்கல்லாம் பிரச்சன இருக்கும். நியூஸ் இருக்கும். இல்லன்னா
உருவாக்குங்க. புருசன் பொண்டாட்டி பிரச்சனயா இருந்தாலும் பரவாயில்ல. காலேஜில படிக்கிற
பொண்ணோட பிரச்சனயா இருந்தாலும் பரவாயில்ல. அத நியூஸ் ஆக்குங்க. எப்பவும் உங்க பார்வ
பொம்பளைங்க, அரசியல்வாதிங்க, சாமியாருங்க, சினிமா நடிகருங்க, நடிகைங்க பக்கம் இருக்கணும்.
அவங்கள சுத்தியேதான் உங்க மைக்கும், கேமராவும் போவணும். அவுங்கதான் நமக்கு நியூஸோட
ஊத்து. நல்ல நியூஸா, புது நியூஸா கொடுக்கிறது மட்டும் முக்கியமில்ல. முதல்ல தரணும்ங்கிறதுதான்
முக்கியம். அதுக்குதான் போட்டி நடக்குது. உண்மய
சொன்னா நியூஸ முதல்ல காட்டி, டி.ஆர்.பி.ரேட்ட உயர்த்தி, அதிகமான விளம்பரத்த யாரு வாங்குறதுங்கிறதுதான்
நிஜமான போட்டி. விளம்பர யுத்தம். கடுமையான போட்டியுள்ள ஃபீல்டு. இதுல ஜெயிக்கிறது லேசில்ல.
உலகத்திலியே பணம்தான் பெருசுங்கிறாங்க. உண்ம
அது இல்ல. நேரம்தான் பெருசு. அதிக வெலகொண்டது. நேரம்தான் உலகம். ஒவ்வொரு நொடிக்கும்
ஒரு வெல இருக்கு. மீடியாக்காரனுக்கு டைம் சென்ஸ் முக்கியம். ஓய்வு இல்லாத ஓட்டம். காலத்தோட
நடக்குற போராட்டம். பின் தங்கிப் போவ முடியாது. கடசியில ஓடுற குதிர மேல யாரு பணம் கட்டுவாங்க?”
என்று முதலாளி சொன்னபோது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, கட்டிடமே அதிர்ந்துபோகிற
அளவுக்கு கைத்தட்டல் எழுந்தது. தேர்ந்த அரசியல்வாதி மாதிரி கைத்தட்டல் அடங்கும்வரை
அமைதியாக இருந்தார் முதலாளி. கைத்தட்டல் அடங்கிய பிறகுதான் மீண்டும் பேசினார்.
“இன்னிக்கி பசிய போக்குறது மட்மே மனுசனுக்கு
வாழ்க்கயா இல்லெ. சாப்பாடு, துணி மட்டும் வாழ்க்கயா இல்லெ. வேல செய்யுறது. மட்டும்
வாழ்க்கயா இல்லெ. சொகுசு, உல்லாசம் வேணும். எக்ஸைட்மண்டு, எண்டர்டைன்மண்டுதான் முக்கியமா
இருக்கு. வாழ்க்கயா இருக்கு. உடனே வேணும் இப்பவே வேணும்ங்கிற கல்ச்சர் பரவிடிச்சி.
அப்பறம், நாளக்கிங்கிற பேச்சே கெடயாது. சமூகத்தோட இந்த உளவியல் தெரியணும். பொது சமூகத்த
நம்மகிட்ட தக்க வைக்க நமக்கு தேவ வேகம், விவேகம், புதுமை. ஒளிரும் அறிவு. இந்த வார்த்தகள்தான்
நமக்கு பைபிள், கீதை, குரான்.”
முதலாளியின்
அறிவுக் கூர்மையைப் பாராட்டி பலத்த கைத்தட்டல் எழுந்தது. இம்முறை கைத்தட்டலை ரசித்த
மாதிரி முதலாளியினுடைய முகம் மலர்ந்திருந்தது.
முதலாளி
சொன்னார் “விளம்பரம்தான் இந்த நூற்றாண்டோட பெரிய ஆர்ட். கக்கூஸ்னாலே முகம் சுளிக்கிற
நம்ப நாட்டுலதான் டாய்லெட் க்ளீன் பத்தி ஒவ்வொரு சேனல்லையும் ஒரு நாளைக்கி நூறு முறைக்கு
மேல விளம்பரம் வருது. சாப்பிட்டுக்கிட்டே அந்த விளம்பரத்தப் பாக்குறம். தீட்டுன்னாலே
ஒதுக்கி வச்ச நம்ப நாட்டுலதான் நாப்கின் விளம்பரம் சக்கயா ஓடுது. அந்த விளம்பரத்தப்
பாத்து கூச்சப்பட்டவங்க யாரு? அப்பாவும் மகளும், அண்ணனும் தங்கச்சியும் பாக்குறாங்க.
ரசிச்சி சிரிக்கிறாங்க. நைட்டி, ஜட்டி, பனியன், உள்பாவாட எல்லா விளம்பரமும் சக்கப்போடுபோடுது.
யாராச்சும் முகத்த சுளிக்கிறோமா? எனக்கு தெரிஞ்சி இருவது வருசமா சிவப்பாவுறதப் பத்தியும்,
மொட்ட தலயில முடி வளருறதப் பத்தியும் விளம்பரம் வந்துக்கிட்டு இருக்கு. எல்லா சேனல்லையும்
வருது. ஒரு நாளைக்கு ஆயிரம் முற இருக்கும். நம்பளும் முடிஞ்சவரைக்கும் எல்லாக் க்ரீமையும்
தடவிப் பாத்திட்டோம். யாராச்சும் சிவப்பா மாறி இருக்கோமா? கொட்டுன தல முடி வளந்திருக்கா?
எதுவும் உண்ம இல்ல. எதுவும் நடக்கல. ஆனா பொருள் உற்பத்தி ஆவுது. வித்தும்போவுது. எப்படி?
விளம்பரம். பிரச்சாரம்” என்று சொன்ன முதலாளி பேச்சை நிறுத்திவிட்டு தானாகவே சிரித்தார்.
ஆனால் மேனேஜர் சிரிக்கவில்லை. செய்தி ஆசிரியர், எதிரில் உட்கார்ந்திருந்த தொழிலாளர்கள்
யாரும் சிரிக்கவில்லை. சிரித்து முடித்துவிட்டு “எங்கிட்ட பணம் வந்து சேரல. முதலாளியா
நான் ஆவுலன்னா நானும் கம்யூனிஸ்ட் கட்சிச்காரனாதான் இருந்திருப்பன். என்னோட பேச்சு
கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் பேச்சு மாதிரி இருக்கா?” என்று கேட்டார். யாரும் வாயைத் திறக்கவில்லை.
சிரித்துக்கொண்டே முதலாளி சொன்னார்.
“நாங்க
ஆட்சிக்கு வந்தா அத செய்வோம், இத செய்வோம்னு அரசியல்வாதிங்க சொல்றது மாதிரிதான் விளம்பரங்களும்.
எதுவும் நடக்காது. எல்லா சேனல்சும் இன்னிக்கி விளம்பரத்த வச்சிதான் பணம் சம்பாதிக்குது.
பணம் சம்பாதிக்கிறது சாதாரணமில்ல. அது பெரிய ஆர்ட்” என்று முதலாளி சொன்னதும் மேனேஜரும்
செய்திப் பிரிவு ஆசிரியரும் மட்டுமே கைத்தட்டினார்கள். கைத்தட்டப்போன கதிரவன் தன்னைக்
கட்டுப்படுத்திக்கொண்டான். ஏன் மற்றவர்கள் கைத்தட்டவில்லை என்று பார்த்தான். பக்கத்திலிருந்த
பூங்குழலியைப் பார்த்தான். அவள் ஊழியர்களை போட்டோ எடுத்து முகநூலில் போட்டுக்கொண்டிருந்தாள்.
“இன்னிக்கு
சயின்ஸே சயின்ஸ தோக்கடிச்சிக்கிட்டு இருக்கு. ‘தந்தி’ங்கிறது ஒரு காலத்தில பெரிய அதிசயமா
இருந்துச்சி. இப்ப செத்துப்போச்சி. பத்து வருசத்துக்கு முன்னால ‘பேஜர்’ பெருசா பேசப்பட்டுச்சு.
அது இப்ப இல்லெ. டிஜிட்டல் பேனர் முற வந்து ட்ராயிங் மாஸ்ட்டர்ஸ ஒழிச்சிடிச்சி. பெரிய
கிரைண்டர் போயி இப்ப டேபிள் கிரைண்டர் வந்துடிச்சி. முன்ன போட்டோக்காரன், வீடியோக்காரன்
பெரிய அதிசயமா இருந்தான். இப்ப இல்ல. இப்ப ஒவ்வொரு ஆளும் போட்டோக்காரனா, வீடியோக்காரனா
மாறிட்டான். ரேடியோ அதிசயமா இருந்துச்சி. டேப் ரிக்கார்டர் போச்சி. டி.வி. வந்துச்சி.
அப்பறம் கலர் டி.வி. இப்ப பிளாஸ்மா டி.வி. ஒவ்வொரு அதிசயமா வருது. ஒவ்வொரு அதிசயமா
செத்துப்போவுது. பப்ளிக் டெலிபோன் பூத் இப்ப இருக்கா? இல்ல. இப்படி பலதும் போய்கிட்டே
இருக்கு. மனுசங்க செத்துப்போற மாதிரி. எந்த காலத்திலயும் இல்லாத அளவுக்கு மீடியாக்காரனுக்கு
இன்னிக்கி சேலஞ்ச் அதிகம். ரிப்போர்ட்டர், கேமரா, ஸ்டுடியோ, சேனல் எதுவுமே தேவ இல்லாம
போய்கிட்டிருக்கு. பேஸ்புக், ட்விட்டர், பிளாக், வாட்ஸ்அப், வெப்சைட்டுன்னு வந்துடுச்சி.
அதவிட முக்கியமானது ஒவ்வொரு ஆளும் நியூஸ உண்டாக்குற, தான் உண்டாக்குன நியூஸ ஒடனே பரப்புற
ஆளா மாறி இருக்கான். ஓயாம ஒலகத்துக்கு முன்னாடி தன்ன நிலைநிறுத்திக்கிட்டே இருக்கான்.
செய்தி பரவுறதோட வேகம். ராக்கெட்டவிட வேகமா இருக்கு. சாப்புடுறதிலிருந்து, காதலனுக்கு
முத்தம் கொடுக்கிறது, துணி மாத்துறது, காலயில எழுந்திரிச்சதிலிருந்து தூங்குறது வரைக்கும்
ஒரு ஆள் என்னா செய்றான்னு, எந்தஎந்த எடத்தில இருக்கான், யார்யார்கூட பேசுறான், என்ன
சாப்புடுறான்னு நீங்க, அவனோட பேஸ்புக்கப் பாத்தாலே தெரிஞ்சிடும். எல்லாம் படமா, போட்டோவா,
வீடியோவா இருக்கு. புது ட்ரெண்டா டப்ஸ்மேஷ் வீடியோ க்ளிப் வந்திருக்கு. ஒவ்வொரு நொடியும்
போட்டோவா, வீடியோவா எல்லாத்தயும் மாத்திப் போட்டுக்கிட்டே, பரப்பிக்கிட்டே இருக்காங்க.
தன்ன வெளிப்படுத்திக்கிட்டே இருக்கணும்ங்கிற ஆச ஒவ்வொரு மனுசனுக்குள்ளயும் வத்தாத ஊத்தா
இருக்கு. இதுதான் இந்த நூற்றாண்டோட அதிசயம். எல்லாருக்கும் நடிக்கணுங்கிற ஆச வந்திடுச்சி.
அது தணியாத ஆசயா இருக்கு. அத நாம பயன்படுத்திக்கணும். சாதாரண கிராமத்திலிருக்கிற ஆள்ல
இருந்து நம்ப பிரதமர் வரைக்கும் நொடிக்கு நொடி செல்ஃபி எடுத்து பேஸ்புக்குல போட்டுக்கிட்டே
இருக்காங்க. ஒவ்வொரு ஆளும் ஒரு நாளக்கி கொறஞ்சது இருபது முப்பது போட்டோ போடுறான், ஸ்டேடஸ்
போடுறான். அப்பறம் நூறு லைக் போடுறான். ஸ்டேடஸ் ஷேர் பண்றான். கல்யாணத்தில மொய் செய்ற
மாதிரி ‘நீ எனக்கு லைக் போடு. நான் உனக்கு லைக் போடுறன்’னு மாத்திமாத்தி லைக் போட்டுக்கிறாங்க.
யாருக்கு லைக் அதிகமா வருதோ அவுரு பெரிய ஆளு. அரசியல் கட்சிகளும், அரசியல் லீடர்சும்
இப்ப பேஸ்புக்குல இருக்காங்க. ஸ்டேடஸ் போடுறாங்க. லைக் போடுறாங்க. சமூகம், ஒழுக்கம்,
சட்டம், மொழி வாழ்க்கை, அந்தரங்கம் முக்கியம்னு பேசுற இலக்கியவாதிங்க பேஸ்புக்குல முன்னணியில
இருக்காங்க. இந்த நெலமயில ஒரு நியூஸ் சேனலை நடத்துறது சாதாரணம் இல்லெ” முதலாளியினுடைய
குரலும், முகமும் மாறிவிட்டது. அதைப் பார்த்து மேனேஜரின் முகமும், செய்தி ஆசிரியரின்
முகமும் மாறிவிட்டது. அதைப் பார்த்ததும் – எதிரில் உட்கார்ந்திருந்த மொத்த தொழிலாளர்களுடைய
முகமும் மாறிவிட்டது. ஒவ்வொரு முகத்தையும் பார்த்த கதிரவன் தன்னுடைய முகத்தையும் சீரியஸாக்கிக்கொண்டான்.
“எல்லாத்தயும்
மீறி நீங்க நியூஸ கொடுக்குறிங்க. சனங்களும் பாக்குறாங்கன்னு வையிங்க. அந்த நியூஸ்க்கு
எவ்வளவு நேரம் உயிர் இருக்கும்? அடுத்த பரபரப்பு நியூஸ் வர்றவரைக்கும்தான். அதாவது
பத்து நிமிசம். அதுக்குமேல எவ்வளவு பெரிய நியூஸா இருந்தாலும் உயிர் இல்ல. அப்படியிருக்கும்போது
நீங்க தயாரிக்கிற நியூஸ் எவ்வளவு முக்கியமானதா இருக்கணும்? இது விவசாயம் இல்ல. மூணு
மாசம், ஆறு மாசம் கழிச்சி அறுவட செய்யுறதுக்கு. தென்ன மரம், மாமரமில்ல. காய்க்கும்போது
பறிக்கிறதுக்கு. நிமிசத்துக்கு நிமிசம் மாறுற உலகம். நிமிசத்துக்கு நிமிசம் அறுவட செஞ்சாகணும்.
இது ப்ரிண்ட் மீடியா இல்ல. பிரிண்ட மீடியாவே இன்னிக்கி செத்துப்போச்சி. செத்துப்போன
நியூஸதான் பிரின்ட் பண்ணுது. அதனாலதான் வாரப்
பத்திரிக்க எல்லாம் க்ரைம் நியூஸயே கொடுக்குறாங்க. க்ரைம தேடி அலயுறாங்க. கேட்டா டிடக்டிவ்னு
சொல்றாங்க. நம்மது விஷுவல் மீடியா. இதுல காட்சியும் குரலும் முக்கியம். இருக்கிறத மட்டுமல்ல
இல்லாததயும் உருவாக்கிக்காட்டணும். அதுக்கான சக்தி கேமராவுக்கு இருக்கு. அறிவியல் கண்டுபிடிப்பிலியே
ஃபஸ்ட் இடத்தில இப்ப இருக்கிறது கேமராதான். சக்கரம்னு சொல்றது பொய். கேமராவ வெறும்
கருவின்னு நெனைக்கக் கூடாது. கேமராதான் இப்ப சனங்களுக்கு சாப்பாடு, தண்ணீ, துணி. இன்னிக்கு
கேமரா இல்லாத ஆள எண்ணிடலாம். எல்லாரோட செல்போன்லயும் கேமரா இருக்கா? இல்லியா?” என்று
முதலாளி கேட்டதும் மொத்த கூட்டமும் ‘இருக்கு’ என்று சொன்னது. சிரித்தது. முதலாளியும்
சிரித்தார். சிரித்துக்கொண்டே சொன்னார் “கேமராதான் சினிமா நடிகர்கள கடவுளாக்கி இருக்கு.
அவங்கள பெரிய சக்தியா, விளம்பரமா, பணமா மாத்திருக்கு. அதனாலதான் பணம் வச்சி இருக்குறவங்க
எல்லாம் சினிமாவுல நடிக்கிறதுக்குப் போறாங்க. தமிழ்நாட்டு அரசியல கேமராதான் தீர்மானிக்குது.
அதனாலதான் தமிழ்நாட்டு அரசியல் சினிமா நடிகர்கள சுத்தியே நடக்குது” என்று சொல்லிவிட்டு
முதலாளி கிண்டலாக சிரித்தார். அவர் சிரித்ததால் மேனேஜரும், செய்தி ஆசிரியரும் சிரித்தனர்.
அவர்கள் சிரித்ததால் எதிரில் இருந்த இருநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளிகளும் சிரித்தனர்.
கதிரவன் வாய்விட்டு சத்தமாகச் சிரித்தான். அவனுக்கு பயம் குறைந்திருந்தது. பக்கத்திலிருந்த
பூங்குழலியைப் பார்த்தான். அவள் சிரிக்கவில்லை. செல்போனை குடைந்துகொண்டிருந்தாள்.
“இதெல்லாம்
ஏன் சொல்றன்னா உங்களோட பொறுப்பு ரொம்ப பெருசு. நீங்க கொடுக்கப்போற நியூஸ் மட்டுமில்ல,
பயன்படுத்தப்போற ஒவ்வொரு வார்த்தயும் முக்கியமானது. கேமரா காட்டுற ஒவ்வொரு காட்சியும்
முக்கியம். சமூகத்தோட மனச, மனோபாவத்த புரிஞ்சிக்கிட்டு வேல செய்யணும். புதுசா தேடணும்.
புதுசா கொடுக்கணும். இவ்வளவு ஏன் சொல்றன்னா ஒரு நியூசும், ஒரு காட்சியும் ரெண்டு நிமிசம்
ஓடுதின்னு வைங்க, அத அதிக பட்சம் மூணு லட்சம் பேர் பாக்குறாங்கன்னு வைங்க, அந்த நியூஸ்
ஒரு நாளைக்கு இருபது முற ஓடுதுன்னு வைங்க, இருபது மூணு அறுபது. அதாவது அறுவது லட்சம்
பேர் அதப் பாக்குறாங்க. அறுபது லட்சம் பேரோட ரெண்டு நிமிசத்த கூட்டிப்பாருங்க. எத்தன
நாள் வருது? அறுபது லட்சம் பேர் பாக்குற நியூஸ நீங்க எப்பிடி தரணும்? இதுதான் சவால்.
நீங்க கொடுக்கிற நியூசயும் விசுவல்சையும் வச்சித்தான் வீவர்ஸ் நம்மகிட்ட நிப்பாங்க.
அந்த வீவர்ஸ வச்சிதான் நமக்கு விளம்பரம். விளம்பரத்த வச்சிதான் பணம். அத வச்சிதான்
உங்களுக்கு வேல. சம்பளம். வேல, சம்பளம் வேணுமின்னா என்னா செய்யணும்?” என்று கேட்டு
முதலாளி பேச்சை நிறுத்தினார்.
ஒரு
நொடி மேனேஜர், செய்திப் பிரிவு ஆசிரியருக்குக்கூட என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தனர்.
தொழிலாளிகளும் பேசாமல் இருந்தனர். பூங்குழலி ரகசியம் மாதிரி மெல்ல “உழைக்கணும்” என்று
சொன்னாள். மொத்தக் கூட்டமும் “உழைக்கணும் உழைக்கணும்.” என்று சொன்னது. அதற்கு முதலாளி
சிரிக்க மட்டுமே செய்தார். அந்த சிரிப்பு உற்சாகமான சிரிப்பாக இல்ல. முன்பைவிட நல்ல
அழுத்தமான குரலில் சொன்னார் “இன்னிக்கி நாட்டுக்கு சேவ செய்யுறம்ன்னு சொல்ற எல்லா அரசியல்
கட்சியும் நியூஸ் சேனல் வச்சிருக்கு. இருபத்தி நான்கு மணி நேரமும் ஓடுற பாட்டுச் சேனல்,
நகைச்சுவை சேனல், சினிமா சேனல், குழந்தைகளும் தப்பிச்சிப்போவக்கூடாதின்னு கார்ட்டூன்
சேனல் வச்சிருக்கு. எதுக்காக? இதுதான் சேவையா? இதுதான் நாட்டுக்குத் தேவையா? சேவ செய்யுறம்ன்னு
சொல்ற அரசியல் கட்சிகளே இப்படியான சேனல்ஸ நடத்தினா, வியாபாரி நான் எப்படி வியாபாரம்
செய்யணும்? அந்தந்த அரசியல் கட்சி சேனல்சுக்கு, அந்தந்த கட்சிக்காரங்க வீவர்ஸா இருக்காங்க.
நமக்கு அந்த மாதிரி இல்ல. அப்போ நம்மோட உழைப்பு ரெண்டு மடங்கா இருக்கணும். புரியுதா?”
என்று கேட்டு ஒரு நிமிசம் பேசாமல் இருந்தார். எதிரிலிருந்தவர்களை ஆராய்வது மாதிரி பார்த்தார்.
கொஞ்சம் சலிப்பான குரலில் சொன்னார்:
“தமிழ்நாட்டுல நடக்குற எந்தப் போராட்டத்தயும்விட
பெரிய போராட்டம் சேனல்ஸ் போராட்டம்தான். மீடியா போராட்டம்தான். டி.வி சேனல்ஸவிட இன்னிக்கி உலகம் முழுக்க அதிகப்படியான
வீவர்ஸ போர்னோகிராபி சைட்ஸ்க்குதான் இருக்கு. பேஸ்புக், ட்விட்டர், பிளாக், வாட்ஸ்அப்,
வெப்சைட், போர்னோகிராபி சைட்ஸ மீறி, அரசியல் கட்சிகளோட சேனல்ஸ மீறி நம்ம சேனல எப்படி
பாக்க வைக்கிறது? பொண்ணு பாக்குறது, கரும காரியம் செய்யுறது, திதி கொடுக்கிறது வரைக்கும்
இன்னிக்கி ஈமெயில்லியோ, சாட்டிங்லியோ முடிஞ்சு போற நெலமயில நியூஸ் சேனல சனங்க எதுக்காகப்
பாக்கணும்? சமையல் கத்துக்கவா? இதுதான் கேள்வி. இதுல எப்பிடி ஜெயிக்கிறது?” என்று முதலாளி
கேட்டார். மேனேஜர், செய்திப்பிரிவு ஆசிரியர் மட்டுமல்ல எதிரிலிருந்து ஒரு ஆள்கூட பேசவில்லை.
பேச நினைத்தாலும் நமக்கு எதற்கு வம்பு என்று அமைதியாக உட்கார்ந்திருந்தனர். கதிரவனுக்கு
“ஜெயிக்க முடியும் சார்” என்று சொல்ல வாய் துடித்தது. பூங்குழலி மாதிரி எதையாவது சொல்லி
முதலாளியை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனால் என்ன சொல்வது என்றுதான்
தெரியவில்லை. அதனால் பக்கத்திலிருந்த பையனைப் பார்த்தான். அவன் முதலாளியை மட்டுமே வைத்த
கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். வேறு வழியில்லாமல் இடது கைப்பக்கம் உட்கார்ந்திருந்த
பூங்குழலியைப் பார்த்தான். அவள் முதலாளியை பார்த்தவாறே செல்போனில் செய்தியை டைப் செய்துகொண்டிருந்தாள்.
திரும்பி கதிரவன் முதலாளியைப் பார்த்தான். அவர் சொன்னார் “முடியும். அதுக்கு அபாரமான
மூள வேணும். அப்பறம் எத சொன்னாலும் அசாதாரணமா சொல்லணுங்கிற வெறி, எத காட்டுனாலும் அசாதாரணமா
காட்டணுங்கிற வெறி வேணும். நாம எங்க ஜெயிக்கிறங்கிறதவிட எங்க தோக்கிறம்ங்கிறது தெரியணும்.
நிறைய தோக்கணும். அப்பதான் நிரந்தர வெற்றி, ஜெயிப்பு. நீங்க சாதாரணமா நெனைக்கிற மாதிரி
எதிரி மத்த சேனல்ஸ் இல்ல. ரிமோட். அது எல்லா வீவர்ஸ் கையிலயும் இருக்கு. அதுதான் நமக்கு
பெரிய எதிரி. சமூகத்தில பொறும குறைஞ்சிக்கிட்டே வருதுங்கிறத ரிமோட்ட வச்சே தெரிஞ்சிக்கலாம்.
அடுத்து என்ன, அடுத்து என்னங்கிற மனோபாவம் வளந்துபோச்சி. அதுக்கு வசதியா ரிமோட் இருக்கு.
ரிமோட்ட அழுத்தாம வீவர்ஸ தடுக்கணும். நம்ம சேனலதான் பாக்கணும். ரிமோட்ட வீவர்ஸ் அழுத்தாம
தடுக்கணும். முடியுமா?” என்று முதலாளி கேட்டு பேச்சை நிறுத்தினார்.
மேனேஜர்,
செய்தி பிரிவு ஆசிரியர் வாயைத்திறப்பதற்குள்ளாகவே எதிரிலிருந்த தொழிலாளிகள் “முடியும்.
முடியும்” என்று சொன்னார்கள். லேசாக சிரித்துக்கொண்டே முதலாளி சொன்னார் “முடியும்.
எப்பிடின்னா, எதயும் புதுமயா சொல்லணும், புதுமயா காட்டணும். அப்பிடி செஞ்சா வீவர்ஸ
நாம்ப இழுக்க முடியும். தக்க வைக்க முடியும். நியூஸ் ரிப்போர்ட்ரா இருக்கிறவங்க, கேமரா
மேனா இருக்கிறவங்க ஃபையர் ஆக்சிடண்டு, கார் ஆக்சிடண்டு, பில்டிங் ஆக்சிடண்டு நடந்த
இடத்துக்குப் போவும்போது – போன வேகத்தில உதவி செஞ்சுக்கிட்டு நிக்கக் கூடாது. நீங்க
உதவி செஞ்சிக்கிட்டு இருக்கிற நேரத்தில அடுத்த சேனல்காரன் நியூஸ ரெடிப்பண்ணி டெலிகாஸ்ட்
செஞ்சிடுவான். அதே நியூஸ நாம லேட்டா ஒலிபரப்புனா நல்லா இருக்காது. நியூஸ் முக்கியம்.
விஷுவல்ஸ் முக்கியம். அதுவும் குறிப்பிட்ட நேரத்தில. அதனால பரிதாபம், இரக்கம், கருணக்
கூடாது. மீடியாக்காரனுக்கு சொந்தம், பந்தம், குடும்பம் கிடையாது. அதனாலதான் கல்யாணம்
ஆகாத எங்ஸ்டர்ஸா வேலைக்கு எடுத்திருக்கு. யங் பிளட்டுல ஒரு வேகம் இருக்கும். ஓட்டம்
இருக்கும். ஷார்ப்னஸ் இருக்கும். பொண்டாட்டி, புருசன், புள்ள குடும்பம்னு இருக்கிறவங்களால
இருபத்தி நாலு மணிநேரமும் ஓட முடியுமா? மத்த சேனல்ஸவிட நாம நிறைய கேர்ள்ஸ ரிப்போட்டர்ஸா
எடுத்திருக்கோம். தொழில் அதிபர்கள, அரசியல்வாதிகள, சினிமா நடிகர்கள, நீதிபதிகள, சாமியார்கள
கேர்ள்ஸாலதான் ஈசியா அப்ரோச் பண்ண முடியும். அவங்களும் கேர்ள்சுக்கு மட்டும்தான் அன்பா
பதில் சொல்வாங்க. நம்ப நாட்டப் பொறுத்தவர கேர்ள்ஸ எந்த இடத்துக்கு அனுப்புனாலும் வேல
சுலபமா முடிஞ்சிடும்” முதலாளி சிரித்தார். அதனால் மேனேஜரும் சிரித்தார். தொழிலாளிகளில்
பாதி பேருக்கு மேல் சிரித்தனர். கதிரவனும் சிரித்தான். முதலாளி நல்ல ஆள் என்ற எண்ணம்
அவனுடைய மனதில் பதிந்துவிட்டது. தனியாக கேள்வி எதுவும் கேட்க மாட்டார் என்ற எண்ணம்
ஏற்பட்டிருந்தது. முதலாளியினுடைய பேச்சு அவனைக் கவர்ந்திருந்தது. ரொம்பவும் புத்திசாலி
என்று எண்ணினான். அதனாலேயே முதலாளியை அவனுக்கு அதிகம் பிடித்திருந்தது. எதிராளியை வெட்டச்
சொன்னாலும் வெட்டும் அளவுக்கு அவனுக்குள் விசுவாசம் பெருகியிருந்தது. பக்கத்திலிருந்த
பூங்குழலியைப் பார்த்தான். அவள் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தாள். திரும்பி பக்கத்திலிருந்த
பையனைப் பார்த்தான். அவன் தலையைக் கவிழ்த்து செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தது தெரிந்தது.
ஏன் எல்லாரும் செல்ஃபி பைத்தியமா இருக்காங்க என்று நினைத்துக்கொண்டே முதலாளியைப் பார்த்தான்.
“நீங்க
தெரிஞ்சிக்க வேண்டியது தனிமனித விருப்பங்களுக்கு இங்க எடமில்ல. அது முக்கியமுமில்ல.
நிறுவனம்தான் முக்கியம். அதோட வளர்ச்சிதான் முக்கியம். நிறுவனம் இல்லன்னா நீங்க இல்லெ.
கீழ்படிதல் மேன்மய தரும். எதிர்ப்புக் கூடாது. ஒத்துழைப்பு மட்டும்தான் முக்கியம் புரியுதா?
எல்லா விசயமும் எனக்குத் தெரியும். வேற ஒரு சேனல்ல பார்ட்னரா இருந்தவன்தான் நான்” பஎன்று
சொன்ன முதலாளி திரும்பி மேனேஜர் பக்கம் பார்த்து “அப்பறம் என்ன?” என்று கேட்டார்.
“அவ்வளவுதான் சார்” என்று வாயை கையால் மூடிக்கொண்டு
பவ்யமாக மேனேஜர் சொன்னார்.
“சரி” என்பதுபோல தலையை ஆட்டிய முதலாளி தொழிலாளிகளின்
பக்கம் திரும்பி கண்டிப்பான குரலில் சொன்னார் “உங்க எல்லாரோட மொபைலும் எப்பவும் ஆன்லதான்
இருக்கணும். சார்ஜ் இல்லன்னு சொன்னா வேல முடிஞ்சிடும்” என்று சொல்லிவிட்டு எழுந்த முதலாளிக்கு
என்ன தோன்றியதோ நின்றபடியே சொன்னார் “உங்ககிட்ட கொடுத்திருக்கிறது வெறும் மைக் இல்லெ.
வெறும் கேமரா இல்லெ. கேமராவும் மைக்கும்தான் இப்ப உலகத்த ஆண்டுக்கிட்டு இருக்கு. இயக்கிக்கிட்டு
இருக்கு. அதுதான் இப்ப ஒலகத்தோட பெரிய கடவுள். கேமராவயும் மைக்கயும் வச்சி என்னிக்கும்
தீராத, அணயாத நியூஸ்ங்கிற பெரும் பசிய உருவாக்குங்க. அந்த பசிதான் விளம்பரம். பணம்.
வாழ்க்க. அதனால இருபத்தி நாலு மணி நேரமும் மைக்கயும் கேமராவயும் எடுத்துக்கிட்டு சமூகத்த
தொடர்ந்து போங்க. வர்ற வெள்ளிக்கிழம உலகமே நம்ம சேனல திரும்பிப்பாக்கணும். புரியுதா?
ரெண்டாயிரத்தி பாஞ்சி மட்டுமில்ல இந்த நூற்றாண்டே மீடியா வாழ்க்க, மீடியா உருவாக்குன
வாழ்க்கதான். அதலயிருந்து ஒரு ஆள்கூட தப்பிச்சி இருக்க முடியாது. கூடாது. அப்பிடியிருந்தா
அது பெணம். பொணம்கூட இப்ப முக்கியமான நியூஸ்தான். எல்லா விசயத்தயும் பாக்கணும். எல்லாத்தயும்
கத்துக்கணும். எல்லாத்தயும் நியூஸா மாத்த விழிப்பா இருக்கணும். எதிர்ப்பார்ப்போட, திகிலோட
வற்றாத ஊற்றா இருக்கணும் நியூஸ். நியூசுங்கிறது வார்த்தைகள், குரல்கள், காட்சிகள்தான்.
கேர்ஃபுல்” என்று சொல்லிவிட்டு கையிலிருந்த கேண்டு மைக்கை மேனேஜரிடம் கொடுத்துவிட்டு
முதலாளி வெளியே சென்றார். “இருங்கள்” என்பது மாதிரி தொழிலாளர்களுக்கு கையைக்காட்டிவிட்டு
மேனேஜரும், செய்திப்பிரிவு ஆசிரியரும் முதலாளிக்குப் பின்னால் ஓடினார்கள்.
ஹாலில்
உட்கார்ந்திருந்த தொழிலாளர்கள் முதலாளியின் அறிவுக்கூர்மையைப் பற்றி, அவருடைய நல்ல
மனம் பற்றிப் பேச ஆரம்பித்தனர். கதிரவன் வெட்கத்தைவிட்டு பக்கத்திலிருந்த பூங்குழலியிடம்
“நம்ப முதலாளி தங்கமானவர்” என்று சொல்லி சிரித்தான். பதில் சொல்லாமல் அவள் முதலாளி
உட்கார்ந்திருந்த நாற்காலியை செல்போனில் படம் எடுத்துக்கொண்டிருந்தாள்.
உயிர்மை – ஜுலை 2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக