ஹனிபாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் முதலமைச்சர்
இமையம்
1977இல் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது எனக்கு வயது 12. எங்களுடைய ஊருக்குத் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக மாலை வேளையில் ஒரு அம்பாசிடர் கார் வந்தது. காருக்குள் இருந்தவர் துண்டுப் பிரசுரங்களை அள்ளி வீசிக்கொண்டேபோனார். துண்டுப் பிரசுங்களைப் பொறுக்குவதற்காகத் தெருப் பிள்ளைகள் எல்லாம் காரைப் பின்தொடர்ந்து ஓடினார்கள். அப்படி ஓடிய சிறுவர்களில் நானும் ஒருவன். யார் அதிகத் துண்டுப் பிரசுரங்களைப் பொறுக்கிச் சேர்க்கிறார்கள் என்பதில் சிறுவர்களான எங்களுக்குள் ஒரு போட்டி. அதனால், காரைப் பின்தொடர்ந்து தெருத்தெருவாக ஓடிக்கொண்டிருந்தோம். அப்படி ஓடிக்கொண்டிருக்கும்போது காரில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியில், ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ என்ற பாடலைப் போட்டார்கள். அந்தக் கணத்தில்தான் கலைஞர் எனக்குள் வந்தார். தி.மு.க. எனக்குள் வந்தது.
‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’, ‘அண்ணா அழைக்கின்றார்’, ‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா’ போன்ற பாடல்கள், சினிமாப் பாடல்களைப் போன்றில்லாமல் வேறாக இருந்தன. பாடிய குரலும் வேறாக இருந்தது. 12 வயதில் கேட்ட அந்தப் பாடல்களை இன்றும் கேட்கிறேன். பாடல் வரிகளும் பாடிய குரலும் எனக்குள் அப்படியேதான் இருக்கின்றன. எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு ஏற்பட்டதில்லை. ஏற்படாது. யார் எழுதிய வரிகள், யார் பாடியது, எதற்காகப் பாடியது என்பது எதுவும் எனக்கு அப்போது தெரியாது, ஆனால், பாடல் வரிகளும், பாடிய குரலும் என் இரத்தத்தோடு கலந்துவிட்டது. சினிமாப் பாடல்களைப் பாடும் குரல்கள் போன்று இல்லை, கிராமத்துக் குரல். ஒருவிதத்தில் நாட்டுப்புறத்தான் குரல். கட்டைக்குரல். அதே நேரத்தில் தனித்த குரல். அந்தக் குரலில், ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ என்ற பாடலை எப்போது கேட்டாலும் அப்போது எனக்குள் ஒரு மாற்றம் நிகழும். அந்த மாற்றத்தை, அந்த சந்தோஷத்தை வார்த்தைகளினால் சொல்லிவிட முடியாது.
தி.மு.க.வைப் பற்றியும், கலைஞரைப் பற்றியும், நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம் பற்றியும் பாடல்களை யார் எழுதியது, எந்தச் சூழலில் எழுதப்பட்டது, பாடியது யார், எதற்காக, யாருக்காகப் பாடினார் என்பதெல்லாம் பின்னாளில்தான் நான் தெரிந்துகொண்டேன். மாபெரும் அரசியல், சமுதாய இயக்கத்திற்கு ஒரு பாடகர் தன் குரலின் வழியாகச் செய்த பங்களிப்பு, காலம் முழுவதும் நிற்பதாக மாறிவிட்டது. இது காலம் சொல்லும் வரலாறு.
பெரியாரையும் அண்ணாவையும் கலைஞரையும் தி.மு.க.வையும் கடைநிலை மனிதன்வரை தன்னுடைய இசையின் மூலம் கொண்டுபோய் சேர்த்த பெருமை, ‘இசை முரசு’ என்று கலைஞரால் போற்றப்பட்ட நாகூர் ஹனிபாவுக்கு மட்டுமே உண்டு. இப்படியொரு பாடகர் இந்தியாவில் எந்தக் கட்சியிலும் இல்லை.
1935இல் மலேசியாவில் வேலை பார்த்துவந்த தனது தந்தைக்காக ‘சைபுல் இஸ்லாம்’, ‘தாருல் இஸ்லாம்’, ‘குடி அரசு’ போன்ற இதழ்களை வாங்கி அனுப்புகிற வேலையைப் பார்த்தவர் ஹனிபா. முதலில் தான் படித்துவிட்டு, பிறகு தந்தைக்கு அனுப்பினார். அந்தப் படிப்பால், பத்திரிகைகளால்தான் திராவிட இயக்கப் பற்றாளரானார். 12, 13 வயதிலேயே கலைஞருடன் இணைந்து திருவாரூர் ஒடம்போக்கி நதியில் நடந்த திராவிட இயக்கக் கூட்டங்களுக்குச் சென்றவர். கடைசிவரை கலைஞரை, ‘மு.க.’ என்று உரிமையுடன் அழைத்தவர். 1939இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். 13 வயது என்பதால் காவல் துறையினர் சிறைக்கு அனுப்பவில்லை.
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வுக்கு அழைத்தபோது, “எனக்கு ஒரே இறைவன். ஒரே கட்சி. ஒரே தலைவன் (கலைஞர்)” என்று சொன்னவர். கடைசிவரை தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளதாவர். அதனால்தான் ‘கற்பு நெறி தவறாதவர்’ என்று கலைஞர் புகழ்ந்தார். அதோடு நிற்காமல், “ஆடாமல் அசையாமல், அலை பாயாமல், சபலத்திற்கு ஆட்படாமல், எதிரிகள் கோடியிட்டு அழைத்தாலும் தொடேன், தொடேன் என்கிற உறுதிமிக்க இசைவாணர்” என்று எழுதினார். 1961இல் அவர் தி.மு.க.விலிருந்து ஈ.வெ.கி. சம்பத் பிரிந்தார். கண்ணதாசனும் பிரிந்தார். அப்போது ஹனிபா நாகை சலீமிடம் சொல்லி பாடலை எழுதவைத்து, பாடிய பாடல்தான். ‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா’. இப்பாடலை 1961இல் பாடியிருந்தாலும் பின்னாளில் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து பிரிந்த போதும். வை.கோபால்சாமி, தி.மு.க.விலிருந்து பிரிந்தபோதும் தி.மு.க. மேடைகளில் அதிகம் ஒலித்த பாட்டு இதுதான். தி.மு. கழகத்திற்குத் துரோகம் செய்பவர்களுக்காக ஹனிபா உருவாக்கிய பாடல். அன்று மட்டுமல்ல, எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் பாடல்.
1940 முதல் 2006ஆம் ஆண்டுவரை, அதாவது 65 ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கான இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர். எந்த இசைக் கலைஞரும் செய்யாத சாதனை, ‘ஹனிபாவுக்கு ஒலிபெருக்கியே தேவையில்லை’ என்று பெரியார் புகழ்ந்துள்ளார். ஹனிபா எந்த இசை நிகழ்ச்சிக்குச் சென்றாலும் ஒத்திகை பார்க்கிற பழக்கமற்றவர். எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பாடுகின்ற வல்லமை படைத்தவர். இந்தி எதிர்ப்புப் போராட்ட சமயத்தில் பாரதி தாசன் எழுதிய, ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!’, ‘தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’, ‘பாண்டியர் ஊஞ்சலில் பாடி வளர்ந்த பைந்தமிழ்’ ஆகிய பாடல்களை ஹனிபா பாடினார். பாரதி தாசனின் பாடல் வரிகளும் ஹனிபாவின் குரலும் இந்தி எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்குப் பெரும் ஆற்றலைத் தந்தது. எழுச்சியைத் தந்தது. பாரதி தாசன்மீது மிகுந்த பற்றுக்கொண்டவர். அதைவிடவும் தமிழ் மொழி மீது அதிகப் பற்றுக்கொண்டவர். அதனால்தான், ‘தமிழ் எங்கள் தாய் மொழி. இஸ்லாம் எங்கள் மார்க்க வழி’ என்று சொன்னார்.
ஹனிபா பாடியதில் ஒரு பாடல்கூட காலத்தால் மங்கிப்போகவில்லை. மாறாக, புது ஆற்றல் கொண்டு ஒலித்துக்கொண்டிருக்கிறது. ‘அண்ணா அழைக்கின்றார்’ (1955), ‘கல்லக் குடிகொண்ட கருணாநிதி வாழ்கவே’ (1953) ‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா’ (1961), ‘எத்தனை கலைஞர்கள் இருந்தாலும் தமிழ் வித்தகக் கலைஞர்’ (1962), ‘ஓடிவருகிறான் உதய சூரியன்’ (1984), ‘கம்பீரக் கலைஞர் எங்கள் கருணாநிதி (1984), ‘ஆசை ஆசை கலைஞர்மீது ஆசை’ போன்ற பாடல்கள் தி.மு.க.வின் கிளைக்கழக நிகழ்ச்சி முதல், ஒன்றிய, நகர மாவட்ட, மாநில மாநாடுகளில் இன்றுவரை ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. தி.மு.க. இருக்கும்வரை ஒலிக்கும். தி.மு.க. மாநாடுகளில் மட்டுமல்ல, தி.மு.க. நடத்தும் போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும்கூட ஹனிபாவின் பாடல்கள்தான் அனைவரையும் ஒன்றிணைக்கும் கருவியாக இருக்கிறது. முன்பு அல்ல, இன்றல்ல என்றும் தி.மு.க.வின் பிரச்சாரப் பீரங்கியாக இருப்பது ஹனிபா பாடிய பாடல்கள்தான். அந்த நாட்டுப்புறத்துக் குரல்தான். தி.மு.க. போன்ற ஒரு கட்சியையும், ஹனிபா போன்ற ஒரு பாடகரையும் உலகில் எங்குமே காண முடியாது. அதிசயமான கட்சி. அதிசயமான தொண்டன். ‘ஆசை ஆசை கலைஞர் மீது ஆசை’ என்ற பாடலில் ‘உன்னை அடித்து விளையாட ஆசை’ என்று பாடியிருக்கிறார். இப்படிப் பாடுவதற்கு ஹனிபாவுக்கு மட்டுமே ஆற்றல் உண்டு. தி.மு.க. நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல, கட்சிக்காரர்களுடைய திருமண நிகழ்ச்சிகளிலும் பிற நிகழ்ச்சிகளிலும் ஹனிபா பாடிய பாடல்கள்தான் ஒலிக்கின்றன. இது ஒரு உலக அதிசயம்.
திராவிட இயக்கக் கொள்கைகளுக்காகப் பாடியதோடு ஹனிபா பல திரைப்படங்களிலும் பாடியிருக்கிறார். ‘குலேபகாவலி’ படத்திலும் ‘பாவ மன்னிப்பு’ படத்திலும் எல். ஜி. கிருஷ்ணனுடனும் T.M. சௌந்திரராஜனுடனும் இணைந்து பாடியிருக்கிறார். ‘செம்பருத்தி’ படத்தில், ‘நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு’ காலகாலத்திற்கும் ஏற்ற பாடல். காதலர்களால் கொண்டாடப்படும் பாடல். இப்பாடலை நான் சோகமாக இருக்கும்போதெல்லாம் விரும்பி ஆசையாகக் கேட்டிருக்கிறேன். இப்போதும் கேட்கிறேன். தமிழ் மொழியில் மட்டுமல்ல, சிங்கள மொழியிலும் இந்தி, உருது, அரபு மொழிகளிலும் பாடியிருக்கிறார். தன்னுடைய வாழ்நாளில் பல மொழிகளில் தனிப் படல்களையும், சினிமாப் பாடல்களையும், பக்திப் பாடல்களையும் பாடியவர். பல்லாயிரக் கணக்கான இசைக் கச்சேரிகளை நடத்தியவர்தான் என்றாலும் ஹனிபா முறையாக இசை கற்றவர் அல்ல என்பதுதான் நாம் கவனம் கொள்ள வேண்டிய விஷயம். ‘இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லை என்று சொல்லுவதில்லை’ (1963) என்ற பாடலை இஸ்லாம் சமூகத்தினர் மட்டுமல்ல, இந்து மடாதிபதிகளும்கூட இன்றும் விரும்பிப் பாடுகின்றனர். எல்லா மக்களாலும் கொண்டாடப்படும் பாடல். இஸ்லாம் சமூகம் இருக்கும்வரை ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலும் ஹனிபாவின் குரலும் இருக்கும். அழியாத பாடல். அழியாத குரல்.
திராவிட இயக்கக் கொள்கைகளில், சுயமரியாதைக் கொள்கைகளில் எவ்வளவு ஈடுபாடு கொண்டவர் ஹனிபா என்பதற்கு ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகளைக் காட்ட முடியும். கொள்கைக் குன்று. முஸ்லிம் என்றாலும் இளம் வயதிலேயே பெரியாரை வரவழைத்து நாகூரில் கூட்டம் போட்டவர், தான் கட்டிய வீடுகளுக்கு, ‘கலைஞர் இல்லம்’, ‘அண்ணா இல்லம்’ என்று பெயர் வைத்தவர். பெரியாரோடு முரண்பட்டு திராவிடர் கழகத்தை விட்டுப் பிரிந்தபோது, அண்ணாவுடன் வந்தவர். தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து அண்ணாவால் விருந்து கொடுக்கப்பட்டவர். கலைஞர், பேராசிரியர் அன்பழகன் இருவரின் தோள்களிலும் கையைப் போட்டுக்கொண்டு போட்டோவுக்கு ஸ்டைலாக ‘போஸ்’ கொடுத்தவர். அதிசயமான போட்டோ அது. கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளரும் ஹனிபாவுக்கு அளித்த கௌரவம் அது.
சிங்கப்பூர், மலேசியா என்று வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துவிட்டு வந்த அண்ணா, ஹனிபாவை அழைத்து, “வீட்டுக்கு வீடு உன் பாட்டுதான் ஒலித்துக்கொண்டிருந்தது” என்று சொன்னார். ஹனிபா பாடிய இயக்கப் பாடல்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் வீடுகளில் எல்லாம் அன்று மட்டுமல்ல, இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அதே மாதிரி, ‘இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லை என்று சொல்லுவதில்லை’ என்ற பாடலும் உலகெங்குமுள்ள தமிழர்கள் இல்லங்களில் எக்காலத்திலும் ஒலிக்கும் பாடலாக இருக்கிறது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, ‘தமிழ் மணக்கும் திசையெல்லாம் தேடினேன் உன்னை’ (1969) என்ற பாடலை ஹனிபா பாடியவிதம் ஒரு லட்சம் முறை கேட்டாலும் சலிப்பே வராது. இப்பாடலைக் கேட்டால் அண்ணாமீது பற்றும் மதிப்பும் கூடும்.
‘ஹனி’ என்றால் தேன். ‘பா’ என்றால் பாட்டு. ஹனிபாவின் பாட்டு தேனாக இனிக்கிறது. எனவே அவருக்கு ஹனிபா என்று பெயர் வைத்தவர்களைப் பாராட்ட வேண்டும்” என்று ஹனிபாவைப் பற்றி கலைஞர் பேசியும் எழுதியும் இருக்கிறார். தமிழ்நாட்டில் ஆயிரம் பாடகர்கள் இருந்தாலும், ஹனிபாவுக்கான இடம் என்பது யாராலும் இட்டு நிரப்ப முடியாத இடம். இசை வானில் பறந்த தனித்த பறவை. எளிய கருவிகளையும், நான்கைந்து கருவிகளையும் மட்டுமே கொண்டு ஹனிபா உருவாக்கிய இசைக் கோர்வை என்பது அலாதியானது. உன்னதமானது. தனித்துவமானது.
எழுத்தாளர், பத்திரிகையாளர், ஓவியர், பாடகர் என்று பல பரிமாணங்களைக் கொண்ட ஆபிதீன் என்பவர்தான் ஹனிபாவின் முழு வளர்ச்சிக்கும் காரணமானவர். அவரே பாடகராக இருந்தும், தனக்கு வந்த வாய்ப்புகளையெல்லாம் ஹனிபாவுக்காகத் தந்தவர். புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தந்தவர். ஹனிபாவின் திறமையைக் கண்டறிந்தவர். ஹனிபாவின் நூற்றாண்டில் ஆபிதீனை நினைவுகொள்வது அவசியம். அதிசயமான மனிதர்.
தி.மு. கழகத்திற்கும் அழிவில்லை. ஹனிபாவின் பாடல்களுக்கும் அழிவில்லை. தலைமுறை தலைமுறையாகத் தொடரும் கொள்கை உறவு. ஹனிபாவின் நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாட்டின் முதலமைச்சர், சிறப்பு மலர் ஒன்றை அரசின் சார்பாக வெளியிடுகின்றார், நூற்றாண்டு விழாவையும் நடத்துகின்றார், இயக்கத்திற்காக உழைத்தவர்களைப் பாதுகாப்பதிலும் அவர்களுடைய நினைவுகளைப் போற்றுவதிலும் தீராத தாகம் கொண்டவர்தான் மு.க. ஸ்டாலின். பாசமும் அக்கறையும் ஹனிபாமீது கொண்டவர். சாதாரண எளிய கட்சிக்காரனையே கொண்டாடித் தீர்க்கிறவர், ஹனிபாவின் நூற்றாண்டை எளிமையாகக் கொண்டாடுவாரா என்ன?
கட்சிக்காக உழைத்த யாரையும் தி.மு.கழகம் மறந்ததில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதையை அளிக்கத் தவறியதில்லை. ஹனிபாவுக்குக் கட்சியில் பல பொறுப்புகள் வழங்கப்பட்டன. சட்டமன்ற மேலமை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அவர் மறைந்த பிறகு நாகூர் தைக்கால் தெருவிற்கு ஹனிபா பெயர் சூட்டப்பட்டுள்ளது. சில்லடி கடற்கரை சாலைக்கும் சிறுவர் பூங்காவிற்கும் ஹனிபாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தி.மு.க. என்கிற சமுதாய இயக்கம் இருக்கும்வரை நாகூர் ஹனிபா இருப்பார். தி.மு.க.வின் மேடைகளில் முதல் குரலாக அவருடைய குரலே ஒலிக்கும். தி.மு.க. மேடைகளை எக்காலத்திலும் அலங்கரிக்கும் ஹனிபாவின் குரல். அவருடைய பாடல் இல்லாமல் தி.மு.க. மேடை இருக்காது.
முரசொலி 21.12.2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக