திங்கள், 13 ஜனவரி, 2025

அறுப்புக்குப் போன மாடுகள் - இமையம்

 

அறுப்புக்குப் போன மாடுகள் - இமையம்

1

ஏய் கிட்டிய ஒட்டி நிக்கிறவய்ங்கலாம் தள்ளிக்கப்பா. அடுத்து பெற வாடிக்குள்ள நிக்கிறது கள்ளம்பட்டி மருது மாடு. பேரு கொம்பன். எப்புடிப் பாத்தாலும் மாடு பன்னெண்டு புடி இருக்கும்யா. அழகான தொங்கு நாடி. போனத்திருப்பவிட இந்தத் திருப்பு மாடு ராங்கா தெரியுது. கொம்பன்னு பேருக்கு ஏத்தாப்புல நல்ல விரி கொம்பு மாடுப்பா. அது நிக்கிற தோரணையும், பாக்குற தினுசையும் பாக்கும்போதே பத்து பேத்தையாவுது பாடையில ஏத்தும் போலருக்குயா. 108 ஆம்புலன்ஸுல போக விரும்புறவன் மட்டும் மாட்ட ஒட்டு. மத்த ஆளு ஒதிங்கிக்கஎன்று ஒலிப்பெருக்கியில் அறிவிப்பாளர் சொல்லும்போது பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்து விசில் சத்தமும் கரவோசையும் கிளம்பியது.அந்த அம்மா பேரு என்னப்பா பாண்டியம்மாவா? வீரத் தமிழச்சி பாண்டியம்மா மூக்கணாங்கவுத்த உருவி விடுத்தா. தெம்பு இருக்கவன் மாட்டக் கட்டுயா. மத்தவன் ஒதுங்கிக்க. லாதியா குத்துப்பட்டு சாவாதஎன்று அறிவிப்பாளர் சொன்னதும் பாண்டியம்மாவிற்கு உச்சி குளுந்துவிட்டது. கிட்டியை ஒட்டிக் கட்டியிருந்த தடுப்பு சாரத்தில் புடிகாரர்களில் பலர் உயிருக்குப் பயந்து ஏறி நின்றுகொண்டனர். ஆனாலும் சிலர் மட்டும் கொம்பனைக் கட்டியே  தீர வேண்டுமென்று கிட்டியை ஒட்டி நின்றுகொண்டிருந்தார்கள்.


மருது குலசாமியை வேண்டிக்கொண்டு கொம்பனின் திமிலிலும் பட்டையிலும் மஞ்சளையும் வண்ணவண்ண ஜிகினாவையும் கொட்டிவிட்டான். கிட்டியிலிருந்து தாவி வெளியே ஓடிவந்த கொம்பனைச் சில புடிகாரர்கள் கட்டத் தாவினர். ஆனால் கொம்பன் வெறி பிடித்ததுபோல அவர்களை உலுப்பிக் கீழே தள்ளியது.மாடு வளத்தா இப்புடி மாடு வளக்கணும்யா. இல்லாட்டி ரெண்டு கறவய வளத்திட்டுப் போயிறணுமுயா. அங்க பாருயா ஆட்டத்த. ஆகா! ஆகா! ஆகா! எப்புடித் தூக்கித்தூக்கி வீசுது பாருயா. மாட்டுக்காரு மாட்டத் தரமாத்தான் தயார் படித்தியிருக்காருப்பாஎன்று ஒலிப்பெருக்கியில் அறிவிப்பாளர் சொன்னதைக் கேட்டு மருதும், ஆனந்தும், குமாரும் பூரிப்படைந்தார்கள். மாட்டின் ஆட்டத்தைப் பார்த்து விதவிதமான பரிசுகளை கமிட்டி அறிவித்துக்கொண்டே இருந்தது. போக்கு மாடாக இருந்தால் எப்போதோ கொம்பன் சிண்டாவைத் தாண்டியிருக்கும். அது சுத்து மாடு என்பதால் வாடிக்கு முன்பு சுத்திச்சுத்தி வந்தது. கொம்பைத் தரையில் குத்தி புடிகாரர்களின் பாதுகாப்பிற்காகப் பரப்பியிருந்த மஞ்சிகளைக் கிளறி எல்லோரையும் பயமுறுத்தியது.அற்புதம்யா! அற்புதம்யா! அருமையான மாடுயா! தில்லு இருந்தா தொட்டுப்பாருன்னு சவால் விடுதுயா. தில்லு இருக்க ஆளு மட்டும் தொடு. இல்லாட்டி மாடு வெற்றின்னு அறிவிச்சு கவுரு போட சொல்லிறலாம்என்று அறிவிப்பாளர் சொல்லி முடிப்பதற்குள் ஒரு புடிகாரன் மட்டும் மாட்டின் திமிலில் தாவி இறுகக் கட்டிகொண்டான். மாடு ஒழப்பி எடுத்தது. அவன் தனது புடியை விடுவதாய் இல்லை.பெருங்கொண்ட மாட்டக் கட்டிப் புட்டாயா. டேய் தம்பி மாட்ட மட்டும் கெட்டியா புடிச்சுக்க. விட்டன்னு வையி நீ செத்த. காலப் பிண்ணக் கூடாது. கொம்பப் புடிக்கக் கூடாது. மாடு செவனேனு நின்டா பத்து செக்கண்டு. சுத்துச்சினா மூணு சுத்து. இன்னைக்கு இந்த வாடில இந்தப் பய புடிக்கிறது இது பத்தாவுது மாடுப்பா. இந்த மாட்ட வெல்லபோவது யாருன்னு பொறுத்திருந்து பாப்போம். காளையா, காளையனா? நாலு கால் வீரனா, ரெண்டு கால் வீரனாவெல்லப் போவது யாரு? ஒரு சுத்து முடிஞ்சிருச்சு. மாடு ரெண்டாவது சுத்துச்சுத்துது. தம்பி மாட்டக் கெட்டியாப் புடிச்சுக்க. அசந்தேனா ஆளக் கொன்னுடும்டாஎன்று அறிவிப்பாளர் சொல்லிகொண்டிருக்கும்போது அந்தப் புடிகாரனின் பனியனை வலது கொம்பில் கோர்த்துக் கிழித்துத் தூக்கியது. அவனது விலாவில் கொம்பு கீறி ரத்தம் வழிய ஆரம்பித்தது. ஆனாலும் அவன் விடவேயில்லை. அந்தப் புடிகாரனைப் பார்க்கப்பார்க்க மருதுவுக்கு ஆத்திரமும் அழுகையும் முட்டிக்கொண்டு வந்தது. மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது. பல்லை இறுக்கமாகக் கடித்துகொண்டான். ஊரில் இருக்கும் ஒவ்வொரு சாமிகளுக்கும் ஒவ்வொரு நேர்த்திகடன் செலுத்துவதாக மருது மனதுக்குள் வேண்டிக்கொண்டிருக்கும்போதே, “புடிமாடுஎன அறிவித்துவிட்டார்கள். கூட்டத்தின் சத்தம் ஆர்ப்பரித்தது. மாட்டைக் கட்டியவன் மீது இருந்த கோபத்தைவிட, மாட்டை  ‘புடிமாடுஎன ஒலிப்பெருக்கியில் அறிவித்தவன் மீதுதான் மருதுக்கும் பாண்டியம்மாவுக்கும் அதிக கோபம் வந்தது.

போச்சு. அம்புட்டும் போச்சுஎன்று சொன்ன மருதுவின் உடல் கோபத்தில் நடுங்கியது. மருதுவின் முகத்தைப் பார்த்த குமாரும் ஆனந்தும், “விடுயா மருது அடுத்த வாடில பாத்துக்கிருவோம். நீயொண்ணும் யோசிக்காதஎன்று ஒரே குரலாகச் சொன்னார்கள்.

அம்புட்டு அலப்பு அலப்பியும் கொம்பன் கடேசி வரைக்கும் எக்கவே இல்ல மருது. கொஞ்சம் சுதாரிப்பு இல்லாம போச்சுயாஎன்று சொன்ன குமாரைக் கொன்றுவிடுவதுபோல் வெறித்துப் பார்த்தான் மருது. 

கொம்பக் கோர்த்து அந்த லெக்குலையே அவனக் கழட்டிவிடாம சனியன் புடிச்சது இப்புடியா பண்ணும்?” என்று சொல்லி அங்கலாய்த்தாள் பாண்டியம்மா.கொம்பன் உரிமையாளருக்கு ஒரு ஆறுதல் பரிசக் குடுத்து விடுங்கப்பாஎன்று அறிவிப்பாளர் ஒலிப்பெருக்கியில் அறிவித்ததைக் கேட்ட மருதுவுக்குக் கோபம் வந்தது. ஆயிரக் கணக்கில் கூடியிருந்த சனங்களின் ஆரவாரம், கைத்தட்டல், ஒலிப்பெருக்கியில் ஓயாமல் கத்திக்கொண்டிருந்த அறிவிப்பாளர், வாடிவாசலிலிருந்து ஓடிவந்த மாடுகளை அடக்குவதற்காக ஓடும் பையன்கள், மாடுகளை அடக்கியவர்கள் வாங்கும் பரிசுப்பொருட்கள், வெற்றி பெற்ற மாடுகளின் சொந்தக்காரர்கள் வாங்கும் பரிசுப்பொருட்கள் என்று எதையுமே பார்க்காமல் அந்த இடத்தை விட்டுப் போய்விட்டால் போதும் என்பதுபோல மருது பொடுபொடுவென வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். எதுவும் சொல்லத் தோன்றாமல் அவனுக்குப் பின்னால் ஆனந்தும் குமாரும் போனார்கள். 

மாட்டத் தேடி கவுரு போடாம அவன் பாட்டுக்க எனக்கென்னனு போறானேஎன்று சொல்லி மருதுவைத் திட்டிக்கொண்டே மாட்டைத் தேடிக்கொண்டு போனாள் பாண்டியம்மாள்.

2

இத்தந்தண்டியா இருக்க. ஒரு பொடிப்பயல முட்டித்தள்ள ஒனக்குத் தெம்பில்ல. புண்ணாக்கு வச்சா எளச்சுப்போவேனு, சம்பாரிச்ச காசு அத்தனைக்கும் சாக்குச்சாக்கா ஒனக்கு பருத்திவெத வெள்ளத்தொவரேனு  வாங்கியாந்து போட்டு எம்மயன் எக்குனான். பச்சப் பிள்ளைய வளக்குற கணக்காவுல ஒன்னைய பாத்துகிட்டான். அவன் பொண்டாட்டிய விட ஒன்னயத்தேன் பாசமா நெனச்சான்என்று வீடு வரும்வரை கொம்பனைத் திட்டிக்கொண்டே வந்தாள். கொம்பனைக் கட்டுத்தறியில் கட்டிவிட்டு வீட்டிற்குள் வந்தாள். 

பெற்ற பிள்ளையைப் பறிகொடுத்தவன்போல் மருது படுத்துக் கிடந்தான். அவனுக்குப் பக்கத்தில் ஆனந்தும் குமாரும் உட்கார்ந்திருந்தனர்.

என்னங்கடா ஒங்கபாட்டிக்கு வந்துட்டிய. பொம்பள எப்புடி ஒத்த ஆளா கவுத்த போட்டுப் புடிப்பானு யோசன வேணாமாஎன்று பாண்டியம்மா பொதுவாகக் கேட்டாள்.

நீ அந்த சனியன எதுக்கு வீட்டுக்கு ஓட்டிட்டு வந்தஎன்று மருது பொரிந்தான்.

பின்னெ? மந்தயில விட்டுட்டா வர முடியும்?”

மருதுவுக்குச் சட்டென்று என்னவாயிற்றோ, வேகமாக எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்தான். மாட்டை வெறித்துப்பார்த்தான். பிறகு, பைத்தியம் பிடித்தவன் மாதிரி எட்டி உதைத்தான்.

எழுந்து போனவனைக் காணோமே என்று ஆனந்தும் குமாரும் வீட்டை விட்டு வெளியே வந்தனர். மருது கெட்டகெட்ட வார்த்தை சொல்லிக் மாட்டைத் திட்டிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டு, வீட்டின் பின்புறத்திற்கு வரும்போதே, மாட்டை எட்டிஎட்டி உதைத்துக்கொண்டிருப்பது தெரிந்தது. இருவரும் வேகமாக ஓடிப்போய் மறிப்பதற்கு முயன்றனர். அவர்களை மீறிக்கொண்டு வாரத்தில் செருகியிருந்த தார்க்கம்பை உருவி மாட்டை பலம் கொண்ட மட்டும் அடித்தான். சத்தம் கேட்டு மருதுவின் மனைவி சுகுணாவும் அவன் அம்மாவும் ஓடிவந்தனர். மருதுவை மறிப்பதற்கு முயன்றனர். மருது யாருக்கும் கட்டுப்படவில்லை. யாருடைய பேச்சையும் கேட்கவில்லை. மாட்டை அடிப்பதிலும், கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுவதிலும்தான் அவனுடைய முழுக் கவனமும் இருந்தது.

நாலு வருசமாப் பெத்த பிள்ளமாரி வளத்த மாட்ட இப்புடிக் காலால மிதிக்கிறியேடா!என்று பாண்டியம்மா கேட்டதற்கு, “புடிபட்ட மாடு இனிமே என் வீட்டுல நிக்கக்

கூடாதுஎன்று திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான். திடீரென ஓடிப்போய் மாட்டின் வயிற்றில் ஓங்கி ஒரு குத்துவிட்டு, “வாடிய அலப்பி வெளியேறத் தெரியாத ஒனக்கு ஊம்புறதுக்கா கொம்பு இருக்கு?” என்று சொல்லி, பக்கத்தில் குலுதாடி மூடியிருந்த ரீப்பரை எடுத்து வெறிகொண்ட மாதிரி கொம்பில் ஓங்கி அடி அடித்தான். மாடு மிரண்டு அலம்பியது. ரீப்பரை வைத்து ஆத்திரம் தாங்காமல் மாட்டை அடித்து வெளுத்தான். கொம்பில் ஆட்டம் கண்டு ரத்தம் வழிய ஆரம்பித்த பிறகும் அவனுடைய ஆங்காரம்அடங்கவில்லை. பாண்டியின் அட்டகாசம் அதிகரித்தது. கையில் கிடைப்பவற்றை எல்லாம் தூக்கி மாட்டின் மீது எறிந்தான். வாரத்தில் மருந்து கொடுக்க செருகி வைத்திருந்த மூங்கில் கொட்டாவைத் தூக்கி எறிந்தான். கொட்டாவின் கூரான பகுதி மாட்டின் கண்ணைக் குத்திவிட்டது. கொம்பனின் கண்ணிலிருந்து ரத்தமும் கண்ணீரும் கலந்து வழிந்தது. ஆனந்தும் குமாரும் அவனைக் கட்டிப்பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு வந்து வீட்டுத் திண்ணையில் உட்காரவைத்தனர். மாட்டை அடித்ததிலும் உதைத்ததிலும் மருதுவுக்கு நன்றாக வியர்த்துப்போயிருந்தது.

புடிபட்டா புடிபட்டுட்டு போகுது, கொம்புல எம்புட்டு ரத்தம் வடியுது பாரு. மாடு வெளியேருச்சினா ஒரு பரிசு குடுப்பாய்ங்க. அதுக்குப் போய் பாத்துப்பாத்து வளத்த மாட்ட இப்புடி அடிச்சுக் கொல்லுவியாஎன்று கேட்டு பாண்டியம்மா சத்தம்போட்டாள். 

நா வாங்குன மாடு. நா வளப்பேன், இல்ல, அடிச்சுக்கூட கொல்லுவேன். யாரும் எங்கிட்ட ஏனு கேக்கக் கூடாதுவிரோதியிடம் சொல்வதுபோல சொன்னான்.

நீ வாங்குன மாடுதேன். நாங்களுந்தேன் தண்ணிகாட்டிருக்கோம், தவிடக் காட்டிருக்கோம், சாணி அள்ளிருக்கோம், மாத்தி புடிச்சுக் கட்டிருக்கோம்என்று வீம்பாகச் க்சொன்ன பாண்டியம்மா கண்டாங்கியில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

என்னைய பாத்தா ஒனக்குப் பரிசுக்குக் கோவப்படுறவன்மாரி தெரியுதாஆத்திரத்தை அடக்க முடியாமல் மருது சத்தமாகக் கேட்டான்.

சுகுணா தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள். தண்ணீரை வாங்கிக் குடிக்காமல், சொம்பை வாங்கி ஓங்கித் தரையில் அடித்தான். சொம்பு நெளிந்து உருண்டது.இனிமே நா எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு வாடியப்பக்கட்டுப் போவேன்?” என்று கத்திய மருதுவின் கண்கள் கலங்கின.

இதுல என்னத்தடா அசிங்கத்தக் கண்டுபுட்டஎன்று பாண்டியம்மா கேட்டதும், அவளையே கொன்றுவிடுவது மாதிரி முறைத்துப்பார்த்தான்.

வெளியூருக்காரப் பறையன் புடிச்சிருந்தாலும் ஒரு வழியா மனசாறிப் போயிருக்கும். போயும் போயும் உள்ளூருப் பறையனக் கட்ட விட்டு அம்புட்டு பேத்துக்கும் முன்னாடி எம் மானத்த வாங்கிருச்சு, தூஎன்று சொல்லிவிட்டுக் காறிதுப்பினான்.

தன்னைய கட்றவன் யாருனு அதுக்குத்  தெரியுமாடா?” என்று பாண்டியம்மா கேட்டதும், அவள்மீது எரிந்துவிழுந்தான்.மாட்ட அணையிறமுனு எங்கப்பன் செத்துட்டாருன்னு சொல்லித்தான் என்னைய புடிகாரனா போகக்கூடாதுன்னு சத்தியம் வாங்குன. அதுக்குப் பின்னாடிதான் நான் மாட்ட வளக்க ஆரம்பிச்சேன். இப்ப அதுலயும் மானம் போச்சு.

மாடுதான புடிபட்டுச்சு. நீ ஏன் இப்ப வீடு புடிச்சு எரியிற மாதிரி கெடந்து அலம்புறஎன்று பாண்டியம்மா கேட்டதற்குப் பதில் சொல்லாமல், “அசிங்கமாப் போச்சி. அத்தன பேத்துக்கு முன்னாடி மானம் மரியாத எல்லாம் போச்சே!என்று சொல்லி தனது பிடறியை ஓங்கி சுவற்றில் நங்கென்று இடித்துகொண்டான். 

சத்த அமைதியா இருய்யா. அப்பறம் பேசிக்கிறலாம்என்று குமாரும் ஆனந்தும் சொன்னது மருதுவின் காதில் விழுந்த மாதிரியே தெரியவில்லை.சரி, வா. வெளிய போயி சீரெட்டு குடிச்சிட்டு வரவோம்என்று ஆனந்த் கூப்பிட்டதற்கும் போகவில்லை.

வீட்டுக்குப் போங்க. அப்பறமாப் பேசிக்கிறலாம்என்று மருது சொன்னான். 

நீ மனசு சரியில்லாம இருக்கும்போது நாங்க வீட்டுக்குப் போயி என்னத்தய்யா செய்யப்போறோம்?” என்று சொல்லிவிட்டு குமாரும் ஆனந்தும் மருதுவின் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தனர். அவனைச் சமாதானப்படுத்துவதற்கு என்ன வழி என்று யோசித்துக்கொண்டிருந்தனர்.

அவசரமாகத் தன்னுடைய செல்போனை எடுத்து ஆன் செய்து யாரிடமோ, “அண்ணே எம்மாட்ட குடுப்பமுனு இருக்கேன்ணே. புடுச்சுக்கிறியலாணே? நான் ரெடியாத்தேன் இருக்கேன். ஆமணே கறிக்குத்தாணே நேர்ல வாங்க. பேசுவோம்என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

மருது போனில் பேசியதைக் கேட்ட பாண்டியம்மா, “என்னடா மருது பேசுற? ஒனக்கு மூள கீள கொழம்பிப் போச்சா?” என்று கேட்டதற்கு, “உள்ள போறியா இல்லியா?” என்று விரட்டுவது மாதிரி சத்தமாகக் கேட்டான். பிறகு, முனங்கிக்கொண்டே எழுந்து வீட்டிற்குள் போய் தன்னுடைய அறையில் விரித்துக் கிடந்த பாயில் உட்கார்ந்துகொண்டான். அவனைப் பின்தொடர்ந்து குமார், ஆனந்த், பாண்டியம்மா என்று மூவரும் போனார்கள். 

மாட்ட வளக்க கேக்குறவுகள்ட்ட வித்தாகூட உசுரோடத்தான் இருக்கப்போவுதுனு மனச தேத்திக்கிறலாம். கறிக்கு அனுப்பாதையா. கேக்கறதுக்கே மனசுக்குக் கஷ்டமா இருக்கு. நாலஞ்சு வருசமா வீட்டுல நிண்டது. அதுவும் ஒரு மனுஷ மாரிதேன் நம்மக்கூட இருக்குதுஎன்று பாண்டியம்மா சொன்னதைக் கேட்காதவன்போல உட்கார்ந்திருந்தான் மருது.

கறிக்குலாம் அனுப்ப மாட்டான், நாங்கப் பாத்துக்குறோம்என்று பாண்டியம்மாவிடம் ஆனந்த் சொன்னான். 

இவனுக்கு நல்ல புத்திமதியச் சொல்லுங்கய்யாஎன்று சொல்லிவிட்டு  அறையைவிட்டு வெளியே போனாள்.

வீட்டில் துக்க சம்பவம் நடந்துவிட்டதுபோல மனம் உடைந்துபோய் உட்கார்ந்திருந்த மருதுவைப் பார்ப்பதற்கே ஆனந்துக்கும் குமாருக்கும் சங்கடமாக இருந்தது. அவனைச் சமாதானப்படுத்துவது மாதிரி, “எந்திரியா மருது. வெளிய போயிட்டு வரலாம்என்று குமார் சொன்னான்.

ஏய் மருது கூறுகெட்டத்தனமாப் பேசாதையா. இன்னைக்கு நம்ம மாடு மட்டுமா புடிபட்டுப் போச்சு? ஊருப்பட்ட மாடு புடிபட்டுச்சு. புடிபட்ட மாடு பூராத்தயும் மாட்டுக்காரய்ங்க என்ன கறிக்கா ஏத்துறாய்ங்கஎன்று ஆனந்த் கேட்டான்.

கோபத்துல கொணத்த எளக்காத மாப்ளஎன்று எச்சரிகை செய்கிற குரல் குமார் சொன்னான்.

இந்த மாட்ட வாங்கிட்டு வந்த நாள்லருந்து அதுக்கு எம்புட்டு செலவளிச்சிருக்கேன், அத எப்புடிப் பாத்துக்கிட்டேன்னு எங்கூட இருந்து பாத்தவைங்கதானே நீங்க? ஒரு மூட்ட பருத்தி வெத எம்புட்டு தெரியுமாடா? பிஸ்த்தா ரேட்டு எம்புட்டு தெரியுமாடா? மாசமா இருக்க என் பொண்டாட்டிக்குக் கூட ஒரு நாள் ஒரு பொழுது நல்லது கெட்டத நான் வாங்கிப் போட்டது இல்லடா. சிமுண்டு கொலச்சு கொலச்சு ஏங்கையப் பாரு எப்புடிப் பொத்துப் போய்க் கெடக்குனுஎன்று சொல்லும்போதே மருதுவுக்குக் கண்கலங்கியது. மருது கண்கலங்குவதைப் பார்த்ததும் குமாருக்கும் ஆனந்துக்கும் மனசங்கடமாகி விட்டது. 

இதப் போயி பெரிய விஷயமா எடுத்துக்காதயா. இது ஒண்ணும் ஒலகத்தில நடக்காத விஷயமில்லஎன்று சொன்ன ஆனந்த், மருதுவுக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்தான். மருதுவின் தோளைத் தட்டிக்கொடுத்தான்.மாடு வெளியேறியிருந்தா ஒன்னையவிட நாங்கதான் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்போம். இப்ப கவல ஒனக்கு மட்டுமில்ல எங்களுக்குந்தேன் மருதுஎன்று சமாதானப்படுத்துவது மாதிரி சொன்னான்.

எந்திரியா பங்கு வெளிய போயிட்டு வரலாம். முடிஞ்சா சரக்கு போடலாம்என்று குமார் சொன்னதும், “சுகுணாஎன்று மருது கூப்பிட்டான். இரண்டு, மூன்று முறை கூப்பிட்டப் பிறகுதான் அவள் வெளியே வந்தாள்.ரெண்டாயிரம் பணம் எடுத்தாஎன்று சொன்னான்.

எதுக்கு?” என்று கேட்டாள் சுகுணா.

சொன்னத மட்டும் செய்யி. இல்லன்னா உசுரோட இருக்க மாட்ட, போஎன்று மருது சொன்னதும் சிறிது நேரம் அவனுடைய முகத்தையே வெறுப்புடன் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தாள். பிறகு கோபத்துடன் போய் வேண்டாவெறுப்பாகப் பணத்தை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள். சுகுணா போனதும் பணத்தை குமாரிடம் கொடுத்து, “சரக்கும் சைடு டிஷ்ஷும் வாங்கிக்கிட்டு, அய்யனார் கோயிலு கம்மாய்க்கிட்ட வந்துருஎன்று மருது சொன்னான். பிராந்தி குடித்தால் மருதுநார்மல்ஆகிவிடுவான் என்று நினைத்துக்கொண்டே பணத்தை வாங்கிகொண்டு கிளம்பினான் குமார்.

மருதுவின் போன் மணி அடித்தது. போனை எடுத்துப் பேசினான்.வீட்டுலதான்ணே இருக்கேன். வாங்கணேபாண்டி போனில் பேசி முடித்ததும், “கிளம்புயா போலாம். வாடில என்ன நடந்துகிட்டுருக்குன்னு பாத்துட்டு வரலாம்என்று ஆனந்த் சொன்னான்.

இனி எங்குட்டும் நான் வர மாட்டேன். பாய் வந்துகிட்டுருக்காப்லஎன்று மருது சொன்னதும் ஆனந்துக்குக் கோபம் வந்துவிட்டது.

மருது வேணாம்யா. ஒங்கம்மா எப்பிடி ஆளுன்னு ஒனக்கேத் தெரியும். ஊரயே கூட்டி வம்பு வளக்கிற ஆளுஎன்று ஆனந்த் சொன்னதற்கு, “எல்லாத்தயும் நான் பாத்துக்கிறன்என்று நிதானமான குரலில் சொன்னான் மருது. அவனை வெறுப்புடன் பார்த்தான்.இத்தினி வருசமா நீ சொன்னதையெல்லாம் செஞ்சிருக்கேன். இதெ மட்டும் நான் என் உசுரே போனாலும் செய்ய மாட்டேன்என்று பிடிவாதமான குரலில் ஆனந்த் சொன்னான்.

உசுரு பெருசா? மானம் பெருசா?” என்று மருது கேட்டான். அதற்கு ஆனந்த் பதில் சொல்லவில்லை. மருதுவின் முகத்தையேப் பார்த்தான். வாடிப்போய்க் கிடந்தது. பார்ப்பதற்கே சங்கடமாக இருந்தது. 

மாடு புடிபடுறதும் வெளியேறதும் சகசம். இந்த சின்ன விஷயத்தப் போட்டு பெருசு பண்ணாதஎன்று ஆறுதல்படுத்துவது மாதிரி ஆனந்த் சொன்னான்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பல ஊர்களுக்குச் சென்று அலைந்துதிரிந்து, சுழி சுத்தம் பார்த்து, முகவெட்டுப் பார்த்து, குளம்பும் வாலும் பார்த்து, இரண்டு பல்லில் பிடித்துக்கொண்டு வந்தது. கொம்பன் என்று பெயர் வைத்து, புது மாப்பிள்ளையைப் போல் அதைப் பராமரித்தது. வரும்போது காரியாக வந்து கட சேரசேர இரு சாதியாக நிறம் மாறியதைப் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தான் மருது. அவனுடைய பேச்சைக் கேட்ட ஆனந்த், “எனக்கு எல்லாம் தெரியும்என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது பாண்டியம்மா வந்து, “யாரோ ஒன்னெயக் கூப்புடுறாக பாருஎன்று சொல்லிவிட்டுப் போனாள். பட்டென்று எழுந்து வாசலுக்குப் போனான் மருது. அவனோடு ஆனந்தும் போனான்.

வாசலில் ஆசாத் பாய் நின்றுகொண்டிருந்தார். ஒரு மினி டெம்போவும் வந்திருந்தது.

வாங்கணேஎன்று சொல்லிவிட்டு, கட்டுத்தறிக்குப் போனான் மருது. அவனுக்குப் பின்னால் ஆசாத்தும் ஆனந்தும் போனார்கள்.

இதுதாணே, எம்புட்டுக்குணே கேக்கிறிய?” என்று மாட்டைக் காட்டி ஆசாத்திடம் மருது கேட்டான்.

ஏய் நீ என்னப்பா நல்ல மாட்டக் குடுக்குரம்னு நிக்கிற? வச்சு பாக்க முடியலையாக்கும்.”  ஆசாத் கிண்டலாகக் கேட்டார்.

ஒரு கொம்பு ஒடஞ்சு போச்சுணே.மருது மனதார பொய் சொன்னான்.

வச்சு வைத்தியம் பாருப்பா.ஆசாத் அக்கறையுடன் சொன்னார்.

இல்லணே இனி இது சுத்தப்பட்டு வராது. நீ வெலையச் சொல்லுணே.” 

மாட்டுக்காரதேன் வெலயச் சொல்றது வழக்கம்என்று சிரித்துக்கொண்டே ஆசாத் சொன்னார்.

நீ கேக்குறதுதான்ணே வெல. பணமே இல்லன்னாலும் இழுத்துக்கிட்டு போயி கறிக்குத் தள்ளிருணே.

மருது பேசிய விதம் ஆசாத்துக்குச் சந்தேகத்தை உண்டாக்கியது. அவனுடைய பேச்சும் முகத்தோற்றமும் இயல்பாக இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

எனக்குத் தெரிஞ்சி நம்ம வட்டாரத்தில பத்துபதினஞ்சு வருசமா கேரளாவுக்கு அடிமாடு ஏத்திக்கிட்டு போறவரு நீங்க ஒரு ஆளுதான்ணே. அப்படிப்பட்ட ஆளு வந்து ஏங்கிட்ட வெல கேட்டாநக்கலாகக் கேட்டான் மருது.

அண்ணே மாட்ட நாங்க குடுக்கலணே. கோவிச்சிக்கிறாம கெளம்புங்கணேஎன்று ஆனந்த் சொன்னதும் அவனை முறைத்துப்பார்த்தான் மருது.இதுல நீ தலயிடக் கூடாது. இது என்னோட மானப் பிரச்சனஎன்று கடுமையான குரலில் சொன்னதைக் கேட்ட ஆனந்த் வாயடைத்துப்போய், அந்த இடத்தில் நிற்பதற்குப் பிடிக்காத மாதிரி வீட்டு வாசல் பக்கம் போனான்.

என்னயா மருது நீ ஒண்ணு சொல்ற. ஓம் ஃபிரண்டு என்னமோ சொல்லிட்டுப் போறாப்புலஎன்று ஆசாத் கேட்டார்.

அது ஒண்ணுமில்லணே. நீங்க வெலையச் சொல்லுங்கணே. பல்லு இப்பதானே கட சேந்துச்சு.

ஆசாத் ஒரு விலையைச் சொன்னார். மருது ஒரு விலையைச் சொன்னான். இரண்டாவதாக ஆசாத் சொன்ன விலைக்கு ஒப்புக்கொண்டான்.

உடனே வாங்கன்னு கூப்பிட்டதாலதான் வந்தன். இப்ப கையில அஞ்சாயிரந்தான் இருக்கு. மீதியக் காலயில பெயல்ட்ட குடுத்து அனுப்புறேன்என்று சொல்லிவிட்டு ஆசாத் பணத்தைக் கொடுத்தார். மறுப்பேச்சில்லாமல் பணத்தை வாங்கிக்கொண்டான் மருது.

எண்ணிப்பாத்துக்கயாஎன்று ஆசாத் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஆனந்த், பாண்டியம்மா, சுகுணா என்று மூன்று பேரும் வந்தனர்.

என்னடா பண்ணிக்கிட்டிருக்க?” என்று ஆத்திரத்துடன் பாண்டியம்மா கேட்டதற்குப் பதில் சொல்லாத மருது, மாட்டின் கயிற்றை அவிழ்த்து ஆசாத்திடம் கொடுத்து, “நீங்க ஏத்திக்கிட்டு போங்கணேஎன்று சொன்னான்.

நீ செய்யிறது ஒனக்கே நல்லா இருக்காடா? ஊருல நாலு பேரு இதக் கேட்டா சிரிப்பாய்ங்க தெரியுமா?” என்று பாண்டியம்மா சொன்னதற்கு, “நல்லாயிருக்கிறதாலதான் செய்யிறேன்என்று திமிர்த்தனமாகப் பதில் சொன்னான் மருது.

அண்ணே எங்க வீட்டுகாரு மாட்டக் குடுக்கலணே. நீங்க கவுத்த விடுங்கஎன்று சொல்லி மாட்டின் கயிற்றைக் கேட்டாள் சுகுணா.

மரியாதையா வீட்டுக்குள்ள போயிரு. கவுத்தயிலாம் கேக்கக் கூடாது. அட்வான்ஸ் வாங்கியாச்சுஎன்று மருது சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் ஆசாத்தின் கையில் இருந்த மாட்டின் கயிற்றைப் பிடுங்குவதற்கு முயன்ற சுகுணாவின் கன்னத்தில் மருது ஓங்கி ஒரு அறைவிட்டான்.

நீ என்னைய அடிச்சுக் கொன்னாலும் பரவால்ல. நான் மாட்ட விக்க விட மாட்டேன்என்று சொன்ன சுகுணாவை நின்ற நிலையில் எட்டி உதைத்தான் நிலை தடுமாறிக் கீழே விழுந்தவளைத் திரும்பத்திரும்ப எட்டி உதைத்தான். 

என்னடா செய்யிற பாவிப்பயலே. அவ நாலு மாச புள்ளத்தாச்சிங்றதுகூட ஒன் புத்திக்கு எட்டலியா? அப்பனவிட மொரட்டுப்பயலா இருக்கானே. ஒன்னயப் போயி ஒரு புள்ளன்னு பெத்தேன் பாருஎன்று சொல்லிக்கொண்டே மருதுவை நெட்டித்தள்ளினாள் பாண்டியம்மா. மீண்டும் சுகுணாவை உதைப்பதற்குப் போன மருதுவை ஆனந்த் வந்து மறித்துக்கொண்டான்.

என்னடா செய்யிற? முட்டாப் பயலாடா நீயிஎன்று கேட்டதற்காக ஆனந்த் மீது மருது கோபப்பட்டான்.

வீட்டுல பிரச்சனன்னா வேணாம் மருதுஎன்று சொன்ன ஆசாத்தின் பேச்சையும் கேட்கவில்லை.நீங்க புடிச்சிக்கிட்டுப் போங்கணேஎன்று மருது ஒரே வார்த்தையாகச் சொன்னான். 

பொம்பளப் பிள்ளையப் போயி இப்புடிப் போட்டு அடிக்கலாமா மருது?” என்று ஆசாத் கேட்டதற்குக் கோபமாக, “ஆம்பளக்கி வந்த அசிங்கத்தப் பத்திக் கவலப்படாத பொண்டாட்டி, என்னணே பொண்டாட்டி?” என்று மருது ஆத்திரம் பொங்கக் கேட்டான்.

 “போயும்போயும் ஒனக்கு வந்து தாலியறுக்க வந்தேன் பாரு, அதுதேன் எனக்குப் புடிச்சக் கேடு. நீயெல்லாம் ஒரு ஆளுன்னு ஒங்கூட படுத்த என்னெச் சொல்லணும்என்று சொல்லி சுகுணா தலையில் அடித்துக்கொண்டாள்.

சுகுணாவைச் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போன ஆனந்திடம், “கொம்பன்னு பேருவச்சு ஆச ஆசயா வளத்த மாட்ட கறிக்கு ஏத்துறது நியாயமாண்ணே. நீயே சொல்லுணேஎன்று சுகுணா கேட்டாள். அவளால் ஆத்திரத்தையும் அழுகையையும் கட்டுப்படுத்த முடியவில்லை. மருது தன்னை எட்டி உதைத்துக் கீழே தள்ளியதுகூட அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. கொம்பனைக் கறிக்கு ஏற்றிவிடுவேன் என்று சொல்வதைத்தான் அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அவங்கப்பாவவிட முன்கோவக்காரனா இருக்கியான். யார் பேச்சயும் கேக்க மாட்டேங்கிறான். ரெண்டு நாள் ஆனாதான் கோவம் கொறயும். நீ அதுவரைக்கும் அவன்கிட்ட வாயக் குடுக்காதத்தா. இந்த அண்ணன் சொல்றதக் கேளுத்தாஎன்று சொல்லி சுகுணாவைச் சமாதானப்படுத்திவிட்டுத் திரும்பி வந்தான்.

ஊருக்காரைய்ங்க பேசுவாய்ங்கனு நம்ம வளத்த மாட்டக் கறிக்கு ஏத்துவியாடா? ஒனக்கு மண்டையில ஏதாவது இருக்கா இல்லையா?” என்று பாண்டியம்மா கேட்டாள். 

மண்டையில அது ஒறைக்கவும்ந்தேன் மாட்ட ஏத்துறேன். போம்மா அங்குட்டு. கோவத்தக் கெளப்பாத. ஒன்னைய கொரவலய நெருச்சி கொன்னுட்டுப் 

போயிருவேன்என்று பாண்டியம்மாவை அதட்டிவிட்டு, “நீங்க கெளம்புங்கணேஎன்று ஆசாத்திடம் சொன்னான் மருது.

தன்னுடைய மாட்டை அடிமாட்டிற்கு விற்பதற்கு மருதுவுக்கு எப்படி மனம் வந்தது என்பதுதான் பாண்டியம்மாவிற்குப் புரியவில்லை.ஏம்புட்டு மாடு குதுர மாதிரி ஓடும் குதுர மாதிரி நடக்கும். பாயினா பாயும். நில்லுனா நிக்கும்என்று எப்போதுமே பெருமை பேசிக்கொண்டிருப்பான். அப்பா, அம்மாவைவிட, மனைவியைவிட அவனுக்கு முக்கியமானது கொம்பன்தான். அந்த மாட்டோடதான் நான்கு வருசமாக இருந்தான். பக்கத்தில் போனால் மாட்டின் வாசம்தான் அவன் மீது அடிக்கும். கொம்பன் மூர்க்கமானதுதான், ஆனால் அது எப்படிப் பிடிபட்டது என்பதுதான் பாண்டியம்மாவிற்குப் புரியவில்லை. அவனுடைய மனதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், “மாட்ட வாங்கிட்டு வந்ததுலருந்து எப்பிடியெப்பிடிலாமோ வளத்த, விதவிதமா ட்ரெயினிங்லாம் கொடுத்த, நெதமும் விடிஞ்சும் விடியாததுமா தூக்கிக் கட்டுன, நீச்ச போட்ட, கலப்பயில பூட்டுன, காவார விட்டு சிரிச்ச, மண்ணைக் குமிச்சுக் குத்தவிட்ட, பழக்கு வாடி விட்ட, பெருச்சாலிய நச்சுக் குடுத்த, கோழிகுஞ்ச நசுக்கி ஊத்துன, முட்டைய ஒடச்சு ஊத்தி அம்புட்டுப் பண்டுவம் பாத்து ராவும் பகலும் தூங்காம புது பொண்டாட்டிக்கூட இருக்கிற மாதிரிதான அதுகூட இருந்த? அதெல்லாம் மறந்துட்டு இன்னிக்கிக் கறிக்கு ஏத்துறம்னு வந்து நிக்கிறியே. அடிமாட்டுக்கு ஏத்தாம வளக்குறதுக்கு யாரும் கேட்ட வித்துடு. மாட்ட கறிக்கு ஏத்துறதுக்குப் பதிலா ஒரு குழியத் தோண்டி என்னெயத் தள்ளி மண்ண அள்ளி மூடிட்டுப் போஎன்று சொல்லிவிட்டு பாண்டியம்மா அழுதாள்.

எதயும் ஞாபகப்படுத்தாத, பெத்தத் தாயின்னுகூடப் பாக்காம அசிங்கஅசிங்கமாக் கேப்பேன். அங்குட்டு போ. அட்வான்ஸ் வாங்கிட்டேன், மாட்ட ஏத்தாம விட்டா நாளப்பின்ன என்னைய மதிக்க மாட்டாகஎன்று சொன்ன மருது

இழுத்துக்கிட்டுப் போயி டெம்போவுல ஏத்துங்கணேஎன்று ஆசாத்துக்கு உத்தரவு போட்டான்.

மாட்டை இழுத்துக்கொண்டு ஆசாத் நடக்க ஆரம்பித்ததும், வழியை மறித்துக்கொண்டு நின்றாள் பாண்டியம்மா.பாய் மரியாதையாச் சொல்றேன் மாட்ட விட்டுட்டுப் போயிருங்க. இல்லயின்னா தேவயில்லாமப் பேசுற மாதிரி ஆயிரும். அவன்தான் ஏதோ கோவத்துல சொல்றான்னா நீங்களும் அதுகேத்தாப்புல செய்றீயஎன்று சத்தம் போட்டாள். அப்போது, வீட்டிற்குள்ளிருந்து வந்த சுகுணா, பாண்டியம்மாளுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டாள். இரண்டு பெண்களும் தனக்கெதிராக நின்றுகொண்டிருக்கிறார்களே என்று மருதுவிற்கு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஆத்திரம் உண்டாயிற்று. ஆத்திரத்தில் ஆசாத்தின் கையில் இருந்த மாட்டின் கயிற்றை பிடுங்கிய மருது, மாட்டை இழுத்துக்கொண்டுபோய் வீட்டின் வாசலுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த மினி டெம்போவில் ஏற்ற முயன்றபோது, “யப்பா மருது நாயித்துக் கெழம மேலூரு சந்தைல கூட ஓட்டிட்டு போயி வளக்க கேக்குறவுகள்ட்ட வித்துடு. கறிக்கு மட்டும் ஏத்தாதடா. இன்னைக்கு வெள்ளிக் கெழம. மாடு வீட்ட விட்டுப் போவக் கூடாது. மீறிப் போனா பட்டிப் பெருகாது பாப்பான பொங்காது சாமிஎன்று சொல்லி அவனுடைய காலில் விழுந்து கும்பிட்டுக் கேட்டாள் பாண்டியம்மா.

என்னைய அத்தன கூட்டத்துக்கு முன்னாடி அவமானப்படுத்துன இந்த மாடுதான் மாமியாளுக்கும் மருமவளுக்கும் வேணும்னா, இந்த மாட்ட வச்சிக்கிருங்க. நான் செத்துப் போறேன். இன்னைக்கு ரவைக்கு கட்டாயம் தூக்குல தொங்கிருவேன். இது எங்கப்பன் மேல சத்தியம். ஒரு பறப்பயட்ட புடிபட்ட மாட்டத் தெனம் பாத்துப்பாத்து உக்கி உக்கி சாகுறதுக்கு, நான் தூக்குல தொங்குறதுதேன் நல்லதுஎன்று மருது சொன்னதும் பாண்டியம்மாவும் சுகுணாவும் அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் அப்படியே வெலவெலத்துப்போய் நின்றார்கள். ஆனந்திற்கும் ஆசாத்திற்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மருதுவிற்குப் பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று சந்தேகப்பட்டனர். 

சூழ்நிலையைப் புரிந்துகொண்ட மாதிரி, “மருது , நடக்குறது எனக்கு என்னமோ சரியாப் படல. அட்வான்ஸ் குடுத்தது குடுத்தபடியே இருக்கட்டும். இன்னிக்கி வெள்ளிக்கெழமயா வேற இருக்கு. ரெண்டு நாள் கழிச்சி வந்து ஏத்திக்கிட்டுப்போறன்என்று ஆசாத் சொன்னதைக் கேட்காமல், “இல்லணே. இப்பவே இது என் வீட்ட விட்டுப் போவணும்ணே. இது வெளிய போனாத்தாணே என்னால நிம்மதியா வீட்டுல இருக்க முடியும். இல்லன்னா எனக்குப் பைத்தியம் புடிச்சிரும்ணே. இது சாவணும்ணே. இல்லன்னா நான் சவணும்ணேஎன்று சொல்லி மருது அடம்பிடித்தான். 

நாளைக்கி நான் உசுரோட இருக்கனும்னா, இப்ப ரெண்டு பேரும் வீட்டுக்குள்ளார போங்க. நான் வேண்டாம்னா இந்தா கவுறு, இழுத்துக்கிட்டுப் போயி இந்த சனியனச் செல்லம் கொஞ்சிக்கிட்டு இருங்கஎன்று மருது சொன்னதும், பாண்டியம்மாவுக்கும் சுகுணாவுக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. இருவரும் திகைத்துப்போய் நின்றுவிட்டனர்.

ஏற மறுத்த மாட்டைத் தார்குச்சியால் வெறிகொண்டவன் மாதிரி அடித்து மினி டெம்போவில் ஏற்றினான் மருது. பிறகு ஆசாத்திடம், “கிளம்புங்கணேஎன்று சொன்னான். அதே வேகத்தில் ஆனந்திடம், “வண்டிய எடுஎன்று சொன்னான்.

3

ஊருக்கு மேற்கே கண்மாய் கரையிலிருக்கும் அய்யனார் கோயில் அரசமரத்தடியில் குமார், ஆனந்த், மருது என்று மூவரும் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தனர். மூவரின் முன்னும் விரிக்கப்பட்டிருந்த செய்தித்தாளின் மீது பிராந்திப் பாட்டில் ஒன்றும், தண்ணீர் பாட்டில்கள் இரண்டும், ஐந்தாறு மிக்சர் பொட்டலங்களும், மூன்று பிளாஸ்டிக் கப்புகளும், ஒரு சிகரெட் டப்பாவும் இருந்தன. கோயில் பக்கம் யாராவது வருகிறார்களா என்று பார்த்த மருது, “ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டான்.

ஆரம்பிச்சிரலாம்என்று குமார் சொன்னான்.

பிராந்திப் பாட்டிலைத் திறந்து மூன்று கப்புகளிலும் கொஞ்சம்கொஞ்சமாக குமார் ஊற்றினான். தண்ணீரைக் கலந்தான். மிகவும் அவசரம் என்பதுபோல் கப்பை எடுத்து ஒரே மடக்காக மருது குடித்தான்.என்னயா மாப்ள பழக்கம் இது, ஒரு சியர்ஸ் கூட அடிக்காம குடிச்சிட்டஎன்று ஆனந்த் வருத்தத்தோடு கேட்டான். 

சியர்ஸ் அடிக்கிற நெலமயில இப்ப நான் இல்லஎன்று சொல்லிவிட்டு சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்றவைத்தான் மருது.

குமாரும் ஆனந்தும் தங்களுக்குரிய பிராந்திக் கப்பை எடுத்துசியர்ஸ்சொல்லிவிட்டுக் குடித்தனர். மிக்சர் பொட்டலம் ஒன்றைப் பிரித்து விரித்துப்போட்டிருந்த காகிதத்தின் மேல் கொட்டி, கொஞ்சம்போல அள்ளி வாயில் போட்டுக்கொண்டான் மருது.

இன்னும் கொஞ்ச நேரத்தில இருண்டீரும் போலஎன்றான் குமார்.

கொலசாமி கோயிலுன்றாய்ங்க, எல்ல சாமி, பவர் உள்ள சாமின்னு பீத்திக்கிறாய்ங்க. வாடில நிக்கயில அம்புட்டு வேண்டுனேன். எப்புடியாவுது மாட புடிபடாம வெளியேத்திரு. ஒனக்கு இந்த வருஷம் எருதுகட்டுக்குத் குதுர தூக்குறேன். ஒன் வாசல்ல வந்து மணி அடிச்சு சாத்துறேனு. ஒரு மயிரும் நடக்கலஎன்று சொல்லிவிட்டு அந்த இடத்தில் கிடந்த  பழைய பிராந்திப் பாட்டில் ஒன்றை எடுத்து அங்கு நின்ற மண் குதிரையின் முகத்தை நோக்கி ஓங்கி எறிந்தான். குதிரையின் காதுப் பகுதி உடைந்து கீழே விழுந்தது. 

குமார் கொஞ்சம் பக்தியோடுஏய் சாமிகிட்ட விளயாடாத மருது. அதுதான் நம்ம கொலங்காக்கும்என்றான்.

 “மயிற காக்கும்என்று மருது கோபமாகச் சொல்லிவிட்டுஊத்துஎன்று குமாரிடம் சொன்னான். அவன் மருதுவின் கப்பில் கொஞ்சம்போல ஊற்றியதைப் பார்த்ததும்

இன்னுங் கொஞ்சம் ஊத்துயாஎன்று அதிகாரமாகச் சொன்னான். இரண்டு முறை குடிக்க வேண்டிய பிராந்தியை ஒரே முறையாக ஊற்றினான். பிராந்தியில் தண்ணீரை குமார் ஊற்றுவதற்கு முன்பாகவே அவசரப்பட்டதுபோல தானாகவே தண்ணீரை எடுத்து ஊற்றி ஒரே உறிஞ்சாக உறிஞ்சிக் குடித்தான்.விடுயா மாப்ள. அடுத்தத் திருப்பு பாத்துகிருவோம்என்று ஆனந்த் சொன்னதும், ஏதோ கெட்ட வார்த்தையை அவன் சொல்லிவிட்டதுபோல கோபத்தோடு, “இந்தத் திருப்பே ஒன்னத்தையும் நம்பளால புழுத்த முடியலயாம் இனி அடுத்ததுல புழுத்தப் போறமாக்கும். ரெண்டு, மூணு வருசமா அவன் பத்துபதினஞ்சு மாட்டக் கட்டிபுடுறான். பத்தாதுக்கு வடத்துலயும் எறங்கி ஆடுறான்என்றான் குமார்.

இழுவைய போட்டுருப்பானு எனக்கு தோணுது. இல்லாட்டி நம்ம கொம்பன பாத்தாலே அந்தப் பய மூத்திரம் போயிருவான்என்று ஆனந்த் சொன்னான்.

பறைய வளவுக்காரப் பய ஒருத்தன் மாட்டக் கட்டி நம்ம மூஞ்சீல காறித்துப்பிட்டுப் போயிட்டான். இனிமேக்கொண்டு நான் மாடு வளக்க மாட்டேன். வாடி, வெரட்டுனு எங்கயும் போக மாட்டேன். மாட்ட வளக்குறதுக்குப் பதிலாப் புடிகாரனாப் போயிருக்கலாம். இந்த பாண்டியம்மா பேச்சக் கேட்டது தப்பாப் போச்சிஎன்று சொன்ன மருது , “ஊத்துஎன்றான்.

 “நேரம் இருக்குயா மாப்ள. இப்ப என்னத்துக்கு இப்புடி அவசரப்படுற நீயிஎன்று சொன்னாலும் மருதுவின் கப்பில் கொஞ்சம்போல பிராந்தியை ஊற்றினான் குமார்.

பிராந்தியை எடுத்துத் தண்ணீரைக் குடிப்பதுபோல மடக்கு மடக்கென்று குடித்துவிட்டு  அவசரமாக் ககொஞ்சம் மிக்சரை அள்ளி வாயில் போட்டுக்கொண்டான். சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்றவைத்தான் மருது.

ஏமாட்ட அந்தப் பெயக் கட்டையில எனக்கு வந்த வருத்தத்துக்கு, அந்த சனியன அந்த லெக்குலையே வெட்டிப் கூறு போடணும்னு தோணுச்சுஎன்று சொல்லிக்கொண்டே தானாகவே பிராந்தி பாட்டிலை எடுத்துத் தன்னுடைய கப்பில் கவிழ்த்தான் மருது.

நீ இன்னிக்கிச் செஞ்சது எனக்குச் சுத்தமாப் புடிக்கலயா மருது. என்ன இருந்தாலும் மாட்டக் கறிக்கு ஏத்தியிருக்கக் கூடாது நீ. அதுலாம் பெரிய பாவம்யாஎன்று ஆனந்த் சொன்னான். 

அதப் பத்திப் பேசாதஎன்று எச்சரிக்கிற குரலில் மருது சொன்னான்.

என்னடா சொல்ற?” என்று குமார் ஆனந்திடம் அதிர்ச்சியாகக் கேட்டான்.  கொம்பனைக் கறிக்கு ஆசாத்திடம் மருது விற்றுவிட்டதை, ஆனந்த் சொன்னதும், “அட கொலகார பாவிஎன்று குமார் சொன்னான். பிறகு மருதுவைக் கெட்ட வார்த்தைச் சொல்லித் திட்டினான்.

மாட்டப் பத்தி இனி எவன் பேசுனாலும் அவங்ககிட்ட நான் பேச மாட்டேன். இது எங்கப்பன் மேல சத்தியம்என்று மருது வார்த்தையை வெட்டிவிட்டதும் குமாருக்கும் ஆனந்துக்கும் கோபம் வந்தது. சற்று நேரம் இருவரும் பேசாமல் இருந்தனர்.

மாட்ட அடக்குன புழுத்தி, காரப் பரிசா வாங்கிகிட்டு நேரா வீட்டப் பாத்து போவமுனு இல்லாம, வீம்புக்கு ஊம்புரமுனு நம்மள அசிங்கப்படுத்தணும்னு மாலையப் போட்டுக்கிட்டு, கொட்டு அடிச்சு ஊர்வலமாப் போயிருக்கான். எல்லா டீவிக்காரைங்களும் அத லைவ்ல வேற போட்டுருக்காய்ங்க, நீயூஸுல பாத்தன்என்று குமார் சொன்னான். 

அப்படியா?’ என்பதுபோல வன்மத்தோடு தலையை ஆட்டிக்கொண்டான்  மருது.

எனக்கு வார கோவத்துக்கு அவன் மூஞ்சியில ஆசிட்ட அடிச்சாக் கூட அடங்காதுஎன்று ஆனந்த் சொன்னதும், “ஆசீட்ட அடிக்கிறதால நம்மளுக்கு வந்த அசிங்கம் போயிராதுயா. அவன மட்டுமில்ல, அவைங்க தெருவயே அசிங்கப்படுத்தணும், அப்பதான் எம் மனசு ஆறும். அதுக்கொரு ஐடியாவ சொல்லுங்கயாஎன்று மருது கேட்டான்.

நீ பேசுறதப் பாத்தா ஒனக்கு மட்டும்தான் ஏதோ அசிங்கம் வந்த மாதிரி பேசுற? எங்களுக்குந்தேன் அசிங்கமா இருக்கு. இந்த ஒரு வருசத்துல மட்டும் நீ கொம்பனுக்கு எம்புட்டு காசச் செலவழிச்சியிருக்கன்னு எங்களுக்கும் தெரியும்யாஎன்று சொல்லும்போதே குமாரின் குரல் உடைந்துபோய்விட்டது. 

அதிசயமான ஒரு திட்டத்தைச் சொல்வதுபோல குமார் கேட்டான்:அவன நாளைக்கிப் போட்டுறலாமா மருது?”

ஒருத்தனப் போடுறதால வந்த அசிங்கத்தத் தொடைக்க முடியாது. ஆயுசுக்கு மறக்க முடியாத மாதிரி அவன அசிங்கப்படுத்தணும்என்றான் மருது.

இந்தத் திருச்சியப் பக்கட்டு திண்ணியம்னு ஒரு ஊருல அவுங்க ஆளுக வாயில பீயத் திணிச்சமாரி எனக்கு அவம்புட்டு வாயில அள்ளித் திணிக்கணுமுன்னு தோணுதுஎன்று குமார் சொன்னதும்  அடுத்த நொடியே, மருதுசூப்பர்என்று சொன்னான்.

என்ன சூப்பரு?” என்று கிண்டலும் கேலியுமாகக் கேட்டான் ஆனந்த்.

அவன் ஒத்தையாப் போறப்ப ஆளத் தூக்கிட்டுவந்து அவனத் திங்க வைக்கணும். மாலையப் போட்டுக் கொட்டடிச்சு ஊர்வலமாப் போனதுக்கு இதுதான் அவனுக்குச் சரியான தண்டனையா இருக்கும். அவன் கனவுலயும் இனிமே மாட்டப் பத்தி நெனப்பே வரக் கூடாதுஎன்று சொல்லி மருது சிரித்தான். அவனுடைய மாடு பிடிபட்டப் பிறகு இப்போதுதான் அவன் முதன்முதலாகச் சிரித்தான்.

அவன் ஒத்தையாவா ஊர்வலம் போனியான்? இருபத்தியொரு மாட்ட கட்டியிருக்கான்னு அவன் சாதிக்கார ஆம்பள பொம்பள எல்லாரும் கூட்டு சேந்துலயா போனாய்ங்க. அந்த நாயிங்க எல்லாம் அசிங்கப் படணும், அவமானப் படணும். அது ஊரு ஒலகத்துக்கே தெரியணும். எந்த டீவில அவன் சிரிச்சிக்கிட்டு பேட்டி குடுத்தானோ அதே டீவியில அவன் அழுதுகிட்டு பேட்டி குடுக்கணும்யா அப்பத்தான் எனக்குத் தூக்கமே வரும்என்று ஆத்திரத்துடன் சொன்னான் குமார்.

மொதல்ல டீவிக்காரங்களத்தான் போடணும்என்று வன்மத்தோடு மருது சொன்னான்.

ஒருத்தன் வாயில மூத்தரத்த அடிச்சு விட்றதோ. பீய்ய அள்ளித் திங்கவைக்கிறதோ லேசுதேன். ஆனா அதயே ஒரு வளவு முழுக்கப் பண்றது அவ்வளவு லேசுப்பட்டக் காரியமில்ல. மீறி செஞ்சுபுட்டாலும் போலீசு கோர்ட்டு கேசுனு சாகணும். வாழ்க்கையே லாதியாப் போயிரும். இந்த விசயத்துல நம்ம சாதிக்காரைய்ங்கலே எத்தன பேரு நம்ம கூட நிப்பாய்ங்கனு உறுதியாக் கணிக்க முடியாது. ஏன்னா எல்லாருமே கோர்ட்டு கேசுக்குப் பயப்புடுவாய்ங்கஎன்று ஆனந்த் சொன்னதும், அவன் மீது மருதும் குமாரும் கோபப்பட்டார்கள். அவனைக் கெட்டக் கெட்ட வார்த்தையில் திட்டினார்கள்.

ஒன்னையமாரி ரோசங்கெட்டவன்லாம் உசுரோட இருக்கவுந்தான் அவனுக்குலாம் மாட்டக் கட்டுவம்னு நெனப்பு வருது. நீயெல்லாம் பூமிக்கு எதுக்கு பாரமா இருக்க? எண்ணித்திப்பத்தக் கலக்கி குடிச்சு செத்துப் போயிருஎன்று மருது இழிவான குரலில் சொன்னான். 

இங்கேருயா மருது ஒம்பாட்டுக்க போதையப் போட்டு பேசக் கூடாது. எனக்கும் அந்தப் பெயலயும் அந்த காலனிக்காரைய்ங்க மொத்தப் பேத்தையும் அசிங்கபடுத்தணும்னு ஆசதேன். ஆனா நாளப்பின்ன அது நமக்கே பஞ்சாயத்தா ஆயிரக்கூடாதுன்னு யோசிக்கிறேன்என்று சொன்ன ஆனந்த் ஒரு கை மிக்சரை அள்ளி வாயில் போட்டுக்கொண்டான்.

சாய்ங்கால நேரத்தில நல்லாக் காத்தடிக்கணும், இன்னிக்கி என்னமோ நருசா வீசாம ஒரே வெக்கயாக் கெடக்கு. வேர்த்துத் தொலையுது. புழுக்கமா இருக்குறதப் பாத்தா ரவைக்கு மழ வந்தாலும் வரும்யா. சொல்ல முடியாதுஎன்று சொல்லிக்கொண்டே சட்டையின் முதல் இரண்டு பட்டன்களைத் திறந்துவிட்டுக்கொண்டான் குமார்.

ஏய் ஐடியா சொல்லுறம்னு என்னத்தையாவது சொல்லி எங்களப் பயமுறுத்தாம இருடாஎன்று ஆனந்திடம் சொன்ன மருது, பிராந்தி பாட்டிலை எடுத்துத் தன்னுடைய கப்பில் ஊற்றினான். கொஞ்சம்தான் இருந்தது. ஒருவாய்க்குக்கூடப் பத்தாது போலிலிருந்தது. பிராந்தி தீர்ந்துவிட்டது என்பது தெரிந்ததும் மருதுவின் முகம் மாறிவிட்டது.என்னடா அதுக்குள்ளயும் சரக்கு தீந்துபோச்சுஎன்று விரக்தியான குரலில் கேட்டான். 

அவக்கவக்குனு குடிச்சா தீரத்தானயா செய்யும்?” என்று கிண்டலாகச் சொல்லிவிட்டுச் சிரித்தான் ஆனந்த்.

நீ போயி வாங்கிக்கிட்டு வர்றியா?” என்று கெஞ்சுவதுபோல் மருது கேட்டதும்

எனக்குலாம் போதும்யா. ஒங்களுக்கு வேணும்னா சொல்லுங்க வாங்கிட்டு ஓடியாறேன்என்று குமார் பட்டும்படாமல் சொன்னான். அவனுடைய பேச்சிலேயே அவனுக்கு போதை ஏறியிருப்பது தெரிந்தது.

சட்டைப்பையிலிருந்து ரூபாயை எடுத்து, “ஒரு ஃபுல் வாங்கிக்க, தண்ணிப் பாட்டிலும், சைடு டிஷ்ஷும் வாங்கிக்க. வீணாப்போன இந்த மிச்சருப் பாக்கெட்ட மட்டும் வாங்கிக்கிட்டு வந்துராதஎன்று சொல்லி குமாரிடம் பணத்தைக் கொடுத்தான். பணத்தை வாங்கின அடுத்த நிமிடமே வேகமாக எழுந்து சென்று பைக்கை ஸ்டார்ட் செய்தான் குமார்.

குமார் போன பிறகு சிறிது நேரம்வரை மருதும் ஆனந்தும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவுமில்லை. மிக்சரைத் தின்பதும் சிகரெட் அடிப்பதுமாக இருந்தனர். கோயில் பக்கம் யாராவது வருகிறார்களா என்று பார்த்தனர். பிராந்தி குடித்திருந்ததால் இரண்டு பேருக்குமே நன்றாக வியர்த்து ஒழுகிக்கொண்டிருந்தது. 

ஆனந்துக்கு என்ன தோன்றியதோ, “அவனக் குத்தம் சொல்லி என்னயா செய்யிறது? நாம உசுரா நெனைச்சி வளத்த மாட்ட சொல்லணும். அந்த சனியனாலதான் நம்மளுக்கு இந்த அசிங்கம்ன்னு குமாரு சொன்னதக் கேட்டியா?” என்று ஆனந்த் கேட்டதும் மருதுவின் முகம் மாறிவிட்டது. ஆனந்த் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் மேற்குப் பக்கமாகப் பார்த்தான். சூரியன் இன்னும் சிறிது நேரத்தில் மறைந்துவிடும் போலிருந்தது. 

 “நம்பளவிட குமாருக்குச் சாதி வெறி அதிகம் தெரியுமா? யாரு எங்கூட நின்னாலும் நிக்காட்டியும் நான் ஒத்த ஆளா அவனையும் அவுக ஆளுகளையும் அசிங்கப்படுத்துவேன். அதுகாண்டி ஜெயிலுக்குப் போணுமுனாலும் நான் போவேன்என்று மருது சொன்னதைக் கேட்ட ஆனந்த், “என்னயா பொசுக்குனு இப்படிப் சொல்லிப்புட்ட, பத்தாவது படிக்கயிலருந்து இன்னிய தேதி வரைக்கும் நாம மூணு பேரும் ஒண்ணும்மண்ணுமாதான இருக்கோம். ஊர்ல நம்மள எப்பப் பாத்தாலும், எவன் பாத்தாலும் என்ன சொல்லுவாய்ங்கமூவர் கூட்டணி வருதுன்னுதான் கிண்டலடிப்பாய்ங்க, அப்படியிருக்குறப்போ நான் தனியாப் பாத்துக்கிறேன்னு நீ சொல்றது தப்பு மருதுஎன்று புத்திமதி சொல்வதுபோல் சொன்னான். 

ஆனந்த், குமார், மருது மூவரையும் ஊருக்குள் எப்போதும் ஒன்றாகத்தான் பார்க்க முடியும். சாப்பிடுவதற்கும் படுப்பதற்கும் மட்டும்தான் அவரவர் வீட்டிற்குப் போவார்கள். மருதுவிற்கு மட்டும்தான் கல்யாணமாகியிருந்தது. கல்யாணமாகியிருந்தாலும் இரவும் பகலும் ஆனந்தோடும் குமாரோடும்தான் அவன் சுற்றிக்கொண்டிருப்பான். அதனால், ஊர்க்காரர்கள் மூன்று பேருக்கும்மூவர் கூட்டணிஎன்று பெயர் வைத்திருந்தார்கள். ஆனந்தின் முகத்தையே பார்த்தான். பிறகு மிகவும் அமைதியான குரலில், “நம்மப் பெயலுகதான் அவைங்கள்ட்ட கபடி கிரிக்கட்டுல தோத்துப் போறாய்ங்கனா, நம்ம வளத்த மாடும் வாடில தோத்துப் போவுதே. அதெ நெனைச்சாதேன் எனக்குக் கேவலமா இருக்கு, செத்திடலாம்போல இருக்குஎன்று சொன்ன மருதுவின் குரலில், அவன் எந்த அளவுக்கு நொந்துபோயிருக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது. 

சாதாரணமாக மருது மனம் கலங்கிப் பேசக்கூடிய ஆளில்லை. எதற்கெடுத்தாலும்ரப் அண்ட் டப்பாகபோகக்கூடிய, பேசக்கூடிய ஆள்.சண்டிப்பயஎன்று ஊரில் பெயர் எடுத்தவன். யாரையும் மதிக்க மாட்டான். தலைவணங்கிப்போக மாட்டான். பணத்தை மதிக்காத, நினைத்ததைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிற ஆள். கூட்டளிகளுக்காக எதையும் செய்கிற ஆள். சாதி சங்கத்திற்கு அதிகமாக நன்கொடை கொடுக்கிற ஆள். அப்படிப்பட்டவன் மனம் கலங்கிப் பேசுகிறானே என்று யோசித்த ஆனந்த், “நீ எதப் பத்தியும் யோசிக்காதயா. மருது இன்னிக்கி ரவைக்குள்ள நாம ஏதாவது ஒண்ணு செய்யிறோம்யா. இது இந்த அய்யனார் மேல சத்தியம்என்று உறுதியான குரலில் சொன்னான். சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு, “எனக்குத் தோணுறதச் சொல்றேன், சரிபட்டுவருமான்னு பாரு மருதுஎன்று சொன்ன ஆனந்த் அக்கம்பக்கம் பார்த்தான். மிகவும் ரகசியமான விஷயத்தைச் சொல்வதுபோல், “அந்தப் பெயலோட வாயில மூத்தரத்தப் பேஞ்சு விடுறது, பீய்யத் அள்ளித் திணிக்கிறதவிட, வேங்கைவயல்ல செஞ்சமாரி அவைங்க வளவுல இருக்க குடித்தண்ணி தொட்டில மலத்தக் கலக்கிறது ஈஸின்னு எனக்குத் தோணுதுஎன்று சொன்னதும்

திருப்பிச்சொல்லுஎன்று மருது கேட்டான்.

பறைய வளவுல இருக்கிற தண்ணி டேங்கில நம்ம பீயப் பேண்டு கலந்துட்டா என்னனு தோணுது. ஆனா, போலீச நெனச்சுதான் பயமா இருக்கு’.

வேங்கவயல்லயே ஒண்ணுத்தயும் புடுங்காத போலீசு, நம்ப ஊர்ல மட்டும் வந்தா புடுங்கப் போவுது? எதையும் போட்டு கொழப்பாத. நம்ம கலக்கி விட்ருவோம். ஆனா நம்ம பீ வேணாம். பண்ணிப் பீய அள்ளிக் கலப்போம்என்று திட்டவட்டமாகச் சொன்னான் மருது.

சூப்பரு மருது. ஆனா நாம செய்யிறது யாருக்கும் தெரியாம இருக்கணும்யா, அதுதான் ரெம்ப முக்கியம்என்று ஆனந்த் சொன்னதும், “அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். ஒண்ணும் பஞ்சாயத்து இல்லஎன்று அசால்ட்டாகச் சொன்னான் மருது. கொம்பன் பிடிபட்டது, ஆசாத்திடம் கொம்பனைக் கறிக்கு ஏற்றிவிட்டதெல்லாம் இப்போது அவனுக்கு மறந்துபோய்விட்டதுபோல் தெரிந்தது. இப்போது அவனுடைய மனதில் இருந்ததெல்லாம் கொம்பனை அடக்கியவனைப் பழிதீர்க்க வேண்டும் என்பது மட்டும்தான்.

பன்றி விட்டைகள் எங்கே கிடைக்கும், அதை எப்படி எடுப்பது, எந்தப் பாத்திரத்தில் சேகரிப்பது, சேகரித்த விட்டைகளை எப்படி எடுத்துக்கொண்டு போவது, அந்தக் கொச்சத்தை எப்படித் தாங்கிக்கொள்வது, வாட்டர் டேங்க் ஏணியில் எப்படி ஏறுவது, யார் ஏறுவது, எப்படி மூடியைத் திறந்து கொட்டுவது, மூடியைத் திறக்க முடியுமா, ஒரு ஆள் ஏறினால் போதுமா, இரண்டாள் ஏற வேண்டுமா, பன்றி விட்டை கலந்த தண்ணீரைக் குடிப்பதால் என்னவாகும், வாந்திபேதி வருமா, ஆட்கள் மயங்கி விழுவார்களா, இன்றே செய்வதா, நாளை செய்வதா, விஷயம் வெளியே தெரிந்தால் போலீஸிடமிருந்து தப்பிப்பதற்கான வழிகள் என்னஎன்று மாறிமாறிப் பேசிக்கொண்டிருந்தனர். பேசப்பேச அவர்களுக்குத் தெளிவு வந்த மாதிரி இருந்தது. விஷயம் தெளிவானதும் பேச்சு வளர்ந்துகொண்டிருந்தது.

 “ஆனந்து அவனையும் அவைங்க ஆளுகளையும் அசிங்கப்படுத்துறதுக்குனா எங் கையாலேயே பன்னிப் பீய அள்ளுவேன். எம்புட்டு வீச்சம் எடுத்தாலும் பரவாயில்ல. கரண்டி கிரண்டி எதுவும் எனக்குத் தேவையில்ல. ரெண்டு மூணு வாளி மகுற அள்ளிக்கொண்டோயி அந்தத் தொட்டியில ஏறி நானே கொட்றேன்என்று சொன்ன மருதுவின் குரலில் வேகம் வெளிப்பட்டது.

 “இம்புட்டு நேரமா என்ன பண்றான்? சரக்க வாங்கப் போனானா, இல்ல காச்சப் போனானான்னு தெரியலையே. இருட்ட வேற ஆரம்பிச்சிருச்சு. வானம் வேற கம்மிக்கிட்டு வருதுஎன்று ஆனந்த் சொன்னான். எழுந்து சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்தான். குமார் வருகிறானா என்று பார்த்தான்.எங்கிட்டுப் போயி தொலஞ்சான்னு தெரியலியே, போனும் போக மாட்டுதுஎன்று சொல்லி அலுத்துக்கொண்டே வந்து உட்கார்ந்தான். திடீரென்று சந்தேகம் வந்தது மாதிரி, “மருது இன்னிக்கி ராத்திரியே செய்யிறமா, இல்ல நாளப்பின்ன பாத்துக்கலாமா?” என்று ஆனந்த் கேட்டதும், மருதுவிற்குத் தலைகொள்ளாத அளவுக்குக் கோபம் வந்துவிட்டது.எதாயிருந்தாலும் இன்னைக்கு ரவைக்கே முடிச்சிரணும்என்று தீர்மானமாகச் சொன்னான்.

மருது நாம இன்னைக்கிப் போதையில இருக்கம்யா. போதயில எதாவது எக்குதப்பா செஞ்சி மாட்டிக்கப்போறம்யா.

நிதானமான இருக்கையில பன்னிப் பீய்ய மனுஷப் பீய்யலாம் நம்ம கையால அள்ள முடியுமா? இல்ல வாளியில அள்ளித் தூக்கிக்கிட்டுதான் போயிற முடியுமா?”

“____”

அவிங்க வளவுக்குப் பின்னாடி இருக்க வேளிக்காத்தானுக்குள்ளதான் ஊருப்பட்ட பண்ணிக திரியும். இல்லாட்டி ஒரத்துக்கு எகுனையாவுது விட்டயக் குமிச்சு போட்ருப்பாய்ங்க. அப்புடியிருந்தா ரொம்ப ஈசி. வேலிக்காத்தானுக்குள்ள நொழஞ்சு போனா யாருக்கும் தெரியாது. நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஒத்தாசைக்கு இருந்தா மட்டும் போதும். மத்தத நானேப் பாத்துக்குறேன்என்று தீர்மானமாகச் சொன்னான்.

அப்புடின்னா குமார் வரவிட்டி சரக்குப் போட வேணாம், வேலய முடிச்சிட்டுப் பாத்துக்கிறலாம்என்று ஆனந்த் சொன்னதும், “வேலய ஆரம்பிக்கிறதே ராத்திரி ஒரு மணிக்கு மேலதான். அதனால, ஒரு ரவுண்டு மட்டும் போடுவோம். போதையில இருந்தாத்தான் இந்தக் காரியத்த செய்ய முடியும்மருது சொல்லிக்கொண்டிருக்கும் போது குமார் பைக்கில் வந்துகொண்டிருக்கிற சத்தம் கேட்டது.

பைக்கை நிறுத்திவிட்டு வந்த குமாரிடம் பாண்டியும் ஆனந்தும் ஒரே குரலாக, “ஏன்டா இம்புட்டு லேட்டு?” என்று கேட்டனர்.

வாடி பாக்க வந்த வெளியூர் கூட்டம் மொத்தமும் சாராயக்கடையிலதான்யா நிக்கிறாய்ங்க. முன்னாடியே ரெண்ட வாங்கி வண்டிக்குள்ள போட்டு வைக்காம விட்டது தப்பாப் போச்சு. சரக்கு தீந்துபோச்சுனு சொல்லிட்டாய்ங்க. அங்கயிருந்து புலிமல கடைக்குப் போய் வாங்கியாந்தேன். அங்கயும் கூட்டம் வதிவழியுதுஎன்று சொல்லி குமார் அலுத்துக்கொண்டான். வெளிச்சத்திற்காக மருது தன்னுடைய செல்போனில் இருந்த விளக்கை எரியவைத்தான். குமாரிடமிருந்து பிராந்தி பாட்டிலை வாங்கி, திறந்து மூன்று கப்களில் ஊற்றிய ஆனந்த், மூன்று கப்களிலும் தண்ணீரையும் ஊற்றினான். 

டாஸ்மாக்கில் நின்றுகொண்டிருந்த கூட்டத்தைப் பற்றி குமார் வியந்துபோய் பேசிக்கொண்டிருந்தான்.ஒரு ஆளுக்கு ஒரு பாட்டில்தாயா தராய்ங்க. மீறி கேட்டா மத்தவைங்களுக்கும் நாங்க கொடுக்க வேண்டாமான்னு ரூல்ஸ் பேசுறாய்ங்க. என்னமோ ரேஷன் கடயில அரிசி, பருப்பப் பங்கு போட்டுத் தர மாதிரி. போலீசாலயும் கூட்டத்தக் கட்டுப்படுத்த முடியல. வரிசயில நிக்க வச்சி அனுப்புறாய்ங்கயா. எங்க போனாலும் அந்தப் பயல பத்திதான் ஒரே பேச்சா இருக்குஎன்று குமார் சொன்னதைக் கேட்கக்கேட்க மருதுவுக்கு இரத்தம் கொதிப்பதுபோல் இருந்தது.

முதல் ரவுண்டு முடிந்து இரண்டாவது ரவுண்டை ஆரம்பிக்கும்போது, “என்னடா முடிவு பண்ணிருக்கீய?” என்று குமார் கேட்டான்.

ஆனந்த் திட்டத்தைச் சொன்னதும், “அம்சமான திட்டம்யாஎன்று சொல்லிக் கைதட்டினான். 

மூவரும் ஒத்திகைபார்ப்பதுபோல் தங்கள் திட்டத்தைப் பற்றியே மீண்டும்மீண்டும் பேசிக்கொண்டிருந்தனர். பேச்சு வளரவளர பிராந்தி பாட்டிலின் அளவு குறைந்து கொண்டே இருந்தது. போதை ஏறஏற அவர்களுக்குக் கோபம் கூடிக்கொண்டே இருந்தது. மாடுகளை அடக்கியவனையும், அவனுக்கு மாலைபோட்டு காரில் ஊர்வலமாக அழைத்துக்கொண்டுபோனவர்களையும் பழிதீர்க்கும் வெறி அவர்களுக்குள் வளர்ந்துகொண்டே இருந்தது.

போதையில் ஆனந்த் அப்படியே தரையில் படுத்ததைப் பார்த்த குமார், “என்ன மருது இவன் இப்பயே சொனங்க ஆரம்பிச்சிட்டான்என்று சொல்லிக் கிண்டலடித்தான். அப்போது லேசாகக் குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்திருந்தது.

மழை வர மாரி இருக்குது, டேய் எந்திரிடா, வீட்டுக்குப் போகலாம்என்று குமார் சொன்னதோடு ஆனந்தைத் தூக்கி உட்காரவைத்தான். மீந்துபோன மிக்சர் பாக்கெட்டுகளையும் தண்ணீர் பாட்டிலையும் பிராந்தி பாட்டிலையும் மருது எடுத்துக்கொண்டான். பிராந்தி கொஞ்சம்போலத்தான் இருந்தது.கட்டிங்குதான் இருக்கு, இத ஏன் தூக்கிட்டி திரிய? இகுனையே ஒரு ரவுண்டு போடுறியாஎன்று குமாரிடம் கேட்டான்.

என்னைக்கும் இல்லாம இன்னைக்கு லிமிட்டத் தாண்டிப் போட்டுட்டேன். கொஞ்சம் ஓவரா இருக்கு. எனக்கு வேணாம் மருது. விழுகாம வீட்டுக்குப் போனா போதும்என்று குமார் சொன்னான்.

அப்புடின்னா ஏம்புட்டுக் கப்புல ஊத்துஎன்று சொல்லி குமாரிடம் பாட்டிலைக் கொடுத்தான். பிராந்தியையும் தண்ணீரையும் ஊற்றிக்கொடுத்ததும் ஒரே மூச்சாக குடித்த மருது கப்பை கசக்கி எறிந்தான்.

தூறல் போட ஆரம்பித்தது.

நிதானம் இல்லையென்றாலும் மூவரும் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினர். பாதி வழி வரும்போதே மழை வலுக்க ஆரம்பித்தது. மழை பெய்துகொண்டிருக்கும்போது, இடி இடித்துக்கொண்டிருக்கும்போது, தெருவில் யாரும் நடமாட மாட்டார்கள். இந்த நேரத்தில் காரியத்தைச் செய்துவிடலாமா என்று போதையிலும் தெளிவாக யோசித்தான் மருது. விஷயத்தை குமாரிடமும் ஆனந்திடமும் சொன்னான். இருவருமே, “சூப்பரு. பண்ணிறலாம்என்று சொன்னார்கள்.

நேராக மருதுவின் வீட்டிற்குத்தான் வந்தனர். வீட்டிற்குள் வந்த மருது மண்வெட்டி, வாளி என்று எடுத்துக்கொண்டான். மூவரும் ஒரே பைக்கில் கிளம்பும்போது,

இன்னியாரத்துல மம்பட்டி வாளிலாம் எடுத்துக்கிட்டு இந்த மழைக்குள்ள எங்க போறிய மூணு பேரும்என்று சுகுணா கேட்டதற்கு, “வந்து சொல்றேன்என்று ஒரே வார்த்தையாகச் சொன்னான். பிறகு குமாரிடம், “வண்டிய ஸ்டார்ட் பண்ணுஎன்று சொன்னான்.

மழை, இருட்டு என்றுகூடப் பார்க்காமல் மூவரும் ஒரே பைக்கில் கிளம்பிவிட்டனர். இடியும் மின்னலுமாக வானம் மிரட்டிக்கொண்டிருந்தது.

3

மருது தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் பரபரப்பாக வந்த சுகுணா, “மணி பத்துக்கும் மேலாவுது, இன்னம் என்ன தூக்கம் வேண்டிக்கெடக்கு? பறைய வளவுல ஆம்பள பொம்பளயள ஆம்புலன்ஸில அள்ளிப்போட்டுக்கிட்டு ஓடுறாய்ங்க. இருந்திருந்தாப்புல பொத்துபொத்துன்னு கெழடு கெட்டயிலாம் மயங்கிமயங்கி விழுகுதாம். சின்ன பிள்ளகுட்டிகளுக்கு வாயாலையும் வயித்தாலையும் நிக்காம ஓடுதாம், தெரியுமாஎன்று கேட்டாள். படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்த மருது அவசரமாகக் கேட்டான்:போலீஸ் வந்திருக்கா?”

 

மதுரை பேச்சுவழக்கை சரிபார்த்து, ஜல்லிக்கட்டு தொடர்பான தகவல்களைக் கொடுத்த நண்பர் திரு. விடுதலை சிகப்பி அவர்களுக்கு.நன்றி:

நீலம் மாத இதழ் ஜனவரி 2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக