அண்மையில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ளும் பொருட்டு, அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குச் சென்றிருந்தேன். என்னைப் பார்த்ததும் முதன்மை நூலகர் காமாட்சி, “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கத்தைப் பார்த்தீர்களா?” என்று கேட்டார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நுழைவாயிலுக்கு நேரெதிரில் இருந்த ‘செந்தமிழ்ச் சிற்பிகள்’ அரங்கத்திற்குள் சென்றோம். பழந்தமிழ் முன்னோடிகள், தமிழ் வளர்த்த அயல்நாட்டு அறிஞர்கள், வரலாற்றுத் தமிழ் ஆய்வாளர்கள், தனித்தமிழ் அறிஞர்கள், இசைத் தமிழ், நாடகத் தமிழ், அறிவியல் தமிழ், மெய்யியல் அறிஞர்கள், தொல்லியல் அறிஞர்கள், பதிப்பாசிரியர்கள், திறனாய்வு, நாட்டாரியல் ஆய்வறிஞர்கள், கவிஞர்கள், சிறுகதையாசிரியர்கள், நாவலாசிரியர்கள், திராவிடப் பெரும் ஆளுமைகள், தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவியவர்கள் என்று இருபத்து நான்கு பிரிவுகளில் 180-க்கும் மேற்பட்டவர்களுடைய உருவங்கள் ஓவியங்களாக வரைந்து வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஓவியத்திற்கும் கீழே, சம்பந்தப்பட்டவர் யார், அவர் ஆற்றிய பணி என்ன, அவர் பெற்ற முக்கியமான விருது என்ன என்பது குறித்த குறிப்புகளும் வைக்கப்பட்டிருந்தன. அதற்குப் பக்கத்தில் சம்பந்தப்பட்டவரின் கையெழுத்து நகல் வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஓவியத்திற்கும் கீழே QR Code இருக்கிறது. அதை ஸ்கேன் செய்துபார்த்தால், குறிப்பிட்ட எழுத்தாளர் எந்தெந்த ஆண்டுகளில் என்னென்ன நூல்களை எழுதினார், என்னென்ன விருதுகளை வாங்கியிருக்கிறார் என்ற முழு விவரங்கள் இருக்கின்றன.
ராமலிங்க அடிகளாரில் தொடங்கி மீனாட்சி சுந்தரனார், ஆறுமுக நாவலர், உ.வே.சாமிநாதையர், சி.வை.தாமோதரனார், வீரமாமுனிவர், சீகன் பால்கு, இராபர்ட் கால்டுவெல், கமில் சுவலபில், பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பம்மல் சம்பந்தனார், சங்கரதாஸ் ஸ்வாமிகள் என்று ஒவ்வொரு ஓவியத்தையும் பார்த்துக்கொண்டே வந்தேன். QR Code-ஐ ஸ்கேன் செய்து, அவர்கள் ஆற்றிய பணிகளை அறிந்துகொண்டபோது மலைத்துப்போனேன்.
விபுலானந்த அடிகள், அயோத்திதாசப் பண்டிதர், பாரதி, பாரதிதாசன், இராஜாஜி, சோம சுந்தர பாரதியார் என்று நான் பார்த்துக்கொண்டே வரும்போது என்னுடைய படத்தையும் ஓவியமாக வரைந்து வைத்திருந்தைப் பார்த்து பயந்துபோனேன். “என்னுடைய படம் எப்படி இங்கே இடம்பெற்றது?” என்று கேட்டேன். “சாகித்திய அகாதமி விருது பெற்ற அத்தனை தமிழ் எழுத்தாளர்களுடைய ஓவியமும் கையெழுத்தும் தகவல்களும் முழுமையாக இடம்பெற்றிருக்கின்றன” என்று காமாட்சி கூறியதைக் கேட்டு அசந்துபோனேன். சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்கள் யார்யார் என்று பார்த்தேன். அ.மாதவையா, கல்கி, ரா.கிருஷ்ணமூர்த்தி, சி.சு.செல்லப்பா, எம்.வி.வெங்கட்ராம், கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், தி.ஜானகிராமன், வை.கு.கோதைநாயகி, லட்சுமி, திலகவதி, சு.வெங்கடேசன், அம்பை என்று 2023 வரை சாகித்திய அகாதமி விருது பெற்றவர்களின் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. அரங்கமும், ஓவியங்கள் வைக்கப்பட்டிருக்கும் விதமும் நேர்த்தியாக இருந்தன. அரசு நிறைய செலவிட்டிருப்பது தெரிந்தது.
“இந்த அரங்கத்திற்கு நிறைய பார்வையாளர்கள் வருகிறார்களா?” என்று கேட்டேன். “வேலை நாள்களில் 500-க்கு அதிகமானவர்களும், விடுமுறை நாள்களில் 1,000-க்கு மேற்பட்டவர்களும் வந்து பார்வையிடுகிறார்கள். ஒருசில ஓவியங்களுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுபோகிறார்கள். ‘இவர் எழுதிய நூல்களை நாங்கள் படித்திருக்கிறோம். ஆனால், இவர் இப்படித்தான் இருப்பார் என்பது எங்களுக்குத் தெரியாது. அதனால்தான், புகைப்படம் எடுத்துகொண்டோம்’ என்று சொல்கிற பார்வையாளர்களும் இருக்கிறார்கள். ஒருசில அறிஞர்களின், எழுத்தாளர்களின் உறவினர்கள் வந்து, ‘இவர் எனக்கு இன்ன உறவு, ஆனால் நேரில் பார்த்ததில்லை. அதனால், புகைப்படம் எடுத்துக்கொண்டோம்’ என்று பெருமிதமாகச் சொல்வதைப் பலமுறை கேட்டிருக்கிறேன்” என்று காமாட்சி சொன்னார்.
“போட்டித் தேர்வுக்குப் படிக்கிறவர்கள் QR Code-ஐ ஸ்கேன் செய்து தமிழ் எழுத்தாளர்கள், அறிஞர்கள் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்கிறார்கள். கஷ்டப்பட்டுத் தேடி எடுக்க வேண்டிய தகவல்கள் எல்லாம் எளிதாகக் கிடைப்பதாகச் சொல்லிவிட்டுப்போகிறார்கள்” என்றும் அவர் சொன்னார். தமிழ் எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள் பற்றிய தகவல்களை எளிதாகப் பெறக்கூடிய இடமாகவும் செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம் இருக்கிறது. “விடுபட்டுப்போன எழுத்தாளர்களையும் தமிழறிஞர்களையும் காட்சியில் இடம்பெறச் செய்கிற வேலை தொடர்ந்து நடைபெறுகிறது” என்று காமாட்சி சொன்ன செய்தி மனத்திற்கு உவப்பானதாக இருந்தது.
நான் நாற்பதாண்டு காலமாக நூல்களைப் படித்துக்கொண்டிருந்தாலும், எழுத்தாளராகிப் பதினேழு நூல்களை எழுதியிருந்தாலும் பல எழுத்தாளர்களுடைய முகங்களை, அவர்களுடைய கையெழுத்தை, அவர்கள் எழுதியிருந்த நூல்களின் பட்டியலைப் பார்த்து நானே வியந்துபோனேன். பெரியசாமித் தூரன், செய்குத்தம்பி பாவலர், தனிநாயகம் அடிகளார், க.வெள்ளைவாரணனார், புலவர் குழந்தை, கவிஞர் கண்ணதாசன் என்று பலரைப் பற்றிய தகவல்களை விரிவாக அறிந்துகொண்டேன். திராவிட இயக்கத்தின் பெரும் ஆளுமைகளான பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் ஓவியங்களும் தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் ‘செந்தமிழ்ச் சிற்பிகள்’ போன்ற அரங்கம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. எழுத்தாளர்களை, கவிஞர்களை, ஆய்வறிஞர்களை எத்தனை குடும்பம் கௌரவமாக நடத்தியிருக்கிறது, பெருமைக்குரியவர் என்று பாதுகாத்துப் போற்றியிருக்கிறது என்ற கேள்விக்கு என்னிடத்தில் மகிழ்ச்சியான பதிலில்லை.
கடைசியாகப் பார்வையாளர்களின் பதிவேட்டைப் பார்த்தேன். அதில் ஒருவர், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கத்திற்கு வெளியே பிரம்மாண்டமான குத்துவிளக்கு ஒன்று இருப்பதைப் பார்த்ததும் நூலகத்திற்குள் கோயிலும் இருக்கும்போல என்று நினைத்துக்கொண்டுதான் வந்தேன். அரங்கத்திற்குள் வைக்கப்பட்டிருந்த ஓவியங்களைப் பார்த்த பிறகு, ஓவியங்களாக மாறியிருக்கும் மனிதர்களுடைய தமிழ்ப் பணிகளை அறிந்துகொண்ட பிறகு, கோயிலைவிடவும் மேலான இடத்திற்கு வந்திருப்பதாக உணர்ந்தேன்” என்று எழுதியிருந்ததைப் படித்ததும் பிரமித்துப்போய் அப்படியே நின்றுவிட்டேன்.
செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கத்திற்குள் ஓவியங்களாக வைக்கப்பட்டிருக்கும் மனிதர்கள் முந்நூறு, நானூறு ஆண்டுகளாக உருவாக்கிய இலக்கியங்கள்தான், இன்றைய தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழ் மொழி. இவர்களின்றித் தமிழ் மொழி இல்லை. இவர்கள்தான் இன்றைய தமிழ்நாடு. இவர்கள்தான் இன்றைய தமிழ் மொழி.
சென்னையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக இருப்பது அண்ணா நூற்றாண்டு நூலகம். அந்த நூலகத்திற்கு அடையாளமாக இப்போது செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம் மாறியிருக்கிறது. ஓவியர்கள் வள்ளிநாயகமும் கோபியும் பாராட்டுக்குரியவர்கள். முடிந்தவரை எழுத்தாளர்களின், அறிஞர்களின் உருவங்களைத் துல்லியமாக வரைய முயன்றிருக்கிறார்கள். தங்களுடைய முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
தமிழ் மொழிக்காக, அதன் வளர்ச்சிக்காக உழைத்தவர்களை, உழைத்துக்கொண்டிருப்பவர்களைத் தமிழ்ச் சமுகத்திற்கு அடையாளப்படுத்துவதோடு அவர்கள் பற்றிய தகவல்களை மிக முக்கியமான ஆவணம்போல் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சரையும், தமிழ்நாட்டின் முதலமைச்சரையும், நூலகத் துறையையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். எழுத்தாளர்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் தமிழ்நாடு அரசு செய்திருக்கிற உயரிய கௌரவம்தான் செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்.

17.09.2024 அன்று தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித் துறை சார்பில் “செந்தமிழ் சிற்பிகள்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறக்கப்பட்டது.
முரசொலி 03/12/2024
மிக்க நன்றி.
பதிலளிநீக்கு