ஞாயிறு, 24 மார்ச், 2024

நவீனப் புலன் விசாரணை – கவிஞர்.சுகுமாரன்


இமையத்தின் புதிய நாவல்நெஞ்சறுப்புஉள்ளடக்கம் சார்ந்தும் உருவம் சார்ந்தும் நவீனமானது. அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாததாகி விட்ட நவீனக் கருவியால் ஏற்படும் உளவியல் நெருக்கடிகளையும் குடும்பச் சூழலில் ஏற்படும் உறவுச் சிக்கல்களையும் நாவல் விசாரணை செய்கிறது. நவீன நடைமுறைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் கேள்விக்கு உட்படுத்துகிறது. 


சீரங்கப் பெருமாள் கல்லூரியில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர். கல்வி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் செல்கிறார். அங்கே பலர் புதிதாக அறிமுகமாகிறார்கள். புதிய தொடர்புகள் உருவாகின்றன. அவர்களில் சசிகலாவும் ஒருவர். நவீன வழக்கப்படி எல்லாரிடமும் தனது கைப்பேசி எண்ணைப் பகிர்ந்து கொள்கிறார். சிலரது எண்களைப் பெற்றுக் கொள்கிறார். இது ஒரு புதிய சம்பிரதாயம். பெற்றுக் கொண்ட எண்களையோ கொடுத்த எண்ணையோ பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவதில்லை. மாறாக சீரங்கப் பெருமாளைப் பொறுத்தமட்டில் அது சம்பிரதாயமல்ல. புதிய வினை. சசிகலா முதலில் சாதுவான செய்திகளைப் பகிர்கிறார்.  அவ்வப்போது அழைத்து வில்லங்கமில்லாத உரையாடல்களில் ஈடுபடுகிறார். முதலில் மேலோட்டமாகத் தொடரும் இந்தப் பரிமாற்றம் பின்னர் வேறொன்றாக உருமாறுகிறது. சசிகலா காதல் வயப்பட்டவராக மாறுகிறாள். ஆரம்பத்தில் இதில் ருசி காணும் சீரங்கப் பெருமாள் தன்னையறியாமல் அந்த மாய வலையில் மாட்டிக் கொள்கிறார். அவர் அப்படி மாட்டிக் கொண்டிருப்பதே  மனைவி காமாட்சி கையும் களவுமாகப் பிடித்த பின்னர்தான் அவருக்கும் புலப்படுகிறது. இரண்டு பிள்ளைகளைப் பெறக் காரணமான கணவன் மீது காமாட்சிக்கு அது நாள்வரை இருந்து வந்த சலிப்பையும் வெறுப்பையும் வெளிப்படுத்த இந்த ரகசியத் தொடர்பு துணையாகிறது. அதைத் தொடர்ந்து அவர் மேற்கொள்ளும் துப்புத் துலக்கல்களும் எதிர் நடவடிக்கைகளும் எல்லாருடைய சுமுக வாழ்க்கையையும் புரட்டிப் போடுகின்றன. சீரங்கப் பெருமாளின் பழிகளையும் காமாட்சியின் பழிகளையும் சுமக்கும் பாவம் சசிகலாவின் மேல் கவிகிறது. 


ஒரு நவீனக் கருவி இன்றைய வாழ்க்கையில் உண்டுபண்ணும் அபாயத்தை நாவல் முன்வைக்கிறது. அதே சமயம் உறவுகளின் உண்மை முகத்தையும் பகிரங்கப்படுத்துகிறது. சீரங்கப் பெருமாளின் கோழைத்தனம், மனைவி என்ற நிலையில் காமாட்சி செலுத்தும் ஆதிக்கம், பிள்ளைகளின் உதாசீனம், சசிகலாவின் தன்னிச்சையான துணிச்சல் ஆகியவற்றையும் நாவல் சுட்டிக் காட்டுகிறது. இது தனி நபர் தளத்தில் நிகழ்கிறது. சமூகத் தளத்தில் நிகழும் அசம்பாவிதங்களையும் நாவல் மறைப்பதில்லை. சாதி உணர்வின் அகந்தை, கல்விப் புலத்தில் நிகழும் அட்டூழியங்கள், அதிகார மட்டத்தில் நடக்கும் அநியாயங்களையும் நிகழ்ச்சிப் போக்கில் சொல்லிச் செல்கிறது. தான் வாழும் காலத்தின் நடப்புகளைப் பற்றி அக்கறை கொள்ளும் எழுத்தாளர் இமையம் என்பதன் இன்னொரு சான்று இந்த நாவல். 

பெரும்பாலும் பேச்சு வழக்கில் தன்மைக் கூற்றாகவே, சீரங்கப் பெருமாளின் பார்வையிலேயே எழுதப்பட்டிருக்கும் நாவலில் பிற பாத்திரங்களும் துலக்கமாக முன்னெழுந்து வருகிறார்கள்.இது வாசிப்பில் வேகத்தைக் கூட்டுகிறது. இமையத்தின் முந்தைய நாவல்களில் ஒன்றானஎங்கதெயும் இதே உத்தியில் எழுதப்பட்டது என்பது நினைவுக்கு வருகிறது. இரண்டும் பெண்களை மையமாகக் கொண்ட நாவல்கள். ஆனால் ஆணால் முன்வைக்கப் பட்டவை. 

இன்று கைப்பேசியையோ திறம்பேசியையோ பயன்படுத்தாதவர்கள் அநேகமாக யாரும் இல்லை. அவர்கள் அனைவரையும் இந்த நாவல் அதிர்ச்சியடையச் செய்தால் வியப்பதற்கில்லை.  எந்த ஆணின் கைப்பேசியிலும்  ஒரு சசிகலாவின் குறுஞ்செய்தியோ அழைப்போ இருக்கலாம். அதுபோலவே எந்தப் பெண்ணின் கைப்பேசியிலும் ஒரு சீரங்கப் பெருமாளின் அழைப்பும் குறுஞ்செய்தியும் இருக்கக் கூடும். இது நவீன உறவு. நவீனக் கருவிக்கு மனிதர்கள் அடிமையாகிப் போனதன் அத்தாட்சி. 

கையடக்கமான தொடர்புக் கருவியை வைத்திருப்பதாக நாம் நம்புகிறோம். இல்லை. விசை பிடுங்கப்பட்ட வெடிகுண்டை எடுத்துக் கொண்டு திரிகிறோம் என்று நாவல் சித்தரித்துக் காட்டுகிறது. அது இமையத்தின் கற்பனை அல்ல. சமகால எதார்த்தம்.

தமிழ் தி இந்து நாளிதழ் 23.03.2024



 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக