ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

எழுத்தாளர் யார் காலிலும் விழகூடாது - இமையம்

 

நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது காலண்டரிலிருந்த ஒரு போட்டோவைக் காட்டி, “இவர்தான் கலைஞர்” என்று ஒருவர் சொன்னார். அதன் பிறகு எட்டாம் வகுப்பு படிக்கும்போது விருத்தாசலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலைஞரைப் பார்த்தேன். அந்தக் கூட்டத்தில் இந்திரா காந்தியும் இருந்தார். “நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!” என்று அந்தக் கூட்டத்தில் கலைஞர் பேசினார். அதன் பிறகு பல பொதுக்கூட்டங்களில், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில்
கூட்டத்தோடு கூட்டமாக நின்று பார்த்திருக்கிறேன். 1989இல் கடலூர் மாவட்டத்திற்குத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தபோது கலைஞரின் காருக்குப் பின்னால் அணிவகுத்துச் சென்ற கார்களில் ஒன்று என்னுடையது. அன்றிலிருந்து, கலைஞரின் கார் எப்போதெல்லாம் கடலூர் மாவட்டத்திற்கு வருகிறதோ அப்போதெல்லாம் அவரை வரவேற்பதற்காகச் செல்லும் கார்களில் ஒன்றாக நான் செல்லும் காரும் இருக்கும். அண்ணா அறிவாலயத்தில் கட்சிக்காரர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாகத்தான் பல முறை கலைஞரைப் பார்த்திருக்கிறேன்.

நான் கலைஞரைத் தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பு 2010இல் தான் எனக்கு ஏற்பட்டது. அதற்கான வாய்ப்பினைக் கவிஞர் கனிமொழிதான் ஏற்படுத்தித் தந்தார். தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது எனக்கு வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. விருது அறிவிக்கப்பட்டதன் பொருட்டு கலைஞரைப் பார்க்க விரும்புவதாகக் கவிஞர் கனிமொழியிடம் நான் சொன்னதும், “நாளை இரவு எட்டு மணிக்கு வாங்க” என்று சொன்னார். நான் மறுநாள் சாயங்காலம் சி.ஐ.டி. காலனி வீட்டிற்கு ஏழு மணிக்கே போய்விட்டேன்.

அன்று என்ன காரணமோ சினிமாக்காரர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. வழக்கம்போல அமைச்சர்களும், காவல் துறையினரும் இருந்தனர். கூட்டத்தைப் பார்த்து மிரண்டுபோய் இன்று பார்க்க முடியாதோ என்ற கவலை எனக்கு வந்துவிட்டது. மறுநாள் வள்ளுவர் கோட்டத்தில் விருது வழங்கும் விழா, அதற்குள் பார்க்க வேண்டுமே என்ற கவலையில் நான் நின்றுகொண்டிருந்தேன்

எட்டே முக்கால் மணிக்குக் கேட்டிற்கு அருகிலிருந்த காவலர் “எழுத்தாளர் இமையம் யாரு?” என்று சத்தமாகக் கேட்டார்.  “நான்தான்” என்று சொல்லிக்கொண்டே போனேன். கனிமொழி என்னை கலைஞரின் அறைக்குள் அழைத்துக்கொண்டு போனார். நான் அதுவரை எழுதியிருந்த புத்தகங்களை கலைஞரிடம் கொடுத்தேன். கடவுள் நம்பிக்கை உள்ளவன் எப்படி சாமி சிலையின் முன் மெய்மறந்து கும்பிட்டவாறு நின்றுகொண்டிருப்பானோ அதே மாதிரி நான் கலைஞரின் முன் நின்றுகொண்டிருந்தேன். என்னைப் பற்றியும் என்னுடைய எழுத்துகள் பற்றியும் கலைஞரிடம் கனிமொழி சொன்னார். நான் கொடுத்த ஒவ்வொரு புத்தகத்தின் தலைப்புகளையும் பாத்தார். பிறகு ஒவ்வொரு புத்தகத்தின் முன்அட்டைப் பகுதியையும் பின்அட்டைப் பகுதியையும் பார்த்தார். “ஒனக்கு யாருய்யா புத்தகம் போடுறது?” என்று கேட்டார். வேர்த்து விருவிருத்துப்போய் நின்றுகொண்டிருந்த நான் “க்ரியா” என்று சொன்னேன். கலைஞர் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தார். அப்போது நான் கனிமொழியைப் பார்த்து, “போட்டோ எடுக்க முடியுமா?” என்று சைகையில் கேட்டேன். கதவை ஒட்டி நின்றுகொண்டிருந்த அமைச்சர்களிடமும் காவல்துறையினரிடமும், “போட்டோகிராபர் யாராவது இருக்காங்களா பாருங்க?” என்று கனிமொழி சொன்னார். சிறிது நேரத்தில், “எல்லாரும் போயிட்டாங்க மேடம், யாருமில்ல” என்று காவலர் ஒருவர் சொன்னதும், அமைச்சர்களுடன் சேர்ந்து நின்றுகொண்டிருந்த ம. ராஜேந்திரன், (துணை வேந்தர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்) அவர்களிடம் சொல்லி என்னை போட்டோ எடுக்கச் சொன்னார். பிறகு கலைஞரிடம் கொஞ்சம் சத்தமாக, “அப்பா போட்டோ” என்று சொன்னார். உடனே முகத்தைத் தூக்கிப் பார்த்தார். போட்டோ எடுக்கப்பட்டது. உடனே நான் கலைஞரின் காலின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டேன். “கூடாது, கூடாது, எழுத்தாளர் யாரோட காலிலும் விழக் கூடாது” என்று சொன்னார். (அதன் பிறகு இன்றுவரை நான் யாருடைய காலிலும் விழுந்து கும்பிடவில்லை. தலைவரின் கட்டளை.) நான் கலைஞருக்கும் கனிமொழிக்கும் வணக்கம் சொல்லிவிட்டு வெளியே வரும்போது, அமைச்சர்களும் சினிமாக்காரர்களும் காவல்துறையினரும் என்னை ஒரு விதமாகப் பார்த்தார்கள். ‘முக்கியமான ஆள் போல’ என்று என்னை நினைத்திருக்கலாம்.

இரண்டாவது முறையாக நான் கலைஞரைச் சந்தித்தது செப்டம்பர், 2016. மாவட்ட மகளிர் அணி கூட்டத்திற்காக கனிமொழி கடலூர் வந்திருந்தார். அவரைப் பார்ப்பதற்காக நான் போயிருந்தேன். அப்போது கனிமொழியின் காரில் ஏறுவதற்காக வந்த அன்றைய தி.மு.க.வின் மாவட்டக் கழகச் செயலாளர், அவருக்குப் பிடிக்காத நண்பர் ஒருவருடன் நான் பேசினேன் என்பதற்காக என்னிடம் சண்டைபோட ஆரம்பித்தார். என்னைப் பற்றித் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசினார். என்னுடைய அண்ணனையும் கெட்ட வார்த்தைகள் சொல்லித் திட்டினார். சாதியையும் இழுத்துத் திட்டினார். “வேண்டாம்ன்னே” என்று சொல்லி என் அண்ணன் கெஞ்சியதையும் பொருட்படுத்தாமல் அவர் திட்டிக்கொண்டிருந்தார். 

மாவட்டக் கழகச் செயலாளர் என்னையும் என் அண்ணனையும் திட்டிக்கொண்டிருப்பதையும், என்னுடைய இரண்டாவது மகன் தமிழ்ச் செல்வன் பார்த்துக்கொண்டிருப்பதையும், அவனுடைய முகம் மாறுவதையும், அவனுடைய கண்கள் கலங்குவதையும் காரின் கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டிருந்த கனிமொழி காரின் கதவைத் திறந்து, “என்ன செஞ்சிக்கிட்டு இருக்கிங்க?” என்று கேட்ட பிறகுதான், எங்களைத் திட்டுவதை விட்டுவிட்டு மாவட்டச் செயலாளர் காரில் ஏறினார். 

நானும் என்னுடைய மகனும் உடனே காரில் விருத்தாசலத்திற்கு வந்துவிட்டோம். ஒரு மணி நேரம் கழித்து கனிமொழியிடமிருந்து போன் வந்தது. “எங்க இருக்கிங்க?” என்று கேட்டார். “கொஞ்சம் உடம்பு சரியில்ல, வீட்டுக்கு வந்திட்டன்” என்று சொன்னேன். “சரி” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். 

கூட்டம் முடிந்து மதியச் சாப்பாட்டின்போது மாவட்டச் செயலாளரிடம், “காலயில என்ன நடந்தது?” என்று கனிமொழி கேட்டிருக்கிறார்.

“அவனத் திட்டிட்டன்” என்று மாவட்டச் செயலாளர் சொன்னதும், “அவரு யாருன்னு தெரியுமா? எவ்வளவு பெரிய ரைட்டர்னு தெரியுமா? நீங்க யாரு அவரத் திட்டுறதுக்கு?” என்று கனிமொழி கேட்டிருக்கிறார். அன்றிரவு எனக்கு 9 மணிக்கு போன் செய்த கனிமொழி, “நாளைக்குச் சாயங்காலம் வந்து தலைவரப் பாருங்க” என்று சொன்னார்.

கலைஞரைப் பார்ப்பதற்கான வாய்ப்பு, கனிமொழி சொல்லிவிட்டார். மனதிலிருந்த துயரமெல்லாம் காணாமல் போய்விட்டது. சென்னைக்கு விடியற்காலையிலேயே போய்ச்சேர்ந்துவிட்டேன்.

சி.ஐ.டி. காலனிக்கு நான் மாலை ஆறு மணிக்கே போய்விட்டேன். கலைஞர் அன்று என்ன காரணத்தினாலோ அறிவாலயத்திலிருந்து சற்றுத் தாமதமாகவே வந்தார். அன்று கனிமொழி என்னுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசிக்கொண்டிருந்தார். அதற்குமுன் பார்த்திராத, அன்பால் நிறைந்த, உணர்ச்சிவயப்பட்ட கனிமொழியை அந்தத் தருணத்தில் நான் பார்த்தேன். என்னுடைய மகனுக்காக வருத்தப்பட்டார். “குழந்தைகளின் முன் எந்த ஒரு தாயும், எந்த ஒரு தகப்பனும் அவமானப்படக் கூடாது. அப்படி நிகழுமானால் அதைவிடக் கடினமான துயரம் எதுவும் இருக்க முடியாது” என்று சொன்னார். அவர் சொன்னதை வெறும் வார்த்தையாக நான் நினைக்கவில்லை. கனிமொழி அன்று – என் நெஞ்சில் மிக உயர்ந்த இடத்தில் அமர்ந்தார். அன்று அவர் சொன்ன வார்த்தை எனக்காகவோ, என் மகனுக்காகவோ மட்டும் சொன்ன வார்த்தைகள் அல்ல. உலகத்தில் எந்தத் தந்தையும் தாயும் தன் பிள்ளைகளின் முன் அவமானப்படக் கூடாது. அப்படி அவமானப்பட்டால் அதுதான் – அந்தத் தாய் தந்தைக்கும் அந்தக் குழந்தைக்கும் வாழ்நாள் அவமானம்.


கனிமொழியின் மனம் கவிதையால் நிறைந்தது. அன்பற்ற மனதிற்கு கவிதை சாத்தியமில்லை. எழுத்தில் எழுதிக் காட்டுவது மட்டுமா கவிதை? சம்பந்தமே இல்லாத மனிதர்கள் மீது, தன்னைவிட எளிமையான மனிதர்கள் மீது, எந்த விதத்திலும் எப்போதும் உதவ மாட்டார்கள் என்று தெரிந்தும், அன்பு செலுத்துகிற மனதைவிடப் பெரிய கவிதை உலகில் எழுதப்பட்டிருக்கிறதா? கனிமொழிக்கு எளிய மனிதர்களின் மீது வற்றாத அன்பு இருக்கிறது. அந்த அன்புதான் அவருடைய கவிதைகள் – அதைத்தான் நான் அன்று உணர்ந்தேன். கனிமொழி என்று பெயர் வைப்பது முக்கியமில்லை. பெயருக்கேற்ற வகையில் செயல்படுவதும் வாழ்வதும் சிரமம். அடாவடியாக இருப்பது சுலபம். கனிவாக இருப்பதுதான் வாழ்வில் சவாலானது.


கலைஞர் வந்ததும் என்னை, கலைஞரின் அறைக்குள் அழைத்துச் சென்றார். “போட்டோகிராபர வரச் சொல்லுங்க” என்று சொன்னார். முரசொலி போட்டோகிராபர் வந்தார். “அப்பா போட்டோ” என்று சொன்னதும், கலைஞர் முகத்தைத் தூக்கிப் பார்த்தார். போட்டோ எடுக்கப்பட்டதும், “நாளக்கி வரணும்” என்று கனிமொழி சொன்னார். அவர் சொன்னபடியே மறுநாள் முரசொலியில் முதல் பக்கத்தில் எழுத்தாளர் இமையம் தன்னுடைய பிறந்த நாளுக்காக கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் என்ற செய்தியும் போட்டோவும் வெளிவந்திருந்தது. கலைஞர் பல இடங்களில் எழுத்தின் மூலம் பல விஷயங்களை உணர்த்துவார். பல சந்தர்ப்பங்களில் போட்டோ மூலம் உணர்த்துவார். கண் பார்வையில், கைச்சாடையில், விரல் அசைவில் – யாருக்கு என்ன பாடம் நடத்த வேண்டுமோ – அந்தப் பாடத்தை நடத்துவார் - அதனால்தான் அவர் கலைஞர். எனக்குத் தலைவர்.

மறுநாள் காலையில் என்னுடைய இரண்டாவது மகன் தமிழ்ச்செல்வனுக்கு முக்கியமான அறுவைச் சிகிச்சை. அவன் முதல் நாள் மதியம்,  “தலைவரைப் பார்க்க முடியுமா?” என்று கேட்டான். என்னுடைய மகனின் ஆசையை கனிமொழிக்குச் சொன்னேன். என்னுடைய மகனின் நிலை அவருக்குத் தெரியும். மறுவார்த்தை இல்லை. “நாளைக்குச் சாயங்காலம் ஏழு மணிக்கு வாங்க” என்று சொன்னார். 

நானும் என் மனைவியும் என் மகன்கள், கதிரவன், தமிழ்ச்செல்வனும் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றோம். நாங்கள் போன சிறிது நேரத்திலேயே கனிமொழி வந்தார். கலைஞருடன் போட்டோ எடுத்துக்கொண்டோம். மூன்றாவது முறை கலைஞரைத் தனியாகச் சந்தித்தேன். அன்று கலைஞர் பேசவில்லை. ஆனாலும் அவருக்குப் பக்கத்தில் நிற்கும்போது பயம் வந்துவிடுகிறது. உடல் வியர்த்துப்போகிறது. லட்சக்கணக்கான மேடையில் முழங்கிய குரல் மௌனத்தில் நிலைபெற்றிருந்தது. கழுத்தில் ட்ராக்கியாஸ்டமி போட்டிருந்த நேரம். நாங்கள் கலைஞரிடமும் கனிமொழியிடமும்  வணக்கம் சொல்லி விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தோம். என்னுடைய மகனின் அறுவைச் சிகிச்சையைவிட எனக்குக் கஷ்டமாக இருந்தது. பேச முடியாமல் இருந்த ‘கலைஞரை’ பார்த்ததுதான். 

ஒவ்வொரு முறை கலைஞரைச் சந்திக்க போகும்போதும் ஒரு அதிசயத்தைப் பார்க்க போவதுபோல உணருவேன்.  அவரைச் சந்தித்ததால் ஏற்பட்ட  மகிழ்ச்சி பல நாட்களுக்கு எனக்குள் இருக்கும்.

நான் மூன்று முறை தனியாகக் கலைஞரைச் சந்திப்பதற்குக் காரணமாக இருந்தவர் கனிமொழிதான். அவர் என்னுடைய எழுத்துக்குச் செய்த கௌரவம் என்றே நான் கருதுகிறேன். இந்தக் கட்டுரை எழுதுகிறபோது கலைஞருடன் இருந்த அந்த அரிய தருணங்கள் மனதை நிறைக்கின்றன.


அந்திமழை - செப்டம்பர் 2023

2 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. மனிதனின் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு நன்மைகளும் மற்றும் தீமைகளும் என்றும் அழியாத சுவடுகள். ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் வலியை விட அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு ஏற்படும் வலியை தாங்கிக்கொள்ள முடியாது அதை விவரிக்கவும் முடியாது. உங்களுடைய மனதில் நீங்காமல் இருக்கும் எண்ணங்களை பதிவிட்டமைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு