கட்சிக்காரப் பிணம் - இமையம்
ஐந்து நிமிஷத்திற்கு
முன்னால்தான் “அப்பாவ வந்து பாருப்பா” என்று ராஜாமணி சொன்னாள். தமிழரசனும் அவனுடைய
மனைவி மேகலாவும் மாடியிலிருந்து இறங்கி வந்து பார்த்தார்கள். உயிர் பிரிந்துவிட்டது
தெரிந்தது. எப்படி நடந்திருக்கும் என்று யோசிக்கக்கூட அவர்களுக்கு நேரமில்லை. பயத்தில்
நடுங்கிப்போனார்கள். அழக்கூட முடியவில்லை. இருவரும் பிணத்தின் முகத்தையே வைத்த கண்
வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். இருவருக்கும் உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது.
அதிர்ச்சியில் வியர்த்துப்போயிற்று. அடுத்து என்ன செய்வது, யாரிடம் சொல்வது என்பதுகூட
அவர்களுக்குத் தெரியவில்லை.
“ராத்திரி நல்லபடியாதான
சாப்புட்டுட்டுப் படுத்தாரு? காலயில பாத்தா உசுரோட இல்லியே. இப்பிடியா சாவு வரும்?
தெனம் அஞ்சு மணிக்கு எந்திரிச்சிடுவாரு. எந்திரிச்சதுமே காபி கேப்பாரேன்னு காபிய போட்டுக்கிட்டுப்
போயி எழுப்புனப்பதான் எனக்கே தெரிஞ்சிது. தூக்கத்திலியே உயிர் போயிடிச்சி. ஒங்களுக்கு
முன்னாடியே நான் போயிடணும்ன்னு நெனச்சனே. என்னெ வுட்டுட்டுப் போயிட்டிங்களா?” என்று
கேட்டு அழுதுகொண்டிருந்த ராஜாமணியின் பக்கத்தில் போய் “ஒங்களுக்கு ஏதாச்சும் ஆயிடப்
போவுது” என்று சொன்ன மேகலாவும் அழ ஆரம்பித்தாள்.
“ஒரு வார்த்தக்கூட
சொல்லாமப் போயிட்டாருப்பா ஒங்கப்பா” என்று தமிழரசனைப் பார்த்துச் சொன்ன ராஜாமணி ‘மாங்கு
மாங்கு’ என்று நெஞ்சில் அடித்துக்கொண்டாள்.
பிணத்தின் இடுப்பிலிருந்த வேட்டியைச் சரிசெய்த
தமிழரசனிடம், “சொந்தக்காரங்களுக்கு போன்போட்டு சொல்லுங்க” என்று மேகலா சொன்னாள். அவள்
சொன்னதைக் காதில் வாங்காமல் தமிழரசன் பிணத்தின் கைகளையும் கால்களையும் நகர்த்திவைத்தான்.
பிறகு அழ ஆரம்பித்தான்.
“என்னெ வுட்டுட்டுப் போயிட்டிங்களா?” என்று
கேட்டதோடு, பிணத்தின் முகத்தைத் தடவிக்கொடுத்து அழுதுகொண்டிருந்தாள் ராஜாமணி.
ராஜாமணியும் மேகலாவும்
அழுதுகொண்டிருக்கிற குரல் கேட்டு எதிர் வீட்டு ஆனந்தனும் அவளுடைய மனைவி செல்வியும்
ஓடிவந்து கதவைத் தட்டினார்கள். கதவைத் தட்டுகிற சத்தம் கேட்டு எழுந்துபோய் மேகலாதான்
கதவைத் திறந்தாள். “என்னாச்சி?” என்று ஆனந்தனும் செல்வியும் ஒரே குரலாகக் கேட்டனர்.
“மாமா இறந்திட்டாங்க” என்று மேகலா சொன்னதும் “என்னா சொல்றீங்க?” என்று கேட்டுக்கொண்டே
ஆனந்தனும் செல்வியும் பிணம் இருந்த அறைக்கு ஓடிவந்தனர். பாண்டியன் இறந்துவிட்டது தெரிந்தது.
அவர்களைப் பார்த்ததும்தான் ராஜாமணிக்குக் கூடுதலாக அழுகை வந்தது. செல்வியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு
அழ ஆரம்பித்தாள்.
“எப்பிடியாச்சிண்ணே?” என்று தமிழரசனிடம்
கேட்டான் ஆனந்தன்.
“நானும் மேகலாவும் மாடியில் தூங்கிக்கிட்டிருந்தம்.
திடீர்னு வந்து அம்மா கதவத் தட்டினாங்க. கதவ தொறந்து என்னான்னு கேட்டப்பதான் தெரிஞ்சிது”
என்று கண் கலங்கியபடியே தமிழரசன் சொன்னான்.
“ஹார்ட் அட்டாக்கா இருக்கும். தூக்கத்திலியே
உயிர் பிரிஞ்சிடிச்சிபோல” என்று சொன்னான் ஆனந்தன். அப்போது பக்கத்து வீட்டு ராதாவும்
அவனுடைய மனைவி ராணியும் வந்தனர். வந்த வேகத்தில் என்ன என்று கேட்டனர். ஆனந்தனிடம் சொன்னதையே
ராதாவுக்கும் ராணிக்கும் சொன்னான் தமிழரசன். ராணி ராஜாமணியைக் கட்டிப் பிடித்துக்கொண்டு
அழ ஆரம்பித்தாள்.
ராஜாமணி, செல்வி,
ராணி மூவரும் அழுகிற சத்தம் கேட்டுத் தெருவிலிருந்த ஆண்கள், பெண்கள் என்று ஒருசிலர்
ஓடிவந்தனர். பாண்டியன் இறந்துவிட்டார் என்பதை யாராலுமே நம்ப முடியவில்லை. “நேத்து மத்தியானம்
நல்லாத்தான் இருந்தாரு”, “ராத்திரி ஏழு எட்டு மணிக்கு வரப்போற தேர்தல பத்தி எங்கிட்ட
பேசிக்கிட்டிருந்தாரே” என்று ஆளாளுக்கு ஏதேதோ சொன்னார்கள்.
பாண்டியன் இறந்துவிட்ட செய்தி பரவியதும்,
தெருக்காரர்கள், ஊர்க்காரர்கள் என்று பலரும் வர ஆரம்பித்தனர். கூட்டம் சேர ஆரம்பித்தது.
பாண்டியன் எப்படி இறந்தார் என்று தமிழரசனிடம் விசாரித்துக்கொண்டிருந்த தெற்குத் தெரு
சரவணன், “தூக்கத்திலியே உயிர் பிரிஞ்சிருக்கு. சாமி இல்ல, சாமி இல்லன்னு சொல்லிக்கிட்டே
இருப்பாரு, பகவான் அவருக்கு நல்ல சாவ கொடுத்திட்டான். இன்னிக்கி வெள்ளிக்கிழம. முகூர்த்த
நாள். நல்ல நாளிலதான் செத்திருக்காரு. மோட்சத்துக்குப் போவாரு” என்று சொன்னார். அவர்
சொன்ன விதம் கடவுளின் அருளால்தான் பாண்டியன் இறந்துவிட்டார் என்பதுபோல் இருந்தது.
தமிழரசனிடம் வந்த
மேகலா, “அப்பிடியே நின்னுக்கிட்டிருந்தா என்னா அர்த்தம்? சொந்தக்காரங்களுக்கு போன்போட்டு
சொல்ல வாணாமா? நம்ப பசங்களுக்கு சொல்லுங்க. முதல்ல ஒங்க தங்கச்சிக்கு சொல்லுங்க. சேலத்திலிருந்து
வர வாணாமா? நம்ப பசங்க எப்பிடிதான் மெட்ராசிலிருந்து வரப்போறாங்களோ” என்று சொன்னாள்.
“போன் எங்க இருக்கு?”
“மாடியிலதான் இருக்கு. படுக்கை கிட்ட பாருங்க”
என்று சொல்லிவிட்டு அங்கே இங்கே என்று கிடந்த பொருள்களை எடுத்து வீட்டை ஒழுங்கு செய்ய
ஆரம்பித்தாள். தமிழரசன் மாடிக்குப் போய் செல்போனை எடுத்துக்கொண்டு வந்து உறவினர்களுக்கு,
தெரிந்தவர்களுக்கு என்று செய்தியைச் சொல்ல ஆரம்பித்தான். பிணம் இருந்த அறையிலிருந்து
வெளியே வந்த மேகலா, “மாடிய பூட்டுனிங்களா?” என்று கேட்டாள்.
“மறந்திட்டன்” என்று தமிழரசன் சொன்னதும்,
“தல எழுத்து” என்று சொல்லிக்கொண்டே மாடிக்குப் போனாள் மேகலா.
“கட்சி முறைப்படிதான் பொணத்த எடுப்பீங்கன்னு
நெனைக்கிறன்” என்று சரவணன் சொன்னார். அவர் சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் பாண்டியன்
இறந்துவிட்ட செய்தியை யாருக்கோ போனில் சொல்லிக்கொண்டிருந்தான் தமிழரசன்.
தெருவிலிருந்து
வேகமாக வீட்டிற்குள் ஓடிவந்த கிளைச் செயலாளர் கோவிந்தன் பிணத்தைப் பார்த்து, “போயிட்டிங்களா
ஒன்றியம்?” என்று கேட்டு அழுதான். சிறிது நேரம் கழித்து தமிழரசனிடம் வந்து “எப்பிடிண்ணே
ஆச்சி?” என்று கேட்டான். தமிழரசன் விஷயத்தைச் சொன்னதும் “ஒன்றியத்துக்கு, மாவட்டத்துக்கு,
எம்.எல்.ஏ.வுக்கு சொல்லிட்டிங்களா” என்று கேட்டான்.
“இல்ல” என்று தமிழரசன் சொன்னதும் “நான்
சொல்லிக்கிறன்” என்று சொன்ன வேகத்தில் சட்டைப் பையிலிருந்த செல்போனை எடுத்து, ஒன்றியச்
செயலாளர், மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ., மாவட்டப் பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர்கள்
என்று பலருக்கும் போன்போட்டுச் சொல்ல ஆரம்பித்தான். அவன் சொன்ன விதம் சொந்த அப்பன்
செத்த செய்தியைச் சொல்வதுபோல்தான் இருந்தது. துக்கம் விசாரிப்பதற்காக வந்த உள்ளுர்
ஆளிடம் பேசிக்கொண்டிருந்த தமிழரசனிடம் வந்து மெதுவாக, “பாடிய எப்பிடிண்ணே எடுக்கிறது?”
என்று கேட்டான். தமிழரசனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
“பழய கட்சிக்காரரு. பெரிய கட்சிக்காரரு
‘என்ன பாண்டியா, நல்லா இருக்கியா?’ன்னு தலைவரே விசாரிக்கிற நெலமயில இருந்தவரு. மூணு
முற ஒன்றியச் செயலாளரு, ரெண்டு முற மாவட்டப் பிரதிநிதி, ரெண்டு முற பொதுக்குழு உறுப்பினருன்னு
கட்சியில பல பொறுப்புல இருந்தவரு. கட்சி முறப்படி பாடிய எடுக்கிறதுதான் நல்லது”.
“அவரால கட்சியில
வளந்தவன் நான். ஒன்றியக் கவுன்சிலர், மாவட்டக் கவுன்சிலர் பதவியெல்லாம் எனக்கு அவரால
வந்ததுதான்” என்று சொல்லும்போது அவனுக்குக் கண்கள் கலங்கிவிட்டன. “கட்சி முறப்படிதான்
பொணத்த எடுக்கணும். அதுதான் முற. கட்சிக்காரனுக்குக் கட்சி செய்யுற மரியாத” என்று தழுதழுத்த
குரலில் கோவிந்தன் சொன்னதும் “ராத்திரிகூட தலைவரப் பத்தி, கட்சியப் பத்திதான் எங்கிட்ட
பேசிக்கிட்டிருந்தாரு” என்று சொல்லிவிட்டு தமிழரசன் அழுதான். அப்போது உள்ளுரிலிருந்த
கட்சிக்காரர்கள் ஐந்தாறு பேர் ஒன்றாக வந்து, பிணத்திடம் கொஞ்ச நேரம் நின்றுவிட்டு வந்தனர்.
கோவிந்தனிடம் “கட்சி முறப்படிதான பாடிய எடுக்கப்போவுது?” என்று கேட்டதும் அவனுக்கு
கோவம் வந்துவிட்டது.
“அவரு என்னெ சாதாரணக்
கட்சிக்காரரா? ஊரறிஞ்ச, நாடறிஞ்ச கட்சிக்காரரு, கட்சின்னா, தலைவருன்னா, உசுரயே வுடுற
ஆளு. கட்சி முறப்படிதான் பொணத்த எடுக்கணும். முத மாலயே ஊர்க் கிளை சார்பாதான் போடணும்,
ஒரு ஆளு போயி மால வாங்கிகிட்டு வா. ஒரு ஆளு போயி போஸ்டர், டிஜிட்டல் பேனர் அடிச்சிக்கிட்டு
வா” என்று சொல்லிப் பணத்தைக் கொடுத்து மூன்று பேரை அனுப்பினான். பிறகு தமிழரசன் பக்கம்
திரும்பி உத்தரவு போடுவதுபோல் “முத மால கட்சியோட மாலதான் போடணும்ண்ணே” என்று சொல்லிவிட்டு
உள்ளுர்க் கட்சிக்காரர்களுடன் வாசலுக்குப் போனான். கூடவே வந்த இளைஞரணி மனோகரனிடம்
“கட்சிக்காரங்க பூராவும் ஒண்ணாக் கூடி ஊர்வலம் வந்துதான் மாலபோடணும், யாரும் தனித்தனியா
போடக் கூடாது” என்று கட்டளை மாதிரி சொன்னான். அதற்கு மனோகரன் “கட்சி ஒற்றுமய காட்டுவோம்ணே”
என்று சொன்னான்.
பாண்டியன் இறந்துவிட்ட
செய்தி பரவிய கொஞ்ச நேரத்திலேயே வீடு கொள்ளாத அளவுக்குக் கூட்டம் சேர்ந்துவிட்டது.
சின்ன அறைக்குள் பிணம் இருந்ததால் நெரிசல் அதிகமாக இருந்தது. அதனால் அறையிலிருந்த பிணத்தைக்
கூடத்திற்குத் தூக்கிக்கொண்டுவந்து வைக்கச் சொன்னார்கள். பிணத்தைக் கூடத்திற்குத் தூக்கிக்கொண்டு
வந்த ஆட்கள் “எந்த வாட்டத்தில கிடத்துறது?” என்று கேட்டார்கள். கூட்டத்திலிருந்த சரவணன்
“அவருதான் தெக்கு வடக்குன்னு பாக்காத ஆளாச்சே” என்று சொன்னார். தமிழரசன், “எப்பிடி
வேணும்னாலும் வைங்க” என்று சொன்னான். அப்போது பிணத்தைத் தூக்கிக்கொண்டு வந்த தங்கவேல்,
“நம்ப சாதி முறப்படி கிடத்த வாணாமா?” என்று கேட்டான். அதற்கு “அவரு சாதிய எப்பப் பாத்தாரு,
சாதி வழக்கத்த எப்பப் பாத்தாரு. இஷ்டப்படி வைங்கப்பா” என்று சரவணன் சொன்னார். ஆனாலும்
சாதி முறைப்படியே பிணத்தைக் கிடத்தினார்கள்.
கோவிந்தனும் உள்ளுர்க்
கட்சிக்காரர்கள் இரண்டு பேரும் வந்து “ஷாமியானா பந்தல், சேர் சொல்லிட்டிங்களா?” என்று
தமிழரசனிடம் கேட்டனர்.
“இல்லெ” என்று தமிழரசன் சொன்னான். ஐந்தே
முக்கால்மணிக்கு வந்து கதவைத் தட்டி பாண்டியன் இறந்துவிட்டார் என்று ராஜாமணி சொன்னதிலிருந்து
இதுவரை என்ன நடக்கிறது, யார் வீட்டுக்கு வருகிறார்கள், யார் வந்து தன்னிடம் துக்கம்
விசாரிக்கிறார்கள், மேகலாவும், ராஜாமணியும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது
எல்லாம் அவனுடைய கவனத்தில் பதியவே இல்லை. பாண்டியன் இறந்துவிட்டார் என்பதை அவனால் இன்னும்
நம்ப முடியாமல்தான் இருந்தது. அவனுக்கு இன்னமும் பதற்றமும் படபடப்பும் இருந்துகொண்டுதான்
இருந்தது.
அவன் பேசாமல்
இருப்பதைப் பார்த்த கோவிந்தன், “நீங்க மத்த வேலயப் பாருங்க. நான்
பந்தலுக்கு, சேருக்கு ஆர்டர் சொல்லிக்கிறன்” என்று சொல்லிவிட்டுப்
போனான். வாசலுக்கு வந்த கோவிந்தன் ஷாமியானா பந்தலுக்கும் சேருக்கும் போனிலேயே ஆர்டர்
சொன்னான். “சீக்கிரம் சீக்கிரம்” என்று சொன்னான். பிறகு மாலை வாங்கப் போனவனுக்கு போன்போட்டு
“சீக்கிரம் வந்து சேரு. முதல்ல கட்சி மாலதான் போடணும்” என்று சொல்லி கத்தினான்.
பிணத்திற்குப்
பக்கத்தில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த ராணி, “பொணத்துக்கு வா கட்டு, கைகட்டு, கால்கட்டு
கட்ட வாணாமா? நெத்தி காசு வைக்க வாணாமா?” என்று கேட்டாள். ராணி கேட்டதைக் காதில் வாங்காத
மேகலா புதிதாக துக்கம் விசாரிக்க வந்த பெண்களிடம் பாண்டியன் எப்படி இறந்தார் என்பதை
சொல்லிக்கொண்டிருந்தாள். ராணி கேட்டதற்கு “இது கட்சி பொணமாச்சே வழி வுடுவாங்களான்னு
தெரியலியே” என்று தானகவே செல்விதான் பதில் சொன்னாள்.
“கட்சி பொணமா இருந்தாலும் வழிவுட வாணாமா?”
என்று ராணி கேட்டாள்.
“பெரிய கட்சிக்காரரு வீடு. சடங்கெல்லாம்
செய்ய மாட்டாங்கன்னு தான் நினைக்கிறன்” என்று செல்வி சொன்னாள். தனக்குப் பக்கத்தில்
உட்கார்ந்திருக்கும் பெண்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை எல்லாம் கவனிக்கும்
நிலையில் ராஜாமணி இல்லை. தன்னுடைய போக்கில் “என்னெ வுட்டுட்டுப் போயிட்டிங்களா?” என்று
கேட்டு அழுதுகொண்டிருந்தாள்.
வாசலிலிருந்து
வீட்டிற்குள் வந்த கோவிந்தன், “பாடிய வைக்கறதுக்கு பிரீசர் சொல்லிட்டிங்களா?” என்று
கேட்டான். அதற்குத் தமிழரசன், “சொல்லிடுங்க” என்று சொன்னான். உடனே போன்போட்ட கோவிந்தன்
பிரீசருக்கு ஆர்டர் சொன்னான். பிறகு “ஷாமியானா சொல்லியாச்சி. சேர் சொல்லியாச்சி. வரவங்களுக்கு
கொடுக்கிறதுக்கு டீயும் சொல்லியாச்சி” என்று தமிழரசனிடம் சொன்னான். அப்போது அவனுக்கு
போன் வந்தது. போனை எடுத்துப் பேச ஆரம்பித்தவன் “சரிண்ணே. சரிணே. அண்ணன் சொல்றபடியே
செஞ்சிடலாம்ணே. நாங்க எல்லாத்தயும் ரெடி பண்ணிடுறம்ண்ணே. ஒகோன்னு செய்யுறம்ணே” என்று
சொல்லிவிட்டு போனை வைத்த கோவிந்தன், தமிழரசனைப் பார்த்து “ஒன்றியம் பேசுனாரு. எம்.எல்.ஏ.வ,
மாவட்டத்த அழைச்சிக்கிட்டு வந்துடுறன்னு சொன்னாரு” என்று சொன்னான்.
அப்போது தெருவிலிருந்து அழுதுகொண்டே ஓடிவந்த
பாண்டியனின் பங்காளி வீட்டுப் பெண் செல்லம்மாள் தமிழரசனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு
அழ ஆரம்பித்தாள். அவள் அழுது முடிக்கும்வரை பேசாமல் நின்றுகொண்டிருந்த கோவிந்தன்,
“கொஞ்சம் பணம் வேணும்ணே” என்று தயக்கத்துடன் சொன்னான்.
“எதுக்கு?”
“சுடுகாட்டுல
எரங்கல் கூட்டம் போடணும். ஷாமியானா பந்தல் போடணும், சேர் சொல்லணும், மைக் செட்டுக்கு
ஆர்டர் சொல்லணும்ணே.” சத்தமில்லாமல் சொன்னான். தமிழரசன் வாயைத் திறக்கவில்லை. அவன்
எதனால் பேசவில்லை என்பதைப் புரிந்துகொண்ட மாதிரி “சாதாரண கட்சிக்காரருண்ணா ஊர்வலமா
வந்து மாலய போட்டுட்டுப் போயிடலாம். அண்ணன் பெரிய கட்சிக்காரரு. மாவட்டம், எம்.எல்.ஏ.ன்னு
வச்சி எரங்கல் கூட்டம் போட்டுத்தான் அடக்கம் செய்யணும். அதான் மரியாத” என்று பக்குவமாக
கோவிந்தன் சொன்னான். அவன் சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்கிற மனநிலையில் தமிழரசன் இல்லை
என்பதை அவனுடைய முகமே காட்டிக்கொடுத்தது. ஆனாலும் தமிழரசனை சமாதானம் செய்கிற விதமாக,
“அண்ணன் படிப்பு, வேல, வெளியூர்னு போயிட்டிங்க. அதனால கட்சியோட நடமுற உங்களுக்கு அவ்வளவா
தெரியாது” என்று கோவிந்தன் சொன்னான்.
தமிழரசன் படித்து
முடித்ததுமே வங்கியில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். கட்சிக் கூட்டத்திற்கெல்லாம் வர
மாட்டான். அதற்கு அவனுக்கு நேரமும் இருக்காது. தீபாவளி, பொங்கலுக்கு மட்டும்தான் ஊருக்கே
வருவான். இப்போதுகூட வங்கியில் போராட்டம் ஒருவாரம் லீவ் என்பதால்தான் ஊருக்கு வந்திருக்கிறான்.
அவன் ஊருக்கு வந்திருக்கிற நேரத்தில்தான் பாண்டியன் இறந்துவிட்டார்.
“அப்பறம் பேசலாம்.”
“இப்பியே சொன்னாதான் வேல நடக்கும். ஷாமியானா
பந்தல் போடணும். சேருக்கு ஆர்டர் சொல்லணும். ஒவ்வொரு பொருளும் வந்து சேர லேட்டாயிடும்.
லேட்டாயிட்டா ஒன்றியம், மாவட்டம், எம்.எல்.ஏ. எல்லாம் லோக்கல் கட்சிக்காரனத்தான் திட்டுவாங்க”
என்று சொன்னான் கோவிந்தன்.
“அப்பாவே இறந்திட்டாங்க. இனிமே கூட்டம்போட்டு
என்னா செய்யப் போறம்?” என்று கேட்ட தமிழரசனுக்குக் கண்கள் கலங்கிவிட்டன.
“அப்படியில்லண்ணே. அவராலதான் நம்ப ஏரியாவுல
கட்சின்னு ஒண்ணு உண்டாச்சி. கட்சிக்குன்னு ஒரு மரியாத இருக்கு” என்று கோவிந்தன் பேச
ஆரம்பித்ததும், பேச்சை முறிக்க நினைத்த தமிழரசன், “எதுவா இருந்தாலும் அப்பறம் பேசிக்கலாம்”
என்று சொன்னான்.
“செத்தது சாதாரண ஆளில்ல. பெரிய கட்சிக்காரரு,
அவரோட சாவுக்கு எரங்கல் கூட்டம் போடலன்னா கட்சிக்கி என்னா மரியாத இருக்கு. ஒன்றியம்
சொல்லிட்டாரு. பழய ஒன்றிய சேர்மன் சொல்லிட்டாரு. எம்.எல்.ஏ., மாவட்டம்ன்னு எல்லாரும்
எரங்கல் கூட்டம் நடத்தித்தான் ஆகணும்ன்னு சொல்லிட்ட பின்னால நடத்தாம இருக்க முடியுமா?”
என்று கோவிந்தன் கேட்டதும் தமிழரசனுக்குக் கோபம் வந்துவிட்டது. “எதுனா செஞ்சிட்டுப்
போங்க” என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
அவன் அவ்வாறு செய்வான் என்று எதிர்ப்பார்க்காத
கோவிந்தனுக்குச் சட்டென்று கோபம் வந்துவிட்டது. “நீங்க காசு தர வாணாம். நாங்க பாத்துக்கிறம்.
பாண்டியன் அண்ணனுக்கு இதுகூட செய்யலன்னா அப்பறம் நாங்க எதுக்கு கட்சியில இருக்கணும்?”
என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்டான்.
பிறகு பிணத்திற்குப்
பக்கத்தில் அழுதுகொண்டிருந்த ராஜாமணியிடம் போய் விஷயத்தைச் சொன்னான். அவள் ஒரே வார்த்தையாக,
“கட்சிக்காரங்க விருப்பப்படி செய்ங்க” என்று சொன்னாள். உடனே கோவிந்தன் போன்போட்டு சுடுகாட்டில்
எரங்கல் கூட்டம் போடுவதற்கு தேவையான ஷாமியானாவுக்கு, சேருக்கு, மைக்செட்டுக்கு ஆர்டர்
கொடுத்தான். வீட்டிற்குள் ஒரே சத்தமாக இருந்ததால் வெளியே வந்தான், ஒன்றியச் செயலாளருக்கு,
மாவட்டச் செயலாளருக்கு என்று ஒவ்வொருவருக்கும் போன்போட்டு பாண்டியனுக்கு இரங்கல் கூட்டம்
நடக்க இருக்கிற விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.
நேரமாக நேரமாகக்
கூட்டம் சேர்ந்துகொண்டேயிருந்தது. துக்கம் விசாரிப்பதற்காக வந்த பெரும்பாலானவர்கள்
தமிழரசனிடம் கேட்ட கேள்வி, “பொணத்த எப்பிடி எடுக்கப் போறிங்க?” என்பதுதான். கட்சிக்காரர்களிடம்
“சொல்றன்” என்று சொன்னான். உறவினர்களிடம் “இன்னம் முடிவாகல” என்று சொன்னான். பாண்டியன்
இறந்த கவலையைவிடப் பிணத்தை எப்படி எடுக்கலாம்
என்ற கவலைதான் அவனுக்கு பெரியதாக இருந்தது.
“பொணத்த எப்பிடி எடுக்கப் போறிங்க? கட்சி
முறப்படியா, நம்ப சாதி வழக்கப்படியா?” என்று தமிழரசனிடம் பலரும் கேட்டனர். பாண்டியன்
எப்படி இறந்தார் என்று விசாரித்தவர்களைவிடப் பிணத்தை எப்படி எடுக்கப் போகிறீர்கள் என்று
கேட்டவர்கள்தான் அதிகம்.
பங்காளி முறையிலுள்ள
பெரியசாமி வந்து, “நல்ல நேரம் முடியறதுக்குள்ளார பொணத்துக்கு வழிவிடணும். வண்ணானுக்கு
சொல்லியாச்சா? வண்ணான் இல்லாம வழிவுட முடியாது. வழிவுடுறதுக்கான சாமான் வாங்கியாச்சா?”
என்று கேட்டார்.
“இல்லெ” என்று தமிழரசன் சொன்னான்.
“கட்சி முறப்படி பொணத்த எடுக்கப் போறிங்களா?
நம்ப சாதி வழக்கப்படி எடுக்கிறதுதான் நல்லதுன்னு எனக்கு படுது” என்று சொன்னார்.
சாதி முறைப்படி எடுப்பதா, கட்சி முறைப்படி
எடுப்பதா? தமிழரசனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஒருநேரம் கட்சி முறைப்படி எடுக்கலாம்
என்று தோன்றியது. மற்றொரு நேரம் சாதி முறைப்படி எடுக்கலாம் என்று தோன்றியது.
“கொஞ்சம் இப்பிடி வந்திட்டு போங்க” என்று
மேகலா வந்து கூப்பிட்டாள்.
“சொல்ல வேண்டியவங்களுக்கெல்லாம் சொல்லியாச்சா?
மறந்திடப்போவுது. நீங்க சொல்லனாலும் மத்தவங்கள விட்டாவது சொல்லிடுங்க” என்று மேகலா
சொன்னதற்கு ஒரே வார்த்தையாக “நான் பாத்துக்கிறன்” என்று சொன்னான்.
“நேரமாவுது. கட்சி முறப்படியா, சாதி முறப்படியான்னு
சொன்னாதான் அடுத்த வேலய பாக்க முடியும். வண்ணான் வந்து வாசல்ல நிக்குறான். சொன்னிங்கன்னா
போயி ‘சாணி புள்ளயார புடிச்சிக்கிட்டு, அருகம்புல்ல கொண்டுக்கிட்டு வா’ன்னு சொல்லலாம்.
அப்பறம் வழிவுடுறதுக்கான சாமான் வாங்குறதுக்கு கடைக்கி ஆள் அனுப்பலாம். எழவு சொல்ல
ஆள் விடலாம். சேகண்டி அடிக்க, சங்கு ஊத தாதனுக்கு சொல்லணும். மேளக்காரனுக்கு, ஆட்டக்காரனுக்கு
சொல்லணும்” என்று சரவணன் சொன்னார்.
வீட்டிற்குள்
வந்த வண்ணான் கந்தசாமி, “காரியத்த ஆரம்பிக்கலாம்ங்களா?” என்று கேட்டான். பிறகு தானாகவே
“ஐயா கட்சிக்காரரு. சடங்கு, சம்பிரதாயமெல்லாம் அவருக்குப் புடிக்காது. தாத்தா, பாட்டி
செத்ததுக்குக்கூட எதுவும் செய்யல. கரும காரியம்கூட பண்ணல. ஐயாவ எப்பிடி எடுக்கலாம்னு
சொன்னிங்கன்னா அதுக்கேத்த மாதிரி காரியத்த செய்யலாம்” என்று சொன்னது தமிழரசனுக்கு ஆச்சரியமாக
இருந்தது. பாண்டியன் பற்றி ஊரிலுள்ள எல்லாருக்குமே தெரிந்திருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டான்.
“சொல்றன்” என்று
மட்டும் கந்தசாமியிடம் சொன்னான். அப்போது பிணத்தை வைப்பதற்கான பிரீசர் வந்திறங்கியது.
பிரீசரை வீட்டுக்குள் தூக்கிக்கொண்டுவந்து வைத்தார்கள் கட்சிக்காரர்கள். மின்சார இணைப்பை
எங்கிருந்து எடுப்பது என்று மேகலாவிடம் கேட்டான் கோவிந்தன். பிணத்திற்கு பக்கத்தில்
உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த ஒரு பெண் “நல்ல நேரம் முடியப் போவுது. வழியவுட்டுட்டு
பொணத்தத் தூக்கி பொட்டியில வையிங்க” என்று சொன்னாள்.
“துணிய மாத்துங்க”
என்று இரண்டு மூன்று பெண்கள் ஒரே குரலாகச் சொன்னதும் பாண்டியனுக்கு சொந்தக்கார ஆண்கள்
வந்து பட்டுவேட்டியை கட்டிவிட்டனர். அதைப் பார்த்ததும் கோவிந்தன் “பட்டு வேட்டியெல்லாம்
கட்டாதிங்க. கட்சி வேட்டிதான் கட்டணும்” என்று சொன்னான். அவன் சொன்னதை யாரும் கேட்காததால்
தமிழரசனிடம் வந்து “கட்சி வேட்டி இல்லாம நாங்க ஒரு நாளுகூட அவர பாத்ததில்ல. பொணமாப்
போகும்போதும் கட்சி வேட்டியோடவே போவட்டும்ணே” என்று கெஞ்சுவதுபோல் சொன்னான். அவனோடு
சேர்ந்துகொண்டு இரண்டு மூன்று கட்சிக்காரர்களும் சொன்னார்கள். ஆனால் கட்சிக்காரர்கள்
சொன்னதை தமிழரசனுடைய உறவினர்கள் கேட்கவில்லை. மாவட்டப் பிரதிநிதி ஆசைத்தம்பி, “பொணத்துக்காரங்க
இஷ்டப்படி விடுங்கப்பா” என்று சொன்னார்.
ஆசைத்தம்பி சொன்னதும்
கோவிந்தன் உட்பட எல்லா கட்சிக்காரர்களும் கொஞ்சம் அடங்கியதுபோல் இருந்தனர். ஆனால் சிறிது
நேரம் கழித்து தமிழரசனிடமும், அவனுடைய சொந்தக்காரர்களிடமும் “பொணம் சுடுகாட்டுக்குப்
போவயில கட்சி வேட்டி போத்தித்தான் போகணும். பாடயில கட்சிக்கொடி இருக்கணும். பொணக்குழி
மேட்டுலயும் கட்சி கொடிய நட்டு வைக்கணும். அத நாங்க செஞ்சிதான் தீருவம். அதுல யாரும்
தலயிடக் கூடாது” என்று சத்தமாகவும் எச்சரிக்கை செய்கிற விதமாகவும் சொன்னான் கோவிந்தன்.
உடனே ஆசைத்தம்பி “போயி புது கட்சி வேட்டி ஒண்ணும், துண்டு ஒண்ணும் வாங்கிகிட்டு வாங்க,
பாடயில கட்ட, குழி மோட்டு நட்டுவைக்க ரெண்டு கொடிய ரெடி பண்ணுங்க” என்று சொன்னதும்
கோவிந்தன் மனோகரனிடம் பணத்தைக் கொடுத்து அனுப்பினான்.
அப்போது ஆசைத்தம்பியின் காதில் கோவிந்தன்
ரகசியமாக ஏதோ சொன்னான். உடனே ஆசைத்தம்பி தமிழரசனிடம், “பாண்டியன் அண்ணனபோல ஒரு கட்சிக்காரர
பாக்கிறது அபூர்வம். உரிய மரியாத செஞ்சிதான் பொதைக்கணும். எரங்கல் கூட்டம் போடணும்.
எம்.எல்.ஏ.வும், மாவட்டமும் வரன்னு சொல்லி இருக்காங்க. வந்துடுவாங்க. நான் வெளிய ஒக்காருறன்”
என்று சொல்லிவிட்டு வாசலுக்கு வந்து, ஒரு சேரில் உட்கார்ந்துகொண்டார். அவரை அடுத்து
கோவிந்தன், உள்ளூர் கட்சிக்காரர்கள் என்று கட்சிக்காரர்கள் சேரில் உட்கார்ந்தனர்.
கட்சிக்காரர்கள்
வெளியே போகட்டும் என்று காத்துக்கொண்டிருந்த மாதிரி தமிழரசனுடைய உறவினர்கள் சிலரும்
சாதிக்காரர்கள் சிலரும் அவனை தனியாக அழைத்துக் கொண்டுபோய், “நேரமாவலியா? சாவுல கட்சியெல்லாம்
பாக்கக் கூடாது, செத்தவரு நல்ல கதிக்குப் போக வேணாமா? நம்ப வழக்கப்படிதான் பொணத்த பொதைக்கணும்.
பொணத்த எம்மாம் நேரமா போட்டு வச்சியிருக்கிறது? பொணத்துக்கு வழிவுட சொல்லு. இல்லன்னா
நாங்க பாத்துக்கிறம். சாதிக்காரங்க, சொந்தக்காரங்கன்னு எதுக்கு இருக்கிறம்?” என்று
கேட்டனர்.
“அப்பா வேற விதமா
இருந்திட்டாரே. அதுதான் சங்கடமா இருக்கு” என்று தமிழரசன் சொல்லி முடிப்பதற்குள், “அவரு
காலம் முடிஞ்சிப்போச்சி தம்பி. உள்ளுர்ல இருக்கிற கோவிந்தன் மாதிரியான ஆளுங்க மட்டும்தான்
கட்சி, அது இதுன்னு பேசுவாங்க. பொணத்துக்கு உடையவங்க, நாம்பதான் முடிவு செய்யணும்”
என்று ஆளாளுக்கு ஏதேதோ சொல்ல மண்டை குழம்பிப்போனான் தமிழரசன். சொந்தக்காரர்களின், ஊர்க்காரர்களின்
பேச்சைக் கேட்பதா, கட்சிக்காரர்களின் பேச்சைக் கேட்பதா என்று யோசித்தான். நேரமாகிக்கொண்டிருக்கிறதே
என்ற கவலையும் இருந்தது.
“அம்மாகிட்ட ஒரு
வார்த்த கேட்டுக்கறன்” என்று சொல்லிவிட்டுப் பிணத்திற்குப் பக்கத்தில் உட்கார்ந்து
அழுதுகொண்டிருந்த ராஜாமணியிடம் வந்து, “கொஞ்சம் இங்க வாம்மா” என்று கூப்பிட்டான். இந்த
நேரத்தில் எதற்காகக் கூப்பிடுகிறான் என்று யோசித்துக்கொண்டே மெல்ல எழுந்தாள். முன்பு
பாண்டியனின் பிணம் இருந்த அறைக்குத் தமிழரசன் முதலில் போனான். அவனுக்குப் பின்னால்
ராஜாமணி போனாள்.
“என்னாம்மா செய்யுறது?” என்று தயக்கத்துடன்
கேட்டான். “அப்பா இப்பிடி திடீர்னு போவாருன்னு நினைக்கலப்பா” என்று சொல்லிவிட்டு கண்
கலங்கினாள் ராஜாமணி.
“பொணத்த எப்பிடிம்மா எடுக்கிறது?”
ராஜாமணி அழுதுகொண்டிருந்ததால், “நான் கேக்குறது
புரியுதாம்மா?” என்று மீண்டும் கேட்டான். அவன்
கேட்டதற்குப் பதில் சொல்லாமல் “நீங்க ஊருக்கு வந்திருக்கிற நேரத்தில நடந்தது நல்லதா
போச்சிப்பா. இல்லன்னா எம் பாடு நாறிப்போயிருக்கும்” என்று சொன்னாள்.
“ஊருக்காரங்க,
சொந்தக்காரங்க ஒண்ணு சொல்றாங்க. கட்சிக்காரங்க ஒண்ணு சொல்றாங்க. எத செய்யுறதுன்னு தெரியல”
என்று தணிந்த குரலில் தமிழரசன் சொன்னதும், “அப்பா குணம்தான் ஒனக்குத் தெரியுமே தம்பி”
என்று ராஜாமணி சொன்னாள்.
“கட்சியப் பாத்தா
சொந்தக்காரங்க, ஊருக்காரங்க தப்பா நெனைக்க மாட்டாங்களா?” என்று சொல்லும்போது தமிழரசனின்
மாமனார் வேலாயுதம் அறைக்குள் வந்தார். வந்த வேகத்தில், “இங்க என்ன செய்யுறிங்க? பொணத்துக்கு
வழிவுடனும்ன்னு எல்லாரும் காவ காத்துக்கிட்டு கெடக்குறாங்க. வழிவிட்ட பின்னாலதான் பொணத்த
தூக்கி பொட்டியில வைக்க முடியும்” என்று லேசான கோபத்துடன் கேட்டார். அதற்குத் தமிழரசனும்
பதில் பேசவில்லை; ராஜாமணியும் பதில் பேசவில்லை.
“பேசாம இருந்தா எப்பிடி? காரியம் நடக்க
வாணாமா?” என்று வேலாயுதம் மீண்டும் கேட்ட பிறகுதான் தமிழரசன் வாயைத் திறந்தான்.
“பாடிய எப்பிடி எடுக்கிறதுன்னு பேசிக்கிட்டிருக்கம்.”
“இதுல பேசுறதுக்கு என்னா இருக்கு? நம்ப
சாதி முறப்படி, ஊர் முறப்படிதான எடுக்கணும். அதான முற?”
“கடசிவர அப்பா, சடங்கு, சம்பிரதாயம்ன்னு
பாக்காதவரு. நான் செத்தா எந்த சடங்கும் செய்யக் கூடாதின்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு.
அதான் யோசனயா இருக்கு.”
“இப்பதான் அவரு இல்லியே.”
“கட்சிக்காரங்க இருக்காங்க இல்லெ?” குரலைத்
தாழ்த்திச் சொன்னான் தமிழரசன்.
“இதென்ன கட்சிக் கூட்டமா?” என்று கிண்டலான
முறையில் கேட்டார் வேலாயுதம். பிறகு தானாகவே கேலியான குரலில், “கட்சி முறப்படி பொதச்சா,
அனாத பொணம் மாரிதான் பொதைக்கணும். உசுரோட இருந்தப்பதான் கட்சி, தலவரு, கொள்கன்னு இருந்தாரு.
பொணத்துக்கு ஏது கட்சி, கொள்க, தலைவரு?” என்று கேட்டதும் வெடுக்கென்று ராஜாமணி தலையைத்
தூக்கி வேலாயுதத்தைப் பார்த்தாள். கோபம் வந்தது. சம்பந்தி என்பதால் கோபத்தை அடக்கிக்
கொண்டாள்.
வேலாயுதத்தின்
வீட்டில் பெண் எடுக்க மாட்டேன் என்று பாண்டியன் அடம்பிடித்தார். “சாமி சாமின்னு கோயில்கோயிலா
சுத்துற ஆளு. அப்பறம் நம்ப கட்சிக்கு எதிரான ஆளு. அவன் வீட்டுல எப்பிடி பெண் எடுக்கிறது?”
என்று கேட்டார். கட்டினால் மேகலாவைத்தான் கட்டுவேன் என்று தமிழரசன் பிடிவாதம் பிடித்ததால்தான்
கல்யாணத்திற்குச் சம்மதித்தார். சம்மதித்தாலும், “கல்யாணம் கட்சி கல்யாணம்தான்” என்று
உறுதியாகச் சொல்லிவிட்டார்.
சம்பந்தியான பிறகும் கிண்டல் பேச்சு மாறவில்லையே
என்று நினைத்த ராஜாமணி, “உசுரோட இருந்தப்ப எப்பிடி இருந்தாரோ அப்பிடியே சுடுகாட்டுக்கும்
போவட்டும்” என்று உறுதியான குரலில் சொன்னாள். தமிழரசனுக்கும் ராஜாமணி சொன்னபடியே செய்யலாம்
என்ற எண்ணம்தான் இருந்தது.
“என்னம்மா பேசுற?
ஒரு முறையாச்சும், எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரின்னு இருந்தாரா? அவருக்கு பின்னாடி
வந்தவனெல்லாம், எம்.எல்.ஏ., எம்.பி மந்திரின்னு ஆயிட்டான். கட்சிக்காரரு, கட்சி குடும்பங்கிற
பேரத்தான் சம்பாதிச்சாரு. வேற என்னத்த சம்பாதிச்சாரு?” என்ற வேலாயுதம் குற்றம் சாட்டுவதுபோல்
சொன்னதும் ராஜாமணிக்கு நல்ல கோபம் வந்தது. கோபத்தை அடக்கிக்கொள்ள முயன்றாள். அவளுக்குக்
கண்கள் நிறைந்தன. வேலாயுதம் கேட்ட கேள்வி அவளுக்குச் சுமக்க முடியாத பாரம்போல் இருந்தது.
கட்சி ஆட்சியில்
இருந்தபோதுதான் பாண்டியன் மூலம் ஊருக்கு கரண்ட் வந்தது, பள்ளிக்கூடம் வந்தது. ஆஸ்பத்திரி
வந்தது, ரோடு வந்தது, டவுன் பஸ் வந்தது, தண்ணீர் டேங்க் வந்தது. தமிழரசனுக்கும், தமிழரசிக்கும்
படிப்பும் வேலையும் வந்தது. கட்சி இல்லையென்றால், கட்சியில் பாண்டியன் இல்லையென்றால்
இதெல்லாம் எப்படி வந்திருக்கும் என்று பட்டியல் போட்டுக் கேட்க வேண்டும் என்று வாய்
துடித்தது. சம்பந்தியிடம் தர்க்கம் செய்ய வேண்டாம் என்று பேசாமல் இருந்தாள்.
“கட்சி வேற, வீட்டு விசேஷம் வேற” என்று
வேலாயுதம் சொன்னதுமே “அப்பிடி இருந்தவரில்லியே” என்று ராஜாமணி சொன்னாள்.
“உசுரோட இருந்தப்பதான் ஊர மதிக்கல. சாதிய
மதிக்கல. சாதி பழக்கவழக்கத்த மதிக்கல. செத்த பிறகும் அப்படியேவுட முடியுமா?” என்று
வேலாயுதம் கேட்டதும் “ஊருக்கே சட்டம் பேசுனவராச்சே. சாவுல ஒரு தப்பு பண்ணிட்டா. நாளக்கி
கட்சிக்காரங்க மதிப்பாங்களா?” என்று திருப்பி அடிப்பதுபோல் ராஜாமணி கேட்டாள்.
“கட்சிய பாத்தா
வாழ முடியாதும்மா” என்று வேலாயுதம் சொன்னார். அப்போது அறைக்குள் வந்த மேகலா, “நேரமாவறது
தெரியலியா? ஊர்ச்சனமே திட்டுது, எதுக்கு பொணத்த அப்பிடியே போட்டு வச்சியிருக்கிங்கன்னு”
என்று பல்லைக் கடித்தபடி சொன்னாள். அவளை முறைப்பது மாதிரி, “நீ போ” என்று சொன்னான்
தமிழரசன்.
“சொந்தக்காரங்க. ஊர்க்காரங்க சொல்றபடி
செய்ங்க. நாளக்கி கட்சியா நம்பகூட இருக்கப்போவுது” என்று கேட்டுவிட்டு போனாள் மேகலா.
அவளை எரித்துவிடுவதுபோல் பார்த்தாள் ராஜாமணி. மேகலாவை எதற்காக முறைத்துப் பார்க்கிறாள்
என்பதைப் புரிந்துகொண்ட மாதிரி தமிழரசன் கேட்டான்: “சொல்லும்மா.”
“ஒன்னிஷ்டம்ப்பா” சொல்லப் பிடிக்காத விஷயத்தைச்
சொல்வதுபோல் இருந்தது ராஜாமணி சொன்ன விதம்.
“என்னிஷ்டத்துக்கு நான் செஞ்சிடுவன். அப்பறம்
என்ன கொற சொல்லக் கூடாது” என்று சொல்லி முடிப்பதற்குள் “ஒங்கப்பாவ பத்தி ஒனக்குத் தெரியுமா,
தெரியாதா? அவருக்கு பொறந்த புள்ளதான நீ?” என்று ராஜாமணி கேட்டாள். அதற்கு எந்தப் பதிலும்
சொல்லாமல் நின்றுகொண்டிருந்தான் தமிழரசன்.
தமிழரசனுக்குத்தான்
என்றில்லை, ஊருக்கே தெரியும் பாண்டியன் எப்படிப்பட்டவர் என்பது. பாண்டியன் கட்சி கட்சி
என்று இருபது வயதிலேயே போக ஆரம்பித்துவிட்டார். கட்சி சொன்னதை அப்படியே நம்பினார்.
எதை நம்பினாரோ அதையே பிடிவாதமாகச் செய்துகாட்டினார். கட்சிக் கூட்டம் எங்கு நடந்தாலும்
சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார். ஊரில் முதன்முதலாகக் கட்சி கல்யாணம் நடத்தியவர்.
பத்திரிகையில் விஹாக சுபமுகூர்த்த பத்திரிகை என்பதற்கு பதிலாக திருமண அழைப்பிதழ் என்று
அச்சிட்டவர். பத்திரிகையில் குலதெய்வத்தின் பெயரைப் போட்டுத் துணை என்று போடாமல் திருக்குறளை
அச்சிட்டவர். ஐயரை வைத்து நடத்தாமல் கட்சிக்காரர்களை வைத்துக் கல்யாணத்தை நடத்தியவர்.
அப்போது ஊருக்குள் பாண்டியன் ராஜாமணியின் கல்யாணத்தைப் பற்றிதான் எல்லாரும் பேசிக்கொண்டார்கள்.
குலதெய்வம் கும்பிடுதல், ஆடிப் பதினெட்டு,
ஆயுத பூஜை, தீபாவளி என்று எதையும் கொண்டாட மாட்டார். அவருடைய வீட்டிற்கு எதிரில் பத்தடி
தூரத்தில்தான் சென்னக் கேசவப் பெருமாள் கோவில் இருந்தது. கட்சி என்று போன பிறகு கோவிலுக்குள்
அடி வைத்ததில்லை. கோவில் பக்கம் பார்த்ததுகூட இல்லை. திருவிழா சமயத்தில்கூட என்ன ஏதுவென்று
கேட்க மாட்டார். வரிப்பணமும் தர மாட்டார். மீறிக் கேட்டால் “மனுசனா இருங்கடா. தமிழனா
இருங்கடா. அடைந்தால் திராவிட நாடு, அடையாவிட்டால் சுடுகாடுன்னு வாழ்ந்தவன்கிட்டயே வரிப்பணம்
கேக்குறிங்களா?” என்று கேட்பார்.
சாமியைப் பற்றி
தோஷம் பற்றிப் பேசினால் பாண்டியனுக்கு கடுமையான கோபம் வரும் “செவ்வா கிரகம் எங்க இருக்கு?
நம்ப ஊர்ல களவெட்டிக்கிட்டு இருக்கிற பொன்னம்மா எங்க இருக்கு? பல லட்சம் மைலுக்கு அப்பால
இருக்கிற செவ்வா கிரகம் எப்படி வந்து நம்ப ஊர்ல இருக்கிற பொன்னம்மாவ புடிச்சியிருக்குன்னு
சொல்றிங்க? செவ்வா கிரகத்துக்கும், நம்ப ஊரு பொன்னம்மாவுக்கும் சண்டயா? திருந்தாத பயலுக
உள்ள நாடுடா. இது எங்க உருப்படப்போவுது?” என்று சொல்வார். சொர்க்கம், நரகம் என்று யாராவது
பேசிவிட்டால் போதும் “உசுரோட இருக்கிறது தாண்டா சொர்க்கம். செத்த பின்னால சொர்க்கம்
வராது. பொதச்ச பொணத்திலிருந்து நாத்தம்தான் வரும். புழுதான் வரும்” என்று ஒரு மணி நேரத்திற்கு
விளக்கம் சொல்ல ஆரம்பித்துவிடுவார். அவரிடம் பேசி யாராலும் ஜெயிக்க முடியாது என்பதால்
உள்ளூரில் அவரிடம் யாரும் அதிகமாகப் பேச்சு வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் “எதுக்கும்
ஒத்துவராத ஆளு” என்று சொல்வார்கள்.
கட்சிக்காரர்களின்
வீட்டு விசேஷத்திற்குப் போவாரே தவிர, சொந்தக்காரர்களின் நிகழ்ச்சிக்கு ராஜாமணியைத்தான்
அனுப்புவார். “முக்கியமான சொந்தம், வாங்க” என்று கூப்பிட்டாலும் “அந்த பயலுக ஐயர வச்சிக்கிட்டு
மந்தரம் தந்தரம்னு சொல்லிக்கிட்டிருப்பானுவ. அங்கலாம் என்னால ஒக்கார முடியாது” என்று
சொல்லிவிடுவார். “சொந்தக்காரங்கன்னு நாலு பேரு வாணாமா?” என்று கேட்கும்போது சிரித்துக்கொண்டே
“எனக்கு கட்சி இருக்கு. கட்சிக்காரங்க இருக்காங்க” என்று சொல்லிப் பேச்சை முடிப்பதற்குப்
பார்ப்பார். கட்சிக்காரர்களின் குடும்ப நிகழ்ச்சிக்குப் புறப்படும்போது “போய்தான் ஆவணுமா?”
என்று ராஜாமணி கேட்டால் “கட்சிக்காரன் வீட்டு விசேஷத்துக்கு நாலு பேரு போனாத்தான கட்சிக்காரனுக்கு
மரியாத?” என்று கேட்பார்.
“கட்சிய கொண்டாந்து
எதுக்கு வீட்டுல விடுறிங்க” என்று கேட்டால் மட்டும் அவருக்குக் கோபம் வந்துவிடும்.
“கட்சிங்கிறது வேட்டி சட்ட மாதிரி. அப்பா அம்மா மாதிரி, நம்ப ஒடம்பு மாதிரி, மாத்திக்க
முடியாது. கட்சிதான் வீடு, வீடுதான் கட்சி” என்று சொல்லிப் பேச ஆரம்பிப்பார். சொந்தக்காரர்களின்
நிகழ்ச்சிக்கு வரவில்லையே என்ற கோபத்தைவிட, பாண்டியன் கட்சியைப் பற்றி சொல்கிற விளக்கத்தைக்
கேட்கும்போதுதான் அவளுக்குக் கூடுதல் கோபம் வரும். எரிச்சலுடன், “ஒங்க பஞ்சாயத்த எல்லாம்
மைக் செட்டுல போயி பேசிக்குங்க. வீட்டுல பேசாதிங்க” என்று சொல்லிவிட்டுப் போய் விடுவாள்
ராஜாமணி.
தன்னுடைய அப்பா
அம்மா இறந்தபோதுகூட, பிணத்திற்கு வழிவிடுதல், வாய்க்கரிசி எடுத்தல், கோடி எடுத்தல்,
மேளம் வைத்தல், வெடி விடுதல், குடம் உடைத்தல், கொள்ளிவைத்தல், பிணக்குழி மேட்டில் பால்
ஊற்றுதல், எட்டாம் துக்கம், பதினாறாம் நாள் கரும காரியம் செய்தல் என்று எதுவுமே செய்யவில்லை.
சொந்தக்காரர்கள், ஊர்க்காரர்கள் எவ்வளவு சொல்லியும் பாண்டியன் கேட்கவில்லை.
ஊரே சேர்ந்துகொண்டு வடக்கே போகிறது என்றால்
அவர் மட்டும் தனியாளாகத் தெற்கே போவார். “கோயிலுக்கு நன்கொட கொடுத்தா புண்ணியம்” என்று
யாராவது சொன்னால் “அந்த புண்ணியம் எனக்கு வாண்டாம்” என்று சொல்வார். சின்ன வயதில்தான்
அப்படி இருந்தார், பிறகு மாறிவிட்டார் என்று சொல்ல முடியாது. வீடு முழுக்கக் கட்சித்
தலைவரின் போட்டோதான் இருக்கும். சாமி படம் என்று ஒன்றுகூட இருக்காது. பாண்டியனுடைய
அப்பாவும் அம்மாவும் “என்ன இப்பிடியொரு பித்துப்புடிச்ச புள்ள வந்து பொறந்திருக்கு?”
என்று கேட்டதோடு விட்டுவிட்டார்கள். திருமணமானால் சரியாகிவிடுவான் என்று சின்ன வயதிலேயே
கல்யாணம் கட்டிவைத்தார்கள். கல்யாணமான புதிதில் “திருத்திகாட்டுறன்” என்று ராஜாமணி
வசனம் பேசினாள். கடைசிவரை அவளால் பாண்டியனை நெல்மணி அளவுகூட மாற்ற முடியவில்லை. அவருடைய
போக்குக்குத்தான் அவள் மாற வேண்டியதாயிற்று.
“அவரோட புத்தி அவருக்கு” என்று கடைசியில் விட்டுவிட்டாள்.
சாமி இல்லையென்று
தீச்சட்டி ஏந்திக் காட்டுவார். பேய் இல்லையென்று இரவில் சுடுகாட்டில் படுத்துக் கிடப்பார்.
“ஒலகத்தில எவன வேணுமின்னாலும் நம்பு. ஆனா ஓமம் வளக்கிறவன, ஜோசியம் சொல்றவன, குறி சொல்றவன,
தோஷம், பரிகாரம்னு சொல்றவன மட்டும் நம்பாத. கடன் வாங்கிக்கிட்டு கோவிலுக்கு போனா, கடன
வந்து சாமி அடைக்காது. கண்ண மூடிக்கிட்டு ஒலகத்த பாக்கக் கூடாது. கண்ணத் தொறந்து பாத்தாதான்
ஒலகம் எப்பிடி இருக்குன்னு தெரியும். குருடனா இருக்காதிங்க. மூளய பயன்படுத்துறவன்தான்
மனுசன். மூளய பயன்படுத்தலன்னா அவன் மிருகம். சாப்புடுறதும் உசுரோட இருக்கிறது மட்டும்
வாழ்க்க இல்லெ” என்று சொல்வார். பாண்டியன் எதைச் சொன்னாலும் ஊர்க்காரர்கள் எதிர்த்துப்
பேச மாட்டார்கள். “நல்ல மனுசன்தான். ஆனா கட்சி கிறுக்குப் புடிச்ச ஆளு” என்று சொல்வார்கள்.
ஊருக்குள் அவருக்கு வேறு எந்தக் கெட்ட பெயரும் கிடையாது.
கட்சியில் அந்தப்
பதவி வேண்டும், இந்த பதவி வேண்டும் என்று கேட்டு அடம்பிடிக்க மாட்டார். பதவிக்காகக்
கட்சிக்குள்ளயே உள்ளடி செய்கிற வேலை எல்லாம் செய்ய மாட்டார். அதனால் கட்சியிலும் “நல்ல
மனுசன். பழைய ஆளு. தலைவரோட விசுவாசி. முரட்டு பக்தர்” என்ற பெயர் இருந்தது. அதனால்
அவர் சொல்கிற ஆட்களுக்குக் கிளைச் செயலாளர், ஒன்றியப் பிரதிநிதி, மாவட்டப் பிரதிநிதி,
பொதுக்குழு உறுப்பினர் பதவி எளிதில் கிடைக்கும். கட்சி வேலை என்றால் இரவு பகல் பார்க்க
மாட்டார். மற்றவர்கள் செய்யட்டும் என்று காத்திருக்க மாட்டார். கொடி நடுவதிலிருந்து
போஸ்டர் ஒட்டுவதிலிருந்து, பொது கூட்டத்திற்கு நாற்காலிகளைப் போடுவதுவரை எல்லா வேலைகளையும்
தானே செய்வார். கட்சி விஷயத்தில் கௌரவம் பார்க்க மாட்டார். தேர்தல் நேரத்தில்தான் என்றில்லை,
சாதாரண நாட்களில்கூடக் கட்சிக்காரர்கள் பாண்டியனைப் பார்ப்பதற்காக வருவார்கள். கட்சிக்காரர்கள்
சொல்வதையெல்லாம் பொறுமையாகக் கேட்பார். பாண்டியன் எப்போது பேசினாலும், கட்சி, தலைவர்,
தலைவர் எழுதிய கடிதம், கவிதை, கட்டுரை, போராட்டம், கூட்டம், மாநாடு என்றுதான் பேசுவார்.
கட்சிக்காரர்கள்
அடிக்கடி வருவதைப் பற்றி ராஜாமணி ஏதாவது சொன்னால் “கட்சிக்காரன் கட்சிக்காரன் வீட்டுக்கு
வராம வேற எங்க போவான்? கட்சிக்காரன் வீடுன்னா கட்சிக்காரங்க வரத்தான் செய்வாங்க” என்று
சொல்வார். சின்னப் பிள்ளைகளிடம் பேசினால்கூட “வாங்க போங்க” என்று மரியாதையாகத்தான்
பேசுவார். கட்சிக்காரர்களில் வயதில் மூத்தவராக இருந்தால் அவருக்கு ‘அண்ணன்’, வயது குறைந்தவராக
இருந்தால் ‘தம்பி’. கட்சி விஷயத்திலும் தலைவர்
விஷயத்திலும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டார்.
எல்லாருடனும் எளிதில் பேசிப் பழகுவார்.
அவர் இருக்கிற இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். ஆச்சாரம், கோத்திரம், குலம், சாதி
என்று பேசினால்தான் அவருக்கு கோபம் வரும். கட்சி, கூட்டம், மாநாடு என்று வெளியூர் போனால்
வீட்டிற்கென்று எதுவும் வாங்கிக்கொண்டு வர மாட்டார். புத்தகம், பத்திரிகைகளைத்தான்
வாங்கிக்கொண்டு வருவார்.
பாண்டியனுக்குப்
பங்காளி முறையிலுள்ள ராமநாதன் வந்து “நேரமாவலயா? காரியத்த பாக்க வாணமா?” என்று கோபமாகக்
கேட்டார். அவரிடம் “போங்க வரன்” என்று தமிழரசன் சொன்னான். பிறகு ராஜாமணியைப் பார்த்து,
“சொல்லும்மா” என்று கேட்டான்.
“கட்சிக்காரங்க எதுவும் சொல்ல மாட்டாங்களா?”
என்று ராஜாமணி கேட்டதற்கு தமிழரசன் பதில் சொல்லவில்லை. வேலாயுதம்தான், “பழய காலம் மாரி
இல்லிங்க. இப்ப எல்லாக் கட்சிக்காரங்க விசேஷத்திலயும் ஐயர வச்சித்தான் செய்யுறாங்க.
கட்சியெல்லாம் மாறிப்போச்சி” என்று சொல்லிவிட்டுச் சிரித்தது ராஜாமணிக்குச் சுத்தமாகப்
பிடிக்கவில்லை. அவருடைய முகத்தைத் தவிர்ப்பதுபோல் தமிழரசனின் முகத்தைப் பார்த்து “ஒங்கப்பா
உசுரோட இருந்தா எதுக்கும் ஒத்துக்க மாட்டாருப்பா” என்று சொன்னாள். கோபத்துடன் ராஜாமணியைப்
பார்த்த தமிழரசன், “நீ சொல்றது சரிதாம்மா. சொந்தக்காரங்க, ஊர்க்காரங்க பேச்சயும் கேக்கணுமில்லியா?”
என்று கேட்டான்.
“ஒங்கப்பா என்னிக்கி
சொந்தக்காரங்க, ஊர்க்காரங்க பேச்ச கேட்டுருக்காரு? என்னெ கல்யாணம் பண்ணின அன்னிக்கிக்கூட
ஐயர வச்சி தாலி கட்டல. அக்னிய உண்டாக்கி மந்தரம் சொல்லல. கட்சிக்காரங்கள கூட்டிவச்சி
கூட்டம் போட்டு, பேச வச்சித்தான் மாலய மாத்துனாரு. பெத்தவங்க பேச்சக் கேக்கல. ஊர்ப்பேச்ச
கேக்கல. சாதி சனத்த மதிக்கல. கட்சிதான் பெருசுன்னு இருந்தாரு. தன்ன பெத்தவங்க செத்தப்பகூட
ஒண்ணயும் செய்யவுடல. பொணக்குழி மோட்டுல பாலுகூட ஊத்த மாட்டன்னுட்டாரு. “உசுரோட இருக்கிறப்ப
பால் வாங்கி கொடுக்காம செத்த பிறகு மண்ணுல ஊத்தி எதுக்கு ஆகும்ன்”னு கேட்டாரு. திதி
கொடுத்தவரில்ல. அம்மாசி விரதம் இருந்தவரில்ல. எதுக்கும் வளயாம இரும்பு கம்பியாட்டமே
இருந்திட்டாரு. அத நெனச்சி பாருப்பா” என்று சொன்ன ராஜாமணியின் கண்கள் நிறைந்தன. சிறிது
நேரம் கழித்து தானாகவே, “கட்சியில பங்கமாயிடப் போவுது” என்று ராஜாமணி சொல்லி முடிப்பதற்குள்
எரிச்சலுடன், “இதிலென்னம்மா பங்கம் வந்திடப் போவுது?” என்று தமிழரசன் கேட்டான். அவன்
அப்படிக் கேட்டது அவளுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது. தமிழரசன் மீது கோபம் வந்தது.
பாண்டியனுக்குப் பிறந்தவன் மாதிரி பேசவில்லையே என்ற ஆத்திரம் உண்டாயிற்று. அதோடு சொந்தக்காரர்களின்
மீது, சாதிக்காரர்களின்மீது, ஊர்க்காரர்களின்மீது கோபம் உண்டாயிற்று. கோபத்தில் தலையிலிருந்து
கால்வரை அவளுக்கு எரிவது போலிருந்தது.
“அவர்கூட சேந்து
நீயும் கெட்டுப்போயிட்டம்மா. சாதி வழக்கு, ஊர் வழக்குன்னு ஒண்ணு இருக்கு. அதயும் பாக்கணும்”
என்று வேலாயுதம் சொன்னதும் அவரைக் கசப்புடன் பார்த்த ராஜாமணி, “நான் தாலி கட்டிக்கிட்டு
இந்த வீட்டுக்கு வந்த நாளயிலிருந்து சடங்கு, சம்பிரதாயம், எதுவும் நடந்ததில்ல. இப்ப
அவரு செத்திட்டாரு. செத்த பிறகு சடங்கு, சம்பரதாயம், சாதிவந்து என்னா செய்யப்போவுது?
போன உசுர கொண்டாருமா?” என்று குரலை உயர்த்திக் கேட்டாள். அவள் அப்படி கேட்பாள் என்று
எதிர்ப்பார்க்காத வேலாயுதத்தின் முகம் தொங்கிப்போயிற்று.
தன்னுடைய மாமனாரின்
முகம் மாறிப்போனதைப் பார்த்த தமிழரசனுக்கு என்ன தோன்றியதோ, “அப்பாதான் மெண்டலு மாதிரி
இருந்தார்ன்னா, நீயும் அவர்கூட சேந்து மெண்டலாயிட்டியா?” என்று கேட்டான் வெடுக்கென்று.
அவனை விநோதமாகப் பார்த்தாள் ராஜாமணி. தொடர்ந்து பார்க்கப் பிடிக்காததுபோல் பட்டென்று
முகத்தைத் திருப்பிக்கொண்டு “உசுரோட இருந்தப்ப எப்பிடி இருந்தாரோ அப்பிடியே சுடுகாட்டுக்கும்
போவட்டும்” என்று உறுதியான குரலில் சொன்னாள். யாரையும் பார்க்கப் பிடிக்காததுபோல் தலையைக்
கவிழ்த்துக்கொண்டாள். அப்போது அவளுடைய கண்களில் திரண்ட கண்ணீர் தரையில் சொட்டியது.
“புரிஞ்சிக்கிட்டுத்தான் பேசுறியா?” என்று
தமிழரசன் கேட்டான்.
“ஒன் தங்கச்சி தமிழரசி வந்திடட்டும். அவகிட்டயும்
ஒரு வாத்த கேக்கலாம்.”
“பாப்பா சேலத்திலிருந்து எப்ப வரது, காரியத்த
எப்ப செய்யுறது?”
ராஜாமணிக்குத்
தொடர்ந்து தமிழரசனிடம் பேசப் பிடிக்கவில்லை. கோபத்தில் ஏதாவது சொன்னால் அதிலும் அவனுடைய
மாமனாரின் முன்னால் சொல்லிவிட்டால் கஷ்டப்படுவான். கோபப்பட்டாலும் படுவான் என்ற கவலை
இருந்தது. தான் சொல்வதைத் தமிழரசன் கேட்டாலும் சாதிக்காரர்கள், ஊர்க்காரர்கள், சொந்தக்காரர்கள்
கேட்பார்கள் என்று சொல்ல முடியாது. பாண்டியன் என்றால் எல்லாரையும் தூக்கி அடித்துப்
பேசுவார். அவருடைய பேச்சுக்கு எல்லாரும் கட்டுப்படுவார்கள், தன்னுடைய பேச்சுக்குக்
கட்டுப்பட மாட்டார்கள் என்பது தெரியும் என்பதால் “ஒன்னிஷ்டம் தம்பி” என்று கடைசி வார்த்தையாகச்
சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள். வேலாயுதம் தமிழரசனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.
“இந்த வட்டாரத்திலியே
முதன்முதலா கட்சிக் கொடிய ஏத்தின ஆளு. பழய ஆளு. கட்சி மேல, தலைவரு மேல உசுரு. கட்சி
பத்திரிக்கய வாங்குறதுக்காக தெனம் பத்து மைலு தூரம் போவாரு. பழய கட்சிக்காரங்க ஒவ்வொருத்தரா
போயிட்டேயிருக்காங்க. அதான் வருத்தமா இருக்கு.”
“இத்தினி வருசத்தில கட்சி மாறி போனவரில்ல.
தலைவர ஒரு வாத்த கொற சொன்னவரில்ல. தலைவரு எழுதுற கடிதத்த படிக்கலன்னா மனுசனுக்கு சோறு
எறங்காது. அவரு போவாத ஜெயிலு இல்ல. போராட்டம் இல்ல. ஒரு கூட்டத்த, மாநாட்ட விட்டவிரில்ல.
அவரு மாதிரியான ஒரு கட்சிக்காரன இனிமே பாக்குறது கஷ்டம்தான்.”
“தலைமையிலிருந்து யாரும் வருவாங்களா?”
“பழய கட்சியா
இருந்தா சொல்லலாம். இப்ப அப்பிடி சொல்ல முடியாது. இப்பதான் கட்சி வேற மாதிரி இருக்கே.
எல்லாத்துக்கும் மேல, கரண்ட்டுல எம்.எல்.ஏ., எம்.பி. மந்திரின்னாதான் வருவாங்க. எம்.எல்.ஏ.வும்
மாவட்டமும் வரதா சொல்லிக்கிட்டாங்க. அதுவும் உறுதியா தெரியல. இரங்கல் கூட்டம் போடுறம்ன்னு
சொன்னாங்க. எத்தன மணிக்குன்னு தெரியல. அதுவும் நடக்குமா, நடக்காதான்னு தெரியல.”
அழுதுகொண்டிருந்த
ராஜாமணியின் காதில் இரண்டு பேர் பேசிக்கொண்டிருக்கிற குரல் கேட்டது. யார் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
என்று பார்ப்பதற்காக ஜன்னலின் ஓரமாகப் போய்ப் பார்த்தாள். பேச்சுக் குரல் மட்டும்தான்
கேட்டது. ஆட்கள் யார் என்ற தெரியவில்லை. எழுந்து வெளியே வந்தாள்.
பிணத்தின் நெற்றியில் பட்டையாகத் திருநீறு
பூசப்பட்டது. உச்சந்தலையில் எண்ணெய் வைக்கப்பட்டது. ஒரு மரக்காலில் நெல் நிறைத்து நல்ல
விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. உடனே பிணத்திற்குக் கைகட்டு, கால்கட்டு கட்டப்பட்டது.
வேலாயுதம்தான் எல்லாக் காரியங்களையும் பார்த்துக்கொண்டிருந்தார். பக்கத்து வீட்டுப்
பிணத்திற்கு நடக்கிற சடங்குகளைப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தாள் ராஜாமணி.
அவளை ஒரு பொருட்டாக யாருமே மதிக்கவில்லை. வழிவிடுவதற்காக தமிழரசனை அழைத்துக்கொண்டு
வேலாயுதம் வாசலுக்கு போனார்.
பங்காளி முறையிலுள்ள
முருகன் வந்து “வழிவுடப் போது. கும்புடுறதுக்கு வாங்க” என்று கூப்பிட்டான். “கும்புடுறவங்க
கும்புடுங்க. நான் வல்ல” என்று தீர்மானமாகச் சொன்னாள் ராஜாமணி.
“அவரு சொர்க்கத்துக்குப் போவ வாண்டாமா?”
“உசுரோட இருக்கிறப்ப இல்லாத சொர்க்கம்
செத்த பிறகா வரப்போவுது? நான் வல்ல. என்னெ வுட்டுடு.”
முருகன் எவ்வளவோ சொல்லியும் ராஜாமணி கேட்காததால்,
முனகிக்கொண்டே வாசலுக்குப் போனான்.
“போஸ்டர் போடப் போறவங்க, டிஜிட்டல் பேனர்
அடிக்கப் போறவங்க மறக்காம சிவலோக பதவி அடைந்தார். இறைவனடி சேர்ந்தார்”னு போடணும். சாவ
மட்டுமில்லெ, எட்டாம் துக்கம், கரும காரியம்னு எல்லாத்தயும் செறப்பா செய்யணும். ஏன்னா
ஊருக்கே பெரிய மனுஷனில்லியா?” என்று யாரோ சொன்னது ராஜாமணிக்குக் கேட்டது.
“ஒங்க காலம் முடிஞ்சிபோச்சாங்க?” என்று
கேட்டுவிட்டு அழ ஆரம்பித்தாள் ராஜாமணி. அப்போது வாசலில் மேளம் அடிக்கிற சத்தமும் சேகண்டி
அடிக்கிற சத்தமும், சங்கு ஊதுகிற சத்தமும் கேட்க ஆரம்பித்தது.
உயிர்மை ஜனவரி 2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக