கவர்மண்ட் பிணம்
புழுதிக் காலோடு வீட்டுக்குள் போக வேண்டாம் என்று நினைத்தாள் ஜெயந்தி. வீட்டுக்குப் பின்புறமாகச் சென்று சிமென்ட் தொட்டியிலிருந்த தண்ணீரில் கால், கை, முகம் என்று கழுவினாள். முகத்தை முந்தானையால் துடைத்துக்கொண்டே வந்து வாசலில் உட்கார்ந்தாள். “தண்ணி கொண்டாப்பா” என்று ஜீவாவிடம் சொன்னாள். அவன் தண்ணீரைக் கொண்டுவருவதற்காகப் போனான். வீட்டு வாசலில் ஒரு ஆம்புலன்ஸ் வந்து நின்றது. ஆம்புலன்ஸிலிருந்து இரண்டு போலீஸ்காரர்களும், கவச உடை அணிந்திருந்த ஒரு ஆளும் இறங்கி ஜெயந்தியிடம் வந்தார்கள். ‘எதற்காக இங்கே வருகிறார்கள்..?’ என்று யோசித்தாள். சட்டென்று எழுந்து நின்றுகொண்டாள்.
தடிமனாக இருந்த போலீஸ்காரர், “சென்னையிலிருந்து லாரியில வந்தியாம்மா?” என்று கேட்டார்.
“ஆமாம் சார்.”
“ஏம்மா அந்த லாரியில வந்த?”
“என்னாச்சி சார்?” பதற்றத்துடன் கேட்டாள் ஜெயந்தி.
“அது கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வந்த லாரிம்மா.”
“அதனால என்ன சார்?” என்று கேட்ட ஜெயந்திக்கு லாரி எங்காவது விபத்துக்குள்ளாகியிருக்குமோ என்ற கவலை உண்டாயிற்று.
“கோயம்பேடு மார்க்கெட்டுலதான் இப்ப கொரோனா அதிகமா பரவியிருக்குன்னு தெரியவாணாமா?” என்று போலீஸ்காரர் கேட்டார். அப்போது வீட்டுக்குள்ளிருந்து தண்ணீர் சொம்புடன் வந்த ஜீவா, இரண்டு போலீஸ்காரர்கள், கவச உடை அணிந்திருந்த ஒரு ஆள், ஆம்புலன்ஸ் வேன் என்று நிற்பதைப் பார்த்ததும் பயந்துபோய் அப்படியே நின்றுவிட்டான்.
“சரி பரவாயில்லெ. வண்டியில ஏறு” கவச உடை போட்டுக்கொண்டிருந்த ஆள் சொன்னான்.
“எதுக்கு சார் என்னெ வண்டியில ஏறச் சொல்றிங்க?” கோபம் வந்துவிட்ட மாதிரி ஜெயந்தி கேட்டாள்.
“கோயம்பேட்டுல வேல செய்யுற ஆளுங்களுக்குத்தான் இப்ப கொரோனா அதிகமா இருக்கு. நீ அவங்ககூட லாரியில வந்திருக்க. அதனால ஒன்னெயும் செக்கப்பண்ண சொல்லிட்டாங்க” என்று தடிமனாக இருந்த போலீஸ்காரர் சொன்னார்.
“நான் கோயம்பேட்டுலயிருந்து வரல சார்.”
“லாரியில ஒன்னா வந்தியா இல்லியா?” கோபமாகக் கேட்டார் போலீஸ்காரர்.
“நான் லாரியில வந்தன்னு ஒங்களுக்கு யாரு சொன்னது?” என்று கொஞ்சம் வேகமாகவே கேட்டாள் ஜெயந்தி.
“ஆளுங்கள ஏத்திக்கிட்டு வந்த லாரிக்காரன விக்கிரவாண்டி டோல்கேட்டுல புடிச்சாச்சி. எந்தெந்த ஊர்ல ஆளுங்கள எறக்கிட்டு வந்தான்ங்கிறத விசாரிச்சி ஒவ்வொரு ஆளா புடிச்சிக்கிட்டிருக்கம். ஒங்கூட திண்டிவனம் கெடங்கல் ஆளுங்க மூணு பேரு எறங்குனாங்கில்ல? அவங்களயும் புடிச்சாச்சி. அவங்கதான் ஒன்னெப் பத்தி சொன்னாங்க” என்று போலீஸ்காரர் சொன்னதும் ஜெயந்திக்கு முகம் மாறிவிட்டது. ‘லாரியில வந்தது தப்பாப் போச்சே’ என்று நினைத்தாள்.
ஜெயந்தியின் புருசன் ஐயனாருக்கு கேன்சர் நோய். சென்னை அடையாறு மருத்துவமனையில் நான்கு மாதம் வைத்திருந்தாள். இரண்டு மாதத்துக்கு முன்பு, “இனிமே வீட்டுக்கு அழச்சிக்கிட்டுப் போயிடுங்க. மாசாமாசம் வந்து மாத்தரய வாங்கிக்கிட்டுப் போயிடுங்க” என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். இரண்டு மாதமாக முதல் தேதியில் சென்று மாத்திரை வாங்கிக்கொண்டு வந்துவிடுவாள். ஊரடங்கு அறிவித்துவிட்டதால் ஒரு மாதம் மாத்திரை வாங்குவது விட்டுப்போய்விட்டது. மாத்திரை சாப்பிடாததால் ஐயனாரின் உடல்நிலை மோசமாகிவிட்டது. என்ன செய்வது என்று தவித்துக்கொண்டிருந்தாள். சென்னையிலிருந்த தன்னுடைய அக்காவுக்கு உடம்பு சரியில்லை என்று பார்ப்பதற்காக எதிர்வீட்டு செல்வம் மோட்டார் பைக்கிலேயே சென்னைக்குப் போகிற செய்தி தெரிந்தது. அவனிடம் கெஞ்சிக் கூத்தாடி, தன்னையும் அழைத்துக்கொண்டுபோகச் சொன்னாள். ”போலீஸ் மறிக்கும்” என்று சாக்குபோக்கு சொன்னான் செல்வம். காலில் விழுந்து கும்பிட்டு “வண்டிக்கு எண்ணெ போடுறன்” என்று சொன்ன பிறகுதான் சரி என்று அழைத்துக்கொண்டுபோய் இறக்கிவிட்டான்.
மருத்துவமனைக்குள் போகக் கூடாதென்று மறித்தவர்களிடம் ஒரு மணி நேரத்துக்கு மேல் கெஞ்சி கூத்தாடினாள். அதன் பிறகுதான் உள்ளே விட்டார்கள். மாத்திரைகளை வாங்கிய பிறகுதான் எப்படி ஊருக்குப் போவது என்ற கவலையே வந்தது. நடக்க ஆரம்பித்தாள். பசி எடுத்தது. தாகமாக இருந்தது. ஒரு வாய் தண்ணீர் குடிக்கலாம் என்றால் ஒரு டீக்கடை, இட்லிக்கடைகூட இல்லை. சென்னையே பூட்டிக்கொண்டு கிடந்தது. ரோட்டில் ஆட்களைப் பார்ப்பதே அபூர்வமாக இருந்தது. தனியாக வந்து மாட்டிக்கொண்டோமே என்ற கவலையில் நடந்து கொண்டிருந்தாள். தாம்பரத்தைத் தாண்டி வரும்போது ஒரு லாரி நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாள். சிறுநீர் கழித்துவிட்டு வந்த டிரைவரிடம் ஐயனாருக்கு உடம்பு சரியில்லாதது, மாத்திரை வாங்க வந்தது என்று தன்னுடைய கதையைச் சொல்லி இரண்டு மடங்கு பணம் தந்து லாரியில் ஏறிக்கொண்டு திண்டிவனம் வந்தாள். லாரிக்காரனிடம் தன்னுடைய கதையைச் சொன்னது தவறாகிவிட்டதே என்று நினைத்தாள்.
“லேட்டாக்காதம்மா” போலீஸ்காரர் சொன்னார்.
“இப்பதான் சார் வந்தன். இன்னம் தண்ணிக்கூட குடிக்கல. மாத்தரயக்கூட தரயில வைக்கல, பாருங்க” என்று சொல்லி மடியில் வைத்திருந்த மாத்திரைப் பொட்டலத்தைக் காட்டினாள்.
“அதுக்கு நாங்க என்னா பண்றது? மாத்தரயக் கொடுத்திட்டு வந்து வண்டியில ஏறு” என்று போலீஸ்காரர் கண்டிப்பான குரலில் சொன்னதும், ஜெயந்திக்குக் கண்கள் கலங்கிவிட்டன. “எம் புருசன் எப்பிடி கெடக்குறாருன்னு வந்து பாருங்க சார் தெரியும். முன்னப்பின்ன சொல்லாமகொல்லாம திடுதிப்புன்னு யாரோ மோடியாம் பஸ், கார நிறுத்திப்புட்டாரு. வீட்ட விட்டும் வெளிய வரக் கூடாதுன்னு சொல்லிப்புட்டாரு. ஒரு மாசமா மாத்தர சாப்பிடாததால ஒடம்பு மோசமாயிடிச்சிங்க. ஆஸ்பத்திரியில மல்லுக்கட்டி, மாருக்கட்டி காலுல விழுந்து கும்பிட்டுத்தான் மாத்தரய வாங்கிக்கிட்டு வந்தன். அங்கியே என்னெ நூறு செக்கப்பு பண்ணித்தான் உள்ளாரயே வுட்டாங்க” என்று உண்மையைச் சொன்னாள்.
“அங்க செக்கப்பண்ணினது செல்லாது. இங்க புதுசா பண்ணனும். இது கலக்டர் ஆர்டர்.”
“வீட்டுல யாருமில்லெ சார். எம் மாமியாரு இன்னிக்கி காலயிலதான் மவ வீட்டுக்குப் போச்சி. அது இருந்தாக்கூட பரவாயில்ல. வந்திடுவன். இப்ப வீட்டுல இந்த ரவ பையன்தான் இருக்கான். இன்னிக்கோ நாளைக்கோன்னு சாவக் கெடக்குற ஆள வுட்டுட்டு எப்பிடி சார் வர முடியும்? வீட்டுக்கு வந்து அவரு முகத்தக்கூட நான் இன்னும் பாக்கல” என்று சொல்லும்போதே ஜெயந்திக்கு அழுகை வந்துவிட்டது.
ஜெயந்தியின் வீட்டின் முன்பு ஆம்புலன்ஸ் நிற்கிறது. இரண்டு போலீஸ்காரர்களும், கவச உடை அணிந்த ஒரு ஆளும் வந்திருக்கிறார்கள் என்பது தெரிந்ததும் தெரு சனம், ஊர் சனம் என்று கூடிவிட்டார்கள். மணியக்காரர், தோட்டி, தலையாரி என்று வந்துவிட்டார்கள்.
“ஒன்னெ செக் பண்ணிட்டு இன்னிக்கே வுட்டுடுவாங்கம்மா. வா, வண்டியில ஏறு” என்று தடிமனான போலீஸ்காரர் தணிந்த குரலில் சொன்னார்.
“கொரோனா வந்து செத்தாலும், நான் வண்டியில ஏற மாட்டன் சார்” என்று சொன்னதும், உயரமாகவும், மெல்லிசாகவும் இருந்த போலீஸ்காரர் ஜெயந்தியின் கையைப் பிடித்து இழுப்பதுபோல் பக்கத்தில் வந்ததும் இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றுகொண்டாள். கோபம் வந்ததுபோல், “என்னா சார் செய்யுறிங்க?” என்று கேட்டாள். பிறகு “செத்தாலும் புருசன், புள்ளையோட நான் வீட்டுலியே செத்துப்போறன்” என்று சொன்னாள். ”நீ மட்டும் செத்தா பரவாயில்லெ. ஊர்ல பரவிட்டா என்னா செய்யுறது? ஊர்ல பரவக் கூடாதின்னுதான் ஒன்னெ கூப்புடுறம். விஷயம் புரியுதா?” என்று தடிமனாக இருந்த போலீஸ்காரர் சொன்னதும், “நான் லாரியில அர மணி நேரம்கூட வந்திருக்க மாட்டன். அதுக்குள்ளாரியா எனக்கு ஒட்டிக்கிச்சி?” ஆத்திரத்துடன் கேட்டாள்.
“ஒனக்கு கொரோனா இருக்குன்னு சொல்லல. லாரியில வந்ததால செக் பண்ணனும் அவ்வளவுதான். ‘காண்டாக்ட்டுல‘ உள்ளவங்கள புடிக்கணும். இதான் கலக்டர் ஆர்டர். வண்டியில ஏறு.”
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு பிரேமா, “அவ புருசன் சாவ பொழைக்கக் கெடக்குறாரு சார். இந்த நெலமயில கூப்புட்டா என்னா சார் அர்த்தம்?” என்று கேட்டாள். பிரேமாவைத் தொடர்ந்து இரண்டு, மூன்று பெண்கள் ஜெயந்திக்காகப் பரிந்து பேசினார்கள். ஐயனாருக்கு உடம்புக்கு ரொம்ப மோசமாக இருக்கிறது என்பதையும் சொன்னார்கள். எல்லோருடைய வாயையும் அடைப்பது மாதிரி தடிமனான போலீஸ்காரர், “இது கலக்டரோட ஆர்டரும்மா. இதுல நாங்க ஒண்ணும் செய்ய முடியாது. எதாயிருந்தாலும் தள்ளி நின்னே பேசுங்க. ஒருத்தர்கூட மாஸ்க் போடல” என்று போலீஸ்காரர் கறாராகச் சொன்னார்.
“வாயிக்கு வாயி கலக்டர் ஆர்டருன்னு சொல்றீங்களே, என் புருசன் சாவ பொழைக்கக் கெடக்குறாரு, அவருக்கு யாரு மாத்தர வாங்கிக் கொடுப்பா? ஒரு மாசம் வுட்டுப்போயி இன்னிக்கி விடியக்காலம்தான் போனன். இன்னம் நான் சோறுகூட திங்கல. பச்சத் தண்ணி பல்லுல படல.”
“நேரத்த வளத்தாத. வண்டியில ஏறு இல்லன்னா கொரோனாவால செத்திடுவ.”
“செத்தாப் போறன் சார்” போலீஸ் என்ற பயம்கூட இல்லாமல் சொன்னாள் ஜெயந்தி.
“பொம்பளயாச்சேன்னு பாக்குறன். இல்லன்னா இவ்வளவு நேரம் பேசிக்கிட்டிருக்க மாட்டன். புரியுதா? ஒழுங்கு மரியாதியா வண்டியில ஏறு” தடிமனான போலீஸ்காரர் எச்சரிக்கை செய்வது மாதிரி சொன்னதும், “இத கேக்குறதுக்கு ஒலகத்திலெ எந்த சாமியும் இல்லியா?” என்று சொல்லி ஜெயந்தி வாய்விட்டு அழுததைப் பார்த்ததும் ஜீவாவுக்கும் அழுகை வந்தது. ஜீவாவின் கண்களைத் துடைத்துவிட முயன்றாள். உடனே இரண்டு போலீஸ்காரர்களும் பாய்ந்துவந்து மறித்துக்கொண்டனர்.
“தொடக் கூடாதும்மா. நீ இப்பத்தான் வந்திருக்க. பையன் வீட்டுல இருந்திருக்கான்.”
“அவன் என் புள்ளெ சார்.”
“கொரோனா வந்த பிறகு பொண்டாட்டிக்கிப் புருசன் வாண்டாம். புருசனுக்குப் பொண்டாட்டி வாண்டாம். தாயிக்கிப் புள்ள வாண்டாம், புள்ளைக்கித் தாயி வேண்டாமின்னு ஆயிப்போச்சி. ஒலகத்தில நடக்கிறத டி.வி.யில பாக்குறியா இல்லியா?” என்று போலீஸ்காரர் கேட்டார்.
கவச உடை போட்டுக்கொண்டிருந்த ஆள், “நேரமாவுது சார்” என்று சொன்னதும் போலீஸ்காரர் “வண்டியில ஏறும்மா” என்று சொன்னார்.
“எம் புருசன வுட்டுட்டு வர முடியாது சார்.”
“நல்ல விதமா சொன்னா கேக்க மாட்ட. கையப் புடிச்சி இழுத்துக்கிட்டுப் போவணுமா?” என்று சொல்லிக் கையைப் பிடித்து இழுத்தார் போலீஸ்காரர். இரண்டு, மூன்று உள்ளூர் ஆட்கள் வந்து போலீஸ்காரரிடம், “அவ புருசனுக்கு ஒடம்பு சரியில்ல சார். ஒரு மாசமா மாத்தர வேற சாப்புடல. மோசமா இருக்கு. எப்ப வேணும்ன்னாலும் உசுரு அடங்கிடும் சார்” என்று ஜெயந்திக்காகப் பரிந்து பேசினார்கள்.
போலீஸ்காரருக்குக் கோபம் வந்துவிட்டது, “எல்லாரும் டி.வி.யப் பாக்குறிங்கதான? நாடு என்னா நெலமயில இருக்கு? ஒலகம் என்னா நெலமயில இருக்குன்னு தெரியும்தான? இந்தம்மா மட்டும் வந்தா ஒரு ஆளோட முடிஞ்சிடும். இன்னிக்கு ஒரு ராத்திரி ஓடிப்போச்சின்னா, நாளக்கிக் காலயில ஊரயே அள்ளிக்கிட்டுப் போயி செக் பண்ணணும். ஆஸ்பத்திரியில தங்க வைக்கணும். இல்லன்னா ஊருக்கே தட உத்தரவு போடுற மாரி ஆயிடும். பரவாயில்லியா?” என்று கேட்டதுதான், ஜெயந்திக்காக, ஐயனாருக்காகப் பரிந்து பேசியவர்கள் எல்லாம் பின்வாங்க ஆரம்பித்தனர்.
கூட்டம் கூடியிருப்பதால்தான் எல்லோரும் அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்த வி.ஏ.ஓ., “எல்லோரும் கலஞ்சிபோங்க. காத்துல பரவுதுன்னு சொல்றாங்க. எல்லோரும் அவுங்கஅவுங்க வீட்டுக்குப் போங்க. இல்லன்னா ஒங்களயும் புடிச்சிக்கிட்டுப்போற மாதிரி ஆயிடும்” என்று சொல்லிச் சத்தம் போட்டார். அவருக்கு உதவி செய்வதுபோலத் தோட்டியும், தலையாரியும் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.
ஜெயந்தி தன்னால் முடிந்தவரை கெஞ்சிப்பார்த்தாள். அழுதுபார்த்தாள். தன்னுடைய மாமியார் வந்ததும் தானாக வருவதாகச் சொன்னாள். ஜீவாவைக் காட்டி, அவன் தனியாக இருக்க மாட்டான் என்று சொன்னாள். அவள் சொன்ன எதையும் காதுகொடுத்துக் கேட்கவில்லை. அவள் கையெடுத்துக் கும்பிட்டதையும், காலில் விழுந்து கும்பிட்டதையும் பொருட்படுத்தாமல் போலீஸ்காரர்கள் தாங்கள் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தனர்.
“கலக்டர் உத்தரவு, வண்டியில ஏறு.”
இனித் தப்பிக்க முடியாது என்று நினைத்த ஜெயந்தி கடைசியாக, “இந்த மாத்தரயக் கொடுத்திட்டு வரன்” என்று சொன்னாள்.
“பையன்கிட்டெ கொடுத்திடு” என்று சொன்னதைக் கேட்காமல் வீட்டுக்குள் போனாள். அவளுக்குப் பின்னால் ஜீவாவும் போனான்.
“ஏங்க.. ஏங்க..” என்று ஜெயந்தி கூப்பிட்டாள். ஐயனாரிடமிருந்து எந்தச் சத்தமுமில்லை. கையைப் பிடித்து ஆட்டிய பிறகுதான் லேசாகக் கண்களைத் திறந்து பார்த்தான். “மாத்தர வாங்கியாந்துருக்கன். கரச்சி வாயில ஊத்தட்டுமா?” என்று கேட்டாள். ஐயனாரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லாததால், “மத்தியானம் சோறு கொடுத்தியா?” என்று ஜீவாவிடம் கேட்டாள்.
“கேட்டன். வாணாமின்னு கைய ஆட்டிட்டாரு.”
“பசி மயக்கத்தில கெடப்பாரு” என்று சொன்ன ஜெயந்தி, அவசரஅவசரமாக ஒரு கைப்பிடி சோற்றைப் போட்டுக் கரைத்துக் கூழாக்கி வாயில் ஊற்றிவிட்டாள். மூன்று மாத்திரைகளைத் தண்ணீரில் போட்டு ஊறவைத்து ஐயனாரின் வாயில் ஊற்றினாள்.
கோழிக்கு அள்ளிப்போடுவதுபோல் நான்கு ஐந்து வாய் சோற்றைத் தன்னுடைய வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டாள். தண்ணீர் குடிக்கும்போது, “வெளிய வர்றியா இல்லியா?” என்று போலீஸ்காரர்கள் கத்துவது கேட்டது.
“ராத்திரிக்கு சோறு கொடுக்கணும். மாத்தர கொடுக்கணும்.”
“சரி” என்று ஜீவா சொன்னான்.
“கோயம்பேட்டிலிருந்து வந்த லாரியில ஏறி வந்ததால, என்னெ செக்கப்பு பண்ணனும்னு போலீஸ் வந்து கூப்புடுது. வண்டி வந்து வாசல்ல நிக்குது. போயிட்டு வந்திடுறன். ஒங்கம்மாவுக்கு போன்போட்டன். எடுக்கல. எப்ப வருதின்னு தெரியல. பஸ், காருன்னு எதுவுமில்ல. எப்பிடி நடந்து வருதோ தெரியல. ரோட்டுல நடந்து வரதுக்கே போலீஸ் வுட மாட்டங்குது. வந்தா பேசச் சொல்லு. முடிஞ்சா போன வேகத்தில வந்திடுறன். தம்பி இருக்கான். பாத்துக்குவான். வரட்டா?” என்று கேட்டாள். ஐயனார் எதுவும் சொல்லாததால், “தம்பி அப்பாவப் பாத்துக்க” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கவச உடை அணிந்திருந்த ஆள் வீட்டுக்குள் வந்து, “சொன்னா புரியாதா? வாம்மா வெளிய” என்று சொல்லி கத்தினான். பிறகு “மாத்து சேல எடுத்துக்க” என்று சொன்னான்.
“எதுக்கு?”
“தேவப்படும். வா வெளிய.”
ஒரு சீலை, சட்டையென்று எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள். அவளுக்குப் பின்னால் ஜீவாவும் வந்தான்.
ஜெயந்தி வீட்டுக்குள் சென்று பத்து நிமிடத்துக்கு மேல் இருந்தாள் என்ற காரணத்துக்காக அவளுடைய வீட்டைத் தனிமைப்படுத்த சொன்னார் வி.ஏ.ஓ. வீட்டைத் தனிமைப்படுத்துவதற்காகத் தோட்டியும், தலையாரியும் பத்து, இருபது கட்டைகளைக் கொண்டுவந்து போட்டுத் தடுப்புக் கட்ட ஆரம்பித்திருந்ததைப் பார்த்ததும் ஜெயந்தியும் ஜீவாவும் குழம்பிப்போனார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்குக்கூட விடாமல், கவச உடை அணிந்திருந்த ஆள் ஜெயந்தியின் கையைப் பிடித்துக்கொண்டுபோய் ஆம்புலன்ஸில் ஏற்றினான். “பத்திரமா இருப்பா. அப்பாவ பாத்துக்க” என்று ஜெயந்தி சொல்லிக்கொண்டிருக்கும்போதே கதவை மூடிவிட்டார்கள். கவச உடை அணிந்திருந்த ஆள் வண்டியில் ஏறியதும் ஆம்புலன்ஸ் புறப்பட்டுவிட்டது. போலீஸ்காரர்கள் வி.ஏ.ஓ.விடமும், தோட்டி, தலையாரிடமும் ஏதோ ரகசியமாகச் சொல்லிவிட்டு போனார்கள்.
“அந்தம்மாவுக்கு கொரோனா பாதிப்பு இருக்கா, இல்லியான்னு தெரியுறவரைக்கும் யாரும் இந்த வீட்டுக்குள்ளார போகக் கூடாது. அந்தம்மா பையன்கிட்டயும், புருசன்கிட்டயும் யாரும் போவக் கூடாது. ரெண்டு பேருக்கும் தொத்தி இருக்கலாம். மீறிப் போனா அவங்களயும் போலீஸ வச்சி அழச்சிக்கிட்டுப் போற மாரி இருக்கும்” என்று அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்தவர்களிடம் வி.ஏ.ஓ. கடுமையான குரலில் எச்சரிக்கை செய்தார். அவர் சொன்ன விதம் வெடிமருந்து கிடங்குக்குள் போய்விடாதீர்கள் என்பதுபோல் இருந்தது. பிறகு மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு போனார்.
கூட்டம் கலைய ஆரம்பித்தது. தோட்டியும், தலையாரியும் தடுப்புக் கட்டையைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் மட்டுமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். ஜீவாவும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
வீட்டை அடைத்த மாதிரி மூன்று பக்கமும் தடுப்புக் கட்டைகளைக் கட்டி முடித்த தோட்டியும் தலையாரியும், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பிள்ளைகளிடம், “இது கொரோனா புடிச்ச வீடு. இங்க யாரும் நிக்கக் கூடாது” என்று சொல்லி பயமுறுத்திவிட்டுப் போனார்கள். வேடிக்கை பார்ப்பதற்குப் புதிதாக எதுவும் இல்லாததால் பிள்ளைகளும் ஒவ்வொருவராகத் தங்களுடைய வீட்டுக்குப் போக ஆரம்பித்தனர்.
ஜீவா மட்டும்தான் நின்றுகொண்டிருந்தான். மூன்று பக்கமும் கட்டியிருந்த தடுப்புக் கட்டைகளைப் பார்த்தான். அப்போது அவனுக்கு ஐயனார் கூப்பிடுவதுபோல் தோன்றியது. வேகமாக வீட்டுக்குள் ஓடினான்.
ஐயனார் படுத்துக்கொண்டிருந்த இடத்துக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டு “எதுனா வேணுமா?” என்று கேட்டான். பதிலில்லாததால், “தண்ணி வேணுமா?” என்று கேட்டான். அடுத்த கேள்வியாக, “சோறு வேணுமா?” என்று கேட்டான். ஐயனார் எதுவும் பேசாததால் தூங்கிக்கொண்டிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான். இருட்டிவிட்டது மாதிரி இருக்கவே விளக்கையும் போட்டான். டி.வி.யைப் போட்டான்.
“அம்மா எங்கடா?” என்று ஐயனார் கேட்டதுபோல் அவனுக்குத் தோன்றியது.
“அம்மாவ கொரோனாக்காரங்க புடிச்சிக்கிட்டுப் போயிட்டாங்க. நம்ப வீட்ட சுத்தி தடுப்புக் கட்ட கட்டிட்டாங்க. நம்ப வீட்ட எல்லோரும் ‘கொரோனா புடிச்ச வீடு’ன்னு சொல்றாங்கப்பா. ஆயா இன்னம் வல்லெ” என்று தானாகவே சொன்னான். ஐயனார் எதுவும் பேசாததால், “மாத்தர போட்டதால தூக்கமா வருதா?” என்று கேட்டான். பக்கத்தில் போய் நின்றுகொண்டு “ஒண்ணுக்குப் போவணுமா? கக்கூஸ் போவணுமா? பசிக்குதின்னா சோறு எடுத்துத் தரன். ஆயா ஆக்கிவச்சிட்டுப் போயிருக்கு” என்று சொன்னான். அதற்கும் ஐயனார் பதில் சொல்லாததால் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ரகசியம்போல “அப்பா” என்று கூப்பிட்டான். இதற்கு முன் இந்த மாதிரி எந்தக் கேள்விக்கும் ஐயனார் பதில் சொல்லாமல் இருந்ததில்லை. கையை அசைத்துப்பார்த்தான். காலை அசைத்துப்பார்த்தான். கன்னத்தில், தலையில் லேசாகத் தட்டிப்பார்த்தான். தூங்குகிற குழந்தையை எழுப்புவதுபோல் மீண்டும் கை காலை அசைத்துப்பார்த்தான். ஐயனாரிடமிருந்து எந்த அசைவும் இல்லை. மூக்கில் கை வைத்துப்பார்த்தான். மூச்சுக் காற்று வரவில்லை.
பயத்தில் அவனுக்கு நடுங்க ஆரம்பித்தது. அடுப்பில் வைத்த வாணலி மாதிரி அவனுக்கு வாய் உலர்ந்துபோயிருந்தது.
மெலிந்து எலும்பும் தோலுமாக, கருத்துப்போயிருந்த ஐயனாரின் உடலையே பார்த்துக்கொண்டிருந்தான். கண்களும் வாயும் திறந்தபடியே இருந்தன. திறந்திருந்த ஐயனாரின் வாயையே பார்த்துக்கொண்டிருந்தான். டி.வி.யில் விளம்பரம் ஓடுகிற சத்தம் கேட்டதும்தான் ஐயனாரின் உடலிலிருந்து பார்வையைத் திருப்பினான். வேகமாக நடந்தால் பெரிய ஆபத்து வந்துவிடும் என்பதுபோல் சத்தம் எழுப்பாமல் வெளியே வந்தான். வாசலுக்கு முன் கட்டியிருந்த தடுப்புக் கட்டையைப் பிடித்தபடி தன்னுடைய ஆயா வருகிறாளா, அம்மா வருகிறாளா என்று பார்த்தான்.
மளிகைக் கடைக்குப் போய்விட்டு வந்த கௌதமி, தடுப்புக் கட்டையை ஒட்டித் தனியாக நின்றுகொண்டிருந்த ஜீவாவைப் பார்த்துவிட்டு “என்னடா?” என்று கேட்டாள். “என்னடா?” என்று அவள் கேட்டதும்தான் ஜீவாவுக்கு அழுகை வந்தது. அவன் அழுவதைப் பார்த்து மிரண்டுபோன கௌதமி, “ஏன்டா அழுவுற?” என்று கேட்டாள். “எங்கப்பா செத்திட்டாரு” என்று சொல்லிவிட்டு, அழுத ஜீவாவைப் பார்த்து பயந்துபோய் ஒரே ஓட்டமாகத் தன்னுடைய வீட்டுக்கு ஓடிவிட்டாள். ஜீவா தடுப்புக் கட்டை ஒன்றில் லேசாகத் தலையைச் சாய்த்துக்கொண்டு விம்மினான். சிறிது நேரத்தில் கௌதமியும், அவனுடைய அம்மா கிருஷ்ணவேணியும் வந்தார்கள்.
“என்னடா ஆச்சி?” என்று கிருஷ்ணவேணி கேட்டாள்.
“எங்கப்பா செத்திட்டாரு.”
“எப்பிடிடா சொல்ற?”
“பேசல. கை காலு அசயல” என்று ஜீவா சொன்னதைக் கேட்ட கிருஷ்ணவேணி, “அழுவாம இருடா வரன்” என்று சொல்லிவிட்டு வேகமாக ஓடினாள். அவளோடு கௌதமியும் ஓடினாள்.
தெருவிலிருந்த சனங்களையெல்லாம் அழைத்துக்கொண்டு வந்தாள் கிருஷ்ணவேணி. ஆண், பெண் என்று இருபது, முப்பது பேர் இருப்பார்கள். பிள்ளைகள் என்று பத்து, இருபது பேர் இருப்பார்கள். பெரியவர்களாக இருந்த எல்லோருமே போட்டி வைத்தது மாதிரி கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள்.
“செத்திட்டாருன்னு எப்பிடிடா சொல்ற?”
“பேசல. கை காலு அசையல” என்று ஜீவா சொன்னபோது கூட்டத்திலிருந்த ஒரு பெண், “ஐயோ கடவுளே” என்று சொன்னாள்.
“நீ எப்ப பாத்த?”
“தடுப்புக் கட்ட கட்டிட்டுப் போனாங்கில்ல. அப்பதான் போய்ப் பாத்தன்.”
“ஒங்க அம்மாவுக்கு, ஒங்க ஆயாவுக்குத் தெரியுமா?”
“தெரியாது.”
“ஒங்க ஆயா எங்க?”
“எங்க அத்த ஊருக்குப் போயிருக்கு.”
“ஒங்கிட்ட போன் இருக்கா?”
“இல்லெ.“
“ஒங்கம்மா நெம்பர சொல்லு” என்று ஒரு ஆள் கேட்டார். “ஒங்காயா நெம்பர சொல்லு” என்று மற்றொரு ஆள் கேட்டார். ஜீவா தன்னுடைய அம்மாவின் போன் எண்களையும், ஆயா திருமேனியின் போன் எண்களையும் சொன்னான். கூட்டத்தில் இருந்தவர்கள் கேள்வி கேட்கக்கேட்கத்தான் அவனுக்கு அழுகை அதிகமாக வந்தது.
கூட்டத்திலிருந்த பல பேரும் ஜெயந்திக்கும், திருமேனிக்கும் போன் போட்டார்கள். இருவரின் செல்போன்களுமே அணைத்துவைக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லிச் சலித்துக்கொண்டார்கள். ஒரு ஆள் “ஒங்கத்த நெம்பரு தெரியுமா?” என்று கேட்டார். “தெரியாது” என்று ஜீவா சொன்னான்.
கூட்டத்திலிருந்த ஆண்கள், பெண்கள் என்று எல்லோருமே திரும்பத்திரும்ப திருமேனிக்கும் ஜெயந்திக்கும் போன் போட்டுக்கொண்டே இருந்தார்கள். ஐயனார் இறந்துவிட்ட செய்தி ஊர் முழுவதும் பரவி, ஊர்ச்சனமே தடுப்புக் கட்டையின் முன் கூடிவிட்டார்கள். ஆனால், சத்தியம் செய்துவிட்டதுபோல் ஒரு ஆள்கூட தடுப்புக் கட்டைக்குள் போகவில்லை. வீட்டுக்குள் போனால் கொரோனா ஒட்டிக்கொள்ளுமோ என்ற அச்சம் அந்த இடத்தில் இருந்த எல்லோருக்குமே இருந்தது. பட்டியில் விடப்பட்ட ஆட்டுக்குட்டி மாதிரி தடுப்புக் கட்டைக்கு உள்ளே ஜீவா மட்டும் தனியாக நின்றுகொண்டிருந்தான். காட்சிக்குரியப் பொருளைப் பார்ப்பதுபோல் அவனைக் கூட்டம் பார்த்துக்கொண்டிருந்தது.
ஜீவா சொன்னதை நம்பாமல் காலேஜில் படித்துக்கொண்டிருந்த அருண்குமார் ஐயனார் செத்துவிட்டானா, இல்லையா என்று பார்ப்பதற்காகத் தடுப்பு கட்டைக்குள் நுழைந்தான். “போவாத, போவாத” என்று மொத்த கூட்டமும் தடுத்துப்பார்த்தது. யாருடைய பேச்சையும் கேட்காமல் ஒரே ஓட்டமாக வீட்டுக்குள் ஓடினான். இரண்டு மூன்று நிமிஷம் கழித்து வந்து, “செத்திட்டாருதான்” என்று சொன்னான்.
“தோட்டிக்கி போன்போடு, தலயாரிக்கு போன்போடு” என்று கூட்டத்திலிருந்த பலரும் சொன்னார்கள். பலரும் போன்போடவும் செய்தார்கள். “ஸ்விட்ச் ஆப்பாயி இருக்கு” என்று சொன்னார்கள். தோட்டி வீட்டுக்கும் தலையாரி வீட்டுக்கும் ஆள் அனுப்பினார்கள். சிறிது நேரத்தில் மோட்டார் பைக்கில் தோட்டியும் தலையாரியும் வந்தார்கள்.
“இந்த வீட்டுக்கிட்டெ யாரும் நிக்கக் கூடாது. பெரிய வம்பாயிடும். கூட்டம் கலஞ்சி போங்க. நாங்க பாத்துக்கிறம். ஆபத்தான வீடு. ஆபத்த வெல கொடுத்து வாங்காதிங்க” என்று சொல்லி எல்லோரையும் துரத்திவிட்டார்கள்.
“சோறு வேணுமாடா?” கிருஷ்ணவேணி கேட்டாள்.
“...”
“என்னா வேணும் சொல்லுடா?”
“எங்கப்பா செத்திட்டாரு.”
ஜீவா அழுதுகொண்டிருப்பதையும், “எங்கப்பா செத்திட்டார்” என்று கிருஷ்ணவேணியிடம் சொன்னதையும் அருண்குமார் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தான். அதைப் பார்த்த தலையாரி, “அழுவுற பயல ஏன்டா படம் எடுக்கிற?” என்று கோபத்துடன் கேட்டார்.
“வாட்ஸ் ஆப்பில போடப்போறன்” என்று அருண்குமார் சொன்னதும் அவனைத் திட்டி அனுப்பினார் தோட்டி. கிருஷ்ணவேணியை நிற்கவிடாமல் தோட்டியும் தலையாரியும் துரத்திவிட்டனர். ஒதுங்கி நின்றுகொண்டிருந்தவர்களையும், “கொரானா புடிச்சிக்கும் போங்க” என்று சொல்லி விரட்டியடித்தனர். அவர்கள் பேசிய விதமும், சனங்களை விரட்டிய விதமும் எரிந்துகொண்டிருக்கிற வீட்டுக்குள் போகாதீர்கள் என்று தடுப்பதுபோல் இருந்தது.
கூட்டம் குறைய ஆரம்பித்ததும் தோட்டியும் தலையாரியும் மோட்டார் பைக்கில் கிளம்பி விட்டார்கள். ஜீவா மட்டும்தான் இருட்டில் நின்றுகொண்டிருந்தான். அவனைச் சுற்றி இருட்டு மட்டும்தான் நிறைந்திருந்தது. தன்னுடைய ஆயா வருகிறாளா, அம்மா வருகிறாளா என்று பார்த்தான். மூன்று பக்கமும் கட்டியிருந்த தடுப்புக் கட்டையைப் பார்த்தான். அப்போது அவனுக்கு, “யே தம்பி” என்று ஐயனார் கூப்பிட்டதுபோல் இருந்தது. மெதுவாக வீட்டுக்குள் வந்தான்.
“அப்பா” என்று லேசான குரலில் கூப்பிட்டான். எந்தப் பதிலும் இல்லை. வாய் அசைகிறதா, கண்கள் அசைகிறதா என்று பார்த்தான். எதுவுமில்லை. இடுப்பிலிருந்து நழுவிக்கிடந்த கைலியைச் சரிசெய்தான். விலகிக் கிடந்த கைகளையும், கால்களையும் சேர்த்துவைத்தான். கொடியில் கிடந்த ஜெயந்தியின் புடவை ஒன்றை எடுத்துத் தூங்குகிற ஆளுக்குப் போர்த்திவிடுவதுபோல் ஐயனாரின் உடலில் போர்த்திவிட்டான். புடவைக்கு வெளியே கைகள், கால்கள் தெரிகின்றனவா என்று பார்த்தான். பிறகு டி.வி.யைப் பார்க்க ஆரம்பித்தான். டி.வி.யைப் பார்த்தப்படியே தூங்கிவிட்டான்.
2
“ஜீவா… ஜீவா…” என்று ஐயனார் கூப்பிடுவதுபோல் இருக்கவே தூக்கம் கலைந்து கண்விழித்துப் பார்த்தான். ஏழு மணி இருக்கும். ஜெயந்தியும், திருமேனியும் இல்லாத நேரத்தில் ஐயனாரை, சிறுநீர் கழிப்பதற்கு அழைத்துக்கொண்டு ஜீவாதான் போவான். கைலியை விலக்கிப் பிடித்துக்கொள்வான். சிறுநீர் முன்னேபின்னே என்று ஒழுகினால் “நேரா நில்லுப்பா” என்று சொல்வான். சில நேரங்களில் ஐயனாரின் உயிர்நிலையைப் பிடித்து சிறுநீர் கழிக்கச் செய்வான். கக்கூஸுக்கு அழைத்துக்கொண்டு போனால், ஐயனார் எழுந்ததும் கக்கூஸில் தண்ணீர் ஊற்றிவிடுவான். அவ்வாறு செய்யும்போதெல்லாம் ஐயனார், “எஞ் சாமிடா நீ” என்று சொல்லிவிட்டு அழுவான். எப்போதும் கேட்பதுபோல ஐயனாரிடம், “ஒண்ணுக்குப் போவணுமா, கக்கூஸ் போவணுமா?” என்று ஜீவா கேட்டான். வழக்கம்போல தூக்கி உட்காரவைப்பதற்குப் போனபோதுதான் ஐயனார் நேற்று சாயங்காலமே இறந்துவிட்டது நினைவுக்கு வந்தது, வெளியே வந்தான். அவன் வருவதற்காகவே காத்துக்கொண்டிருந்ததுபோல் ஏழெட்டு தொலைக்காட்சிக்காரர்களும், நான்கைந்து பத்திரிகைக்காரர்களும், உள்ளூர் ஆட்கள் பத்து, இருபது பேரும் தடுப்புக் கட்டைக்கு அருகில் வந்தனர். தடுப்புக் கட்டைகளின் வழியாகத் தொலைக்காட்சிக்காரர்கள் மைக்கை நீட்டினார்கள். கேமராமேன்கள் வீடியோ எடுக்க ஆரம்பித்தனர். பத்திரிகைக்காரர்கள் ஜீவாவைப் பல கோணங்களில் போட்டோ எடுக்க ஆரம்பித்தனர்.
மைக்கை நீட்டிக்கொண்டிருந்த தொலைக்காட்சிக்காரர்களில் ஒரு ஆள் ஜீவாவிடம் கேட்டார், “ஒங்கப்பா நேத்து சாயங்காலம் செத்திட்டாராமே நிஜமா?”
ஜீவாவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. மிரண்டுபோய் தொலைக்காட்சிக்காரர்களையும், பத்திரிகைக்காரர்களையும், திரண்டிருந்த கூட்டத்தையும் பார்த்தான்.
“எங்கப்பா செத்திட்டார்னு சொல்லி நீ அழுத வாட்ஸ் ஆப்பில பாத்தம்.”
“...”
“ராத்திரி எங்கிருந்த?”
“வீட்டுல.”
“பொணத்துக் கூடவா?”
“ம்.”
“பொணத்துக்கூட படுத்திருக்க பயமா இல்லியா?”
“...”
“அழுதியா?”
“...”
“ராத்திரி தூங்குனியா?”
“டி.வி. பாத்துக்கிட்டே தூங்கிட்டன்.”
“ராத்திரி சாப்புட்டியா?”
“இல்லெ.”
“ஒங்க வீட்டுக்கு யாரும் வல்லியா?”
“இல்லெ.”
“ஏன்?”
“கொரோனா புடிச்சிக்கும்னு.”
“இப்ப ஒனக்கு என்னா வேணும்?”
“...”
“ஒனக்கு என்னா வேணும்?”
“...”
“சொல்லு தம்பி” என்று தொலைக்காட்சிக்காரர் திரும்பத்திரும்பக் கேட்டதால் ஜீவா சொன்னான். “எங்கப்பாவப் பொதைக்கணும்.”
“அப்பிடியே கேமராவப் பாத்து சொல்லு.”
“எங்கப்பாவப் பொதைக்கணும்.”
“...”
“எங்கப்பாவப் பொதைக்கணும்.”
தொலைக்காட்சிக்காரர்கள் தன்னிடம் கேள்வி கேட்பதையும் வீடியோ எடுப்பதையும், பத்திரிகைக்காரர்கள் போட்டோ எடுப்பதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய ஆயா வந்துவிட்டாளா, அம்மா வந்துவிட்டாளா என்று பார்த்தான்.
“தந்தையின் பிணத்துடன் இரவு முழுவதும் படுத்திருந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜீவா குறித்து உள்ளூர் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்போது கேட்கலாம்” என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு தொலைக்காட்சிக்காரர்களும் உள்ளூர் ஆட்களிடம் பேட்டி எடுக்க ஆரம்பித்தனர். பேட்டி கொடுப்பதற்காக உள்ளூர்க்காரர்களிடையே கடுமையான போட்டி இருந்தது.
“ஐயனாரின் பிணத்தை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்க வேண்டும் என்பதும், பிணத்தை உடனடியாக எடுக்காவிட்டால் ஊரில் கொரோனா பரவிவிடும் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் உள்ளூர்வாசிகள் சொன்னதைக் கேட்டோம். ஐயனாரின் பிணத்தை மாவட்ட நிர்வாகம் அடக்கம்செய்யும் என்று நம்புவோம்” என்று சொல்லிப் பேட்டியை முடித்தனர். பிறகு, வி.ஏ.ஓ. தாசில்தார், கலக்டர் என்று ஒவ்வொருவருக்கும் போன் போட்டுக்கொண்டிருந்தனர்.
தலையாரி, தோட்டி, வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தாரோடு, பத்துக்கும் அதிகமான போலீஸும் என்று ஒன்பது மணிக்கு வந்தனர். பிணக்குழி வெட்ட ஏற்பாடு செய்ய முயன்றனர். ஊர் சனமெல்லாம் ஒன்றாகத் திரண்டு வந்து ஊர் சுடுகாட்டில் புதைக்கக் கூடாது என்று தகராறு செய்தனர். ஊரார்களிடம் தாசில்தார் சமாதானம் செய்து பார்த்தார். சமாதானம் எடுபடாததால் சுடுகாட்டுக்குக் கடைசியில் இருக்கும் முள்காட்டில் புதைப்பது என்று முடிவானது. ஐயனாருக்கு சொந்தபந்தம் என்று அதிகமில்லை. வீட்டைத் தவிர சொத்துப்பத்து என்று எதுவுமில்லை. அதனால் அவனுக்காக யாரும் அதிகமாகப் பேசவுமில்லை. ஐயனாருடைய பங்காளி முத்துக்கருப்பன் மட்டும்தான் குழி வெட்டுவதற்குச் சம்மதித்தான். ஆனால், அவனுடன் வருவதற்கு யாரும் சம்மதிக்கவில்லை. குழி வெட்ட ஆட்கள் யாரும் வராததால் ஜே.சி.பி. இயந்திரத்துக்கு ஏற்பாடு செய்தார் தாசில்தார்.
“பொணத்த சீக்கிரம் எடுக்கப்பாருங்க. செத்துப்போனவன் பொண்டாட்டி நேத்து வீட்டுல இருந்துருக்கு. அதனால, செத்துப்போனவனுக்கும் கொரோனா ஒட்டியிருக்கும்” என்று ஊர்க்காரர்கள், தாசில்தாரிடம் தகராறு செய்துகொண்டிருந்தனர். போலீஸ்காரர்கள் “எட்டப் போங்க. ஊருக்கே தொத்திக்கும்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
தூரத்தில் தன்னுடைய ஆயா திருமேனியும் அத்தை சங்கரியும் வருவதைப் பார்த்ததும் ஜீவா அழ ஆரம்பித்தான். தடுப்புக் கட்டைக்குள் நுழைந்துபோவதற்கு முயன்ற திருமேனியையும், சங்கரியையும் பாம்பு இருக்கும் புற்றிடம் போகாதீர்கள் என்பதுபோல் வேகமாக வந்து இரண்டு போலீஸ்காரர்கள் மறித்துக்கொண்டனர். தடுப்புக் கட்டையைத் தாண்டிக்கொண்டு வெளியே வருவதற்கு முயன்ற ஜீவாவையும் விடவில்லை.
“என்னெ வுடுங்கய்யா” என்று சொன்னாள் திருமேனி.
“உள்ளார போவக் கூடாது. பொணம் வெளிய போன பின்னாலதான் போவலாம்” என்று போலீஸ்காரர் திட்டவட்டமாக சொன்னார்.
“எம் பேரனயாச்சும் வெளிய வுடுங்க.”
“பொணம் போவட்டும்.”
“எம் புள்ள மூஞ்சியப் பாக்க வுடுங்க சாமி.”
“கொரோனா புடிச்சிக்கும்மா” அக்கறையான குரலில் சொன்னார் போலீஸ்காரர்.
“எம் புள்ளயே செத்திட்டான். இனிமே நான் உசுரோட இருந்து என்னா செய்யப்போறன்?” நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதாள் திருமேனி.
“பொணத்துக்கு வா கட்டு கட்டணும். கை கட்டு, கால் கட்டுன்னு கட்டணும் சாமி. என்னெ வுடுங்க.”
“அதெல்லாம் முடியாதும்மா.”
“நெத்தி காசி வைக்கணும்ங்க.”
“முடியாது.”
“பொணத்துக்கிட்ட நல்ல விளக்க ஏத்தி வைக்கணும்ங்க.”
“எந்த நேரத்தில என்னம்மா பேசிக்கிட்டிருக்க?” போலீஸ்காரர் முகத்தைச் சுளித்தார்.
“எம் புள்ளெ உசுரு அடங்குறப்ப பக்கத்தில இல்லியே. என்னா பாவம் செஞ்சனோ கடவுளே? எம் பேரப்புள்ள ராத்திரி பூராம் எப்பிடிதான் வீட்டுல இருந்துச்சோ” என்று சொல்லி ஜீவாவைப் பார்த்து அழுதாள். பிறகு பக்கத்தில் அழுதுகொண்டிருந்த சங்கரியைப் பார்த்து, “ஒங்கண்ணன் எப்பிடி செத்துப்போயிருக்கான் பாத்தியாடி?” என்று கேட்டு அழுதாள். திருமேனி என்ன கேட்டாள் என்பதை கவனிக்காமல் “ஒம் முகத்தக்கூட இந்தப் பாவியால பாக்க முடியாம போச்சே அண்ணா. எப்பிடித்தான் தனியா செத்து கெடந்தியோ? அநாதப் பொணமா கெடந்திட்டியே” என்று சொல்லி சங்கரி தன்போக்கில் அழுதுகொண்டிருந்தாள்.
“எம் புள்ள செத்த மாரி ஒலகத்தில யாரும் சாவக் கூடாதுடா கடவுளே” என்று சொன்னாள் திருமேனி.
பதினோரு மணி வாக்கில் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. வேனிலிருந்து கவச உடை அணிந்திருந்த நான்கு பேர் இறங்கினார்கள். போலீசிடம் பேசினார்கள். தாசில்தாரிடம் பேசினார்கள். வேகமாக வீட்டுக்குள் போனார்கள். பெரிய பாலித்தீன் கவரில் பிணத்தை வைத்துக் கட்டி வாசலுக்குத் தூக்கிக்கொண்டு வந்தபோது சங்கரியும் திருமேனியும் தலையிலேயே அடித்துக்கொண்டு வீறிட்டு அழ ஆரம்பித்தனர்.
“நீர் மால எடுத்தாந்து பொணத்தக் கழுவ வாணாமா?” என்று கேட்டாள் திருமேனி.
“கொரோனா பொணத்தக் கழுவக் கூடாதும்மா” என்று ஒரு போலீஸ்காரர் சொன்னார்.
“எம் மவன் பொணத்த நாங்கதான பொதைக்கணும்? எங்க சாதி முறைப்படித்தான சடங்கு செய்யணும்?”
“இப்ப இது ஒங்க பொணம் இல்ல. கவர்மன்டு பொணம்.”
“என்னாது கவர்மன்டு பொணமா?”
“ஆமாம்மா. கவர்மன்டு பொணத்துக்கு நீங்க சொந்தம் கொண்டாட முடியாது. உசுரோட இருந்தா கொரோனா இருக்கா இல்லியான்ன டெஸ்ட் பண்ணிப்பாத்திருக்கலாம். இப்ப அதுக்கு வழியில்ல. கோயம்பேட்டுலயிருந்து வந்த லாரியில ஏறுனதாலதான் இம்மாம் சிக்கலும். போயி ஒரு ஓரமா ஒக்காரு” என்று திருமேனியிடம் சொன்னார் போலீஸ்காரர்.
கவச உடை அணிந்திருந்த ஆட்களிடம், “கொஞ்சம் இருங்க” என்று சொன்னார் தாசில்தார். கவச உடை அணிந்திருந்தவர்கள் பிணத்தை ஆம்புலன்ஸில் ஏற்றாமல் வாசலிலேயே வைத்தனர். உடனே உள்ளூர்க்காரர்கள் சிலர், “பொணத்த ஒடனே எடுங்க சார். செத்தவனோட பொண்டாட்டி, நேத்து வீட்டுல இருந்துருக்கு. அவன்கூட பேசியிருக்கு. செத்துப்போனவனுக்கும் கொரோனா தொத்தியிருக்கும். ஊர்ல பரவிட்டா பெரிய தொந்தரவா போயிடும் சார்” என்று சொன்னார்கள்.
“செத்தவரோட பொண்டாட்டி வந்துகிட்டிருக்கு. வந்ததும் எடுத்திடலாம்” என்று தாசில்தார் சொன்னதை உள்ளூர்க்காரர்கள் ஏற்காமல் தகராறு செய்ய ஆரம்பித்தனர். உள்ளூர்க்காரன் ஒருவன் இறந்துவிட்டான் என்ற கவலையோ, வருத்தமோ ஒருவரிடமும் இல்லை. ‘ஐயோ பாவம்’ என்று யாரும் சொல்லவில்லை. எப்போது பிணத்தை எடுப்பார்கள் என்ற கவலை மட்டும்தான் எல்லோரிடமும் இருந்தது.
“டி.வி.காரங்க பாத்துக்கிட்டிருக்காங்க. ஊர்ல கலவரமின்னு நியூஸ் போட்டுடுவாங்க” என்று போலீஸிடம் சொல்லிக் கூட்டத்தைக் கலைக்கச் சொன்னார் தாசில்தார். போலீஸ்காரர்கள் “இங்க நிக்கக் கூடாது” என்று சொல்லிக் கூட்டத்தைக் கலைப்பதற்கு முயன்றனர். அப்போது திருமேனி, “பாழும் ஊரே” என்று சொன்னாள்.
ஒரு மணி வாக்கில் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்ஸிலிருந்து ஜெயந்தி இறங்கி வருவதைப் பார்த்ததும் திருமேனியும் சங்கரியும், அலறியபடி ஓடினார்கள். இரண்டு போலீஸ் வந்து கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொள்ள போகிறவர்களைத் தடுத்து நிறுத்துவது மாதிரி இருவரையும் மறித்துக்கொண்டனர்.
“பக்கத்தில போவக் கூடாது. தொட்டுப் பேசக் கூடாது.”
“பாவிவுளே” என்று சொல்லி அழுதாள் திருமேனி.
“இப்படி செத்துப்போறதுக்கா மெட்ராசுக்குப் போயி மாத்தரய வாங்கியாந்தன்” என்று சொல்லி முகத்திலும், தலையிலும் அடித்துக்கொண்டு அழுதாள் ஜெயந்தி. அவள் அழுததை ஊரே பார்த்தது. ஆனால், ஒருவர்கூட வந்து, “அழுவாத” என்று சொல்லவில்லை. அக்னிக் குழியிடமிருந்து தள்ளியே நிற்பதுபோல் அவளிடமிருந்து ஊர்சனம் விலகியே இருந்தது.
“முகத்தப் பாக்க வுடுங்க” என்று கேட்டதற்கு ஒரே வார்த்தையாக “முடியாது” என்று போலீஸ்காரர்கள் சொல்லிவிட்டார்கள்.
“பாக்கறதுக்கு வுடாததுக்கு எதுக்குக் கூட்டியாந்தீங்க?” என்று ஜெயந்தி கோபமாகக் கேட்டாள்.
“அதுக்கு கலக்டர் ஆர்டர் இல்லம்மா.”
“செத்த புருஷனோட முகத்தப் பாக்கக் கூடாதுன்னு சொல்றதுதான் கலக்டரோட சட்டமா?” ஆங்காரத்துடன் கேட்டாள்.
“சட்டம் பேசாத” என்று சொல்லி போலீஸ்காரர் முறைத்தார்.
“பொணத்தோட முகத்தப் பாக்கல. தாலி அறுக்கல. பொணத்து மேல ஒரு சொம்பு தண்ணி ஊத்தல. எந் தலயிலயும் தண்ணிய ஊத்திக்கல” என்று சொல்லி போலீஸிடம் ஜெயந்தி தகராறு செய்துகொண்டிருப்பதைப் பார்த்த தாசில்தார் வந்து, “என்னம்மா?” என்று கேட்டார்.
“பொணத்து முகத்த பாக்க வுடுங்க சார்.”
“அது முடியாதும்மா. பேக் பண்ணியாச்சு.”
“தாலி அறுக்கல சார்.”
“அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்.”
“சாவு தீட்டோட நான் ஆஸ்பத்திரிக்கி திரும்பப் போவ முடியாது சார்.”
“கவர்மண்ட் பொணத்துக்குத் தீட்டெல்லாம் கெடயாதும்மா. ஒன்னோட ரத்தம் டெஸ்ட்டுக்குப் போயிருக்கு. அது பாஸிட்டிவா நெகட்டிவான்னு தெரிஞ்ச பின்னாலதான் நீ எதயும் செய்யலாம்” என்று சொன்ன தாசில்தார், “இந்தம்மாவ வேன்ல ஏத்துங்க” என்று அதிகாரத்துடன் சொன்னார். ஜெயந்தியைக் கடைசிவரை பிணத்திடம் விடவில்லை. தடுப்புக் கட்டைக்கு வெளியே இருந்தபடியே மூட்டையாகக் கட்டப்பட்டிருந்த பிணத்தைத் தூரத்திலிருந்தே பார்ப்பதற்கு மட்டும் அனுமதித்தார்கள்.
கவச உடை அணிந்திருந்த ஆட்களிடம், “பொணத்தத் தூக்குங்க” என்று தாசில்தார் சொன்னார். அப்போது திருமேனி, “பொணத்துக்குக் கொள்ளி வைக்கல சார்” என்று சொன்னாள்.
“கவர்மண்ட் பொணத்துக்குக் கொள்ளியெல்லாம் வைக்க முடியாது. கொஞ்சம் தள்ளி நின்னு பேசு” என்று சொல்லி முறைத்தார்.
கவச உடை அணிந்திருந்தவர்கள் பிணத்தை வேனில் ஏற்றியதையும் வேன் சுடுகாட்டை நோக்கிப் போவதையும் தொலைக்காட்சிக்காரர்கள் வீடியோ எடுத்தனர். திருமேனி, சங்கரி, ஜீவா, ஜெயந்தி அழுவதையும் வீடியோ எடுத்தனர். பிறகு சுடுகாட்டை நோக்கி ஓட ஆரம்பித்தனர்.
“வேன்ல ஏறும்மா” என்று ஒரு போலீஸ்காரர் சொன்னார்.
“எம் மவன பாக்கணும் சார். தடுப்புக் கட்டக்குள்ளாரியே எப்பிடி வதங்கிப்போயி தனியா நிக்குறான் பாருங்க.”
“...”
“எம் மாமியாக்கிட்ட பொணக்குழியில மேட்டுல பாலு ஊத்தச் சொல்லிட்டு வரன்.”
“இருக்கிறவங்க பாத்துக்குவாங்க. நீ வண்டியில ஏறு.”
“ஒரு சொம்பு தண்ணியக் கொண்டார சொல்லி அதுல தாலியக் கழட்டிப் போட்டுட்டு வரன் சார்.”
“அதுக்கெல்லாம் பர்மிஷன் இல்லெ. இது தொத்து நோவும்மா. பக்கத்தில நின்னாலே தொத்திக்கும். நேத்து நீ வீட்டுக்குள்ளார போனதாலதான் ஒம் புருசன் பொணத்துக்கிட்ட யாரயும் போவ விடல தெரியுமா? வண்டியில ஏறு” என்று சொன்னார். “முடியாது” என்று சொன்ன ஜெயந்தியைக் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டுபோய் ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். அடுத்த நொடி ஆம்புலன்ஸ் புறப்பட்டுவிட்டது. ஆம்புலன்ஸ் சென்ற திசையை வெறித்தவாறு நின்றுகொண்டிருந்தான் ஜீவா. அவனுடைய கண்களில் கண்ணீர் நிறைந்தது.
சிறந்த சிறுகதை இமையம் சார் 👌👌
பதிலளிநீக்குGreat expression about corona pandemic! It created Chaos in this unstable World! Even the neighbours & relatives are not reliable in these critical times!
பதிலளிநீக்குஅருமையான உருக்கமான கதை
பதிலளிநீக்கு