மயானத்தில் பயமில்லை
ஒரு
இளம் பெண் தனியாகப் பிணக்குழி வெட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்த நாகமணிக்கு ஆச்சரியமாக
இருந்தது. அப்பெண்ணுக்கு முப்பது வயதுக்குள்தான் இருக்கும். நல்ல சிவந்த நிறமாக இருந்தாள்.
நடுத்தரமான உயரத்தில் இருந்தாள். வியர்வையில் ஜாக்கெட் முழுவதுமாக நனைந்திருந்தது.
உடல் முழுவதும் வியர்வை வழிந்துகொண்டிருந்தது. கை, கால்கள் என்று ஈரமண் ஒட்டியிருந்தது.
அதிசயமான உயிரினத்தைப் பார்ப்பதுபோல் தன்னை ஒரு பெண் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்ததும்
வெட்டுவதை நிறுத்திவிட்டு, நிமிர்ந்துபார்த்து சிரித்துக்கொண்டே, “என்ன அப்படி பாக்குறிங்க?”
என்று கேட்டாள்.
“சும்மாதான்”
என்று சொன்ன நாகமணி, “என்னா ஊரு” என்று கேட்டாள்.
“சேலம்தான்.”
“பேரு
என்னா?”
“சீதா.”
“கூட
யாருமில்லியா?”
“எதுக்கு?”
“தனியா
இருக்கியே.”
“இன்னிக்கு
மட்டுமா தனியா இருக்கேன்?” என்று கேட்ட சீதா இதற்காகத்தான் என்றில்லாமல் சிரித்தாள்.
நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்தாள். பிறகு குனிந்து மண்ணை வெட்ட ஆரம்பித்தாள்.
“பயமா
இல்லியா?”
மண்ணை
வெட்டுவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து நின்று நாகமணியைப் பார்த்து, “எதுக்கு?” என்று
சீதா கேட்டாள். அப்போது அவளுடைய இடது பக்க கண்ணில் வியர்வைத் துளி இறங்கியது.
எட்டு,
பத்தடி நீளத்தில், நான்கு அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் நின்றுகொண்டிருந்த சீதாவை அதிசயமான
பொருள் ஒன்றைப் பார்ப்பதுபோல பார்த்த நாகமணி, “அதிசயம்தான்” என்று அடித்தொண்டையால்
சொன்னாள்.
நாகமணி
பிறந்த ஊரிலும், கல்யாணம் கட்டிக்கொண்ட ஊரிலும் மயானத்தின் பக்கம் பெண்கள் போகவே மாட்டார்கள்.
தீட்டுக்காரப் பெண்கள் பேய் பிடித்துக்கொள்ளும் என்று மயானத்தின் பக்கம் திரும்பிகூடப்
பார்க்க மாட்டார்கள். நாகமணிக்குப் பேய் என்று சொன்னாலே பயம் வந்துவிடும். மயானம் எப்படி
இருக்கும்? பிணக்குழி எப்படி இருக்கும்? பிணத்தை எப்படி புதைப்பார்கள்? என்பதெல்லாம்
அவளுக்குத் தெரியாது. இன்றுதான் அவள் மயானத்துக்குள் வந்திருக்கிறாள். சமாதி கட்டுகிற
வேலை என்று தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டாள். நேற்று ஒரு வீட்டில் குளியலறை
கட்டும் வேலை நடந்தது. வேலை முடிந்து வீட்டுக்குப் போகும்போது, “நாளக்கிக் காலயில டி.வி.எஸ்.
மயானத்துக்கிட்ட வந்திடு” என்று மட்டும்தான் பழனிசாமி சொன்னான். வந்த பிறகுதான் சமாதி
கட்டுகிற வேலை என்று தெரிந்தது. நாகமணிக்கு முகம் சுருங்கிப்போயிற்று. உடனே, ‘உடம்பு
சரியில்லை என்று சொல்லிவிட்டு போய்விடலாமா? என்று யோசித்தாள். இருபத்திநான்கு கிலோ
மீட்டர் தூரம் வந்துவிட்டோம். திரும்பி வீட்டுக்குத்தான் போக வேண்டும். ஒருநாள் சம்பளம்
போய்விடும். இன்று மட்டும் வேலை செய்துவிட்டு நாளைக்கு உடம்பு சரியில்லாததால், வரவில்லை
என்று சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்தாள். அரைகுறை மனதுடன் வேலையை ஆரம்பித்தாள்.
மயானத்தில்
வேலைசெய்ய வரச்சொல்லிவிட்டானே பழனிசாமி என்ற கோபத்தில் அக்கம்பக்கம் பார்க்காமல் வேலையைச்
செய்துகொண்டிருந்ததால் அந்த இடத்தில் என்ன இருக்கிறது என்றுகூட அவள் பார்க்கவில்லை.
இப்போதுதான் பார்ப்பதற்கு முயன்றாள். சீதா பிணக்குழி வெட்டிக்கொண்டிருந்த இடத்துக்குச்
சற்றுத் தள்ளி மேற்கில் புது பிணக்குழி மேடு தெரிந்தது. பிணக்குழியின் மீது வாடிவதங்கிய
நிலையில் பூமாலை ஒன்று கிடந்தது. பிணக்குழி மேடு ஈரம் காயாமல், அதன் மேல், கொட்டப்பட்ட
குங்குமம், கரைத்து ஊற்றிய சந்தனம், உடைத்து வைக்கப்பட்டிருந்த தேங்காய், ஊதுபத்தி
பாக்கெட், கற்பூரம் இருந்த காகிதம் என்று பலதும் கிடந்தன.
பிணத்தைப் புதைத்து ஒன்றிரண்டு நாட்கள்தான் இருக்கும் என்று நினைத்தாள். புதிய பிணக்குழி
மேட்டுக்குப் பக்கத்தில் நாச்சிமுத்து கவுண்டர் என்று எழுதியிருந்த சமாதியும், கருப்ப
கவுண்டர் என்று எழுதியிருந்த சமாதியும் இருந்தது. அடுத்ததாகப் பிணக்குழி மேடுகளும், ஒன்றிரண்டு சமாதிகளும் தெரிந்தன. மயானத்தைப் பார்க்கபார்க்க நாகமணிக்குப்
பயம் கூடியது. “எங்க வேல செய்யுறதுக்குக் கூப்புட்டுக்கிட்டு வந்திருக்கான் பாரு” என்று
பழனிசாமி மீது கோபப்பட்டாள்.
“எதுக்கு
வெயில்ல நிக்குறிங்க? போயி நிழல்ல ஒக்காருங்க” என்று சீதா சொன்னதும் வேப்பமர நிழலுக்கு
வந்தாள் நாகமணி. ஒயர்கூடையிலிருந்த சாப்பாட்டு டப்பாவை எடுத்து திறந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
இரண்டு, மூன்று கை சோறுதான் அவளால் சாப்பிட முடிந்தது. மயானத்தில் வந்து உட்கார்ந்து
சாப்பிடுகிறோமே என்ற எண்ணம் அவளைச் சாப்பிட விடாமல் தடுத்தது. நல்ல பசி இருந்தாலும்
சாப்பிடாமல் வெறுப்புடன் கையைக் கழுவினாள். சோற்று டப்பாவை மூடி ஒயர்கூடையில் வைத்தாள்.
பாட்டிலை எடுத்து தண்ணீரைக் குடித்தாள். சிறிது நேரம் படுக்கலாமா என்று பார்த்தாள்.
மயானத்தில் எப்படி படுப்பது என்று தயங்கினாள். எந்த இடத்துக்கு வேலைக்குச் சென்றாலும்
மதிய சாப்பாடு சாப்பிட்டதும் கொத்தனார், சித்தாள்கள் கொஞ்ச நேரமாவது படுத்திருப்பார்கள்.
இன்று அதற்கு வழியில்லை. அதனால் எழுந்து சீதாவிடம் போனாள்.
பிணக்குழிக்காக
வெட்டப்பட்டிருந்த புது மண்ணின் மீது ஏறி நின்றுகொண்டு, குழி எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது,
எவ்வளவு நீளத்தில் இருக்கிறது என்று நாகமணி பார்த்தாள். பிணக்குழியையும், பிணக்குழிக்குள்
மார்பளவு பள்ளத்தில் நின்றுகொண்டு, வெட்டிய மண்ணை அள்ளி வெளியே கொட்டிக்கொண்டிருந்த
சீதாவையும் பார்த்தாள். நோயாளியின் குரலில், “சாவறதுக்கு முன்னாடியே பொணக்குழியப் பாத்திட்டன்”
என்று சொன்னாள். பிறகு இதுவரை உலகத்தில் யாருமே கேட்காத கேள்வியைக் கேட்டதுபோல், “பொணத்த
இதுல போட்டுத்தான மண்ணத் தள்ளி மூடுவாங்க?” என்று கேட்டாள். “அதுக்குத்தான குழிவெட்டுறது”
லேசாகச் சிரித்துக்கொண்டே சீதா சொன்னாள். வெட்டிய குழியின் நீளம், அகலம், பள்ளம் சரியாக
இருக்கிறதா, வெட்டிப்போட்ட மண் மீண்டும் குழிக்குள் சரிந்துவிழுகிறதா, குழி நேராக இல்லாமல்
வளைந்திக்கிறதா என்று பார்த்தாள். குழியின் ஓரங்களிலிருக்கும் மண் சரிந்து குழிக்குள்
விழாமல் இருப்பதற்காகக் கையால் குழந்தையைத் தட்டிக்கொடுப்பதுபோல தட்டிக்கொடுத்தாள்.
தரை, மேடுபள்ளம் இல்லாமல் இருப்பதற்காக கால்களால் மிதித்துவிட்டாள். கடப்பாறை,
மண்வெட்டி, மண் அள்ளும் கூடை என்று ஒவ்வொரு பொருளாக எடுத்து வெளியே போட்டாள். ஒருமுறைக்கு
இரண்டு முறை பிணக்குழி சரியாக இருக்கிறதா என்று பார்த்தாள். அவள் பார்த்த விதம் பிறந்த
குழந்தை அழகாக இருக்கிறதா என்று பார்ப்பதுபோல இருந்தது. எல்லாம் சரியாக இருப்பதுபோல்
தோன்றவே, இரண்டு பக்கமும் கையைக் கொடுத்து ஒரே எம்பாக எம்பி, பள்ளத்திலிருந்து மேலே
வந்தாள்.
சீதாவுக்கு
உடம்பு முழுவதும் வியர்த்து ஒழுகிக்கொண்டிருந்தது. வியர்வை ஈரத்தில் கை, கால்களில்
ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டாள். புடவையில், ஜாக்கெட்டில் ஒட்டியிருந்த மண்ணையும்
தட்டிவிட்டாள். தண்ணீர்க்குழாய் இருந்த இடத்துக்குப் போய் முகம், கை, கால்கள் என்று
கழுவிக்கொண்டாள். பிணக்குழியிலிருந்து சீதாவுடன் இணைந்தே வந்திருந்த நாகமணி, “பொணம்
எப்ப வரும்?” என்று கேட்டாள். “நாலு அஞ்சு மணி ஆயிடும்” என்று சொல்லிவிட்டு முந்தானையால்
முகத்தைத் துடைத்துக்கொண்டாள். வேப்பமர நிழலை நோக்கி சீதா நடக்க ஆரம்பித்ததும், அவளுக்குப்
பின்னாலேயே நாகமணியும் வந்தாள்.
“பொணத்த
நீ பொதைப்பியா? மத்தவங்க பொதைப்பாங்களா?”
“பொதுவா
பொணத்துக்காரங்கதான் பொதைப்பாங்க” என்று சொன்ன சீதா, தரையில் உட்கார்ந்தாள். அடுத்து
நாகமணியும் உட்கார்ந்துகொண்டாள்.
“எப்ப
வீட்டுக்குப் போவ?”
“பொணம்
பொதச்சி முடிஞ்சதும்” என்று சீதா சொன்னவிதம் நீ கேட்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதுபோல்
இருந்தது.
பிணக்குழியை
வெட்டிக்கொண்டிருக்கும் போதும், தண்ணீர்க்குழாயில் முகம், கை, கால் என்று கழுவிக்கொண்டிருக்கும்போதும்
பார்த்ததைவிட இப்போது நாகமணியால் சீதாவை நெருக்கமாகப் பார்க்க முடிந்தது. லட்சணமான
முகம், உடம்பில் சதைப்பிடிப்பு அதிகமில்லாமல் இருந்தது. கல்யாணமான பெண் மாதிரி தெரியவில்லை.
கழுத்தில் ஒரு நூல்கூட இல்லை. மூக்கில் மட்டும் கருத்துப்போன கவரிங் மூக்குத்தி இருந்தது.
கைகளில் ரப்பர் வளையல்கள்கூட இல்லை. இரண்டு காதுகளிலும் சின்னதாகத் தோடு போட்டிருந்தாள்.
சீதாவின் முகம், கை, கால்கள் என்று அங்குலம்அங்குலமாகப் பார்த்தாள். நாகமணி தன்னையே
பார்க்கிறாள் என்பதை உணர்ந்த சீதா, “என்னா அப்படி பாக்குறீங்க?” என்று கேட்டாள். அவள்
கேட்டதற்குப் பதில் சொல்லாமல், “வேற வேலைக்கிப் போனா என்னா?” என்று நாகமணி கேட்டாள்.
“இந்த வேலைக்கி என்னா கொறச்சல்? இந்த வேலைதான் எனக்குப் புடிச்சியிருக்கு” என்று சொல்லிவிட்டு,
கொஞ்சம் சத்தமாகவே சிரித்தாள். சீதா சொன்னதும், சிரித்ததும் நாகமணிக்கு வியப்பை உண்டாக்கியது.
ஆச்சரியப்பட்டுப்போய், “இந்த வேலைதான் ஒனக்குப் புடிச்சிருக்கா?” என்று கேட்டாள்.
“ஆமாம்.”
“இந்த
எடத்தில நீ எப்பிடி இருக்க?”
“புடிச்சிதான்
இருக்கன். வளையில எலி இருக்கிற மாதிரி.”
“என்னாது?
மயானம் ஒனக்குப் புடிச்சியிருக்கா?”
“இந்த
எடத்த வுட்டுப் போறதுக்கு எனக்கு மனசே வராது.”
“மனசு
வராதா?”
”வராது.
இந்த எடத்துக்கு என்ன கொற?”
”என்னா
கொறயா?” என்று கேட்டுவிட்டு இரண்டு கைகளாலும் வாயை மூடிக்கொண்டாள் நாகமணி.
சீதா
மரத்தை ஒட்டி வைத்திருந்த தன்னுடைய சாப்பாட்டு பையிலிருந்த செல்போனை எடுத்துப் பார்த்தாள்.
யாரும் அழைக்கவில்லை என்பது தெரிந்தது. மயானத்தின் நுழைவாயிலைப் பார்த்தாள். ஆள் நடமாட்டம்
எதுவுமில்லாமல் இருந்தது. “மத்தவங்க வாயிக்கு ஒரு கை சோறு போடத்தான் முடியல. மத்தவங்க
பொணத்துக்கு ஒரு கை மண்ணள்ளிப் போடலாமே. அதான் இங்க இருக்கன்” என்று சொல்லி முடிப்பதற்குள்,
ரொம்பவும் உரிமைப்பட்ட ஆளிடம் பேசுவது மாதிரி, “ஊராங்க பொணத்துக்கு மண்ணள்ளிப் போடணுமின்னு
ஒனக்கு என்ன விதியா?” என்று நாகமணி கேட்டதற்கு சீதா எந்த பதிலும் சொல்லவில்லை.
“மயானத்தில
ஆம்பளங்க வரதுக்கே பயப்படுவாங்க. நீ தனியா இருக்கியே?”
“எங்க
தாத்தாவுக்கு நாலு நாளா காய்ச்ச. ஒடம்பு நல்லா இருந்தா எங்கூடத்தான் இருப்பாரு.”
“பேய்
புடிச்சிக்காதா?”
“இருபத்திரெண்டு
வருசமாக இருக்கன். ஒரு பேயும் புடிக்கல. எனக்கு ரோட்டுல நடக்கத்தான் பயம். காருக்காரன்
மேல ஏத்திப்புடுவான். தெருவுல நடக்கத்தான் பயம். ஆம்பளங்க முறச்சிமுறச்சி பாப்பாங்க.”
பெரிய நகைச்சுவைக்குரிய விஷயத்தைச் சொன்னதுபோல் சிரித்தாள். சீதா பேசியதும், சிரித்ததும்
கிறுக்குபிடித்த பெண்ணாக இருப்பாளோ என்ற எண்ணத்தை நாகமணிக்கு உண்டாக்கிற்று.
“குழிவெட்ட
எம்மாம் சம்பளம்?”
“ஆயிரம்.
ஒரு சில பேரு நூறு, இரு நூறு சேத்துத் தருவாங்க. சில பேரு நூறு எரநூற கொறச்சி கொடுப்பாங்க”
என்று சீதா சொல்லிக்கொண்டிருக்கும்போது அவளுடைய செல்போன் மணி அடித்தது. போனை எடுத்து
“ஹலோ தாத்தா, பொணம் இன்னம் வல்ல. பொணம் வந்து வேல முடிஞ்சதும் சொல்றன். மத்தியானம்
சாப்புட்டியா? மாத்தரய போட்டியா? பீடியக் குடிச்சிக்கிட்டே இருக்காத. நானா? இன்னம்
சாப்புடல. இப்பதான் வேல முடிஞ்சது. சரி வச்சிடு” என்று சொல்லிவிட்டு செல்போனை நிறுத்தினாள்.
சீதா போனில் பேசி முடிப்பதற்காகவே காத்துக்கொண்டிருந்த நாகமணி, “ஒங்க தாத்தா குழிவெட்ட
மாட்டாரா?” என்று கேட்டாள்.
“முன்னலாம்
அவருதான் வெட்டுவாரு. நான் கூட இருப்பன். இப்ப நான் வெட்டுறன். அவருக்கு வயசாயிடிச்சி.”
“குழிமட்டும்தான்
வெட்டுவியா?”
“நூறு,
இரநூறு பேரோட வர பொணமும் இருக்கு. அஞ்சு, பத்து பேரோட வர பொணமும் இருக்கு. லாரியில,
பஸ்ஸில அடிப்பட்டு செத்த அநாதைப் பொணமும் வரும். அநாதப் பொணத்தப் பொதைக்க குழிவெட்டவும்,
பொதைக்கவும் ஆளுங்க யாரும் வர மாட்டாங்க. போலீசு மட்டும்தான் வரும். வந்தாலும் நூறு,
இர நூறுதான் தருவாங்க. மாசத்துக்கு எப்பிடியும் மூனு நாலு அநாதைப் பொணமாச்சும் வந்திடும்.
அத நான்தான் பொதைப்பன்” என்று சொன்ன சீதா, புழுக்கத்துக்காக முந்தானையை எடுத்து விசிறிக்கொள்ள
ஆரம்பித்தாள்.
”பொணத்த
எரிக்க மாட்டாங்களா?”
”அதுக்குன்னு
ஒருத்தர் இருக்காரு. பேசுன ரூவாயில எட்டணா கொறஞ்சாகூட ஒத்துக்க மாட்டாரு. பொணத்துக்கூடவே
புழங்குறவன் வாழறவன் நான். பேசுன சம்பளத்தக் கொறைக்காதிங்கன்னு வாக்குவாதம் பண்ணுவாரு.
சம்பளத்தோட அவருக்கு குவார்ட்டர் பாட்டிலும், புரோட்டாவும் வாங்கித் தரணும். இல்லன்னா
பொணத்த சரியா எரிக்க மாட்டாரு.”
“அட
ஆண்டவனே” என்று சொன்ன நாகமணி, “பொணம் எரிக்கிற எடம் எங்க இருக்கு?” என்று கேட்டாள்.
“பக்கத்திலதான்
வடக்கால பக்கம்” என்று சொன்ன சீதா, வடக்குப் பக்கமாகக் கையை நீட்டிக் காட்டினாள்.
“பொணத்த பொதைக்கிறது நல்லதா? எரிக்கிறது நல்லதா?”
சிறு குழந்தையைப்போல நாகமணி கேட்டாள்.
“சாதிக்கேத்த
மாதிரி செய்வாங்க” என்று சொன்ன சீதா, லேசாகச் சிரித்துக்கொண்டே, “சித்தாள் வேலக்கி
வந்திங்களா? எங்கிட்ட கேள்வி கேக்கறதுக்கு வந்திங்களா?” என்று கேட்டாள்.
“கொத்தனாரு
சாப்புட போயிட்டாரு. சாராயத்த குடிச்சாதான் அந்தாளுக்குச் சோறு வவுத்துக்குள்ளார எறங்கும்.
மத்த எடத்துக்கு வேலக்கிப் போனா மத்தியானத்தில செத்த நேரம் ஒடம்பத் தரயில கிடத்துவம்.
மயானத்தில அப்படி செய்ய முடியுமா? எல்லா எடமும் பொணம் பொதச்ச எடமா இருக்கு” என்று சொன்ன
நாகமணி, பழனிசாமி வருகிறானா என்று பார்த்தாள். அவன் வருகிற மாதிரி தெரியாததால் அடுத்த
கேள்வியைக் கேட்டாள்.
“பொணம்
வராத அன்னிக்கி என்னா பண்ணுவ?”
“பொணம்
எரிக்கிறவருதான் இன்னிக்கி ஒரு பயலும் சாவலியேன்னு சொல்லி, திட்டிக்கிட்டு இருப்பாரு. கவலப்
படுவாரு. நானும் எங்க தாத்தாவும் வேல இல்லாத நாளில முள்ளு செடியிருந்தா புடுங்கிப்போடுவம்.
மண்ணு சரிஞ்சி கெடக்குற குழி மேட்டுல மண்ண குமிச்சிப் போடுவம். பொணம் வந்தா எந்த எடத்தில
வெட்டுறதின்னு எடத்த கண்டுபுடிச்சி கோடு போட்டு வைப்பம். ஒரு சில நேரம் குழிய வெட்டி
வச்சிருப்பம்” என்று சொல்லி முடிப்பதற்குள் “சாவு சாவறதுக்கு முன்னாடியே குழிய வெட்டி
வச்சிருப்பியா?” என்று கேட்டாள் நாகமணி.
“ஆமாம்.”
“சாவறதுக்கு
முன்னாடியே எப்பிடி குழிவெட்டி வைக்கிறது? அதிசயம்தான்” என்று சொன்னாள்.
“இதுல
என்னா அதிசயம் இருக்கு? ஒரே நாளில ரெண்டு மூணு பொணம் வந்தா என்னா செய்யுறது? பொதைக்கிறதுக்கு
எடமில்லன்னா, தரமட்டமாயிட்ட பழய எடத்துலியே மறுகுழி வெட்டுவம். மறுகுழி வெட்டாத எடமின்னு
ஒரு எடத்தக்கூட இங்க காட்ட முடியாது. வசதியானவங்க சமாதிய கட்டுறதாலதான் எடப் பிரச்சன.
ஒவ்வொரு குழியும் பத்து பொணம் இருவது பொணம் பொதச்ச எடமாத்தான் இருக்கும்.”
“இத்தினி
வருசத்தில எம்மாம் பொணக்குழி வெட்டியிருப்ப?”
“இருவதாயிரம்,
முப்பதாயிரம் இருக்கும். கூடுதலா இருக்குமே தவிர கொறயாது.”
நம்ப
முடியாத விஷயத்தைக் கேட்டதுபோல் “யே சாமி” என்று சொல்லி இரண்டு கைகளாலும் வாயைப் பொத்திக்கொண்டாள்
நாகமணி.
“பொணக்குழி
வெட்டுன கையோட, பொணத்தப் பொதச்சக் கையோட, ஏதாச்சும் ஒரு பொணக்குழி மேட்டுல குந்திதான்
தெனம் சோறு சாப்புடுறன். பொணக்குழி வெட்டுன களப்பப் போக்க தரமட்டமாயிட்ட பொணக்குழியிலதான்
படுக்கிறன். இப்பிடித்தான் ஒவ்வொரு நாளும் எனக்கு ஓடியிருக்கு. பத்து வயசா இருக்கும்போது
இந்த எடத்துக்கு வந்தன். இப்ப எனக்கு முப்பத்திரெண்டு வயசு. வீட்டுல இருந்த நேரத்தவிட
இந்த இடத்திலதான் அதிகமா இருந்திருக்கிறன். சில நாளில பொணம் ராத்திரி ஏழெட்டு மணிக்குக்கூட
வரும். பொணத்த பொதச்சப் பின்னாடிதான் வீட்டுக்குப் போவ முடியும்.” என்று சொன்ன சீதாவை
அதிசயமான உயிரினத்தைப் பார்ப்பதுபோல நாகமணி பார்த்தாள். சீதா ஒவ்வொரு விஷயமாக சொல்லச்சொல்ல
அவளுக்கு வேறு ஒரு உலகத்தில் இருப்பதுபோல் இருந்தது. “பொணம் பொதைக்க வரப்ப எல்லாருமே
ஆம்பளைங்களாகத்தான இருப்பாங்க? அத்தன ஆம்பள முன்னாடி நீ ஒத்த பொம்பளயா எப்பிடி நிப்ப?
கூச்சமா இருக்காதா?”
“வேலதான
செய்யுறம்?” என்று கேட்ட சீதா சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். காரணமே இல்லாமல் செல்போனை
எடுத்துப் பார்த்தாள். “வயித்துக்கு கூச்சம், வெக்கம் இருக்கா?” என்று கேட்டாள்.
“பொணம்
பொதைக்க வரவங்க திட்டுவாங்களா?”
“குழி நீளமா இல்ல, அகலமா இல்லெ, பள்ளம் அதிகமா இல்லனு ஏதாச்சும்
சொல்லுவாங்க. அதுகூட நூறு அம்பத கொறச்சிக் கொடுக்கிறதுக்காக. நகக்கடயில, துணிக்கடயில
ஓட்டல்ல கணக்குப் பாக்காதவங்க சுடுகாட்டுல வந்துதான் கணக்குப் பாப்பாங்க. கூட்டமா வரதில
ஒண்ணு, ரெண்டு பேரு முறச்சிப் பாப்பாங்க மத்தப்படி தொந்தரவு இருக்காது.”
“மயானத்திலியுமா?”
“எங்க
இருந்தாலும் நான் பொம்பளதான?” என்று கேட்ட சீதா உற்சாகத்தில் சிரிக்கிற குழந்தையைப்போல
சிரித்தாள். பிறகு பக்கத்திலிருந்த அருகம்புல்லைப் பிடுங்கி சிறுசிறு துண்டுகளாகக்
கிள்ளிப்போட ஆரம்பித்தாள். என்ன தோன்றியதோ நாகமணியின் பக்கம் பார்த்து, “பொம்பளன்னா
ஆம்பள பாக்கதான செய்வாங்க?” என்று கேட்டாள். நாகமணி பதில் சொல்வதற்கு முன்பாகவே, “அதுகூட
இன்னம் பத்து வருசம்தான். அப்பறம் எதுக்குப் பாக்கப்போறாங்க?” என்று கேட்டாள். நாகமணி
பதில் எதுவும் சொல்லாமல், அவளுடைய முகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள். அதிசயமான
ஆளாக இருக்கிறாளே என்று நினைத்தாள். தன்மையான குரலில், “கல்யாணமாயிடிச்சா?” என்று கேட்டாள்.
“இல்லெ.”
“கட்டிக்க
வேண்டியதுதான?”
“எதுக்கு?”
“எதுக்கா?”
என்று கேட்ட நாகமணி, சீதாவை ஒருவிதமாகப் பார்த்தாள்.
”கல்யாணம்
கட்டுறதுதான முக்கியம்.”
“கல்யாணமான
ஒண்ணு ரெண்டு மாசத்திலியே வீட்டுல சண்டை, புருசன புடிக்கலன்னு விஷத்தக் குடிச்சி, தூக்குல
தொங்கி செத்துப்போனவங்களோட பொணத்துக்கெல்லாம் குழிவெட்டி இருக்கன், காதல் பிரச்சனயில
செத்துப்போன சின்ன பொண்ணுங்களுக்கும் நாலஞ்சி மாச கர்ப்பத்தோட செத்தவங்களுக்கும் குழிவெட்டி
இருக்கன். புருசன், பொண்டாட்டி சண்டயில ரெண்டு மூணு புள்ளங்களுக்கு விஷத்தக் கொடுத்து
செத்த பொம்பளைங்க, புள்ளங்களையும் சேத்துப் புடிச்சிக்கிட்டு தீக்குளிச்சி செத்த பொம்பளைங்க
பொணம், சின்னப் புள்ளைங்க பொணம்னு எம்மாம் குழி வெட்டியிருப்பன்? அதயெல்லாம் பாத்துட்டு
கல்யாணம் கட்ட முடியுமா?”
“கஷ்டமா
இருக்காதா?”
“வெயில் காலத்தில
குழி வெட்டுறது, ஒண்ணு, ரெண்டு பேரு பேசுன சம்பளத்தவிட கொறச்சிக் கொடுக்கிறதெல்லாம்
கஷ்டமா இருக்காது. ஒருத்தங்க தரலன்னா இன்னொருத்தங்க தந்திடுவாங்க. தாயோட சேத்து கை
புள்ளைங்களயும் பொதைக்கிறப்பதான் கஷ்டமா இருக்கும். சோறு திங்கவே புடிக்காது, தூக்கமும்
வராது.”
“அதுக்காக
சாவுறமுட்டும் தனியா இருக்க முடியுமா?”
“இதே
கேள்வியத்தான் தெனமும் எங்க பாட்டியும், தாத்தாவும் கேக்குறாங்க.”
“ஒங்க
தாத்தாவும் பாட்டியும் அப்பனப் பெத்தவங்களா, அம்மாவப் பெத்தவங்களா?”
சீதா
எந்தப் பதிலையும் சொல்லவில்லை. அருகம்புல்லைக் கிள்ளிப்போடுவதுதான் முக்கியமான வேலை
என்பதுபோல், அருகம்புல்லைக் கிள்ளிப்போட்டுக்கொண்டிருந்தாள். அவள் உட்கார்ந்திருந்த
விதம் தனக்குப் பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறாள் என்பதையே மறந்துவிட்டது
போலிருந்தது. அக்கம்பக்கம்கூட பார்க்கவில்லை. தலையிலும் தோள் பட்டையிலும் வெயில் அடிப்பதுகூட
அவளுடைய கவனத்தில் இல்லை.
“என்னாச்சி?”
“ரெண்டுமில்லெ.”
“என்னம்மா
சொல்ற?”
சீதா
தூரத்தில் வருகிற ஆளைப் பார்ப்பதுபோல கிழக்குப் பக்கமாக இருந்த பிணக்குழி மேடுகளையும்,
சின்னதும் பெரியதுமாக இருந்த சமாதிகளையும் பார்த்தாள். அப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது
கடுமையாக வெயில் அடித்துக்கொண்டிருப்பது.
“என்னம்மா
ஆச்சி” மெதுவாகக் கேட்டாள் நாகமணி.
“எங்களுக்கு
சொந்த ஊரு ஆந்திரா. எங்கப்பா டிரைவரா இருந்தாரு. லாரி ஓட்டிக்கிட்டு இருந்த பழக்கத்தில
இந்த ஊரு முதலாளி, வந்து என்னோட லாரிய ஓட்டுன்னு சொல்ல, எங்கப்பா எங்களக் கூட்டிக்கிட்டு
இங்க வந்தாரு. அப்ப எனக்கு ஒம்போது வயசு. வண்டிக்கிப்போனா, திரும்பிவர எட்டு ஒம்போது
நாள் ஆவும். ஒருமுற கேரளாவுக்குப் போனப்ப லாரிய ஆக்சிடன்டு பண்ணிட்டாருன்னு, முதலாளி
கோவத்தில வேலக்கி வராதன்னு சொல்லிட்டாரு. எங்கப்பா வேற முதலாளிகிட்டயும் போயி டிரைவரா
சேரல. தீபாவளி அன்னிக்கி பக்கத்து வீட்டுல கடன் வாங்கிக் கொடுத்து ‘போயி கறி வாங்கிக்கிட்டு
வா’ன்னு எங்கம்மா அனுப்பிச்சி. எங்கப்பா கறி வாங்கிட்டு வரல. குடிச்சிப்புட்டு வந்தாரு.
ஒரு மாசமா நீ வண்டிக்கிப் போவல. நான் மில்லுக்கு வேலக்கிப் போறன். அதவச்சிதான் சாப்புடுறம்.
நல்ல நாளில ஒரு துண்டு கறி ஆக்கிப் புள்ளங்களுக்குப் போடலாமின்னுதான் கடன் வாங்கி காசக் கொடுத்தன். நீ என்னா செஞ்சிட்டு வந்திருக்க? இப்படிப்பட்ட ஆளுகூட
எப்பிடி நான் சேந்திருப்பன்னு சொல்லி எங்கம்மா தீயவச்சிக்கிச்சி.”
சீதாவினுடைய
முகம் இருந்த வாட்டத்தைப் பார்த்தால் எந்த நேரத்திலும் அழுதுவிடுவாள் என்பது போலிருந்தது.
ஆனால், அவள் அழவில்லை. அவளுடைய கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர்கூட வரவில்லை. பெருமூச்சு
விடவில்லை. மூக்கை உறிஞ்சவில்லை. அசைந்தும் உட்காரவில்லை.
தூரத்திலிருந்து
பிணக்குழி மேடுகளையும் சமாதிகளையும் பார்த்தவாறு சின்னப்பிள்ளைக்குக் கதை சொல்வதுபோல,
“எங்கம்மாவ ஆஸ்பத்திரிக்கி தூக்கிட்டுப்போயிட்டாங்க. எந்த ஆஸ்பத்திரின்னு தெரியல. நானும்
என் தங்கச்சியும் அழுதுகிட்டே ஒவ்வொரு ஆஸ்பத்திரியா போயி ‘எரிஞ்சிப்போன எங்கம்மாவ கொண்டாந்தாங்களா?’ன்னு
கேட்டம். ‘இல்ல’ன்னுட்டாங்க. ஏழெட்டு ஆஸ்பத்திரிக்கிப் போயிருப்பம். ஒரு ஆஸ்பத்திரி
வாசல்ல நானும் என் தங்கச்சியும் அழுதுகிட்டு நின்னத பாத்திட்டு வாட்ச்மேன், “இது தனியாரு
ஆஸ்பத்திரி. பணம் உள்ளவங்கதான் இங்க வருவாங்க. பணம் இல்லாதவங்க கவர்மண்ட் ஆஸ்பத்திரிக்கித்தான்
போவாங்க. அங்க போயி கேட்டுப் பாருங்க”ன்னு சொன்னாரு. நாங்க கவர்மண்டு ஆஸ்பத்திரிக்கிப்
போனப்ப ராத்திரி ஒம்போது பத்து மணி இருக்கும். வெளியில நின்னுக்கிட்டிருந்த எங்கப்பா
எங்கள கட்டிப்புடிச்சிக்கிட்டு அழுதாரு.எங்கம்மாவப் பாக்க வுடல. ராத்திரி ரெண்டு மூணு
மணிக்கு ஒரு நர்சு வந்து எங்கம்மா செத்திடுச்சின்னு சொன்னாங்க” என்று சொன்ன சீதா, நேருக்கு
நேராக நாகமணியைப் பார்த்தாள். அவள் பார்த்த விதம் தூங்கிக்கொண்டிருக்கிற ஒரு குழந்தையைப்
பார்ப்பதுபோல இருந்தது. எப்போதுமே சலசலவென்று பேசுகிற பழக்கம் கொண்ட நாகமணிகூட இப்போது
ஒரு வார்த்தை பேசவில்லை. சீதாவைப் பார்ப்பது மட்டும்தான் தன்னுடைய வேலை என்பதுபோல பார்த்துக்கொண்டிருந்தாள்.
நாகமணி எதுவும் கேட்காமலேயே சீதா சொன்னாள்.
“பொணத்தக்
கொடுக்கறப்ப சாயங்காலமாயிடுச்சி. நெருப்புல வெந்த பொணத்த வீட்டுக்குத் தூக்கிட்டுப்
போவக் கூடாதின்னு நேரா சுடுகாட்டுக்குத் தூக்கிட்டுப் போயிட்டாங்க. என்னையும் என் தங்கச்சியயும்
பொணத்தப் பாக்க வுடல. வீட்டுக்குப் போங்கனு சொல்லிட்டு எங்கப்பா பொணத்துக்கூட போயிட்டாரு.
வா வீட்டுக்குப் போவலாம்னு என் தங்கச்சி கூப்புட்டா. மயானத்துக்குப் போவோம்னு சொன்னன்.
மயானம் எங்க இருக்குன்னு தெரியாது. விசாரிச்சிக்கிட்டே போனம். அன்னிக்கித்தான் தெரிஞ்சிது
இந்த ஊருல ஏழெட்டு மயானம் இருக்கிறது. ஒவ்வொரு மயானமாப் போயி ‘எங்கம்மா பொணம் இங்க
வந்துச்சா’ன்னு கேட்டம். எல்லா எடத்திலயும், ‘இன்னிக்கி பொம்பள பொணம்னு ஒண்ணும் வல்ல’ன்னு
சொன்னாங்க. கடசியா இந்த மயானத்துக்கு வந்தம். நாங்க மயானத்துக்கு வந்தப்ப ராத்திரி
ஏழெட்டு மணி இருக்கும். யாருமே இல்லெ. திரும்பி வீட்டுக்குப் போயிட்டம்.”
நாகமணிக்கு
கண்கள் கலங்கிவிட்டது. பழனிசாமி வந்துவிட்டானா என்று பார்ப்பதற்குக்கூட அவளுக்கு மறந்துபோயிருந்தது. வேப்பமர
நிழலில் உட்கார்ந்திருக்கிறோம் என்பதும் அவளுக்கு மறந்துபோய்விட்டிருந்தது. “அப்புறம்
என்னாச்சு?” என்று கேட்பதற்குக்கூட தெம்பற்ற மாதிரி உட்கார்ந்திருந்தாள். அவளுடைய கவனமும்
பார்வையும் சீதாவின் முகத்தைப் பார்ப்பதில் மட்டும்தான் இருந்தது.
“மறுநாளு
விடிஞ்சதும் இதே இடத்துக்கு வந்தம். மயானத்தில குழிவெட்டிக்கிட்டு இருந்தவர்கிட்ட,
‘நேத்து எங்கம்மா பொணம் இங்க வந்துச்சான்னு கேட்டம். “நெருப்புல வெந்த பொணமா?”ன்னு
கேட்டுட்டு பொணம் பொதச்ச எடத்தக் காட்டுனாரு. எங்கம்மாவ பொதச்ச எடத்தப் பாத்திட்டு
வீட்டுக்கு வந்தம். ‘மயானத்துக்கா போனிங்கனு’ கேட்டாரு எங்கப்பா. ஆமாம்னு சொன்னம்.
என்னாலதான் எம் பொண்டாட்டி செத்திட்டா. என் தங்கம் ரெண்டும் அநாதியாயிடிச்சின்னு” சொல்லி
எங்களக் கட்டிப்புடிச்சிக்கிட்டு அழுதாரு. அப்புறம் வீட்டுக்குள்ளார போயி தூக்கில தொங்கி
செத்திட்டாரு.” பேச்சை நிறுத்திவிட்டு வேப்பமரத்தைப் பார்த்தாள். சூரியன் எந்த இடத்தில்
இருக்கிறது என்று பார்த்தாள். ஒருமுறை செருமினாள். பிறகு இதுதான் கடைசி வார்த்தை என்பதுபோல
கட்டைக் குரலில் சொன்னாள். “அன்னிக்கி எங்கப்பா பொணத்தத் தூக்கிக்கிட்டு இந்த
எடத்துக்கு வந்தவதான், பொறந்து வளந்த எடம் மாதிரி ஆயிடிச்சி.”
சீதா
எந்த நேரத்திலும் அழலாம் என்று நாகமணி நினைத்தாள். ஆனால், அவள் அழவில்லை. தூசுபட்ட
அளவுக்குக்கூட அவளுடைய கண்கள் கலங்கவில்லை. முகத்திலும் எவ்விதமான மாற்றமுமில்லை. அவள்
தன்னுடைய அப்பா, அம்மாவைப் பற்றி சொன்னதுகூட புத்தகத்தில் படித்த உணர்ச்சிகரமான கதையைச்
சொன்னதுபோலத்தான் இருந்தது. ஒரு பெண்ணால் இவ்வளவு நிதானமாகப் பேச முடியும் என்பதை இன்றுதான்
பார்த்திருக்கிறாள். சீதாவின் அப்பா, அம்மா இறந்த கதையைக் கேட்டதும் நாகமணிக்குத் தன்னுடைய
அப்பா, அம்மாவே இறந்துவிட்டதுபோல் மனதில் வருத்தம் உண்டாகிவிட்டது.
“எங்கப்பா
செத்த மறுநாளு, எங்கம்மாவ பொதச்ச எடத்தில, எங்கப்பாவ பொதச்ச எடத்தில நானும் என் தங்கச்சியும்
சூடம் ஏத்திக் கும்பிட்டதப் பாத்திட்டு வந்து பிணக்குழி வெட்டுறவரு எங்ககிட்ட பேசுனாரு.
எங்க கதெய கேட்டதும், அவரோட வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாரு.”
“போனில
பேசுனியே அவரா?”
“ம்.”
“அவங்க
வீட்டுல எதுவும் சொல்லலியா?”
“இல்லெ.”
“வேத்துமயா
நெனைக்கலியா?”
“அவங்களுக்குப்
புள்ளெ இல்லெ. இன்னியவர என்னதான் புள்ளயா நெனைக்கிறாங்க. காசு பணம் இருந்தாத்தான வேத்தும
வரதுக்கு?”
‘அதிசயம்தான்’ என்று தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்ட
நாகமணிக்கு என்ன தோன்றியதோ, “இப்படி இருக்கயில நீ கல்யாணம் கட்டிக்கிறதுதான் நல்லது”
என்று சொன்னாள்.
“நான்
ஒருத்தன்கூட போயிட்டா அவங்கள யாரு பாத்துக்குவாங்க? அவங்க உசுரோட இருக்கிறவர நான்தான்
பொணக்குழி வெட்டி சோறு போடணும். அவங்க செத்தா நான்தான் பொணக்குழி வெட்டணும், அவங்க
பொணத்த நான்தான் பொதைக்கணும், அவங்க பொணக்குழி மேட்டுல நான்தான் சூடம் ஏத்திவச்சி கும்புடணும்.
அதுவர இந்த எடத்த வுட்டு போவ மாட்டன். மீறிப் போனா என்னெ பாவம் தொரத்தாதா? செத்தாலும்
என் பொணம் வேவுமா? எங்கம்மாவ பொதச்ச எடத்த பாக்க வந்தன். அதுவே எனக்கு வாழற எடமாயிடிச்சி.
பொணக்குழி வெட்டி பொணத்தப் பொதச்சிதான் சோறு திங்கறன். உசுரோட இருக்கன். இந்த எடத்துக்கு
வந்த பின்னால ஒரு வேளகூட நான் பட்டினியா கெடக்கல” என்று சொல்லும்போது சீதாவின் கண்கள்
கலங்கின மாதிரி தோன்றியது. லேசாக நகர்ந்து உட்கார்ந்து சீதாவின் இடது கையை, ‘ஒண்ணுமில்லெ
பேசாம இரு’ என்பதுபோல் பிடித்தாள். நாகமணி கையைப் பிடித்த பிறகுதான் சீதாவின் கண்கள்
கலங்கின. கண்கள் கலங்கியது தெரிந்ததும், அவளுடைய கையை நாகமணி மேலும் இறுக்கமாகப் பிடித்தாள்.
இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. ஒரு வார்த்தை பேசிக்கொள்ளவில்லை.
சீதாவின்
செல்போன் மணி அடித்தது. செல்போனை எடுத்துப் பேசினாள். “குழி ரெடியாதான் இருக்கு. எப்ப
வேணும்னாலும் வாங்க” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள். வியர்வையைத் துடைப்பதுபோல கண்ணீரை
முந்தானையால் துடைத்தாள்.
“சொந்த
ஊருக்குப் போயிருக்கலாமில்லெ?”
“அங்க
சோத்துக்கு இல்லன்னுதான் எங்கப்பா இந்த ஊருக்கு வந்தாரு.”
“சொந்தக்காரங்க
இருப்பாங்கில்ல?”
“போவ
ரெண்டு நாளு. திரும்பி வர ரெண்டு நாளு ஆவும். அதுக்கும் மேல போறதுக்கும் வரதுக்கும்
பணம் வேணுமில்ல? இப்ப மாதிரி அப்ப செல்போன் இருந்துச்சா சேதிய சொல்றதுக்கு? நாங்களும்
போவல. அவங்களும் வரல. வருசமும் ஓடிப்போச்சி. வயித்தில சொமந்த சொந்தமே எங்கள வேணாமின்னு
வுட்டுட்டுப் போயிடிச்சி. அதவிட பெரிய சொந்தம் ஒலகத்தில இருக்கா?” என்று கேட்கும்போதே
சீதாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. கண்ணீரைத் தடுப்பதற்குச் சிறந்த வழி கைகளைப்
பிடித்துக்கொள்வதுதான் என்பதுபோல நாகமணி சீதாவினுடைய இரண்டு கைகளையும் அழுத்தமாகப்
பிடித்துக்கொண்டாள். கேட்க வேண்டாம் என்றுதான் நினைத்தாள், ஆனாலும், நாகமணி கேட்டாள்,
“ஒங்கம்மா பொணத்த, ஒங்கப்பா பொணத்த எப்பிடி பொதச்சிங்க?”
“எங்கப்பா
ஓட்டிக்கிட்டிருந்த லாரி ஓனர்தான் செலவு செஞ்சாரு.”
“ஒன்
தங்கச்சி ஒங்கூடதான் இருக்கா?”
“எங்க
தாத்தா ரேணுகா
தேவி ஆனந்தன்ங்கிற ஒரு வக்கீல் வூட்டுல வேலக்கி சேத்துவுட்டாரு. வக்கீல் வீட்டுல டிரைவரா
இருந்த பையனையே கல்யாணம் கட்டிக்கிட்டா.”
“எங்க
இருக்காங்க?”
“இந்த
ஊர்லதான்.”
“நீயும்
அந்த மாதிரி போயிருக்கக் கூடாதா?”
“எங்க
தாத்தாவும், பாட்டியும் வீட்டு வேலக்கிப் போ. மயானத்துக்கெல்லாம் பொட்டபுள்ள வரக் கூடாதின்னுதான்
சொன்னாங்க. நான்தான் கேக்கல. எங்கம்மா, எங்கப்பாவ பொதச்ச எடம் இங்கதான இருக்கு? எங்க
தாத்தாவுக்கு, பாட்டிக்கு, எனக்குச் சோறுபோடுற எடம் இதுதான? இத வுட்டுட்டு எப்பிடி
போறது?” என்று கேட்கும்போதே அவளுக்கு அழுகை வந்துவிட்டது. அக்கம்பக்கம் பார்க்க பிடிக்காத
மாதிரி நாகமணியைப் பார்ப்பதற்குக்கூட பிடிக்காத மாதிரி தரையைப் பார்த்தாள். தரையைப்
பார்த்த மாதிரியே, “எங்கம்மாவுக்கு எங்களவிட அதோட கோவம்தான் அதுக்குப் பெருசா இருந்திருக்கு”
என்று களைப்படைந்த குரலில் சொன்னாள். அப்போது அவளுடைய கண்களில் திரண்டிருந்த கண்ணீர்
துளிகள் தரையில் விழுந்தது. அதைப் பார்த்த நாகமணி சீதாவினுடைய கைகளை மேலும் அழுத்தமாகப்
பிடித்துக்கொண்டாள். கைகளை வசதியாகப் பிடித்துக்கொள்ள ஏதுவாகக் கொஞ்சம் முன்னால் நகர்ந்து
உட்கார்ந்தாள்.
“மனசு
கஷ்டமா இருந்தா ஒன் தங்கச்சி வீட்டுக்குப் போயி ரெண்டு நாள் இருந்திட்டு வாயன்.”
“நான்
போற நேரமாப் பாத்து பொணம் வந்திட்டா? பொணத்த நாளைக்கிப் பொதச்சிக்கலாமின்னு வச்சிருக்க
முடியுமா? முன்ன மாதிரி இல்லெ. பாதி பொணத்த கரண்ட்டுல வச்சி எரிச்சிடுறாங்க. கரண்டுல
எரிக்கிறதுபோக மத்த பொணம்தான் எங்களுக்கு வரும். எப்ப குழிவெட்ட சொல்லுவாங்கன்னு ஒக்காந்திருக்கயில
எங்க போறது? அவ ‘வா வா’ன்னுதான் கூப்புடுறா. நான்தான் போறதில்ல. அவ எனக்குத் தங்கச்சிதான?
அம்மா இல்லியே” என்று சொல்லும்போது சீதாவின் உடல் லேசாக அதிர்ந்தது. கண்ணீரை மறைப்பதற்கான
வழி அக்கம்பக்கம் பார்ப்பதுதான் என்பதுபோல் தலையை நிமிர்த்தி தன்னைச் சுற்றிலுமுள்ள
இடத்தைப் பார்த்தாள். அவளுடைய பார்வையில் பட்டதெல்லாம் பிணக்குழி மேடுகளும், சமாதிகளும்,
வெயிலும்தான்.
“ஒன்
தங்கச்சி வீட்டுக்காரரு எப்பிடி?”
“ஆம்பள
புள்ள வேணுமின்னு வருசத்துக்கு ஒண்ணுன்னு நாலு பொட்ட புள்ளைங்களப் பெத்துவச்சியிருக்கான்.
நல்லத்தனமா இருக்கிறப்ப எல்லாரும் நல்லவங்கதான். கோவம் வந்திட்டா எல்லாரும் கெட்டவங்கதான்.”
அவள் சொன்ன விதம் மற்றவர்களுக்குக் கேட்டுவிடக் கூடாது என்று சொன்னதுபோல் இருந்தது.
மயானத்தின் நுழைவுவாயில் பக்கம் பார்த்தாள். வேட்டு சத்தம் கேட்கிறதா, வெடி விடுகிற,
சேகண்டி அடிக்கிற சத்தம் கேட்கிறதா என்று பார்த்தாள். பிணமும் வரவில்லை. வேறு எந்தச்
சத்தமும் கேட்கவில்லை என்பது தெரிந்ததும் நாகமணியின் பக்கம் பார்த்தாள். சீதா மயானத்தின்
நுழைவுவாயில் பக்கம் பார்த்தது தெரிந்ததும் நாகமணியும் பழனிசாமி வருகிறானா என்று பார்த்தாள்.
ஆளை காணவில்லை என்பதால் அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
“இருக்கிறது
சொந்த வீடா?”
“ரோட்டோரம்.
கவர்மண்ட் எடம்.”
“கஷ்டமா
இருக்கா?”
“என்னா
கஷ்டம்? வேல செய்யுறம். சோறு சாப்புடுறம்.”
சீதாவுக்கு
நன்மை செய்வதுபோல், “எங்ககூட சித்தாள் வேலக்கி வந்திடன்” என்று சொன்னாள்.
“இந்த வேலயும்,
இந்த எடத்தில இருக்கிறதும்தான் புடிச்சிருக்கு.”
“அடிப்பாவி ஊருலகமே
இந்த எடத்துக்கு வரத்தான பயப்படுது.”
“பயந்தாலும்
வந்துதான ஆவணும்?” என்று சொன்ன சீதா லேசாக சிரித்தாள். பிறகு “எங் கதெயவே பேசிக்கிட்டிருந்திட்டன்.
நீங்க யாருன்னுகூட நான் கேக்கல” என்று சங்கடமான குரலில் சொன்னாள்.
‘எப்படியாப்பட்ட
கதய சொல்லிட்டு என்னெப் பத்தி கேக்குறாளே’ என்று ஆச்சரியப்பட்டாள். தூங்கிக்கொண்டிருக்கிற
கைக்குழந்தையினுடைய முகத்தை ஆசையாகப் பார்ப்பதுபோல் சீதாவின் முகத்தைப் பார்த்த நாகமணி,
“பத்தொம்பது வயசில கல்யாணம். தாலியக் கட்டுன வேகத்தில ரெண்டு புள்ளயக் கொடுத்தான்.
வந்த சோலி முடிஞ்சிப்போச்சின்னு மண்ணுக்குள்ளார போயிட்டான் எம் புருசன்காரன். பொறந்தது
ரெண்டும் பொட்ட. பாக்குமட்ட உரிக்க, களவெட்டன்னு போய்க்கிட்டிருந்த என்னெ சித்தாள்
வேலயில இழுத்துவுட்டது சாப்புட போயிருக்கானே அந்தக் கொத்தனாருதான். எங்க ஊரு ஆளு. குடிகாரன்.
மத்த கொத்தனாருவுளுக்கு இவன் மோசமில்லெ. பொறந்த வீட்டிலயும் சரி, புருசன் வீட்டிலயும்
சரி சொல்லிக்கிற மாதிரி ஒண்ணுமில்லெ. ஒனக்குப் பொணக்குழி வெட்டுனாத்தான் சோறு. எனக்கு
சாந்து சட்டி தூக்குனாத்தான் சோறு. ஒவ்வொரு நாளும் அடுப்புல வச்ச வெறகு மாதிரிதான்”
என்று நாகமணி சொல்லிக்கொண்டிருக்கும்போது சாப்பிடுவதற்காகப் போயிருந்த பழனிசாமி மயானத்துக்குள்
வந்துகொண்டிருப்பது தெரிந்தது. ‘அதுக்குள்ளார வந்திட்டானா’ என்று நினைத்தாள்.
“மணியாயிடிச்சே.
கலவய கலந்து வைக்காம என்னா மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்க?” என்று தூரமாக வந்துகொண்டிருக்கும்போதே
பழனிசாமி கோபமாகக் கேட்டான்.
“போன
ஆளு வரட்டுமின்னுதான் இருந்தன். மயானத்தில ஒரு பொம்பளயத் தனியா வுட்டுட்டு உச்சிபொழுதுக்கு
நீ போவலாமா? பயமா இருக்காதா?” என்று பழனிசாமியை மடக்குவதுபோல் நாகமணி கேட்டாள், “அதெல்லாம்
அப்பறம் பேசிக்கலாம். சட்டுன்னு வந்து வேலயப்பாரு” என்று சொல்லிக்கொண்டே சமாதி கட்டுகிற
இடத்துக்குப் போனான் பழனிசாமி.
நாகமணிக்கு
உடனே எழுந்து போக வேண்டும்போலவும் இருந்தது. இன்னும் சிறிது நேரம் சீதாவிடம் பேசிக்கொண்டிருக்க
வேண்டும் போலவும் இருந்தது. “நாளக்கி இங்க இருப்பியா?” என்று கேட்டாள்.
“நான்
வேற எங்க போவ முடியும்?” என்று சொன்ன சீதா, பெரிய நகைச்சுவைக்கான விஷயத்தைச் சொல்லிவிட்டதுபோல
சிரித்தாள்.
“காலையில
வேலக்கி வந்ததிலிருந்து மத்தியானம் வர, நாளயிலிருந்து சமாதி கட்டுற வேலைக்கி வரக் கூடாதின்னு
இருந்தன். இப்ப இந்த வேல முடியுறவர வரலாமின்னு இருக்கன்.”
“கொத்தனாரு
திட்டப்போறாரு போங்க” என்று சொல்லிக்கொண்டே எழுந்து நின்றாள். சீதா எழுந்துவிட்டதால்
நாகமணியும் எழுந்துகொண்டாள்.
“நாளக்கி
நான் சோறாக்கி எடுத்தாரன் நீ திம்பியா?” என்று நாகமணி கேட்டாள். அவள் கேட்ட விதம் நாளைக்கு
எனக்கு நீ பிச்சை போடுவாயா என்று கேட்பதுபோல் இருந்தது. நாகமணியை உச்சிமுதல் உள்ளங்கால்வரை
கவனமாகப் பார்த்த சீதா, “இந்த எடத்துக்கு நான் வந்து எத்தினியோ வருசமாயிடிச்சி. யாரும்
எங்கிட்ட வந்து ஒக்காந்து இம்மாம் நேரம் பேசிக்கிட்டிருந்ததில்ல. நானும் வாயத் தொறந்து
பேசுனது இல்லெ. ஒங்ககிட்ட பேசபேசத்தான் மறந்துபோனதெல்லாம் எனக்கே ஞாபகத்துக்கு வந்துச்சி”
என்று சொல்லும்போது அவளுடைய கண்கள் கலங்கின. கண்களுக்குள்ளேயே கண்ணீரை அடக்கிவைப்பதற்கு
முயன்றாள். முடியவில்லை. கண்களைத் துடைத்துக்கொண்டு “நீங்க எதுக்கு அம்மாம் தூரத்திலிருந்து
எடுத்தாரணும்? சோறுதான? நீங்க இங்க வேலக்கி வரமுட்டும் எடுத்தார வேணாம். நான் ஆக்கி
எடுத்தாரன்” என்று சீதா சொன்னதைக் கேட்ட நாகமணி, “நீ பெரிய மனுஷிதான்” என்று சொன்னாள்.
“மீட்டிங் போட்டது போதும் வா. வேல நடக்கலன்னா சம்பளம்
தர மாட்டாங்க, ஞாபகத்தில வச்சிக்க” என்று சொல்லி பழனிசாமி கத்திய பிறகுதான் நாகமணி
“வரன்” என்று சொல்லிவிட்டு சமாதி கட்டுகிற இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். சீதா
மயானத்தைப் பார்த்தாள். மயானம் முழுவதும் வெயில் நிறைந்திருப்பது தெரிந்தது.
சாப்பிடலாம்
என்று சோற்று டப்பாவை திறந்தபோது செல்போன் மணி அடித்தது. செல்போனை எடுத்துப் பேசினாள்.
“இன்னொரு பொணம் வருதா? இன்னொரு குழிய வெட்டி வைக்கணுமா? வெட்டுறன் தாத்தா. போன வச்சிடு”
என்று சொன்ன சீதா, செல்போனை நிறுத்திவைத்தாள். சாப்பிடாமலேயே சோற்று டப்பாவையை
மூடி வைத்தாள். புதிதாக வர இருக்கும் பிணத்துக்கு எந்த இடத்தில் குழி வெட்டலாம் என்று
பார்ப்பதற்காக போனாள்.
உயிர்மை மாத இதழ் அக்டோபர் 2021