செவ்வாய், 6 நவம்பர், 2018

பாராட்டு பத்திரம் வாசிப்பதல்ல விமர்சனம்


இமையம்
அக்டோபர் 21,2018 – வல்லினம் யாவரும் கூட்டுப் பதிப்பகத்தின் சார்பில் மலேசிய எழுத்தாளர்களின் மூன்று நூல்கள் வெளியிட்டு நிகழ்ச்சி நடைப்பெற்றது. மா.சண்முகசிவா எழுதிய சிறுகதை நூலினை வெளியிட்டு எழுத்தாளர் இமையம் பேசியது:
தமிழ்நாட்டில் தற்போது எழுதப்படுகின்ற விமர்சனங்கள் என்பது அரசாங்க ஊழியர் ஒருவர் ஓய்வுப்பெறும்போது ‘பணிநிறைவு பாராட்டு விழா’ பத்திரம் வாசித்து அளிப்பது போல்தான் இருக்கிறது. நூல் வெளியிட்டு விழாவில் பேசப்படும் உரைகள், உரை வீச்சுகள் எல்லாம் புகழ் உரைகளே.
பாராட்டு பத்திரம் வாசிப்பவர் விமர்சகன் அல்ல. பாராட்டுப் பத்திரம் வாசிப்பதை ரசிப்பவன் எழுத்தாளன் அல்ல. படைப்பு குறித்து பேசாமல், படைப்பை எழுதிய எழுத்தாளன் குறித்து பேசுவதை புகழ்வதைதான் விமர்சனம் என்று கூறுகிறார்கள். நவீன நாவல், சிறுகதை, கவிதை என்று பேசுகிறார்கள். ஆனால் நவீன விமர்சனம் குறித்துப் பேசுவதில்லை. நான் தொகுப்பில் இருக்கும் சிறுகதைகளைப்பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். கதைகளை எழுதிய மா.சுண்முகசிவாவைபற்றி அல்ல. சிறு பத்திரிக்கை எழுத்தாளர்கள், நவீன எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகள் எல்லாம் அரசியல் நீக்கம் செய்யப்பட்டவையே.
மா.சண்முகசிவா ‘சாமி குத்தம்’ என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அரசியல் கதை. சாமிகுத்தம் கதையில் நடக்கும் அரசியல் குறித்துத்தான் தமிழ்நாட்டில் நூற்றாண்டுகளுக்கு மேல் பேசப்பட்டிருக்கிறது. அந்த ஒற்றைப் புள்ளியை வைத்துத்தான் தமிழ்நாட்டு அரசியலே நடந்துக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசியல் விஷயங்கள் கதையாகியிருக்கிறது. ஆனால் இலக்கியமாகவில்லை. மா.சண்முகசிவாவின் சாமிக்குத்தம் கதை இலக்கியமாகியிருக்கிறது.
‘மலேசியா குறித்தும், மலேசிய இலக்கியம் குறித்தும் தமிழக மக்களும், தமிழக வாசகர்களும் வைத்திருக்கும் மனக்கற்பனைக்கு எதிரானதாகவே மா.சண்முகசிவாவின் சிறுகதைகள் இருக்கின்றன. மலேசியா என்றாலே இரட்டை கோபுரத்தின் பிரமாண்டம்தான் நினைவுக்கு வரும். ஆனால் மா.சண்முகசிவாவின் சிறுகதைகள் அந்த இரட்டை கோபுரத்தின் பின்னால் இருக்கும் இருளைக் காட்டுவதாக இருக்கிறது. தொகுப்பில் உள்ள எட்டு கதைகளில் 5 கதைகள் குழந்தைகளைப் பற்றியது.. எல்லாம் சரி தான் என்ற கதை மனிதர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய அன்பைப் பற்றி சொல்கிறது.
மா.சண்முகசிவாவிற்கு குழந்தைகள் மன உலகமும், சமூக அரசியல், உளவியல் உலகமும் தெளிவாக தெரிந்திருக்கிறது. செய்திகளை, தகவல்களை எப்படி ஒரு கதையாக மாற்றுவது என்ற நுட்பம் தெரிந்திருக்கிறது’
1998ல் வீடும் விழுதுகளும் என்ற சிறுகதைத்தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு தொகுப்பு வெளியிடுகிறார். இது ஆச்சரியமாக இருக்கிறது. ஆண்டுக்கு பத்து புத்தகங்கள் என்று கொத்தாக வெளியிடுகிற தமிழ்ச்சூழலில் 20ஆண்டுகள் கழித்து தனது இரண்டாவது சிறுகதைத்தொகுப்பை வெளியிடுகிறார் என்பதிலிருந்தே அவர் தனித்துவம் மிக்கவர் என்று தெரியவருகிறது.

சண்முகசிவாவின் சிறுகதைகளில் ஆர்ப்பாட்டம் இல்லை. கூச்சல் இல்லை. தன்முனைப்பு இல்லை. எதை சொல்லவேண்டும் என்று விரும்புகிறாரோ அதை நல்ல தமிழில் தெளிவாக எழுதிருக்கிறார்.
கதாசிரியர் நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்பது கதைகளை படிக்கும்போது தெரியும். சமயம் சார்ந்த சடங்குகள் மீது ஓயாமல் கேள்விகளையும், கிண்டல்களையும் வைத்தபடியே இருக்கிறார். தமிழ் மொழியை புதுப்பிக்க வந்தேன். மீட்டெடுக்க வந்தேன். என்னால்தான் நவீன தமிழ் இலக்கியம் செழித்திருக்கிறது என்ற ஆணவப்பேச்செல்லாம் கதையாசிரியரிடம் இல்லை.
’மலேசியாவில் வாழக்கூடிய தமிழர்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை முழுமையாக புரிந்து கொள்வதற்கு இந்த சிறுகதைகள் நிச்சயமாக உதவும். அதோடு இந்த தொகுப்பை படிக்கும்போது நல்ல சிறுகதைகளைப் படித்த உணர்வு ஏற்படும்.’ என்று தொகுப்பில் உள்ள எட்டு சிறுகதைகள் குறித்தும். விரிவாகப் பேசினார்

1 கருத்து:

  1. எழுத்தாளர் இமையம் அவர்களின் உரை அவர் தொடக்கத்தில் கூறியதற்கு நேர் எதிர் மாறாக உள்ளதாக படுகிறது. பாராட்டு பத்திரமாகவே இருக்கிறது. இந்த நூல் வெளியீட்டுரையை விமர்சனமாக இருக்கும் என்று நான் எதிர்பார்த்ததுவிட்டேனோ ? இல்லை நான் புரிந்துகொள்ளாமல் எதையாவது தவற விடுகிறேனா ?

    பதிலளிநீக்கு