பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் (சிறுகதை
தொகுப்பு) – அ.வெண்ணிலா
விமர்சனம் – எழுத்தாளர் இமையம்.
பிருந்தாவும்
இளம் பருவத்து ஆண்களும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள பதினேழு கதைகளும் ஆண்களைப்பற்றி பெண்கள்
சொன்னவை. குறிப்பாக சிறுமிகள் சொன்ன கதைகள். கோபம் இல்லாமல், வன்மம் இல்லாமல், பகை,
விரோதம், கூப்பாடு இல்லாமல் சொல்லப்பட்டவை. பதினேழு கதைகளிலும் ஏதோ ஒரு விதத்தில் சிறுமிகளும்,
பெண்களும், கிழவிகளும் ஆண்களாலும், நமது சமூகத்தாலும், சமூகக், கலாச்சாரப், பண்பாட்டாலும்
பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் ஆண்கள்
மீது பெண்களுக்கு வஞ்சம், பழிதீர்த்தல் இல்லை. ஆண்களைப்பற்றி பெண்கள் சொன்ன காரணத்தினால்
இவை ‘பெண்ணியச் சிறுகதைகள்’ என்று முத்திரை குத்த முடியாது. பெண்களை உயர்த்தியும் ஆண்களை
மட்டப்படுத்தியும் எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட கதைகள் அல்ல இவை. நிஜ
வாழ்வில் என்ன நிகழ்கின்றனவோ அவை கதைகளாகி இருக்கின்றன. உண்மைக்கு அருகில் இருக்கின்றது
என்பதைவிட நிஜமாக இருக்கிறது என்பதுதான் இக்கதைகளின் பலம்.
வயதான
பெண்களைப்பற்றி எழுதுவது சுலபம். காரணம் அவர்கள் பேசுவார்கள், அழுவார்கள். அவர்களுடைய
பேச்சையும், கண்ணீரையும் எழுதுவது சுலபம். சிறுவர்களைப்பற்றி எழுதுவதுகூட சுலபம்தான்.
ஆனால் சிறுமிகளைப்பற்றி எழுதுவது கடினம். அதுவும் வயதுக்கு வருகிற பக்குவத்தில் இருக்கிற
பெண் குழந்தைகளைப்பற்றி எழுதுவது மிகவும் சிரமம். அந்த பருவத்தில் இருப்பவர்களுடைய
மன இயல்பு விசித்திரமானது. அந்த விசித்திரத்தை எழுத்தாக்குவது, கதையாக்குவது எளிதல்ல.
அது அ.வெண்ணிலாவுக்கு சாத்தியமாகி இருக்கிறது. தொகுப்பிலுள்ள பதினேழு கதைகளில் பதினைந்து
கதைகள் பெண் குழந்தைகளின் வழியே சொல்லப்பட்டது என்பதைவிடவும், அவர்களுடைய வாழ்விலிருந்து,
வலியிலிருந்து, சிரிப்பிலிருந்து, காயத்திலிருந்து, கண்ணீரிலிருந்து, ரகசியத்திலிருந்து
எழுதப்பட்டவை. எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுடைய மனதின் மொழியிலிருந்து எழுதப்பட்ட
கதைகள்.
பெற்ற
மகளை ‘அம்மா’ என்று அழைக்கிற பழக்கமும், தங்கையை ‘அம்மா’ என்று அழைக்கிற பண்பும் தமிழ்நாட்டில்
மட்டும்தான் இருக்கிறது. பொதுவாக பெண் பிள்ளைகளை ‘அம்மா’ என்று அழைக்கிற பண்பும் இருக்கிறது.
இதற்காக நாம் பெருமை கொள்ள முடியுமா? ‘அம்மா-அம்மா’ என்று அழைத்த, வளர்த்த அப்பாதான்
சொந்த மகளிடமே உறவு கொள்ள முனைகிறார். டியூஷனுக்கு வருகிற பிள்ளையிடம் உறவுகொள்ள முனைகிறார்
ஆசிரியர். ‘அண்ணா-அண்ணா’ என்று அழைக்கிற தங்கையிடம் செய்யக்கூடாததை எல்லாம் செய்கிறார்
அண்ணன். பேரப் பிள்ளையிடம் தாத்தா எப்படி நடந்துகொள்கிறார்? ‘வயதுக்கு வரும்போது உனக்கு
நான்தான் சீர் கொண்டுவருவேன்’ என்று சொல்கிற மாமா என்ன செய்கிறார்? எல்லாம் கதையாகியிருக்கிறது.
பொய் கலப்பில்லாமல், தாத்தாவிடம், மாமாவிடம், அப்பாவிடம், அண்ணனிடம், ஆசிரியரிடம்
– வயதுக்கு வருகிற பக்குவத்தில் இருக்கிற பெண் பிள்ளைகள் படுகிற அவஸ்தைகள் சாகிறவரைக்கும்
சொல்ல முடியாத ரகசியம். பிறரிடம் காட்ட முடியாத காயம். துயரம். வெளியில் சொல்லமுடியாத
எரிக்கும் ரகசியங்கள். இந்த கதைகள், பெண் பிள்ளைகளை ‘அம்மா-அம்மா’ என்றழைக்கிறீர்களே
– அது உண்மைதானா என்ற கேள்வியை கேட்கிறது. கேள்வி முழக்கமாக இல்லை. கோஷமாக இல்லை. வாழ்க்கை
அனுபவமாக இருக்கிறது. நம்முடைய சமூகம் பெண்களை எப்படி பார்க்கிறது, எப்படி நடத்துகிறது
என்பதற்கு அ.வெண்ணிலாவின் கதைகள் நேரடி சமூக சாட்சிகளாக இருக்கின்றன. நிஜமான இலக்கியப்படைப்பு
என்பது சமூக வாழ்விலிருந்தும், அதனுடைய அவலத்திலிருந்தும் எழுதப்படுவதுதானே?
பிருந்தாவும்
இளம்பருவத்து ஆண்களும் கதைத் தொகுப்பில் முதல் ஐந்து கதைகள் பிருந்தாவைப்பற்றியது மட்டுமே
என்று சொல்ல முடியாது. இப்படியான பிருந்தாக்கள் நம்முடைய வீட்டிலும் இருக்கலாம். பக்கத்து
வீட்டில், தெருவில், ஊரில் என்று பல பிருந்தாக்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய துயரம்
வெளியே தெரியாது. அவர்களால் வாய்விட்டுக்கூட அழமுடியாது. காரணம் பழி அவர்கள் மீது விழுந்துவிடும்.
நம்முடைய சமூகம் ஆண்களால் கட்டமைக்கப்பட்ட, ஆண்களுக்கான சமூகம் என்பதைத்தான் பிருந்தாக்களின்
கதைகள் சொல்கின்றன. நாம் அன்றாடம் பல பிருந்தாக்களை சந்திக்கிறோம். உருவாக்குகிறோம்.
எதிலும் நமக்கு வெட்கமில்லை.
சிறுமிகள்
மட்டும்தான் தவறாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று சொல்லமுடியாது. படித்த, நாகரீகமிக்க,
உயர்பதவியில் இருக்கிற பெண்களிடம் ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதையும் ஒரு
கதை சொல்கிறது. கதையில் நிகழும் சம்பவங்களைப் பார்க்கும்போது நாம் படித்தவர்கள்தானா?
உயர்ந்த பதவியில் இருப்பவர்கள்தானா? என்ற கேள்வி எழுகிறது. படித்தவர்கள் நாகரீகமிக்கவர்கள்
முகநூல் பக்கத்தில் எப்படி, எவ்விதமாக நடந்துகொள்கிறார்கள்? மூன்று வேளை உணவைவிட, குடிக்கிற
தண்ணீரைவிட முகநூல் பக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றைய வாழ்க்கையில் எவ்வளவு அத்தியாவசியமாகிவிட்டது
என்பதை ஒரு கதை சொல்கிறது. பிள்ளை கனியமுதே கதையிலும், பொன்னம்மா கதையில்
வரும் மனிதர்களும் மனிதர்கள்தானா? சோடாக்கடை பொன்னம்மா, ஏற்கெனவே கல்யாணமாகி, மனைவி,
குழந்தைகளுடன் இருக்கிற ராமய்யா தேவருடன் இணைந்து முருகன் என்ற குழந்தைக்கு தாயாகிறாள்.
முதல் தாரத்து குழந்தைகளிடமும், குடும்பத்தாரிடமும் தெருவில் உள்ளவர்களிடமும் முருகன்
படுகிற அவமானம் எவ்வளவு? அதே மாதிரி பிள்ளை கனியமுதே கதையில் வருகிற ஜெயாவின் அம்மா,
ஏற்கனவே கல்யாணமாகி, குழந்தைகளுடன் இருக்கிற ஆளுடன் இணைந்து வாழ்கிறாள். இரண்டு குழந்தைகளுக்கு
தாயாகிறாள். ஜெயாவும், அவளுடைய தம்பி குமாரும் முதல் தாரத்து மனைவியிடமும், குழந்தைகளிடமும்
படுகிற அவமானம் எவ்வளவு? முதல் தாரத்து மனைவிகள் கோபப்படுவதில்கூட நியாயம் உண்டு. இரண்டாவது
மனைவி வைத்துக்கொள்கிற மகன்களிடம் கோபப்படாத தாய்கள், மகனுடைய இரண்டாம் தாரத்துக் குழந்தைகளிடம்
ஏன் கோபப்படுகிறார்கள் என்பதுதான் முரண். தானே விரும்பி இரண்டாம் தாரமாக போகிற பெண்கள்
படுகிற துயரத்தைவிட அவர்களுடைய தாய்கள் படுகிற துயரம் இன்னும் கொடூரமானது. இந்த இரண்டு
கதையிலும் இரண்டாம் தாரத்துக் குழந்தைகள் படுகிற அவமானங்களை எளிதாக விவரிக்க முடியாது.
இந்த இரண்டு கதைகளில் பெண்களின், குழந்தைகளின் துயரினை மட்டும் சொல்லவில்லை. இரண்டாம்
தாரம் வைத்துகொண்ட ஆண்களின் இயலாமையையும், பரிதவிப்பையும், தத்தளிப்பையும் ஜோடனை இல்லாமல்
சொல்கிறார். அ.வெண்ணிலா துயரத்தையும், துயரமில்லாமல் சொல்கிறார். வாழ்க்கையின் நிஜம்
இப்படித்தான் இருக்கிறது என்ற அளவோடு நிறுத்திக்கொள்கிறார். கூடுதல் அழுத்தம் தரவில்லை.
கூடுதல் அழுத்தம் தரும்போது கதை செயற்கையாகிவிடும் என்பது கதாசிரியருக்கு தெரிந்திருக்கிறது.
இந்த அறிதல்தான் கதை சொல்லிக்கான திறன். தனக்கு தெரிந்ததையெல்லாம் கொட்டித்தீர்ப்பது
அல்ல இலக்கியப் படைப்பு. கண்ணீரின் வழியே கதைகளுக்கு வலு சேர்க்க விரும்பவில்லை அ.வெண்ணிலா.
இந்தியா
தொழில்நுட்பத்தில், பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்துவிட்டது. அணு ஆயுதத்தில் வல்லரசாகிவிட்டது
என்று பெருமை கொள்வதில் ஒரு துளிகூட நியாயமில்லை. இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய
பெண்கள் பொது இடங்களில்தான் இன்றுவரை சிறுநீரும், மலமும் கழிக்கிறார்கள். கிராமப்புறத்திலிருக்கிற
ஒரு பெண்ணினுடைய உச்சப்பட்ச ஆசையாக இருப்பது – தான் ஒரு மறைவான இடத்தில் சிறுநீரும்,
மலமும் கழிக்க வேண்டும் என்பது. அந்த எளிய ஆசையைக்கூட நிறைவேற்ற முடியாத நாடு அணு ஆயுதத்தில்
வல்லரசாகி என்ன செய்யப் போகிறது என்பதுதான் ‘வெளிய’ என்கிற கதை. சிறுமிகள் முதல் கிழவிவரை
ஒவ்வொரு நாளும் சிறுநீரும் மலமும் கழிப்பதற்காக படுகிற சித்திரவதை எளிதில் விவரிக்க
முடியாது. அதை மிக அழகான கதையாக அல்ல, காட்சியாக செய்திருக்கிறார் கதாசிரியர். ‘வெளிய’
கதையை படிக்கிற எல்லாருடைய மூக்கிலும் மலவாடையின் வீச்சம் நிறையும். அ.வெண்ணிலாவின்
கதைகள் எந்த அளவுக்கு சிரிக்க வைக்கிறதோ அதே அளவுக்கு அழவும் வைக்கிறது. தினம்தினம்
மலம் கழிப்பதற்காக கையில் குச்சியை வைத்துக்கொண்டு பன்றிகளுடன் போராடுகிற பெண்கள் வேறு
எந்த நாட்டில் இருக்கிறார்கள்? பெண்ணியப் பிரச்சனை என்பது இதுதான். பெண்ணியவாதிகள்
பேசவேண்டிய விசயம் இதுதான்.
‘திறப்பு’
கதை நகரத்துக் குழந்தைகள் அன்றாடம் சந்திக்கிற கொடூரத்தை விவரிக்கிறது. கணவனும், மனைவியும்
அலுவலகம் செல்லும்போது குழந்தைகளை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு போகிறார்கள். பூட்டப்பட்ட
வீட்டிற்குள் குழந்தைகளின் உலகம் என்னவாக இருக்கிறது என்பதுதான் கதை. ‘மூக்குச்சளி
மரமும் ஒரு விடுமுறை நாளும்’ என்ற சிறுகதை கிராமத்தில் இருக்கிற குழந்தைகளின் முழுமையான
உலகைக் காட்டுகிறது. இரண்டு முரண்பட்ட உலகம். வாழ்க்கை, கிராமப்புறங்களில் குழந்தைகள்.
குழந்தைகளாக இல்லாமல் பெரியவர்களாக வாழ்கிறார்கள். வளர்கிறார்கள். நகரத்தில் பூட்டப்பட்ட
வீட்டிற்குள் தொலைக்காட்சி, கணினி, வீடியோ கேம் என்று பொருள்களோடு பொருள்களாக வாழ்கிறார்கள்.
குழந்தைகளை குழந்தைகளாக வாழவும், வளரவும் விடாத சமூகம் நம்முடையது என்பதை நாசூக்காக
சொல்கிறது இந்த இரண்டு கதைகளும். அடையாளம் என்ற கதை மிகவும் சுவாரசியமாக சொல்லப்பட்ட
கதைகளில் ஒன்று. கதாசிரியர் நகைச்சுவையாகவும் எழுதுவார் என்பதற்கு ‘அடையாளம்’ கதை சாட்சி.
தமிழ்நாட்டில் இருக்கிற அரசுப்பள்ளிக்கூடங்கள், ஆசிரியர்கள், வகுப்பு லீடர்கள் எப்படி
இருக்கிறார்கள் என்பதை அறிய இக்கதையைப் படித்தால் போதும். முழு சித்திரமும் கிடைத்துவிடும்.
மனிதர்கள் ஏன் சின்னச்சின்ன விசயங்களுக்கெல்லாம் மிருகத்தனமாகிவிடுகிறார்கள்? கணவனை
இழந்த ஒரு பெண் தனி வாழ்வில், சமூக வாழ்வில் சந்திக்கும் நெருக்கடிகள் எவ்வளவு? சிறுமிகளாக
இருந்தாலும், நடுத்தரப் பெண்களாக இருந்தாலும் கிழவிகளாக இருந்தாலும் சாபம் மாதிரி ஏன்
அவர்களை மட்டும் துயரம் வாட்டிக்கொண்டே இருக்கிறது? தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் பெண்கள்படும் துயரினை
விவரிப்பதாக இருக்கிறது. இந்த துயர் இட்டுக்கட்டியதல்ல. நிஜம். பெண்களாக ஏற்படுத்திக்கொண்ட
துயரமல்ல இது. ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும்
கதை. மனித வாழ்வின் அவலம், கீழ்மை, பசி, அவமானம். கயமை, சிறுமைத்தனம் என்று எல்லா எதார்த்தங்களையும்
இயல்பான போக்கில் அ.வெண்ணிலா எழுதியிருக்கிறார். ‘பகிர்தல்’ புதுவிதமாக எழுதப்பட்ட
நல்ல கதை. சவாலான கதை. மொழியும் வலுவானது. எழுத்து வழக்கைவிடவும் கதாசிரியரிடம் பேச்சுவழக்கு
பூச்சில்லாமல் அசலாக வெளிப்படுகிறது. இது கதைகளுக்கு கூடுதல் ஈர்ப்பை தருகிறது.
பிருந்தாவும்
இளம் பருவத்து ஆண்களும் – கதைத் தொகுப்பில் மூன்று கதைகளைத்தவிர மற்ற எல்லாக் கதைகளுமே
குழந்தைகளை அதுவும் பெண் குழந்தைகளைப்பற்றிய கதைகள்தான். சிறு வயது பிள்ளை முதல் சாகப்போகிற
கிழவிவரை என்ற வரிசையில் – அடுக்கிப்பார்த்தால் ஒரு நாவலில் அடுத்தடுத்த அத்தியாயங்கள்போல
இந்த சிறுகதைகளுக்குள் ஒற்றுமையும் தொடர்ச்சியும், இணைப்பும் இருப்பது தெரியும். இத்தன்மை
இக்கதைகளுக்கு கூடுதலான கணத்தைக் கொடுக்கிறது. நாம் அன்றாட வாழ்வில் சாதாரணம் என்று
பார்த்துவிட்டு ஒதுங்கிப்போன பல விசயங்களை அ.வெண்ணிலா அசாதாரண கதைகளாக உயிர்ப்புள்ள
மொழியில் எழுதியிருக்கிறார். இக்கதைகளை படித்துவிட்டு ரசிக்க முடியாது. வருத்தப்படலாம்.
அழலாம். நம்முடைய சமூகத்தின் மற்றுமொரு முகத்தை இக்கதைகள் கண்ணாடி மாதிரி காட்டுகின்றன.
பிருந்தாவும் இளம்பருவத்து ஆண்களும்,
(சிறுகதை தொகுப்பு)
அ.வெண்ணிலா,
விகடன் பிரசுரம் – 2013,
757 – அண்ணா சாலை,
சென்னை.
விலை – ரூ.100
16.12.2016 – புதிய தலைமுறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக