ஞாயிறு, 1 மார்ச், 2015

உண்மைக் கதை

உண்மைக் கதை – இமையம்

“இங்க வள்ளலார் அனாத இல்லம் எங்க இருக்கு?” என்று செல்வம் ஆட்டோக்காரனிடம் கேட்டான்.
“கவர்மண்டு ஆஸ்பத்திரி தெரியுமா?” என்று ஆட்டோக்காரன் திரும்பி கேள்விக்கேட்டான்.
“தெரியும்.”
“கவர்மண்டு ஆஸ்பத்திரிய தாண்டி நேரா மேற்கப் போ. நீ சொல்ற எடம் வந்துடும்.”
“ஆட்டோ வருமா?”
“அறுபது ரூபா ஆவும். ஏறுங்க போவலாம்” என்று ஆட்டோக்காரன் சொன்னான்.
“பரவாயில்ல. மேல பத்து ரூபாக்கூட தரன்” என்று சொன்ன செல்வம் பஸ் ஸ்டாண்டு பக்கம் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்த லீலாவதியிடம் “வா. வந்து ஆட்டோவுல ஏறு. போவலாம்” என்று சொல்லிவிட்டு, லீலாவதி என்ன சொல்கிறாள் என்றுகூட கேட்காமல் ஆட்டோவிற்குள் ஏறப்போனான்.
“நடந்து போவலாம்.”
ஆட்டோவில் ஏறாமல் திரும்பிப்பார்த்து “என்னம்மா சொல்ற? பணம் போனா போவுது. வா. ஏறு. ஆட்டோவுல போனா சீக்கிரம் போயிடலாம்” என்று சொல்லிவிட்டு செல்வம் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தான்.
“கல்யாணத்துக்காப் போறம்? முகூர்த்த நேரம் முடியுறதுக்குள்ளார போவணுமின்னு வேகமா போறதுக்கு? நான் வன வாசம்தான பேறன்.”
செல்வத்தின் முகம் செத்துப்போயிற்று. உடனே ஆட்டோவைவிட்டு கீழே இறங்கி லீலாவதிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு “வெயிலா இருக்கும்மா.” என்று சொன்னான்.
“நான் அவ்வளவு வேகமாப் போயி என்னா செய்யப்போறன்?”
“விசாரிக்கத்தான போறம்? ஒடனே தங்கவாப் போற? வா. ஆட்டோவுல போயிடலாம்.” கெஞ்சுவது மாதிரி சொன்னான்.
“நான் சீக்கிரம் போவணுமா? நான் சுடுகாட்டுக்குப் போறதில ஒனக்கு அவவ்ளவு ஆசயா?”
       லீலாவதி சாதாரணமாகத்தான் கேட்டாள். ஆனால் அவள் கேட்டவிதம் செல்வத்தை கோபம் கொள்ள வைத்தது. அடுத்த வார்த்தை பேச தெம்பு இல்லாமல் செய்தது. அதனால் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு ஆட்டோவையும், டிரைவரையும் பார்த்தான்.
“நடந்தே போவலாம்.” சண்டைக்காரனிடம் சொல்வது மாதிரி லீலாவதி சொன்னாள்.
“நான் எதுக்கு சொல்றன்னு புரியுதா? நடக்கிறதுக்கு கஷ்டமா இருக்கும்ன்னுத்தான் சொன்னன்.”
“அவசரமின்னா நீ வீட்டுக்குப் போ. நான் நடந்தே போறன். நானா விசாரிச்சிக்கிறன். நீ எங் கூட வந்தாத்தான் சேக்க மாட்டங்க. நான் தனியா போனா அனாதன்னு சொல்லிடுவன். நம்புவாங்க.”
       செல்வத்துக்கு கோபத்தில் முகம் சிவந்து போயிற்று. “நான் ஒண்ணு சொன்னா நீ வேற ஒண்ணா புரிஞ்சிகிற.” லீலாவதியைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு ரோட்டைப் பார்த்தான்.
       லீலாவதியையும் செல்வத்தையும் மாறிமாறி பார்த்த ஆட்டோக்காரன் “ஆட்டோ வாணாமா?” என்று கேட்டான். அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் “அனாத இல்லத்தில யார வேணுமின்னாலும் சேத்துக்குவாங்களா? பணம் கட்டணுமா? சாதி பாப்பாங்களா?” என்று லீலாவதி கேட்டாள். லீலாவதியை ஏறஇறங்க பார்த்த ஆட்டோக்காரன். பட்டும்படாமலும் சொன்னான் “இலவசம்தான். பணமெல்லாம் கட்ட வேண்டியதில்ல. அனாதயா இருக்கணும்.”
“அனாதையா இல்லன்னா சேக்க மாட்டாங்களா?”
“சேக்க மாட்டாங்க” என்று சொன்ன ஆட்டோக்காரன் “ஆட்டோ வேணுமா? வேணாமா?” என்று கேட்டான்.
“நான் அனாததான். என்னெ சேத்துக்குவாங்களா?”
“போயி கேட்டுப்பாரு” என்று சொன்ன ஆட்டோக்காரன் செல்வத்தின் பக்கம் திரும்பி “ஆட்டோ வேணுமா? வேணமா?” என்று வேகமாகக்கேட்டான். அவன் வாயைத் திறக்காததால் வெடுக்கென்று ஆட்டோக்காரன் நான்கு ஐந்து அடி தூரம் தள்ளிப்போய் நின்றுகொண்டு சவாரி பிடிப்பதற்கு முயன்றான்.
       லீலாவதிக்கு சப்பென்றாகிவிட்டது. அனாதை இல்லத்தில் தன்னை சேர்த்துக்கொள்ள மாட்டார்களோ என்ற கவலை வந்தது. அதே நேரத்தில் ஆட்டோக்காரன் மீது கோபம் உண்டாயிற்று. “பணம் காசு கொடுக்கிறதவிட இப்ப சனங்களுக்கு பேசுறதுதான் பெரிய கஷ்டமா இருக்கு.” என்று சொன்னாள். மொட்டையாக ஒரே வரியில் பதில் சொல்லிவிட்டு தூரமாகப்போய்விட்டானே என்று ஆச்சரியப்பட்டு ஆட்டோக்காரனையே பார்த்தாள். பக்கத்தில்போய் விசாரிக்கலாமா என்று யோசித்தாள். செல்வம் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கும்போது எப்படி கேட்க முடியும் என்று தயங்கினாள். அப்போது இடித்துவிடுவது மாதிரி ஒரு பஸ் வந்ததும் பயந்துபோய் பின்னால் தள்ளி நின்றாள். அதைப் பார்த்த செல்வம் “கொஞ்சம் ஓரமா வாம்மா” என்று சொன்னான்.‘
“போவம். வா.”
“வெயிலா இருக்கு. அவ்வளவு தூரம் குச்சிய ஊணிக்கிட்டு நீ எப்பிடி நடப்ப? ட்ராபிக்கா வேற இருக்கு. ஆட்டோவுல போயிடலாம்மா.” கெஞ்சுவது மாதிரி கேட்டான்.
“வழிய மட்டும் சொல்லு. நான் போய்க்கிறன்.” கறாராக சொன்னாள். முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
செல்வம் தலையில் அடித்துக்கொண்டான். “ஒருத்தர் பேச்ச ஒருத்தர் கேக்காததாலதான் போவக் கூடாத எடத்துக்கொல்லாம் போவ வேண்டியிருக்கு.”
“நீ வழிய மட்டும் சொல்லு.”
“விதிய மாத்த யாராலயும் முடியாது.” என்று அலுப்புடன் சொன்னான். கோபத்துடன் லீலாவதியைப் பார்த்தான்.
“சீக்கிரம் செத்துப் போறவங்கதான் புண்ணியம் செஞ்சவங்க. நான் புண்ணியம் செஞ்சவ இல்லெ.”
“பஸ் ஸ்டாண்டுல நின்னுக்கிட்டு என்னம்மா பேசுற?” வெறுப்புடன் கேட்டான்.
“போற எடத்தில என்னா சொல்லப் போறாங்கன்னு தெரியல. அதுவே பெரிய மனக் கொதிப்பா இருக்கு. வா போவம். நடக்கிறது நடக்கட்டும். நான் நெனைக்கிறதுதான் நடக்கணுமின்னு சட்டமா இருக்கு. எனக்கு ஒரு தெய்வமும் தொண இல்லாம போயிடுச்சி’‘ எதிரிலிருந்த அன்னபூரணி ஹோட்டலைப் பார்த்தவாறு சொன்னாள்.
“அம்மா.”
“வர்றதா இருந்தா வா. இல்லாட்டிப் போ” என்று சொன்ன வேகத்திலேயே நடக்க ஆரம்பித்தாள்.
“அப்படி இல்ல. இப்பிடி.” என்று சொல்லிவிட்டு தலையில் அடித்துக்கொண்டான்.
அவன் சொன்ன மாதிரியே கிழக்கில் நடக்காமல் மேற்கில் நடக்க ஆரம்பித்தாள் லீலாவதி. அவளுக்குப் பின்னால் நடக்க ஆரம்பித்தான் செல்வம்.
       குச்சியை ஊன்றிக்கொண்டு லீலாவதி நடப்பதை பார்ப்பதற்கு செல்வத்திற்கு கஷ்டமாக இருந்தது. இடுப்பை வளைத்துவளைத்து, உடம்பை கோணிகோணி நடப்பதை பார்ப்பதற்கு என்னவோ மாதிரி இருந்தது. கால்களை நெளித்துநெளித்து  ஒவ்வொரு அடியையும் மெல்லமெல்ல எடுத்து வைத்துத்தான் அவளால் நடக்க முடியும். பார்ப்பவர்கள் விநோதமாக பார்ப்பார்கள். நடக்க முடியாத ஆளை நடத்தி அழைத்துக்கொண்டு போவதற்காக, தெரிந்தவர்கள்தான் என்றில்லை ரோட்டில் போகிற யார் வேண்டுமானாலும் திட்டுவார்கள் என்ற எண்ணம் வந்ததும் செல்வத்திற்கு லீலாவதியின்மீது கோபம் உண்டாயிற்று. ரோட்டில் போகிற கார், பஸ், ஆட்டோ, ஸ்கூட்டர், ஆட்கள் எல்லாம் என்ன நினைப்பார்கள் என்பது அவனுக்கு பெரும் கவலையாக இருந்தது. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நொண்டிநொண்டி லீலாவதி பித்துப்பிடித்த மாதிரி நடந்து கொண்டிருந்தாள். அவள் நடந்துகொண்டிருந்த விதம் ஏற்கனவே தெரிந்த இடத்திற்கு போவது மாதிரி இருந்தது. “சொல்றத கேட்டாத்தான? ஆட்டோவுல போனா என்னா கேடு வந்துடும்? கிழட்டு முண்டச்சிக்கு என்னா பிடிவாதம்? சனியன்” என்று சொல்லிவிட்டு பல்லைக் கடித்தான்.
       லீலாவதியின் பிடிவாதம் செல்வத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. புதுப் பெண்ணாக இருந்தாள். ஒரு வாரமாக சாப்பிடவில்லை. படுத்த இடத்தைவிட்டு எழுந்திருக்கவில்லை. யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை. “அனாத ஆசிரமத்துக்குப் போறன்” என்பதையே மந்திரம் சொல்வது மாதிரி சொல்லிக்கொண்டிருந்தாள். காரணம் கேட்டால் பதில் சொல்லவில்லை. கெஞ்சிகெஞ்சிப் பார்த்துவிட்டு அக்கம்பக்கத்து வீட்டார்களிடம் சொல்லி லீலாவதியிடம் பேச வைத்தான். தெருவில் இருந்த பலரும் வந்து சொல்லிப் பார்த்தார்கள். சாப்பாடு மட்டுமல்ல பச்சைத் தண்ணீரைக்கூட அவள் குடிக்கவில்லை. வெறுத்துப்போய் “இந்த வயசில இம்மாம் புடிவாதமா? போய்தான் தெரிஞ்சிக்கிட்டு வரட்டும். ஒரு வாரம் இருந்து பாக்கட்டும். அப்பத்தான் வீட்டோட அரும தெரியும். சின்ன புள்ளைங்களவிட அதிகமா அடம் புடிச்சா என்னா செய்ய முடியும்? வயசு ஆயிட்டாலே புத்தி கோளாறாயிடுது. குழந்தைகள வச்சிருக்கிறதவிட வயசானவங்கள வச்சிருக்கிறதுதான் இந்த காலத்தில பெரிய சிக்கலா இருக்கு.” என்று ஒருவர் தவறாமல் சொன்னார்கள். வேறு வழியில்லாமல்தான் செல்வமும் ஒத்துக்கொண்டான். காலையில் கிளம்பும்போதுகூட “சாப்புடு” என்று கெஞ்சினான். ஒரு நூல் அசையவில்லை. காலையில்கூட சாப்பிடவில்லையே என்ற எண்ணம் வந்ததும் வேகமாக பக்கத்தில் வந்து “ஏதாச்சும் சாப்புட்டுட்டு போவலாம். வீட்டுலதான் சாப்புடல. கடயிலியாவது சாப்புடன். போனதுமே எப்பிடிம்மா சேத்துக்குவாங்க? எப்ப சாப்புட முடியுமோ? நீ சாப்புட்டு எட்டு ஒம்போது நாளாயிடிச்சே” என்று உடைந்துபோன குரலில் சொன்னான்.
“பசிக்கல.”
“நான் சொல்றத கேளும்மா.”
“அப்பிடியாச்சும் நான் செத்தா சரி.” பேச்சை வெட்டிவிட்டாள். ஆனால் செல்வம் விடவில்லை.
“ஒரு காப்பியாச்சும் குடியன்.”
“வெறும் வயித்தில குடிச்சா குடலப் புரட்டும். வாண்டாம்.”
“இளநிக்காரன் நிக்குறான். ஒண்ணு வாங்கட்டுமா?”
“தேவயில்ல.”
“பெத்த புள்ளைக்கிட்ட எதுக்கு புடிவாதம்? சொன்னாக் கேளும்மா.” செல்வம் கெஞ்சினான். லீலாவதியை எப்படியாவது சாப்பிட வைத்துவிட வேண்டும் என்பது அவனுடைய விருப்பமாக இருந்தது.
“வெயிலா இருக்கு. போயிடலாம். போற எடத்தில என்னா சொல்வாங்களோ? அனாதயா இருந்தாத்தான் சேப்பாங்களாம்.”
“எதுக்கு வெட்டிவெட்டிப் பேசுற? ஓரமா வா. காருக்காரன் ஏத்திப்புடப்போறான்.” என்று சொல்லி லீலாவதியின் கையைப் பிடித்து லேசாக நகர்த்திவிட்டான்.
“அப்படித்தான் ஒண்ணும் நடக்க மாட்டங்குது. சனியன் நமக்கு எதுக்குன்னு ஒவ்வொரு காருகார நாயும் ஒருங்கிஒதுங்கிப் போவுதுங்க.”
“கண்டபடி பேசாத. இங்கப்பாரு. ‘சாப்புட வாங்க’ன்னு ஒரு ஹோட்டல் இருக்கு. வா. போயி ரெண்டு இட்லி தின்னுட்டுப் போயிடலாம். கோபப்படாம சொல்றத கேளு.”
“வாண்டாம். ஓட்டலுக்கு இப்பிடியெல்லாம் பேரு வைக்க ஆரம்பிச்சிட்டாங்களா? சனியன் புடிச்சவங்க.” முன்னைவிட வேகமாக நடக்க முயன்றாள். லீலாவதியின் செய்கை செல்வத்தைப் பைத்தியம் பிடிக்க வைத்துவிடும்போல இருந்தது. ஒரு நொடி அவளைப் பார்க்காமல் இருப்பதற்கு முயன்றான். ரோட்டில் போகிற வண்டி வாகனங்களைப் பார்க்க முயன்றான். மனம் எதிலும் நிற்கவில்லை. திரும்பி லீலாவதியைப் பார்த்தான். கோபமாகவும் இருந்தது, வருத்தமாகவும் இருந்தது. கோபம்தான் அதிகமாக இருந்தது. அவளுடன் ரோட்டில் நடந்துகொண்டிருப்பது கூடுதல் எரிச்சலை உண்டாக்கியது. எரிச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் கேட்டான்.. “வீட்டுக்காப் போறம்? போன ஒடனே சாப்புட்டுக்கலாம்ன்னு இருக்க. இல்லெ சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க வீட்டுக்குப் போறமா?”
“நான் வன வாசம் போறன், சுடுகாட்டுக்குப் போறன்.”
“எனக்கு கோவத்த உண்டாக்காத” என்று கத்திய செல்வம் மறுநொடியே குரலை மாற்றிக்கொண்டு தன்மையான குரலில் சொன்னான் “நான் எந்தத் தப்பும் செய்யல. நீதான் அடம்புடிச்சிக்கிட்டு அனாத இல்லத்துப்போறன்னு வர? இத்தினி வருசத்தில நான் எப்பயாச்சும் ஒன்னெ எடுத்தெறிஞ்சிப் பேசி இருக்கனா? கெட்ட வாத்த சொல்லி திட்டி இருக்கனா?”
“வீட்டு விசயத்த ரோட்டுல எதுக்குப் பேசுற?”
       லீலாவதியின் குரலில் எந்த தடுமாற்றமும் இல்லை. எட்டு ஒன்பது நாட்களாக சாப்பிடாத பெண்ணினுடைய குரல் மாதிரி இல்லை. மனப்பாடம் செய்து வைத்திருந்த வார்த்தைகளை சொல்வது மாதிரி ஒவ்வொரு வார்த்தையையும் பயன்படுத்தினாள். செல்வத்திற்குத்தான் குழப்பம். வார்த்தைகளைத் தேடினான். தடுமாறினான். லீலாவதி அனாதை இல்லத்தில் சேர்ந்துவிட்டால் பரவாயில்லை என்றும், சேர்ந்து விடக்கூடாது என்றும் ஒரே நேரத்தில் இரண்டு ஆசைகளும் அவனுக்கு இருந்தன. சேர்த்துகொள்வார்களா, சேர்த்துக் கொள்ள மாட்டார்களா? மகன் இருப்பதால் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிடுவார்களா? திடீரென்று பாசம் வந்த மாதிரி பக்கத்தில் வந்து நடந்துகொண்டே சொன்னான் “என்னெ புரிஞ்சிக்க மாட்டியாம்மா?”
“ஒனக்கு வெக்கமா இருந்தா திரும்பிப் போயிடு. வழிய கேட்டுக்கிட்டு நானே போயிக்கிறன். பாதி தூரம் வந்திருக்க மாட்டம்?”
“நான் என்ன சொல்றன்? நீ என்ன சொல்ற?” கோபத்தில் கத்தினான்.
“நீ எங்கூட வர்றதுதான் தொந்தரவு. அங்க வந்து ‘இது எங்கம்மா’ன்னு சொல்லாத. தெரிஞ்ச பொம்பள, தெருக்கார பொம்பளன்னு சொல்லிடு. அப்பத்தான் என்னெ சேத்துக்குவாங்க.”
“வாய மூட மாட்டியா? பேசுறதுக்கும் ஒரு அளவு இல்லெ?” என்று சொல்லி முறைத்தான். கோபத்தில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.. “எல்லாம் என் தல எழுத்து. ஒனக்கு புள்ளையா பொறந்து நான் படுற பாடு இருக்கே. அதுக்கு நான் செத்துப்போவலாம்.”
“நாங்கதான் ஆசப்பட்டு பெத்தம் ஒன்னெ. நீ கேக்கல.” லீலாவதியினுடைய கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.
“எதுக்காக இந்த வாத்தய சொல்ற? நானா அனாத இல்லத்துக்குப் போன்னு சொன்னன்? நீதான் திமிர் புடிச்சிப்போயி வர.”
       செல்வத்திற்கு மண்டை வெடித்துப் போகிற அளவுக்கு கோபம் உண்டாயிற்று. வீடாக இருந்திருந்தால் பெரிய சண்டை போட்டிருப்பான். காட்டுக் கத்தலாகக் கத்தியிருப்பான். கோபத்தில் கெட்ட வார்த்தை சொல்லி திட்டியிருப்பான். லீலாவதியை அடிக்க முடியாமல் தன்னுடைய பிள்ளைகளைப் போட்டு அடித்திருப்பான். வீட்டிலுள்ள பொருட்களை தூக்கிப்போட்டு உடைத்திருப்பான். பெரிய ரகளை நடந்திருக்கும். கடைத் தெருவில் என்ன செய்ய முடியும்? ரோட்டின் இரண்டு பக்கமும் இருந்த கடைகளை பார்த்தவாறு நடந்தாலும் அவனுடைய மனம் நெருப்பாக எரிந்துகொண்டிருந்தது. எதைப் பார்த்தாலும் கோபம் குறைவது மாதிரி தெரியவில்லை. மனம் வெறுத்துப் போய் சொன்னான் “ஏண்டா பொறந்தம்ன்னு இருக்கு.”
       செல்வத்திற்குத்தான் நடக்க முடியவில்லை. ஆனால் லீலாவதி கால்களை இழுத்துஇழுத்து வைத்து வேகமாக நடந்துகொண்டிருந்தாள். ரோடு, வண்டி, வாகனங்கள், ஆட்கள், வெயில், வியர்வை கசகசப்பு எதையும் அவள் பொருட்படுத்தவில்லை. வழி அவளுடைய கண்களில் இல்லை. மனதில் இருந்திருக்க வேண்டும். நடை அவ்வளவு வேகமாக இருந்தது. ஸ்கூட்டர்கள், பஸ், கார் என்று வரும்போதுகூட அவள் ஒதுங்கியோ, தயங்கியோ நடக்கவில்லை. செல்வத்திற்கு வியப்பாக இருந்தது. அவளை நடக்க வைக்கும் சக்தி எதுவென்று தெரியவில்லை.
       அரசு பொது மருத்துவமனைக்கு அருகில் வந்ததும் லீலாவதி நின்றாள். செல்வமும் நின்றான். ஒருவருக்கொருவர் பார்த்துகொண்டனர். ஆனால் பேசிக்கொள்ளவில்லை. ஜென்ம விரோதிகள் பக்கத்தில் நிற்க நேரிட்டது மாதிரி இருவரும் நின்றுகொண்டிருந்தனர். செல்வம் வாயைத் திறக்காமல் நிற்பதை பார்த்த லீலாவதி “தடம் தெரியுமா?” என்று கேட்டாள்.
“கேக்கணும்” என்று சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த மருந்து கடைக்குச் சென்று விசாரித்துவிட்டு வந்து “அடுத்தத் தெருவுல கடசியில இருக்காம்.” என்று வழிப்போக்கிக்கு சொல்வது மாதிரி சொன்னான்.
“எப்பிடி?”
“இப்பிடி.”
செல்வம் கையைக்காட்டிய பக்கம் லீலாவதி நடக்க ஆரம்பித்தாள். பக்கத்தில் கூடவே நடந்துகொண்டிருந்தவன் ரகசியம் சொல்வது மாதிரி சொன்னான் “கோவப்படாத. இப்பவும் ஒண்ணுமில்ல. வீட்டுக்குத் திரும்பிப் போயிடலாம். மருமவக்கிட்ட கோவிச்சிக்கிட்டு யாராச்சும் அனாத இல்லத்துக்கு போவாங்களா? நீ அவகிட்ட எத்தினியோ முற சண்ட போட்டிருக்க, ஏன்னு ஒரு முற கேட்டிருப்பனா? ஒன்னெ வுட்டுட்டு நான் எப்பிடி சோறு திங்கிறது?” செல்வம் அழுதான்.
“எனக்கு யாரு மேலயும் கோவமில்ல. வருத்தமில்ல. வீட்டவிட்டு வந்துட்டப் பின்னால திரும்பி எந்த முகத்தோட போறது?”
“அது ஒன்னோட வீடும்மா.”
“தப்பு. என்னோட வீடு இல்ல. ஒம் பொண்டாட்டியோட வீடு. ஒன்னோட வீடு. ஒன் மாமியா வீட்டு சனங்களோடது.”
“எதுக்குப் பிரிச்சிபிரிச்சிப் பேசுற? அவதான் வேத்தாளு. நானுமா?” செல்வத்தின் கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது.
“யாரும் யாருகிட்டயும் பேசாத வீட்டுல எப்பிடி இருக்கிறது? ஆளுங்க இல்லாதப்பக்கூட அந்த வீடு எங்கிட்ட பேசிக்கிட்டு இருந்துச்சி. இப்ப அந்த வீடு எங்கிட்ட பேசல. அதனாலதான் வெளிய வந்தன். அந்த வீட்டுக்கு இப்ப யார்யாரோ வர்றாங்க. யாராரோ போறாங்க.”
“என்னம்மா சொல்ற? புரியல. கலாமணி தப்பு செய்யுறாளா? கெட்ட நடத்த உள்ளவளா?”
“நான் அப்பிடி சொல்ல.” நடப்பதை நிறுத்திவிட்டு செல்வத்தை விநோதமாகப் பார்த்தாள். அவளுடைய கண்களில் கண்ணீர் வந்தது.
“நான் என்னா தப்பு செஞ்சன்? எம் புள்ளைங்க என்னா தப்பு செஞ்சிச்சி? அதுகளகூட பாக்காம வர்ற? மாமியா-மருமவ சண்ட ஒலகத்தில எல்லா வீட்டுலயும் நடக்குறதுதான? புதுசாவா நடக்குது? இல்லெ நம்ப வீட்டுல மட்டும்தான் நடக்குதா? வயசாயிடிச்சி. நீ கொஞ்சம் அனுசரிச்சிப்போனா என்ன?”
“நான் எத அனுசரிப்பன்?” லீலாவதியின் கண்களில் நெருப்பு பறந்தது. செல்வத்தை எரித்துவிடுவது மாதிரி பார்த்தாள். பல்லைக்கடித்தப்படி “நான் அனுசரிச்சிப் போவன், ஒம் பொண்டாட்டி ஊர் சுத்தப் போவாளா? பேரு வச்சியிருக்கான் பாரு கலாமணின்னு திருட்டு மணின்னு வைக்காம. எல்லாத்துக்கும் அவள பெத்தவன சொல்லணும்.” சத்தமாகக் கேட்டாள்.
“என்னம்மா சொல்ற?” பரிதாபமாகக் கேட்டான்.
“வாயக் கிண்டாத. எம் போக்குல என்னெ வுட்டுடு. அதான் ஒனக்கும், ஒம் புள்ளைங்களுக்கும் நல்லது.”
“என்னெப் புடிக்கல சரி. எம் பொண்டாட்டிய புடிக்கல. எம் பொண்டாட்டி வீட்டு சனங்கள புடிக்கல சரி. பேரப் புள்ளைங்களகூட நீ நெனைக்கலியா?”
“அந்த ரெண்டு சனியனுங்களாலத்தான் இத்தினி வருசமா நான் அந்த வீட்டுல குந்தியிருந்தன்.’’
“இப்பியும் அதுங்களுக்காக இருந்திட்டுப் போயன்.”
“இனிமே அந்த வீட்டுல நான் இருக்க மாட்டன். பொட்டச்சிக்கு எதுக்கு தனியா செல்ஃபோனு? ஒரு பொட்டச்சி போனுல எம்மாம் நேரம் பேசலாம் ஒரு நாளக்கி?” நடக்க ஆரம்பித்தாள் லீலாவதி.
“எம் பொண்டாட்டி தப்பு செய்யுறாளா? நீ சந்தேகப்படுறியா? அவ வீட்டு சனங்க வரும், போவும். பணம் கொடுப்பா. அத சொல்றியா? தப்பு செய்யுறான்னு சொல்லு அவள வெட்டிச் சாய்க்கிறன்.”
“பணம் காசா எனக்கு பெருசு?” நின்று திரும்பிப் பார்த்துக்கேட்டாள் லீலாவதி.
“அப்பறம் ஒனக்கு என்னாதான் பிரச்சன?” வழியை மறித்துக்கொண்டு கேட்டான் செல்வம்.
“தெருவுல என்னா செய்யுற நீ?”
“காரணத்த சொல்லு.”
“எனக்கு ஒரு பிரச்சனயுமில்ல.”
“இதான் ஒன்னோட முடிவா?”
லீலாவதி கொஞ்சம்கூட தயங்கவில்லை. யோசிக்கவில்லை. ஒரே வெட்டாக வெட்டினாள் “ஆமாம்.”
செல்வத்தின் கைகளை விலக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
“அப்பாவ ஆட்டிப் படச்ச மாதிரியே என்னெயும்தான் ஆட்டிப்படச்ச. சாதாரணமாவே நீ அதிகமா பேசுவ. இந்த ஒரு வாரமா அளவு கடந்து பேசுற.”
நடப்பதை நிறுத்திவிட்டு கேட்டாள் “ஒன்னெயும் ஒங்கப்பனையும் நான் ஆட்டிப்படச்சனா?” லீலாவதியின் கண்களில் கண்ணீர். முதன்முதலாக வாய்விட்டு அழுதாள்.
“‘கட்டுன பொண்டாட்டியவிட, முப்பது நாப்பது வருசம் ஆக்கிப்போட்டவளவிட, சூத்து துணிய அலசி கொடுத்தவளவிட, கூடப்படுத்து எழுந்திருச்சவளவிட – மூத்திரம் வுடுற நேரத்தில பெத்த புள்ளை நீ. ஒனக்காகத்தான ஒங்கப்பன் தூக்குல தொங்கி செத்துப்போனான்?” கோபத்தில் கத்தினாள். அவளுடைய உடம்பு நடுங்கியது. அவளுடைய  கைகள் கைக்குச்சியை அழுத்திப்பிடித்தன. அவளுடைய அழுகையும், பேச்சும் செல்வத்தை நிலைகுலைய வைத்துவிட்டது. அவளை சமாதானப்படுத்துவது மாதிரி சொன்னான் “ நான் ஒண்ண நெனச்சிக்கிட்டு சொல்றன். அத நீ வேற ஒண்ணா நெனச்சிக்கிற. எத சொன்னாலும் தப்புத்தப்பாப் போயிடுது.” அவனுடைய கண்களில் கண்ணீர். “ரெண்டு பொம்பளைங்ககிட்ட நான் மாட்டிக்கிட்டுப் படுறபாடு இருக்கே, மருந்த குடிச்சிட்டு செத்துடலாம். எல்லாம் என் தல எழுத்து” தலையில் அடித்துக்கொண்டான்.
“நில்லும்மா பேசிட்டு போவலாம்.” செல்வத்தினுடைய பேச்சை லீலாவதி கேட்கவில்லை.
       வள்ளலார் அனாதைகள் இல்லத்திற்கு முன்வந்து நின்றாள் லீலாவதி. கட்டிடத்தைப் பார்த்தாள். பெரிய வீடாக தெரிந்தது. கட்டிடத்தின் வாசலைப்பார்த்தாள். கல்யாண மண்டபத்தின் வாசல் மாதிரி பெரியதாக இருந்தது. உடனே உள்ளே போகலாமா, யாரையாவது பார்த்து விசாரித்துவிட்டு போகலாமா என்று யோசித்தாள். பக்கத்திலிருந்த வேப்ப மரத்தின் நிழலுக்கு வந்து நின்றுகொண்டு, கட்டிடத்திற்குள் இருந்து ஆட்கள் யாரும் வெளியே வருகிறார்களா என்று பார்த்தாள். அறிமுகம் இல்லாத பெண்ணுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருப்பது மாதிரி செல்வம் அவள் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தான். லீலாவதி அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.
       அனாதைகள் இல்ல கட்டிடத்திற்குள் இருந்து பத்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிள்ளை வெளியே வந்ததைப் பார்த்ததும் “யே, பாப்பா இங்க வா.” என்று லீலாவதி கூப்பிட்டாள்.
“என்னா?”
“இங்க வாம்மா.”
“என்னா?” என்று கேட்டுக்கொண்டே அந்தப் பிள்ளை லீலாவதியின் முன் வந்து நின்றது.
“நீ இங்க உள்ள புள்ளையா?”
“ஆமாம்.”
“இங்க சேர முடியுமா? சேத்துப்பாங்களா?”
“தெரியல.”
“இங்க சேரணுமின்னா யாரப் பாக்கணும்?”
“அண்ணன.”
“எந்த அண்ணன்?”
“இளயராஜா அண்ணன.”
“யாரு அவுரு.”
“ஓனரு.”
“இருக்காரா?”
“ம்.”
“என்னெ அழச்சிக்கிட்டுப்போயி வுடுறியா தாயி?”
“நான் கடைக்கி போவணும்.” என்று சொல்லிவிட்டு அந்தப் பிள்ளை லீலாவதியைத் திரும்பதிரும்பப் பார்த்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தது.
       லீலாவதிக்கு திடீரென்று பயம் உண்டானது. உள்ளே இருக்கக்கூடிய ஆள் எப்படி இருப்பார்? தன்னை சேர்த்துக்கொள்வாரா? சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? காரணமின்றி தெற்கிலும் வடக்கிலும் பார்த்தாள். கிழக்கிலும் மேற்கிலும் பார்த்தாள் பிறகு செல்வத்தைப் பார்த்தாள். அவன் “வள்ளலார் அனாதைகள் இல்லம்” என்று கட்டிடத்தின் மேல் எழுதியிருந்ததைப் படித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
“நீ போயி உள்ளாரப் பாத்துட்டு வரியா?”
“வாண்டாம்மா.” செல்வத்தின் கண்களில் கண்ணீர் இருந்தது. அதை மறைப்பதற்காக முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான்.
       லீலாவதி கட்டிடத்திற்குள் நுழைந்தாள். முதலில் பெரிய ஹால் இருந்தது. ஹாலின் வடக்கு பக்கமாக ஒரு அறை இருந்தது. அறையை ஒட்டி சுவரில் பெரிதாக வள்ளலார் படம் இருந்தது. படத்துக்குக் கீழே குத்து விளக்கு ஒன்று எரிந்துகொண்டிருந்தது. அதிக சத்தமில்லாமல் ‘அருட் பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை’ என்ற பாட்டு கேசட்டில் ஓடிக்கொண்டிருந்தது கேட்டது. ஹாலின் தென்பகுதியில ஆறு ஏழு வயதுள்ள இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு பையனும் உட்கார்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருப்பது தெரிந்தது. குச்சியை ஊன்றி நின்றுகொண்டிருந்த லீலாவதியைப் பார்த்ததும் அந்த பிள்ளைகளுக்கு என்ன தோன்றியதோ ஒன்றும் சொல்லாமல் மிரளமிரள பார்த்தன. அதில் பச்சை நிறப் பாவாடை கட்டியிருந்த பிள்ளை எழுந்து ஹாலின் வடக்குப் பக்கமாக இருந்த அறைக்குள் ஓடியது. லீலாவதி கூப்பிட்டதை அந்தப் பிள்ளை காதில் வாங்கவில்லை. சிறிது நேரத்தில் அந்த பிள்ளையும் நடுத்தர வயதுள்ள ஆளும் அறையிலிருந்து வெளியே வந்தனர். ஆளைப் பார்த்ததுமே அடையாளம் தெரிந்த மாதிரி லீலாவதி இளையராஜாவுக்கு வணக்கம் சொன்னாள்.
“யாரம்மா பாக்கணும்?”
“ஒங்களத்தான்.”
“என்னையா?”
“ம்.”
“என்னா விசயம்மா?”
“சும்மாத்தான்.”
       லீலாவதியின் தோற்றம், பேச்சு, பார்வை எல்லாமும் சேர்ந்து இங்கு அவள் ஏன் வந்திருக்கிறாள், ஏன் தன்னை பார்க்க வேண்டும் என்று சொல்கிறாள் என்பதெல்லாம் ஒரு நொடியிலேயே அவனுக்கு புரிந்துவிட்டது. ஆனாலும் தெரியாத மாதிரி கேட்டான் “என்னா வேணும்? சொல்லுங்கம்மா.”
       லீலாவதிக்கு பேச்சு வரவில்லை. வீட்டிலிருந்து கிளம்பி, கட்டிடத்திற்கு முன் வரும்வரை இருந்த தைரியத்தில் ஒரு துளிகூட இப்போது இல்லை. நாக்கிலிருந்த ஈரமெல்லாம் வறண்டு போய்விட்டது. அதோடு வாய் திறக்கவும் மறுக்கிறது. வார்த்தை வரவில்லை. ஆனால் கண்ணீர் மட்டும் எந்த தடையும் இல்லாமல் வந்துகொண்டிருந்தது-
“என்னெ பாக்கணுமா? இல்லெ இங்க தங்கி இருக்கிறவங்கள பாக்கணுமா?”
        லீலாவதிக்கு என்ன சொல்வது, எப்படி சொல்வது என்று தெரியவில்லை. வீட்டிலும், வழியிலும் பேசிய பேச்சு, காட்டிய வீராப்பு எல்லாம் இருந்த இடம் தெரியவில்லை. லீலாவதி அழுதாள். அதை இளையராஜா பொருட்படுத்தவில்லை. அவள் மாதிரியான பல பெண்களுடைய கண்ணீரை பார்த்துப்பார்த்து சலித்துப் போயிருந்தவன் மாதிரி “என்னெ பாக்கத்தான் வந்தீங்களா?” என்று திரும்பவும் கேட்டான்.
“ஆமாம்.” என்பது மாதிரி லீலாவதி தலையை மட்டும் ஆட்டினாள்.
“நான் வெளிய போவணும். விசயத்த சொல்லுங்க.” அப்போது உள்ளே வந்த செல்வம் இளையராஜாவைப் பார்த்து “வணக்கம் சார்” என்று சொன்னான்.
“வணக்கம். வாங்க.”
“சார் இளையராஜாவா?”
“நான்தான்.”
“இந்த இல்லத்த நடத்துறவருதான?”
“ஆமாம்.”
“இது எங்கம்மா சார்” என்று லீலாவதியைக் காட்டினான் செல்வம்.
“அப்பிடியா?”
“ஒங்கக்கூட கொஞ்சம் பேசணும் சார்.”
“என்ன விசயம்?”
“சும்மாதான் சார்.” செல்வத்தின் குரல் தாழ்ந்துவிட்டது. இளையராஜாவைப் பார்ப்பதையும் தவிர்த்தான்.
“ஏதாச்சும் உதவி செய்யப்போறீங்களா? பொறந்த நாளா, கல்யாண நாளா, நினைவு நாளா?”
“அதெல்லாம் இல்ல சார்.”
“பின்னெ?”
“போன வாரம் இந்த அனாத இல்லத்தப் பத்தி லோக்கல் டி.வி.யில ஒரு செய்தி வந்துச்சி. அத பாத்ததிலிருந்து ‘நான் அங்க போயி சேந்துக்கிறன்’ன்னு சொல்லி எங்கம்மா அடம்புடிச்சிக்கிட்டு வந்துடுச்சி சார்” செல்வத்தினுடைய குரலில் அவ்வளவு வெறுப்பும் கசப்பும் இருந்தது.
“உதவி செய்யுறவங்க செய்யலாம்ன்னு விளம்பரம் கொடுத்திருந்தன். ஒரு உதவியும் வரல. நீங்கதான் வந்து இருக்கீங்க.” இளையராஜா சிரித்தான்.
“என்னால முடிஞ்சத நான் கொடுக்கிறன் சார்” செல்வம் உற்சாகத்துடன் சொன்னான்.
“அப்பிடி செஞ்சீங்கன்னா பெரிய உதவியா இருக்கும். ரொம்ப சிரமப்பட்டுத்தான் பதிமூணு வருசமா நடத்திக்கிட்டு வரன்.”
“பதிமூணு வருசமாவா?”
“ஆமாம்.”
       செல்வம் பேசவில்லை. லீலாவதி பேசவில்லை. இளையராஜாவும் பேசாமல் ஹாலை பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான். அப்போது சட்டென்று லீலாவதி இளையராஜாவின் காலில் விழுந்து கும்பிட்டாள். அதைப் பார்த்ததும் செல்வத்திற்கு உயிரே நின்றுவிடும் போலிருந்தது. கோபத்தில் அவனுக்கு உடம்பு நடுங்க ஆரம்பித்தது. ஆனால் இளையராஜா சாதாரணமாக “எழுந்திரும்மா” என்று மட்டுமே சொன்னான். என்ன தோன்றியதோ செல்வத்தையும் லீலாவதியையும் மாறிமாறி பார்த்தான். பிறகு “உள்ளார வாங்க” என்று சொல்லிவிட்டு தன்னுடைய அலுவலக அறைக்குள் போனான். அவனுக்குப் பின்னால் லீலாவதியும், செல்வமும் போனார்கள். இளையராஜா உட்கார்ந்திருந்த நாற்காலிக்கு எதிரிலிருந்த மரப் பெஞ்சில் இருவரும் உட்கார்ந்தனர். இளையராஜா பேசவில்லை. செல்வம் பேசவில்லை. லீலாவதிதான் பேசினாள் “என்னெ அனாதயா சேத்துக்குங்க. புண்ணியமா இருக்கும்.” கையெடுத்துக் கும்பிட்டாள்.
“எதுக்காக நெனச்சதுக்கெல்லாம் அழுவுறீங்க? கும்புடுறீங்க?” என்று லேசான கோபத்துடன் கேட்டான். பிறகு குரலை மாற்றிக்கொண்டு “இது அனாதைங்களுக்காக நடத்துறது. ஒங்களுக்குத்தான் மகன் இருக்காரில்ல?” என்று சொல்லி லேசாக சிரித்தான்.
“எல்லாம் இருக்கு. ஆனா எதுவும் இல்லெ.” லீலாவதியின் குரலில் அவ்வளவு கசப்பு இருந்தது. கண்களில் கண்ணீர் இருந்தது.
“நான் சொல்றத புரிஞ்சிக்குங்க. சொத்துபத்து உள்ளவங்கள, புள்ளைங்க உள்ளவங்கள சேத்துக்க ஆரம்பிச்சா எல்லாரும் இந்தத் தப்ப செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. அந்த அளவுக்கு நடத்துறதுக்கு எங்கிட்ட வசதியும் இல்ல” இளையராஜா சிரித்தான்.
“எனக்கு வீடு இல்ல. புருசன் இல்லெ.”
“என்னாச்சி?”
“செத்து எட்டு வருசமாச்சி. அப்பவே செத்திருக்கணும். வயசாயி உயிரோட இருக்கக் கூடாது. அதிலயும் இடுப்பு ஒடிஞ்சிப்போயி.” லீலாவதியின் கண்களில் கண்ணீர்.
“இடுப்புல என்னா? சரியா நடக்க முடியாதா?”
“கஷ்டப்பட்டுத்தான் நடக்கணும். பஸ்ஸில ஏறும்போது படிக்கட்டுலயிருந்து சறுக்கிவுட்டு விழுந்து இடுப்புல எலும்பு முறிஞ்சிப்போச்சி. கோரிமேடு ஆஸ்பத்திரியில ஆறு மாசம் கெடந்தன். வயசாயிடிச்சி. ஆப்பரேசன் செய்ய முடியாது. முடிஞ்சவரைக்கும் குச்ச வச்சிக்கிட்டு கால ஜீவனத்த ஓட்டுங்கன்னு அனுப்பிட்டாங்க” லீலாவதி தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். அழுகையில் அவளுக்கு உடம்பு குலுங்கியது.
பேச்சை மாற்றுவதற்காக “சார் என்னா செய்யுறீங்க?” என்று செல்வத்திடம் இளையராஜா கேட்டான்.
“அரசாங்க ஸ்கூல்ல க்ளர்க்கா இருக்கன்.”
“பரவாயில்ல. ஏம்மா, ஒங்க மகன் அரசாங்க வேலயில இருக்காரு. அனாதைன்னு சேக்கச் சொல்றீங்க? இந்த மாதிரி எடத்துக்கெல்லாம் நீங்க வரக் கூடாது.”
“மனசு செத்துப் போச்சி.”
“என்னம்மா சொல்றீங்க?” ஆச்சரியத்துடன் கேட்டான் இளையராஜா.
“எப்படியாச்சும் என்னெ இங்க சேத்துக்குங்க. ஒங்களுக்கும் புண்ணியம் ஒங்களப் பெத்தவங்களுக்குப் புண்ணியம்.” லீலாவதி அழுதாள். கையெடுத்துக் கும்பிட்டாள்.
“சேத்துக்கிறது பிரச்சன இல்லெ. ஒங்கள மாதிரி செல பேரு வீட்டுல சண்ட போட்டுக்கிட்டு வருவாங்க. ஒரு வாரம் போனதும் கோவம் கொறஞ்சிடும். அப்பறம் வீட்டுக்குப் போவனும்ன்னு அடம்புடிப்பாங்க. பதிமூணு வருசமா நான் பாக்காத கதயா. பேசாம வீட்டுக்குப் போங்க” சிரித்துக்கொண்டே சொன்னான்.
“ரவரவ புள்ளைங்கெல்லாம் தூக்குல தொங்கி சாவுதுங்க. எளம் புள்ளைங்க எல்லாம் ரெண்டு மூணு புள்ளைங்கள வுட்டுட்டு தீக்குளிச்சி சாவுதுங்க. மாமியா சண்ட போட்டா, புருசன் சண்ட போட்டான்னு எம்மாம் பேரு செத்துப்போறாங்க? பரீட்சயில பெயில்ன்னுக்கூட புள்ளைங்க செத்துப்போவுதுங்க. ரவரவ புள்ளைங்களுக்கு இருக்கிற மனசு எனக்கு இல்லெ. ஒலகத்த வெறுக்கத் தெரியல. அந்த மனசு இல்லாததால எம்மாம் அசிங்கம்?”
“என்னம்மா சொல்றீங்க?” ஆச்சரியமாகக் கேட்டான் இளையராஜா.
“வாழப் புடிக்கல. சாகவும் முடியல.”
திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி “எப்ப சாப்புட்டீங்க?” என்று கேட்டான். லீலாவதி பதில் சொல்லவில்லை. செல்வம்தான் சொன்னான்.. “எட்டு நாளாச்சி.”
“ஐயோ கடவுளே” என்று பதறிப்போன இளையராஜா லீலாவதியிடம் “சாப்புடுறீங்களா?” என்று கேட்டான். பிறகு யாரிடமும் என்றில்லாமல் பொதுவாக சொன்னான் “சோறுதான் உலகம். அது இல்லன்னா எப்பிடி?”
“என்னெ சேத்துக்குங்க சாமி. சாப்பாடு வாண்டாம்.”
“நீங்க அனாதைன்னு சொன்னா ஒரு கேள்வியும் இல்லம்மா. ஒடனே சேத்துக்குவன். வீட்டுல சண்டயா?” என்று நிதானமாகக் கேட்டான் இளையராஜா.
“அதெல்லாமில்ல.”
லீலாவதியின் முகம் கோணியதைப் பார்த்த இளையராஜா செல்வத்தின் பக்கம் திரும்பி “சொந்த மகனா?” என்று கேட்டான்.
“ஆமாம்.’’
“எத்தன பேரு?”
“நான் ஒருத்தன்தான்.”
       இளையராஜா சிறிதுநேரம் ஒன்றுமே பேசாமல் இருந்தான். சிறிதுநேரம் செல்வத்தையும் லீலாவதியையும் ஆராய்வது மாதிரி பார்த்துக்கொண்டிருந்தான். ரொம்பவும் சலிப்பான குரலில் “ஒங்கம்மா ரொம்ப மனக் கொழப்பத்தில இருக்காங்க. வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போங்க. ஒரு வாரம் ஆனா எல்லாம் சரியாப்போயிடும்” என்று சொன்னான்.
“வேண்டாம் சாமி.” என்று குரல்விட்டு அழுதுகொண்டே கையெடுத்துக் கும்பிட்டாள் லீலாவதி. அதைப் பார்த்த செல்வத்துக்கு எழுந்து ஓடிவிட வேண்டும்போல இருந்தது. கோபத்தில் அவனையும் அறியாமல் கத்தினான் - “கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா?”
“சாவப்போற கிழவிக்கு எதுக்கு வாய்?”
       வெறுப்புடன் லீலாவதியைப் பார்த்தான் செல்வம். பல்லைக் கடித்தான். தலையில் அடித்துக்கொண்டான். வேகமாக சொன்னான் “அது இஷ்டப்படியே இருக்கட்டும் சார். மாசா மாசம் நீங்க சொல்ற பணத்த நான் கொடுத்திடுறன்.”
“பணத்துக்காக இத நான் நடத்தல.” வெட்டிவிட்டான் இளையராஜா.
“பணத்துக்காக நடத்துறீங்கன்னு நான் சொல்லல சார்” என்று சொன்ன செல்வத்தின் குரல் உடைந்துபோயிற்று. சிறிதுநேரம் பேசாமல் இருந்தான். என்ன தோன்றியதோ “நான் யார் பேச்ச கேக்குறது? எங்கம்மா பேச்சக் கேட்டா ‘ஒங்கம்மா பேச்சயே கேளு’ன்னு எம் பொண்டாட்டி சொல்றா. எம் பொண்டாட்டி பேச்சக் கேட்டா ‘ஒம் பொண்டாட்டி பேச்சயே கேளு’ன்னு எங்கம்மா சொல்லுது. ஒரு வருசமாவே எங்கம்மாவுக்கும் எம் பொண்டாட்டிக்கும்  இடையில என்னாமோ நடக்குது. அத என்னான்னு என்னால கண்டுபிடிக்க முடியல. எனக்கு பைத்தியம் புடிச்சிடும்போல இருக்கு” என்று சொல்லும்போதே அவனுக்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. மூக்கை உறிஞ்சிக்கொண்டு சொன்னான் “கருண அடிப்படயில வேலைக்கிப்போனதால ஒரு பயலும் மதிக்க மாட்டங்குறான். எல்லா வேலயும் என் தலயிலயே கட்டிடுறானுவ. அறுபது பேரு வேல செய்யுற ஸ்கூலு. ஒரு நிமிசம் நிக்க நேரமில்ல. சனி ஞாயிறுலயும் வேலதான். சம்பளம் போடுறது, சரண்டர் போடுறது, ஜி.பி.எஃப். போடுறது, சி.எல்.போடுறது, மெடிக்கல் லீவ் போடுறதுன்னு ஒரே வேல. வாத்தி்யாருங்க பாடம் நடத்தறாங்களோ இல்லயோ எந்த பேங்குல என்னா லோனு தரான்னு தெரிஞ்சிகிட்டு விதவிதமா லோன் போட்டுகிட்டே இருப்பாங்க. அதுக்கும் நாந்தான் தபால் எழுதணும். எல்லாத்துக்கும்மேல தெனம் ஒரு புள்ளி விவரம் கேக்குறான் கவர்மண்டுல. எல்லாத்துக்கும் ஒரே க்ளர்க்கு என்னா பண்ணுவான்? கம்ப்யூட்டர் டைப்பிங் தெரியாது. அதனால எல்லாத்துக்கும் வெளியவெளிய ஓடுறன். வேல பாப்பனா? குடும்பச் சண்டயப் பாப்பனா சார்?” செல்வம் லேசாக அழுதான்.
       சிறிதுநேரம் யாருமே பேசவில்லை. செல்வம் அழுதபோது லீலாவதியின் கண்களும் லேசாகக் கலங்கியதைப் பார்த்தான் இளையராஜா. ஆனால் எதுவும் சொல்லாமல் உட்கார்ந்திருந்தான். அப்போது ஐந்து ஆறு வயது உள்ள ஒரு பையன் “அண்ணா” என்று சொல்லிக் கத்திக்கொண்டே உள்ளே ஓடிவந்தான். உடனே அந்தப் பையனை தூக்கி மடியில் வைத்துக்கொண்டே இளையராஜா “என்னடா கண்ணா? ஒனக்கு என்னா வேணும்? சொல்லு செல்லம்” என்று கேட்டு கொஞ்ச ஆரம்பித்தான். சிறிதுநேரம் கழித்து பையனைத் தரையில் இறக்கிவிட்டு “ஓடு. போய் விளையாடு தங்கம்.” என்று சொல்லி பையனைத் துரத்திவிட்டான். பிறகு அவனாகவே “பொறந்து பத்து மணி நேரம்தான் இருக்கும். ஆஸ்பத்திரிக்குப் பின்னால யாரோ போட்டுட்டுப் போயிட்டாங்க. நாந்தான் தூக்கியாந்து வளக்கிறன். இன்னிக்கு ஞாயித்துக் கிழமங்கிறதாலதான் எல்லாம் இங்க இருக்கு. மத்த நாளா இருந்தா ஸ்கூலுக்குப் போயிருக்குங்க.”
“படிக்கவும் வைக்கிறீங்களா?”
“ஆமாம். ஆனா எல்லாத்தயும் அரசாங்க ஸ்கூல்லத்தான் படிக்க வச்சியிருக்கன். வேற வழியில்லங்கிறது ஒண்ணு, தனியார்ப்பள்ளிக்கூடத்த ஊடகப்படுத்தக் கூடாதுங்குறது ஒண்ணு.” சிரிக்க முயன்றான் இளையராஜா. ஆனால் சிரிப்பு வரவில்லை.
“ஆச்சர்யம் சார்.” செல்வமும் இளையராஜாவும் பேசிக்கொண்டதை கவனிக்காத லீலாவதி.
“கடவுளே” என்று சொன்னாள். “பெத்த புள்ளைய தெருவுல போட்டுட்டு போறதுக்கு என்னா மனசு? கல்லு மனசுதான். வேணாங்கற புள்ளைய எதுக்கு பெக்கறாங்க? ஜனங்களுக்கு புத்தி எப்புடியெல்லாம் போவுது. ஒலகத்தில பொட்டச்சின்னு, தாயின்னு யாரதான் சொல்லுறது?”
“ஏன் சார் மொட்டப் போட்டிருக்கு. ஹாலிலிருந்த புள்ளைங்களுக்கும் மொட்டப் போட்டிருந்துச்சி” தயக்கத்துடன் கேட்டான் செல்வம்.
“தானா குளிக்க முடியாத புள்ளைங்களுக்கு மொட்டப் போட்டிடுவம். குளிக்க வைக்கிறது சுலபம். அப்பறம் பேன் புடிக்காது. சளி புடிக்காது. முடி வெட்டுற தொல்லையும் இருக்காது. இங்க இருக்கிற வயசானவங்கதான் இவுங்கள பாத்துக்கிறாங்க.” லேசாக சிரித்தான் இளையராஜா. திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி லீலாவதியிடம் சொல்லுங்கம்மா” என்று கேட்டான்.
“என்னெ இங்க இருக்க வுடுங்க. மொட்டப் போட்ட புள்ளைய பாத்ததும் மனசு செத்துப்போச்சி. வீட்டுல இருந்தாலும் நான் தனியாத்தான் இருக்கணும். மவன், மருமவக்கூட இருந்தாலும் தனியா ஆளில்லாத வீட்டுல இருக்கிற மாதிரிதான். யாரும் யார்கிட்டயும் பேசாத வீட்டுல எப்பிடி இருக்கிறது? மனசு தீஞ்சிப்போச்சி. எம் புருசன் இருந்தா எதுக்கு இங்க வரப்போறன்? சண்டாளன் எதுக்குத்தான் தூக்குப்போட்டுக்கிட்டு செத்தானோ?” லீலாவதி அழுதாள்.
“ஒடம்புக்கு முடியாம சாகலியா?”
“இல்லெ.”
“பின்னெ எப்பிடி செத்தாரு?”
செல்வம் பேசவில்லை. லீலாவதியும் பேசவில்லை. இருவருமே தலையைக் கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர்.
“பெரிய நோவு வந்து, வலி தாங்காம முடியாம தூக்கில தொங்கிட்டாரா?”
செல்வம் வாய் அடைத்துப்போய் உட்கார்ந்திருந்தான்.
“சொல்ல வேணாமின்னா விடுங்க. இப்ப ஒரு ஆளு உசுரோட இல்ல. அவ்வளவுதான்.” சலிப்புடன் சொன்னான் இளையராஜா.
“என்னெ சேத்துக்கிறதா இருந்தா சொல்றன்.”
“என்னம்மா கண்டிசன் எல்லாம் போடுற?” என்று கேட்ட இளையராஜா வாய்விட்டு சிரித்தான். “சேத்துக்கிறன். சொல்லுங்க” மீண்டும் சிரித்தான்.
செல்வத்தைப் பார்த்தாள். அவன் அறையில் தொங்க விடப்பட்டிருந்த போட்டோக்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“எங்க வீட்டுக்காரரு அரசாங்கப் பள்ளிக்கூடத்தில ஓ.ஏ.வா.இருந்தாரு. எங்க பையன நல்லாத்தான் படிக்க வச்சாரு. என்னா தல எழுத்தோ இவன் மண்டயில படிப்பு ஏறல. காலேஜ் போயி படிச்சதோட நின்னுட்டான். வருசம் பூராவும் பரீட்ச பரீட்சயா எழுதினான். ஒண்ணுத்திலயும் பாசாவல. சொத்துப் பத்து ஒண்ணும் இல்லெ. வீடும் இல்லெ. வேல ஒண்ணுதான். அத வச்சித்தான் சோறு. காட்டுல கெடந்த நம்பளே அரசாங்க வேலைக்கி வந்துட்டம். டவுனுலியே இருந்த நம்ப புள்ளை இப்பிடி இருக்குதே, வயசும் ஏறிக்கிட்டே போவுதேன்னு அந்த ஆளுக்கு மனசுல கவல. பையனுக்கு கல்யாண வயசும் தாண்டிப் போச்சின்னு இன்னொரு கவல. மனசுல என்னா எண்ணம் வந்துச்சோ. ரிட்டயர் ஆவறதுக்கு மின்னால தூக்குலத் தொங்கிட்டாரு.” வாயில் துணியை வைத்து அடைத்தும் லீலாவதிக்கு அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. வாயை அடைக்க முடிந்தது. அவளால் கண்ணீரை அடக்க முடியவில்லை. உடம்பு நடுங்கியது. தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். சிறிது நேரம் கழித்து இளையராஜா கேட்டான் “சாவும்போது அவருக்கு வயசு என்னா?”
“அம்பத்தி ஒம்பதர.”
“எல்லாருக்கும் அம்பத்தி எட்டுலதான ரிட்டயர்மண்டு?”
“ஓ.ஏ., வாட்ச்மேனுக்கெல்லாம் அறுவது.” செல்வம் சொன்னான்.
“அப்பிடியா? எனக்குத் தெரியாது. கவர்மண்டு வேலயில இருந்த மனுசன் எதுக்கு தூக்குல தொங்குனாரு?”
செல்வம் பதில் சொல்லவில்லை.
“தம் மவனுக்கு அரசாங்க வேல கெடைக்கணுமின்னு தூக்கில தொங்கிட்டாரு.”
“என்னம்மா சொல்ற?” இளையராஜா வாய் அடைத்துப் போய்விட்டான்.
“வேலயில இருக்கும்போது செத்தா தம் புள்ளைக்கி கருண அடிப்படயில வாரிசு வேல கெடைக்கட்டும்ன்னுதான் தொங்கிட்டாரு.” லீலாவதி இப்போது அழவில்லை. அவளுடைய கண்கள் கலங்கவில்லை.
“புதுசாவும் இருக்கு. அதிசயமாவும் இருக்கு. ஒலகத்தில பெத்தப் புள்ளையை ரோட்டுல போட்டுட்டுப்போறாங்க. தூக்கில தொங்கி செத்துப்போறாங்க. எத நம்பறது? அரசாங்கம் தொட்டில் குழந்தை திட்டம்ன்னு தொடங்கி நடத்துற அளவுக்கு தெனம் ஒன்னுரெண்டு புள்ளைய ரோட்டுல, குப்ப தொட்டியிலன்னு போட்டுட்டு போறாங்க. அதே மாதிரி வயசானவங்க தெனம் ஒருத்தராவது ரோட்டுக்கு வந்துடுறாங்க.” என்று சொன்ன இளையராஜா “வேல கெடச்சிதா?” என்று கேட்டான்.
லீலாவதி பதில் சொல்லவில்லை.
“மூணு வருசம் கழிச்சி கெடச்சிது.” வேண்டா வெறுப்பாக செல்வம் சொன்னான்.
“பரவாயில்ல.”
“மூணு வருசம் அலயாத அலச்சல் இல்ல. நடக்காத நட இல்லெ. ஏறி இறங்காத ஆபீஸ் இல்ல. பணமும் செலவாச்சி.” செல்வம் சலித்துக்கொண்டான்.
“சரி. இதுக்காகத்தான் செத்தாருன்னு தெரிஞ்சா வேலய கொடுத்திருக்க மாட்டாங்களே?”
“சீட்டு கெடச்சதுமே அடுப்புல போட்டுட்டன். இன்னிக்கித்தான் அதெப் பத்தி முதமுதலா வாயத் தொறக்கிறன் எட்டு வருசம் கழிச்சி.” லீலாவதி அழுதாள்.
“சீட்டுல என்னதான் எழுதியிருந்தாரு?”
“அறுவது வயசு கிழவன் நானு. இனிமே உசுரோட இருந்து என்னா செய்யப்போறன்? நான் செத்தா எம் புள்ளைக்கி கருண அடிப்படயில வாரிசு வேலயாவது கெடைக்கும். அத வச்சி அவனுக்கு ஒருத்தன் பொண்ணு தருவான். இதென்ன அந்தக்காலமா? ஆள நம்பி பொண்ணு தர? வேலய நம்பி, பணத்த நம்பி பொண்ணு தர காலமா இருக்கு. அவன் ஒருத்தனுக்காகத்தான் உசுர வச்சியிருந்தன். அவனுக்காகவே போவட்டும். எம் மனசுல கொற ஒண்ணும் இல்லெ. எப்பிடியாவது அலஞ்சி திரிஞ்சி எம் புள்ளைக்கு ஒரு வேலய வாங்கு. ஒரு பொண்ணப் பாத்து முடிச்சி வை. நான் செத்த விசயம் யாருக்கும் தெரியக் கூடாது’ன்னு எழுதியிருந்தாரு.”
லீலாவதி அழுகையை அடக்கிக்கொண்டு உட்காந்திருந்தாள். அதுவரை அமைதியாக இருந்த செல்வம் கோபம் வந்த மாதிரி “எம் புருசன் செத்ததாலதான் ஒனக்கு வேல வந்துச்சின்னு தெனம்தெனம் சொல்லிக்காட்டுனா மனுசன் எப்பிடி சார் உசுரோட இருக்க முடியும்?” என்று சொன்னான். அவனுக்கு கண்கள் கலங்கிவிட்டன.
“நீயும் ஒம் பொண்டாட்டியும் சும்மா இருக்கும்போது நானாவா வந்து அந்த பேச்ச எடுக்கிறன்?” எரித்து விடுவது மாதிரி செல்வத்தைப் பார்த்தாள் லீலாவதி.
“நான்தான் ஒன்னோட மவன். நீ சொல்றத பொறுத்துக்குவன். என்ன இருந்தாலும் எம் பொண்டாட்டி வேத்தாளுதான? அவ எப்பிடி ஒம் பேச்ச பொறுத்துக்குவா?”
“அப்பிடியா?” என்று ஒரு தினுசாகக் கேட்ட லீலாவதிக்கு கோபம் வந்துவிட்டது. “எம் புருசனோட ஒழைப்ப அவளும்தான திங்குறா? அத நெனச்சிப் பாக்க வாண்டாமா? அம்மாவாச விரதம் இருந்து இருக்கீங்களா? மாசி மகத்தில அந்தாளு பேருல ஒரு பாப்பான்கிட்ட ஒரு படி பச்சரிசியும் ஒரு வாழக்காயும், ஒரு புடி அவித்திக் கீரையும் ஒரு தடவயாவது கொடுத்திருக்கீங்களா? எல்லாத்துக்கும் நான்தான் போவணுமா? இதெ நான் கேட்டா, சண்டக்காரி. மருமவள வாழவிடாதவ? அப்பிடித்தான? புருசன் பொண்டாட்டி சிரிச்சி பேசிக்கிட்டிருந்தா எங்கம்மாவுக்கு புடிக்காதுன்னு நீயே சொல்லுவ”
“கத்தாதம்மா. ஒனக்கு விசயம் புரியல. ஒலகத்தில இருக்கிற எல்லா அப்பா அம்மாவும் தான் பெத்த புள்ளைங்களுக்காகத்தான் உசுரு வாழுறாங்க. சம்பாதிக்கிறாங்க. ஆனா நீங்க ரெண்டு பேரு மட்டும்தான் அதிசயமா எனக்காக வாழ்ந்த மாதிரியும், வளத்த மாதிரியும் பேசுறீங்க.”
        லீலாவதிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ. “நானும் எம் புருசனும் அதிசயமில்லதான். நீயும் ஒம் பொண்டாட்டியும்தான் அதிசயம். ஒன் மாமியா வீட்டு சனங்களும் அதிசயம்தான்.”
“எதுக்கும்மா கத்துற?”
“நான் கத்தல. இனி நான் ஒன்னோட வீட்டுக்கு வல்லெ. என்ன உட்டுடு. ஆனா ஒண்ணு, ஒம் பொண்டாட்டிய மட்டும் பத்தரமா வச்சிக்க. மானம் போனா உசுரோட இருக்கக் கூடாது.”
“நீ என்னா சொல்ற?” என்று செல்வம் திரும்பத்திரும்பக் கேட்டான்.
வேறு வழியின்றி சமாளிப்பதற்காக லீலாவதி சொன்னாள் “மனபேதலிப்புல ஏதோ சொல்லிட்டன். வாய் தவறிடிச்சி. விடு பேச்ச.”
        செல்வத்தின் முகம் தொங்கிப் போனதைப் பார்த்த லீலாவதி பேச்சை மாற்ற நினைத்தாள். “ஒம் புள்ளைக்கி ஒடம்பு சரியில்லன்னா எப்பிடி தூக்கிக்கிட்டு ஓடுறீங்க? நான் எத்தன நாளு படுத்த இடத்தவுட்டு எழுந்திருக்காம கெடந்தாலும் ‘என்னா ஏது’ன்னு கேக்குறீங்களா?”
“நான் ஒன்ன பாக்கலியா?” பரிதாபமாகக் கேட்டான் செல்வம்.
“நல்லா பாத்த.” வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள் லீலாவதி. “ஆறு மாசமா ஒரு கைக் குச்சி வாங்கித்தான்னு கேட்டன். இன்னம் வந்து சேரல. நீ எப்பிடி பாத்தன்னு எனக்கு தெரியாதா?” என்று சொல்லி முணகினாள்.
       லீலாவதி மீது ஏற்பட்ட கோபத்தைக் காட்டாமல் இருப்பதற்காக இளையராஜாவிடம் கேட்டான் செல்வம்: “பணம் கொடுக்கிறவங்களுக்கு ஸ்பெஷலா ஏதாச்சும் உண்டா சார்?”
“இல்லெ. இங்க அப்படி செய்யுறதில்ல. வயசானவங்க அறுபத்தி எட்டுப் பேரு இருக்காங்க. அதுல நாலு பேரால சுத்தமா நடக்க முடியாது. பொறந்த குழந்தையிலிருந்து பதினாறு வயசு புள்ளைங்க வரைக்கு மொத்தம் எழுபத்தி ஆறு பேரு இருக்காங்க. யாருக்கும் எந்த வித்தியாசமும் இல்லெ. பென்ஷன் வாங்குறவங்க ஆறு பேரு இருக்காங்க. அவங்களுக்கும் ஒரே விதமான நடைமுறைதான். காலயில இட்லி. மத்தியானம் சாப்பாடு, சாம்பாரு. ராத்திரிக்கு இட்லி, தோசன்னு ஏதாச்சும் ஒண்ணு இருக்கும். அசைவம் எப்போதுமே கெடையாது.”
“பென்சன் வாங்குறவங்க ஏதாச்சும் உங்களுக்கு கொடுப்பாங்களா சார்?” ஆர்வத்துடன் கேட்டான்.
“நானா கேக்க மாட்டன். அவங்களா கொடுத்தா வேணாமின்னு சொல்றதில்ல. கொடுத்தாலும் நாநூறு ஐநூறுதான் குடுப்பாங்க” என்று சொன்ன இளையராஜா லேசாகச் சிரித்தான். அப்போதுதான் நினைவுக்கு வந்த மாதிரி சொன்னான் “நீங்க ஒங்கம்மாவுக்காக மட்டும்தான் பணம் தரணுமின்னு இல்ல. மத்தவங்களுக்கும் ஒதவலாம். ஒதவுறதுக்கு தெரிஞ்சவங்களா இருக்கணுமின்னு அவசியமில்ல. நீங்க பணமா தரலாம். பொருளா தரலாம். அரிசி, பருப்பு, மளிக சாமான், வேட்டி, துண்டு, பொடவ, போர்வ, சோப்புக்கூட வாங்கித் தரலாம். எத கொடுத்தாலும் வாங்கிக்குவன். பதிமூணு வருசமா இத நடத்திக்கிட்டு படாதபாடு படுறன். இத ஒரு வியாபாரமா, தொழிலா மாத்த நான் விரும்பல.”
“நிச்சயமா என்னால முடிஞ்சத செய்றன் சார்.” செல்வம் உற்சாகத்துடன் சொன்னான். ரொம்ப நேரத்திற்கு பிறகு அப்போதுதான் அவனுடைய முகம் லேசாக தெளிவடைந்த மாதிரி இருந்தது. என்ன தோன்றியதோ “அனாத இல்லம் நடத்துறதுக்கும் ஒரு மனசு வேணும் சார்.”
“ஆரம்பிக்கும்போது கூர கொட்டாயிலதான் ஆரம்பிச்சன். அப்ப மூணு பேர்தான் இருந்தாங்க. சொந்த எடம். சொந்த வீடு. அதனால பிரச்சின இல்லாம போவுது. இதுக்கு பின்னால ரெண்டு கட்டடம் இருக்கு. எல்லாத்திலியும் ஆள் இருக்கு.” விரக்தியாக சிரித்தான் இளையராஜா.
“அப்பிடியா?”
“வீட்டுல, ஊருல பொழைக்கத் தெரியாதவன்னு சொல்லி திட்டுறாங்க. ஏதோ மனசுல பட்டுச்சி. ஆர்வத்தில ஆரம்பிச்சன். இப்ப படாத பாடு. இத ஆரம்பிக்கும்போது எனக்கு இருபத்தி அஞ்சி வயசு. கொஞ்சம் வயல் இருக்கு. அதுல வர்ற நெல்ல வச்சித்தான் இந்த வண்டி ஓடுது. எப்பிடியோ பதிமூணு வருசம் ஓட்டிட்டன். நெனச்சா ஆச்சிரியமா இருக்கு.” சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்த இளையரஜா மிகுந்த சலிப்புடன் சொன்னான் “எப்பயாச்சும் ஒருத்தர் ரெண்டு பேர் வந்து ஆயிரம் ஐநூறுன்னு தருவாங்க. இல்லன்னா ஒரு வேள சாப்பாட்டுக்கான செலவ ஏத்துக்குவாங்க. அதுகூட அப்பா அம்மா மேல நெனவு உள்ளவங்க. அதிகமா பொறந்த நாளுக்குத்தான் பிஸ்கட்டு, பழம் வாங்கியாந்து கொடுப்பாங்க. இப்ப பொறந்த நாளு, கல்யாண நாளு கொண்டாடுறவங்க அதிகமாகி இருக்காங்க. தமிழ்நாட்டுல புது வியாதி பரவி இருக்கு. ஆனாலும் எனக்கு சந்தோசம்தான்.” இளையராஜா சிரித்தான்.
“உண்மதான் சார்.”
“அப்பா அம்மாவ ரோட்டுல வுடுறவங்களும், பெத்தப் புள்ளைய பொறந்ததுமே ரோட்டுல போட்டுட்டுப் போறவங்களும் இருக்காங்க. ஒலகம்ன்னு இருந்தா அதிசயம் இருக்கத்தான செய்யும்?”
செல்வம் பேசவில்லை. அவனுடைய முகம் செத்துப்போயிற்று. முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டான்.
“அனாதப் புள்ளை ஒண்ணு இப்ப வந்துச்சே. அத நான் பாக்கட்டுமா?” லீலாவதி கேட்டாள்.
“கூப்புடுறன்.” என்று சொன்ன இளையராஜா “நீங்க கவர்மண்டு வேலயில இருக்கீங்க. நல்ல சம்பளம் வரும். ஒங்கம்மாவுக்கும் பென்சன் வருது. சோத்துக்கு வழி இல்லாதவங்க செய்யுற வேலய நீங்களும் செய்யாதீங்க. நான் சோறு போடுறதுக்காக சொல்லல. ஒங்களுக்கு செல்வம்ன்னு பேரு வச்சிருக்காங்க. அவங்களுக்கு நீங்கதான் செல்வம். இது பேருக்காக மட்டும் வச்சதில்ல. நல்ல பேரு.” என்று சொன்ன இளையராஜா செல்வத்தையே கூர்ந்துப் பார்த்தான். பிறகு நிதானமாக சொன்னான் “இப்ப புது பேசன் ஒண்ணு நம்ம நாட்டுல உருவாக்கிகிட்டு வருது. கல்யாணத்துக்கு, விசேசத்துக்கு, கோவிலுக்குப் போவும்போது வீட்டுல வயசானவங்க, ஒடம்புக்கு முடியாதவங்க இருந்தா அவுங்கள கொண்டுபோயி ஆஸ்பத்திரியில விட்டுட்டுப் போறது. இப்ப இந்தத் தொழில் நல்லா வளந்துக்கிட்டு வருது. மெடிக்கல் டூருன்னு வெளிநாட்டுக்காரங்க இந்தியாவுக்கு அதிகமா வர ஆரம்பிச்சிட்டாங்க. ஆறு மாசம் வரை தங்கறாங்க. மத்த நாட்ட ஒப்பிடும்போது நம்ம நாட்டுல செலவு ரொம்ப சீப். பெரியவங்கள வீட்டுல வச்சிக்க முடியாமதான் இந்தக்காரியங்கள செய்யுறாங்க. சில பேரு பணத் திமிர்லயும் செய்யுறாங்க. நாட்டுல பணப்புழக்கம் அதிகமாயி இருக்கு. அதே மாதிரி முதியோர் இல்லமும் அதிகமாயி இருக்கு.”
செல்வத்துக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அதே நேரத்தில் கோபமும் வந்தது. “இது என்னோட ஆச இல்லெ சார். எங்கம்மாவோட ஆச. அதோட புடிவாதம். வேற வழியில்ல கூட வந்தன். அதோட ஆசக்கி ஒரு வாரம் பத்து நாள் இருக்கட்டும். மனசு மாறிட்டா கூப்புட்டுக்கிட்டுப்போயிடுறன்.”
       கடகடவென்று இளையராஜா சிரித்தான். “சொந்தக்காரங்க வீட்டுக்கு அனுப்புறீங்களா? கோயில் குளத்துக்கு அனுப்புறீங்களா? ஒரு வாரம் போயிட்டு வரட்டும்ன்னு சொல்றதுக்கு. இது அனாத இல்லம் சார்.” கடுமையான குரலில் சொன்னான் இளையராஜா.
செல்வம் மறு பேச்சு பேசவில்லை. கையைக்கட்டிக்கொண்டு ஊமை மாதிரி உட்கார்ந்திருந்தான். இளையராஜாவின் பேச்சு லீலாவதிக்கு திகிலை உண்டாக்கியது. தன்னை சேர்த்துக்கொள்ளாவிட்டால் என்ன செய்வது? வீம்பு பிடித்துக்கொண்டு, சண்டை பிடித்துக்கொண்டு விட்டைவிட்டு வெளியே வந்த பிறகு மீண்டும் அந்த வீட்டிற்குள் எப்படி போவது? மீறிப் போனால் கலாமணி என்ன சொல்வாள்? அவளுடையப் பேச்சும், செய்கையும் தூக்கில் தொங்கி சாக செய்வதுபோல் இருக்கும். அதைவிட பெரிய கொடுமை அவளுடைய நடத்தையைப் பொறுத்துக்கொண்டு இருப்பது. அவள் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே போய்விடுவதையும், வீட்டில் இருக்கிற நேரத்தில் யாரிடமோ ஓயாமல் சிரித்துசிரித்து போன் பேசிக்கொண்டிருப்பதையும் எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும்? சொன்னால் சண்டை நடக்கும். அடிதடியாகும். புருசன் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டால்? செல்வம் என்ன ஆவான்? பிள்ளைகள் என்ன ஆகும்? யோசிக்கயோசிக்க  பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. திகிலாக இருந்தது. எது நடந்தாலும் நடக்கட்டும். எதற்கும் தான் ஒரு சாட்சியாக இருக்க வேண்டாம் என்று நினைத்த லீலாவதி கெஞ்சுவது மாதிரி சொன்னாள் “எனக்கு மாசம் ரெண்டாயிரம் வருது. பூராத்தயும் அப்பிடியே கொடுத்திடுறன். முகம் சுளிக்காம ஒரு வாய் பச்சத் தண்ணி கொடுத்தா போதும். இந்த வயசில பணத்த நான் என்னா செய்யப்போறன்? இங்க இருக்கிற புள்ளைங்களுக்கு மொட்டப் போடுறதுக்காவது என் புருசன் பணம் செலவு ஆவட்டும். நான் இங்கியே இருந்துக்கிறன். புள்ளைங்களப் பாத்துக்கிறன். ஒரு ஆயா அம்மாவா என்ன வச்சிக்குங்க. புள்ளைங்ககூட இருந்தா பொழுது போறது தெரியாது. இந்த மாதிரி புள்ளைங்களுக்கு ஒதவுனா புண்ணியம் கெடைக்கும். கடசி காலத்தில ஏதாச்சும் செஞ்சி நல்ல மோட்சத்துக்குப் போறன். அதுக்காச்சும் என்னெ வச்சிக்குங்க.” அழுதாள். கையெடுத்துக் கும்பிட்டாள்.
       இளையராஜாவுக்கு என்ன தோன்றியதோ கூர்ந்து அவளையேப் பார்த்தான். பிறகு சமாதானப்படுத்துவது மாதிரி சொன்னான் “அழுவாதீங்க.”
“எனக்கு பணம் வாண்டாம். காசு வாண்டாம். யார்க்கிட்டயாவது பேசணும். சிரிக்கணும். அழுவணும். அதுதான் எனக்கு வேணும். அதுதான் எனக்கு பணம். தங்கம். சோறு. சாமி.” கையெடுத்துக் கும்பிட்டாள்.
“பெத்த புள்ளை உசுரோட இருக்கும்போது நீங்க இப்பிடி பேசறதும் தப்பு. நான் சேக்குறதும் தப்பு. கோவத்தில, ஆத்திரத்தில பேசுற பேச்சு. உண்ம இல்லெ.”
“தாலி கட்டுன புருசன்னு ஒருத்தன் இருந்தா நான் எதுக்கு இங்க வரப்போறன்? நூறு புள்ளை இருந்தாலும் புருசன் மாதிரி வருமா?” வேகமாகக் கேட்டாள் லீலாவதி.
“சும்மா இரும்மா. ஒலகத்தில இல்லாத புருசன் மாதிரி திரும்பத்திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருக்கிற.” கத்தினான் செல்வம். அவனை முறைப்பது மாதிரி பார்த்த லீலாவதி வேகமாகக் கத்தினாள் “ஒலகத்தில இல்லாத புருசன் இல்லெதான். ஆனா ஒலகத்தில இல்லாத அப்பன்டா ஒனக்கு. அறுவது வயசுக்கும்மேல இருந்து என்னா செய்யப்போறம்? நம்ப புள்ளையாச்சும் வேல, பொண்டாட்டி, புள்ளைன்னு இருக்கட்டும்ன்னு தூக்குல தொங்கி செத்த அப்பன் ஒலகத்தில யாருடா?” லீலாவதிக்கு அழுகை வந்துவிட்டது. அழுதுகொண்டே சொன்னாள் “ஒலகத்திலேயே நீதான் நல்ல புருசன். ஒம் பொண்டாட்டிதான் – நல்ல பொண்டாட்டி. அப்பிடித்தான் இருக்கட்டும். நல்லா இருங்க. நீங்க நல்லா இருக்கிறத நானா தடுக்கப் போறன்? நீயும், ஒன் குடும்பமும் கெட்டுப்போயிடும்ன்னுதான் நான் ராவும் பகலும் அழுவுறன். அதனாலதாண்டா நான் வீட்டவுட்டு வந்தன். பெத்த புள்ள சாவட்டும்ன்னு நெனைக்கிறவளாடா நானு?” லீலாவதியின் அழுகை நிற்கவில்லை.
“நீ எதையோ இக்கு வச்சி பேசுற. அத ஒடச்சி சொல்லு. எனக்குப் புரிய மாட்டங்குது.”
“ஒனக்கு ஒண்ணும் புரிய வாணாம். தெரிய வாணாம். என்னெ இங்கியே விட்டுட்டுப் போ. இந்த ஒரு உவகாரத்த மட்டும் நீ செஞ்சா போதும், ஒன்னெ பெத்ததுக்கு.” கத்தினாள்.
“கத்திகத்தியே மத்தவங்க வாய அடச்சிப்புடு.”
“ஆமாம் நான் கத்துறன். புத்திக் கெட்டுப்போயி. ஊருல இருக்கிற புள்ளைங்க மாதிரிதான நீயும் படிச்ச? பரீட்ச எழுதின? ஏன் எதிலயும் நீ பாசாவல? அப்பிடி நீ பாசாயி ஒரு வேலைக்கி போயிருந்தா ஒங்கப்பன் எதுக்கு சாவப்போறான்? இந்த வேல இல்லன்னா ஒம் பொண்டாட்டி ஒனக்கு கழுத்த நீட்டியிருப்பாளா? அந்த சோத்துக்கு இல்லாத நாயிவோதான் ஒனக்கு பொண்ணக் கொடுத்திருக்குமா?”
“எங்க வந்து என்னா பேசிக்கிட்டு இருக்கிற?” செல்வம் பல்லைக் கடித்தான்.
“சனங்களால ஏன் ஒண்ணா இருக்க முடியலங்கிறதுதான் எனக்குப் புரியல. நாய்கூட இருக்காங்க. பூன, ஆடு, மாடுகூட இருக்காங்க. ஆனா மனுசன்கூட இருக்க முடியல. விநோதமா இருக்கு” என்று சொல்லி சிரித்த இளையராஜா “கடசியா ஒங்க முடிவுதான் என்ன?” என்று கேட்டான்.
“நான் இங்கியே இருந்துக்கிறன். அதுக்குண்டான காச கொடுத்திடுறன்.” லீலாவதி வெட்டிப் பேசினாள்.
“நீங்க என்னா சொல்றீங்க?”
“ஒருத்தராச்சும் சந்தோசமா இருக்கணும் சார்.”
“புரியல.”
“மூணு வருசமா எங்கம்மாவுக்கும் எம் பொண்டாட்டிக்கும் சண்ட வரும். ஒடனே போயிடும். ஆனா இப்ப ஆறு மாசமா சண்ட நிக்கல. ரெண்டு பேருக்கும் இடையில என்னமோ இருக்கு. இதுக்கே எங்கம்மா பாத்து முடிவு பண்ணின பொண்ணுதான் எம் பொண்டாட்டி.”
“ஆமாம். ஆமாம். நல்லப் பொண்ணுதான். தங்கம்ன்னு பேரூ வைக்கல. அது ஒண்ணுதான் கொற.” லீலாவதி வாயைக் கோணிக்காட்டினாள். முகத்தையும் திருப்பிக்கொண்டாள்.
“நீங்க ரெண்டு பேரும் போட்டுக்கிற சண்டயில யாரு சாவுறது?” வேகமாகக் கேட்டான் செல்வம்.
அப்போது பத்து வயதுள்ள ஒரு பெண் உள்ளே வந்தது.
“என்னம்மா?” என்று இளையராஜா கேட்டான்.
“மத்தியானம் சாப்புடுறதுக்கு தண்ணி இல்லியாம். சமையல்கார அக்கா சொல்ல சொன்னாங்க.”
“சுத்தமா இல்லியா?”
“இல்லெ.”
“கரண்டு இன்னம் வல்லியா?”
“இல்லெ.”
“கரண்டு இருக்கும்போதே மோட்டார போட்டு தண்ணி பிடிச்சி வச்சிக்குங்கன்னு எத்தன முற சொல்றன். கேட்டாதான? இப்பத்தான் ஒரு நாளக்கி எட்டு மணி நேரம் கரண்ட நிறுத்துறாங்க. என்னா கவர்மண்டோ?” என்று சலித்துக்கொண்ட இளையராஜா “நீ போ. இந்தா வரன். பசங்கள பின்னாடி போயி வௌயாட சொல்லு. ஒரே சத்தமா இருக்கு” என்று சொல்லி அந்தப் பிள்ளையை அனுப்பிவிட்டு “முடிவ சொல்லுங்க. என்ன செய்யலாம்?” என்று அலுப்புடன் கேட்டான்.
“என்னால தெனம்தெனம் சாவ முடியாது சார்.”
“முடிவ சொல்லுங்க.”
“எல்லாருக்கும் கஷ்டமா இருக்கு சார். பண கஷ்டத்தத் தாங்கிக்கலாம்.”
“எல்லாருக்கும்ன்னா?”
“எங்கம்மா அமைதியா இருக்கணும். எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்கு. அது கஷ்டப்படுறத என்னால பாக்க முடியல. ஒரு வாரமா சாப்புடாம கெடக்கு. பணம் எவ்வளவு செலவானாலும் அது அமைதியா இருந்தா போதும் சார். பணத்த நான் கட்டிடுறன்.” செல்வம் வேகவேகமாக சொன்னான்.
“முடிவுக்கு நீங்க ஏற்கனவே வந்திட்ட மாதிரி தெரியுது” என்று சொல்லி சிரித்தான் இளையராஜா. பிறகு “நான் இத பணத்துக்காக நடத்தல. புரிஞ்சிக்குங்க. பணம் சம்பாதிக்கணும்ன்னு நான் நெனச்சி இருந்தா வியாபாரம் செய்யலாம். துணி கட, இட்லி கட நடத்தலாம். அரசியலுக்குப் போவலாம். எங்கப்பாவே முன்னாள் எம்.எல்.ஏ.தான். செத்துப் போயிட்டாரு. எதுவும் வாணமின்னுதான் இதெ நடத்துறன். புரியுதா? மகன்னு நீங்க ஒரு ஆளு வல்லன்னா ஒரு கேள்வியும் கெடையாது. ஒடனே சேத்திருப்பன். அந்த மாதிரி பொய்ச்சொல்லி சேந்தவங்களும் அஞ்சாறு பேரு இங்க இருக்காங்க.”
“சாரி சார். ஒங்கள கஷ்டப்படுத்துறதுக்காக நான் அப்பிடி சொல்லல. நான் பக்கத்தில திருமுட்டத்திலதான் வேல செய்யுறன். குடி இருக்கன். வெளி நாட்டுல இல்லெ. நெனச்சா ரெண்டு மணிநேரத்தில வந்திடலாம். வாராவாரம் வந்து பாத்திட்டுப் போறன். இல்லெ தெனம்கூட வந்து பாத்திட்டுப் போறன். பெத்தத் தாயப் பாக்காம எப்பிடி சார் இருக்க முடியும்? பெத்தத் தாயி சார்.” செல்வம் அழுதான்.
“அமைதியா இருங்க” என்று இளையராஜா சொன்னதைக் காதில் வாங்காத செல்வம் “மாசாமாசம் எவ்வளவு நான் தரணும்ன்னு மட்டும் சொல்லுங்க சார். கொடுத்திடுறன்.” என்று வேகமாக சொன்னான்.
“ஒங்க விருப்பம். கணக்கில்ல. கொடுக்கலாம். கொடுக்காட்டியும் இருக்கலாம். எதுவும் கட்டாயம் இல்லெ. ஒங்கள மாதிரியான ஆளுங்க பணம் கொடுத்தா பெரிய ஒதவியாத்தான் இருக்கும். கரண்டு பில் கட்ட ஒதவும்.” சிரித்தான் இளையராஜா.
மீண்டும் ஏதாவது குழப்பம் வந்துவிடுமே என்று பயந்த லீலாவதி “எனக்கு ரெண்டாயிரம் வருது. அத நான் கொடுத்துக்கிறன். நீ ஒரு சல்லிக் காசுகூட தரக் கூடாது. மீறிக் கொடுத்தா நான் அன்னிக்கே செத்திடுவன்.” வேகமாக சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
லீலாவதியை சீறுகிற பாம்பு மாதிரி பார்த்தான் செல்வம். ஆனால் அவள் அவனைப் பார்க்கவில்லை. செல்வத்தையும் லீலாவதியையும் மாறிமாறிப் பார்த்த இளையராஜா. “ஒரு நிமிசம் வெளிய இருங்க” என்று செல்வத்திடம் சொன்னான். ஏன் என்பது மாதிரி பார்த்தாலும் ஒன்றும் சொல்லாமல் வெளியே போனான் செல்வம்.
       லீலாவதியையே கூர்ந்துப் பார்த்த இளையராஜா கைப்பிள்ளைக்கு சொல்வது மாதிரி சொன்னான் “நீங்க அனாத இல்லெ. மாசம் ரெண்டாயிரம் பென்சன் வருது. அத வச்சி சாப்புட்டுக்கிட்டு வீட்டிலேயே அமைதியா இருக்கலாம். அதுதான் உங்களுக்கு நல்லது.”
“நான் சண்டபண்ற ஆளில்ல. ஊர் வம்பு பேசுற ஆளில்ல. என்னால ஒரு தொந்தரவும் வராது. உட்கார்ந்த எடத்தவுட்டு எட்டப் போவ மாட்டன். சொல்ற வேலய செய்வன்.”
“நீங்க சொல்றதெல்லாம் சரி.” என்று சொன்ன இளையராஜா சிறிது நேரம் பேசாமல் இருந்தான். பிறகு சொன்னான் - “நீங்க ஏதோ பெரிய மனக்கஷ்டத்தில இருக்கீங்கன்னு தெரியுது. யாரால பிரச்சன? எதனால பிரச்சனன்னு தெரியல. எதனால வீட்டவிட்டு வந்தீங்கன்னும் தெரியல. கோவத்தில வீட்டவிட்டு வயசானவங்க வர்றது சரியில்ல. வீட்டுல இருந்தா ஒரு பிரச்சின. வெளிய வந்தா ஆயிரம் பிரச்சின வரும் தெரியுமா? தனியா இருக்கிறதுதான் சாவு.”
 “யாராலயும் எனக்கு பிரச்சன இல்லெ. என்னாலதான் பிரச்சன எனக்கு. வயசாயிடிச்சி. இடுப்பு எலும்பு ஒடிஞ்சிப்போச்சி. புருசன் இல்லெ. இன்னம் சாவாம இருக்கன். அதுதான் பிரச்சன. சிக்கலு.” லீலாவதி வாயில் கையை வைத்துக்கொண்டு அழுதாள்.
“ஒலகத்தில வயசானவங்க எல்லாருக்கும் இருக்கிற பிரச்சனதான் இது. புதுசா ஒண்ணும் இல்லெ. ஒலகத்தில நம்பளுதின்னு ஒண்ணும் இல்லன்னு தெரிஞ்சிக்காததாலதான் எல்லாப் பிரச்சனயும். நீ, நான்ங்கற போட்டிதான் பிரச்சன. அப்பறம் ஆச, அதிகாரம்”
“கெட்ட நடத்த உள்ள பொம்பள இருக்கிற வீட்டுல என்னால இருக்க முடியாது.”
“புரியல.”
“ஒண்ணுமில்ல. இஷ்டப்பட்டா சேத்துக்குங்க. இல்லன்னா வுட்டுடுங்க. சாவறதுக்கு ஒலகத்தில வழியா இல்லெ. கடசி ஆச கேட்டுப் பாப்பம்ன்னு வந்தன்.” லீலாவதி அழுதாள்.
       லீலாவதிக்கு அவசரப்பட்டு செல்வத்திடமும் சரி, மற்றவர்களிடமும் வார்த்தையை விட்டுவிட்டோமோ என்று பயம் வந்தது. உயிர் போனாலும் செல்வத்திடம்கூட சொல்லக் கூடாது என்று நினைத்திருந்த விசயம் எப்படி வாயிலிருந்து வந்தது? எது வெளியே தெரியக் கூடாது என்று வீட்டைவிட்டு வெளியே போக வேண்டும் என்று நினைத்தோமோ அதையே சொல்லி சேர வேண்டுமா? செத்தாலும் சரி வாயைத் திறக்கக் கூடாது என்று நினைத்தாள்.
       கலாமணியின் மீது ஒரு நாளும் இல்லாத அளவுக்கு இப்போதுதான் அவளுக்கு கோபம் உண்டாயிற்று. எங்கே வந்து உட்கார வைத்துவிட்டாள்? ஒரு வருசமாக எப்படி அவளுடைய நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது? எப்போது செல்வம் அவளுக்கு செல்போன் வாங்கி கொடுத்தானோ அதிலிருந்துதான் எல்லா மாற்றமும் ஆரம்பித்தது. பேச்சில், நடத்தையில், சிரிப்பில், உடையில், வெளியே போவதில் – என்று எல்லாமும் தலை கீழாகிவிட்டது. செல்வம் வீட்டைவிட்டு கிளம்பினால்போதும் மறுநொடியே செல்போனில் பேச ஆரம்பித்துவிடுவாள். குறைந்தது அரை மணி, ஒரு மணி நேரம் பேசுவாள். கேட்டால் ‘அம்மாவிடம் பேசினேன், அண்ணனிடம் பேசினேன்’ என்று சொல்வாள். பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் விடப்போகிறேன் என்று போவாள். போனால், திரும்பி வருவதற்கு ஒரு மணிநேரம் ஆகும். சாயங்காலம் பிள்ளைகளைக் கூப்பிடப் போகிறேன் என்று போனால் அதற்கும் ஒரு மணிநேரம் ஆகும். அதைக் கேட்கப் போய்தான் பத்து நாட்களுக்கு முன் கலாமணிக்கும் லீலாவதிக்கும் பெரிய சண்டை நடந்தது. செல்வம் அலுவலகம் போன மறுநொடியே ஜோடித்துக்கொண்டு வெளியே கிளம்பினாள். போனவள் சாயங்காலம் நாலு மணிக்குத்தான் வந்தாள். வீட்டுக்கு வந்த கலாமணியிடம் “எங்கப்போன? எப்ப திரும்பி வர்ர? நீ செய்யுறது குடும்பத்துக்கு ஏத்ததா? ரெண்டு புள்ளை இருக்கிறத மறந்திடாத. செல்வத்துக்குத் தெரிஞ்சா என்னா ஆவும் தெரியுமா?” என்று லீலாவதி கேட்டதற்கு  கலாமணி சொன்ன பதில் செருப்பால் அடித்த மாதிரி இருந்தது.
“சொல்லு. என்னா சொல்லணுமோ சொல்லு. ஒலகத்திலியே ஒம் மவன்தான் மன்மத ராசாவா? எத ஆக்கி வச்சாலும் அத அப்பிடியே தின்னு தீத்துடுவாரா? எத ஆக்கி, படச்சி வச்சாலும் மூந்துமூந்து பாத்திட்டுப் போற ஆளுதான?”
“அப்பிடின்னா ரெண்டு புள்ள எப்பிடிப் பெத்த?”
“நீ பெத்த மாதிரிதான்.”
“சரிதான். ரெண்டு புள்ளை இருக்கு. அத மறந்திடாத.”
“நீ செத்தாத்தான் எனக்கு நிம்மதி. நீ என்னிக்கு மண்ணுக்குள்ளாரப் போற நாள் வருமோ?” என்று சொன்னதைவிட பெரிய கஷ்டமாக இருந்தது “எத ஆக்கி வச்சாலும் மூந்துமூந்து பாத்திட்டுப் போற ஆளுதான?” என்ற வார்த்தை. லீலாவதியை நெருப்பில் தள்ளியது மாதிரி இருந்தது. கலாமணி சொன்ன வார்த்தையை செல்வத்திடம் சொன்னால் என்ன நடக்கும்? ஒரு நாள் இல்லை ஒரு நாள் சொல்லிவிட நேர்ந்தால் – குடும்பம் என்னாகும் என்று யோசித்த லீலாவதி – அப்போதுதான் இனி வீட்டில் இருக்கக் கூடாது என்று முடிவெடுத்தாள். வீட்டிலேயே இருந்தால் கலாமணி செய்வதை பொறுத்துக்கொள்ளவும் முடியாது, செல்வத்திடம் சொல்லவும் முடியாது. மீறி சொன்னல் குடும்பம் அழிந்து போகும் என்று நினைத்துத்தான் வந்தாள். ஆனால் அதை சொல்லும்படி இளையராஜா கேட்கிறான். உயிர் போனலும் சொல்லக் கூடாது என்று முடிவெடுத்து வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
“என்னம்மா ஒண்ணும்  சொல்லாம உட்கார்ந்திருக்கீங்க?” என்று இளையராஜா கேட்டான். லீலாவதி வாயைத் திறக்காததால் எழுந்து சென்று ஹாலில் நின்றுகொண்டிருந்த செல்வத்தை அழைத்துக்கொண்டு வந்தான்.
“எங்கம்மா என்ன சொல்றாங்க?” என்று சிரித்துக்கொண்டே செல்வம் கேட்டான்.
“ரொம்ப மன அழுத்தத்தில இருக்காங்க. மனசுல ஏதோ பெரிய காயம் இருக்கு. கொஞ்ச நாள் இருக்கட்டும். பின்னால என்னா நடக்குதின்னு பாக்கலாம்.” எந்த ஈடுபாடும் இல்லாமல் சொன்னான் இளையராஜா.
“நல்லதுதான் சார். இடம்மாறி இருக்கட்டும்.”
“என்னிக்கும்மா வர்றீங்க?” இளையராஜா கேட்டான்.
“நான் ஏற்கனவே வந்துட்டன். இப்பிடியே இருந்துக்க வேண்டியதுதான்.”
“சரிதான்.” இளையராஜா சிரித்தான். பிறகு செல்வத்தின் பக்கம் பார்த்து “ஏதாச்சும் கொண்டாந்து கொடுக்கிறதா இருந்தா கொடுங்க.” என்று சொன்னான்.
“என்னம்மா எடுத்தாரணும்?” ரொம்பவும் அக்கறையுடன் கேட்டான்.
“எதுவும் வாணாம். நீ போயி ஒன் பொழப்பப்பாரு. குடும்பத்தப்பாரு.” வெடுக்கென்று சொன்னாள்.
“மாத்துத்துணிகூட வாணாமா?”
“வாணாம்.” ஒரே வெட்டாகக் பேச்சை வெட்டினாள்.
“அவுங்க ரொம்ப கோபமா இருக்காங்க. நீங்க போயீட்டு அப்பறமா வாங்க. பேசிக்கலாம்” என்று செல்வத்திடம் சொன்ன இளையராஜா “உள்ளார வாங்க. மத்தவங்கள காட்டுறன். நீங்க எங்க படுக்கணும், எங்க இருக்கணும்ங்கிறத பாப்பம். ஒங்க வேலய நீங்கதான் பாத்துக்கணும். சமையல் செய்ய ஒதவணும். கூட்ட, பெறுக்க செய்யணும். சமைக்கிறதுக்கு மட்டும்தான் இங்க ஆள் இருக்கு. சின்னப் புள்ளைங்கள பாத்துக்கணும்.” என்று சொல்லிவிட்டு செல்வத்தின் பக்கம் திரும்பி “நான் விழுந்தா நீங்க தூக்கிவிடணும். நீங்க விழுந்தா நான் தூக்கிவிடணும். அதுக்காகத்தான் மனுசங்க சேந்து வாழறது. அதுக்காகத்தான் சொந்தம் வச்சிக்கிறதெல்லம். அத மட்டும் நீங்க மனசுல வச்சிக்குங்க. ரெண்டாயிரத்தி பதினாலுலியே ஒலகம் இப்பிடியிருந்தா இன்னம் அம்பது வருசம் கழிச்சி எப்பிடி இருக்கும்? நெனைக்கவே பயமா இருக்கு.” என்று சொல்லிவிட்டு எழுந்து ஹாலுக்குப் போனான்.
“ஒனக்கு தல எழுத்தாம்மா?” என்று சொன்ன செல்வம் அழுதான். லீலாவதி அழவில்லை.
“மாசாமாசம் வந்து ஒங்காச வாங்கிக்கிட்டு போ.”
“என்ன காசு?”
“ஒங்கப்பனோட பென்சன் பணம்தான்.”
“எனக்கு வாண்டாம்.” அழுதான் செல்வம்.”
“ஒங்கப்பன் ஒன்னத்தான பெத்தான்? அவன் காசு ஒனக்குத்தான் சேரணும். நான் ஒங்கப்பனுக்கு பொறக்கல. அவனால ஒரு புள்ளையத்ததான் பெத்தன். எங்கப்பன் காசுதான் எனக்கு சேரணும்.”
“செத்தாலும் வாங்க மாட்டன்.” செல்வம் அழுதான்.
       மடியில் வைத்திருந்த சிறு பொட்டலத்தை எடுத்து செல்வத்தின் கையில் திணித்துவிட்டு ஹாலுக்கு வந்தாள் லீலாவதி. பின்னாலேயே வந்த செல்வம் லீலாவதி கொடுத்தப் பொட்டலத்தைத் திருப்பிக் கொடுக்க முயன்றான். வெறுப்புடன் முகத்தைச் சுளித்துக்கொண்டு சொன்னாள் “அது ஒனக்கு சேர வேண்டிய பொருளுதான்.”
“சார் நீங்க கிளம்புங்க. நாளக்கி வாங்க பேசிக்கலாம். எனக்கு வேல இருக்கு.” என்று இளையராஜா சொன்னான்.
“நாளைக்கோ, நாளான்னைக்கோ வந்து பாக்குறன் சார்” என்று சொல்லிவிட்டு கையிலிருந்த பொட்டலத்தை லீலாவதியிடம் கொடுக்க முயன்றான். அவள் தூரமாக நடக்க ஆரம்பித்ததும் வெறுப்புடன் இளையராஜாவுக்கு வணக்கம் சொல்லிவிட்டு வெளியே வந்தான்.
லீலாவதி கொடுத்த பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தான். மூக்குத்தி, தோடு, இரண்டு மோதிரம் இருந்தது. நூறு ரூபாய் நோட்டுகள் முப்பது இருந்தது. செல்வத்தின் முகம் பிரகாசமானது. பெரிய பாரத்தை இறக்கி வைத்தது மாதிரி பெருமூச்சுவிட்டான். உற்சாகமாக சிகரட்டைப் பற்றவைத்தான். ஒரு சினிமாப் பாட்டை ஹம்மிங் செய்தபடியே பஸ்ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
       அனாதை இல்லத்தின் வாசல் கதவு ஓரம் மறைந்து நின்று செல்வம் நடந்து போவதையேப் பார்த்து அழுதுகொண்டிருந்த லீலாவதியை மட்டுமல்ல அந்த கட்டிடத்தையும் அவன் ஒரு முறைகூட திரும்பிப் பார்க்கவில்லை.


உயிர்மை – மார்ச் 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக