புதன், 4 பிப்ரவரி, 2015

கற்க கசடற-விற்க அதற்குத் தக - பாரதி தம்பி நூலுக்கு எழுதிய அனிந்துறை. டிசம்பர் 2014

கற்க கசடற-விற்க அதற்குத் தக - பாரதி தம்பி
எழுத்தாளர்: இமையம்

கற்பித்தல் செயலுக்கு தேவை ஆசிரியர் மாணவர்
 மட்டுமே. கட்டிடங்கள் ஒருபோதும் கற்பிக்காது.

ஒரு நூலின் மதிப்பு அதை எழுதிய எழுத்தாளனால் ஏற்படுவதல்ல. சமூக பொருத்தத்தால், அதன் உண்மைத் தன்மையால் ஏற்படுகிறது என்பதற்கு பாரதி தம்பியின் கற்க கசடற-விற்க அதற்குத் தக என்ற நூல் சரியான உதாரணம். கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், கல்வி அமைப்புகள், அரசு அமைப்புகள் செய்ய வேண்டிய பெரிய வேலையை ஒரு சமூகவியலாளன் பார்வையில் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் நிகழ் காலத்தில் பெரிய பிரச்சினையாக மட்டுமல்ல அடிப்படைப் பிரச்சினையாகவும் அதிக சிக்கல்கள் நிறைந்த பிரச்சினையாகவும் இருக்கிற கல்வி குறித்து எழுதியிருக்கிறார். தமிழக கல்விச் சூழலைப் புரிந்துகொள்வதற்கு இந்நூல் அரிய ஆவணமாக இருக்கிறது.

அரசுப் பள்ளிகள் வீழ்ச்சி அடைவதற்கான காரணங்களாக எவைஎவை இருக்கின்றன, தனியார் பள்ளிகளின் பெருக்கத்திற்கு எவைஎவை காரணங்களாக இருக்கின்றன? இவற்றிற்கு கல்விக் கொள்கைகள் காரணமா? நிர்வாகமின்மை காரணமா? அரசின் பொறுப்பற்றத்தனம் காரணமா? பெற்றோர்களின் பேராசை காரணமா? ஆசிரியர்களின் அலட்சியம் காரணமா என்று சமூக உளவியல் பார்வையோடு ஆராய்ந்திருக்கிறார் பாரதி தம்பி. இந்நுாலின் பலம் என்பது பகுப்பாய்வு தன்மை மட்டுமல்ல உ்ண்மைத் தன்மையும், சமநிலையும்தான். 

கல்வியிற் சிறந்த தமிழ்நாடுஎன்றோ எழுத்தறிவித்தவன் இறைவன்என்றோ கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றேஎன்றோ, “அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்ன யாவினும் புண்ணியங் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்“ என்று இன்று சொன்னால் அது நம்மை நாமே கேலி செய்துக்கொள்வதைப் போன்றது. கடந்த நுாற்றாண்டுவரை பிறப்பின் அடிப்படையில் பலருக்குக் கல்வி மறுக்கப்பட்டது. இன்று பணத்தால் மறுக்கப்படுகிறது.  இந்த படிப்புக்கு, இவ்வளவு விலை என்று விளம்பரப்படுத்தி விற்கப்படுகிறது. குழந்தைகள் இன்று பணம் கறப்பதற்கான ஒரு வழியாக இருக்கிறார்கள். பணம் உள்ளவனுக்கு முதல் தரக்கல்வி. பணம் இல்லாதவனுக்கு நாலாம் தரக் கல்வி. பணம் உள்ளவனுக்கு தனியார் பள்ளியில் கல்வி, பணம் இல்லாதவனுக்கு அரசுப் பள்ளியில் கல்வி என்றாகிவிட்டது. தனியார் பள்ளியில்தான் தரமான உலகத்தரமான சிறந்த கல்வி கிடைக்கிறது என்று மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோர்கள், அரசு மட்டுல்ல , அரசு பள்ளி ஆசிரியர்களும் சொல்வதுதான் வேடிக்கையானது.

தன்னைப் புரிந்து கொள்ளுதல், தான் வாழும் சமூகத்தை புரிந்துகொள்ளுதல், தான் வாழும் சமூகத்தின் முந்தைய வரலாறுகளை அறிந்துகொள்ளுதல், இயற்கையை புரிந்துகொள்ளுதல் சமூகத்தோடும் இயற்கையோடும் இணைந்து வாழ்வதற்கும், புரிந்துகொள்வதற்கும் உதவுவதே கல்வி என்ற நிலை மாறி, பணம் ஈட்ட, வெளிநாட்டில் வேலை செய்ய, முதலீடு செய்த பணத்தை பன்மடங்காக பெருக்க என்பதாகக் கல்வியை மாற்றிவிட்டோம். குழந்தைகளை கறிக்கோழிகளைப் போன்று வளர்ப்பதற்கு பழகிவிட்டோம். அதன் விளைவு கல்வி என்பதை வணிகப் பொருளாக, பண்டமாகச் சந்தைப்படுத்திவிட்டோம். கல்வி என்பதின் உண்மையான பொருளை உணரத் தவறிவிட்டோம் என்பதுதான் பாரதி  தம்பியின் பெருங்கவலை. அந்தக் கவலைதான் கற்க கசடற-விற்க அதற்குத் தக.

தனியார் பள்ளியில் படிப்பது மட்டுமல்ல ஆங்கில வழியில் படிப்பதுதான் அறிவை வளர்க்கும்  என்று யார் சொன்னார்களோ? அப்படித்தான் மொத்த தமிழ்ச் சமூகமும் நினைக்கிறது. ஒரு குழந்தையின் அறிவுத்திறன், கற்றல் திறன் தாய்மொழியில் பயிலும்போது மட்டுமே முழுமை பெறும். எழுதுதல், பேசுதல், படித்தல், கேட்டல் ஆகிய செயல்பாடுகள் தாய்மொழியில் சம அளவில் நிகழும் போதுதான் ஒருங்கிணைந்த ஆளுமைத்திறன் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. ஆனால் நிஜமான கற்றல் செயல்பாடுகளுக்கு எதிரிகளாக இருக்கக்கூடிய தனியார் பள்ளி முதலாளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்,  ஆங்கிலத்தில் படிப்பதுதான் கல்வி, ஆங்கில மொழியில் படிப்பதுதான் அறிவு, தனியார் பள்ளியில் படித்தால்தான் போட்டித் தேர்வில் வெற்றிபெற முடியும் என்ற பொய்ப் பிரச்சாரத்தை செய்து அதில் வெற்றியும் பெற்றுவிடடனர் என்பதை வேதனையோடு பதிவு செய்யும் பாரதி தம்பி தாய்மொழியின் வலிமை என்ன என்பது பற்றி கூறும் கருத்து முக்கியமானது. தாய்மொழி வெறும் மொழியல்ல, ஊடகமல்ல. அது நமது பண்பாட்டின், கலாச்சாரத்தின், நாகரீகத்தின், அறிவின் அடையாளம் என்று கூறுகிறார். பண்பாட்டை, கலாச்சாரத்தை, நாகரீகத்தை, அறிவை, தாய்மொழியைப் புறக்கணித்த ஒரு கல்வியைத்தான் நாம் நம் குழந்தைகளுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறோம்.


அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கும், தனியார் பள்ளிகளின் பெருக்கத்திற்கும் அரசுதான் முதல் குற்றவாளி என்று பல ஆதாரங்களோடு பாரதி தம்பி நிறுவிக்காட்டுகிறார். சுதந்திரம் பெற்று அரை நுாற்றாண்டுக் காலம் முடிந்த பிறகு 2009-ல் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச ஆரம்பக் கல்வி கட்டாயம் என்று சட்டம் இயற்றுகிறது. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம் நமது அரசுகள் கல்வி வழங்குவதில் எவ்வளவு முனைப்புடன் செயல்படுகின்றன என்பதை. கல்வி வழங்குவதில் முனைப்பு காட்டாவிட்டாலும் இருக்கிற கல்வி அமைப்புகளை சீர்குலைக்கிற விதமாக செயல்படாமலிருந்தாலே பெரிய காரியம். புதிய திட்டங்கள், புதிய கொள்கைகள் என்ற பெயரில் நம்முடைய அரசுகள் கல்வி அமைப்புகளை சீ்ர்குலைத்ததோடு இலவசமாகக் கல்வியை வழங்குகிற செயல்பாட்டிலிருந்து படிப்படியாக தன்னை விடுவித்தும் கொண்டது.

1975-80 காலகட்டம்வரை கூட தமிழகத்தில் அரசுப் பள்ளிகள்தான் இயங்கின. அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பினும் கல்விச் சூழல் சிறப்பாகவே இருந்தன. 1986-ல் ராஜீவ்காந்தி கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையால் நவோதயா, மாதிரிப் பள்ளிகளால் அதி புத்திசாலிகளுக்கு மட்டுமே கல்வி, அதி புத்திசாலிகள் மட்டுமே தேவை என்ற முழக்கத்தை உருவாக்கி கல்வி வழங்குவதில் பெரும் பாகுபாட்டை உருவாக்கியது. அதே காலகட்டத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். இலவசமாக அனைவருக்கும் கல்வியை அரசே வழங்க வேண்டும் என்பதை மாற்றி பணம் கொடுத்துப் பெறவேண்டியது கல்வி என்று தனியார் மயத்தை ஊக்குவித்தார். 1991-ல் நரசிம்மராவ் புதிய பொருளாதாரக் கொள்கை ஒன்றைக் கொண்டுவந்து அரசு வழங்க வேண்டிய இலவசக் கல்வி, சுகாதாரம், உணவு போன்ற அடிப்படைக் கடமைகளிலிருந்து முற்றிலுமாகத் துண்டித்து்க்கொண்டு எப்படி அனைத்து சமூகத் துறைகளையும் தனியார்மயமாக்கினார் என்பதை வரலாற்று சான்றுகளுடன், புள்ளி விவரங்களுடன் விரிவாக பாரதி தம்பி எழுதியிருக்கிறார். கல்வித் துறையில் ஏற்பட்ட சரிவு என்பது ஏதோ தற்காலத்தில் மட்டுமே ஏற்பட்டதல்ல என்பதுதான் இந்த தகவல்கள், புள்ளிவிவரங்கள் நமக்குச் சொல்கிற செய்தி.  கல்வித்துறையில் ஏற்பட்ட சீறழிவு சமூகத்தின் எல்லாத் துறைகளையும் சீரழித்துவிட்டது என்பது வரலாறு.

நம்முடைய அரசுகள் எப்படி தன்னுடைய கடமைகளிலிருந்து விலகிச் செல்கிறன்றன?   தனியார் பள்ளிகளில்  தங்கள் குழந்தைகள் படிப்பதையே பெற்றோர்கள் விரும்புகிறார்கள், ஆங்கில வழியில் பயில்வதையே விரும்புகிறார்கள், இதற்கு அரசு என்ன செய்ய முடியும்? தனியார் பள்ளிகளின் வளர்ச்சியை தடுக்கவும், அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியைத் தடுக்கவும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் போதிக்க அரசாணை வெளியிட்டுள்ளோம் என்ற அரசின் அறிக்கையை பாரதி தம்பி கேள்வி கேட்கிறார். தனியார் பள்ளிகளுக்கு தொடர்ந்து அங்கீகாரம் வழங்குவது ஏன்? தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் முறையான அங்கீகாரம் பெறாமல் இயங்கும் பள்ளிகளின் மீது துறை சார்ந்த நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யவில்லை? தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழுவை அமைத்தது ஏன்? தனியார் பள்ளிகளில் சேரும் ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவித்தது ஏன்? நடக்க முடியாத குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ், யோகா கிளாஸ் நடத்தும் பள்ளிகளுக்கு அரசு ஏன் அங்கீகாரம் வழங்குகிறது? டாஸ்மாக் கடைகளை போன்று தெருவுக்குத் தெரு மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகளை திறப்பதற்கு அரசு ஏன் தொடர்ந்து அனுமதி வழங்கிக்கொண்டே இருக்கிறது? குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பவர் யார்? நல்லாசிரியர் விருது கொடுக்கப்படுகிறதே? அவர்கள் எல்லாம் நல்லாசிரியர்கள் தானா? இப்படி நூறு நூறு கேள்விகள் நூலில் இருக்கின்றன. கேள்விகள் பொய்யல்ல, புனைவு அல்ல. நிஜம். அரசு அறிந்த, சமூகம் அறிந்த நிஜம். இக்கேள்விகளுக்கு யார் பதில் தருவது

தனியார் பள்ளிகள் குறித்து கற்க கசடற-விற்க அதற்குத் தக  நூலில் உள்ள புள்ளி விவரங்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைப்பவை. பிரிகேஜியில் ஒரு குழந்தைக்கான ஆண்டுக் கட்டணம் - வி்ண்ணப்பம், ப்ராசஸிங், நன்கொடை, பேருந்து, புத்தகம், சீருடை, ஸ்மார்ட் கிளாஸ், யோகா கிளாஸ் கட்டணம் என்று மொத்தம் 1.80 லட்சம். இந்தக் கட்டணம் வசூலிப்பது வெளிநாட்டில் அல்ல. தமிழ்நாட்டில்தான். நான்காம், ஐந்தாம் வகுப்புகளுக்கு லேப்டாப்பிலேயே பாடம் நடத்தப்படுகிறது என்று ஒரு பள்ளி விளம்பரம் செய்கிறது. வருடம் இரண்டு கோடி ரூபாய் லாபம் தரும் பள்ளி விற்பனைக்கென்று கோவையில் ஒரு பள்ளி விளம்பரம் செய்திருக்கிறது. தாம்பரத்தில் ஒரு பள்ளி நிர்வாகம் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறது. ஒரு மனை வாங்கினால் ஒரு குழந்தைக்கு சீட் ப்ரீ என்று அப்பள்ளி விளம்பரம் செய்திருக்கிறது. இந்த விளம்பரங்கள் நமக்குச் சொல்வது கல்வியிற் சிறந்த தமிழ்நாடல்ல - கல்வி வியாபாரம் சிறந்த தமிழ்நாடு என்பதைத்தான். இதுபோன்ற அதிர்ச்சிகரமான பல தகவல்களை நூல் முழுவதும் பாரதி தம்பி பட்டியலிட்டுள்ளார். கல்வி என்பது வணிகம்-வியாபாரம், வர்த்தகப் பொருள்-பண்டம் என்பதாகிவிட்டது. கல்வியைத் தேடி அலைந்த காலம் போய்விட்டது. இப்போது ஒவ்வொரு வீட்டின் முன்னும் – பள்ளி வேன் வந்து காத்துகொண்டு நிற்கிறது. உங்களிடம் பணம் மட்டும்தான் இருக்க வேண்டும். இந்த தகவல்களின் மூலம் நம்முடைய சமூகம் பாடம் கற்குமா?

முற்றிலும் வியாபாரமாகிவிட்ட, முற்றிலும் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தனியார் பள்ளிகளைத்தான் நம் சமூகம் உலகத்தரமான பள்ளி என்று கொண்டாடுகிறது. வணிகமயமான கல்வி நிறுவனங்களுக்கான தகுதி, அந்தஸ்து, சமூக மதிப்பு எப்படி ஏற்படுகிறது? அதிக நன்கொடை, அதிக கட்டணம் வசூலித்தால் அது தரமானப் பள்ளி. விண்ணப்பக் கட்டணம் அதிக விலை என்றால், விண்ணப்பப் படிவத்தை தருவதற்கு இழுத்தடித்தால், காத்திருக்க வைத்தால், பெரிய சிபாரிசு வேண்டுமென்று சொன்னால், பெற்றோர்களுக்குத் தேர்வு வைத்தால், வகுப்பில்-பள்ளி வளாகத்திற்குள் தமிழில் பேசியதற்காக அபராதம் விதித்தால் அது சிறந்த பள்ளி. உலகத்தரமான பள்ளி. 

100-க்கு 100 சதவீதம் தேர்ச்சி என்ற புள்ளி விவரம், ஸ்டேட் ரேங்க் இத்தனை பேர் என்ற புள்ளி விவரம், பெற்றோர்களைக் காக்க வைத்தல், அவமானப்படுத்துதல், அதிக கெடுபிடிகளைக் கடைபிடித்தல், விளையாட விடாமல் தடுத்து வைத்திருத்தல், பிரம்மாண்ட கேட், பிரம்மாண்டமான கட்டிடங்கள் ஆகியவைதான் உலகத் தரமான பள்ளிக்கு நற்சான்று. தனியார் பள்ளி பெற்றோர்களைக் கொடுரமாக நடத்துகிறது. கொடூரத்தை, இழிவை பெருமையாக ஏற்றுக் கொள்கிறோம். இழிவு எப்படி பெருமையாக இருக்க முடியும்?

தனியார் பள்ளியில் கட்டிட வசதி இருக்கறதா? குடிநீர், கழிப்பறை, காற்றோட்டம், போதிய வெளிச்சம் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை. தகுதியான ஆசிரியர்கள் முறையாக பட்டம் பெற்றவர்கள் இருக்கிறார்களா என்று பார்ப்பதில்லை. பள்ளி வளாகம், ஏரியை ஒட்டியோ, குளத்தை ஒட்டியோ, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியோ இருக்கிறதா என்று பார்ப்பதில்லை. அரசிடம் முறையான அங்கீகாரம் பெற்றிருக்கிறதா? விளையாட்டு மைதானம் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை? ஆசிரியர் மாணவர் உறவு சுமூகமாக இருக்கிறதா என்று கூட பார்ப்பதில்லை. பெற்றோர்கள் பார்ப்பதெல்லாம் 100 சதவீத தேர்ச்சி என்ற புள்ளி விவரத்தை மட்டுமே. பள்ளி நிர்வாகம் குழுந்தைகளை இயந்திரங்களைப்போல நடத்துகின்றனவா என்பதை மட்டுமே பார்க்கின்றன. கல்யாண வரன் தேடுவதில் காட்டப்படும் அக்கறையைக் காட்டிலும் ப்ரிகேஜியில் ஒரு குழந்தையை சேர்ப்பதற்கு அதிக விசாரணையும் அக்கறையும் காட்டப்படுகிறது. அந்த விசாரணையும் அக்கறையும் மதிப்பெண்ணை மட்டுமே நோக்கமாகக் கொண்டதாக இருக்கிறது. நம்முடைய கல்வி அமைப்பு முற்றிலும் மதிப்பெண்ணை மட்டுமே நோக்கமாகக்கொண்டதுதானே. குழந்தை பயிலும் பள்ளி வளாகம் குறித்த எந்த விசாரணையையும் எந்தப் பெற்றோரும் செய்வதில்லை என்பது பாரதி தம்பியின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுக்கு யார் பதில் சொல்வது? அரசா? பெற்றோர்களா?

தனியார்மயக் கல்வி வியாபாரிகளுக்கு உறுதுணையாக இருப்பது பெற்றோர்களின் பேராசை. முன்பு மெட்ரிக் பள்ளி என்று அலைந்தவர்கள் இப்போது சி.பி.எஸ்.இ என்று அலைகிறார்கள். பெற்றோர்களின் மன உலகம் எப்படி இருக்கிறது. நம்ம குழந்தைகளோட எதிர்காலம் தானே நமக்கு முக்கியம்என்றும் நம் குழந்தைகளோட எதிர்காலத்துக்காக நாம செலவு செய்துதான் ஆக வேண்டும்என்றும்  எல்லா அவமானத்தையும் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்என்றும் நம் வாழ்க்கைதான் இப்படி இருக்கிறது நம் குழந்தைகளோட எதிர்காலமாவது நன்றாக இருக்கட்டுமேஎன்றும் நான் படுகிற கஷ்டம் பெருசில்ல என் பிள்ளையோட எதிர்காலம்தான் முக்கியம்என்று சொல்கிற, நினைக்கிற பெற்றோர்களின் மன உளவியலை நன்கு புரிந்துகொண்ட தனியார் பள்ளிகளின் முதலாளிகள் தங்களின் கொள்ளை லாபத்திற்காக புதுப்புது விளம்பரங்களை, பிரச்சாரங்களை எப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று பாரதி தம்பி ஒரு பட்டியல் தருகிறார். அரசுப் பள்ளிகளில் படித்தால் போட்டித் தேர்வில் வெற்றி பெறமுடியாது. பன்னாட்டு கம்பெனிகளில் வேலை கிடைக்காது, வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. இன்றைய போட்டி உலகில் வெற்றிபெற முடியாது. அரசு பள்ளிக்கூடங்கள் தண்டம். அவற்றில் படித்தால் உருப்பட முடியாது. அரசுப் பள்ளியில் தமிழில்தான் பாடம் நடத்துவார்கள். அது உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை முற்றிலுமாக சீரழித்துவிடும். தமிழ் மொழியில் படித்தால் மூளை வளராது. தனியார் பள்ளியில் ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவாளி. இப்படியான பிரச்சாரங்கள் நம் சமூகத்தின் உளவியலையே மாற்றிவிட்டது. அரசுத் துறை என்றாலே சீர்கேடு என்ற மனப்போக்கை ஏற்படுத்திவிட்டது. இந்தப் பொய்ப்பிரச்சாரத்தில் தனியார்ப் பள்ளி முதலாளிகள் மட்டுமல்ல அரசு நிர்வாகமும், பெற்றோர்களும், முக்கியமாக ஆசிரியர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனையானது.

இன்று தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுடைய குழந்தைகள், அரசு அதிகாரிகளுடைய குழந்தைகள், அரசியல்வாதிகளுடைய குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? 99 சதவீதம் தனியார்ப் பள்ளியில்தான் படிக்கிறார்கள். தனியார் பள்ளிகளின் கொள்ளை லாபத்தை பெருக்கியவர்கள் யார்? கல்வி என்ற பெயரில் நடத்தும் சமூகக் கொள்ளையை ஊக்குவித்தவர்கள் யார்? இந்த சமூக குற்றத்துக்கு யார் பொறுப்பாளி என்று பல கேள்விகளை நம்முன் வைக்கிறார் பாரதி தம்பி. சென்னையில் ஒரு புகழ்பெற்ற பள்ளியி்ல் படிப்பதற்காக ஒரு குடும்பம் திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளது. இப்படி தமிழகம் முழுவதும் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் குடிபெயர்ந்துள்ளன. பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கும் சமயத்தில் நாமக்கல் மாவட்டத்திற்கு இரண்டு, மூன்று மாதங்களுக்கு மட்டுமே குடிபெயர்கிற குடும்பங்களின் எண்ணிக்கை ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை இருக்கும். இதற்கு யார் பொறுப்பாளி? அரசுப் பள்ளி மோசம், அரசு கல்லுாரி மோசம் என்று சொல்கிற பெற்றோர்கள், தனியார் பள்ளி முதலாளிகள் தங்களுடைய குழந்தைகளுக்கு தமிழக அரசால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவேண்டும் என்றும், அண்ணா யுனிவர்சிட்டியில் இடம் கிடைக்க வேண்டும் என்றும் ஏன் விரும்புகிறார்கள்? அது மட்டும் அரசு நடத்தும் நிறுவனங்கள் இல்லையா?

ப்ரிகேஜிக்கு ஒரு ஆண்டிற்கு 1.80 லட்சம் செலவு செய்து படிக்க வைக்கிற பள்ளியின் கல்வித்தரம் எப்படி இருக்கிறது? உலகத்தரம் வாய்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது? மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாகவே இருக்கிறார்கள். பாடத்தை புரிந்துகொண்டு படிக்கிற பழக்கமே இல்லாதவர்களாக இருக்கிறார்கள். எப்போதும் தேர்வுகளைப் பற்றியும் தேர்வு முடிவுகளைப் பற்றியுமே கவலை கொண்டவர்களாக இருக்கிறார்கள். கட் ஆப் மதிப்பெண்களை மட்டுமே கனவாகக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பக்கத்துவீட்டுக்காரர் , தெருவில் உள்ளவர்களைப்பற்றி மட்டுமல்ல தான் வாழும் ஊரைப்பற்றிக்கூட எதுவுமே தெரியாத மொக்கைகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கு தனக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுடைய பெயர் கூடத் தெரிவதில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் மொட்டையான மனப்பாடம் மட்டுமே. படித்துக்கொண்டே இருக்கிறார்கள், பரிட்சை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள் அவ்வளவுதான. தனியார் பள்ளி மாணவர்கள் குறித்த அழகிய சித்திரம் ஒன்றை பாரதி தம்பி தருகிறார். இறுக்கிக் கட்டப்பட்ட முறுக்குக் கம்பிகளைப் போல இருக்கிறார்கள்என்று சொன்னாலும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் குறித்து அவரிடம் அதிக இரக்க உணர்வே வெளிப்படுகிறது. மாணவர்களும் பாவம் ஆசிரியர்களும் பாவம்என்று எழுதுகிறார். அதேநேரத்தில் தனியார் பள்ளி நிறுவனங்கள் சுய சிநதனைக்கு பதிலாக அடிமைத்தனத்தையும், விட்டுக்கொடுத்தலுக்குப் பதிலாக தன்முனைப்பையும், நாகரிகத்துக்குப் பதிலாக அநாகரிகத்தையும், சமத்துவத்திற்கு பதிலாக பாகுபாட்டையும், பொதுநலத்திற்குப் பதிலாக சுயநலத்தையும், மன அழுத்தம் தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்வதையும், விளையாட்டை வாழ்வின் அடிப்படையாகக் கருதாமல் எதிரியாக சித்தரிப்பதையும் தான் நாம் தரமான உலகத்தரமான கல்வி என்று புகழ்கிறோம் என்று பொது சமூகத்தின் மீது கேள்வியை வைக்கிறார். 

நமது கல்வி கொள்கைகள் என்ன? ஆசிரியர் பேசுவார். மாணவர் பேசக்கூடாது. ஆசிரியர் சொல்வார். மாணவர் எதிர்கேள்வியின்றி கேட்பார். இதுதான். ஆனாலும் கல்வித் திட்டத்தில் இல்லை குளறுபடி அதை நிறைவேற்றுவதில்தான் இருக்கிறது. தனியார் பள்ளிகளில் மட்டுமல்ல அரசுப் பள்ளிகளிலும் இன்று ஆசிரியருக்கும் மாணவருக்கும் எந்த உறவும் இல்லை. அதனால்தான் 1997-ல் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாற்றுக் கல்வி முறையான தாய் தமிழ்ப் பள்ளிகள் பெரிய வெற்றியை அடையவில்லை.

அரசுப் பள்ளிகள்தான் நம் கல்வி உரிமையின் அடையாளம், எக்காரணம் கொண்டும் அதை விட்டுத்தர முடியாதுஎன்று எழுதுகிற பாரதி தம்பி நம் அடிப்படை உரிமையை யார் பறிக்கிறார்கள் என்ற கூர்மையான கேள்வியை நம்முன் வைக்கிறார். போதிய கட்டிட வசதியை, குடிநீர், கழிப்பறை, இருக்கைகள், ஆசிரியர் நியமனத்தை செய்து  தராத அரசு லேப்டாப்பும், சைக்கிளும் எதற்காக வழங்குகின்றன என்ற கேள்வி முக்கியமானது. அரசுப் பள்ளியின் வீழ்ச்சிக்கு முக்கிய குற்றவாளிகள் அரசு, ஆசிரியர், பெற்றோர் என இருந்தாலும் முதன்மையான குற்றவாளி ஆசிரியர்களே என்பதை தன் ஆய்வு மூலம் நிரூபிக்கிறது இந்நூல். அரசுப் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு தங்கள் மீதோ, தாங்கள் செய்யும் வேலை மீதோ மதிப்போ, மரியாதையோ கிடையாது. அதனால்தான் அரசுப் பள்ளிகள் மூடுவிழவை  நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அதோடு ஆசிரியர்களுடைய பொறுப்பற்ற, அக்கறையற்ற, கடமை உணர்வற்ற, ஊக்கமற்ற தன்மையால், அலட்சியத்தால் அரசுப் பள்ளிகள் சீரழிகின்றன. இன்று பல தனியார் பள்ளிகளில் பங்குதாரர்களாக இருப்பவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்களே. தனியார் பள்ளிகளை தொடங்கலாம் என்ற விஷ விதையை முதலில் தூவியவர்கள் அரசுப் பள்ளி ஆரிசியர்களே. அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கு நிர்வாகத்தினுடைய கண்காணிப்பு முற்றிலும் இல்லாதது. அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் குறைபாட்டிற்கும் மாணவர்கள் அல்ல காரணம். ஆசிரியர்கள்தான் என்பதோடு அரசுப் பள்ளியில் திறம்பட வேலை செய்யும் ஆசிரியர்களும், திறம்பட இயங்கும் பள்ளிகளும் இன்னும் இருக்கவே செய்கின்றன என்பதையும் பாரதி தம்பி எழுதியிருக்கிறார். இது அவருடைய பார்வையின் சமநிலையைக் காட்டுகிறது.

ஒரு புத்தகம் என்பது சமூகத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கான வழி என்பதையும், காலத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி என்பதையும், குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட சமூகம் எப்படி வாழ்ந்தது என்பதற்கான ஆவணம் என்பதையும், ஒரு நிஜமான எழுத்தாளன் சமூகத்தைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்வான் என்பதையும் நிரூபித்துக் காட்டுகிறது பாரதி தம்பியின் கற்க கசடற-விற்க அதற்குத் தக


கற்க கசடற-விற்க அதற்குத் தக - பாரதி தம்பி நூலுக்கு எழுதிய அனிந்துறை. டிசம்பர் 2014



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக